Leaderboard
-
கிருபன்
கருத்துக்கள உறவுகள்13Points39336Posts -
nunavilan
கருத்துக்கள உறவுகள்7Points53012Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்6Points33807Posts -
தனிக்காட்டு ராஜா
கருத்துக்கள உறவுகள்6Points9977Posts
Popular Content
Showing content with the highest reputation on 02/13/24 in all areas
-
(தீ) சுவடு
5 points(எழிலன்): - முதலாளி இன்றைக்கு லீவு தாங்கோ? எனக்கு காய்ச்சலா இருக்கு உடம்பும் நடுங்குகிறது (எழிலன்) முதலாளி:- இன்றைக்கு லீவு கொடுக்க இயலாது இன்று ஞாயிற்றுக்கிழமை கன சனம் கடைக்கு வரும் நீயும் லீவு எடுத்தால் நான் யாரைக்கொண்டு கடையை நடத்துற வேலை செய்யுற என்று சொன்னார் முதலாளி முதலாளி:- இல்லை ஐயா எனக்கு நிற்க கூட முடியல அதுதான் லீவு கேட்கிறன் முதலாளி:- சரி லீவு இல்ல கணக்கை பார்த்து காசை மொத்தமா வாங்கிட்டு போ இனி வேலைக்கும் வராத என்றார் முதலாளி. (எழிலன்): உடலைப்பார்த்தால் தான் நாளைக்கு வேலை செய்யலாம் என காசை தாங்கோ என கேட்க முதலாளி:- எத்தனை நாள்? (எழிலன்): 15 நாள் ஐயா 15000 ரூபா முதலாளி:- இந்தா 10000 பிறகு வந்து 5000 ரூபாவை வாங்கித்துப்போ என்றார் முதலாளி நம்ம தமிழ் முதலாளிகளின் நல்ல பழக்கங்களில் இதுவும் ஒன்று காசை வாங்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு நான் செல்ல அங்கே காவாலாளி இன்றைக்கு ஓ பி ரி (O.P.T) இல்லை நாளைக்கு வாங்க என்றார். எனக்கு நிற்க முடியல மருந்து எடுக்கணூம் தம்பி உள்ள விடுங்க யாரையாவது பார்த்து மருந்து எடுத்து செல்கிறேன் என நானும் சொல்ல அவங்க விடுவதாக இல்லை லேசாக மயக்கம் வருவது போல அமர உள்ளே கிளினிக் செய்யும் வைத்திரியரிட்ட அனுப்புங்க என சொல்லி உள்ள விட அங்கே ஒரு பெண் தரையை துடைத்துக்கொண்டிருந்தாள். நான் சென்றால் அந்த பகுதி மீண்டும் அழுக்காகிவிடும் என்ற காரணத்தால் காயும் வரைக்கும் நிற்க அவளோ போங்க பறவாயில்லை என்றாள் ஆளை அடையாளம் காண முடியவில்லை முகத்தை மறைத்து முகக்கவசம் அணிந்திருந்தாள். சரி நான் போய் வைத்தியரைப்பார்க்க வரிசையில் நிற்க அந்த குரல் எங்கேயோ கேட்ட குரலாக இருக்கிறது என மனம் சொல்ல அந்த குரலையும் அவளையும் தேடியது கண்கள் அவவாக இருக்குமோ என்ற ?? கேள்விதான் எழுகிறது பதில் இல்லாமல் வைத்தியர் :- அடுத்த ஆள் வாங்கோ உள்ளே அழைக்க என்ன பிரச்சினை! ஐயா நேற்றில இருந்து நடுங்கி காய்ச்சல் காயுது சரி இந்த குழுசைகளை விழுங்குங்க பனிக்காலம் என்ற படியால் பனிவெளியில திரியாதிங்கோ சரி ஐயா நன்றி என்று வெளியில் வர நீலன் நீலன் என அழைக்க திரும்பி பார்த்தேன் அந்த பெயரோ போராட்ட காலத்தில் எனக்கு வைத்த பெயர் அது அந்த பெயரை தெரிந்தவர் யார் என திரும்பி பார்த்த போது அந்த பெண்தான் நீங்க?? நான் ரோசி (சுடர்) அக்கா நீங்களா? நீங்கள் எப்படி இங்க இந்த வேலைக்கு அது பெரிய கதை வா என கூட்டிக்கொண்டு போனா இங்க இரு......... சாப்பிட்ட நீயா? ஓம் சாப்பிட்ட நான் சரி பிளேன் டி குடி இல்ல அக்கா வேணாம் தம்பி ஒரு பிளேன் டீ போடு அக்கா காசை எடுத்துவர போனா வேலைக்கு கொண்டு வரும் பையை எடுக்க அதிலதான் காசு வைத்திருந்தா அப்போது சிற்றுண்டி சாலைக்கு முன்னால் உள்ள சிறிய கோவிலில் பதறி விழுந்து ஒருவன் ஓடி வந்து நீயெல்லாம் கடவுளே இல்லை உன்னை நான் கும்பிட்டிருக்கவே கூடாது என்றான் உறவினர் யாரோ இறந்திருப்பார்கள் போல இன்னொருவன் வந்து விழுந்து வணங்கினான் ஆண்டவரே உனக்கு நன்றியப்பா என் வாழ் நாள் உனக்காகவே என்றான் பாவம் கடவுள் எவ்வளவு பிரச்சினைகளை தீர்க்க வேண்டியுள்ளது. கல்லாகவே இருப்பது கடவுளுக்கு நல்லது என என் மனதுக்குள் தோன்ற அக்கா ஓடி வந்தா என்ன குடிச்ச நீயோ ஓம் குடிச்சன் இங்க நல்ல புதுனம் பார்க்கலாமே அக்கா இங்க நேரம் போறதே தெரியுறல்ல கடைக்கார தம்பி இந்தா 20 ரூபா அக்கா கடை பக்கமே வாரல்ல போல இப்ப பிளேண்டீ 25 ரூபா ஓ அப்படியா சரி அஞ்சு ரூபா பிறகு தாரன் கடைக்கு வார ஆட்கள் இதயே சொல்லுங்க இப்ப எல்லாம் விலை கூடிப்போச்சு அக்காவுக்கு தெரியாதே என்று கேட்டான் அந்த சிற்றுண்டிச்சாலை தம்பி அக்கா இத கொடுங்க நான் கூட வேலையில் இருந்து விலகித்தான் ஆஸ்பத்திரிக்கு வந்த நான் காய்ச்சலுக்கு லீவு கேட்ட நான் கணக்க முடிச்சு துரட்டிட்டாரு அக்கா இந்தா கையில இருக்கு 10000 ரூபா பார்த்தியா நம்ம சனத்தா ஓம் அக்கா உலகமே அப்படித்தானே இயங்குது ஓம் ஓம் பறவாயில்ல நீ வச்சுக்க ................. சரி குழுசையை காட்டு இந்தா பாருங்க உங்களுக்கு தெரியாத குழுசையா என்ன ?? இந்த பவர் கூடுன குழுசைகளை விழுங்காமல் நல்ல ஊறல் பைய வாங்கு ஊறல் போட்டு குடி அது உடம்புக்கும் நல்லது பச்சை தண்ணியில அளையாமலும் இரு ம் சரி அக்கா என்ன நடந்த? அந்த கதைகளை விடு அதைப்பேசி பலன் இல்லை என மறுத்துவிட்டார் இஞ்ச பாரு என முகத்தை காட்டுனா முகம் ஒரு பக்கமாக தீ காயம் ஏற்பட்டு கழுத்து வரை நீண்டு இருந்தது. நீங்க மருத்துவ பிரிவிலிருக்கும் போது பார்த்தது அக்கா ம் நம்மட பிள்ளைகள் எல்லாம் போயிட்டுது நான் மட்டும் தான் அந்த ஷெல் தாக்குதல்ல காயப்பட்டு வந்த நான் ஊருக்கு எங்கயும் போக முடியல. போனாலும் பிரச்சினை இப்ப இங்கதான் ஒரு பிள்ளை படிக்குது அவரும் இறந்து போனார் ஓ அப்படியா? அதுதான் இந்த வேலையில சேர்ந்த நான் சாப்பாடு இங்க கிடைக்கும் அந்த செலவு மிச்சம் பிள்ளைக்கு படிப்புக்கு மட்டும் காசு............... ம் அக்கா இப்ப முன்னாள் போராளிகளுக்கு கனபேர் உதவி செய்யுறாங்க தானே அக்கா ம் செய்யுறாங்க ஆனால்???? அவங்க போண் நம்பற எடுத்து நமக்கு நீங்க போராளிதானா என பரீட்சை வைத்து பார்த்து உதவி செய்யுறதுல பல மாதம் போய் விடுகிறது தம்பி.............. ஓம் அக்கா நானும் கூட யாரிட்டயும் சொல்கிறதில்லை கடந்த காலத்தை . சரி சாப்பாடு ஒன்று கட்டித்தருகிறேன் கொண்டு போய் சாப்பிடு இங்க ஆஸ்பத்திரி சாப்பாடு என்று யாரும் பெரிதாக சாப்பிடமாட்டார்கள் சாப்பாடு இருக்கு கோழிகறி இன்றைக்கு என அக்கா சாப்பாடு எடுக்க போனா கையில் இருந்த அந்த 10000 ரூபாவை அவ பையில் அவக்கு தெரியாமல் வைத்துவிட்டு இருந்தேன் .அக்கா பொலித்தீன் பையையினுள் சாப்பாடு இட்டு தந்தா நானும் வாங்கிக்கொண்டு கோவிலுக்கு வெளியில் இருக்கும் ஒரு மர நிழலில் சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் தூங்கி விட்டேன் திடிரெனா யாரோ அதட்டி எழுப்புவது தெரிந்தது கோழி சாப்பிட்டு கோவிலுக்கு முன்ன உறங்க கடவுள் கோபித்து விட்டாரோ அவர்தான் அதட்டி எழுப்புகிறாரோ???? என எழும்ப கோவில் நிர்வாகியாம் இங்க படுக்க கூடாது போங்க என்றார். நானோ அந்த பஸ் நிற்கும் நிறுத்துமிடத்தில் இருக்கையில் அன்றிரவு தூங்க ஆயத்தமாகிறேன் அப்போது அந்த சுவற்றில்............. இதோ கடவுள் வருகிறார் என போஸ்டர் ,இன்னும் பல கோவில்களின் போஸ்டர்கள் ஒட்டி இருந்தது அந்த நிலையத்தில் நான் கூட பயமில்லாமல் தூங்கினேன் நாளை என்னை எழுப்பி விடுவார் என்ற நினைப்பில்... மலிந்து போன கடவுள்களை நோக்கி..................................5 points
-
சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?
2 points//வேலையில்லாதவர்களின் பட்டியலைப் பார்த்தால் அவர்களில் உயர்கல்வி படித்தவர்கள் அதிகம்; ஆரம்பக்கல்வி பயின்றவர்கள் வீதம் குறைவு// 2006 ஆண்டில் இந்த கட்டுரை எழுத்தப்பட்டுள்ளது.. இன்றும் இந்த நிலைதான் இலங்கையில் இருக்கும். எங்களது சமூகம், எந்த நாட்டில் போய் வாழ்ந்தாலும் குறிப்பிட்ட துறைகளைத்தான் இன்னமும் அதிகளவில் தெரிவு செய்கிறார்கள் ஆனால் வேறு சமூகங்கள், அந்தந்த நாட்டில் இருக்கும் பல்வேறு துறைகளில் தமக்கு விருப்பமானதை, அன்றைய நிலையில் தேவை அதிகம் உள்ள துறைகளை தெரிவு செய்கிறார்கள், முன்னேறுகிறார்கள். அரசியல், சிறிய நடுத்தர கைத்தொழில், விவசாயம் தொடங்கி விளையாட்டு வரை ஈடுபடுகிறார்கள். ஆனால் எங்களது சமூகம் மிகமிக குறைவானவர்கள் ஈடுபடுகிறார்கள். அதே போல இங்கே ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு, உளவியல் ஆலோசகர்களுக்கு தட்டுப்பாடு. எங்களது சமூகத்தைச் சார்ந்தவர்கள் இந்த துறைகளைத் தெரிவு செய்வதில்லை காரணங்கள் இந்த நாட்டு பிள்ளைகளுக்கு படிபிக்க முடியாது, ஆசிரியர்களை மதிக்கமாட்டார்கள் etc etc.. ஆனால் உண்மையான காரணங்கள் வேறு. இங்கேயே இப்படி இருக்கும் பொழுது இலங்கையில் பல்வேறு கற்கை நெறிகளை அறிமுகப்படுத்தினாலும் பாரம்பரிய துறைகளைவிட்டு வேறு படிப்பார்களா? இல்லை என்றுதான் நினைக்கிறேன். அப்படி படித்து அந்தப் பாரம்பரிய துறைகளில் பட்டப்படிப்பை முடித்தாலும் கூட அவர்கள் அனைவருக்கும் வேலை வழங்ககூடிய வாய்ப்புகள் உள்ளதா? இல்லை..2 points
-
சிரிக்க மட்டும் வாங்க
2 pointsதூள் பறக்க வேலை நடக்குது......இவர்கள் போன்ற தொழிலாளர்களைத்தான் முதலாளிகள் விரும்புவார்கள்.....! 😂2 points
-
புதனும் புதிரும்
2 points7 31ந்திகதி குற்றவாளியைக் கைது செய்வதற்கான ஏற்பாடுகள் எல்லாம் துரிதமாக நடந்தேறின. குற்றம் சாட்டப்பட்டவரது விபரங்கள், கொலைக்கான ஆதாரங்களை எல்லாம் ஆராய்ந்த ஸ்வேபிஸ் ஹால் மூத்த அரச சட்டத்தரணி லுஸ்ரிக், ‘குற்றவாளி என சந்தேகிக்கப்படுவரை கைது செய்து விசாரிக்கலாம்’ என பொலிஸாருக்கு அனுமதி வழங்கினார். எந்த இடத்தில் இலக்கத் தகடு இல்லாமல் சில்வர் நிற VW கார் நின்றதோ அதற்கு முன்னாலேயே குற்றவாளி என சந்தேகிக்கப்படுபவருடைய வீடும் இருந்தது. அந்தக் காருக்குப் பக்கத்தில் இருந்து ஆராய்ந்த இரண்டு பொலிஸாருக்கும் அன்று அது தெரிந்திருக்கவில்லை. பொலிஸார் வீட்டுக்குள் சென்ற போது டானியல் ஷோபாவில் அமர்ந்து கோப்பி குடித்துக் கொண்டிருந்தான். பொலிஸாரைக் கண்டதும் எழுந்து கொண்டான். அவனது பத்து மற்றும் பன்னிரண்டு வயதான இரு பெண் குழந்தைகளும் தங்கள் அறையில் நித்திரையில் இருந்தார்கள். அறையை விட்டு வெளியே வந்த டானியலின் மனைவி ஆயுதங்களுடன் இருந்த பொலிஸாரைக் கண்டு பயந்து நின்றாள். வீட்டில் இருந்த அலுமாரிகள் எல்லாம் வெறுமையாக இருந்தன. தரையில் இருந்த சூட்கேஸுகள் நிரம்பி இருந்தன. சேர்பியாவுக்குப் பயணிப்பதற்கு தயாராக எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு, கொஞ்சம் ஆற அமர இருந்து கோப்பி குடித்துக் கொண்டிருந்த டானியல் மாட்டிக் கொண்டான். பொலிஸ் கொமிஸனர் Inge (41) டானியலைக் கைது செய்யும் போது, அவன் எந்த எதிர்ப்பும் காட்டாது அமைதியா இருந்தான். அவனைக் கைது செய்யும் போது அவனது பணப் பையில் பல 100, 200 ரூபா யூரோ தாள்கள் இருந்தன. டானியலுடன் யேர்மனிய மொழியில் உரையாட முடியவில்லை. அவனைக் கைது செய்து பயணிக்கும் போது, பொலிஸ் கொமிஸனர், “குற்றம் செய்ததாக சந்தேகித்து உன்னைக் கைது செய்து விசாரணைக்காக கொண்டு செல்கிறோம்” என எழுதி அதை கூகுளில் சேர்பிய மொழியில் மொழி பெயர்த்து டானியலுக்குக் காட்டிய போதும் டானியல் அதை வாசித்து விட்டு அமைதியாக இருந்தான். டானியல் மேல் சுமத்தப்பட்ட கொலை வழக்கு பன்னிரண்டு தடவைகளாக ஹைல்புறோன் நகரில் உள்ள நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கு நடந்த ஒவ்வொரு தடவையும் அவனது பெற்றோர், சகோதரிகள், மனைவி ஆகியோர் சேர்பியாவில் இருந்து வந்து பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்தார்கள். கை விலங்கிடப்பட்ட நிலையிலேயே டானியல் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தான். வழக்கில் மொத்தமாக எழுபத்தி இரண்டு சாட்சிகள் விசாரிக்கப்பட்டார்கள். வழக்கின் 12வது அமர்வு 29.09.2023 அன்று நடைபெற்றது. அன்று டானியலின் 32வது பிறந்த தினம். தீர்ப்பு வழங்குவதற்கு முன்னர், மூத்த அரச தரப்பு சட்டத்தரணி லுஸ்ரிக் தனது வாதத்தின் தொகுப்பை வாசிக்க ஆரம்பித்தார். “எடித்லாங்கின் மரணமும் ஒரு கொலைதான். போதுமான தடயங்களை சேகரித்து வைக்காததும், எடித்லாங்கின் உடல் தகனம் செய்யப் பட்டதாலும் விசாரணைகளை தொடர்ந்து செய்ய முடியாமல் போனதாகவும் பொலிஸ் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் குற்றம் சுமத்தப்பட்ட டானியலின் டீஎன்ஏ பரிசோதனையில், அவர் கொலை நடந்த இடத்தில் இருந்தார் என்பதற்கான ஆதாரங்களும் தரப்படவில்லை. ஆகவே அந்தக் கொலையில் டானியலை குற்றவாளியாகச் சேர்க்க முடியாது. ஹைடமேரியின் கொலையில், கொலை நடந்த அன்று, டானியலை முதலாவது மாடியில் கண்டதாக சாட்சியங்கள் சொல்கின்றன. அன்று அவரது கையில் லீடில் சுப்பர் மார்க்கெற்றின் பிசுரங்கள் இருந்ததையும் கண்டிருக்கிறார்கள். கொலை நடந்த இடத்தில் டானியல் இருந்தார் என்பதற்கான தடயங்களை பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார்கள். டானியலின் ‘டீஎன்ஏ’யும் கொலை நடந்த இடத்தில் எடுத்த ‘டீஎன்ஏ’யும் பொருந்துகின்றன. டானியல் அணிந்திருந்த வெள்ளை அடிடாஸ் சப்பாத்தின் அடையாளங்களும், அது டானியலுடையதுதான் என அடையாளம் காணப்பட்டிருக்கிறது. கொலைக்கான ஆயுதம் கண்டுபிடிக்கப்படவில்லை. இல்ஸ்கொபனில், முதியவரைத் தாக்கியது, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட முதியவர், டானியல்தான் அதைச் செய்தது என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார். மேலும், முதியவர் டானியலின் மாதிரிப் படத்தை வரைய உதவி செய்திருக்கிறார். அவர் சொன்ன அடையாளங்களை வைத்து வரையப்பட்ட மாதிரிப் படம் தொண்ணூறு சதவீதம் டானியலின் முகத்துடன் ஒத்துப் போயிருக்கிறது. அந்தப்படம் பின்னாளில் டானியலை இனம் காண பெரிதும் உதவியாகவும் இருந்திருக்கிறது. முதியவர் வீட்டின் அழைப்பு மணி, மற்றும் புதருக்குள் இருந்து எடுக்கப்பட்ட துப்பாக்கி,லீடில் சுப்பர் மார்க்கெற்றின் பிசுரங்கள், ஆகியவற்றில் இருந்து எடுக்கப்பட்ட தடயங்களை பரிசோதித்த போது அவை டானியலின் ‘டீஎன்ஏ” உடன் பொருந்தின. அன்று டானியல் பயணித்த கார் அவர், 29.12.2022 இல் ஹூஸைனிடம் இருந்து 350 யூரோக்களுக்கு வாங்கியது நிரூபிக்கப் பட்டது. காரை வாங்கும் போது, டானியல் விற்பனைக்கான ஒப்பந்தத்தை செய்ய விரும்பாததால், ஹூஸைன், தன்னுடைய பாது காப்புக்காக டானியலை அவரது கைத் தொலைபேசியில் படம் பிடித்திருக்கிறார். அந்தப் படம், பொலிஸ் திணைக்களத்தினால் வரையப்பட்ட மாதிரிப் படத்துடன் ஒத்துப் போயிருந்ததை கவனிக்க வேண்டும். அத்தோடு குற்றவாளியான டானியலையும் கண்டறிய அந்தப் படம் உதவி இருக்கிறது. ஹேரயுற்றேயின் மரணத்தில், அவர் தாக்கப்பட்டு கொலை செய்த ஆயுதமான சுத்தியல், ஹேரயுற்றேயின் வீட்டில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் கண்டெடுக்கப் பட்டிருந்தது. அந்தக் கொலையில் சேகரிக்கப்பட்ட தடயங்களில் டானியலின் டீஎன்ஏ கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. அவர் அணிந்த சப்பாத்தின் பதிவும் கொலை நடந்த இடத்தில் இருந்திருக்கிறது. டானியலைக் கைது செய்து, அவரது வீட்டைச் சோதனை செய்த போது அவரது வெள்ளை அடிடாஸ் சப்பாத்து கழுவப்பட்டு சுத்தம் செய்யப்பட்டிருந்தாலும், சப்பாத்து கட்டும் நாடாவில் இரத்தக்கறை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. அது ஹேரயுற்றேயின் இரத்தம் என்பது நிரூபிக்கப் பட்டுமிருக்கிறது. கொலைக்கான 100 கிராம் உலோக எடையைக் கொண்ட சுத்தியலை அவர் கட்டிடப் பொருள் விற்பனை நிலையத்தில் இருந்து களவாடி தனது ஜக்கற்றினுள் மறைத்துக் கொண்டு, காசாளர் பகுதியில் தொலைபேசி கதைப்பது போல் வெளியேறியது கமராவில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வீடியோ நீதி மன்றத்தில் பார்வையிடப்பட்டிருந்தது….” “நான், எனது இரண்டு பிள்ளைகள் மனைவியுடன் ஸ்வேபிஸ் ஹாலுக்கு வந்தது, வாழ்வதற்காக மட்டுமே. யாரையும் நான் கொல்லவும் இல்லை, யாரிடமும் கொள்ளையடிக்கவும் இல்லை. எனக்கு ஆண்டவன்தான் சாட்சி” என்று டானியல் சொன்னான். “ஆயுள் தண்ட னை . தண்டனை முடிவடைந்ததன் பின்னால் டானியலின் நடவடிக்கை கவனிக்கப்பட்டு, விடுதலைக்கு தகுதியானவர் என்றால் மட்டும் அவர் விடுதலை பெற முடியும். அத்துடன் ஆயுள் தண்டனையை அவர் யேர்மனியிலேயே அனுபவிக்க வேண்டும்” என தீர்ப்பு வந்தது. கொலைகள் நடந்து, குற்றவாளி பிடிபட்டு தண்டனையும் வழங்கப்பட்டு விட்டது. ஸ்வேபிஸ் ஹால் நகரம் இப்பொழுது அமைதி ஆயிற்றா என்று நீங்கள் கேட்கலாம். 14.10. 2020இல், எல்பிரிடே கூகெரைக் கொன்றது யார் என்று இன்னமும் தெரியவில்லை. அந்தக் கொலையைச் செய்தவர் இன்னமும் சுதந்திரமாக நடமாடிக் கொண்டுதானே இருக்கிறார். கொஞ்சம் ஆறப் போட்டு, இரண்டு வருடங்களுக்குப் பின்னாலும் ஏதும் நடக்கலாம். டானியல் கூட ஒருவேளை, கூலிக்குக் கொலை செய்பவனாகவும் இருந்திருக்கலாம். இருந்தால் பார்க்கலாம்.2 points
-
சாந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான உத்தரவு ஒருவார காலத்தில் பிறப்பிக்கப்படும் - இந்திய மத்திய அரசாங்கம்
13 FEB, 2024 | 02:58 PM ராஜீவ்காந்தி கொலை தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையான நிலையில் தொடர்ந்தும் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வாரகாலத்தில் வெளியாகும் என இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. தாயாரை கவனித்துக் கொள்வதற்காக தன்னை விடுதலை செய்யக்கோரி சாந்தன் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தவேளை மத்திய அரசின் சார்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் போது சாந்தன் இலங்கை திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை துணை தூதரகம் அனுப்பியுள்ளது. இலங்கை அரசாங்கம் அனுப்பிய ஆவணங்கள் மத்திய அரசாங்கத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதே வேளை தமிழக அரசாங்கம் அனுப்பிய ஆவணம் இன்னமும் வந்துசேரவில்லை சாந்தனை இலங்கைக்கு அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும் என மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/1762811 point
-
புதனும் புதிரும்
1 pointதமிழ்வானண் கதைகளை நான் வாசித்தது குறைவு. என் காலத்தில் (கபொத சாதாரணம் படித்த நேரம்) அதிகம் வாசித்தது பி.டி.சாமி என்பவர் எழுதிய மர்ம நாவல்கள்தான். அவர் எழுதும் பாணி எனக்குப் பிடித்திருந்தது. பிற்பாடு “அனிதா - இளம் மனைவி’ என்று பத்து வாரங்களில் குமுதம் சஞ்சிகையில் சுஜாதா வேகமாக எழுதிய கதை பிடித்துப் போய் அவர் பக்கம் விழுந்து விட்டேன்.1 point
-
கருத்து படங்கள்
1 point1 point
- ஈழத்தமிழர் அரசியல்
1 pointவிடுதலைப் புலிகளை பற்றி மக்கள் பேசாமல் இருப்பதற்கு காரணம் சிங்கள அடக்குமுறை. சில *** யதார்த்தம் விளங்குவதில்லை….1 point- போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
போதமும் காணாத போதம் – 18 சொந்தக்கிராமத்திற்கு செல்வதென முடிவெடுத்து யாருக்கும் தெரியாமல் அதிகாலைக்கு முன்பாகவே சைக்கிளில் புறப்பட்டேன். இடம்பெயர்ந்து வீதிகளின் இருமருங்கிலுமுள்ள வயல்களில் சனங்கள் கூடாரம் அமைத்து உறங்கியிருந்தனர். வட்டக்கச்சியையும் தர்மபுரத்தையும் இணைக்கும் பாதையில் சைக்கிளை வேகமெடுத்து உழக்கினேன். குன்றிலும் குழியிலும் துள்ளிப்பாய்ந்தது. வீட்டில் என்னைத் தேடும் போது, நான்கைந்து நாட்களாக கடுமையான மோதல் நடைபெற்ற உக்கிரமான போர்க்களமாயிருக்கும் சொந்தக்கிராமத்திற்குள் புகுந்துவிடுவேன். எல்லையிலேயே போராளிகள் மறித்து திருப்பியனுப்பக்கூடும். வட்டக்கச்சியை ஊடறுத்து இரணைமடுவை அடைந்தேன். அங்கிருந்து இன்னும் அரைமணி நேரம் செல்ல வேண்டியிருந்தது. சூனியம் எழுப்பிய புழுதியில் வெறுமை குடித்திருந்தது ஊர். போராளிகளின் நடமாட்டம் தெரிந்தது. கனரக ஆயுதத்தைத் தாங்கிய வாகனமொன்று விரைவொலியோடு போனது. எறிகணைகளால் சேதமுற்ற மரங்களில் புள்ளினங்கள் இசைத்தன. போராளிகள் இருவர் மரங்களடர்ந்த பகுதியில் அமர்ந்திருந்தனர். அவர்களைப் பார்த்ததும் சைக்கிளை நிறுத்தினேன். “எங்கே போகிறீர்கள்?” என்று அவர்கள் கேட்பதற்கு முன்பாகவே போகுமிடம் சொன்னேன். “கடுமையான சண்டை நடக்கிற இடம். இஞ்சையெல்லாம் வரக்கூடாது. திரும்பிப் போங்கோ” என்றனர். “இப்போதுதான் சண்டை நடக்கவில்லையே, கொஞ்சத்தூரம் தானே இருக்கிறது. போய்விட்டு மதியத்திற்குள் திரும்புகிறேனே” என்றேன். இல்லை நீங்கள் உள்ளே செல்லமுடியாது என்று அழுத்தமாகச் சொன்னார். சைக்கிளைத் திருப்பினேன். எனக்குத் தெரிந்த ஒரு கள்ளப்பாதையிருக்கு, அதால போனால் முறிகண்டிக்கு கிட்டவா போய்டலாம் என்று தோன்றியது. மணல் அடர்ந்திருந்த பாதை. சைக்கிளை உழக்கமுடியாது போனது. நடக்க ஆரம்பித்தேன். திரும்பி வரும்போது சைக்கிளை எடுக்கலாமென புதருக்குள் மறைத்து வைத்தேன். நான் சொந்தக்கிராமத்திற்குள் நுழையும் போது விடிந்தது. கோயில் கிணற்றில் நீரள்ளிக் குடித்தேன். நாவல் மரத்தின் கீழிருந்த வீரபத்திரர் பீடத்தில் வண்ணத்துப்பூச்சிகள் குழுமிப்பறந்தன. அணில்கள் இரண்டு விளையாடிக் கொண்டிருந்தன. “போரைச் செவி கொள்ளாத உயிரினங்களின் நித்தியம் முறையீடற்று புலருகிறது போலும்!”. இன்னும் இரண்டு குச்சி ஒழுங்கைகள் தாண்டினால் அவளுடைய வீடு வந்துவிடும். நான் நடக்கத் தொடங்கினேன். நினைவென்னும் தீத்தாழியில் கால்கள் பதிகின்றன. உடல் மீது காட்டுத்தீயின் சுவாலை. இதயம் சக்கராவக புள்ளாய் வருந்துகிறது. எங்கள் வீட்டின் முற்றத்தில் எறிகணை வீழ்ந்து வெடித்து பள்ளமொன்று தோன்றியிருந்தது. அந்தப் பள்ளத்தினுள்ளே இறங்கி நான்கு குட்டிகளை ஈன்றிருக்கும் நாயின் தாய்மை வாசம் போர்முனையின் கந்த நெடியை அற்றுப் போகச்செய்திருந்தது. வீட்டின் அடுப்படி பகுதி மிச்சமிருந்தது. ஏனைய பகுதிகளை தீயுண்டிருந்தது. பள்ளத்திலிருந்த நாய்க்குட்டிகளைப் பார்த்தேன். கண்விழித்து இரண்டு நாட்கள் ஆகியிருக்கும். வாயில் கறுப்பு விழுந்த வெள்ளைக்குட்டியொன்று தலையுயர்த்தி என்னையே பார்த்தது. துக்கத்தில் வெந்து தகிக்கும் வீட்டிற்குள் நுழையவே மனம் ஒப்பவில்லை. ஆசை ஆசையாக அம்மா வளர்த்த மல்லிகைப் பந்தலின் அஸ்தியில் துவக்குச் சன்னத்தின் வெற்றுக்கோதொன்று கிடந்தது. அதுதான் நம்நிலத்தின் விதிமலர். பற்றுவதற்கு எந்தத் துரும்புமற்று எங்ஙனம் இந்த ஊழியைக் கடப்போமோ! “கடப்போமா?” மீண்டும் என்னையே கேட்டுக் கொண்டேன். எங்களுடைய வீட்டிலிருந்து பிரதீபாவின் வீட்டுக்கு ஒரு ஒழுங்கை தாண்டவேண்டும். அங்குதான் போகவேண்டும். அதற்காகவே இவ்வளவு தூரம் வந்தேன். என்னைப் போராளிகள் யாரேனும் கண்டுவிட்டால் முதலில் சந்தேகப்படுவார்கள். அரச ஆழ ஊடுருவும் படையணிச் சேர்ந்தவர் என சுற்றிவளைத்துப் பிடிக்கவும் செய்வார்கள். எது நேர்ந்தாலும் சந்திப்பேன். எது நேர்ந்தாலும் தாங்குவேன். பிரதீபா! கிளிநொச்சி முற்றவெளி மைதானத்தில் நடைபெற்ற கலைவிழாவொன்றிலேயே பிரதீபாவை முதன்முறையாக சந்தித்தேன். கரம் சுண்டல் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தாள். இரட்டைப் பின்னலோடும் சிறுத்த நெற்றியில் பிறை போன்றதொரு பொட்டும் தரித்திருந்த அவளுடைய கண்கள் நித்திய அதிருப்தியால் சோர்ந்திருந்தன. எதுவும் கைகூடாத நலிவின் பாரத்தில் அவளது முகம் அழுந்தியிருந்தது. படபடப்பில் தத்தளித்து வெளியேற்றும் மூச்சை விடவும் சிரமப்படுகிறாள் என்றே தோன்றியது. அவளோடு கதைக்க விரும்பியும் சூழல் தரிக்கவில்லை. பெற்றோல் மாக்ஸ் விளக்கு வெளிச்சம் சற்று மங்கிப் போனது. அதற்கு காற்று அடிக்கவேண்டுமென சொன்னேன். “அப்பா வருவார்” என்றாள். எனக்குப் பின்னால் வந்தவர்களும் கரம் சுண்டல் வாங்கிச் சென்றனர். பிரதீபாவையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவளுக்கு ஏதோ குழப்பமும், யோசனையும் இருந்தது. “உங்களுக்கு என்ன வேணும்” கேட்டாள். “இஞ்ச என்ன றியோ ஐஸ்கிரீமா விக்கிறியள். கரம் சுண்டல் தானே!” என்றேன். “இவ்வளவு நேரம் இதில நிண்டு, இதைத் தான் கண்டுபிடிச்சனியளோ” சீண்டினாள். “இல்லை, நிறையவற்றை கண்டுபிடிச்சனான் ஆனால் இதைமட்டும் தான் சொல்ல ஏலும்” என்றேன். தன்னுடைய ஆடையை ஒருமுறை திருத்தம் பார்த்தபடி, “இதில இப்பிடி நிக்காதையுங்கோ, கொஞ்ச நேரம் பாப்பன் இல்லாட்டி காவல்துறையிட்ட போய் சொல்லிப்போடுவன்” என்றாள். முற்றவெளி மைதானத்தில் தமிழீழ இசைக் குழுவினர் பாடல் இசைத்துக் கொண்டனர். பாடகர் சுகுமார் தன்னுடைய கம்பீரக்குரலால் திரண்டிருந்த சனங்களின் ரத்த நாளங்களில் இனமானம் ஏற்றிக்கொண்டிருந்தார். இரவு ஏக்கமுற்று கொண்டாடிக் களிப்புறும் சனங்களைப் பார்த்தது. இங்கிருந்து போகிறீர்களா இல்லையா என்பதைப் போல சைகையால் கேட்டாள். இதற்கு மேலும் நின்றால் காவல்துறையிடம் சென்று சொல்லக்கூடுமென அஞ்சினேன். அங்கிருந்து விலகத்தயாரானேன். “நீங்கள் எந்த இடம்?” கேட்டேன். “ஏன் வீட்ட வந்து எதுவும் நிவாரணம் தரப்போறியளோ” “இல்லை, சும்மா கேட்டனான்” “ஒருத்தற்ற ஊரையோ, வீட்டையோ சம்பந்தமில்லாம கேக்கிறது சரியில்லை. உங்களுக்கு நாகரீகம் தெரியாதோ” “இல்லை எனக்கு நாகரீகம் தெரியாது, நீங்கள் எந்த இடம்” என்று மீண்டும் கேட்டதும் சிரித்துவிட்டாள். “நாலாம் கட்டை. முறிகண்டி அக்கராயன் ரோட்டில இருக்கு” என்றாள். அப்பிடியா! அங்குதான் எங்களுடைய புதுவீடும் இருக்கு. அடுத்த கிழமை குடிபூருகிறோம்” என்றேன். “அங்க எங்க”? “நாலாம் கட்டை சேர்ச் இருக்கல்லோ. அதுக்கு பின்னால இருக்கிற குடியிருப்பு” “இயக்க குடியிருப்பு, அதுதானே” என்றாள். ஓமென்று தலையசைத்தேன். அங்கிருந்து ஒரு ஒழுங்கை தாண்டினால் எங்களுடைய வீடு என்றாள். அந்த வீட்டிற்குத்தான் போய்க்கொண்டிருக்கிறேன். பிரதீபாவின் கொட்டில் வீட்டுக்கு முன்பாக சிவலைப் பசு செத்துக் கிடந்தது. குண்டுச் சிதறல் கிழித்த வயிற்றை இன்னும் அலகால் கிழிக்கும் காக்கைக் கூட்டம் கரைந்து கரைந்து பொருதின. வீடு அப்படியே இருந்தது. போரில் சேதமற்றுக் கிடக்கும் வீட்டைப் பார்ப்பது தொந்தரவானது. எஞ்சுதலின் சுகம் சுமையானது. வீட்டிற்குள் நுழைந்தேன். பரணில் ஒரு கோழி பதுங்கித் தூங்கியது. வீட்டின் வலது மூலையில் அடைகிடக்கும் கோழி இன்றோ நாளையோ குஞ்சுகளைக் கண்டுவிடும். வீட்டின் வெளியே கரம் சுண்டல் வண்டி சாய்த்துவைக்கப்பட்டிருந்த பிலா மரத்தின் கீழே அரணைகள் ஓடிச் சென்றன. அவளுக்குப் பிடித்தமான கடதாசிப் பூ மரம் சடைத்து மலர்ந்திருந்தது. உதட்டில் எப்போதும் வைத்து பூசிக்கொள்ளும் சிவந்த பூக்கள். வீட்டின் பின்னே ஒற்றையடிப்பாதை வழியாக நடந்து சென்றேன். “பிரதீபா! இப்படித்தான் யாருமற்ற பூமியில் நீயும் நானும் வாழவேண்டுமென ஆசைப்பட்டாய் அல்லவா?” எவ்வளவு அபத்தச் சூனியமந்த ஆசை. நீயுறங்கும் திசையோடி வருகிறேன். உன் மீது கனமாய் ஏறியிருக்கும் மண்மேட்டின் அருகமைந்து கதைக்கலாமென தவிக்கிறேன். கணக்கற்ற நம் கூடல் பொழுதுகளை பிரிவு பழிக்கிறது. ஆழ் துயிலில் என் தலை அறுபடும்வரை ஓர் கனா நீள்கிறது. நீயே! பரந்த பகலும் இரவும். உன்னுடைய சவத்தின் மீது அழுது புரண்டது நானல்ல. என்னுயிர். அது உன் மூச்சற்ற உடலில் பூசப்பட்ட வாசனைத் திரவியம். அவளைப் புதைத்த மேடு, கொஞ்சம் மண்ணிறங்கி இருந்தது. அதன் மீது படுத்துக் கொண்டேன். அவளை மீண்டும் மீண்டும் அழைத்துக் கொண்டேன். அவளருளாலே அவள்தாள் வணங்கினேன். அவள் நாமம் மறந்திலேன். பிரதீபா! உன்னுடைய மகிமையைப் பாடியும், பரசவமாய் ஆடியும் யாருக்கும் சொல்ல விரும்பேன். நீ என்னுடைய மலையில் ஊறிய சுனை. உன்னால் குளிர்ந்தவன். எப்போதும் நீ சொல்வதைப் போலவே நீயற்றுப் போன இத்தனை நாட்களில் என்னை நானே எரித்துக் கொண்டிருக்கிறேன். முகில் கிழித்து எனை அணைக்கும் ரகசிய மழை நீ. இவ்வளவு போர் பிரகடனங்களுக்கு மத்தியில் உன்னுடல் மீது புரண்டு படுப்பதில் வெறுமை அழிகிறது. ஆறுதல் பெருகுகிறது. உளத்தில் தந்திகள் அதிர்ந்து உடலில் ஸ்வரம் தொனிக்கிறது. பிறவிச் சுமையென எம்மைப் பீடித்திருக்கும் இந்தப் போரிடம், நாம் தோற்றுப் போகோம். உண் புதைமேட்டில் நான் வருவதற்கு முதற்கணம் வரை ஒரு வண்ணத்துப்பூச்சி இருந்து பறந்தது. அந்த வண்ணத்துப் பூச்சியை நான் அடையாளம் கண்டேன். அன்றைக்கு நாம் பாலைப் பழக்காட்டிற்குள் உதிர்ந்திருந்த போது உன்னுடைய இடது முலைக் காம்பில் வந்தமர்ந்த மஞ்சள் நிறப் வண்ணத்துப்பூச்சி! இதோ இப்போது துளிர்த்து இறங்கும் மழையின் துளிகள் அன்றைக்கும் பெய்தவை தானே! உனக்கு நினைவிருக்கிறது அல்லவா? அது காமம் எறிந்த அந்திப்பொழுது. நறுமணத்தின் கனிச்சுளைகள் காற்றில் உரிந்து கரைந்தன. உன்னுடையவை என்றோ, என்னுடையவை என்றோ எதுவுமற்ற சரீரங்கள். இலைகளால் சடைத்த தருக்களின் அசைவுகளில் ஒரு லயம். என்னை உன்மீது உருகுமொரு மெழுகுவர்த்தியாய் ஏற்றினேன். நீயொரு சுடர் விரும்பி. என்னைத் தீண்டி தீண்டி ஒளி பெருக்கினாய். அழுத்தங்கள் அழிக! இறுக்கங்கள் மாய்க! போர் ஒழிக! என்றெல்லாம் நானே சொல்லிக்கொண்டேன். என்னுடைய வாயை இறுகப்பொத்தி இப்போது எதையும் எதிர்மறையாகச் சொல்லாதே! எல்லாமும் துளிர்க்கும் நேரமிது என்றாய். எங்கிருந்து வந்த வண்ணத்துப்பூச்சி என்று தெரியாது. உன் இடது முலைக்காம்பில் வந்தமர்ந்தது. “அடேய் கள்ளா! வாய்க்குள் வண்ணத்துப்பூச்சியை வைத்து, விளையாட்டு காட்டுகிறாய் “ என்றாய். “இல்லை, இது பாலைப்பழக் காட்டிற்குள் இருந்து வந்திருக்கிறது. நம்மை அது ஆசிர்வதிக்கிறது” என்றேன். அவள் முலைவிடுத்துப் பறந்த தன் கால்களில் ஏந்தியிருந்தது உருகும் ஒளி உருகாது அணையும் சுடர் அணையாது நின்ற அந்தப் பொழுதை. “ இப்படி இருவரும் ஒன்றாக இருப்பது ஆனந்தமாக ஆறுதலாக இருக்கிறது. ஆனால் இது பிழையல்லவா” நீ கேட்டாய். “பிழைதான், ஆனால் போரைவிடவும் எவ்வளவோ சரி” என்றேன். புதைமேட்டில் படுத்துக்கிடந்தேன். கொஞ்சத்தூரத்தில் துவக்குச் சத்தம் கேட்கத் தொடங்கியது. எறிகணைகளை கூவி வீழ்ந்தன. சண்டை மூண்டுவிட்டது. போராளிகளின் பக்கத்திலிருந்தும் தாக்குதல்கள் தொடங்கின. நான் கடதாசிப் பூக்களை ஆய்ந்து வந்து அவளது புதைமேட்டில் வைத்து அலங்காரம் செய்தேன். எறிகணைகளும், போர் விமானங்களும் தாக்குதல் நிகழ்த்துகின்றன. இக்கணமே இவ்விடமே என்னுயிர் போகட்டுமே! அன்றைக்கு மதியம் வரை கடுமையான மோதல் நடைபெற்றது. போராளிகள் பாதுகாப்புச் சமர் செய்தனர். ஆனால் கடுமையான இழப்புக்களைச் சந்தித்திருக்கவேண்டும். வாகனங்கள் திகில் பிடித்த காட்டு மிருகங்களைப் போல வீதியில் போயின. காயக்காரர்களாக இருக்கலாம். ஒருதொகை போராளிகளின் புதிய அணி களமுனை நோக்கி நகர்த்திச் செல்லப்படுவதைப் பார்த்தேன். படுத்து உறங்கினேன். என்னுடைய வலது கண்ணைத் தொட்டு மஞ்சள் வண்ணத்துப் பூச்சியொன்று புதைமேட்டில் அமர்ந்தது. கண்களை விழித்தேன். குப்புறப்படுத்த என்னுடைய அடிமுதுகை இரண்டு கைகளாலும் யாரோ பற்றியிருப்பது போலிருந்தது. திடுமென புரண்டு எழுந்தேன். நெஞ்செங்கும் மண் ஒட்டிக்கிடந்து. மஞ்சள் வண்ணத்துப்பூச்சி அங்கேயே தரித்தும் பாவியும் பறந்து கொண்டிருந்தது. திடுமென எறிகணைகள் பரவி வீழ்ந்து வெடித்தன. களமுனையின் பின்தள வழங்கல்களை கட்டுப்படுத்தும் முகமாக நடைபெறும் தாக்குதல் என்று விளங்கிக்கொண்டேன். நான் எங்கும் நகரவில்லை. பிரதீபாவின் புதைமேட்டின் அருகிலேயே அமர்ந்திருந்தேன். என்னருகிலேயே குண்டுகள் வீழ்ந்து வெடித்தன. மஞ்சள் நிற வண்ணத்துப்பூச்சியும் நானும் பிரதீபாவோடு இருந்தோம். போர் தனித்திருந்தது. “இப்பிடி சண்டை நடக்கிற இடத்தில வந்து தனியா இருந்தது பிழையல்லவா” என்று கேட்டார், விசாரணை செய்த போராளி. “பிழைதான் அண்ணா, ஆனால் போரை விடவும் எவ்வளவோ சரி” என்றேன். அந்தப் போராளி என்னைத் தன்னுடைய பதுங்குகுழிக்கு அழைத்துச் சென்றார். சண்டை ஓய்ந்ததும் பின்னால் போய்விடு என்றார். அன்றிரவு சண்டைக்கான நிமித்தங்கள் எதுவும் இல்லை. போவென்று வழியனுப்பினார். புதருக்குள் கிடந்த சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பதுவதற்கு முன்பாக மீண்டுமொருமுறை புதைமேட்டிற்குப் போனேன். காரிருளில் மொய்த்துக் கிடக்கும் மஞ்சள் வண்ணத்துப்பூச்சிகளின் தாலாட்டில் புதைமேடு மலர்ந்திருந்தது. நிலம் சிலிர்க்க வண்ணத்துப் பூச்சிகள் அவளின் உலராத இதழ்களில் துடிதுடித்தன. பிரதீபா…. என்றழைத்தேன். நிசிக்காற்றின் விழி விரிய புதைமேட்டிலிருந்து அவள் குரல் தோன்றியது. நான் தலையாட்டிக்கொண்டிருந்தேன். அந்த இரவில் நிலவு தேயவில்லை. ஆனால் போர் துயின்று விட்டது. https://akaramuthalvan.com/?p=17431 point- புதனும் புதிரும்
1 pointஇன்று லீவு என்பதால் ஒரே மூச்சில் வாசித்துமுடித்தேன்! தொடருக்கான உத்திகளை நன்றாகவே கையாள்கின்றார் மூனா ஐயா! நல்லதோர் துப்பறியும் கதை போல இருந்தது. டானியல்தான் என்று அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே தெரிந்துவிட்டது! தமிழ்வாணன் கதைகள் படித்த அனுபவம்தான்🤓 ஒவ்வொரு புதன் கிழமையும் அத்தியாயங்களைப் போட்டிருக்கலாம்!1 point- கருத்து படங்கள்
1 point1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- புதனும் புதிரும்
1 pointசட்டம் ஒரு கோழை ......ஆமையைப்போல்தான் நகரும்.......அப்பவும் அடிக்கடி தலையை ஓட்டுக்குள் இழுத்துக் கொள்ளும்......" ஏன் ஜட்ஜ் ஐயா, அந்த நிரூபணமான இரண்டு கொலை வழக்குகளுக்கு முதல்ல சரியான தண்டனையைக் குடுங்க.......பிறகு வரும் குற்றங்கள் நிரூபணமானால் அந்தத் தண்டனைகளையும் குடுங்கள் .......குற்றவாளி இறந்திருந்தாலும் பிரச்சினை இல்லை" .......பல வழக்குகளில் ஒருத்தர் செய்த குற்றங்களைப் பிரித்து பிரித்து 150 வருடங்களுக்கு மேல் தண்டனை கொடுக்கிறார்கள்......அதெல்லாம் சட்டப்படி செய்யும் ஏமாற்று வேலை என்று குடுக்கிறவருக்கும் தெரியும், வாங்கிறவருக்கும் தெரியும்.......பார்க்கிற மக்களுக்கும் தெரியும்.......! 😴1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- களைத்த மனசு களிப்புற ......!
1 point- உணவு செய்முறையை ரசிப்போம் !
1 pointசுவையாக சத்தனி விதையை அவித்து சாப்பிடவும்........இந்தக் காலத்தில்தான் அது கிடைக்கும்......! 👍1 point- போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
போதமும் காணாத போதம் – 16 பிந்திப்புலர்ந்த விடியலுக்கு முன்பாகவே மழை துமித்தது. உறக்கம் கலைந்து லாம்பைத் தீண்டினேன். ஆறு மணியாகியிருந்தது. அதிவேகமாய் வீட்டின் கதவைத் திறந்து பட்டியடிக்கு ஓடினேன். ஆரம்ப சுகாதார நிலையத்தை தாண்டி வலதுபுறம் திரும்பினால் வருகிற குச்சொழுங்கையில் அரைக்கட்டை நடந்தால் பட்டியடி சிவன் கோவில் வரும். அதற்குப் பின்னாலிருக்கும் பாழடைந்த வீட்டில்தான் சந்திப்பதாகவிருந்தது. நான் சென்றடைவதற்கு முன்பாகவே யசோ வந்திருந்தாள். பீத்தல் விழுந்த குடையொன்றை ஏந்தி நின்றாள். பீத்தல் புகுந்து அவளை நனைக்கும் மழைத்துளிகள் பேறுடையன. ஆயிரம் கண்களுடைய மயில் தோகையை நினைவுபடுத்தும் வடிவமைப்பிலான ஆடை அணிந்திருந்தாள். ஈரம் விழுந்து துளிர்த்த தளிரென குளிர்பதுக்கி நின்ற யசோவை கட்டியணைத்து முத்தமிட்டேன். விசுக்கென தள்ளி விலக்கினாள். என் யாக்கையின் மாண்பு திகைத்து திணறியது. மீண்டும் முன்நகர்ந்து அவளை இறுக அணைத்து முத்தமிட விழைந்தேன். அவள் விளையமறுத்த நிலமென முகத்தை பலகோடுகளாய் கோணலாக்கி இறுக்கியிருந்தாள். “யசோ! என்ன நடந்தது? ஏதேனும் பிரச்சனையோ!” கேட்டேன். சடை பின்னப்பட்டிருந்த கூந்தலை அவிழ்த்து விரித்தாள். காமக் களிறை உருவேற்றும் பெண் கூந்தலில் காட்டுப் பூ வாசனை. அவளுடைய கண்களில் பெருகும் கள்ளம் என்னை ஆணாக அறிவித்தது. அவளருகே என்னை அழைத்தாள். வசியமிடப்பட்ட அடிமை நான். எத்தனை சவுக்குகளையும் என்னில் வீசும் உரிமை படைத்தவள். ஆயிரம் கண்கள் கொண்ட மயில் தோகையை கழற்றி வீசினாள். பீத்தல் கூடையை சுருக்கி வைத்தாள். எப்போதும் சுருக்கவியலாத மேகமெனும் பிரமாண்டமான குடையில் எத்தனை பீத்தல்கள். யசோ! பருவத்தின் காற்றில் அசைந்து வளரும் பூக்களும், காய்களும், கனிகளும் கொண்டவள். என்னை முத்தமிட்டு முத்தமிட்டு களிகூர்ந்தாள். என் ஆடைகளை உருவி எறிந்தாள். மழையில் நிர்வாணம் பூத்து நின்றோம். “மழையில் கூடல், உடலுக்கு சுதி, உனக்கு எப்பிடி” என்று கேட்டேன். அவளுக்கு களைப்பாய் இருந்தது. அடிவயிற்றில் குளிரளித்து நின்றது சுக்கிலத்து ஈரம். யசோ எழுந்து ஆடைகளை அணிந்தபடி “நான் இண்டைக்கு வரமாட்டேன் என்று நினைத்தாய் அல்லவா” என்று கேட்டாள். “பின்ன, மழை பெய்கிறது. இவ்வளவு கஷ்டப்பட்டு சந்திக்கத்தான் வேண்டுமா. ஆனாலும் நீ வந்திருப்பாய் என்று மனம் சொன்னது” என்றேன். “சரி நேரம் போய்ட்டுது. ஆடுகளை பட்டியிலிருந்து சாய்த்துவிடவேண்டும். வெளிக்கிடுகிறேன்” “இன்றைக்குப் பின்னேரம் சந்திக்கிறோமா” “வாய்ப்பில்லை. எங்கட சொந்தக்காரர் வீட்டு விஷேசம். அங்க போகவேண்டும்” “எந்த இடத்தில” “அதுவோ… உருத்திரபுரம். ஏன் வரப்போறியளோ” “இல்லையில்லை. நீ போய்ட்டு வா. நாளைக்குப் பார்க்கலாம்.” “ஏன் நாளைக்கும் மழை பெய்யுமோ” என்று கேட்டபடி அங்கிருந்து ஓடிச்சென்றாள். பட்டியில் ஆடுகள் நனைந்து நின்றன. அவள் திறந்ததும் பழக்கப்பட்ட திசைவழியில் ஓடின. வழிமாறிய ஆடுகளை மேய்த்தபடி பாழடைந்த வீட்டைப் பார்த்தாள். கூரைவரை உயர்ந்தேறிய கொடியில் மஞ்சள் பூக்கள் அசைய வானம் குனிந்து பார்த்தது. அங்கிருந்து வீட்டிற்குப் போகும் வழியிலேயே இருந்த வாய்க்காலில் குளித்தேன். ஆயிரம் புரவிகளில் ஏறித்திரிந்த கம்பீரத்தின் தினவு உடல் புகுந்திருந்தது. தண்ணீரில் நின்று கண்களை மூடினால், யாவும் அளிக்கும் ஒரு அமிழ்தக் கொடியாக நிலத்தில் படர்ந்திருக்கிறாள் யசோ. அடிவயிற்றில் மீன்களின் தீண்டல். பாதங்களை உய்விக்கும் பாசிகளின் அசைவு. தண்ணீரில் கொதிக்கும் என்னுடல். யசோ! உன்னுடைய கானகத்தின் பாதையில் திக்கற்று நிற்கும் என்னை எங்ஙனம் தாங்குவாய் சொல்! யசோவுக்கும் எனக்குமிடையே காதல் மலர்ந்து இரண்டு வருடங்கள் ஆகியிருந்தன. அவளுடைய தாயார் இறந்துபோன அன்றைக்குத்தான் முதன்முறையாக என்னுடைய கைகளைப் பிடித்து, வீட்டினுள்ளே அழைத்துச் சென்றாள். “உன்னை விட்டால் எனக்கினி யார்” என்பதைப் போல என்னுடைய விரல்களைப் பற்றினாள். போராளியாக களமுனையிலிருந்த யசோவின் சகோதரி அடுத்தநாள் காலையிலேயே வரமுடியும் என்பதால் அன்றிரவு முழுதும் தாயின் பூதவுடல் வீட்டில் கிடத்தப்பட்டிருந்து. மூன்று பெற்றோல் மாக்ஸ் வெளிச்சத்தில் பந்தல் ஒளிர்ந்தது. கடதாசிக் கூட்டம் விளையாடுபவர்கள், பீடி புகைப்பவர்கள், வெற்றிலை போடுபவர்கள், அரசியல் கதைப்பவர்கள் என எல்லோருக்கும் மத்தியிலும் பூதவுடல் தனிமையிலிருந்தது. யசோ, தாயின் தலைமாட்டிலிருந்து வேப்பிலையால் பூச்சிகளை விரட்டினாள். சோர்வும் தனிமையும் அவளை மிரட்ட ஆரம்பித்திருந்தன. அழுது அடைத்திருந்த குரலோடு, முகம் காய்ந்திருந்தது. அவளருகே சென்று “எப்பனாய் சாப்பிடுங்கோ யசோ” என்றேன். அவள் வேண்டாமென்று தலையசைத்துவிட்டு தாயின் பூதவுடலில் விழுந்து ஊர்ந்த சக்கரபாணி வண்டைத் தூக்கி எறிந்தாள். நள்ளிரவு இரண்டு மணிவரை அப்படியே அமர்ந்திருந்தாள். ரத்தச் சொந்தங்களில் சிலர் இழவு காத்தனர். தயாரின் மூத்த சகோதரி நேரம் பிசகாமல் ஒப்பாரி பாட விழித்திருந்தாள். “என்னையழைத்த யசோ “எனக்குத் துணையாக வரமுடியுமா” என்று கேட்டாள். “எங்கே போகவேண்டும்” கேட்டேன். “எனக்கு சுகமில்ல, துணிமாத்த வேணும். வீட்டுக்குப் பின்னாலவுள்ள மறைப்புக்குத்தான்” “ஆரும் பார்த்தால் பிழையாய் நினைப்பினம்” என்று தயங்கினேன். “இனைச்சால் இனைக்கட்டும். என்னோட வாங்கோ” கையிலிருந்த டோர்ச் லையிற் வெளிச்சத்தோடு யசோவை கூட்டிச்சென்றேன். வீட்டுக்குப் பின்பக்கத்தில் அவள் சொன்னது மாதிரி மறைப்பு ஏதும் இல்லை. அவளின் பின்னால் நடந்து சென்றேன். கொஞ்சம் தள்ளி வாய்க்கால் ஓடிக்கொண்டிருந்தது. என்னிடமிருந்த டோர்ச் லையிற்றை வாங்கியவள் ஒருமரத்தின் கீழே எதையோ சுற்றுமுற்றும் தேடினாள். பிறகு அங்கேயே அமர்ந்து என்னையும் அப்படியே பணித்தாள். “யசோ…துணி மாத்தேல்லையோ, நீங்கள் மாத்துங்கோ நான் நிக்கிறன்” என்றேன். என்னை இறுக கட்டியணைத்து மூச்சொலி தெறிக்க முத்தமிட்டு ஆடைகளைக் களைந்தாள். வெறுமையிருள் பிளந்து இனிமை சுரக்கும் சுடர் ஏந்தி என்னை ஆட்கொண்டாள். வாய்க்காலின் நீர்ப்பெருக்கு புதிய இச்சைகளோடு சப்தமிட்டது. யசோ வானத்துக்கும் பூமிக்கும் பறந்து விழுகிற உக்கிரத்தோடு இயங்கினாள். அழிவற்ற கண்ணீருக்கு அங்குண்டு பீடம். உடல் எழுந்து பறையென அதிர்கிறது. மலையிருந்து நிலமோடி வருகிற நீர்த்தடத்தின் வெளிச்சமென யசோவும் நானும் அங்கே துய்த்து நிறைந்தோம். “உன்னுடைய அம்மா, அங்கே தனித்திருக்கிறாள். எழுந்து செல்வோம் யசோ” “அப்பாவை ஆர்மியிடம் பறிகொடுத்த நாளிலிருந்து இற்றைக்கு இருபதாண்டுகளாக அம்மா இப்படித்தான் இரவுகளைப் போக்கினாள். அவளுக்கு நிம்மதிமிக்க இரவு இன்றுதான் வாய்த்திருக்கிறது. அதையெண்ணி நீ கவலைப்படாதே” “ஆனாலும், போகலாம். ஆராவது உன்னைத் தேடி வந்தால் பிழையாகிவிடும். நீயேன் பொய் சொல்லி என்னை அழைத்து வந்தாய்” “அது பொய்யில்லை. உண்மைதான். ஆனால் இப்ப ஒண்டையும் காணேல்ல” யசோ சிரித்தாள். இருவரும் வாய்க்காலில் இறங்கி உடலைக் கழுவினோம். யசோ அடிவயிற்றில் மீன்களைப் போல தீண்டி இரையாடினாள். காணும் போகலாம் என்றேன். “அமைதியாக இரு. கொம்புத்தேன். வெறுமையையும் துக்கத்தையும் எரிக்கிறது. தண்ணீரில் நீ விறைத்து நிற்கிறாய். உன்னுடைய உடலில் சுடரும் நிலவின் வெளிச்சம் என்னை மோகிக்கிறது. துண்டு துண்டாகி சிதறிக்கிடக்கும் உளத்தை சிறுசிறு அகல் விளக்காக மாற்றும் இந்தச் சுகத்தை நீ எனக்குத் தராமல் போகாதே. கொம்புத்தேன் உருகட்டும்” என்றாள். நாங்களிருவரும் பந்தலுக்குள் நுழையும் போது இன்னும் சிலர் உறங்கியிருந்தனர். கடதாசிக் கூட்டம் விளையாடிக்கொண்டிருப்பவர்கள் அளவில் குறைந்திருந்தனர். தாயின் தலைமாட்டில் போய் அமர்ந்தாள். அடிக்கடி என்னைப் பார்த்து கண்களை மருளச் செய்தாள். யசோவிடம் ஏதோவொரு மூர்க்கம் பெருகி நிற்கிறது. அவளினுள்ளே தணல் மூண்டிருக்கும் தீயின் சடசடப்பை அறியக் காத்திருந்தேன். அதிகாலையிலிருந்து ஆட்கள் வரத்தொடங்கியிருந்தனர். களமுனையிலிருந்து யசோவின் சகோதரி வந்திருந்தார். தாயின் பூதவுடலைக் கட்டியணைத்து அழுதார். அம்மா.. அம்மாவென்ற அரற்றல் சுருக்கமாகவே தீர்ந்தது. அதன்பிறகு யசோவும் நானும் பலதடவைகள் சந்தித்துக் கொண்டோம். எங்களிடம் தீர்ந்து போகாத தாழிகளில் காமம் நொதித்து கள்ளென வழிந்தது. கலவியிலிருந்த கணமொன்றில் கண்கள் பனித்து “ இப்பிடி இருக்கேக்க மட்டும்தான் எங்கட நாட்டில யுத்தம் நடக்கிறதே மறந்து போகுது. ஒரு அஞ்சு நிமிஷம் அப்பிடிச் சுகமாய் இருக்கு” என்றாள் யசோ. “நல்லாயிருக்கு உங்கட கதை. நாங்கள் ரெண்டு பேரும் சந்தோசமாய் இருக்கேக்க, எத்தின பேர் நாட்டுக்காக உயிரை விடுகினமோ!” என்றேன். “இதுவும் ஒரு போராட்டம் தானே. யுத்தத்தை மறக்க ஒரு உபாயம். அப்பாவை ஆர்மிக்காரன் பிடிச்சிட்டு போன நாளிலயிருந்து அம்மா பட்ட கஷ்டங்களில இதுதான் பெரிசு. உன்ர கொப்பர் கனவில வந்து கொஞ்சச் சொல்லி அடிக்கடி கேக்கிறாரடி என்பாள் அம்மா. அப்பிடியொரு கனவு வருகிற கணங்கள் மட்டும்தான் அம்மாவோட உளம் இந்த யுத்த அவலங்களை மறந்திருக்கும். இல்லையோ!” “துயரம் தான் யசோ” “கவலைப்பட எதுவுமில்லை. ஆனால் இவ்வளவு யுத்தத்துக்கு மத்தியிலும் எங்கட ஆஸ்பத்திரிகளில குழந்தைகள் பிறக்கினம் தானே. யுத்தம் ஒட்டுமொத்த மனுஷனிட்ட தோக்கிற இடமிதுதான்” “அடிசக்கை… இதை நீங்கள் எங்கட தவபாலன் அண்ணைக்கு சொன்னியள் எண்டால், ரெண்டுநாள் பெரிய ஆய்வுக்கட்டுரை வாசிப்பார்” “இப்பிடியொரு உண்மையை இயக்கத்தின்ர ரேடியோவில சொல்லுறதால அதைப் பொய்யெண்டு நம்பவும் வாய்ப்பிருக்கு. அதை நானே வைச்சுக் கொள்கிறேன்” என்றாள். ஆடுகளை மேய்த்துவந்து பட்டியில் அடைத்து அந்தியின் சிவந்த ஒளியில் வியர்வை சிந்த எங்கள் வீட்டிற்கு வந்திருந்தாள். காலையில் பெய்த மழையில் நம்வெள்ளம் நீந்தியதை அவளுக்கு நினைவுபடுத்தினேன். உணவை சட்டியில் போட்டுக் கொடுத்து “அம்மா வீட்டில் இல்லை, இரணைமடு வரைக்கும் போயிருக்கிறா” என்றேன். அதே ஆயிரம் மயில் கண்கள் திறந்த சட்டை. ஆட்டு மந்தையின் மொச்சை மணம் ஏறிய கிளர்ச்சி. வெயிலில் காய்ந்த யசோ தகித்திருந்தாள். எங்கிருந்தோ எம்மைத் தேர்ந்தடுக்கும் இந்த உணர்வை இறையிருக்கையில் அமர்த்தி பூசிக்கவேண்டும். யுத்தம் பொல்லாத செருக்கின் அநீதி. ஆனாலும் நானும் யசோவும் உடல்களை இழைத்து யுத்தத்தை மூடினோம். அது தருவித்த தழும்புகளில் ஒரு வழித்தோன்றலை உருவாக்க எண்ணினோம். யசோவை வீட்டினுள்ளே அழைத்தேன். அவள் வேண்டாமென மறுத்தாள். என்னுடைய கைகளைப் பற்றி முத்தமிட்டு, வேறொரு நாளில் வைத்துக் கொள்வோம் என்றாள். இப்போதே, இக்கணமே நாம் யுத்தத்தை மறக்கவேண்டுமென தோன்றுகிறது என்றேன். நாம் யுத்தத்தை சில கணங்கள் மறப்போமாக! அது நம்மீது சுமத்திய காயங்களை எடையற்ற இறகுகளாக ஊதிப் பறக்க விடுவோமாக! என்று சொல்லியபடி நிலத்தின் மீது கொடியெனப் படர்ந்து பூவின் அதழ்களைத் திறந்தாள். இயங்கி முயங்கும் அந்திப்பொழுதில் முன்நிலவு மேலெழுந்து வானறைந்தது. “ஆராவது வந்துவிடப் போகிறார்கள், நிறுத்திக்கொள்ளலாம்” யசோ சொன்னாள். “அம்மா வருவதற்கு நேரம் செல்லும். நீ ஏன் புதிதாகப் பயப்படுகிறாய்” என்று கேட்டேன். “யுத்தத்தை மறக்கலாம். ஆனால் இது சனங்களுக்குத் தெரிஞ்சால் மானக்கெடுத்து போடுங்கள்” “இதைத்தானே நான் அண்டைக்கு இரவும், வாய்க்காலடியில வைச்சு சொன்னான்” “எண்டைக்கு இரவு” “உங்கட அம்மா செத்த அண்டைக்கு, வாய்க்காலுக்கு கூட்டிக்கொண்டு போனியளே” “அங்கே, ஏன் நான் கூட்டிக்கொண்டு போனான். உங்களுக்கு என்ன விசரே” “நல்ல கதையாய் இருக்கே. கூட்டிக்கொண்டு போய் செய்யாத வேலையெல்லாம் செய்துபோட்டு, இப்ப அப்பாவி மாதிரி, வேஷம் போடுறியள்” “சத்தியமாய் நான் அப்பிடி ஒண்டும் செய்யேல்ல. விடியும் வரை அம்மாவின்ர தலைமாட்டில இருந்து வேப்பிலையால விசுக்கி கொண்டெல்லே இருந்தனான்” “அய்யோ, இதென்ன பொய். உங்களுக்கு சுகமில்லை. துணி மாத்தவேணும். வா எண்டு என்னைக் கூட்டிக்கொண்டு போனியளல்லே” “சத்தியமா இல்ல” “அப்ப, நான் சொல்லுறது பொய். அப்பிடித்தானே” “நான் சொன்னானோ எனக்குத் தீட்டு எண்டு?” யசோவின் இந்தக் கேள்வியிலிருந்த தீவிரம் சூழலுக்கு மிக அந்நியமாய் இருந்தது. ஆனாலும் நான் ஓமென்று தலையசைத்தேன். “அம்மா செத்த அண்டைக்கு அவாவுக்கு தான் மூன்றாம் நாள் தீட்டு லேசாய் இருந்தது” என்ற யசோ என்னை இறுக அணைத்தாள். “யசோ, நீ என்ன சொல்லுகிறாய்?” “இருபது வருஷத்துக்கு பிறகு அம்மா அண்டைக்கு நிம்மதியாய் உறங்கியிருக்கிறாள். அவளும் சில கணங்கள் யுத்தத்தை மறந்து இருந்திருக்கிறாள்” என்று சொல்லியபடி யுத்தம் ஒழிக! யுத்தம் ஒழிக! என்று முயங்கினாள். https://akaramuthalvan.com/?p=16641 point- போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
போதமும் காணாத போதம் – 11 இருண்டு கொட்டும் மழையில் வீட்டின் கதவு தட்டிக் கேட்டது. சிறிய கோடாக உடைந்திருந்த ஜன்னலில் கண் புதைத்துப் பார்த்த அம்மா, ரகசியமாய் சுதாகர் என்றாள். மீண்டும் கதவு தட்டும் சத்தம் கொஞ்சம் மூர்க்கமாக ஒலித்தது. என்னை அறைக்குள் போய் இருக்குமாறு கைகாட்டினாள். ஒரு நாடகத்தின் தொடக்கம் போல திரைவிலக வசனம் தொடங்கிற்று. “ஆர் வந்திருக்கிறது?” “நான் தான் சுதாகர் கதவைத் திறவுங்கள்”. அம்மா கதவைத் திறந்தாள். நனைந்திருந்தவரிடம் பெரிய துவாயைக் கொடுத்தாள். சேர்ட்டைக் கழற்றி உடம்பைத் துடைத்தார். அணிந்திருந்த ஜீன்சை கழற்றுவதற்கு முன்பாக பிஸ்டலை வெளியே எடுத்து தண்ணீரை துடைத்தார். ஒரு சாறமும் சேர்ட்டும் கொடுத்து மாற்றிக் கொள்ளச் சொன்னாள். சுடச்சுட இஞ்சி போட்டு ஒரு தேத்தண்ணி கொடுத்தாள். கொஞ்சம் இளைப்பாறிய பின் “இந்த நேரம் எதுக்கடா இஞ்ச வந்தனி” என்றாள். சின்னதொரு வேலையாய் ஊரெழு வரைக்கும் போய்ட்டு வந்தனான். கொஞ்சம் பிந்தீட்டுது. மழை வேற பேயாய் அடிக்குது. அதுதான் இஞ்ச வந்தனான்.” என்றார். “வேற எதுவும் திருகுதாளம் பண்ணிட்டு பாதுகாப்புத் தேடி இஞ்ச வரேல்ல தானே” அம்மா எச்சரிக்கையோடு கேட்டாள். அவர் கண்களைத் தாழ்த்தி தேத்தண்ணியைப் பார்த்தபடி ஆவி நுகர்ந்தார். பிறகு கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி தைரியத்தை வரவழைத்திருப்பார் என்றே தோன்றுகிறது. “அண்ணி, அப்பிடி ஒண்ட செய்திட்டு உங்களிட்ட வந்தாலும், நீங்களே என்னைச் சொல்லிக்குடுத்திடுவியள் தானே” சுதாகர் கேட்டார். “பின்ன, உங்களைப் பாதுகாத்து சனங்களுக்கு என்ன பயன்” அம்மா கேட்டதும் சுதாகருக்கு ஆத்திரமும் அடக்கமுடியாத அவமானமும் தோன்றியிருக்கலாம். உடனடியாக கதவைத் திறந்து வீட்டின் வெளியே போனார். மழையின் பேரிகை விடாது ஒலித்தது. திறந்திருந்த கதவின் வழியாக சாரல் புகுந்தது. “எடேய், நீ உள்ள வாறதெண்டால் வா. இல்லாட்டி நான் கதவைச் சாத்தப் போறன்” அம்மா குரல் கொடுத்தாள். “இல்ல நான் வெளியேயே படுக்கிறேன், வெள்ளனவா எழும்பிப் போகிறேன்” என்றார். “அடிசக்கை, பெரிய ரோஷக்காரன்ர வீம்பு. இதில கொஞ்சம் ரோஷம் உண்மையா இருந்திருந்தால் ஆர்மிக்காரனோட சேர்ந்து பிள்ளையள சுட்டுத் தின்ன மனம் வராது” என்று சொல்லி கதவை அடித்துச் சாத்தினாள். மழையை மிஞ்சி கதவில் ஒலித்தது இடி. அதிகாலையிலேயே எழுந்து சென்றுவிட்டார். அவர் படுத்திருந்த இடத்தில் சீவல் பாக்கு கொட்டுண்டு இருந்தது. அம்மா பூக்களை ஆய்ந்து வந்து அப்பாவின் படத்திற்கு வைத்தாள். நான் எழும்பி குளித்துமுடித்து படிக்க அமர்ந்தேன். முட்டைக் கோப்பியை அடித்து பொங்கச் செய்த அம்மாவின் முன்னேயே ஒரே மிடறில் அருந்தினேன். “இனிமேல் சுதாகர் வீட்டுக்கு வந்தால் அவனை அண்டக்கூடாது பெடியா” சொன்னாள் அம்மா. “ஓம் அம்மா, ஆளைப்பார்க்கவே பயமாய் இருக்கிறது. தாடியும் தலைமுடியும். கண்ணெல்லாம் பாழிருட்டு. விடிவற்ற முகம்” “இவங்களுக்கு எங்க விடியும். மாறி மாறி ஆக்களை காட்டிக் குடுக்கிறதும். கடத்திக் கொண்டே சுடுகிறதும் வேலையா வைச்சிருக்கிறாங்கள். உலகம் அழியிறதுக்கு முதல் இவங்களும் – இவங்களின்ர இயக்கமும் அழியவேணும்.” “எங்கட இயக்கம் இவங்களை அழிக்காதோ” “முந்தியொருகாலம் அதெல்லாம் செய்தவங்கள். இப்ப கொஞ்சம் யோசிக்கிறாங்கள் காட்டு யானை மாதிரி ஒருநாள் வெளிக்கிட்டால் எல்லாரையும் முறிச்சு எறிவாங்கள்” என்றாள் அம்மா. பல வருடங்களுக்குப் பிறகு அதிசயமாக காந்தி மாமா வீட்டிற்கு வந்திருந்தார். அமைதிக்காலமென்றாலும் வன்னியிலிருந்து யாழ்ப்பாணத்திற்குள் வருவதற்கு இயக்கம் எல்லாப் போராளிகளுக்கும் அனுமதி வழங்கவில்லை. காந்தி மாமா வீட்டிற்கு வந்ததையடுத்து மீனும், கணவாயும் சமைத்தோம். “எப்பிடி மேலிடம் உனக்கு பெம்மிஷன் தந்தது. ஆச்சரியமாய் இருக்கு” கேட்டாள் அம்மா. “தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் தரப்படும் எண்டு சொல்றது இதைத்தான். பன்னிரெண்டு தடவை கடிதம் எழுதியிருக்கிறன். இண்டைக்குத் தான் அனுமதி கிடைச்சது” என்றார். “நல்ல விஷயம். நாளைக்கு தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவிலுக்கு போவம். அங்க உனக்காக வைச்சவொரு நேர்த்தி செய்ய வேண்டியிருக்கு” என்றாள் அம்மா. “எனக்காக என்ன நேர்த்தி வைச்சனியக்கா?” “உன்ர அலகில ஐஞ்சடிக்கு வேல் குத்தி காவடி எடுக்கிறனென்டு ஒரு சின்ன நேத்தி” சொன்ன அம்மா கொடுப்புக்குள் சிரித்தாள். மாமா அதெல்லாம் ஒன்று பெரிய பிரச்சனை இல்லையென கண்ணைக் காட்டினார். காந்தி மாமாவின் இடது தோள்பட்டையில் விழுப்புண் தழும்பு மெழுகேறிக் கிடந்தது. எப்போதாவது அதனைத் தடவிக் கொள்கிறார். போராளி தனது விழுப்புண்ணின் தழும்பை தடவிப் பார்ப்பது எதனால்? அவர்களுக்கு ஏதோவொரு தியானத்தை அது வழங்குகிறதா? நினைவுகளை அது கொதிக்கச் செய்கிறதா? லட்சியத்தின் தீ வளர்க்க அந்த வருடல் அவசியமோ என்றெல்லாம் கேள்விகள் தோன்றின. கோயில் செல்ல ஆயத்தமாகி காந்தி மாமாவும் நானும் வீட்டின் வெளியே அமர்ந்திருந்தோம். அம்மா கதவைச் சாத்திவிட்டு “சரி வெளிக்கிடுவம்” என்றாள். வீதிக்கு வந்து பேருந்துக்காக காத்திருந்தோம். கோவில் வரை செல்லும் பேருந்து வருவதற்கு தாமதம் ஆனது. ஓட்டோ பிடிச்சால் போய்ட்டு வந்திடலாமென்றார் மாமா. அதுக்கு குடுக்கிற காசில பத்து நாள் வீட்டுச் சீவியம் போக்கிடலாம் சும்மா இரு காந்தியென்றாள் அம்மா. பேருந்து முடக்கத்தை தாண்டி வருவதைக் கண்டதும் “அம்மன் எங்களைக் கைவிடாது. வாகனம் வந்திட்டு பாத்தியோ” என்று ஆனந்தித்தாள். காந்தி மாமா வேட்டி உடுத்தியிருந்தார். அகலக் கரை அவருக்கு பிடித்தமானது என்று அம்மா சுன்னாகத்தில் வாங்கிவந்தது. எடுப்பாக ஒரு தங்கச் சங்கிலி. அணிய மாட்டேனென்று எவ்வளவு சொல்லியும் அம்மா வேண்டிக் கேட்டதால் அணிந்தார். நெற்றி நிறைந்த திருநீற்று பட்டை. “மாமா, வடிவான ஆள்தான் நீங்கள், இந்தியாவுக்கு போனால் விஜய்க்கு சகோதரனாய் நடிக்கலாம்” “சிறுவா, உனக்கு இண்டைக்கு மாட்டு இறைச்சியில கொத்துரொட்டி வாங்கித்தரலாமெண்டு நினைச்சனான். அதை கட் பண்ணிட்டன்” “மாமா, இப்ப நான் சொன்னதில என்ன பிழை.” “நீ சொன்னது எல்லாமும் பிழை தான் சிறுவா” என்று எனது காதைத் திருகினார். நான் செல்லமாக பாவனையழுகையை எழுப்பினேன். அம்மா எங்களிருவரையும் பார்த்து புன்னகைத்தாள். கோவிலை வந்தடைந்து மாமாவின் பெயரில் அர்ச்சனை செய்தோம். அடுத்த மாதத்தில் ஒருநாளில் அபிஷேகத்திற்கு அம்மா திகதி கேட்டு வந்தாள். வன்னியில நீங்கள் எந்த இடமென்று ஐயர் மாமாவிடம் கேட்டார். உடனடியாக ஜெயபுரம் என்றார் மாமா. என்ன வேலை செய்கிறீர்கள் அடுத்த கேள்வி வந்ததும் தேங்காய் யாபாரம் என்று சொன்ன மாமாவைப் பார்த்தேன். எத்தனையோ ஆண்டுகாலம் தேங்காய் யாபாரம் செய்யும் சிவத்தான் மாமாவை விடவும் உடல் மொழியைக் கொண்டு வந்திருந்தார். “மாமா, உங்கள நான் விஜய்க்கு அண்ணாவாக நடிக்கலாமெண்டு சொன்னது பிழைதான். நீங்கள் சிவாஜிக்கு அண்ணா” “என்ன தேங்காய் யாபாரியை வைச்சு சொல்லுறியோ” “ம். அப்பிடியே சிவத்தான் மாமா மாதிரியெல்லெ நிண்டனியள்” “பின்ன, இப்ப என்ர படையணி, இயக்கப்பெயர், தகட்டிலக்கம், ராங்க் எல்லாத்தையும் சொல்லவே முடியும்” “அதுவும் சரிதான். ஆனால் ஐயர் உங்களை இயக்கமெண்டு கண்டுபிடிச்சிட்டார்” “அதனால அற்புதமும் இல்லை. ஊழும் இல்லை. நான் அவரிட்ட அதை மறைக்கேல்ல. ஆனால் சொல்லவுமில்லை. அவ்வளவு தான்” நாங்கள் வீட்டினை அடைந்தோம். நாளைக்கு நல்லூர் கோவிலுக்கு போகலாமென நானும் மாமாவும் முடிவு செய்திருந்தோம். அம்மா கதவைத் திறந்து உள்ளே போனாள். கொஞ்சம் இருண்டிருந்தது. மின்விளக்குகள் ஒளிர்ந்தன. புட்டும் பழைய மீன்குழம்பும் ருசி குழைத்துண்டோம். மாமாவின் கைக்குழையல். உருசையூறும் கணம். அம்மா சின்ன வெங்காயத்தை உரித்து வைத்தாள். வீட்டின் கதவு தட்டும் சத்தம் கேட்டது. அம்மா உடைந்த ஜன்னல் வழியாக கண்களை ஒத்திப் பார்த்தாள். சுதாகரும் அவனது கூட்டாளி தாடி ஜெகனும். சாப்பிட்டுக் கொண்டிருந்த எங்களிடம் தகவல் சொன்னாள். மாமாவை மறைந்திருக்குமாறு சொன்னேன். அவர் அடுப்படிக்குள்ளிருந்த புகைக்கூட்டிற்குள் பதுங்கினார். அங்கே அதற்கான நிரந்தர ஏற்பாடுகளை ஏற்கனவே செய்து வைத்திருந்தோம். கதவைத் திறந்ததும் சுதாகர் உள்ளே வந்தார். அப்பாவின் புகைப்படம் முன்னே காய்ந்திருந்த பூக்களை விரல்களால் ஒவ்வொன்றாக தவர்த்திப் பார்த்துவிட்டு “அண்ணி, அண்டைக்கு நீங்கள் அப்பிடி கதைச்சிருக்க கூடாது. ஒரே கவலையாய் போயிற்றுது” என்றார். “பின்ன, நீங்கள் செய்யிற அநியாயத்த பார்த்துக் கொண்டு நாங்கள் ஐஸ்பழமே குடிக்கிறது. உங்களுக்கு கொலையெண்டால் கொப்புலுக்கி நாவல் பழம் தின்னுற மாதிரியெல்லே” “இஞ்ச எல்லாருக்கும் அப்பிடித்தான். முதலில ஆர் கொப்பு உலுக்கிறது எண்டு தான் போட்டி. மிச்சப்படி எல்லாரும் அப்படித்தான் நாவல் பழம் சாப்பிடினம்” “சுதாகர், உன்னை முந்தியொருக்கால் அவங்கள் சுட வெளிக்கிடேக்க மடிப்பிச்சை கேட்டு தப்ப வைச்சனான். இப்ப அப்பிடியெல்லாம் கருணை காட்ட மாட்டங்கள். நீ உதெல்லாத்தையும் விட்டிட்டு எங்கையாவது வெளிநாட்டுக்கு வெளிக்கிடு.” “அண்ணி, நீங்கள் வெருட்டுறத பார்த்தால் எனக்குச் சிரிப்புத்தான் வருகுது. நாங்களும் போராளிகள் தான். இந்த நாட்டோட விடுதலைக்காக போராடத்தான் ஆயுதமேந்தினாங்கள். சுட்டால் சுடட்டும். அதுக்காக இவையளுக்கு பயந்து ஒடேலுமோ” “நீங்களும் போராளியள் எண்டு சொல்ல வெக்கமாய் இல்லையோடா, இல்ல கேக்கிறன். அரசாங்கம் தருகிற மாஜரின சனங்களின்ர பிணங்களில பூசி தின்னுறதெல்லாம் விடுதலைப் போராட்டம் இல்ல. விளங்குதா” “நாங்கள் எந்த இயக்கத்துக்கும் பயப்பிடேல்ல. உண்மையா போராட விரும்பினாங்கள். ஆனால் இண்டைக்கு நானும் தாடி ஜெகனும் எங்கட அமைப்பில இருந்து விலகலாமெண்டு முடிவெடுத்திட்டம். ஆனால் எங்கள ரைகேர்ஸ் மன்னிக்க மாட்டாங்கள். அவங்களிட்ட நாங்கள் சரணடையவும் மாட்டம். எங்கட வாழ்க்கையும் நாங்களுமெண்டு இருப்பம்” என்றார். “இயக்கம் மன்னிக்காது எண்டு என்னால உறுதியாய் சொல்ல முடியாது. ஆனால் நீங்கள் உடன விலகிடுங்கோ. அதை எப்பிடியாச்சும் இஞ்ச உள்ள அரசியல்துறை செயலகங்களுக்கு தெரியப்படுத்துங்கோ” என்றாள் “இல்ல, அதுக்கான நேரமில்லை. நாங்கள் விலகப் போற தகவல் எங்கட அமைப்புக்குள்ள தெரிஞ்சு போச்சு. எங்கட லீடர் தோழருக்கு தெரிஞ்சால் அவ்வளவுதான்” என்றார் சுதாகர். “தெரிஞ்சால் என்ன செய்வாங்கள். நீ அந்த பேப்பர்காரனை சுட்டுக்கொண்டது, எம்.பியை சுட்டுக்கொண்டது, மானவர் பேரவை பெடியனைச் சுட்டுக்கொண்டது மாதிரி உன்னையும் சுடுவாங்கள் அதுதானே. “விதை விதைத்தவன் வினை அறுப்பான்” எண்ட பழமொழி எல்லாத்துக்கும் பொருந்தும். சுதாகர் நான் சொல்றத கேள். இப்பவே ஏதேனும் ஒரு அரசியல்துறை பேஸ்ல போய் சரணடையுங்கோ. அதுதான் உங்களுக்குப் பாதுகாப்பு” வீட்டின் முகப்பு வாசலில் வெள்ளை வேன் வந்து நின்றது. சுதாகர் அதைப் பார்த்து “அண்ணி, எங்கடை ஆக்கள் தேடி வந்திட்டாங்கள். என்னை காப்பாத்துங்கோ” என்று பயந்தடித்து அழுதார். தாடி ஜெகனுக்கு கால்கள் நடுங்கி கண்ணீரோடு மூத்திரமும் கழன்றது. அம்மா கதவை இறுகச் சாத்திவிட்டு தாழ்ப்பாள் போட்டுக் கொண்டாள். கண்ணாடியில் கண்களைப் பதித்து வெளியே எத்தனை பேரெனப் பார்த்தாள். இருவர் மட்டுமே வந்திருந்தனர். ஒருவனுடைய வலது தோள்பட்டையில் ஏகே -47 ரக துவக்கு தொங்கிக் கொண்டிருந்தது. கதவைத் தட்டத் தொடங்கினார்கள். அம்மா கொஞ்சம் வேடிக்கை பார்த்தாள். வெளியே நின்றவன் பெரிதாக “ ரைகேர்சுக்கு வாலாட்டுற வே* கதவைத் திறவடி. உன்ர சாமானில வெடி வைக்கிறன்” என்று கூச்சல் போட்டான். “காந்தி இஞ்ச ஒருக்கால் வா” அம்மா மெதுவாக குரல் கொடுத்தாள். புகைக்கூண்டுக்குள் பதுங்கியிருந்த புலி கதவருகே வந்தது. “படத்தட்டுக்குப் பின்னால ஒரு உப்பு பையிருக்கு அதுக்கு கீழே உள்ள பெட்டியை எடுத்துக் கொண்டு வா” என்றாள். மாமாவிடம் கொண்டு வந்து கொடுத்தேன். பளபளக்கும் உலோகம். மாமா பிஸ்டலை ஏந்தி நின்றதும் இன்னும் வடிவு கூடியிருந்தார். சுதாகரும் தாடி ஜெகனும் விழிபிதுங்கி கீழே அமர்ந்திருந்தார்கள். ஒரு நாடகத்தின் தொடக்கம் போல திரைவிலக வசனம் தொடங்கிற்று. “ஆர் வந்திருக்கிறது” என்று கேட்டபடியே பதிலுக்கு நேரமளிக்காமல் கதவைத் திறந்தாள். மாமாவின் கையிலிருந்த உலோகத்திலிருந்து சத்தமற்று வெளிச்சம் மட்டுமே பாய்ந்தது. வாசலிலேயே ரத்தம் கொப்பளிக்க கிடந்த இரண்டு பிணங்களையும் அள்ளி ஏற்றிக் கொண்டு அதே வெள்ளை வேன் புறப்பட்டது. சுதாகரும் தாடி ஜெகனும் அதற்குள்ளேயே அமர்ந்திருந்தனர். காந்தி மாமா வாகனத்தை இயக்கினார். அம்மா ஓடிச்சென்று “காந்தி இவர்களை நீ எதுவும் செய்யக்கூடாது. அரசியல் துறையினரிடம் ஒப்படைத்து விடு” என்றாள். சரியென்று தலையசைத்தபடி மாமா புறப்பட்டார். அடுத்தநாள் காலையில் நான்கு பிணங்களைச் சுமந்த வெள்ளை வேன் ஒன்று வீதியின் நடுவே நின்றது. சடலங்கள் அடையாளம் காணப்பட்டன. சுற்றி நின்று பார்த்த சனங்கள் சுதாகரைப் பார்த்ததும் “ஓ…இவையளே பெடியள் கொஞ்சம் பிந்தினாலும், சரியாய் செய்து போடுவாங்கள்” என்றனர். வீட்டிற்கு வந்திருந்த மாமாவிடம் நீ அவர்களைச் சுட்டிருக்க கூடாது என்று கோபமாக கத்தினாள். இருவரும் தம்மைத் தாமே சுட்டுக்கொன்றார்கள் என்றார் மாமா. இரவு சாப்பிடும் போது கேட்டேன். “மாமா, அவர்களை நீங்கள் சுடேல்லையோ?” “சிறுவா, மாமாவோட பேர் என்ன” “காந்தி” “மாமா, பொய் சொல்லுவேனா” “இல்லை. ஆனால் சுடுவியள் தானே” மாமா உறுதியாக ஓமென்று தலையசைத்தார். “காந்தி நீயே சுட்டனி” கேட்ட அம்மாவைப் பார்த்து, உறுதியாக இல்லையென்று தலையசைத்தார். சூரியனாய் தகிக்கும் ஒருபெரும் கனவின் நெடும்பயணத்தில் அஞ்சாமல் துஞ்சாமல் நிமிர்வின் குரலாக எதிரொலிக்கும் ஒவ்வொரு கணத்திலும் வரலாற்றின் கடைவாயில் துரோகக் குருதி வழிந்தது. கொப்பளித்தடங்கிய எரிமலையின் நாளங்களில் தீயின் உறைதல் திவலையாய்த் தேங்கின. பலிபீடத்தின் விளிம்பில் பதுங்கியமர்ந்த புலியின் கண்களில் “எவ்வளவு வலிமையானது தியாகம்” என்ற திருப்தி. கண்களைத் திறந்தபடி பாயில் படுத்திருந்த மாமாவுக்கு திருநீற்றை பூசிய அம்மா, “வேதத்திலுள்ளது நீறு, வெந்துயர் தீர்ப்பது நீறு, போதந் தருவது நீறு, புன்மை தவிர்ப்பது நீறு” என்ற பதிகவரிகளை பாடிக்கொண்டே அருகில் அமர்ந்தாள். உறக்கத்தின் கிளைகள் மாமாவை அடர்ந்து மூடின. இதுவரை வஞ்சித்த இரவின் ஜன்னல் வழியாக காற்றுப் புகுந்தது. கருணையின் வளைவற்ற பாதையைப் போல நீட்டி நிமிர்ந்து ஆழ்ந்துறங்கிய மாமாவின் கைவிரல்களை முத்தமிட்டேன். எண்ணிறைந்த ஒளித்துளியுள் நினைவின் குளிராக எப்போதும் உள்ளது அன்றிரவு. https://akaramuthalvan.com/?p=14451 point- போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
போதமும் காணாத போதம் – 10 ” பூமியை பாவங்களால் நிறைத்தவர்களுக்கு தண்டனையுண்டு. எங்கும் தப்பியோட முடியாதபடி நீதியின் பொறியில் அகப்படுவார்கள். கடந்த காலங்களுக்கான தீர்ப்பு வழங்கப்படும்” அதிவணக்கத்திற்குரிய பிதா இராயப்பு ஜோசப் அவர்கள் குழுமியிருந்த சனங்களுக்கு மத்தியில் உரையாற்றினார். அரச வன்கவர் படையினரால் கடுமையான நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொண்ட பிதா இராயப்பு ஜோசப் பின்வாங்கவில்லை. பயந்தொடுங்கி வெளிறவில்லை. நிகழ்ந்த மானுடப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டுமென குரல் கொடுத்தார். நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு என்று சொல்லி உரையை நிறைவு செய்தார். அக்கா எதையும் கவனிக்காமல் இரண்டு கைகளையும் தூக்கி முட்டுக்காலில் நின்றாள். சாட்சியமற்ற வெளியில் உதிர மறுக்கும் உதிரச் சிறகுகள் குரூரமாய் வளர்ந்திருந்த நினைவது. மூர்க்கமாய் கொந்தளித்து பற்களை நெருமினாள். அக்காவைப் பிடித்துக் கொண்டேன். அவள் கேட்டாள் “எங்கட பாதர் சொல்ற தீர்ப்பு வழங்கப்படும் நாள் எப்ப வரும் தம்பி?” அவலத்தின் புன்சிரிப்புக்கு பதில்களற்று இரையானேன். சில நாட்களில் அக்காவின் உடல் வலுவிழந்திருந்தது. யாழ்ப்பாண பெரியாஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றேன். உளநல மருத்துவ நிபுணரிடம் காண்பித்தேன். ஏற்கனவே அக்காவுக்கு வழங்கப்பட்ட மருந்துகளோடு சிலவற்றை அதிகரித்தார். வாய்ப்பிருந்தால் களவாவோடை அம்மன் கோவிலுக்கு கூட்டிச் செல்லுங்கள் என்றார். துக்க நிவாரணமற்ற வாழ்வு, சிதலங்களின் நீள் சுருள் குறுக்கு மறுக்காக ஓடிக்கிழித்த பாதையில் தனித்துவிடப்பட்டது. நரகத்தில் வெறித்து வருந்தும் பாவிகளாய் எஞ்சிய ஒவ்வொருவருமே சித்தமழிகிறோம் என்றாள் அக்கா. அவளை இறுக அணைத்து தலைதடவினேன். நாங்கள் ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறி பேருந்துக்காக நின்றோம். பீதி நிரம்பிய கண்களோடு சனங்கள் வாழப்பழகினர். எது நேர்ந்தாலும் தாங்கிக் கொள்ளுமளவு மரத்துப் போனார்கள். இராணுவத்தினர் வீதிகளின் இருமருங்கிலும் நின்று யாழ் நகரத்தை கண்காணித்தனர். “இயக்கத்தை அழிச்சிட்டினம் தானே, இப்ப ஆருக்கு பயப்பிடினம்” மாங்காய் விற்கும் சிறுவன் கேட்டான். “எடேய், தம்பியா மொக்குத்தனமாய் கதைச்சு செத்துப்போய்டாத. உன்னட்ட மாங்காய் வாங்கினது பிழையா போயிற்று” நடுநடுங்கி அங்கிருந்து விலகியோடினார் படித்த யாழ்ப்பாணன். மீளக்குடியமர்ந்து சில நாட்களிலேயே அக்காவைப் பீடித்த உளத்துயரினால் வன்னியில் வாழ முடியவில்லை. அவளை அமைதிப்படுத்தவோ சுகப்படுத்தவோ தெய்வங்களிடம் வல்லமை இல்லாதிருந்தது. சொந்தக் கிராமத்தை விட்டு வெளியேறி யாழ்ப்பாணத்தில் வாடகைக்கு குடியிருந்தோம். செப்பனிடப்பட்டு இரண்டு அறைகள் கொண்ட கல்வீட்டில் உறங்கி விழித்தோம். ஏழாலையிலுள்ள பரியாரியார் ஒருவரிடம் அக்காவை அழைத்துச் சென்றோம். அவர் லேகியங்களையும், சூரணங்களையும் வழங்கி சுகமாகும் என்றார். ஆனால் அதற்கான எந்தச் சமிக்ஞைகளும் தோன்றவில்லை. நாளுக்கு நாள் அவளது பிரச்சனை அதிகமாயிற்று. அக்காவுக்கு விசர் என்று யாழ்ப்பாணத்திலும் சொல்லத் தொடங்கினர். வீட்டின் முன்னே நிற்கும் வாதாம் மரத்திலேறி ஊர் விழிக்க கத்தினாள். கோவிலில் தீபாராதனை நடந்து கொண்டிருந்த போது, தன்னுடைய பாவாடையைக் கழற்றி கருவறைக்குள் வீசிவிட்டாள். கட்டுப்படுத்த இயலாமல் அவளுக்கிருந்த ஒரே காலில் உருகுதடமிட்டு கயிற்றால் இறுக்கினோம். வீட்டிற்கு வந்தவர்கள் அக்காவுக்காக பரிதாபம் கொண்டனர். எங்களைப் போன்ற கல்மனம் கொண்டவர்கள் யாருமில்லையென சொல்லினர். தெய்வத்தை விடவுமா? என்றேன். “தம்பி, டாங்க் வருகிற சத்தம் கேக்குது, பங்கருக்குள்ள வா” அக்கா சொன்னாள். அவளுடைய கணுக்காலில் கயிற்றுத் தடம் நிரந்தரமாய் பதியத் தொடங்கியது. “சண்டை முடிஞ்சுது, இனி டாங்க்ம் வராது, கிபிரும் வராது. அமைதியாய் இரு” என்றேன். “போடா விசரா. சண்டை முடிஞ்சுதோ. நீயென்ன தளபதியே. சண்டை நடக்குது. எனக்குச் சத்தம் கேக்குது.” “எடியே வே*! கொஞ்சம் சும்மா இரடி. உதால போற ஆர்மிக்காரங்கள் கேட்டால் எங்கட கெதியென்ன” வீட்டிற்கு வந்திருந்த அத்தை நடுங்கிச் சொன்னாள். அக்கா பல ஆண்டுகளாய் உறங்காதவள். எத்தனையோ மருந்துகள் கொடுத்தும் பயனில்லை. அவள் யாருடனோ கதைத்துக் கொண்டே இருக்கிறாள். தன்னுடைய பெயரை ஒவ்வொரு நாளும் ஒன்றாகச் சொல்லுகிறாள். திடீரென அழத்தொடங்கி நிலத்தில் விழுந்து துடிக்கிறாள். அவளுக்குள் நிகழ்வது என்ன? ஒரு யுகத்தின் வீழ்ச்சியைப் பொடித்து அவளுக்குள் புதைத்தவர்கள் யார்? எப்போதாவது ஜன்னல் வழியாக நட்சத்திரங்களைப் பார்த்து உறைந்திருப்பாள். ஒருநாள் என்னையழைத்துக் கேட்டாள். “இண்டைக்கு வந்திருக்கிற நட்சத்திரங்கள் எல்லாமும் ஆர் தெரியுமா?” வானத்தைப் பார்த்தபடி கேட்டேன், ஆர்? “ஆரோ! எல்லாம் எங்கட குழந்தையள் தான். நாங்கள் இதுவரைக்கும் மண்ணுக்குள்ள புதைச்ச குழந்தையள். ஷெல்லடியிலையும், கிபிர் அடியிலையும் காயப்பட்ட அதுகளின்ர கடைசி நொடித் துடிப்ப மேல உத்துப் பார் என்றாள். நம்பவியலாதபடி எல்லா நட்சத்திரங்களும் துடியாய்த் துடித்தன. தானியங்கள் சொரிவதைப் போல அவை மண்ணில் விழுந்தன. வானில் யாவும் அழிந்திருந்தன. திடுமென மழை கொட்டத் தொடங்கிற்று. அக்கா வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை படுக்கைக்கு அழைத்துச் சென்று நித்திரை கொள் என்றேன். “எனக்கு நித்திரை வரவில்லை. நீ போய் படு” சலிப்புடன் தலையாட்டிவிட்டு விலகினேன். அக்கா கட்டிலிலேயே அமர்ந்திருந்தாள். இல்லாது போன காலின் எஞ்சிய துண்டத்தை பார்த்துக் கொண்டேயிருந்தாள். எக்காளச் சிரிப்போடு எழுந்து நின்றாள். மூதாதையர்களின் காலடியென மழை சீற்றம் கொண்டாடியது. தலையைத் தாழ்த்தி உச்சாடனமாய் அக்கா எதையோ சொல்லத் தொடங்கினாள். படுக்கையை விட்டு எழுந்து வந்து அவளைப் பார்த்தேன். முகம் முழுதும் ஆக்ரோஷத்தின் தீ பழுத்து அவளுடல் காயங்களால் துடிதுடித்தது. பக்கத்தில் செல்லப் பயந்தேன். யாரோடோ அவ்வளவு வேகமாக கதைக்கத் தொடங்கினாள் அக்கா. தெய்வத்தின் லட்சணத்தோடு அகோரம் பூண்டிருந்தாள். குருதியின் வரலாற்றுப் படலம் மிதக்கும் துயரத்திவலையாக அசையாதிருந்தாள். “அக்கா” என்றழைத்தேன். அவளால் முடிந்ததெல்லாம் இதுதான் என்பதைப் போல தன்னுடைய கையிலிருந்த சிறிய தீப்பெட்டியைத் தந்து அதனைத் திறந்து பார் என்றாள். யாரோ கடித்து மிச்சம் வைத்த பிஸ்கட் கடல் மணலும் குருதியும் ஒட்டி உலர்ந்திருந்தது. மீண்டும் மீண்டும் எதுவும் புரியாமல் பார்த்தேன். “இதென்னக்காக, ஆரோ சாப்பிட்ட மிச்ச பிஸ்கட்ட எடுத்து வைச்சிருக்கிறாய். அதில ரத்தம் வேற காய்ஞ்சிருக்கு” என்றேன். “இந்த பிஸ்கட்டும் அதில ஒட்டியிருக்கிற கடல் மணலும் ரத்தமும் தான் எங்கட மிச்சம்” “ஆர் சாப்பிட்ட மிச்சமிது” “எங்கட சந்ததியோட மிச்சம். அந்த மிச்சம் சாப்பிட்ட மிச்சம்” என்று சொல்லிக்கொண்டிருந்த அக்காவின் மீது இறங்கியதொரு நிழல் கண்டேன். கண்களை மூடித் திறந்தேன். அக்கா படுக்கையில் அமர்ந்திருந்து “என்னடா” என்று கேட்டாள். என்னால் எதுவும் சொல்ல இயலவில்லை. மழை பாதாளம் வரை இறங்குகிறேன் என்பதைப் போல அடித்துப் பெய்தது. அன்றைக்கு மதியம் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. வீட்டுக்கு பக்கமிருப்பதால் நானும் அம்மாவும் சென்றோம். அக்கா வீட்டிலிருந்தாள். அவளது கையில் கோவில் நூலைக் கட்டிவிட்டேன். அம்மா காலில் கயிற்றைக் கட்டி இரும்போடு இணைத்தாள். அன்னதானம் முடித்து திரும்பிவருகிற போது அக்கா யாரோடோ கதைப்பது கேட்டது. வாசலை எட்டிப் பார்த்தால் எவரின் செருப்பும் இல்லை. நாங்கள் உள்ளே சென்றோம். அக்கா, தனக்கருகே இருந்த கதிரையை நகர்த்தி வைத்து விட்டு, “இதில இருந்து கதையுங்கோ” என்றாள். அம்மா “ஆரடி மோளே வந்திருக்கிறது” என்று கேட்டாள். “உங்களுக்குத் தெரியாதம்மா. இயக்கத்தில பெரிய ஆள். பெயர் சொல்ல வேண்டாமாம்” அக்கா சொன்னாள். “எனக்கு பெயர் மறைக்கிற இயக்க ஆளை இண்டைக்குத் தான் கேள்விப்படுகிறன். சரி சாப்பிடுகிறாரோ. சமைக்கவா.கேள்” “வேண்டாம் அவர் வெளியால போய் மச்சம் சாப்பிடுகிறாராம். இண்டைக்கு நாங்கள் விரதமெண்டு யோசிக்கிறார்” “எடியே விசரி. வந்திருக்கிறவன் இயக்கமோ, அல்லது கோவில் தர்மகர்த்தாவோ. தெய்வத்துக்கு தானே விரதமிருக்கிறம். அது என்ன கேக்குதோ குடுக்கிறதுதான் விரதம். என்ன வேணுமெண்டு கேள்” “மீன் பொரியலாம்” “சரி அரைமணித்தியாலம் கதைச்சுக் கொண்டிரு. சமையல் முடிஞ்சிடும்” என்றாள் அம்மா. நான் அடுப்படிக்குள் நுழைந்து “என்னம்மா நீயும் அவளோட சேர்ந்து விசராட்டம் போடுகிறாய்” என்று கத்தினேன். அம்மா கண்ணீரை துடைத்து வீசினாள். “ஓலமிட்டு குரல் கரைக்குமளவு சாம்பலின் பாரம் நெஞ்சில இருக்கு, ஆனால் அழக் கூடாது. கழிவிரக்கம் காட்டி துயரத்திட்ட மண்டியிடக் கூடாது. இந்தக் குறுகிய வாழ்வில சித்தம் பிறழ்ந்து வாழ்றதெல்லாம் கொடுப்பினை மோனே. கொக்காவுக்கு எதுவும் தெரியேல்ல. அவளுக்குள்ள கொந்தளிப்புமிருக்கு அமைதியுமிருக்கு. ஆனால் நல்லாய் இருக்கிற எங்களிட்ட அமைதி எங்கயிருக்கு சொல்லு. அவள் ஆரோடையாவது கதைக்கிறாளே அது காணும். எனக்கு அது நிம்மதியாய் இருக்கு” என்றாள். அம்மா கீரி மீன் பொரியலோடு சோற்றைப் பரிமாறினாள். ஏற்கனவே கால் கட்டை கழற்றியிருந்தேன். அக்கா கூந்தலை அவிழ்த்து ஒற்றைக்காலில் நின்று கொண்டு சாப்பிடத் தொடங்கினாள். கண்கள் நிறம் மாறி ஒளிர்ந்தன. வயிறு திறந்து அலறுவதைப் போல அக்கா காற்றை விட்டாள். சோற்றுக் கவளங்களை எரியும் தீயில் வீசுவதைப் போல தனக்குள் தள்ளினாள். பசியின் காலடியில் அவளுடல் நடுங்குகிறது. அவளது பசியா? யாரின் பசிக்கு அக்கா உணவு உண்கிறாள்? அம்மாவை அந்தத் காட்சி தாளமுடியாது உருக்குலைத்தது. தட்டில் மீண்டும் சோறு பரிமாறினோம். புதிய கனவு மாதிரி அக்காவுக்குள் விழித்தெழுந்தது யார்? ஒற்றைக்காலுடன் நின்றுகொண்டே உணவுண்ட அவளின் ஆங்காரம் மெல்ல மெல்ல அடங்கியது. சோற்றுத் தட்டை வீசி எறிந்தாள். யாராலும் அறியமுடியாத மொழியின் தெய்வச் சடங்கா நிகழ்ந்து முடிந்தது. அக்கா அப்படியே சிறுநீர் கழிந்தாள். வீடெங்கும் வெக்கையும் கடல் வாசனையும் எழுந்தது. அம்மா எதுவும் சொல்லவில்லை. நடப்பவற்றை பார்த்தபடி இருந்தாள். சில நாட்களுக்குப் பிறகு ஒரு மழைப் பொழுதில் அக்கா நன்றாக உறங்கினாள். கடைக்குச் சென்று திரும்பிய அம்மாவுக்கு அதுவொரு திருக்காட்சியாக அமைந்தது. சிறிய போர்வையால் அவளது கால்களை மூடினேன். “பரியாரியிடம் போய் அவள் நித்திரை கொண்டதைச் சொல்லு” என்றாள் அம்மா. போகலாமென தலையசைத்தேன். அக்கா விழிக்கும் வரை அருகிலேயே இருந்தேன். ஒருக்களித்துப் படுத்தவள் மல்லாந்து கொண்டாள். அவளுடைய பாயின் விளிம்பில் பிள்ளையார் எறும்புகள் ஓடின. அக்காவின் முகத்தில் இறுமாப்பு சேர்ந்திருந்தது. எல்லாமும் புதைந்த கடைசித் திகதியில் முள்ளிவாய்க்காலை விட்டு வெளியேற முடிவு செய்தோம். அக்கா வர மறுத்தாள். உந்தக் கெடுவார் ஆர்மிக்காரங்களிட்ட வந்து வாழ ஏலாது. என்னை ஆரேனும் சுட்டுக் கொல்லுங்கோ” என்று சத்தமாய் கத்தினாள். அன்றைக்குத் தான் இந்த இறுமாப்பை கடைசியாகக் கண்டது. அக்கா விசுக்கென விழித்தெழுந்து தலையிலடித்தபடி கேட்டாள். “நாங்கள் எப்பிடி தப்பினாங்கள்” “நாங்களும் தப்பேல்ல மோளே” என்றாள் அம்மா. திசை பிறழாது கடல் நோக்கி ஓடினாள். தன்னுடைய நிர்வாணத்தை வெறிகொண்டு படைத்து, “கடலே! மீதியற்று அழிந்து போ, லட்சோப லட்ச சனங்களின் பிணம் விழுங்கிய உன் அலைகளில் கொடுஞ்சாபம் படிந்திருக்கிறது. அழிந்து போ. பூமியிலிருந்து பாவம் மறைந்து போகட்டும். தீயோர் என்றென்றும் அழிந்து போவார்களாக!” என்றாள். அலை ஒடுங்கி இருண்டது கடல். ஊர்ந்து வந்து அக்காவின் தாள் பணிந்து “என் மகளே! மன்னிக்க” என்றது. வானத்தில் சுடர்ந்த நட்சத்திரங்கள் துடிதுடித்தபடி நடப்பவற்றை பார்த்தன. அக்கா மேல்நோக்கிப் பார்த்து “பிள்ளைகளே! உங்களின் பொருட்டு எவரையும் மன்னிக்கேன், நீங்கள் அமைதி கொள்ளுங்கள். உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள்”என்றாள். மோதித்தெறிக்கும் முழக்கத்தோடு மழை பொழிய கடல் மீது ஒலித்த அவளின் குரல் நூற்றாண்டின் முறையீடு. எம்மை வஞ்சித்த பூமி அஞ்சட்டும் என்றனர் சனங்கள். https://akaramuthalvan.com/?p=13881 point- போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
போதமும் காணாத போதம் – 09 அண்ணாவின் வித்துடலை குருதியூறும் நிலத்தினுள் விதைத்து மூன்றாம் நாள் அதிகாலையில் பெருங்குரலெடுத்து அழுதாள் அம்மா. திகைப்படைந்து எழுந்தவர்கள், மங்கலான உறக்கக் கலக்கத்தோடு பார்த்தார்கள். நீராடி விரிந்திருந்த ஈரக் கூந்தலோடு அண்ணாவின் புகைப்படத்துக்கு முன் அமர்ந்திருந்தாள். சிறிய குத்து விளக்கில் அணையாச் சுடர் ஈகித்திருந்தது. நேற்றிரவு படைக்கப்பட்ட சாப்பாட்டில் ஈரம் விலகியிருந்தது. அம்மா தண்ணீர் செம்பைத் தூக்கி கவிழ்த்துக் காட்டினாள். ஒரு சொட்டு நீரில்லை. மீண்டும் அழத்தொடங்கினாள். வாதையின் செதில்கள் அகலமறுத்துப் பெருகிய பொழுதாயிற்று. “என் நிழலில் மரணத்தின் நித்தியம் முழுமரமாய் வளர்ந்து நிற்கிறது. ஆனாலும் உதிரும் ஓரிலையின் நடுக்கம் கூட என் இதயத்தில் இல்லை. மீளவும் சொல்கிறேன். பீரங்கிகளினதும் போர்விமானங்களினதும் தாக்குதல்களால் பீதியாகமாட்டேன். விடுதலைக்காக போரிட்டு மடியுமிந்த வாழ்வு மகத்தானது. தெளிந்த வானத்தை விடவும் ஆகிருதியில் வலுத்தது என் பெருங்கனவு. இதோ இக்கணத்தில் தியாகத்தின் பலிபீடத்தில் கிடத்தப்பட்டுள்ளேன். என் விழுப்புண் மீது அழுந்தப் பதிந்திருக்கும் ரத்த வரிகளை மேற்கு வானில் தாழும் சூரியன் பார்க்கிறது. நெருப்பேந்தி நாளையது கிழக்கில் தோன்றுகையில் என் முகத்தைச் சூடி வரும். ஆகுதியின் இனிமையை அருளும் நிலத்தை எதனாலும் விழுங்கிவிட முடியாது.” வீரச்சாவு எய்துவதற்கு முன்பாக அண்ணா திரும்பத் திரும்ப சொன்ன வார்த்தைகள் இவையென களமுனையிலிருந்து வந்த படையணிக்காரர்கள் சொன்னார்கள். அண்ணா நன்றாக உரையாற்றுவான். கவிதைகள் எழுதவும் செய்வான். விடுப்பில் வந்திருந்த நாட்களில் எழுதிய சில கவிதைகளை அம்மாவிடம் கையளித்திருந்தான். ஒருநாள் நானும் அவனும் குளத்தில் குளித்துவிட்டு வீடு திரும்பிய போது கொந்தளிப்பாக சிலவற்றைக் கதைத்தோம். “போரால் எதையும் பெறமுடியாது போனால், இத்தனை இழப்புகளும் வீண் அல்லவா” என்றேன். இத்தனை தியாகங்களும் வெறும் இழப்பாகவே எஞ்சுமென உன்னால் நினைத்துப் பார்க்க முடிகிறதா! போரை நம்பியதல்ல இந்தப் போராட்டம். எங்கள் வாழ்வுரிமையை போரின் வழியாக மட்டுமே வலியுறுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தை நம்பமுடியாதபடி காலம் தருவித்துவிட்டது. நீ சொல்வதைப் போல இழப்புக்கள் வீண் போனாலும் மிஞ்சியிருப்பவர்கள் நினைவு கூருவர். மாண்டவர்கள் இங்கேயே தான் இருப்பார்கள். ஏனென்றால் இந்த மண் அவர்களின் மேனி. எஞ்சியவர்களை அவர்கள்தான் சுமப்பார்கள். இறுதியில் இழப்பைத் தான் பெறுவோமென்றால் ஞாலத்தின் அறம் புழுத்துப்போகும். குமட்டல் வாடை மனுஷகுலத்தின் மீது ஈயெனப் பெருகும். அற்பமான நோய்களில் உலகு நொடியும். எம் இனத்தின் புராதனக் கண்ணீரும் குருதியும் அறத்தை விடவும் மேன்மையான ஆற்றலோடு தீவிரமாகும். இழப்பின் ஞாபகங்கள் பரம்பரை பரம்பரையாக எங்கள் மாதர்களின் ஆதிக்குகையுள் அனற்குழம்பெனக் கனன்று கருவாகி வெளியுமிளும். பூர்வீகச் சந்ததி பெருகும்” என்றான். உடலீரம் காய்ந்திருந்தது. அண்ணாவின் சொற்கள் சுதந்திரத்தின் பிரசங்கமென என்னுள்ளே வலுவாக உருகி இறங்கியது. “தியாகங்கள் எல்லாமும் ஞாபகங்களாய் எஞ்சினால், பாழான போரை பூமி நினைவில் வைத்துக் கொள்ளும். அது நன்மைக்கே” என்றேன். “போரை விடவும் பூமி பாழானது. ஏனெனில் போர் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வழி மட்டுமே” என்ற அண்ணா நாயுண்ணிப் பழங்களைப் பிடுங்கி வாயில் போட்டான். இனிப்புச் சுரந்து இதமாய் உடல் மொழிந்தான். அன்றிரவு நேரமாகியும் நான் விழித்திருந்தேன். குப்பி விளக்கு வெளிச்சத்தில் ஓவியமொன்றை வரைந்து கொண்டிருந்தேன். வீட்டின் வெளியே அமர்ந்திருந்து அம்மாவும் அண்ணாவும் கதைத்துக் கொண்டிருந்தார்கள். களமுனையாகவிருக்கும் சொந்தவூரின் கோவில்களுக்கு விளக்கு வைக்குமாறு சொன்னாள். அண்ணாவுக்கு இறை பக்தி அதிகம். சிறிய வயது முதலே சைவ மடத்தில் தீட்சை பெற்று நடராஜருக்கு பூசை செய்தவன். அவனுடைய ஆச்சார நெறிகள் தீவிரமானவையாக இருந்தன. இயக்க வாழ்க்கையில் எல்லாமும் நொறுங்குண்டு தலைகீழானது. மாட்டிறைச்சியை விடவும் ருசியானது எதுவுமில்லை என்பது அண்ணாவின் உச்சாடனமாய் ஆகியிருந்தது. அண்ணாவுக்கு எட்டாம் நாள் படையல் வைக்கும் போது அம்மா மாட்டிறைச்சியையும் சேர்த்துக் கொண்டாள். சொந்தக்காரர்கள் சிலர் முகம் சுழித்து வேண்டாமென்றனர். “பிள்ளைக்கு பிடிச்சததான் வைக்கோணும், உங்களுக்கு பிடிச்சத வைக்க வேணுமெண்டால் நீங்கள் மோசம் போன பிறகு செய்து வைக்கிறன்” என்ற அம்மாவின் கூற்று பலரையும் சங்கடத்தில் ஆழ்த்தியது. செம்பு தளும்ப தண்ணீர் வைக்கப்பட்டு தலை வாழை இலையில் மாமிசக் குழம்புகள் எல்லாமும் படைக்கப்பட்டன. முச்சந்தியில் கழிப்புக் கழித்து பூசணியை இரண்டாகப் பிளந்து குங்குமம் தடவி, எல்லாவற்றையும் சுளகொன்றில் பரப்பி வைத்துவிட்டு வந்தோம். வீட்டில் அனைவரும் நிறைவாகச் சாப்பிட்டனர். அம்மா உபசரித்து கவனித்தாள். தண்ணீர் என்று சபையில் யாரும் கேட்காத வண்ணம் எல்லோருக்கும் வழங்கப்பட்டுக் கொண்டே இருந்தது. வீட்டைச் சுற்றியும் புதுக்குடங்களில் குடிதண்ணீர் நிறைத்து வைத்திருந்தாள். அம்மாவுக்கு சித்தம் குலைந்திற்றோவென நொந்த சிலர் சிறிய தலையசைப்போடு எழுந்து சென்றனர். பிள்ளையின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தாள் அம்மா. “நான் சாகத் தயாரானவன், வீரச்சாவு அடைந்தால் அழாதேங்கோ. நீங்கள் என்னைப் பிரசவித்த தருணத்தை விடவும் பூமிக்குள் விதைக்கும் போது மங்கலம் கொள்வீர்கள்” என்றுரைத்த அண்ணாவின் குரல் அம்மாவின் ஞாபகத்தில் பொங்கி நுரைத்தது.”வந்து கொண்டிருக்கிறான், தேவலோகத்திலிருந்து என் மகன் வருகிறான்” அம்மா ஆனந்தித்து உறுதியாகச் சொன்னாள். பரவசமாகி தன்னுடைய முலைகளை எடுத்து வெளி நோக்கி விரல்களால் பிசுக்கி “பிள்ளைக்கு சரியான தண்ணி விடாய்” என்றாள். இரவு முழுதும் நிலவும் பனியும் விழித்திருந்தது. அம்மா அடிக்கடி குடங்களையும், படையலில் வைக்கப்பட்டிருந்த செம்பையும் சென்று பார்த்தாள். அளவு குறையவில்லை. வீட்டின் வாசலை விட்டு ஒதுங்கியிருந்தாள். அண்ணா உள்ளே செல்ல ஏதும் தடையாக இருக்கவே கூடாது என ஒழுங்குகள் செய்திருந்தாள். ஆவியாய் அலைக்கழியும் அண்ணாவுக்காக சொந்தக்காரர்கள் சிலரும் காத்திருந்தனர். அற்புதங்களுக்காக காத்திருந்த சனங்களின் கதைகள் இரவைத் தீண்டியது. வீட்டினுள்ளே ஒரு பல்லி சொன்னது. அதன் நீளவொலி எல்லோரையும் தன்பக்கம் திருப்பியது. செய்வினைகள் அறுப்பதில் வல்லவளாக இருந்த புறாக்குட்டி அத்தை “காயப்பட்டு துடிதுடித்து பங்கருக்குள்ள தாகமெடுக்க, தண்ணியில்லாமல் தன்ர ரதத்தையே அள்ளி நக்கியிருக்கிறான். அந்தச் சீவன்ர தாகம் பூலோகத்தில தான் இருக்கு. அவன் வருவான்” என்றாள். நான் பொறுமையிழந்து “ எங்களுடைய ஊகத்திற்கும் ஆசைக்கும் எதுவும் நடக்காது. விசர்த்தனமாய் கதைக்கிறத விட்டிட்டு எல்லாரும் போய் படுங்கோ” என்றேன். “இந்தப் பூமியில இரவு வாறதே ஆவிகளுக்காகத் தான். அதுகள் நடமாடுகிற ஒரு பொழுது இது. நீ நம்பாட்டி உள்ள போய் படன்ரா” என்ற கனகு பெரியப்பா சுருட்டை புகைக்கத் தொடங்கினார். “அவன் வந்து தண்ணி குடிப்பான். அதுவரைக்கு நான் முழிச்சிருப்பன்” அடைகாத்திருக்கும் தாய்மையின் தழல் குழம்பு வெடித்தது. “எடியே விசரி. இப்பிடி செத்த இயக்கப் பிள்ளையள் வந்து தண்ணி குடிக்க வெளிக்கிட்டால் எங்கட கடல் தண்ணி வத்தியிருக்குமெல்லே. உள்ளே போய் படு” என்று முஸ்பாத்தியாகச் சொன்ன காங்கேசந்துறை மாமாவை திரும்பிக்கூடப் பார்க்காமல் அம்மா தவிர்த்தாள். “உன்னுடைய முஸ்பாத்திக்கு அந்த செவிட்டுப் பரத்தை சிரிக்கலாம். இஞ்ச ஆரும் சிரிக்க மாட்டினம். எழும்பிப் போடா பு***ண்டி” கனகுப் பெரியப்பாவின் பேச்சில் எச்சரிக்கை தொனி தெரிந்தது. காங்கேசந்துறை மாமா பேச்சிழந்து வெட்கி நின்றார். அம்மாவுக்கு விழித்திருப்பது ஆறுதலாகவிருந்தது. ஆமை போலூர்ந்த இரவு தீர்ந்து போனது. ஆனாலும் செம்பிலோ, குடங்களிலோ தண்ணீர் அப்படியே இருந்தது. அம்மா செம்பு நீரை எடுத்து பூக்கன்றின் அடியில் ஊற்றிவிட்டு புதிய நீர் நிறைத்து வைத்தாள். அவளுக்குள் பிரார்த்தனையின் அழுகுரல் பூகம்பமாய் ஒட்டிக்கிடந்தது. தன்னையிழந்த ஞாபகமாய் அம்மா வீட்டுக்குள் நடமாடினாள். கல்லறைகளும் நடுகற்களும் நிறையும் விதியின் வசியத்தை வாழ்வென எண்ணும் வருத்தம் எனக்குமிருந்தது. சாவளிக்கும் அடைக்கலம் அரணாகவிருந்தது. “அண்ணா வந்து தண்ணி குடிக்கவில்லையெண்டு, கவலைப்படாதேயம்மா. அவன் உன்ர விரும்பத்தை விளங்கிக் கொள்வான்” என்றேன். “அவனுக்கு தண்ணி விடாய், பிள்ளையைத் தெய்வம் அப்பிடி கூட்டிக் கொண்டு போயிருக்க கூடாது. சீவனுக்கு தாகமிருக்கிறது சிவனுக்கு தெரியாமல் போச்சே” “அதுக்காக அவர் ஆவியா வந்து தண்ணி குடிப்பாரே ” “அடேய், அண்டைக்கு வந்து தண்ணி குடிச்சது அவன் தான். அவன் ஆவியில்லை. என்ர பிள்ளை தேவர். முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு நிகர்த்த முதலாமவன்” மறக்கவியலாத தழும்பென பதில் உரைத்தாள் அம்மா. முகம் வெளிறி இயல்புக்கு வர முயன்றேன். தீ பெருகும் காலத்தின் முற்றுகையில் உதிர்காலத்து இலையென கணங்கள் பொசுங்கின. அலைகளின் ஓயாத முறையீடு போல அம்மா பெரும் பொழுதுக்காய் காத்திருந்தாள். பெருங்கூவலோடு மழையின் பெருவிழிகள் திறந்தன. உப்புதிர்க்கும் கடல் காற்று கூரையூடே புகுந்தது. கொடுஞ்சாபமென உறைந்திருந்த நிலப்புழுதி மணமெழுந்தது. இடியதிர மிகுந்து பரவிய மின்னல் ஒளியிழந்து உலர்ந்தது. அண்ணாவின் புகைப்படத்து குத்துவிளக்குத் திரியில் குருதியின் சுளிப்பு நிறம் கொண்டெரிந்தது. “அற்புதங்களின் வருகையை நிரூபிக்க அதிகம் சிரமப்படவேண்டியதில்லை” என்றாள் அம்மா. ஒழுகும் தாழ்வாரத்தின் கீழ் நின்று சிறுநீர் பொழியும் நாயின் கண்கள் சலனமடைந்திருந்தன. நிழல் மரவள்ளி மரத்தில் அடைந்திருந்த கோழிகள் நனைந்து நடுங்கின. அம்மா மழையில் நனைந்தபடி வீட்டுப் படலையைத் திறந்து வைத்தாள். “அவன் வருகிறான், தண்ணி விடாய்ல வருகிறான். இந்தத் தண்ணி போதாது.” என்றாள். துயர் ததும்பும் ஒரு முதுமுரம் மண்ணில் வேரூன்றி மழையில் நனைந்து கிளையசைப்பதைப் போல கையசைத்து சொல்லிக்கொண்டே இருந்தாள். “அவன் வருகிறான் அவனுக்கு சரியான தண்ணி விடாய்” அடுத்தநாள் காலையில் குடங்களில் தண்ணீர் இல்லை. செம்பு காய்ந்திருந்தது. வரலாற்றை தேடுபவளைப் போல வீட்டின் வாசல்வரை அண்ணாவின் காலடித்தடம் தேடி கண்ணீர் கசிந்தாள். கரைக்க இயலாது திணறும் சாம்பல் சேற்றில் அவள் கால்கள் புதைந்து விடுபட மறுத்தன. “அவன் வந்திருக்கிறான். ஆனால் நடந்து வரேல்ல. பறந்து வந்திருக்கிறான். பூமியில் தேவர்கள் நடக்க மாட்டார்கள் அல்லவா” என்றாள். இது நீண்டால் அம்மாவுக்கு சித்தம் பிசகிவிடுமென எண்ணிப் பயந்தேன். எங்கள் சொந்தக்கார பரியாரியிடம் விஷயத்தைச் சொல்லி மருந்து கேட்டேன். “அவளுக்கு சித்தம் நன்றாகவே இருக்கிறது. எங்களுக்குத் தான் பிசகிவிட்டது மோனே. நீ எழும்பிப் போ” என்றார். அம்மா வீட்டுக்குளேயே இருந்தாள். ஊரிலுள்ள குளங்களில் இருந்து கிணறுகள் வரை தண்ணீர் சுத்தமாக இருக்கிறதாவென கூலிக்கு ஆள் வைத்துப் பார்த்தாள். ஒவ்வொரு இரவும் அவள் அண்ணாவுக்காக காத்திருந்தாள். குடங்களையும், செம்பையும் வற்றிய நீரோடு கனவில் கண்டாள். அன்றைக்கு ஊரில் இன்னொரு வீட்டில் வீரச்சாவு. இரவு முழுவதும் அங்கிருக்கலாமெனத் தோன்றியது. ஆனாலும் அம்மாவை தனியாக விடுவது பயமாகவுமிருந்தது. நள்ளிரவு வீட்டுக்கு புறப்பட்டு வந்தேன். இரண்டு நாய்கள் தெருவின் முடக்கில் படுத்திருந்தன. ஒரு நாயின் குழைவொலி கொஞ்சம் துணையாகவிருந்தது. வீட்டின் படலையைத் திறந்து உள்ளே நுழைந்தேன். தாழ்வாரத்தின் கீழே அமர்ந்திருந்த அண்ணா சிதைந்து அறுந்து தொங்கும் காலைப்பிடித்தபடி குடத்திலிருந்து தண்ணீரைக் குடிக்கிறான். இரண்டு கால்களும் சிதைந்து ரத்தம் விலகித் தேங்கியிருந்தது. விடாய் அடங்காது நிலமெனக் கிடக்கும் குருதியை அள்ளி பருகுகிறான். அண்ணா….என்று பெருங்குரலெடுத்து அழுதபடி ஓடிப்போனேன். வீட்டினுள்ளிருந்து அம்மா சொன்னாள் “ எடேய், விசரா கொண்ணா வீட்டுக்குள்ள என்னோட இருக்கிறான். உள்ள வா” வாசலில் நின்று உள்ளே பார்த்தேன். சிதைந்து தொங்கிய கால்களோடு குருதி தேங்கிய சாணத்தரையில் அண்ணாவுக்கு பாலூட்டிக் கொண்டிருந்தாள் அம்மா. என்னைக் கண்டதும் “ இவனுக்கு சரியான தண்ணி விடாய், பா**யை விட்டு வாய எடுக்க மாட்டேன் என்கிறான்” எனச் சொல்லி மகிழ்ந்தாள். அம்மா, என்றபடி அவளருகே ஓடினேன். அவள் என்னை அணைத்துச் சொன்னாள். “சந்ததி சந்தியாய் இவனுக்கு நாங்கள் தண்ணி வைக்கவேணும். அவன் எங்கட வாசலுக்கு பறந்து வருவான்” அண்ணாவின் கால்களைத் தொட்டுப் பார்த்தேன். குருதியின் நீளக் கனியென தணல் பழுத்திருந்தது. கைகளை விசுக்கென எடுத்துக் கொண்டேன். “சரியான வெக்கை என்ன! இதுதான் எங்கட ஞாபகமடா மோனே” என்றாள் அம்மா. https://akaramuthalvan.com/?p=13591 point- போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
போதமும் காணாத போதம் – 08 அபாயம் நெருங்கியதென அச்சப்பட்டு அசையாது நின்றான் சங்கன். கலவரத்தோடு உடல் வியர்த்து மூச்செறிந்தவன் சட்டென கருவறைக்குள் பதுங்கினான். அவனை விழிப்புற வைத்த சத்தம் சில நிமிடங்களிலேயே வெட்டுண்டது. அரிய விலங்கென மடிந்திருந்த தன்னுடலைத் தளர்த்தி விரித்தான். ஆறடி உயரமான ஆகிருதி. தலையுயர்த்தி எழுந்தான். வைரவர் விக்கிரகத்தை அடியோடு தகர்த்து அதனடியிலிருந்த தகடுகளை எடுத்தான். பழமையான ஐம்பொன் சிலைகளை ஈரச்சாக்கில் போட்டான். உண்டியலைப் பிளந்து நாணயங்களை மணல் நிரப்பப்பட்ட சிறிய பைக்குள் போட்டான். தாள் காசுகளை ஈரமான உள்ளாடைக்குள் சுருட்டி வைத்தான். தன்னுடைய தடயங்கள் ஏதேனும் விடுபட்டு இருக்கிறதாவென மீளாய்வு செய்தான். எதுவுமில்லை. காலடித்தடங்களையும் அழித்து கோவிலை விட்டு வெளியேறினான். எத்தனையோ களமுனைகளில் வேவு பார்த்து வென்ற கண்கள். எதிரியின் காலடி வரை ஊர்ந்து சென்று நோட்டமிட்ட தீர உடல். எத்தனையோ பகலிரவுகள் சடமென உருமாறி பகைவர் வழியில் அமைந்திருந்த வல்லபம் சங்கனுடையது. மனுஷ வாடையறியும் கூர் நாசி. பாம்பின் லாவகமாய் நிலம் நீந்தி மறைபவன். தேரைகள் மறைந்து கொள்ளும் இடுக்குகளில் கூட இருந்தான் என்பார்கள். எதிரின் தோல்வியைத் தீர்மானிக்கும் வேவுக்காரன். இயக்கத்தின் தலைவரால் பலமுறை கெளரவிக்கப்பட்டவன். தளபதிகளின் நேசன். சங்கன் பணியாற்றிய களமுனையில் எதிரிகளின் முன்னேற்ற நடவடிக்கைகள் அதிரடியாக முறியடிக்கப்பட்டன. மண்ணை அபகரிக்கும் வன்கவர் வெறியர்களுக்கு எதிரான போராட்ட வரலாற்றில் சங்கன் ஒரு சுருட்டை பாம்பு. அவனிருந்த இடத்தை யாரும் அறியார். எதிரிகளின் காலடிக்குள் மிதிபட்டும் மனுஷ பாவனை காட்டாமல் மரக்குத்தியென கிடந்தது தப்பியவன். அத்தனையும் தடயமற்று அழிந்து போயிற்றே என்று கலங்கிய கண்களையும் துடைக்காமல் சாக்குப்பையை சுருக்கிட்டு கட்டினான். பசி எரிந்து உளம் புகையும் ஏழ்மையின் வயிற்றில் துடிதுடிக்கும் புழுவான வாழ்வு சங்கனுக்கு நேர்ந்திருந்தது. கோவிலை விட்டு வெளியேறி கோபுரத்தை வணங்கினான். கற்பூரச் சட்டியில் இரண்டு பெட்டி காவடி கற்பூரத்தை வைத்துவிட்டு மெல்ல நடக்கத்தொடங்கினான். கொஞ்சத் தூரத்திலேயே அவனைத் தன்னுள் புகுத்தியது இருள். அதிகாலையிலேயே வைரவர் கோவில் பூசாரியின் ஓலம் சனங்களை அழைத்தது. ஐம்பொன் சிலைகள், தகடுகள், உண்டியலென ஒன்றும் மிச்சமில்லாமல் துடைத்து வழிக்கப்பட்டிருந்தது. சூறையில் வேர் பிளந்து தரைவிழுந்த மரமென கருவறை விக்கிரகம் தூக்கி வீசப்பட்டிருந்தது. சனங்கள் மண்ணைவாரி தம்மிலடித்துக் கொண்டனர். “எங்கட ஊர்க்காரன் வைரவரில கை வைச்சிருக்க மாட்டான். கேணியடிக்காரர்கள் தான் வேலையைக் காட்டியிருக்கினம்” முதல் அனுமானத்தைச் சொன்னார் செல்லையா. “அண்ணா என்னவாய் இருந்தாலும் பொலிஸ்ல போ கேஸ் குடுப்பம். அதுதான் முறையாய் இருக்கும்” என்றவர் கொக்குவில் மாமா. “இவ்வளவு சண்டைக்குள்ள தப்பி, கஷ்டப்பட்டு திரும்பவும் ஊருக்கு வந்தோமெண்டு நினைச்சு கோயிலை புனரமைப்புச் செய்தால், களவெடுத்துக் கொண்டு போறாங்களே” என்றனர் ஊர்ப்பெண்கள். “இப்ப நீங்கள் என்ன செய்யப்போறியள். கேணியடி ஊருக்குள்ள புகுந்து ஒவ்வொருத்தனையும் பழி சொல்லி அடிக்கப் போறியளோ” என்று குரல் உயர்த்தினார் விநாயகம். “முதலில கேஸ் குடுக்கலாம். வெளிக்கிடுங்கோ” அழுத்தமாகச் சொன்னார் கொக்குவில் மாமா. “எல்லாத் துன்பத்துக்கும் இவங்கள் தான் காரணம். இவங்களிட்ட போய் நிண்டு எங்கட தெய்வத்தோட சிலை களவு போட்டுதெண்டு முறைப்பாடு கொடுக்க எனக்கு விருப்பமில்லை” என்றார் செல்லையா. “நீங்கள் சொல்றதெல்லாம் நூறுவிதம் சரிதான், ஆனால் வேற என்னதான் வழி. தொடர்ந்து களவு கொடுத்திட்டு இருக்கேலுமோ” கொக்குவில் மாமா கேட்டார். “நாட்டைப் பறிச்சு வைச்சிருக்கிறவனிட்ட போய், கோயிலில களவு போச்செண்டு சொல்லுறதோ” செல்லையாவின் பதில் கேள்வியில் கோபம் அதிகரித்திருந்தது. ஒரு வெள்ளைத்துணியில் சில்லறையை முடிந்து கோவில் வாசலில் கட்டிய செல்லையா “இந்த அநியாயத்த செய்தவன் எவனாயிருந்தாலும், இன்னும் ரெண்டு நாளில இங்க வந்து நிப்பான். வைரவர் பொல்லாதவர். அவற்ற கோபத்துக்கு ஆளானால் அவன்ர குலம் தழைக்காது” என்றார். சில நாட்களிலேயே யாழ்ப்பாணத்திலிருந்து கேதீஸ்வர குருக்கள் வரவழைக்கப்பட்டார். விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. களவாடியவனே விரைவில் எல்லாப் பொருட்களையும் கொண்டு வந்து ஒப்படைப்பான் என அருள் வாக்கு சொன்னார் பூசாரி. சனங்களும் அப்படி நிகழவேண்டுமென விரும்பினர். சங்கன் திருடிய பொருட்களை முந்திரித் தோப்பொன்றில் புதைத்து வைப்பது வழக்கம். ஏற்கனவே தாமரைக்குள முருகன் கோவிலில் திருடிய தங்க வேல் ஒன்றும் அங்குதான் புதைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் வியாபாரப் பேரம் சரியாகப் படியவில்லை. பத்தர் காந்தியோடு மல்லுக்கு நின்றான். “இந்த வேல உருக்கி தங்கக்கட்டியா மாத்திறத்துக்கு எனக்கு கூலி வேண்டாமடாப்பா, ஆனால் நான் சொல்ற விலைக்கு தா” “பத்தரே, நான் சொல்றது தான் காசு. உங்களால வாங்க முடியுமா, முடியாதாவெண்டு சொல்லுங்கோ. எனக்கு உங்கட கூலி இனாமெல்லாம் வேண்டாம்” “உனக்கு உதவி செய்ய இஞ்ச வேற ஆருமில்லை. என்னைத் தவிர எந்தப் பத்தனும் இந்த வேலைக்கு துணிய மாட்டான். விளங்கி நட” “பத்தரே, கரட்டி ஓணான் வெருட்டி**க்குமாம். நீங்கள் அதுக்குத் தான் முயற்சிக்கிறியள். அது என்னட்ட சரிவராது” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போனான். ஐம்பொன் சிலைகளையும் தகடுகளையும் புதைத்துவிட்டு, சில்லறைகளை எண்ணி முடித்தான். இரண்டாயிரத்து நான்கு ரூபாய் இருந்தது. முந்திரித் தோப்பிலிருந்து வீட்டுக்கு போகிற வழியிலிருந்த முருகன் கோவில் உண்டியலில் ஒரு ரூபாய் குற்றியை இட்டு கும்பிட்டான். “முருகனே, நான் செய்யிறது பிழை தான். ஆனால் வேற என்ன செய்ய ஏலும் சொல்லு. இத்தனை துன்பங்களைத் தந்த அரசாங்கத்தையே தண்டிக்காத நீ, உன்னட்ட களவெடுத்த என்னையும் தண்டிக்க மாட்டாய் என்றொரு நம்பிக்கை. என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து தவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா வினோதனென்று உன்திரு வடியை உறுதியென்றெண்ணும் என்தலை வைத்துன் இணையடி காக்க” என்று பாடிக்கொண்டான். எதிர்ப்பட்ட எல்லோரும் சங்கனைப் பார்த்து அகமகிழ்ந்து புன்னகைத்தனர். “சங்கன் நாளைக்கு ஒரு கிணறு வெட்டிருக்கு வாறியோ” வழிமறித்த கிளியனிடம் வருகிறேன் என்றான். கொக்குவில் மாமா பொலிஸ் ஸ்டேசனில் முறைப்பாடு கொடுத்தார். கோவிலில் களவாடியவனை பிடித்து தரவேண்டுமென ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் கடிதம் எழுதி அளித்தார். இவ்வளவு தாமதமாக வந்து முறைப்பாடு தந்தால் எப்படி கண்டுபிடிக்க முடியுமென பொலிஸ் ஆவேசம் கொண்டது. “தெய்வம் பிடிச்சுத் தருமெண்டு வெயிட் பண்ணினாங்கள். அது நடக்கேல்ல, அதுதான் உங்களிட்ட வந்திருக்கிறம்” என்றார். பொலிஸ்காரர்கள் புல்லரித்துப் போனார்கள். கண்டிப்பாக அவனை கைது செய்துவிடுவோமென சிலர் நம்பிக்கையளித்தனர். இந்தச் செய்தியை ஊர்முழுவதும் தேநீரோடு பருகியது. சங்கன் எல்லாவற்றையும் அவதானிக்கத் தவறுவதில்லை. வீட்டு முற்றத்தில் மண்ணள்ளித் தின்னும் நந்திக்கடலின் கையில் லேசாக அடித்து நெஞ்சோடு தூக்கி அணைத்தான். சமையலிலிருந்த மலரினி வெளியே வந்து உங்கட மோளுக்கு ஒரு லோட் மண் வாங்கினால், இருபது வயசு மட்டும் சாப்பிடக் காணும்” என்றாள். வீட்டுக்குப் பின்னாலிருந்த சிறிய கொட்டிலில் இரண்டு போதல்களில் கள்ளு இருந்தது. பொரித்த சூடை மீனோடு கள்ளைக் குடித்து முடித்து அங்கேயே உறக்கம் கொண்டான். மலரினியும் சங்கனும் போராளிகளாக இருந்தவர்கள். ஒரே களமுனையில் சந்தித்துக் கொண்டவர்கள். வேவு அணிக்கு தலைமை தாங்கிய சங்கன் களமுனையிலுள்ள ஏனைய படையணிகளுக்கு வழங்கிய தகவல்கள் மாபெரும் வெற்றிகளை அளித்தது. மலரினி மகளிர் படையணியொன்றின் முக்கியமான தாக்குதல் அணித்தலைவியாக இருந்தாள். நிலமும் பனையும், களமும் சேனையும் சொந்தமாகவிருந்த நாட்களில் இருவரும் காதல் உறவெய்தினர். பின்னர் எல்லாமும் கானலெனக் கலைந்தவொரு காலத்தில் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டனர். போராளிகளாகவிருந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பின்பு திருமணம் செய்தனர். முதற்குழந்தை இறந்து பிறந்தது. பின்னர் வந்துதித்த பெண் குழந்தைக்கு நந்திக்கடல் என்று பெயர் சூட்டினான் சங்கன். பல்வேறு களவுச் சம்பவங்களை ஆராய்ந்து பொலிஸ் தேடுதலை நடத்தியது. கோவிலில் நிகழ்த்தப்படும் களவுகளில் மட்டுமே எந்தத் தடயங்களும் கிடைக்கவில்லையென ஒரு சிறந்த புள்ளியை இனங்கண்டார்கள். திறமையாக திட்டமிடப்பட்டு ஒரு குழுவால் செய்யப்படுவதாக உத்தேசித்தார்கள். தடயமில்லாத ஒன்றின் பின்னால் பயணிக்க இயலாது. அது ஒன்றாகவோ நூறாகவோ கூட இருக்கலாம். பொலிஸ் கைவிரித்தது. எங்கும் பிடி கிடைக்காமல் துருவித் துருவி விசாரித்தனர். சங்கன் கூலி வேலைக்குச் சென்றான். கிணறு வெட்டுவது உடல் வருத்தும் பணி. தசை தசையாக நோவெழும். வயிறு முட்ட கள்ளுக் குடித்தாலும் அலுப்புத் தீராது. இன்று வேலை முடிந்ததும், நேராக பத்தர் ஒருவரைப் பார்க்கச் செல்ல வேண்டும். இவனோடு இயக்கத்தில் இருந்த தோழமை. இப்போது வட்டக்கச்சியில் இருக்கிறான். பொன்னுருக்கும் கூடம் வைத்து சின்னச் சின்ன வேலைகள் செய்வதாக அறிந்திருந்தான். ஒருதடவை சென்று அவனிடம் கதைத்துப் பார்க்கலாமென சங்கனுக்குத் தோன்றியது. வட்டக்கச்சியிலுள்ள வெத்திலை பத்தரின் வீடு தேடிக் கண்டுபிடித்தான். உள்ளே இரண்டு நாய்கள் கட்டப்பட்டிருந்தன. வெளியே நின்று பட்டாம்பூச்சி என்று அழைத்தான் சங்கன். இரண்டு கைகளுமில்லாது வீட்டு வாசலில் வந்து நின்றவொரு உருவம் “நீங்கள் ஆர்” என்று கேட்டது. சங்கனால் அந்தக் குரலை உணர முடிந்தது. “பட்டாம்பூச்சி நான் வியட்நாம். உந்த நாயளைப் பிடி மச்சான்” என்றான். அந்த உருவம் அற்புதமொன்றைக் கண்டதைப் போல திகைப்படைந்து சங்கனை நோக்கி ஓடிவந்தது. அப்போதுதான் பட்டாம்பூச்சியின் முகத்தைப் பார்த்தான் சங்கன். தீக்காயத்தின் தழும்பு மெழுகெனவிருந்தது. கண்கள் எரியும் திரியென சிவந்திருந்தன. வெறிகொண்ட சூனியம் தங்கிய மேனி. “பட்டாம்பூச்சி நாயளைப் பிடி, நான் வியட்நாம்” என்றான். பட்டாம்பூச்சி நாய்களை விரட்டினான். உள்ளே வாங்கோ என்பதைப் போல ஒரு தலையசைப்பு. சங்கன் அவனைக் கட்டித்தழுவினான். பட்டாம்பூச்சி பெருங்குரலெடுத்து விம்மி அழுதான். “ஏன் மச்சான் இப்பிடி குழந்தையள் மாதிரி அழுகிறாய், அழாதே” என்றான். “நீ வீரச்சாவு எண்டு கேள்விப்பட்டனான். அதுவும் ஆனந்தபுரம் பொக்சில. அங்க நிண்டனியோ” பட்டாம்பூச்சி கேட்டான். “நீ கேள்விப்பட்ட மாதிரியே வீரச்சாவு அடைஞ்சிருக்கலாம். ஆனால் இப்ப கிடந்தது உத்தரிக்க வேண்டியிருக்கு” “இயக்கத்திலையும் சரி, சாவிலையும் சரி முடிவு நாங்கள் எடுக்க ஏலாது. ஏற்கனவே எழுதின தாளில கோடுபோட முடியாதெல்லே” “டேய், பட்டாம்பூச்சி தத்துவம் கதைக்கிறது இன்னும் குறையேல்ல. நீ எங்க காயப்பட்டனி. இப்படி எரிஞ்சு போய் இருக்கு” தன்னுடைய இல்லாத கைகளின் மீதத்தைக் காட்டி “இது ரெண்டும் மாத்தளனில போனது. அதுக்குப் பிறகு மெடிஸ்ல இருந்தனான். அங்க பொஸ்பரஸ் குண்டு முகத்தை எரிச்சுப்போட்டுது” “இப்ப முந்திய விட நல்ல வடிவாய் இருக்கிறாய் மச்சான்” “ஓமடா, வெளிநாட்டில தான் கலியாணம் பார்க்கினம். போட்டோவ பார்த்த ஒரு பிள்ளையும் நீ சொன்ன மாதிரி சொல்லுதில்லை.” “ஏன் இஞ்ச இருக்கிற பிள்ளையை நீ கலியாணம் செய்ய மாட்டியோ. உனக்குத் தானே தொழிலிருக்கு” “இப்ப என்ர முடிவுகளை நான் எடுக்கிறதில்லை. நான் எடுத்த முடிவுகள் முள்ளிவாய்க்காலோட முடிஞ்சுது. இனிமேல் அக்காமார் சொல்றத கேட்டு நடப்பம்” “அதுசரி, உன்னட்ட ஒரு விஷயம் சொல்லவேணும். அது எங்கட இயக்க ரகசியத்துக்கு ஒப்பானது. நீ ஆரிட்டையும் சொல்லமாட்டேன் என்றால் சொல்லுகிறேன்” “வியட்நாம் எனக்கு எந்த ரகசியமும் நீ சொல்ல வேண்டாம். நான் அதை வைச்சு என்ன செய்யேலும் சொல்லு” “இல்ல,நீ எனக்கொரு உதவி செய்ய வேணும். அது உன்னால மட்டும் தான் முடியும்” “எனக்கு ஒண்டுமாய் விளங்கேல்ல. சரி என்ன விஷயம் சொல்லு” சங்கன் எல்லாவற்றையும் சொல்லி இறுதியில் “அந்த வேல் இப்பவும் என்னட்டத் தான் இருக்கு. நீ உருக்கித் தரவேணும். எங்களை மாதிரியிருந்து இண்டைக்கு கஷ்டப்படுகிற ஆக்கள் நிறையப் பேர் இருக்கினம். அவையளுக்கு பிரிச்சு குடுக்கலாம்” என்றான். பட்டாம்பூச்சி சரியென்று தலையசைத்தான். மூன்று நாட்கள் கழித்து அதனை எடுத்துவரும்படி சொன்னான். சங்கன் சந்தோசத்தோடு விடைபெற்றுச் சென்றான். மழையும் மின்னலும் இரவில் விழுந்தன. சங்கன் நனைந்து நடுங்கியபடி நெருப்புக்குச்சியைத் தட்ட முயற்சித்தான். சிறுஞ்சுடர் அணிந்த அவளது கண்கள் சங்கனைப் பார்த்தது. அவளது கழுத்தில் அணியப்பட்டிருந்த அலங்கார நகையைக் கழற்றி பையில் போட்டான். கைகளைத் துடைத்து மீண்டுமொருமுறை நெருப்புக்குச்சியைத் தட்டினான். அம்மன் முகத்தில் மழைநீர் சொட்டிக்கொண்டிருந்தது. சங்கன் அவளது நெற்றியில் குங்குமமிட்டு வணங்கினான். கையில் கிடைத்த ஐம்பொன் சிலைகளையும் கைப்பற்றி அங்கிருந்து வெளியேறினான். கோவிலின் வெளிப்புற கதவடியில் கறுப்பு நிறச்சேலை அணிந்த குமரியொருத்தி ஆங்காரமாய் சங்கனை இடை மறித்தாள். அவனால் எதுவும் செய்ய இயலவில்லை. எடுத்தவற்றையெல்லாம் என் கழுத்தில் அணிவித்து உன் உயிரைக் காப்பாற்று என்றாள். “நீ ஆர், உனக்கேன் அணியவேண்டும்” “நான் தெய்வம். உன்னைக் காத்து நிற்கும் தெய்வம்” “சமாதானத்துக்கான யுத்தம், நல்லிணக்கத்திற்கான அரசு, போர்க்குற்ற உள்ளக விசாரணை போல காத்து நிற்கும் தெய்வம், எவ்வளவு பெரிய பம்மாத்து. சனியனே தள்ளி நில்” என்று சுட்டியலை எடுத்து ஓங்கிய சங்கனைக் கண்டு தெய்வம் மறைந்தது. மின்னல் விழுந்தது. இடி முழங்கிற்று. எப்போதும் போல் காற்றின் அரவம் அன்றில்லை. சங்கன் முந்திரித் தோப்புக்குள் நுழைந்து மண்ணைத் தோண்டி நகையையும் சிலைகளையும் புதைக்க ஆயத்தமானான். அப்போது மின்னல் வெளிச்சமொன்று பூமியில் விழுந்தது. அவனின் முன்னே ஓருருவம் நிற்பதைப் போல எண்ணினான். வெளிச்சத்தில் அந்த உருவத்தின் முகத்தைக் கண்டான். ஒளிதுலங்கிய கண்கள். விடுதலையின் கனல் சுமந்த நிமிர்வின் மேய்ப்பன். கம்பீரத்தின் ஞானம் தரித்தவன். திகைப்புக்கும் மிரட்சிக்கும் உள்ளாகிய சங்கன் “தெய்வமே எங்களை ஏன் கைவிட்டாய்” என்று எழுந்தோடிப் போனான். அவனை இறுக அணைத்தபடி அந்த உருவம் சொல்லிற்று. “ஒரு மகத்தான தோல்வியைக் கூடத் தராது யுத்தம் தான் எங்களை கைவிட்டது. இதன்பொருட்டு என்னோடு பொருதாதே இளையவனே” மீண்டும் ஒரு இடி மின்னல். சங்கனை அணைத்த உருவம் அப்போதில்லை. முந்திரித்தோட்டம் முழுதும் சுழன்று பார்த்தான் எவருமில்லை. எடுத்து வந்த பொருட்களை புதைத்தான். அங்கிருந்து வீட்டுக்கு நடக்கலானான். அந்தப் பேரிருளிலும் வீட்டின் முற்றத்தில் அமர்ந்திருந்து மண்ணள்ளித் தின்னும் நந்திக்கடலைத் தூக்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டு “தெய்வம் எங்களைக் கைவிடாது” என்றான். நந்திக்கடல் தனது கைகளில் கிடந்த மண்ணை சீற்றம் கொண்டு குருதியால் துருப்பிடித்த இரவின் முகத்தில் எத்தினாள். https://akaramuthalvan.com/?p=13351 point- போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
போதமும் காணாத போதம் – 07 ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்றி இரண்டாம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை மாலையில் சங்கிலி பெரியப்பாவை புலிகள் இயக்கம் சுட்டுக்கொன்றது. மூன்று பிள்ளைகளையும் அழைத்துச் சென்று வீதியில் கிடந்த கணவனின் உடலத்தின் முன்பாக விழுந்தரற்றினாள் கிடுகு பெரியம்மா. ஊர்ச்சனங்கள் கூடி அவளையும் பிள்ளைகளையும் ஆற்றுப்படுத்தி, சங்கிலியின் இறுதிச் சடங்கை செய்து முடித்தனர். சங்கிலி பெரியப்பா ஆயுதமேந்திய வேறொரு அமைப்பைச் சேர்ந்தவர். அவர்களுக்கும் புலிகளுக்கும் இடையே மோதல்கள் நடந்தன. அந்த நடவடிக்கைகளில் சங்கிலிக்கு பெரிய பங்கிருந்தது. பிறகான நாட்களில் தான் சார்ந்திருந்த ஆயுத அமைப்போடு முரண்பட்டு புலிகளிடம் சரணடைந்து விசாரணைகளைச் சந்தித்தார். உயிருக்கு அச்சமற்று உலகியலோடு மட்டும் அமைந்திருந்தார். கிணறு வெட்டுவது, வேலி அடைப்பது, வீடு வேய்வதென கூலியானார். ஆனாலும் மீண்டும் மீண்டும் விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டார். “பெடியள் உங்களில எதோ ஐமிச்சப்படுறாங்கள். அதுதான் இப்பிடி அடிக்கடி விசாரிக்கிறாங்கள். எனக்கு பயமாயிருக்கு” என்றிருக்கிறாள் பெரியம்மா. பதிலுக்கு “நான் பயப்பிடேல்ல, அதிகபட்சம் சுடுவாங்கள். அதுதானே நடக்கும்” என்றிருக்கிறார். பெரியம்மா மூன்று பிள்ளைகளுக்கு நடுவில் அவரை உறங்குமாறு கூறினாள். அவளுக்கு ஆறுதல் தருகிற ஒன்றைச் செய்வதில் பெரியப்பா பின் நின்றதில்லை. அப்படித்தான் உறங்கவும் செய்தார். குளித்து முடித்து குளத்திலிருந்து வீடு நோக்கி நடந்து சென்றவரை போராளிகள் அழைத்துச் சென்றனர். பெரிய புளியமரத்தின் கீழே நிற்கவைத்து அவருடைய தலைக்கு மேல் துரோகியென எழுதப்பட்ட சிறிய இரண்டடியிலான கரும்பலகையை அறைந்தார்கள். துரோகம் ஒழியட்டும் எனத்தொடங்கும் மரண தண்டனை அறிக்கையை வாசித்து முடித்த குரல் ஓய்வதற்குள் தோட்டாக்கள் பாய்ந்தன. வெளியேறிக் கொதித்த குருதியை வெடியோசைகள் அறைந்தன. சங்கிலி பெரியப்பாவின் உடலுக்கு கொள்ளிவைக்கும் போது சந்தனனுக்கு ஏழு வயது. மிச்ச இருவரும் அவனிலும் இளையவர்கள். தியாகம் துரோகம் எதுவுமறியாத மழலைகள். எச்சில் சிந்தும் அமுத உயிரிகள். சந்தனன் தோளில் கொள்ளிக்குடத்தை வைத்து சங்கிலி பெரியப்பாவின் உடலத்தை மூன்றுமுறை சுந்திவந்தான். ஒவ்வொரு சுற்று முடிந்ததும் தன்னிடமிருந்த கத்தி முனையால் கொள்ளிக்குடத்தைக் கொத்தினார் மார்க்கண்டு மாமா. சந்தனன் கொள்ளி வைத்து திரும்பிப் பார்க்காமல் அழைத்துச் செல்லப்பட்டான். ஆனாலும் அவன் எரியும் சிதையை ஒருகணம் திரும்பி நின்று பார்த்தான். தீயென எரியும் குருதி. நிணமுருக்கும் சுவாலை. மஞ்சள் சிவப்பென எழுந்தாடும் ஒரு போழ்தெனப் பிணையும் வெளிச்சம். அப்பாவென்று அழைத்தான். மார்க்கண்டு மாமா அவனை அணைத்தபடி கண்ணீர் உகுத்தார். காடாற்றும் சடங்குக்காக போயிருக்கையில் சாம்பலை அள்ளி சிறு மண்முட்டியில் போட்டனர். சந்தனன் கையில் வைத்திருந்து அந்த முட்டியைப் பார்த்தான். குருதி தளும்பிக் கிடந்தது. ரத்தமென பயந்தடித்து முட்டியைத் கை தவறிக் கீழே போட்டான். சாம்பல் மண்ணில் கலந்தது. மண்ணெனக் கிடந்த சாம்பலை அள்ளி வேறொரு முட்டியில் அடைத்து கடலில் கரைத்தனர். ஒரு பேரலையின் சீற்றம் சாம்பலை உள்வாங்கிக் கொண்டது. சந்தனன் ஆர்ப்பரிக்கும் கடலைப் பார்த்தான். குருதியலைகள். ஓலங்கள் நிரம்பிய உடலங்கள் அதில் சுருள்கின்றன. திடுமென கடலின் இரைச்சல் கூடி “துரோகி சங்கிலி” என்று ஒலித்தது. கரையொதுங்கிக் கிடந்த மண்டையோடொன்றையெடுத்து வெறிகொண்டு வீசினான். “அப்பாவை ஏனம்மா சுட்டவே” சந்தனன் கேட்டான். காற்று மோதும் குப்பி விளக்கு அணையாது தப்ப “ துரோகம் செய்திட்டாராம். துரோகியாம்” பெரியம்மா சொன்னாள். “துரோகமென்றால் என்னம்மா” இதனைக் கேட்ட சந்தனனை அணைத்துச் சொன்னாள் “ நாங்கள் மனுஷராய் பிறந்தது. அதுவும் இந்த மண்ணில பிறந்தது. இதுதான் துரோகம்” என்றாள். நிலவேறி அலை மடித்து வெறித்திருந்த கடலில் சாம்பல் முட்டி மிதந்தது. இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு நவம்பர் மாதம் இருபத்தேழாம் திகதி. இருபத்தோராவது வயதில் சந்தனன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தான். அவன் எழுதிய கடிதம் செத்தையில் செருகியிருந்தது. பெரியம்மா அதனை வாசித்ததும் அச்சத்தில் துண்டு துண்டாய் கிழித்து அடுப்பை மூட்டி ஒவ்வொன்றாக சாம்பலாக்கினாள். பிள்ளைக்கு எதுவும் நேரக்கூடாதென தெய்வத்திடம் இறைஞ்சி அழுதாள். ஏனைய இரண்டு பிள்ளைகளையும் வெளியே செல்ல வேண்டாமென கட்டளையிட்டாள். தன் பிள்ளையிடம் துளிர்த்த வன்மத்தை எண்ணி கசந்து அழுதாள். ஏற்கமுடியாதவொரு சூளுரையை சந்தானம் அளித்திருக்கிறான். அவனுள் தலைவிரித்து நிற்கும் அனலரவத்தின் விஷம் முறிக்க ஏது வழி? இதற்கெல்லாம் காரணம் தானன்றி வேறு யார்? சொல்லிச் சொல்லி வளர்த்தேனா? என்று நெஞ்சிலடித்து அழுதாள். ரத்தத்தால் பழியழிக்கும் வெறியூட்டிய மார்போ தன்னுடையதென தாய்மை கருக பேதலித்தாள். அன்றிரவு அடிப்படை ஆயுதப் பயிற்சிக்கான முகாமில் சேர்க்கப்பட்டான் சந்தனன். அங்கே பேண வேண்டிய ஒழுங்குகளையும், மீறல்களையும் பயிற்சி ஆசிரியர்களில் ஒருவர் அறிவுறுத்தினார். தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சந்தனன் அமர்ந்தான். அதிகாலையில் விசில் சத்தம் கேட்டதும், எழுந்திட வேண்டுமென கூறப்பட்டிருந்தது. மெல்லக் கண்களை மூடி உறங்கிப் போனான். ஆனால் பெரியம்மா இயல்பு குலைந்திருந்தாள். ஒருதடவையேனும் அவனை நேரில் சந்தித்து அறிவுரை சொல்லவேண்டுமென பதகளித்தாள். அம்மாவைச் சந்திக்க வீட்டிற்கு வந்தாள். அம்மாவைத் தனியாக அழைத்துச் சென்று நடந்தவற்றை சொன்னாள். “உடனடியாக சந்திக்க வாய்ப்பிருக்குமோ தெரியாது. எண்டாலும் கேட்டுப் பார்க்கிறேன்” என்றாள் அம்மா. வெளியே துப்ப இயலாத ஒரு நஞ்சைத் தன்னுள்ளே விழுங்க இயலாமலும் துடித்து நின்றாள் பெரியம்மா. சந்தனனுக்கு இயக்கத்தைப் பிடியாது. எப்போதும் குற்றம் சொல்லுவான். தந்தையைக் கொன்றவர்கள் என்பதைத் தாண்டியும் இயக்கத்திடம் குறைப்பட அவனுக்கு காரணங்களிருந்தன. அந்தப் புளியமரத்தை தாண்டும் போதெல்லாம் “அப்பா கடைசியா இதில தான் படுத்திருந்தவர். ரத்தம் வேரடி முழுவதும் பரவியிருந்தது. குப்புறக்கிடந்த வாயில் ரத்தமும் மண்ணும் ஒட்டிக்கிடந்தது. ரத்தம் குடித்து செழித்து நிற்கும் புளியம் மரம்” என்பான். ஆனால் இன்று இயக்கத்தில் இணைந்திருக்கிறான். அவனுள் நிகழ்ந்திருப்பது திரிபென நம்ப இயலவில்லை. அம்மாவும் பெரியம்மாவும் இரவோடு இரவாக ஓட்டோவில் புறப்பட்டனர். “நான் வரப் பிந்துமடா, நீ படு” என்ற அம்மாவின் கண்களில் ஒருவிதமான அவசரத்தைப் பார்த்தேன். “எங்க போறியள்” கேட்டேன். “கிளிநொச்சிக்கு, ஏன் நீயும் வரப்போறியோ” என்று அம்மா கேட்டாள். அது அழைப்பல்ல. இதற்கு மேல் கேளாதே என்கிற சமிக்ஞை. ஓட்டோ புறப்பட்டது. பெரியம்மாவின் கண்ணீர் வெளியெங்கும் பறந்தது. இரண்டு கைகளையும் கூப்பி ஐந்தெழுத்து மந்திரத்தை சொல்லத் தொடங்கினாள். “இப்ப நடக்கிறதுக்கெல்லாம் நீ தான் காரணம் அக்கா” என்றாள் அம்மா. பெரியம்மா எதுவும் பதில் கதைக்கவில்லை. மூன்று மாத ஆயுதப் பயிற்சி முடித்த சந்தனனை சந்திக்க நாங்கள் போயிருந்தோம். உடல் பெருத்திருந்தான். புலிச்சீருடை அணிந்து மிடுக்கேறி நின்றான். பெரியம்மா அவனது கைகளைப் பிடித்து “சந்தனா, கடிதத்தில நீ எழுதியிருந்த எல்லாத்தையும் மறந்திடு. உன்னைத் தெய்வமாய் பார்த்தனான். ஆனா ரத்தம் கேக்கிற தெய்வமில்லை நீ” என்றாள். அந்தச் சொற்களில் எவற்றையும் பொருட்படுத்தவில்லையென அவன் உடல்மொழி கூறியது. தன்னுடைய கழுத்தில் கிடக்கும் குப்பியை தாயிடம் காட்டி “ இது கழுத்தில மட்டுமில்ல, எனக்குள்ளேயும் கிடக்கு” என்றான். பெரியம்மா அவனை கன்னத்தில் அறைந்து “நீ செத்தொழிஞ்சாலும் கவலையில்லை” என்று கத்தியபடி வெளியேறினாள். பெரியம்மாவுக்கு பின்னால் ஓடினேன். அம்மா சந்தனனிடம் “ நீ அவனைச் சுட்டுப் பழி தீர்க்க நினைக்கிறாய் எண்டு தெரிஞ்சாலே, அவ்வளவு தான்” என்றாள். என்ன நடந்தாலுமென்ன சாகத்தானே போகிறேன். அதிகபட்சம் என்ன செய்வார்கள். சுடத்தானே செய்வார்கள்” என்றான். சங்கிலிப் பெரியப்பாவை சுட்டுக்கொன்றவர் சரித்திரன். இன்றைக்கு முக்கிய பொறுப்பொன்றில் உள்ளவர். அன்று துரோகிகளை அழித்தொழிக்கும் பணியில் துடிப்புடன் இருந்தவர். இத்தனை வருடங்களில் பெரியம்மா சந்தனனுக்கு அடிக்கடி சொன்ன பெயர் சரித்திரன். எங்கு சரித்திரனைக் கண்டாலும் “அங்க பார், அவன் தான்” என்பாள். அப்படித்தான் சந்தனன் குருதியில் தீ மூண்டது. மெல்ல மெல்ல கங்குகள் பிணைந்து, காற்றில் தப்பிப் புகைந்து எரியத்தொடங்கியது. “அப்பாவைச் சுட்டவனை சுடுவேன்” என்று சந்தனன் முதன்முதலில் சத்தியம் செய்தது அந்தப் புளியமரத்தில் தான். அதற்கு ஒரே வழியாக இயக்கத்தில் சேர்ந்தான். ஆதிப்பலிக்கு ரத்தம் கேட்கும் உக்கிரம் அவனுள் உயர்ந்தது. சந்தனன் சொன்னதும் அம்மா அதிர்ச்சியடையவில்லை. அவனிடம் தெளிவாகவும் உறுதியாகவும் சொன்னாள். “இஞ்ச பார் சந்தனன், நீ சின்னப்பெடியனில்லை. உனக்கு நான் சொல்றது விளங்குமெண்டு நினைக்கிறன். பழிவாங்கத் துடிக்கிறது உனக்குத் தான் ஆபத்து.” என்றாள். சந்தனன் எதுவும் கதையாமலிருந்தான். புதிய போராளிகளின் பெற்றோர்கள் அனைவருக்கும் சந்திக்கும் நேரம் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. படையணி முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கிருந்து களமுனைக்கு கொண்டு செல்லப்படும் அணியோடு சேர்க்கப்பட்டான். சந்தனனிடமிருந்த ஆயுதத்தின் ஒயில் வாசனை அவனுக்குப் பிடிக்கவில்லை. மீண்டும் மீண்டும் துணியால் துடைத்தான். இரண்டு நாட்கள் பயணம் செய்து, களமுனைக்கு வந்தடைந்தான். முன்னரங்கு. எப்போதும் விழிப்பு. பதுங்குகுழிகள் நீண்டிருந்தன. காப்பரண்கள் கொதித்தன. நாளுக்கு பத்து மணிநேரம் மோதல் நிகழும் படுகளம். சந்தனனுக்கு காவலரண் ஒதுக்கப்பட்டது. ஏற்கனவே அங்கிருந்தவர்களோடு அறிமுகமானான். துவக்கைத் தன்னுடைய நெஞ்சோடு அணைத்தபடி பதுங்குகுழிக்குள் அமர்ந்தான். அன்றிரவு எந்த மோதலும் நிகழவில்லை. உறக்கம் வாய்த்தது. சந்தனன் மட்டும் விழித்திருந்தான். அவனுடைய காவல் நேரம் தாண்டியும் கடமை செய்தான். டிகரில் வலது கையின் ஆட்காட்டி விரலை வைத்தபடி புளியமரத்தை நினைத்துக் கொண்டான். தேசத்துரோகியென எழுதப்பட்டு முதல் ஆணியில் அறையப்பட்டிருந்த தந்தை பெயரைச் சொன்னான். உள்ளம் எரிந்து கண்ணீர் புகைந்தது. அப்பா அப்பா என்றான். இயலாமை ஊறி இருள் திரண்டு நின்றது. அவனிருந்த திசை நோக்கி குண்டுகள் பொழிந்தன. போழ்தின் இருள் அழிந்து ஊழி பொழிந்தது. சந்தனன் சண்டையில் காயமுற்றான். அவனிருந்த மருத்துவ விடுதியின் தலைமைப் பொறுப்பதிகாரியாய் சரித்திரன் இருந்தார். மேனியெங்கும் நஞ்சின் சூறை தீப்பிடிக்க சந்தனன் யாரோடும் கதையாமலிருந்தான். வீட்டில் செய்த உணவுகளை சரித்திரன் மூலமாய் அம்மா கொடுத்தனுப்பினாள். சந்தனன் அந்த உணவுகளைத் தீண்டக் கூடவில்லை. சரித்திரனுக்கு அது கவலையாகவிருந்தது. சில நாட்கள் கழித்து சரித்திரன் தனது வாகனத்தில் சந்தனனை ஏற்றிக்கொண்டு சென்றான். அவன் எதுவும் கதையாமல் வீதியை வெறித்திருந்தான். மழை பெய்யத் தொடங்கியது. “நீ என்னைச் சுடத்தான் இயக்கத்துக்கு வந்தனியெண்டு கேள்விப்பட்டனான்” என்ற சரித்திரனை அதிர்ச்சியோடு பார்த்தான் சந்தனன். உன்ர தந்தையைச் சுட்டது நானெண்டு தெரிஞ்ச உனக்கு ஏன் சுட்டனான் எண்டு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை” என்று தொடர்ந்தார். “அதுதான் நல்லாய்த் தெரியுமே, தேசத்துரோகி, ஒருத்தனைக் கொல்ல நீங்கள் துவக்கெடுக்க முதல், இப்பிடியொரு பட்டம் வைச்சே கொலை செய்திடுவியள்” என்றான் சந்தனன். சரித்திரன் கொஞ்சம் இறுக்கமாக “அது பட்டமில்லை. தண்டனையோட முதலடி.” என்று சொன்னார். வாகனம் புளியமரத்தடியில் நின்றது. அங்கு நிறைய ஆணிகள் அறையப்பட்டிருந்தன. சரித்திரன் வாகனத்தை விட்டு கீழே இறங்கி, தன்னுடைய பிஸ்டலை அவனிடம் கொடுத்து என்னைச் சுடு என்றார். சந்தனன் வாகனத்தை விட்டு கீழே இறங்கினான். பிஸ்டலை சரித்திரனின் நெற்றி நோக்கி நீட்டினான். மூன்று வெடிகள் முழங்கின. துரோகத்தின் துருவேறிய ஆணிகள் சிதறுண்டு பறந்தன. கிளையில் துளிர்த்திருந்த இலைகள் மெல்லக் காற்றில் அசைந்தன. இராணுவ மிடுக்கோடு, பிஸ்டலை சரித்திரனிடம் கையளிக்க முன்னே நடக்கலானான். துரோகத்தின் ஆணிகள் சிதறிக்கிடந்த நிலத்தில் சந்தனன் அவதானமும் விழிப்பும் கூட்டியிருந்தான். புளியமரத்தின் கீழே இரண்டு பேரும் நின்று கதைக்கத் தொடங்கினார்கள். இத்தனை நாட்களும் ஆறாத தன்னுடைய காயத்தைப் பார்த்தான் சந்தனன். அது கொதியடங்கி ஆறியிருந்தது. https://akaramuthalvan.com/?p=13041 point- போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
போதமும் காணாத போதம் – 06 இருபத்தைந்து வருடங்கள் வன்கவர் படை ஆக்கிரமித்திருந்த கேணியடி கிராமத்திற்குள் சனங்கள் அனுமதிக்கப்பட்டனர். ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த படைமுகாம் மட்டும் நாலுசுற்று முட்கம்பி வேலிகளால் அரணாகியிருந்தது. சூனியம் சடைத்த கிராமம் பெருவயிறெனத் திறந்து கிடந்தது. சனங்கள் கருப்பையின் தட்பத்தை உணர்ந்த உயிரென குதூகலத்தில் கால் பதித்தனர். ”இந்த நிலம் இராணுவத்துக்குச் சொந்தமானது. அனுமதியின்றி உட்பிரவேசியாதீர்கள்” என்றெழுதப்பட்டிருந்த அறிவிப்பு பலகையை கழற்றி வீசினர். ஆயுதமற்ற சிப்பாயொருவன் குதிரையிலிருந்தபடி எல்லாவற்றையும் கண்காணித்தான். சின்னாச்சி மண்ணை அள்ளி மேலெங்கும் பூசினாள். உயிர்மீட்சி கொண்ட ஆனந்தத்தில் அருள் கொண்டாடினாள். குண்டுமணி அத்தை வேப்பிலைகளைப் பிடுங்கி வந்து சின்னாச்சி கையில் கொடுத்தாள். பேரன் புண்ணியன் வேதத்துக்கு மாறியிருந்தான். அதனால் பக்கத்தில் வரவில்லை. சின்னாச்சி சன்னதம் கொண்டாடினாள். மண்ணுக்குத் திரும்பியது சனங்கள் மட்டுமல்ல, கண்ணகித் தெய்வமும் தான் என்றார் ஊத்தை மாமா. சின்னாச்சி கண்கள் சிவந்து அந்தரத்தில் எழுந்து நிலத்தில் இறங்கி ஆவேசம் கொண்டாள். ஆங்காரம் பொங்க கைகள் விரித்து ஆலமரம் நோக்கி சின்னாச்சி ஓடினாள். “இந்த நிலம் இராணுவத்துக்குச் சொந்தமானது” என்ற அறிவிப்பு பலகையைத் மிதித்தேறி ஆலமரத்தை அண்மிக்கையில் நிலம் பிளந்து ஒலித்தது வெடியோசை. சின்னாச்சி கீழிருந்து மேலேறி ஒரு விழுதென நிலம் பதிந்தாள். ஆலமரத்தின் கீழே மேடெனக் கிடந்த பறவை எச்சங்களோடு அவளது கால்விரல்கள் எஞ்சியிருந்தன. சனங்கள் சின்னாச்சி என்று கதறினார்கள். சூனியமெரிந்த வெளியில் மனுஷ அழுகுரல் கேட்ட பறவைகள் எழுந்து பறந்தன. சிப்பாய் குதிரையை உசுப்பிவிட்டு சனங்களைச் சிதறியோடச் செய்தான். சனங்கள் உறைந்தனர். ஆலமரத்தின் கீழே குருதிக் குத்தியாய் சின்னாச்சி மீந்திருந்தாள். அவளுடைய உடலத்தை மீட்பது சிரமம். கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கும் வலயத்திலிருந்து சின்னாச்சியை குப்பைவாரியால் இழுத்து எடுத்தோம். சின்னாச்சியின் கால் துண்டொன்று ஆலமரத்தின் வேர் இடுக்கில் இறுகிக்கிடந்தது. சின்னாச்சியை கேணியடிக் கிராமத்தின் சுடலையிலேயே தகனமாக்க முடிவெடுத்தனர். அந்தப் பகுதிக்குச் செல்ல அனுமதியில்லையென வன்கவர் படை மறுத்தது. “மொத்தக் கிராமத்தையும் சனங்களிட்ட குடுத்தாச்செண்டு சொல்லிப்போட்டு, இப்ப செத்துப்போன ஆள எரிக்க அனுமதியில்லை எண்டால் எப்பிடி?” புண்ணியன் கேட்டான். “உங்களுடைய எல்லா இடங்களையும் நீங்கள் துப்பரவு செய்யத்தானே போகிறீர்கள். அதற்கு தீ வைக்க வேண்டுமல்லவா. ஆகவே இங்குள்ள எந்த இடத்திலாவது போட்டு எரியுங்கள்” என்றான் வன்கவர் படை அதிகாரி. “இந்தப் பாழ்படுவார் இத்தனை சனங்களை முள்ளிவாய்க்கால்ல கொண்டு குவிச்சும் கொலைவெறி அடங்காமல் நிக்கிறாங்களே” என்று குண்டுமணி அத்தை கொதித்தாள். சின்னாச்சியின் உடலத்தை தூக்கி வந்து வன்கவர் படை முகாமுக்கு முன்னால் கிடத்தினார்கள். ஈமச் சடங்கை செய்து முடித்தனர். பட்டினத்தார் பாடலைச் சுந்தரம் பாடினார். நெற்றியிலும் வயிற்றிலும் கற்பூரம் குவித்து சிதை மூட்டினான் புண்ணியன். எரிந்துருகும் சின்னாச்சியின் உடலத்தைச் சூழ்ந்த பெண்கள், தங்களுடைய முலைதிருகி வான் பார்த்து எறிவதைப் போல பாவித்தனர். “தீ மூளும், தீ மூளுமெனப் பாடுகையில் சின்னாச்சியின் உடல் விறகென மிளாசி எரிந்தது. அடுத்து சில மாதங்களில் இருபது குடும்பங்கள் கிராமத்தில் குடியேறி அங்கிருந்த தேவாலயத்தைச் சுத்தப்படுத்தினர். சின்னாச்சி கண்ணிவெடியில் செத்துப்போன ஆலமரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆட்கள் நடமாட அஞ்சினர். “கண்ணிவெடியை நெருக்கிப் புதைச்சிருக்கிறாங்கள். அங்கால் பக்கம் போகாதேங்கோ” பெரியவர்கள் சொல்லினர். சுத்திகரிக்கப்பட்ட தேவாலய கிணற்றிலிருந்து பெரிய ரங்குப் பெட்டியொன்று மீட்கப்பட்டது. அது தண்ணீர் புகமுடியாத தடித்த பொலித்தீன் உறைகளாலும், விலையுயர்ந்த மெழுசீலையாலும் பொதி செய்யப்பட்டிருந்தது. தேவாலயத்தின் உள்ளே எடுத்துவந்து ரங்குப்பெட்டியைத் திறந்தனர். உள்ளே பாதிரியார் அணியும் வெள்ளைநிற அங்கியும், பவளத்தால் செய்யப்பட்ட செபமாலை இரண்டும் இருந்தன. இன்னொரு அடுக்கில் சிறிய தங்கச் சிலுவையொன்றில் அறையப்பட்டிருந்த இயேசுவும் தங்கமாயிருந்தார். புண்ணியன் அந்தச் சிலுவையைத் தூக்கிச் சென்று பீடத்தில் வைத்தான். சனங்கள் முழந்தாளிட்டு அமர “அவர் பூமி முழுவதும் போர்களுக்கு முடிவுகட்டுகிறார். வில்லை உடைத்து, ஈட்டிகளை முறிக்கிறார். போர் ரதங்களை நெருப்பில் சுட்டெரிக்கிறார்” என்றாள் ஒற்றைக்கண் சரசு. “கடவுளே, உங்களுடைய பெயரைப் போலவே உங்களுடைய புகழும் பூமியெங்கும் எட்டுகிறது. உங்களுடைய வலது கை நீதியால் நிறைந்திருக்கிறது. உங்களுடைய நீதித்தீர்ப்புகளால் எங்கள் நிலம் சந்தோஷிக்கட்டும்.” என்ற புண்ணியனின் கண்களை முட்டிப் பெருகிய கண்ணீர் செபமாலையின் மீது சொரிந்தது. இந்தச் சம்பவத்திற்கு பிறகு “தங்க இயேசு கோயில்” என்று புதுநாமம் பொறிக்கப்பட்ட தேவாலயத்தில் கேணியடிச் சனங்கள் வாரமொருமுறை ஒன்று கூடுவர். கிராமத்தில் இன்னும் செய்யவேண்டிய பொதுவேலைகளைப் பற்றி கதைத்து முடிவு செய்வார்கள். முதலில் சுடலைக்குச் செல்லும் பகுதியை இராணுவத்திடமிருந்து பெற்றுத் தரவேண்டுமென தமிழ் பாராளுமன்ற உறுப்பினருக்கு அழுத்தமாக கடிதம் எழுதினர். கேணியடி கிராமம், மக்களிடம் கையளிக்கப்பட்டது தன்னாலென தம்பட்டம் அடித்த அரசியல்வாதியைச் சந்திக்க இயலாமல் சனங்கள் சோர்ந்தனர். குதிரையில் சென்றுவரும் சிப்பாய்கள், பெண்கள் நீரள்ளும் சந்திக்கிணற்றடியில் குவிந்து நின்றனர். பெண்பிள்ளைகளை வெளியே அனுப்ப பயந்தொடுங்கினர் சனங்கள். சிப்பாய்களிடமிருந்து இனிப்பும் பழங்களும் வாங்கியுண்ட எதுவுமறியாத குழந்தைகளை பூவரசம் கம்பு தும்பாக அடித்தனர் தாய்மார்கள். சுடலை மீட்பை கேணியடி தீவிரமாக்கியது. கையளிக்கப்பட்ட பகுதியிலிருந்து இடதுபக்கமாக ஆறுகிலோ மீட்டர் பகுதிகளை இன்னும் இராணுவமே வைத்திருப்பதாக சனங்கள் வீதிக்கு வந்தனர். புண்ணியன் அந்தப் போராட்டத்தை முன்னெடுத்தான். சின்னாச்சி எரியூட்டப்பட்ட அதே இடத்தில் சனங்கள் அமர கொட்டகை அமைக்கப்பட்டது. கைக்குழந்தைகளை ஏந்தி வந்தவர்களும் அங்கேயே இருந்தனர். நெடுத்துக் கிளைவிரித்து நிழலூட்டும் வேப்பமரத்தில் குழந்தைகள் உறங்க ஏணைகள் கட்டப்பட்டன. இரவு பகலாக சனங்கள் வீதியில் படுத்துறங்கினர். போராட்டத்தை தலைமையேற்று நடத்தும் புண்ணியனை அவனது அணியினரையும் அழைத்து வன்கவர் வெறியர்கள் மிரட்டினர். “கடத்திச் சென்று உயிரோடு புதைப்போம்” என்றார்கள். புண்ணியன் சாந்தமூறும் புன்னகையோடு “அரசனுடையதை அரசனுக்கும் கடவுளுடையதைக் கடவுளுக்கும் கொடுக்கும் நீங்கள் எங்களுடையதை எங்களிடம்தான் தரவேண்டும்” என்றான். இராணுவம் சனங்களைச் சுடலைக்குள் அனுமதிக்கவில்லை. சனம் போராட்டத்தில் அரசியல்வாதிகளை அனுமதிக்கவில்லை. மூன்று நாட்களுக்கு மேலாக தொடரும் போராட்டம் ஊடகங்களில் செய்தியானது. மனித உரிமை ஆர்வலர்கள் துணை நின்றார்கள். “பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை. எழுந்து செல்லுங்கள். நீங்கள் எரிய வேண்டுமென்று அவசியமில்லை. உங்கள் உடலங்களை நான் வளர்க்கும் நாய்களுக்கு அளிப்பேன்” என்ற வன்கவர் படை அதிகாரி, மேலும் ஒருமணி நேரம் கெடு வழங்கினான். அதற்குள் போராட்டம் கைவிடப்பாடாது போனால் உயிரிழப்பு நிகழுமென்றான். நிலவெறியும் இரவு. வேப்பமரத்தில் கட்டப்பட்டிருந்த ஏணைகளில் குழந்தைகள் உறங்கினர். குதிரைகளின் குளம்பொலிகள் நிலத்தை அதிர்வித்தன. வன்கவர் வெறிப்படை முகாமின் பெருத்த கதவுகள் வாய் பிளந்தன. குதிரைகளின் மூச்சில் நடுங்கிய இரவு, புழுதியால் போர்த்தப்பட்டது. ஏணையில் கிடந்த குழந்தையின் அழுகுரல் கேட்ட தாய் ஓடோடி விரைந்தாள். குதிரைகள் கொட்டைகையை நோக்கி பாய்ந்து வந்தன. சிப்பாய்கள் தங்களது துவக்குகளை நீட்டி “ பத்து நிமிசத்திற்குள் எழுந்து செல்ல வேண்டும், இல்லையேல் வெடிதான் கதைக்கும்” என்றனர். சனங்கள் பின்வாங்கினர். குதிரைகள் கொட்டகைக்குள் புகுந்து வெறிகொண்டு அலைந்தன. மண்ணில் சரிந்தது கொட்டகை. புண்ணியன் எல்லாவற்றையும் பார்த்தபடி நின்றான். அவனை நோக்கி வந்த சிப்பாயொருவன் துவக்கின் பின்பகுதியால் தோள்மூட்டில் ஓங்கி அடித்தான். புண்ணியன் ஷணத்தில் சுதாகரித்து தப்பி தங்க இயேசு கோயிலுக்குச் சென்றான். ஏற்கனவே அங்கு சனங்கள் கூடியிருந்தனர். புண்ணியன் யாரோடும் எதுவும் கதையாமல் தங்கச்சிலுவையின் முன்பாக முழந்தாளிட்டான். “கர்த்தாவே! நீரோ, வியக்கத்தக்க காரியங்களைச் செய்தீர்! விண்ணுலகம் இதற்காக உம்மைத் துதித்தது. ஜனங்கள் உம்மைச் சார்ந்திருக்கமுடிந்தது. பரிசுத்தரின் கூட்டம் இதைப்பற்றிப் பாடியது. ஆனால் என்றைக்கும் இருளை மட்டுமே எங்களிடம் நிலைகொள்ளச் செய்திருக்கிறீர். துயரங்களுக்காக அழுது எங்கள் கண்கள் புண்ணாகிவிட்டன. ஏற்கெனவே கொல்லப்பட்ட சனங்களை புதைக்காமலும் எரிக்காமலும் கைவிட்டோம். வாழப் பெலனற்று மரித்தவர்கள் இங்கு குறைவு. கர்த்தாவே! இது எத்தனை காலம் தொடரும், எதுவரைக்கும் நீர் எங்களை உதாசீனப்படுத்துவீர்? என்றென்றும் உமது கோபம் நெருப்பைப் போல் எரியுமென்றார்கள். எமக்காக ஒரு தீக்குச்சி அளவு கூட எரிய மாட்டேன் என்கிறீர்கள். எங்கள் ஆயுள் எத்தனை குறுகியது என்பதை நினைவுகூரும். குறைந்த காலங்கள் வாழ்ந்து, மடியும்படியா நீர் எங்களைப் படைத்தீர். நீர் எங்கள் அரசனின் பகைவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தீர். போர்ப் பகைவர்கள், அவனை வெற்றிக்கொள்ள அனுமதித்தீர். எம் அரசன் யுத்தத்தில் வெல்ல நீர் உதவவில்லை. நீர் அவனை வெல்ல விடவில்லை. நீர் அவனைத் தரையில் வீசினீர். நீர் அவனது ஆயுளைக் குறைத்தீர். நீர் அவனை அவமானப்படுத்தினீர். கர்த்தாவே, உமது அன்பு என்றைக்கேனும் எங்களுக்காய் நிலைக்குமென உண்மையாகவே நான் நம்புகிறேன். கர்த்தருக்கே என்றென்றும் ஸ்தோத்திரம்! ஆமென், ஆமென்” என்றான். அப்போது புண்ணியனைச் சூழ்ந்து நின்ற சனங்கள் ஒரு முடிவை அறிவித்தனர். சுடலை எப்போது தங்களுக்கு கையளிக்கப்படுகிறதோ அன்றைக்கு இந்தவூருக்கு திரும்பலாம் என்றார்கள். புண்ணியன் இந்த முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை. இனியும் இடப்பெயர முடியாது, எல்லாத்துக்கும் ஒரு முடிவு கிடைக்கும் தானே என்றான். அவர்கள் ஒப்புக்கொண்டனர். அடுத்தநாள் பகல் முழுதும் தேவாலயத்திலேயே தனித்திருந்தான் புண்ணியன். சூரியன் வீட்டுக்கூரையில் தொங்கிநிற்பதைப் போல வெயில் உலர்த்தியது. வன்கவர் வெறிப்படையினர் குதிரைகளோடு ஊர் புகுந்தனர். வாசலில் உறங்கிக் கிடந்த செட்டித்தாத்தாவை குதிரைகள் மிதித்தன. அவர் சீவன் சிலிர்த்து அடங்கியது. செட்டித்தாத்தா கண்கள் மலர்த்தி வானத்தைப் பார்த்திருந்தார். சனங்கள் ஓலமெழுப்பி குதிரைகளை எதிர்த்தனர். சிப்பாய்கள் புண்ணியனைத் தேடினர். அவன் தேவாலயத்தில் இருப்பதை அறிந்து கொண்டு பாய்ந்து விரைந்தனர். தேவாலயத்தினுள்ளே அமர்ந்திருந்த அவனுக்கு குளம்படிகள் கேட்டன. சிப்பாய்கள் வருவது நன்றாகத் தெரிந்தது. ஆனாலும் அவன் அஞ்சவில்லை. நடப்பதை எதிர்கொள்ள காத்திருந்தான். உள்ளே நுழைந்தவர்கள் ஆயுதமுனையில் அவனை மண்டியிடப் பணித்தனர். சிலுவையைப் பார்த்தபடி முழந்தாளிட்டு அமர்ந்தவனின் பிடரியில் துவக்கின் குழல் அமைந்தது. கபாலத்தில் உலோகக் குளிர். சனங்கள் ஆர்ப்பரிப்போடு உள்ளே நுழைந்தனர். புண்ணியனை நோக்கிப் அன்னை மரியாக்கள் ஓடிவந்தனர். சிப்பாய்கள் அங்கிருந்து வெளியேறினர். முழந்தாளிட்டு அமர்ந்திருந்தவன் எழுந்திராமல் நெடுநேரமாக கண்களை நிலைகுத்தியிருந்தான். குண்டுமணி அத்தை அவனைத் தொட்டு “புண்ணியா, எழும்புடா செல்லம், நாங்கள் இந்த ஊர விட்டே போகலாம்” என்றாள். தலையை மேல் நோக்கிய அவன் கருவிழிக்குள் நெருப்புச் சுவாலை. அன்றிரவு புண்ணியனின் தலைமையில் ஊர், சுடலை நோக்கிச் சென்றது. செட்டித்தாத்தாவின் உடலத்தை சாக்குப் பையில் போட்டு மூட்டையாக்கினார்கள். குழந்தைகள் அழாமல் முலைகள் அவர்களது வாயிலேயே கிடந்தது. பாதையில் அரவமில்லை. புண்ணியன் எதிரே உருவமொன்று அசைந்தது. பின்னால் வருபவர்களுக்கு தொடுதல் மூலம் தகவல் சொன்னான். உருவம் எங்கே பதுங்கிற்று? புண்ணியன் மெல்லக் காலடி எடுத்து வைத்து யாருமில்லையென உறுதி செய்தான். பிறகு மீண்டும் நடக்கத் தொடங்கினார்கள். சுடலை எங்கே இருக்கிறதென அடையாளம் சொல்ல வந்த ஊத்தை மாமா இன்னும் கொஞ்சத் தூரம் போகவேண்டுமெனச் சொன்னார். அவருக்கு பூதவராயர் கோயில் கடந்து மூன்றாவது வளைவு என்பது ஞாபகம். அவர் வளைவை எட்டிய போது அடையாளம் காணமுடியவில்லை. திடீரென ஒரு வளவில் சிதையெரிந்து ஒளி ஊண்டியது. எல்லோரும் தெய்வச் செயல் என்றார்கள். அவ்விடம் நோக்கி எல்லோரும் ஓடினார்கள். சிதைக்கருகில் புண்ணியன் சென்றான். ஒற்றைக்காலுடன் சின்னாச்சி எரிந்து கொண்டிருந்தாள். இழந்துபட்ட கால்விரல்களை பொறுக்கி பொறுக்கித் தீயிலிடும் இன்னொரு சின்னாச்சி நிலத்தில் அமர்ந்திருந்தாள். புண்ணியன் அவள் சிதையை விழுந்து வணங்கி, செட்டித்தாத்தாவின் உடலத்தில் தீ எழுப்பினான். சனங்கள் ஊருக்குள் நுழைந்த போது குதிரைகளின் ஓலவொலி எழுந்தது. பெருந்தீ எழுந்தாடும் வெளிச்சம் ஊர் முழுதும் நிலைத்தது. சிப்பாய்கள் உறங்கிய ஆடைகளோடு வெளியேறி ஓடினர். முகாம் வாசலுக்கு சனங்கள் போயினர். தீ மூண்டு ஆயுதங்கள் வெடித்தன. சிப்பாய்கள் எரிந்துருகிச் சாம்பலாய் ஆனார்கள். போர்க்குதிரைகளின் மயிர் பொசுங்கும் வாடை கேணியடிக் கிராமத்தை அடைத்தது. வன்கவர் படையின் முகாமுக்கு முன்பாக, சின்னாச்சியை எரித்த ஸ்தலத்தில் ஒரு முலை தீக்குண்டாய் தகித்துக் கிடப்பதைப் பார்த்த குண்டுமணி அத்தை “அது எங்கட கண்ணகியின்ர இடது முலை. காலங்காலமாய் கவிந்த இருள் எரிக்கும் அமுதம், அதுக்குள்ள சுரக்குது என்றாள். அப்போது “ என் பிள்ளைகளே! குந்த ஒருபிடி நிலமும், எரிய ஒரு பிடிநிலமும் சொந்தமாய் வேணும். இல்லாட்டி அலைவு தான்” என்றொரு குரல் கேணியடியெங்கும் ஒலித்தது. https://akaramuthalvan.com/?p=12721 point- போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
போதமும் காணாத போதம் – 02 நான் வீட்டில் தங்குவதில்லை. கோயில் குளமென்று துறவியாக அலைந்தேனில்லை. ஈருருளியில் வன்னிநிலம் அளந்து மகிழ்ந்தேன். கம்பீரத்தில் அணையாத தணலின் சிறகுகள் என்னுடையவை. செல்லும் பாதைகள் தோறும் விடுதலையின் மகிழ்வு திகழ்ந்தது. “நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எம்மட்டோ, அம்மட்டும் நடந்து திரி உனக்கு அதைத் தருவேன்” என்று தம்மைத் தியாகித்த போராளிகளைக் கண்டு நெஞ்சுள் வணங்கினேன். அவர்களால் அளிக்கப்பட்ட வாழ்வின் முழுமையை உணர்ந்தேன். நண்பகல் வெயில் பூமியில் விரியும் போது மாவீரர் துயிலுமில்லங்களுக்குச் செல்வது பிடிக்குமெனக்கு. கல்லறைகளும் நடுகற்களும் பெருங்கனவின் உப்பளமாய் பளபளக்கும். மண்டியிட்டுத் தோற்றுப்போகத் தெரியாத ஆதீரத்தின் தணல் முற்றத்தில் அமர்ந்திருப்பேன். கண்ணீர் விம்மிக் கசியும். மேற்கில் மெல்லச் சூரியன் புதைந்தும் பிரகாசம் எழும். தியாகிகளின் மூச்சு மண்ணிலிருந்து விண்ணுக்கெனப் பாயும் தேவகணமது. அன்றைக்கு கிளிநொச்சியில் லேசாக மழை தூறியது. துயிலுமில்லத்திலேயே அமர்ந்திருந்தேன். தும்பிகள் நடுகற்களிலும் கல்லறைகளிலும் அந்தரத்தில் பாவி அசையாமல் நின்றன. விதைகுழிகளை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மண்வெட்டிகள், அலவாங்குகள், குழி அளவிடும் கயிறுகளென எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு கொட்டில் நோக்கி ஓடினர். நொடிகளில் திக்கெல்லாம் இடிமுழங்க, மின்னல் நகங்கள் புலன்கீறின. ஆவேசமுற்ற மழையின் கூர்வாள்கள் மூர்க்கமாய் மண்ணில் இறங்கின. நிரை நிரையாக வாய்பிளந்து காத்திருக்கும் விதைகுழிகளுக்குள் வான்மழை நிரம்பக் கண்டேன். துயிலுமில்லத்தின் முகப்பு வாயிலில் வித்துடல்ளைச் சுமந்த ஊர்திகளிரண்டு நுழைந்தன. ஊர்திகளிலிருந்து வித்துடல்கள் இறக்கப்பட்டு பீடத்தில் வைக்கப்பட்டன. அழுகுரல்கள் காலத்தின் மீதியைப் படபடக்கச் செய்தன. ஈரத்திலும் சிவந்த புலிக்கொடி அரைக்கம்பத்தில் பறந்தது. மாவீரர் விதைப்பு பாடல் ஒலித்தது. குண்டுகள் முழங்கின. மழை விடுவதாயில்லை. மண்ணைக் காத்தவர்களை மண் விதைத்தது. மாவீரர் துயிலுமில்லத்தில் விதைகுழி தயார்படுத்துவதற்கான ஊதியத்தைப் பெறுகையில் குற்றவுணர்ச்சியாக இருக்கிறதென பொறுப்பாளரிடம் திருப்பிக் கொடுத்து “நாட்டுக்காக நான் இதையேனும் செய்கிறேன், என்னை அனுமதியுங்கள்” என்றிருக்கிறார் ஒருவர். “இப்பவும் நீங்கள் நாட்டுக்காகத் தான் உழைக்கிறியள், ஊதியத்தை வாங்குங்கோ” பொறுப்பாளர் சொல்லி கையில் திணித்திருக்கிறார். இந்தச் சம்பவத்தை வீட்டிற்கு வந்திருந்த பொறுப்பாளர் அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார். குப்பிவிளக்கில் புகைகுடித்து கதை படித்துக் கொண்டிருந்த என்னுள்ளே அந்தப் பணியாளரின் பெயர் அப்படித்தான் தையலிட்டது. ஆரூரன். எத்தனையோ தடவைகள் அவரைப் பார்த்திருக்கலாம். புன்னகைத்திருக்கலாம். அவர் வசிக்கும் இடத்தை பொறுப்பாளரிடம் கேட்டுத் தெரிந்தேன். அதிகாலையிலேயே உருத்திரபுரத்துக்கு ஈருருளியை உழக்கி வீட்டை அடைந்தேன். வாசலில் அமர்ந்திருந்து சுருட்டுப் புகைத்த படுகிழவரொருவர் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு “என்ன விஷயம் மோனே” என்று கேட்டார். “ஆரூரனைப் பார்க்க வந்தனான்” “அவன் வாய்க்காலுக்கு குளிக்கவெல்லே போயிட்டான்” படுகிழவர் இருமி இருமி மூச்சுவிட்டார். “வாய்க்காலுக்கு எப்பிடி போக வேணும்” படுகிழவன் சொன்ன பாதையில் ஈருருளியை உழக்கினேன். வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த ஆரூரனைக் கண்டேன். ஏற்கனவே துயிலுமில்லத்தில் நிறையத் தடவைகள் பார்த்த முகம். சுருட்டை முடி. வெளிப்பிரிந்த பெரிய உதடுகள். கண்கள் தளும்பி அவரைக் கட்டியணைத்து கதைக்கத் தோன்றியது. மலர்கள் புன்னகைக்கும் அந்த விடிகாலைக்கு சொற்கள் அவசியமில்லாதிருந்தன. நறுமணம் உருகி கதிராக எழுந்தது. எதுவும் கதையாமல் அவரைப் பார்த்துவிட்டு திரும்பினேன். பிறகான நாட்களில் ஆரூரனும் நானும் நண்பர்களானோம். அமைதிப்படையினரால் சங்ஹாரம் செய்யப்பட்ட தந்தை, தாயினது உடலங்களை வீட்டினுள்ளேயே வைத்துப் போர்வையால் மூடிய போது இவருக்கு எட்டு வயதாம். பெற்றோரின் உடலங்களை புதைக்க முடியாமல் பூமியின் மேல் வைத்துவிட்ட காயத்தில் கொதித்தெழும்பும் சீழின் நொம்பலம் தாங்காது, எப்போதாவது “அம்மா” என்றழைத்து பெருமூச்சுடன் கண்ணீர் உகுப்பார். அப்போதெல்லாம் ஒரு துளி மழை பூமியில் விழும். “மேலயிருந்து அம்மா என்னை அழவேண்டாமெனச் சொல்லுறா” எனும் ஆரூரனை பல நாட்களுக்கு பிறகு வீரச்சாவு வீடொன்றில் சந்தித்தேன். திறக்கப்பட முடியாதபடி சீல் செய்யப்பட்டிருந்த பெண் போராளியின் வித்துடல் அங்கே கொண்டுவரப்பட்டது. இயக்கம் கடுமையான இழப்பைச் சந்திக்கும் போர்முனையாக மன்னார் மாறியிருந்தது. நிலத்தின் வீழ்ச்சியோசையின் முன் நிர்க்கதியாக நிற்கும் தனது காதுகள் செவிடாகவும், யுத்த ரதத்தின் சக்கரங்களில் சகதியாய் வழியும் வீரச்சாவுகளைக் கண்டு பதற்றமுறும் தனது கண்கள் குருடாகவும் ஆகட்டுமென இறையிடம் இரந்து கேட்பதாகச் சொன்னார். மூர்ச்சையாகி சில நொடிகளுக்கு பின்பு கலக்கமுற்ற கண்களைத் துடைத்துக் கொண்டு சிறுகச் சிறுக நம் சர்வமும் தீர்கிறது, ஒவ்வொரு நாளும் துயிலுமில்லத்திற்கு நாற்பதுக்கு மேற்பட்ட வித்துடல்கள் வருகின்றன. இரவிரவாக விதைகுழிகள் தயார்படுத்தப்படுகின்றன. பூமியைத் தோண்டத் தோண்ட வந்து விழும் கட்டிமண்ணைப் போல் வித்துடல்கள் பொலிகின்றன. பணியாளர் அணியிலிருந்த ஒருவரின் மகளும் வீரச்சாவு. விசுவமடு துயிலுமில்லத்தில் விதைப்பு நடந்தது என்றார். வன்னியில் மூன்றுக்கும் மேற்பட்ட துயிலுமில்லங்கள் இருந்தன. அப்படியெனில் ஒருநாள் என்பது எத்தனை எத்தனை விதைப்புக்களால் ஆனது என் தெய்வமே! நானும் ஆரூரனும் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் கோவிலுக்குச் சென்றிருந்தோம். அன்றும் கடுமையான மழை. வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. உள்ளூர் சனங்கள் கோவிலில் நிறைந்திருந்தனர். வானத்தைப் பிளந்த அசுர மழை எங்கள் பாதையை மூடியிருந்தது. இருவரும் கோவிலில் தங்கிவிடலாமென்று முடிவெடுத்தோம். எனக்கு உறக்கம் வரவில்லை. ஆரூரன் இரண்டு கைகளையும் கூப்பி கவட்டுக்குள் கொடுத்து குறண்டிக் கிடந்தார். “நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்; நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்” என்றுருகி பதிகம் பாடினேன். உறக்கம் வராவிடிலும் சோர்வு அழுத்தி தலை சாய்த்து சில நிமிடங்களில் திடுக்கிட்டு விழித்தேன். அருகில் உறங்கிக் கொண்டிருந்த ஆரூரன் பிதற்றியபடி விம்மி விம்மி அழுதார். உன்னதமான விடுதலையின் கோட்டைகள் கனவாகிக் கரையும் காலத்தில் கண்ணீரில் நனையுமொரு கனவு. ஆரூரன்…ஆரூரன் என்று தட்டினேன். ஆனால் கண் திறக்கவில்லை. சிலநிமிடங்கள் கழித்து புரண்டு படுத்தார். அழுகை நின்றிருந்தது. அரற்றல் தீர்ந்திருந்தது. கருவறை அகல் விளக்கில் அமர்ந்திருந்து நிலமெங்கும் மிரண்டு திணறும் சீவன்களை தான்தோன்றீஸ்வரர் பார்க்ககூடுமென ஆறுதலானேன். காலையில் எழுந்து ஊருக்குப் புறப்பட்டோம். வீதிகளில் வெள்ளம் வடிந்திருந்தது. அதன்பிறகு ஒருநாள் மைமலில் தேக்காங்காட்டு வீரபத்திரர் கோயிலடியில் சித்தியின் இளைய மகளான சுமதியக்காவைப் பார்த்தேன். அவளுக்கு மிக நெருக்கமாக ஆரூரன் நின்றார். அப்போதுதான் விஷயம் விளங்கியது. சுமதியக்கா ஒருகட்டு விறகைச் சுமந்து வரும்போது வீடுகளில் விளக்குகள் ஒளிரத்தொடங்கியிருந்தன. கொஞ்சம் கழித்து ஆரூரன் வீதியில் நடந்து போவதையும் பார்த்தேன். சில மாதங்களிலேயே இருவருக்கும் திருமணம் நடந்தேறியது. ஆரூரன், அத்தான் ஆனார். சுமதியக்கா என்னை அழைத்து “நன்றியடா தம்பி” என்றாள். “தேக்கங்காட்டு வீரபத்திரருக்குத் தான் நீங்கள் நன்றி சொல்ல வேணும், எனக்கு உங்கட காட்சி தந்தது அவர் தான்” என்றேன். வெட்கம் துளிர்த்து ஆரூரனின் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு “போடா காவாலிப் பெடியா” என்றென்னை செல்லமாக ஏசினாள். வற்றாப்பளை அம்மன் கோவிலுக்கு குடும்பத்தோடு சென்று வந்தோம். ஆழிப்பேரலையிலும் எதுவும் ஆகாத தேவாலயம் ஒன்றை முல்லைத்தீவில் பார்த்தோம். ஆரூரனுக்கும் சுமதிக்கும் நல்ல உருவப்பொருத்தமென்று பழச்சாமியார் சொன்னார். புதுத் தம்பதிக்கான விருந்து உபசரிப்புகள் நடந்து முடிந்தன. முகமாலை, மன்னார் களமுனைகள் தீப்பற்றி எரிந்தன. எதிரியின் தலைகள் கொய்து அடுக்கப்பட்டன. சூழ்ந்து கொண்டழிக்கும் எதிரியின் தந்திரங்களை வெற்றிகொண்டு சூரிய உதயத்திற்கு படையலாக்கினார்கள் போராளிகள். நடுங்கும் இரவுகளை எவன் தந்தானோ அவனுக்கே திருப்பியளிக்கும் கம்பீரத்தின் கலன்களால் நட்சத்திரங்களைப் பாயச் செய்தனர். எரிகல், பகை வீழ்த்தும் எரிகல் பல்லாயிரம் ஒளிர்ந்தன. சண்டமாருதம் தீராது பெருகியது. பகைத்திசையில் அசையும் ஒவ்வொன்றுக்கும் பெருவெடி. இத்தனையும் பழங்கதையோ என்றெண்ணும் வகையில் களச்செய்திகள் திகிலூட்டின. எம்மவர் வித்துடல்கள் பகைவசம் ஆகினதாய் ஒரு செய்தி. அறுபதிற்கும் மேற்பட்ட போராளிகள் ஒரே களமுனையில் சொற்ப நேரத்தில் கொல்லப்பட்டு விட்டார்கள் என்று வேறொரு செய்தி. எங்கும் வீழ்ந்து போகிறோம் எனும் துர் செய்தியால் சுற்றிவளைக்கப்பட்டிருந்தோம். வன்னி நிலம் வெற்றிகளை நினைவில் மீட்டி உளஉறுதி கொள்ள முனைந்தது. ஆரூரனை வீட்டில் சந்திக்கமுடியாது. துயிலுமில்லத்தில் கடுமையான வேலையில் இருந்தார். நாளுக்கு ஐம்பதிற்கு மேற்பட்ட வித்துடல்கள் வரத்தொடங்கியிருந்தன. சூடடிக்குமிடத்தில் நெற்கதிர்கள் குவிவதைப் போல களமெங்கும் வித்துடல்கள். நீலவானில் படர்ந்திருக்கும் மேகத்தின் கீழே துயிலுமில்லம் எப்போதும் தவிப்பின் வெளியாகி நம்பிக்கையை நழுவச் செய்தது. விதைகுழிகளை தயார்படுத்துபவர்கள் வியர்த்துச் சோரும் வரை பூமியை அளவிட்டுத் தோண்டினார்கள். கால்களைப் பார்த்து வைக்குமளவு விதைகுழிகள் நெருங்கியிருந்தன. எல்லோருக்குக்குள்ளும் கனமான காலமொன்று வால்சுருட்டிப் படுத்திருந்தது. மன்னார் களமுனை வன்கவர் படையினரால் முற்றாகக் கைப்பற்றப்பட்டது. போரரங்கின் இரும்புக்கதவுகள் பீரங்கிகளால் தகர்க்கப்பட்டன. இனிய அமுதென பாடிக் களித்திடும் விடுதலைப் பாடலை எத்தனை மரணத்தால் நிரப்பவேண்டும்? களமுனைகள் தொடர்ந்து பின்வாங்கின. இராணுவத் தந்திரோபாயம் என்பதெல்லாம் இருளுக்குள் நகரும் இரவெனப் பொய்த்தது. வெற்றிப்பரணி பாடிய வீதிகள் வெறிச்சோடின. திகைக்க கூட நொடியற்று வாயில்தோறும் ரத்தம் ருசிக்கும் போரே என்று எல்லோர் சித்தமும் வெறுத்தது. வீரம் காக்கும் தெய்வமே எம்மைக் காக்காது போனால் உன்னை ஊழ் உறுத்தும் என்று சபித்தபடி தேக்கங்காட்டு வீரபத்திரரின் பீடத்தை மண்வெட்டியால் தோண்டிக் கொண்டிருந்தார் ஆரூரன். நான் கூப்பிட்டும் அவரிடமிருந்து எந்த எதிர்வினையுமில்லை. குழியைத் தோண்டி முடித்து நிமிர்ந்து பார்த்தார். “என்ன பார்க்கிறியள், இதுவும் விதைகுழி தான்” “உங்களுக்கு என்ன மண்டைக் கோளாறா, கோயில்ல குழியைத் தோண்டிட்டு விதைகுழி, புதைகுழின்னு ஏதேதோ கதைக்கிறியள்” “தக்கன்ர சிரச கைவாளினால் அறுத்த வீரபத்திரர் எங்களைக் காப்பாற்றாமல் நிக்கேக்கயே அவர் வீரச்சாவு அடைஞ்சிட்டார் என்று உங்களுக்கு விளங்கேல்லையோ” என்றார். “ஆரூரன் தெய்வத்த அப்பிடிச் சொல்லக் கூடாது. அதுவும் இவர் அகோர வீரபத்திரர்” “இவர் மட்டுமா தெய்வம். இஞ்ச எங்களைக் காப்பாத்திற எல்லாரும் தெய்வம் தான். நான் இவரை எடுத்து விதைக்கப்போறன். நாளைக்கு இந்த இடமும் விடுபட்டு ஆர்மியோட வசமாகும். நாங்கள் எங்கட ஆக்களின்ர ஒரு வித்துடலையும் விதைக்காம விடக் கூடாது” வீரபத்திரச் சூலத்தை பீடத்திலிருந்து கிளப்பி விதைகுழிக்குள் வைத்தார். பூக்கள் சொரிந்தார். எனது கையாலும் ஒரு பிடிமண்ணள்ளிப் போடுமாறு சொன்னார். எங்களிருவரையும் உற்றுப் பார்த்தவாறு தேக்கங்காடு அசைந்தது. சில நாட்களிலேயே ஆரூரன் சொன்னது நடந்தது. வன்கவர் வெறியர்களின் வசம் வன்னியின் ஒரு பகுதி கைவிடப்பட்டது. பற்றியவனை கீழே விழுத்தி முறியும் கிளையென மாவீரர் துயிலுமில்லம் உட்பட கிளிநொச்சி முழுதும் பறிபோனது. நாங்கள் இழந்தது வாழ்வை மட்டுமல்ல விதைகுழிகளையும் வீரபத்திரர்களையும் தானென்றார் ஆரூரன். எங்களூரை விட்டு இடம்பெயர்ந்தோம். சுமதியக்கா சிறிய பதுங்குகுழியைக் காட்டி “கொத்தான் இதையும் விதைகுழின்னு நினைச்சுத்தான் வெட்டியிருப்பார்” என்று சொல்லிச் சிரித்தாள். முள்ளிவாய்க்காலில் நாங்கள் எல்லோரும் ஒன்றாகவிருந்தோம். ஒருநாள் இரவு ஆரூரன் கனவு கண்டு திமிறி எழுந்து கதறி அழுதார். பக்கம் பக்கமாகவிருந்த அனைவரும் பதுங்குகுழிகளுக்குள் விழித்தனர். நான் அவரை இறுக்கிப்பிடித்தபடி ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்றேன். “அங்க விதைகுழியெல்லாம் மூடாமல் கிடக்கு, புழு நெளியுது. என்ர மனிசியின்ர வயித்துக்குள்ள விதைகுழி ஆழமாகுது” என்று தொடர்பற்று பிதற்றி ஓய்ந்து உறங்கினார். காலையில் முந்தியெழும்பியவர் என்னைத் தட்டியெழுப்பினார். உறக்கக் கலக்கத்தோடு என்னவென்று கேட்டேன். “ஒரு கனவு கண்டனான். வயித்துக்குள்ள குழந்தை, கால் மடக்கி நீந்துது. என்னைப் பார்த்து கைகளை நீட்டுது. நானும் நீட்டுறன். அப்ப ஒரு விதைகுழியை கிழிச்சுக் கொண்டு பூமியை நோக்கி குழந்தையோட கை நீளுது. அந்தக் கையில மூன்று விரல்கள் மட்டும் சூலம் மாதிரியிருக்கு. பக்கத்து விதைகுழிக்குள்ள ஆயிரம் வீரபத்திரச் சூலம் நெருப்பில் தகதகத்துக் கிடக்கு” என்றார். ஆரூரனுக்குத் தொடர்ச்சியாக விதைகுழிக் கனவுகள் வந்தன. பேரழிவுகள் நிகழ்ந்த வண்ணமிருந்தன. முள்ளிவாய்க்காலில் பலியுறும் மனுஷத்துவத்தின் குருதியாறு இந்து சமுத்திரத்தில் காட்டாறாய் கலந்தபடியிருந்த பெளர்ணமி இரவொன்றில் பதுங்குகுழிக்குள்ளிருந்த சுமதியக்காவின் அழுகுரல் தீனமாய் ஒலித்தது. பதுங்குகுழியில் மல்லாந்து கிடந்த ஆரூரனின் கண்கள் வானத்தை வெறித்தபடி அசையாதிருந்தன. வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் பெருகிய குருதியை சுமதியக்கா அளைந்தழுது தனது கர்ப்ப வயிற்றின் மீது தடவிக் கொண்டாள். ஆரூரனுக்கு ஒருபிடி மண்ணை அள்ளி போட்டதும் சுமதியக்காவை இன்னொரு பதுங்குகுழிக்கு அழைத்துச் சென்றார்கள். ஆரூரனின் புதைமேட்டினை போர்வையால் மூடினேன். பிறகு சில நாட்களிலேயே எங்களை வீழ்ச்சி முற்றாக மூடியது. செட்டிக்குளம் முகாமில் சுமதியக்காவுக்கு பெண் குழந்தை பிறந்தது. கொற்றவை என்று அவளுக்கு பெயர் சூட்டினேன். கூடாரத்திற்குள் சேர்ந்திருந்து எல்லோரும் கொற்றவை என்று சத்தமாக அழைத்தோம். வெளியே இடியும் மின்னலுமாக மழை பெய்யத்தொடங்கியது. கொற்றவை தனது இரண்டு கைகளையும் வான் நோக்கி நீட்டி கால்களால் வெளியை உதைந்தபடி உறங்கினாள். வருடங்களுக்கு பின் சொந்தவூரில் மீளக்குடியமர்த்தப்பட்டோம். ஆரூரனை புதைத்த இடத்திற்கு கொற்றவையை அழைத்துச் சென்றேன். இடத்தை அடையாளம் காண்பது சிரமமாயிருந்தது. ஆனாலும் அந்தப் போர்வை உக்கிக் கிழிந்து கொஞ்சம் மிஞ்சிக் கிடந்தது. கொற்றவையை தூக்கிச் சென்று உன் தந்தை இதற்குள் தான் இருக்கிறார் என்றேன். அவள் தன்னுடைய பிஞ்சுக்கரங்களால் மண்ணைத் தோண்டத் தொடங்கினாள். கண்கள் சிவந்து கனத்திருந்த அவளின் உக்கிரம் மீட்சியாகவிருந்தது. பெளர்ணமி நாளின் நள்ளிரவில் கொற்றவையை படுக்கையில் காணவில்லை. சுமதியக்காவின் ஒப்பாரி ஊரை எழுப்பியது. கொற்றவையை எல்லோரும் தேடி அலைந்தனர். தேக்கங்காட்டு வீரபத்திரர் கோயிலுக்கு விரைந்தோடினேன். நானும் ஆரூரனும் விதைத்த சூலத்தை கைகளில் ஏந்தி அமர்ந்திருந்த கொற்றவை வளர்ந்திருந்தாள். அவள் கூந்தலில் பூக்கள், கைகளில் வளையல்கள், கழுத்தில் புலிப்பல் தாலி. அவள் மங்கலம் கொண்ட குமரியாக அமர்ந்திருந்தாள். தேக்கங்காடு முழுதும் விதைகுழிகள் தோன்றி சூலங்கள் எழுந்தன. எல்லாச் சூலங்களிலும் சுடர் ஏற்றி நடுவே அமர்ந்திருந்தார் ஆரூரன். கொற்றவை சொன்னாள், “அப்பா, என்னை அம்மா தேடுகிறாள்” “ஆமாம் கொற்றவைத் தாயே! உனக்காகத்தான் தாய்மாரும் காத்திருக்கிறார்கள். நானும் காத்திருக்கிறேன். கெதியாக வா” என்ற குரல் ஒலித்தது. தாய்நிலத்தின் அழைப்பில் போர் மகள் சிலிர்த்தாள். பெளர்ணமி பொலியும் வெளிச்சத்தில் விதைகுழிகள் நிறைந்திருந்த தேக்கங்காட்டு மண்ணெடுத்து உடலெங்கும் பூசிக்கொள்ளச் சுட்டதென் குருதி. https://akaramuthalvan.com/?p=10471 point- போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
போதமும் காணாத போதம் – 01 October 2, 2023 வீரயுகத்தின் அந்தி நந்திக்கடலில் சாய்ந்து ஆண்டுகள் இரண்டாகியிருந்தன. செட்டிக்குளம் அகதி முகாமில் அடைக்கப்பட்டு பலாத்காரங்களுக்கும் வன்முறைக்கும் உள்ளான சொற்ப சனங்கள் சொந்தவூர்களுக்கு மீளக்குடியமர்த்தப்பட்டனர். வரிசையில் நிற்க வைத்து அடையாளங்களைச் சரிபார்த்து ஆவணங்களை தருவித்து இராணுவப் பேருந்துகளில் அவர்கள் ஏற்றப்பட்டனர். செத்துப்போனாலும் சொந்தக் காணியில் சாகவேண்டும் என்பவர்களுக்கு நிம்மதி திரும்பிற்று. ஒரு பெருங்கனவு சிதைந்து உருக்குலைந்து மண்ணோடு மண்ணாகியிருந்தது. அளவற்ற தியாகமும், உயிரிழப்பும் அந்த மண்ணில் வெறித்திருந்தது. சொந்தவூரில் இறக்கிவிடப்படும் வரை அம்மாவோ அக்காவோ எதுவும் கதையாமல் வந்தனர். வழிநெடுக பனைகள் தலையற்றும் நிமிர்ந்து நின்றன. வீட்டுக்கு முன்பாக இறக்கிவிடப்பட்டோம். புதர்கள் மண்டிக்கிடந்தன. வீட்டுக் கூரையில் கறையான் படை. சுடுகாட்டமைதி. வாசலற்ற வீடு. சொந்த வீட்டினுள் செல்வதற்கு வழியற்று நின்றோம். எந்தத் துயரத்திலும் கண்ணீர் சிந்தாத அம்மா தனது காலடி மண்ணை இரண்டு கைகளாலும் அள்ளி வான் நோக்கி எறிந்து கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். அது சாபமோ, பிரார்த்தனையோ யாரறிவார்? காணியைத் துப்புரவு செய்வது அவ்வளவு கஷ்டமாயிருக்கவில்லை. இரண்டு காட்டுக்கத்திகளாலும் மண்வெட்டியாலும் மரங்களையும் புதர்களையும் புரட்டிப்போட்டோம். வீட்டினுள்ளே எழுந்திருந்த பாம்பு புற்றுக்களை எதுவும் செய்யாமல் அடுத்தநாள் பார்த்துக் கொள்ளலாம் என்றாள் அம்மா. பார்த்தீனியத்தின் நாற்றம். இரவானதும் மாமரத்தின் கீழே அம்மாவும் நானும் அக்காவும் படுத்துக் கொண்டோம். நான்கு வருடங்களுக்குப் பிறகு சொந்தக் காணியில் நித்திரையாவது கனவெனத் தோன்றியது. அம்மாவுக்கு நித்திரை வரவில்லை. அவள் லாம்பைத் தீண்டி வைத்துவிட்டு எழுந்திருந்தாள். காற்றில்லாத இரவு. அம்மாவிடம் அனலின் விறைப்பு. அவள் மெல்ல எழுந்து கிணறு நோக்கிப் போனாள். வெட்டப்பட்ட செடிகளும், புற்களும் கும்பியாகி கிடந்தது. என்ன தோன்றியதோ! லாம்பிலிருந்து மண்ணெண்ணையை ஊற்றி கும்பியில் தீ வைத்தாள். அந்த இரவுக்கு அப்படியொரு வெளிச்சம் தேவையாகவிருந்தது. தீயின் சடசடப்பு பச்சையத்தில் எழுந்தது. அக்கா பயந்தடித்து நித்திரையிலிருந்து எழுந்தாள். புன்னகைத்தபடி நெருப்பு என்றேன். ஏற்கனவே சித்தம் குழம்பியிருந்த அவள் வெளிச்சத்தைப் பார்த்து வெருண்டிருந்தாள். நந்திக்கடலில் இறப்பதற்கு விஷம் தேடி அலைந்து களைத்தவள் அக்கா. “ஊழியில சாவு வாய்ப்பதெல்லாம் ராசியடி மோளே” என்று ஆச்சி சொல்லியும் அவள் கேட்கவில்லை. அக்காவுக்கு சித்தம் குழம்பியதை அம்மாதான் முதலில் உணர்ந்தாள். ஆனால் என்னிடமோ யாரிடமோ அதனைச் சொல்லாமல் தவிர்த்தாள். முள்ளிவாய்க்கால் நாட்களில் கட்டுப்படுத்தமுடியாமல் போயிற்று. பதுங்குகுழிக்குள் இருந்தபடி வெறித்துப் பார்த்து அழுவாள். யாரேனும் சமாதானம் சொன்னால் வெளியே எழுந்து ஓடுவாள். பிறகு அந்தக் கூடாரங்களுக்குள் அவளைக் கண்டுபிடிப்பது பெரியதொரு வாதை. என்னிடமொரு பழங்கால செபமாலையிருந்தது. டச்சுக்காரர்களின் தேவாலய அருங்காட்சியத்திலிருந்து அதனைக் களவாடியிருந்தேன். எங்கு சென்றாலும் என்னோடு வருகிற நிழலது. அக்காவின் கழுத்தில் அதனை விளையாட்டாக அணிவித்து உனக்கு வடிவாக இருக்கிறது என்றேன். அவள் சிலுவையைப் பிடித்து அறுத்தாள். செபமாலையை பதுங்குகுழிக்கு வெளியே எறிந்துவிட்டு “போடா கள்ளா” என்று அழத்தொடங்கினாள். சாவுகள் மலிந்து விளைந்த படுகளத்தில் தற்கொலை செய்து உயிரை மாய்க்க எண்ணி பலமுறை முயன்றும் தோற்றாள். ஒருநாள் இரவு அவளைப் பதுங்குகுழியில் காணாமல் தேடித்திரிந்தோம். நீரடர்ந்த குளத்து ஒற்றைப்பனையின் கீழே நின்றாள். அவள் இன்னும் நந்திக்கடல் வீழ்ச்சியை அறியவில்லை. எரியும் நெருப்பைப் பார்த்தபடி அம்மா….அம்மா என்று கூப்பிட்டாள். எந்த அசைவுமின்றி எரிந்தசையும் ஒளியின் முன்னே இரவு முழுவதும் நின்றாள் அம்மா. அடுத்தநாள் காலையில் மீண்டும் துப்பரவு பணிகளைத் தொடங்கினோம். வீட்டினுள்ளே இருந்த புற்றை வெட்டியெறிந்தோம். பாம்பில்லை. புற்று மண்ணை அம்மா பத்திரமாக எடுத்து வைத்தாள். காணி கொஞ்சம் வடிவெய்தியிருந்தது. கிணறு இறைக்க வேண்டும். வீடு வேயவேண்டும் என பெரிய பட்டியல் போட்டோம். நாங்கள் இடம்பெயர்கையில் மண்ணுக்குள் புதைத்து வைத்த அம்மிக்கல்லையும், சில பொருட்களையும் எடுக்கலாமென்று அகழ்ந்தோம். எல்லாமும் இருந்தது. இரண்டு பெரிய புகைப்பட அல்பங்கள் பொலித்தீன் படையால் காக்கப்பட்டிருந்தது. அக்கா ஒவ்வொன்றாக எடுத்துப் புரட்டினாள். வீரயுகத்தின் நாயகர்கள் பலர் உயிர்ப்புடன் இருந்த புகைப்படங்கள். அக்கா எல்லோரையும் பார்த்து புன்னகை செய்து, அவர்களின் பெயர்களையெல்லாம் மறவாமல் சொன்னாள். அம்மிக்கல்லை எடுத்து தென்னைமரத்தின் கீழே வைத்தோம். அம்மியில் அரைத்த சம்பலும், ரொட்டியும் சாப்பிடவேண்டுமென சொன்னேன். அம்மா சரியென்று தலையசைத்தாள். அன்றைக்கு வெளியில் அடுப்பு மூட்டி, மாவைக் குழைத்து ரொட்டி சுட்டோம். சம்பலுக்கு வெங்காயம் போடாமல் வெறும் மிளகாயை தேங்காய்ப் பூவோடு அரைத்தோம். அக்கா நன்றாகச் சாப்பிட்டாள். அவளுக்கு ஏதோ பேய் பிடித்திருக்கிறது என்றாள் அம்மா. ஊரில் ஏனையோரும் தங்களது வீட்டையும் வளவையும் சீராக்கியிருந்தனர். பொதுக்கிணற்றை எல்லோரும் பணம் போட்டு இறைத்துச் சுத்தம் செய்தனர். கள்ளருந்திக் கூத்திசைக்கும் கனவான்கள் பனைமரங்களின் பாளையைச் சீவி முட்டியைக் கட்டிக் காத்திருக்கத் தொடங்கினர். கள்வெறிக்கு நிகர்த்த இன்பம் ஈழருக்கு வேறில்லை. காவோலையில் கருவாட்டைச் சுட்டு இரண்டு தூசணங்களோடு பொழுதை மங்கலமாக்கும் அப்புமார் பனைக்கு கீழே அமர்ந்திருந்து கதையளந்தனர். வசந்தம் வருமென்றில்லை, ஆனாலும் நாம் பூப்போம் என்பதைப் போல பெண்கள் கூந்தல் நனைத்து வழிநெடுக காற்சங்கிலி ஒலிக்க நடந்து போயினர். கனரக ஆயுதங்களின் வெற்றுக் கோதுகளைச் சேமித்து பூஞ்செடிகளை நட்டுவைத்து சின்னஞ்சிறுசுகள் தங்களை ஆமி இயக்கமாய் பாவித்து சண்டை செய்து விளையாடினர். கிளித்தட்டு விளையாடும் இளையோர்கள் வேர்த்தொழுக மறிக்கின்றனர். அடிக்கின்றனர். இரவானதும் விளக்குகள் திரி குறைக்கப்பட்டு வீடுகள் குளிர்கின்றன. வெறுமை அழிந்து உடல்கள் இன்பம் நுகர்கின்றன. காற்றில் ஈரம் திரும்புகிறது. கிளைகளில் அசையும் மலர்களில் தேன் அடர்ந்து திரள்கின்றது. ஊரில் மனுஷ வாசனை தளும்பத் தளும்ப முட்டிகளில் கள் நிரம்பிற்று. ஒரு மாதத்தில் வீட்டை திறமாகச் சரிப்படுத்தியிருந்தோம். அக்காவும் நானும் யாழ்ப்பாணத்திலுள்ள பெரியம்மா வீட்டுக்குச் சென்றிருந்தோம். அம்மா மட்டுமே வீட்டிலிருந்தாள். ஒரு குழம்பும் சோறும் வைத்துச் சாப்பிடுவது அவளுக்கு போதுமானதாக இருந்தது. உறைப்புக்கு கொச்சி மிளகாய் காய்த்திருந்தது. ஒருநாள் சந்தைக்குச் சென்று திரும்புவதற்குள் அம்மாவைத் தேடி வந்திருந்த ஆச்சியொருத்தி வீட்டின் முன்னால் குந்தியிருந்துள்ளாள். நடுவெயில் வெக்கை வீச தலைவிரிகோலமாய் வெள்ளைச் சீலை உடுத்தியிருந்த ஆச்சியைப் பார்த்த ஊரவன் “ஆரன வேணும்” என்று கேட்டிருக்கிறார். ஆச்சி வீட்டைக் காண்பித்து “இவள் தான்” என்றிருக்கிறாள். “சந்தைக்குப் போயிட்டாள். வரப்பிந்தும். அவள் வருகிற வரைக்கும் என்ர வீட்டில வந்து இருங்கோ. அவள் வந்ததும் இஞ்ச வரலாம்” “அவள் வரட்டும். நான் இதிலையே இருக்கிறன்” “நீங்கள் எங்க இருந்து வாறியள்” “உதில இருந்துதான். நடந்து வந்தனான்.” “உதில எண்டால் எங்க” “எனக்கு சரியான பசி. அவளைச் சோறு கொண்டுவந்து தரச் சொல்லு. என்னைக் கொஞ்சம் குளிப்பாட்டச் சொல்லு. நான் வெளிக்கிடுறன்” என்றெழுந்த ஆச்சியின் வெண்கூந்தல் மண்வரை நீண்டு, அவளது தடத்தையே அழித்திருக்கிறது. “எங்க இருந்து வந்தனியள், உங்கட பேர் என்ன, எதுவும் சொல்லாமல் போனால், அவளிட்ட நான் எப்பிடிச் சொல்லுவன்” என்று கேட்ட ஊரவனைப் பார்த்து “நீ அவளிட்ட சூலக்கிழவி வந்தனான் என்று சொல்லு, என்னை நல்லாய்த் தெரியும்” என்றிருக்கிறாள். ஊரவன் அவளுடைய பதிலைக் கேட்டு உறைந்து நின்றார். முன்னே நடந்து சென்றவள் வெயிலானாள். கண்கள் கூசுமளவுக்கு வெளிச்சம் வந்தடைந்த ஊரவன் மயக்கமுற்று வீதியில் விழுந்தான். அம்மா வீட்டுக்கு வந்ததும் இந்தச் செய்தியை அவரே சொன்னார். “உன்னைத் தேடி சூலக்கிழவி வந்து தனக்கு பசிக்குதாம், குளிக்க வேணுமாம், வந்து பார்க்க சொல்லுது” என்றார். அம்மாவிடம் அந்தத் தகவலைச் சொன்னதும் ஊரவனுக்கு இந்தச் சம்பவத்தின் அனைத்து துளிகளும் மறந்து போயிற்று. விஷயத்தைக் கேள்விப்பட்டதும் ஆற்றாமையும் சந்தோசமும் பொலிந்த அம்மா கொட்டடி காளி கோயிலை நோக்கி ஓடினாள். வழிநெடுக அவள் காளியை நோக்கி ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தாள்.“இஞ்ச உள்ள ஒருத்தரிட்டையும் வராமல் என்ர வீடு தேடி வந்த உனக்கு நான் என்ன செய்வேன். என்ர ஆச்சியே” என்றபடி கோயிலிருக்கும் இடத்தை அடைந்தாள். சதுப்புக் காணியில் வெள்ளம் தேம்பி நின்றது. புதர்களும் செடிகளும் மண்டி வளர்ந்திருந்தன. காளி செடிகளுக்குள் புதைந்திருந்தாள். ஓடுகளற்ற கோயில் கூரையையும் கொடிகள் சடைத்து பிடித்திருந்தன. ஆழமிக்க தண்ணீரில் இறங்கி நடந்தாள். எதற்கும் அஞ்சாதவள் தாய். உக்கிரம் பெருகி தளும்பித் தளும்பி அழுதபடி புதர்களை பிடுங்கி எறிந்தாள். ஈரச்சருகுகளின் வாசனையும் பூச்சிகளும் குமைந்து கிடந்தன. வெடிக்காத எறிகணையொன்று குத்திட்டிருந்து. துருவேறிய அதன் மேற்பரப்பில் லட்சோப லட்ச சனங்களின் குருதியுறைவு. காளியின் பீடம் தகர்ந்திருந்தது. எங்களுடைய குலத்தின் விலா எலும்பு சூலம். எங்கே எங்கள் விலா எலும்பு! அம்மா பிய்த்துக் கொண்டு அலறினாள். விஷப்பூச்சிகள், எதையும் பொருட்படுத்தாமல் சருகுகளை கைகளால் அகற்றினாள். ஒரு படை விலக இன்னொரு படை. சருகுகள் அழுகிக் கிடந்தன. நாற்றம் குமட்டியது. முறிந்து துருப்பிடித்த சூலத்தை கண்டெடுத்து நெஞ்சோடு அணைத்து “என்ர ஆச்சி, உன்னைக் கைடவிடமாட்டேன்” என்ற அம்மாவின் குரல் பேரிகையாக ஒலித்தது. அவளது இரு கால்களுக்குமிடையால் துயின்றிருந்த நாகமொன்று படமெடுத்தபடி அசைந்து அருளியது. மண்ணில் சரிந்திருந்த சூலத்தை நிமிர்த்தி ஊன்றிய அம்மா, புதர்களில் மலர்ந்திருந்த செங்காந்தள் மலர்களை ஆய்ந்து படைத்தாள். சூலத்தில் சூட்டப்பட்ட செங்காந்தள் மலர்களின் நெருப்பு இதழ்கள் கனன்று நிறத்தன. வளவை மொத்தமாய் துப்புரவு பண்ணி, அடுத்தமாதமே பூசையைத் தொடங்கவேண்டுமென எண்ணம் தகித்தது. ஊழியுண்ட பெருநிலத்தின் மீதியாய் தன்னைப் போலவே காளியும் காந்தள் மலர்களோடு வெறித்திருப்பதை அவளால் ஏற்கமுடியாதிருந்தது. தெய்வமும் வாழ்வுக்கு மீளட்டுமென்று மண்ணை வேண்டிக்கொண்டு புறப்பட்டாள். கொட்டடி காளி காந்தள் மலர்கள் சூடி நின்ற அன்றிரவு அம்மா விளக்கு வைத்தாள். வெகு விரைவிலேயே கோவில் வளவைத் துப்பரவு செய்து வழிபாடு தொடங்கியது. முறிந்து போன சூலத்தை வைத்து வழிபடுவது ஊருக்கு நல்லதில்லை என்று பலர் சொல்லியும் அம்மா கேட்கவில்லை. அதே சூலம் புளிபோட்டு மினுக்கி மீண்டும் வழிபடு பீடத்திற்கு வந்தது. காந்தள் மலர்கள் மீண்டும் சூடப்பட்டது. கொட்டடி காளிக்கு இப்போது காந்தள் காளி, கார்த்திகைப் பூ காளி எனப் பலபெயர்கள். கோயிலை ஒட்டியுள்ள சதுப்பு நிலத்தில் எல்லா மாதங்களிலும் காந்தள் பூக்கள் மலர்கின்றன. அது காளியின் அற்புதம் என்கின்றனர் சனங்கள். நீண்ட வருடங்களின் பின்னர் காந்தள் காளி அம்மாவின் கனவில் வந்தாள். அவளுடைய முகத்தில் ஒருவித உலர்ச்சியிருப்பதைக் கண்ட அம்மா “ஏதேனும் உடம்பு சுகமில்லையா” என்று கேட்டாளாம். காளி ஓமென்று தலையசைத்திருக்கிறாள். என்னவென்று கேட்க காளி பதில் சொல்லாமல் உம்மென்று இருந்திருக்கிறாள். சித்தம் பிசகிய அக்காவிடம் கனவைச் சொல்லிக்கொண்டிருந்தாள் அம்மா. எல்லாவற்றையும் கேட்ட அக்கா, தன்னுடைய கனவிலும் காளி வந்தாள் என்றாள். அம்மா திகைப்புற்று “என்ன சொன்னவா” என்று கேட்டாள். “காளிக்கு ஒரு காயமிருந்திருக்கு. ஷெல் காயம். ஒரு பீஸ் துண்டு காளியின்ர தலைக்குள்ள இப்பவும் இருக்கு. வெயில் நேரத்தில அது குத்தி நோக வெளிக்கிடுது. மண்ட பீஸ். காளி அதை நினைச்சு பயப்பிடுறா” என்றாள் அக்கா. அம்மாவுக்கு வந்த கோபம் ஆறாமல் “போடி விசரி, உனக்குத் தான் மண்ட பீஸ்” என்றாள். “அதுதான் நானும் சொல்றேன். காளிக்கு மண்ட பீஸ். கொட்டடி காளிக்கு மண்ட பீஸ்” என்று அக்கா அரற்றத் தொடங்கினாள். அப்போதும் சூலம் மண்ணில் நிமிர்ந்து நிற்க காந்தள் மலர்கள் கனன்று மலர்ந்தன. https://akaramuthalvan.com/?p=8471 point- ஈழத்தமிழர் அரசியல்
0 pointsஎன்ன செய்வது? வரலாறு தெரியாத மூடக்களுக்கு யாராவது வரலாற்றை எழுதித்தான் ஆகவேண்டி இருக்கிறது. இன்றிருக்கும் அடக்குமுறையும், ஆக்கிரமிப்பும் சுதந்திரத்திற்குப் பின்பிருந்தே இருந்து வந்தது என்பதும், அதனாலேயே தமிழர்கள் ஆயுதமேந்தினார்கள் என்பதும் இந்த வீணர்களுக்கும், சந்தர்ப்பவாதிகளுக்கும் தெரியப்போவதில்லை. மேற்குலக மயக்கத்தில், மத அடிப்படைவாதத்தின்பால் உந்தப்பட்டு, அடக்குமுறையாளர்களுக்கு ஒத்தூதி அப்பாவிகளின் விடுதலைக்கான போராட்டத்தைப் பயங்கரவாதம் என்று எள்ளி நகையாடும் கோடரிக் காம்புகள் ஒரு இனத்தின் இருப்புக் குறித்துப் பேசும் எந்த அருகதையும் அற்றவர்கள். மற்றையவர்களுக்கு அரசியற்பாடம் எடுப்பதை இந்த அற்பர்கள் முதலில் நிறுத்தட்டும்.0 points - ஈழத்தமிழர் அரசியல்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.