Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. இரண்டு பிள்ளைகளும் நான் இறந்தால் அனாதைகளாகிவிடும் அதனால் எனது மகனை விடுதலை செய்யுங்கள் - ஆனந்த சுதாகரனின் தாயார் 24 JUL, 2025 | 07:19 PM இரண்டு பிள்ளைகளும் நான் இறந்தால் அனாதைகளாகிவிடும், அதனால் எனது மகன் ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யவேண்டும் என அவரின் தாயார் உருக்கமான வேண்டுகோளொன்றை விடுத்துள்ளார் யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் இன்று இடம்பெற்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். குரலற்றவர்களின் குரல் அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் சிறைக் கூடங்களை காட்சிப்படுத்தப்பட்டு சிறையிலுள்ளவர்களின் உறவுகளால் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது. அவர் மேலும் தெரிவித்ததாவது, நான் கடைசியாக ஜூலை மாதம் 17ம் திகதி அவரை போய்பார்த்துவிட்டு வந்தனான், அவருக்கு வழக்கு நடந்துகொண்டிருக்கு, வழக்கில் என்ன முடிவு வரும் என்று தெரியாது. அவருக்கு ஒரு நல்ல முடிவு வரும் என சொல்லியிருக்கினம், ஆனால் எனது மகன் இல்லாமல் கஷ்டம், நான்தான் இந்த பிள்ளைகளை படிப்பித்து வளர்த்துக்கொண்டிருக்கின்றன், இனி எனக்கு வயசும் போயிட்டுது. கண்ணும் விளக்கமில்லை, நெடுக வருத்தம். ஆனமுறையிலை, இவர்களிற்கு எந்தவொரு உதவியும் வேண்டாம், அப்பாவின் ஆதரவுதான்வேண்டும். எனக்கு இருப்பது ஒரேயொரு மகன்தான், அவரை விட்டால் வேறு பிள்ளைகளும் இல்லை, அதனால் ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யவேண்டும் என கோரித்தான் நான் இங்கே வந்திருக்கின்றேன். இரண்டு பிள்ளைகளும் நான் இறந்தால் அனாதைகளாகிவிடும், அதனால் எனது மகன் ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யவேண்டும். ஆனந்த சுதாகரன் தற்போது உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார், அவரை கொண்டுபோய் போகம்பரை சிறைச்சாலையில் வைத்திருக்கினம், 15 வருடங்களாக மகசின் சிறைச்சாலையில் இருந்தவர். தற்போது போகம்பரை சிறைச்சாலையில் உரிய வசதிகள் இல்லை, கடும் மன அழுத்தத்தில் சிக்குண்டவர் போல காணப்படுகின்றார், பார்ப்பதற்கு மிகவும் கவலையாக உள்ளது. கடந்த 19 ம் திகதி அவரை பார்த்துவிட்டு வந்தேன், அப்போது தனக்கு உடல்நிலை சரியில்லை என்று அவர் தெரிவித்தார். அது எனக்கு பெரும் மனகுழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. யாரை கேட்பது என தெரியவில்லை. மனித உரிமை குழுவிடம் தெரிவித்தேன். அவர்கள் தற்போதுதானே வழக்கு முடிந்தது அடிக்கடி போய்வராதீர்கள் உங்களிற்கு தூரம் என்றார்கள். தூரம் என்பதற்காக என்னால் விட்டுவிட்டு இருக்க முடியாது, மனக்குழப்பமாக உள்ளது பிள்ளைகள் இருவரும் அம்மாவும் அப்பாவும் இல்லாத நிலையில் இருக்கின்றார்கள். பிள்ளைகள் தாய்பாசமோ தந்தை பாசமோ இல்லாமல் இருக்கின்றார்கள், அன்பாய் அரவணைக்க யாரும் இல்லை. https://www.virakesari.lk/article/220866
  2. செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி : இதுவரை 76 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு Published By: VISHNU 24 JUL, 2025 | 07:21 PM செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இதுவரை 76 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. செம்மணி புதைகுழி வழக்கின் 19 ஆம் நாள் வியாழக்கிழமை (24) யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது. தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதவா குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள், தடயவியல் பொலிஸார், குற்றப்புலனாய்வுப் திணைக்களத்தினர், தொல்லியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் சிவரூபி சஜிதரன் ஆகியோரின் பங்கேற்புடன் அகழ்வு பணிகள் நடைபெற்று வருகிறது. அகழ்வு பணிகள் தொடர்பாக வியாழக்கிழமை (24) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ஏற்கனவே ஆழ்ந்தெடுக்கப்பட்ட 67 மனித எலும்பு கூடுகளுடன் புதன்கிழமை (23) பிற்பகலில் இருந்து இன்று வரை 9 மனித எலும்புக்கூடுகள் எடுக்கப்பட்டிருக்கிறது. மொத்தமாக 76 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டிருக்கிறது. இன்றைய நாளில் புதிதாக மூன்று மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுவரை 88 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. நாளை 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை 20வது நாளாக அகழ்வு பணிகள் தொடரும். சிறு போத்தலொன்றும் இரும்புகள் என்று நம்பப்படுகின்ற பல கட்டிகளும் எடுக்கப்பட்டிருக்கிறது என்றார். https://www.virakesari.lk/article/220867
  3. 24 JUL, 2025 | 08:45 PM அப்பாவை விடுதலை செய்யுமாறு இலங்கையின் எல்லா அரசாங்கங்களையும் கேட்டுக்கொண்டதாகவும் எனினும் எவரும் விடுதலை செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ள தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் இந்த அரசாங்கமாவது தங்கள் அப்பாவை விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் இன்று இடம்பெற்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். ஆனந்தசுதாகரனின் மகள் தெரிவித்துள்ளதாவது, நான் எட்டுமாசம் வயிற்றில் இருக்கும்போதே அப்பாவை கொண்டுபோய்விட்டார்கள். நாங்களும் எவ்வளவோ அரசாங்கத்தை போய் கேட்டுக்கொண்டிருந்தோம் அப்பாவை விடச்சொல்லி, யாருமே முன்வரவில்லை. இந்த அரசாங்கமாவது முன்வந்து எங்கள் அப்பாவை விடுதலை செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காலில் விழுந்தெல்லாம் கேட்டோம், அப்பாவை விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தோம் விடவில்லை. ஆனந்தசுதாகரனின் மகன் தெரிவித்துள்ளதாவது, எனது அப்பா பிடிபட்டு 14 வருடங்களாகின்றது, நிறைய அரசியல்வாதிகளை சந்தித்து அப்பாவின் விடுதலை தொடர்பாக கதைத்தோம். இதுவரை எந்த முடிவும் இல்லை. இந்த அரசாங்கமாவது எங்கள் அப்பாவை விடுதலை செய்யவேண்டும். https://www.virakesari.lk/article/220871
  4. Published By: DIGITAL DESK 2 24 JUL, 2025 | 04:30 PM கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் ஏற்பாட்டில் அமைதியாக வியாழக்கிழமை (24) அனுஷ்டிக்கப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், 1983ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இனவாதப் படுகொலை புகைப்படக் காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டன. நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களை நினைவுகூரி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வு முழுவதும் அமைதியான மற்றும் மரியாதையான சூழலில் நடைபெற்றது. https://www.virakesari.lk/article/220836
  5. பட மூலாதாரம், GETTY IMAGES கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இணையதளத்தில் தங்களின் அந்தரங்க புகைப்படம் அல்லது வீடியோ காட்சிகள் வெளியானால், அதை பாதிக்கப்பட்டவர்களே நீக்கும் வகையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய அரசு வகுத்து வருவதாக, ஜூலை 22 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது அந்தரங்க படங்களை சுமார் 70க்கும் மேற்பட்ட இணையதளங்களில் முன்னாள் காதலர் பரப்பியதாக பெண் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையின்போது மத்திய அரசின் வழக்கறிஞர் மேற்கண்ட தகவலைக் கூறியிருந்தார். சுய விருப்பமின்றி இணையதளங்களில் அந்தரங்கப் படங்கள் வெளியாகும்போது என்ன செய்ய வேண்டும்? அதை நீக்கும் வழிகள் என்ன? பெண் வழக்கறிஞரின் புகார் சென்னையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர், கடந்த ஜனவரி மாதம் இணைய குற்றப் பிரிவில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த மனுவில், "கல்லூரியில் படித்தபோது ஒருவரைக் காதலித்தேன். அவருடன் தனிமையில் இருந்தபோது வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளார். தற்போது அவருடன் எந்தவித தொடர்பும் இல்லை. ஆனால், தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை சுமார் 70க்கும் மேற்பட்ட இணையதளங்களில் அவர் பரப்பிவிட்டுள்ளார்" எனக் கூறியிருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும், தனது அந்தரங்க வீடியோ காட்சிகளை இணையதளங்களில் இருந்து உடனே அகற்றுமாறும் அவர் கோரிக்கை வைத்திருந்தார். "இணைய குற்றப் பிரிவில் பாதிக்கப்பட்ட பெண் புகார் மனுவை அளித்துள்ளார். அதன் பேரில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். ஆனால், வீடியோ காட்சிகளை நீக்குவதற்கு காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" எனக் கூறுகிறார், பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார். "இந்தப் படங்களை என்சிஐஐ (Non consensual intimate images) என்று சொல்வார்கள். இவற்றை நீக்குவதற்கு மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்" எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். பெண் வழக்கறிஞர் வழக்கில் என்ன நடந்தது? ஜூலை 9 அன்று இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, பெண் வழக்கறிஞரின் அந்தரங்க வீடியோவை 48 மணிநேரத்தில் நீக்குமாறு மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார். இதுபோன்ற வழக்குகளில் காவல் துறைக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மனுதாரர் வழக்கறிஞராக இருப்பதால் உதவ முடிந்ததாகக் கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "இவ்வாறு போராட முடியாத நபர்களின் நிலையை யோசிக்கவே முடியவில்லை" எனக் கூறினார். மேலும், "தனிநபரின் அடிப்படை உரிமையான கண்ணியத்தை உறுதி செய்து அரசு மற்றும் நீதிமன்றங்களின் கடமை" எனவும் அவர் குறிப்பிட்டதோடு, இதுதொடர்பான அறிக்கையை ஜூலை 14 அன்று மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறியிருந்தார். பட மூலாதாரம், GETTY IMAGES வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வீடியோ இடம்பெற்றுள்ள அனைத்து இணையதளங்களையும் முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக இந்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் குமரகுரு கூறினார். இதை ஏற்க மறுத்த மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார், "39 இணையதளங்களில் அந்த வீடியோ பரவி வருகிறது. அதைத் தடுப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வாதிட்டார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "தனிப்பட்ட வீடியோவை அகற்றுவதற்கு எங்கு புகார் அளிக்க வேண்டும், அவ்வாறு புகார் அளித்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தொடர்பாக மத்திய அரசு விரிவாக மனு தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டார். ஜூலை 22ஆம் தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் அபுடுகுமார் வாதிடும்போது, "தற்போது ஆறு இணையதளங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தனிப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளதால் அதை நீக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறினார். மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமரகுரு, "இணைய குற்றங்களுக்கு ஆளாகும் பெண்கள் நேரடியாக தங்கள் தனிப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை அகற்றுவதற்கு எளிதாக அணுகும் வகையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை" மத்திய அரசு வகுத்து வருவதாகக் கூறினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழிகாட்டு நெறிமுறைகளைத் தாக்கல் செய்யும் வகையில் ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார். அந்தரங்க வீடியோ வெளியானால் என்ன செய்ய வேண்டும்? பட மூலாதாரம்,GETTY IMAGES பெண் வழக்கறிஞரின் வீடியோவை நீக்குவதற்கு மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் முயற்சிகளை மேற்கொண்டது. "ஆனால், அவை மீண்டும் பரவிக் கொண்டே இருந்தன" என்று கூறிய மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார், "நீக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்ட பிறகும் சுமார் 30க்கும் மேற்பட்ட இணையதளங்களில் அவை பரவியிருந்தன" என்றார். இந்த நிலையில், இணையதளங்களில் ஆபாசமான படங்கள் வெளியாகிவிட்டால் உடனே மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சைபர் தொழில்நுட்ப வல்லுநரும் வழக்கறிஞருமான கார்த்திகேயனிடம் பிபிசி தமிழ் பேசியது. "ஆடையின்றி இருக்கும் படங்களை இயல்பாகவே சமூக ஊடகங்கள் நிராகரித்துவிடுகின்றன. இதுபோன்ற தளங்களில் குறைதீர் மையம் செயல்படுகிறது. அங்கு புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், நேரடியாக போன் மூலமாகத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கும் வாய்ப்புகள் இல்லை" எனக் கூறுகிறார். சமூக ஊடகங்களுக்கு 2021ஆம் ஆண்டில் இருந்து இந்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை (Intermediary Guidelines and Digital Media Ethics Code Rules, 2021) வகுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000, பிரிவு 87 (1)(2)இல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. "இதன்படி ஒவ்வொரு சமூக ஊடக தளத்திலும் குறைதீர் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சென்று அதன் உள்ளடக்கம் மற்றும் தவறான படங்கள் குறித்துப் புகார் அளித்தால் உடனே நீக்கப்பட்டுவிடுகிறது" என்று விளக்கினார், கார்த்திகேயன். "அது மட்டுமின்றி, தனது தனிப்பட்ட படங்கள் வெளியாகி யாரேனும் பாதிக்கப்பட்டால் https://cybercrime.gov.in/ என்ற தளத்தில் புகார் அளிக்கலாம். அங்கு பெயரைக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. அந்தரகப் படங்கள் வெளியிடப்பட்ட இணையதள முகவரியைப் பதிவிட்டுப் புகார் தெரிவித்தால் போதும்" எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES இவற்றோடு, இணையவழி குற்றங்களுக்கான 1930 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கும் வசதியை இந்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. "இணைய வழியில் நடக்கும் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் கூறினால் தொடர்புடைய இணையதளங்களிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பார்கள்" எனவும் கார்த்திகேயன் குறிப்பிட்டார். அதோடு, ஆபாச இணையதளங்களில் வீடியோ வெளியானால், அந்தத் தளங்களின் ஈமெயில் முகவரிக்கு புகார் அனுப்பினால் உடனே அதை நீக்கிவிடுவதாகக் கூறும் கார்த்திகேயன், "அத்தகைய நிறுவனங்களில் சில, வழிகாட்டு நெறிமுறைகளுடன் இயங்கி வருவதால் தனிநபர்களின் கோரிக்கைகளை ஏற்று நீக்கிவிடுகின்றன" என்றார். தாமதம் ஆவதைத் தவிர்க்க முடியுமா? "பெண்கள் தொடர்பான தவறான படங்கள் வெளியானதாக புகார் வந்தால் 24 மணிநேரத்திற்குள் அவற்றை நீக்க வேண்டும் என 2021ஆம் ஆண்டு வெளியான இந்திய அரசின் வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டது. ஆனால், அவ்வாறு நீக்கப்படுவதில்லை" எனக் கூறுகிறார் கார்த்திகேயன். "இணைய குற்றப் பிரிவில் புகார் அளிக்கும்போது அது தேசிய குற்ற ஆவணக் காப்பகத்திற்குச் செல்கிறது. அவர்கள் தொடர்புடைய தளங்களுக்கு இமெயில் மூலம் தெரிவிக்கின்றனர். இதற்கு சில நாட்கள் தேவைப்படுவதால், பாதிக்கப்பட்டவருக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன." ஒருவேளை, ஈமெயில் மூலம் புகார் தெரிவித்தும் இணையதளங்களில் இருந்து படங்களை நீக்காவிட்டால் காவல்துறையைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். "அதன் பேரில் தொடர்புடைய இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்." இந்த நடவடிக்கைகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு குறித்தும் விளக்கினார் கார்த்திகேயன். "ஆபாசப் படங்களைப் பதிவேற்றுவதைத் தடுக்கும் முயற்சியில் செயற்கை நுண்ணறிவை பெரும்பாலான நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. அதுவும் ஆடையின்றி இருப்பது போன்ற படங்கள் மற்றும் காணொளிகளை மட்டுமே நீக்கும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன." பட மூலாதாரம்,GETTY IMAGES இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையுடன் காவல்துறை பெண் அதிகாரி ஒருவர் பேசினார். அவர், "இணைய குற்றங்களுக்கான 1930 என்ற எண்ணில் புகார் அளித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒரு சில காணொளிகளோ, படங்களோ இருந்தால் அதை நீக்குவதில் சிரமம் ஏற்படுவதில்லை" என்று தெரிவித்தார். அவரது கூற்றுப்படி, "அதிக எண்ணிக்கையில் படங்கள் இருந்தால் அவை எங்கிருந்து வருகின்றன என்பதைக் கண்டறிவதில் சிரமம் ஏற்படுகிறது. அதற்கான நிபுணர்கள் காவல் துறையில் போதிய அளவுக்கு இல்லை." இந்தக் காரணத்தால் பல நேரங்களில் தனியார் சைபர் நிபுணர்களை நாட வேண்டிய நிலை உள்ளதாகக் கூறும் அந்தப் பெண் அதிகாரி, "ஒருவேளை தனிப்பட்ட படங்களால் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு இணைய குற்றப் பிரிவு மூலமாக போதிய உதவிகள் வழங்கப்படுகின்றன" எனவும் தெரிவித்தார். இதுபோன்ற புகார்களை எதிர்காலத்தில் எவ்வாறு கையாள்வது, ஒருவரின் சம்மதமின்றி படங்கள், வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வகுத்து வருவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "தனிப்பட்ட படங்களால் பாதிக்கப்படுவோருக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும்போது, தாமதமின்றி தீர்வுகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன" என்கிறார் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார். சென்னை பெண் வழக்கறிஞர் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் அவரது பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. வழக்கு விசாரணையின்போது இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "பெயரைக் குறிப்பிட்டது மட்டுமின்றி, குற்றம் சுமத்தப்பட்ட நபரை அடையாளம் காட்டுவதற்காக ஏழு ஆண் போலீசார் முன்னிலையில் விசாரணை நடத்தியது கண்டனத்துக்குரியது" என்று தெரிவித்தார். "இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கெனவே உடல்ரீதியாக நடந்த பாதிப்பைவிட மனரீதியான கூடுதல் பாதிப்பையே பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தரும்" எனவும் நீதிபதி தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை ஆவணங்களில் இருந்து நீக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். பெண்ணின் விவரங்கள் வெளியானது தொடர்பாக, நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா சில தகவல்களைத் தெரிவித்தார். அவர் வாதிடும்போது, "பாலியல் வன்கொடுமை, போக்சோ ஆகிய வழக்குகள் மட்டுமின்றி பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான வழக்குகளிலும் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை மறைத்து ஆவணங்களைத் தாக்கல் செய்வதற்கு உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்டவரின் பெயரை ஆவணங்களில் கூறலாமா? பெண் வழக்கறிஞரின் பெயர் வழக்கின் அனைத்து ஆவணங்களில் இருந்தும் நீக்கப்பட்டுவிட்டதாக அசன் முகமது ஜின்னா கூறினார். இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார். "குழந்தைகள், பெண்கள் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில்தான் முதல் தகவல் அறிக்கையில் பெயர் போடக்கூடாது என காவல்துறை நினைக்கிறது. ஆனால், இதுபோன்ற சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டவர்களின் பெயரை கூறக்கூடாது என நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது" என்கிறார், மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார். பெண் வழக்கறிஞர் அளித்த புகாரின்பேரில் குற்றம் சுமத்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் அபுடுகுமார், "ஒருவரின் விருப்பமின்றி அவரது அந்தரங்க படங்களை பதிவேற்றினால் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்படி 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புகள் உள்ளன" எனவும் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0m8mvplx94o
  6. நல்லூர் திருவிழாவை முன்னிட்டு வீதியில் பரப்புவதற்கான மணலை வழங்குவதில் இடர்ப்பாடு - அகில இலங்கை இந்து மாமன்றம் விடுத்த கோரிக்கை 24 JUL, 2025 | 04:25 PM (எம்.நியூட்டன்) நல்லூர் திருவிழாவை முன்னிட்டு அவ்வீதிக்கு மணல் வழங்குவது அவசியமாகும். எனவே அதன் இடர்ப்பாட்டை கவனத்தில் எடுக்குமாறு அகில இலங்கை இந்து மாமன்றம் உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் கோரிக்கை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : சரித்திரப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோவில் பெருந்திருவிழாவை முன்னிட்டு அடியவர்களின் நன்மை கருதி வீதிக்கு மணல் பரப்புவது வழக்கம். இந்த ஆண்டு மணல் பெறுவதில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக இதுவரை மணல் வழங்கப்படவில்லை என அறிகிறோம். ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்கப்பிரதட்சணம், அடியடித்தல் போன்ற நேர்த்திகள் செய்யும் திருவீதி தார்வீதியாக உள்ளது. உடனடியாக மணல் வழங்குவதற்கான ஏற்பாட்டை பொறுப்பு வாய்ந்தவர்கள் செய்யவேண்டும். இவ்விடயத்தில் வடக்கு மாகாண ஆளுநர், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரச அதிபர், மாநகர ஆணையாளர் துரித நடவடிக்கை எடுத்தல் வேண்டும். காலந்தோறும் நான்கு வீதியும் புதிய மணல் பரப்பி பன்னீர் தெளித்து தெய்வீகமாக நடைபெறும் திருவிழாச் சிறப்பை பேணுவதற்கு அனைவரும் உடன் அக்கறை எடுங்கள். இந்து சமய திணைக்களம், சமய விவகார அமைச்சு இத்தகைய விடயங்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். பல ஆயிரம் மக்கள் கூடும் திருத்தலங்களில் நடைபெறும் திருவிழாக் கால ஒழுங்குகளை பேண உதவுங்கள். இவ்விடயம் தொடர்பாக அனைத்து பொறுப்பு வாய்ந்தவர்களும் கூடிய அக்கறை எடுக்குமாறு சைவ மக்கள் சார்பில் அனைவரது கவனத்திற்கு முன்வைக்கப்படுகிறது என்றுள்ளது. https://www.virakesari.lk/article/220835
  7. Published By: DIGITAL DESK 2 24 JUL, 2025 | 03:55 PM திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேசத்தில் உள்ள வீரஞ்சோலை கிராமத்தில், வன ஜீவராசிகள் திணைக்களம் நாட்டியுள்ள எல்லைக்கற்கள் காரணமாக, அப்பகுதியில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்டச் செயலாளர் தோழர் சின்ன மோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, வியாழக்கிழமை (24) வெளியிட்ட ஊடக அறிக்கையில் அவர் கூறியதாவது: "குச்சவெளி பிரதேசத்தின் வீரஞ்சோலை பகுதியில், பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்த மக்களின் நிலங்களில் வன ஜீவராசிகள் திணைக்களம் தன்னிச்சையாக எல்லைக்கற்களை நாட்டியுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் தங்களது வாழ்வாதாரமான விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். மேலும், விவசாயத்தின் வழியே தங்களது குடும்பத்தை நடத்தி வரும் இக்கிராம மக்கள் மீதான இச்செயல் அநீதியானதொரு நடவடிக்கை எனவும், எல்லைக்கற்களை அகற்றி, விவசாய நடவடிக்கைகள் தொடர சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/220830
  8. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, போலி தூதரகம் பற்றிய முழு தகவலையும் உத்தரபிரதேச சிறப்புப் படையின் எஸ்.எஸ்.பி சுஷில் குலே வழங்கியுள்ளார். 8 மணி நேரங்களுக்கு முன்னர் போலி தூதரகம் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் உத்தரபிரதேச சிறப்புப் படையின்(எஸ்டிஎஃப்) நொய்டா பிரிவு, ஜூலை 22ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று காஜியாபாத்தில் ஒருவரை கைது செய்தது. குற்றம் சாட்டப்பட்டவர் மேற்கு ஆர்க்டிகா, சபோரா, பால்வியா மற்றும் லோடோனியா போன்ற நாடுகளின் தூதர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, மக்களைத் தொடர்பு கொண்டுள்ளார். "மேற்கு ஆர்க்டிகா, சபோர்கா, பால்வியா, லோடோனியா மற்றும் வேறு சில 'நாடுகளின்' தூதர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அவர் மக்களைத் தொடர்பு கொண்டுள்ளார். அவரிடமிருந்து சந்தேகத்திற்குரிய பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட வாகனங்களில் தூதரக ரீதியிலான, போலியான எண் தகடுகள் இருந்தன, அவை எந்த அமைப்பாலும் அங்கீகரிக்கப்படவில்லை" என்று எஸ்டிஎஃப் எஸ்எஸ்பி சுஷில் குலே தெரிவித்தார். ஹர்ஷவர்தன் ஜெயின் என்ற நபர் காசியாபாத்தின் கவி நகர் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கிருந்து போலி தூதரகத்தை நடத்தி வந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, இதுபோன்ற போலி எண்களைக் கொண்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன மீட்கப்பட்ட முத்திரைகள், போலி பான் அட்டைகள் மற்றும் போலி புகைப்படங்கள் "குற்றம் சாட்டப்பட்டவர் காஜியாபாத்தில் ஒரு வாடகை வீட்டில் சட்டவிரோத தூதரகத்தை நடத்தி வந்துள்ளார்" என்று எஸ்எஸ்பி சுஷில் குலே கூறினார். மேலும், "அவர் மக்களிடம் பிரபலமாகவும், அவர்களை ஏமாற்றவும் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களைப் பயன்படுத்தினார். அதன் மூலம், அவர் பல பிரமுகர்களுடன் நெருக்கமானவராக தன்னைக் காட்டிக் கொண்டார்" என்றும் எஸ்எஸ்பி சுஷில் தெரிவித்தார். வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்தும், போலி நிறுவனங்கள் மூலம் ஹவாலா மோசடி நடத்தியும் மக்களை ஏமாற்றியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து சந்தேகத்திற்கிடமான ஏராளமான பொருட்களையும், போலியான பொருட்களையும் சிறப்புப் படையினர் மீட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவற்றில் பின்வருவன அடங்கும்: போலி தூதரக எண் தகடுகள் கொண்ட நான்கு வாகனங்கள் 12 வெவ்வேறு சட்டவிரோத பாஸ்போர்ட்டுகள் இரண்டு போலி பான் கார்டுகள் 34 வெவ்வேறு நாடுகள் மற்றும் நிறுவனங்களின் போலி முத்திரைகள் இரண்டு பத்திரிகையாளர் அடையாள அட்டைகள் ரொக்கமாக 44 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பல நாடுகளின் நாணயங்கள் கூடுதலாக 18 போலி எண் தகடுகள் நிறுவனம் தொடர்பான ஆவணங்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார் ஹர்ஷ் வர்தன் 2011 ஆம் ஆண்டு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறை பதிவுகள் கூறுகின்றன. "அப்போது, அவரிடமிருந்து செயற்கைக்கோள் மூலம் பயன்படுத்தப்படும் தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டது, பின்னர் அவர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது" என்று எஸ்எஸ்பி சுஷில் குலே குறிப்பிட்டார். தற்போது, குற்றம் சாட்டப்பட்டவர் மீது காஜியாபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சட்டவிரோத நடவடிக்கைகள், போலி ஆவணங்களை வைத்திருத்தல், தயாரித்தல் மற்றும் மோசடி செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேற்கு ஆர்க்டிகா என்றால் என்ன? பட மூலாதாரம், HTTPS://WWW.WESTARCTICA.INFO/ படக்குறிப்பு, மேற்கு ஆர்க்டிகா என்று அழைக்கப்படும் நாட்டின் கொடி இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்த பிறகு, மேற்கு ஆர்க்டிகாவும் பேசுபொருளாகி உள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஹர்ஷ் வர்தன் தான் தூதராக இருப்பதாகக் கூறி வந்த நாடுகளில் ஒன்று மேற்கு ஆர்க்டிகா. முதலில் கேட்கும்போது அது ஒரு சிறிய அல்லது தொலைதூரத்தில் உள்ள நாடு எனத் தோன்றலாம். ஆனால் மேற்கு ஆர்க்டிகா என்பது 2001 ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க கடற்படை அதிகாரியான டிராவிஸ் மெக்கென்ரி என்பவரால் கற்பனையாக உருவாக்கப்பட்ட நாடு. இது தனக்கென ஒரு வலைத்தளம், கொடி, சின்னம் மற்றும் நாணயத்தைக் கொண்டுள்ளது. எந்த நாடும் முறையான உரிமை கோராத, அண்டார்டிகாவின் பனி சூழ்ந்த பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக, இது தன்னை விவரிக்கிறது. இது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு என்றும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதே இதன் நோக்கம் என்றும் வெஸ்ட் ஆர்க்டிகாவின் வலைதளம் கூறுகிறது. 'தூதர்', 'குடியுரிமை' மற்றும் 'கௌரவப் பட்டங்கள்' போன்ற பதவிகளையும் வெஸ்ட் ஆர்க்டிகா வழங்குகிறது. ஆனால், உலகின் எந்தவொரு நாடும் அல்லது ஐக்கிய நாடுகள் சபையும் அதை ஒரு உண்மையான நாடாக அங்கீகரிக்கவில்லை. இந்த 'நாட்டின்' அரசாங்கம் கிராண்ட் டியூக் டிராவிஸால் தலைமை தாங்கப்படுகிறது என்றும், அவருக்கு ஒரு பிரதமரும், ஒரு 'ராயல் கவுன்சிலும்' உதவி செய்கின்றனர் என்றும் மேற்கு ஆர்க்டிகாவின் வலைதளம் குறிப்பிடுகிறது. இது தவிர, மேற்கு ஆர்க்டிக்காவில் இயற்றப்பட்ட சட்டங்களை விளக்குவதற்கு 'கிராண்ட் டூகல் கோர்ட்' என்ற ஒரு நிறுவனமும் செயல்படுகிறது. அந்த நிறுவனத்தின் நோக்கங்களை நிறைவேற்ற, தங்களது அறிவு, நேரம் மற்றும் திறன்களை பங்களிக்கும் நபர்களை அந்த வலைதளம் 'உறுப்பினர்கள்' என்று விவரிக்கிறது. ஆனால், இவை அனைத்தும் டிஜிட்டல் மற்றும் குறியீட்டு கட்டமைப்புகளில் மட்டுமே இயங்குகின்றன. நிஜத்தில் அவற்றுக்கு எந்தவொரு சட்ட ரீதியான அல்லது ராஜ்ஜிய அங்கீகாரமும் கிடையாது. இருப்பினும், குற்றம் சாட்டப்பட்ட ஹர்ஷ் வர்தனுடன், மேற்கு ஆர்க்டிக்காவுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g2nnjwqp2o
  9. Published By: DIGITAL DESK 2 24 JUL, 2025 | 06:27 PM வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகளுக்கு நீதி கேட்டு, மன்னார் அடம்பன் சந்தியில் இருந்து திருக்கேதீஸ்வரம் மாந்தை வரையிலான அமைதி பேரணி ஒன்று நடைபெற்றது. இப்பேரணி, மாந்தை மேற்கு வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், வியாழக்கிழமை (24) காலை 10.00 மணியளவில் அடம்பன் சந்தியில் இருந்து ஆரம்பமாகி, மாந்தை மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தை நோக்கி முன்னெடுக்கப்பட்டது. பேரணியில் கலந்து கொண்ட பொதுமக்கள், “எங்கே எங்கள் உறவுகள்?”, “மனிதனும் புதைகுழிக்குள் நீதியும் புதைகுழிக்குள்ளா?”, “வேண்டும் சர்வதேச விசாரணை!”, “இது நாடா இடுகாடா?”, “சர்வதேசமே மௌனத்தை கலை” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்றனர். பேரணி மாந்தை திருக்கேதீஸ்வரத்தில் உள்ள மனித புதைகுழி பகுதியில் நிறைவடைந்தபின், அங்கிருந்த அஞ்சலி நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கும், புதைகுழிகளில் கண்டெடுக்கப்பட்டவர்களுக்கும் மலர் தூவி, சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வின் முடிவில், மக்கள் சார்பில் தயாரிக்கப்பட்ட மகஜர், மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளாரிடம் கையளிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/220859
  10. 24 JUL, 2025 | 12:47 PM ஒரு எழுத்தாளனின் பெயரை ஒரு வீதிக்கு சூட்டி, அந்த எழுத்தாளனை கௌரவித்த நிகழ்வொன்று அண்மையில் மாத்தளையில் நடைபெற்றுள்ளது. மாத்தளை மலரன்பன் என்ற எழுத்தாளன் நான்கு முறை அரச சாஹித்திய விருதை வென்றவர். அமைதியான குணப்பண்புடைய இவர் பல புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். அவரது எழுத்துப்பணியை கௌரவிக்கும் வகையில் மாத்தளை மாவட்டத்தில் நோர்த் மாத்தளை என்ற இடத்தில் உள்ள அவரது இல்லத்தினை அண்மித்த ஆயுர்வேத மத்திய நிலையத்திற்குச் செல்லும் வீதி “ஆறுமுகம் மலரன்பன் வீதி” எனப் பெயரிடப்பட்டு, எழுத்தாளன் மாத்தளை மலரன்பனுக்கு பாரிய பாராட்டு விழாவும் அண்மையில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் புத்தசாசன சமய விவகார, கலாசார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி மற்றும் மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபயகோன் உட்பட பலரும் கலந்துகொண்டனர். வாழும்போது வாழ்த்தப்படும், அங்கீகரிக்கப்படும் கலைஞர்கள், எழுத்தாளர்களின் பட்டியலில் மாத்தளை மலரன்பனும் இடம்பிடித்துள்ளார். https://www.virakesari.lk/article/220802
  11. அன்டன் பாலசிங்கத்தின் சிலையை நிறுவுவதற்கு இடம்பெறும் நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் பிரான்ஸ் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும் - முன்னாள் இராணுவ அதிகாரி ஜகத்டயஸ் Published By: RAJEEBAN 24 JUL, 2025 | 12:39 PM தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தின் சிலையை நிறுவுவதற்கு பிரான்ஸ் தலைநகரில் இடம்பெறும் நடவடிக்கைகள் குறித்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பிரான்ஸ் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும் என முன்னாள் இராணுவ அதிகாரி லெப் ஜெனரல் ஜகத்டயஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். புலம்பெயர் தமிழர்களை திருப்திபடுத்தும் விதத்திலான பிரான்சின் செயற்பாடுகளை இலங்கை கடுமையாக எதிர்க்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையிலும் இந்தியாவிலும் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் இருந்து பிரிட்டிஸ் பிரஜையான பாலசிங்கத்தின் நடவடிக்கைகளை பிரித்து பார்க்கமுடியாது, மன்னிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். கனடா இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என தெரிவித்து இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளிற்கு பயணத்தடையை விதித்துள்ளதன் பின்னணிலேயே அன்டன் பாலசிங்கத்திற்கு பிரான்சில் சிலையை நிறுவும் நடவடிக்கைகளை பார்க்கவேண்டும் என ஜகத் டயஸ் தெரிவித்துள்ளார். சரியான நிலைப்பாட்டை முன்வைப்பதற்கான ஒருங்கிணைந்த உத்தியில்லாத நிலையில் வெளிநாட்டு அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் தமிழ்புலம்பெயர்ந்தோர் தங்கள் பிரிவினைவாத திட்டத்தை சிறந்த முறையில் முன்னெடுத்துவருகின்றனர் என தெரிவித்துள்ள முன்னாள் இராணுவ அதிகாரி ஆனால் இந்த சவாலை எதிர்கொள்வதில் எங்கள் நாடாளுமன்றம் முற்றிலும் அலட்சியமாக உள்ளது, இலங்கைக்கு எதிரான திட்டங்களை எதிர்கொள்ளும் தனது கடப்பாட்டினை அலட்சியம் செய்கின்றது என தெரிவித்துள்ளார். அவர்கள் விடுதலைப்புலிகளை பரிசுத்தமானவர்களாக்க பகல் இரவாக அவர்கள் செயற்படுகின்றனர், நிகழ்வுகளில் விடுதலைப்புலிகளின் கொடிகளை ஏற்றுவதும் அவர்களின் சிலைகளை நிறுவுவதும் இந்த மூலோபாயத்தின் ஒரு பகுதி என ஜகத்டயஸ் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் சிலை தொடர்பில் எங்களின் தூதரகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து அரசாங்கம் பொதுமக்களிற்கு தெளிவுபடுத்தவேண்டும் என தெரிவித்துள்ள அவர் சிலையை நிறுவும் திட்டம் இடம்பெறுகின்ற போதிலும் அரசாங்கமோ எதிர்கட்சியோ இதுவரை இது குறித்து வாய்திறக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/220801
  12. 24 JUL, 2025 | 12:03 PM எல்லா தேசங்களிலும் மண்ணைத் தோண்டினால் வளங்கள்தான் கிடைக்கும். ஆனால் ஈழ தேசத்தில் மட்டும்தான் எங்கு தோண்டினாலும் பிணங்கள் கிடைக்கின்றன. இப்போது அந்தப் பிணங்கள் காலத்தின் கறையான் அரித்து எலும்புக்கூடுகளாய் மாறி, அவை ஈழத்தில் நிகழ்ந்தது இனப்படுகொலைதான் என்பதை அடையாளம் காட்டுகின்றன. செம்மணி மனிதப் புதைகுழியானது தமிழினப் படுகொலையின் சாட்சியாகும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், செம்மணி புதைகுழிக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தென்னிந்திய பிரபல நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவருமான சேது கருணாஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், இனப்படுகொலைக்கு செம்மணிதான் சாட்சி. இதற்கு முன்னால் எத்தனையோ இனப்படுகொலை சாட்சிகளைப் பன்னாட்டு அவையில் முன்னிறுத்தினோம். ஆனால் நீதிக்கு இடம் தராத ஐ.நா அவைகள் கள்ள மெளனம் காத்தது. இந்த செம்மணி அகழாய்வு உண்மையிலாவது, இனப்படுகொலையின் இன்னல்களை சர்வதேச சமூகம் உணர்ந்து கொள்ளட்டும். செம்மணி மனிதப் புதைகுழி 2009ஆம் ஆண்டிற்கு முன் நிகழ்ந்திருக்கிலாம் அல்லது பின் நிகழ்ந்திருக்கலாம். எப்போது நடந்தாலும், சிங்களவரால் நிகழ்த்தப்பட்டது. இனப்படுகொலைதான் என்பதை செம்மணியும் மற்ற அகழ்வாய்வுகளும் வெளிப்படுத்தியிருக்கின்றன. 2009க்கு பின்னும் கூடுதலாய் அதே புதைகுழி உத்தியை சிங்கள பேரினவாத அரசு கையாண்டுள்ளது என்பது இப்போது கூடுதலாய் வெளிப்பட்டிருக்கிறது. சமகாலத்தில் செம்மணியை விட சர்வதேச சமூகத்திற்கு வேறென்ன சான்று வேண்டும்!? இதுவரை 80க்கும் மேற்பட்ட அகழ்வாய்வு தொகுப்புகள் கிடைத்துள்ளன. எந்த நாட்டிலும் இதுபோல், அகழாய்வில் அதிர்ச்சியில்லை. தமிழர் அகழாய்வில் முன்னோர் வாழ்வியல் படித்துள்ளோம். ஆனால், தமிழீழ தேசத்தில்தான் எலும்புக் கூடுகளின் வலியை உணரமுடிகிறது. தாயும் குழந்தையும் கட்டி அணைத்தபடி மடிந்த எலும்புக்கூடுகளின் காட்சி, காலம் கடந்தும் நம் காயங்களை மீண்டும் காயப்படுத்துகிறது. பள்ளிச்சிறுவர்களின் புத்தகப் பை, பொம்மையோடு கண்டறிந்த அகழாய்வு கொடுமையின் உச்சத்தை தொடுகிறது. எண்ணிலடங்கா எலும்புக்கூடுகளில் சிறுவர் சிறுமியர் அதிகம் என்பதை உலகம் கண்டுணரா அதிர்ச்சி. வதைக்கப்பட்டும் புதைக்கபட்டும் வல்லுறவில் மறைக்கப்பட்டும் எத்தனைப் பெண்கள்! அத்தனையும் செம்மணியில் எலும்புக்கூட்டின் சாட்சியங்கள். இன்னும் இலங்கை அகழாய்வு நீண்டாலும் கள்ள மெளனம் சாதிக்கும் இவ்வுலகம். நாம் சிங்கள பெளத்த பேரினத்தின் அநீதிகளை பன்னாட்டு அவையில் எடுத்துரைப்போம். மக்கள் திரள் போராட்டம் வழியாய் நமக்கான நீதிக்குக் குரல் கொடுப்போம். ஒன்றிய அரசு, அண்டை நாட்டில் நிகழ்ந்த அநீதிக்கு ஐ.நா அவையில் குரல் கொடுக்க வேண்டும்! இதற்கு முன் தமிழினத்திற்கு செய்ததை, செம்மணி மனிதப் புதைகுழியை அறிந்தும் கண்டும் காணமல் இருக்கக்கூடாது. தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் செம்மணி மனிதப் புதைகுழி படுகொலைக்கு, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, இலங்கை அரசை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுகோள் விடுக்கவேண்டும். மேலும் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். செம்மணி நமது தமிழினப் படுகொலைக்கு சாட்சியத்திற்கு அடையாளம். ஆனாலும், இன்னும் இதுபோன்ற தோண்டப்படாத அகழாய்வுகள் இன்னும் எத்தனையோ உள்ளன. காலம் ஈழத் தமிழனத்திற்கு நல்ல தீர்ப்புகள் வழங்கும். நாம் தொடர்ந்து போராடுவோம் என குறிப்பிடப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/220790
  13. "ஒரு பை மாவுக்கு உயிரையும் கொடுப்பேன்" - பட்டினியின் பிடியில் தவிக்கும் காஸா மக்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் ஸ்வாமிநாதன் நடராஜன் மற்றும் காஸா லைஃப்லைன் புரோகிராம் பிபிசி உலக சேவை 4 மணி நேரங்களுக்கு முன்னர் "நான்கு நாட்களாக சாப்பிடாததால் எனது இரண்டு குழந்தைகளும் அழுதுகொண்டிருந்தனர்," என்கிறார் காஸாவை சேர்ந்த ஒருவர். "வீட்டுக்கு ஒரு பை மாவு கொண்டுவந்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் நான் விநியோக இடத்தை அடைந்தேன். ஆனால் அங்கு சென்ற போது என்ன செய்வது என எனக்கு தெரியவில்லை," என அவர் பிபிசி நியூஸ் அரபியிடம் தெரிவித்தார். "காயமடைந்தவர்களை காப்பாற்ற முயற்சிப்பதா, உயிரிழந்தவர்களை தூக்கிச் செல்வதா அல்லது மாவைத் தேடுவதா? எனது குழந்தைகள் உணவு உட்கொள்ள ஒரே ஒரு பை மாவை வீட்டுக்கு கொண்டு செல்ல முடியும் என்றால் நான் மரணத்தை ஏற்றுக்கொண்டிருப்பேன் என இறைவன் மீது ஆணையாகச் சொல்கிறேன்." பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காஸாவில் சுமார் 900,000 குழந்தைகள் பட்டினியால் அவதிப்படுகின்றனர், அவர்களில் 70,000 பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு மருத்துவர் பிபிசியிடம் தெரிவித்தார் மக்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ஆதரவு பெற்ற சர்ச்சைக்குரிய காஸா மனிதநேய அறக்கட்டளை (GHF) விநியோகிக்கும் உதவியை மட்டுமே நம்பியுள்ள நிலையில், ஊட்டச்சத்து குறைபாடு, பட்டினி, உதவி மையங்கள் அருகே கொலைகள் எல்லாம் காஸாவில் கவலையளிக்கும் பிரச்னைகளாகி வருகின்றன. "காஸா மனிதநேய அறக்கட்டளை (GHF) மே 27ஆம் தேதி செயல்படத் தொடங்கியதிலிருந்து, காஸாவில் உணவு பெற முயன்றபோது 1,000-த்திற்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர்," என்கிறார் ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் தமீன் அல்-கீதான். "ஜூலை 21ஆம் தேதி வரை காஸாவில் உணவை பெற முயன்றபோது 1,054 பேர் கொல்லப்பட்டதாக நாங்கள் பதிவு செய்திருக்கிறோம், இதில் 766 பேர் காஸா மனிதநேய அறக்கட்டளை அமைந்துள்ள இடங்களுக்கு அருகிலும், 288 பேர் ஐநா மற்றும் பிற மனிதநேய அமைப்புகளின் உதவி வாகனங்களுக்கு அருகிலும் கொல்லப்பட்டுள்ளனர்," என அவர் பிபிசி உலக சேவையிடம் தெரிவித்தார். அதிகரிக்கும் இறப்புகள் மே மாத இறுதியில் தெற்கு மற்றும் மத்திய காஸாவில் பல உதவி மையங்களில் குறைவான அளவு உதவிகளை வழங்கி காஸா மனிதநேய அறக்கட்டளை தனது செயல்பாடுகளை தொடங்கியது. அதற்கு முன்பு 11 வாரங்கள் இஸ்ரேல் காஸாவை முடக்கி எந்த உணவையும் அந்தப் பகுதிக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாலத்தீன சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி ஊட்டச்சத்து குறைபாட்டால் கடந்த 48 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உட்பட 33 பேர் இறந்துள்ளனர் கடந்த 72 மணி நேரத்தில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் அந்தப் பகுதியில் 21 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக காஸா நகரில் செயல்படும் ஷிபா மருத்துவமனையின் இயக்குநர் முகம்மது அபு சல்மியா சொல்கிறார். காஸாவில் சுமார் 900,000 குழந்தைகள் பட்டினியால் வாடுவதாகவும், அவர்களில் 70,000 பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார். கவலையளிக்கும் எண்ணிக்கையில் இறப்புகளை சந்திப்பதாகவும், குறிப்பாக நீரிழிவு மற்றும் சிறுநீரக நோயாளிகள் அபாயத்தில் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கடந்த 48 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உட்பட 33 பேர் உயிரிழந்திருப்பதாக ஹமாஸ் தலைமையிலான சுகாதார அமைச்சகத்தை சேர்ந்த செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். 2023-ஆம் ஆண்டு போர் தொடங்கியது முதல் ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்பட்ட இறப்புகள் 101-ஆக உள்ளன, இதில் 80 பேர் குழந்தைகள் என்று அவர்கள் மேலும் கூறுகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முகமது ஸகரியா அய்யூப் அல்-மதூக் போன்ற இளம் குழந்தைகள் உயிருக்கே அச்சுறுத்தலான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்கின்றனர் பட்டினியை எதிர்கொள்ளும் நிலை உலக உணவு திட்டத்தின்(WFP) கூற்றுப்படி காஸாவின் மொத்த மக்கள் தொகையுமே பட்டினியை எதிர்கொண்டிருக்கிறது. "ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருகிறது, 90,000 பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் உடனடி சிகிச்சை தேவைப்படுகிறது. மூன்றில் ஒருவர் பல நாட்களுக்கு உண்ணாமல் இருக்கின்றனர்," என ஞாயிறன்று வெளியிட்ட அறிக்கையில் உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது. "ஒரு கிலோ கிராம் மாவு பையின் விலை உள்ளூர் சந்தைகளில் 100 டாலர்களை தாண்டிவிட்ட காரணத்தால் பெரும்பாலான மக்களுக்கு உணவு கிடைப்பதற்கு உணவு உதவிதான் ஒரே வழி." பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தற்காலிக சந்தைகளில் ஒரு கிலோ மாவு 90 முதல் 100 டாலர்கள் வரை விற்கப்படுகிறது மார்ச் மாதத்தில் காஸாவிற்குள் செல்லும் அனைத்து பாதைகளும் மறித்த இஸ்ரேல், உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் நுழைவதை தடுத்ததுடன், இரண்டு வாரங்கள் கழித்து ஹமாஸுடனான இரண்டு மாத போர் நிறுத்தத்தை முறித்துக்கொண்டு ராணுவ தாக்குதலை தொடங்கியது. சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் காஸா மருத்துவ அமைப்புக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களையும் கூட இந்த முடக்கம் தடுத்துவிட்டிருக்கிறது. மே மாதம் மத்தியிலிருந்து 4400 லாரி மனிதாபிமான உதவிப்பொருட்கள் இஸ்ரேலிலிருந்து காஸாவிற்குள் நுழைந்திருப்பதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. எல்லையில் காஸா பகுதியில் ஐநாவால் எடுத்துக்கொள்ளப்பட மேலும் 700 லாரி நிறய உதவிப் பொருட்கள் காத்துக்கொண்டிருப்பதாக அது மேலும் தெரிவித்துள்ளது. காஸா பகுதியில் உதவிப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை என வலியுறுத்தும் இஸ்ரேல், ஹமாஸ் மனிதாபிமான உதவிப்பொருட்களை திருடி தனது ஆயுததாரிகளுக்கு தருவதற்காகவோ அல்லது அதை விற்று பணம் திரட்டுவதற்காகவோ பதுக்குவதாக குற்றம்சாட்டியுள்ளது. திங்கள்கிழமை பிரிட்டன், கனடா பிரான்ஸ் உட்பட 28 நாடுகள் காஸாவில் பொதுமக்கள் அனுபவிக்கும் துயரம் புதிய ஆழத்தை எட்டிவிட்டிருப்பதாகவும் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்படவேண்டும் எனவும் வலியுறுத்தின. இஸ்ரேலின் உதவி விநியோகிக்கும் முறை ஆபத்தானது என்றும், உதவியை துளித்துளியாக தருவதையும், உணவு மற்றும் தண்ணீரைத் தேடும் மக்களின் "மனிதநேயமற்ற கொலைகளை" கண்டிப்பதாகவும் ஒரு கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நாடுகளின் அறிக்கையை நிராகரித்த இஸ்ரேலின் வெளியுறவுத்துறை, அது உண்மையோடு தொடர்பில்லாமல் இருப்பதாகவும், ஹமாஸுக்கு தவறான செய்தியை அனுப்புவதாகவும் தெரிவித்தது. ஆனால் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆதரவு பெற்ற காஸா மனிதநேய அறக்கட்டளை மே மாதம் இறுதியில் உதவிகளை விநியோகிக்க தொடங்கியது முதலே உதவியை தேடிவரும் போது பாலத்தீனர்கள் கொல்லப்படுவது பற்றிய செய்திகள் கிட்டத்தட்ட தினமும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. "நாங்கள் வறுமையில் வாடுகிறோம்" பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலக உணவுத் திட்டத்தின் கூற்றுப்படி, மூன்றில் ஒரு நபர் பல நாட்களுக்கு உணவு உண்ணமால் இருக்கிறார் "இன்று சந்தையில் ஒரு கிலோ மாவு 200 ஷெகெல்ஸுக்கு [$90] விற்கப்படுகிறது...ஆனால் நாங்கள் வறியவர்களாக இருக்கிறோம்," என பிபிசி நியூஸ் அரபியிடம் சொல்கிறார் அலா முகமது பெக்கித். "மிகவும் அடிப்படையான தேவைகளைக் கூட எங்களால் நிறைவேற்ற முடியவில்லை." உதவி மையங்களுக்கு அருகே இருக்கும் மக்கள் தினசரி சந்திக்கும் தாக்குதல்கள் குறித்தும் அவர் பேசுகிறார். "ஒரு இளைஞர் என் அருகே அமர்ந்துகொண்டிருந்தார், ஆனால் திடீரென அவர் தலையில் சுடப்பட்டார்," என்கிறார் அவர். "தோட்டா எங்கிருந்து வந்ததென்றுகூட எங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் உயிர் பிழைப்பதற்காக அங்கிருந்தோம், ஆனால் ரத்தத்தில் மூழ்குவதை பார்த்தோம். இன்று ஒரு பை மாவை எடுக்கும் யாராக இருந்தாலும் தோட்டாவை சந்திக்கிறார்கள்." காஸா மனிதநேய அறக்கட்டளை காஸாவில் நடத்தும் உதவி மையங்களை நாடும் பொதுமக்கள் "பாதிக்கப்பட்டதாக" வெளியான தகவல்களை ஆய்வு செய்துவருவதாக இஸ்ரேல் ராணுவம் கடந்த மாதம் பிபிசியிடம் தெரிவித்திருந்தது. "பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் சம்பவங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன," என்றும் சட்டம் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் உத்தரவுகளுக்கு மாறாக நடந்ததாக எழும் எந்த ஒரு குற்றச்சாட்டும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, தேவைக்கு ஏற்ப மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்த அறிக்கை தெரிவித்தது. பாலத்தீன மரணங்கள் பற்றி காஸாவின் ஹமாஸ் அதிகாரிகள் மிகைப்படுத்தப்பட்ட எண்ணிக்கையை பயன்படுத்துவதாக குற்றம்சாட்டும் இஸ்ரேல் அதே நேரம் "உடனடியாக ஏற்பட்ட அபாயத்தை" அகற்றுவதற்காக "எச்சரிக்கையாக சுட்டதாக" ஒப்புக்கொண்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உணவு உதவி பெறுவதற்காக காஸாவில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர் மிகவும் சமீபத்திய தாக்குதல் இந்த வாரம் இஸ்ரேல் டாங்குகள், மத்திய காஸாவில் அமைந்துள்ள டெய்ர் அல்-பலாஹிற்கு முதல்முறையாக நுழைந்துள்ளன, இதனால் பொதுமக்கள் அங்கிருந்து இடம்பெயரத் தொடங்கியுள்ளனர். டெய்ர் அல்-பலாஹின் தெற்கு பகுதியில் உள்ள ஆறு நகரப் பகுதிகளை உடனடியாக காலி செய்யும்படி இஸ்ரேலிய ராணுவம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டதையடுத்து ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அடுத்து செல்வதற்கு தங்களுக்கு போக்கிடம் இல்லை என அங்கிருந்த பொதுமக்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். ஹமாஸுடனான 21 மாத போரில் இஸ்ரேல் தரையில் பெரிய அளவில் தாக்குதல் நடத்தாத ஒரு சில காஸா பகுதிகளில் டெய்ர் அல் பலாஹவும் ஒன்று. ஹமாஸ் அங்கு பிணைக் கைதிகளை வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் காரணமாகவே ராணுவம் டெய்ர் அல்-பலாஹ் மாவட்டங்களில் இருந்து விலகி இருந்ததாக இஸ்ரேல் வட்டாரங்கள் கூறியுள்ளன. காஸாவில் எஞ்சியுள்ள 50 பிணைக் கைதிகளில் குறைந்தது 20 பேர் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. டெய்ர் அல்-பலாஹ்யை காலி செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவு பல ஆயிரம் பாலத்தீனர்களை பாதித்துள்ளதாகவும் மனிதாபிமான முயற்சிகளுக்கு "மற்றுமொரு பேரழிவு அடி" என்றும் ஐநா தெரிவித்துள்ளது. இந்த பகுதிகளில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான டஜன் கணக்கான முகாம்கள், உதவிப்பொருட்களுக்கான கிடங்குகள், சுகாதார மையங்கள் மற்றும் முக்கியமான தண்ணீர் உள்கட்டமைப்பு உள்ளன. இஸ்ரேலின் டெய்ர் அல்-பலாஹ் தாக்குதலின்போது தனது வளாகம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், தனது ஊழியர்களின் வசிப்பிடம் மூன்று முறை தாக்கப்பட்டு, குழந்தைகள் உட்பட அந்தப்பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர் எனவும் உலக சுகாதார அமைப்பு(WHO) சொல்கிறது. இஸ்ரேல் ராணுவம் வளாகத்திற்குள் நுழைந்து, ஆண் ஊழியர்களின் ஆடைகளை அகற்றி அவர்களுக்கு கைவிலங்கிட்டு சம்பவ இடத்திலேயே விசாரித்து, நான்கு பேரை தடுப்பு காவலில் வைத்ததாவும் அதில் மூவர் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் அந்த ஐநா அமைப்பு கூறுகிறது. இந்த சம்பங்கள் குறித்து இஸ்ரேல் ராணுவம் கருத்து ஏதும் கூறவில்லை. 'மனிதன் ஏற்படுத்திய பேரழிவு' மீண்டும் தாக்குதல் தொடங்கியிருந்தாலும், கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் உட்பட முக்கிய கட்டமைப்புகளை பாதுகாக்க அதன் ஊழியர்கள் காஸாவில் தங்கியிருப்பார்கள் என ஐநா சொல்கிறது. "காஸாவில் நடப்பது மனிதனால் ஏற்பட்ட பேரழிவு," என ஐ.நாவின் பாலத்தீன அகதிகள் முகமையின்(Unrwa) தகவல் தொடர்பு இயக்குநர் ஜூலியட் டூமா சொல்கிறார். இஸ்ரேல், பாலத்தீன அகதிகள் முகமையை காஸாவில் செயல்பட தடை விதித்தது 6000 லாரிகள் நிறைய உதவிப் பொருட்களை வழங்குவதை தடுத்துள்ளது என பிபிசியிடம் பேசிய டூமா சொல்கிறார். "கடந்த 24 மணி நேரத்தில் பசி மற்றும் பட்டினியால் Unrwa-வைச் சேர்ந்த சில சகாக்கள் பணியில் இருக்கும்போது மயக்கமடைந்ததாக எங்கள் ஊழியர்கள் தெரிவித்தனர்," எனக்கூறி பணியாளர்களுக்கு ஏற்பட்ட தாக்கத்தை சுட்டிக்காட்டுகிறார். "ஒரு மில்லியன் குழந்தைகள் உட்பட காஸாவின் மக்களை மொத்தமாக தண்டிக்கும் திட்டமிட்ட அரசியல் முடிவால் ஏற்பட்ட பட்டினி," என்கிறார் அவர். நவம்பர் 2024-ல், சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் குழு ஒன்று, "பட்டினி போடுவதை ஒரு வகையான போராக பயன்படுத்தியதற்கு" இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன்ட் ஆகியோருக்கு "குற்றப் பொறுப்பு" இருப்பதாக கருத "நியாயமான காரணங்கள்" உள்ளன என்று முடிவு செய்தது. ஆனால் பட்டினி போடுவதை ஒரு போர்க்கருவியாக பயன்படுத்தியதாக கூறப்படுவதை இஸ்ரேல் மறுத்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் "பொய்யானவை மற்றும் அபத்தமானவை" என நெதன்யாகு தெரிவித்தார். அக்டோபர் 2023-ல் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியதிலிருந்து காஸாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59,000-ஐ தாண்டிவிட்டதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா சுகாதாரத்துறை சொல்கிறது. 1200 பேர் உயிரிழந்து 251 பேர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட ஹமாஸ் தலைமையிலான தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கியது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdr31kllpyxo
  14. பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH படக்குறிப்பு, நாசா, இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாகும் நிசார் செயற்கைக்கோள் ஜூலை 30க்குள் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுரை தகவல் க.சுபகுணம் பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ இணைந்து முன்னெடுக்கும் கூட்டுத் திட்டமான நிசார் (NISAR) செயற்கைக்கோள் ஜூலை 30-ஆம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாசா – இஸ்ரோ செயற்கைத் துளை ரேடார் (NASA-ISRO Synthetic Aperture Radar) என்று அழைக்கப்படும் இந்த செயற்கைக்கோள், எல்-பேண்ட், எஸ்-பேண்ட் ரேடார் அமைப்புகளைப் பயன்படுத்தும் முதல் செயற்கைக்கோள். இது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்படும். நிசார் திட்டம், அமெரிக்கா மற்றும் இந்தியாவின் விண்வெளி ஒத்துழைப்பில் ஒரு முக்கியமான படி என்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோதி தெரிவித்தனர். இந்தத் திட்டத்தின் கீழ் ஏவப்படும் செயற்கைக்கோள், விண்வெளியில் இருந்து பூமியில் மாறி வரும் நிலைமைகளைப் பற்றி விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளும். இது காடுகள், பனிக்கட்டிகள், பனிப்பாறைகள், பூமியின் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள், கண்டத்தட்டுகளின் நகர்வுகள் ஆகியவற்றைக் கண்காணிக்கும். இந்தச் செயற்கைக்கோள் சேகரிக்கும் தரவுகள் இயற்கைப் பேரிடர்களுக்கு எதிர்வினையாற்றுவது, உள்கட்டமைப்பைச் சரிபார்ப்பது, விவசாயிகளுக்கு உதவுவது எனப் பலவிதங்களில் பயன்படும் என்றும் நேற்று வெளியான செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாசா, இஸ்ரோவின் கூட்டுத்திட்டமான இந்த நிசாரின் முக்கியத்துவம் என்ன? அதன்மூலம் இரு நாடுகளும் சாதிக்கப் போவது என்ன? இந்தத் திட்டம் பற்றிய ஐந்து முக்கிய கேள்விகளையும் அவற்றுக்கான பதில்களையும் இங்கு காண்போம். 1. நிசார் திட்டத்தின் நோக்கம் என்ன? எப்படிப் பயனளிக்கும்? பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, நிசார் திட்டத்தின் கீழ் ஏவப்படும் செயற்கைக்கோள், பூமியின் தெளிவான ஒளிப்படங்களைப் பதிவு செய்யும். நாசாவும் இஸ்ரோவும், நிசாரை ஏவிய பிறகு, அது பூமியை மிகவும் விரிவாக, தெளிவாகப் படம் பிடிக்கும். அவற்றால் ஒரு அங்குல நிலத்தில் நிகழும் சிறிய அசைவுகளைக்கூட மிகத் துல்லியமாகக் காட்ட முடியும். அதாவது, ஒரு நிலத்தின் சிறு பகுதியளவு சில சென்டிமீட்டர் அளவுக்கு மூழ்கினாலும் அல்லது இடம் மாறினாலும், அந்த மாற்றத்தைக் கண்டறிய இதனால் முடியும். நிசார் செயற்கைக்கோள் 12 நாட்களுக்கு ஒருமுறை பூமியின் மேற்பரப்பை முழுவதுமாக ஸ்கேன் செய்யும். அதன்மூலம் கிடைக்கும் ஒளிப்படங்கள் மூலம், நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்களுக்கு முன்னரும் பின்னரும் நிலப்பரப்பில் நடக்கும் மாற்றங்களைப் பார்க்க முடியும் பனிப்பாறைகள் மற்றும் பனிக்கட்டிகளில் மெதுவாக நிகழும் நகர்வுகளைக் காணலாம் காடு உருவாக்கம் அல்லது காடழிப்பு என காடுகளில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிக்க இயலும் வளர்ச்சித் திட்டங்கள் போன்ற காடுகளில் ஏற்படும் மாற்றங்களையும் கண்காணிக்க முடியும் நிசார் திட்டத்தில் பயன்படுத்தப்படும் செயற்கைத் துளை ரேடார் (SAR) எனப்படும் சிறப்பு தொழில்நுட்பம்தான் இந்தத் துல்லியமான படங்களைப் பெற உதவுகிறது. 2. செயற்கைத் துளை ரேடார் (SAR) என்றால் என்ன? பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, நிசார் செயற்கைக்கோளில் உள்ள ஆன்டனா 12 மீட்டர் நீளமுடையது. செயற்கைத் துளை ரேடார் அல்லது SAR என்பது ஆற்றல் சிக்னல்களை பூமியின் மேற்பரப்பை நோக்கி அனுப்பி, அவை மோதிய பிறகு அவற்றில் எவ்வளவு ஆற்றல் திரும்புகிறது என்பதை அளவிடுவதன் மூலம் தரவுகளைச் சேகரிக்கும் ஒரு செயல்முறை. வழக்கமான ரேடாரை போலவே, SAR மைக்ரோவேவ் சிக்னல்களை அனுப்பி, அவை மீண்டும் எதிரொலிப்பதைப் பதிவு செய்கிறது. ஆனால் இந்த செயற்கைக்கோள் நகரும்போது பல அளவீடுகளை எடுத்து மேம்பட்ட கணினி செயலாக்கத்தைப் பயன்படுத்தி அவற்றை இணைக்கிறது. இதுதான் இறுதி படங்களை மிகவும் தெளிவாக்குகிறது. இந்த தொழில்நுட்பம் இல்லாமல் அதே அளவுக்குத் தெளிவான ஒளிப்படங்களைப் பெறுவதற்கு, ஒரு செயற்கைக்கோளுக்கு 19 கிலோமீட்டர் அகலமுள்ள ரேடார் ஆன்டனா தேவைப்படும். நிசார் செயற்கைக்கோளின் ஆன்டனா சுமார் 12 மீட்டர் அகலம் கொண்டது. அதாவது ஒரு பேருந்து அளவுக்கு நீளமானது. ஆனால், இந்த செயற்கைக்கோள் மூலம் 10 மீட்டர் வரை சிறிய பகுதிகளைக்கூட மிகத் தெளிவாகவும், கூர்மையாகவும் படம் பிடிக்க முடியும். அதோடு, அந்தச் சிறிய நிலப்பகுதியில் நிகழும் சில சென்டிமீட்டர் அளவிலான மாற்றங்களைக்கூட இந்தத் தொழில்நுட்பத்தில் துல்லியமாக அடையாளம் காண முடியும். இதுகுறித்துப் பேசியுள்ள நாசாவின் முன்னாள் நிபுணர் சார்லஸ் எலாச்சி, "பூமியின் மாற்றங்களை மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் காண SAR உதவுகிறது. பூமி எவ்வாறு செயல்படுகிறது, காலப்போக்கில் எவ்வாறு மாறுகிறது என்பதைப் பற்றி விஞ்ஞானிகள் அதிகம் தெரிந்துகொள்ள நிசார் உதவும்," என்று தெரிவித்துள்ளார். 3. செயற்கைத் துளை ரேடார் எவ்வாறு செயல்படும்? பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH படக்குறிப்பு, பூமியின் ஒளிப்படங்களை துல்லியமாகப் பதிவு செய்வதற்காக விஞ்ஞானிகள் சாமர்த்தியமான ஒரு தீர்வை கண்டுபிடித்தனர். சூரிய ஒளியைச் சார்ந்து செயல்படும் வழக்கமான கேமராக்களை போலன்றி, இது அதன் சொந்த சிக்னல்களை அனுப்பிப் படம் பிடிக்கிறது. இந்த சிக்னல்கள் மலைகள், காடுகள் அல்லது ஈரமான மண்பரப்பு ஆகியவற்றில் மோதிய பிறகு, மீண்டும் சென்சாரை நோக்கிப் பிரதிபலிக்கிறது. இந்தப் பிரதிபலிப்பு, தெளிவான படங்களை எடுப்பதற்கு உதவுகிறது. SAR-ஐ அண்டார்டிகாவின் பனிப்பாறைகள், எண்ணெய்க் கசிவுகள், ஈரநிலங்கள் ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்யப் பயன்படுத்தலாம். இதன்மூலம் கிடைக்கும் ஒளிப்படத்தின் தரம், அதிலுள்ள ஆன்டனா எவ்வளவு பெரிதாக உள்ளது என்பதைப் பொறுத்தது. ஆன்டனா பெரிதாக இருந்தால் படம் தெளிவாக இருக்கும். ஆனால், ஒரு செயற்கைக்கோளில் 4 கி.மீ நீளம்கொண்ட ஒரு பிரமாண்ட ஆன்டனாவை வைப்பது சாத்தியமில்லை. எனவே, விஞ்ஞானிகள் இதற்கு சாமர்த்தியமான ஒரு தீர்வைக் கண்டுபிடித்தனர். ஒரு பிரமாண்ட ஆன்டனாவுக்கு பதிலாக சிறிய ஆன்டனாவையே பயன்படுத்தி, செயற்கைக்கோள் நகரும்போது அதிக அளவிலான அளவீடுகளைப் பதிவு செய்கிறார்கள். பின்னர் அந்த அளவீடுகளை மொத்தமாக இணைத்து ஒரு பிரமாண்ட ஆன்டனாவில் இருந்து கிடைத்தது போலச் செய்கிறார்கள். இதுவே, இந்தச் செயல்முறை 'செயற்கை' துளை ரேடார் என அழைக்கப்படுவதற்குக் காரணம். இதன்மூலம், இந்தச் செயற்கைக்கோள் பல சிறிய அளவீடுகளைப் பயன்படுத்தி, ஒரு பெரிய கட்டமைப்பின் தேவையின்றியே, அதில் கிடைக்கக்கூடிய தெளிவான, உயர்தர ஒளிப்படங்களை எடுக்கிறது. 4. நாசா, இஸ்ரோவின் கூட்டுத் திட்டம் விவசாயத்திற்கு எப்படி உதவும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மண்ணின் ஈரப்பதம், பயிர்களின் ஆரோக்கியம் போன்ற தகவல்களை நிசார் செயற்கைக்கோள் மூலம் பெறுவது, விவசாயிகள் திட்டமிட்டுப் பயிரிடுவதற்கு உதவிகரமாக இருக்கும். இந்த செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்படும் துல்லியமான படங்கள், உலகெங்கும் உள்ள விவசாயிகளுக்கு உதவும் என்று நாசா குறிப்பிட்டுள்ளது. அதாவது, பயிர்களின் வளர்ச்சி, தாவரங்களின் ஆரோக்கியம், மண்ணின் ஈரப்பதம் போன்ற முக்கியமான தகவல்களை வழங்கும். இந்தத் தகவல்கள் விவசாயிகளுக்குப் பயிர்களை நடவு செய்வது, தண்ணீர்ப் பாய்ச்சுவது, அறுவடை செய்வது ஆகியவற்றுக்குச் சரியான காலகட்டத்தைப் புரிந்துகொள்ள உதவும். இது நேரத்தை மிச்சப்படுத்தவும், தண்ணீரைச் சிறப்பாகப் பயன்படுத்தவும் உதவுவதோடு, காலநிலை மாற்றங்களால் ஏற்படும் விளைவுகளை உணர்ந்து செயல்படவும் வழிவகுக்கும். "விவசாயத்தில் சரியான திட்டமிடல் முக்கியம். நடவு, பாசனம் என அனைத்திற்குமே சிறந்த நேரம் என்பதை அறிந்திருக்க வேண்டும். அதைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ள இந்த செயற்கைக்கோள் உதவிகரமாக இருக்கும்," என்று கூறியுள்ளார் நிசார் திட்டத்தில் பணியாற்றும் விஞ்ஞானி நரேந்திர தாஸ். நிசார் செயற்கைக்கோளில், பயிர்கள் மற்றும் மண்ணின் தன்மையை ஆராய ஒரு சிறப்பு ரேடார் பயன்படுத்தப்படுகிறது. அதன்மூலம், மண்ணிலும் தாவரங்களிலும் எவ்வளவு தண்ணீர் உள்ளது, பயிர்களின் ஆரோக்கியம் ஆகியவற்றைச் சொல்ல முடியும். இதன் மூலம் விவசாயிகள் தங்கள் பயிர்களில் வாரந்தோறும் நிகழும் மாற்றங்களைப் பார்க்கலாம். பயிர்கள் எவ்வாறு வளர்கின்றன என்பதைத் துல்லியமாகத் தெரிந்து கொள்வதன் மூலம் அரசுகள் அதிக நன்மை பயக்கும் விவசாயக் கொள்கைகளை வகுக்கலாம். எடுத்துக்காட்டாக, இதில் கிடைக்கும் தரவுகளைப் பயன்படுத்தி, நெல் எப்போது நடப்பட்டது, செடிகள் எவ்வளவு உயரமாக உள்ளன, அவை பூக்கின்றனவா என்பனவற்றை அறிய முடியும். இதில் நெல் வயல்களின் ஈரப்பதம் எவ்வளவு என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். அதன் மூலம், வயல் நிலம் வறண்டிருப்பதாகத் தோன்றினால் அல்லது பயிர்கள் ஆரோக்கியமற்று தோற்றமளித்தால், விவசாயிகள் தங்கள் அணுகுமுறையை விரைவாக மாற்றிக்கொள்ள முடியும். 5. நிசார் திட்டத்தில் நாசா, இஸ்ரோவின் பங்கு என்ன? நிசார் திட்டம் தொடர்பாக இஸ்ரோ, நாசா இடையே 2014 செப்டம்பர் 30ஆம் தேதி ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. 2024இல் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் செயற்கைக்கோள் உருவாக்கத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அது நடக்காமல் போனது. கடந்த டிசம்பர் 2024இல் இந்திய அரசு வெளியிட்ட அறிக்கைப்படி, 12 மீட்டர் நீளமுள்ள ஆன்டனாவில் சில முன்னேற்றங்களைச் செய்வதற்காக நாசா வல்லுநர்கள் அதைக் கடந்த அக்டோபரில் அமெரிக்காவுக்கு எடுத்துச் சென்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES அதோடு, செயற்கைக்கோளின் சில பாகங்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த ஒப்பந்தத்தின்படி, ஒரு எல் பேண்ட் சிந்தெடிக் அபெர்ட்சர் ரேடார், ஒரு ஜிபிஎஸ் ரிசீவர், அறிவியல் தகவல்களுக்கான ஒரு தொடர்பு அமைப்பு, அதிக திறன் கொண்ட சாலிட்-ஸ்டேட் ரெக்கார்டர் (இது தான் செயற்கைக்கோளின் ஹார்ட் டிரைவ்) மற்றும் ஒரு பேலோட் டேட்டா சப் சிஸ்டம் ஆகியவற்றை நாசா வழங்கியுள்ளது. மறுபுறம், இந்தச் செயற்கைக்கோளில் எல் பேண்ட் எஸ்.ஏ.ஆர் மற்றும் எஸ் பேண்ட் எஸ்.ஏ.ஆர் என்கிற இரண்டு ரேடார் கருவிகள் இடம்பெற்றிருக்கும். இந்தக் கருவிகளை இஸ்ரோ தயாரித்துள்ளது. இந்தச் செயற்கைக்கோளை ஏவுவதற்கான அமைப்பு மற்றும் இதர விஷயங்களை இஸ்ரோ பராமரித்து வருகிறது. நிசார், ஜூலை 30ஆம் தேதி விண்ணில் ஏவத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, ஜி.எஸ்.எல்.வி மார்க் 2 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் பூமியின் சுற்றுப்பாதைக்கு அனுப்பப்படும். இந்த செயற்கைக்கோளின் மையப்பகுதி 5.5 மீட்டர் நீளமுடையது. இதில், 12 மீட்டர் நீளமுள்ள ரேடார் ஆன்டனா பொருத்தப்பட்டுள்ளது. அதோடு, 5.5 மீட்டர் நீளத்திற்கு இரண்டு சூரிய மின்தகடுகள் செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ளன. மூன்று ஆண்டுகள் செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள நிசார் திட்டத்தில், நாசா 1.1589 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. இஸ்ரோ இந்தத் திட்டத்தில் 91.167 மில்லியன் டாலர் (ரூ.7.88 பில்லியன்) முதலீடு செய்துள்ளது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg12vxd5lyo
  15. தமிழ் மக்களிற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலை குறித்த புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில் கறுப்பு ஜூலையின் வலிகள் மீண்டும் எதிரொலிக்கின்றன - கனடாவின் எதிர்கட்சி தலைவர் Published By: RAJEEBAN 24 JUL, 2025 | 11:23 AM தமிழ் மக்களிற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலை குறித்த புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில் கறுப்பு ஜூலையின் வலிகள் மீண்டும் எதிரொலிக்கின்றன என கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லியர் தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலையை குறிக்கும் முகமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமிழ் பாரம்பரியத்தை கொண்ட கனேடியர்கள் கறுப்பு ஜூலையை நினைவு கூருவதற்கு தயாராகும் இவ்வேளையில் நாங்கள் மீண்டுமொரு முறை இலங்கையில் தமிழர்களிற்கு எதிரான வன்முறையின் ஈவிரக்கமற்ற பாரம்பரியத்தை எதிர்கொண்டுள்ளோம். இலங்கையில் செம்மணி மனித புதைகுழி அகழ்வுகள் ஆரம்பமாகி இந்த வாரத்துடன் ஒரு வாரமாகின்றது. இந்த மனித புதைகுழியிலிருந்து கைக்குழந்தைகள் என கருதப்படும் உடல்கள் உட்பட தமிழர்களின் பெருமளவு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் உயிர்கள் கௌவரத்திற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலை குறித்த புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில் கறுப்பு ஜூலையின் வலிகள் மீண்டும் எதிரொலிக்கின்றன. வழமையான கட்டுமானபணியாக ஆரம்பித்தது - நடுங்கவைக்கும் கண்டுபிடிப்பாக மாறியது- தொழிலாளர்கள் நிலத்திற்கடியில் மனித உடல்களை கண்டுபிடித்தனர். நீதிமன்ற உத்தரவுகள் காரணமாக தற்போது ஆழமற்ற மனித புதைகுழிகள், கண்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டவர்கள், சிறுவர்கள் தனிப்பட்ட ரீதியில் எதிகொண்ட பாதிப்புகள் - விளையாட்டுப்பொருட்கள், புத்தகபைகள், ஆடைகள் - தெரியவந்துள்ளன. ஈவிரக்கமற்ற தன்மை ஆழம் காணமுடியாதது, தமிழ் கனேடியர்கள் தங்கள் இதயங்களில் பல தசாப்தங்களாக அறிந்திருந்த விடயங்களை - அதாவது இலங்கையின் உள்நாட்டு போரின் போது தங்களின் உறவுகள் காணாமல்போவது தற்செயலாக இடம்பெற்றது இல்லை என்பதை- செம்மணி மனித புதைகுழி நிரூபித்துள்ளது. அவர்கள் கொண்டு செல்லப்பட்டார்கள் - மௌனமாக்கப்பட்டார்கள் - இரகசியமாக புதைக்கப்பட்டார்கள். உயிர்தப்பியவர்களிற்கு உறுதியான ஆதரவை வழங்கவேண்டிய, பாரிய அநீதிகள் எங்கு இடம்பெற்றாலும, நீதிக்கான தேடலில் உறுதியாகயிருக்கவேண்டிய தார்மீக பொறுப்பு கனடாவிற்குள்ளது. மிக நீண்டகாலமாக இந்த சுமையை சுமக்கும் இங்குள்ள மற்றும் உலகெங்கிலும் உள்ள தமிழர்களிற்கு ஆதரவாக இருக்கவேண்டிய பொறுப்பும் உள்ளது. https://www.virakesari.lk/article/220788
  16. அரசியல் கைதிகளின் விடுதலைக்கான “விடுதலை நீர்” சேகரிப்பு கொழும்பில் 24 JUL, 2025 | 10:36 AM குரலற்றவர்களின் குரல் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்கான “விடுதலை நீர்” சேகரிப்பு கொழும்பில் இடம்பெற்றது. சேகரிக்கப்பட்ட நீரை மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் யாழ்ப்பாணத்தில் இன்று கையளிப்பார் இந்தப் போரட்டத்துக்கான எமது ஒத்துழைப்பாக சேர்க்கப்பட்ட இந்த நீரை யாழ் கிட்டுப்பூங்காவில் இடம்பெறும் நிகழ்வில் நான் கையளிப்பேன். நீண்டகாலமாக சிறையில் வாடும் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலையாக வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார் https://www.virakesari.lk/article/220780
  17. மூளாய் கலவரம் தொடர்பில் மேலும் மூவர் கைது! Published By: VISHNU 24 JUL, 2025 | 02:22 AM மூளாய் பகுதியில் இடம்பெற்ற கலவரத்துடன் தொடர்புடையவர்கள் என்ற ரீதியில் மேலும் மூவர் புதன்கிழமை (23) கைது செய்யப்பட்டனர். புதன்கிழமை (23) மூளாய் பகுதி மக்கள் இணைந்து யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரை அழைத்து விரைந்து கைது நடவடிக்கையை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியிருந்தார். அந்தவகையில் மூளாய் - வேரம் பகுதியைச் சேர்ந்த இருவரும், சங்கரத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவரும் என மூவர், நேற்றிரவு தொடக்கம் புதன்கிழமை (23) அதிகாலை வரையிலான சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்டனர். பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர். மேலும், மூளாய் பகுதியில் தொடர்ந்தும் பொலிஸ் பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலவரத்தை அடக்குவதற்கு பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/220772
  18. Published By: VISHNU 24 JUL, 2025 | 02:06 AM நான்கு அல்லது ஐந்து வயது மதிக்கத்தக்க பிள்ளைகளின் எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி, அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டின் மூன்றாவது பெரிய புதைகுழியாகும். 2025 மே மாத நடுப்பகுதியில் இருந்து செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் இதுவரை 85 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவற்றில் சிறுவர்களின் எச்சங்களும் அடங்கும். முன்னர் அடையாளம் காணப்பட்ட மூன்றாவது பெரிய மனித புதைகுழி மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரம் புதைகுழி ஆகும், 2023 இல் அந்த புதைகுழியில் 82 மனித உடல்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இரண்டாம் கட்ட அகழ்வாய்வின் 18ஆவது நாளான ஜூலை 23 புதன்கிழமை செம்மணி மனித புதைகுழி வளாகத்தில் இருந்து ஐந்து புதிய மனித மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் ஊடங்களுக்குத் தெரிவித்தார். "புதிதாக ஐந்து மண்டையோடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று நாட்களும் மொத்தமாக 20 மண்டையோடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 2 மண்டையோடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. மொத்தமாக 67 மண்டையோடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன." நீதிமன்றத்தால் குற்றப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் 85 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இன்றைய தினம் வரையில் 67 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய புதைகுழி மன்னாரில் உள்ள சதொச புதைகுழி ஆகும், அங்கு 28 சிறுவர்களின் எலும்புகள் உட்பட 376 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. 2013 ஆம் ஆண்டில், இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது பெரிய புதைகுழியாகக் கருதப்படும் மாத்தளை வைத்தியசாலைக்கு அருகிலுள்ள ஒரு இடத்திலிருந்து 155 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. இலங்கையில் நான்காவது பெரிய மனித புதைகுழியாக மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரம் புதைகுழி தற்போது மாறியுள்ளது. அங்கு 82 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. கொக்குத்தொடுவாய் புதைகுழியிலிருந்து 52 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பின்னர் அகழ்வாராய்ச்சி பணிகள் நிறைவடைந்தன. ஒரு வருடத்திற்கு முன்னர், கொழும்பு துறைமுகத்திற்கு செல்லும் புதிய அதிவேக வீதியின் நிர்மாணத்திற்காக நிலம் தோண்டப்பட்டபோது, ஜூலை 13, 2024 அன்று முதல் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கொழும்பு துறைமுகத்தில் உள்ள பழைய செயலக வளாகத்தில் இருந்து மீட்கப்பட்ட மொத்த மனித எலும்புகளின் எண்ணிக்கை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்தப் மனித புதைகுழிகள் அனைத்தும் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டன. கடந்த 17ஆம் திகதி, கொழும்பில் பொலிஸ் தடைகளுக்கு மத்தியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, தொழிற்சங்கத் தலைவர்களும் வெகுஜன அமைப்புகளும் நாடு முழுவதும் சிதறிக்கிடக்கும் இருபதுக்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள் குறித்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தின. https://www.virakesari.lk/article/220770
  19. மான்செஸ்டர் டெஸ்டில் நிரூபித்த சாய் சுதர்சன் - தடுமாறும் இந்தியா மீண்டெழ என்ன வாய்ப்பு? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரூட் பந்தில் ஒரு அட்டகாசமான கவர் டிரைவை அடித்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் அரை சதத்தை எட்டினார். கட்டுரை தகவல் தினேஷ் குமார் கிரிக்கெட் விமர்சகர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நான்காவது டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 23) மான்செஸ்டரில் ஆரம்பமானது. இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் எப்படி இருந்தது? சமீப காலத்தில் இப்படி ஒரு அட்டகாசமான டெஸ்ட் தொடர் நடந்ததாக நினைவில்லை. ஆஷஸ் தொடருக்கு இணையான பரபரப்போடு ஒவ்வொரு டெஸ்டும் நகர்ந்துகொண்டிருக்கிறது. முதல் மூன்று டெஸ்ட்களில் இருந்த விறுவிறுப்பையும் சுறுசுறுப்பையும், நேற்று தொடங்கிய மான்செஸ்டர் டெஸ்டிலும் பார்க்க முடிகிறது. இரண்டும் சம பலமுள்ள அணிகள் என்பதை ஒவ்வொரு செஷனும் நிரூபித்தன. ஸ்லோ ஓவர் ரேட், ஸ்லிப் திசையில் இருந்து பறக்கும் சீண்டல்கள், பந்த்தின் தலைசுற்ற வைக்கும் சிக்சர், சாதுர்யமான ஸ்டோக்ஸ் கேப்டன்சி என இந்தியா – இங்கிலாந்து போட்டிக்கு தேவையான எல்லா மசாலாக்களும் நேற்றைய நாளில் இருந்தன. அணியில் மாற்றத்தோடு களம் இறங்கிய இந்தியா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, போட்டியின் முதல் நாளில் இந்திய வீரர் ரிஷப் பந்த் வழக்கம்போல இந்த டெஸ்டிலும் இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ்தான் டாஸ் வென்றார். ஓல்டு டிராஃபோர்ட் மைதானத்தில் டாஸ் வென்று பவுலிங் எடுத்த அணி, இதுவரை ஒருமுறை கூட வென்றதில்லை. ஆனாலும், சென்டிமென்ட் பார்க்காமல் இங்கிலாந்து கேப்டன் ரிஸ்க் எடுத்து இந்தியாவை பேட் செய்ய பணித்தார். குல்தீப் வருவார், கருண் நாயர் தன் இடத்தை தக்கவைப்பார் என ஏகப்பட்ட யூகங்கள் கிளம்பிய நிலையில், கருணை நீக்கி, சாய் சுதர்சனை மீண்டும் அணிக்குள் கொண்டுவந்ததுடன், பேட்டிங் ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் இடத்தில் பவுலிங் ஆல்ரவுண்டர் ஷார்துலை ஆடவைத்தது இந்தியா. இதன்மூலம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக 5 டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுடன் இந்தியா களமிறங்கியது. எதிர்பார்த்தது போலவே, ஆகாஷ் தீப்பிற்கு பதிலாக கம்போஜ் அணியில் சேர்க்கப்பட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வழக்கம்போல இந்த டெஸ்டிலும் இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ்தான் டாஸ் வென்றார் நிதானத்தை கடைபிடித்த இந்திய பேட்டர்கள் ஓல்டு டிராஃபோர்ட் மைதானம் ஓரளவுக்கு தட்டையானது என்றாலும், தொடக்கம் முதலே இங்கிலாந்து அணி பிரமாதமாக பந்துவீசியது. அனுபவ வேகப்பந்து வீச்சாளர் வோக்ஸ் தொடர்ச்சியாக எட்டு ஓவர்கள் கட்டுப்பாடுடன் வீசினார். கடந்த டெஸ்டின் நாயகன் ஆர்ச்சரின் பந்துவீச்சில் வழக்கமான வேகம் இல்லை. ஆனாலும் துல்லியம் குறையாமல் பந்துவீசினார். இடக்கை பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் ஆர்ச்சரை முடிந்தவரைக்கும் எதிர்கொள்ளாமல் ஜெய்ஸ்வால் தவிர்த்தார். முதல் செஷனில் ஆர்ச்சரின் பெரும்பாலான பந்துகளை ராகுலே எதிர்கொண்டார். ராகுலின் பேட்டிங் இந்திய அணிக்கு ஒரு உத்தரவாதத்தை நம்பிக்கையை கொடுக்கும்படி இருந்தது. தன் எல்லைக்கு வரும் பந்துகளை தவிர, எந்த பந்தையும் அவர் சீண்டவில்லை. அதேசமயம், ஹாஃப் வாலியாக (Half volley) கிடைத்த பந்துகளையும் அரைக்குழியாக கிடைத்த பந்துகளையும் தண்டிக்க அவர் தயங்கவில்லை. நேற்றைக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் எல்லாரும் ராகுல் பாணியில் பேட் செய்ததை பார்க்க முடிந்தது. உள்ளே வரும் பந்துகளை தடுப்பது; வெளியே செல்லும் தவறான பந்துகளை தண்டிப்பது. இதுதான் இந்திய பேட்ஸ்மேன்களின் தாரக மந்திரம். லார்ட்ஸ் டெஸ்டில் தவறான ஷாட் விளையாடியதற்காக விமர்சிக்கப்பட்ட ஜெய்ஸ்வால், நேற்று தொடக்கத்தில் மிகவும் நிதானமாக விளையாடினர். இன்னிங்ஸை கொஞ்சம் நிலைநிறுத்தியவுடன் தைரியமாக ரன் குவித்தார். நன்றாக செட்டில் ஆனபிறகு விக்கெட்டை இழப்பது என்பது இந்த தொடர் முழுக்கவே இந்திய அணிக்கு பிரச்னையாக இருந்து வருகிறது. அது நேற்றும் தொடர்ந்தது தான் துரதிர்ஷ்டம். Drinks இடைவேளைக்கு முன்னும் பின்னும் விக்கெட்டை இழக்காத இந்தியா, உணவு இடைவேளைக்கு பிறகு அரைசதத்தை நெருங்கிக் கொண்டிருந்த ராகுல் விக்கெட்டை இழந்தது. பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால், பெரும் முதலைகளை எல்லாம் சமாளித்துவிட்டு, 8 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்டில் மறுவருகை நிகழ்த்திய டாசன் பந்துவீச்சில் மிகவும் எளிதாக விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றம் அளித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 8 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்டில் மறுவருகை நிகழ்த்திய டாசன் பந்துவீச்சில் மிகவும் எளிதாக விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றம் அளித்தார் முதல் அரை சதத்தை பதிவு செய்த சாய் சுதர்சன் ராகுல் விக்கெட்டுக்கு பிறகு களமிறங்கிய சாய் சுதர்சன், தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும் பின்பு சுதாகரித்து கொண்டார். 20 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்தில் அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் தவறிவிட்டார். கால்பக்கம் வீசப்படும் பந்துகளை எதிர்கொள்வதில் சாய் சுதர்சனுக்கு இருக்கும் பலவீனம் நேற்றும் துலக்கமாக வெளிப்பட்டது. அவருடைய தலை ஆஃப் சைடில் சாய்ந்து விடுவதே இந்த பிரச்னைக்கு அடிப்படை காரணம். முதல் டெஸ்டிலும் இதே முறையில் அவர் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், எப்படி ஒரு இன்னிங்ஸை கட்டமைப்பது என்ற வித்தையை தெரிந்துவைத்துள்ளார் அவர். ரூட் பந்தில் ஒரு அட்டகாசமான கவர் டிரைவை அடித்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் அரை சதத்தை எட்டினார். டெக்னிக்கலாக சில பிரச்னைகள் இருந்தாலும் சுதர்சனின் மனத்திட்பம் (Temperament) நேற்றைய இன்னிங்ஸ் முழுக்க நேர்மறையாக இருந்தது. சுதர்சனுக்கு ஷார்ட் பிட்ச் பந்துகளை விளையாடுவதிலும் இருந்த சுணக்கம் வெளிப்பட்டது. கடைசியில் ஸ்டோக்ஸ் வீசிய ஒரு ஷார்ட் பிட்ச் பந்திலேயே ஆட்டமிழந்தார். சுதர்சன் விளையாடும் போது, ஆட்டத்துக்கு முந்தைய நாள் அவர் யாருமற்ற மைதானத்தில், தன்னந்தனியாக நிழல் பயிற்சியில் (Shadow practice) ஈடுபட்டதை டிவியில் காட்டினார்கள். இந்தப் பயிற்சியின் பெயர், விசுவலைசேஷன் (Visualisation). விசுவலைசேஷன் என்பதை ஒரு வீரர் களத்தில் நிகழ்ப்போவதை மனதளவில் காட்சிப்படுத்தி, அதற்கு ஏற்ற வகையில் ஆகும் ஒருவித முன்தயாரிப்பு எனலாம். கிரிக்கெட்டில் முக்கியமான சூழல்கள் குறித்த ஆழமான அனுபவங்களை நேரடியாக அத்தகைய களத்தில் பங்குபெறாவிட்டாலும் கூட 'விசுவலைசேஷன்' மூலமாக ஒருவரால் பெற முடியும் என்கிறார்கள் ஸ்போர்ட்ஸ் சைக்காலாஜிஸ்ட்கள். சாய் சுதர்சன் மட்டுமல்ல நிறைய உச்ச நட்சத்திரங்கள் ஏதோவொரு வடிவத்தில் விசுவலைசேஷன் டெக்னிக்கை பயன்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இதுபோன்ற முன் தயாரிப்புகளும் நேர்மறையான சிந்தனையும்தான் சுதர்சனை தனித்துக் காட்டுகின்றன. டெக்னிக்கலாக கருண் நாயர் சுதர்சனை விட வலுவானவர் என்றபோதும், மனத்திட்பத்தில் (Temperement) அவர் பலவீனமாக இருப்பதாலேயே, சர்வதேச கிரிக்கெட்டின் சவால்களை எதிர்கொள்ள முடியாமல் திணறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆட்டத்தை தன்பக்கம் திருப்பிய இங்கிலாந்து அணி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கில், ஆக்ரோசமாக இன்னிங்ஸை ஆரம்பித்தாலும், ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் பந்தை கவனிக்காமல் பேட்டை உயர்த்தி LBW முறையில் ஆட்டமிழந்தார். லார்ட்ஸ் டெஸ்டிலும் கவனத்தை இழந்து இப்படி ஒரு ஒன்றுமற்ற பந்துக்கு இரையனார் என்பதை பார்த்தோம். ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற பிராட்மேனின் (974) முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கில், தன் ஃபார்மை கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்து வருகிறார். கடந்த டெஸ்டில் இதுபோன்றதொரு பந்தில்தான் (Nip backer) ராகுல் விக்கெட்டை ஸ்டோக்ஸ் கைப்பற்றினார். கிரீஸை நன்றாக பயன்படுத்தி ஸ்டோக்ஸ் வீசும் இந்தப் பந்தை சரியாக கணித்து விளையாடுவது எளிதல்ல. ஆனால், கில் ஆட்டமிழந்தது அவர் கவனம் ஆட்டத்தில் இல்லை என்பது போலிருந்தது. முதல் செஷனை இந்தியா கைப்பற்றிய நிலையில் உணவு, தேநீர் இடைவேளைக்கு நடுவில் 3 முக்கிய விக்கெட்களை கைப்பற்றி இரண்டாவது செசனை தன்வசப்படுத்தியது. இன்னிங்ஸ் நல்ல வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த சமயத்தில், வோக்ஸ் பந்தில் ஒரு ஆபத்தான ரிவர்ஸ் ஸ்வீப் ஆடப்பார்த்து, பந்தை நேராக காலில் வாங்கி அடிபட்டு களத்தை விட்டு சென்றார் பந்த். அவர் மட்டும் களத்தில் இருந்திருந்தால், இந்தியா ஆட்ட நேர முடிவில் இன்னும் வலுவான நிலையில் இருந்திருக்கும். காயத்தின் தன்மை மோசமாக இருக்கும் பட்சத்தில், இரண்டாம் நாள் பந்த் பேட்டிங் செய்யும் வாய்ப்பு மிகவும் குறைவு. இது இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். இந்த டெஸ்ட், தொடரின் போக்கையே மாற்றும் தன்மை கொண்டதாக இப்போது பந்த்தின் காயம் மாறியுள்ளது. ஆனாலும், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஒரு மைதானத்தில் முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்திருப்பது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் களத்தின் தன்மையை புரிந்துகொண்டு, மிகவும் நேர்த்தியாக பந்து வீசினார்கள். குறிப்பாக கில், சுதர்சன் என முக்கிய விக்கெட்களை, முக்கியமான கட்டத்தில் எடுத்துக்கொடுத்து ஆட்டத்தை ஸ்டோக்ஸ் சுவாரயப்படுத்தினார். நாளை புதிய பந்தில் இந்தியா சமாளித்து விளையாடி, மதிய உணவு இடைவேளை வரை தாண்டிவிட்டால், ஒரு வலுவான ஸ்கோரை குவிக்க முடியும். இந்தியாவின் கைக்கு வந்திருக்க வேண்டிய முதல் நாள் ஆட்டம், பந்த்துக்கு ஏற்பட்ட காயத்தால், எதிர்பார்த்த அளவுக்கு செல்லவில்லை. நாளை யார் கை ஓங்குமென பார்க்கலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cqx25n8rlrlo
  20. 23 ஜூலை 2025 விண்வெளியின் விளிம்பில் இருந்து குதித்து ஸ்கை டைவிங் சாகசம் செய்து உலக சாதனை படைத்த இத்தாலியைச் சேர்ந்த ஃபெலிக்ஸ் பாம்கார்ட்னர் என்பவர் உயிரிழந்தார். 56 வயதான இவர், கிழக்கு மார்ச்சே பகுதியில் உள்ள போர்டோ சாண்ட் எல்பிடியா என்ற கிராமத்தின் அருகே பாரா-கிளைடிங் செய்து கொண்டிருந்த போது திடீரென விபத்து ஏற்பட்டு, உணவகம் ஒன்றின் நீச்சல் குளத்தில் விழுந்து உயிரிழந்தார். இது குறித்து, போர்டோ சாண்ட் எல்பிடியா கிராமத்தின் மேயர் மிஸிமில்லியானோ சியார்பெல்லா, வானில் பறக்கும் போது இவருக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றார். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் கூட விபத்து ஏற்பட்டிருக்கலாம் என விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2012ம் ஆண்டு 1,28,000 அடி உயரத்தில் பூமியின் வளிமண்டலத்தின் மேலடுக்கில் (stratosphere) இருந்து குதித்து, மிக உயரமான ஸ்கை டைவிங் சாதனையை நிகழ்த்தி பிரபலமானார் பாம்கார்ட்னர். ஆஸ்திரியாவை சேர்ந்த இவர் மணிக்கு 1,342 கிமீ வேகத்தில் ஸ்கைடைவிங் செய்த ஒலியின் வேகத்தை முந்தி சாதனை புரிந்தவரும் இவர்தான். தனது அசாத்திய சாகசங்களால் 'பயமறியா ஃபெலிக்ஸ்' (Fearless Felix) எனப் போற்றப்பட்டார். 1999ல் ரியோ-டி-ஜெனிரோவில் உள்ள உலகின் உயரம் குறைந்த பேஸ் ஜம்பில் இருந்து 98 அடி உயரத்திற்கு குதித்து சாதனை படைத்துள்ளார். அதே ஆண்டில் மலேசியாவின் பெட்ரோனாஸ் டவரில் இருந்து குதித்ததன் மூலம், 'உலகிலேயே பாராசூட்டில் இருந்து மிக உயரமாக குதித்த நபர்' என்ற சாதனையை தன்வசப்படுத்தினார். வான்வெளியில் இருந்து குதித்து அசாத்திய சாதனையை நிகழ்த்தியபின் பாம்கார்ட்னர் கூறியதாவது "உலகின் உச்சியில் நிற்கும்போது நீங்கள் மிகவும் அடக்கமாக மாறிவிடுவீர்கள். சாதனைகளை முறியடிக்கவோ, அறிவியல் ஆய்வுகளை தகர்க்கவோ நினைக்க மாட்டீர்கள். உயிரோடு திரும்பினால் போதும் என்றே தோன்றும்" என்றார். 'இவர் மறைந்தாலும், வலிமை மற்றும் கம்பீரத்தின் மறுஉருவமாக அறியப்படுவார்' எனக்கூறி இவரின் கிராம மக்கள் உருக்கமாக அஞ்சலி செலுத்தினர். சமூக வலைதளங்களில் இவரின் பாரா-கிளைடிங் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp8mgdrp12no
  21. அவசரகால சட்டத்தை ரணில் விக்ரமசிங்க அமல்படுத்தியதில் மனித உரிமை மீறல் - நீதிமன்ற தீர்ப்பினால் அடுத்து வரும் ஜனாதிபதிகளுக்கு எற்படும் சவால் பட மூலாதாரம்,PMD SRI LANKA படக்குறிப்பு, 2022ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவசரகால சட்டத்தை அமல்படுத்தினார் கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக 2022ம் ஆண்டு ஜீலை மாதம் 17ம் தேதி அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் ஊடாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகள் மூலம் அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் முர்து பெர்ணான்டோ, யசந்த கொதாகொட இந்த தீர்ப்பை இன்று (ஜூலை 23) வழங்கினர். அப்போதைய பதில் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 02வது சரத்தின் ஊடாக அமல்படுத்திய அவசரகால சட்டமானது, தன்னிச்சையான மற்றும் அதிகாரமற்ற தீர்மானம் என, உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வில் குழாமில் பெரும்பான்மையான நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். எனினும், பதில் ஜனாதிபதியாக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்கவினால் அமல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தின் ஊடாக அடிப்படை மனித உரிமை மீறப்படவில்லை என, மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வில் இருந்த நீதிபதி அர்ஜீன ஒபேசேகர தனது தீர்ப்பை அறிவித்திருந்தார். மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் மற்றும் லிபரல் இளையோர் அமைப்பு ஆகியோரினால் இந்த அடிப்படை உரிமை மீறல் தொடர்பாக மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுதாரர்களுக்கு வழக்கு கட்டணத்தை செலுத்துமாறும் அரசாங்கத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்க அவசரகால சட்டத்தை ஏன் அமல்படுத்தினார்? பட மூலாதாரம்,PMD SRI LANKA உலகம் முழுவதும் பரவிய கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இலங்கையில் 2022ம் ஆண்டு பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சி காலத்திலேயே இந்த பொருளாதார நெருக்கடி கடுமையான தாக்கத்தை நாட்டில் ஏற்படுத்தியது. அரிசி, பால்மாவு, எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியதுடன், பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்திருந்தது. இந்த நிலையில், அப்போதைய ஆட்சியாளரான கோட்டாபய ராஜபக்ஸவின் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் போராட்டங்களை ஆரம்பித்திருந்தனர். இந்த போராட்டம் வலுப்பெற்ற நிலையில், நாட்டில் வன்முறை சம்பவங்களும் பதிவாகியிருந்தன. இந்த நிலையில், 2022ம் ஆண்டு ஜீலை மாதம் 09ம் தேதி நாட்டில் பாரிய போராட்டங்கள் வெடித்தன. ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், பிரதமர் மாளிகை உள்ளிட்ட அரச கட்டடங்கள் போராட்டக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டு, அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. இதையடுத்து, அப்போதைய ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஸ, நாட்டை விட்டு தப்பிச் சென்றார். மாலத்தீவு நோக்கி சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அங்கிருந்து சிங்கப்பூர் ஊடாக தாய்லாந்து சென்றார். பட மூலாதாரம்,PMD SRI LANKA இவ்வாறான பின்னணியில், அப்போதைய பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, ஜீலை மாதம் 13ம் தேதி பதில் ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்துகொண்டார். பதில் ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்ரசிங்க, 2022ம் ஆண்டு ஜீலை மாதம் 17ம் தேதி அவசரகால சட்டத்தை அமல்படுத்தியிருந்தார். ஜனாதிபதியாக பதவியேற்பதற்கான ரகசிய வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடைபெறவிருந்த நிலையிலேயே, ரணில் விக்ரமசிங்க இவ்வாறு அவசரகால சட்டத்தை அமல்படுத்தியதாக அப்போது ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன. இந்தநிலையில், நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பின் ஊடாக ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, காலி முகத்திடலில் ஒன்று கூடியிருந்த போராட்டக்காரர்களை இரவோடு இரவாக பாதுகாப்பு பிரிவின் உதவியுடன் கலைப்பதற்கு ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்திருந்தார். அப்போது, பிபிசி தமிழ் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல ஊடகவியலாளர்களும் பாதுகாப்புப் பிரிவினரால் தாக்கப்பட்டிருந்தனர். இறந்து போன குட்டியை 3 நாள் பிரியாத யானை - விலங்குகளும் துக்கம் அனுசரிக்குமா? இலங்கை போரின்போது சரணடைந்த 29 சிறார்கள் புதைக்கப்பட்டார்களா? புத்தகப் பையுடன் சிறுவன் எலும்புக்கூடு: செம்மணி புதைகுழியில் தோண்டத்தோண்ட வரும் எலும்புக்கூடுகள் இலங்கையில் தோண்டத்தோண்ட வெளிவரும் மனித புதைகுழிகள் - என்ன நடக்கிறது? அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி, பாதுகாப்புப் பிரிவின் உதவியுடன் போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டமை அப்போது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இவ்வாறான நிலையிலேயே, 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 17ம் தேதி அமல்படுத்திய அவசரகால சட்டம், மனித உரிமை மீறல் என தீர்ப்பளிக்குமாறு கோரி அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த தீர்ப்பின் ஊடாக ரணிலுக்கு பாதிப்பா? பட மூலாதாரம்,U.R.D.SILVA படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்கவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது - மூத்த வழக்கறிஞர் யூ.ஆர்.டி.சில்வா இந்த தீர்ப்பின் ஊடாக ரணில் விக்ரமசிங்கவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என, மூத்த வழக்கறிஞர் யூ.ஆர்.டி.சில்வா, பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார். ''இந்த தீர்ப்பின் ஊடாக ரணில் விக்ரமசிங்கவுக்கு பாதிப்பு ஏற்படாது. அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக நஷ்ட ஈடுகளை செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்படலாம். அது வேறொரு விடயம். நான் அறிந்த விதத்தில் இந்த தீர்ப்பின் ஊடாக ரணில் விக்ரமசிங்கவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட போவதில்லை.'' என மூத்த வழக்கறிஞர் யூ.ஆர்.டி.சில்வா தெரிவிக்கின்றார். பதில் ஜனாதிபதியாக பதவி வகித்த காலப் பகுதியில் ரணில் விக்ரமசிங்கவினால் அவசரகால சட்டம் அமல்படுத்தப்பட்டமையின் ஊடாக அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கிய நிலையில், அந்த தீர்ப்பானது அடுத்து பதவிக்கு வரும் ஜனாதிபதிகளுக்கு பாரிய சவாலானதாக அமையும் என மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர், சட்டத்தரணி பிரதீபா மஹனாமஹேவா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். ''அவசரகால சட்டத்தை போராட்ட காலத்தில் அமல்படுத்தியமையினால், பெரும்பாலானோர் அதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. இது சட்டவிரோதமானது என்ற நிலையிலேயே நீதிமன்றத்தை நாடியிருந்தனர். 2022ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தின் ஊடாக, 1978ம் ஆண்டு அரசியலமைப்பின் 12ஃ1 சரத்தின் கீழ் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக பலர் கூறியிருந்தனர். ஏனென்றால், இந்த இடத்தில் பாரிய போராட்டங்கள், மக்கள் ஒன்று கூடல்கள் இருக்கவில்லை. தேவையேற்படும் பட்சத்தில் கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தியிருக்கலாம். மேல் மாகாணத்திற்கு மாத்திரம் அவசரகால சட்டத்தை அமல்படுத்தயிருக்கலாம். நீர் தாரை பிரயோகம் மேற்கொண்டிருக்கலாம். எனினும், நாடு முழுவதும் அவசரகால சட்டம் அமல்படுத்தியமையினாலேயே பிரச்னை ஏற்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு மிக முக்கியமானது. முன்னாள் ஜனாதிபதிக்கு இந்த தீர்ப்பின் ஊடாக வழக்கின் கட்டணத்தை மாத்திரமே செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. அவருக்கு இல்லாது போவதற்கு ஒன்றும் இல்லை.'' என அவர் குறிப்பிடுகின்றார். பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, பிரதீபா மஹனாமஹேவா, மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் ''எனினும், இந்த தீர்ப்பானது அடுத்து வரும் ஜனாதிபதிகளுக்கு மிகவும் முக்கியமானது தீர்ப்பாக அமைகின்றது. அரசாங்கத்தினால் அவசரகால சட்டமொன்றை அமல்படுத்துவதற்கு வரைவுகளை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. அதனை அமல்படுத்துவதற்கு சட்ட மாஅதிபரின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் ஜனாதிபதி ஒருவர் சரியாக விடயங்களை சரியாக அவதானித்தே இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும். அடுத்து வரும் ஜனாதிபதிகளுக்கு தமது தன்னிச்சையான தீர்மானத்தின் ஊடாக அவசரகால சட்டத்தை அமல்படுத்த முடியாது. சட்ட மாஅதிபரின் முழுமையாக ஆலோசனைகளை பெற்று, அரசியலமைப்பில் மனித உரிமை மீறப்படாத வகையில் அவசரகால சட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஏனென்றால், இந்த தீர்ப்பானது அந்தளவிற்கு பாரதூரமானது.'' என அவர் கூறுகின்றார். நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி ஜனாதிபதி ஒருவரினால் அவசரகால சட்டம் அமலுக்கு கொண்டு வரும் பட்சத்தில், அதன் ஊடாக மனித உரிமை மீறப்படுமாக இருந்தால் உயர்நீதிமன்றத்தில் மீண்டும் அது இல்லாது செய்யப்படும் நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர், சட்டத்தரணி பிரதீபா மஹனாமஹேவா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். அத்துடன், அடிப்படை மனித உரிமை மீறல் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணைகளில் நீதிமன்றத்தினால் தண்டனைகள் வழங்கப்படாது என கூறிய அவர், அந்த வழக்கில் அரசாங்கம் தோல்வியுறும் பட்சத்தில் வழக்கு கட்டணத்தை மாத்திரமே செலுத்த வேண்டிய நிலைமை ஏற்படும் என குறிப்பிடுகின்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0l437zz04ko
  22. "ஒவ்வொரு நாள் காலையிலும் ஒரே கேள்வி மீண்டும் மீண்டும் காசாவில் எதிரொலிக்கின்றது; இன்று எனக்கு உணவு கிடைக்குமா ?; உணவுக்காக சொர்க்கத்திற்கு செல்ல விரும்பும் குழந்தைகள்" - பரவும் பட்டினிநிலை குறித்து மனிதாபிமான அமைப்புகள் எச்சரிக்கை Published By: RAJEEBAN 23 JUL, 2025 | 12:54 PM காசாவின் பல பகுதிகளிற்கு பட்டினிநிலை பரவ ஆரம்பித்துள்ளது என நூற்றிற்கும் மேற்பட்ட மனிதாபிமான அமைப்புகள் கூட்டாக எச்சரித்துள்ளன. சேவ் த சில்ரன் எல்லைகள் அற்ற மருத்துவர்கள் அமைப்பு உட்பட பல சர்வதேச அமைப்புகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன. பாலஸ்தீனியர்கள் நம்பிக்கை மற்றும் மனவேதனையின் பிடியில் சிக்குண்டுள்ளனர். அவர்கள் யுத்தநிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகளிற்காக காத்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் காலையில் முன்னரை விட மோசமான நிலையிலேயே கண்விழிக்கின்றனர் என சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் சேவ் த சில்ரன் மேலும் தெரிவித்துள்ளதாவது, இஸ்ரேலிய அரசாங்கத்தின் முற்றுகை தற்போது காசா மக்களை பட்டினியால் வாட்டிவதைக்கும் நிலையில் மனிதாபிமான பணியாளர்களும் பட்டினிகிடப்பவர்களின் பட்டியலில் இணைந்துகொள்கின்றனர். தங்கள் குடும்பத்தவர்களிற்கு உணவை பெறுவதற்கான முயற்சியில் சுடப்படும் ஆபத்தை அவர்கள் எதிர்கொள்கின்றனர். மனிதாபிமான உதவிகள் தற்போது முற்றாக முடிவடைந்துள்ள நிலையில் தங்களின் பணியாளர்கள் வலுவிழப்பதை மனிதாபிமான அமைப்புகள் கண்முன்னால் பார்க்கின்றன. இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள காசா மனிதாபிமான அமைப்பின் மனிதாபிமான பொருட்களை விநியோகிக்கும் திட்டம் நடைமுறைக்கு வந்து இரண்டு மாதங்களின் பின்னர் 109 சர்வதேச அமைப்புகள் பரவும் பட்டினி நிலை குறித்து எச்சரிப்பதுடன் உலக நாடுகளை பின்வரும் நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றன. காசாவிற்கான அனைத்து தரைவழிப்பாதையையும் திறவுங்கள். உணவு, சுத்தமான நீர், மருந்துகள், எரிபொருள் போன்றவற்றின் விநியோகம் கொள்கை ரீதியிலான ஐநா பொறிமுறை மூலம் மீள இடம்பெறுவதை உறுதி செய்யுங்கள். முற்றுகையை முடிவிற்கு கொண்டுவந்து யுத்த நிறுத்தத்திற்கு இணங்குங்கள். ஒவ்வொரு நாள் காலையிலும் ஓரே கேள்வி மீண்டும் மீண்டும் காசாவில் எதிரொலிக்கின்றது - இன்று எனக்கு உணவு கிடைக்குமா? என்பதே அது என்கின்றார் மனிதாபிமான அமைப்பின் பிரதிநிதியொருவர். உணவு விநியோகம் இடம்பெறும் பகுதிகளிற்கு அருகில் நாளாந்தம் படுகொலைகள் இடம்பெறுகின்றன. ஜூலை 13ம் திகதி வரை உணவுதேடும்போது 875 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐநா உறுதி செய்துள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். இதற்கிடையில் இஸ்ரேலியப் படைகள் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் சோர்வடைந்த பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக இடம்பெயரச்செய்துள்ளன. ஜூலை 20 அன்று வெளியிடப்பட்ட மிக சமீபத்திய இடம்பெயர்வு உத்தரவு பாலஸ்தீனியர்களை காசாவின் மொத்த நிலப்பரப்பில் 12 வீதத்திற்குள் மட்டுப்படுத்துகின்றது. தற்போதைய சூழ்நிலை காசாவில் செயற்படுவதை சாத்தியமற்றதாக்குகின்றது என உலக உணவு திட்டம் தெரிவிக்கின்றது. போர் தந்திரோபாயமாக பொதுமக்களை பட்டினி போடுவது ஒரு போர்க்குற்றமாகும் காசாவிற்கு வெளியே களஞ்சியங்களிலும் காசாவிற்குள்ளேயும் பெருமளவு உணவுப்பொருட்கள் குடிநீர் போன்றவை பயன்படுத்தப்படாத நிலையில் உள்ளன. மனிதாபிமான அமைப்புகள் அவற்றை விநியோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது தடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் தாமதங்கள் போன்றவை பெரும் குழப்பம், பட்டினி, உயிரிழப்பு போன்றவற்றை உருவாக்கியுள்ளது. உளவியல் சமூக ஆதரவை வழங்கும் ஒரு உதவி பணியாளர் குழந்தைகள் மீதான பேரழிவு தாக்கத்தைப் பற்றிப் பேசினார்: "குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் சொர்க்கத்திற்குச் செல்ல விரும்புவதாகச் சொல்கிறார்கள் ஏனென்றால் குறைந்தபட்சம் சொர்க்கத்திலாவது உணவு இருக்கிறது." குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களிடையே கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு வரலாறு காணாத அளவில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கடுமையான நீர் சார்ந்த வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் பரவி வருகின்றன, சந்தைகள் காலியாக உள்ளன கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. பெரியவர்கள் பசி மற்றும் நீரிழப்பால் தெருக்களில் சரிந்து விழுகின்றனர். காசாவில் சராசரியாக ஒரு நாளைக்கு 28 லாரிகள் மட்டுமே விநியோகிக்கப்படுகின்றன. இது இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு போதுமானதாக இல்லை அவர்களில் பலர் வாரக்கணக்கில் உதவி இல்லாமல் தவிக்கின்றனர். ஐ.நா தலைமையிலான மனிதாபிமான அமைப்பு தோல்வியடையவில்லை அது செயற்படுவது தடுக்கப்பட்டுள்ளது - தடுக்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/220714
  23. யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்; மொத்த எண்ணிக்கை 85 ஆக உயர்வு Published By: VISHNU 23 JUL, 2025 | 10:08 PM யாழ்ப்பாணம், அரியாலை செம்மணி சிந்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து இன்று புதன்கிழமை (23) மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் காப்பு போன்ற வளையம் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் 67 எலும்புக்கூடுகள் முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று நாட்களில் 20 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 2 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி பகுதியில் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 01" மற்றும் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 02" என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம் 18ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது அதன் போது இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் புதன்கிழமை 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 27 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் போது, இன்றைய தினத்துடன் 67 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த மூன்று தினங்களிலும் 20 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/220760
  24. Published By: VISHNU 23 JUL, 2025 | 08:24 PM (சீனாவிலிருந்து இராஜதுரை ஹஷான்) இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பல்துறை உறவுகளை நிலையானதாக மேம்படுத்த இருதரப்புக்கும் இடையில் பல திட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டுள்ளன. இலங்கையுடனான எரிசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வலுத்திட்டங்கள் துரிதகரமாக செயற்படுத்தப்படும். இலங்கையுடனான வரலாற்று சிறப்புமிக்க நட்புறவை பல்துறைகளில் மேம்படுத்துவோம் என சீனாவின் சின்ங்சியா மாநிலத்தின் வெளிவிவகாரத்துறை பிரதி பணிப்பாளர் நாயகம் ஃபேன் ஹவ்ஃபெங் தெரிவித்தார். சீன குடியரசின் அழைப்புக்கமைய சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் பல்துறை சார்ந்த தரப்பினர்கள் நேற்று புதன்கிழமை சீனாவின் சின்ங்சியா மாநிலத்தின் உத்தியோகபூர்வ வெளிவிவகாரத்துறை அலுவலகத்தின் அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இச்சந்தர்ப்பத்தில் சின்ங்சியா மாநிலத்தின் வெளிவிவகாரத்துறை பிரதி பணிப்பாளர் நாயகம் ஃபேன் ஹவ்ஃபெங் வருமாறு குறிப்பிட்டார். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான தொடர்பிலான உறவை ஒரு வரையறைக்குள் உடபடுத்த முடியாது. இரு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று ரீதியில் தொடர்பு காணப்படுகிறது. சீனா இலங்கையின் நெருங்கிய நண்பன் என்றே குறிப்பிட வேண்டும். இலங்கையில் அரசாங்கங்கள் மாற்றமடைந்தாலும் சீனா தொடர்பான கொள்கை ஒருமித்த தன்மையிலும்,உறுதியான நிலையிலும் உள்ளது. இரு நாடுகளின் அரசுகளுக்கு அப்பாற்பட்டு மக்கள் மத்தியிலும் நல்லிணக்கம் காணப்படுகிறது. இலங்கையின் வெளிவிவகாரம், வர்த்தகம் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் சீனா கூடிய அவதானம் செலுத்தியுள்ளது. சிறந்த நண்பன் என்ற அடிப்படையில் நெருக்கடியான நிலையில் இலங்கையுடன் கைகோர்த்துள்ளோம். பூகோள நெருக்கடி மற்றும் இரத காரணிகளால் கடந்த காலப்பகுதியில் இலங்கை பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டது. அக்காலப்பகுதியில் இலங்கைக்கு பல வழிகளில் ஒத்துழைப்பு வழங்கினோம். பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை துரிதமாக எழுச்சிப்பெற்றமை மகிழ்ச்சிக்குரியது. இலங்கை பொருளாதார ரீதியில் நிலையான அபிவிருத்தியடைய வேண்டும். இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த விசேட அவதானம் வெளிவிவகாரத்துறை அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்கு எமது நாட்டு மக்கள் ஆர்வமாக உள்ளார்கள். ஆகவே இரு நாடுகளுக்கும் இடையில் வலுவான முறையில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்யப்படும். இலங்கையின் கலை மற்றும் கலாசாரங்களை மேம்படுத்த விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையின் எரிசக்தி திட்டங்களை மேம்படுத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். எரிசக்தி மேம்பாடு தொடர்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முறையாக செயற்படுத்தப்படும் என்றார். https://www.virakesari.lk/article/220759

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.