Leaderboard
-
suvy
கருத்துக்கள உறவுகள்4Points33600Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்4Points87988Posts -
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்3Points3049Posts -
colomban
கருத்துக்கள உறவுகள்3Points3451Posts
Popular Content
Showing content with the highest reputation on 11/09/25 in all areas
-
நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு!
அண்ணா, நாட்டின் தலைவர்களை மட்டும் அன்றி, மதங்களை, மக்களின் நம்பிக்கைகளை, சடங்குகளை வார்த்தைகளாலோ அல்லது செயல்களாலோ அவமதிப்பது அல்லது ஏளனம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயல். மாற்றுக் கருத்துகள் இருக்கலாம், அவை மிக அவசியமும் கூட மனிதர்கள் தொடர்ந்து முன்னே செல்ல, ஆனால் சொல்லும் முறைகளில், பொது வெளிகளில், சில அடிப்படை நாகரிகம் பின்பற்றப்படவேண்டும். மம்தானியின் பேச்சில் இருந்த சவால்களும், சவடால்களும் கண்டிக்கப்படவேண்டியவையே. அதே போன்றே அதிபர் ட்ரம்பின் பேச்சுகளில், செயல்களில் இருக்கும் பல விடயங்களும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை. முதலில் இவர் பொய்களை சொல்வதை நிற்பாட்ட வேண்டும். எந்த அடிப்படையும் இல்லாமல், எந்த வித பொறுப்புகளும் இல்லாமல் இவர் சொல்லும் விடயங்களும், மனிதர்களை பிளவுபடுத்தும் பேச்சுகளும் ஒரு தலைவருக்கு உரியது மட்டும் இல்லாமல், நீண்ட காலப் போக்கில் மிக ஆபத்தானதும் கூட. அரசியலில் மட்டும் இல்லை, தொழில்துறைகளில், ஆராய்ச்சிகளில், இலக்கிய முயற்சிகளில் கூட, புலம்பெயர்ந்த மக்கள் புலம் பெயர்ந்த மண்ணிலேயே சாதிக்க முடிகின்றது. தாயகங்களில் இருக்கும் தான்தோன்றித்தனமான போக்கும், குழு மனப்பான்மையும், மிகப் பரவலான தனிமனித வழிபாடுகளும், அசையா நம்பிக்கைகளும் தாயக மண்ணில் கடக்கவே முடியாத, மீறவே முடியாத கட்டுப்பாடுகளாக இருக்கின்றன. இங்கு அமெரிக்காவில் நாசா முழுவதும் இந்திய விஞ்ஞானிகள். வைத்தியசாலை முழுவதும் இந்திய மருத்துவர்கள். தொழில்நுட்பத்துறையில் மேலிருந்து கீழ் வரையும் அவர்களே. இவர்கள் ஏன் இவ்வளவு பாடுபட்டு அமெரிக்காவை முன்னேற்றுகின்றார்கள்............ இந்தியாவை முன்னேற்றி, அதை 2020 இல் ஒரு வல்லரசாக இவர்களால் மாற்றி இருக்க முடியாதா.......... முடியவே முடியாது என்பதே உண்மை. இந்தியாவில் இருக்கும் சூழல் இவர்களை எதுவுமே செய்ய விடுவதில்லை. இதுவே தான் அரசியலுக்கும், சமூகநீதிப் போராட்டங்களுக்கும். நாங்கள் கூட தாயகத்தில் சொந்த ஊர்களில் இருந்திருந்தால், இங்கே இவ்வளவு சுதந்திரமாக கருத்துகளை எழுதிக் கொண்டிருக்கமாட்டோம் என்றே நம்புகின்றேன்...........❤️.3 points
-
காணாமற் போனவர்கள் இறந்து விட்டார்கள் எனக் கருதப்படுகிறது
காணாமற் போனவர்கள் இறந்து விட்டார்கள் எனக் கருதப்படுகிறது October 21, 2025 வி. வி.கணேஷானந்தனின் / V. V. Ganeshananthan‘s “The Missing Are Considered Dead”, Copper Nickel, Fall 2019, Issue 29. (எழுத்தாளரின் அனுமதியுடனான தமிழாக்கம் /Translated with permission of the author). தமிழாக்கத்தின் மூல வடிவம் / Original full version of the translation: எனது கணவன் காணாமற்போன அன்று மட்டக்களப்பு ஒழுங்கையில் இருந்த பக்கத்துவீட்டுக்காரி சரோஜினி என் வீட்டுக்கு விடுவிடென்று ஒடி வந்தாள். அவரைப் பிடித்துக் கொண்டு போனதைத் தன் கண்களாலேயே பார்த்தாளாம். அடிவரைக்கும் அழிந்து போன எனது கிராமத்தில் பெண்கள் இப்படித்தான் காணாமற்போனவர்களைப் பற்றிப் பேசிக்கொள்வார்கள்: “காணாமற் போனவர்கள்” என்பதன் அர்த்தம், “கடத்தப்பட்டவர்கள்”, “கொண்டு போகப்பட்டவர்கள்” என்றால் “கொலை செய்யப்படப் போகிறவர்கள்”. சரோஜினிக்குத் தான் எதிலும் முக்கியமானவள் என்ற நினைப்பு. வழக்கம் போல எனக்குப் பக்கத்தில் நின்றபடி ஒரு சிறு புன்சிரிப்பால் ‘இவளுடைய ஊர்க்கதைகளைக் காதில் போட்டுக் கொள்ளாதே’ என்று சைகை செய்யும் ரஞ்சன் அன்று எனக்குப் பக்கத்தில் இல்லை. ஆனாலும் அவள் தன் கதையை எடுத்துச் சொல்வதை நான் தடுத்து நிறுத்தவில்லை. அவள் சொன்னதை நான் காதில் போட்டுக் கொள்ளாமல் ரஞ்சனைப் பற்றியே யோசித்தேன். அவன் எங்கே? காலப் போக்கில் எனக்குச் சுவாசம் போலப் பழக்கப் பட்டுவிட்ட ஒரு கேள்விச் சிந்தனையின் ஆரம்பம் அதுதான். அந்தச் சுவாசிப்பு தேவையானது மட்டுமல்ல தாங்கவும் முடியாதது. சரோஜினி என்னைத் தேடிக் கத்திக் கொண்டு வந்த போது நான் ரஞ்சன் விட்டுவிட்டுப் போன சில பொருட்களை எரித்துக் கொண்டிருந்தேன். சமையலறைக்குப் பின்னாலிருந்த முற்றத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பைப் பற்றி சரோஜினி எதுவுமே கேட்கவில்லை. துர்நாற்றம் வீச அங்கே என்ன உருகிக் கொண்டிருந்தது என்பதில் அவள் அக்கறைப் படவில்லையாக்கும். “நான் அவங்களைக் கண்டன்!” அவள் அடித்துச் சொன்னாள், “அதிரடிப்படைப் பெடியங்கள் அவரைக் கொண்டு போனாங்கள்.” இராணுவத்தினர் அவனைக் கொண்டு போக முன்னர் மூன்று முறை இங்கே வந்ததைச் சொல்லி நான் அவளைத் திருத்தவில்லை. இராணுவமும் விசேட அதிரடிப்படையும் வெவ்வேறு. எனது இழப்பில் பங்கெடுக்க அவளுக்குள்ள ஆவலைக் கண்டதால் “உனக்கு என்ன தெரிந்தது?” என்று கேட்டேன். “அடிக்கடி குடிக்க வாறவன் தான் ரஞ்சனைக் கொண்டு போனவன்,” என்றாள். அது உண்மை. ரஞ்சனைக் கொண்டு போக வந்த ஆமிக்காரன் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து போனவன் தான். புலிகள் பக்கம் முந்தி இருந்த கருணாவோடு ஒரு காலத்தில் சேர்ந்திருந்த எனது கணவன் பிறகு குடிக்கவெல்லாம் ஆரம்பித்துவிட்டான். சுற்றத்தினருக்கு அவன் மேல் நல்ல விருப்பமும் நம்பிக்கையும் இருந்தன, ஆகவே அவன் புலிகளை விட்டுத் திரும்பி வந்த பிறகு அவர்கள் அவனுக்குத் தேவையானது எல்லாவற்ரையும் தாராளமாகவே கொடுத்து வந்தார்கள். இது இராணுவத்தினருக்குத் தெரியும். ஆகவே அவர்கள் அடிக்கடி ரஞ்சனுடன் பேசுவதற்காக அழையா விருந்தாளிகளாகவும் வரத் தொடங்கி விட்டார்கள். ரஞ்சனுக்கு சிஙகளம் அத்துப்படி. சரோஜினி வளவளப்பதைக் காதில் போடாமலே கேட்டுக்கொண்டு நான் ‘கப்பேடு’க்குப் போய் ஒரு பானத்தை வார்த்துக்கொண்டேன். எனது கணவனைக் கொண்டு போனவன் திரும்ப வரக்கூடும். வந்தால் அவனுக்கு இனியும் விஸ்கியெல்லாம் கொடுத்து உபசரிக்க மாட்டேன். ரஞ்சன் மதுபானங்களையெல்லாம் எங்கே வைத்திருக்கின்றான் என்று எனக்கு எப்போதுமே தெரிந்திருந்தது. இப்போ அவன் போய்விட்டதால் எஞ்சி இருப்பதெல்லாம் என்னுடைய சொத்துத் தானே. // உண்மையாக அவன் காணாமற் போன நாளுக்கும், உத்தியோகபூர்வமாக ‘காணாமற்போய்விட்டான்’ என்று பதியப்பட்ட நாளுக்கும் இடையில் முப்பது நாள் இடைவெளி. அது ஏன் என்று கேட்டால் நான் உங்களுக்குச் சொல்லக் கூடியது இதுதான்: அவனைக் கொண்டு போனதை நான் என் கண்களாலேயே கண்டிருந்தாலும்கூட, சரோஜினி வீடுதேடி வந்து சாட்சியம் சொல்லியிருந்தாலும்கூட, அதை முழுதாக நம்புவதற்கு எனக்கு ஒரு வாரம் பிடித்தது. அதற்குப் பிறகும் என்னால் வீட்டை விட்டு வெளியே போக முடியாமல் இருந்ததால், காணாமற் போனதை உத்தியோகபூர்வமாகப் பதிவுசெய்ய இன்னும் மூன்று வாரங்கள் சென்றன. எனது கணவன் வீட்டை விட்டுப் போய்விட்டான். திரும்பி வரவேயில்லை. சாமியறைக்குள்ளே போய்க் கடவுளுக்கு முன்னாலே நகராமல் நிற்க வேண்டும் போல இருந்தது. ஒழுங்கையில் இருந்தவர்கள் என்னைக் கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள்: எப்படி ரஞ்சனை அவர்களால் கொண்டு போக முடிந்தது? ஏன் அதை எல்லோருக்கும் சொல்ல எனக்கு அவ்வளவு காலம் பிடித்தது? வம்படிப்பவர்கள் எனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டுத் தங்களுக்குள்ளே கிசுகிசுத்துக் கொண்டார்கள். அது எனக்கும் கேட்டது. நானும் எனக்கு என்ன பிரச்சனை என்று சிந்தித்தேன். அதைத்தான் வம்பர்களும் எதிர்பார்த்தார்கள். கடைசியாக, தளர்ந்து விழுந்து விடாமல் வீட்டு வாசலுக்கு வெளியே செல்லும் அளவுக்குத் தைரியம் வந்ததும், காணாமற் போனதைப் பதிவு செய்யச் சென்றபோது நான் முதல் முதலாகச் சொன்னது துஷாரவுக்குத் தான். நானும் ரஞ்சனும் திருமணம் செய்த காலத்தில் இருந்தே பக்கத்து மூலையிலுள்ள இராணுவக் காவல் முனையில் சென்ட்ரி வேலை பார்த்து வருபவன் அவன். நான் விஷயத்தைச் சொன்னபோது அவன் முகத்தைச் சுருக்கிக் கொண்டு கடுமையாக யோசித்தான், யார் செய்திருக்கலாம் என்று ஊகிப்பதற்காக ஒரு தொலைபேசிப் புத்தகத்தை மானசீகமாகத் தட்டிப் பார்ப்பது போல. ஆனால் அவன் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை. நான் கொஞ்சம் அழுதபோதுகூட அவன் கண்டுகொள்ளாதவன் போல நடித்தபடி சீருடைச் சட்டைப் பைக்குள் வைத்திருந்த கைக்குட்டையை மட்டும் கருணையுடன் எடுத்து நீட்டினான். அதற்குப் பிறகு எனது வீட்டைக் கடக்கும் போதெல்லாம் மரியாதை காட்டுவது போலத் தலையைக் குனித்துக் கொள்வான். சில நாட்களுக்குப் பிறகு காணாமற் போன பதிவை விசாரணை செய்வதற்காக ஒரு இராணுவக் கேணலை அழைத்துக் கொண்டு என் வீட்டுக்கு வந்தான். லேசாக ஊசிப் போனமாதிரி நாறும் எனது வீட்டுக் கூடத்துக்கு அழைத்துப் போய், தேனீர் கொடுத்து, என் கதை முழுவதையும் சொன்னேன். கேணல் மும்முரமாக விவரங்களை எழுதிக்கொள்ள துஷார அவருக்குப் பின்னால் கம்பீரமாக நின்று கொண்டிருந்தான். கிரிஷான் அப்போ ஒரு குழந்தை. எனக்குப் பின்னால் அழுதபடி நின்று கொண்டிருந்தான். அவனது விசும்பல்களைக் கேட்ட கேணல் அவனைத் தூக்கி வைத்துக் கொண்டார். பக்கத்திலே ரஞ்சன் நிற்பது போல, வெவ்வேறு மனிதர்கள் தன்னைத் தூக்கி வைத்திருப்பதில் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளாதவன் போல, கிரிஷான் உடனேயே மௌனமாகிவிட்டான். நான் சொல்லவேண்டியதெல்லாம் சொல்லி, தான் கேட்க வேண்டியவை எல்லாம் கேட்டு முடித்த பிறகு கேணல் எனக்கு விதிமுறைகளை விளக்கத் தொடங்கினார். எனது கணவனைக் கைது செய்ததாக எந்த விதத் தகவலும் அவர்களிடம் இல்லையாம். ஆகவே, அவன் காணாமல் மட்டும்தான் போயிருக்கிறானாம். எந்த நேரமும் திரும்பி வரலாமாம். அவனை இழந்ததற்கு எனக்கு ஏதாவது நட்ட ஈடு தருவதானால் மூன்று வருடங்கள் கழிந்த பிறகு தான் சாத்தியமாம். நான் பேயறைந்த மாதிரி நின்றிருந்தேன். கிரிஷான் இன்னும் சின்னவன். நான் பிரசவத்துக்குப் பிறகு வீட்டுக்கு வெளியே வேலைக்குப் போனது கிடையாது. கையிலே காசு எதுவுமே கிடையாது. “என்ன செய்யப் போகிறாய்?” என்று கொஞ்சம் அளவுக்கு அதிகமான அக்கறையுடன் கேணல் கேட்டார். அப்போதுதான் “சேர், பள்ளிக்கூடத்தில் ஏதாவது வேலை இருக்கிறதா என்று கேட்டுப் பார்க்கலாம்,” என்று துஷார சொன்னான். இப்படித்தான் நான் முந்திப் படித்த பள்ளிக்கூடத்திலேயே துப்புரவு வேலை செய்ய ஆரம்பித்தேன். எங்கள் ஊரில் வேலை வாய்ப்புகள் மிகவும் குறைவு. இருக்கிற கொஞ்ச நஞ்ச வேலைகளுக்கும் தேவையான தகைமைகள் என்னிடம் இருக்கவில்லை. பள்ளிக்கூடத்துக்கு நடந்து செல்லும் பாதை எனக்கு நன்றாகவே பிடித்தது. நடந்து போகிற வழியில், எங்களிடமிருந்து பறித்த காணிநிலங்களில் இப்போ இராணுவத்தினர் கட்டியெழுப்பும் அழகான உல்லாசப்போக்கிடம் தெரிந்தது. அப்பாவின் பழைய வீடும் பாட்டி குளித்த கிணற்றடியும் தெரிந்தன. கிணறு முற்றுமுழுதாக அழிக்கப்படவில்லை. எல்லையில் போட்டிருந்த முள்ளுக் கம்பி வேலி வரைக்கும் போனால் உடைந்து போன கிணற்றின் சீமெந்து வட்ட விளிம்பு தெரியும். நான் கிரிஷானைத் தூக்கிக் கொண்டு போகிற போதெல்லாம் துஷார எனக்குக் கை காட்டுவான். பிறகு கிரிஷான் வளர்ந்து என் கையைப் பிடித்துக் கொண்டு நடந்து வரத் தொடங்கியபோது, ஆமிக்காரர்கள் தகப்பனில்லாத அவனைப் பார்த்துச் சிரித்தபடி “ஹலோ சின்னவன்” என்று அழைப்பார்கள். அவர்களின் கண்களில் இலகுவாக வரும் கனிவு என் கணவனின் ஞாபகமூட்ட, எனக்குக் குமட்டிக் கொண்டு வரும். அவர்களின் தாய்களைப் பற்றி நினைவு எனக்கு வந்ததும், கிரிஷானை இறுக்கிக் கட்டிப் பிடிப்பேன். என்னைப் போல ஒரு கணவனில்லாத பெண்ணுக்கு, கையில் பணமில்லாத ஒரு தாய்க்கு, மூன்று வருடங்கள் என்பது மிக நீண்ட காலம். சீமெந்துத் தரைகளை வட்டவட்டமாக ஈரத்துணியால் துடைத்தேன். கரும்பலகைகளைக் கழுவினேன். மாணவர்கள் சிந்தி விட்டுப்போன புத்தகங்களை மீண்டும் புத்தகத்தட்டுகளில் அடுக்கினேன். அவர்கள் பகலுணவு சாப்பிட்ட மேசைகளைத் துடைத்தேன். நான் அங்கே படித்த கால ஞாபகங்கள் வந்து போயின. மாணவர்கள் என்னைக் கருணையோடு நடத்தினார்கள். ஆசிரியர்கள் என்னைக் கண்டு கொண்டதாகக் காட்டிக் கொள்ளவேயில்லை. அதுவும் ஒரு கருணைதான். அங்கு துப்புரவு வேலை செய்வது எனக்குப் பெரிய அவமானம் என்று அவர்களுக்குப் புரிந்திருக்கலாம். நான் படித்த காலங்களில் கணிதத்தில் வகுப்பிலேயே நான்தான்கெட்டிக்காரி. ஆங்கிலத்தில் அதைவிடக் கெட்டிக்காரி. எனது ஆங்கிலத் திறமையைப் பார்த்து விட்டு நான் வெளிநாடு போவேன் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள், மத்தியகிழக்கு நாடொன்றுக்கு, அல்லது ஐரோப்பிய நாடொன்றுக்குக் கூடப் போகும் வாய்ப்பு இருந்திருக்கலாம். இப்போதெல்லாம் பள்ளிக்கூடத்தில் ஏதாவது கலை நிகழ்ச்சிகள் நடக்கும்போது நான் தும்புக்கட்டையோடு மண்டபத்தில் பின்னால் நின்று கொண்டு பார்ப்பேன். எல்லோரும் என்னைக் கண்டுகொள்ளாத மாதிரியே நடந்து கொள்வார்கள். ஆகவே எனக்கும் தங்கு தடையின்றி எல்லோரையும் போல நிகழ்ச்சிகளைக் கண்டு களிப்பது போன்ற உணர்வு வரும். நான் ஒரு முழுமையான மனைவியாகவும் இல்லை, முழுமையான விதவையாகவும் இல்லை, ஒரு புலியாகக் கூட ஒருபோதும் இருந்ததில்லை. ரஞ்சன் எனக்குப் பக்கத்தில் நிற்கின்றான் என்று கற்பனை செய்து கொள்வேன். அவனது அகலமும் ஆழமும், அவன் உடம்பு எடுத்திருக்கக் கூடிய இடமும் என் கற்பனையில் துளிர்ப்பன. தாறுமாறாக வளர்ந்த அவனது மீசை, அவனது புன்னகை, எல்லாம் நினைவில் வந்து போயின. “உன்னுடைய மகனும் இங்கே ஒரு நாள் படிப்பான்,” என்று யாரோ பெருந்தன்மையாகச் சொன்னார்கள். அப்படிச் சொன்னதற்கு நான் நன்றியுணர்வு காட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்குள் வெறுப்பைப் பொங்க வைத்தது. // அந்த முதல் வருடம் வாரத்துக்கு ஒரு முறை துஷாரவையும் கேணலையும் பார்க்கப்போய் ரஞ்சனைப் பற்றி ஏதாவது செய்தி இருக்கிறதா என்று விசாரிப்பேன். கண்ணியமாகவே ஆரம்பிப்பேன்: உங்களுக்கு என்னைப் பற்றித் தெரியுந்தானே, என்று கெஞ்சினேன்; என்னை ஒவ்வொரு நாளும் பார்க்கிறீர்கள், என்னைப் பற்றி நன்றாகவே தெரிந்தவர்கள். எனக்கு அவன் திரும்பிக் கிடைப்பது மட்டும் தான் தேவை. ஆமிக்காரர் தான் அவனைக் கடத்திக் கொண்டு போனார்கள் என்றால் நான் யாருக்குமே சொல்ல மாட்டேன், சொல்லத் தேவையுமில்லை. அவன் இப்போது புலிகளோடு இல்லை. வெறுமனே கிரிஷானின் அப்பா மட்டும்தான். தயவு செய்து அவன் எங்கே என்று சொல்ல மாட்டீர்களா? கேணல் ஒரு கூடாத மனிதரல்ல. துஷாரவை விடத் தொலைவிலிருக்கும் கிராமத்திலிருந்து வந்தவர். என்னை மௌனமாக வெறித்துப் பார்ப்பார். இரண்டாவது வருடம், எனக்கு குறைச் சம்பளத்தில் நிறைய வேலை இருந்தபோது மாதமொருமுறை மட்டும் தான் போனேன். ஆனால் ஒவ்வொரு நாளும் கண்விழிக்கும் போது ரஞ்சன் பக்கத்திலேயே படுத்திருப்பதாக ஒரு பிராந்தி. எப்போவாவது ஒரு நாள் சரோஜினி தெருவைக் கடந்து வந்து அவன் எங்கே சிறை வைக்கப் பட்டிருக்கிறான் என்று தான் கேட்ட வதந்தியைப் பகிர்ந்து கொள்வாள். உன்ரை மனிசன்.அந்த வார்த்தைகளைக் கேட்பதற்காகவே நேரத்தைப் பார்க்காமல் அவள் சொல்லும் கதை கேட்கத் தயாராக இருந்தேன். ஆனால் அவளும் வருவதை நிறுத்திக் கொண்டாள். எனது தனிமை அவளைச் சங்கடப் படுத்தியிருக்கலாம். எனது கணவன் இருந்தபோது அடிக்கடி வந்து போன அயலவர்களும் என்னைக் கண்டு கொள்ளவில்லை. தெருவில் காணும் போது கண்களைத் தவிர்த்துக் கொண்டார்கள். கடைசியில் மூன்றாம் வருடத்தில் கேணலுடனான உரையாடல்கள் சம்பிரதாயபூர்வமாயின. ஏதாவது செய்தி இருக்கிறதா என்று கேட்பேன். பல அதிகாரிகளுக்கும் அனுப்பிய கடிதங்களின் பிரதிகளைக் காட்டுவேன். அவர் மறதியோடு தலையாட்டும் போது ஒரு நாளுமே நற்செய்தி வரப்போவதில்லை என்ற உண்மை எனக்கு உறைக்கும். என்னைப் பார்த்துச் சிரித்த, சிரிக்கக் கூடிய, மனிதர்கள் துஷாரவும் அவனது நண்பர்களும் தான். முள்ளுக்கம்பியின் பின்னால் எங்கள் வீடுகள் இருந்த காணியில் ஒரு வளரும் குழந்தை போல அந்த ஆமி ஹோட்டல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டிருந்தது. அதற்கு சீமெந்து வார்க்கும் ஆமிக்காரர்களின் முகங்கள் வியர்வையால் மின்னுவன. // ஒவ்வொரு மாதமும் ஏழாந்திகதி கலண்டரைப் பார்த்தபடி என் காலம் போனது. நான் ஒரு ஏழை என்று முதலே சொல்லியிருக்கிறேன் தானே. முதல் வருடம் முடியும் போது கிரிஷானிடம் காலணி இல்லாமல் போனது; இரண்டாம் வருடம் முடியும்போது.அவனது உடைகள் அளவில்லாமற் போயின. மூன்றாம் வருடத்தின் இறுதி நாட்களில் அவனை அசப்பில் பார்த்தால் ரஞ்சன் தன் வாழ்க்கையின் அதல பாதாள கட்டத்தில் இருந்தத்தைப் போலவே இருந்தான். புலிகளுடன் இருந்த காலம் ரஞனைப் பொறுமை போன, உடல்தேய்ந்த நிலைக்குத் தள்ளிவிட்டது. கிரிஷான் இன்னும் என் செல்லக் குட்டிதான், ரஞ்சனைப் போலவே முகம் கொண்ட அமைதியான குட்டி. ஆனால் அவனுக்கு நான்கு வயது என்றாலும், நாள் போகப்போக அவன் வளராமல் தேய்கிற மாதிரி இருந்தது. அந்தக் காலத்தில் பள்ளிக்கூடத்துக்கு ஒரு புதுத் தலைமையாசிரியர் வந்தார். என்னைப் பள்ளிக்கூடம் முடிந்த பிறகும் பின்னுக்கு நின்று வேலை செய்யச் சொன்னார். அவர் இராணுவத்தினரின் நண்பர். நான் எப்படிப் பள்ளிக்கூடத்தில் வேலைக்குச் சேர்ந்தேன் என்ற கதை அவருக்குத் தெரியும். நான் சொல்வது புரிகிறது தானே—அவரது சொந்தப் பொருள்களைத் துப்பரவாக்கவும் பராமரிக்கவும் அவருக்குத் தேவையிருந்தது. தையல் வேலை, திருத்த வேலை, கோப்புகளைக் கோவைப் படுத்தும் வேலை—வேறு யாரும் அந்த வேலைகளைச் செய்ய உடன்பட மாட்டார்கள். அவருக்குத் தேவையாயிருந்தது ஒரு சுறுசுறுப்பான, கெட்டித்தனமான, காசில்லாத, ஆகவே யாரிடமும் ஏதும் சொல்லி முறையிடமாட்டாத பெணதான். பகல் வேலைகளில் கிரிஷான் கன்னியர் மடப் பாலர் பள்ளிக்குச் செல்வான். மாலை நேரங்களில் அவர்களுக்கு வேறு வேலைகள் இருந்ததால் பிள்ளைகளைப் பராமரிக்க மாட்டார்கள். மாலை நேரங்களில் என் பிள்ளையைப் பார்த்துக் கொள்ள எனக்கு யாருமே உதவிக்கு இருக்கவில்லை. அதற்கு, என்வீட்டுக்கு அடிக்கடி வந்து போவது, சுகம் விசாரிக்க வரும் இராணுவத்தினர் கூட ஒரு காரணமாக இருக்கலாம். நான் கிரிஷானை என்னுடன் கூட அழைத்துக் கொண்டு மாலை வேலைக்குப் போகலாமா? அவன் அமைதியான பிள்ளை. தலைமையாசிரியர் சம்மதிப்பார் தானே. கிரிஷான் தொடர்ந்து வரமுடியாத ஏதாவது இடத்துக்கு நான் போகவேண்டுமென்றால் என் பிள்ளை பொறுமையாகக் காத்திருப்பான். அதற்கு அவன் இப்போ நன்றாகப் பழகிவிட்டான். கிரிஷானைக் கூட்டிக் கொண்டே வேலைக்குப் போவது என்று நான் தீர்மானித்துவிட்டபோது துஷார வழமை போல ஒரு கோப்பை தேனீர் கேட்டு வந்தான். அப்படி அவன் வரும்போது எனக்கு மறுப்புச் சொல்ல முடிவதில்லை. அவனுக்கும் வயசு வந்துவிட்டது. அவனது கழுத்து ஒரு வளர்ந்த மனிதனின் கழுத்தாகப் பரந்திருந்தது. படையினர் செய்யும் கடினமான கட்டட வேலைகளால் அவனது கைகளும் தோள்களும் செழிப்பாகத் திடர்ந்து முறுகியிருந்தன. என்னிடம் கடைசியாக மிஞ்சியிருந்த பிஸ்கட்களை அவனுக்குக் கொடுத்து, நான் வேலைக்குப் போக வேண்டுமென்று சொன்னேன். அவன் கிரிஷானைப் பார்த்தபடி, “உன் மகனை ஒருமுறை பாத்துட்டுப் போகலாம் எண்டுதான் வந்தன்,” என்றான். “நீ திரும்ப வேலைக்குப் போறியா?” என்று குழம்பிய முகத்தோடு கேட்டான். “இப்போ பின்னேரமல்லவா? நான் அவனைப் பாத்துக் கொள்றன்,” என்றான். இராணுவத்தில் இருந்தாலும் இன்னமும் ஒரு சிறு பையனாகவே இருந்த துஷாரவை ஏறிட்டுப் பார்த்தேன். பிறகு என் பையனைப் பார்த்தேன்—அவன் ரஞ்சனைப் போல ஒரு புலியாக ஒருநாளும் வரப்போவதில்லை. இந்த உண்மைகள் வேறு மாதிரியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. நான் சந்தித்திருந்த மற்ற சில இராணுவத்தினரைப் போல அல்லாமல் துஷார தான் எனது நண்பன் என்றே தன்னை வரித்துக் கொண்டான். துஷாரவோடு கிரிஷானை விட்டுவிட்டு தனது அலுவலகத்தில் எனக்காகக் காத்துக் கொண்டிருந்த தலைமையாசிரியரிடம் வேலைக்கு நடந்து போனேன். // எனது நேரம்—ரஞ்சனின் நேரம்—முடிவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னால் அரசாங்கத்தின் பிரதிநிதி ஒருவர் பள்ளிக்கூடத்துக்கு வருகை தந்தார். அந்த விசேட நிகழ்வுக்காகப் பள்ளிக்கூடத்தைத் துப்புரவாக்க இன்னும் சிலரைத் தற்காலிக வேலைக்கு அமர்த்தியிருந்தார்கள். பள்ளிப் பிள்ளைகள் தேசிய கீதம் பாடுவதற்குப் பயிற்சி செய்தார்கள். எனக்குப் புதுச்சீருடை வழங்கப்பட்டது. வழக்கம் போல மண்டபத்தின் பின்பக்கத்தில் என்னை நிற்க விட்டார்கள். நான் இந்த வருகையைப் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் துஷாரவுக்கும், மட்டக்களப்பில் இருந்த மற்ற இராணுவத்தினருக்கும், இந்த மனிதரைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது பற்றி மிகுந்த உற்சாகம் இருந்தது என்று எனக்குத் தெரியும். அவரது முகம் ஒரு புதிய முகம், ஆனால் அதே நேரத்தில் பழைய முகமும் தான்—பல முந்தைய அரசுகளில் பங்கெடுத்திருக்கிறார். இப்படியான பெருந்தகைகள் விஜயம் செய்யும் போது வழக்கமாக நடப்பது போலவே இராணுவத்தினர் வந்து முன்வரிசையில் நின்று அணிவகுப்பு மரியாதை செய்தார்கள். அவர் உரையாற்றிய போது நான் ரஞ்சனைப் பற்றி நினைத்தேன். அரசியல் என்றால் அவனுக்கு உயிர். பின்சுவரோடு சாய்ந்தபடி நான் எனது தும்புக்கட்டையை இறுகப் பிடித்திருந்தேன். அவ்வளவு தூரத்திலிருந்தும் அந்த மனிதரின் முகம் தெளிவாகத் தெரிந்தது. அது ஒரு உறுதியில்லாத முகம். எனது ஊரில் எஞ்சியிருந்த கணவர்களெல்லாரும் வெளியேறியோ எடுத்துச் செல்லப்பட்டோ காணாமற் போன பல வருட யுத்த காலத்தில் அவர் அனுபவித்த நிம்மதியான வாழ்க்கையால் அவரது தாடை மறைந்து முகம் செழிப்பாக இருந்தது. அதே காலத்தில் துஷாரவுகளும் அவர்களது கேணல்களும் தத்தம் கிராமங்களை விட்டு வெளியேறி எங்கள் கிராமத்தை ஆக்கிரமிக்க வந்தார்கள். அரசாங்கப் பிரதிநிதி சிங்களத்தில் பேசினார். இதற்கெல்லாம் கோபம் கொந்தளிக்கத் தேவையான சக்தி எனக்குள்ளே வரண்டு போய்ப் பலகாலம். சோகம் மட்டும்தான் மிச்சம். அவர் சொன்னதைக் கவனமாகக் கேட்க முயற்சித்தேன். எனக்கு சிங்களம் நன்றாகத் தெரியாது. அவர் ஒரு வசனத்தைச் சொன்ன போது அரங்கிலிருந்த மக்களிடையே ஒரு சலசலப்பு. சொன்னது எனக்குச் சரியாகக் கேட்கவில்லை என்று நினைத்தேன். சரியாகப் புரியவில்லை. வாயைத்திறந்து “என்ன?” என்று கேட்டேன். முதலில் எனக்குள்ளே மட்டும். பிறகு பக்கத்திலிருந்த தற்காலிக வேலையாளரைப் பார்த்து. ஆனால் அவளுக்கும் சரியாகக் கேட்கவில்லை, சிங்களமும் நன்றாகத் தெரியாது. பல முக்கியஸ்தர்கள் தங்கள் முக்கியத்துவத்தைக் கேட்பவர்கள் மறந்துவிடாமல் இருப்பதற்காகத் தாங்கள் சொன்னவற்றை திருப்பிச் திருப்பிச் சொல்லுவார்கள் அல்லவா? இவரும் அப்படிச் சொல்லிவிடுவார் என்ற எதிர்பார்ப்பில் நாங்கள் இரண்டு பேரும் கழுத்தை வளைத்து அரசாங்கப் பெருந்தகையைப் பார்த்துக் கொண்டேயிருந்தோம். ஆனால் அவர் எதையும் திருப்பிச் சொல்லவில்லை. நான் பிறகு துஷாரவைக் கேட்கலாம். மூன்று வருடங்களுக்கு முன்னென்றால் ரஞ்சனைக் கேட்டிருப்பேன். இராணுவத்தினர் எனது கணவனை அடிக்கடி சந்திக்க விரும்பியதற்கு ஒரு காரணம் மொழிபெயர்ப்பு இல்லாமலே அவர்கள் அவனைச் சங்கடப்பட வைக்க முடிந்தது. // அரசாங்கப் பிரதிநிதி சொன்னது என்னவென்றால், இப்போது காணாமற் போனவர்கள் எல்லாரும் இறந்து விட்டார்கள் எனக் கருதப்படுகிறது என்பதே. துஷார மெல்லிய குரலில் சொன்னான். எங்களுக்கு இது தெரிந்த விஷயம் தானே என்றான். அவன் அழுகையின் விளிம்பில் நின்றதும் எனக்கு அழுகையே வராததும் அவன் எத்தகைய கருணையுள்ளம் கொண்டவன் என்பதை உங்களுக்கு விளக்கும். அவன் எனக்கு இதைச் சொன்னபோது கிரிஷானைத் தன் மடியில் முகம் பார்த்தபடி வைத்திருந்தான். இந்தமுறை தேனீருக்குப் பதிலாக விஸ்கியைக் கொடுத்திருந்தேன். தனது மன உளைச்சலை எனது மகனுக்குக் காட்டி விடக்கூடாது என்று அவனைத் திருப்பி முழங்காலில் குதிரைச் சவாரி விளையாட்டுக்குப் போல இருத்தினான். “அம்மா, குதிரை!” கிரிஷான் தமிழில் சொன்னன். “Horse,” என்று நான் ஆங்கிலத்தில் சொன்னேன். பிறகு துஷாரவைப் பார்த்து, “திருப்பிச் சொல்லு,” என்றேன். “அந்தச் சொல்லைச் சிங்களத்தில் திருப்பிச் சொல்லு.” துஷாரவின் மடியில் கிரிஷான் ஒரு குட்டி துஷாரவைப் போலத் தெரிந்தான். ஓரு குட்டி ரஞ்சனைப் போல. நான் வேலை செய்யும் தலைமை ஆசிரியரின் ஒரு குட்டி வடிவம் போல. எது உண்மை என்று சொல்லும் திறமை என்னை விட்டுப் போய்விட்டது. நேரம் முன்னோக்கி எதிர்காலத்துக்குப் போக வேண்டுமா, பின்னோக்கிக் கடந்த காலத்துகுப் போக வேண்டுமா, அல்லது அப்படியே தற்காலத்தில் உறைந்து நிற்க வேண்டுமா என்று எனக்குத் தெரியவில்லை. // உங்கள் கணவரைக் கொண்டு போய் மூன்று வருடங்கள் முடிந்ததும் அவர்கள் உங்களுக்கு நட்ட ஈடு செலுத்துவார்கள். உங்களுக்கு இந்தத் தொகை உரித்து என்று ஒரு சான்றிதழ் தருவார்கள். நான் ரஞ்சனுக்காகக் காத்திருந்தேன். அவன் மறைந்து போய் மூன்று வருடம் முடிவதற்கு ஒரு வாரம் இருக்கும் போது இன்னுமொரு மனிதனை என்னிடம் கொண்டு வந்தார்கள். கைவிலங்குகள் அவன் கைகளைப் பிணைத்திருந்தன. அவன் முகம் வீங்கியிருந்த விதத்தைப் பார்க்க எனக்கு என்ன செய்வது என்றோ அவனோடு எப்படிப் பேசுவது என்றோ தெரியவில்லை. நான் முந்தி ரஞ்சனோடு இருந்த காலத்தில் அவன் முகத்தை என் உள்ளங்கையால் அரவணைத்த மாதிரி இந்த மனிதனின் முகத்தையும் என் உள்ளங்கையில் ஏந்தியிருந்தாலும் அவன் முகத்தில் பரவியிருந்த காயங்களுக்கூடாக அவனது எலும்புகள் எங்கே இருக்கின்றன என்று கூடச் சொல்ல முடியாது. அவன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த துஷார தன் கண்களை என்பக்கம் எதிர்பார்ப்புடன் திருப்பினான். கட்டப்பட்டிருந்த மனிதன் என்னைப் பார்த்து என்னவோ முணுமுணுத்தான். நான் தான் என்று அவர்களுக்குச் சொல்லு கண்ணம்மா, அவர்களுக்குச் சொல்லு குஞ்சு. ஆனால் அது எனக்குத் தெரிந்த வாயல்ல. வரண்டு வீங்கிப் போயிருந்த அவன் நாக்கால் தெளிவாக உச்சரிக்க முடியவில்லை. அவன் கன்னங்கள் அழுகிய பழங்கள் போல வீங்கியிருந்தன. அவனுக்குத் தண்ணீரோ தேனீரோ விஸ்கியோ கொடுக்கலாமா என நினைத்தேன். அவனோடு தமிழில் பேச எனக்கு அனுமதி தருவார்களா என்றும் எனக்குத் தெரியவில்லை. அல்லது அந்த அரசாங்கப் பிரதிநிதியிடமிருந்து நான் படித்துக் கொண்ட ஒரேயொரு சிங்கள வசனத்தை அவனுக்குச் சொல்லலாமா: காணாமற் போனவர்கள் இறந்து விட்டார்கள் எனக் கருதப்படுகிறது. “இவன் உங்கட புருஷன் எண்டு சொல்றார்,” கேணல் எனக்கு விளக்கினார். “நீங்க ஒவொரு மாசமும் எங்ககிட்ட விசாரிக்க வருவீங்க. ஆனபடியாத்தான் இவன உங்ககிட்ட கொண்டு வந்தோம். நாங்க எல்லாம் சரியாத்தான் செய்வம் எண்டு இப்ப உங்களுக்கு தெரியுங் தானே. இவந்தான் உங்க புருஷன் எண்டா அவனைக் கூட்டிக் கொண்டு நீங்க எங்கயாவது துர இடத்துக்குக் போக வேணுங்.. பக்கத்து ஊரில கொஞ்சம் காணித்துண்டு இரிக்கு. உங்களுக்கு வேணுமெண்டா உங்க காணியக் குடுத்துட்டுப் பதிலா அதை எடுக்கலாம்.” போகவேணும். போகலாம். இந்தச் சொற்களின் அர்த்தங்கள் மொழிக்கு மொழி மாறலாம். காணாமற் போனவர்கள் இறந்து விட்டார்கள் எனக் கருதப்பட வேணும். அவர்கள் இறந்து விட்டார்கள் என்று நீங்கள் கட்டாயமாகக் கருத வேணும். இறந்து விட்டார்கள் என்று நீங்கள் கருதலாம். இதைத்தான் அரசாங்கப் பிரதிநிதி சொல்ல விளைந்தார். எங்களுக்கு விமோசனம் தருகிறார் என நினைத்தாரா? –வேணும், -லாம், இந்த சொல் விகுதிகள் எல்லாவிடமும் வியாபித்து இருக்கின்றன. அவற்றின் அர்த்தங்கள் என்னவாக இருந்தாலும் இந்த முன்பின் தெரியாத மனிதனோடு என் வீட்டை விட்டுப் போக எனக்கு விருப்பமில்லை. அவனுடைய புலி அடையாள அட்டையை எரித்து உருக்கி விட்டேன் என்று ரஞ்சனிடம் சொல்ல வேண்டும் போல இருந்தது. அந்தப் பிளாஸ்டிக் அட்டை இப்போ வேறேதோவாக உருமாறியிருந்தது. அந்த மனிதனை எத்தனையோ கேள்விகள் கேட்க வேண்டும்போல இருந்தது. எங்கே போயிருந்தாய்? உனக்கு என்ன செய்தார்கள்? நான் இல்லை என்று சொன்னால் உனக்கு என்ன நடக்கும்? உன்னைக் காப்பாற்ற என்றாவது நான் ஆம் என்று சொல்லி உன்னுடன் இந்த வீட்டை விட்டு வெளியேறினால் என்ன நடக்கும்? எனது கணவன் ஒரு நாளும் திரும்பி வர முடியாமற் போகும். எனக்குப் பின்னால் அந்தக் கதவு நிரந்தரமாக மூடப்பட்டுவிடும். ஆனால் இந்த முன்பின் தெரியாத மனிதனும் ஒரு மனிதன்தான். யாருக்கோ சொந்தமானவன்தான். இப்போ நான் இவனை ஏற்றுக் கொள்ளாவிட்டால் சில வேளை யாருமே அவனை ஏற்றுக் கொள்ளாமற் போகலாம். நான் அவனை இருட்டிலும் இருண்ட இடத்துக்குத்தான் அனுப்பி வைத்ததாக இருக்கும். எவ்வளவு நேரம் அப்படி நின்றேன் என்று எனக்குத் தெரியாது. நான் யார், என்னிடம் என்ன உள்ளது என்றெல்லாம் நான் நினைத்துக் கொண்டிருந்தபோது கிரிஷானின் குரல் என் பின்னே கேட்டது. அவன் சின்னஞ்சிறு கை என் கையுடன் பின்னிக் கொண்டது. “அம்மா, இது அப்பாவா?” அவன் கேட்டான். காணாமற் போனவர்கள் இறந்து விட்டார்கள் எனக் கருதப்படுகிறது என்று அந்த அரசாங்கப் பிரதிநிதி சொன்னார். ஆனால் அவர் ஒன்றைச் சொல்ல மறந்து விட்டார்: அவர்கள் மேல் அன்புவைத்தவர்களால் தவிர. “அப்பாவா?” கிரிஷான்மீண்டும் கேட்டான். “இல்லை கண்ணா,” “இல்லை, இல்லை,” நான் கேணலைப் பார்த்துச் சொன்னேன். கேணல் தலையாட்டினார், முதலில் மெதுவாக, பிறகு உறுதியாக. நான் திரும்பவும் சொன்னேன், “இது அவரல்ல.” “நிச்சயமாகவா?” என்று கேட்டார் “நிச்சயமா,” என்று நான் சொன்னேன். அந்த நேரத்தில் என் மனத்தை எதுவும் மாற்றியிருக்காது என்றாலும், நான் செய்தது சரியா என்று எப்பொழுதுமே எனக்குத் தெரிய வராது என்பதும் எனக்குப் புரிந்திருந்தது. அந்த மனிதனின் முகத்தை அதன் பின் காண்பதற்கே எனக்குப் பயமாக இருந்திருக்கும். ஆனால் அந்தத் தருணத்தில் அவன் முகமில்லாத மனிதனாகவே நின்றான். அவர்கள் அவனை இழுத்துச் சென்றார்கள். அவர்கள் போன பிறகு நான் திரும்ப ஒரு முறை அந்தக் கலண்டர் இருந்த இடத்துக்குச் சென்றேன். இந்தமுறை நான் ரூபாய்களைப் பற்றி நினைக்கவில்லை. எனது நெஞ்சைக் கட்டி இறுக்கியிருந்த உணர்வு எப்போதாவது ஒருநாள் விலகுமா என்பதைப் பற்றி நினைத்தேன். எத்தனை நாட்களுக்குப் பிறகு அரசாங்கம் எனக்கு விதவைப் பட்டம் அளிக்கும் என்று அந்தக் கலண்டர் கூறியது. ஆனால் என்முன்னே நீண்டு இருக்கும் என் எஞ்சிய வருடங்களை யாராலும் அளக்க முடியாது. என் நீண்ட வாழ்நாள் முழுவதும் காத்திருப்பேன https://ezi.asokan.org/2025/10/21/காணாமற்போனவர்கள்/?fbclid=IwdGRleAN76QhjbGNrA3vVS2V4dG4DYWVtAjExAHNydGMGYXBwX2lkEDIyMjAzOTE3ODgyMDA4OTIAAR75GU23D98e6cXAcZ0arxZfrZl1L6KfpKvnqC1YCnoqvn7ZsUQkaMCeSZIHzg_aem_Se7s0UWJ08rE2ycxU-0u_A2 points
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
நீங்களாவது நின்று கவனித்தீர்களே அதற்கு நன்றி satan ........ ஆனால் இங்கு நீங்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும் ......... ஏராளமான பாடல்களை நாங்கள் சாதாரணமாக கேட்டுக்கொண்டு கடந்து விடுகின்றோம் . ........அவற்றில் நிறைய கவிதைநயம் பொதிந்த வரிகள் உள்ளன ......அவற்றை இப்படித் தனியாக படிக்கும் போதுதான் அனுபவிக்க முடியும் . ........இது யாழ் அந்தப் பாடலாசிரியருக்குத் தரும் மரியாதை + கௌரவம் ......... தினமும் இங்கு வாருங்கள் திகட்டாத விருந்து தயாராக இருக்கு ........! 😂2 points
-
கருத்து படங்கள்
2 points2 points
- காணாமற் போனவர்கள் இறந்து விட்டார்கள் எனக் கருதப்படுகிறது
தியா, நிகே ஆகியோர் வசிக்கும் மினசோட்டா மாநிலத்தில் இருந்து, ஆங்கிலத்தில் எங்கள் கதைகளை எழுதுபவர் வி.வி. கணேஷானந்தன். 2023 இல் வெளிவந்த "Brotherless Night" என்ற நாவல் ஜூலைக் கலவரம், சகோதரப் படுகொலைகள், ராஜினி திராணகம கொலை, ஆனந்தராஜா மாஸ்ரர் கொலை ஆகிய விடயங்களை உள்ளடக்கிய ஒரு அருமையான நாவல். தற்போது ஆமை வேகத்தில் வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஏனையோரும் வாசிக்க வேண்டிய ஒரு அரிய நாவல். https://www.amazon.com/Brotherless-Night-Novel-V-Ganeshananthan/dp/08129971581 point- கருத்து படங்கள்
1 point- துட்டன்காமனுடன் புதைக்கப்பட்ட 5000 பொக்கிஷங்கள் தற்போது எங்குள்ளன?
ஆம் இவை ஓரளவு உண்மை. அலெக்ஸான்ரியா பகுதியிலும் இப்படி என கேள்விப்பட்டுள்ளேன். ஜோர்டன் மிக அருகில் உள்ளது. இஸ்ரேல் காச பகுதிக்கு தரைவழியூடக செல்லலாம். 10 கட்டளை இறைவனாஇ கொடுக்கபட்ட இடம் என நிறய இடமுள்ளது போகவேண்டும் ஆம் உண்மை. அழகான தோல் நிறம் கொண்ட வித்தியாசமன இனக்கூட்டம். இவர்கள் அரபுக்கள் அல்ல1 point- துட்டன்காமனுடன் புதைக்கப்பட்ட 5000 பொக்கிஷங்கள் தற்போது எங்குள்ளன?
பெரியளாவில் எனக்கு இவை பற்றி போதிய அறிவில்லை கோசான். முயன்று பார்கின்ரேன். இங்குள்ள தமிழர்களிடம் கேட்டு பார்கின்றேன். சுயஸ் வந்தல்ல் என்னை சந்திக்கலாம். மிக அழகிய இடம் பழைய பிரன்சு வீடுகளை இன்னும் காணலாம்.1 point- துட்டன்காமனுடன் புதைக்கப்பட்ட 5000 பொக்கிஷங்கள் தற்போது எங்குள்ளன?
பிகு நாம் இப்போ கைக்கொள்ளும் “இனம்” என்ற ஒற்றை வரைவிலக்கணத்துள் அரேபிய வருகைக்கு முன்னான பண்டைய எகிப்தியர்களை உள்ளடக்க முடியாது என்பதே துறைசார் ஒருமித்த கருத்து. அவர்கள் வட ஆபிரிக்காவுக்குரிய தனித்துவத்துடன், நூபியன், லெவண்ட் மக்கள் மற்றும் பலவகை தோல் நிறங்கள் சேர்ந்த ஒரு இனக்குழு கூட்டே இவர்கள். பின்னாளில் வந்த எகிப்திய அழகி கிளியோபட்றா உண்மையில் கிரேக்கத்தின் மசிடோனியா அடியில் வந்தவர்.1 point- துட்டன்காமனுடன் புதைக்கப்பட்ட 5000 பொக்கிஷங்கள் தற்போது எங்குள்ளன?
உங்களுக்கு எகிப்தில் வேலேயே கொண்டாட்டம் போல. மத்திய கிழக்கு (நாடுகள்) பொதுவாக மதிப்பது மேற்கு நாட்டவரை. இஸ்ரேல் உம் இதில் உள்ளடக்கம். (இதே போக்கு ஜப்பான் இலும் இருப்பதாக கேள்விப்பட்டேன். ஏதாவது அறிந்தால் சொல்லவும்) ஆனால், ஈரான், ஈராக் எல்லோருக்கும் மதிப்பு கொடுப்பதாக (கேள்விப்பட்டது).1 point- கதைகளை வாசிக்கும் போது நம் மூளையில் என்ன நடக்கிறது?
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நீங்கள் வாசிக்கும்போது உங்கள் தலைக்குள் என்னவெல்லாம் நடக்கிறது என்று எப்போதாவது யோசித்ததுண்டா? கட்டுரை தகவல் அனலியா லோரென்டே பிபிசி நியூஸ் முண்டோ 8 நவம்பர் 2025 " நம் அனுபவத்தின் எல்லைகளை விரிவாக்குவதற்கு வாசிப்பது ஒரு சிறந்த வழியாகும்," மூளையின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்துள்ள கனடாவின் யார்க் பல்கலைக்கழகத்தின் உளவியல் முனைவர் ரேமண்ட் மார் இதை விளக்கியுள்ளார். மூளையின் செயல்பாட்டைக் குறித்த ஆய்வுகளின்படி, ஒரு நாவலில் உள்ள கதாபாத்திரத்தின் கதையை வாசிப்பது, அதை நிஜத்தில் வாழ்வதற்குச் சமமானதாக இருக்கிறது. ஆனால், மனிதர்களின் மிக சிக்கலான உறுப்பான மூளையின் புதிரான செயல்பாட்டிற்கும் வாசிப்பிற்கும் இடையிலான உறவு குறித்த விஞ்ஞானிகளின் பல கண்டுபிடிப்புகளில் இது ஒன்றுதான். வாசிக்கும்போது நம் மூளையில் என்ன நடக்கிறது என்று ஆய்வு செய்த மூன்று ஆராய்ச்சியாளர்களை பிபிசி பேட்டி கண்டது. மூளையும் மனமும் ஆராய்ச்சியாளர்கள் முதலில் இருந்து வலியுறுத்தி வருவது ஏதாவது இருக்குமானால் அது மூளைக்கும் மனதிற்கும் உள்ள வித்தியாசமே ஆகும். "மூளை என்ன செய்கிறது என்பதைப் புரிந்துகொள்ள, மனம் என்ன செய்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மூளையைப் பற்றி தனியாகப் பேச முடியாது," என்று கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் அறிவாற்றல் உளவியல் (Cognitive Psychology) பேராசிரியரான கீத் ஓட்லி சுட்டிக்காட்டினார். "நாம் வாசிக்கும்போது, ஒரு குறிப்பிட்ட மூளைப் பகுதி செயல்படுகிறதா என்பதை அறிவது மட்டும் போதாது. அந்தச் செயல்பாட்டில் மனம் எவ்வாறு இயங்குகிறது என்பதைத் தெரிந்துகொள்வதும் அவசியம்," என்று மார் ஏற்றுக்கொள்கிறார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நாம் வாசிக்கும்போது மூளை அதற்கானப் படங்களை உருவாக்குகிறது. மனதில் தோன்றும் படங்கள் வாசிக்கும்போது தூண்டப்படும் முதல் எதிர்வினைகளில் ஒன்று, மனதில் படங்களை உருவாக்குவதுதான். "நாம் வாசிக்கும்போது, விளக்கப்பட்டதைப் போன்ற உருவங்களை மனம் உருவாக்குகிறது அல்லது நினைவுபடுத்துகிறது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன," என்று மார் பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார். "அடிப்படையில், நீங்கள் ஒரு காட்சியைப் பற்றிய விரிவான விளக்கத்தைப் வாசித்தால், உங்களால் மூளையின் காட்சிப் புறணியில் (visual cortex) செயல்பாட்டைக் காண முடியும். அறிதலுக்கும் (perceiving) அறிதல் பற்றி வாசிப்பதற்கும் இடையே ஒற்றுமைகள் உள்ளன," என்று அவர் கூறினார். நாம் வாசிப்பதையே நிஜத்திலும் வாழ்கிறோமா? புனைகதைக் கதாபாத்திரத்தின் அனுபவத்தைப் பற்றி வாசிப்பதற்கும், அந்தச் செயல்பாட்டை நிஜ வாழ்க்கையில் அனுபவிப்பதற்கும் இடையில் மூளை பெரிய வேறுபாட்டைக் காண்பதில்லை என தோன்றுவதாக ஓட்லியும் மாரும் முடிவுக்கு வந்துள்ளனர். "ஏதோவொன்றைப் பற்றி வாசிப்பதற்கும் அதை அனுபவிப்பதற்கும் மூளை ஒரே மாதிரியாகவே வினைபுரிவதாக தெரிகிறது," என்று மார் விளக்கினார். அந்த நிபுணரின் கூற்றுப்படி, ஒரு நாவலில் ஒரு கதாபாத்திரம் ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதைப் பற்றி ஒருவர் வாசிக்கும்போது, அந்த நபர் நிஜத்தில் அந்தச் செயலைச் செய்யப் பயன்படுத்தும் அதே மூளைப் பகுதிகளே செயல்படுகின்றன. "உதாரணமாக, ஒரு கதையின் கதாநாயகன் ஆபத்தான அல்லது பயப்படக்கூடிய சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது, நாம் பயத்தை உணர்கிறோம் என்பது நமக்குத் தெரியும்," என்று மார் உதாரணம் அளித்தார். இது ஒன்றில் அல்லது ஒருவரிடத்தில் தன்னைப் பொருத்திப்பார்க்கும் தெளிவான பச்சாதாப உணர்வு. "நிஜ வாழ்க்கையில் மக்கள் பச்சாதாபம் உள்ளவர்களாக இருக்கிறார்களா என்பதை அறிய மூளையின் சில பகுதிகளை கண்காணிக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டது. கதைகளில் உள்ள கதாபாத்திரங்களைப் பற்றிப் வாசிக்கும்போது அதே மூளைப் பகுதிகள்தான் தூண்டப்படுகின்றன. ஏனெனில், உளவியல் செயல்முறை ஒத்திருக்கிறது," என்று ஓட்லி பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஒரு கதாபாத்திரத்தைப் பற்றிய விரிவான விளக்கத்தை வாசிக்கும்போது, நாம் நம்மை அவர்களின் இடத்தில் வைத்து, ஏறக்குறைய அதே உணர்வுகளை அனுபவிக்க முடியும். இயக்கம் செயலைக் குறிக்கும் ஒரு வினைச்சொல்லை நாம் வாசித்தால், நாம் அதைச் செய்வதாக மூளை புரிந்துகொள்கிறதா? "நாம் ஒரு செயல்பாட்டு வினைச்சொல்லை மௌனமாகப் வாசிக்கும்போது செயல்படும் மூளையில் உள்ள இயக்கப் பகுதிகளும், நாம் இயக்கத்தைச் செய்யும்போது செயல்படும் பகுதிகளும் மிக அருகில் உள்ளன," என்று பிரான்சின் லியோனில் உள்ள மொழியியல் இயக்கவியல் ஆய்வகத்தின் (Language Dynamics Laboratory) அறிவாற்றல் நரம்பியல் ஆராய்ச்சியாளர் வெரோனிக் பூலெங்கர் சுட்டிக்காட்டினார். காலால் உதைப்பது, நடப்பது அல்லது ஓடுவது போன்ற செயல்களை ஒருவர் வாசித்தால், மூளை இயக்கப் பகுதியைத் தூண்டும் என்று அந்த ஆராய்ச்சியாளர் கூறினார். "ஒரு வகையில், மூளை நாம் வாசிக்கும் செயலை உருவகப்படுத்துகிறது," என்று பூலெங்கர் பிபிசி முண்டோவிடம் கூறினார். போட்டி ஆனால், ஒரு செயல்பாட்டு வினைச்சொல்லை வாசித்து, அதே நேரத்தில் ஒரு அசைவைச் செய்ய முயற்சித்தால் என்ன நடக்கும்? "ஒரு ஆய்வில், பங்கேற்பாளர்களை ஒரு திரையில் செயல்பாட்டு வினைச்சொற்களை வாசிக்கும் அதே நேரத்தில் ஒரு பொருளை எடுக்கச் சொன்னோம். அப்போது, வாசிக்காதபோது இருப்பதைவிட, அசைவுகளின் வேகம் குறைவாக இருந்தது," என்று பூலெங்கர் விளக்கினார். மூளையின் அதே வளங்களைப் பயன்படுத்துவதில் "குறுக்கீடு அல்லது போட்டி" இருப்பதால் இது நடக்கிறது என்று அந்த ஆராய்ச்சியாளர் கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, வாசிப்பதும் செயல்படுவதும் மூளையில் "குறுக்கீடு அல்லது போட்டி"யை உருவாக்குகின்றன. நேரடி அல்லது மரபுத்தொடர் மூளையின் செயல்பாட்டைக் கண்டறியும் செயல்பாட்டு காந்த அதிர்வு இமேஜிங் (functional magnetic resonance imaging - fMRI) என்ற மற்றொரு ஆய்வில், கை அல்லது கால் தொடர்பான செயல்பாட்டு வினைச்சொற்களை உள்ளடக்கிய நேரடி வாக்கியங்கள் அல்லது மரபுத் தொடர்களை வாசிக்கும்போது மூளையின் செயல்பாட்டை பூலெங்கர் பகுப்பாய்வு செய்தார். "இரண்டு வகையான வாக்கியங்களுக்கும், மூளையின் மொழி பகுதிகளின் செயல்பாடுகளுடன், இயக்க மற்றும் முன்-இயக்க மூளைப் பகுதிகளின் (motor and premotor brain regions) செயல்பாடுகளும் காணப்பட்டன," என்று அவர் விளக்கினார். அந்த நிபுணரின் கூற்றுப்படி, கை தொடர்பான வாக்கியங்கள் மூளையில் கையைச் சித்தரிக்கும் இயக்கப் பகுதியையும், அதே சமயம் கால் தொடர்பான வாக்கியங்கள் மூளையின் வேறுபட்ட இயக்கப் பகுதியையும் தூண்டுகின்றன. இது, மூளையின் இயக்கப் புறணியின் (motor cortex) உடலமைப்பு பிரதிபலிப்புக்கு (somatotopy) பதிலளிக்கிறது. அதாவது, உடலின் வெவ்வேறு பாகங்கள் இயக்கப் புறணியின் வெவ்வேறு துணைப் பகுதிகளில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் அமைப்பு இது. நிஜ வாழ்க்கையில் எப்படி உதவும்? கதைகளைப் புரிந்துகொள்வதில் ஈடுபட்டுள்ள மூளைப் பகுதிகளுக்கும், மற்றவர்களைப் புரிந்துகொள்வதில் நாம் பயன்படுத்தும் பகுதிகளுக்கும் இடையே பொதுவான பகுதிகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. அப்படியானால், புனைகதைக் கதாபாத்திரங்களைப் வாசிப்பதன் மூலம் பச்சாதாபம் கொள்வது, நிஜ வாழ்க்கையில் மக்களை நன்கு புரிந்துகொள்ள உதவுமா? மார் அப்படித்தான் நம்புகிறார். "நாம் அடிக்கடி வாசிப்பதிலும், அதில் உள்ள கதைகள் மற்றும் கதாபாத்திரங்களில் ஈடுபாடு காட்டுவதாக இருந்தால், அது மற்றவர்களைப் புரிந்துகொள்ளும் நம் திறனை மேம்படுத்தலாம் அல்லது கற்றுக்கொள்ளலாம் என்று இது பொருள்படலாம்," என்று அவர் பகுப்பாய்வு செய்தார். "உதாரணமாக, ஒரு மாற்றுத்திறனாளி போல வாழ்வது எப்படி என்று நமக்கு ஒருபோதும் தெரியாமல் இருக்கலாம்," என்று அவர் கூறினார், "ஆனால், அதை அனுபவிக்கும் நபரின் இடத்தில் நம்மை வைக்கும் மிகச் சிறப்பாக எழுதப்பட்ட ஒரு கதையை வாசித்தால், நாம் அந்த அனுபவத்தைப் புரிந்துகொள்ளும் நிலையை அடையலாம்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2310jvzpzpo பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.1 point- நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு!
மம்தானியின் பூர்வீகம் உகண்டாவா? இந்தியாவா? இதே அணுகுமுறைப்படி டிரம்ப் ஜேர்மனியில் அல்லது ஸ்கொட்லாந்தில் அல்லவா சாதிக்க முயலவேண்டும்? மம்தானியின் பேச்சுக்கள், எனக்கே எரிச்சலூட்டுகிறன. பெருநகரங்களுக்கு அப்பாலான அமெரிக்கன் வாக்காளரை இது செம்ம கடுப்பாக்கும், என்பதும், ஜனாதிபதியாக வரமுடியாத இவர் நாடளாவிய ரீதியில் தன் கட்சிக்கே பின்னடைவை ஏற்படுத்துவார் என்பதும் என் நிலைப்பாடுமே. ஆனால் “பூர்வீகம்” பற்றிய உங்கள் கருத்து காலாவதியாகுவிட்ட கருத்தாக எனக்கு படுகிறது. குறிப்பாக பூர்வகுடிகளை ரிசவேசன் எனும் திறந்த சிறைகளில் வைத்துள்ள அமெரிக்கா போன்ற நாடொன்றில்.1 point- இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் பா.ஜ.க. இணைந்து தேர்தலில் “மிகப்பெரிய கிரிமினல் மோசடி” ”போலி வாக்காளர்கள், முகவரிகள், புகைப்படங்கள்: வாக்குத் திருட்டு புகார் குறித்து ஆதாரங்களுடன் ராகுல் விளக்கம்
மக்களின் வாக்குரிமையை அரசே துஸ்பிரயோகம் செய்கின்றது என்ற குற்றச்சாட்டு இன்று நேற்று அல்ல இந்தியாவில் பல வருடங்களாகவே கூறப்படுகின்றது கேட்டால் உலகில் பெரிய ஜனநாயக நாடு என்பார்கள்1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மாமியாருக்கு ஒரு சேதி இதை மதித்து நடந்தால் மரியாதை ..........! 😍 அழகான சிரிப்புப் பாடல் . ........கேட்டுப் பாருங்கள் . .........! 😂1 point- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : நடையா இது நடையா ஒரு நாடகம் அன்றோ நடக்குது இடையா இது இடையா அது இல்லாததுபோல் இருக்குது ஆண் : கடற்கரை காற்று அடிக்குது காத்துல சேலை நடிக்கிது கடற்கரை காற்று அடிக்குது காத்துல சேலை நடிக்கிது முன்னால வரச் சொல்லி அழைக்கிது முகத்தில கடுகு வெடிக்கிது ஆண் : வெள்ளிக் கண்ணு மீனா வீதி வழிப் போறா தையாதக்கா தையாதக்கா உய்யா ஆண் : கண்ணுன்னு இருந்தா இமை வேணும் கழுத்துன்னு இருந்தா நகை வேணும் கண்ணுன்னு இருந்தா இமை வேணும் கழுத்துன்னு இருந்தா நகை வேணும் பொண்ணுன்னு இருந்தா துணை வேணும் ஒன்னும் புரியல்லையா இன்னும் தெரியல்லையா ஆண் : தேரோட்டும் கண்ணனுக்கு ராதா சிங்கார ராமனுக்கு சீதா தேரோட்டும் கண்ணனுக்கு ராதா சிங்கார ராமனுக்கு சீதா காரோட்டும் எனக்கொரு கீதா கல்யாணம் பண்ணிக்கொள்ள தோதா .......! --- நடையா இது நடையா ---1 point- அல்காரிதத்திற்கு அடிமையாகாமல் இருப்பது எப்படி? என்ன தீர்வு?
"அம்மாவை விட அதிகம் கணிக்கும் அல்காரிதம்கள்" - வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவின் பங்கு பட மூலாதாரம், Laura G. De Rivera படக்குறிப்பு, நாம் உணராத அளவிற்கு அல்காரிதம்கள் நமது வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்று லாரா ஜி. டி ரிவேரா கூறுகிறார். கட்டுரை தகவல் கிறிஸ்டினா ஜே. ஆர்காஸ் பிபிசி முண்டோ 51 நிமிடங்களுக்கு முன்னர் நீங்கள் இரவு உணவு சாப்பிட வெளியே செல்ல முடிவு செய்கிறீர்கள். நீங்கள் என்ன சாப்பிட விரும்புகிறீர்கள் என்று உங்கள் துணையால் தெரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம், ஆனால் செயற்கை நுண்ணறிவுக்கு அது தெரியும்: மாலையில் நீங்கள் 'டாக்கோஸ்' (Tacos) பற்றிய வீடியோக்களை பார்ப்பதைக் கண்டது, அதனால் இப்போது நீங்கள் அதைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியாது என்பதை அது தெளிவாக உணர்ந்துள்ளது. "நாம் முடிவுகளை எடுக்காவிட்டால், மற்றவர்கள் நமக்காக அதைச் செய்வார்கள்," என்று ஸ்பானிய பத்திரிகையாளரும் எழுத்தாளருமான லாரா ஜி. டி ரிவேரா, பல ஆண்டுக்கால ஆராய்ச்சியின் விளைவாக வெளிவந்த தனது "அல்காரிதம்களின் அடிமைகள்: செயற்கை நுண்ணறிவு யுகத்தில் எதிர்ப்புக்கான கையேடு"("Slaves of the Algorithm: A Manual of Resistance in the Age of Artificial Intelligence,") என்ற புத்தகத்தில் எழுதுகிறார். "மனிதர்கள் மிகவும் கணிக்கப்படக் கூடியவர்கள் என்பதால் நாம் வெளியிலிருந்து திணிக்கப்பட்ட எண்ணங்கள், விருப்பங்கள் மற்றும் உணர்வுகளில் மூழ்கி வாழ்கிறோம். நமது கடந்த கால செயல்களில் புள்ளிவிவரங்களைப் பயன்படுத்துவது போதுமானது, அது யாரோ ஒருவர் நம் மனதைப் படித்தது போலாகிவிடும்," என்று அவர் மேலும் கூறுகிறார். நமது தேவைகள் அல்லது விருப்பங்களைக் கணிப்பதில் துல்லியம் மிக அதிகமாக உள்ளது. நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட அல்காரிதத்திற்கு போதுமான டிஜிட்டல் தரவுகள் அளிக்கப்பட்டால் நீங்கள் விரும்புவதையோ அல்லது விரும்பும் விஷயங்களையோ உங்கள் தாயைவிட மிகச் சிறப்பாக அதனால் கணிக்க முடியும் என்று ஸ்டான்ட்ஃபோர்ட் பல்கலைக்கழக உளவியலாளர் மற்றும் பேராசிரியர் மைக்கேல் கோசின்ஸ்கி தனது சோதனைகளில் நிரூபித்தார். செயற்கை நுண்ணறிவால் ஒருவரின் ஆர்வங்களை மிகத் துல்லியமாகக் கணிக்க முடியும் என்பது கொள்கையளவில், நல்லதாகத் தோன்றுகிறது. ஆனால் அதற்கு ஒரு விலை உண்டு, அது மிக அதிகம் என்று டி ரிவேரா கூறுகிறார்: "சுதந்திரத்தை இழக்கிறோம், நாம் நாமாக இருக்கும் திறனை இழக்கிறோம், கற்பனையை இழக்கிறோம்." "சமூக வலையமைப்பு (Social Network) இருக்கவும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கவும் நாமெல்லாம் நம் புகைப்படங்களைப் பதிவேற்றுவதன் மூலம் இன்ஸ்டாகிராமுக்கு இலவசமாக வேலை செய்கிறோம். விழிப்புடன் இருந்து, அபாயங்கள் உங்களைப் பாதிக்காமல் பார்த்துக் கொண்டு தளங்களின் நன்மைகளைப் பயன்படுத்துவது அவசியம்," என்று அவர் கூறுகிறார். பெரு நாட்டின் அரெகுய்பா நகரில் நவம்பர் 6 முதல் 9 வரை நடைபெறவுள்ள 15 நாடுகளில் இருந்து 130 பங்கேற்பாளர்களை ஒன்றிணைக்கும் ஹே விழாவின் (Hay Festival) பின்புலத்தில் டி ரிவேராவுடன் நாங்கள் பேசினோம். பட மூலாதாரம், Penguin Random House படக்குறிப்பு, "தகவல்தான் அதிகாரம். அதைப் பெறுவதற்கான போட்டி கட்டுப்பாட்டை மீறிச் செல்கிறது," என்று புத்தக ஆசிரியர் எழுதுகிறார். அல்காரிதத்திற்கு அடிமையாகாமல் இருப்பது எப்படி? என்ன தீர்வு? நான் காணும் தீர்வு மிகவும் எளிமையானது, யாருக்கும் சாத்தியமானது, இலவசமானது மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாதது. அதுதான் சிந்திப்பது. அதாவது, நமது மூளையைப் பயன்படுத்துவது. இது பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்ட ஒரு மனிதத் திறன். நாம் வேலை செய்யாத அல்லது மக்களுடன் இல்லாத ஒவ்வொரு தருணத்திலும், நாம் தொலைபேசியை எடுத்துத் திரையில் கவனம் செலுத்தி நம்மை திசை திருப்புகிறோம். இப்போது மருத்துவரின் காத்திருப்பு அறையிலோ அல்லது வீட்டில் சலிப்படையும்போதோ நாம் சிந்திப்பதில்லை. நாம் சிந்திக்க வைத்திருந்த அந்த இடங்கள் இப்போது தொடர்ச்சியான திசை திருப்பலால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. நமது ஸ்மார்ட்ஃபோன் மூலம், நம்மால் சிந்திக்க முடியாத அளவுக்குத் தொடர்ந்து தூண்டுதல்களைப் பெறுகிறோம். நாம் செய்யக்கூடிய வேறு சில விஷயங்களும் உள்ளன, ஆனால் இதுதான் மிக அடிப்படையானதாகவும் எளிதானதாகவும் நான் கருதுகிறேன். அல்காரிதத்தின் கட்டுப்பாடு மற்றும் மூன்றாம் தரப்பினரின் விருப்பத்திற்கு எதிராக விமர்சனப் பார்வையால் மட்டுமே தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதுகாக்க முடியும். நீங்கள் ஒரு தளத்தில் பதிவு செய்யும்போது உங்கள் தரவை வழங்காமல் இருப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. ஒரு சேவையின் அனைத்து நுணுக்கமான விஷயங்களையும் படிப்பது அல்லது ஒவ்வொரு முறை ஒரு வலைதளத்திற்குள் நுழையும்போதும் "குக்கீகளை" (cookies) நிராகரிப்பது இன்னும் சிக்கலானது. நாம் என்ன சோம்பேறிகளாகிவிட்டோமா? நாம் கொஞ்சம் சோம்பேறிகளாகவும், கொஞ்சம் கைப்பாவைகளாகவும் இருக்கிறோம், ஆனால் நமக்குத் தகவல் இல்லாமலும் இருக்கிறோம். டிக் டோக் தளத்தில் பல மணிநேரம் செலவிடும்போது, அந்தத் தளத்திற்கு இலவசமாக வேலை செய்கிறோம் என்பதைப் பலர் புரிந்து கொள்வதில்லை. தங்கள் ஆன்லைன் நடத்தையைப் பற்றிய எல்லா தகவல்களையும் அவர்கள் கொடுக்கிறார்கள், மேலும் அந்தத் தகவலுக்கு மதிப்பு இருக்கிறது. அதனால்தான் கல்வி முக்கியமானது, இந்தப் பெரிய தளங்களின் வணிக மாதிரி எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்குவதே அது. நமக்கு கூகுள் இலவசமாக சேவை செய்கிறது என்றால், உலகின் பணக்கார நிறுவனங்களில் ஒன்றாக அது இருப்பது எப்படிச் சாத்தியம்? இதைப் பற்றிச் சிந்திப்பது மிகவும் முக்கியம், அப்போதுதான் தங்களைப் பற்றி அளிக்கக்கூடிய அனைத்துத் தகவல்களும் எவ்வளவு மதிப்பு மிக்கவை என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, "முடிவெடுப்பது நமக்கு பயத்தை தருகிறது, மேலும் ரோபோக்களை போல் இருந்துகொண்டு, என்ன செய்ய வேண்டுமென்று மற்றவர்கள் சொல்ல வேண்டுமென நாம் விரும்புகிறோம்," என்று பத்திரிகையாளர் கூறுகிறார். செயற்கை நுண்ணறிவின் ஆபத்து என்ன? உண்மையான ஆபத்து மனிதர்களின் மடமைதான். ஏனென்றால் செயற்கை நுண்ணறிவு உங்களுக்குத் தீங்கு செய்ய வேண்டியதில்லை, அவை பூஜ்ஜியங்களும் ஒன்றுகளும் (zeros and ones) மட்டுமே. ஆனால், நம்முடைய சோம்பல் மிக அதிகமாக இருப்பதால், விஷயங்கள் நமக்குச் செய்து முடிக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டால், அது மிகவும் நல்லது என ஏற்றுக்கொள்கிறோம். இதெல்லாம் நாம் இன்னும் அதிக அளவில் கையாளப்படக் கூடிய சூழ்நிலையில் நம்மை வைக்கிறது. நாம் மன விருப்பம் மரத்துப் போய்விட்ட நிலையில் வாழ்கிறோம். சுகாதார அமைப்பின் டிஜிட்டல்மயமாக்கல், பாரிய கண்காணிப்பு மற்றும் நமது குழந்தைகளின் ஆன்லைன் கல்வி ஆகியவற்றை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்கிறோம். அநீதிகள், துஷ்பிரயோகங்கள் மற்றும் அறியாமையை நாம் தவிர்க்க முடியாத விஷயங்களாக ஏற்றுக் கொள்கிறோம், நாம் மிகவும் சோம்பலாக இருப்பதால் அவற்றுக்கு எதிராக நம்மால் கிளர்ச்சி செய்ய முடியாது. ஒரு அல்காரிதம் அமைப்பில் தன்னியக்கத்தின் பேரில் செயற்கை நுண்ணறிவு மேற்கொள்ளும் கணிப்புகளை முழுமையாக நம்புவதால் ஏற்படும் விளைவுகள் என்னவாக இருக்கும்? நமது கருத்து வேறாக இருந்தாலும்கூட, ஒரு கணினி சொன்னால், அது உண்மையாக இருக்கும் என்று மனிதர்கள் நம்பத் தலைப்படுகிறார்கள் என ஆய்வுகள் காட்டுகின்றன. அதனால், வாழ்வா, சாவா முடிவுகள் உள்பட முக்கியமான முடிவுகளை நாம் பிறரிடம் ஒப்படைக்கும்போது அபாயம் மிக அதிகமாக உள்ளது. அப்படியானால், யார் முடிவெடுக்க நீங்கள் அனுமதிக்கப் போகிறீர்கள்? உங்கள் அம்மா, உங்கள் ஆசிரியர், உங்கள் முதலாளி, அல்லது செயற்கை நுண்ணறிவு? இது மனிதர்களுக்கு மிகவும் பழமையான ஒரு பிரச்னை. மேலும் உளவியலாளர், சமூகவியலாளர் மற்றும் பிராங்பேர்ட் பள்ளியின் உறுப்பினரான எரிக் ஃப்ரோமின் "சுதந்திரத்தைப் பற்றிய பயம்" (fear of freedom) என்ற புத்தகத்தை நான் மிகவும் விரும்புகிறேன். இந்தப் புத்தகம் இதற்காகவே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. என்ன செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் நமக்குச் சொல்வதையே மனிதர்கள் விரும்புகிறார்கள் என்று ஃப்ரோம் வாதிடுகிறார். ஏனென்றால் அது நம்மைச் சார்ந்தது என்று நினைப்பது நமக்குப் பயங்கரமான பீதியைக் கொடுக்கிறது. முடிவெடுப்பது நமக்கு மிகவும் பயமாக இருக்கிறது, மேலும் ரோபோக்களை போல் இருந்து என்ன செய்ய வேண்டுமென மற்றவர்கள் சொல்ல வேண்டுமென்று நாம் விரும்புகிறோம். இதை ஃப்ரோம் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, செயற்கை நுண்ணறிவுக்காக மிகப்பெரிய தரவு மையங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் தேவைப்படுகின்றன நமது தரவை ஆன்லைனில் கொடுக்காமல் இருக்க ஏதேனும் வழி இருக்கிறதா? நிச்சயமாக இருக்கிறது. உங்கள் தரவை வழங்காமல் இருக்க வழிகள் உள்ளன. தேவையானதை மட்டும் கொடுக்க வழிகள் உள்ளன. ஆனால் முக்கியமானது, தளங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறிவதுதான். அப்போதுதான் நீங்கள் நடவடிக்கைகளை எடுக்க முடியும். உங்கள் வாழ்க்கையையும் தரவையும் வைத்து வியாபாரம் செய்பவர்களுக்கு அதைச் சற்றுக் கடினமாக்குவதற்காக மட்டுமே என்றாலும்கூட ஒரு பக்கத்திற்குள் நுழையும்போது குக்கீகளை நிராகரிப்பது போன்ற சிறிய செயல்களுக்கு நீங்கள் பழகிக் கொள்ளலாம். வேறு என்ன செய்ய முடியும்? நம்மைப் பாதுகாக்க ஓர் ஒழுங்குமுறை தேவைப்படுவதைப் பற்றிப் பேசலாம். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் நெறிமுறைகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் பேசலாம். விசில்ப்ளோயர்கள் (Whistleblowers – கூகுள் அல்லது மெட்டா போன்ற நிறுவனங்களுக்குள் பணிபுரியும் மற்றும் அமைப்பு பற்றித் தெரிந்தவர்கள்) கூறும் விஷயங்களைக் கேட்பது எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றிப் பேசலாம். அவர்கள் பேச முடிவு செய்யும்போது அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும் என்பதுடன் அவர்களைப் பாதுகாப்பதும் முக்கியம். அமெரிக்க உளவுத்துறை அமைப்புகளால் பயன்படுத்தப்படும் கண்காணிப்பு அமைப்புகளை வெளிப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடனின் வழக்கைக் குறிப்பிடுகிறீர்களா? ஆம், ஸ்னோடன் எனக்கு இந்த நூற்றாண்டின் ஹீரோக்களில் ஒருவர். ஆனால் மேலும் பலர் இருக்கிறார்கள். அவருடையதுதான் மிகவும் அறியப்பட்ட வழக்கு. சோஃபி ஜாங் (Sophie Zhang) என்ற ஃபேஸ்புக்கின் தரவு விஞ்ஞானியும் உள்ளார். பொதுக் கருத்தைத் திரட்டுவதற்காகவும் வெறுப்பைத் தூண்டுவதற்காகவும் அரசுகள் மற்றும் அரசியல் கட்சிகளால் போலிக் கணக்குகள் மற்றும் போட்களை (bots) திட்டமிட்டுப் பயன்படுத்தப்படுவது குறித்து அவர் நிறுவனத்திற்கு உள்ளேயே எச்சரித்த பின்னர் பணிநீக்கம் செய்யப்பட்டார். லத்தீன் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பாவின் சில இடங்கள் உள்பட உலகின் பல பகுதிகளில், அரசியல்வாதிகள் போலிக் கணக்குகளைப் பயன்படுத்துகிறார்கள். நிஜத்தில் இல்லாத பின்தொடர்பவர்கள்(Followers), நிறுத்த முடியாத விருப்பங்கள் மற்றும் மறுபதிவுகளைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் உண்மையான ஆதரவும் மக்கள் ஏற்பும் இல்லாதபோதுகூட தங்களிடம் அது இருப்பதாக நம்ப வைக்கிறார்கள் என்பதை ஜாங் உணர்ந்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நமது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய சிக்கலான தகவல்களின் முழுத் தொகுப்பும் பெரிய தரவு மையங்களில் சேமிக்கப்படுகின்றன. பிரச்னை குறித்துத் தனது உயரதிகாரிகளுக்குத் தெரிவித்தபோது, யாரும் அதைச் சரிசெய்ய விரும்பவில்லை என்பதைக் கண்டு அவர் ஆச்சரியப்பட்டார். உதாரணமாக, ஹோண்டுராஸின் அப்போதைய அதிபர் ஜுவான் ஆர்லாண்டோ ஹெர்னாண்டஸின் போலியான பின்தொடர்பவர்கள் வலையமைப்பை நீக்க ஒரு வருடம் பிடித்தது. இவர் அமெரிக்காவுக்கு கொகைன் இறக்குமதி செய்வதற்கான சதியில் ஈடுபட்டது மற்றும் இயந்திரத் துப்பாக்கிகளை வைத்திருந்ததற்காக நியூயார்க்கில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். உங்கள் புத்தகத்தில், கூகுளின் செயற்கை நுண்ணறிவு நெறிமுறைக் குழுவின் இணை இயக்குநராக இருந்த கணினிப் பொறியாளர் டிம்னிட் கெப்ருவின் (Timnit Gebru) வழக்கையும் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். அவரும் பணிநீக்கம் செய்யப்பட்டார். ஆம், அல்காரிதம்கள் இனம் மற்றும் பாலின பாகுபாட்டிற்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியதற்காக (பணி நீக்கம் செய்யப்பட்டார்). பெரிய மொழி மாதிரிகள் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், மக்கள் அவற்றை மனிதர்கள் என்று நம்பக்கூடும் என்றும், அவற்றால் பிறரைக் கையாள முடியும் என்றும் அவர் எச்சரித்தார். அவருடைய பணிநீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நிறுவனத்தின் 1,400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கையெழுத்திட்ட கடிதம் இருந்தபோதிலும், அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். யூட்யூப்பின் முன்னாள் ஊழியரான கியோம் சாஸ்லோட் (Guillaume Chaslot) மற்றொரு "விசில்ப்ளோயிங் ஹீரோ". பரிந்துரை அல்காரிதம் பயனர்களைப் பரபரப்பான, சதிக் கோட்பாடு மற்றும் பிளவுபடுத்தும் உள்ளடக்கங்களை நோக்கித் தள்ளுவதை அவர் கண்டுபிடித்தார். நமக்கு எஞ்சியிருக்கும் நம்பிக்கை என்ன? உறுதியாக நமக்குத் தெரிந்த ஒரு விஷயம் என்னவென்றால், ஒரு மென்பொருள் நிரல் (Software Program) என்ன செய்தாலும், அது புதிய விருப்பங்களைக் கண்டுபிடிப்பதற்கான மிகச் சிறிய அளவிலான படைப்பாற்றலைக்கூட அளிக்க முடியாது, அதாவது கடந்த கால தரவுகளின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இல்லாத படைப்பாற்றலை அதனால் கொடுக்க முடியாது. அதனால் மற்றவரின் நிலையில் தன்னை வைத்துப் பார்க்கும் பச்சாதாபத்தின் (empathy) அடிப்படையிலான தீர்வுகளையும் அளிக்க முடியாது, அல்லது மற்றவர்களின் மகிழ்ச்சியில் தனது சொந்த மகிழ்ச்சியைத் தேடும் ஒற்றுமையின் (solidarity) அடிப்படையிலான தீர்வுகளையும் அளிக்க முடியாது. இந்த மூன்று குணங்களும் வரையறையின்படி மனிதர்களுக்கு மட்டுமே உரித்தானவை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c6290v66d8lo1 point- துட்டன்காமனுடன் புதைக்கப்பட்ட 5000 பொக்கிஷங்கள் தற்போது எங்குள்ளன?
ஆம் நான் இப்பொழுது எகிப்தில்தான் தற்காலிகமக வசிக்கின்றேன். போன கிழமை இந்த நூதனசாலையை திறந்தார்கள். இதற்காக இங்கு ஒரு நாள் லீவு விட்டார்கள். கெய்ரோ மிகவும் பழமையான நகரம். அழகிய நைதி தமிழர்கள் இங்கு கைத்தறி, நெசவு தொழில்களுக்கக வந்து பல வருடங்களாக வாழ்கின்ரார்கள். பொதுவாக நான் மத்தியகிழக்கில் வேலை செய்யும்போது கண்டது என்னவென்றால் எட்கிப்தியர்கள் இலங்கை , இந்தியவர்களை மதிப்பதில்லை. கடினமாக நடத்துவார்கள். இங்கு அப்ப்டியள்ள இவர்கள் மிகவும் அன்பாக பழகுகின்ரார்கள். இந்த நுதனசாலை இருக்கும் கிசா பகுதிக்கு கடந்த மாதம் என்னுடய ஒடிட் விடயமாக சென்றிருந்தேன். மிக ஆழகான நகரம். பழைய இத்தாலிய கலாச்சரத்தை நினவூட்டுகின்றது. எகிப்ப்தை பெண்களாஇ போல நான் ஆழகனவர்களை எங்கும் காணவில்லை. .1 point- துட்டன்காமனுடன் புதைக்கப்பட்ட 5000 பொக்கிஷங்கள் தற்போது எங்குள்ளன?
என்னது துட்டன் காமனா 😂 நல்லவேளை டுடு கெமுனு வை துஸ்ட காமினி என்றது போல் இவரை துஸ்ட காமன் எண்டு எழுதவில்லை 😂. அட பாவியளா அது டு டன் காமென்.1 point- ஆனால் நேரம் கடந்துவிட்டது.....
1 pointஒரு ஆங்கில கவிதை. நான் சிறுவனாக இருந்தபோது, இந்த உலகை மாற்ற ஆசைப்பட்டேன், நடக்கவில்லை. இளைஞனான போது ஊரைத் திருத்த முனைந்தேன், முடியவில்லை. குடும்பத் தலைவன் ஆனபோது, குடும்பத்தையாவது திருத்த விழைந்தேன், இயலவில்லை. தந்தையான போது, பிள்ளைகளை மாற்றிவிட துடித்தேன், எவரும் என் பேச்சை கேட்கவில்லை. இவ்வளவு முயற்சிகள் செய்ததற்குப் பதிலாக, "நான் கொஞ்சம் மாறியிருக்கலாம்" என்று மரணப் படுக்கையில் தான் புரிகின்றது எனக்கு, ஆனால் நேரம் கடந்துவிட்டது..... ----------------------------------------------------------------------------------------யாஸிர். இடுகையிட்டது யாஸிர் அசனப்பா. https://civilyasir.blogspot.com/2011/09/blog-post_18.html1 point- கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர்கள் யாழில் கைது!
எந்த சாயமும் போடலாம்....இப்ப நம்ம சனத்தின் நிலை அப்படி...0 points - காணாமற் போனவர்கள் இறந்து விட்டார்கள் எனக் கருதப்படுகிறது
Important Information
By using this site, you agree to our Terms of Use.