பாகம் II
அவனுக்கும் இவனுக்குமான நட்பு அலாதியானது. வாழ்க்கைமுறை, சமயம், பிரதேசம், தெரிவுப்பாடங்கள் என பலதிலும் வேறுபட்டிருந்தாலும் தமிழும், கவிதையும், நாடகமும், புத்தகங்களும் அந்த இடைவெளியை இட்டு நிரப்பி, மேலதிகமாகவும் ஒரு பிணைப்பை ஏற்படுத்த போதுமாயிருந்தன.
இருவரும் கிண்டல் அடிப்பதில் ஆளை ஆள் சளைத்தவர்கள் இல்லை என்பது மேலும் அவர்கள் நட்பை எப்போதும் கலகலப்பான உறவாக வைத்திருந்தது.
இவனின் மெசேஜை பார்த்ததில் இருந்து, அவனுக்கு கொஞ்சம் கலக்கலாமகவே இருந்தது.
அவர்களுக்கு இடையில் இப்படியான pranks செய்வதும் வழமைதான்.
அதுபோல் இதுவும் இவனின் குழப்படிகளில் ஒன்றாக இருக்கலாம்.
போன கிழமை கூட வாட்சப்பில் மாவீரர் நாளுக்கு இவன் எழுதியதை வாசித்து விட்டு, அவன் ஒரு தெரியாத நம்பரில் இருந்து கோல் எடுத்து சிங்களத்தில் “மாத்தையா டக்சி ஓடர் பண்ணீர்கள், வீட்டுக்கு வெள்ளை வான் ஒன்று அனுப்பவா” என கேட்டு கலாய்திருந்தான். இதுவும் அதுக்கான இவனின் பதிலடியாக இருக்கலாம்.
ஆனால் அவனின் உள்ளுணர்வு இது ஏதோ வேறு பிசகு என கூறியது.
பரவாயில்லை இன்றைக்கு வேர்க் புரொம் ஹோம்தான், நல்ல வேளையாக வேலை போனையும் கையோடு எடுத்து வந்தது வசதியாக போய்விட்டது.
வேர்க் புரொம் ஹோம் என்றாலே வேலையை தவிர மிச்சம் எல்லாம் செய்யும் நாள் என்பது எழுதப்படாத சட்டம் ஆகி விட்ட நாட்டில் அவன் மட்டும் என்ன விதி விலக்கா?
கார் கழுவுவது, உடுப்பு தோய்ப்பது, ஆருக்கும் சம்பளம் வாங்காமல் அட்வைஸ் கொடுப்பது, யாழிலும் வட்சாப்பிலும் உழட்டுவது, இடைக்கிடையே, முதலாளி பாவம் எண்டு கொஞ்சம் வேலையும் செய்வது. இதுதான் அவனின் இந்த வேர்க் புரொம் ஹோம் நாட்களின் ரூட்டின்.
ஆகவே அருகில் இருக்கும் டெஸ்கோவில் காரை விட்டு விட்டு என்ன எண்டு கேட்போம் என நினைத்தவாறே காரை டெஸ்கோ கார்பார்க்குக்குள் விரட்டினான் அவன்.
என்ன மச்சான் ஓகேயா? அவனின் கேள்விக்கு பதில் வர தாமதித்தது….
மச்சான்…டேய்…என்னடா மெசேஜ் போட்டிருந்தாய்…என்ன ஏர்ஜெண்ட் மட்டர்?
தொண்டையை கனத்தபடி இவன் பேசத்தொடங்கினான்…..
ஐ’ ம் குட் படி. ஐ டு ஹாவ் எ குவஸ்யன் போர் யூ….
டேய் லூஸ் விளையாட்டு விளாடாத…வேலை கடுப்பில நிக்கிறன் பிறகு அடிக்கிறன்….
நோ..நோ…லிசின் மேட்… ஐயம் சீரியஸ் எபவுட் திஸ்…
அட்சரம் பிசகாத லண்டன் உழைக்கும் வர்க்க ஆங்கில உச்சரிப்பில்….
தன் பிரச்சனையை எடுத்து சொல்ல ஆரம்பித்து இருந்தான்….
வாழ்வில் என்றுமே இங்கிலாந்துக்கு வந்தே இராத, பிரித்தானியாவுடன் எந்தவித பரிச்சயமும் இல்லாத இவன்.
(தொடரும்)
(யாவும் கற்பனை அல்ல)
——————————————-