பதினேழு
இடையில எழுதினதை விட்டிட்டு வேறு ஒண்டுக்கு வாறன். இணுவிலில இருந்து வாங்கிய வீட்டுக்குப் போவதற்கு ஒவ்வொருதடவையும் 2000 கொடுக்கிறதாலை எதுக்கும் நீ ஒரு ஸ்கூட்டி எடுத்து ஓடன் எண்டு மனிசன் சொல்ல எனக்கும் ஆசை பிடித்துக்கொண்டுது. ஆரைப் பார்த்தாலும் ஸ்கூட்டி. மோட்டார் சயிக்கிளோ அல்லது ஸ்கூட்டி இல்லாத வீடே இல்லைஎண்டு சொல்லலாம். பக்கத்தில இருக்கிற கடைக்குப் போறதுக்கும் நடக்காமல் விசுக்கெண்டு அதிலதான் போயினம். பெண்கள் பின்னால் இரண்டு பிள்ளைகள், முன்னால் ஒரு பிள்ளையை நிக்கவச்சு லாவகமா ஓட்டிக்கொண்டு போறதைப் பார்க்க எனக்கே ஆச்சரியம். காலையிலும் மாலையிலும் பள்ளிக்கூட வாசலைப் பார்த்தால் ஸ்கூட்டிகள் தான்.
நான் 34 ஆண்டுகளாகக் கார் ஓடுறன். உது ஒடுறது பெரிய வேலையோ எண்டு நினைச்சு நானும் கணவரின் தம்பி மகனுமாக கடை கடையாய் ஏறி இறங்கி ஸ்கூட்டி தேடினால் எல்லாம் படு விலை. ஆறு ஏழு இலட்சங்களுக்குக் குறைய ஒன்றுகூட இல்லை. நீங்கள் நிக்கப்போறது இன்னும் நாலோ ஐந்து மாதங்கள் தானே சித்தி. பழசை வாங்கி ஓடிப்போட்டு விட்டுட்டுப் போனாலும் நட்டம் இல்லை என்று கூறி தனக்குத் தெரிந்த சிலரிடம் கூறி ஒரு ஸ்கூட்டியைக் கண்டுபிடிச்சம் கொக்குவிலில். போய் பார்த்தால் வெள்ளை நிறம். சின்னன். இருந்து பார்த்தால் கால் நிலத்தில வடிவா முட்டுது. என்ன ஒகேயா சித்தி என்றுவிட்டு நாளை இணுவிலில் உள்ள ஒரு கறாச்சின் பெயரைச் சொல்லி கொண்டுவரச் சொல்லியாச்சு. விலை மூண்டு லட்சம் என்று தொடங்கி இரண்டு லட்சம் என்று முடிவாச்சு.
நானும் நாளைக்கு வாங்கினால் இரண்டு மூன்றுநாட்கள் ஓடிப் பழகி ஓடலாம் என்ற கற்பனையில் கணவரிடம் சொல்கிறேன். 2 லட்சம் என்றால் சரியான பழைய மொடல் போல இருக்கே என்ற கணவர் தமையனின் மகனுக்கு போன் செய்து விசாரிக்க, ஓம் சித்தப்பா அந்த மொடலுகள் பழுதானால் திருத்த பாட்ஸ் எடுக்கிறதுதான் கஸ்டம் என்கிறார். அப்ப அதை வாங்க வேண்டாம் என்றுவிட்டு தான் ஒரு youtube வீடியோ ஒன்றை எனக்கும் பெறாமகனுக்கும் அனுப்புகிறார். விலை ஐந்து இலட்சத்துக்கு ஒரு ரூபாய் குறைய. ஏன் இவ்வளவு காசுக்கு என்கிறேன் நான். நங்கள் இனி அடிக்கடி போகத்தானே போறம். உது இரண்டுபேர் போகவும் வசதிபோல இருக்கு என்று உடனே பணத்தை அனுப்பிவிட அடுத்தநாளே அதை வாங்கியாச்சு.
மூன்று நாட்களுக்கு நீங்கள் ஓடலாம். அதன் பிறகு ஒரு வாரத்தில் புத்தகம் வந்துவிடும். ரோட்டக்ஸ் கட்டியபின்தான் ஓடலாம் என்றனர். இப்போதெல்லாம் பிரதான வீதிகளில் மட்டுமன்றி சிறிய உள் வீதிகளில் கூட போலீஸ் நின்று வாகனங்களை மறித்து சோதனை செய்வது வழக்கமாகிவிட எதுக்கும் மூன்று நாளில் நீங்கள் பழகிவிடுவியள் சித்தி என்று பெறாமகன் உற்சாகப்படுத்த அவரையும் கூட்டிக்கொண்டு ஒரு விளையாட்டு மைதானத்துக்குப் போகிறேன். மழை பெய்த தண்ணீரும் சில இடங்களில் தேங்கி நிற்க நான்கு மாடுகளும் கட்டப்பட்டிருக்க எனக்கோ பயம் பிடித்துக்கொண்டது. இண்டைக்கு நீங்கள் கனக்க ஓடமாட்டியள் என்று என்னிடம் ஸ்கூபியைத் தந்தால் பயங்கரப் பாரம். ஆனாலும் ஒருவாறு நேராகப் பிடித்து மெதுவா ஒரு ஆறு சுற்றுச் சுற்றிவர பயத்தில் போதும் இன்று என்றுவிட்டு போய்விட்டோம். அடுத்தநாளும் ஒரு அரை மணித்தியாலம் இடதுபுறம் வலதுபுறம் திருப்பிப் பழகி றோட்டில ஒடுவம் சித்தி என்கிறார்.
எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் எல்லாம் சிறிய வளைவுகளுடன் கூடிய ஒழுங்கைகள். எனக்கு அங்கு ஓடுவதை எண்ணவே பயமாகவும் இருக்கு. ஒரு எல் போட் போட்டு ஒடுவமோ என்றுகேட்க அவர் விழுந்து விழுந்து சிரிக்க எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் சிரிக்கிறீர்கள் என்று கேட்க உங்களுக்கு 8 வருட லைசென்ஸ் தந்திருக்கிறாங்கள். பிறகு போலீஸ் மறிச்சால் தேவையில்லாத பிரச்சனையாயிடும் என்றதும் தான் எனக்குப் புரிய ரோசமும் வருகிறது. மூன்று நாட்கள் முடிந்தபின்னும் புத்தகம் வரவில்லை. அனுப்பிவிட்டதாகச் சொல்கிறார்கள் என்கின்றனர். இரு வாரங்கள் இந்தா வருது. அந்தா வருது என்றுவிட்டு அது தொலைந்துவிட்டதாம். புதிதாக அனுப்புகிறார்கள் இன்னும் இரண்டுநாட்கள் பொறுங்கோ என்றபின் நான் போனில் குடுத்த கரைச்சலில் மூன்றுவாரமாகியும் புத்தகம் வராமல் இருக்க அதன் கொப்பியை வற்சப்பில் அனுப்பிவிட கொண்டுபோய் ரோட்டக்ஸ் எடுத்தாச்சு.
முதல்முதல் றோட்டில ஓட மிகவும் மெதுவாக ஓடிக்கொண்டுபோக என்னை முந்திக்கொண்டு சின்னப் பெடியள் சயிக்கிளில என்னை சிரித்தபடி முந்திக்கொண்டுபோக நானோ அசரவில்லை. எல்லாத் தொடருந்துப் பாதைகளும் மீண்டும் போடும்போது மிக உயரமாகவே போட்டுள்ளதால் அதில் நின்று ஏற்றத்தில் திருப்ப பயந்து முதலே இறங்கி ஸ்கூட்டியை உருட்டிக்கொண்டுபோய் அந்தப்பக்க நேர் வீதியில் மீண்டும் ஏறி உரும்பராய் சந்திவரை 35 ,40 இல் ஓடி சந்திகழிய பெரிதாக வாகனங்கள் முன்புபோல் இல்லை என்பதனால் 50 வரை ஓடி முடிச்சு, கணவருக்கோ மனிசி காசு மிச்சம் பிடிக்கிறாள் என்ற மகிழ்ச்சி.
இப்பிடியே ஒருமாதம் இணுவிலுக்கும் வீட்டுக்கும் போய்வர வீட்டு வேலைகளும் நடக்க அடுத்தநாள் வருடப்பிறப்பு. காணியில் தேவையற்ற மரங்கள் பல முளைத்திருந்தன. அதனால் காணியை சுத்தப்படுத்தும் வேலை நடந்துகொண்டிருக்க அடுத்தநாள் புதுவருடம் என்பதால் வேலையை நிறுத்துவோம் என்றவுடன் இல்லை நாங்கள் வேலைக்கு வருகிறோம். வீட்டில நிண்டு என்ன செய்யிறது என்றார்கள். காணியில் வேலை செய்பவர்களுக்கு 3000 ரூபாய்கள் நாட்கூலி என்பதனால் உணவை அவர்களே கொண்டு வருவார்கள். சிலவேளைகளில் அவர்களுக்கு உணவு கொண்டுவர வேண்டாம் என்றுவிட்டு நான் கொண்டுபோவேன். அவர்கள் மகிழ்வுடன் உண்பதைப் பார்க்க ஒரு திருப்தி இருக்கும். நாளைக்கு ஒரு ஆடு அடிச்சு சமைச்சுக்கொண்டு வாங்கோ என்றார்கள் பகிடிக்கு. நானும் ஒன்றென்ன இரண்டே அடிச்சால் போச்சு என்று கூறிவிட்டு வந்துவிட்டேன்.
நாளை அவர்களுக்கு ஆட்டுக்கறி காய்ச்சிக் கொடுத்தால் என்ன என்று யோசனை எழ அடுத்தநாள் காலையில் ஏழு மணிக்கே எழுந்து மருதனார்மடம் சென்று பெற்றோல் அடித்துக்கொண்டு சந்தையில் மரக்கறிகளும் வாங்கியபின் இணுவில் சந்தைக்குச் சென்றால் மூன்று ஆடுகள் கட்டித் தூக்கி இறைச்சி வாங்க சரியான சனம். 20 நிமிடக் காத்திருப்புக்குப் பின்னர் 6000 ரூபாய்களுக்கு இறைச்சி வாங்கிக்கொண்டு வந்து கழுவி வெட்ட வெறுத்துவிட்டது. ஏனெனில் லண்டனில் எல்லா இறைச்சியுமே சமைக்கும் பதத்துக்கு வெட்டித் தருவதால் இருபது ஆண்டுகளின் பின்னர் வெட்டுவது கொடுமையாக இருக்க, நல்ல காலம் லண்டனில் இருந்தே கத்தி வெட்டும் பலகை எல்லாம் கொண்டு சென்றதில் தப்பித்தேன் என்ற எண்ணம் எழுந்தது.
மிகச் சுவையாக இறைச்சி, கத்தரிக்காய் பால்கறி, பருப்பு, வெங்காயமும் தக்காளிப்பழமும் தயிரும் போட்ட சம்பல் என்று செய்து லண்டனில் இருந்து கொண்டுபோன உணவுகள் கொண்டுசெல்லும் பிளாஸ்டிக் பெட்டிகளில் போட்டு,பாஸ்மதி அரிசி இரண்டு கிலோ வாங்கி அதைச் சமைக்காது அங்கு கொண்டுசென்று சுடச்சுட அரிசியைச் சமைத்து அந்த வீட்டில் உள்ள இருவருக்கும் கொடுத்து உண்ணலாம் என்ற எண்ணத்தில் கறிகளை ஸ்கூட்டியில் பொருட்கள் வைக்க இருக்கும் இடத்தில் வைத்து மூடி சரியாக ஒன்பது மணிக்கு ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்தாச்சு. ஆறேழு வளைவுகளில் வளைந்து நிமிர்ந்து தொடருந்துத் தடத்துக்கு அருகே செல்லும் வீதியால் சென்று பிரதான வீதிக்கு ஏறமுதல் இருபக்கமும் பார்த்துக்கொண்டிருக்க வாகனங்கள் வந்தபடி இருக்கின்றன.
சாதாரணமாக நான் வலது பக்கம் திரும்பவேண்டும். இறங்கி உருட்டிக்கொண்டு போய் மற்றப்பக்கம் நின்று ஏறுவதுதான் வழமை. மற்றவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை என்றாலும் ஒரு மாதமாக ஓடுகிறேன். இன்று ஒருக்கா உருட்டாமல் அதில் நின்று அப்படியே திருப்புவோம் என எண்ணி இருபக்கமும் பார்க்க தூரத்தில் ஒரு வாகனத்தைத் தவிர வேறு வாகனங்களைக் காணவில்லை. இதுதான் சரியான நேரம் என எண்ணி அக்சிலேற்றரைத் திருப்பியவுடன் ஸ்கூட்டி பாய்கிறது. நான் தண்டவாளத்தில் தூக்கி எறியப்பட என்முகம் கற்களில் தேய்ந்தபடி செல்வது தெரிய, அந்த நிலையிலும் நிவேதாவுக்கு இனி முகம் இலை என்று மனம் எண்ணுகிறது.
ஒரு நான்கு மீற்றர் தூரம்வரை சென்றபின் நின்றுவிட இரு கைகளிலும் சிறு காயங்கள். என்னை யாரோ இருவர் நிமிர்த்தி இருத்த உடனே என் முகத்தைத் தடவக் கையைக் கொண்டுபோகிறேன். தலைக்கவசத்தின் பிளாஸ்டிக் மூடி கையில் பட என் முகத்தில் கீறல் எதுவும் படவில்லை என்று மனதுக்கு அசுவாசமாகிறது. இருந்தாலும் கையை விட்டுத் தடவிப் பார்த்து எதுவும் ஆகவில்லை என்று நிம்மதி ஏற்பட, தங்கச்சி எழும்புங்கோ என என் கைகளைப் பிடித்து இருவர் தூக்குகின்றனர். கால் நோவெடுக்கிறதுதான் என்றாலும் தெரியாதவர்கள் முன் தண்டவாளத்தில் இருப்பது அவமானமாகப்பட, முயன்று எழும்பி அவர்கள் பிடித்தபடி வர, நல்ல காலமடா அக்காவுக்கு கால் முறியவில்லை என்று ஒருவர் சொல்வது கேட்கிறது.
அருகில் இருக்கும் கடைக்கருக்கே செல்ல ஒருவர் ஒரு கதிரை கொண்டுவந்து தர அமர்கிறேன். கண்களிரண்டும் கலங்கலாகி எதுவுமே தெரியாமல் கண்களை மூடியபடி சாய, அக்கா நீங்களோ? என்று எனது உறவினர் ஒருவரின் குரல் கேட்கிறது. அவர் யார் என்று புரிந்தாலும் கண்ணைத் திறந்து பார்க்க முடியாமல் இருக்கு. நான் வேறை யாரோ எண்டு நினைச்சுத்தான் போன்னான். பிறகும் மஞ்சள் நிற ஸ்கூட்டி என்றவுடனதான் நீங்களாய் இருக்குமோ என்று திரும்பி வந்தனான் என்கிறார். கண் திறக்க ஏலாமல் இருக்கு, தலை சுத்துது என்றதும் கடையில் தண்ணீர் போத்தல் ஒன்று வாங்கி என்னைக் குடிக்கச் செய்தபின் இப்பிடியே இருங்கோ அக்கா நான் போய் உங்கட சித்தியைக் கூட்டிவறான் என்றபடி செல்கிறார். ஸ்கூட்டி எங்கே என்றதற்கு பக்கத்திலதான் நிக்குது அக்கா. இந்தாங்கோ திறப்பு என்று என் கைக்குள் திறப்பை வைக்கிறார். என் கைப்பையின் நினைவு வர அதையும் என்னிடம் தந்துவிட்டு கடைக்காரரிடம் பார்த்துக்கொள்ளுங்கோ வாறன் என்றுவிட்டுச் செல்கிறார்.