Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பிரதமருக்கு எதிரான நடவடிக்கையில் இலங்கை தமிழ் அரசுச் கட்சி பங்கெடுக்கவில்லை - சிவஞானம் ஸ்ரீதரன் 12 Jan, 2026 | 01:52 PM ஹரிணி அமரசூரிய ஒரு பெண் பிரதமர் என்பதாலும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எவ்வித முறையான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதாலும் இலங்கை தமிழ் அரசுச் கட்சி, பிரதமருக்கு எதிரான நடவடிக்கையில் பங்கெடுக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார். இலங்கையின் தற்போதைய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாகவும் கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் சிவஞானம் ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், அண்மையில் பாராளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் பிரதமருக்கு எதிராகக் கையெழுத்துக்களைத் திரட்டி, அவர் பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் பதவிகளிலிருந்து விலக வேண்டும் என நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர முயற்சிக்கின்றனர். இருப்பினும், ஹரிணி அமரசூரிய ஒரு பெண் பிரதமர் என்பதாலும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எவ்வித முறையான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதாலும், இலங்கை தமிழ் அரசுச் கட்சி இந்த நடவடிக்கையில் பங்கெடுக்கவில்லை என சிறிதரன் தெரிவித்துள்ளார். இந்த நம்பிக்கையில்லா தீர்மானமானது அரசியல் உள்நோக்கம் கொண்ட ஒரு பழிவாங்கும் நடவடிக்கை எனத் தாம் கருதுவதாகவும், இவ்வாறான அவதூறான செயற்பாடுகளை ஏற்க முடியாது என்றும் அவர் கூறினார். கடந்த பாராளுமன்ற அமர்வுகளின்போதும், கட்சித் தலைமையுடனும் இது குறித்து விரிவாக ஆராயப்பட்டதாகவும், முறையான ஆதாரங்கள் இன்றி பிரதமருக்கு எதிராக வாக்களிப்பதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீதரன் மேலும் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, இந்த புதிய கல்வி முறையானது நாட்டுக்கு மிக முக்கியமானது என்றும், இலங்கையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள ஆரம்பக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். இராணுவமயப்படுத்தப்பட்ட அல்லது போதிய அறிவற்றவர்களால் கல்வித்துறை கையாளப்படுவதைக் காட்டிலும், முறையான கல்விச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார். மேலும், கடந்த வியாழக்கிழமை பிரதமரைச் சந்தித்தபோது தமிழர்களின் பூர்வீக வரலாறு மற்றும் கல்வித் தேவைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடியதாக ஸ்ரீதரன் தெரிவித்தார். குளக்கோட்டன், சங்கிலியன், பண்டாரவன்னியன் மற்றும் அரசகேசரி போன்ற தமிழ் மன்னர்கள் இந்த நிலத்தை ஆண்ட வரலாறுகள் திட்டமிட்ட முறையில் பாடப்புத்தகங்களிலிருந்து மறைக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். 70களுக்குப் பின்னர் வந்த அரசாங்கங்கள் எவ்வித திட்டமுமின்றி தமிழ் மக்களின் வரலாற்றைச் சிதைத்துள்ள நிலையில், அவற்றை மீண்டும் பாடப்புத்தகங்களில் உள்வாங்குவது குறித்து பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான அறிக்கை ஒன்றை இன்னும் இரண்டு வாரங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். தமிழ் மக்களின் கல்வித் தேவைகள், ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பாடசாலைக் கட்டமைப்பு வசதிகள் எனப் பல பிரச்சினைகள் இருக்கும் நிலையில், பிரதமருக்கு எதிரான தனிப்பட்ட அல்லது அரசியல் ரீதியான தாக்குதல்களில் இலங்கை தமிழ் அரசுச் கட்சி பங்காளியாகாது என அவர் தெளிவுபடுத்தினார். அரசாங்கத்தின் மீது தமக்கு விமர்சனங்கள் இருந்தாலும், ஒரு பொறுப்புள்ள இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி என்ற ரீதியிலும், தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் பாரம்பரியத்தைக் கொண்ட கட்சி என்ற ரீதியிலும், இந்த விவகாரத்தில் மிகவும் நிதானமாகச் செயற்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/235826
  2. மதுரோ கைது மற்றும் 'ரஷ்ய' கப்பல் சிறைபிடிப்புக்கு பதிலடி தராமல் புதின் மௌனம் காப்பது ஏன்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வெனிசுவேலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா சிறைபிடித்துள்ளது, ஆனால் ரஷ்யா மௌனம் காக்கிறது கட்டுரை தகவல் பிரையன் வின்ட்சர் மற்றும் டாரியா மொசோலோவா பிபிசி மானிட்டரிங் 7 மணி நேரங்களுக்கு முன்னர் வெளிநாட்டு மண்ணில் அமெரிக்கா இவ்வளவு ஆக்ரோஷமாக தனது அதிகாரத்தை காட்டும் நிகழ்வுகள் இதற்கு முன்பெல்லாம் நடந்திருந்தால் அதற்கு ரஷ்யாவிடமிருந்து உடனடியான மற்றும் கடுமையான பதிலடி கிடைத்திருக்கும். ஆனால் 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து நிலைமை வேறாக இருக்கிறது. வெனிசுவேலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவைச் சிறைபிடித்ததை அமெரிக்கா கொண்டாடியது ரஷ்யக் கொடி ஏந்திய எண்ணெய் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது கிரீன்லாந்தைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான மிரட்டல்களையும் அமெரிக்கா மீண்டும் விடுத்தது இவற்றிற்கெல்லாம், ரஷ்யா மற்றும் ரஷ்ய அரசுடன் தொடர்புடைய விமர்சகர்கள் ஆச்சரியமளிக்கும் வகையில் மௌனத்தைக் கடைபிடிக்கின்றனர். மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் நடக்கும் ஆட்சி மாற்றங்கள் மற்றும் வளங்களைக் கைப்பற்றுதல் ஆகியவற்றை நீண்டகாலமாக எதிர்த்து வந்த ஒரு அரசாங்கத்திடம் தென்படும் இந்தக் கட்டுப்பாடு ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கிறது. அமெரிக்காவின் செல்வாக்கைச் சமநிலைப்படுத்துவதற்காக வெனிசுவேலா மற்றும் ஆர்க்டிக் போன்ற பகுதிகளில் ரஷ்யா பெருமளவில் முதலீடு செய்துள்ளது. அதிபர் விளாதிமிர் புதின் இந்த நிகழ்வுகள் குறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து, அவர் ஜனவரி 6-ஆம் தேதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் மட்டுமே பொதுவெளியில் தோன்றினார். அவரது செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் மற்றும் ரஷ்ய அரசு தொலைக்காட்சி சேனல்களும் விடுமுறை நாட்களில் இந்த விவகாரத்தில் மௌனம் காத்தன. டொனால்ட் டிரம்பின் சமீபத்திய சர்வதேச நகர்வுகள், யுக்ரேன் விவகாரத்தில் அமெரிக்காவுடன் ரஷ்யா மேற்கொண்டு வரும் நடைமுறை ரீதியான ஆனால் நுட்பமான பேச்சுவார்த்தைகளைச் சேதப்படுத்துவதை ரஷ்யா விரும்பவில்லை என்பதை இந்த மௌனம் காட்டக்கூடும். சிறப்பு ராணுவ நடவடிக்கைகள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி அமெரிக்கப் பாதுகாப்புப் படையினரால் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். டொனால்ட் டிரம்ப் 2026-ஆம் ஆண்டைத் தனது பலத்தை வெளிப்படுத்தும் நிகழ்வுகளுடன் தொடங்கினார். வெனிசுவேலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்யவும், போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் அவரை நாடு கடத்தி நியூயார்க் அழைத்து வரவும் அவர் உத்தரவிட்டார். இந்த லத்தீன் அமெரிக்க நாடு தற்காலிகமாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் அறிவித்தார். விடுமுறை நாட்களில் ரஷ்ய அரசுத் தொலைக்காட்சியில் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருந்தாலும், மதுரோ அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டிருப்பது ரஷ்யாவின் நலனுக்கு உகந்தது என்ற கருத்தையே முக்கிய அரசு ஊடகங்களுடன் தொடர்புடைய ஆய்வாளர்கள் முன்வைத்தனர். தமது செல்வாக்குள்ள பகுதிகளில் மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதன் மூலம், ரஷ்யாவுக்கும் அதையே செய்ய அமெரிக்கா மறைமுகமாக சுதந்திரம் அளித்துள்ளதாகச் சில ஆய்வுகள் வாதிடுகின்றன. கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியிடப்பட்ட டிரம்ப் நிர்வாகத்தின் புதிய தேசிய பாதுகாப்பு உத்தியின் நடைமுறை உதாரணம் இது என ரஷ்ய ஆதரவு விமர்சகர்கள் விவரித்தனர். 'செல்வாக்கு உள்ள பகுதிகள்' மற்றும் வல்லரசுகளின் சிறப்பு உரிமைகள் ஆகியவற்றை வலியுறுத்தியதற்காக இந்த உத்தி ரஷ்ய அதிகாரிகளால் வெளிப்படையாகப் பாராட்டப்பட்டது. மதுரோவின் கைது குறித்து கருத்து தெரிவித்த கிரெம்ளினுக்கு நெருக்கமான வெளியுறவுக் கொள்கை நிபுணர் ஃபியோடர் லுகியானோவ், அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு உத்தியைக் குறிப்பிட்டார். "டிரம்ப் கோட்பாடு செல்வாக்கு உள்ள பகுதிகள் மீண்டும் சர்வதேச உறவுகளின் முக்கிய அங்கமாக மாறுவதை உறுதிப்படுத்துகிறது," என்று கொம்மர்சன்ட் வணிகச் செய்தித்தாளிடம் அவர் தெரிவித்தார். ரஷ்ய எம்பி-யும் அரசு தொலைக்காட்சி தொகுப்பாளருமான யெவ்ஜெனி போப்போவ், அமெரிக்காவின் சமீபத்திய நடவடிக்கைகள் உத்தி ரீதியாக ரஷ்யாவிற்கு "அசௌகரியமாக" இருப்பதை ஒப்புக்கொண்டார், ஆனால் அவை நீண்ட கால அடிப்படையில் ரஷ்யாவிற்கு "நன்மை பயக்கும்" என்றும் நம்பிக்கை தெரிவித்தார். "நடப்பவை நமது கைகளை விடுவித்து, வெளிப்புற அழுத்தத்தைக் குறைக்கின்றன. உலக அரங்கில் ஏற்படும் பின்னடைவு என்பது நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய ஒரு வாய்ப்பு," என்று போப்போவ் டெலிகிராமில் குறிப்பிட்டிருந்தார். சில ரஷ்ய ஆதரவு விமர்சகர்கள், விருப்பமில்லாவிட்டாலும், அமெரிக்காவின் விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைக்குத் தங்களின் மரியாதையை வெளிப்படுத்தினர். ரஷ்யாவும் ஒரு காலத்தில் யுக்ரேனில் இத்தகைய நடவடிக்கையைத்தான் கற்பனை செய்தது, ஆனால் அங்குள்ள நிலைமை முழு அளவிலான போராக மாறியது, அது இப்போது ஐந்தாவது ஆண்டில் உள்ளது. ரஷ்ய அரசு ஊடகமான ரஷ்யா டுடேவின் தலைமை ஆசிரியர் மார்கரிட்டா சிமோனியன், அமெரிக்காவின் நடவடிக்கையைக் கண்டு தனக்கு "பொறாமையாக" இருப்பதாக டெலிகிராமில் தெரிவித்துள்ளார். இந்தச் செய்திகளுக்குப் பின்னால் ஒரு எளிய உண்மையும் உள்ளது: மதுரோவின் கைது ரஷ்யாவுக்கு ஒரு பெரிய அடி. வெனிசுவேலாவில் ரஷ்யா பெருமளவில் முதலீடு ரஷ்யா பல தசாப்தங்களாக வெனிசுவேலாவில் பெருமளவில் முதலீடு செய்துள்ளது. ஆனால் அதன் வளங்களும் கவனமும் யுக்ரேன் போரின் பக்கம் இருப்பதால், இப்பகுதியில் அதன் செல்வாக்கு பலவீனமடைந்துள்ளது. பிபிசி மானிட்டரிங்கிடம் ஜேம்ஸ் மார்ட்டின் ஆயுத பரவல் எதிர்ப்பு ஆய்வு மையத்தின் யுரேசியா திட்ட இயக்குநர் ஹனா நோட்டே கூறுகையில், வெனிசுவேலா விவகாரத்தில் ரஷ்யா கடுமையான விமர்சனத்தைத் தவிர்ப்பது, ரஷ்ய அதிபர் தற்போது டிரம்பைக் கோபப்படுத்த விரும்பவில்லை என்பதைக் காட்டுகிறது. ஏனெனில் அவர் "கையாள வேண்டிய இன்னும் பெரிய பிரச்னைகள் உள்ளன." என்றார். யுக்ரேன் விவகாரத்தில் டிரம்பைத் தனது பக்கம் கொண்டு வருவது அல்லது குறைந்தபட்சம் அவர் முற்றிலும் ரஷ்யாவிற்கு எதிராக மாறுவதைத் தடுப்பதே ரஷ்யாவின் முன்னுரிமை என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ரஷ்யா பல தசாப்தங்களாக வெனிசுவேலாவில் பெருமளவில் முதலீடு செய்துள்ளது. "கடந்த ஓராண்டில் ரஷ்யா இதில் ஓரளவுக்கு வெற்றி பெற்றுள்ளது, அந்த வெற்றியைத் தக்கவைக்க விரும்புகிறது, ஏனெனில் யுக்ரேன் அதன் முதன்மையான முன்னுரிமை." லுகியானோவ் இந்த உணர்வையே வெளிப்படுத்துகிறார். "வெனிசுவேலா போன்ற இரண்டாம் நிலை விவகாரங்களுக்காக அமெரிக்கா போன்ற "மிக முக்கியமான தரப்புடன்" ரஷ்யா தனது விரிவான உத்தியில் சமரசம் செய்து கொள்ளாது." என்றார். "புதின் டிரம்புடன் விவாதிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் யுக்ரேன்," என்று அவர் கொமர்சன்ட் இதழிடம் கூறினார். வெனிசுவேலாவின் புதிய இடைக்காலத் தலைவர் டெல்சி ரோட்ரிக்ஸின் நியமனத்தை ரஷ்ய வெளியுறவு அமைச்சகம், ஜனவரி 6-ஆம் தேதி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் வரவேற்றது. வெளிப்புற அழுத்தங்களுக்கு மத்தியில் நிலைத்தன்மையை நோக்கிய ஒரு படியாக இது விவரிக்கப்பட்டது. அமெரிக்காவை நேரடியாகக் குறிப்பிடாமல், "எந்தவொரு அழிவுகரமான வெளிப்புற தலையீடும் இன்றி தனது சொந்த எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்" உரிமை வெனிசுவேலாவிற்கு உறுதி செய்யப்பட வேண்டும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கூறியது. ஆழ்கடலில் பெரிய பந்தயங்கள் பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,அமெரிக்கக் கடலோரக் காவல்படை 'மாலினேரா' என்று பெயரிடப்பட்ட கப்பலை பல வாரங்களாகக் கண்காணித்து வந்தது ரஷ்யக் கொடி ஏற்றப்பட்ட எண்ணெய் கப்பலான மலினேராவை அமெரிக்கா கைப்பற்றியதற்கும் ரஷ்யாவின் பதில் ஒப்பீட்டளவில் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தது. ரஷ்ய கப்பல் ஊழியர்களைப் பாதுகாப்பாகத் திரும்ப ஒப்படைக்குமாறு ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கோரியது. இதற்கு டிரம்ப் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அமைச்சகம் கூறுகிறது. சர்வதேச கடல்சார் சட்ட மீறல்கள் என்ற பின்னணியிலேயே ரஷ்யா தனது முதன்மையான விமர்சனமாக முன்வைத்தது. சூழலைக் கருத்தில் கொண்டால், அதாவது நடுக்கடலில் ரஷ்யப் பதிவும் உரிமையும் கொண்ட கப்பலில் அமெரிக்கப் படைகள் ஏறியது என்பது மிகப்பெரிய விஷயம். ஆனால் ரஷ்யாவின் எதிர்வினை இன்னும் கடுமையாக இருந்திருக்கலாம். இப்பகுதியில் ரஷ்ய கடற்படைக் கப்பல்கள் இருப்பதாகத் தகவல்கள் வந்தபோதிலும், ரஷ்யா அந்தக் கப்பலைத் திரும்பக் கோரவோ அல்லது அதை மீட்க பலத்தைப் பயன்படுத்துவோம் என்றோ குறிப்பிடவில்லை. அமெரிக்கா அல்லது பிற நாடுகளின் கப்பல்களுக்கு எதிராகப் பழிவாங்கும் நடவடிக்கையையும் ரஷ்யா அறிவிக்கவில்லை. அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக ரஷ்யா மென்மையான போக்கைக் கடைபிடிப்பதாக கடும்போக்காளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்ஸி ஜுராவ்லியோவ் இதற்கு ராணுவ ரீதியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று கோரியதோடு, பதிலடியாக "அமெரிக்கக் கடலோரக் காவல்படையின் இரண்டு படகுகளைத் நீர்மூழ்கி குண்டுகளால் ரஷ்யா மூழ்கடிக்க வேண்டும்." என்றார். ரஷ்ய ஆதரவு டெலிகிராம் வலைப்பதிவான விஷனரி, யாருக்கும் சொந்தமில்லாத சர்வதேச கடல் பகுதியில் கப்பலைக் கைப்பற்றுவது "ரஷ்யா மீதான முழுமையான தாக்குதலாகக்" கருதப்படலாம் என்று தனது வாசகர்களுக்கு நினைவுபடுத்தியது. "கடல் வழித்தடங்களை ராணுவ ரீதியாகத் தடுப்பது என்பது போர் பிரகடனம் செய்வதற்கு தெளிவான ஒரு காரணம்," என்றும் அந்தப் பதிவில் கூறப்பட்டிருந்தது. ஆர்க்டிக் லட்சியங்கள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஆர்க்டிக் பிராந்தியத்தில் ராணுவ மற்றும் பொருளாதார உள்கட்டமைப்புகளில் ரஷ்யா பெருமளவில் முதலீடு செய்துள்ளது. ஜனவரி 2025-இல், கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், கிரீன்லாந்தில் நடக்கும் முன்னேற்றங்களை ரஷ்யா "தீவிரமாக கவனித்து வருவதாகக்" கூறினார். ஆனால் டென்மார்க்கிற்குச் சொந்தமான இந்த ஆர்க்டிக் பிராந்தியத்தின் மீதான அமெரிக்காவின் உரிமை கோருதலை அமெரிக்காவுக்கும் டென்மார்க்குக்கும் இடையிலான இருதரப்பு விஷயம் என்று அவர் விவரித்தார். ஜனவரி 7-ஆம் தேதி இப்பகுதியைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அமெரிக்கா உத்தேசித்துள்ளதாக டிரம்ப் அறிவித்தார். ஆனால் இது குறித்து ரஷ்யாவிடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான பதில் ஏதுமில்லை. இதற்கிடையில், கிரீன்லாந்தைக் கட்டுப்படுத்துவதில் டிரம்பின் புதிய பிடிவாதம் குறித்து ரஷ்ய ஆதரவுக் குரல்கள் மகிழ்ச்சியடைந்தன. ஐரோப்பாவின் பலவீனத்திற்கு இது ஒரு அடையாளம் என்றும், யுக்ரேனில் ரஷ்யாவின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் மற்றொரு வாதமாகவும் அவர்கள் இதை முன்வைத்தனர். புதினின் சிறப்புத் தூதர் கிரில் டிமிட்ரிவ் எக்ஸ் தளத்தில், "கிரீன்லாந்து கிடைப்பது கிட்டத்தட்ட உறுதியாகத் தெரிகிறது. ஐரோப்பிய ஒன்றியம் தனது அடிமைத்தனத்தையே தொடர்ந்து செய்யும்: அதாவது 'சூழ்நிலையைக் கண்காணிப்பது' மற்றும் இரட்டை நிலைப்பாடுகளுக்கு உதாரணமாக இருப்பது." "அடுத்தது கனடாவா?" என்றும் அவர் கிண்டலாகக் குறிப்பிட்டிருந்தார். ஜனவரி 6-ஆம் தேதி சிஎன்என் நேர்காணலில் டிரம்பின் மூத்த உதவியாளர் ஸ்டீபன் மில்லர் குறிப்பிட்டது போல, "வலிமை உடையவனுக்கே அதிகாரம்" என்ற அரசியலை நோக்கி உலகம் மாறுவதை ரஷ்யா அங்கீகரிப்பது போலத் தோன்றினாலும், இதில் கிரீன்லாந்து விவகாரத்தில் ரஷ்யா தோல்வியடையும் அபாயமும் உள்ளது. ஆர்க்டிக் பிராந்தியத்தில் ராணுவ மற்றும் பொருளாதார உள்கட்டமைப்புகளில் ரஷ்யா பெருமளவில் முதலீடு செய்துள்ளது. அதிபர் புதின் இங்கே "ரஷ்யாவின் உலகளாவிய தலைமைப் பொறுப்பை வலுப்படுத்துவதாக" உறுதியளித்துள்ளார். 2023-இல் வெளியிடப்பட்ட ரஷ்யாவின் புதிய வெளியுறவுக் கொள்கைக் கருத்தாக்கத்தில், ஆர்க்டிக் பகுதி மாஸ்கோவின் வெளியுறவுக் கொள்கை முன்னுரிமைகளில் இரண்டாவது இடத்தில் இருந்தது. இதற்கு மேலே, யுக்ரேன் உள்ளிட்ட முன்னாள் சோவியத் நாடுகளுடனான உறவுகள் மட்டுமே முன்னுரிமையாக வைக்கப்பட்டிருந்தன. ஜனவரி 12-ஆம் தேதி ரஷ்யாவில் வழக்கமான பணிகள் மீண்டும் தொடங்கும்போது, விடுமுறை நாட்களில் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் கொந்தளிப்புகள் குறித்து அதிபர் புதின் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போதைக்கு, டிரம்ப் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை நகர்வுகள் மாஸ்கோவுடனான பேச்சுவார்த்தைக்கான கதவுகளை மூடுவது போல் தெரியவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2kv216dy2o
  3. அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் இலங்கை சுங்கத்துறைக்கு உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்கள் வழங்கல் 12 Jan, 2026 | 01:19 PM அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் இலங்கை சுங்க திணைக்களத்திற்கு, 02 உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்களை வழங்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை துறைமுகத்தில் திங்கட்கிழமை (12) காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது. அதன்போது, அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த், இலங்கை சுங்க இயக்குநர் ஜெனரல் சீவலி அருகோடவிடம் ஸ்கேனர்கள் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார். நிகழ்வில், சுங்க இயக்குநர் ஜெனரல் பால் எட்வர்ட்ஸ், அவுஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தில் பயன்படுத்துவதற்காக அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் இலங்கை சுங்கத்திடம் குறித்த 02 ஸ்கேனர்களும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235822
  4. இலங்கை வந்தார் சீன வெளியுறவு அமைச்சர் வோங் யீ : நிதி உதவி, முதலீடுகள் குறித்து எதிர்பார்ப்பு 12 Jan, 2026 | 09:49 AM சீன வெளியுறவு அமைச்சர் வோங் யீ தனது ஆபிரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு, திங்கட்கிழமை (12) இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த 36 ஆண்டுகளாக சீன வெளியுறவு அமைச்சர்கள் ஆண்டின் முதல் வெளிநாட்டுப் பயணத்தை ஆபிரிக்க நாடுகளுக்கே மேற்கொண்டு வரும் மரபைத் தொடர்ந்து, எத்தியோப்பியா, சோமாலியா, தான்சானியா மற்றும் லெசோதோ ஆகிய நாடுகளுக்கான விஜயங்களை நிறைவு செய்த பின்னரே அவர் கொழும்புக்கு தனது விஜயத்தை மேற்கொண்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு வோங் யீ இலங்கைக்கு மேற்கொள்ளும் மிக முக்கியமான விஜயமாக இது கருதப்படுகிறது. குறிப்பாக, ‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக சீனாவால் விசேட நிதி உதவித் திட்டம் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், சீன ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் நீண்டகால நெருக்கடியாக தொடர்கின்றன. புதிய முதலீட்டுத் திட்டங்களை அறிவிப்பதில் சீனா காட்டி வரும் பின்னடிப்புகளுக்குக் காரணமாக இந்த ஆய்வுக் கப்பல் விவகாரம் பார்க்கப்படுகிறது. வோங் யீயின் விஜயத்தின் போது, இந்த விவகாரம் தொடர்பில் எத்தகைய இணக்கப்பாடுகள் எட்டப்படும் என்பது அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியாக பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அண்மையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவினர் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைமையகத்திற்கு விஜயம் செய்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தனர். இந்தப் பின்னணியில், சீனாவின் 15 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கைக்கான உதவிகளை உறுதிப்படுத்துவதே வோங் யீயின் விஜயத்தின் பிரதான நோக்கமாகக் கருதப்படுகிறது. அந்தவகையில், சீன வெளியுறவு அமைச்சர் வோங் யீ, இலங்கைக்கு ஒரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு 12 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். அவருடன் சீன வெளியுறவு அமைச்சின் 17 சிரேஷ்ட அதிகாரிகள் ஒரே விமானத்தில் குழுவாக வந்தனர். அவர்கள் இன்று அதிகாலை 01.05 மணிக்கு சீன நிறுவனமான பெய்ஜிங் ஏர்லைன்ஸின் சிறப்பு விமானத்தில் தென்னாபிரிக்காவின் டேர்பனில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங், தூதரகத்தின் உயர் அதிகாரிகள் குழுவுடன் மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சின் கிழக்கு ஆசியா மற்றும் ஓசியானியா பிரிவின் பணிப்பாளர் ஜெனரல் சாவித்ரி பனபோக்கே ஆகியோர் விமான நிலையத்தில் அவர்களை வரவேற்றனர். சீன வெளியுறவு அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் இன்று திங்கட்கிழமை (12) மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சீனாவின் பெய்ஜிங் நோக்கிப் புறப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235805
  5. 'வெனிசுவேலா அதிபராக' தன்னைத்தானே அறிவித்த டிரம்ப் பட மூலாதாரம்,ANDREW CABALLERO-REYNOLDS/AFP via Getty Images அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னைத்தானே 'வெனிசுவேலாவின் தற்காலிக அதிபர்' என்று அழைத்துக்கொண்டுள்ளார். டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் தனது புகைப்படத்தைப் பதிவிட்டு, அதன் அருகில் "வெனிசுலாவின் தற்காலிக அதிபர்" என்று பதிவிட்டிருந்தார். பட மூலாதாரம்,@realDonaldTrump ஜனவரி 3-ஆம் தேதி, அமெரிக்கா வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸையும் சிறைபிடித்தது. மதுரோ ஆயுத மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளின் பேரில் அமெரிக்காவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதற்கிடையில், வெனிசுவேலாவில் முன்னாள் துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/live/clyzgnr178jt?post=asset%3Aabdfa51e-8570-4461-baee-a926c4fe51d1#asset:abdfa51e-8570-4461-baee-a926c4fe51d1
  6. இரானில் போராட்டம் தீவிரம்: அரசு நடவடிக்கையில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக தகவல் பட மூலாதாரம்,MAHSA / Middle East Images / AFP via Getty Images கட்டுரை தகவல் ஷயன் சர்தாரிசாதே, ரிச்சர்ட் இர்வின்-பிரௌன் பிபிசி வெரிஃபை 12 ஜனவரி 2026, 03:15 GMT புதுப்பிக்கப்பட்டது 54 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்கா தாக்கினால் பதிலடி கொடுப்போம் என்று இரான் எச்சரித்துள்ளது. இதற்கிடையில், தீவிரமடைந்து வரும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பிபிசி வட்டாரங்களும் ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர். "இங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது," என்று டெஹ்ரானில் இருந்து ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கூறினார். "எங்கள் நண்பர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் துப்பாக்கி குண்டுகளால் சுட்டனர். இது ஒரு போர்க்களம் போல இருக்கிறது, தெருக்கள் முழுவதும் இரத்தம் நிரம்பியுள்ளது. அவர்கள் சடலங்களை லாரிகளில் ஏற்றிச் செல்கிறார்கள்." என்றார் அவர். டெஹ்ரானுக்கு அருகிலுள்ள ஒரு சவக்கிடங்கு வீடியோவில் சுமார் 180 சடலப் பைகளை பிபிசி எண்ணியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் செய்தி நிறுவனம், இரான் முழுவதும் 495 போராட்டக்காரர்கள் மற்றும் 48 பாதுகாப்புப் படையினரின் மரணங்களை உறுதிப்படுத்தியுள்ளதாகக் கூறுகிறது. கடந்த இரண்டு வாரங்களாக நீடிக்கும் போராட்டங்கள் எதிரொலியாக மேலும் 10,600 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதற்காக இரான் மீது தாக்குதல் நடத்தப் போவதாக அமெரிக்கா அச்சுறுத்தியுள்ளது. இரான் "சுதந்திரத்தை நோக்கிப் பார்க்கிறது" என்பதால், அமெரிக்கா "உதவத் தயாராக உள்ளது" என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை கூறினார். அமெரிக்கா என்ன நடவடிக்கைகளைக் கருத்தில் கொள்கிறது என்பது குறித்து டிரம்ப் விரிவாகக் கூறவில்லை. இரான் மீது இராணுவத் தாக்குதலுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவருக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்று பிபிசியின் அமெரிக்க செய்திக் கூட்டாளியான சிபிஎஸ்-ஸிடம் ஒரு அதிகாரி தெரிவித்தார். அரசாங்கத்திற்கு எதிரான இணையவழி ஆதாரங்களை அதிகரிப்பது, இரானிய இராணுவத்திற்கு எதிராக இணைய ஆயுதங்களைப் பயன்படுத்துவது அல்லது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிப்பது போன்ற பிற அணுகுமுறைகளும் இதில் அடங்கும் என்று அதிகாரிகள் வால் ஸ்ட்ரீட் ஜர்னலிடம் தெரிவித்தனர். அமெரிக்கா தாக்கினால், இஸ்ரேல் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவ மற்றும் கப்பல் போக்குவரத்து மையங்கள் இரண்டும் சட்டபூர்வமான இலக்குகளாக மாறும் என்று இரானிய நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரித்தார். பட மூலாதாரம்,IRIB/Handout/Anadolu via Getty Images அதிகரித்து வரும் பணவீக்கம் எதிரொலியாக தொடங்கிய இந்தப் போராட்டங்கள், இப்போது இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி-யின் மதகுருமார்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரும் அளவுக்கு வளர்ந்து நிற்கின்றன. "போராட்டத்தில் ஈடுபடும் எவரும் கடவுளின் எதிரி என்று கருதப்படுவார்கள். இது மரண தண்டனைக்குரிய குற்றம்" என்று இரானின் அட்டர்னி ஜெனரல் கூறினார். அதே நேரத்தில், டிரம்பை "மகிழ்விக்க" முயலும் "ஒரு கும்பல் குண்டர்கள்" என்று ஆர்ப்பாட்டக்காரர்களை காமனெயி வர்ணித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான இரானிய தேசியப் போரில் கொல்லப்பட்ட "தியாகிகளுக்காக" மூன்று நாள் துக்கம் அனுசரிப்பதாக இரான் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. சமீபத்திய நாட்களில் இறந்த அல்லது காயமடைந்த போராட்டக்காரர்களால் பல மருத்துவமனைகளின் ஊழியர்கள் திக்குமுக்காடிப் போயுள்ளதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு ராஷ்ட் நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு 70 உடல்கள் கொண்டுவரப்பட்டதை பிபிசி பெர்சியன் சேவை உறுதிப்படுத்தியுள்ளது. அதே சமயம், டெஹ்ரானில் உள்ள ஒரு மருத்துவமனையின் சுகாதாரப் பணியாளர் ஒருவர் பிபிசியிடம், "சுமார் 38 பேர் இறந்தனர். அவர்களில் பலர் அவசர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளுக்கு வந்த உடனேயே உயிரிழந்தனர். இளைஞர்களின் தலைகளிலும், இதயங்களிலும் நேரடியாகச் சுடப்பட்டிருந்தது. பலர் மருத்துவமனைக்கே வந்து சேரவில்லை," என்று கூறினார். பிபிசி மற்றும் பெரும்பாலான பிற சர்வதேச செய்தி நிறுவனங்களால் இரானுக்குள் இருந்து செய்திகளை வெளியிட முடியவில்லை. இரானிய அரசாங்கம் வியாழக்கிழமை முதல் இணைய முடக்கத்தை அமல்படுத்தியுள்ளதால், தகவல்களைப் பெறுவதும் சரிபார்ப்பதும் கடினமாக உள்ளது. பட மூலாதாரம்,Khoshiran / Middle East Images / AFP via Getty Images சில காட்சிகள் வெளியாகியுள்ளன, அதில் டெஹ்ரான் மாகாணத்தின் தடயவியல் கண்டறிதல் மற்றும் ஆய்வக மையத்தில் - அதாவது கஹ்ரிசாக்கில் உள்ள ஒரு சவக்கிடங்கில் வரிசையாக வைக்கப்பட்டிருந்த சடலப் பைகளைக் காட்டும் காணொளியும் அடங்கும். அந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு காணொளியில், சுமார் 180 போர்வையால் மூடப்பட்ட அல்லது சுற்றப்பட்ட உடல்கள் காணப்படுகின்றன, அவற்றில் பெரும்பாலானவை திறந்தவெளியில் கிடக்கின்றன. தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடுவது போல் தோன்றும் மக்களின் கூக்குரல்களும் அழுகுரல்களும் கேட்கின்றன. பிபிசி வெரிஃபை மூலம் சமீபத்தியவை என உறுதிப்படுத்தப்பட்ட பல காணொளிகள், இரானின் இரண்டாவது பெரிய நகரமான மஷ்ஹத்தில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதல்களைக் காட்டுகின்றன. முகமூடி அணிந்த போராட்டக்காரர்கள் குப்பைத் தொட்டிகள் மற்றும் தீக்குவியல்களுக்குப் பின்னால் தஞ்சம் அடைவதைக் காணலாம், தொலைவில் பாதுகாப்புப் படையினர் வரிசையாக நிற்கின்றனர். ஒரு பேருந்து போல் தோன்றும் வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது. பல துப்பாக்கிச் சூடு சத்தங்களும், பாத்திரங்களைத் தட்டும் சத்தம் போன்ற ஒலிகளும் கேட்கின்றன. அருகிலுள்ள ஒரு நடை மேம்பாலத்தில் நிற்கும் ஒருவர், பல திசைகளில் பலமுறை துப்பாக்கியால் சுடுவதைப் போல் தெரிகிறது, அப்போது ஓரிருவர் ஒரு வேலிக்குப் பின்னால் தஞ்சம் அடைகின்றனர். டெஹ்ரானில், சனிக்கிழமை இரவு எடுக்கப்பட்ட ஒரு உறுதிப்படுத்தப்பட்ட காணொளியில், கிஷா மாவட்டத்தில் போராட்டக்காரர்கள் தெருக்களைக் கைப்பற்றுவதும், புனாக் சதுக்கத்தில் பாத்திரங்களைத் தட்டும் சத்தமும், ஹெராவி மாவட்டத்தில் ஒரு கூட்டம் பேரணியாகச் சென்று மதகுருமார்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முழக்கமிடுவதும் காணப்படுகிறது. அமெரிக்கா, இஸ்ரேலை சாடும் இரான் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் (கோப்புப் படம்) இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் இந்த அமைதியின்மைக்கு அமெரிக்காவும், இஸ்ரேலுமே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். "அவர்கள் நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் சில நபர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளனர், வெளிநாட்டிலிருந்து பயங்கரவாதிகளை கொண்டு வந்துள்ளனர், மசூதிகளுக்குத் தீ வைத்துள்ளனர், ராஷ்டில் உள்ள சந்தைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களைத் தாக்கி, சந்தையை எரித்துள்ளனர்," என்று எந்த ஆதாரத்தையும் வெளியிடாமல் அவர் கூறினார். இருப்பினும், பிபிசி பெர்சியன் மற்றும் பிபிசி வெரிஃபை மூலம் உறுதி செய்யப்பட்ட காட்சிகள், இரானின் பாதுகாப்பு அதிகாரிகள் பல பகுதிகளில் போராட்டக்காரர்களின் கூட்டங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை உறுதிப்படுத்துகின்றன. அவற்றில் டெஹ்ரான், மேற்கு கெர்மன்ஷா மாகாணம் மற்றும் தெற்கு புஷேர் பகுதி ஆகியவை அடங்கும். கடந்த வார இறுதியில் மேற்கு நகரமான இலாமின் மையத்தில் படமாக்கப்பட்ட பல உறுதிப்படுத்தப்பட்ட காணொளிகள், போராட்டக்காரர்கள் பேரணி நடத்திக் கொண்டிருந்த இமாம் காமனெயி மருத்துவமனையை நோக்கி பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதையும் காட்டுகின்றன. இரானில் இணைய சேவை பெரும்பாலும் உள்நாட்டு இன்ட்ராநெட்டுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, வெளி உலகத்துடனான இணைப்புகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் தற்போதைய போராட்டங்களின் போது, அதிகாரிகள் முதல் முறையாக அதையும் கடுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளனர். 2022ஆம் ஆண்டில் நடந்த "பெண், வாழ்க்கை, சுதந்திரம்" எழுச்சியின் போது இருந்ததை விட இந்த இணைய முடக்கம் மிகவும் கடுமையானது என்று ஒரு நிபுணர் பிபிசி பெர்சியன் சேவையிடம் தெரிவித்தார். இணைய ஆராய்ச்சியாளரான அலிரேசா மனாஃபி, வெளி உலகத்துடன் இணைவதற்கான ஒரே சாத்தியமான வழி ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வழியாகத்தான் என்று கூறினார், ஆனால் இதுபோன்ற இணைப்புகளை அரசாங்கத்தால் கண்டறிய முடியும் என்பதால், பயனர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் எச்சரித்தார். 'விரைவில் உங்களுடன் இருப்பேன்' - ஷா மன்னரின் மகன் பட மூலாதாரம்,Norvik Alaverdian/NurPhoto via Getty Images படக்குறிப்பு,இரானிய அரசுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற போராட்டத்தில் ரெசா பஹ்லவியின் புகைப்படம். இரானில் போராட்டக்காரர்களால் நாடு திரும்ப வேண்டும் என்று விரும்பப்படுபவரும், அமெரிக்காவில் வசிப்பவருமான இரானின் கடைசி ஷா மன்னரின் நாடு கடத்தப்பட்ட மகனான ரெசா பஹ்லவி, ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகப் பதிவு ஒன்றில், டிரம்ப் "உங்கள் விவரிக்க முடியாத வீரத்தை கவனமாகக் கவனித்துள்ளார்" என்று ஆர்ப்பாட்டக்காரர்களிடம் தெரிவித்தார். "உலகம் முழுவதும் உள்ள இரான் மக்கள் உங்கள் குரலை பெருமையுடன் முழங்குகிறார்கள்," என்று குறிப்பிட்டுள்ள அவர், "நான் விரைவில் உங்கள் பக்கம் இருப்பேன் என்பதை நான் அறிவேன்" என்று தெரிவித்துள்ளார். இஸ்லாமியக் குடியரசு "கூலிப்படையினரின் கடுமையான பற்றாக்குறையை" எதிர்கொள்வதாகவும், "பல ஆயுத மற்றும் பாதுகாப்புப் படைகள் தங்கள் பணியிடங்களை விட்டு வெளியேறியுள்ளன அல்லது மக்களை அடக்குவதற்கான உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிய மறுத்துவிட்டன" என்றும் பஹ்லவி கூறியுள்ளார். அவரது இந்த கூற்றுகளை பிபிசியால் சரிபார்க்க முடியவில்லை. ஞாயிற்றுக்கிழமை மாலை போராட்டங்களைத் தொடருமாறு அவர் மக்களை ஊக்குவித்தார், ஆனால் குழுக்களாக அல்லது கூட்டத்துடன் இருக்குமாறும், "உங்கள் உயிரைப் பணயம் வைக்க வேண்டாம்" என்றும் கேட்டுக்கொண்டார். பிரிட்டனில், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் லண்டனில் உள்ள இரானிய தூதரகத்தின் பால்கனியில் இருந்து போராட்டக்காரர்கள் இரானியக் கொடியை அகற்றுவது போன்ற காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகளில் காணப்படுகின்றன. இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, டெஹ்ரானில் உள்ள பிரிட்டன் தூதரை இரான் வரவழைத்துள்ளதாக இரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கூடுதல் தகவல்கள்: சௌரூஷ் பக்ஜாத் மற்றும் ரோஜா அசாடி - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c17zrrl1jzwo
  7. சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்தார் விமல் Jan 12, 2026 - 10:28 AM முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச இன்று (12) முதல் தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக அவர் இன்று காலை முதல் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். புதிய கல்வி சீர்த்திருத்தத்தை கைவிட வேண்டும் என்றும், கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmkaoztso03soo29npx4xd6w4
  8. நுரைச்சோலையின் மின் பிறப்பாக்கி ஒன்று வழமைக்கு Jan 12, 2026 - 07:55 AM பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக செயலிழக்கச் செய்யப்பட்டிருந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கி ஒன்று மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அந்த மின் பிறப்பாக்கி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் இதுவரையில் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்படவில்லை என்பதுடன், எதிர்வரும் சில தினங்களுக்குள் அதனை தேசிய மின் கட்டமைப்பில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திலுள்ள 3 மின் பிறப்பாக்கிகள் மூலம் தேசிய மின் கட்டமைப்புக்கு 900 மெகாவோட் மின்சாரம் விநியோகிக்கப்படும் நிலையில், தற்போது ஒரு மின் பிறப்பாக்கியின் ஊடாக மாத்திரமே தேசிய மின் கட்டமைப்புக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. இதேவேளை, மற்றுமொரு மின் பிறப்பாக்கி இன்னும் செயலிழந்த நிலையிலேயே உள்ளதோடு, அதனை மீண்டும் வழமைக்குக் கொண்டுவருவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. https://adaderanatamil.lk/news/cmkajj25o03sio29nahjma7hd
  9. ஈரான் போராட்டம் தீவிரம்: 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல் Published By: Digital Desk 3 12 Jan, 2026 | 10:55 AM ஈரானில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என மனி உரிமைக்குழு ஒன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. ஈரான் நாட்டில் அதிகரித்துள்ள பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி அதிகரிப்பு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் விரக்தி அடைந்துள்ள மக்கள் அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி ஆரம்கபித்த மக்களின் போராட்டம், ஈரானின் 31 மாகாணங்களில் 100 நகரங்களில் 15 நாட்களாக நீடித்து வருகிறது. போராட்டக்காரர்களை அடக்க பாதுகாப்பு படையினரை அரசு இறக்கி விட்டு உள்ளது. இதன்படி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். வன்முறையை தடுக்கும் நோக்கில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இணையதள சேவையை அரசு முடக்கி வைத்து உள்ளது. சில அரசு ஊடகங்கள் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், ஈரானில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு ஒன்று அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது. அவர்களில் 8 குழந்தைகளும் அடங்குவார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 2,600 பேர் அரசால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த சூழலில், ஈரானின் அட்டார்னி ஜெனரல் முகமது மோவாஹிதி ஆசாத் அரசு தொலைக்காட்சியில் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள், கலகக்காரர்களுக்கு உதவுபவர்கள் அல்லது வன்முறையில் பொருட்களை சூறையாடுபவர்கள் மற்றும் பாதுகாப்பின்மையை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான, விரைவான, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அந்த குற்றவாளிகள் அனைவருக்கும் ஒரேவித தண்டனைதான் கிடைக்கும். அவர்களுக்கு எந்தவித கருணையும் காட்ட கூடாது என வழக்கறிஞர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளார். ஈரானின் பதற்ற நிலைக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வருத்தம் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில்,வத்திக்கான நகரில் போப் லியோ இறை வணக்க நிகழ்ச்சிக்கு பின்னர் கூடியிருந்த கூட்டத்தினரின் முன் பேசும்போது, ஈரான் மற்றும் சிரியா போன்ற மத்திய கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியான பதற்ற நிலையால், மக்கள் பலர் பலியாகி வருகின்றனர். அவர்களுடன் என்னுடைய எண்ணங்கள் உள்ளன. ஒட்டுமொத்த சமூகத்தின் நலனுக்காக பேச்சுவார்த்தை நடைபெறும் என நம்புகிறேன். அதற்காக வேண்டி கொள்கிறேன் என்றார். இதேபோன்று, பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் கூறும்போது, வன்முறையை தவிர்க்க வேண்டும் என ஈரானிய அதிகாரிகளை வலியுறுத்தினார். அயர்லாந்து, இஸ்ரேல் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் ஈரான் சூழல் பற்றி கவலை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/235808
  10. வாகன உரிமை மாற்றத்திற்கும் TIN இலக்கம் கட்டாயம் Jan 12, 2026 - 07:29 AM வாகனங்களின் உரிமையை மாற்றும் போது, வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் எனப்படும் "TIN இலக்கம்" தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கான சட்ட நடைமுறைகள் கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க குறிப்பிட்டுள்ளார். இதுவரை காலமும் புதிய வாகனங்களை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்வதற்கு மாத்திரமே TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த ஆண்டு முதல் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையை மாற்றும் போதும் அது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்கள், கை உழவு இயந்திரங்கள், டிரக்டர்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனப் பதிவு அல்லது உரிமை மாற்றத்தின் போது, புதிய உரிமையாளரின் தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் TIN இலக்கம் ஆகியவற்றை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தரவு அமைப்பில் உள்ளீடு செய்தல் வேண்டும். இந்தச் சட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அமுல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், பல சந்தர்ப்பங்களில் அது ஒத்திவைக்கப்பட்டதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmkailmsc03sho29nug9qsbu1
  11. இலங்கைத் தமிழர்களுக்காக மோடிக்கு கடிதம் அனுப்பிய ஸ்டாலின் Jan 11, 2026 - 07:16 PM இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால் இலங்கைத் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை களைந்திட வேண்டுமென்றும், தமிழ் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையிலான ஒரு அரசியலமைப்புச் செயல்முறையினைக் கொண்டுவருவதற்கு, இந்திய அரசு இலங்கை அதிகாரிகளுடன் உயர்மட்ட அளவில் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் கோரி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், இலங்கையில் உள்ள தமிழ்ச் சமூகத்தின் நலன் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான ஆழ்ந்த கவலைக்குரிய ஒரு விஷயம் குறித்து இந்தியப் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவருவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆழமான வரலாற்று, கலாச்சார மற்றும் உணர்வுப் பூர்வமான பிணைப்புகளின் காரணமாக, இலங்கையில் உள்ள தமிழர்களின் உரிமைகளையும், எண்ணங்களையும் நிலைநிறுத்துவதில் தமிழ்நாடு முன்னணியில் இருந்து வருகிறது என்றும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில், இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள மரியாதைக்குரிய தமிழ்த் தலைவர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், இலங்கையில் முன்மொழியப்பட்ட புதிய அரசியலமைப்பு தொடர்பான பிரச்சினை குறித்து இந்தியப் பிரதமரின் மேலான கவனத்திற்குக் கொண்டுவருவது தமது கடமை என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால் இலங்கைத் தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை எடுத்துரைக்கும் விரிவான கோரிக்கைகளை தாம் பெற்றுள்ளதாக முதலமைச்சர் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தமிழர்கள் 77 ஆண்டுகளுக்கும் மேலாக, திட்டமிட்ட பாகுபாடு, வன்முறை மற்றும் அவர்களின் உண்மையான உரிமைகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளைச் சகித்து வந்துள்ளனர் என்றும், பலர், இதனை தங்கள் சமூகத்திற்கு எதிரான இனப்படுகொலை என்று விவரிக்கும் ஒரு நிலைக்கு வழிவகுத்துள்ளது என்றும் முதலமைச்சர் வருத்தத்தோடு சுட்டிக்காட்டியுள்ளார். சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கையின் அரசியலமைப்புகள் (1947, 1972, மற்றும் 1978 ஆம் ஆண்டுகளின் அரசியலமைப்புகள்) அனைத்தும் ஒரு ஒற்றையாட்சி அரசுக் கட்டமைப்பில் வேரூன்றியிருந்தன என்றும், இது திட்டமிட்ட இன வன்முறை, கட்டமைப்பு ரீதியான ஒடுக்குமுறை மற்றும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பதற்கு வழிவகுத்தது என்றும் தெரிவித்துள்ள அவர், உள்நாட்டுப் போர் முடிவடைந்த கடந்த 16 ஆண்டுகளாக, இந்த ஒற்றையாட்சிக் கட்டமைப்பு, பாரம்பரியமாக தமிழர்கள் வாழ்ந்து வந்த பகுதிகளில் மக்கள் தொகை மாற்றங்கள், நில அபகரிப்புகள் மற்றும் தமிழ் அடையாளத்தின் சிதைவு ஆகியவற்றிற்கு தொடர்ந்து வழிவகுத்து வருவதாக வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான, பாராளுமன்றத்தில் முழுப்பெரும்பான்மையைக் கொண்ட தற்போதைய இலங்கை அரசாங்கம், இனப்பிரச்சினைகளைத் தீர்க்கும் போர்வையில் ஒரு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தும் முயற்சிகளைத் துரிதப்படுத்தி வருகிறது என்று தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த முன்மொழியப்பட்ட கட்டமைப்பு மீண்டும் ஒரு ஒற்றையாட்சி மாதிரியை வலுப்படுத்துவதாகத் தெரிகிறது என்றும், இது அரசியல் சுயாட்சிக்கான தமிழர்களின் நியாயமான எண்ணங்களைப் புறக்கணித்து, அதன்மூலம் அவர்களை மேலும் ஓரங்கட்டி, அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில், இந்திய அரசால் பூட்டானில் ஏற்பாடு செய்யப்பட்ட 1985 அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போது, தமிழ் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட திம்பு கோட்பாடுகளில் குறிப்பிடப்பட்ட கோட்பாடுகளையே, தற்போது பெறப்பட்டுள்ள கோரிக்கைகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது * இலங்கைத் தமிழர்களுக்கான ஒரு தனித்துவமான தேசத்தை அங்கீகரித்தல் (தமிழர் தேசியம்); * வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகமாக ஏற்றுக்கொள்வது (தமிழர் தாயகம்); * தமிழ் தேசத்திற்கான தன்னாட்சி உரிமையை உறுதிப்படுத்துதல் (தமிழர் தன்னாட்சி உரிமை); மற்றும் * மலையகத் தமிழர்களுக்கான முழு குடியுரிமை உரிமைகள் உட்பட, அனைத்து குடிமக்களுக்கும் சமத்துவத்தையும், பாகுபாடின்மையையும் உறுதிசெய்யும் ஒரு கூட்டாட்சி ஆட்சி முறையை நிறுவுதல்; போன்றவற்றையே இந்தக் கோட்பாடுகள் வலியுறுத்துகின்றன என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார். இந்தக் கூறுகளை உள்ளடக்காமல் கொண்டுவரப்படும் எந்தவொரு புதிய அரசியலமைப்பும், அநீதி மற்றும் நிலையற்ற தன்மை தொடர வழிவகுக்கும் என்றும், இது மீண்டும் மோதல்களுக்கும், மனிதாபிமான நெருக்கடிகளுக்கும் வழிவகுக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், 1987 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தம் உட்பட, வரலாற்று ரீதியாக இலங்கையுடன் கொண்டுள்ள நட்புறவின் காரணமாக இலங்கையில் அமைதி மற்றும் நீதிக்காக நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் செயல்படவேண்டிய தார்மீகக் கடமையை இந்தியா கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்களின் அவல நிலை, தமிழ்நாட்டில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும், இலட்சக்கணக்கான மக்கள், அங்குள்ளவர்களைத் தங்கள் உறவினர்களாகக் கருதுகின்றனர் என்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலைமையில் ஏற்படும் எந்தவொரு சரிவும் இருதரப்பு உறவுகளுக்கும், இரு நாடுகளுக்கிடையேயான உறுதிப்பாட்டிற்கும் பெரிய அளவில் தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் கவலையோடு குறிப்பிட்டுள்ளார். இந்தச் சூழ்நிலையில், தமிழ் மக்களின் குறைகளை உண்மையாக நிவர்த்தி செய்யும் ஒரு அரசியலமைப்புச் செயல்முறையினைக் கொண்டுவருவதற்கு, இந்திய அரசாங்கம் இலங்கை அதிகாரிகளுடன் உயர்மட்ட அளவில் தூதரக நடவடிக்கைகள மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ள முதலமைச்சர், குறிப்பாக, மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் செய்யும்; இனச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும்; மற்றும் பன்முகத்தன்மை, சமத்துவக் கோட்பாடுகளை நிலைநிறுத்தும் கூட்டாட்சி முறையை உருவாக்குவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். இத்தகைய அணுகுமுறை, பிராந்திய அமைதிக்கு உத்தரவாதம் அளிக்கும் இந்தியாவின் பங்கை மதிப்பது மட்டுமல்லாமல், கூட்டாட்சி மற்றும் மொழி மற்றும் இனச் சிறுபான்மையினரைப் பாதுகாப்பது குறித்த நமது அரசியலமைப்பு விழுமியங்களுடனும் ஒத்துப்போகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அந்த வகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்தியா முனைப்பான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும், ஒரு நியாயமான மற்றும் நீடித்த தீர்வுக்கு அது பங்களிக்கும் என உறுதியாக தான் நம்புவதாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் தான் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmk9sf6fs03s8o29nyiayk34q
  12. வடக்கு ரயில் மார்க்கத்தின் புனரமைப்பு பணி ஆரம்பம் Jan 11, 2026 - 06:20 PM டித்வா புயலினால் சேதமடைந்த வடக்கு ரயில் பாதையைப் புனரமைக்கும் பணிகள் இன்று (11) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரின் தலைமையில் இப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதியுதவியில் இருந்து, இந்த முதற்கட்டப் புனரமைப்புப் பணிகளுக்காக 5 மில்லியன் அமெரிக்க டொலர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்திற்குச் சொந்தமான ரயில்வே கட்டுமான நிறுவனத்தினால் இப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. வடக்கு ரயில் மார்க்கம் மஹவ முதல் ஓமந்தை வரை, ஓமந்தை முதல் யாழ்ப்பாணம் வரை, மதவாச்சி முதல் மன்னார் வரை என மூன்று கட்டங்களின் கீழ் புனரமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmk9qetq303s6o29n4jq9gfrd
  13. கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்! Published By: Digital Desk 1 12 Jan, 2026 | 11:06 AM தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இன்று திங்கட்கிழமை (12) காலை சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். புதிய கல்வி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பதவி விலகுமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சின் முன் இந்தப் போராட்டம் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235812
  14. சச்சினை விஞ்சி புதிய மைல்கல்லை எட்டிய விராட் கோலி - நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா அபாரம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி 93 ரன்கள் எடுத்தார். 13 நிமிடங்களுக்கு முன்னர் "விராட் தற்போது பேட்டிங் செய்வதைப் பார்ப்பது ஒரு மகிழ்ச்சியான அனுபவம். அவர் விளையாட்டில் தென்படும் அந்த சுதந்திரம், நிதானம் மற்றும் உற்சாகம் போன்றவை அவர் இந்த விளையாட்டை எவ்வளவு ரசித்து விளையாடுகிறார் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது." ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில், விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதையொட்டி முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆர். அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் கோலி குறித்து இவ்வாறு பதிவிட்டிருந்தார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி ஒருநாள் போட்டியில் தொடங்கிய விராட் கோலியின் சிறப்பான பேட்டிங் பயணம், வதோதராவிலும் தொடர்ந்தது. இதன் மூலம் சங்கக்காராவை முந்தி, சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால், நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. வதோதரா ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இந்த இலக்கை எட்டியது. சர்வதேச கிரிக்கெட்டில் 28,000 ரன்கள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி நல்ல ஃபார்மில் உள்ளார். வதோதரா ஒருநாள் போட்டியின் போது விராட் கோலி 25 ரன்களைக் கடந்த போது, சர்வதேச கிரிக்கெட்டில் 28 ஆயிரம் ரன்களைக் கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அத்துடன், சச்சினை விஞ்சி சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 28,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்தார். சச்சின் டெண்டுல்கர் இந்த மைல்கல்லை எட்ட 644 இன்னிங்ஸ்களையும், சங்ககாரா 666 இன்னிங்ஸ்களையும் எடுத்துக் கொண்டனர். ஆனால், விராட் கோலி வெறும் 624 இன்னிங்ஸ்களில் 28 ஆயிரம் ரன்களை நிறைவு செய்துள்ளார். இருப்பினும், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 34,357 ரன்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் விராட் கோலி, சமீபகாலமாக மிகச் சிறந்த ஃபார்மில் உள்ளார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்த அவர், அதன் பிறகு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிட்னி ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் எடுத்த கோலி, அதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் சதம் விளாசினார். மூன்றாவது போட்டியில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தென்னாப்பிரிக்கத் தொடரில் அவரது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக 'தொடர் நாயகன்' விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. இருப்பினும், நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 54வது சதத்தை அடிக்கத் தவறவிட்டார், அவர் 91 பந்துகளில் 93 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். சிறப்பான சாதனையைப் படைத்த விராட் கோலி, இது குறித்து கூறுகையில், "எனது ஒட்டுமொத்தப் பயணத்தையும் திரும்பிப் பார்த்தால், இது ஒரு கனவு நனவானது போல உள்ளது. எனது திறமையின் மீது நான் எப்போதும் நம்பிக்கை கொண்டிருந்தேன். இருப்பினும், இந்த நிலையை அடைய நான் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது," என்றார். தொடர்ந்து பேசிய அவர், "உண்மையைச் சொல்லப்போனால், நான் தற்போது எந்த சாதனைகளைப் பற்றியும் யோசிக்கவில்லை. நாங்கள் முதலில் பேட்டிங் செய்திருந்தால், ஒருவேளை நான் இன்னும் அதிரடியாக விளையாடியிருப்பேன். அனுபவம் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் அணியை வெற்றி பெறச் செய்வதுதான் எல்லாவற்றையும் விட முக்கியமானது," என்று தெரிவித்தார். கில் மற்றும் ஸ்ரேயாஸ் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சுப்மன் கில் இடம்பெறவில்லை. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரைத் தவறவிட்ட பிறகு, கேப்டன் சுப்மன் கில் இந்த ஒருநாள் தொடரில் வெற்றிகரமாகத் திரும்பினார். 301 ரன் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில், சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா தொடக்க ஜோடி முதல் விக்கெட்டிற்கு 39 ரன்கள் சேர்த்தது. ரோஹித் சர்மா இந்த ஆட்டத்தில் கிடைத்த நல்ல தொடக்கத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறினார். அவர் 29 பந்துகளில் 26 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது இன்னிங்ஸில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகள் அடங்கும். அதன் பிறகு, கில்லுடன் விராட் கோலி இணைந்தார். இந்த இணை இரண்டாவது விக்கெட்டிற்கு 107 பந்துகளில் 118 ரன்கள் சேர்த்தது. அரைசதம் கடந்த பிறகு சுப்மன் கில்லால் தனது இன்னிங்ஸை நீண்ட நேரம் தொடர முடியவில்லை, அவர் 56 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். ஷுப்மன் கில்லைத் தவிர, ஸ்ரேயாஸ் ஐயரும் சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் களத்திற்குத் திரும்பினார். அணியின் துணை கேப்டனான ஐயர் 49 ரன்கள் எடுத்தார். விராட் கோலி ஆட்டமிழந்த பிறகு இந்திய அணியின் இன்னிங்ஸ் சற்று தடுமாறியது. கோலி ஆட்டமிழந்த நேரத்தில் இந்தியா 234 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதன்பின் வெறும் எட்டு ரன்கள் இடைவெளியில் இந்தியா அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் ஹர்ஷித் ராணா 23 பந்துகளில் 29 ரன்களும், கே.எல். ராகுல் ஆட்டமிழக்காமல் 21 பந்துகளில் 29 ரன்களும் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தனர். விராட் கோலியின் தற்போதைய ஃபார்ம் குறித்துப் பேசிய சுப்மன் கில், "விராட் கோலி இப்போது பேட்டிங் செய்யும் விதம், அவர் பேட்டிங்கை மிகவும் எளிதாக்கிவிட்டது போலத் தோன்றுகிறது. ஆரம்பத்தில் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை, ஆனால் விராட் கோலி அதை மிக எளிதாக மாற்றிக்காட்டினார்," என்று கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy05kk0gwdwo
  15. வெனிசுவேலாவை விட்டு உடனே வெளியேறவும்: அமெரிக்க குடிமக்களுக்கு எச்சரிக்கை Published By: Digital Desk 3 11 Jan, 2026 | 03:26 PM வெனிசுவேலாவில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள சர்வதேச விமான சேவையை பயன்படுத்தி, அமெரிக்க குடிமக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறும்படி அமெரிக்கா கேட்டு கொண்டுள்ளது. வெனிசுவேலாவில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெனிசுவேலாவில் பாதுகாப்பு நிலைமை தொடர்ந்து சீரற்று உள்ளது. வெனிசுவேலாவில் ஆயுதமேந்திய கிளர்ச்சி குழுவினர் வீதிகளில் சுற்றி திரிகின்றனர். அவர்கள் தடுப்புகளை ஏற்படுத்தி அமெரிக்க குடிமக்கள் யாரேனும் உள்ளனரா? என தேடி வருகின்றனர். அவர்களிடம் இருந்து பாதுகாப்பாக விலகி இருக்கவும். வெனிசுவேலாவில் சர்வதேச விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனால் இதனை பயன்படுத்தி, வெனிசுவேலாவில் உள்ள அமெரிக்க குடிமக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளது. வெனிசுவேலாவில் உள்ள அமெரிக்கர்கள் பயணிக்கும்போது கவனத்துடனும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது. தொடர்ந்து அந்த செய்தியில், வெனிசுவேலாவில் அமெரிக்கர்களை சிறை பிடித்தல், சிறை பிடித்து வைத்து சித்திரவதை செய்தல், பயங்கரவாதம், கடத்தல், உள்ளூர் சட்டங்களை தன்னிச்சையாக அமல்படுத்துதல், உள்நாட்டு அமைதியின்மை மற்றும் மோசமான சுகாதார உள்கட்டமைப்பு உள்பட அமெரிக்கர்களுக்கு கடுமையான ஆபத்துகள் உள்ளன. அதனால், வெனிசுவேலாவுக்கு பயணிக்க வேண்டாம் என்று உச்சபட்ச அளவிலான எச்சரிக்கை அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளது. எனினும், வெனிசுலா வெளியுறவு மந்திரி யுவான் கில், வெனிசுலா முழு அளவில் அமைதியாகவும் மற்றும் ஸ்திரத்தன்மையுடனும் உள்ளது என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/235758
  16. அண்ணை, ஆக்குவார் காப்பார் அழிப்பார் அருள்தருவார்! வெனிசுவேலாவை விட்டு உடனே வெளியேறவும்: அமெரிக்க குடிமக்களுக்கு எச்சரிக்கை
  17. வேலூரில் பிறந்து நியூசிலாந்து அணியில் விளையாடும் ஆதித்யா அஷோக் - யார் இவர்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2002-ஆம் ஆண்டு வேலூரில் பிறந்தவர் ஆதித்யா அஷோக். 3 மணி நேரங்களுக்கு முன்னர் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. அதன் முதல் போட்டி இன்று (ஜனவரி 11) வதோதராவில் நடந்துவருகிறது. வதோதராவில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் சேர்த்தது. டேரல் மிட்ஷெல் அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்தார். ஹென்ரி நிகோலஸ் மற்றும் டெவன் கான்வே முறையே 62 மற்றும் 56 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் ஹர்ஷித் ரானா தல 2 விக்கெட்டுகள் எடுத்தனர். குல்தீப் யாதவ் 1 விக்கெட் எடுத்தார். இந்தப் போட்டியில் தமிழ்நாட்டில் பிறந்த இரண்டு வீரர்கள் விளையாடுகிறார்கள். ஒருவர் வாஷிங்டன் சுந்தர். இன்னொருவர் ஆதித்யா அஷோக் - இவர் ஆடுவது இந்திய அணிக்காக அல்ல... நியூசிலாந்துக்காக. யார் இந்த தமிழ் வம்சாவளி வீரர்? 2002-ஆம் ஆண்டு வேலூரில் பிறந்தவர் ஆதித்யா அஷோக். அவருக்கு நான்கு வயது இருக்கும்போது அவரது குடும்பம் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்தது. அப்போதிருந்து அவர் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். இந்த வதோதரா ஒருநாள் போட்டிக்கு முன்பு ஜியோஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில் பேசிய நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் சைமன் டூல், "அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவருடைய பெற்றோர்கள் அதன்பிறகு சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தார்கள். பின்னர் நியூசிலாந்தின் ஆக்லாந்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருவருமே வேலை பெற்றார்கள். அவருடைய நான்கு வயதிலிருந்து நியூசிலாந்தில் இருக்கிறார். இஷ் சோதி, அஜாஸ் படேல் ஆகியோர் வரிசையில் இவரும் இந்தியாவில் பிறந்து நியூசிலாந்துக்காக விளையாடுகிறார்" என்று கூறினார். சோதி, அஜாஸ் படேல் போல் ஆதித்யாவும் ஸ்பின்னர் தான். இவர், கூக்ளி அதிகம் வீசக்கூடிய லெக்பிரேக் பௌலர். நியூசிலாந்து முன்னாள் வீரர் தருன் நேதுலாவிடம் பயிற்சி பெற்று அவர் தன்னுடைய கூக்ளியை மெருகேற்றியிருக்கிறார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சென்னையில் இருக்கும் சூப்பர் கிங்ஸ் அகாடெமியிலுமே சுழற்பந்துவீச்சு பயிற்சி பெற்றிருக்கிறார் ஆதித்யா. ஆந்திராவில் பிறந்தவரான நேதுலா, நியூசிலாந்துக்காக 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், சென்னையில் இருக்கும் சூப்பர் கிங்ஸ் அகாடெமியிலுமே சுழற்பந்துவீச்சு பயிற்சி பெற்றிருக்கிறார் ஆதித்யா. இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ செய்தியின்படி, 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த 13 வயதுக்குட்பட்டோருக்கான இண்டோர் உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியின் கேப்டனாக ஆதித்யா செயல்பட்டிருக்கிறார். இவர், 2020-ஆம் ஆண்டு தென்னாப்ரிக்காவில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்து அணியில் இடம்பிடித்தார். அந்தத் தொடரில் 5 போட்டிகளில் விளையாடி அவர் 4 விக்கெட்டுகள் எடுத்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஆகஸ்ட் 2023-இல் நியூசிலாந்து டி20 அணிக்காக அறிமுகமானார். ஆக்லாந்து அணிக்காக 2021-ஆம் ஆண்டு உள்ளூர் டி20 போட்டிகளில் அறிமுகமான ஆதித்யா, ஆகஸ்ட் 2023-இல் நியூசிலாந்து டி20 அணிக்காக அறிமுகமானார். அதே ஆண்டு டிசம்பரில் வங்கதேசத்துக்கு எதிராக ஒருநாள் அணிக்கும் அறிமுகமான இவர், 2 போட்டிகளில் ஆடினார். ஆனால், அதன்பிறகு அவருக்கு சர்வதேச போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏனெனில், அவர் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக பெரிதளவு அவதிப்பட்டார். சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது இந்தியாவுக்கு எதிராக வாய்ப்பு பெற்றிருக்கிறார் ஆதித்யா அஷோக். பட மூலாதாரம்,Instagram/Adhitya Ashok படக்குறிப்பு,ஆதித்யா தன்னுடைய கையில் படையப்பா படத்தில் வரும் "என் வழி, தனி வழி" வசனத்தை பச்சை குத்தியிருக்கிறார். ஆதித்யா தன்னுடைய கையில் படையப்பா படத்தில் வரும் "என் வழி, தனி வழி" வசனத்தை பச்சை குத்தியிருக்கிறார். இதுபற்றி இந்தப் போட்டிக்கு முன்பாக பேசிய அவர், "நானும் என் தாத்தாவும் எங்கள் பூர்வீக வீட்டில் நிறைய பேசிக்கொண்டிருந்தோம். மதிப்புகள், ஒழுக்கங்கள் என அவருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களைப் பற்றி நாங்கள் தனிப்பட்ட முறையில் உரையாடினோம். அப்போது பின்னால் தொலைக்காட்சியில் அந்தப் படம் ஓடிக்கொண்டிருந்தது." "அப்போது அந்த வசனம் வந்தது. அது எனக்கு மிகவும் பெர்சனலான ஒரு விஷயம். அந்த உரையாடல் எனக்கு மிகவும் நெருக்கமானது. அதன்பிறகு சீக்கிரமே அவர் இறந்துவிட்டார். அடுத்த சில நாள்களில் நான் அந்த வசனத்தை டாட்டூ குத்திக்கொண்டேன். இது எனது தமிழ் வேர்களுடனும், வேலூருடனும், பிரபலமான ஒரு தமிழ் சின்னத்துடனும், அதே சமயம் உலகளாவிய சின்னத்துடனும் உள்ள ஒரு தொடர்பாகும்" என்று இஎஸ்பிஎன்-க்கு கொடுத்த பேட்டியில் கூறியிருக்கிறார். இவர் கேன் வில்லியம்சன் மற்றும் ரோஜர் ஃபெடரர் ஆகியோரின் ரசிகர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1wzdr0ldg4o
  18. இந்திய உதவியின் கீழ் வடக்கு ரயில் பாதைகள் புனரமைப்பு பணிகள் ஆரம்பம் Published By: Digital Desk 3 11 Jan, 2026 | 05:26 PM 'தித்வா' (Ditwah) சூறாவளியினால் பாரியளவில் சேதமடைந்த வடக்கு மற்றும் தலைமன்னார் ரயில் மார்க்கத்தை புனரமைக்கும் பணிகள் இன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (11) ஆரம்பிக்கப்பட்டதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹோ ரயில் நிலையத்தில் இன்றைய தினம் காலை புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 05 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியின் கீழ் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. https://www.virakesari.lk/article/235774
  19. இந்திய உதவித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட முதல் பெய்லி பாலம் திறப்பு Published By: Digital Desk 3 11 Jan, 2026 | 05:16 PM 100 அடி நீள பெய்லி பாலத்தை இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதிஅமைச்சர் பிரசன்ன குணசேன மற்றும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன ஆகியோர் சனிக்கிழமை (10) திறந்து வைத்தனர். இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் விஜேரத்னவும் கலந்து கொண்டார். இலங்கையின் மத்திய மாகாணத்திற்கும் ஊவா மாகாணத்திற்கும் இடையிலான ஒரு முக்கிய நில இணைப்பை மீட்டெடுக்கும் வகையில், கண்டி-ரானலை வீதியில் உள்ள B-492 வீதியில் இந்திய இராணுவத்தின் 19வது பொறியாளர் படைப்பிரிவால் இந்தப் பாலம் அமைக்கப்பட்டது. தித்வாவுக்குப் பின்னர் மீள் கட்டமைப்புக்கான இந்தியாவின் 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித் தொகுப்பின் கீழ் திட்டங்களை செயல்படுத்துவதற்கான தொடக்கத்தை இது குறிக்கிறது. 2025 டிசம்பர் 22 மற்றும் -23 அன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வருகையின் போது இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட மூன்று வாரங்களுக்குள் செயல்படுத்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் ஏனைய பகுதிகளிலும் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/235773
  20. பகிர்விற்கு நன்றி ஐயா. 300 வருடங்களிலே வரலாறே தலைகீழானதே!
  21. நாம் மனிதர்களிடம் பேசுகிறோமா அல்லது ஏஐயிடம் பேசுகிறோமா என்பதை உண்மையிலேயே கூற முடியுமா? பட மூலாதாரம்,Jesussanz/Getty Images கட்டுரை தகவல் டெய்சி ஸ்டீபன்ஸ் பிபிசி உலக சேவை 2 மணி நேரங்களுக்கு முன்னர் நாம் ஒரு மனிதருடன் பேசுகிறோமா அல்லது ஏஐயிடம் (செயற்கை நுண்ணறிவிடம்) பேசுகிறோமா என்பதை நம்மால் கண்டறிய முடியுமா? நீண்ட காலமாக, கணினிகள் எந்தளவு புத்திசாலித்தனமானவை என்பதை மதிப்பிடும்போது மக்கள் கேட்கும் கேள்விகளில் இதுவும் ஒன்று. இது டூரிங் சோதனை (Turing test) என்பதிலிருந்து உருவானது. இதனை 1950-ஆம் ஆண்டு ஆங்கிலேய கணிதவியலாளரும் கணினி விஞ்ஞானியுமான ஆலன் டூரிங் வடிவமைத்தார். இயந்திர நுண்ணறிவு குறித்த தத்துவார்த்த சிந்தனையை முதன்முறையாக ஒரு அனுபவப்பூர்வமான சோதனையாக அவர் மாற்றினார். இந்தச் சோதனையின்படி, ஒரு கணினியின் நடத்தை மனிதனின் நடத்தையிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியாதவாறு இருந்தால், அது "புத்திசாலித்தனமான" நடத்தையை வெளிப்படுத்துவதாகக் கருதப்பட்டது. பட மூலாதாரம்,Pictures from History/Universal Images Group via Getty Images படக்குறிப்பு,ஆலன் டூரிங், இயந்திரங்கள் மனிதர்களிடமிருந்து எவ்வளவு வேறுபடுத்திப் பார்க்க முடியாதவை என்பதை அளவிடுவதற்காக ஒரு சோதனையை வடிவமைத்தார். ஆனால் 2014-ஆம் ஆண்டில், ஒரு ஏஐ சாட்பாட் முதன்முறையாக இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றதாகக் கூறப்பட்டபோது, அது ஒரு வரலாற்று மைல்கல்லாக அமைவதற்குப் பதிலாக, பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. மனிதர்களை போலச் செய்தல் டூரிங் சோதனை என்பது மனிதர்களைப் போலவே செய்யும் ஒரு விளையாட்டைப் போன்றது. இதில் ஒரு நபர் மெசேஜ் மூலமாக மற்றொரு மனிதரிடமும் ஒரு கணினியிடமும் உரையாடுவார். அவர் எத்தகைய கேள்விகளை வேண்டுமானாலும் கேட்கலாம். அதன் முடிவில், யார் மனிதன் மற்றும் எது இயந்திரம் என்பதை அவர் தீர்மானிக்க வேண்டும். "மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை மக்களால் நம்பகத்தன்மையுடன் கண்டறிய முடியவில்லை என்றால், மனிதன் சிந்திக்க முடியும், ஆனால் இயந்திரத்தால் முடியாது என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை என டூரிங் கூறினார்," என்கிறார் நியூயார்க்கின் ஸ்டோனி ப்ரூக் பல்கலைக்கழகத்தின் உளவியல் உதவிப் பேராசிரியர் முனைவர் கேமரூன் ஜோன்ஸ். ஐந்து நிமிடக் கேள்வி-பதில்களுக்குப் பிறகு, குறைந்தது 30% நேரங்களில் கணினிகள் தங்களை மனிதர்களாகக் காட்டி வெற்றி பெறும் நிலையை 2000-ஆம் ஆண்டுக்குள் எட்டிவிடும் என்று டூரிங் கணித்திருந்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,டூரிங் சோதனை என்பது, ஒரு மனிதர் ஒரு இயந்திரத்திடமும் மற்றொரு மனிதரிடமும் உரை வழியாகக் கேள்விகளைக் கேட்ட பிறகு, அவர்களுக்கு இடையிலான வேறுபாட்டை அந்த மனிதரால் கண்டறிய முடிகிறதா என்பதைப் பார்க்கிறது. 'நியாயமாக விளையாடவில்லை' 2014-ஆம் ஆண்டில், யூஜின் கூஸ்ட்மேன் என்ற ஏஐ சாட்பாட், டூரிங் சோதனையில் 33% நடுவர்களை தான் ஒரு மனிதன் என்று நம்ப வைத்தது. இதன் மூலம் போட்டி அமைப்பாளர்கள் நிர்ணயித்த தகுதியை அது எட்டியது. ஆங்கிலத்தில் உரையாடிய அந்தச் செயலி, யுக்ரேனைச் சேர்ந்த 13 வயது சிறுவனைப் போன்ற ஆளுமையை கொண்டிருந்தது. ஜெர்மனியின் ஆர்டபிள்யூடிஹெச் ஆச்சென் பல்கலைக்கழகத்தின் தத்துவஞானியும் கௌரவ விரிவுரையாளருமான முனைவர் மார்கஸ் பான்ட்சர், இது "நேர்மையான முறையில் செயல்படவில்லை" என்று கூறினார். "அந்த சாட்பாட்டின் குறைகள், ஆங்கிலம் பேசும் ஒரு யுக்ரேனிய பதின் பருவச் சிறுவனின் மொழித் திறனில் இருக்கக்கூடிய குறைகளோடு ஒத்துப்போயின," என்று அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,VCG via Getty Images படக்குறிப்பு,ஜோன்ஸின் ஆய்வின்படி, 2025-ஆம் ஆண்டில் சாட்ஜிபிடி 4.5 டூரிங் சோதனையில் தேர்ச்சி பெற்றது. அதன் பிறகு, பல மேம்பட்ட கருவிகள் டூரிங் சோதனையில் தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், ஓபன்ஏஐ-இன் சாட்ஜிபிடி 4.5 மாடல் 73% நேரங்களில் மனிதனாகக் கருதப்பட்டதாக ஜோன்ஸ் கண்டறிந்தார். இது உண்மையான மனிதர்களைக் காட்டிலும் அதிகப்படியான விகிதமாகும். மெட்டாவின் லாமா 3.1 மாடல் 56% நேரங்களில் மனிதனாகக் கருதப்பட்டது. "உண்மையான மனிதர்களை விடவும் மிக அதிகப்படியான நேரங்களில் இந்த மாடல்கள் மனிதர்களாகக் கருதப்படும்போது, அவை அந்தச் சோதனையில் (டூரிங் சோதனை) தேர்ச்சி பெறவில்லை என்று வாதிடுவது கடினம் என நான் நினைக்கிறேன்," என்று அவர் கூறினார். இருப்பினும், கணினிகளால் உண்மையில் சிந்திக்க முடியும் என்பதற்கு இது ஒரு சான்றா என்பதில் சிலருக்கு இன்னும் சந்தேகம் உள்ளது. 'சீன அறை வாதம்' எனும் பரிசோதனை முறை 1980-ஆம் ஆண்டில், தத்துவஞானி ஜான் சீர்ல் 'சைனீஸ் ரூம் ஆர்குமெண்ட்' (Chinese room argument) எனப்படும் ஒரு பரிசோதனையை முன்வைத்தார். சீன மொழி தெரியாத ஒரு ஆங்கிலேயர், சில சீன எழுத்துக்கள் மற்றும் அந்த எழுத்துக்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற ஆங்கில வழிமுறைகளுடன் ஓர் அறைக்குள் பூட்டப்படுகிறார் என்று தொடங்குகிறது அந்த பரிசோதனை. அறைக்கு வெளியே இருப்பவர்கள் சீன மொழியில் எழுதப்பட்ட கேள்விகளைச் சீட்டுகளாக அவருக்கு உள்ளே அனுப்புகிறார்கள். அவர் தன்னிடம் உள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தி, சீன மொழியிலேயே பதில்களைத் தயார் செய்து வெளியே அனுப்புகிறார். வெளியே இருப்பவர்களுக்கு, அந்த மனிதருக்குச் சீன மொழி தெரியும் என்பது போலத் தோன்றும். ஆனால், உண்மையில் தான் என்ன சொல்கிறோம் என்பது அவருக்குப் புரியாது. தகுந்த பதில்களைத் தருவதற்கு நிரலாக்கம் செய்யப்பட்ட கணினிகளுக்கும் இதுவே பொருந்தும் என்று சிலர் கூறுகின்றனர். பட மூலாதாரம்,Malte Mueller/Getty Images படக்குறிப்பு,இயந்திரங்கள் டூரிங் சோதனையில் தேர்ச்சி பெறுவது வெறும் மனிதர்களைப் போல பாவனை செய்வதால் மட்டும் தான். மாறாக அவற்றுக்கு உண்மையில் சுயமாக அறிவு இருப்பதனால் அல்ல என சிலர் வாதிடுகின்றனர். கலிஃபோர்னியாவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஜார்ஜ் மாப்புராஸ், டூரிங் சோதனைக்கு மாற்றாக ஒரு புதிய முறையை உருவாக்கியுள்ளார். அவர் கூறுகையில், "டூரிங் சோதனை நுண்ணறிவைக் கண்டறிய முயல்வதாகக் கூறினாலும், அது முக்கியமாக ஒரு இயந்திரத்தால் மனிதர்களைப் போலச் சரியாகப் பாவனை செய்ய முடிகிறதா என்பதையே சோதிக்கிறது," என்றார். இதனை விளக்க அவர் ஓர் உதாரணத்தைக் கூறினார். "நீங்கள் எந்த ஒரு ஏஐ சாட்பாட்டையும் திறந்து, ஒரு அனலாக் கடிகாரம் எவ்வாறு செயல்படுகிறது என்று கேட்டால், அது துல்லியமாக விளக்கும்," என்றார். ஆனால், ஒரு குறிப்பிட்ட நேரத்தைக் காட்டும் கடிகாரத்தின் படத்தை உருவாக்கச் சொன்னால், தற்போதைய ஏஐ மாடல்கள் அதில் தோல்வியடைய வாய்ப்புள்ளது. "அது உண்மையில் தகவலைப் புரிந்துகொள்ளவில்லை," என்று அவர் கூறினார். மறுபுறம், பான்ட்சர் போன்றவர்கள், டூரிங் சோதனையானது நடுவரை ஏமாற்றும் கணினியின் திறனுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாகக் கருதுகின்றனர். மேலும், "உண்மையான புத்திசாலித்தனமான நடத்தையில் ஏமாற்றுவதும் ஒரு பகுதியாக இருக்கலாம், ஆனால் அதுவே அதன் அடிப்படை அம்சம் கிடையாது," என்றும் அவர் குறிப்பிட்டார். மாற்று சோதனைகள் பல ஆண்டுகளாக முன்மொழியப்பட்ட மாற்றுச் சோதனைகளில் ஒன்றான சமூக அடிப்படையிலான நுண்ணறிவுச் சோதனை என்பதை பான்ட்சர் உருவாக்கியுள்ளார். ஆய்வக அடிப்படையிலான டூரிங் சோதனையைப் போன்று இல்லாமல், இவரது முறையில் ஒரு ஏஐ அமைப்பு ஏற்கெனவே இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்குள் (உதாரணமாக, கணிதவியலாளர்களின் ஆன்லைன் குழுமம்) அவர்களுக்குத் தெரியாமல் வைக்கப்படும். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, அந்த உறுப்பினர்களிடம் அது ஓர் இயந்திரம் என்பதைக் கண்டுபிடித்தார்களா இல்லையா என்று சோதனை செய்யப்படும். இதில் ஓரளவுக்கு ஏமாற்றும் முறை இருந்தாலும், அந்த அமைப்பு மனிதர்களைப் போல 'நடிப்பதை' விட, 'மனிதத்தன்மையுடன் நடந்துகொள்வதையே' இந்தச் சோதனை முக்கியமாகக் கருதுவதாக பான்ட்சர் கருதுகிறார். இது ஒரு முக்கியமான வேறுபாடு என்று அவர் கூறுகிறார். "நுண்ணறிவு என்பது இயற்கையான சூழலில், நாம் உண்மையில் ஈடுபடும் சூழல்களில் மதிப்பிடப்பட வேண்டும்," என்றும் அந்தத் தத்துவஞானி குறிப்பிட்டார். இந்தச் சோதனையானது, ஒரு ஏஐ அமைப்பு ஏமாற்றும் அந்த சோதனையில் வெற்றி பெறுகிறதா என்பதில் கவனம் செலுத்தாமல், அது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பதில் மென்பொறியாளர்களை கவனம் செலுத்த ஊக்குவிப்பதாக அவர் கூறினார். மறுபுறம், மாப்போராஸ் ஒரு சோதனையை வடிவமைத்துள்ளார், அது நுண்ணறிவின் மிகவும் உறுதியான அளவுகோலைப் பார்க்கிறது என்று அவர் கூறினார். ஒரு இயந்திரம் தனக்கு ஏற்கெனவே தெரிந்த தகவல்களைக் கொண்டு, "ஏதேனும் புதிய அறிவியல் அறிவைக் கண்டறிந்து அதனை விளக்க" முடியுமானால், அது செயற்கை பொது நுண்ணறிவை எட்டிவிட்டதாகக் கருதலாம் என்று அவர் நம்புகிறார். செயற்கை பொது நுண்ணறிவு என்பது ஓர் இயந்திரம் மனிதனுக்கு இணையான அறிவுத்திறனைப் பெற்றிருக்கும் ஒரு கோட்பாட்டு ரீதியான கருத்தாக்கமாகும். பட மூலாதாரம்,Oscar Wong/Getty Images படக்குறிப்பு,திறந்த முடிவுகளைக் கொண்டதாகவும், கேள்விகள் தெளிவாக வரையறுக்கப்படாதவையாகவும் இருப்பதே, "ஒருவகையான ஆற்றல்மிக்க, நெகிழ்வான நுண்ணறிவை" சோதிக்க இதற்கு வாய்ப்பளிக்கிறது என்று ஜோன்ஸ் தெரிவித்தார். விமர்சனங்கள் இருந்தபோதிலும், நவீன ஏஐ ஆராய்ச்சியில் டூரிங் சோதனைக்கு இன்னும் ஓரிடம் இருப்பதாகச் சிலர் நம்புகின்றனர். திறந்த முடிவுகளைக் கொண்டதாகவும், கேள்விகள் தெளிவாக வரையறுக்கப்படாதவையாகவும் இருப்பதே, "ஒருவகையான ஆற்றல்மிக்க, நெகிழ்வான நுண்ணறிவை" சோதிக்க இதற்கு வாய்ப்பளிக்கிறது என்று ஜோன்ஸ் தெரிவித்தார். "இதனை மற்றொரு நிலையான அளவுகோலைக் கொண்டு நாம் மாற்றினால், டூரிங் எதைச் சொல்ல வந்தார் என்பதை நாம் தவறாகப் புரிந்துகொள்கிறோம் என்றுதான் அர்த்தம்," என அவர் தெரிவித்தார். 'தோல்வியடையும் போர்' எந்தச் சோதனையைப் பயன்படுத்தினாலும், ஏஐ அமைப்புகள் தொடர்ந்து வளர்ச்சியடையும் போது, அவை மனிதர்களிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியாத அளவுக்கு மாறிவிடும் என்று பான்ட்சர் நம்புகிறார். "இறுதியில், நாம் ஒரு தோல்வியடையக்கூடிய போரையே நடத்திக் கொண்டிருக்கிறோம்," என்று அவர் குறிப்பிட்டார். மேலும் இதனை நிரூபிக்க முடிந்தால், பொறுப்புணர்வு காரணங்களுக்காக, செயற்கை நுண்ணறிவு தன்னை ஏஐ என அறிவிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் சட்ட வடிவமைப்புகள் தேவையென்பதை நியாயப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். "பிழையான தரவுகளைக் கொண்ட ஒரு ஆய்வறிக்கையை நான் வெளியிட்டால், அதற்கு நானே பொறுப்பு, ஆனால் அது ஏஐ எழுதிய கட்டுரையாக இருந்தால், யாரும் பொறுப்பேற்க முடியாது" என்கிறார் பான்ட்சர். பட மூலாதாரம்,10'000 Hours/Getty Images படக்குறிப்பு,செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிநவீனமாக மாறி வருவதால், அதனுடனான நமது தொடர்பு மற்றும் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு இயந்திரம் எந்த அளவுக்கு மனிதனைப் போலப் பாவனை செய்ய முடியும் என்பதை அளவிடுவது முக்கியம், இது டூரிங் சோதனையை இன்றும் பொருத்தமானதாக மாற்றுகிறது என்று ஜோன்ஸ் கருதுகிறார். "நாம் இணையத்தில் மற்றவர்களுடன் உரையாடுவதில் அதிக நேரத்தைச் செலவிடுகிறோம், தற்போது மக்களிடையே ஒரு அனுபவம் அதிகரித்து வருகிறது... அதாவது, எக்ஸ் தளத்தில் ஒரு பயனருடன் விவாதத்தில் ஈடுபடும்போது திடீரென, 'உண்மையில், நான் ஒரு மனிதனிடம் பேசவில்லை' என்பதை மக்கள் உணர்கிறார்கள்"என்று அவர் கூறினார். மேலும், "இத்தகைய நிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் எவ்வளவு உள்ளன என்பதை டூரிங் சோதனை துல்லியமாகக் காட்டுகிறது," என்றும் அவர் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgjp73gjkno
  22. சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை மாகாணசபைகள் முறைமை தொடர்வது அவசியம் - திலித் ஜயவீரவின் கருத்துக்கு சி.வி.விக்கினேஸ்வரன் பதில் 11 Jan, 2026 | 01:51 PM (நா.தனுஜா) இலங்கைக்கு மாகாணசபைகள் முறைமை பொருத்தமானதன்று என திலித் ஜயவீர கூறுவாராயின், இலங்கையில் அத்தகையதோர் மாற்றத்தைத் தோற்றுவிப்பதற்குத் தூண்டுதலாக அமைந்த அடிப்படைக்காரணிகள் குறித்து அவர் அறியவில்லை என்றே கருதவேண்டியிருக்கிறது. தெற்குக்கு மாகாணசபைகள் அவசியமற்றதாக இருக்கலாம். ஆனால் ஒரு சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை அல்லது அரசியலமைப்புத் திருத்தங்கள் ஊடாக வட, கிழக்கு மக்களுக்கான சுயாட்சி உறுதிப்படுத்தப்படும் வரை மாகாணசபைகள் முறைமை நிச்சயமாக நடைமுறையில் இருக்கவேண்டும் என்று தமிழ்மக்கள் கூட்டணியின் தலைவரும், வடமாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்கினேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கு மாகாணசபைகள் முறைமை பொருத்தமானதன்று எனப் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர கூறியிருப்பது பற்றி தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருக்கும் சி.வி.விக்னேஸ்வரன், மேலும் கூறியிருப்பதாவது, சட்டத்தரணியும், பெருவர்த்தகருமான திலித் ஜயவீரவை நான் பெரிதும் மதிக்கின்றேன். அவர் அண்மைய காலத்திலேயே அரசியலுக்குள் பிரவேசித்தார். அதுமாத்திரமன்றி அவர் ஒரு தேசியவாதி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நாம் எமது மக்கள் குறித்து அதிகம் சிந்திப்பதைப் போன்று, அவர் அவரது மக்கள் குறித்து அதிகம் சிந்திக்கிறார். இருப்பினும் அவரது சிங்களத் தேசியவாதமும் எமது தமிழ்த்தேசியவாதத்தைப் போன்றதே என்பதை ஏற்க அவர் மறந்துவிட்டார். தனது சிங்கள மக்களுக்காக சிந்திக்கும் உரிமை அவருக்கு உண்டு. இருப்பினும் இந்த ஒட்டுமொத்த நாடும் சிங்கள மக்களால் சூழ்ந்ததல்ல. இலங்கையில் பௌத்த மதம் அறிமுகமாவதற்கு முன்னரேயே வட, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த மக்கள் தமிழ்மொழியையே பேசினர். இந்நாட்டில் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்மொழி பேசும் மக்கள் வாழ்ந்துவருவதாக பேராசிரியர் இந்திரபாலா கூறுகிறார். இலங்கைக்கு மாகாணசபைகள் முறைமை பொருத்தமானதன்று என திலித் ஜயவீர கூறுவாராயின், இலங்கையில் அத்தகையதோர் மாற்றத்தைத் தோற்றுவிப்பதற்குத் தூண்டுதலாக அமைந்த அடிப்படைக்காரணிகள் குறித்து அவர் அறியவில்லை என்றே கருதவேண்டியிருக்கிறது. உண்மையில் மாகாணசபைகள் ஒட்டுமொத்த இலங்கைக்குமான கட்டமைப்பாக அறிமுகப்படுத்தப்பட்ட முறைமை அல்ல. மாறாக வட, கிழக்கு மாகாணங்களுக்கான சுயாட்சியை வழங்கும் வகையில் அரசியலமைப்பின் ஊடாக வடிவமைக்கப்பட்ட முறைமையே அதுவாகும். எனவே வெறுமனே மாகாணசபைகள் முறைமை இலங்கைக்குக் பொருத்தமானதல்ல எனக் கூறுவதற்கு முன்னர், நாட்டின் கடந்தகால மற்றும் அண்மைய வரலாற்றை திலித் ஜயவீர நன்கு அறிந்துகொள்ளவேண்டும். தெற்குக்கு மாகாணசபைகள் அவசியமற்றதாக இருக்கலாம். ஆனால் ஒரு சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை அல்லது அரசியலமைப்புத் திருத்தங்கள் ஊடாக வட, கிழக்கு மக்களுக்கான சுயாட்சி உறுதிப்படுத்தப்படும் வரை மாகாணசபைகள் முறைமை நிச்சயமாக நடைமுறையில் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/235743
  23. இந்தோ - பசிபிக் மூலோபாய இலக்குகளுடன் இலங்கை வரும் புதிய அமெரிக்க தூதுவர் 11 Jan, 2026 | 12:38 PM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக சுமார் நான்கு ஆண்டுகள் பணியாற்றிய ஜூலி சங், எதிர்வரும் வெள்ளிக்கிழமையுடன் பதவிக்காலத்தை முடித்துக்கொண்டு கொழும்பிலிருந்து விடைபெறுகிறார். இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் சிரேஷ்ட இராஜதந்திரி எரிக் மேயர் புதிய தூதுவராகக் கடமைகளைப் பொறுப்பேற்க உள்ளார். இலங்கைக்கான தூதுவராக நியமனம் பெறுவற்கு முன்னர், அமெரிக்க வெளியுறவுச் சேவையின் சிரேஷ்ட உறுப்பினரான எரிக் மேயர், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரிவின் சிரேஷ்ட அதிகாரியாகப் பணியாற்றினார். ஆப்கானிஸ்தான், பங்காளதேசம், பூட்டான், இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மாலைத்தீவுகள், நேபாளம், பாக்கிஸ்தான், இலங்கை, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளடங்கிய இப்பிராந்தியத்தில் அமெரிக்க நிர்வாகத்தின் கொள்கை முன்னுரிமைகளை ஒருங்கிணைப்பதற்கும், கண்காணிப்பதற்கும் அவர் பொறுப்பு வகித்தார். தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களில் ஆழமான அனுபவம் கொண்ட எரிக் மேயர், வாஷிங்டனின் இந்தோ-பசிபிக் மூலோபாயத்தில் இலங்கையை ஒரு முக்கியமான மையப்புள்ளியாகக் கருதுகிறார். சமீபத்தில் அமெரிக்க செனட் சபையின் வெளியுறவு உறவுகள் குழுவின் முன்னிலையில் தெளிப்படுத்திய அவர், தனது பதவிக்காலத்தில் அமெரிக்கா முன்னுரிமை அளிக்கவுள்ள முக்கிய விடயங்கள் குறித்துத் தெளிவுபடுத்தினார். எரிக் மேயரின் வருகையானது, இலங்கை பொருளாதார நெருக்கடி மற்றும் 'தித்வா' சூறாவளி பாதிப்புகளில் இருந்து மீண்டு வரும் ஒரு முக்கியமான காலப்பகுதியில் அமைகிறது. குறிப்பாக, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை எதிர்கொள்வதிலும், இலங்கையின் கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் அமெரிக்கா தீவிர கவனம் செலுத்தும் என்பதை அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார். உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் மூன்றில் இரண்டு பங்கு இலங்கையின் கடல்வழியாகவே செல்கிறது. எனவே, சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தைப் பேணுவதற்கு இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு அவசியமானது என மேயர் வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் பொருளாதார சுதந்திரம் அதன் தேசிய இறையாண்மையுடன் நேரடித் தொடர்புடையது எனக் குறிப்பிட்டுள்ள அவர், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களுடன் இணைந்த பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் தொடர கொழும்பை ஊக்குவிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, கொழும்பு துறைமுகத்தின் விரிவாக்கத் திட்டங்கள் இலங்கையை பிராந்திய பொருளாதாரத்தின் தலைமையாக மாற்றும் வல்லமை கொண்டவை என்றும், இது அமெரிக்க முதலீட்டாளர்களுக்குப் புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சீனாவின் கடன் பொறி மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்து சர்வதேச அளவில் எழுந்துள்ள விமர்சனங்களைச் சுட்டிக்காட்டிய செனட் குழுவினருக்குப் பதிலளித்த அவர், இலங்கை தனது துறைமுகங்கள் மீதான முழுமையான இறையாண்மையைப் பேணுவதை அமெரிக்கா உறுதி செய்யும் என்றார். ஜூலி சங்கின் பதவிக்காலத்தில் வலுப்படுத்தப்பட்ட பாதுகாப்புப் பங்களிப்பு, கல்வி மற்றும் கலாசார உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதே தனது நோக்கம் என எரிக் மேயர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சூறாவளி நிவாரணப் பணிகளுக்காக 2 மில்லியன் டொலர்களை அமெரிக்கா ஒதுக்கியுள்ள நிலையில், எதிர்காலத்தில் கடல்சார் பாதுகப்பு, சட்ட அமுலாக்கக் கூட்டுறவு மற்றும் துறைமுகப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் பலப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/235739

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.