ஒப்பந்த மீறல்களும் ஏமாற்றுதல்களும்
ஜெயவர்த்தனவுடனான 11 மாதகாலப் பேச்சுவார்த்தைகள் மூலம் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. ஆனால், இப்பேச்சுக்களின் மூலம் சில நிவாரணங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரால் பெற்றுக்கொள்ள முடிந்தது. 1977 மற்றும் 1981 அரச வன்முறைகளின்போது பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கான நிவாரணம், தமிழ்பேசும் பொலீஸ்காரர்களை வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு இடமாற்றுதல், வவுனியா மாவட்டத்தில் எல்லைகளை மாற்ற அரசாங்கம் எடுத்துவந்த முயற்சிகளை தற்காலிகமாகவேனும் நிறுத்திவைத்தல் ஆகிய விடயங்களை முன்னணியினரால் பேச்சுவார்த்தைகள் மூலம் பெற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால், அரசாங்கம் ஒத்துக்கொண்டதுபோல மாவட்ட அதிகார சபைகளுக்கான அதிகாரங்களையோ அல்லது இச்சபைகள் இயங்குவதற்கான நிதியினையோ அரசு ஒருபோதுமே கொடுக்க விரும்பவில்லை.
மேலும், அரசியலமைப்பில் கூறப்பட்ட தமிழ் மொழிக்கான அந்தஸ்த்து, நிலங்களைப் பாவித்தல் மற்றும் நிலப் பங்கீடு, சட்ட அதிகாரங்கள் என்று எவற்றையுமே அரசு நடைமுறைப்படுத்த விரும்பவில்லை.
1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பில் கூறப்பட்ட தமிழர் தொடர்பான எந்தவிடயங்களையும் நடைமுறைப்படுத்த அரசு மறுத்துவருவது தொடர்பாக அமிர்தலிங்கம் பலமுறை ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்திருந்தார்.ஜனாதிபதிக்கு அவர் எழுதிய கடிதங்களில் ஒன்று இவ்வாறிருந்தது,
"1978 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பின்படி உங்களது அரசாங்கம் தமிழ் மொழிக்கு சில ஏற்பாடுகளைச் செய்யப்போவதாகக் கூறியிருந்தது. ஆனால், இன்றுவரை உங்கள் அரசாங்கம் அதனைச் செயற்படுத்தத் தவறியுள்ளதுடன், உங்களின் அமைச்சர்களும் செயற்படுத்த முடியாமைக்கான காரணங்களைத் தேடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.மிகவும் அடிப்படையான விடயங்களான தமிழில் தமிழர்களுடன் தொடர்புகொள்ளுதல் என்பதுகூட உங்களால் செயற்படுத்தமுடியாமல் இருக்கிறது".
"அரசால் செய்துகொடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்ட தமது அடிப்படை மொழி உரிமைகளைக் கூட தமிழர்கள் பெறாதவிடத்து, அவர்கள் தமது மொழிதொடர்பாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதை எவராலும் குறைகூறமுடியுமா?"
ஆர். சம்பந்தன்
இவ்வாறே, 1980 ஆம் ஆண்டின் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தொடர்பான சட்டமூலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட காணிப் பயன்பாடு மற்றும் பங்கீடு தொடர்பான அதிகாரங்களை வழங்க அரசு தயாராக இருக்கவில்லை. 1983 ஆம் ஆண்டு ஆனி மாதம் ஜெயவர்த்தனவுக்கு சம்பந்தன் எழுதிய கடிதத்தில் இவ்வாறு முறைப்பாடு செய்திருந்தார்,
"1980 ஆம் ஆண்டு அரசாங்கம் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தொடர்பான சட்டத்தை இயற்றியிருந்தது. இச்சட்டத்தின் மூலம் காணிகளை உபயோகிக்கவும், அவற்றினைப் பங்கீடு செய்யவும் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இந்தச் சட்டம் இதுவரையில் அமுல்ப்படுத்தப்படவில்லை. இன்று இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இந்தச் சட்டம் வெறும் கடதாசியில் இறந்துபோய்க் கிடக்கிறது. இச்சட்டத்தில் குறிக்கப்பட்டதுபோல, காணிப் பாவனை மற்றும் பங்கீட்டில் அரசோ அல்லது அமைச்சர்களோ தலையீடு செய்யமுடியாது எனும் சரத்து தொடர்ச்சியாக மீறப்பட்டே வருகிறது. காணிவிடயம் தொடர்பாக அரச திணைக்களங்களினால் வெளியிடப்பட்டு வரும் சுற்றுநிருபங்களைப் பார்க்கும்போது அரசாங்கம் ஒருபோதுமே இச்சபைகளுக்கு காணி அதிகாரங்களைத் தரப்போவதில்லை என்பது உறுதியாகிறது"
சட்டம் ஒழுங்கு தொடர்பான சட்டமும் இவ்வாறே அரசால் செயற்படுத்தப்படாமல் விடப்பட்டது. பொலீஸார் மீதான மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் அதிகாரத்தினை சட்டத்தில் கூறப்பட்டதுபோல் நடைமுறைப்படுத்த அரசு விரும்பவில்லை. பொலீஸாரும் ராணுவமும் தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகள் என்கிற பெயரில் தமிழர்கள் மீதும் அவர்களின் சொத்துக்கள் மீதும் தாக்குதல் நடத்தவே அரசால் தொடர்ந்தும் பாவிக்கப்பட்டார்கள்.
அரசியலமைப்புச் சட்டத்தில் தன்னால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பலவிடயங்களைச் செய்யமறுத்த அரசாங்கம், தானே உருவாக்கிய ஜனாதிபதி தலைமையிலான அமைச்சர்கள், முன்னணி உறுப்பினர்கள் அடங்கிய உயர் குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களையும், கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளின்போது எட்ப்பட்ட விடயங்களையும் செய்ய மறுத்தது.
அரசுக்கும் முன்னணியினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் 1981/1982 ஆகிய வருடங்களில் 11 மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. "நம்பிக்கைத் துரோகங்களினதும் ஏமாற்றுக்களினதும் இழி சரித்திரம்" என்கிற பெயரில் தலைப்பிட்டு கடிதம் ஒன்றினை 1983 ஆம் ஆண்டு ஆவணி 10 ஆம் திகதி, அதாவது அரசியல் யாப்பின் ஆறாவது திருத்தம் செய்யப்பட்டு சில நாட்களின் பின்னர் அமிர்தலிங்கம் ஜனாதிபதிக்கு எழுதியிருந்தார். அக்கடிதத்தில் அரசாங்கம் செய்யத் தவறியிருந்த சில முக்கிய விடயங்கள் குறித்துச் சுட்டிக் காட்டியிருந்தார்,
அக்கடிதத்தின் ஒரு பகுதி இவ்வாறு கூறியது,
"1981 ஆம் ஆண்டு நடைபெற்றது போன்று, தமிழ் மக்களுக்கெதிராக உங்கள் அமைச்சர்களாலும், கட்சி ஆதரவாளர்களினாலும் வன்முறைகள் ஏவிவிடப்பட்ட சந்தர்ப்பங்களிலும், பேச்சுவார்த்தைக்கு வருமாறு எமக்கு விடுக்கப்பட்ட அனைத்து அழைப்புக்களையும் ஏற்றுக்கொண்டு நாம் பேச வந்திருக்கிறோம். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினால் செய்யப்படும் என்று நாம் வாக்குறுதியளித்த அனைத்து விடயங்களையும் நாம் தவறாது செய்தே வந்திருக்கிறோம். எமது சக்திக்கு அப்பாற்பட்ட முறையில் நடைபெறும் விடயங்கள் குறித்து நாம் பொறுப்பெடுக்க முடியாது. சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் அரசாங்கத்தை நடத்தும் அதிகாரம் எமக்குத் தரப்படவில்லை. ஆனால், கனம் ஜனாதிபதி அவர்கள், அமைச்சர்கள் உயர்மட்டக் குழுவிலும், கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளிலும் எட்டப்பட்ட தீர்மானங்களை அரசு நடைமுறைப்படுத்தியிருக்கிறதா என்பதுபற்றிக் கூறமுடியுமா? நான் சில விடயங்களை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்",
"மாவட்ட அபிவிருத்திச் சபைகள் - இச்சபைகள் திறம்பட செயற்படுவதற்கு வழங்கப்படுவதாக உறுதியளித்த எந்த விடயங்களும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை".
"தமிழ்பேசும் பொலீஸாரை பெரும்பான்மையாக வடக்குக் கிழக்கு மாகாணங்களில் பதவியில் அமர்த்துவது எனும் தீர்மானம் வடக்கில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய தமிழ் மாவட்டங்களில் இது இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. வவுனியா திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் நாம் அண்மையில் சந்தித்த பல அசம்பாவிதங்கள் இப்பகுதிகளில் தமிழ்ப் பொலீஸாரை நாம் நிறுத்தியிருந்தால் தவிர்த்திருக்க முடியும், ஆனால் அது நடக்கவில்லை. பொலீஸ் சேவைக்கு தமிழர்களை இணைத்துக்கொள்வதன்மூலம், இனப்பாகுபாடற்ற முறையில், குறிப்பாக இனங்களுக்கிடையிலான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டும் தருணங்களில் அவர்கள் சிறப்பாக நடந்துகொள்ளமுடியும் என்று உறுதியளிக்கப்பட்டது, ஆனால் இன்றுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை".
"1981 ஆம் ஆண்டு வைகாசி - ஆனி மாதங்களில் பொலீஸாரின் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் ஒருசிலருக்கு மட்டுமே இதுவரையில் வழங்கப்பட்டிருக்கிறது. காங்கேசந்துறை, சுண்ணாகம் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இதுவரையில் நிவாரணம் வழங்கப்படவில்லை. யாழ் நூலக எரிப்பிற்கான நிவாரணமாக லயணல் பெர்ணாண்டோ தலைமையிலான ஆணைக்குழுவினால் சிபாரிசு செய்யப்பட்ட பத்து மில்லியன் ரூபாய்களில் இதுவரை ஜனாதிபதி நிதியம் இரண்டு மில்லியன் ரூபாய்களை மட்டுமே வழங்கியிருக்கிறது. சுண்ணாகம், காங்கேசந்துறை ஆகிய பகுதிகளில் தமிழர்களைக் கொன்றும், அவர்களது சொத்துக்களைச் சூறையாடியும் வன்முறைகளில் ஈடுபட்ட பொலீஸார் அடையாளம் காணப்பட்டபோதும், இன்றுவரை அவர்கள் எவரும் கைதுசெய்யப்பட்டவில்லையென்பதுடன், வன்முறைகள் நடைபெற்ற பகுதியில் அமைந்திருக்கும் மல்லாகம் நீதிமன்றுக்கும் இதுவரை அவர்கள் கொண்டுவரப்படவில்லை. மேலும், இந்த விசாரணைகளைச் சிக்கலாக்கும் நோக்கில், வழக்கினை கொழும்பிற்கு மாற்றியிருப்பதன் மூலம் பொலீஸ் வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்கள் தமது பாதுகாப்புக் கருதி கொழும்பில் நடைபெறவிருக்கும் விசாரணைகளில் பங்குகொள்ள முடியா நிலைமையினையும் ஏற்படுத்தி விட்டிருக்கிறது".
"ஊர்காவற்படைக்கென்று தேர்வுசெய்து, பொலீஸாரினால் தகுதியானவர்கள் என்று உறுதிப்படுத்தப்பட்ட பல இளைஞர்கள் இதுவரையில் ஊர்காவற்படையில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை என்பதுடன், அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊர்காவற்படை எனும் பிரிவும் இதுவரையில் அமைக்கப்படவில்லை".
"மட்டக்களப்பின் பன்குடா மற்றும் கல்வியங்காடு ஆகிய பகுதிகளில் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லை".
1981 ஆம் ஆண்டு, ஆவணியில் இடம்பெற்ற முதலாவது உயர் மட்ட அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் கனம் ஜனாதிபதியான உங்களால் வழங்கப்பட்ட அறிவுருத்தலான வவுனியா நகரச் சந்தியில் அநீதியான முறையில் நிர்மாணிக்கப்பட்ட புத்தர் சிலையினை அகற்றுவது குறித்த செயற்பாடு இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. சிங்கள அரச ஊழியர்களால் தமிழரை இம்சிக்கவென்று அமைக்கப்பட்ட ஒரு சிலையினை அகற்றுவதற்கே ஜனாதிபதியான உங்களுக்கு அதிகாரம் இல்லையென்றால், சிங்கள இனவாதத்தினால் உந்தப்பட்டு ஆட்சிநடக்கும் இந்த அரசிடமிருந்து தமிழர்கள் எவ்வாறு நீதியைப் பெற்றுக்கொள்ள முடியும்?"
"அரச, பொதுச் சேவைகளில் தமிழருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்த உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டிருக்கின்றன. அரசால் சுற்றுநிருபங்கள் அனுப்பப்பட்டபோதிலும், இத்திட்டத்தினை அமுல்ப்படுத்தும் அமைச்சரின் செயலாளர் இச்சுற்று நிருபங்களுக்கெதிராக நடந்துவருவதுடன், தமிழர்களை அரச பணிகளில் சேர்ப்பதையும் தடுத்தும் வருகிறார். இந்த இழிசெயல் குறித்து இக்கடிதத்தில் மேலும் விலாவாரியாக பேச நான் விரும்பவில்லை".
"மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் அபிவிருத்திச் சபைகளுக்கான தீர்மானம் எடுக்கும் அதிகாரம் கொண்ட உறுப்பினர்களை மூன்று பேருக்கு மட்டுப்படுத்துவது என்ற இணக்கப்பாடு இதுவரை செயற்படுத்தப்படாமை, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவரை அபிவிருத்திச் சபைக்குள் கொண்டுவந்தமை, பின்னர் சட்டத்திற்குப் புறம்பான வகையில் இடம்பெற்ற இந்த நியமனத்தை பலர் சுட்டிக்காட்டியபோது அந்த உறுப்பினரை பதவிவிலக்கிவிட்டு மீண்டும் அவரையே இச்சபைகளுக்கு உறுப்பினராக நிறுத்தியது போன்ற பல முறைகேடுகளில் அரசு தனது கவனத்தைச் செலுத்தி வந்திருக்கிறது".
"அரசாங்கத்திற்கும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும் இடையே நடக்கும் பேச்சுவார்த்தைகளால் எதுவித பயனும் இல்லையென்பதைச் சுட்டிக்காட்டவே மேற்சொன்ன, அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, ஆனால் இன்றுவரை நடைமுறைப்பத்தப்படாது தட்டிக் கழிக்கப்பட்டுவரும் விடயங்கள் சிலவற்றை பிரஸ்த்தாபித்திருந்தேன்".
அரசியலமைப்பில் கூறப்பட்டதன்படி தமிழ மக்களுக்குக் கிடைக்கவேண்டிய அரசியல் உரிமைகள் இதுவரையில் தரப்படாமை, மாவட்ட அபிவிருத்திச் சபைகள் சட்டத்தின் மூலம் இணங்கப்பட்ட அதிகாரங்கள் வழங்கப்படாமை, இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு எட்டப்பட்ட விடயங்களை இதுவரை நடைமுறைப்படுத்தாமை என்பவை மட்டுமே இன்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி எதிர்நோக்கும் பிரச்சினைகள் அல்ல. மாவட்ட அபிவிருத்திச் சபைக்கான அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் செயற்பாடு தொடர்பாக கண்காணித்து வந்த ஜெயரட்ணம் வில்சன், "அமைச்சர்களும், அரச அதிகாரிகளும் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் விடயத்தில் மிகவும் அற்பத்தனமாக நடந்துகொள்வதுடன், பெரும்பாலான நேரங்களில் அதிகாரப் பகிர்வினை முற்றாகவே நிராகரித்தும் வருகிறார்கள்" என்று கூறுகிறார்.
"ஒவ்வொரு அமைச்சரும் தனது சொந்த எண்ணத்தின்படி அதிகாரங்களைப் பகிரவோ அல்லது தம்முடனேயே வைத்துக்கொள்ளவோ விரும்புகிறார்கள். அதிகாரப்பகிர்வு தொடர்பாக பொதுவான நடைமுறை ஒன்று அவர்களிடத்தில் இல்லை. இதில் வருத்தமளிக்கும் விடயம் என்னவெனில், தமது அமைச்சுகளின் கீழான விடயங்களுக்கு நிதியொதுக்கீட்டினைச் செய்ய அமைச்சர்கள் முன்வருவதில்லை" என்றும் அவர் கூறினார்.
தமக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு தமது மாவட்ட சபைகளை அபிவிருத்திச் செய்வதற்கான நிதியினை அரசு வழங்காதது குறித்து இச்சபைகளின் அதிகாரிகள் விசனப்பட்டிருந்தார்கள். தமிழர்களின் மாவட்டங்களின் மீதான தனது அதிகாரத்தைத் தன் கையிலேயே தொடர்ந்தும் வைத்திருப்பதற்காகவே மாவட்ட அபிவிருத்திச் சபை போன்ற விடயங்களின் செயற்பாட்டினை அரசு தடுத்துவருவதை அவர்கள் நன்கு உணர்ந்து கொண்டார்கள். யாழ்ப்பாண மாவட்ட சபையின் தலைவர் நடராஜா இரு விடயங்கள் தொடர்பாக நிதியினைத் திரட்ட நினைத்திருந்தார். முதலாவது விடயம், காங்கேசந்துறையிலிருந்து தமிழ்நாட்டின் நாகபட்டிணம் வரையான படகுச் சேவையொன்றினை ஆரம்பிப்பது. இப்படகுச்சேவையின் மூலம் யாழ்ப்பாண மாவட்ட சபைக்கு அதிக வருமானம் கிடைக்கும் என்று இச்சேவை தொடர்பான முன்னோடி ஆய்வுகள் தெரிவித்திருந்தன. இரண்டாவது, காங்கேசந்துறைச் சீமேந்துத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டும் ஒவ்வொரு சீமேந்துப் பையிற்கும் தலா ஒரு ரூபாய்ப்படி வரி அறவிடும் யோசனை. ஆனால், இந்த இரண்டு யோசனைகளையும் அரசு உடனடியாகவே நிராகரித்து விட்டது. இதனால், இச்சபைக்கு அரசால் ஒதுக்கப்படும் மிகச்சொற்ப நிதியைக்கொண்டே தனது செயற்பாடுகளை நடத்தவேண்டியதாயிற்று.
யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபையினை நடத்துவதற்கு அரசு தொடர்ச்சியாக போட்டுவந்த முட்டுக்கட்டைகளால் விரக்தியடைந்த தலைவர் நடராஜா, தனது அதிருப்தியை வெளிக்காட்டும் முகமாக 1983 ஆம் ஆண்டு, ஆடி மாதம் தனது பதவியை ராஜினாமாச் செய்தார். ஜெயவர்த்தன அவரை சந்திக்க அழைத்திருந்தபோதும், 1983 ஆம் ஆண்டின் ஜூலைப் படுகொலைகள் ஆரம்பித்து விட்டமையினால் மாவட்ட அதிகார சபைகள் என்கிற திட்டமே அரசால் முற்றாகக் கைவிடப்பட்டு விட்டது.
சுமார் ஒருவருட காலத்திற்கு முன்பதாக, 1982 ஆம் ஆண்டு சித்திரை மாதமளவில், கனடாவிலிருந்த தனது ஆலோசகர் ஜெயரட்ணம் வில்சனை வரவழைத்த ஜெயார், மாவட்ட அபிவிருத்திச் சபைகளை நடத்துவதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாகப் பேசுவதற்கு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடனான இன்னொரு சுற்றுப் பேச்சுக்களை ஆரம்பிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணித்தார். மேலும், தன்னைச்சுற்றியிருக்கும் இனவன்மம் கொண்ட அமைச்சர்களால், தன்னுடைய சுயாதீனம் தடுக்கப்பட்டு வருவதாகவும் வில்சனிடம் ஜெயார் தெரிவித்திருந்தார். 1995 ஆம் ஆண்டு பங்குனி 15 ஆம் திகதி லங்கா கார்டியன் பத்திரிக்கையில் எழுதும் ஜெயரட்ணம் வில்சன், ஜெயார் தன்னுடம் பேசிய விடயங்கள் குறித்து குறிப்பிட்டிருக்கிறார்.
"இனவன்மம் கொண்ட அமைச்சர்களால் நான் சூழப்பட்டிருக்கிறேன். இந்த நச்சு வட்டத்திலிருந்து நான் வெளியே பாய்ந்துவர உங்களின் நண்பர்களான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் நீங்கள் பேசுவீர்களாகவிருந்தால், என்னால் சில விடயங்களைச் செய்யமுடியும்" என்று ஜெயார் கூறியதாக வில்சன் எழுதுகிறார்.
ஜெயாரின் வேண்டுகோளின்படியே வில்சன் அமிர்தலிங்கத்துடன் பேசினார். பின்னர் தொடர்ந்த கூட்டத்தில் அமிர்தலிங்கத்தைப் பார்த்துப் பேசிய ஜெயார், "அடுத்துவரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை நீங்கள் எனக்குப் பெற்றுத்தரவேண்டும். ஆனால், இதனை நீங்கள் வெளியே பகிரங்கமாகப் பேசக் கூடாது. அப்படித் தெரிந்தால், பெளத்த சிங்களவர்களின் வாக்குகள் எனக்குக் கிடைக்காது போய்விடும். நான் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் நிச்சயமாக மாவட்ட அபிவிருத்திச் சபைகள் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவேன், என்ன நீங்கள் நம்பலாம்" என்று கூறவும், அமிர்தலிங்கமும் ஜெயார் வைத்த பொறியில் முற்றாக அகப்பட்டுப் போனார்.