மலர்.......(8).
பிறிதொருநாள் ஆச்சி மகன் கதிரவனிடம் தம்பி நீ இந்தப் பிள்ளை நிர்மலாவைப் பற்றி என்ன நினைக்கிறாய் என்று கேட்கின்றாள். அவனும் ஏன் அவவைப் பற்றி நினைக்கிறதுக்கு என்ன இருக்கு. அவ தானும் தன் பாட்டில் வேலை செய்கிறா. வாடைக்காசும் ஒழுங்காய் தருகிறா. எங்கட மகன் முகிலனும் வகுப்பில் கெட்டிக்காரனாய் இருக்கிறான் என்று அவன்ர வகுப்பு ஆசிரியை சொன்னவர். வேறு எண்ணத்தை சொல்ல.
--- இல்லை தம்பி, எங்களுக்கும் வயசாயிட்டுது. உனக்கு விருப்பமெண்டால் அந்தப் பிள்ளையை கேட்டுப் பார்க்கலாம் என்று நினைக்கிறன். கொப்பருக்கும் நல்ல விருப்பம்.
--- ஓ.....நீங்கள் இரண்டு பேரும் ஏற்கனவே கதைத்து வைத்து விட்டுத்தான் இப்ப என்னிடம் கேட்கிறீங்கள் போல. அவ ஏதோ தன் பாட்டுக்கு இருக்கிறா, அவவை அத இத கதைத்து குழப்பிப் போடாதேங்கோ. மேலும் அவர்கள் யார் என்றே எங்களுக்கு தெரியாது. அவ தனியா வீட்டை விட்டு வர என்ன என்ன பிரச்சினையென்றும் தெரியாது. அதால கதைக்கிறதை நல்லா யோசித்து கதையுங்கோ.
--- அதடா மோனை அப்பப்ப கதையல் வரேக்க நான் கொஞ்சம் கொஞ்சம் ஜாடை மாடையா விசாரிக்கிறானான்.அதுகளை கோர்த்து வைத்துப் பார்த்தால், அவ யாழ்ப்பாணத்தில் கலியாணம் கட்டிய இடம் பெரிய இடமாம். கலியாணம் செய்து பல வருடங்களாக அவையளுக்கு பிள்ளை இல்லையாம். அதனால புருசன்காரன் இரண்டாவது கலியாணம் செய்து கொண்டு வீட்டுக்கு வர இந்த பிள்ளையும் அங்கிருக்கப் பிடிக்காமல் ஏதோ ஒரு தைரியத்தில வெளிக்கிட்டு வந்திட்டுது. தாய் தேப்பன் எல்லாம் தெல்லிப்பளையில் இருக்கினமாம். ஆனால் ஒருத்தரோடும் இதுவரை எதுவித தொடர்பும் இல்லையாம் என்று சொன்னவ.
--- ஓ.....நீங்கள் எல்லாம் விசாரிச்சுதான் வைத்திருக்கிறியள்.
--- அதுதான் சொன்னேனே, அப்பப்ப பேச்சு வரேக்க கதைக்கிறது, பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாய் சேர்த்து புரிந்து கொள்ளுறதுதானே. அது கிடக்கட்டும் இப்ப நீ என்ன சொல்லுறாய் அத முதல்ல சொல்லு.
--- சரி, என்னவோ செய்யுங்கோ ஆனால் அவவுக்கு அதிகம் மனக்கஷ்டம் உண்டாக்க வேண்டாம். அது முக்கியம்.
--- சரியடா தம்பி, நான் நேரம் பார்த்து நைசாய் கதைக்கிறேன்.
அநேகமான மாலை நேரங்களில் அவர்கள் அருகில் இருக்கும் குளத்தின் கரையையொட்டி நடந்து போய் வருவதை வழக்கமாய் கொண்டிருந்தார்கள். முன்பு ஆச்சி அப்புவுக்கு அந்தப் பழக்கமில்லை. ஆனால் நிர்மலா வந்து கொஞ்ச நாளில், அவள் முதலில் தான் தனியா நடந்து போட்டு வருவாள். பின் அவர்களுடன் நன்றாகப் பழகியபின் அவர்களையும் கூட்டிக் கொண்டு வெளியே நடந்து போய்வரப் பழக்கி விட்டாள். ஆரம்பத்தில் சும்மா சாக்கு போக்கு சொன்ன ஆச்சி நாளடைவில் அப்புவும் பிள்ளைகளும் ஆவலுடன் சேர்ந்து நடக்க பின் தானும் சேர்ந்து கொண்டாள். அதில் அவர்களுக்கு ஒரு சௌகரியம் இருந்தது. பிள்ளைகளின் இரவு உணவையும் கொண்டு சென்று அங்கேயே சாப்பிட வைத்து விடுவார்கள். அவர்களுக்கு முன் சிவாங்கியும் முகிலனும் நொறுக்குத் தீனிகளுடன் தயாராய் இருப்பார்கள். அப்படி குளக்கரையிலும் வயல்களுக்கு நடுவேயும் நடக்கும்போது சுத்தமான காற்றையும் சுவாசிப்பதால் ஆச்சி அப்புவுக்கும் உடம்பு இலேசாகவும் சில சில வருத்தங்கள் இல்லாமல் போவதையும் கண்கூடாக அவர்கள் உணர்ந்திருக்கின்றனர். இரவில் நல்ல பசியுடன் வந்து வடிவா சாப்பிட முடிகிறது. அடிச்சுப் போட்டால் போல் நல்ல உறக்கமும் வருகிறது. பலப்பல விடயங்களையும் கதைத்துக் கொண்டு வருவதால் மனசிலும் எந்தப் பாரமும் இல்லாமல் இலேசாக இருக்கின்றது. பிள்ளைகள் முன்னால் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டு திரிய இவர்கள் பின்னால் நடந்து போவார்கள்.
அன்றும் அப்படித்தான் அப்புவும் பிள்ளைகளும் முன்னால் போய்க்கொண்டிருக்க ஆச்சியும் நிர்மலாவுக்கு மிக அருகில் வந்து மெதுவாக பேச்சைத் துவங்குகிறாள்.
--- எடி பிள்ளை நிர்மலா நான் உன்னட்டை ஒரு விஷயம் கேக்கட்டே என்று பீடிகையுடன் ஆரம்பிக்கிறாள்.
--- என்ன அம்மா இது எதுவென்றாலும் கேளுங்கோ.
--- பிறகு நீ குறை நினைக்கக் கூடாது சரியோ.
--- சொல்லுங்கோ அம்மா இந்தமாதிரி தயக்கம் எல்லாம் வேண்டாம். நான் ஒன்றும் குறை நினைக்க மாட்டன்.
--- பிள்ளை நீ ஏன் இன்னொரு கல்யாணம் செய்யக் கூடாது.
--- அது வந்து அம்மா நான் அங்கிருந்து வந்தபின் எப்படியாவது உழைத்து நல்ல நிலைமைக்கு வரவேண்டும். கடைசி காலத்தில அம்மா அப்பாவுக்கும் மற்றும் எனது மூத்த அக்காவுக்கும் உதவி செய்து அவர்களை நல்லா வைத்திருக்க வேண்டும். அதிலேயே என் சிந்தனை முழுதும் இருந்ததால் நான் மறுமணம் பற்றி நினைக்கவே இல்லை.
--- சரி..... நீ இப்ப நல்லா சம்பாதிக்கிறாய்தானே. நீ கெட்டிகாரி அதெல்லாம் செய்து போடுவாய். அதவிடு, இப்ப நான் விசயத்துக்கு வாறன். இந்த சில வருடங்களில் உன்னை எங்களுக்கு மிகவும் பிடித்துப் போட்டுது. என்ர மகன் கதிரவனை கலியாணம் செய்ய உனக்கு சம்மதமே. அல்லது உனது பெற்றோருடன் கதைக்க வேண்டும் என்றாலும் தயங்காமல் சொல்லு நாங்கள் சென்று உன்னைப் பெண் கேட்கிறம்.
--- சிறிது தயங்கிய நிர்மலாவும் அது வந்து அம்மா நீங்கள் திடுதிப்பென்று என்னிடம் கேட்கிறீங்கள் எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
--- பொறு பிள்ளை, நீ ஒன்றும் அவசரப்பட வேண்டாம்.நன்றாக யோசித்து ஒரு பதிலை சொல்லு. நீயும் இப்படியே இன்னும் எவ்வளவு காலம்தான் இருக்க முடியும்.
--- உங்களுக்கு தெரியும்தானே அம்மா எனக்கு பிள்ளை பிறக்காததால்தான் அவர் மறுமணம் செய்தவர். அதனால்தான் நானும் அங்கிருந்து கிளம்பி வந்தனான்.நாளைக்கு அதுவே உங்களுக்கும் ஒரு பிரச்சனையாய் இருக்கக் கூடாதல்லவா.
--- அதையேண்டி அம்மா நீ நினைக்கிறாய். அது ஆண்டவன் போடுற பிச்சை. யார்யாருக்கு எதையெதை எப்ப குடுக்கணும் என்று அவனுக்குத்தான் தெரியும். எனக்கு ஆறு பிள்ளைகள். ஐந்து பிள்ளைகளும் ஒவ்வொன்றும் கருவிலே அழிந்தும், குறைப்பிரசவத்திலும் என்று போய் கடைசியில மிஞ்சினது இவன் கதிரவன் மட்டும்தான். இப்ப உனக்குத்தான் இரண்டு பிள்ளைகள் இருக்குதே. நீ இங்க வந்ததில் இருந்து அந்த தாயில்லாப் பிள்ளைகளை குளிக்கவாக்கிறதில் இருந்து அவையளுக்கு ஏற்ற சாப்பாடுகள் உடுப்புகள் எல்லாம் நீதானே பார்த்துப் பார்த்து செய்கிறாய். கண்ணன் தேவகியிடம் பிறந்தாலும் தாய் என்று யசோதாவிடம்தானே வளர்ந்தவன். அதுபோல் அதுகளும் உன்னிடம்தானே அம்மா அம்மா என்று ஒட்டிக் கொண்டு கிடக்குதுகள். பெற்றவளுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கேல்லையே. "கல்லைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டால்தான் கடவுள் வழிபாடா, இந்த பிள்ளைகளை தாய்க்கு தாயாய் இருந்து கண்ணுங் கருத்துமாய் வளர்க்கிறதும் கூட அந்த பரம்பொருளுக்கான வழிபாடுதான்" அன்று கிணத்துக் காட்டில் இருந்து நீ சிவாங்கியை காப்பாத்தினது இப்பவும் என் கண்ணுக்குள்ள நிக்குது. அண்டைக்கு மட்டும் ஒரு தப்பு நடந்திருந்தால் நான் என்ர பிள்ளைக்கு என்ன பதில் சொல்லுவன். அன்றிலிருந்துதான் எனக்கும் அப்புவுக்கும் உன்மீது இப்படி ஒரு எண்ணம் வந்தது. யார் கண்டது உனக்கும் ஆண்டவன் ஒரு மடிப்பிச்சை இட நினைத்தால் அதை யார் தடுப்பார். இப்படி இவர்கள் கதைத்துக் கொண்டிருக்க அப்புவும் பிள்ளைகளும் விளையாடி விட்டு வருகினம். பின் எல்லோருமாக வீட்டிற்கு வருகிறார்கள்.
மலரும்...........! 🌾