பழிவாங்கும் குணம் கொண்ட கிழட்டு நரி ஜெயார்
ஜனாதிபதிப் பதவியிலிருந்து விலகி பல வருடங்களுக்குப் பின்னர் 1995 ஆம் ஆண்டு சண்டே டைம்ஸ் பத்திரிக்கையாளர் ரொஷான் பீரீசுடன் பேசும்போது ஜெயார், "சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது" என்பதைக் காட்டவே விஜய குமாரதுங்க கைதுசெய்யப்பட்டதாகக் கூறினார். "எனது மகனை சிறிமாவோ பண்டாரநாயக்கா கைதுசெய்து, சிறையில் அடைத்து வைத்ததுபற்றி நான் ஒருபோதும் பேசியது கிடையாது" என்று கூறினார். அவரது மகன் ரவி ஜெயவர்த்தன மக்கள் விடுதலை முன்னணியினரின் 1971 ஆம் ஆண்டுக் கலகத்தின்போது சிறிமாவினால் கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
80 களில் தமிழருக்கெதிரான இனவழிப்பில் ஈடுபட்ட ஜெயாரின் ஒரே புத்திரன் - ரவி ஜெயவர்த்தன
ஆனால், ஜெயார் தனது மகனின் கைதுபற்றி அவ்வப்போது பேசியே வந்திருக்கிறார். சிறிமாவின் சிவில் உரிமைகளைப் பறித்து, அவரது அரசியல் எதிர்காலத்தை ஜெயார் அழித்திருந்த நிலையில், அவரைச் சந்திக்கச் சென்றிருந்த அமரபுர நிக்காய பீடத்தின் பெளத்த பிக்குகளின் தலைவரான கொஸ்கொட தர்மவன்சவிடமும் இன்னும் சில பெளத்த பிக்குகளிடமும் பேசிய ஜெயவர்த்தன தனது ஒரே மகனை 1971 ஆம் ஆண்டு கைதுசெய்து சிறையிலடைத்த சிறிமா, தகரக் கோப்பையில் உணவு போட்டார் என்று வன்மத்துடன் கூறியிருந்தார். அப்படியானால், உங்களின் மகனின் கைதுக்காகவா நீங்கள் இன்று சிறிமாவைப் பழிவாங்குகிறீர்கள் என்று பிக்குகள் அவரிடம் வினவியபோது, ஜெயார் பதிலளிக்க மறுத்துவிட்டார். மேலும், சிறிமாவின் மீதான கடும்போக்கைக் கைவிடுமாறு பிக்குகள் முன்வைத்த வேண்டுகோளினையும் ஜெயார் முற்றாக நிராகரித்து விட்டார்.
விஜய குமாரதுங்கவின் கைது கூட தனது மகனின் கைதிற்கான பழிவாங்கலாகவே ஜெயாரினால் செய்யப்பட்டது.
சர்வஜன வாக்கெடுப்பினை நடத்துவதற்காக கார்த்திகை 2 ஆம் திகதி அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்ட நான்காவது திருத்தத்தினை பீலிக்ஸ் ஆர் பண்டாரநாயக்கவும், சி வி விவேகானந்தனும் உச்ச நீதிமன்றத்தில் அதன் நியாயத்தன்மை குறித்து கேள்வியெழுப்பியிருந்தனர். அரச தலைமை வழக்கறிஞர் இந்தத் திருத்தத்தை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் நிறைவேற்றுவதாகவும், சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதாகவும் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்தார். ஏழு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற குழு, 4 இற்கு 3 என்கிற ரீதியில் புதிய திருத்தம்பற்றியோ அல்லது சர்வஜன வாக்கெடுப்புப் பற்றியோ தீர்ப்பளிப்பதற்கு ஏதுமில்லை என்று கைவிரித்து விட்டது.
வி என் நவரட்ணம்
1982 ஆம் ஆண்டு கார்த்திகை 4 ஆம் திகதி கூடிய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு சர்வஜன வாக்கெடுப்பினை எதிர்ப்பதென்று முடிவெடுத்தது. சாவகச்சேரி பாராளுமன்ற உறுப்பினர் வி. என். நவரட்ணம் தலைமையிலான உறுப்பினர்கள் இந்த முடிவில் தீர்க்கமாக நின்றனர். தனது தொகுதி வாக்களர்களின் ஆதரவின் மூலம் பதவிக்கு வந்த தான், தனது 6 வருட பதவிக் காலம் முடிவுற்றதும் தனது பதவியினை இராஜினாமாச் செய்யப்போவதாக அறிவித்தார். "தொடர்ந்தும் கதிரையைப் பிடித்துக் கொண்டு தொங்குவது மக்களை ஏமாற்றும் செயலாகும்" என்று அவர் கூறினார். அக்குழுவில் இருந்த சிலர், முன்னணி, எதிர்க்கட்சியுடன் இணைந்து சர்வஜன வாக்கெடுப்பினை எதிர்க்கவேண்டும் என்று விரும்பினர். ஆனால், அமிர்தலிங்கம் ஜெயவர்த்தனவுடன் இதுகுறித்து ஏற்கனவே ஒரு இணக்கப்பட்டிற்கு வந்திருந்ததுடன், ஜனாதிபதித் தேர்தலில் ஜெயாருக்கு வழங்கிய வாக்குறுதியினை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தார். ஆகவே, முன்னணியினரின் பாராளுமன்றக் குழு ஒரு சமரசத்திற்கு வந்தது. அதாவது, சர்வஜன வாக்கெடுப்பிற்கு தமது எதிர்ப்பினைத் தெரிவிக்கும் அதேவேளை, எதிர்க்கட்சியுடன் சேர்வதில்லை என்பதே அது. மேலும், 1983 ஆம் ஆண்டு ஆவணியில் முடிவிற்கு வரும் நடப்பு பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் பதவியிலிருந்து தாம் இராஜினாமாச் செய்வதாகவும் தீர்மானித்தார்கள். மேலும், தமது முடிவினை உறுதிப்படுத்தும் முகமாக அனைத்து முன்னணி உறுப்பினர்களும் தமது இராஜினாமாக் கடிதங்களை அமிர்தலிங்கத்திடம் கையளித்திருந்தனர். அதேவேளை, சர்வஜன வாக்கெடுப்பிற்க்நெதிராக முன்னணி கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபடாது எனும் உறுதியையும் அமிர்தலிங்கத்திடமிருந்து ஜெயார் பெற்றுக்கொண்டார். ஜெயாருக்கு தான் வழங்கிய வாக்குறுதியின்படி அமிர்தலிங்கமும் அவரது கட்சியும் நடந்துகொண்டனர். அதன் மூலம் வடக்குக் கிழக்கிற்கு வெளியே இருந்த தமிழர்களின் ஆதரவு ஜெயாருக்குக் கிடைக்க ஏதுவாகியது.
சர்வஜன வாக்கெடுப்பினை நடத்துவது தொடர்பாக பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் கலந்துகொண்ட அமிர்தலிங்கம், அதற்கெதிரான தமது கட்சியின் நிலைப்பாட்டினைத் தெரிவித்தார். ஆறு வருடங்களுக்கு மட்டுமே மக்கள் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 வருடங்களுக்குப் பதவியில் நீடிப்பது மனச்சாட்சிக்கு விரோதமானது என்று அவர் கூறினார். மேலும், தமது பாராளுமன்றக் குழுவின் தீர்மானத்தின்படி தனது கட்சியின் உறுப்பினர்கள் பாராளுமன்றத்தின் முதலாவது ஆயுட்காலம் முடிவடையும்போது ராஜினாமாச் செய்வார்கள் என்றும் அறிவித்தார். ஆனால், பாராளுமன்ற வாக்கெடுப்பின்போது அவரும், அவரது கட்சியினரும் பாராளுமன்றத்தில் சமூகமளித்திருக்கவில்லை.
பிரேமதாசவினால் கொண்டுவரப்பட்ட பாராளுமன்றத்தை நீட்டிக்கும் பிரேரணை 142 வாக்குகளுக்கு 4 வாக்குகள் என்கிற அடிப்படையில் பாராளுமன்றத்தால் 1982 ஆம் ஆண்டு, கார்த்திகை 5 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அநுரா பண்டாரநாயக்க, ஆனந்த திசாநாயக்க, லக்ஷ்மன் ஜயக்கொடி மற்றும் கம்மியூனிஸ்ட் கட்சியின் சரத் முத்துவெட்டுவே கம ஆகியோர் பிரேரணைக்கெதிராக வாக்களித்திருந்தனர்.
சர்வஜன வாக்கெடுப்பிற்கான திகதி மார்கழி 22 ஆம் நாளுக்குத் தீர்மானிக்கப்பட்டது. வாக்களர்களுக்கு முன்னால் வைக்கப்பட்ட கேள்விகளாவன : நடப்பிலிருக்கும் பாராளுமன்றத்தை இன்னும் ஆறுவருடங்களுக்கு, அதாவது 1989 ஆம் ஆண்டு ஆவணி 4 ஆம் திகதிவரை நீட்டிக்கவும், அத்திகதிக்குப் பின்னர் பாராளுமன்றத்தைக் கலைத்துவிடவும் அனுமதி தருகிறீர்களா?
சர்வஜன வாக்கெடுப்பில் வாக்களிப்பதுகுறித்து வாக்காளர்களுக்கு அறிவுருத்தல் விடுக்கப்பட்டது. அதன்படி, பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை இன்னும் 6 வருடங்களுக்கு நீட்டிக்க விரும்புவோர் விளக்குச் சின்னத்திற்கும், விரும்பாதோர் பானை சின்னத்திற்கும் புள்ளடியிடுமாறு கோரப்பட்டனர்.
விளக்குச் சின்னத்திற்கு ஆதரவாக ஜெயவர்த்தன பிரச்சாரம் செய்த அதேவேளை, சிறிமா தலைமையிலான எதிர்க்கட்சியினர் பானைச் சின்னத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துவந்தனர்.
சர்வஜன வாக்கெடுப்பிற்கான தனது முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தினை கார்த்திகை மூன்றாம் வாரம் கொழும்பு, கொச்சிக்கடையில் ஆரம்பித்த ஜெயவர்த்தன, சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றும் புதிய விடயம் அல்ல என்றும், இது 1978 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பிலேயே குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் கூறினார். சிறிமாவோ மக்களின் விருப்பினை அறிந்துகொள்ளாமல், பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை 1975 ஆம் ஆண்டிலிருந்து 1977 ஆம் ஆண்டுவரை நிட்டித்தது போல அல்லாமல், தான் மக்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே பாராளுமன்றத்தை நீட்டிக்க விரும்புவதாக ஜெயார் கூறினார். தனது அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பதற்காகவே தற்போதிருக்கும் பாராளுமன்றத்தை தொடர்ந்தும் பேண தான் விரும்புவதாக அவர் கூறினார்.
சிறிமா அரசியல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்பதால், அந்த வேட்பாளர்கள் தமது தகமையினை இழப்பார்கள் என்கிற தடை இருந்தபோதும், சிறிமாவோ இப்பிரச்சாரங்களில் எதிர்க்கட்சியின் பிரதம பிரச்சாரகராகப் பங்கெடுத்தார். ஏனென்றால், இந்த சர்வஜன வாக்கெடுப்பில் வேட்பாளர்கள் என்று எவருமே இருக்கவில்லை. தொலைக்காட்சிப் பேட்டியொன்றில் பேசிய சிறிமா, "உங்களின் சிவில் உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்கிற விருப்பமிருந்தால், நீங்கள் பானைச் சின்னத்திற்கே உங்களின் வாக்கினை வழங்க வேண்டும். எதிர்காலச் சந்ததியினரின் நல்வாழ்விற்காக நீங்கள் பானைச் சின்னத்திற்கே வக்களிக்க வேண்டும் என்று நான் கேட்கிறேன். 1931 ஆம் ஆண்டிலிருந்து நாம் பேணிவரும் நடைமுறையினை இதன் மூலம் மட்டுமே நாம் பேணைக்காக்க முடியும்" என்று கூறினார்.
"பானைக்கு வாக்களிப்பதென்பது எந்தவொரு அரசியற் கட்சிக்கும் ஆதரவாகவோ அல்லத் எதிராகவோ வாக்களிப்பது என்று அர்த்தமாகிவிடாது. பானைக்கு வக்களிப்பதன் மூலம் 1931 ஆம் ஆண்டிலிருந்து பாதுகாக்கப்பட்டு வரும் நடைமுறையான பாராளுமன்ற உறுப்பினர்களை மக்கள் தெரிவுசெய்யும் உரிமையினை காப்பாற்றிக்கொள்வதாகும்" என்றும் அவர் கூறினார்.
சர்வஜன வாக்கெடுப்பு நடப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னதாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஆதரவாளர்களைக் கவரும் விதமான வதந்தியொன்று கொழும்பில் வேண்டுமென்றே அரசால் பரப்பப்பட்டது.
இனப்பிரச்சினைக்குத் தீர்வினை வழங்கும் முகமாக, அரசாங்கத்தில் மிக முக்கிய பொறுப்பில் அமிர்தலிங்கம் ஜெயவர்த்தனவினால் அமர்த்தப்படப் போகிறார் என்பதுதான் அந்த வதந்தி. நான் அமிர்தலிங்கத்திடம் இதுகுறித்து நேரடியாகக் கேட்டேன், "குப்பை" என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்த அமிர், அதனை முற்றாகவும் மறுக்க விரும்பவில்லை. "ஒரு வதந்தியை நான் எப்படி இல்லையென்று மறுக்க முடியும்?" என்று அவர் என்னைப்பார்த்துக் கேட்டார்.
நாடுபூராகவும் 5,768,662 வாக்காளர்கள் சர்வஜன வாக்கெடுப்பில் கலந்துகொண்டார்கள். பதிவுசெய்யப்பட்ட 8,145,015 வாக்களர்களில் இது 70.82 வீதமாகும். மொத்தமாக 3,141,223 வாக்குகள், 54.45 வீதத்தினர் பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை மேலும் 6 வருடங்களுக்கு நீட்டிக்க தமது விருப்பினைத் தெரிவித்திருந்தார்கள். 2,605,983 வாக்காளர்கள், 45.17 வீதத்தினர், பாராளுமன்ற ஆயுட்கால நீட்டிப்பிற்கு எதிராக வாக்களித்திருந்தார்கள். எதிர்க்கட்சியினர் மீதான குண்டர்களின் வன்முறைகள், அச்சுருத்தல்கள் என்பவற்றுடனும், தேர்தல் விதிமுறைகளுக்கு முரணாகவும் நடத்தப்பட்ட இந்த சர்வஜன வாக்கெடுப்பில் ஜெயவர்த்தன 535,240 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடும்போது, நாடு தழுவிய ரீதியில் வக்களித்தவர்களின் எண்ணிக்கை 10 வீதத்தினால் குறைந்து காணப்பட்டது. ஆனால், யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் காட்டிய விருப்பைக் காட்டிலும் அதிக ஈடுபாட்டுடன் சர்வஜன வாக்கெடுப்பில் கலந்துகொண்டிருந்தனர். ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்திருந்த 228,613 தமிழர் வாக்களர்களுடன் ஒப்பிடும்பொழுது, சர்வஜன வாக்கெடுப்பில் 290,849 தமிழ் வாக்களர்கள் யாழ்ப்பாணத்தில் வாக்களித்திருந்தனர். இவர்களுள் 260,534 வாக்களர்கள் பாராளுமன்றத்தை நீட்டிப்பதற்கு எதிராகவே வாக்களித்தனர். 25,312 வாக்களர்கள் பாராளுமன்றம் நீட்டிக்கப்படுவதை ஆதரித்திருந்தனர். ஜனாதிபதித் தேர்தலில் ஜெயவர்த்தனவுக்கு ஆதரவாக வாக்களித்த 44,780 தமிழர்களில் 19,000 தமிழர்கள் அவருக்கெதிராக சர்வஜன வாக்கெடுப்பில் வாக்களித்திருந்தனர்.
இவ்வாறே, வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வசித்துவரும் பெரும்பாலான தமிழர்கள் பாராளுமன்றத்தை நீட்டிக்கும் ஜெயவர்த்தனவின் விருப்பிற்கு எதிராகவே வாக்களித்திருந்தனர். வன்னி மாவட்டத்தில் 48,968 வாக்களர்கள் இல்லையென்றும், 25986 வாக்களர்கள் ஆம் என்றும் வாக்களித்திருந்தனர். திருகோணமலை மாவட்டத்தில் 51,909 வாக்களர்கள் இல்லையென்றும், 39,429 வாக்களர்கள் ஆம் என்றும் வாக்களித்திருந்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 72,971 வாக்களர்கள் இல்லை என்றும், 47,482 வாக்களர்கள் ஆம் என்றும் வாக்களித்திருந்தனர். அம்பாறை மாவட்டத்தில் 91,129 வாக்களர்கள் ஆம் என்றும், 62,836 வாக்களர்கள் இல்லையென்றும் வாக்களித்திருந்தனர். தனது விருப்பிற்கெதிராக வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்று தெரிந்தபோது, இயல்பாகவே பழிவாங்கும் குணம் கொண்ட ஜெயார் தமிழர்களுக்கொரு பாடத்தைப் புகட்ட வேணடும் என்று தருணம் ஒன்றை எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்தார்.