பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை -1 கார்த்திக் டிசம்பர் 22, 2024 மூலம் : யமுனா ஹர்ஷவர்த்தனா தமிழாக்கம் : கார்த்திக் திருமதி. யமுனா ஹர்ஷவர்த்தனா அவர்கள் எழுதி கிரி ட்ரேடிங் நிறுவனம் வெளியிட்ட ” Once upon a Time Thousands of years ago “ என்ற ஆங்கில புத்தகத்தின் மொழிபெயர்ப்பு இது. மஹாபாரத கதைகளின் தொகுப்பே இந்த நூல். ஆனை முகத்தோனுடன் ஓர் ஒப்பந்தம் உலகின் தலைச்சிறந்த காவியத்தை எழுதுவதற்கான நேரம் அது , வரலாற்றை சந்ததியருக்காக ஆவணப்படுத்தப்பட வேண்டிய நேரம். மீனவப் பெண்ணான சத்யவதிக்கும், பராசர முனிவருக்கும் பிறந்த கரிய நிறத்தை கொண்ட ரிஷி கிருஷ்ண த்வைபாயனா அந்தப் பொறுப்பை தனதாக்கிக் கொண்டார். பரந்த வேதங்களை படிப்பதற்கும் அடுத்த தலைமுறைகளுக்கு தொகுத்து வழங்கவும் வசதியாக தொகுத்து மூன்றாக வகைப்படுத்தியதால் வேத வியாசர் என்றழைக்கப்படும் கிருஷ்ண த்வைபாயனா இந்த மிகப் பெரிய வேலையை எப்படி செய்து முடிப்பது என்ற சிந்தனையில் ஆழ்ந்தார். வரலாறு மிக நீண்டதாக ஐந்து தலைமுறைகளை உள்ளடக்கியதாக இருந்தது;விவரிப்பு மிக கடினமானதாக நூற்றுக்கணக்கான நபர்கள் மிக முக்கிய பாத்திரங்களில் கொண்டதாகவும் இருந்தது. கதாபாத்திரங்களின் உளவியல், சூழ்நிலைகளின் உளவியல் ; விவரிப்பின் மூலம் சொல்லப்படவேண்டிய சூழ்நிலைகள் என அவர் முன் இருந்த பணி கடினமாய் இருந்தது. கதை விவரிப்பு சுருக்கமாய் கச்சிதமாய் இருக்க வேண்டும். அதே நேரத்தில் எதையும் விட்டுவிடக்கூடாது. ஏனெனில், இந்த காவியம் , மனிதர்களை என்றும் வழிநடத்தக் கூடியது , இந்தக் காவியத்தில் இருக்கும் எண்ணற்ற பாத்திரங்களின் மூலம் ஒவ்வொருவரும் தன்னை மீட்டெடுப்பர், இந்த கதை, ஒருவரின் வாழ்வின் பாதையையே மாற்றக் கூடிய ஒன்றாகும். முன்னிருந்த வேலை கடினமானது. மீண்டும் நினைவுப்படுத்தி, நியாயப்படுத்தி தொகுத்து அதை எழுதுவது என்பது மனிதனால் ஆகக் கூடிய விஷயமில்லை என்பது வியாசருக்கு தெரியும். எனவே தெய்வத்தின் உதவியை நாட முடிவு செய்து ஆனைமுகனை பிரார்த்தித்தார். ” கணேசா ! பிரணவ வடிவானவனே ! என்னுடைய தாழ்மையான வணக்கங்களை ஏற்றுக்கொள். மனிதகுலத்தின் நன்மைக்காக , மஹாபாரதம் எழுதப்பட்டு காப்பற்றப்படவேண்டியது நம்மின் கடமையாகும். இதற்காய் , உன் உதவி வேண்டி வந்துள்ளேன். கருணை வடிவானவனே ! மஹாபாரதம் எழுத ஒப்புக் கொண்டு என்னை சிறப்பிப்பாயாக…” “வ்யாஸா ! நீ என்னிடம் இந்த உதவி கேட்டதற்கு நான் மிகவும் மகிழ்கிறேன். ஆனால்,எவ்வளவு சிறப்பானதாக இருந்தாலும், உன் குடும்பக் கதையை உன்னருகில் உட்கார்ந்து நீ சொல்வதாய் என்னால் காத்திருக்க இயலாது, எனக்கு அவ்வளவு நேரமும் இல்லை ” என்றார் கணேசர். சிறிதும் இடைவெளி இன்றி கதையை சொல்லி செல்ல இயலாது. ஏனெனில் வரிகளை யோசிக்க அவருக்கு நேரம் வேண்டும் என வியாசர் அறிவார். விக்னேஸ்வரன்* மிகக் கடினமான நிறைவேற்றுவதற்கு கடினமான நிபந்தனையை விதிக்கிறார் என்பதையும் வியாசர் அறிவார். ஆனால் பல வருட தவத்தின் பயனாக கிடைத்த இந்த வாய்ப்பை வீணடிக்க அவர் விரும்பவில்லை. எனவே அவர் விநாயகரிடம் வேண்டினார், ஞான ஸ்வரூபனே நீ இல்லாமல் உலகில் ஞானம் என்பது இல்லாமல் போய்விடும். உங்கள் ஞானத்தின் உதவியால் நான் வரிகளை தொகுத்து சொல்கிறேன். இந்த எளியவன் சொல்வதை நீங்கள் புரிந்து கொண்டு எழுதும் வரையில் நான் இடையில் நிறுத்த மாட்டேன் என உறுதி அளிக்கிறேன். கஜானனர் இதற்கு ஒத்துக்கொண்டார். வியாசர் சொல்ல சொல்ல, அவர் தந்தத்தை ஒடித்து அதை எழுதுகோலாகக் கொண்டு பனை ஓலைச் சுவடிகளில் எழுதத் துவங்கினார். இடையில் வியாசர் கொஞ்சம் கடினமான வரிகளைக் கோர்த்து தர அதை புரிந்து கொண்டு விநாயகர் எழுத ஆகும் இடைவெளியில் அடுத்த அடுத்த வரிகளை அமைத்துக் கொள்ள வியாசருக்கு உதவியது. இதைப் புரிந்து கொண்ட விநாயகரும் சிரித்துக் கொண்டே எழுதினார். நாம் இன்று படித்து, கேட்டு கற்று மகிழும் மஹாபாரதம் இந்த விதமாகத்தான் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வியாசர் மூஷிக வாகனனுக்கு சொல்லி எழுதப்பட்டது. ஞானத்தின் அதிபதி மற்றும் வேதத்தை தொகுத்த ரிஷியின் இந்த கூட்டணி நமக்குள் ஒத்துழைப்பு மற்றும் இரக்கத்தின் விதைகளை தூவட்டும். மிக சரியான மனிதர் அக்காலத்தில் முனிவர்கள் எல்லோரும் கடுமையான தவங்கள் மூலம் மிக பெரிய பேறு அடைய விரும்பி தவம் இருந்தனர். ஆனால் ஒருவர் மட்டும் பிறக்கும் பொழுதே எல்லாவகையிலும் சிறந்தவராக பிறந்தார் , சுகர், வியாசரின் மகனான இவர் பிறப்பிலேயே பிரம்மத்தை பற்றிய ரகசியத்தை அறிந்திருந்ததால் சுக ப்ரம்ம ரிஷி என அழைக்கப்பட்டார். ஒருநாள் , உலகத்தின் அறிவு பொக்கிஷத்தை காப்பாற்ற தனக்கொரு மகன் வேண்டுமென உணர்ந்த வியாஸர் சிவனை நோக்கி தவமிருக்கத் துவங்கினார். அதே சமயத்தில் விண்ணுலகத்தில் இருந்து ஓர் கிளி அங்கே பறக்க அதை அவர் பார்த்தார். அதன் மூலம் அக்கிளி , மிக அழகான அதே சமயம் தெய்வீக களைப் பொருந்திய ஒரு குழந்தையை தந்தது. அந்தக் குழந்தை சுக தேவர், கிளிகளின் கடவுள் என அழைக்கப்பட்டது. சுகருக்கு , வியாஸர் வேதங்களையும் மற்ற விஷயங்களையும் கற்றுத் தர துவங்கினார். மிகக் குறுகிய காலத்திலேயே அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார் சுகர். மகனை, தந்தையே பரிட்சித்து சான்று அளிக்க முடியாத காரணத்தால், மிதிலையின் அரசராக இருந்த ஜனகரிடம் 1 அவரை அனுப்பி வைத்தார் வியாசர் . சுகர் வரப்போவதை முன்பே தனது ஞான திருஷ்டியால் அறிந்த ஜனகர், தனது கோட்டை காவலாளிகளை அழைத்து, அவர் சொல்லும் வரை சுகரை உள்ளே அனுமதிக்க வேண்டாம் என கட்டளையிட்டார். அதேபோல், கோட்டை வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்ட சுக ப்ரம்ம ரிஷியும், மூன்று நாட்கள், உணவையோ, சொட்டு நீரோ மற்றும் துறக்கமோ இன்றி காத்திருந்தார். நான்காம் நாள், ஜனகரே கோட்டை வாயிலுக்கு வந்து பிரம்மாண்ட ஊர்வலமாய் அவரை அழைத்து சென்றார். உள்ளே அழைத்து வரப்பட்ட சுக பிரம்மத்தை சிறந்த அழகிகள் குளிப்பாட்டி அவருக்கு அறுசுவை விருந்தும் அளித்தனர். இவை எதையும் சிந்தையில் கொள்ளாத இளம் ரிஷி தனக்களிக்கப்பட்ட விருந்தை ஏற்றுக்கொண்டார். இதை அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த ஜனகர் ” மகனே ! இப்பொழுது என்னுடன்அரசவைக்கு வருவாயாக ! ” என அழைத்தார். ஜனகரின் அரசவை வளர்ந்து வரும் நாட்டின் வளர்ச்சியை பிரதிபலிப்பது போல் இருந்தது. மிக அழகான நாட்டியப் பெண்மணிகள் நாட்டியமாடிக் கொண்டும் அருமையான பாடல்களைப் பாடிக்கொண்டும் இருந்தனர். அரசர் , சுகர் கையில் ஒரு கிண்ணத்தைக் கொடுத்து அதன் விளிம்பு வரை எண்ணையை ஊற்றி , அரசவையை சுற்றி வந்து அங்கிருந்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய சொன்னார். அமைதியாக , அந்த கிண்ணத்தை கையில் ஏந்தி ஒரு சொட்டு எண்ணையும் சிந்தாமல் சென்று அங்கிருந்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தார். அதைக் கண்டு மகிழ்ந்த ஜனகர் , சுகரை கட்டியணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ” என்னருமை மகனே ! இனி நீ கற்பதற்கு என்ன உள்ளது ? கஷ்டங்களோ , அரண்மனையின் செல்வச்செழிப்போ இல்லை உணர்வுகளை தூண்டு விஷயங்களோ உன்னை தீண்டவில்லை. நீ ஏற்கனவே ஒரு ப்ரம்மஞானி2 ” எனக் கூறினார். சுகர் எப்பொழுதும் இந்த உலக பிரஞை அற்று இருந்ததால் அவரை வியாசர் மிக கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டி இருந்தது. ஒருமுறை சுகர் ஆற்றங்கரையோரம் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். வியாசரும் அவரை பின்பற்றி சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது அங்கு சில இளம் பெண்கள் குளித்துக் கொண்டிருந்தனர். சுகர் சென்றபொழுது அவர்கள் நாணம் அடையவில்லை. மாறாக அவர்கள் தங்கள் குளியலை தொடர்ந்தனர். ஆனால், அவரை தொடர்ந்து வியாசர் வந்தபொழுது , அவர்கள் உடனடியாக குளத்தில் மூழ்கி தங்களை மறைத்துக் கொண்டனர். இதைக் கண்ட ரிஷி ஆச்சர்யம் அடைந்து ”அழகான இளம் வாலிபன் நிர்வாணமாக நடந்தது உங்கள் உணர்வுகளை சீண்டவில்லை. ஆனால் முழுவதும் உடையணிந்த வயோதிகனான நான் வரும்பொழுது , வெட்கம் கொண்டு உங்களை மறைத்துக் கொண்டீர்களே.. இதற்கு விளக்கம் அளிக்க இயலுமா ” என வினவினார். அதற்கு அவர்கள் ” தவ ஸ்ரேஷ்டரே ! அவர் முழு ஞானம் அடைந்தவர் . ஆண் பெண் பாலின பேதத்தை கடந்து விட்டார். ஆனால் தாங்கள் அப்படி இல்லையே ! நாங்கள் எவ்வாறு வெட்கம் கொள்ளாமல் இருக்க இயலும் ” என பதில் உரைத்தனர். சுகர்தான், பின்பு மஹாபாரத்தையும் , ஸ்ரீமத் பாகவதத்தையும் உலகிற்கு பரப்பினார். இவ்வுலகிற்கு தேவையான ஞானத்தை காத்து மற்றவர்களுக்கு அளித்தார். ஜனகர் : சீதையின் தந்தை அல்ல. அவ்வம்சத்தில் வந்த அனைவருக்கும் இந்த பட்டம் உண்டு. எனவே இவர் அவ்வம்சத்தில் வந்த மற்றொரு அரசர் ப்ரம்மஞானி : பிரம்மத்தை கற்றறிந்தவர். சஞ்சீவனி – உயிர் தரும் மந்திரம் இது பாண்டவ / கௌரவர்களின் காலத்திற்கு மிக முன்னால் நடைபெற்ற ஒரு சம்பவம் ஆகும். தேவர்களும் அசுரர்களும் எப்பொழுதும் சண்டையிட்டுக் கொண்டே இருந்தனர். அப்போரில் அசுரர்கள் தொடர்ந்து வெற்றிப் பெற்றுக் கொண்டே வந்தனர். காரணம், அவர்களுடைய குரு சுக்ராச்சாரியாருக்கு இறந்த உயிர்களை மீட்டுத் தரும் சஞ்சீவனி மந்திரம் தெரிந்திருந்தது. அந்த மந்திரம் அறிந்தாலொழிய இப்போரில் வெற்றி பெறுவது என்பது இயலாது என்பதை அறிந்த தேவர்கள் பலத்த ஆலோசனைக்குப் பிறகு அவர்கள் குரு பிரகஸ்பதியின் மகன் கசன் என்பவனை சுக்ராச்சாரியாரிடம் அனுப்பி இம்மந்திரத்தை கற்று வரக் கூறினர். கசன், சுக்ராச்சாரியாரை அணுகி தன்னை சீடனாக ஏற்றுக் கொள்ள கேட்டுக் கொண்டான். பிரகஸ்பதியின் மேல் இருந்த மரியாதை மற்றும் கசனின் பணிவான நடவடிக்கையின் காரணமாய் அவனைத் தன் சீடனாக ஏற்றுக் கொண்டார் சுக்ராச்சாரியார். ஒரு சீடனாய் தன் கடமைகளை சுக்ராச்சாரியாரின் விருப்பத்திற்கேற்ப செய்து வந்தான். நாளடைவில் அவரது மகள் தேவயானிக்கும் மிக நெருக்கமாகிவிட்டான் கசன். வஞ்சக எண்ணம் கொண்ட அசுரர்கள் கசனின் நோக்கத்தை சந்தேகிக்க துவங்கினர். அதனால் சுக்ராச்சாரியார் அறியாமல் அவனை கொல்லவும் முடிவெடுத்தனர். ஒருநாள், அவனை கடத்தி சென்று கடலில் மூழ்கடித்து அவனது பிணத்தை சுக்ராச்சாரியார் முன் கொண்டுவந்து கிடத்தினர். அவர் கேட்டபொழுது எதோ ஒரு காரணம் சொல்லப்பட்டது. ஆனாலும் அவர்களது கெட்ட எண்ணத்தை அறிந்து கொண்ட சுக்ராச்சாரியார், சஞ்சீவனி மந்திரம் ஜெபித்து அவனை உயிர்ப்பித்தார். அடுத்த முறை அவனை கொன்று அவனது உடலை நாய்க்கு உணவாக இட்டனர் அசுரர்கள். இதை அறிந்த தேவயானி, சுக்ராச்சாரியாரிடம் முறையிட, மீண்டும் அவர் சஞ்சீவனி மந்திரம் ஜெபித்தார். இம்முறை நாயின் வயிற்றை கிழித்துக் கொண்டு வெளிவந்தான் கசன். மூன்றாம் முறை அசுரர் அவனை மரத்தில் கட்டி வைத்து உயிருடன் எரித்தனர். பின்பு அந்த சாம்பலை, மதுவில் கலந்து சுக்ராச்சாரியாருக்கு அளித்தனர். அதை குடித்தப்பின் தான், நடந்ததை உணர்ந்தார். இப்பொழுது அவருக்கு தேவர்களின் தந்திரமும் புரிந்தது. சாம்பலாய் மதுவில் கலந்து அவரது வயிற்றில் இருந்த கசனுக்கு அவர் சஞ்சீவனி மந்திரத்தை போதித்தார்.பின் கீழே படுத்து அவர் அம்மந்திரத்தை ஜபிக்க , அவரது வயிற்றை கிழித்துக் கொண்டு உயிர் பெற்று வந்தான் கசன். அவனது குணத்திற்கு , அவனை உயிர் பெற்றவுடன் முதல் காரியமாய், அவனை உயிர்ப்பித்த குருவை சஞ்சீவனி மாத்திரம் ஜபித்து உயிர்பித்தான். பின்பு தேவர்களிடம் சென்று சேர்ந்தான். இதன் பின், சுக்ராச்சரியாரின் சாபத்தால் மது அருந்துபவர்கள் அவர் பட்ட கஷ்டம் போலவே அனுபவிப்பார்கள். சுக்ராச்சாரியாரின் உதிரத்தில் உயிர்பித்ததால், கசன் தேவயானிக்கு சகோதரன் முறை ஆகிவிட்டான். எனவே அவனை விடுத்து யயாதி என்ற மன்னனை மணமுடித்தாள் தேவயானி. இந்த யயாதியே பாண்டவர் / கௌவரவர்களுக்கு முன்னோடி ஆவான். https://solvanam.com/2024/12/22/பல்லாயிரம்-ஆண்டுகளுக்கு/