ஜெயவர்த்தனவிடம் அடைக்கலமாகிப்போன அமிர்தலிங்கமும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும்
தமிழருக்கான சுயநிர்ணய உரிமையினை மார்க்ஸிச - லெனினிஸக் கொள்கையின் அடிப்படையில் உருவாக்கவேண்டும் அல்லது வேண்டாம் என்கிற பாரிய சர்ச்சையொன்று தமிழ் மற்றும் சிங்கள இடதுசாரி அறிவுஜீவிகள் மத்தியில் ஏற்பட்டிருந்தது. சிங்கள இடதுசாரிகளைப் பொறுத்தவரை தமிழர்கள் சுயநிர்ணய உரிமைக்குத் தகுதியுடையவர்கள் ஆனபோதும் கூட நாட்டைப் பிரித்து தனியான நாடொன்றினை உருவாக்கும் நிலைப்பாட்டை அவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். பாலசிங்கம் தனது இரண்டாவது பிரசுரத்தில் இவ்வாறு எழுதினார், "சோசலிசத் தமிழீழம் நோக்கி". அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட மக்கள் என்கிற வகையில் தமிழர்கள் பிரிந்துசெல்வதற்கு உரித்துடையவர்கள் என்று அவர் எழுதினார். தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இப்புத்தகத்தின் பிரதியொன்று பிரபாகரனுக்கும் கிடைத்தது. பாலசிங்கம் எழுதிய இப்புத்தகத்தை பிரபாகரன் படித்தபோது அதன்பால் மிகுந்த ஈடுபாடு கொண்டதாக "சுதந்திர வேட்கை" எனும் புத்தகத்தில் பாலசிங்கத்தின் துணைவியார் அடேல் பாலசிங்கம் குறிப்பிடுகிறார்.
பாலசிங்கத்தின் தாத்துவார்த்த ரீதியிலான ஆய்வுகள் லண்டனில் இயங்கிவந்த புலிகளின் செயற்பாட்டாளர்களான கிரிஷ்ணன், ஆர் ராமச்சந்திரன் (அன்டன் ராஜா) ஆகியோருடன் அன்டன் பாலசிங்கம் நெருங்கிப் பழகும் வாய்ப்பினை ஏற்படுத்தியிருந்தது. பாலசிங்கத்தை அடிக்கடி சந்தித்துக்கொண்ட இவர்கள், புலிகளின் செயற்பாடுகள் குறித்து அவருக்குத் தொடர்ச்சியாக அறிவூட்டியும் வந்தார்கள். அத்துடன் தமது அறிக்கைகள், துண்டுப்பிரசுரங்கள் ஆகியவற்றை வெளியிடுவதற்கு பாலசிங்கத்தின் உதவியினையும் நாடத் தொடங்கினார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்த்துறை, உலக இளைஞர் மாநாட்டில் தமிழரின் போராட்டம் தொடர்பான அறிக்கையொன்றினை வெளியிடத் தீர்மானித்தது. இதற்கு பாலசிங்கத்தின் உதவியை உமா மகேஸ்வரன் நாடினார். பாலசிங்கம் எழுதிய அந்த அறிக்கை ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, ஜேர்மனிய, போத்தூகேய மற்றும் தமிழ் மொழி ஆகிய ஆறு மொழிகளில் வெளியாகியது. இந்த அறிக்கை, மாநாட்டிற்கு வந்திருந்த அனைத்துலகப் பிரதிநிதிகள், இராஜதந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் போன்ற பலதரப்பட்டவர்களுக்கும் விநியோகிக்கப்பட்டது.
போரும் சமாதானமும் விளையாட்டு
புலிகளை சர்வதேச அளவில் பிரபல்யப்படுத்தும் உமா மகேஸ்வரனின் திட்டம் தொடர்ந்தும் செயற்படுத்தப்படுவதில் சிக்கல்கள் தோன்றியது. 1979 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையில் இலங்கையில் தோன்றியிருந்த கருத்து வேறுபாடே இதற்குக் காரணமாக அமைந்தைருந்தது.
காளைமாடு - வீரதுங்க
எதிர்க்கட்சியினருடன் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் சேர்ந்தால் தமிழருக்கெதிரான இன்னொரு வன்முறைக் கலவரத்தை உருவாக்குவேன் என்று அச்சுருத்தி, அந்த முயற்சியைத் தவிடு பொடியாக்கியிருந்த ஜெயவர்த்தன, தனது போர் விளையாட்டுக்களை முன்னெடுப்பதில் உறுதியுடன் செயற்படத் தொடங்கினார். 1979 ஆம் ஆண்டு ஆடியில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அவர் நடைமுறைப்படுத்தினார். இந்தச் சட்டம் பாராளுமன்றத்தால் ஆடி 20 ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1979 ஆம் ஆண்டின் இறுதிக்குள் வடமாகாணத்திலிருந்து தீவிரவாதத்தை முற்றாக அழித்துவிடவேண்டும் என்கிற கட்டளையுடன் தனது மருமகனான, "காளை மாடு" என்றழைக்கப்பட்ட திஸ்ஸ வீரதுங்கவை வடமாகாணத்திற்கான இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரியாக அவர் ஆடி 14 இல் நியமித்தார்.
ஜெயவர்த்தன, காளைமாட்டு வீரதுங்கவிற்கு இட்ட ஆணை இவ்வாறு கூறியிருந்தது
"தீவிரவாதத்தையும், அதன் அனைத்து விதமான வடிவங்களையும் இந்த நாட்டிலிருந்து, குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து, நாட்டின் அனைத்துச் சட்டங்களின் பிரகாரம் முற்றாக அழித்தொழிப்பதற்கு நீர் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருக்கிறீர். இந்நாட்டின் சட்டத்தை மதிக்கும் அனைத்து மக்களையும் உமது இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். உம்மால் மேற்கொள்ளப்படும் இந்த பயங்கரவாத அழிப்பு நடவடிக்கை 1979 ஆம் ஆண்டு மார்கழி 31 ஆம் திகதிக்குள் முற்றுப்பெறவேண்டும்".
வீரதுங்கவின் இராணுவ நடவடிக்கைக்கு ஏதுவாக ஆடி 12 ஆம் திகதி, யாழ்ப்பாண மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் சரத்து 14 இனைப் பாவித்து அவசரகால நிலைமையினை ஜெயவர்த்தன பிரகடணப்படுத்தினார். இந்தச் சட்டத்தின் மூலம் சந்தேகத்திற்கிடமான எவரையும் உடனேயே சுட்டுக் கொல்லும் அதிகாரமும், அவர்களது உடல்களை விசாரணையின்றி எரித்துவிடும் அதிகாரமும் பொலீஸாருக்கும், இராணுவத்தினருக்கும் வழங்கப்பட்டது.
பொலீஸாரினதும், இராணுவத்தினதும் மதிப்பீட்டின்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் இயங்குவதாகக் கணிக்கப்பட்ட சுமார் 200 போராளிகளுக்கெதிராகவே ஜெயவர்த்தனவின் இந்த இராணுவ நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது. தமிழ் பொலீஸ் பரிசோதகர் குருசாமியின் இழப்பிற்குப் பின் யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த பொலீஸ் உளவுப்பிரிவு சரிவைச் சந்தித்திருந்தது. அதேவேளை, பலாலி இராணுவ முகாமில் கப்டன் முனசிங்க தலைமையில் உருவாக்கப்பட்டு வந்த இராணுவப் புலநாய்வுப் பிரிவு செயற்படும் நிலைக்கு வந்திருந்ததுடன், அப்பிரிவு யாழ்ப்பாண இராணுவத் தளபதி பிரிகேடியர் ரணதுங்கவின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கத் தொடங்கியது.
இராணுவம் முறுக்கேற்றப்பட்ட நிலையிலும், அந்த இராணுவ நடவடிக்கைகளுக்கான சட்டப் பாதுகாப்புக்கள் பலமாக இடப்பட்ட நிலையிலும், ராணுவ தீர்வில் வெகு இறுமாப்புடன் இருந்த ஜெயவர்த்தன, தனது கவனத்தை அரசியல்க் களம் நோக்கித் திருப்பத் தொடங்கினார். தன்னால் அடிபணியவைக்கப்பட்ட அமிர்தலிங்கத்தையும், அவரது தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரையும் தொடர்ந்தும் தமிழருக்கெதிரான கலவரம் பற்றி அச்சத்தில் வைத்திருக்க தனது பிரதமரான ரணசிங்க பிரேமதாசாவை ஜெயவர்த்தன பாவித்தார். இந்தச் செய்தியை பதியும்படி நான் பணிக்கப்பட்டிருந்தேன். நான் அமிர்தலிங்கத்துடனும் சிவசிதம்பரத்துடனும் பல சந்திப்புக்களில் கலந்துகொண்டேன். அவர்கள் மிகுந்த பதற்றத்துடனும், அதேவேளை கவலையுடனும் காணப்பட்டார்கள். "தமிழர்களால் இனியொரு இனக்கலவரத்தைச் சந்திக்க முடியாது" என்று அவர்கள் என்னிடம் திரும்பத் திரும்பக் கூறினார்கள்.
இனங்களுக்கிடையிலான பதற்றநிலையினைத் தவிர்ப்பதற்கு இருபகுதியினரும் இணைந்து சில நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று பிரேமதாச முன்னணியினரிடம் ஆலோசனை கூறினார். அதற்கு உடனடியாகவே அமிர்தலிங்கம் ஒப்புக்கொண்டார். பாராளுமன்றத்தின் பிரதமரின் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தின் பின்னர் பிரேமதாசவுடன் இணைந்து அறிக்கையொன்றினை முன்னணியினர் தயாரித்தனர். நாட்டு மக்களிடம் முன்வைக்கப்பட்ட அந்த வேண்டுகோள் இப்படிக் கேட்டிருந்தது,
"நாம் இந்த நாட்டு மக்களிடம் வேண்டுவது யாதெனில், தீய சக்திகளின் வதந்திகளாலும், நடவடிக்கைகளாலும் ஆட்கொள்ளப்பட்டு விடாது, அமைதியையும் நிதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதுதான். பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அனைத்து அரசியல், மதத் தலைவர்கள், சமூக சேவைகள் அமைப்புக்கள் ஆகியோரிடமும் நாம் மக்களிடையே அமைதியையும் சமாதானத்தையும், சட்டம் ஒழுங்கினையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த தம்மாலான சகலதையும் செய்யவேண்டும் என்றும், தமது தேர்தல்த் தொகுதிகள், கிராமங்கள் மட்டத்தில் வதந்திகள் பரவுவதைத் தடுத்து மக்களுக்கும் சொத்துக்களுக்கும் சேதம் விளைவதைத் தடுக்க வேண்டும் என்றும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்"
"தமது சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக பதற்றமான சூழ்நிலையினை உருவாக்கி மக்கள் மீது இனரீதியான வன்முறைகளை ஏவிவிடக் காத்திருப்போரிடமிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கும் நாம் எம்மாலான சகலதையும் செய்வோம் என்று உறுதியெடுக்கிறோம்".
"எமது நாட்டை உலுக்கிவரும் பிரச்சனைகள் அனைத்திற்கும் சமாதான ரீதியில் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று திடமாக நம்பும் அதேவேளை, அரசியல் லாபத்திற்காக சில விஷமிகள் விரித்துவரும் வலையில் சிக்கிக்கொள்ளவேண்டாம் என்றும் மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்"
"நாகரீகமடைந்த மக்கள் கூட்டம் என்கிற வகையில், எமக்குள் ஏற்பட்டிருக்கும் பிணக்குகளை சமாதான வழிகளில் எம்மால் தீர்த்துக்கொள்ள எமது மதங்களோடு இணைந்த பாரம்பரியங்கள் எமக்கு எப்போதும் துணைநிற்கும் என்பதை நாம் சர்வதேசத்திற்குப் பாடமாக எடுத்துக் கூறுவோம்".
இந்த ஒருங்கிணைந்த வேண்டுகோளிற்கே ஒரு அரசியல்க் காரணம் இருந்தது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை எப்படியாவது தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஜெயவர்த்தன முயன்று வந்தார். பயங்கரவாதத் தடைச் சட்டம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவிருந்த ஆடி 19 ஆம் திகதி, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உருவாக்கம் பற்றிக் கலந்துரையாடுவதற்கு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும், எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சிக்கும் அழைப்பு விடுத்தார் ஜெயவர்த்தன. இந்த அழைப்பினை உடனடியாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஏற்றுக்கொள்ள, எதிர்க்கட்சியோ அழைப்பை நிராகரித்திருந்தது.
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தனது அழைப்பிற்குச் சாதகமாகப் பதிலளித்ததையடுத்து, அதற்குப் பிரதிபலனாக ஜெயார் சில விடயங்களைச் செய்யப்போவதாக அறிவித்தார். வவுனியாவில் சிங்களவர்கள் பெரும்பான்மையினராக வாழும் மூன்று உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளை அநுராதபுரம் மாவட்டத்துடன் இணைத்துக்கொள்ளும் தனது முடிவினை நடைமுறைப்படுத்தப்போவதில்லை எனும் அறிவிப்பு மற்றும் லலித் அத்துலத் முதலி தலைமையில் உருவாக்கப்படும் பாராளுமன்றத் தெரிவிக்குழுவினூடாக யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட இளைஞர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை செய்யப்போவதாக ஜெயவர்த்தன முன்னணியினரிடம் தெரிவித்தார்.
ஜெயவர்த்தனவை எப்படியாவது மகிழ்வித்துவிட வேண்டும் என்று தீவிரம் காட்டிய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தாம் அதுவரை பகிஷ்கரித்து வந்த பாராளுமன்ற அமர்வுகளில் இனிக் கலந்துகொள்ளப்போவதாக அறிவித்தது. தனது போர் விளையாட்டு வெற்றிபெற்று வருவது கண்டு பூரிப்படைந்த ஜெயவர்த்தன, தமிழர்களுக்கு நீதிவழங்கத் தான் தயாராக இருப்பதாகவும், பேராசிரியர் ஏ.ஜே.வில்சனுடனான தனது கலந்துரையாடல்களின் அடிப்படியில் மாவட்ட அதிகார சபைகள் தொடர்பாக விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றினை நியமிக்கப்போவதாகவும் அறிவித்தார். இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் ஏ.ஜே. விஜேகோனும், ஏனைய உறுப்பினர்களாக கலாநிதி. ஏ.ஜே. வில்சன், கலாநிதி. ஜே.ஏ.எல். குரே, கலாநிதி நீலன் திருச்செல்வம் மற்றும் ஏ.சி.எம்.அமீர் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.
இது ஜெயவர்த்தனவின் மிகச்சிறந்த தந்திர நகர்வாகக் கருதப்பட்டது. இதன்மூலம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை தனது அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக அவர் வரிந்துகொண்டார். இதன்மூதல் தமிழ்ப் போராளிகளுக்கும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும் இடையே நிரந்தரப் பிரிவை அவர் உருவாக்கினார். இதன்மூலம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முற்றான தோல்வியையும் அவர் உறுதிப்படுத்தினார்.