Everything posted by ஏராளன்
-
இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்
இளையராஜாவின் மகள் பவதாரணி இலங்கையில் காலமானார்! 25 JAN, 2024 | 09:27 PM இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி உடல் நலக் குறைவு காரணமாக இன்று (25) இரவு காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இலங்கையில் சிகிச்சை பெற்று வந்தார். இளையராஜாவின் இசையில் பாரதி திரைப் படத்தில் 'மயில் போலப் பொண்ணு ஒன்னு' என்ற பாடலை பாடியதற்காக இவருக்குச் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/174813
-
ஐ.சி.சி. கிரிக்கெட் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள வீர, வீராங்கனைகள்
வருடத்தின் அதிசிறந்த ஐ.சி.சி. கிரிக்கெட் வீராங்கனையாக நெட் சிவர் ப்ரன்ட் 25 JAN, 2024 | 06:12 PM (நெவில் அன்தனி) வருடத்தின் அதிசிறந்த ஐசிசி கிரிக்கெட் வீராங்கனைக்கான ரஷேல் ஹேஹோ ஃப்லின்ட் விருதை இங்கிலாந்து சகலதுறை வீராங்கனை நெட் சிவர் ப்றன்ட் இரண்டாவது தொடர்ச்சியான வருடமாக வென்றெடுத்துள்ளார். வருடம் முழுவதும் மிகத் திறமையாக விளையாடிய நெட் சிவர் ப்றன்ட், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மகளிர் ஆஷஸ் தொடரில் (மூவகை கிரிக்கெட்) அபாரமாக துடுப்பெடுத்தாடியிருந்தார். இந்த விருதுக்கு சமரி அத்தபத்து, அவுஸ்திரேலிய வீராங்கனைகளான ஏஷ்லி கார்ட்னர், பெத் மூனி ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருந்த போதிலும் அவர்களது ஆற்றல்களைவிட நெட் சிவர் ப்றன்டின் ஆற்றல்கள் அற்புதமாக இருந்தது. ஆறு மகளிர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 3 சதங்களுடன் 393 ஓட்டங்களைக் குவித்த நெட் சிவர் ப்றன்ட், 3 விக்கெட்களை வீழ்த்தினார். பத்து மகளிர் சர்வதேச ரி20 போட்டிகளில் 3 அரைச் சதங்களுடன் 364 ஓட்டங்களைப் பெற்ற அவர், விக்கெட்களைக் கைப்பற்றினார். இரண்டு மகளிர் டெஸ்ட் போட்டிகளில் 137 ஓட்டங்களைப் பெற்றதுடன் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். இதற்கு அமைய மூவகை மகளிர் கிரிக்கெட் அரங்கில் 18 போட்டிகளில் மொத்தமாக 894 ஓட்டங்களைப் பெற்ற நெட் சிவர் ப்றன்ட் 9 விக்கெட்களைக் கைப்பற்றினார். வருடத்தின் அதிசிறந்த ஐசிசி ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் வருடத்தின் அதிசிறந்த ஐசிசி ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதை அவுஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா வென்றெடுத்துள்ளார். அவர் கடந்த வருடம் 13 டெஸ்ட் போட்டிகளில் 3 சதங்கள், 6 அரைச் சதங்களுடன் 1210 ஓட்டங்களை மொத்தமாக குவித்தார். சிட்னியில் கடந்த வருடம் ஜனவரி மாதம் நடைபெற்ற தென் ஆபிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் ஆட்டம் இழக்காமல் 195 ஓட்டங்களைக் குவித்து 2023 கிரிக்கெட் பருவகாலத்தை சிறப்பாக ஆரம்பித்தார். இந்த எண்ணிக்கையே டெஸ்ட் கிரிக்கெட் இன்னிங்ஸ் ஒன்றில் அவரது தனிப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாகும். https://www.virakesari.lk/article/174802
-
ஐ.சி.சி. கிரிக்கெட் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள வீர, வீராங்கனைகள்
இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்துவுக்கு ஐசிசியின் உயரிய விருது 25 JAN, 2024 | 03:14 PM (நெவில் அன்தனி) இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து வருடத்தின் அதிசிறந்த ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை விருதை வென்றெடுத்துள்ளார். ஐசிசி மகளிர் சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் அணி, ஐசிசி மகளிர் ரி20 கிரிக்கெட் அணி ஆகியவற்றின் தலைவியாக ஐசிசியினால் பெயரிடப்பட்டிருந்த அத்தபத்து, அதிசிறந்த ஐசிசி மகளிர் சர்வதேச கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு சற்று நேரத்திற்கு முன்னர் உரித்தானார். கடந்த வருடம் 8 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 2 சதங்கள், ஒரு அரைச் சதம் உட்பட 415 ஓட்டங்களைக் குவித்திருந்தார். https://www.virakesari.lk/article/174780
-
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் : இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம்
25 JAN, 2024 | 11:03 AM இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவித்திடவிரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் மீன்பிடிப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் 22-1-2024 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சமீப காலமாக தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது கவலையளிப்பதாக உள்ளது என்றும் இத்தகைய போக்கு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கும் என்பதால் இதில் ஒன்றிய அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய தொடர் கைது நடவடிக்கைகள் தமிழ்ச் சமூகத்தின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பறிப்பதோடு மீனவ மக்களிடையே அச்சத்தையும் நிச்சயமற்ற சூழலையும் உருவாக்கியுள்ளதாகவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவச் சமூகங்களின் கலாச்சார மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை அச்சுறுத்தும் வகையில் உள்ளதாகவும் முதலமைச்சர் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண உரிய தூதரக வழிமுறைகளைப் பின்பற்றி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள முதலமைச்சர் அவர்கள் மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையேயான கூட்டு நடவடிக்கைக் குழுவினை அமைப்பதன் மூலம் இது சாத்தியமாகும் என்றும் தெரிவித்துள்ளார். அப்பாவி மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தவிர்க்கவும் இந்திய மீனவர்களுக்கும் இலங்கைக் கடற்படையினருக்கும் இடையே நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஏதுவாகவும் உரிய தூதரக வழிமுறைகளை மேற்கொண்டு கூட்டு நடவடிக்கைக் குழுவினை கூட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இலங்கைக் காவலில் உள்ள தமிழ்நாடு மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விரைந்து விடுவித்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/174763
-
நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை இலங்கை நிறைவேற்றியமைக்கு அமெரிக்கா கவலை
Published By: PRIYATHARSHAN 25 JAN, 2024 | 01:45 PM பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசினால் சபைக்கு சமர்ப்பித்திருந்த நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் 46 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. இந்த நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளமை தொடர்பில் அமெரிக்கா தனது கவலையை வெளியிட்டுள்ளது. இது குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “சிவில் சமூகம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களின் கோரிக்கைகளை உள்ளடக்காமல் பாராளுமன்றில் நேற்று நிறைவேற்றப்பட்ட இலங்கையின் நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தின் சாத்தியமான தாக்கம் குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளது. ஜனநாயக விழுமியங்களை ஆபத்தில் தள்ளுவதுடன் தெளிவற்ற மற்றும் மிகையான கடுமையான சட்டங்கள் முதலீடு மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு இடையூறாக அமையும் என்பதுடன் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும். வெளிப்படைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்குமாறும், எந்தவொரு சட்டமும் மக்களின் குரல்களை நசுக்காமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் இலங்கையை அமெரிக்கா வலியுறுத்துகிறது என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சி வேட்பாளர்; முன்னிலையில் டொனால்டு டிரம்ப்
அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் அதிபர் வேட்பாளர் ஆகிறாரா? - அஞ்சும் நட்பு நாடுகள் பட மூலாதாரம்,REUTERS 24 ஜனவரி 2024 அமெரிக்காவின் அடுத்த அதிபர் வேட்பாளருக்கான போட்டியில், குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்குள் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். நிக்கி ஹேலியுடன் நேரடியாகப் போட்டியிடும் அவர், இன்று (ஜனவரி 23) நியூ ஹேம்ப்ஷைர் மாகாணத்தில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் வேட்பாளர் தேர்வுப் போட்டியில் 55% வாக்குகளைப் பெற்றிருக்கிறார். இதனால் எதிர்வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டிரம்ப் தான் என்பது முடிவாகி விட்டாது. இந்த முடிவுகள் வெளியானபோது உரையாற்றிய டிரம்ப், ஹேலி மற்றும் முன்னர் அவரது போட்டியாளரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி ஆகியோரைக் கடுமையாக விமர்சித்தார். ஆனால் டிரம்பை எதிர்த்துப் போட்டியிடும் நிக்கி ஹேலி, தான் போட்டியிலிருந்து விலகப் போவதில்லை என்று கூறியிருக்கிறார். இதையடுத்து டிரம்ப் ஹேலியை ‘மோசடிக்காரர்’ என்று விமர்சித்தார். நவம்பர் பொதுத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான அதிபர் ஜோ பைடனுடன் மீண்டும் போட்டியிடுவது இப்போது மிகவும் உறுதியாகத் தெரிகிறது. நியூ ஹாம்ப்ஷயரில் டிரம்பின் வெற்றி சமீபத்திய கருத்துக் கணிப்புகளால் கணிக்கப்பட்ட 20-புள்ளி வித்தியாசத்துடன் பொருந்தவில்லை என்றாலும், வேட்பாளர் போட்டியின் தற்போதைய நிலை மாறியுள்ளது. ஒவ்வொரு பகுதியில் நடக்கும் வாக்கெடுப்பிலும், ஒரு உண்மை தெளிவாகிறது. பல மாதங்களாக கருத்துக் கணிப்புகள் காட்டுவது போல், குடியரசுக் கட்சி இன்னும் டொனால்ட் டிரம்பின் கட்சிதான். பட மூலாதாரம்,FULTON COUNTY SHERIFF'S OFFICE படக்குறிப்பு, 2020ஆம் ஆண்டின் தேர்தலைக் கவிழ்க்க முயன்ற குற்றச்சாட்டில் கடந்த ஆணடு ஆகஸ்ட் மாதம் அவர் ஜார்ஜியா மாகாணத்தில் கைது செய்யப்பட்டார். அரசியல் வீழ்ச்சியிலிருந்து மீண்டு வந்த டிரம்ப் கடந்த சில ஆண்டுகளாகவே பல சர்ச்சைகளிலும் வழக்குகளிலும் டொனால்ட் டிரம்ப் சிக்கினார். அவரது அரசியல் வாழ்க்கையே முடிவுக்கு வந்துவிட்டதாகவும் பலர் நினைத்தனர். கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய கலவரம் அமெரிக்காவையே அதிரவைத்தது. கடந்த 2020ஆம் ஆண்டின் தேர்தலைக் கவிழ்க்க முயன்ற குற்றச்சாட்டில் கடந்த ஆணடு ஆகஸ்ட் மாதம் அவர் ஜார்ஜியாவில் கைது செய்யப்பட்டார். அதோடு சேர்த்து அவர் அப்போது வெவ்வேறு வழக்குகளுக்காக நான்கு முறை கைது செய்யப்பட்டிருந்தார். ஆனால் இவை அனைத்தையும் தாண்டி தற்போது அதிபர் வேட்பாளர் போட்டியில் முன்னிலை வகித்து வருகிறார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய கலவரம் அமெரிக்காவையே அதிர வைத்தது. இது எப்படி சாத்தியமானது? இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை என்கிறார் டிரம்பின் பட்ஜெட் இயக்குநராகவும், அவரது ஆட்சியில் வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியாகவும் இருந்த மிக் முல்வானே. ஓர் ஆண்டுக்கு முன்பு வரை டிரம்ப் மீண்டும் அரசியல் களத்தில் முன்னேற்றம் காண்பார் என்பது சந்தேகமாகவே இருந்தது, என்கிறார் அவர். “டிரம்ப் தனக்கு எதிராக நடந்த குற்ற விசாரணைகளையே தனக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டார்,” என்கிறார் முல்வானே. “பைடன் அரசாங்கம் அரசியல் எதிரிகளை வேட்டையாடுவது போல இதைச் சித்தரித்தார். இதை வைத்து வாக்காளர்களிடம் ஒரு செய்தியைச் சொன்னார். ‘எனக்கு நடப்பதைப் பாருங்கள். எனக்கே இந்த நிலைமை என்றால், உங்கள் நிலைமையை யோசித்துப் பாருங்கள். எனக்கு வாக்களித்தால் உங்களுக்கு இது நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன்’ என்றார் அவர்,” என்று முல்வானே பிபிசி ரேடியோ 4 நிகழ்ச்சியில் கூறினார். அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல் ஏன் முக்கியமானது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்காவின் பல நட்பு நாடுகள், டிரம்பின் மறுபிரவேசத்தைக் கண்டு மிகவும் பயப்படுகிறார்கள். அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலை அமெரிக்கா மட்டுமல்ல, உலகமே கூர்ந்து கவனிக்கிறது. அமெரிக்கா தற்போது யுக்ரேன், காஸா ஆகிய இரண்டு போர்களில் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில், அமெரிக்க-சீனா உறவுகள் மோசமடைந்து, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. மத்திய அமெரிக்க நாடுகளும் பேசுபொருளாக மாறியிருக்கின்றன. அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோர் எல்லை வழியாக அமெரிக்காவிற்குள் நுழைய முயற்சி செய்கிறார்கள். மேலும் ஏமனில் ஹூத்திகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட உலகின் எல்லாப் பகுதியிலும் அமெரிக்கத் தலைமை ஏதோவொரு வகையில் ஆதிக்கம் செலுத்துகிறது. டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவிக்கு வருவதற்கான வாய்ப்பும், அவரது ‘முதலில் அமெரிக்கா’ வெளியுறவுக் கொள்கையும், ஏற்கெனவே கொந்தளிப்பான இந்தச் சூழ்நிலையை மேலும் நிச்சயமற்றதாக ஆக்குகிறது. சில நாடுகள் அவர் மீண்டும் வருவதை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. ஆனால் அமெரிக்காவின் பல நட்பு நாடுகள், டிரம்பின் மறுபிரவேசத்தைக் கண்டு மிகவும் பயப்படுகிறார்கள். அமெரிக்காவில் அதிபர் வேட்பாளர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்? இந்த ஆண்டு நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் சிறப்பாக நடந்து வருகிறது. இது ஒன்பது குடியரசுக் கட்சியினர், நான்கு ஜனநாயகக் கட்சியினர், இரண்டு சுயேச்சைகள் என 15 வேட்பாளர்களுடன் தொடங்கியது. இரண்டு பிரதான கட்சிகளும் ஒரு அதிபர் வேட்பாளர், ஒரு தொடர் மாநில ப்ரைமரிஸ்(primaries) மற்றும் காக்கஸ்களை(Caucuses) நடத்துவதன் மூலம் பரிந்துரைக்கின்றன. இதில், கட்சிகளுக்கு இடையே வேறுபாடுகள் உள்ளன. செயல்முறையும் ஒரு மாகாணத்திற்கும் மற்றொரு மாகாணத்திற்கும் மாறுபடும். மார்ச் 3ஆம் தேதி "சூப்பர் செவ்வாய்" என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் அந்த நாளில் 12 மாகாணங்கள் தங்கள் முதன்மைப் போட்டிகளை நடத்தும். அதிபர் பைடன் இந்த ஆண்டின் தொடக்கத்தில்தான் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்தார். சில நீண்ட சவால்கள் இருந்தபோதிலும் - ஜனநாயகக் கட்சியின் வேட்புமனுவை எளிதாக வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசுக் கட்சியில், அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல் இரண்டு மாகாணப் போட்டிகளிலும் வெற்றி பெற்றார், மேலும் அவர் ஏற்கெனவே வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் எனத் தெரிகிறது. முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடியின் மருமகன் ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர் உட்பட சில சுயேட்சை வேட்பாளர்களும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். https://www.bbc.com/tamil/articles/cxx5k87yy3eo
-
அதிக போதைப்பொருள் நுகர்வால் இளைஞன் பலி!
போதைப்பொருளை நுகர்ந்த இளைஞன் உயிரிழப்பு - யாழில் சம்பவம்! 25 JAN, 2024 | 02:00 PM யாழ்ப்பாணம் நகரை அண்டிய கலட்டி பகுதியில் இளைஞன் ஒருவர் நேற்று புதன்கிழமை (24) சடலமாக மீட்கப்பட்டார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் , உடற்கூற்று பரிசோதனையில் இளைஞன் போதைப்பொருளை அதிக அளவு நுகர்ந்தமை கண்டறியப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாவகச்சேரி பகுதியில் இளைஞன் ஒருவர் போதைப்பொருள் பாவனையால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக பொலிசாரின் விசேட நடவடிக்கைக்கான "யுக்திய" நடவடிக்கை யாழ்ப்பாணத்திலும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலையே போதைப்பொருள் பாவனையால் குறித்த இரு மரணங்களும் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/174772
-
டெங்கு நோய்ப் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் யாழில் விழிப்புணர்வு நடைபவனி
25 JAN, 2024 | 01:44 PM யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நடைபவனி நேற்று (24) காலை திருநெல்வேலி சந்தி முதல் யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் வரை இடம்பெற்றது. வட மாகாண சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடைபவனி திருநெல்வேலி சந்தியில் ஆரம்பமாகி, பலாலி வீதி வழியாக பரமேஸ்வரா சந்தியினை அடைந்து, அங்கிருந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலை அடைந்தது. இந்த விழிப்புணர்வு நடைபவனியில் வட மாகாண சுகாதார பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி, யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன், நல்லூர் பிரதேச செயலாளர் யசோதா உதயகுமார், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி, கோப்பாய் பொலிஸார், சுகாதார பரிசோதர்கள், மருத்துவ தாதியர், யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தனியார் கல்வி நிறுவன மாணவர்கள், நல்லூர் பிரதேச சபையினர் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது டெங்கு நோய் தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டன. அத்துடன், பொது சுகாதார பரிசோதகர்களால் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன. https://www.virakesari.lk/article/174769
-
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் செய்திகள்
ஒரு வீரருக்கு இந்திய விசா தாமதமானதால் டெஸ்டையே புறக்கணிக்க இங்கிலாந்து தயாரானதா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இங்கிலாந்து கிரிக்கெட் வீரருக்கு இந்திய விசா கிடைப்பதில் தாமதம் 55 நிமிடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தின் புதிய சுழற்பந்து வீச்சாளரான சோயப் பஷீருக்கு இந்திய விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாக எழுந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த 20 வயதான, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் தற்போது இந்திய விசாவைப் பெற்றுள்ளார். அவர் இந்த வார இறுதியில் இந்தியாவுக்கு வந்து இங்கிலாந்து அணியுடன் இணைவார். எனினும், அவர் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விளையாட முடியாது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி, அபுதாபியில் நடைபெற்ற பயிற்சி போட்டிகளில் பங்கேற்று ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத் வந்தபோது, சோயப் பஷீர் மட்டும் அபுதாபியில் இருந்தார். செவ்வாய்க்கிழமை அன்று, பஷீர் இங்கிலாந்து சென்றதாக தெரியவந்தது. இதையடுத்து, புதன்கிழமை அவருக்கு இந்திய விசா கிடைப்பது உறுதி செய்யப்பட்டது. படக்குறிப்பு, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இந்திய சுற்றுப்பயணத்தில் விளையாட திடீரென தேர்வு செய்யப்பட்டார் ஷோயப் பஷீர் யார் இந்த ஷோயப் பஷீர்? உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சோமர்செட் அணிக்காக விளையாடும் சுழற்பந்து வீச்சாளரான ஷோயப் பஷீர், இங்கிலாந்தின் சர்ரேவில் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பெற்றோருக்கு பிறந்தார். அவர் இதுவரை ஆறு முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இந்திய சுற்றுப்பயணத்தில் விளையாட திடீரென தேர்வு செய்யப்பட்டார். இதில் வாய்ப்பு கிடைத்தால், அவர் தனது முதல் சர்வதேச போட்டியை இந்தியாவில் விளையாடுவார். சோயப் பஷீருக்கு இந்திய விசா கிடைத்ததற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES "இந்த விவகாரம் இப்போது தீர்க்கப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று அவ்வாரியம் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது. "சோயபிற்கு விசா கிடைத்துவிட்டது, அவர் இந்த வார இறுதியில் இந்தியா சென்று அணியில் சேருவார்". எனினும், வியாழக்கிழமை ஐதராபாத்தில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் பஷீர் விளையாடும் வாய்ப்பு முடிந்துவிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இங்கிலாந்து குடிமக்கள் இந்தியாவில் முறையாக நடத்தப்பட வேண்டும் என்று தனது அரசாங்கம் எதிர்பார்க்கிறது இந்தியா, இங்கிலாந்து அரசுகள் கூறுவது என்ன? பஷீருக்கு லண்டனில் விசா வழங்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மேலும் அவர், “இந்திய விசா வழங்குவது தொடர்பாக சில விதிமுறைகள் உள்ளன. அந்த விதிகள் இந்த வழக்கிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது" என்றார். "இங்கிலாந்து குடிமக்கள் இந்தியாவில் முறையாக நடத்தப்பட வேண்டும் என்று தனது அரசாங்கம் எதிர்பார்க்கிறது" என்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் செய்தித் தொடர்பாளர், செவ்வாய்கிழமையன்று கூறியிருந்தார். மேலும், “இதுகுறித்த விவரங்களைப் பற்றி பேச முடியாது. ஆனால் இந்திய தூதரகத்திடம் இதுபோன்ற பிரச்சினைகளை பல முறை எழுப்பியுள்ளோம்" என்று இங்கிலாந்து செய்தி தொடர்பாளர் கூறினார். அந்த அறிக்கையில், “பிரிட்டிஷ் குடிமக்களுக்கான விசா வழங்குவதில் இந்தியா எப்போதும் நேர்மையை கடைபிடிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பஷீரின் பங்களிப்பு இல்லாமல் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி விளையாட வாய்ப்பில்லை முதல் டெஸ்டை புறக்கணிக்க இங்கிலாந்து தயாரானதா? கடந்த புதன்கிழமை, பஷீருக்கு விசா கிடைக்கவில்லை என்ற செய்தி வந்தபோது, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், "பஷீரின் பங்களிப்பு இல்லாமல் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி விளையாட வாய்ப்பில்லை" என்றும் "போட்டி புறக்கணிக்கப்படும்" என்றார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை புறக்கணிக்கும் யோசனையை அணிக்கு முன்வைத்ததாக அவர் ஒப்புக்கொண்டார். ஆனால் அது சர்ச்சையாக மாறியது. “ஒரு தலைவராக, ஒரு கேப்டனாக, குழு உறுப்பினர்கள் இவ்வாறு பாதிக்கப்படும் போது, நீங்கள் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுவீர்கள், நான் அவருக்காக (பஷீர்) வருத்தப்படுகிறேன்", என்று தெரிவித்தார் பென் ஸ்டோக்ஸ். அதே நேரத்தில், பஷீருக்கு விசா கிடைக்காதது குறித்த கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவும் வருத்தம் தெரிவித்தார். அவர், "பஷீருக்காக நான் வருந்துகிறேன். அவர் இங்கிலாந்து அணியுடன் முதல் முறையாக இந்தியாவுக்கு வருகிறார். இது யாருக்கும் எளிதானது அல்ல" என்றார். "துரதிர்ஷ்டவசமாக இது பற்றிய கூடுதல் தகவல்களை வழங்க நான் விசா அலுவலகம் இல்லை. அவர் விரைவில் நம் நாட்டிற்கு வந்து, கிரிக்கெட் விளையாடுவார் என்று நம்புகிறேன்" என்றார் ரோகித் சர்மா. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டது. பாகிஸ்தானிய வீரர்களுக்கு விசாவில் சிக்கல் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான நெடுங்காலமாக இருக்கும் பதற்றம் விளையாட்டுத் துறையையும் பாதித்துள்ளது. பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவர், இந்தியா செல்வதில் சிரமப்படுவது இது முதல் முறையல்ல. ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா பாகிஸ்தானில் பிறந்தார். கடந்த ஆண்டு அவர் டெஸ்ட் போட்டி சுற்றுப்பயணத்திற்காக இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு, இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் பங்கேற்க வரும் பாகிஸ்தான் அணி வீரர்கள் அனைவரும் விசா பெறுவதில் இதுபோன்ற பிரச்னைகளைச் சந்தித்தார்கள். டெஸ்ட் போட்டிகளுக்கான பிபிசியின் சிறப்பு வர்ணனையாளரான ஆதிப் நவாஸும் உலகக்கோப்பைக்காக இந்திய விசா பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவரது குடும்பம் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் அவரால் இந்தியா செல்ல முடியவில்லை. இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ள சுழற்பந்து வீச்சாளர் ரெஹான் அகமது பாகிஸ்தானை வம்சாவளியை சேர்ந்தவர். கடந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளுக்கு பிறகு அவருக்கு விசா கிடைத்ததால், அவர் உலகக்கோப்பை போட்டியில் ரிசர்வ் வீரராக சேர்க்கப்பட்டார். https://www.bbc.com/tamil/articles/cx8jn34zp1yo
-
உல்ஃபா பிரிவினைவாத அமைப்பு கலைப்பு
44 ஆண்டுகளுக்கு பிறகு உல்ஃபா பிரிவினைவாத அமைப்பு கலைப்பு 25 JAN, 2024 | 10:50 AM குவாஹாட்டி: இந்தியாவின் அசாமை தளமாக கொண்டஆயுதம் ஏந்திய பிரிவினைவாத அமைப்பான உல்ஃபா உருவான 44 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று முறைப்படி கலைக்கப்பட்டது. இந்த அமைப்பினர் தங்கள் ஆயுதங்களை இம்மாதம் அரசிடம் ஒப்படைக்க உள்ளனர். இறையாண்மை கொண்ட அசாமை உருவாக்கும் நோக்குடன் உல்ஃபா (அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி) அமைப்பு கடந்த 1979-ம்ஆண்டு வடக்கு அசாமின் சிவசாகரில் உருவானது. ஆயுதம் ஏந்திய இந்த பிரிவினைவாத அமைப்புஇ தொடர்ந்து அரசுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு வந்தது. இதனால் கடந்த 1990-ல் இந்த அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து உல்ஃபா அமைப்புக்கும் மத்திய அரசுக்கும் இடையேகடந்த 12 ஆண்டுகளாக நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை. நடைபெற்று வந்தது. இந்த பலனாக அசாம் மற்றும் மத்திய அரசுடன் இந்த அமைப்பு கடந்த டிசம்பர் 29-ம்தேதி முத்தரப்பு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. வன்முறையை கைவிடவும் தேசிய நீரோட்டத்தில் இணையவும் அந்த அமைப்பு ஒப்புக்கொண்டது. இந்நிலையில் இந்த அமைப்பின் கடைசி பொதுக்குழு கூட்டம் சிபாஜர் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முத்தரப்பு அமைதி ஒப்பந்தம் அடிப்படையில் உல்ஃபா அமைப்பை கலைப்பது என முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்து உல்ஃபா பொதுச் செயலாளர் அனுப் சேத்தியா நேற்று கூறும்போது “எங்கள் அமைப்பின் 9 முகாம்களை சேர்ந்த 900 உறுப்பினர்களின் கூட்டம் மத்திய அசாமின் மங்கல்டோய் முகாமில் நடைபெற்றது. இதில்அமைப்பை கலைக்கும் முடிவுஅங்கீகரிக்கப்பட்டது. முகாம்கள்இருந்த நிலத்தை விவசாயத்துக்காக எங்கள் உறுப்பினர்களுக்கு அசாம் அரசு வழங்க வேண்டும். முகாம்களில் உள்ள ஆயுதங்கள் இம்மாதம் நடைபெறும் விழாவில்அரசிடம் முறைப்படி ஒப்படைக்கப்படும். அசாம் விகாஷ் மன்ச்சா என்ற புதிய சமூக அமைப்பு உருவாக்கப்படும். விருப்பமுள்ள எங்கள் உறுப்பினர்கள் இதில் சேரலாம். வளர்ச்சித் திட்டங்களின் பலன்களை பெறவும் தன்னிறைவு அடையவும் பொதுவான தளமாக இது இருக்கும்” என்றார். 2011 பிப்ரவரியில் உல்ஃபா இரண்டு குழுக்களாக பிரிந்தது.அரபிந்த ராஜ்கோவா தலைமையிலான குழு வன்முறையை கைவிட்டு அரசுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது. பரேஷ் பரூவா தலைமையிலான குழு பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்தது. ‘உல்ஃபா இன்டிபென்டன்ட்’ என்ற பெயரில் செயல்பட முடிவு செய்தது. மியான்மர் மற்றும் வடகிழக்கின் சில பகுதிகளில் முகாமிட்டுள்ள இக்குழுவில் 200 உறுப்பினர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. https://www.virakesari.lk/article/174760
-
ஏமனில் அமெரிக்க கூலிப்படை பணத்திற்காக என்ன செய்கிறது தெரியுமா? பிபிசி புலனாய்வு
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஏமனின் ஒரு பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சௌதி தலைமையிலான கூட்டணியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ராணுவம் ஒரு அங்கமாக உள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், நவல் அல்-மகாஃபி பதவி, பிபிசி நியூஸ், அரபு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஏமனில் அரசியல் படுகொலைகளைச் செய்யும் நபர்களுக்கு நிதியளித்துள்ளது. இது அரசாங்கத்திற்கும் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதலை மேலும் மோசமாக்கியுள்ளது. இதுகுறித்த தகவல்கள் சமீபத்தில் செங்கடலில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து உலக நாடுகளுக்குத் தெரியவந்துள்ளது. பிபிசி நடத்திய புலனாய்வின் மூலம் இந்தத் தகவல் அம்பலப்படுத்தப்பட்டது. ஏமனில் உள்ள எமிரேட்ஸ் அதிகாரிகளுக்கு அமெரிக்க கூலிப்படையினரால் வழங்கப்படும் பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சியானது, உள்ளூர் மக்களை கீழ்த்தரமான செயல்களைச் செய்யப் பயிற்றுவிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது. இது அரசியல் படுகொலைகளின் கணிசமான அதிகரிப்புக்கு வழிவகுத்தது என்று ஒரு தகவலறிந்தவர் பிபிசி நியூஸ், அரபு புலனாய்வுக் குழுவிடம் தெரிவித்தார். அல்கொய்தா மற்றும் தெற்கு ஏமனில் செயல்படும் ஐ.எஸ். ஆகிய ஜிஹாதி குழுக்களை ஒழிப்பதே அமெரிக்கக் கூலிப்படைகளின் குறிக்கோளாக இருந்த போதிலும், ஹூத்திகள் மற்றும் பிற ஏமன் ஆயுதப் பிரிவுகளுக்கு எதிராகப் போரிடுவதற்காக அல்கொய்தாவின் முன்னாள் உறுப்பினர்களை எமிரேட்ஸ் உண்மையில் நியமித்துள்ளது என்பதையும் பிபிசி கண்டறிந்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் பயங்கரவாதத்துடன் எந்த தொடர்பும் இல்லாதவர்களின் கொலைகள் தொடர்பான பிபிசி விசாரணையில் உள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. இந்த குற்றச்சாட்டுககள் "பொய் மற்றும் ஆதாரமற்றவை" என்று கூறியுள்ளது. பட மூலாதாரம்,JACK GARLAND/BBC படக்குறிப்பு, வழக்கறிஞர் ஹுடா அல்-சராரி ஏமனில் மனித உரிமைகளுக்கு ஆதரவாக செய்த பணிக்கான பதிலடியாக 2019 இல் தனது மகனை இழந்தார். மூன்று வருட காலப்பகுதியில் ஏமனில் 100 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டது மத்திய கிழக்கின் ஏழ்மையான நாட்டில் பல சர்வதேச சக்திகளை ஒருவருக்கொருவர் எதிர்த்து நிற்கும் கசப்பான உள் மோதலின் ஒரு கூறு மட்டுமே. இந்த சூழ்நிலைகள் ஏமனின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசாங்கம் நிரந்தரமாக திரும்புவதை ஊக்கப்படுத்தியுள்ளது. கப்பல்களைத் தாக்கி, செங்கடலில் வர்த்தகத்தை சீர்குலைப்பதற்காக சமீபத்தில் செய்திகளில் வந்த இரான் ஆதரவு ஹூத்திகளுக்கு இது மறைமுகமாக உதவியது என்று கூட ஒருவர் வாதிடலாம் . சமீபத்திய நாட்களில், அக்குழுவை "உலகளாவிய பயங்கரவாதிகள்" என்று மறுபெயரிடப் போவதாக அமெரிக்கா அறிவித்தது. ஏமனில் 2014 ஆம் ஆண்டு தொடங்கிய மோதலைப் பற்றி நான் செய்திகளை அளித்து வருகிறேன். சண்டையின் காரணமாக நாட்டின் வடபகுதியை ஹூத்திகளிடம் அரசு நேரிட்டது. அவர்கள் பல ஆண்டுகளாக மிகவும் திறமையான மற்றும் சிறந்த உபகரணங்களைப் பெற்றிருந்த நிலையில், அவர்களிடம் அரசு அதிகாரங்கள் சென்றடைந்தன. 2015 ஆம் ஆண்டில், அமெரிக்காவும் பிரிட்டனும் ஹூத்திகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு சௌதி அரேபியா தலைமையிலான பெரும்பாலான அரபு நாடுகளின் கூட்டணியை ஆதரித்தன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதில் ஒரு முக்கிய கூட்டாளியாக இருந்தது. நாடு கடத்தப்பட்ட ஏமன் அரசாங்கத்தை மீண்டும் நிறுவுதல் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் நோக்கத்துடன் அக்கூட்டணி ஏமனை ஆக்கிரமித்தது. நாட்டின் தென்பகுதியின் பாதுகாப்பு பொறுப்பு எமிரேட்ஸிடம் விடப்பட்டது என்பதுடன் பிராந்தியத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியாக அந்நாடு உருவெடுத்தது. அல்கொய்தா நீண்ட காலமாக தெற்கில் இருந்து தனது பிரதேசத்தை கைப்பற்றி வைத்துள்ளது. ஆனால் அதிக ஸ்திரத்தன்மைக்கு பதிலாக, எனது பூர்வீக நாடான ஏமனுக்கு நான் அடிக்கடி செல்லும் பயணங்களின் போது, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு பகுதிகளில் மர்மமான முறையில் கொலைகள் அதிகரித்ததை நான் கண்டேன். இதில் பாதிக்கப்பட்டவர்கள் பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பில்லாத ஏமன் குடிமக்களாக இருந்தனர். சர்வதேசச் சட்டத்தின் கீழ், உரிய நடைமுறையின்றி பொதுமக்களைக் கொல்வது சட்டத்திற்குப் புறம்பான, நீதித்துறைக்கு அப்பாற்பட்ட மரண தண்டனையாகக் கருதப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அதன் நட்பு நாடுகளின் முயற்சிகள் இருந்தபோதிலும், ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் ஏமனின் பெரும்பகுதியை தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் ஏமன் கிளையான இஸ்லாத்தை சேர்ந்தவர்கள். இது ஒரு பிரபலமான சர்வதேச சுன்னி இஸ்லாமிய இயக்கமாகும். இது அமெரிக்காவால் ஒருபோதும் பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தப்படவில்லை. ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட பல அரபு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு நாட்டின் அரச குடும்பம் அதன் அரசியல் செயல்பாடு மற்றும் தேர்தல்களுக்கான ஆதரவை அச்சுறுத்தலாகக் கருதுகிறது. முதல் கொலை தொடர்பாக கசிந்த ட்ரோன் காட்சிகள் இந்த மர்மமான மரணங்களை விசாரிக்க எனக்கு தொடக்கப் புள்ளியைக் கொடுத்தன. டிசம்பர் 2015 இல் பதிவு செய்யப்பட்ட ஒரு காட்சி, ஸ்பியர் ஆபரேஷன்ஸ் குரூப் என்ற அமெரிக்க பாதுகாப்பு நிறுவனத்தின் உறுப்பினர்களுக்குக் கிடைத்தது. 2020 இல் லண்டன் உணவகத்தில் உள்ள படங்களில் காணப்பட்ட அறுவை சிகிச்சையின் பின்னணியில் இருந்த ஒருவரை நான் சந்தித்தேன். முன்னாள் கடற்படை சீல்ஸ் உறுப்பினரான ஐசக் கில்மோர், பின்னர் ஸ்பியரின் செயல்பாட்டு இயக்குநரானார். ஏமனில் படுகொலைகளை மேற்கொள்ள எமிரேட்ஸ் அரசாங்கத்தால் பணியமர்த்தப்பட்டதாகக் கூறிய பல அமெரிக்கர்களில் ஒருவராக அவர் இருக்கிறார். கில்மோர் ஸ்பியருக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) வழங்கிய "கொலை பட்டியலில்" உள்ளவர்களைப் பற்றி விவாதிக்க மறுத்துவிட்டார். அவருடைய முதல் பணியின் இலக்கைத் தவிர: முதல் இலக்காக 2015 முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவரும், தெற்கு துறைமுக நகரமான தற்காலிக தலைநகர் ஏடனில் இஸ்லாஹ்வின் தலைவராகவும் செயல்பட்ட அன்சாஃப் மாயோ தான் அவர். அமெரிக்க அதிகாரிகள் இஸ்லாஹ்வை ஒருபோதும் பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தவில்லை என்பது குறித்து நான் அவரிடம் கேட்டபோது, அவர் கூறினார்: "நவீன மோதல்கள் துரதிர்ஷ்டவசமாக மிகவும் வெளிப்படையின்றி உள்ளன. இதை நாங்கள் ஏமனில் காண்கிறோம். ஒரு சிவிலியன் மற்றும் மதகுரு தலைவரை வேறொருவர் பயங்கரவாதியாகத் தான் அங்கே பார்க்க முடிகிறது." பட மூலாதாரம்,JACK GARLAND/BBC படக்குறிப்பு, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஐசக் கில்மோர், எமிரேட்ஸ் மற்றும் ஏமன் படைகளுக்கு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பயிற்சி அளித்ததாக பிபிசியிடம் ஒப்புக்கொண்டார். ஏமனில் இருந்த மற்றொரு ஸ்பியர் ஊழியரான டேல் காம்ஸ்டாக், கில்மோர் மற்றும் அவருடைய பணி 2016 இல் முடிவடைந்தது என்று கூறினார். இருப்பினும், தெற்கு ஏமனில் கொலைகள் தொடர்ந்தன. உண்மையில், மனித உரிமைகள் அமைப்பான ரிப்ரைவ் அளித்த தகவல்களின் படி, அவை அடிக்கடி நிகழ்ந்தன. 2015 மற்றும் 2018 க்கு இடையில் ஏமனில் நடத்தப்பட்ட 160 கொலைகளை குழு விசாரித்தது என்பதுடன் பெரும்பாலான கொலைகள் 2016 இல் நடந்ததாகக் கூறியது. 160 இறப்புகளில் 23 பேர் மட்டுமே பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என்றும் அக்குழு தெரிவித்தது. அனைத்து கொலைகளும் ஸ்பியர் பயன்படுத்திய அதே தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்டதையும் அவர்கள் கண்டறிந்தனர்: ஒரு கவனச்சிதறலாக ஐஈடி (IED) வெடிகுண்டை வெடிக்கச் செய்து, அதன் பின் துப்பாக்கி சூடு நடத்துவதே அந்த தந்திரமாக இருந்தது. ஏமன் மனித உரிமைச் செயற்பாட்டாளரும், வழக்கறிஞருமான ஹுடா அல்-சராரியின் கூற்றுப்படி, மிக சமீபத்தில் கடந்த மாதம் இதே முறையைப் பயன்படுத்தி லாஜ் நகரில் ஒரு இமாம் கொல்லப்பட்ட போது அந்தத் தந்திரம் கண்கூடாகத் தெரிந்தது. கில்மோர், காம்ஸ்டாக் மற்றும் அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாத வேறு இரண்டு ஸ்பியர் கூலிப்படையினர் ஏமன் நாட்டின் ஏடனில் உள்ள இராணுவ தளத்தில் எமிரேட்ஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதில் ஸ்பியர் ஈடுபட்டதாகக் கூறினர். பெயர் வெளியிட விரும்பாத ஒரு பத்திரிகையாளரும் அத்தகைய பயிற்சி குறித்த காட்சிகளைப் பார்த்ததாகக் கூறினார். கூலிப்படையினர் மேலும் விரிவான விவரங்களைத் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளுடன் நேரடியாக பணிபுரிந்த மூத்த ஏமன் அதிகாரி ஒருவர் கூடுதல் தகவல்களை அளித்தார். அவர்களின் சுயவிவரத்தின் காரணமாக, கூலிப்படையினர் ஏமனில் கவனத்தை ஈர்த்ததால், அவர்களின் பணி எமிரேட்ஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் விதத்திற்கு மாறியது. "அவர்கள் உள்ளூர் ஏமன்களுக்குப் பயிற்சி அளிக்கத் தொடங்கினர்," என்று ஏமன் சீருடை அணிந்தவர் பிபிசியிடம் தெரிவித்தார். பட மூலாதாரம்,JACK GARLAND/BBC படக்குறிப்பு, அல்-இஸ்லாஹ் குழுவின் தலைவரான அன்சாஃப் மாயோ, தாக்குதலுக்கு இலக்கான பின்னர் அவர் நாடுகடத்தப்பட்டார். விசாரணை முழுவதும், ஒரு டஜனுக்கும் மேற்பட்ட ஏமன் நாட்டு சாட்சிகளையும் கலந்தாலோசித்து தகவல் உறுதிப்படுத்தப்பட்டன. எமிரேட்ஸ் படையினரின் பயிற்சியை நிறைவு செய்த பின்னர், பயங்கரவாதத்துடன் தொடர்பில்லாத நபர்களை கொலை செய்ததாகக் கூறிய இருவரும் அவர்களில் இருந்தனர். ஒரு மூத்த ஏமன் அதிகாரியை கொலை செய்வதற்கு ஈடாக, எமிரேட்ஸ் சிறையில் இருந்து தன்னை விடுவிக்க முன்வந்ததாகவும், ஆனால் அதைத் தான் ஏற்கவில்லை என்றும் ஒரு நபர் கூறினார். ஏமனியர்கள் கொலைகளைச் செய்ததால், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் சென்று அதைப் பற்றி விசாரிப்பது மிகவும் சவாலானதாக மாறியது. 2017 ஆம் ஆண்டில், எமிரேட்ஸ் ஏமனில் ஒரு துணை ராணுவப் படையை தெற்கு இடைநிலை கவுன்சில் (STC) பகுதியில் உருவாக்க உதவியது. அப்படை, நாட்டின் தெற்கு பகுதியில் ஆயுதக் குழுக்களின் வலையமைப்பை இயக்கும் ஒரு பாதுகாப்பு அமைப்பாகும். இந்த படை ஏமன் அரசில் இருந்து சுயாதீனமாக இயங்கியது என்பதுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து உத்தரவுகளை மட்டுமே பெற்றது. போராளிகள் சுறுசுறுப்பான முன்னணியில் போராடுவதற்கு மட்டும் பயிற்சியளிக்கப்படவில்லை. குறிப்பாக ஒரு குழு, பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு, படுகொலைகளை நடத்துவதற்கு பயிற்சி பெற்றதாக, தகவலறிந்தவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹுத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் வணிகக் கப்பல்களுக்கு எதிராக நடத்திய தொடர் தாக்குதல்களால் மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளனர். இப்போது சதர்ன் ட்ரான்சிஸனல் கவுன்சில் பகுதியில் செயல்படும் துணை ராணுவ படையில் பணிபுரியும் முன்னாள் அல் கொய்தா உறுப்பினர்களின் 11 பெயர்களைக் கொண்ட ஆவணத்தை, அந்தத் தகவல் அளித்தவர் எங்களுக்கு அனுப்பியுள்ளார். அவர்களில் சிலரின் அடையாளங்களை நாங்கள் சரிபார்க்க முடிந்தது. புலன் விசாரணையின் போது, நாசர் அல்-ஷிபாவின் பெயரையும் பிபிசி கண்டுபிடித்தது. அவர் ஒரு காலத்தில் அல்கொய்தாவின் உயர் பதவியில் இருந்தவர் என்பதுடன் பயங்கரவாதத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் பின்னர் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். 2000 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 17 மாலுமிகளைக் கொன்ற அமெரிக்க போர்க்கப்பலான யுஎஸ்எஸ் கோல் மீதான தாக்குதலில் அல்-ஷிபாவுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக நாங்கள் பேசிய ஏமன் அமைச்சர் ஒப்புக்கொண்டார். ஆனால் தற்போது அந்த அல்-ஷிபா சதர்ன் ட்ரான்சிஸனல் கவுன்சிலில் செயல்படும் துணை ராணுவப் பிரிவுகளில் ஒன்றின் தளபதியாக இருக்கிறார் என்பதற்கு பல ஆதாரங்கள் எங்களிடம் கிடைத்துள்ளன. வழக்கறிஞர் ஹுடா அல்-சராரி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிதியுதவி பெறும் இந்த படைகள் செய்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் அவரது பணியின் விளைவாக அவருக்கு அடிக்கடி கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. இருப்பினும், அவரது 18 வயது மகன் மொஹ்சென் தான் தனது உயிரை விலையாகக் கொடுக்கவேண்டியிருந்தது. அந்த இளைஞர் மார்ச் 2019 இல் உள்ளூர் எரிவாயு நிலையத்திற்குச் சென்ற போது மார்பில் சுடப்பட்டு ஒரு மாதத்திற்குப் பிறகு பரிதாபமாக உயிரிழந்தார். ஹுடா அவரது மரணத்திற்குப் பிறகு மீண்டும் தனது பணிகளைத் தொடங்கியபோது, அப்பணிகளில் ஈடுபடக்கூடாது என தன்னை எச்சரிக்கும் செய்திகள் வந்ததாக அவர் கூறினார். "ஒரு மகன் போதாதா? மேலும் ஒரு உயிரைப் பறிகொடுக்க வேண்டுமா?" என மிரட்டல்கள் வந்தன என்றார். ஏடன் வழக்கறிஞரின் அடுத்தடுத்த விசாரணையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆதரவு பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் உறுப்பினரால் மொஹ்சென் என்பவர் கொல்லப்பட்டார் என்று கண்டறியப்பட்டது. இருப்பினும் அதிகாரிகள் அந்தந்த நீதித்துறை செயல்முறையைத் தொடங்கவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக பெயரிடப்படாத அரசுத் தரப்பு உறுப்பினர்கள், பரவலான கொலைகள் அச்சத்தின் சூழலை உருவாக்கிவிட்டதாகவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆதரவு பெற்ற படைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் நீதியைப் பெற அவர்கள் கூட பயப்படுவதாகவும் தெரிவித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஏமனில் நடைபெறும் போரில் முழுமையாக ஈடுபட்டுள்ளது. 2020 இல் ஸ்பியர் அமைப்பு மேலும் பணம் செலுத்தியதாகக் காட்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கசிந்த ஆவணத்தை ரிப்ரீவ் பெற்றார். இருப்பினும் ஏன் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஸ்பியர் நிறுவனர் ஆபிரகாம் கோலனிடம் அவரது கூலிப்படையினர் எமிரேட்ஸைச் சேர்ந்தவர்களுக்கு படுகொலை செய்வது குறித்து பயிற்சி அளித்தார்களா என்று கேட்கப்பட்டது. ஆனால் அவர் அதற்குப் பதிலளிக்கவில்லை. பிபிசி விசாரணையின் முடிவுகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டன. ஆனால், பயங்கரவாதத்துடன் எந்த தொடர்பும் இல்லாதவர்களை கொலை செய்ய முயன்றதாக கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்கள் தவறானது அரசு மறுத்துவிட்டது. மேலும், ஏமனில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக அரசு கூறியது. "இந்த நடவடிக்கைகளின் போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சர்வதேச சட்டத்தின்படி செயல்பட்டது," ஏமன் அதிகாரிகள் பதிலளித்தனர். ‘ஸ்பியர் ஆபரேஷன்ஸ்’ குழுவைப் பற்றி விவாதிக்க அமெரிக்க பாதுகாப்பு மற்றும் அரசுத் துறைகளிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அக்கேள்வி குறித்து பதில் அளிக்க அத்துறைகள் மறுத்துவிட்டன. மேலும், "இது போன்ற ஒரு நடவடிக்கைக்கு அமெரிக்காவின் நடுவண் ஒற்று முகமை (CIA) ஒப்புதல் அளித்தது என்ற கருத்து தவறானது," என அமெரிக்க அரசு புலனாய்வு அமைப்பு ஒரு அறிக்கையில் கூறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐக்கிய அரபு எமிரேட்ஸால் பணியமர்த்தப்பட்ட அமெரிக்க கூலிப்படையினரால் பயிற்சியளிக்கப்பட்ட படைகளால் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு ஹுத்திகளும் பிற எதிர்ப்பாளர்களும் இலக்காகியுள்ளனர். சுருக்கமாக நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 2014 ஆம் ஆண்டில், ஏமனின் ஷியா முஸ்லிம் சிறுபான்மையினரின் ஒரு பிரிவைச் சேர்ந்த ஹூத்தி போராளிகள், தலைநகரான சனாவைக் கைப்பற்றினர். பிப்ரவரி 2015 இல் சனாவில் வீட்டுக் காவலில் இருந்து தப்பி ஓடிய பின்னர் அதிபர் மன்சூர் ஹாதி தெற்கு நகரமான ஏடனில் ஒரு தற்காலிக தலைநகரை நிறுவினார். சௌதி அரேபியாவும் மற்ற எட்டு சன்னி அரபு நாடுகளும் ஹூத்திகளுக்கு எதிராக ஒரு வான்வழித் தாக்குதலைத் தொடங்கின. அந்நாடுகள் பிராந்திய எதிரியான இரானால் தான் ஆயுதம் ஏந்தியதாகக் கூறினர். சௌதி தலைமையிலான கூட்டணி அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் ஆதரவையும் பெற்றுள்ளது. வெளிப்படையாக ஒரே தரப்பில் இருப்பவர்களிடையே போர்கள் கூட நடந்துள்ளன. ஆகஸ்ட் 2019 இல், சௌதி ஆதரவுடைய அரசாங்கப் படைகளுக்கும், தெற்குப் பிரிவினைவாத இயக்கத்துக்கும் இடையே தெற்கில் போர் வெடித்தது. தெற்கில் செயல்படும் அமைப்புக்கள் அதிபர் ஹாதி தவறான நிர்வாகம் செய்வதாகவும் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் குற்றம் சாட்டின. அரேபிய தீபகற்பத்தில் உள்ள அல்கொய்தாவின் போராளிகள் மற்றும் போட்டி ஐ.எஸ். குழுவின் உள்ளூர் துணை அமைப்பினர் குழப்பத்தை பயன்படுத்தி தெற்கில் நிலப்பரப்பைக் கைப்பற்றி, குறிப்பாக ஏடனில் கொடிய தாக்குதல்களை நடத்துகின்றனர். ஹூத்திகள் தங்கள் சொந்த செல்வாக்கை விரிவுபடுத்தியுள்ளனர். நவம்பர் 2023 இல் அவர்கள் செங்கடலில் சர்வதேச கப்பல் வழித்தடங்களைத் தாக்கத் தொடங்கியதன் மூலம் இது வெளிச்சத்துக்கு வந்தது. https://www.bbc.com/tamil/articles/c9x0y63kyelo
-
நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் : 224 உறுப்பினர்கள் எதிராக வாக்களிக்க வேண்டும் - சிவில் அமைப்பினர் கூட்டாக வலியுறுத்தல்
யாழில் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்துக்கு அழைப்பு 25 JAN, 2024 | 11:53 AM ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை (25) மாலை 4 மணிக்கு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பேருந்து நிலையத்தின் முன் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது. தென்னிலங்கை ஊடக அமைப்புக்களின் பங்கேற்புடன் இடம்பெறும் இப்போராட்டத்தில் அனைத்து தரப்பினரையும் அணி திரளுமாறு யாழ். ஊடக அமையம் கேட்டுக்கொண்டுள்ளது. https://www.virakesari.lk/article/174766
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
24 நாட்களில் 46 இந்திய மீனவர்கள் கைது கடந்த 24 நாட்களில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக 46 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 8 இந்திய மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையின் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள், சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/289342
-
வடக்கில் மீன்பிடித்துறைசார் முதலீட்டு வலயம் தொடர்பில் சீனாவுடன் பேச்சுவார்த்தை - இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தகவல்
Published By: VISHNU 24 JAN, 2024 | 07:41 PM (எம்.மனோசித்ரா) வடக்கை அடிப்படையாகக் கொண்டு மீன்பிடித்துறை சார் முதலீட்டு வலயத்தை ஆரம்பிப்பது தொடர்பில் வியாழக்கிழமை (25) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சீன நிறுவனமொன்றுடன் விசேட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார். அத்தோடு உள்நாட்டு டின்மீன் உற்பத்தியாளர்களின் மேம்பாட்டைக் கருத்திற் கொண்டு டின் மீன் இறக்குமதிக்கு தடை விதிப்பதற்கும் அண்மையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மீனவர் நலன்புரி சேவை திட்டத்தை நாளை வெள்ளிக்கிழமை வெல்லமங்கரை மீன்பிடி துறைமுகத்தில் ஆரம்பிக்கவுள்ளோம். ஆழ்கடலில் மீனவர்கள் சுகவீனமடையும் போது, அவர்களுக்கான அவசர சுகாதார சேவைகளை வழங்குவது குறித்து இதன் போது அதிக அவதானம் செலுத்தப்படும். கடற்றொழில் அமைச்சு, சுகாதார அமைச்சுடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஐஸ் விலை அதிகரிப்பு தொடர்பிலும், எரிபொருளுக்கான மாற்று திட்டம் தொடர்பிலும், மண்ணெண்ணெய் எஞ்சின் கொண்ட படகுகளுக்கான மாற்று திட்டம் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. தேசிய டின் மீன் உற்பத்தியாளர்களை மேம்படுத்துவதற்காக, டின்மீன் இறக்குமதிக்கு தடை விதிப்பதற்கு கடற்றொழில் அமைச்சு, மீன்பிடித் திணைக்களம் இணைந்து செயற்பட்டு வருகிறது. மேலும் மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான நடமாடும் சேவைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வடக்கை அடிப்படையாகக் கொண்டு மீன்பிடித்துறை சார் முதலீட்டு வலயத்தை ஆரம்பிப்பதற்காக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சீனா உட்பட பல்வேறு நாடுகளிடமிருந்து புதிய யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை (25) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் சீன நிறுவனமொன்றுடன் இது தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளது. எதிர்காலத்தில் வடக்கில் மாத்திரமின்றி மீனவர்கள் வாழும் சகல மாகாணங்களையும் உள்ளடக்கி இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதே எமது நோக்கமாகும். நாடுகளுக்கிடையிலான உறவுகளில் எவ்வித விரிசலும் ஏற்படாத வகையிலேயே இலங்கை - இந்திய மீனவர் பிரச்சனையை அணுகுகின்றோம். வடக்கு மீனவர்கள் எதிர்கொள்ளும் இந்த பிரதான பிரச்சினை தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்துள்ளோம். இவ்விடயத்தில் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு கடற்படைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/174738
-
தமிழ்நாடு ராவணனை கொண்டாட தொடங்கியது எப்போது தெரியுமா?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கம்பரால் ராமாயணம் இயற்றப்படுவதற்கு முன்பே தமிழில் ராமாயணக் கதை நிலவிவந்தது என்கிறார்கள் தமிழறிஞர்கள். கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 24 ஜனவரி 2024 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் ராமர் பக்தியோடு வணங்கப்படுவதைப் போலவே, ராவணனை அங்கீகரிக்கும் போக்கும் இருக்கிறது. இது எவ்வளவு காலமாக இருக்கிறது? இதற்குக் காரணம் என்ன? ஜனவரி 22ஆம் தேதியன்று அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்ட தினத்தன்று நாடு முழுவதும் ராமர் குறித்தும், ராமர் கோவில் குறித்தும் உற்சாகமாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாகின. ஆனால், நாட்டின் தென் பகுதியான தமிழகத்தில், #ராவணன் என்ற ஹாஷ்டாகின் கீழ் பதிவுகள் வெளியாகின. அதில் ராவணனை முன்னிறுத்தி பலர் பதிவுகளை வெளியிட்டனர். ராமாயணத்தின் பிரதான எதிர் கதாபாத்திரமான ராவணன் போற்றப்படுவது இந்தியாவுக்கு புதிதல்ல. இந்தியாவின் பல கோவில்களில் ராவணனின் உருவம் வணங்கப்படுகிறது. அதற்குக் காரணம், மிகப் புனிதமான ஒரு இதிகாசத்தின் அங்கமாக ராவணன் இருப்பதுதான். ஆனால், தமிழ்நாட்டில் ராவணன் போற்றப்படுவதற்கான காரணங்கள் முற்றிலும் மாறானவையாக இருக்கின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியாவின் பல கோவில்களில் ராவணனின் உருவம் வணங்கப்படுகிறது ராமாயணம் தமிழ்நாட்டில் தாக்கம் செலுத்தத் தொடங்கியது எப்போது? தமிழில் வால்மீகியின் ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட காப்பியங்களில் கம்பரின் ராமாயணம் மிக முக்கியமானது. ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து 12ஆம் நூற்றாண்டிற்குள் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் கம்ப ராமாயணம், இயற்றப்பட்ட காலத்திலிருந்து தமிழில் பெரும் செல்வாக்கைச் செலுத்திவரும் இதிகாசமாக இருக்கிறது. ஆனால், கம்பரால் ராமாயணம் இயற்றப்படுவதற்கு முன்பே தமிழில் ராமாயணக் கதை நிலவிவந்தது என்கிறார்கள் தமிழறிஞர்கள். சிலப்பதிகாரத்தில் வரும் "அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்/ பெரும்பெயர் மூதூர்பெரும்பே துற்றதும்" என்ற வரிகளைச் சுட்டிக்காட்டி, சிலப்பதிகார காலத்திலேயே ராமாயணக் கதை தாக்கம் செலுத்தியது என தனது தமிழர் பண்பாடு நூலில் குறிப்பிடுகிறார் எஸ். வையாபுரிப்பிள்ளை. இது தவிர, புறநானூறு, அகநானூறு, மதுரைக் காஞ்சி, பரிபாடல் ஆகியவற்றிலும்கூட ராமாயண பாத்திரங்களை, சம்பவங்களை உவமானமாகக் காட்டும் போக்கையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். திருஞானசம்பந்தரின் திருநீற்றுப் பதிகத்திலும் "இராவணன் மேலது நீறு" என குறிப்பிடப்பட்டு, அவர் சைவ சமயத்தைச் சேர்ந்தவராகச் சுட்டிக்காட்டப்படுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அயோத்தி தாசரின் எழுத்துகளிலும் ராவணன் பற்றிய நேர்மறையான குறிப்புகள் தென்படுகின்றன தமிழ்நாடு ராவணனை கொண்டாட தொடங்கியது எப்போது? 19ஆம் நூற்றாண்டில்தான் ராவணனை மிக முக்கியமான அடையாளமாக தூக்கிப்பிடிக்கும் போக்கு துவங்கியது என்கிறார் ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம். "19ஆம் நூற்றாண்டில் வெளிவந்த தத்துவவிவேசினி இதழில் மாசிலாமணி முதலியார் சில இடங்களில் ராவணனை உயர்த்திச் சொல்கிறார். அதேபோல அயோத்தி தாசரின் எழுத்துகளிலும் ராவணன் பற்றிய நேர்மறையான குறிப்புகள் தென்படுகின்றன. இதற்குப் பிறகு 20ஆம் நூற்றாண்டில் திராவிட இயக்கத்தினர் ராவணனை மிகுந்த நேர்மறைத் தன்மை கொண்டவராக சித்தரிக்க ஆரம்பித்தனர்" என்கிறார் அவர். திராவிட இயக்கக் கவிஞரான பாரதிதாசன் எழுதிய "தென்றிசையைப் பார்க்கின்றேன்" என்று துவங்கும் பாடல் முழுக்க முழுக்க ராவணனைப் புகழ்ந்து எழுதப்பட்டிருந்தது. "குள்ளநரிச் செயல்செய்யும் கூட்டத்தின் கூற்றம்! என்தமிழர் மூதாதை! என்தமிழர் பெருமான் இராவணன்காண்!" என அந்தப் பாடலில் குறிப்பிடுகிறார் பாரதிதாசன்., இதற்குப் பிறகு, திராவிட இயக்கத்தின் மிக முக்கியத் தலைவரான அண்ணாவின் காலத்தில் ராவணனின் அடையாளம் மிக நேர்மறையான ஒன்றாக, ராமனுக்கு மாற்றாக முன்வைக்கப்பட ஆரம்பித்தது என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம். "ஆரம்ப காலத்தில் மையநீரோட்ட மரபுகளோடு தொடர்புபடுத்தப்படாமல், மாறுபட்ட சித்தாந்தங்களோடுதான் ராவணன் தொடர்புபடுத்தப்பட்டார். ஆனால், இருபதாம் நூற்றாண்டில் நடந்த தமிழ் மறுமலர்சிக்குப் பிறகு, ராவணன் திராவிட - தமிழ் மரபைச் சேர்ந்தவராக முன்னிறுத்தப்பட ஆரம்பித்தார்" என்கிறார் அவர். ஆனால், தமிழ் இலக்கிய மரபைப் பொறுத்தவரை ராவணனைத் தூக்கிப் பிடிக்கும் மரபு கிடையாது என்கிறார் ஆய்வாளர் பொ. வேல்சாமி. இருபதாம் நூற்றாண்டில்தான் இந்தப் போக்கு துவங்கியது என்பதை அவரும் வலியுறுத்துகிறார். "தமிழ்நாட்டில் பிராமணரல்லாதார் இயக்கம் வலுப்பெற்றபோது, தமிழ்நாட்டில் கம்ப ராமாயணம் மிகுந்த செல்வாக்குடன் இருந்தது. ராமன் ஒரு முக்கிய அடையாளமாக முன்வைக்கப்பட்டார். ஆகவே, அதனை எதிர்கொள்ள திராவிட இயக்கம் ராவணனை முக்கிய அடையாளமாக முன்வைத்தது. ராமனை எதிர்மறைக் கதாபாத்திரமாக்கி, அதனைத் தாக்க ஆரம்பித்தார்கள்" என்கிறார் பொ. வேல்சாமி. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அவ்வப்போது ராவண லீலாவை பெரியார் இயக்கங்கள் ஆங்காங்கே நடத்தி வருகின்றன. 1950களின் துவக்கத்தில் திராவிட நாடு இதழில், ராம லீலாவுக்குப் பதில் ராவண லீலா நடத்தி, ராமன் உருவத்தைக் கொளுத்தினால் என்ன செய்ய முடியும் என ஒரு கட்டுரையில் கேள்வி எழுப்பினார் சி.என். அண்ணாதுரை. இதற்குப் பிறகு தென்னாட்டில் ராவண லீலா நடத்தும் காலம் வந்தே தீரும் எனக் குறிப்பிட்டார் மு. கருணாநிதி. அதற்கு முன்பே அண்ணா எழுதிய 'கம்ப ரசம்' நூல், ராமாயணத்திற்கு எதிரான திராவிட இயக்க உணர்வை வெளிப்படுத்துவதாக இருந்தது. ஆனால், ராமன் என்ற அடையாளத்தைக் கடுமையாக எதிர்த்த பெரியார் அதற்கு மாறாக ராவணன் என்ற அடையாளத்தை தொடர்ந்து உயர்த்திப் பிடிக்கவில்லை என்பதையும் ஸ்டாலின் ராஜாங்கம் சுட்டிக்காட்டுகிறார். பெரியாரின் மறைவுக்குப் பிறகு, அவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் மணியம்மையார் தலைமையிலான திராவிடர் கழகம் ராவண லீலாவை நடத்தப்போவதாக அறிவித்தது. இதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையிலும் சென்னையில் உள்ள பெரியார் திடலில் ராவண லீலா நடத்தப்பட்டது. அதற்குப் பிறகும் அவ்வப்போது ராவண லீலாவை பெரியார் இயக்கங்கள் ஆங்காங்கே நடத்தி வருகின்றன. இதற்கு நடுவில் திராவிட இயக்கப் பேராசிரியரான புலவர் குழந்தை எழுதிய 'ராவண காவியம்' 1946ல் வெளியானது. இது ராவணனை நேர்மறைப் பாத்திரமாகவும் ராமன், லக்ஷ்மணன் ஆகியோரை எதிர்மறைப் பாத்திரங்களாகவும் சித்தரித்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த நூல் 1948ஆம் ஆண்டு ஜூன் இரண்டாம் தேதி தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்டது. 1972ஆம் ஆண்டில்தான் இந்தத் தடை நீக்கப்பட்டது. ராவணன் மிக நல்ல குணங்களை உடையவாரகவும், போற்றத்தக்கவராகவும் ஒரு கருத்தை உருவாக்கியதில் இந்த புத்தகத்திற்கு முக்கியப் பங்கு இருக்கிறது. பட மூலாதாரம்,RAMAYAN படக்குறிப்பு, ராவணன் திரைப்படம், ராவணனை நல்ல பண்புகளை உடையவனாகக் காட்டியது. 2010ஆம் ஆண்டில் ராமாயணக் கதையைத் தழுவி மணிரத்னத்தின் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் நடித்து வெளியான ராவணன் திரைப்படம், ராவணனை நல்ல பண்புகளை உடையவனாகக் காட்டியது. "ஆனால், சாதாரண மக்கள் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர்கள் வழக்கம் போலவே ராமாயணத்தை அணுகினார்கள்" என்கிறார் பொ. வேல்சாமி. 1980களின் பிற்பகுதியில் உருவான பா.ஜ.கவின் எழுச்சி, புதிய பொருளாதாரக் கொள்கை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் விளிம்பு நிலை மக்களின் போராட்டங்கள், மண்டல் கமிஷன் பரிந்துரைகளின் அமலாக்கம் ஆகியவற்றிற்கு மத்தியில் ராவணனை மாற்று அடையாளமாக முன்னிறுத்துவதற்கு பெரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை. இப்போது ராமர் கோவில் திறக்கப்பட்டதை ஒட்டி, மீண்டும் ராவணனின் அடையாளம் கவனத்திற்கு வந்திருக்கிறது. https://www.bbc.com/tamil/articles/crg94q6m7vgo
-
விபத்தில் சிக்கிய ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிந்தார் ..
விபத்தில் சனத் நிஷாந்த மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழப்பு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் இன்று அதிகாலை கந்தானைக்கு அருகில் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளனர். கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ஜீப் ஒன்று அதே திசையில் பயணித்த கொள்கலன் வாகனத்துடன் மோதி பின்னர் வீதியின் பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானது. ஜீப்பில் பயணித்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, அவரது பாதுகாப்பு உத்தியோகத்தராக இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் 72542 ஜெயக்கொடி மற்றும் ஜீப் சாரதி ஆகியோர் படுகாயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இராஜாங்க அமைச்சர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதுடன், சாரதி ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/289327
-
ஐ.சி.சி. கிரிக்கெட் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள வீர, வீராங்கனைகள்
வருடத்தின் வளர்ந்துவரும் வீரருக்கான ஐ.சி.சி. விருது ரச்சின் ரவிந்த்ரவுக்கு சொந்தமானது 25 JAN, 2024 | 10:49 AM (நெவில் அன்தனி) வருடத்தின் வளர்ந்துவரும் வீரருக்கான ஐசிசி விருதை நியூஸிலாந்தின் இளம் அதிரடி துடுப்பாட்டக்காரர் ரச்சின் ரவிந்த்ர தட்டிச்சென்றார். இவர் கடந்த வருடம் நடைபெற்ற இரண்டு வகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்தியமைக்காக வளர்ந்துவரும் வீரராக ஐசிசியினால் இனங்காணப்பட்டுள்ளார். இந்தியாவில் கடந்த வருடம் நடைபெற்ற ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் ரச்சின் ரவிந்த்ர துடுப்பாட்டத்தில் அசத்தியிருந்தார். உலகக் கிண்ணப் போட்டியில் அதிரடியாக 3 சதங்களையும் 2 அரைச் சதங்களையும் விளாசிய ரச்சின் ரவிந்த்ர 64.22 என்ற சராசரியுடன் 578 ஓட்டங்களை மொத்தமாக குவித்திருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 106.44 ஆக இருந்தது. இடது கை சுழல்பந்துவீச்சாளரான அவர் 6 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தார். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ரச்சின் ரவிந்த்ர அபார ஆற்றல்களை வெளிப்படுத்தியதன் மூலம் நியூஸிலாந்து அணி அரை இறுதிவரை முன்னேறியிருந்தது. கடந்த வருடம் மொத்தமாக 25 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அவர், 41 என்ற சராசரியுடனும் 108.03 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடனும் மொத்தமாக 820 ஓட்டங்களைப் பெற்றதுடன் 18 விக்கெட்களையும் கைப்பற்றியிருந்தார். சர்வதேச ரி20 அரங்கில் 12 போட்டிகளில் விளையாடிய அவர் 91 ஓட்டங்களைப் பெற்றதுடன் 5 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார். இத்தகைய சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்திய ரச்சின் ரவிந்த்ர, வளர்ந்துவரும் வீரருக்கான ஐசிசி விருதை தனதாக்கிக்கொண்டார். இந்த விருதுக்கு இலங்கையின் டில்ஷான் மதுஷன்க, தென் ஆபிரிக்காவின் ஜெரால்ட் கொயெட்ஸீ ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். https://www.virakesari.lk/article/174757 வருடத்தின் வளர்ந்துவரும் வீராங்கனைக்கான ஐசிசி விருதை ஃபோப் லிச்ஃபீல்ட் வென்றெடுத்தார் 25 JAN, 2024 | 11:52 AM (நெவில் அன்தனி) வருடத்தின் வளர்ந்துவரும் வீராங்கனைக்கான ஐசிசி விருதை அவுஸ்திரேலியாவின் 20 வயதுடைய சகலதுறை ஆட்டக்காரர் ஃபோப் லிச்ஃபீல்ட் வென்றெடுத்தார். ஐந்து வருடங்களுக்கு முன்னர் தனது 15ஆவது வயதில் மகளிர் பிக் பாஷ் லீக்கில் அறிமுகமான லிச்ஃபீல்ட், என்றாவது ஒருநாள் சாதிப்பார் என்ற எதிர்பார்ப்பை இந்த விருதின் மூலம் உறுதி செய்துள்ளார். பிக் பாஷ் லீக்கில் அவர் வெளிப்படுத்திய ஆற்றல்களைவிட சிறந்த ஆற்றல்களை சர்வதேச அரங்கில் கடந்த வருடம் வெளிப்படுத்தினார். மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது அறிமுக ஆண்டில் 12 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடிய லிச்ஃபீல்ட், ஆட்டம் இழக்காத ஒரு சதம், 4 அரைச் சதங்கள் உட்பட 485 ஓட்டங்களை மொத்தமாக குவித்தார். (சராசரி 53.88 ஸ்ட்ரைக் ரேட் 81.92) அவரது இந்த ஆற்றல்கள் அவரை வருடத்தின் ஐசிசி மகளிர் ஒருநாள் அணியிலும் இடம்பெறச் செய்தது. இணை அங்கத்துவ நாடுகளில் அதிசிறந்த வீரர்கள் இணை அங்கத்துவ நாடுகளுக்கான வருடத்தின் அதிசிறந்த ஐசிசி கிரிக்கெட் வீரர் விருதை நெதர்லாந்தின் பாஸ் டி லீட் வென்றெடுத்ததுடன் வருடத்தின் அதிசிறந்த ஐசிசி கிரிக்கெட் வீராங்கனை விருதை கென்யாவின் குவின்டோர் ஆபெல் தனதாக்கிக்கொண்டார். 24 வயதான பாஸ் டி லீட், கடந்த வருடம் 16 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 424 ஓட்டங்ளைப் பெற்றதுடன் 31 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் ஸ்கொட்லாந்துக்கு எதிரான போட்டியில் 123 ஓட்டங்களைக் குவித்ததுடன் 5 விக்கெட் குவியலையும் பதிவுசெய்திருந்தார். இந்தியாவில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட்டில் 8 போட்டிகளில் 16 விக்கெட்களைக் கைப்பற்றியதன் மூலம் தனது அதிசிறந்த ஆற்றலை வெளிப்படுத்தியிருந்தார். முதலாவது ஆபிரிக்க பெண் இணை அங்கத்துவ நாடுகளுக்கான வருடத்தின் அதிசிறந்த ஐசிசி கிரிக்கெட் வீராங்கனையாக கென்யாவின் குவின்டோர் ஆபெல் தெரிவானார். இதன் மூலம் இந்த விருதை வென்ற முதலாவது ஆபிரிக்க பெண் என்ற கௌரவத்தையும் பெருமையையும் குவின்டோர் ஆபெல் பெற்றுக்கொண்டார். கடந்த வருடம் 17 மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய குவின்டோர் ஆபெல், ஒரு சதம், 3 அரைச் சதங்களுடன் 476 ஓட்டங்களைப் பெற்றார். அத்துடன் தனது சுழல்பந்துவீச்சின் மூலம் 30 வீராங்கனைகளை ஆட்டம் இழக்கச் செய்திருந்தார். https://www.virakesari.lk/article/174761
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்
நமிபியாவிடம் சவாலை எதிர்கொண்ட இலங்கை 77 ஓட்டங்களால் வெற்றிபெற்றது 24 JAN, 2024 | 09:46 PM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவின் கிம்பர்லி, டயமண்ட் ஓவல் விளையாட்டரங்கில் புதன்கிழமை (24) நடைபெற்ற சி குழுவுக்கான ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தின் போது நமிபியாவிடம் பலத்த சவாலை எதிர்கொண்ட இலங்கை, பந்துவீச்சில் அசத்தி 77 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்காமல் அரைச் சதம் பெற்ற சுப்புன் வடுகே, துல்லியமாக பந்துவீசிய ருவிஷான் பெரேரா, விஷ்வா லஹிரு, தினுர கலுபஹன ஆகியோர் இலங்கைக்கு வெற்றியை ஈட்டிக்கொடுத்து அதன் கௌரவத்தைக் காப்பாற்றினர். சர்வதேச கிரிக்கெட் பேரவையில் இணை அங்கத்துவ நாடாக இருக்கும் நமிபியா இந்தப் போட்டியில் அசாத்திய வெற்றி ஒன்றை ஈட்டும் என கருதும் அளவுக்கு இலங்கையின் துடுப்பாட்டம் மிக மோசமாக இருந்தது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 37.5 ஓவர்களில் 133 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. ஒரு கட்டத்தில் 20 ஓவர்கள் நிறைவில் முன்வரிசை வீரர் ஐவரை இழந்து 71 ஓட்டங்களை மாத்திரம் இலங்கை பெற்றிருந்தது. புலிந்து பெரேரா (3), அணித் தலைவர் சினேத் ஜயவர்தன (10), ரவிஷான் டி சில்வா (2) ருசந்த கமகே (17) தினுர கலுபஹன (0) ஆகியோர் எதிரணியின் பந்துவீச்சுக்கு தாக்குப் பிடிக்கவில்லை. மத்திய மற்றும் பின்வரிசையிலும் அதே கதிதான் தொடர்ந்தது. ஷாருஜன் சண்முகநாதன் (13), மல்ஷா தருபதி (6), விஷ்வா லஹிரு (0), ருவிஷான் பெரேரா (0), கருக்க சன்கேத் (1) ஆகியோரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கவில்லை. எனினும் மறு பக்கத்தில் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிய சுப்புன் வடுகே 79 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகளுடன் 56 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காதிருந்தார். அவரது துடுப்பாட்டமே இலங்கைக்கு 100 ஓட்டங்களைக் கடக்க உதவியது. பந்துவீச்சில் சச்சியோ வென் வூரென் 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஜொஹானஸ் டி வில்லியர்ஸ் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமிபியா 27 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 56 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது. ஒன்பதாம் இலக்க வீரர் ஹன்ரோ பேடன்ஹோஸ்ட் (11), பீட்டர் டெனியல் ப்ளைனோட் (17 ஆ.இ.) ஆகிய இருவரே இரட்டை இலக்கை எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் ருவிஷான் பெரேரா, தினுர கலுபஹன ஆகிய இருவரும் மிகவும் அற்புதமாக செயற்பட்டனர். ருவிஷான் பெரேரா 3 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 5 ஓவர்கள் 3 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 3 விக்கெட்களையும் தினுர கலுபஹன 4 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 8 ஓவர்கள் வீசி 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். அவர்களை விட விஷ்வா லஹிரு 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஆட்டநாயகன்: சுப்புன் வடுகே https://www.virakesari.lk/article/174747
-
ஐ.சி.சி. கிரிக்கெட் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள வீர, வீராங்கனைகள்
வருடத்தின் அதிசிறந்த ரி - 20 கிரிக்கெட் வீரர் சூரியகுமார் யாதவ் 24 JAN, 2024 | 05:09 PM (நெவில் அன்தனி) வருடத்தின் அதிசிறந்த ஐசிசி ஆடவர் ரீ20 கிரிக்கெட் வீரர் விருதை இந்தியாவின் அதிரடி வீரர் சூரியகுமார் யாதவ் வென்றெடுத்துள்ளார். இந்த விருதை அவர் இரண்டாவது தொடர்ச்சியான வருடமாக வென்றெடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் 2023ஆம் ஆண்டுக்கான அதிசிறந்த வீரர்களுக்கான ஐசிசி விருதுகள் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் சூரியகுமார் யாதவ்வுக்கான விருது இரண்டாவதாக அறிவிக்கப்பட்டது. முதலாவதாக ஐசிசி இணை அங்கத்துவ நாடுகளில் அதிசிறந்த கிரிக்கெட் வீராங்னை விருது அறிவிக்கப்பட்டது. வருடத்தின் அதிசிறந்த ஐசிசி இணை அங்கத்துவ நாடுகளுக்கான வீராங்கனை விருதை கென்யாவின் குவின்டோர் ஆபெல் வென்றெடுத்தார். அதிரடி மன்னன் சூரியகுமார் யாதவ் அதிரடியாக ஓட்டங்கள் குவிப்பதில் வல்லவரும் மன்னருமான சூரியகுமார் யாதவ், கடந்த வருடம் 17 இன்னிங்ஸ்களில் 2 சதங்கள், 5 அரைச் சதங்களுடன் மொத்தமாக 733 ஓட்டங்களைப் பெற்றார். அவரது சராசரி 48.86 ஆக அமைந்திருந்ததுடன் ஸ்ட்ரைக் ரேட் நினைத்துப் பார்க்க முடியாத 155.95ஆக இருந்தது. மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் மத்திய வரிசை துடுப்பாட்டத் தூண் என வருணிக்கப்படும் சூரியகுமார் யாதவ், பெரும்பாலும் எல்லா போட்டிகளிலும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி இலகுவாக ஓட்டங்களைக் குவித்தார். அவரது அதிரடி துடுப்பாட்டம் இந்தியாவின் பல வெற்றிகளில் பிரதான பங்களிப்பு செய்திருந்தது. வருடத்தின் ஆரம்பத்தில் இலங்கைக்கு எதிராக 36 பந்துகளில் 51 ஓட்டங்களையும் 51 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 112 ஓட்டங்களையும் குவித்த யாதவ், வருட இறுதியில் இந்திய அணியின் பதில் அணித் தலைவராக செயற்பட்டார். ரோஹித் ஷர்மா ஓய்வு எடுத்ததால் அவரிடம் தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. வருட இறுதியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 42 பந்துகளில் 80 ஓட்டங்களையும் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக 36 பந்துகளில் 56 ஓட்டங்களையும் 56 பந்துகளில் 100 ஓட்டங்களையும் குவித்திருந்தார். இந்த விருதுக்கு சிக்கந்தர் ராஸா (ஸிம்பாப்வே), அல்பேஸ் ராம்ஜனி (உகண்டா), மார்க் செப்மன் (நியூஸிலாந்து) ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். https://www.virakesari.lk/article/174702 வருடத்தின் அதிசிறந்த ரி - 20 கிரிக்கெட் வீராங்கனை விருதை ஹெய்லி மெத்யூஸ் வென்றார் Published By: VISHNU 24 JAN, 2024 | 04:51 PM (நெவில் அன்தனி) வருடத்தின் அதிசிறந்த ஐசிசி மகளிர் ரீ20 கிரிக்கெட் வீராங்கனை விருதை மேற்கிந்தியத் தீவுகள் அணித் தலைவி ஹெய்லி மெத்யூஸ் வென்றெடுத்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து இந்த விருதை வென்றெடுத்த இரண்டாவது வீராங்கனை ஹெய்லி மெத்யூஸ் ஆவார். முன்னாள் அணித் தலைவி ஸ்டெஃபானி டெய்லர் இந்த விருதை 2015இல் வென்றிருந்தார். சகலதுறைகளிலும் பிரகாசிப்பு மேற்கிந்தியத் தீவுகளின் சமகால தலைவியான ஹெய்லி மெத்யூஸ் சகலதுறைகளிலும் வெளிப்படுத்திய ஆற்றல்களின் அடிப்படையிலேயே வருடத்தின் அதிசிறந்த ஐசிசி ரி20 வீராங்கனை விருதுக்கு சொந்தக்காரராகி உள்ளார். கடந்த வருடம் 14 போட்டிகளில் விளையாடிய ஹெய்லி மெத்யூஸ் ஒரு சதம், 4 பவுண்டறிகள் உட்பட 700 ஓட்டங்களை மொத்தமாக குவித்திருந்தார். இதில் 99 பவுண்டறிகள், 14 சிக்ஸ்கள் அடங்கியிருந்தன. அவரது துடுப்பாட்ட சராசரி 63.63 ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 132.32 ஆகவும் பதிவாகியுள்ளது. அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 212 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை மேற்கிந்தியத் தீவுகள் விரட்டிக் கடப்பதில் பெரும் பங்காற்றியவர் மெத்யூஸ். அவர் அப் போட்டியில் 132 ஓட்டங்களைக் குவித்தார். அதே தொடரின் முதலாவது போட்டியில் ஆட்டம் இழக்காமல் 99 ஓட்ட்ஙகளையும் கடைசிப் போட்டியில் 79 ஓட்டங்களையும் பெற்றார். பந்துவீச்சிலும் கடந்த வருடம் அவர் அபாரமாக செயற்பட்டு மொத்தமாக14 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார். அவரது இந்த சகலதுறை ஆட்டத் திறனே அவருக்கு வருடத்தின் அதிசிறந்த ஐசிசி மகளிர் ரி20 வீராங்கனை விருதை வென்றுகொடுத்தது. இந்த விருதுக்கு இலங்கையின் சமரி அத்தபத்து, அவுஸ்திரேலியாவின் எலிஸ் பெரி, இங்கிலாந்தின் சொஃபி எக்லஸ்டோன் ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். https://www.virakesari.lk/article/174715
-
மதுரையில் பிரம்மாண்ட ஏறு தழுவுதல் அரங்கம் திறப்பு!
உலகின் முதல் ஏறுதழுவுதல் அரங்கம் – மதுரையில் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.! 24 JAN, 2024 | 12:53 PM உலகின் முதல் ஏறுதழுவுதல் அரங்கத்தை மதுரையில்தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். உலகின் முதல் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் திறப்புவிழா இன்று மதுரையில் நடைபெறுகிறது. 62 கோடியே 78 இலட்ச ரூபாய் மதிப்பில் மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் கம்பீரத் தோற்றத்துடன் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்பட்டுள்ளது இதற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் சமுதாயத்தின் முக்கிய பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் விழா கொண்டாடப்படும் வேளையில் தமிழ்நாடு முழுவதிலும் காளையை இளைஞர்கள் அடக்கும் வீரத்தைப் போற்றும் வகையில் ஏறுதழுவுதல் விழா நடைபெறும் தமிழர்களின் பெருமைக்குரிய தொழிலாக பழங்காலத்திலிருந்து திகழ்ந்து வருவது உழவுத் தொழில். “சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்” என்றார் வள்ளுவர். அத்தகைய உழவுத் தொழிலுக்கு முதன்முதலில் தேவைப்பட்டது “காளை”. அந்நாளில் காடுகளில் திரிந்த காளைகளைப் பிடித்து அடக்கிப் பழக்கி உழவுத் தொழிலில் ஈடுபடுத்தி வந்தனர் தமிழ் மக்கள். அதன் தொடர்ச்சியாகத்தான், மாடு பிடிக்கும் விழா, “ஏறு தழுவுதல்”, “எருது விடுதல்” “மஞ்சு விரட்டு”, ஜல்லிக்கட்டு” எனப் பல பெயர்களில் தமிழ்ச் சமுதாயத்தில் வழிவழியாக நடைமுறையில் இருந்து வந்துள்ளது. மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்படுவதற்காக 3.2.2023 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து ரூ.62 கோடியே 77 இலட்சத்து 62 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கு 18.3.2023 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை மூலம் வாடிவாசல், ஒரே நேரத்தில் 5,000 பார்வையாளர்கள் அமர்ந்து காணும் வசதிகளுடன் மூன்றடுக்குப் பார்வையாளர் மாடம், ஏறுதழுவுதல் நடைபெறும் இடம், மிக முக்கிய விருந்தினர்கள் அமரும் இடம், ஏறுதழுவுதலில் பங்குபெறும் காளைகளின் எழுச்சி வடிவங்களைப் பிரதிபலிக்கும் அருங்காட்சியகம், ஒலி-ஒளி காட்சிக்கூடம், கால்நடை மருந்தகம், நூலகம், மாடுபிடி வீரர்களுக்கான தங்கும் அறைகள், புல்வெளிகளுடன்கூடிய தோட்டம் என அனைத்தையும் கொண்டுள்ள 83,462 சதுரடி பரப்புடைய மிகப் பிரம்மாண்டமான கட்டடமாக ஏறுதழுவுதல் அரங்கம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது ஏறுதழுவுதல் அரங்கம் திறப்பையோட்டி அரங்கில் முதல் ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுகிறது. முதல் ஜல்லிக்கட்டில் 500 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். முதலிடத்தை பிடிக்கும் சிறந்த காளை மற்றும் சிறந்த மாடுபிடி வீரருக்கு தலா ஒரு தார் ஜீப் வழங்கப்படுகிறது. இரண்டாம் இடத்தை பிடிக்கும் சிறந்த காளை மற்றும் சிறந்த மாடுபிடி வீரருக்கு தலா ஒரு இரு சக்கர வாகனம் வழங்கப்படுகிறது. மேலும் வெற்றி பெரும் ஓவ்வொரு ஜல்லிக்கட்டு காளை மற்றும் வீரருக்கு தங்ககாசு, வெள்ளிகாசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ஏறு தழுவுதல் அரங்கத்தை திறந்து வைக்க வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு போலீசார் சார்பில் மரியாதை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அரங்கத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. இதன் பின்னர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. https://www.virakesari.lk/article/174684
-
நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் : 224 உறுப்பினர்கள் எதிராக வாக்களிக்க வேண்டும் - சிவில் அமைப்பினர் கூட்டாக வலியுறுத்தல்
20 ஆவது திருத்தத்துக்கு நேர்ந்த கதியே நிகழ்நிலை காப்புச் சட்ட மூலத்துக்கு நேரிடும் - கிரியெல்ல சாடல் Published By: VISHNU 24 JAN, 2024 | 05:35 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் என்பனவற்றில் சிங்கப்பூர் முன்னேற்ற நிலையில் இல்லை. ஆகவே சிங்கப்பூர் நாட்டின் மாதிரியிலான வகையில் நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு நேர்ந்த கதியே நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கும் நேரிடும். அரசாங்கத்துக்கு எதிரான கருத்தை குறிப்பிடும் சகலரையும் பயங்கரவாதிகள் என்றும் சித்தரிக்கும் நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/174712
-
இலங்கையில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவுக்கு கடும் எதிர்ப்பு வர காரணம் என்ன?
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் 18 மனுக்கள் தாக்கல் - சபாநாயகர் சபைக்கு அறிவிப்பு 24 JAN, 2024 | 05:35 PM (எம்.ஆர்.எம்.வசீம்) பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் மேலும் 18 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார். பாராளுமன்றம் புதன்கிழமை (24) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போது இடம்பெற்ற சபாநாயகர் அறிவிப்பின்போதே அவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நான் இந்த சபையில் விடுத்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட ஆறு மனுக்களுக்கு மேலதிகமாக, அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் பயங்கரவாத எதிர்ப்பு எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மேலும் பதினெட்டு மனுக்களின் பிரதிகள் எனக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அதேவேளை அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மேலும் ஐந்து மனுக்களின் பிரதிகளும் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றார். https://www.virakesari.lk/article/174713
-
ராமர் கோவில்: 72 ஏக்கர் நிலம் இருக்கும்போது 2.7 ஏக்கரில் மட்டும் கோவில் கட்டப்பட்டது ஏன்?
சில நிமிடங்கள் அனுமதி; Inside The Ayodhya Ram Temple - கோவில் உள்ளே எப்படி இருக்கிறது?
-
நாம் குடிக்கும் தண்ணீரில் பிளாஸ்டிக் இருப்பது எவ்வளவு ஆபத்தானது?
பட மூலாதாரம்,GETTY IMAGES 24 ஜனவரி 2024, 05:59 GMT மனிதர்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று சுத்தமான குடிநீர். நாம் பயணம் செய்யும்போது அல்லது சுத்தமான தண்ணீர் கிடைக்காத இடத்தில் இருக்கும்போதெல்லாம், பாட்டில் தண்ணீரை அங்கேயே வாங்க முயற்சிக்கிறோம். அந்த தண்ணீரில் அழுக்கு இருக்காது என்று நம்புகிறோம். ஆனால் அந்த தண்ணீருக்குள் நுண்ணிய பிளாஸ்டிக் அதாவது பிளாஸ்டிக்கின் எண்ணற்ற நுண்ணிய துகள்கள் இருக்கலாம். பிபிசி ஃபியூச்சரில் வெளியிடப்பட்ட கட்டுரையின்படி , அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பாட்டில் தண்ணீரில் முன்னர் மதிப்பிடப்பட்டதை விட 100 மடங்கு அதிகமான மைக்ரோ பிளாஸ்டிக்ஸ்கள் இருக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர். ஒரு லிட்டர் தண்ணீரில் சுமார் 2.5 லட்சம் நானோ பிளாஸ்டிக் துகள்கள் இருக்கலாம் என்று கண்டறிந்தனர். இந்த ஆராய்ச்சியாளர்கள் மூன்று பிராண்ட் தண்ணீர் பாட்டில்களை ஆய்வு செய்தபோது, ஒரு லிட்டரில் ஒரு லட்சத்து பத்தாயிரம் முதல் நான்கு லட்சம் நானோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, தண்ணீரில் கரைந்த பெரும்பாலான பிளாஸ்டிக் துகள்கள் ஒரு பாட்டிலில் இருந்து வந்தவை. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவிலும் மைக்ரோபிளாஸ்டிக் மாசுபட்டுள்ள தண்ணீர் நாம் இருக்கும் இடத்தைச் சுற்றிப் பார்த்தால் பல பிளாஸ்டிக் பொருட்கள் தெரியும். அத்தகைய பொருட்களை நுண்ணிய துண்டுகளை மிகச் சிறிய அளவில் வெட்டினால், அதுவே மைக்ரோபிளாஸ்டிக்ஸ் என அழைக்கப்படுகின்றது. பொதுவாக ஐந்து மில்லிமீட்டருக்கும் குறைவான அளவில் உள்ள பிளாஸ்டிக் துண்டுகள் மைக்ரோ பிளாஸ்டிக் என்று அழைக்கப்படுகின்றன. அதை விட சிறியதாக இருக்கும் பிளாஸ்டிக்கை நானோ அளவில் மட்டுமே அளவிட முடியும். அவை நானோ பிளாஸ்டிக் என்று அழைக்கப்படுகின்றன. இந்த இரண்டு வகைகளும் கண்ணுக்கு எளிதில் புலப்படுவதில்லை. ஆனால், அவை உலகின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ளன. அது ஆறுகளின் நீராகவோ, கடலின் அடிப்பகுதியாகவோ அல்லது அண்டார்டிக்கில் உறைந்த பனியாகவோ இருக்கலாம். ஐஐடி பாட்னா நடத்திய ஆய்வில் , மழைநீரிலும் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதேபோல், இந்தியாவில் உள்ள ஆறுகள் மற்றும் ஏரிகளில் கூட மைக்ரோபிளாஸ்டிக்ஸ் காணப்படுவதாக மற்றொரு ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் அழுக்கு நீர், நகர்ப்புறங்களில் இருந்து வெளியேறும் பிளாஸ்டிக் கழிவுகள் என பல காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES மைக்ரோபிளாஸ்டிக்ஸின் ஆபத்துகள் என்ன? ஒரு பிரச்னை என்னவென்றால், குடிநீரில் கூட மைக்ரோபிளாஸ்டிக் இருக்கலாம். ஆனால், அதில் முக்கியமான சிக்கல் என்னவென்றால், மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் மனித உடலில் என்ன விளைவை ஏற்படுத்துகிறது என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. 2019 ஆம் ஆண்டில், உலக சுகாதார நிறுவனம் ஒரு மதிப்பாய்வை நடத்தியது. அதில், மைக்ரோபிளாஸ்டிக்ஸ் மனித உடலில் நுழைந்தால் என்ன ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சித்தது. ஆனால், வரையறுக்கப்பட்ட ஆராய்ச்சி காரணமாக, உலக சுகாதார மையம், எந்த முடிவுக்கும் வரவில்லை. இன்னும் பிளாஸ்டிக் மாசுபாட்டை குறைக்க வேண்டும் என்று மட்டும் வேண்டுகோள் விடுத்து. டெல்லியில் உள்ள புஷ்பாஞ்சலி மருத்துவ மையத்தின் மூத்த மருத்துவர் மணீஷ் சிங், பிபிசி செய்தியாளர் ஆதர்ஷ் ரத்தோரிடம், மைக்ரோபிளாஸ்டிக்கின் ஆபத்துகள் பற்றி அதிகம் அறியப்படவில்லை, எனவே அந்த விஷயத்தில் இன்னும் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது எனக் கூறினார். “மைக்ரோபிளாஸ்டிக்கின் ஆபத்துகள் குறித்து வரையறுக்கப்பட்ட ஆராய்ச்சி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அது நமது நாளமில்லா சுரப்பிகளின் (ஹார்மோன் உற்பத்தி செய்யும் சுரப்பிகள்) செயல்பாட்டில் சிக்கல்களை ஏற்படுத்துவதாகவும் சில ஆராய்ச்சிகள் உள்ளன. மைக்ரோபிளாஸ்டிக் மிகவும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது எதிர்காலத்தில் அறியப்படலாம், எனவே இப்போதிலிருந்தே எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது," என்றார் மணீஷ் சிங். பட மூலாதாரம்,GETTY IMAGES எல்லா இடங்களிலும் மைக்ரோ பிளாஸ்டிக் தண்ணீரைத் தவிர, மைக்ரோ பிளாஸ்டிக்குகள் விவசாயம் செய்யும் நிலத்திலும் ஏராளமாகக் காணப்படுகின்றன. 2022 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது . இதன்படி, பயிர்களுக்கு உரமாகப் பயன்படுத்தப்படும் சாக்கடைக் கழிவுகளில் மைக்ரோபிளாஸ்டிக் கலந்ததால், 80 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் விவசாய நிலம் மாசுபட்டிருந்தது. அந்த மண்ணில் மைக்ரோபிளாஸ்டிக் தவிர, சில இரசாயனங்களும் இருந்தன, அவை ஒருபோதும் மக்காது, அதாவது அதே நிலையில் இருக்கும். அதே நேரத்தில், பிரிட்டனில் உள்ள கார்டிஃப் பல்கலைக்கழகம்(Cardiff University), ஒவ்வொரு ஆண்டும் ஐரோப்பாவில் பயிரிடப்பட்ட நிலங்களில் டிரில்லியன் கணக்கான மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் காணப்படுவதாகவும், அவை ஒவ்வொரு பிடி உணவின் மூலமாக மக்களின் உடலில் கலப்பதாகவும் தங்களின் ஆய்வில் கண்டறிந்தனர். பிபிசி ஃபியூச்சரில் எழுதியுள்ள இசபெல் ஜெரெட்சன், மற்ற பொருட்களைவிட, தாவரங்களின் அதிக மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதாக எழுதியுள்ளார். உண்மையில், வேர் காய்கறிகளில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் அதிகம் இருப்பதாக சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதன் பொருள் முள்ளங்கி மற்றும் கேரட் போன்ற காய்கறிகள் அதிகமாக இருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES மைக்ரோ பிளாஸ்டிக்கை எவ்வாறு தவிர்ப்பது? இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் கழிவுகளை அகற்றுவதற்காக முறையான அமைப்பு இல்லாததுதான் பிரச்னை என்கிறார் டாக்டர் மணீஷ் சிங். இதன் காரணமாக, மைக்ரோபிளாஸ்டிக்கள், ஆறுகள் மற்றும் விவசாய நிலங்களை சென்றடைகின்றன. “எண்ணற்ற உணவுப் பொருட்கள் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டுள்ளன. அப்போது பிரச்னை என்னவென்றால், மக்கள் வீட்டில் தட்டுகள் மற்றும் பலகைகளில் கூட பிளாஸ்டிக் பயன்படுத்துகிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும்” என்றார். பிளாஸ்டிக் மற்றும் அதன் தொடர்புடைய பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க, இந்திய அரசு ஜூலை 1, 2022 முதல் ஒருமுறை பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்தது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. உலகின் பல நாடுகள் ஏற்கனவே இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளன. பிரிட்டனின் பிளைமவுத் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மக்கும் தன்மை கொண்டவை என பெயரிடப்பட்ட பைகள் மக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம் என்று கண்டறிந்துள்ளனர். அதுமட்டுமின்றி சிறு சிறு துண்டுகளாக உடைந்து அவை மாசுபடுத்துவதாகவும் கண்டறிந்துள்ளனர். உணவுப் பொருட்களில் மைக்ரோபிளாஸ்டிக் சேருவதைத் தடுக்க, கண்ணாடி பாட்டில்களைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் இசபெல் ஜெரெட்சன் எழுதுகையில், "கண்ணாடி பாட்டில்களை பல முறை மறுசுழற்சி செய்யலாம் என்றாலும், சிலிக்கா (மணல்) கண்ணாடி தயாரிக்கப் பயன்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், அதன் செயல்பாட்டில் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது," என எழுதியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES மாசுபாட்டை எப்படி குறைக்க முடியும்? பிபிசி ஃபியூச்சரில் வெளியிடப்பட்ட கட்டுரையின்படி, மைக்ரோபிளாஸ்டிக்கால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்க வாய்ப்புள்ளது. பிளாஸ்டிக்கை மக்கச் செய்வதற்கு உதவும் பூஞ்சை மற்றும் பாக்டீரியாவை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்கான கொள்கைகளை அரசாங்கம் ஒருபுறம் உருவாக்குவதும், மறுபுறம் மக்கள் தங்கள் சொந்த மட்டத்தில் பிளாஸ்டிக்கை சார்ந்திருப்பதைக் குறைப்பதும் இந்த நடவடிக்கைகளை விட சிறந்தது என்கிறார் டாக்டர் மணீஷ் சிங். "உதாரணமாக, சணல் அல்லது துணிப் பைகளைப் பயன்படுத்துங்கள். துணிகளை வாங்கும் போது கூட செயற்கை இழை ஆடைகளுக்கு பதிலாக பருத்தி ஆடைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பதே நம் முயற்சியாக இருக்க வேண்டும்," என்றார் மணிஷ் சிங். https://www.bbc.com/tamil/articles/cgx58n3wvqno
-
இராணுவ தளபதி இராணுவ பரசூட் வீரராக தகுதி
24 JAN, 2024 | 07:39 PM இராணுவத்தின் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்.டபிள்யூ.பீ.ஆர்.எஸ்.பீ. என்.டி.யூ. இராணுவ பரசூட்டில் தனது நிபுணத்துவம் மற்றும் அறிவின் மூலம் கடந்த திங்கட்கிழமை 22ஆம் திகதி இராணுவ பரசூட் வீரராக தகுதி பெற்றார். இராணுவ பரசூட் வீரராக மாறுவதற்கான தளபதியின் பயணம் குடாஓய கொமாண்டோ படையணி பயிற்சிப் பாடசாலையில் இடம்பெற்றது. திங்கட்கிழமை இராணுவத் தளபதி, மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையணியின் 18 படையினர் மற்றும் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 14 படையினர் உட்பட ஏனைய பங்கேற்பாளர்களுடன் உஹான விமானப்படைத் தள ஓடுபாதையில் எம்.ஐ-17 ஹெலிகொப்டரில் விமானத்தில் சென்றார். தளபதி உஹான விமானப்படை தளத்தின் துளி மண்டலத்தின் மீது பரசூட் குதித்து, வான்வழி வீரர்களின் குடும்பத்துடன் அதிகாரபூர்வமாக இணைந்தார். இந்த சாதனையானது இராணுவ வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க தடயமாக லெப்டினன் ஜெனரல் இராணுவ பரசூட் வீரராக காணப்படுவது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, இராணுவ தளபதியாக பதவி வகிக்கின்றமை சிறப்பம்சமாகும். மேலும், இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ இராணுவ பரசூட் வீரராக வெற்றிகரமாக தகுதி பெற்ற சிரேஷ்ட மிக உயர்ந்த இராணுவ வீரர் என்ற குறிப்பிடத்தக்க சிறப்பை அடைந்துள்ளார். ஒழுக்க பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் இலங்கை பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எசீஎ டி சொய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சீஎல்எஸ்சீ தளபதியுடன் இணைந்துகொண்டார். https://www.virakesari.lk/article/174737