சர்வகட்சி மாநாட்டு அழைப்பிதழில் ஜெயார் செய்த தில்லுமுள்ளும் அதிலிருந்து அவர் மீள செய்துகொண்ட பகீரதப் பிரயத்தனமும்
சர்வகட்சி மாநாட்டிற்கு தனக்கு வந்த அழைப்பிதழில் இரண்டாவது இணைப்பாக வந்திருந்த விடயங்களைப் பார்த்தபோது அமிர்தலிங்கம் வருத்தமடைந்தார். உடனடியாக தில்லியில் இருக்கும் பார்த்தசாரதியுடன் தொடர்பு கொண்டார். அவருடன் சினத்துடன் பேசிய அமிர்தலிங்கம், "கிழட்டு நரி தனது வேலைகளை மறுபடியும் ஆரம்பித்து விட்டது" என்று பார்த்தசாரதியிடம் கூறினார். தனிநாட்டிற்கான கோரிக்கையினைக் கைவிடவேண்டும் என்கிற கோரிக்கையினை முதலாவது கோரிக்கையாக ஜெயார் இட்டிருக்கிறார் என்று அவர் கூறினார். "போராளிகளை எமக்கெதிராகத் திருப்பிவிடவே இதனை அவர் செய்கிறார்" என்று அவர் கூறினார்.
மேலும், தில்லியில் தன்னால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரைகளை சர்வகட்சி மாநாட்டில் பேசப்படப்போகும் விடயங்களின் பட்டியலில் ஜெயார் சேர்க்கவில்லை என்பதையும் அமிர் பார்த்தசாரதியிடம் சுட்டிக் காட்டினார். ஜெயார் புதிய பரிந்துரைகளை தன்பாட்டிற்குப் பட்டியலிட்டிருந்தார். முத்தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரைகளை முழுவதுமாக மாற்றி, வலுவிழக்கச் செய்தே தனது புதிய பரிந்துரைகளை ஜெயார் வரைந்திருந்ததை அமிர் கண்டுகொண்டார்.
மாவட்ட அபிவிருத்திச் சபைகளை இணைப்பது தொடர்பாக தில்லியில் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாடு இரு பகுதிகளைக் கொண்டிருந்தது. முதலாவது பகுதியில் இரு மாவட்ட அபிவிருத்திச் சபைகள், பொதுவாக எவ்வாறு இணைத்து பிராந்திய அலகாக மாற்றிக்கொள்ள முடியும் என்பது பற்றிப் பேசியிருந்தது. இதன்படி சம்பந்தப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபை உறுப்பினர்களின் சம்மதத்தினூடாகவும், அச்சபைகளில் நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பினூடாகவும் அவை இணைத்துக்கொள்ளப்படலாம் என்றும் கூறியிருந்தது. ஆனால், வடக்குக் கிழக்கு மாகாணங்களில் அமைந்திருக்கும் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு இச்சரத்தில் விதிவிலக்களிக்கப்பட்டிருந்தது. இந்த மாகாணங்களில் அமையும் மாவட்ட அபிவிருத்திச் சபைகளில் உறுப்பினர்கள் பதவி விலகுவதனால் மாவட்ட அபிவிருத்திச் சபைகளில் ஒன்று செயலற்றுப் போகுமிடத்து, அச்சபை அம்மாகாணங்களில் மீதமிருக்கும் சபைகளுடன் இணைத்துக்கொள்ளப்பட முடியும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், முன்னணியினருக்கு ஜெயார் அனுப்பிவைத்த அழைப்பிதழின் இரண்டாவது இணைப்பில் மேற்குறிப்பிட்ட விதிவிலக்கினை முற்றாக அகற்றியிருந்தார். மேலும், பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையே நாடு முழுவதற்கும் அமுல்ப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
தில்லியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை ஜெயார் மறுதலித்து, புதிதாக தனது திட்டங்களை அறிமுகப்படித்தியிருக்கும் சூழ்நிலையில் இதுகுறித்துப் பேசுவதற்காக முன்னணியினரை தில்லிக்கு வருமாறு பார்த்தசாரதி அழைத்தார். அன்று மாலையே தில்லிக்குப் பயணமான அமிரும், சிவசிதம்பரமும் பார்த்தசாரதியையும் நரசிம்மராவையும் மாலை சந்தித்ததுடன் அன்றிரவே இந்திரா காந்தியையும் சந்தித்தனர். ஜெயாரின் சூட்சுமம் பற்றிக் கேள்விப்பட்டபோது இந்திரா மிகுந்த கோபமடைந்தார். தனக்குக் கொடுத்த வாக்கிற்கு எதிராகச் சென்று, தன்னை ஜெயார் அவமானப்படுத்தியிருப்பதாக இந்திரா கருதினார். "நீங்கள் கவலைப்பட வேண்டாம், நான் இதனைப் பார்த்துக்கொள்கிறேன்" என்று அவர் முன்னணியினரிடம் கூறினார்.
இந்திரா உடனடியாக இரு விடயங்களைச் செய்தார். அன்றிரவே, மார்கழி 30 ஆம் திகதி, ஜெயாரை தொலைபேசியில் அழைத்த இந்திரா ஜெயாரின் மாற்றத்தால் தமிழர்களும் முன்னணியினரும் மிகுந்த கவலை அடைந்திருப்பதாகக் கூறினார். இதனைச் சரிசெய்வதற்கு பார்த்தசாரதியை உடனடியாக கொழும்பிற்கு அனுப்பத் தான் எண்ணியுள்ளதாக அவர் கூறினார். இதுகுறித்து தனது மந்திரி சபையில் பேசிய ஜெயார், பார்த்தசாரதியின் கொழும்பு வருகையினை தான் வரவேற்பதாக இந்திராவிடம் கூறினார்.
போராளிகளுக்கு ஆயுதங்களை வழங்க முடிவெடுத்த இந்திராவும், அலட்டிக்கொள்ளத பிரபாகரனும்
மறுநாள், மார்கழி 31 ஆம் திகதி தனது உயர்மட்ட அதிகாரிகளை தில்லியில் கூட்டமொன்றிற்கு அழைத்தார் இந்திரா. வெளிவிவாகர அமைச்சர் நரசிம்மராவ், வெளியுறவுச் செயலாளர் ரஸ்கோத்ரா, பார்த்தசாரதி, இலங்கை தொடர்பான விடயங்களைக் கையாளும் காவோ, சங்கரன் நாயர் மற்றும் சக்ஸேனா ஆகியோர் கூட்டத்தில் பிரசன்னமாகியிருந்தனர். இரு முக்கிய தீர்மானங்கள் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டன. முதலாவது வெளிவிவகாரத்துறை தொடர்ந்தும் சமரச பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது. இரண்டாவது இலங்கை தொடர்பான தனது நடவடிக்கைகளை ரோ மேலும் விஸ்த்தரிப்பது.
இரண்டாவது தீர்மானத்திற்கு அமைவாக ரோவிற்கு மேலதிக நிதி இலங்கை தொடர்பான விடயங்களை விஸ்த்தரிக்க ஒதுக்கப்பட்டது. மேலும், தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கு ஆயுதங்களை வழங்குமாறும் ரோ பணிக்கப்பட்டது.
போராளி அமைப்புக்களுக்கு ஆயுதங்களை வழங்க இந்திரா எடுத்துக்கொண்ட தீர்மானம் பற்றி போராளிகள் அறிந்துகொண்டபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தமது அமைப்புக்களில் பயிற்சிகளுக்கு வரும் இளைஞர்களின் எண்ணிக்கையினை அதிகரிக்குமாறும் ரோவினால் அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
போராளிகளுக்கு முதன்முதலாக இந்திய ஆயுதங்கள் வழங்கப்பட்ட நிகழ்வினை ஈரோஸ் அமைப்பின் அருளர் எனப்படும் அருட்பிரகாசம் இவ்வாறு பகிந்துகொண்டார். "நாம் மிகுந்த மகிழ்சிக்குள்ளானோம். நிலைமை மாறிவருவதை நாம் உணர்ந்துகொண்டோம். எல்லோருமே மிகுந்த மகிழ்ச்சியுடனும் , உற்சாகத்துடனும் காணப்பட்டார்கள்" என்று கூறுகிறார். அவர் மேலும் கூறுகையில் ரஸ்ஸியாவில் தயாரிக்கப்பட்ட புத்தம்புதிய துப்பாக்கிகள் பெட்டிகளில் வந்திறங்கியதாகக் கூறினார்.
புலிகளும் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. புலிகளின் மூத்த தலைவர்களும் உற்சாகத்துடன் காணப்பட்டனர். குறிப்பாக, கிட்டு மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். ஆனால், பிரபாகரனுக்கு இந்த ஆயுத வழங்கல் நிகழ்வு அதிகம் ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கவில்லை. "நாம் எமக்கென்று சொந்தமாக ஆயுதங்களை வெளியே வாங்கத் தொடங்கவேண்டும்" என்று அவர் தனது போராளிகளைப் பார்த்துக் கூறினார். "ஏன் வாங்கவேண்டும், இந்தியாதான் எமக்குத் தேவையானளவு ஆயுதங்களைத் தருகிறதே?" என்று கிட்டு பிரபாகரனைப் பார்த்துக் கேட்டார்.
தனது முடிவிற்கு இரு காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன். "எமக்குத் தரும் ஆயுதங்களின் மூலமாக எம்மைக் கட்டுப்படுத்த இந்தியா முயலும். தனது கொள்கை முடிவுகளை எம்மைப் பாவிப்பதன் மூலம் இந்தியா அடைந்துகொள்ள நிச்சயமாக முயற்சிக்கும். அதாவது, நாம் எமது இலட்சியமான தமிழ் ஈழத்தை அடைவதை இந்தியா தடுத்துவிடும்" என்று பிரபாகரன் கூறினார்.
இரண்டாவது காரணமாக பிரபாகரன் முன்வைத்த விடயம் தனித்துவமானது. "இந்தியா எல்லாப் போராளி அமைப்புக்களுக்கும் ஒரேவகையான ஆயுதங்களையே கொடுத்து வருகிறது. ஆனால், நாம் தனிச்சிறப்பானவர்களாகவும், மற்றைய அமைப்புக்களைக் காட்டிலும் திறமையானவர்களாகவும் திகழவேண்டுமானால், எமக்கென்று வேறு ஆயுதங்களை நாம் இப்போதே கொள்வனவு செய்துகொள்ளவேண்டும் என்று கூறினார்.
பிரபாகரனின் வாழ்க்கையில் முக்கிய மைல்க்கல்லாகக் கருதப்படும் 1984 ஆம் ஆண்டு அவர் மேற்கொண்ட இந்த தீர்மானம் அமைந்திருந்தது. இதுகுறித்து பின்னர் பார்க்கலாம்.
ஜெயாரின் சூட்சுமம்
சர்வகட்சி மாநாட்டிற்கான அழைப்பும், அதனுடனான இணைப்புக்களும் கொழும்பில் வெளிவந்தன. இலத்தரணியல் சாதனங்களும், பத்திரிக்கைகளும் இச்செய்தியை வெளிக்கொண்டுவந்திருந்தன. சர்வகட்சி மாநாட்டின் செயலாளராக நியமிக்கப்பட்ட பீலிக்ஸ் டயஸ் அபயசிங்க மார்கழி 30 ஆம் திகதி பத்திரிக்கை அறிக்கையொன்றினை வெளியிட்டார். "இணைப்பு இரண்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்துக்கள் எவையும் அரசாங்கத்தாலோ அல்லது வேறு எந்த அரசியற் கட்சியினாலுமோ முன்மொழியப்பட்டவை அல்ல. சர்வகட்சி மாநாட்டில் கலந்துரையாடப்பட்டு பரிந்துரைக்கப்படும் விடயங்கள் மட்டுமே பின்னர் அரசாங்கத்தினாலும், ஏனைய கட்சிகளினாலும் கருத்தில் எடுக்கப்படும்" என்று அவ்வறிக்கை கூறியது.
அபயசிங்கவின் அலுவலகம் கொழும்பிலுள்ள பத்திரிகைக் காரியாலயங்களைத் தொடர்பு கொண்டு தனது அறிக்கையினை பிரசுரிக்குமாறு கேட்டுக்கொண்டது. மேலும், மாநாட்டிற்கான அழைப்பிதழையும், இணைப்புக்களையும் வெளியிட ஜனாதிபதி விரும்புவதாகவும் அலுவலகம் கூறியது.
இந்திரா காந்தியின் தொலைபேசி அழைப்பினையடுத்தே தான் வெளியிட்ட இணைப்பின் சரத்துக்களை உடனடியாக இல்லையென்று மறுதலிக்கும் நிலைமைக்கு ஜெயாரையும் அவரது அரசாங்கத்தையும் தள்ளியிருந்தது. தில்லியில் இந்திராவுடனும், பார்த்தசாரதியுடனும் தான் செய்துகொண்ட இணக்கப்பாட்டிலிருந்து தன்னை சாதுரியமாக விலத்திக்கொண்ட ஜெயார், இறுதியில் தன்னிச்சையாக வெளியிட்ட அழைப்பிதழின் இணைப்பில் குறிப்பிட்ட விடயங்களிலிருந்தும் தன்னை அந்நியப்படுத்திக்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தில்லியில் தான் செய்துகொண்ட இணக்கப்பாட்டிற்கு பெளத்த பிக்குகளிடமிருந்து வந்த கடுமையான எதிர்ப்பினையடுத்து அதிலிருந்து ஜெயார் பின்வாங்கி தன்னை அந்நியப்படுத்தியிருந்தார். தில்லியில் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தில் தான் கையொப்பம் இடாமையினால், அதனை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு தனக்குக் கிடையாது என்று பெளத்தர்களிடம் அவர் கூறினார். ஆனால், தில்லி ஆவணத்தில் தானாகவே முன்வந்து கையொப்பம் இட ஜெயார் முயன்ற விடயம் வெளித்தெரிய ஆரம்பித்தபோது, "அது எனது பரிந்துரைகள் அல்ல, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரே அதனை முன்வைத்தனர்" என்று கூறி தப்பிக்க முயன்றார்.
தனது இரட்டை வேஷத்தை மிகவும் சாதுரியமாக 1984 ஆம் ஆண்டு சித்திரை 30 ஆம் திகதி இந்தியா டுடே சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வியிலும் ஜெயார் கையாண்டார்.
ஜெயாரின் இரட்டை வேசத்தை சர்வகட்சி மாநாட்டில் போட்டுடைத்த அமிர்தலிங்கம்
வைகாசி 9 ஆம் திகதி சர்வகட்சி மாநாட்டில் அமிர்தலிங்கம் வெளியிட்ட அறிக்கையில் ஜெயார் கூறுவதுபோல தில்லியில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் தனது கட்சியினால் முன்வைக்கப்படவை அல்ல என்று முற்றாக மறுதலித்தார். முத்தரப்பினாலும் மேற்கொள்ளப்பட விடயங்களை காலக்கிரமமாக விபரித்தார் அமிர்தலிங்கம். ஆடி 28 மற்றும் மார்கழி 30 ஆம் திகதி ஜெயாருடனான இந்திராவின் தொலைபேசி அழைப்புக்கள், பார்த்தசாரதியுடன் ஜெயார் மேற்கொண்ட மூன்று கட்டப் பேச்சுவார்த்தைகள் என்று நடந்த விடயங்களை விளக்கியதுடன், தில்லியில் முத்தரப்பினாலும் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை ஜெயார் முற்றாக ஏற்றுக்கொண்டதை இந்திராவும் பார்த்தசாரதியும் தன்னிடம் உறுதிப்படுத்தியதாகவும் சர்வகட்சி மாநாட்டில் வெளிப்படையாகத் தெரியப்படுத்தினார்.
தானே தன்னிச்சையாக வெளியிட்ட அழைப்பிதழின் இணைப்புக்களிடமிருந்து தன்னை ஜெயார் அந்நியப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையினை இந்திரா மேற்கொண்ட தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தியயிருந்ததை முன்னர் குறிப்பிட்டிருந்தேன். அதே அழைப்பில் இன்னொரு விடயத்தையும் இந்திரா குறிப்பிட்டிருந்தார். அதுதான், இரண்டாவது இணைப்பினை ஜெயார் மீளப்பெற்றுக்கொள்ளாதவிடத்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ளப்போவதில்லை என்பது. ஆகவே, இந்த இணைப்பில் குறிப்பிடப்பட்ட விடயங்களை சர்வகட்சி மாநாட்டின் செயலாளரே தனக்குத் தெரியாமல் இணைத்துவிட்டார் என்று கூறி ஜெயார் தப்பிக்க வேண்டியதாயிற்று.