திரும்பும் வரலாறு- பாகம் 6
அதிரடி (Blitzkrieg) எனப்படும் துரித இராணுவ நுட்பம் மூலம், நாசிகள் சடுதியாக பிரான்ஸ், நெதர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், நோர்வே ஆகிய நாடுகளை ஆக்கிரமித்து, போலந்தையும் ஆக்கிரமித்து விட்டமையைப் பார்த்தோம். லண்டன் உட்பட்ட இங்கிலாந்து நகரங்கள் மீது, எட்டு மாதங்கள் நிகழ்ந்த நாசிகளின் கொடூர விமானக் குண்டுத் தாக்குதல்களால் பிரிட்டனை அடிபணிய வைக்க இயலவில்லை. மாறாக பிரிட்டனின் நாசிகளுக்கெதிரான நிலைப்பாடு உறுதி பெற்றது, ஏனைய நாடுகளையும் தன்னோடு சேர்த்துக் கொள்ள பிரிட்டன் உழைத்தது. இந்த உழைப்பிற்கு சேர்ச்சிலின் தலைமை வழிகாட்டும் துடுப்பாக இருந்தாலும், உழைப்பின் இயந்திரங்களாக இருந்த இரு தரப்பினர் பற்றிப் பார்க்கலாம்!
பிரித்தானிய மக்களின் ஓர்மம்
மக்கள் மயப்படுத்தப் படாத எந்த இராணுவ முயற்சியும் தோல்வியில் முடியுமென்பது வரலாற்றில் மீள மீள நிரூபிக்கப் பட்ட ஒரு கோட்பாடு. இதை ஆரம்பத்திலேயே வரலாற்றின் மாணவனான சேர்ச்சில் உணர்ந்து கொண்டதன் விளைவே பிரித்தானிய மக்களை இயலுமான வழிகளில் நாசி எதிர்ப்பு யுத்தத்தில் பங்களிக்க நடவடிக்கைகளை எடுத்தது.
இந்த மக்கள் பங்களிப்பின் முதல் வடிவமாக, பிரித்தானியர்கள் நாசிகளின் கொடூரத் தாக்குதல்களை ஓர்மத்தோடு தாங்கிக் கொண்டனர். ஏனெனில், போருக்குப் பின் கைப்பற்றப் பட்ட கோயபல்சின் நாட்குறிப்புகளின் படி, நாசி விமானத் தாக்குதல்களின் பிரதான நோக்கம் பிரித்தானிய மக்களைத் துன்பத்திற்குள்ளாக்கி, பிரித்தானிய அரசின் மீது வெறுப்பேற்றுவதாகவே இருந்திருக்கிறது. இதனால், சேர்ச்சில் மீது எதிர்க்கட்சிகளே ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்து சேர்ச்சிலை அகற்றி விட, நாசிகளுக்கு பிரிட்டனில் செங்கம்பளம் விரிக்கப் படும் என்று கோயபல்சே நம்பியிருக்கிறாரெனத் தெரிகிறது. இந்த நாசிக் கனவில் முதல் மண்ணை பிரித்தானிய மக்களே போட்டனர். ஏராளமான வதந்திகள், பொய் செய்திகள் கோயபல்சின் கட்டுப் பாட்டிலிருந்த ஆங்கில மொழி மூல வானொலிகள் மூலமும், ஐந்தாம் படையினர் மூலமும் பிரித்தானிய மக்களிடையே பரப்பப் பட்டாலும், எவையும் எதிர் பார்த்த மறை விளைவைத் தரவில்லை.
இது எப்படிச் சாத்தியமானது? சேர்ச்சிலின் நிர்வாகம், மக்களைத் தம் பக்கம் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை பிரான்ஸ் வீழ்வதற்கு முன்னரே உணர்ந்து சில திட்டங்களைச் செயல்படுத்தியது ஒரு காரணம். உதாரணமாக, பிரித்தானிய மக்களிடையே சில ஆயிரம் தொண்டர்களைக் தேர்த்தெடுத்து, அவர்களுக்கு மக்களின் உணர்வுகளைக் கிரமமாகப் பதிவு செய்யும் பணி வழங்கப் பட்டது. Mass observation diary என்று அழைக்கப் பட்ட இந்தத் திட்டம் மூலம், பிரித்தானிய மக்களின் நாடித் துடிப்பை பிரித்தானியாவின் பாதுகாப்புக் கட்டமைப்பு துல்லியமாகக் கணித்து வந்தது. இதனை நவீன அரசுகள் தற்போது நடைமுறைப்படுத்தும் ஒட்டுக் கேட்டு உளவறியும் முயற்சியாகப் பார்க்க முடியாது. ஏனெனில், இந்த மக்கள் குறிப்புகள் மூலம் தனி நபர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப் பட்ட நிகழ்வுகள் நடக்கவில்லை. மாறாக, மக்களின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாக மாறுவதற்கு முன்னரே அவற்றை இனங்கண்டு தீர்வுகளை வழங்கி விடும் நோக்கமே இந்தப் பாரிய முயற்சியின் நோக்கமாக இருந்தது.
உதாரணமாக, லண்டன் நகர வாசிகள் தினசரி இரவு நாசிகளின் விமானத் தாக்குதலில் இருந்து தப்ப நிலக்கீழ் காப்பிடங்களுக்குச் சென்று விடுவர். ஆரம்பத்தில் அடிப்படை வசதிகள் அற்றிருந்த இந்தக் காப்பிடங்களை, அரச நிர்வாகம் ஒரு சீரான தரத்தில் வைத்திருக்கும் விதிகளை உருவாக்கி, மக்களின் இரவு வாழ்க்கையை இலகுவாக்கியது. இதன் விளைவுகள் அபாரமாக இருந்தன: லண்டன் வாசிகள் இரவை நிலக்கீழ் காப்பிடங்களில் கழித்து விட்டு, காலையில் வழமை போல தங்கள் தொழில்களைப் பார்க்கச் செல்லும் அளவுக்கு பிரித்தானிய மக்களின் நாளாந்த வாழ்க்கை சாதாரணமாக இருந்தது.
இன்னொரு பக்கம், ஏராளமான பிரித்தானிய மக்கள் வெறுமனே பலியாடுகளாக இருக்காமல் தொண்டர்களாக நாசி எதிர்ப்புப் போர் முயற்சியில் இறங்கினர். நாசிகளின் இரவு நேரத் தாக்குதல்களில், நாசிகளுக்கேயுரித்தான குரூர நுட்பங்கள் பல இருந்தன. ஒவ்வொரு தாக்குதல் விமான அணிக்கும், முன்னணியாக இலக்குகளை அடையாளம் காணும் விசேட விமானங்கள் வரும். இந்த விசேட விமானங்கள் இலக்குகள் மீது எரி குண்டுகளை (incendiaries) வீசி, அந்த இலக்குகளை பிரகாசமாக எரியவைக்கும். பின் தொடரும் தாக்குதல் விமானங்கள், எரியும் இலக்குகள் மீது தங்கள் குண்டுகளை வீசும். எனவே, தீயணைப்புத் தொண்டர்கள் எரியும் இலக்குகளை அணைக்கும் வேலை முக்கியமான ஒரு பணியாக இருந்தது. இதனை, உயிராபத்திற்கு மத்தியிலும் சாதாரண தீயணைப்புத் தொண்டர்கள் செய்தனர், உயிரையும் கொடுத்தனர்.
இன்னொரு குரூர நுட்பமாக, நாசிகள் நேரங்கழித்து வெடிக்கும் குண்டுகளையும் வீசினர். உடனடியாக வெடிக்காத இந்தக் குண்டுகள், மீட்புப் பணியில் ஈடுபடும் மக்களைக் குறி வைத்து வீசப்பட்ட தாமதித்து வெடிக்கும் (delayed fuse) குண்டுகள். இந்தக் குண்டுகளாலும் ஏராளமான பிரித்தானிய போர் முயற்சித் தொண்டர்கள் பலியாகினர்.
ஆனால், பிரித்தானிய மக்கள் ஒவ்வொரு தாக்குதல் இரவின் பின்னரும் பிரித்தானியாவை நாசிகள் ஆழ அனுமதித்தால் என்ன நிகழும் என்ற எச்சரிக்கையை ஆழமாக உணர்ந்து கொண்டதால், எட்டு மாத நரகத்தினூடாக நடந்த படியே இருந்தனர்.
இந்த இடத்தில், சமகால நிகழ்வுகளில் உக்ரைன் மக்களின் உணர்வுகளுக்கும், போரை வெளியே இருந்து பார்க்கும் ஏனைய மக்களின் உணர்வுகளுக்குமிடையிலான இடைவெளியை நாம் நினைவிற் கொள்வது பொருத்தமாக இருக்கும். உக்ரைனியர்களைப் பொறுத்த வரையில், ஒரு முழு ரஷ்ய ஆக்கிரமிப்பின் பின் விளைவுகளை உணர்ந்தமை, அவர்கள் போரில் முழுப்பங்காளிகளாக மாற வழி வகுத்திருக்கிறது - அவர்களைப் பொறுத்த வரை தெரிவு ஒன்றே ஒன்று தான்! பார்வையாளர்களாக இருக்கும் மக்களில் சிலருக்கோ, இத் தெரிவு முட்டாள் தனமாகத் தெரிகிறது. இது அனுபவங்கள், மற்றும் கடந்த கால வரலாற்று நிகழ்வுகளை அறியாமை காரணமாக எழுந்த ஒரு இடை வெளி.
அலன் ரூறிங்கும் விஞ்ஞானிகளும்
பிரித்தானியாவை நாசிகளின் தாக்குதல்கள் சுருள வைக்காமல் காத்த இரண்டாவது பெரிய சக்தி தொழில்நுட்பம். பிரித்தானியா, வரலாற்று ரீதியாக ஒரு தொழில்நுட்ப முன்னோடி என்பதில் சந்தேகமில்லை. அமெரிக்கா எதையும் பிரமாண்டமாக (பல சமயங்களில் காரணமில்லாமல்) செய்யும். ஆனால், பிரித்தானியா பிரமாண்டத்தை விட, செயல் திறனுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கும் - இது பல விடயங்களில் அவதானிக்கக் கூடிய ஒரு இயல்பு.
இதே தொழில்நுட்ப மேன்மையை, பிரித்தானியாவின் நாசி எதிர்ப்பு யுத்தத்திலும் பயன்படுத்தினார்கள். இது ஒரு பாரிய குழு முயற்சியாக இருந்தாலும், பின்னணியில் இருந்து பணியாற்றியவர்களில் கணிதவியலாளரான அலன் ரூறிங் (Alan Turing) முக்கியமானவர். அலன் ரூறிங்கின் முக்கியத்துவம் அறிவதற்கு, நாம் ஜேர்மனியின் இரகசிய செய்தித் தொடர்பு இயந்திரமான "எனிக்மா" இயந்திரம் பற்றிச் சிறிது பார்க்க வேண்டும்
எனிக்மா எனும் "சிதம்பர சக்கரம்"
நாசிகளின் பயன்பாட்டிலிருந்த ஒரு எனிக்மா இயந்திரம். பட உதவி: நன்றியுடன் சைமன் சிங் இணையத்தள விம்ப சேகரிப்பு.
இரண்டாம் உலகப் போர் காலத்தில் வானலைகள் வழியாக மோர்ஸ் சமிக்ஞை (Morse code) மூலமே இராணுவத் தகவல்கள் பரிமாறப் பட்டன. இந்த மோர்ஸ் சமிக்ஞையை யாரும் இடை மறித்துக் கேட்க முடியும். எனவே, சங்கேத மொழியொன்றை உருவாக்கும் முயற்சியாக ஜேர்மனியர்கள் எனிக்மா (Enigma) எனும் இயந்திரத்தை போர் ஆரம்பிக்க முன்னரே தயாரித்தார்கள். சம்பந்தமில்லாத சொற்களை சங்கேதக் குறிகளாகப் பயன்படுத்தும் முறையை மாற்றி, ஆங்கில மொழியின் 26 எழுத்துகளில் ஒவ்வொன்றும் வேறொரு ஆங்கில எழுத்தாக (cypher) இந்த எனிக்மா இயந்திரத்தால் மாற்றப் படும். மாற்றப் பட்ட தகவல் சாதாரண கண்களுக்கு அர்த்தமற்ற எழுத்துக் கூழாகத் (Alphabetic soup) தெரியும். ஆனால், மோர்ஸ் கோட் மூலம் இந்த எழுத்துக் கூழ் அனுப்பப் படும் இடத்தில் இருக்கும் ஒருவரிடம், இந்த எனிக்மா இயந்திரத்தின் எழுத்துக் கூழை, உண்மையான சொற்களாக மாற்றிக் கொள்ளும் குறியீட்டு வழிகாட்டி (code) இருக்கும். இத்தகைய இரகசிய நீக்கம் (decryption) செய்வதற்கும், ஒரு எனிக்மா இயந்திரத்தைப் பயனபடுத்திக் கொள்ளலாம். எனிக்மா இயந்திரத்தின் கட்டுமானத்தைச் சிக்கலாக்குவதன் மூலம், இதன் மூலம் உருவாக்கப் படும் செய்திகளை எனிக்மாவின் உதவியின்றி ஒருவர் இரகசிய நீக்கம் செய்து புரிந்து கொள்ளும் வாய்ப்பை “பில்லியனில் ஒன்று” என்ற அளவுக்குக் குறைக்க முடியும். ஆனால், எனிக்மாவுக்கும் ஆப்பு வைக்கும் சில குறைபாடுகள் இருந்தன: ஒரு எனிக்மா இயந்திரத்தைக் கைப்பற்றினாலோ அல்லது எனிக்மா குறியீட்டுப் புத்தகத்தைக் கைப்பற்றினாலோ இதன் இரகசிய நீக்கம் சாத்தியமாகி விடும்.
பிரித்தானியா இந்த முயற்சிகளில் ஈடுபடுவதற்கு முன்னரே, போலந்து விஞ்ஞானிகள் எனிக்மாவை உடைக்கும் முயற்சியை ஆரம்பித்தார்கள். இரகசியமாக போலந்து இராணுவக் கட்டமைப்பினருக்குக் கிடைத்த ஒரு எனிக்மா இயந்திரத்தை ஆராய்ந்து, தாங்களே ஒரு எனிக்மா இயந்திரத்தை போலந்து இராணுவம் வடிவமைத்தது. சில கணிதவியலாளர்களைப் பணியில் அமர்த்தி, சில ஜேர்மன் செய்திப் பரிமாற்றங்களையும் ஆராய்ந்து எனிக்மா செய்திகளை இரகசிய நீக்கம் செய்வதில் ஒரளவு வெற்றியும் கண்டார்கள். ஆனால், நாசிகள் தங்கள் மிக அடிப்படையான எனிக்மா இயந்திரத்தை மேலும் சிக்கலானதாக மாற்றி, தங்களது இரகசிய குறியீட்டுப் புத்தகத்தையும் தினசரி மாற்ற ஆரம்பித்த போது, போலந்தின் முயற்சிகள் முன்னேற முடியாமல் முடங்கின.
ப்ளெட்ச்லி பார்க்- Bletchley Park
ப்ளெட்ச்லி பார்க் அருங்காட்சியகத்தில் அலன் ரூறிங்கின் சிலை. 2011, யூலை 15, அரசி இரண்டாம் எலிசபெத்தினால் ப்ளெட்ச்லி பார்க் நினைவுச் சின்னம் திறந்து வைக்கப் பட்டது. பட உதவி: நன்றியுடன், பிரித்தானிய தேசிய ஆவணக்காப்பகம்.
போலந்து, போர் ஆரம்பிப்பதற்கு சில வாரங்கள் முன்னர் தனது எனிக்மா இயந்திரம் மீதான முயற்சிகளை பிரிட்டனிடமும், பிரான்சிடமும் பகிர்ந்து கொண்டது. போலந்து வீழந்த பின்னர், போலந்தில் இருந்த எனிக்மா இயந்திரங்களில் ஒன்று பிரிட்டனின் உளவுத் துறையிடம் வந்து சேர்ந்தது. இது மட்டுமல்லாமல், பின்னர் நோர்வேயில் குறுகிய காலம் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுப், பின்வாங்கிய போதும் நாசிகளிடமிருந்து எனிக்மா இயந்திரமும், குறியீட்டுப் புத்தகங்களும் கைப்பற்றப் பட்டதாகப் பதிவுகள் இருக்கின்றன. இந்த ஆரம்ப முதலீட்டை வைத்துக் கொண்டு எனிக்மாவின் இரகசியங்களை உடைக்கும் மிக ஆரம்ப காலக் கணணியை வடிவமைத்தவர் தான் அலன் ரூறிங். பற்சக்கரங்களும், மின் விளக்குகளும் கொண்ட இந்தப் பாரிய இயந்திரத்தை இன்று ப்ளெட்ச்லி பார்க் எனப் படும் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காணலாம். சிக்கலான எனிக்மா இயந்திரத்தின் தகவல்களை, கணிதக் கோட்பாடுகளின் அடிப்படையில் அணுகி இரகசியம் நீக்கும் வேலையை இந்த ஆரம்ப காலக் கணனி செய்ததால், பல லட்சம் உயிர்கள் காக்கப் பட்டன. பிரிட்டன் உட்பட, போரில் நாசிகளை எதிர்த்த நேச அணியின் வெற்றியும் இதனால் உறுதி செய்யப் பட்டது. ப்ளெட்ச்லி பார்க் என்ற மாளிகையின், நிலவறையில் நடந்த இந்த முயற்சிகள் அதி உயர் இரகசியமாகப் பேணப்பட்டதால், நாசிகளுக்கு போர் முடியும் வரை தங்கள் தகவல் பரிமாற்றங்கள் ஒட்டுக் கேட்கப் படுவது தெரிய வரவில்லை. அதே நேரம், இந்த அரிய பணியைச் செய்த அலன் ரூறிங்கின் பெயரும் அப்போது வெளியே தெரியவரவில்லை. இந்தப் பிரபலமின்மையின் ஒரு காரணமாக, ஓரினச் சேர்க்கையாளராக இருந்த அலன் ரூறிங்கை பிரித்தானிய அரசு ஆண்மை நீக்க மருந்துகள் மூலம் குணமாக்க முயன்றதும், அந்த மருந்தின் பக்க விளவினால் அவர் தற்கொலை செய்து கொண்டதும், பெரிதாகப் பேசப் படவில்லை. ஓரினச் சேர்க்கையாளராக நீதிமன்றினால் தண்டிக்கப் பட்ட அலன் ரூறிங்கை, அவாது மரணத்திற்குப் பின்னர் மிக அண்மையில் பகிரங்கமாக அந்தக் குற்றச் சாட்டிலிருந்து விடுவித்தது பிரித்தானிய அரசு.
- தொடரும்