Everything posted by ஏராளன்
-
19 வயதின்கீழ் ஆண்களுக்கான உலகக் கிண்ணம் - அட்டவணை வெளியீடு
நமிபியாவிலும் ஸிம்பாப்வேயிலும் 19 வயதின்கீழ் ஆண்களுக்கான உலகக் கிண்ணம் : சி குழுவில் இலங்கை, அட்டவணை வெளியீடு 19 Nov, 2025 | 07:41 PM (நெவில் அன்தனி) ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட்டின் 16ஆவது அத்தியாயம் இணை வரவேற்பு நாடுகளான ஸிம்பாப்வே, நமிபியா ஆகியவற்றில் நடத்தப்படவுள்ளது. இந்த சுற்றுப் போட்டியில் சற்று இலகுவான சி குழுவில் இலங்கை இடம்பெறுகிறது. ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2026 ஜனவரி 15ஆம் திகதியிலிருந்து பெப்ரவரி 6ஆம் திகதிவரை நடைபெறும். போட்டியில் பங்குபற்றும் அணிகள் ஸிம்பாப்வே, நமிபியா நாடுகளை 2026 ஜனவரி 8ஆம் திகதி சென்றடையும். தொடர்ந்து 9ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதிவரை பயிற்சிப் போட்டிகள் நடைபெறும். அதிக தடவைகள் சம்பியனான இந்தியா (5), 2020இல் சம்பியனான பங்களாதேஷ், ஐக்கிய அமெரிக்கா, நியூஸிலாந்து ஆகிய அணிகள் ஏ குழுவில் மோதும். இணை வரவேற்பு நாடான ஸிம்பாப்வே, 2 தடகைகள் சம்பியனான பாகிஸ்தான், ஒரு தடவை சம்பியனான இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து ஆகிய அணிகள் பி குழுவில் இடம்பெறுகின்றன. நடப்பு சம்பியனும் 4 தடவைகள் சம்பியனானதுமான அவுஸ்திரேலியா, அயர்லாந்து, ஜப்பான், இலங்கை ஆகிய அணிகள் சி குழுவில் ஒன்றை ஒன்று எதிர்த்தாடும். தன்ஸானியா, தலா ஒரு தடவை சம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென் ஆபிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் டி குழுவில் விளையாடும். சி குழுவில் இடம்பெறும் இலங்கை தனது முதலாவது போட்டியில் ஜப்பானை 2024 ஜனவரி 17ஆம் திகதி எதிர்த்தாடும். தொடர்ந்து அயர்லாந்தை 19ஆம் திகதியும் அவுஸ்திரேலியாவை 23ஆம் திகதியும் இலங்கை சந்திக்கும். இக் குழுவுக்கான லீக் போட்டிகள் யாவும் விண்ட்ஹோக், நமிபியா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். இதனைவிட ஹராரே விளையாட்டுக் கழக மைதானம், ஹராரே டக்காஷிங்கா விளையாட்டுக் கழக மைதானம், ஹராரே குவீன்ஸ் விளையாட்டுக் கழக மைதானம், நமிபியா விண்ட்ஹோக் HP ஓவல் மைதானம் ஆகிய மைதானங்களிலும் போட்டிகள் நடைபெறும். இந்த நான்கு குழுக்களிலும் மொத்தமாக 24 லீக் போட்டிகள் ஜனவரி 15இலிருந்து 24வரை நடைபெறும். லீக் போட்டிகள் முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் 3 இடங்களைப் பெறும் 12 அணிகள் இரண்டு குழுக்களாக சுப்பர் சிக்ஸ் சுற்றில் விளையாடும். சுப்பர் சிக்ஸ் போட்டிகள் ஜனவரி 26இலிருந்து 31வரை நடைபெறும். சுப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் குறுக்கு முறையிலான அரை இறுதிகளில் விளையாடும். முதலாவது அரை இறுதிப் போட்டி பெப்ரவரி 3ஆம் திகதியும் இரண்டாவது அரை இறுதிப் போட்டி பெப்ரவரி 4ஆம் திகதியும் நடைபெறும். அரை இறுதிகளில் வெற்றிபெறும் அணிகள் ஹராரேயில் பெப்ரவரி 6ஆம் திகதி 19 வயதுக்குட்பட்ட உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும். அரை இறுதிப் போட்டிகளுக்கும் இறுதிப் போட்டிக்கும் மேலதிக தினங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/230840
-
நைஜீரியாவில் 25 பாடசாலை மாணவிகள் கடத்தல்.
நைஜீரியாவில் கடத்தப்பட்ட 25 மாணவிகள்! - பயங்கரவாத கும்பலிடமிருந்து இரு மாணவிகள் தப்பியோட்டம் 20 Nov, 2025 | 01:07 PM நைஜீரியாவில் மாணவிகளுக்கான விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த பயங்கரவாத கும்பலால் 25 மாணவிகள் துப்பாக்கிமுனையில் கடத்திக் கொண்டுசெல்லப்பட்ட நிலையில், 2 மாணவிகள் கடத்தல்காரர்களிடமிருந்து தப்பிச் சென்று பொலிஸாரிடம் தஞ்சமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பொலிஸாரிடம் தஞ்சமடைந்த மாணவியரில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதையடுத்து, அவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வடமேற்கு நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள மாணவிகளுக்கான பள்ளி விடுதியொன்றில் கடந்த திங்கட்கிழமை (17) அதிகாலை 4 மணியளவில் பயங்கரவாதிக் கும்பலொன்று அத்துமீறி நுழைந்தது. அந்த கும்பல் விடுதியிலிருந்த 25 மாணவிகளை துப்பாக்கிமுனையில் மிரட்டி, கடத்திக் கொண்டுசென்றுள்ளது. பயங்கரவாதிகள் மாணவிகளை கொண்டுசெல்ல முற்பட்ட வேளையில், அவர்களை தடுத்து மாணவிகளை காப்பாற்ற முயன்ற விடுதி நிர்வாகி மற்றும் காவலாளியை அந்த கும்பல் சுட்டுக் கொன்றதாக தெரவிக்கப்படுகிறது. அதனையடுத்து, கடத்தப்பட்ட மாணவிகளை மீட்க நைஜீரியா அரசாங்கம் இராணுவத்தை களமிறக்கியதைத் தொடர்ந்து, இராணுவத்தினர் மாணவிகளை உயிருடன் மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு, பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர். இந்நிலையில், கடத்தல் கும்பலிடமிருந்து இரண்டு மாணவிகள் தப்பிச் சென்று பொலிஸாரிடம் தஞ்சமடைந்துள்ளனர். கடத்தல்காரர்கள் மாணவிகளை புதர்கள் நிரம்பிய விவசாய நிலங்கள் கொண்ட வழியினை கடந்து சென்றபோது இந்த மாணவிகள் இருவரும் தப்பி ஓடியதாகவும், அவ்வாறு தப்பி ஓடும்போது ஒரு மாணவிக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் அந்நாட்டு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அந்த மாணவிகளிடம் பொலிஸார் விசாரணை நடத்தி, அவர்களிடம் தகவல்களைப் பெற்று, பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியிருக்கும் ஏனைய மாணவிகளை மீட்பதற்கான முயற்சிகளில் இறங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/230879
-
சிரிக்கலாம் வாங்க
இது செயற்கை நுண்ணறிவு காணொளி போல தெரிகிறது.
-
நாட்டின் அனைத்துக் காணிகளையும் விரைவில் வரைபடமாக்க கவனம்
Nov 20, 2025 - 02:26 PM இலங்கையில் உள்ள அனைத்துக் காணிகளையும், சரியாக அளவீடு செய்து விரைவில் வரைபடமாக்கி முடிப்பதற்கு விவசாயம் மற்றும் வளங்களின் நிலைபேறான தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு கவனம் செலுத்தியுள்ளது. 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான பல அரச நிறுவனங்கள், திணைக்களங்கள், ஆணைக்குழுக்கள் மற்றும் சபைகளின் வருடாந்த அறிக்கைகள் மற்றும் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகளைப் பரிசீலிப்பதற்காக, கடந்த 17 ஆம் திகதி அந்தக் குழு அதன் தலைவர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது. இதன்போது இது குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் குழுவிற்கு விடயங்களை விளக்குகையில், தற்போது எதிர்வு கூறப்பட்டுள்ளதன் படி இலங்கையில் 16.5 மில்லியன் காணித் துண்டுகள் இருப்பதாகவும், அவற்றில் 2.5 மில்லியன் காணித் துண்டுகள் மட்டுமே இதுவரை அளவீடு செய்யப்பட்டு வரைபடமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். அதற்கமைய, எஞ்சிய காணித் துண்டுகளை கூடிய விரைவில் அளவீடு செய்து வரைபடமாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய குழுவின் தலைவர், அதற்காக சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் குழுவிற்கு அழைத்து, எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து எதிர்காலத்தில் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் கூறினார். அத்துடன், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கைகளும் குழுவில் பரிசீலிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவினால் சட்டரீதியான ஒப்பந்தங்களை மேற்கொள்ளாமல் காணிகளை குத்தகைக்கு வழங்கியதால் நிலவும் வரி/குத்தகை நிலுவைத் தொகைகள் குறித்தும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmi776jci01sto29nvgmoi4ch
-
பாம்பன் மீனவர் வலையில் 112 கிலோ எடையுடைய மஞ்சள் வால் கேரை மீன் சிக்கியது!
20 Nov, 2025 | 03:59 PM மன்னார் வளைகுடா கடற்பரப்புக்குள் மீன் பிடிக்கச் சென்ற பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் வலையில் 112 கிலோ நிறை கொண்ட மஞ்சள் வால் கேரை மீன் சிக்கியதால் பாம்பன் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து 50க்கும் மேற்பட்ட படகுகள், நூற்றுக்கணக்கான மீனவர்கள் தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்றிருந்தனர். பின்னர், மீனவர்கள் மீன்பிடித்துவிட்டு பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திற்குத் திரும்பினர். தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளதால் கடல் வழக்கத்திற்கு மாறாக சற்று சீற்றத்துடன் காணப்பட்டு வரும் நிலையில் கடல் நீரோட்டம் அதிகமாக இருந்ததனால் மீன் பிடித்துவிட்டு உடனடியாக மீனவர்கள் கரை திரும்பியிருந்தனர். கரை திரும்பிய மீனவர்கள் தங்களது வலையில் உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படும் நகரை, பாறை, நெத்திலி உள்ளிட்ட மீன்களும் அதேபோல் கிளாத்தி, சீலா, மாவுலா, கிளி, பாறை, முண்டகண்ணி பாறை, கட்டா, சூவாரை உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள் வரத்து எதிர்பார்த்த அளவை விட அதிகளவு இருந்ததாக மீனவர்கள் திருப்தியடைந்துள்ளனர். இந்நிலையில் பாம்பன் அந்தோனியார்புரம் பகுதியை சேர்ந்த கிளிண்டன் என்பவருக்கு சொந்தமான படகில் சுமார் 3 மீட்டர் நீளம் கொண்ட 115 கிலோ நிறை கொண்ட மஞ்சள் வால் கேரை மீன் என்றழைக்கப்படும் அம்பர்ஜாக் மீன் ஒன்று சிக்கியது. பாம்பன் நாட்டுப்படகு மீனவர் வலையில் சிக்கிய 112 கிலோ எடை கொண்ட மஞ்சள் வால் கேரை மீனை கேரளா மீன் வியாபாரி ஒருவர் கிலோ ரூ.150 என ரூ.17 ஆயிரம் கொடுத்து பெற்றுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு மீன் 17 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானதில் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதன் இலங்கை பெறுமதி சுமார் 80 ஆயிரம் ஆகும். இதன்போது மீனை பெற்றுச் சென்ற கேரள வியாபாரி கூறுகையில், மஞ்சள் வால் கேரை மீனுக்கு கேரள மாநில அசைவ பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த மீனை அரை கிலோ, ஒரு கிலோ என வெட்டி எடை போட்டு 10 ஊர்களுக்கு பிரித்து அனுப்பி விற்பனை செய்துவிடுவேன் என்றார். வாள் பகுதியில் மஞ்சள் நிறத்தில் தட்டையான கத்தி போன்ற அமைப்பு காணப்படுகிறது. அவை வேகமாக இடப்பெயர உதவும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த வகை மீன்கள் அட்லாண்டிக், பசுபிக் மற்றும் இந்திய பெருங்கடலில் ஆழமான பகுதியில் வாழக்கூடியவை. இந்த மீன் வழக்கமாக 3 மீற்றர் நீளமும், அதிகபட்சம் 4.55 மீற்றர் நீளமும் மற்றும் 550 கிலோ எடை வரை வளரக்கூடியது என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். https://www.virakesari.lk/article/230907
-
உள்நாட்டு இறைவரித் திணைக்கள வரலாற்றில் அதிகூடிய வரி வருமானம்!
Nov 20, 2025 - 09:45 AM உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரலாற்றில் அதிகூடிய வரி வருமானத்தை ஈட்டியுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் றுக்தேவி. பீ.சீ. பெர்னாண்டோ அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவு அதிகப்படியான வரி வருமானம் 2025 ஆம் ஆண்டுக்காக 17.11.2025 ஆம் திகதி ஈட்டமிடப்பட்டுள்ளது. இந்த மொத்த வரி வருமானம் ரூபா 2,002,241 மில்லியன் (ரூபா 2,002.241 பில்லியன்) ஆகும். இது 2024 ஆம் ஆண்டின் மொத்த வரி வருமானத்துடன் ஒப்பிடும்போது ரூபா 60,079 மில்லியன் அதிகமாகும். 2024 ஆம் ஆண்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் சேகரிக்கப்பட்ட ரூபா 1,942,162 மில்லியன் வரி வருமானத்துடன் ஒப்பிடும்போது, 2025.11.17 ஆம் திகதியளவில் வரி வருமானம் ரூபா 2,002,241 மில்லியன் வரை அதிகரித்துள்ளது. இதன்மூலம் அரசு நிதி நிலையினை பலமாக முன்னெடுப்பதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அதியுயர்ந்த பங்களிப்பினை வழங்கியுள்ளது. நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு அமைய நம்பிக்கையாக மற்றும் நாட்டின் பொது மக்களின் சுபீட்சத்திற்காக வரி செலுத்தியவர்களுக்கும், அதற்காக கூட்டுறவுடன் ஒத்துழைப்பினை வழங்கிய அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உத்தியோகத்தர்களுக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நன்றி தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmi6x4cxr01sgo29nbmdrimvk
-
உக்ரைன் மீது ரஷ்யா கடும் தாக்குதல் - 3 சிறுவர்கள் உட்பட 26 பேர் உயிரிழப்பு
20 Nov, 2025 | 12:15 PM உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைக் கொண்டு நடத்திய பாரிய தாக்குதலில் 3 சிறுவர்கள் உட்பட குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யா 476 ட்ரோன்கள் மற்றும் 48 ஏவுகணைகளை பிரயோகித்து உக்ரைனின் மேற்கு நகரான டெர்னோபிலில் (Ternopil) உள்ள இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை நோக்கித் தாக்குதல் நடத்தியதில் உயிரிழப்புகள் ஏற்பட்டதோடு, 93 பேர் படுகாயமடைந்ததாகவும் அவர்களில் 18 பேர் சிறுவர்கள் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ரஷ்ய X-101 குரூஸ் ஏவுகணைகளே இந்தத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டிருப்பதாக உக்ரைன் விமானப் படையினர் கூறுகின்றனர். ரஷ்யாவால் ஏவப்பட்ட 476 ட்ரோன்கள் மற்றும் 48 ஏவுகணைகளில் 442 ட்ரோன்கள், 41 ஏவுகணைகளை உக்ரைன் விமானப்படை சுட்டு வீழ்த்தியதாக அப்படையினர் தெரிவித்துள்ளனர். மேலும், உக்ரைனின் வடகிழக்கு நகரமான கார்கிவிலும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் அதேவேளை அங்கும் 30க்கு மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். உக்ரைன் - ரஷ்யா இடையே நீடித்து வரும் போரானது 1,364வது நாளாக இன்றும் (20) தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/230869
-
பூமியை நெருங்கும் அரிய வால் நட்சத்திரம் - வேற்றுக்கிரகம் பற்றிய கதைகளைத் தூண்டியது எப்படி?
பட மூலாதாரம், Intl Gemini Observatory/NOIRLab/NSF/Aura/Shadow the Scientist; Processing: J Miller, M Rodriguez, TA Rector, M Zamani கட்டுரை தகவல் எலன் சாங் பிபிசி உலக சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இது ஒரு வால் நட்சத்திரம் (comet) என்பதை கிட்டத்தட்ட அனைத்து விஞ்ஞானிகளும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இது, வேற்றுக்கிரகவாசிகளின் வருகை மற்றும் மனிதகுலத்தின் முடிவு பற்றிய ஊகங்கள் பரவுவதைத் தடுக்கவில்லை. 3I/அட்லஸ் என்பது நமது சூரிய குடும்பத்திற்கு வெளியில் இருந்து (interstellar object) வந்து நமது வானத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது பொருள் ஆகும். எனவே அதன் பெயர் "3I" எனத் தொடங்குகிறது. நமக்குத் தெரிந்த பெரும்பாலான வால் நட்சத்திரத்தைப் போலல்லாமல், இது சூரியனைச் சுற்றி வருவதில்லை. இதன் பாதை மற்றும் வேகத்திலிருந்து இது நமது விண்மீன் மண்டலத்தின் வேறொரு இடத்திலிருந்து வந்திருப்பதுடன் அடுத்த ஆண்டு முற்பகுதியில் நமது சுற்றுப்புறப் பகுதியை விட்டு வெளியேறும் ஒருமுறை பயணத்தில் இருப்பதாகவும் தெரிகிறது. இதன் சில அம்சங்கள் ஹார்வர்ட் வானியற்பியலாளரான பேராசிரியர் அவி லோப் - மற்றும் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகத்தில் இது செயற்கையாக இருக்கலாம் என்ற சாத்தியத்தை சிந்திக்கத் தூண்டியுள்ளது. ஈலோன் மஸ்க் கூட இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார். அமெரிக்க ரியாலிட்டி நிகழ்ச்சி நட்சத்திரமான கிம் கர்தாஷியன் கூட எக்ஸ் தளத்தில்: "இருங்கள்.. 3I அட்லஸ் பற்றிய தகவல் என்ன?!!!!!!!!!?????" என்று பதிவிட்டார். ஆனால் நாசாவும் மற்றும் வானியலாளர்களின் பெரும்பான்மையினரும் இதுவரை செய்யப்பட்ட அனைத்து அவதானிப்புகளையும் இயற்கையான, வேற்றுக்கிரகவாசிகள் அல்லாத நிகழ்வுகளால் விளக்க முடியும் என்று தெளிவாக வலியுறுத்துகின்றனர். இதுவரை நமக்குத் தெரிந்தது என்ன? 3I/அட்லஸ் முதன்முதலில் ஜூலை 2025-இல் சிலியில் உள்ள நாசாவால் நிதியளிக்கப்பட்ட அட்லஸ் தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது முதல் இது உலகம் முழுவதும் உள்ள வானியலாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. பட மூலாதாரம், Atlas/University of Hawaii/Nasa படக்குறிப்பு, அட்லஸ் தொலைநோக்கி, பூமியுடன் மோதக்கூடிய அபாயம் உள்ள பொருட்களைக் கண்டறிய இரவு வானத்தை ஆய்வு செய்கிறது, இருப்பினும் 3I/அட்லஸ்ஸால் அத்தகைய ஆபத்து இல்லை என்று வானியலாளர்கள் கூறுகிறார்கள். "நமக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன, அதன் பிறகு இந்தப் பொருளை நாம் மீண்டும் பார்க்க மாட்டோம்," என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் பேராசிரியரான கிறிஸ் லின்டாட் கூறுகிறார். "அதனால் எங்களால் முடிந்தவரை அதிகமான தரவுகளைப் பெற நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்." சிலர் இது நியூயார்க்கின் மன்ஹாட்டன் அளவு இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால், ஆகஸ்ட் மாதம் நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியில் இருந்து கிடைத்த அளவீடுகள் இதன் விட்டம் 5.6 கிலோமீட்டரோ அல்லது 440 மீ சிறியதாகவோ இருக்கலாம் என்று கூறுகின்றன. இது கண்டுபிடிக்கப்பட்டபோது விநாடிக்கு சுமார் 61 கிமீ வேகத்தில் விண்வெளியில் விரைந்து கொண்டிருந்ததாக அமெரிக்க விண்வெளி நிறுவனம் கூறுகிறது. இது எங்கிருந்து வந்தது? 3I/அட்லஸ் ஒரு தொலைதூர நட்சத்திர அமைப்பின் பிறப்பின் போது உருவாகி, பில்லியன் கணக்கான ஆண்டுகளாக விண்மீன் இடையேயான வெளியில் (interstellar space) பயணித்து வந்துள்ளது என்று வானியலாளர்கள் நினைக்கிறார்கள். இது நமக்குத் தெரிந்த மிகப் பழமையான வால் நட்சத்திரமாக இருக்கலாம்; ஒரு ஆய்வு அதன் வயதை 7 பில்லியனுக்கும் அதிகமான ஆண்டுகள் என்று குறிப்பிடுகிறது. இதன் பொருள், இது 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான நமது சொந்தச் சூரிய குடும்பத்திற்கு முன்பே இருந்ததாகும். "இதன் பொருள் நமது விண்மீன் மண்டலத்தின் வரலாற்றின் ஆரம்பத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றி இது நமக்குத் தெரிவிக்கிறது," என்று பேராசிரியர் லின்டாட் கூறுகிறார். இந்த வால் நட்சத்திரம் தனுசு விண்மீன் குழுவின் (constellation Sagittarius) திசையில் நம்மிடம் வந்தது, இது நமது பால்வெளி விண்மீன் மண்டலத்தின் மையம் இருக்கும் இடமாகும். பட மூலாதாரம், M Hopkins/Ōtautahi-Oxford team; Base map: Esa/Gaia/DPAC, S Payne-Wardenaar படக்குறிப்பு, வால் நட்சத்திரம் 3I/அட்லஸ் (சிவப்பு நிறத்தில் காட்டப்பட்ட பாதை) நமது சூரியன் (மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்ட பாதை) போலவே, நமது பால்வெளி விண்மீன் மண்டலத்தின் மையத்தைச் சுற்றி வருகிறது. இது பூமியில் இருந்து பார்க்க முடியாதவாறு அக்டோபரில் சூரியனுக்குப் பின்னால் கடந்து சென்றது, இதனால் அது ஏன் "மறைந்திருந்தது" என்பது பற்றிய அவதானிப்புகளுக்கு தூண்டுகோலானது. ஆனால், பல விண்வெளி ஆய்வுச் சாதனங்கள் வால் நட்சத்திரத்தைக் கண்காணித்து வருகின்றன, இது ஏற்கெனவே தரையில் உள்ள தொலைநோக்கிகள் மூலம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சூரியனுக்கு அருகில் வெப்பமடைதல் 3I/அட்லஸ் சூரியனை நோக்கிய தனது பயணத்தில் வெப்பமடைந்து, ஈர்ப்பு விசை அல்லாத முடுக்கத்தைக் (non-gravitational acceleration) காட்டியது - அதாவது ஈர்ப்பு விசையால் நகரும் வேகம் என எதிர்பார்க்கப்படுவதை விட அதிக வேகமாக நகர்ந்தது. ஒரு "தொழில்நுட்ப ராக்கெட் எஞ்சின்" இதை உந்தித் தள்ளுவதாக இருக்கலாம் என்று பேராசிரியர் லோப் ஊகித்தார், இதனால் வேற்றுக்கிரக விண்கலம் பற்றிய தலைப்புச் செய்திகள் மற்றும் மீம்கள் இணையத்தில் வெள்ளம்போல் பெருகின. பட மூலாதாரம், Intl Gemini Observatory/NOIRLab/NSF/Aura/K Meech (IfA/U Hawaii); Processing: J Miller, M Zamani படக்குறிப்பு, வால் நட்சத்திரம் 3I/அட்லஸ் சூரிய குடும்பம் வழியாக நகரும்போது அதன் வண்ணமயமான பாதையை ஹவாயில் உள்ள ஜெமினி வடக்குத் தொலைநோக்கி படம்பிடித்தது. ஆனால் வால் நட்சத்திரங்களை அளவிடுவதில் நிபுணத்துவம் வாய்ந்த பல விஞ்ஞானிகள், இந்த முடுக்கம் வாயு வெளியேற்றத்தின் (outgassing) வரம்புக்குள் தான் உள்ளது என்று கூறுகின்றனர் என்று பேராசிரியர் லின்டாட் விளக்குகிறார். வெப்பமடையும் வால் நட்சத்திரத்தில் உள்ள சில பொருட்கள் திடப் பனிக்கட்டியிலிருந்து வாயுவாக மாறும் போது, மேகம் மற்றும் தூசி தாரைகளை வெளியேற்றுகிறது. இந்த தாரைகள், உந்துவிசைகளைப் போலச் செயல்படுகின்றன. உண்மையில், 3I/அட்லஸ் அதி தீவிரமாகச் செயல்படுவதாகத் தோன்றியது. ஒரு வால் நட்சத்திரத்தில் இருந்து வெளியேற்றப்படும் தூசி பொதுவாக ஒளியைப் பிரதிபலிக்கும், இது சூரியனை நெருங்கும்போது வால் நட்சத்திரத்தைப் பிரகாசமாக்குகிறது. 3I/அட்லஸ் மிக விரைவாகப் பிரகாசமானது. இது சிவப்பு நிறத்திலிருந்து நீல நிறமாக மாறியிருக்கலாம் என்ற சில தகவல்களும் உள்ளன, இதனால் ஒரு வேற்றுக்கிரக ஆற்றல் மூலத்தைப் பற்றிய கோட்பாடுகள் தூண்டப்பட்டன. வானியலாளர்கள் இது ஏன் என்று துல்லியமாகக் கண்டறிய இன்னும் முயற்சித்து வருகின்றனர். ஆனால், ஏராளமான இயற்கையான விளக்கங்கள் உள்ளன என்று கூறுகின்றனர். இந்த விரைவான பிரகாசமடைதல், "அங்கு நிறைய பனிக்கட்டிகள் உள்ளன என்பதைக் குறிக்கலாம்," என்று பேராசிரியர் லின்டாட் கூறுகிறார். நிற மாற்றம் உண்மையாக இருந்தாலும், மற்றும் அது அளவிடப்பட்ட விதத்தில் ஏற்பட்ட தவறாக இருந்தாலும் இது மாறும் வேதியியலைக் குறிக்கலாம். பட மூலாதாரம், Nasa/SPHEREx படக்குறிப்பு, ஒளியியல் மற்றும் அருகிலுள்ள அகச்சிவப்பு ஒளியால் வானத்தை ஸ்கேன் செய்யுநாசாவின் SPHEREx ஆய்வகம், வால் நட்சத்திரம் 3I/அட்லஸ்ஸில் கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீர் பனிக்கட்டியை அளவிட்டது. "நாம் உண்மையில் செய்ய விரும்புவது வால் நட்சத்திரத்தின் உள் பகுதி எதனால் ஆனது என்பதைக் கண்டுபிடிப்பதுதான்," என்று பேராசிரியர் லின்டாட் கூறுகிறார். மர்மமான வேதியியல் 3I/அட்லஸ்ஸின் ரசாயன அமைப்பைப் புரிந்துகொள்வது, பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அது தோன்றிய தொலைதூர நட்சத்திர அமைப்பு எப்படி இருந்தது என்பதைப் பற்றி நமக்குத் தெரிவிக்கலாம். தொலைநோக்கிகள் இதுவரை வால் நட்சத்திரத்தில் நிறைய கார்பன் டை ஆக்சைடைப் பார்த்துள்ளன. மேலும் இது நிக்கல் என்ற உலோகத் தனிமத்தில் செறிவூட்டப்பட்டதாகத் தெரிகிறது - இந்த அவதானிப்பு வேற்றுக் கிரக விண்கலம் என்ற கருத்தை தீவிரப்படுத்தியுள்ளது, ஏனெனில் நமது சொந்த விண்கலங்களின் பல பாகங்களில் நிக்கல் உள்ளது. தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் பாட்காஸ்டில் பேசிய ஈலோன் மஸ்க், முழுவதுமாக நிக்கலால் செய்யப்பட்ட ஒரு விண்கலம் மிகவும் கனமாக இருக்கும், அது "ஒரு கண்டத்தையே அழிக்கக்கூடும்" என்று குறிப்பிட்டார். ஆனால், 2019-இல் கண்டுபிடிக்கப்பட்ட இண்டர்ஸ்டெல்லார் வால்நட்சத்திரமான 2I/போரிசோவ் உட்பட மற்ற வால்மீன்களிலும் நிக்கல் காணப்பட்டுள்ளது. மிகுதியான நிக்கல் இருப்பது 3I/அட்லஸ் உருவான சூழலை பிரதிபலிக்கலாம் அல்லது அதன் நீண்ட விண்மீன் பயணத்தில் வால் நட்சத்திரம் விண்வெளிக் கதிர்வீச்சால் தாக்கப்பட்டிருக்கலாம். இது அதன் மேற்பரப்பு வேதியியலை மாற்றியிருக்கலாம் என்று ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. வெளியேறும் வழியில் அக்டோபர் மாத பிற்பகுதியில் சூரியனைத் தாண்டிச் சென்ற 3I/அட்லஸ் விரைவில் விடைபெறும். இது டிசம்பர் 19 ஆம் தேதி பூமிக்கு மிக அருகில், 270 மில்லியன் கிமீ என்ற பாதுகாப்பான தூரத்திற்கு வரும். இது சூரியன் பூமிக்கு அருகில் இருக்கும் தூரத்தை விட கிட்டத்தட்ட இரு மடங்கு தூரம் ஆகும். பட மூலாதாரம், Spacecraft: Esa/ATG medialab; Jupiter: Nasa/Esa/J Nichols (Uni of Leicester) படக்குறிப்பு, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் வியாழன் பனிக்கட்டி நிலவுகள் எக்ஸ்ப்ளோரர் (Juice), வால் நட்சத்திரம் 3I/அட்லஸ் சூரியனுக்கு மிக அருகில் கடந்து சென்ற பிறகு தீவிர நிலையில் இருக்கும்போது, அதை நவம்பர் மாதத்தில் உற்று நோக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல விண்வெளி மற்றும் தரை அடிப்படையிலான ஆய்வகங்கள் அதிக அளவீடுகளை எடுக்கமுடியும் என நம்புகின்றன, மேலும் பொழுதுபோக்கு வானியலாளர்கள் கூட 8-இன்ச் தொலைநோக்கி மூலம் அதைப் பார்க்க முடியும் என்கின்றனர். இதுவரை மூன்று விண்மீன் இடையேயான வால் நட்சத்திரங்களை மட்டுமே பார்த்திருப்பதால், இந்த பண்டைய பயணிகளைப் பற்றி நாம் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. "விண்மீன் மண்டலத்தில் இவற்றைப் போல பில்லியன்கணக்கானவை இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம், நாம் மூன்றைதான் பார்த்திருக்கிறோம்," என்று பேராசிரியர் லின்டாட் கூறுகிறார். "இது மிகவும் ஆரம்ப நிலை என்பதால் இது அசாதாரணமானதா என்று சொல்வது கடினம்." சிலியில் உள்ள வேரா ரூபின் ஆய்வகம் போன்ற சக்திவாய்ந்த புதிய தொலைநோக்கிகள் மூலம், அடுத்த பத்தாண்டுகளில் மேலும் டஜன் கணக்கானவற்றைக் கண்டுபிடிப்போம் என்று அந்த வானியற்பியலாளர் நம்புகிறார். "அப்போது, எந்த வகையான நட்சத்திரங்கள் கோள்களை உருவாக்குகின்றன, பொதுவான கலவைகள் என்னென்ன என்பது பற்றி நம்மால் சொல்ல முடியும். மேலும் நமது சூரிய குடும்பம் இந்தப் படத்தில் எப்படிப் பொருந்துகிறது என்பதைப் பற்றிய சிறந்த புரிதலை நாம் பெறலாம்," என்று அவர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz9187wnky3o
-
இலங்கை - அமெரிக்கா கூட்டுறவில் கடல்சார் ஆழ அளவீட்டுத் திறன் மேம்பாடு!
Published By: Digital Desk 3 20 Nov, 2025 | 02:47 PM (இணையத்தள செய்திப் பிரிவு) இலங்கையின் கடல்சார் ஆழத்தை அளவிடும் (Hydrographic Mapping) திறன்களை மேம்படுத்துவதற்காக, அமெரிக்காவின் NOAA (National Oceanic and Atmospheric Administration) அமைப்பையும், கடற்படை வானிலை மற்றும் கடலியல் கட்டளையையும் (Naval Meteorology & Oceanography Command) சேர்ந்த நிபுணர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ஜூலி சங் தனது எக்ஸ் தளத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ஒரு நாட்டின் கடலுக்கு அடியில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வது, அதன் கடல்சார் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கு மிகவும் முக்கியமானது. இந்தக் கூட்டுறவானது இலங்கைக்கு அதன் சொந்த நீர்ப்பரப்புகளை வரைபடமாக்க உதவும். இதன் மூலம் வணிகக் கப்பல் பாதைகள் மேலும் பாதுகாப்பானதாக மாறும். ஒட்டுமொத்த கடல்சார் கள விழிப்புணர்வை (Maritime Domain Awareness) வலுப்படுத்தவும் இந்தத் திட்டம் உதவும். இந்த ஒத்துழைப்பு, இலங்கையின் கடலியல் ஆய்வுத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/230895
-
வெளிநாட்டினருக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்த அனுமதிப் பத்திரம் இல்லை – DMT அறிவிப்பு!
பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான நியூசிலாந்துப் பெண் குறித்து விசாரணை Nov 20, 2025 - 12:28 PM செல்லுபடியான முச்சக்கர வண்டி சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி நாட்டில் முச்சக்கர வண்டிகளைச் செலுத்தும் வெளிநாட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு போக்குவரத்துத் தலைமையகம் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரம் இருந்தாலும், அதில் முச்சக்கர வண்டிகளைச் செலுத்துவதற்கான உரிய வகையின் கீழ் அனுமதி இல்லையென்றால், நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்குத் தற்காலிக முச்சக்கர வண்டி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட மாட்டாது. அதற்கமைய, இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் உரிய வகையின் கீழ் முச்சக்கர வண்டிகளைச் செலுத்த விரும்பினால், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஊடாகத் தற்காலிக முச்சக்கர வண்டி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கிடையில், அண்மையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான நியூசிலாந்துப் பெண் ஒருவருக்கு முச்சக்கர வண்டி செலுத்துவதற்கு எவ்வாறு அனுமதி கிடைத்தது என்பது குறித்தும் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கையிலுள்ள சில முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டவர்களுக்கு வாடகை அடிப்படையில் முச்சக்கர வண்டிகளை வழங்குவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன என்றும், அவ்வாறு வழங்கும் உரிமையாளர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmi72yssh01sno29nrjy15m8w
-
கருத்து படங்கள்
அததெரண கருத்துப்படங்கள்.
-
அமெரிக்காவின் அவலம்
அமெரிக்காவின் அவலம் அமெரிக்காவில் உள்ள மத்திய, கீழ்மத்திய வர்க்கத்தினரில் ஒரு பகுதியினர் சம்பளத்துக்கென்று வேலையிருந்தும் வருமானத்தைக் கொண்டு வாழ்க்கையை ஓட்ட முடியாத நிலையில் இருக்கிறார்கள். பணவீக்கம் அந்தளவுக்கு அதிகரித்துள்ளது. இவர்களைக் காப்பாற்றுவதற்காக உணவுச் சலுகைச் சீட்டை அரசு அறிமுகப்படுத்தியது. வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு இ.பி.டி எனப்படும் மின்னணு பயன் பரிமாற்ற அட்டையைக் கொடுக்கிறார்கள். 40 மில்லியனுக்கு மேல் மக்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள். மளிகைக் கடை, சூப்பர் மார்க்கெட்டுகளில் இதைக் கொண்டு பொருள் வாங்கலாம். இதில் ஒரு பெரிய சிக்கல் அரசு முடிந்தளவுக்கு மக்களை இந்த திட்டத்தில் இருந்து வெளியேற்றவே முயல்கிறது என்பது. ரெண்டாயிரத்து சொச்சம் டாலர்களே ஒரு குடும்பத்தின் மாத வருமானமாக இருக்க வேண்டும் என வரையறை உண்டென்றாலும் (இதில் பல நுணுக்கமான விதிமுறைகள் இருக்கலாம்) சம்பளத்தில் சிறிதே தொகை ஏறினால் கூட அட்டையில் உள்ள பணத்தைக் குறைத்துவிடுவார்கள். உதாரணத்திற்கு (இந்திய ரூபாய் கணக்குப்படி)உங்கள் சம்பளம் மாதத்திற்கு 15,000. ஒருநாள் உங்கள் கணக்கில் ஆயிரம் கூடுதலாக வந்தால் அரசு உங்களுக்கான மானியத்தை ரத்து பண்ணிவிடும் என வையுங்கள். நீங்கள் எங்கே போவீர்கள்? ஆயிரம் ரூபாயைக் கொண்டு ஒரு மாதத்துக்கான செலவையெல்லாம் நடத்திவிட முடியுமா? முடியாது. இப்போது மக்கள் மிக மலிவான பொருட்களை மட்டும் வாங்கி அதையே மூன்றுவேளைகளும் உண்கிறார்கள். அதுவும் கிடைக்காதபோது வீட்டுக்குள் பசியுடன் காத்திருக்கிறார்கள். இதைக் குறித்து கார்டியன் இதழில் ஒரு கட்டுரை படித்தேன். நாட்கணக்காக பாக்கெட்டில் கிடைக்கும் ஒரே துரித உணவைச் சாப்பிடுகிறார்கள். காய்கறிகள், சத்தான உணவுகளை கண்ணிலே பார்க்க இயலாது என ஒருவர் அதில் பேட்டியளித்திருக்கிறார். "ஆரம்பத்தில் ஸ்னேப் அட்டையைப் பயன்படுத்தவே கூச்சமாக இருந்தது, யாராவது பார்த்தால் கௌரவம் போய்விடுமே என ஒதுங்கி நடப்பேன், ஆனால் ஊரில் பலரும் அதைப் பயன்படுத்துகிறார்கள் எனத் தெரிந்த பின்னரே நான் இயல்பானேன். நாங்கள் இப்போதெல்லாம் பரஸ்பரம் பார்த்து புன்னகைத்துக் கொள்கிறோம்." என்கிறார் அவர். யோசித்துப் பார்த்தால் நியாய விலைக் கடைகளில் பொருள் வாங்குவதற்கோ அரசு தரும் உரிமைத் தொகையைப் பெறுவதற்கோ நாம் கூச்சப்படுவதில்லை. அது 'நியாயமானது' எனும் உணர்வு நமக்கு உள்ளதைப் போல வலதுசாரி முதலீட்டிய நாடான அமெரிக்காவில் இல்லை. அங்கு 'ஏழ்மையை' ஒரு சமூக அநீதியாகக் காணும் புரிதல் குறைவு. தோல்வியுற்றவர்களே ஏழைகள் என்பதே அவர்களின் விழுமியம். ஸ்னேப் நிர்வாகி ஒருவர் சொல்வதாக மற்றொரு கார்டியன் கட்டுரையில் சொல்கிறார்கள்: "ஸ்னேப் தொகையை அரசு நிறுத்திவிட்டது. கடைசி சில்லறைக் காசையும் பயன்படுத்திவிட்டோம். இப்படியே போனால் எங்களுக்கு சாப்பிட பூனை உணவு மட்டும்தான் மீதமிருக்கும்." டிரம்ப் அடிப்படையில் ஏழைகளுக்கு உரிமைத்தொகை வழங்குவதற்கு எதிரானவர். ஆனால் இந்த ஏழைகளே இவர்களுக்கு அதிகமாக வாக்களிக்கிறார்கள் என ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது (உங்கள் பணத்தையெல்லாம் வந்தேறிகளான இஸ்லாமியர், ஆசியர்கள், லத்தீன் அமெரிக்கர்கள் எடுத்துக்கொள்கிறார்கள், கம்யூனிஸ ஆதரவாளர்களான முற்போக்காளர்கள் இதை ஆதரிக்கிறார்கள் எனச் சொல்லி ஏமாற்றி வாக்குகளை அவர் அள்ளிவிடுகிறார்.) அவர் ஏற்கனவே பேசியபடி ஸ்னேப்புக்கான நிதியை நிறுத்திவிட்டார். நீதிமன்றம் தலையிட்டு வலியுறுத்தியபடி அவர் சிறிது தொகையை மட்டும் கொடுப்பதாகச் சொல்கிறார். இதனிடையே அங்கே பட்டினி கிடக்கும் மாத வருமானத்தினரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. நம்மூரில் விடுமுறை நாட்களிலும் குழந்தைகளுக்கு சத்துணவு கொடுக்கிறார்கள். அங்கு அதுவும் இல்லை. பட்டினிதான். இப்போதும்கூட இதனால் மக்களுக்கு டிரம்ப் மீது கோபம் வந்து கலகம் செய்ய மாட்டார்கள். எல்லாவற்றுக்கும் காரணம் வந்தேறிகள்தாம் என்று சொல்லி அவர்கள் வாக்குகளை அறுவடை செய்துவிடுவார். இந்தியா அமெரிக்காவை விட பல மடங்கு மேலானது எனும் உணர்வு எனக்கு ஒருநாள் வரும் என நான் கற்பனையே பண்ணியிருக்கவில்லை. இங்கு உங்களுக்கு மாத வருமான வேலை இருந்தாலே போதும், மூன்று வேளையும் உணவுக்குப் பஞ்சமில்லை. வேலையும் இருக்க வீடும் இல்லாத தெருவில் வாழும் பெண்களுக்கு கூட கர்நாடகாவில் அரசு விடுதியை நடத்துகிறது. மாநில அரசுகள் பெண்களுக்கு மாதமாதம் உரிமைத்தொகை கொடுப்பது தேர்தல் யுக்தியாகிவிட்டது. சலுகையையோ மானியத்தொகையையோ உரிமைத்தொகைகளையோ அரசோ கட்சிகளோ அவமதிப்பதில்லை. ஏழ்மை குறித்த குற்றவுணர்வு மேல்மத்திய, மேல்வர்க்கத்திடம் தாராளமாக உள்ளது. என்னதான் குப்பைக்கூளமாக, மதவெறியர்களாக, ஏற்றத்தாழ்வுகள் மிகுந்த நாம் இருந்தாலும் அடிப்படையான பாதுகாப்பு வலையொன்றை வைத்திருக்கிறோம். நான் கடந்த மாதம் வயநாடு சென்றிருந்தபோது அங்கு ஒரு வீட்டின் முன்பு பத்து பெண்கள் சீருடை அணிந்து சீரமைப்புப் பணியைச் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். விசாரித்தபோது அவர்கள் நூறு நாள் வேலைத்திட்டம் போன்ற ஒன்றைச் சேர்ந்தவர்கள் என்றும், பொதுமக்களுக்கு வேலை செய்ய ஆள் தேவைப்பட்டால் அரசிடம் விண்ணப்பித்து இவர்களின் சேவையைப் பெற்றுக்கொள்ளலாம் என்றார்கள். அரசின் முகமையில் இவர்கள் வருவதால் அடிப்படைப் பாதுகாப்பு உண்டு. உடலுழைப்பு வேலைகளுக்கு அங்கு ஆள் கிடைக்காத நிலையில் இதனால் பொதுமக்களும் பயன்பெறுகிறார்கள். தனியாரிடம் உழைப்பாளிகளைப் பணயம் வைக்காமல் அரசு தொழில் நிர்வாகத்தில் நேரடிப் பங்கு வகிப்பது எவ்வளவு முக்கியம் என்பதற்கு நல்ல உதாரணம் இது. வாக்குகளைத் திருடித்திருடி பாஜக இன்னும் பத்திருபது ஆண்டுகள் ஆண்டாலும் வேலை செய்து சம்பாதித்துக்கொண்டே ஏழையாகவும் பரதேசியாகவும் இருக்கும் நிலை இந்தியர்களுக்கு வரப்போவதில்லை. இந்த பாதுகாப்பு நடைமுறைகளும் கட்டமைப்பும் இல்லாததாலே அமெரிக்காவில் பணவீக்கமும் அதிகரித்ததும் எளிய மக்களும் மத்திய் வர்க்கமும் தெருவுக்கு வருகிறார்கள். முதலீட்டிய-சார்பு சமூகங்கள் பெங்களூர் நகராட்சி போடும் சாலையைப் போன்றவை. எப்போது அது உடைந்து வாகனம் உள்ளே போகும் எனத் தெரியாது. Posted Yesterday by ஆர். அபிலாஷ் https://thiruttusavi.blogspot.com/2025/11/blog-post_18.html @Justin , @ஈழப்பிரியன் அண்ணாக்கள் மேலுள்ள தகவல்கள் உண்மையா?!
-
இராஜதந்திர மோதல்; ஜப்பானிய கடல் உணவு இறக்குமதியை தடை செய்யும் சீனா
இராஜதந்திர மோதல் ; ஜப்பானிய கடல் உணவு இறக்குமதியை தடை செய்யும் சீனா Published By: Digital Desk 3 19 Nov, 2025 | 03:55 PM இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மோதல் தீவிரமடைந்து வருவதால், ஜப்பானிய கடல் உணவுகளின் அனைத்து இறக்குமதியையும் சீனா மீண்டும் தடை செய்யும் என ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பசிபிக் கடலில் விடப்பட்டுவரும் புக்குஷிமா அணு நிலையத்தின் சுத்திகரிக்கப்பட்ட நீரை மேலும் கண்காணிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக சீனா ஜப்பானுக்கு அறிவித்துள்ளது. இதனையடுத்து, சீனாவால் ஜப்பான் கடல் உணவுகளுக்கு மீண்டும் இறக்குமதி தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தத் தடை நடைமுறைக்கு வரும் நிலையில், பீஜிங் –டோக்கியோ இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. ஜப்பான் பிரதமர் சனே தகாய்சி நவம்பர் மாதம் 7-ஆம் திகதி பாராளுமன்றத்தில் பேசியபோது, “தாய்வானின் மீது சீனா தாக்குதல் நடத்தி, அது ஜப்பானின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நிலையை உருவாக்கினால், டோக்கியோ இராணுவ நடவடிக்கை எடுக்கக்கூடும்” என தெரிவித்துள்ளார். இந்தக் கருத்துக்கள் சீனாவில் கடும் எதிர்ப்பு அலையை ஏற்படுத்தியுள்ளதால் இரு நாடுகளின் உறவில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது. ஜப்பான் பிரதமர் தகாய்சியின் கருத்துகள் சீன அதிகாரிகள் மற்றும் அந்நாட்டு அரச ஊடகங்களின் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதன் பின்னர், சீனாவில் உள்ள ஜப்பான் பிரஜைகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை எடுக்கவும், கூட்டம் அதிகமாகும் பகுதிகளைத் தவிர்க்கவும் டோக்கியோ அரசு அறிவுறுத்தியது. தகாய்சியின் கருத்துகளுக்குப் பின்னர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ஓசாகாவில் உள்ள சீனத் தூதரகத்தின் தூதர் சுஏ ஜியான், ஜப்பான் பிரதமரை குறிக்கும் விதத்தில் “அந்த அசுத்தமான கழுத்தை வெட்டி எறிவோம்” என மிரட்டல் விடுத்தார். பின்னர் அந்தப்பதிவு அழிக்கப்பட்டதை தொடர்ந்து, சீன தூதரை அழைத்து விளக்கம் கோரப்பட்டதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. ஜப்பானுக்கு பயணம் செய்ய வேண்டாம் என சீன குடிமக்களுக்கு பீஜிங் அறிவுறுத்தியுள்ளது. மேலும், தகாய்சி தனது கருத்துக்களை திரும்பப்பெற வேண்டும் என்றும் கோரியுள்ளது. இதற்கு பதிலாக, டோக்கியோ அரசு, அந்த கருத்துக்கள் அரசின் நிலைப்பாட்டிற்கு ஏற்பவே உள்ளதாக தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/230811
-
புத்தர் சிலையை கைது செய்த முதல் ஆட்சியாளராக ஜனாதிபதி அநுர சாதனை - உதய கம்மன்பில சாடல்
19 Nov, 2025 | 04:03 PM (எம்.மனோசித்ரா) இலங்கையின் வரலாற்றில் புத்தர் சிலையை கைது செய்த முதல் ஆட்சியாளராக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சாதனை படைத்துள்ளார். புத்தரை கைது செய்வதற்கு சமமாக இடம்பெற்ற இந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த பௌத்த சமூகமும் அதிர்ச்சியடைந்துள்ளது. எமது நாளைய பேரணியில் இவ்வாறான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இந்த அரசாங்கத்தின் முடிவை ஆரம்பிப்பிக்கின்றோம் என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் புதன்கிழமை (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நாளை வெள்ளிக்கிழமை இந்த அரசாங்கத்தின் முடிவின் ஆரம்பிப்பதைக் குறிக்கும் நுகேகொடை பேரணியில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பிவிதுரு ஹெல உருமய, ஸ்ரீலங்கா மகாஜன கட்சி, ஜனதா சேவக கட்சி, நவ ஜனதா பெரமுன உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் பங்கேற்கவுள்ளன. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படும் முதல் எதிர்ப்புப் பேரணிக்குத் தமது ஆதரவைத் தெரிவிக்கும் பொருட்டு, மக்களுடன் இணைந்து பேரணியில் கலந்துகொள்ள இருப்பதாக எங்களுக்கு அறிவித்துள்ளனர். பங்கேற்காத சில கட்சிகளும் இந்தப் பேரணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளன. அவர்கள் அனைவரின் சகோதரத்துவத்திற்கும் நாங்கள் தலைவணங்கி நன்றி தெரிவிக்கின்றோம். எங்களிடம் உள்ள வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்டு இந்தப் பேரணியை ஏற்பாடு செய்யும்போது, எங்களுக்கு இருந்த மிகப் பெரிய சவால் என்னவென்றால், இந்தப் பேரணிக்கு எப்படி விளம்பரம் கொடுப்பது என்பதுதான். ஏனெனில், எங்களிடம் உள்ள வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்டு இந்தப் பேரணிக்கு விளம்பரம் கொடுப்பது எப்படி என்ற சவால் எங்களுக்கு இருந்தது. ஆனால், அரசாங்கத்தினால், இலங்கையின் வரலாற்றில் எதிர்க்கட்சியின் பிரசாரப் பேரணி ஒன்றுக்கு கிடைத்ததிலேயே அதிகபட்ச விளம்பரத்தை, தற்போது 21ஆம் திகதி நுகேகொடை நகரில் நடைபெறும் பேரணிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி வரவுசெலவுத் திட்ட உரையின் போதும், மாவீரர் தின உரையின்போதும், ஏன் பாராளுமன்றத்திற்கு ஓடிச்சென்று திருகோணமலையில் புத்தர் சிலை பற்றி பேசியபோதும் நுகேகொடை பேரணியை நினைவுபடுத்துவதற்கு மறக்கவில்லை. அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தினமும் நினைவுபடுத்தி இந்தப் பேரணியை வெற்றிபெறச் செய்ய, எதிர்க்கட்சியின் சகோதரக் கட்சிகளைப் போலவே, அரசாங்கத்தின் பக்கத்திலிருந்தும் எங்களுக்கு வழங்கிய அந்த ஆதரவை நாங்கள் மிகுந்த நன்றியுடன் நினைவுகூருகிறோம். பேரணி நடைபெறுவதற்கு முன்பே, அது இலங்கை வரலாற்றின் மிக வெற்றிகரமான பேரணியாக மாறிவிட்டது. ஏனெனில், இவ்வளவு பெரியதொரு அரசாங்கத்தை பயமுறுத்திய வேறு எந்தவொரு பேரணியும் இலங்கையின் வரலாற்றில் பதிவு செய்யப்படவில்லை. திருகோணமலை புத்தர் சிலை சம்பவம், 21ஆம் திகதி பேரணியை வெற்றிபெறச் செய்வதற்காக நாங்கள் செய்த ஒரு தந்திரம் என்று ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் பல முக்கியஸ்தர்கள் கூறுகின்றனர். அவ்வாறெனில் பிக்குகளைத் தாக்கி, புத்தர் சிலையை அகற்றுவதற்கு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியது நாங்களா? உண்மையில், இலங்கை வரலாற்றில் புத்தர் சிலையை கைது செய்த முதல் ஆட்சியாளராக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சாதனை படைத்துள்ளார். புத்தரை கைது செய்வதற்கு சமமான, ஒட்டுமொத்த பௌத்த சமூகமும் அதிர்ச்சியடைந்த ஒரு சம்பவமாக இந்த திருகோணமலை விவகாரம் பதிவாகியுள்ளது. நாட்டை ஆட்சி செய்த ஏகாதிபத்தியவாதிகள்கூட பௌத்த மதத்தை இவ்வளவு அவமானப்படுத்தவில்லை என்பதை நாங்கள் மிகவும் வேதனையுடன் நினைவுபடுத்த விரும்புகிறோம். நுகேகொடை பேரணியை எண்ணி அரசாங்கம் அச்சமடைந்துள்ளது. பெரும் மழை பெய்தாலும், காற்று வீசினாலும், அரசாங்கம் ஊரடங்குச் சட்டம் விதித்தாலும், அரசாங்கம் இந்தப் பேரணியைத் தடை செய்தாலும், 21ஆம் திகதி மாலை நுகேகொடை நகரில் இந்தப் பேரணி நிச்சயம் நடைபெறும் என்றார். https://www.virakesari.lk/article/230817
-
இந்தியா - ரஷ்யா உறவுகள் உலக நலனுக்கு முக்கியமானது - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
18 Nov, 2025 | 07:03 PM இந்தியா - ரஷ்யா உறவுகள் இரு நாடுகளின் பரஸ்பர நலனுக்கு மட்டுமல்ல, உலக நலனுக்கும் முக்கியமானது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தற்போது எஸ்.ஜெய்சங்கர் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பான எஸ்சிஓவில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமை வகிக்கிறார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு விடயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்பின் ஜெய்சங்கர் பேசுகையில், இந்தியா - ரஷ்யா உறவுகள் இரு நாடுகளின் பரஸ்பர நலனுக்கு மட்டுமல்ல, உலக நலனுக்கும் முக்கியமானது. உக்ரைன், மத்திய கிழக்கு மற்றும் ஆப்கானிஸ்தான் மோதல் உள்ளிட்டவை குறித்த கருத்துக்களை கூட்டத்தில் பரிமாறிக்கொள்வோம். அமைதியை நிலைநாட்டுவதற்கான ரஷ்யாவின் சமீபத்திய முயற்சிகளை இந்தியா ஆதரிக்கிறது என்று தெரிவித்தார். https://www.virakesari.lk/article/230744
-
வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம் - ஜனாதிபதி
வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம் - ஜனாதிபதி 19 Nov, 2025 | 07:12 PM வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அந்தக் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. மாகாண சபைத் தேர்தல் மற்றும் புதிய அரசியலமைப்பொன்றின் அவசியம் குறித்து இதன் போது ஆராயப்பட்டதோடு, வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தொடர்ந்தும் பழைய அரசியல் தீர்வு பொருத்தமற்றது என்பதால் அதற்காக புதிய அரசியல் தீர்வினை நோக்கிச் செல்ல வேண்டுமென அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இங்கு குறிப்பிட்டார். அதற்காக அனைவரின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் நீண்ட காலமாக பிரதேச மட்டத்தில் எதிர்கொள்ளும் மீன்படி மற்றும் காணி பிரச்சினைகள், உட்கட்டமைப்பு வசதி மற்றும் அபிவிருத்தி தேவைகள் என்பன குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது. பிரதிநிதிகள் முன்வைத்த சில பிரச்சினைகளுக்கு எதிர்காலத்தில் தீர்வு பெற்றுக் கொடுக்குமாறு அதே சந்தர்ப்பத்தில் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார் வடக்கு அபிவிருத்திக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் எந்தவொரு திட்டத்திற்கும் தமது கட்சி ஒத்துழைப்பு வழங்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டினர். அத்தோடு, இனவாதத்திற்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவொரு தீர்மானத்திற்கும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி என்ற வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இங்கு சுட்டிக்காட்டினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி சி.வி.கே. சிவஞானம் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். ஸ்ரீ தரன், எஸ். ராசமாணிக்கம், பி. சத்தியலிங்கம், ஜி. ஸ்ரீ நேசன்,ரீ. ரவிகரன், கே. கோடீஸ்வரன், கே. எஸ். குகதாசன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/230839
-
கோடி ரூபாயில் யாழில் உருவாகப்பட்ட சொகுசுப்படகு! வெள்ளோட்டம் குறிகட்டுவானில் | Luxury tourist Ship
உசாரய்யா உசாரு!
-
பிரான்ஸிடமிருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன்
18 Nov, 2025 | 06:33 PM பிரான்ஸிடமிருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் ஒப்பந்தத்தில் உக்ரைன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கி மற்றும் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் ஆகிய இருவரும் கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்பந்தம் கைச்சாத்தாகியதன் மூலம் தனது நாட்டின் வான்பாதுகாப்பை மேலும் பலப்படுத்த முடியும் என உக்ரைன் தூதரகம் தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் தற்போதும் நீடித்து வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் செயற்படுகின்றன. அந்நாடுகளின் ஆயுத விநியோகம் மற்றும் பொருளாதார உதவியால் உக்ரைன் தொடர்ந்து போரில் தாக்குப்பிடித்து நிற்கிறது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இரு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும், அந்தப் பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை. உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா மேலும் தீவிரப்படுத்தியது. உக்ரைன் எல்லைக்குள் ரஷ்யா டிரோன், ஏவுகணைத் தாக்குதல்களில் ஈடுபட்டது. இந்நிலையில், தற்போது உக்ரைன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கி பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ரஷ்யா போர் தொடங்கிய பிறகு ஸெலன்ஸ்கி மேற்கொள்ளும் 9வது பிரான்ஸ் சுற்றுப்பயணம் இதுவாகும். இந்த சுற்றுப்பயணத்தின்போது ஸெலன்ஸ்கி பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனை சந்தித்துப் பேசினார். அவ்வேளை பிரான்ஸிடமிருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/230743
-
அமூர் வல்லூறு சுமார் 5 நாளில் 5,400 கிமீ எங்கும் நிற்காமல் பறப்பதன் ரகசியம்
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் க.சுபகுணம் பிபிசி தமிழ் 19 நவம்பர் 2025, 02:42 GMT இயற்கை உலகின் அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுவது பறவைகளின் வலசை. கடல் கடந்து பல ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பறந்து செல்லும் அவற்றைக் காண பறவை ஆர்வலர்கள் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தலங்களுக்கு ஆவலுடன் செல்வது வழக்கம். அப்படி வரும் வலசைப் பறவைகளின் பயணப் பாதைகளை, பயணிக்கும் தொலைவை, ஓய்வெடுக்கும் இடங்களைக் கண்டறியும் முயற்சிகளை பறவை ஆய்வாளர்கள் மேற்கொள்கின்றனர். அத்தகைய ஒரு முயற்சியாக, இந்திய காட்டுயிர் நிறுவனம் (WII), மணிப்பூர் அமூர் வல்லூறு கண்காணிப்புத் திட்டத்தை முன்னெடுக்கிறது. அந்தத் திட்டத்தின் இரண்டாம் நிலையில், மூன்று அமூர் வல்லூறுகளுக்கு நவம்பர் 11ஆம் தேதி ரேடியோ பட்டைகளை அணிவித்து, அவற்றின் பயணத்தைக் கண்காணிக்கத் தொடங்கினர். அப்பபாங், அலாங், அஹு எனப் பெயரிடப்பட்ட மூன்று அமூர் வல்லூறுகள் இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் ஒன்றான அப்பபாங், "5 நாட்கள் மற்றும் 15 மணி நேரத்தில்" 5,400 கி.மீ தூரம் ஓய்வின்றி பயணித்து சோமாலியாவை அடைந்திருப்பதாக தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை துறை செயலாளர் சுப்ரியா சாஹு தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அமூர் வல்லூறுகள் நாளொன்றுக்கு சுமார் 1000 கிலோமீட்டர் வரை பறக்கக் கூடியவை என்றும் எங்குமே தரையிறங்காமல் நாள்கணக்கில் பறந்து வலசைப் பயணத்தை முடிக்கக் கூடியவை என்றும் கூறுகிறார் இந்தத் திட்டத்தை வழிநடத்துபவரும், இந்திய காட்டுயிர் நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானியுமான முனைவர் சுரேஷ் குமார். அமூர் வல்லூறுகள் ஐந்து நாட்களில் ஐந்தாயிரம் கிலோமீட்டர் தூரத்தை நிற்காமல் பறந்தது எப்படி? அவற்றின் உடலமைப்பு அதற்கு உதவுவது எப்படி? பட மூலாதாரம், Dr. R Suresh Kumar படக்குறிப்பு, ரேடியோ கருவி பொருத்தப்பட்ட நிலையில் அப்பபாங் எனப் பெயரிடப்பட்ட அமூர் வல்லூறு அமூர் வல்லூறுகளின் கடல் பயணம் ஆப்பிரிக்காவை நோக்கி வலசை போகும்போது, அமூர் வல்லூறுகள், இந்திய துணைக் கண்டத்தின் வழியே பயணிக்கின்றன. அப்போது இந்திய நிலப்பரப்பில் சிறிது ஓய்வெடுத்துவிட்டு அவை தம் பயணத்தைத் தொடர்கின்றன. சுமார் 160 முதல் 200 கிராம் வரை எடைகொண்ட இவைதான் வேட்டையாடி பறவைகளிலேயே நீண்ட தூரம் பயணிக்கக் கூடியவை. இவை ஓர் ஆண்டுக்கு 22,000 கி.மீ வலசைப் பயணம் மேற்கொள்கின்றன. அமூர் நதி அமைந்துள்ள ரஷ்யாவின் தென்கிழக்கு மற்றும் சீனாவின் வடக்குப் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யும் அமூர் வல்லூறுகள் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்திய நிலப்பரப்புக்கு வருகின்றன. இமயமலையைச் சுற்றிப் பயணித்து, நாகாலாந்து, மணிப்பூர், கிழக்கு மேகாலயா ஆகிய பகுதிகளுக்கு இவை வருகின்றன. இந்திய நிலப்பரப்பில் ஓய்வெடுக்கத் தரையிறங்கும் இந்த வல்லூறுகள், பிறகு மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்கி மேற்கு கடலோரத்தை அடைகின்றன. பின்னர் அங்கிருந்து அரபிக் கடலை மூன்றரை முதல் நான்கு நாட்கள் வரையிலான ஓய்வற்ற தொடர் பயணத்தில் கடந்து அவை சோமாலியாவை அடைகின்றன. இந்தப் பயணத்தில் இந்தியா வரும் பல ஆயிரக்கணக்கான வல்லூறுகளில் ஒரு சில தேர்வு செய்யப்பட்டு, வடகிழக்கு இந்தியாவில் விஞ்ஞானிகளால் செயற்கைக்கோள் கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. அப்படியாகக் கண்காணிக்கப்பட்ட சமீபத்திய மூன்றில் அப்பபாங் என்ற ஆண் வல்லூறு மணிப்பூரில் தொடங்கி, எங்குமே தரையிறங்காமல் முழுவீச்சில் அரபிக் கடலைக் கடந்து சோமாலியாவை அடைந்துள்ளது. பட மூலாதாரம், Dr. R Suresh Kumar படக்குறிப்பு, மூன்று அமூர் வல்லூறுகளும் நவம்பர் 16ஆம் தேதி நிலவரப்படி, அரபிக் கடலின் மீது பறந்து கொண்டிருந்தன. அதில் முன்னிலையில் இருந்த அப்பபாங் கிட்டத்தட்ட பாதி கடலை கடந்து விட்டிருந்தது மணிப்பூர் முதல் சோமாலியா வரை எங்கும் நிற்காமல் 5,400 கி.மீ பயணம் மணிப்பூர் அமூர் வல்லூறு கண்காணிப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்ட ஆய்வில், கண்காணிக்கப்படும் பறவைகள் பற்றித் தனது எக்ஸ் பக்கத்தில் விரிவாகப் பகிர்ந்துள்ள சுப்ரியா சாஹு, "அப்பபாங்கின் பயணம் அசாதாரணமானது" என விவரித்துள்ளார். ரேடியோ கருவிகளைப் பொருத்தி, செயற்கைக்கோள் மூலமாக இந்த மூன்று பறவைகளையும் விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். "அந்த டிராக்கர்கள் மூலம் கிடைக்கும் தகவல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மணிப்பூரில் இருந்து புறப்பட்ட அப்பபாங், மத்திய இந்தியா மற்றும் அரபிக் கடலை கடந்து சோமாலியாவை நோக்கி கடல் கடந்து பறந்தது" என்று சுப்ரியா சாஹு குறிப்பிட்டுள்ளார். "அப்பபாங் அரபிக் கடலைக் கடந்து ஆப்பிரிக்காவின் சோமாலியாவுக்குள் நுழைந்துள்ளது. ஆண் வல்லூறான அப்பபாங், கிட்டத்தட்ட 5,400 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க எடுத்துக்கொண்ட நேரம் வெறும் 5 நாட்கள், 15 மணி நேரம் மட்டுமே. அதாவது நாளொன்றுக்கு 1,000 கி.மீ என்ற கணக்கில் இடைவிடாது பறந்து அந்த பறவை சோமாலியாவை அடைந்துள்ளது," என்றும் அவர் தெரிவித்துள்ளார். நெடுந்தொலைவு பறக்க உதவும் கூர்மையான இறக்கைகள் உலகின் மிக நீண்ட வலசை பயணங்களில் ஒன்றை மேற்கொள்ளும் இவை பார்ப்பதற்கு வியப்பூட்டும் அழகுடன் இருக்கும். கண்களைச் சுற்றி, மூக்கைச் சுற்றி ஆரஞ்சு நிறத்துடன் இருக்கும் இவற்றுடைய இரு இறக்கைகளின் முனையும் வளைந்து, சற்றே கூர்மையாக இருக்கும். சிவப்பு அல்லது ஆரஞ்சு நிற கால்களுடன், குறுகிய வால்களைக் கொண்டிருக்கும் இவை பொதுவாக கூட்டமாக வாழக்கூடியவை. பட மூலாதாரம், P Jeganathan படக்குறிப்பு, நாகாலாந்தின் டொயாங் பகுதியில் வானில் கூட்டமாகப் பறந்து கொண்டிருக்கும் அமூர் வல்லூறுகள் இவற்றின் வளைந்த, சற்று கூர்மையான அமைப்பைக் கொண்ட இறக்கைகள், இந்த நீண்ட பயணத்திற்கு உதவிகரமாக இருப்பதாகக் கூறுகிறார் பறவை ஆய்வாளர் முனைவர் ப.ஜெகநாதன். நெடுந்தூரம் வலசை செல்லக்கூடிய அனைத்துப் பறவைகளின் உடல் அமைப்புமே சற்று வளைந்த, கூர்மையான இறக்கைகளுடன்தான் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். "உதாரணமாக, தவிட்டுக் குருவி பறக்கையில் அதன் இறக்கை வட்டமான வடிவத்தைக் கொண்டிருக்கும். ஆனால், அமூர் வல்லூறு, பட்டை வால் மூக்கன் போன்ற வலசைப் பறவைகளின் இறக்கைகள் கூர்மையாக வளைந்திருக்கும்," என்று விளக்கினார். கடந்த 18 ஆண்டுகளாக அமூர் வல்லூறுகளின் இந்த நெடுந்தூர வலசைப் பயணத்தைக் கண்காணித்து வருகிறார் இந்திய காட்டுயிர் நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி முனைவர் சுரேஷ் குமார். அவரது கூற்றுப்படி, "அமூர் வல்லூறுகள் பொதுவாக வடகிழக்கு இந்திய நிலப்பரப்பில் ஓய்வெடுத்த பிறகு மத்திய இந்தியாவை கடந்து மேற்கு இந்தியாவின் கடலோரப் பகுதியை அடைகின்றன. ஓரிரவு மட்டும் அங்கே தங்கிவிட்டுத் தங்கள் கடல் பயணத்தைத் தொடங்கி, அரபிக் கடலை அவை கடந்து செல்கின்றன. ஆனால், அப்பபாங் போல அவ்வப்போது சில வல்லூறுகள் இப்படியாக எங்குமே ஓய்வெடுக்காமல் ஒரே மூச்சில் முழு தூரத்தையும் கடந்து சோமாலியாவுக்கு சென்றுவிடுகின்றன" என்றார். பட மூலாதாரம், Getty Images மழைக் காலத்தில் ஈசல்களை உண்ண வரும் வல்லூறுகள் இந்தப் பறவைகளின் உடலமைப்பு அவை பறப்பதற்கு ஏதுவான வளைந்த இறக்கைகளைக் கொண்டுள்ளன. அதேவேளையில், அவை நெடுந்தொலைவு பறக்க அதிக ஆற்றல் தேவை. அத்தகைய ஆற்றலைச் சேமித்து வைப்பதற்கான உணவை அவை வடகிழக்கு இந்தியாவின் நாகாலாந்து, மணிப்பூர் பகுதிகளில் அதிகம் பெறுவதாகக் கூறுகிறார் முனைவர் சுரேஷ் குமார். "வடகிழக்கு இந்தியாவில் அவற்றுக்குத் தேவையான இரை மிக அதிக அளவில் கிடைக்கக் கூடிய, சரியான காலகட்டத்தில் அவை அங்கு வந்தடைகின்றன. மழைக் காலத்தில் கூட்டம் கூட்டமாக இனப்பெருக்கத்திற்காக ஈசல்கள் பறக்கத் தொடங்குகின்றன. அந்த நேரத்தில் வந்து சேரும் அமூர் வல்லூறுகள், அந்த ஈசல்களை அதிகமாக உட்கொள்கின்றன. இதற்குப் பிறகு சோமாலியா சென்றடையும் வரை அவற்றுக்குப் போதுமான இரை கிடைக்காது என்பதை அவை அறிந்திருப்பதால், நன்கு சாப்பிட்டு, உடல் எடையைக் கூட்டிக் கொள்கின்றன," என்று விளக்கினார் சுரேஷ் குமார். அதாவது, அதிகளவிலான உணவை உட்கொள்வதன் மூலம் சேமித்து வைக்கப்படும் கொழுப்புச்சத்து அவற்றின் நீண்டதூர பயணத்திற்குத் தேவையான ஆற்றலை வழங்குவதாகக் கூறுகிறார் அவர். ஈசல் மட்டுமின்றி அமூர் வல்லூறுகளின் விருப்பமான இரையாக தேசாந்திரி தட்டானும் இருப்பதாகக் கூறுகிறார் முனைவர் ஜெகநாதன். "இந்த வல்லூறுகள் வலசை செல்லும் அதே காலகட்டத்தில், இந்தியாவில் இருந்து ஆப்பிரிக்காவுக்கு தேசாந்திரி தட்டானும் (Wandering Glider) கடல் கடந்து தங்கள் வலசைப் பயணத்தை மேற்கொள்கின்றன. வல்லூறுகள் இடைவிடாமல் பறந்து கொண்டிருக்கும்போதே, தங்கள் வழியில் செல்லும் இந்தத் தட்டான்களைப் பிடித்துச் சாப்பிட்டுக் கொள்கின்றன. அதுவும் ஓய்வின்றி நீண்ட தூரம் பறக்கத் தேவையான ஆற்றலை அவற்றுக்கு வழங்குகின்றன" என்று விளக்கினார் ஜெகநாதன். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தேசாந்திரி தட்டான் அரபிக் கடலை கடக்க உதவும் காற்று அரபிக் கடல் மீது பறக்கும் போது, சுமார் மூன்றரை முதல் நான்கு நாட்களுக்கு எங்கும் அவை தரையிறங்க முடியாது. அதோடு, தேசாந்திரி தட்டான் போல வலசை வரும் பூச்சிகள் கிடைத்தாலொழிய உணவு கிடைப்பதற்கும் வாய்ப்பில்லை. அப்படியிருக்கும் சூழலில், இந்திய நிலப்பரப்பில் அதீதமாகச் சாப்பிட்டு, கொழுப்புச்சத்தினை சேமித்துக் கொள்வது மட்டுமே அவற்றுக்கு உதவுவதில்லை என்கிறார் ஜெகநாதன். "அவை கடல் பரப்பில் பறக்கும்போது, அங்கு நிலவும் காற்றோட்டத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. அதற்கு ஏற்ற வகையில்தான் அவை தம் வலசைப் பயணத்தையே வடிவமைத்துள்ளன," என்றும் அவர் விளக்கினார். அவை வலசை செல்லும் நேரத்தில், பூமத்திய ரேகைப் பிராந்திய ஒருங்கிணைப்பு மண்டலம் (ITCZ) என்று அழைக்கப்படும் ஒரு வானிலை மண்டலம் உருவாகிறது. அந்த வானிலை மண்டலம் தென்மேற்கு நோக்கி நகரும் காற்றோட்டத்தைக் கொண்டு வருகிறது. அமூர் வல்லூறுகள் ஆப்பிரிக்கா நோக்கிப் பறக்கும்போது, "இந்தக் காற்றோட்டத்தை ஓர் உந்துதலாகப் பயன்படுத்திக் கொள்கின்றன" என்று விளக்கினார் ஜெகநாதன். அதாவது, மிதிவண்டியை மிதிக்கும் போது காற்று பின்னாலிருந்து வேகமாகத் தள்ளினால், மிதிவண்டியில் செல்வது எப்படி எளிதாக இருக்குமோ, அதேபோல, தான் பயணிக்கும் திசையிலேயே வீசும் காற்றைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அமூர் வல்லூறுகள் கடல் கடந்து பயணிக்கின்றன. பட மூலாதாரம், Dr. R Suresh Kumar படக்குறிப்பு, கடந்த நவம்பர் 17ஆம் தேதி நிலவரப்படி, அப்பபாங் அரபிக் கடலை முழுதாகக் கடந்து சோமாலியாவை அடைந்துவிட்டது வசந்த காலத்தின் பிற்பகுதியில், ஆசியாவுக்கு மீண்டும் திரும்பி வரும்போதுகூட, அமூர் வல்லூறுகள் இதேபோல காற்று வீசும் திசையைப் பயன்படுத்திக் கொள்கின்றன. அந்த நேரத்தில், அரபிக் கடலின் மீது வடகிழக்குத் திசை நோக்கி வீசும் காற்றை வல்லூறுகள் தங்கள் பயணத்திற்குப் பயன்படுத்துகின்றன. அதன் மூலம் கடலைக் கடந்து, இந்திய நிலப்பரப்புக்கு மேலே கிழக்கு நோக்கிப் பறந்து, பின்னர் வடக்கு நோக்கித் திரும்பி, அமூர் நதிப் பகுதியை அடைகின்றன. உணவுக்காக வேட்டையாடப்பட்ட அமூர் வல்லூறுகள் அமூர் வல்லூறுகள் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நாகா இன மக்களால் பெருமளவில் உணவுக்காக வேட்டையாடப்பட்டன. ஆனால், அத்தகைய செயல்கள் தற்போது முற்றிலுமாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருப்பதாகக் கூறுகிறார் முனைவர் சுரேஷ். அமூர் வல்லூறுகள் தங்களது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள வடகிழக்கு இந்தியாவில் சில காலம் தங்குவதைப் பற்றிப் பேசிய ஜெகநாதன், "நாகாலாந்தின் டொயாங் ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவை ஆயிரக்கணக்கில் கூடும்போது வானம் முழுக்க அவை பறந்து கொண்டிருப்பதை, முழு மரத்தையும் அவை ஆக்கிரமித்து அமர்ந்திருப்பதைப் பார்க்கவே அற்புதமாக இருக்கும்," என்று விவரித்தார். "அப்படி வரும் அமூர் வல்லூறுகளை மக்கள் கூட்டமாக வேட்டையாடி, உணவுக்காக விற்பனை செய்வது நீண்டகாலமாக நடந்து கொண்டிருந்தது. அதைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் மறைந்த காட்டுயிர் புகைப்படக் கலைஞரும் பறவை ஆர்வலருமான ராம்கி ஸ்ரீநிவாசன் பெரும்பங்காற்றினார்" என்றும் முனைவர் ஜெகநாதன் குறிப்பிட்டார். உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தில், இவற்றின் இறைச்சி விற்பனைத் தொழில் பங்கு வகிப்பதை உணர்ந்து, அதற்கு மாற்றாக சூழல் சுற்றுலா வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க அவர் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். "இத்தகைய நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதன் விளைவாகவே அமூர் வல்லூறுகளுக்கு இந்திய நிலப்பரப்பில் இருந்த பெரும் ஆபத்து தடுக்கப்பட்டது." கடந்த 2013ஆம் ஆண்டில், இறைச்சிக்காக வல்லூறுகளை வேட்டையாடுவதை மரபாகக் கொண்டிருந்த நாகா பழங்குடியின மக்கள், அவற்றைப் பாதுகாப்பதாக உறுதி பூண்டனர். தற்போதைய சூழலில், "அவற்றுக்கு இத்தகைய அபாயங்கள் இல்லையென்றாலும், வல்லூறுகள் வலசையின்போது ஓய்வெடுக்கும் நில அமைப்புகளைப் பாதுகாப்பதிலும், அவற்றின் உணவுத் தேவை பூர்த்தியாவதையும் உறுதி செய்ய வேண்டியது அவசியம்," என்று தெரிவித்தார் முனைவர் சுரேஷ். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly9mdx7v18o
-
தற்போதைய அல்லது எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் மீண்டும் ஒருபோதும் இனவாதத்தின் மீது எழுதப்படாது - ஜனாதிபதி
தற்போதைய அல்லது எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் மீண்டும் ஒருபோதும் இனவாதத்தின் மீது எழுதப்படாது - ஜனாதிபதி 19 Nov, 2025 | 05:14 PM இனவாதத்திற்கு நாட்டில் மீண்டும் எந்த இடமுமில்லை. அது இறந்த கால வரலாற்றுக்குரியது. தற்போதைய அரசியல் நிகழ்ச்சி நிரல் அல்லது இந்த நாட்டின் எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரல் ஒருபோதும் இனவாதத்தின் அடிப்படையில் எழுதப்படாது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் நேற்று (18) பங்கேற்று உரையாற்றியபோது ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதியின் முழுமையான உரை பின்வருமாறு: “பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடுகள் மீது விவாதம் நடைபெறும் இந்த நேரத்தில், அந்த இரண்டு அமைச்சுக்களும் நம் நாட்டில் பல பணிகளில் முக்கிய பங்களிப்பை வழங்குவதால் சில விடயங்களை முன்வைக்க எதிர்பார்க்றேன். குறிப்பாக, நம் நாட்டில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இனவாத போக்குகள் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டதை நாம் அறிவோம். வரலாற்றில், ஊழலுக்கு எதிரான சக்திகளால் நம் நாட்டில் அரசாங்கங்கள் வீழ்ந்தன. ஆனால், நம் அரசாங்கத்தின் மீது அத்தகைய குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது. மேலும், 1994இல் அன்றிருந்த அரசாங்கம் ஜனநாயகம் சார்ந்த விடயம் காரணமாக வீழ்ச்சியடைந்தது. அது தொடர்பிலும் எமது அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்ட முடியாது. அண்மைக் காலங்களில் அரசாங்கங்கள் பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக சரிந்தன. இந்த அரசாங்கத்தை அதற்காகவும் குற்றம் சுமத்த முடியாது. எனவே, இந்த தோற்கடிக்கப்பட்ட அரசியல் சக்திகளுக்கு எந்த பாதகமான கோசமும் எஞ்சியில்லை. எனவே, தோற்கடிக்கப்பட்ட சக்திகளின் நோக்கம் இனவாத சூழ்நிலைகளை உருவாக்குவதாக மாறிவிட்டது. எனவே, சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் ஏற்படக்கூடிய சமூக அமைதியின்மை குறித்து பொலிஸார் கவனம் செலுத்த வேண்டும். சில துறைகளில், அதனுடன் தொடர்புடைய அரசியல் நடவடிக்கைகளையும் கருத்திற்கொள்ள வேண்டும். திருகோணமலையில் உள்ள புத்தர் சிலை தொடர்பான பிரச்சினை குறித்து அறிக்கை அளிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு நான் அறிவித்துள்ளேன். மேலும், இந்த புத்தர் சிலை பாதுகாப்புக்காகவே பொலிஸுக்கு கொண்டுவரப்பட்டது என்று சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களில் இருக்கும் குறிப்பில், தெளிவாக உள்ளது. ஆனால், இந்த புத்தர் சிலை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்படுவதால், இந்த மோதல் பொலிஸாருக்கும் அந்த இனவாதக் குழுக்களுக்கும் இடையே தான் ஏற்படும். எனவே, புத்தர் சிலை மீண்டும் அந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டு, அதற்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்போது அந்த பிரச்சினை நீதிமன்றத்தில் உள்ளது. அதற்கு முன், நேற்று அரசாங்க அதிபர் அலுவலகத்தில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. 2014ஆம் ஆண்டு குறித்த இடத்திற்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்த இடம் விகாரையாக அழைக்கப்பட்ட போதும் அண்மைக் காலங்களில் இந்த இடம் விகாரையாகப் பயன்படுத்தப்படவில்லை. ஒரு உணவகமாகவே இந்த இடம் பயன்படுத்தப்பட்டுள்ளது. உணவகத்தில் சட்டவிரோத நிர்மாணப் பணிகள் இருப்பதால் சட்டவிரோத நிர்மாணங்களை அகற்ற கடலோர பாதுகாப்புத் திணைக்களம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவுக்கு எதிராக சுற்றாடல் அமைச்சிற்கு மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை அகற்றவேண்டும் என்ற நிலைப்பாட்டை சுற்றாடல் அமைச்சின் செயலாளர் தெரிவித்திருந்தார். அதன் பின்னர், பொலிஸ் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில், தங்களுக்கு மேலும் ஒரு வார கால அவகாசம் வேண்டும் என்றும், மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்குச் செல்ல எதிர்பார்ப்பதாகவும் பிக்குகள் தெரிவித்திருந்தனர். அந்தக் கால அவகாசம் 14ஆம் திகதியுடன் முடிவடைந்தது. இருப்பினும், இந்த சம்பவம் 16ஆம் திகதி ஏற்பட்டது. மதஸ்தலமொன்றை அமைப்பதைப் போன்றே இதற்குப் பின்னால் மற்றொரு விவகாரமும் இருப்பதாகத் தெரிகிறது. இந்த இடத்தில் பிக்குவுக்கு உரித்தான காணியொன்று இருந்தது. ஆனால் மத அனுஷ்டானங்கள் மேற்கொள்ளும் இடம் இருக்கவில்லை. அதுதான் உண்மையான நிலைமை. சம்பந்தப்பட்ட விவகாரத்திற்குப் பிறகு, அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், முறையான அளவீடு செய்ய, கடலோர பாதுகாப்புத் திணைக்களத்திற்கு வழங்கவும் விகாரைக்குச் சொந்தமான காணியை தனித்தனியாக பெயரிட் வழங்கவும் உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால் பழைய வழக்கின் பிரகாரம் இங்கு புதிய நிர்மாணப் பணிகள் எதுவும் செய்யக்கூடாது எனவும் ஏற்கெனவே உள்ள நிர்மாணங்களை அகற்றக்கூடாது எனவும் நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு, விகாரைக்குச் சொந்தமான காணி ஒதுக்கப்பட்ட பிறகு தொடர்புடைய பணிகளைச் முன்னெடுக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி, இந்தப் பிரச்சினை தற்போது நிறைவடைந்துவிட்டது. சந்தர்ப்பவாதக் குழுக்களால் மேற்கொள்ளப்படும் தீ வைப்பு தான் தற்போது நடந்திருக்கிறது. ஆனால் நாங்கள் இனவாதத்தை அனுமதிக்க மாட்டோம். நான் மட்டுமல்ல, இந்த நாட்டின் பௌத்த மக்களும் அதை அனுமதிக்க மாட்டார்கள். இந்த நாட்டின் இந்து, முஸ்லிம் மற்றும் கத்தோலிக்க மக்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள். எனவே, இந்த நாட்டில் பழைய இனவாத நாடகங்களை யாராவது மீண்டும் உயிர்ப்பிக்க முயன்றால், அது இறந்த வரலாற்றில் மட்டுமே இருக்கும். அது நிகழ்காலமோ எதிர்காலமோ அல்ல. நமது நாட்டின் எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரல் இனவாதத்தின் அடிப்படையில் எழுதப்படமாட்டாது.தற்போதைய அரசியல் நிகழ்ச்சி நிரல் இனவாதத்தின் அடிப்படையில் எழுதப்படாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், பாதுகாப்பு அமைச்சென்ற வகையில், எந்தவொரு பாதுகாப்புப் படையும் நமக்கு எந்த வகையான அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் தான் தயார் நிலையில் இருக்கிறதுஎன்பதை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம். இலங்கையில் மீண்டும் பாரிய உள்நாட்டுப் போர் சூழ்நிலைகள் ஏற்படாது என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். மேலும் எந்தவொரு மேற்கத்திய நாடும் ஆக்கிரமிக்கும் நிலைமை எதுவும் இல்லை. தொழில்நுட்பத் துறை, சைபர் வெளி மற்றும் நவீன தொழில்நுட்ப கருவிகளில் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள எங்கள் இராணுவ பொறிமுறையை தற்போது தயார் செய்து வருகிறோம். எங்கள் கடல் எல்லைகளின் பாதுகாப்பிற்கும் எங்களுக்கு ஒரு பொறுப்பு உள்ளது, மேலும் அதற்கு ஒரு அச்சுறுத்தல் உள்ளது. எங்கள் வான்வெளியின் அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்புத் தேவைகளையும் நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். அச்சுறுத்தலின் தன்மைக்கு ஏற்ப எங்கள் இராணுவத்தை நாங்கள் தயார் செய்து வருகிறோம். எனவே, நவீன தொழில்நுட்ப கருவிகளைக் கொண்ட இராணுவத்தை உருவாக்குவது எங்கள் அரசாங்கத்தின் கொள்கையாகும். கடந்த காலத்தில், எங்கள் இராணுவத்தை மறுசீரமைப்பதற்கு எமக்கு அதிகளவில் சர்வதேச ஆதரவு கிடைத்துள்ளது. குறிப்பாக, இந்தியாவிலிருந்து சுமார் 70 ஜீப்புகள் எங்களுக்குக் கிடைத்துள்ளன. எங்கள் இராணுவத்தை மிகவும் திறமையான இராணுவமாக மாற்றுவதற்குத் தேவையான ஒரு அகடமி ஒன்றை அமைப்பதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதோடு, அதற்கான ஆதரவும் கிடைத்துள்ளது. மேலும், 2026ஆம் ஆண்டில் அமெரிக்கா எங்களுக்கு TH 57 வகை 10 ஹெலிகொப்டர்களை உதவியாக வழங்க உடன்பட்டது. மேலும், 2026 மற்றும் 2027ஆம் ஆண்டுகளில் C130 விமானங்கள் இரண்டை எங்களுக்கு வழங்க அமெரிக்காவும் அவுஸ்திரேலியாவும் ஒப்புக்கொண்டுள்ளன. KA 360 எனப்படும் Beechcraft ஒன்றையும், இரண்டு KK 350 Beechcraft ஏற்கனவே அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவிலிருந்து உதவியாகப் பெறப்பட்டுள்ளன. எங்கள் விமானப்படை ஹெலிகொப்டர் படை கணிசமாக பலவீனமடைந்துள்ளது. 10 புதிய ஹெலிகொப்டர்கள் கிடைக்கவுள்ளன. தற்போதுள்ள ஹெலிகொப்டர்களைப் புதுப்பிப்பதற்கான டெண்டர்கள் கோரப்பட்டு அனைத்தும் தயாராக உள்ளன. எனவே, நாங்கள் ஒரு சிறந்த நவீன மற்றும் திறமையான இராணுவத்தை உருவாக்கியுள்ளோம். இது எங்கள் பொறுப்பு என்று நாங்கள் நம்புகிறோம். நல்லிணக்கம் தொடர்பான ஒரு பிரச்சினை பற்றி நான் சொல்ல விரும்புகிறேன். இது ஒன்றோடொன்று தொடர்புபட்டதாக நான்கு கட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. அதில் ஒன்று உண்மை தேடல். என்ன நடந்தது என்பதைக் கண்டறியும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது. உண்மையை விசாரிப்பதற்கான இந்த வழிமுறையை அமைக்க நாங்கள் தயார். அடுத்தது, நீதிக்கான தேடல். குற்றவாளிகளுக்கு எதிராக நீதியை நிலைநாட்ட நாங்கள் தயங்க மாட்டோம். நீதியை நிலைநாட்டுகையில் இராணுவம் மீதான வேட்டை போன்ற முன்னைய கருத்தாடல் மீண்டும் வர வாய்ப்புள்ளது. நம் நாட்டில் 11 மாணவர்களைக் கடத்தி கொலை செய்ததாக கடற்படை அதிகாரிகள் சிலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. யுத்தத்தை முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவருவதில் கடற்படை முக்கிய பங்கு வகித்தது. இருப்பினும், அதில் ஈடுபடாத 11 மாணவர்கள் கடத்தப்பட்டு காணாமல்போனதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நாடென்ற வகையில் நாம் அந்தக் குற்றச்சாட்டிற்காக என்ன செய்யவேண்டும்? முழு கடற்படையும் பலியிட வேண்டுமா? அல்லது அந்தக் குற்றச்சாட்டிற்கான சரியான குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டுமா? கடற்படையின் நற்பெயரைப் பாதுகாக்கவும், அந்தப் பதினொரு பேர் காணாமல் போனதை விசாரிக்கவும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவோம். இந்த விடயத்தில் கடற்படையின் எந்த அதிகாரிகளும் இதை எதிர்க்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. பின்னர் ஏன் தாமதம் என்று சிலர் கேட்கலாம்? சிலர் கைது செய்யப்படுவதைத் தடுக்க ரிட் உத்தரவுகளை பெறலாம். இருந்தாலும் நாம் அவர்களுக்கு அதற்காக வாய்ப்பளிப்போம். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சட்டத்தின் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. விசாரணைகள் மிகவும் வெளிப்படை தன்மையுடன் நடத்தப்படுகின்றன. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர். இதை ஒருபோதும் இராணுவம் மீதான வேட்டையாக கருதக்கூடாது. மேலும், இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுகள் சில கொலைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளன. அந்தக் குற்றச்சாட்டுகளை அப்படியே வைத்திருந்து இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுக்கு ஒரு கரும்புள்ளியைச் சேர்க்க வேண்டுமா? அல்லது குற்றச்சாட்டு உண்மையா என்று விசாரித்து அந்தக் குழுவைத் தண்டிக்க வேண்டுமா? இது தொடர்பிலான பொறிமுறைகள் உள்ளன. நடைமுறைகளுக்கு புறம்பாக நடக்கும் சம்பவங்கள் உள்ளன. ஒரு நாட்டின் பாதுகாப்பிற்காக அவை தெளிவாக வெளியிடப்பட வேண்டும். அதற்காக நமக்கு ஒரு வலுவான புலனாய்வுப் பிரிவு இருக்க வேண்டும். இருப்பினும், அந்த புலனாய்வுப் பிரிவின் நற்பெயரில் பொதுமக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் நடந்த பல சம்பவங்களைப் பார்த்தால், பலருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களை சர்வதேச சமூகம், பொதுமக்கள் மற்றும் அந்த நிறுவனங்கள் முன் தூய்மையாகவும் நற்பெயரைப் பெறுவதற்கு உதவுவது நமது பொறுப்பு. லசந்த கொலை குறித்து நாங்கள் விசாரணைகளைத் தொடங்கியுள்ளோம். இந்தக் கொலை நடந்த நேரத்தில் நமது அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால், அவர்கள் இன்னும் சிறையில் இருந்திருப்பார்கள். இந்தக் கொலை தொடர்பில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு விசாரிக்கப்படுகிறது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிப்பது எளிதல்ல. ஆனால் நாங்கள் அது தொடர்பில் விசாரித்து வருகிறோம். இந்த நிறுவனங்களின் ஒழுக்கத்தையும் நற்பெயரையும் பாதுகாப்பது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொறுப்பு. குறிப்பாக தாஜுதீனின் கொலை தொடர்பில் விசாரணைகள் தொடங்கியுள்ளன. சில கடற்படை அதிகாரிகளை விசாரிக்க வேண்டும். குற்றவாளிகளைத் தேட வேண்டாமா?அண்மையில் நான் விசாரணை நடத்தும் அதிகாரிகளின் நிலைப்பாட்டை வினவினேன். இது விபத்தா? அல்லது கொலையா? விசாரணை அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற தகவல்களின் படி இது ஒரு கொலை என்பதை உறுதியாகியுள்ளன. இந்த விடயங்களை விசாரிக்கும்போது, இதை படைவீரர் வேட்டை என்று கூறவேண்டாம். எக்னெலிகொட கொலை மற்றும் கடந்த காலத்தில் நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நாம் விசாரிக்க வேண்டும். தற்போது விசாரணைகள் தொடங்கியுள்ளன. நீதிமன்றத்தில் இவை உறுதிப்படுத்தப்பட வேண்டும். நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய கருத்துக்கள் மட்டும் போதாது. விசாரணைகளை நீதிமன்றத்தில் தான் நடத்துகிறோம். குற்றங்களை உறுதிப்படுத்த ஆதாரங்கள் தேவை. தொலைபேசி அழைப்புகள் மூலமான தொடர்புகள் இருந்தால், அது பற்றிய தகவல்கள் தேவை. நாம் அடையாளம் காணவேண்டிய பிரதான சூத்திரதாரி கொலையாளி அல்ல. ஈஸ்டர் தாக்குதலை அதே வேகத்துடன் விசாரித்திருக்க வேண்டும். அந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை. பின்னர், கொலையைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் குழுக்களின் கைகளுக்கு அதிகாரம் சென்றது. அதிகாரம் சென்ற பிறகு, நிறைய ஆதாரங்கள் மறைக்கப்பட்டன. புத்தகங்களின் பக்கங்கள் கிழிக்கப்பட்டன. நாட்டில் அண்மையில் நடந்த எந்தவொரு கொலைக்கும் மூன்று நாட்களுக்குள் சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளோம். அவர்கள் ஆட்சிக்கு வந்ததால், இலங்கையில் முதல் முறையாக, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளில் சுமார் 500 பேருக்கு தடை போடப்பட்டது. குற்றப் புலனாய்வுத் திணைக்கள சில அதிகாரிகள் நீக்கப்பட்டனர். ஷானி அபேசேகர சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணை நிறுவனங்கள் வீழ்த்தப்பட்டன, விசாரணைகளை நடத்திய அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். 5 ஆண்டுகளுக்குப் பிறகு விசாரணைகளை நடத்துவது கடினமாக உள்ளது.இருப்பினும், எங்கள் விசாரணைக் குழு மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. அவர்கள் இந்த விசாரணையை முறையாக நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவார்கள் என்று எனக்குத் தெரியும். நீதியை நிலைநாட்டுவதை பலிவாங்கலாகக் கருத வேண்டாம். இந்த விசாரணைகள் அனைவருக்கும் நியாயமான முறையில் நடத்தப்படுகின்றன. யாருக்கும் அழுத்தம் கொடுக்கப்படவில்லை. நாங்கள் உண்மையைத் தேடுவதையும் நீதியை தேடுவதையும் முறையாகச் செய்கிறோம். அண்மையில் இரண்டு மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றுக்கு ஆணைக் குழுக்களை நியமிக்காமல் நீதிமன்ற உத்தரவுகளின்படி விசாரணைக் குழுக்களை நியமித்தோம். அந்த விசாரணைகள் தவறு என்று யாரும் கூற முடியாது. நீதிக்காக குரல் கொடுக்க வேண்டும். மூன்றாவதாக, ஏதேனும் சேதம் ஏற்பட்டிருந்தால், நாங்கள் இழப்பீடு வழங்குகிறோம். அண்மையில் புலனாய்வு அமைப்புகள் ஒரு தொகை தங்கத்தை கண்டுபிடித்து எங்களிடம் ஒப்படைத்தனர். அவற்றின் உரிமையாளர்களைக் கண்டுபிடிக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம். தற்போது, அவற்றின் உரிமையாளர்களைக் தேடிப்பிடிக்க முடியவில்லை. அவற்றை பணமாக மாற்றி அந்தப் பகுதி மக்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். இவற்றுக்கு நாம் நீதியை நிலைநாட்ட வேண்டும். இதுபோன்ற சூழ்நிலை மீண்டும் நிகழாமல் தடுக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான திறன் நம்மிடம் மட்டுமே உள்ளது. நாங்கள் அதைச் செய்து வருகிறோம். எமது நாட்டில் இனவாத மோதல்கள் மீண்டும் ஏற்பட நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். நியாமாக அரசியலில் தலையிடு செய்வதற்கான அந்த மக்களின் உரிமையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஒருபுறம், இனங்களுக்கு இடையே மோதல்களை உருவாக்கிய நாடு இது. இனங்களுக்கு இடையேயான மோதல்கள் எரிமலையைப் போன்றவை என்பதால் அதனை தண்ணீரை ஊற்றி அணைக்க முடியாது. நீண்ட காலமாக இனங்களுக்கு இடையே வெறுப்பும் சந்தேகமும் இருந்து வந்தது. ஒரு சிறிய தவறு கூட நடக்க விடாமல் தேசிய ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் நாங்கள் உருவாக்கி வருகிறோம். இந்த டிசம்பரில் இன நல்லிணக்கத்திற்காக இலங்கை தினத்தை கொண்டாட இருக்கிறோம். அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளைச் சந்தித்து இந்த திட்டத்தைப் பற்றி ஆராய எதிர்பார்க்கிறோம். அதனை நடத்தினால் பார்த்துக் கொள்வோம் என யாரோ சொல்லியிருக்கிறார்கள். வந்தால் பார்த்துக் கொள்கிறோம் என்று நான் சொல்கிறேன். வடக்கு மக்களுக்கும் தெற்கு மக்களுக்கும் கலாசார பரிமாற்றங்கள் தேவையில்லையா? எனவே, இந்த நாட்டில் தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்ப எங்கள் இராணுவமும் நாங்களும் ஒரு சிறந்த பணியைச் செய்துள்ளோம். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சும் பொலிஸாரும் மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன. இப்போது அவர்கள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மீது குற்றம் சாட்டி, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருவதாகக் கூறுகிறார்கள். அவர் மீது ஏன் குற்றம் சாட்டப்படுகிறது? நம் நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்க அவர் இரவு பகல் பாராது உழைக்கிறார். அவர் மக்களின் நண்பன். யாருக்கு அவர் எதிரி? பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மீது பாரிய விமர்சனங்களை முன்வைப்பதை நான் அவதானித்தேன். அது தவறு. அவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அதிகாரிகள். அவர்கள் போதைப்பொருள் குற்றங்களுக்கு எதிராக துணிச்சலாக செயல்படுகிறார்கள். அவர்கள் இந்த கொலைகள் மற்றும் குற்றங்களைக் கண்டுபிடிக்க துணிச்சலாக செயல்படுகிறார்கள். அப்படியானால் அத்தகையவர்களை வீழ்த்த இவர்களுக்கு தேவைப்படுகிறது. நீங்கள் ரவி செனவிரத்னவை விமர்சிப்பதென்பது குற்றவாளியின் பக்கம் இருப்பதை குறிக்கிறது. ஊழல்வாதிகளின் பக்கம். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் பக்கம். அதுதான் உண்மையான கதை. அவர்கள் எப்படி எதிரிகளாக இருக்க முடியும்? அடுத்து, ஷானி அபேசேகர எப்படி எதிரியாக இருக்க முடியும்? எனக்குத் தெரிந்தவரை, ஷானி விசாரணை செய்த அனைத்து விசாரணையும் நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பற்றி தெரிந்தவர்கள் இவர்கள். உடதலவின்ன விவகாரத்தில் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ராஜகிரியவில் நடந்த ரோயல் பார்க் சம்பவத்தில் தொடர்புபட்ட நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், மைத்ரி அவரை விடுவித்தார். ஆனால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இவ்வாறான முக்கிய விசாரணைகளை நடத்தும் ஒரு அதிகாரி அவர். புதியவர்களுக்கு பயிற்சி அளிக்க இதுபோன்ற அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் நமக்குத் தேவை. அவர்கள் எதற்கும் தலைசாய்க்காதவர்கள். இவர்கள் இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் தங்களை அர்ப்பணித்தவர்கள். அவர்களை நாம் பாதுகாக்கிறோம். நாம் அதைச் செய்யக்கூடாதா? ஆனால் இன்று ஏன் அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது? விசாரணைகள் தமது பக்கம் திரும்பும் போது ஷானி ஒரு குற்றவாளியாகிறார். அடுத்து, இலஞ்ச ஒழிப்பு ஆணைக் குழுவின் ரங்க திசாநாயக்க மீது பாரிய குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.நமது நாட்டில், நமக்கு ஒரு துணிச்சலான அரச சேவை தேவை. இன்று, இந்த அதிகாரிகள் அதற்கு தலையிடுகிறார்கள். ஒரு பாராளுமன்றத்தின் பொறுப்பு என்ன? முழு பாராளுமன்றமும் சேர்ந்து அந்த அதிகாரிகளைப் பாதுகாக்க வேண்டும். ஒரு நாட்டின் தேசிய பொறுப்பு அங்கு தான் உள்ளது. ஆனால், நீங்கள் இங்கே என்ன செய்ய முயற்சிக்கிறீர்கள்? அவர்கள் தைரியமாக வேலை செய்தால், அவர்கள் ஒழுக்கமாக வேலை செய்தால், அவர்கள் ஊழலில் ஈடுபடவில்லை என்றால், அந்த அதிகாரிகளை வீழ்த்துவது தான் இவர்களின் நோக்கம். இந்த பாராளுமன்றம் அத்தகைய திறமையான, துணிச்சலான அதிகாரிகளைப் பாதுகாக்க ஒரு பொதுவான கூட்டுச் செயல்பாட்டில் ஈடுபட வேண்டும். நீங்கள் உங்கள் பணியைச் சரியாகச் செய்யுங்கள். கடமையிலும் வெளியேயும் அவர்களின் பாதுகாப்பிற்காக நாங்கள் முன்நிற்கிறோம். அடுத்து, உங்கள் குற்றச்சாட்டுகளுக்கு யார் ஆளாக நேரிடும் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். பொலிஸ் மா அதிபர் தான் அது. அடுத்து, சி.ஐ.டி.யில் பணியாற்றும் கரவிட்ட. நீங்கள் செய்த மோசடிகள், ஊழல்கள் மற்றும் குற்றங்களை பின்தொடர்கையில், அவர்களை பின்தொடர்வது தான் ஊழல் குற்றவாளிகளின் பணியாக உள்ளது. அதனை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். எழுபதுகளின் பிற்பகுதியையும் எண்பதுகளின் முற்பகுதியிலும், கிராமங்களில் பொதுவாக குண்டர்கள் இருந்ததை நாம் அறிவோம். சட்டவிரோத மதுபானம் தயாரித்து கஞ்சா விற்கும் சாதாரண போதைப்பொருள் வியாபாரிகள் இருந்தனர். அந்த குண்டர் சிறைக்குச் சென்றபோது, கிராமமே சுதந்திரமாக இருந்தது. சமூகமும் அவர்களை வெறுத்தது. அவர் ஒரு திருமணத்திற்கோ அல்லது விழாவிற்கோ அழைக்கப்படமாட்டார், அவர் சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டவராக மாறினார். ஆனால், இந்த குண்டர்கள் பின்னர் அரசியலுக்கு வந்தார்கள். குறிப்பாக 1977 இல் அமைக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில், ஒவ்வொரு எம்.பி.யும் அவரை நண்பராக்கிக் கொண்டது. அங்குதான் அவருக்கு அரசியல் பாதுகாப்பு கிடைக்கத் தொடங்கியது. அவர் அரசியல் பாதுகாப்புடனான ஒரு குண்டர் ஆனார். அவர் முதலில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடவில்லை. அதன் பின்னர் உலகில் ஒரு பெரிய போதைப்பொருள் விநியோக வலையமைப்பு உருவாக்கப்பட்டது. அவர்கள் போதைப்பொருள் வலையமைப்பில் நுழைந்தனர். இப்போது அவர்களிடம் அரசியல் அதிகாரம் உள்ளது. அவர்கள் போதைப்பொருள் வர்தகத்தில் நுழைந்தார்கள். போதைப்பொருட்களிலிருந்து அதிக அளவு பணம் கிடைக்கத் தொடங்கியது. இந்தப் பண உருவாக்கத்தின் மூலம், அவர்களால் அரச பொறிமுறையை வாங்க முடிந்தது. சமூக மரியாதையைப் பெறத் தொடங்கியது. சமூகப் பாதுகாப்பும் கிடைத்தது. அவர்கள் பொலிஸ் அதிகாரிகளுக்கு பணம் கொடுக்கத் தொடங்கினர். மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் ,சுங்கம் என்பவற்றுக்கு லஞ்சம் வழங்கத் தொடங்கினர். அரசு இயந்திரமும் அதனுடன் இணைந்தது. அவர்கள் பணத்தை முதலீடு செய்யத் தொடங்கினர். அதன்படி, பணத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு வர்த்தக வலையமைப்பு உருவாக்கப்பட்டது. சில தொழிலதிபர்கள் ஊடகங்களில் பணத்தை முதலீடு செய்யத் தொடங்கினர். இது வெறும் குண்டர் வலையமைப்பிலிருந்து வோறொரு வலையமைப்பாக வளர்ந்துள்ளது. அரசியல் அதிகாரம், போதைப்பொருள் வியாபாரி, ஆயுதமேந்திய குற்றவாளி, ஊழல் நிறைந்த அரச அதிகாரிகள் மற்றும் ஊடக வலையமைப்பு. ஊடக வலையமைப்புடனான தொடர்பை புலனாய்வு பிரிவுகள் விரைவில் நமக்கு வெளிப்படுத்தும். இது வெறும் போதைப்பொருள் வியாபாரி அல்லது வெறும் குண்டர் என்ற நிலையில் அன்றி ஒழுங்கமைக்கப்பட்ட ஒன்றாக மாறியுள்ளது. சில ஒழுங்கமைக்கப்பட்ட நடவடிக்கைகளுடன் ஒரு சர்வதேச உறவு நிறுவப்பட்டுள்ளது. ஹைட்டியின் ஜனாதிபதி படுகொலை செய்யப்பட்ட பிறகு, இது போதைப்பொருட்களுக்கு எதிரான படுகொலை என்று தகவல் வெளியாகியுள்ளது. மெக்சிகோவில் ஒரு பிரபலமான ஜனாதிபதி வேட்பாளர் படுகொலை செய்யப்படுகிறார். சில போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் அவர்கள் போராட்டங்களை உருவாக்குகிறார்கள். தற்போது பெருமளவான கைதுகள் மேற்கொள்ளப்படுகின்றன. முன்னர் இந்த வலையமைப்பு அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் நடத்தப்பட்டது. சில இளவரசர்கள் கூட்டங்களில் உரையாற்றும் போது, ஜூலம்பிட்டிய அமரே பாதுகாப்புக்காக அங்கு இருந்ததை நான் அறிவேன். தங்கள் பாதுகாப்பிற்காக இந்த பாதாள உலகத் தலைவர்களை அவர்கள் வைத்திருந்தார்கள். அதேபோல், எங்கள் தோழர் நளிந்த ஜெயதிஸ்ஸ கட்டுவனவில் ஒரு கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தபோது, அந்தக் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இரண்டு பேர் கொல்லப்பட்டனர். அதை செய்தவர் ஜூலம்பிட்டிய அமரே. இந்த தேவையற்ற அதிகாரத்தால், போதைப்பொருள், ஏனைய போதைப்பொருட்கள், பல்வேறு சமூக விரோத நடவடிக்கைகள் மற்றும் ஆயுதமேந்திய குற்றக் கும்பல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையை நாம் தோற்கடிக்க வேண்டும். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். வடக்கு, கிழக்கு, தெற்கு என முழு சமூகமும் இதற்கு பலியாகிவிட்டது. அதனால்தான் நமக்கு ஒரு தேசிய நடவடிக்கை தேவைப்பட்டது. இது ஒரு அரசாங்க செயல்பாடு அல்ல. யார் ஆட்சியில் இருந்தாலும், போதைப்பொருட்களையும் அவர்களுடன் தொடர்புடைய ஆயுதமேந்திய குற்றக் கும்பல்களையும் அழிக்க வேண்டும். இதற்காக, எங்கள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சும் அதனுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களும் பாடுபடவேண்டும். இன்று பொதுமக்கள் இதற்கு பெரும் ஆதரவை வழங்குகிறார்கள். இருப்பினும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் இதற்கு எதிராகச் செயல்படுகிறார்கள். இந்த செயல்முறைக்கு எதிராக எந்தவொரு அரசியல் கட்சியும் செயல்பட பொதுமக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். நீண்ட காலமாக இதை ஆசீர்வதித்து ஆதரித்த அரசியல் பொறிமுறையை பொதுமக்கள் அழித்துவிட்டனர். இதுபோன்ற நாசகரமான நடவடிக்கைகளுக்காக இதுபோன்ற அரசியல் இயக்கங்கள் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற அனுமதிக்கக் கூடாது என்பதே எங்கள் எதிர்பார்ப்பாகும். எனவே, ஆபத்து எங்கே இருக்கிறது என்பதை நாங்கள் கணித்து வருகிறோம். அந்த கணிப்புகளின்படி திட்டங்களை உருவாக்கும் ஒரு சட்டபூர்வ பொறிமுறை எங்களிடம் உள்ளது. அவர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இன்று, பாதுகாப்புச் செயலாளரை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம். முன்பிருந்த பாதுகாப்புச் செயலாளர்களிடம் அமைச்சர்கள் சென்று மண்டியிட்டனர். அத்தகைய நாட்டில், இன்று, எதிர்க்கட்சி ஆளும் கட்சியைச் சேர்ந்த எவரும் எந்த நேரத்திலும் பாதுகாப்புச் செயலாளரிடம் பேசலாம். பொலிஸ்மா அதிபரும் அப்படித்தான். எனவே, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதற்கும், இந்த நாட்டில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, இரண்டு அமைச்சுக்களின் செயலாளர்கள், முப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய அதிகாரிகள் உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர்கள் செய்து வரும் பணியை நாங்கள் பாராட்டுகிறோம். வேறு எந்த வேலையையும் விட, அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றுகின்றனர். பழிவாங்கப்படலாம் என்ற சந்தேகத்துடன் வேலை செய்கிறார்கள்.இந்த நாட்டில் ஓய்வுக்குப் பின் வாழ முடியுமா என்ற பயத்துடன் வேலை செய்கிறார்கள். அரசாங்கமென்ற வகையில் நாங்கள் அவர்களைப் பாதுகாப்போம் என்று நாங்கள் அனைவருக்கும் கூறுகிறோம்.அவர்கள் அரசாங்கத்தில் இல்லாவிட்டாலும் நாங்கள் அவர்களைப் பாதுகாப்போம் என்று நான் அவர்களுக்கு உறுதியளிக்கிறேன். நமது நாட்டில் அரசப பாதுகாப்பையும் பொதுமக்கள் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கும், பாதாள உலகம், குற்றம் மற்றும் ஊழலைத் தடுத்து நிறுத்துவதற்கும், ஒரு சிறந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்'' என்று ஜனாதிபதி தெரிவித்தார். https://www.virakesari.lk/article/230829
-
அமைதியாக ஆனால் 'அதிரடியாக' நீக்கப்பட்ட சரித் அசலன்க
19 Nov, 2025 | 04:04 PM பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் மும்முனை ரி20 கிரிக்கெட் தொடரில் இருந்து இலங்கையின் ரி20 அணித் தலைவர் சரித் அசலன்க ஓசையின்றி நீக்கப்பட்டபோது ஆரம்ப கிசுகிசுக்கள் சுகவீனம் என முணுமுணுத்தன. ஆனால், அதற்கு அப்பால் ஒரு கீறல் வீழ்ந்துள்ளதுடன் ஒரு வித்தியாசமான தோற்றம் வெளிப்படுகிறது. பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தைத் தொடர்வதில் ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதத்தின்போது அணித் தலைவர் வெளிப்படுத்திய அதிருப்தியானது விரிசல்கள் நிறைந்த ஆடுகளத்தில் ஒரு மோசமான எகிறிபாயும் பந்து போன்று அவரைத் திருப்பித் தாக்கியுள்ளது.. தாயகம் திரும்பத் துடித்த மற்றொரு பிரதான வீரரான வேகப்பந்து வீச்சாளர் அசித்த பெர்னாண்டோவும் இதே போன்ற ஒரு இக்கட்டான நிலையை சந்தித்துள்ளார். இவர்கள் இருவரின் கிரிக்கெட் பயணத்தைப் மீட்டுப்பார்த்தால் அவர்கள் இருவரும் மிக நீண்ட தூரம் ஒன்றாக பயணித்துள்ளதை அறிந்துகொள்ளலாம். முன்னாள் இலங்கை அணியின் உப தலைவர் ரோய் டயஸின் பயிற்றுவிப்பின் கீழ் அவர்கள் இருவரும் 19 வயதுக்குட்பட்ட அணியில் சகாக்களாக இருந்தவர்கள். ரோய் டயஸின் பயிற்றுவிப்பிலேயே சரித் அசலன்க தலைமையிலான 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 2016இல் நான்கு நாள் இளையோர் டெஸ்ட் தொடரிலும் (1 - 0) இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் (3 - 0) 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து அணியை வெற்றிகொண்டிருந்தது. அந்த அணிகளில் அசித்த பெர்னாண்டோ விளையாடாதபோதிலும் குழாத்தில் இடம்பெற்றிருந்தார். இப்போது அவர்கள் இருவரும் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்குப் பின்னர் தாயகம் திரும்பிவிட்டனர். பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் முத்தரப்பு தொடருக்கான குழாத்தில் பெயரிடப்பட்டிருந்த அவர்கள் இருவரும் இப்போது அதில் பங்குபற்றவில்லை. ரிச்மண்ட் கல்லூரி அணியிலும் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியிலும் ஒரு சிறந்த தலைவராக செயற்பட்ட அசலன்க, தலைமைத்துவத்திற்காக மிகக் கவனமாக வளர்க்கப்பட்டதுடன் அதற்காக மிக நீண்டகாலமாக காத்திருந்தார். காலி ரிச்மண்ட் கல்லூரி அணியை மிகுந்த துணிச்சலுடன் வழிநடத்திய அவர் தொடர்ந்து 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் தலைவராக செயற்பட்டபோது அந்த நற்சான்றிதழ்கள் மேலும் மெருகூட்டப்பட்டது. தனது 23ஆவது வயதில் அவர் இலங்கை அணியில் அறிமுகமானபோது அவரது தோள்களில் தலைமைப்பதவி சுமத்தப்படும் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக அப்போது இருந்தது. சரித் அசலன்க அணித் தலைவரானபோது மஹேல ஜயவர்தனவின் அமைதியான சுபாவத்தைப் பிரதிபலிப்பதுபோல் அமைதியான மன உறுதியுடன் அணியை வழிநடத்தினார். அவரது தலைமையில் இருதரப்பு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் அவுஸ்திரேலியாவையும் இந்தியாவையும் இலங்கை வெற்றிகொண்டு உலக தரவரிசையில் நான்காவது இடத்திற்கு முன்னேறியது. சம்பியன்ஸ் கிண்ணத்தில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காத நிலையில் இந்த வெற்றிகள் இலங்கைக்கு தெம்பூட்டுவதாக அமைந்தன. கையில் துடுப்பை ஏந்தியவராக அசலன்க அமைதியாக போட்டிகளை வெற்றியுடன் முடித்துவைத்து புகழ்ச்சியைப் பெற்றார். பெரும்பாலும் கடினமான வெற்றி இலக்குகளை சாதுரியமாக கையாண்டு அவற்றைக் கடக்கச் செய்ததுடன் கணிசமான மொத்த எண்ணிக்கைகளை அணி பெறுவதற்கும் பெரும் பங்காற்றி இருந்தார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் ஏழாவது இடத்திற்கு அவர் முன்னேறினார். அதனைடன் ஒரு தற்செயல் நிகழ்வு என்று கூறிவிட முடியாது. ஆனால், டி20 கிரிக்கெட்டில் அவரது ஆட்டத் திறன் மன்னிக்க முடியாத தன்மையைக் காட்டியது. துடுப்பாட்டத்தில் அவரது திறமை வெகுவாக சரிவடைந்தது. மேலும் ஆசிய கிண்ண கிரிக்கெட்டின் இரண்டாவது சுற்றில் இலங்கையினால் ஒரு வெற்றியைக்கூட பெறமுடியாமல் போனது. அத்துடன் அவரது சில பந்துவீச்சு மாற்றங்கள் ஆச்சரியம் அடையச் செய்தன. அதிரடி வீரர் மொஹம்மத் நபி துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தபோது துனித் வெல்லாலகேவை கடைசி ஓவரை வீசுமாறு அசலன்க அழைத்தார். அந்த ஓவரில் இளம் வீரரின் 5 பந்துளை நபி சிக்ஸ்களாக விளாசினார். நல்லவேளை அந்தப் போட்டியில் இலங்கை தோல்வியிலிருந்து தப்பியதுடன் ஆப்கானிஸ்தானையும் வெளியேற்றியது. ஆனால், அவரது மற்ற தவறுகளை அவ்வளவு எளிதில் மறைக்க முடியவில்லை. முன்னாள் அணித் தலைவர் தசுன் ஷானக்கவை கருத்தில் கொள்ளாமால் ஒரு தீர்மானம் மிக்க ஓவரை கமிந்து மெண்டிஸிடம் ஒப்படைத்தபோது பங்களாதேஷ் அணி 169 ஓட்டங்களை கடினமான ஆடுகளத்தில விரட்டிக் கடப்பதை கமிந்துவின் இரண்டு கைகளின் பந்துவீசும்திறமைகளால் தடுக்க முடியவில்லை. இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் அசலன்க ஒரு களங்கமற்ற ஒழுக்கத்தை கடைப்பிடித்தார். அவர் தன்னை கண்ணியமாக நடத்திக்கொண்டதுடன் ஒருபோதும் ஆட்டத்தை களங்கப்படுத்தவில்லை. ஆனால், அண்மையில் அணிக்குள் ஒரு சிறிய குழுவினர் - முக்கியமாக அவரது சகாக்கள் - பற்றிய முணுமுணுப்புகள் எழுந்தன. அணியின் ஹோட்டலில் இருந்து 20 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இஸ்லாமாபாத்தில் குண்டுவெடிப்பு வரை அந்த முணுமுணுப்பு ஈசல்போல் தொடர்ந்தது. பாகிஸ்தான் அதிகாரிகளிடமிருந்து உத்தரவாதங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புத் திட்டங்கள் இருந்தபோதிலும், அசலன்க உட்பட ஒரு சிறிய குழுவினர் சுற்றுப்பயணத்தை கைவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். ஸ்ரீலங்கா கிரிக்கெட நிறுவனம் மசியவில்லை. மாற்று வீரர்களைத் தயார்படுத்தத் தொடங்கியது. இரவு நேர வற்புறுத்தலுக்குப் பின்னர் வீரர்கள் இறுதியில் தங்க ஒப்புக்கொண்டனர். ஆனால், சேதம் ஏற்கனவே ஏற்படத்தப்பட்டுவிட்டது. உயரிடத்திலிருந்து வந்த செய்தி சந்தேகத்திற்கு இடமின்றி இருந்தது. போட்டியை விட யாரும் பெரியர்வர்கள் அல்லர் என்பது போல் அந்த செய்தி இருந்தது. இந் நிலையில் இலங்கை அணி ஒருநாள் தொடரை ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் இழந்தது. இறுதிப் போட்டியில் அசலன்க ஒரு ஓரமாக இருந்தார். முத்தரப்பு தொடர் தொடங்குவதற்கு முன்பு அவர் ஓசையின்றி வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டார். தசுன் ஷானக்கவை ரி20 உதவித் தலைவராக தேர்வாளர்கள் நியமித்தபோது எல்லாம் எழுதப்பட்டுவிட்டது போல் தோன்றியது. அசலன்க களநிலைமையைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டார். இப்போது சொந்த மண்ணில் நடைபெறப் போகும் ரி20 உலகக் கிண்ணத்தில் அணித் தலைவர் பதவியை தசுன் ஷானக்க தக்கவைத்துக்கொள்வார் என்று தெரிகிறது. அசலன்கவைப் பொறுத்தமட்டில் திடீரென்று தலைமைக்காகப் போராடாமல் முதல் பதினொருவரில் தனது இடத்திற்காகப் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார். வாழ்க்கையைப் போலவே, கிரிக்கெட்டில் தவறான அடி ஒரு போட்டியை தலைகீழாக மாற்றிவிடும். சரித் அசலன்கவைப் பொறுத்தவரை, இது அவர் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய கடினமான இன்னிங்ஸாக அமையக்கூடும். (நன்றி: டெலிகொம் ஏசியா ஸ்போர்ட்) https://www.virakesari.lk/article/230820
-
லெபனான் எல்லையை இஸ்ரேல் மீறியுள்ளதாக ஐ.நா குற்றச்சாட்டு
லெபனான் எல்லையில் இஸ்ரேலின் பாதுகாப்புச் சுவர் - அகற்றுமாறு ஐ.நா. வலியுறுத்து 18 Nov, 2025 | 05:15 PM லெபனானின் யாரோன் பகுதியில் இஸ்ரேல் எழுப்பிய சுவரை அகற்றுமாறு இஸ்ரேல் இராணுவத்துக்கு ஐக்கிய நாடுகளின் எல்லை காக்கும் படை வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. லெபனானில் இஸ்ரேல் எழுப்பிய சுவரானது அந்நாட்டின் எல்லையை தாண்டி வருவதாக லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன் (Joseph Aoun) குற்றம்சாட்டியுள்ளார். அதைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சபையால் வரைபடத்தில் எல்லையாகக் குறிப்பிடப்பட்டுள்ள நீலக் கோட்டை இந்த சுவர் தாண்டி நீண்டிருப்பதை சுட்டிக்காட்டி, பாதுகாப்புச் சுவரை அகற்றுமாறு இஸ்ரேலுக்கு ஐ.நா. அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேல் - காசா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் களமிறங்கினர். இதனால் லெபனான் மீதும் இஸ்ரேல் போர் நடத்தியது. பின், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தலையீட்டால் கடந்த ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கிடையே 2022இல் காசாவுடன் போர் தொடங்கியதில் இருந்தே தனது வடக்கு எல்லையை இஸ்ரேல் பலப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே லெபனான் எல்லையில் இஸ்ரேல் சுவர் எழுப்பியிருந்தது. அந்த சுவர், லெபனான் எல்லையை தாண்டுவது போல் அமைக்கப்பட்டிருப்பதாக காரணம் காட்டப்பட்டுள்ள நிலையில், அந்த சுவரை அகற்றுமாறு ஐ.நா இஸ்ரேலுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/230725
-
இந்திய கடற்படையின் போர் கப்பல் இலங்கையை வந்தடைந்தது!
19 Nov, 2025 | 03:40 PM இந்திய கடற்படையின் போர் கப்பலான ‘INS SUKANYA’ செவ்வாய்க்கிழமை (18) காலை உத்தியோகபூர்வ விஜயத்திற்காக இலங்கையை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் அக் கப்பலை கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர். நாட்டை வந்தடைந்துள்ள ‘INS SUKANYA’ என்ற போர் கப்பல் 101 மீட்டர் நீளம் கொண்டதுடன், இந்த போர் கப்பலின் கட்டளை அதிகாரியாக COMMANDER, SANTOSH KUMAR VERMA கடமையாற்றுகின்றார். இந்தக் போர் கப்பல் தீவில் தங்கியிருக்கும் காலத்தில், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையேயான நட்பை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளில் கப்பலின் அங்கத்துவ குழுவினர் பங்கேற்க உள்ளனர். மேலும், தீவின் பல முக்கிய பகுதிகளுக்குச் சென்று பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளனர். மேலும், இந்த உத்தியோகப்பூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு, 'INS SUKANYA' என்ற போர் கப்பலானது 2025 நவம்பர் 21 ஆம் திகதி தீவிலிருந்து புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/230813
-
தினசரி காலையில் மலம் கழிக்க வேண்டுமா? மலச்சிக்கலுக்கான காரணங்களும் தீர்வும்
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம் 19 நவம்பர் 2025, 01:45 GMT ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 19-ஆம் தேதி உலக கழிவறை தினம் கடைபிடிக்கப்படுறது. ஐ.நாவால் 2013-ஆம் ஆண்டு முதல் இந்த தினம் அதிகாரப்பூர்வமாகக் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான மையக்கருவாக 'மாறி வரும் உலகில் தூய்மை' (Sanitation in a changing world) உள்ளது. மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர், அதாவது சுமார் 340 கோடி பேர் சரியான சுகாதார வசதியற்ற சூழலில் வாழ்வதாக ஐநா கூறுகிறது. கழிவறை வசதி இல்லாமல் இருப்பது, தூய்மையான கழிவறைகள் இல்லாததால் மலம் கழிப்பதை தவிர்ப்பது அல்லது தள்ளிப்போடுவது போன்ற காரணங்களால் மலச்சிக்கல் பிரச்னையை பலரும் எதிர்கொள்வதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மலச்சிக்கல் ஏற்படுத்தும் காரணிகள் அதனால் ஏற்படும் சுகாதாரப் பிரச்னைகள் பற்றி சென்னையைச் சேர்ந்த மூத்த இரைப்பை குடல் மருத்துவரான கயல்விழி ஜெயராமனிடம் பிபிசி தமிழ் பேசியது. மலச்சிக்கல் என்பது வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து தரப்பினரையும் பாதிப்பதாகக் கூறுகிறார் கயல்விழி ஜெயராமன். பெரும்பாலும் தினசரி பழக்க வழக்கங்களால் தான் மலச்சிக்கல், சீரற்ற குடல் இயக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார். தினசரி மலம் கழிப்பதன் அவசியம், மலச்சிக்கல் பிரச்னைக்கான காரணிகள், தீர்வுகள் பற்றி அவர் பகிர்ந்து கொண்ட விவரங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம். தினசரி காலையில் மலம் கழிக்க வேண்டுமா? பட மூலாதாரம், Getty Images பொதுவாக குடல் இயக்கம் பற்றி தவறான புரிதல்கள் உள்ளன. தினசரி காலை மலம் கழித்தே ஆக வேண்டும் எனக் கற்பிக்கப்படுகிறது. ஆனால் அது அறிவியல் ரீதியாக சரியானது கிடையாது. ஒவ்வோர் உணவுக்குப் பிறகும் 20 நிமிடங்கள் கழித்து அதற்கான உணர்வுகள் ஏற்படும். பெரும்பாலும் அத்தகைய உணர்வு ஏற்படுகிற போது அடக்கி வைப்பதுதான் மலச்சிக்கல் பிரச்னையை ஏற்படுத்துகிறது. மலம் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படுகிற போதே கழிவறைக்குச் செல்ல வேண்டும். அதனை புறக்கணிக்கக் கூடாது. ஆனால் பயணங்களில் இருப்பவர்கள், வெளி வேலைக்குச் செல்பவர்கள், பணியிடங்களில் முறையான கழிவறை வசதி இல்லாதவர்கள், வீடுகளில் கழிவறை வசதி இல்லாதவர்கள் அவ்வாறு செய்ய முடியாமல் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தூய்மையான சூழல் இல்லாதபோது மக்கள் அதனை தள்ளிப்போடுவது இயற்கையான சுழற்சியை பாதிக்கிறது. பெரும்பாலானோர் வீட்டுக்குச் சென்று பார்த்துக் கொள்ளலாம், அல்லது இரவு பார்த்துக் கொள்ளலாம் எனத் தவிர்க்கின்றனர். ஆனால் இது செரிமான அமைப்பை பாதிக்கும். மலம் கழிப்பதை முடிந்தவரை தவிர்க்கக் கூடாது. மலச்சிக்கலுடன் ஒப்பிடுகையில் சுகாதாரமற்ற கழிவறை பயன்படுத்துவதால் ஏற்படும் தொற்று பாதிப்பு என்பது மிக மிகக் குறைவு. யாருக்கெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது? பட மூலாதாரம், Getty Images மலச்சிக்கல் வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து வயதினருக்கும் வந்தாலும் பள்ளி செல்லும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதை காண முடிகிறது. குழந்தைகளுக்கு கழிவறை மற்றும் மலம் கழிக்கும் வழக்கத்தை முறையாக பின்பற்றுவது குறித்து சரியான பயிற்சி கொடுக்க வேண்டும். வேலை நேரம் மாறுவது, வாழ்க்கை முறை மாறுவது, சரியான நேரத்தில் உணவுகளை எடுத்துக் கொள்ளாதது போன்றவை மலச்சிக்கலை அதிகப்படுத்துகின்றன. நீண்ட கால பாதிப்பு இருப்பவர்கள் அதனை புறக்கணிக்கக்கூடாது. மலச்சிக்கல் தொடர்வதால் மூல நோய், ரத்தக்கசிவு, வலி போன்ற பாதிப்புகள் ஏற்படும். உணவுப் பழக்கம் காரணமா? மாமிசம் போன்ற அதிக புரதச்சத்து உள்ள உணவுகள் சாப்பிடுகிறபோது மலச்சிக்கல் ஏற்படும். இருப்பினும் அது அச்சப்பட வேண்டிய விஷயம் இல்லை. அத்தகைய சூழலில் நார்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மலச்சிக்கல் பிரச்னையை தீர்ப்பதற்கான சில வழிகள். தினமும் குறைந்தபட்சம் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் 20 - 25 கிராம் நார்ச்சத்துள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் துரித உணவுகளை தவிர்க்க வேண்டும் அதிக புரதச்சத்துள்ள உணவு சாப்பிடும் போது அதற்கு நிகராக நார்ச்சத்துள்ள உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுமா என்கிற சந்தேகம் பலருக்கும் ஏற்படுவதாகக் கூறும் மருத்துவர் கயல்விழி ஜெயராமன், "மலச்சிக்கல் வருவதால் மட்டும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதைப்பற்றி கூடுதல் விழிப்புணர்வு தேவை" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn4jed1p8mmo
-
நாமலின் பட்டச் சான்றிதழ் தொடர்பில் கேள்வி!
நாமல் ராஜபக்ஷ பட்டச் சான்றிதழ் தொடர்பில் சந்தேகங்கள்; உண்மையை வெளிப்படுத்த வேண்டும் - நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தல் 19 Nov, 2025 | 02:32 PM ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சிடி யுனிவர்சிட்டி ஒப் லண்டன் நிறுவனத்தில் பெற்றுக்கொண்டதாக சமர்ப்பித்த சான்றிதழ் 2009.09.15 ஆம் திகதி அவருக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த சான்றிதழில் கைச்சாத்திட்டுள்ள உப வேந்தர் 2009.07.23 ஆம் திகதியன்று சுய அடிப்படையில் பதவி விலகியுள்ளார்.பட்டம் தொடர்பில் பல கேள்விகள் எழுந்துள்ளன. பாராளுமன்றத்தின் கௌரவத்தை கருத்திற் கொண்டு நாமல் ராஜபக்ஷ உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சு மற்றும் தொழில் அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சட்ட பட்டம், இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்ட சட்ட பட்டம் மற்றும் அதன் சான்றிதழ் பற்றி சமூக ஊடகங்களில் பல விடயங்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் புலனாய்வு ஊடகவியலாளரான நிர்மலா கண்ணங்கர இந்த விடயம் தொடர்பான விபரங்களை வெளிப்படுத்தியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சிடி யுனிவர்சிடி ஒப் லண்டன் நிறுவனத்தில் பெற்றுக்கொண்டதாக குறிப்பிடப்படும் சட்ட பட்ட சான்றிதழை , முன்வைத்து ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்கு பட்டப்பின் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சிடி யுனிவர்சிடி ஒப் லண்டனில் பெற்றுக்கொண்டதாக சமர்ப்பித்த சான்றிதழ் 2009.09.15 ஆம் திகதி அவருக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த சான்றிதழில் கைச்சாத்திட்டுள்ள உப வேந்தர் 2009.07.23 ஆம் திகதியன்று சுய அடிப்படையில் பதவி விலகியுள்ளார். இலங்கையில் சட்டக்கல்லூரிக்கு உள்நுழைவதாயின் போட்டிப்பரீட்சையில் சித்தியடைய வேண்டும். அவ்வாறு இல்லாவிடின் சர்வதேச மட்டத்தில் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் சட்ட கல்வியை பெற்றிருக்க வேண்டும். சிடி யுனிவர்சிடி ஒப் லன்டண் நிறுவனம் 2009.10.15 ஆம் திகதி தான் இலங்கை சட்டக்கல்லூரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சட்டக்கல்வியை தொடர்வதற்கு 2009.09.25 ஆம் திகதி விண்ணப்பித்துள்ளார்.விண்ணப்பித்த திகதியன்றே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே இவரது சட்ட பட்டம் தொடர்பில் பல கேள்விகள் எழுந்துள்ளன. பாராளுமன்றத்தின் கௌரவத்தை கருத்திற் கொண்டு நாமல் ராஜபக்ஷ உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/230803