திரும்பும் வரலாறு- பாகம் 5
டன்கர்க்
1940, மே மாதம் 10 ஆம் திகதி நாசி ஜேர்மனியின் தரைப்படைகள் பிரான்சினுள் சடுதியாக ஆக்கிரமித்து ஊடுருவின. பிரான்ஸ் தரப்பில் எதிர்த் தாக்குதலில் ஈடுபட்டிருந்த பிரெஞ்சுத் தரைப்படையினர், மூன்று லட்சத்திற்கும் அதிகமான பிரிட்டிஷ் இராணுவம் (British Expeditionary Force), சில பத்தாயிரம் பெல்ஜியம், கனேடியப் படையினர் என பெரும் இராணுவ அணியை நாசிகள் டன்கர்க் எனும் வட கிழக்கு பிரான்ஸ் கடற்கரையோர நிலப் பரப்பில் சுற்றி வளைத்தனர். பாதுகாப்புகளற்ற கடற்கரை வெளியில் சிக்கிக் கொண்ட நான்கு இலட்சம் வரையான இப்படைகளை, நாசி விமானங்கள் இடைக்கிடை குண்டு வீசிப் பெரும் உயிர்ச்சேதமெற்படுத்தின. கடல்வழியாக இந்தப் படைகளில் ஒரு பகுதியினரையாவது மீட்டெடுக்கும் முயற்சியாக ஒபரேசன் டைனமோ மே 26 இல் ஆரம்பிக்கப் பட்டு, அடுத்த ஒரு வாரத்தினுள் சுமார் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான பிரிட்டிஷ், பிரெஞ்சு, கனேடிய படையினர் டோவர் நீரிணையின் வழியாக மீட்கப் பட்டனர்.
கடல் வழி மீட்புப் பணியில் ஒரு சாதனையாக இது வரை கருதப் பட்டு வரும் டன்கர்க் மீட்புப் பற்றி பல நூல்களும், அண்மையில் ஒரு பிரபல திரைப் படமும் வெளியாகி இருக்கின்றன - வாசகர்கள் இந்த மூலங்களில் டன்கர்க் பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம்.
சமாதானப் புறாக்கள்
1940 ஜூன் நடுப்பகுதியில் பிரான்ஸ் நாசிகளிடம் சரணடைந்து 80% ஆன பிரான்ஸ் நிலப்பரப்பை நாசிகளிடம் ஒப்படைத்தது. இவ்வாறு பிரான்ஸ் சரணடைவதற்கு முன்னர், நாசிகள் பாரிசை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த நிலையிலும் வின்ஸ்ரன் சேர்ச்சில் பிரான்ஸ் அரச தலைவர்களை பிரான்சிலேயே நேரடியாகச் சந்தித்து தொடர்ந்து போராடும் படி ஊக்குவித்துக் கொண்டிருந்தார். இந்த வலியுறுத்தலின் காரணங்கள் பல. பிரான்ஸ் வீழ்ந்து விட்டால் கடல்வழியாக பிரிட்டனை நாசிகள் ஆக்கிரமிக்க அதிக காலம் எடுக்காது. அத்துடன், பிரிட்டன் மீது தாக்குதல் நடத்த நாசி விமானங்கள் பறக்க வேண்டிய தூரமும் வெகுவாகக் குறைந்து விடும். எனவே, பிரான்சின் பாதுகாப்பு என்பது இங்கிலாந்தின் பாதுகாப்புத் தான் என்பது தெளிவு. எனவே, இறுதியில் பிரான்ஸ் வீழ்ந்த போது, அடுத்த நாசி இலக்கு இங்கிலாந்து தான் என்பது சேர்ச்சிலுக்கு மட்டுமன்றி பிரிட்டன் மக்களுக்கும் தெளிவாகப் புரிந்தது.
ஆனாலும் எதிர்பார்ப்பிற்கு முற்றிலும் மாறாக ஹிற்லர் பிரிட்டனை ஆக்கிரமிக்கும் உத்தரவை உடனே வழங்கவில்லை. ஏன்?
ஏற்கனவே குறிப்பிட்டது போல, நாசிகள் தம் ஒவ்வொரு எதிரிகளையும் ஒவ்வொரு தரத்தில் வைத்திருந்தனர். யூதர்களும், றோமாக்களும் கரப்பான் பூச்சிகள், ரஷ்ய சிலாவிக் மக்கள் "கீழ் நிலை மனிதர்கள்" என வெவ்வேறு தரங்களில் பார்த்தனர் (இன்று நாசிகள் இருந்திருந்தால் மண்ணிறத் தோல் கொண்ட ஆசியர்களை கரப்பான் பூச்சிகளை விடக் கீழ் நிலையிலேயே வைத்திருந்திருப்பர்!). ஹிற்லர், பிரித்தானியர்களை, ஜேர்மனிய ஆரியர்களைப் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு நாகரீக இனமாகப் பார்த்தார். எனவே, இராணுவ ரீதியில் தாக்காமலே அவர்களை இணைத்துக் கொள்ளும் நோக்கத்தில் இருந்தார். ஹிற்லர் நீட்டும் நேசக் கரத்தைப் பற்றிக் கொண்டு இங்கிலாந்து சமாதானத்தைப் பேண வேண்டுமென வாதிட்ட எட்வேர்ட் மோஸ்லி (இவர் பிரிட்டன் பாசிச யூனியன்- British Union of Fascists எனும் அமைப்பின் தலைவர்), டியூக் ஹமில்ரன் (Duke of Hamilton) போன்ற சிலரும் பிரிட்டனில் இருந்தனர்.
சமகாலத்தில், சர்வாதிகாரிகளாக வலம் வரும் உலகத் தலைவர்களைப் போற்றும் கட்சிகளும், அதன் ஆதரவாளர்களும் மேற்கு நாடுகளில் பல்வேறு போர்வைகளினுள் ஒளிந்து வலம் வருவதைக் காண்கிறோம். இத்தகைய வில்லனுக்குப் பொன்னாடை போர்த்தும் போக்கு, நாசிகள் காலத்திலும் இருந்திருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும்.
வளையாத கருங்கல்!
"கருங்கல் உடையும், வளையாது!" எனும் புதுவையின் வரிகளின் பிரதிபலிப்பாக, வின்ஸ்ரன் சேர்ச்சில் நாசிகளோடு பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பேயில்லையென மறுத்து விட்டார். பிரிட்டன் பாராளுமன்றிலும் சரி, பொது மக்களுக்கு வானொலி மூலம் ஆற்றும் உரைகளிலும் சரி, சேர்ச்சிலின் உரைகள் இரு பகுதிகளைத் தவறாமல் கொண்டிருந்தன.
ஒன்று: எந்த நிலையிலும் பிரிட்டன் சரணடையாது போராடும் என்ற உறுதி, இரண்டு: இந்தப் போராட்டம், பிரிட்டன் மக்களுக்கு ஒரு கொடிய நரகமாக இருக்கும் என்ற யதார்த்தம்.
இது ஒரு அற்புதமான செயல்திறன் மிக்க உளவியல் நுட்பம். எதிர் கொண்டு வரும் கடின நாட்கள் பற்றிய உண்மையை மீள மீளச் சொல்லி விட்டால், மக்கள் பூப்படுக்கையை எதிர்பார்க்காமல் இருப்பர், ஏமாற்றம் கொள்ளாமல் காரியத்தைப் பார்ப்பர். அதே வேளை நம்பிக்கையை இழப்பது மட்டும் நடக்கக் கூடாதென மனதில் ஊன்றி விடுதல் மூலம், போராட்டக் குணத்தைத் தக்க வைத்தல். இவை இரண்டையும் ஒருங்கிணைத்து ரத்தின சுருக்கமாக சேர்ச்சில் சொன்ன ஒரு வாக்கியம்:
“If you are walking through hell, keep walking!” "நரகத்தினூடு நடக்க வேண்டியிருக்கிறதா? நடந்து கொண்டேயிருங்கள்!"
காத்திருந்த கழுகுகள்
மறு கரையில் நாசி ஜேர்மனியில், பி.பி.சி வானொலியைத் தவறாமல் கேட்ட படி சமாதான சமிக்ஞைக்காகக் காத்திருந்த நாசிப் பிரச்சார பீரங்கி கோயபல்ஸ் பிரிட்டனுக்கு தகுந்த பாடம் கற்பிக்கும் நாள் நெருங்கி விட்டதாக தன் டயரியில் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தார். பிரிட்டனின் சரணடைவை விரைவாக்கும் "லங்காபுவத்" பாணி பிரச்சார நடவடிக்கைளும் கோயபல்சால் ஏற்கனவே ஆரம்பிக்கப் பட்டிருந்தன. இன்று இணையவழியில் ரஷ்யாவின் அரச அமைப்புகள் பொய்ச்செய்திகளையும், எதிர் நாட்டில் பிரிவினையூட்டும் போலி ஆய்வுகளையும் கசிய விடுவது போல, அன்றைய நாட்களில் பிரபலமாக இருந்த மக்கள் தொடர்பாடல் ஊடகமான வானொலி மூலம் நாசிகள் பிரச்சாரம் செய்தனர். பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய ஆக்கிரமிக்கப் பட்ட நாடுகளிலிருந்து ஆங்கில மூலத்தில் இந்தப் பிரச்சாரங்கள் ஒலிபரப்பாகின.
ஹிற்லரின் உள்வட்டத்திலேயே பிரிட்டனை எப்படி வழிக்குக் கொண்டு வருவதென்பதில் கருத்து முரண்பாடுகள் இருந்திருக்கின்றன. இந்த முரண்பாடுகளின் ஒரு காரணம், யார் தலைமை நாசியான ஹிற்லரிடம் நல்ல பெயர் வாங்குவதென்பதில், ஹிற்லரின் கூட்டுக்களிடையே இருந்த கடும் போட்டி.
ஹிற்லரின் நம்பர் 2 ஆக இருந்த ருடோல்f ஹெஸ் சமாதானம் பேச வேண்டுமென்று வலியுறுத்தினார் (பின்னர் அவரே ஒரு விமானத்திலேறி ஸ்கொற்லாந்துக்குப் பறந்து போனது இன்னொரு சுவாரசியமான கதை!).
கோயபல்ஸ் உள்பிரிவினையால் பிரிட்டனையும் சேர்ச்சிலையும் பலவீனப் படுத்திய பின்னர் கடல்வழியாக ஆக்கிரமிக்க வேண்டுமென்றார்.
நாசி விமானப்படையின் தலைவரான கோறிங், ஒரே வாரத்தில் தன் விமானப் படையின் தாக்குதல்களால் பிரிட்டன் அடி பணியும் என்று ஹிற்லருக்கு நம்பிக்கையூட்டினார் (மூன்று நாட்களில் உக்ரைனின் கியேவ் விழும் என்று வாக்குறுதி கொடுத்த ரஷ்ய இராணுவத் தலைவர்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல!). இறுதியில், கோறிங்கின் இந்த வான்வழித் தாக்குதல் தான் பிரிட்டனை அடிபணிய வைக்கும் வழியென ஹிற்லர் ஜூலை மாதத்தில் இங்கிலாந்து மீது தாக்குதல் நடத்த அனுமதி கொடுத்தார்.
கழுகின் நாள்!
பிரான்சின் வடக்குக் கரையோரத் தளங்களிலிருந்து கிளம்பி, ஆயிரத்திற்கு மேற்பட்ட, பல வகை நாசி விமானங்களை உள்ளடக்கிய விமான அணி இங்கிலாந்தை நோக்கி முதலில் தாக்குதல் செய்ய ஆரம்பித்தது 1940, ஆகஸ்ட் 13. இந்த முதல் நாளை கோறிங் "கழுகின் நாள்- Eagle Day (Adlertag)" என்று பெயரிட்டு தயார் செய்து கொண்டிருந்த போது, பேர்லினில், பிரிட்டன் தோற்ற வெற்றிப் பேரணியைக் கொண்டாடும் அலங்கார வேலைகளை இன்னொரு நாசிக் குழு செய்ய ஆரம்பித்திருந்தது. அவ்வளவுக்கு, தனது விமானத் தாக்குதலால், சில நாட்களில் பிரிட்டன் சுருண்டு விடும் என்று நம்பினார் கோறிங். ஆனால், முதல் நாளிலேயே ஏமாற்றம் காத்திருந்தது. பிரிட்டனின் மீதான மோசமான வானிலையும், றோயல் விமானப் படையின் எதிர்த்தாக்குதலும் சேர்ந்து, இலக்குகளை அடையாளம் காணாமலே குண்டுகளை வீசி விட்டுத் திரும்ப வேண்டிய நிலை நாசி விமானங்களுக்கு ஏற்பட்டது. ஆனால், நான்கு நாட்களில் றோயல் விமானப் படையை அழித்து விடுவோம் என்று உறுதியெடுத்த கோறிங், தன்னுடைய கணிப்பை மாற்றிக் கொள்ளவில்லை, எனவே படை படையாக நாசி விமானங்களை இங்கிலாந்தின் வான்பரப்பினுள் அனுப்பும் அணுகுமுறை தொடர்ந்தது. அடுத்த சில நாட்களில், இந்தப் பகல் நேர நாசி விமானத் தாக்குதல்களை எதிர்ப்பதற்கு மேலதிகமாக, இரவில் பேர்லின் மீதும் றோயல் விமானப் படை விமானங்கள் குண்டு வீசித் தாக்குமளவுக்கு முன்னேற்றமடைந்திருந்தன.
இரவு நேரம், நிலாக் காலம்!
நாசி விமானப் படை ஒரு புதிய நுட்பத்தைக் கையாள ஆரம்பித்தது. பகலில், றோயல் விமானப் படையின் விமானங்கள் நாசி விமானங்களை வானில் எதிர் கொண்டு தாக்குவதைத் தவிர்க்க, இரவுகளில் பிரிட்டன் மீதான தாக்குதல்களை நடத்த ஆரம்பித்தனர். றோயல் விமானப் படையின் சண்டை விமானங்களில் ரேடார் வசதிகள் இருக்கவில்லை. விமான எதிர்ப்புத் துப்பாக்கிகளாலும் இரவில் குறி பார்த்துச் சுட இயலாது. ஆனால், நாசி விமானங்கள் இரவிலும் தரையில் இலக்குகளை அடையாளம் கண்டு தாக்க இயலும், இதற்கு ரேடார் அவசியமில்லை. எனவே, நிலா வெளிச்சம் நிரம்பிய இரவுகள், பிரிட்டன் நகரங்களுக்கு நரக நாட்களாக மாறின.
இரவு நேர நாசி விமானத் தாக்குதல்களால் எரிந்து சிதைந்த இலண்டன் பொதுக் கட்டிடங்கள். பட உதவி: நன்றியுடன் அமெரிக்க ஆவணக்காப்பகம்.
நிலா வெளிச்சமில்லா நாட்களில் கூட நாசிகள் துல்லியமாக கட்டடங்களையும், இலக்குகளையும் தாக்குவதற்கு ஒரு வானலைத் (Radio beacon) தொழில்னுட்பத்தைப் பயன்படுத்தினார்கள். விமானங்கள் ஓடுபாதைகளில் துல்லியமாகத் தரையிறங்குவதற்கெனப் பயன்பாட்டிலிருந்த லொறென்ஸ் (Lorenz) தொழில்னுட்பத்தை செம்மைப் படுத்தி சில நூறு கிலோமீற்றர்கள் தொலைவிலிருக்கும் இலக்குகளை அடையாளம் காண நாசிகள் வெற்றிகரமாகப் பயன்படுத்தினார்கள்.
அனேக உயிர், உடைமைச் சேதங்கள் பிரிட்டனில் இந்த இரவு நேரத் தாக்குதல்களாலேயே ஏற்பட்டன. ஏனைய நகரங்கள் மீது தாக்குதல் நடத்திய போதும், இலண்டன் நகரை நாசிகள் தொடாமல் விட்டிருந்தது, சேர்ச்சில் மனம்மாறி நாசிகளுடன் சமாதானம் பேச வருவார் என்ற நம்பிக்கையினால். அந்த நம்பிக்கை இப்போது சேர்ச்சிலின் வானொலி உரைகளால் தகர்ந்து விடவே, 1940 செப்ரெம்பர் 7 இல் முதன் முறையாக இலண்டன் நகரமும் நாசிகளின் இரவு நேரத் தாக்குதலுக்குள்ளானது. ஒரு இரவில், மத்திய இங்கிலாந்திலிருக்கும் கொவென்ட்றி நகரத்தின் மீதான தாக்குதலில் மட்டும் ஐநூறுக்கு மேற்பட்டோர் கொல்லப் பட்டனர். 1940, செப்ரெம்பர் 7 ஆம் திகதி முதல், 1941 மே 11 வரையிலான எட்டு மாத காலம், செறிவான நாசி விமானத் தாக்குதல்களை இலண்டன் உட்பட்ட நகரங்கள் எதிர் கொண்டதில், மொத்தம் 44, 652 மக்கள் பலியானார்கள். இவர்களுள் 29,000 பேர் இலண்டனில் பலியானார்கள். பிரித்தானியாவில், நாசி விமானத் தாக்குதல்களால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 5,626.
ஏமாற்றம், திசை மாற்றம்!
1940 டிசம்பரில், ஹிற்லர் பிரிட்டனின் வீழ்ச்சிக்காக இனிக் காத்திருக்கப் போவதில்லையெனத் தீர்மானித்து, தனது தளபதிகளுக்கு ஒரு கட்டளையைப் பிறப்பிக்கிறார்: "கேஸ் பார்பரோசா (Case Barbarossa)" எனும் சங்கேதப் பெயர் கொண்ட அந்த ஆணை, சோவியத் ரஷ்யாவை நோக்கி முன்னேறும் திட்டங்களை வரையுமாறு கட்டளையிட்டது. இந்தத் திட்டம், ஒப்பரேசன் பாபரோசாவாக 1940 ஜூன் மாதம் ஆரம்பித்தமை தான், பிரிட்டன் மீதான நாசி விமானப் படையின் தாக்குதல்கள் ஒரு ஆளியைச் சொடுக்கியது போல நின்று போகக் காரணம். இதை பாகம் 7 இல் விரிவாகப் பார்க்கலாம்.
ஆனால், அதற்கு முன்னாகப் பார்க்க வேண்டியது: நாசிகளின் கொடிய விமானத் தாக்குதல்களால் பிரிட்டன் துவண்டு விடாமல் காத்தது சேர்ச்சில் மட்டுமா? இந்தத் துவழாத பிரிட்டனின் தூண்களாக இருந்த இரு தரப்பினர் பற்றி அடுத்த பாகத்தில் பேசலாம்!
- தொடரும்