Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. Published By: RAJEEBAN 19 JAN, 2024 | 05:50 PM இலங்கை அரசாங்கம் தனது உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தைமீளாய்வு செய்யவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கையின் தற்போது நடைமுறையில் உள்ள மிகவும் ஆபத்தான பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை மாற்றீடு செய்வதற்காக இலங்கையின் நாடாளுமன்றத்தில் தற்போதுஆராயப்பட்டு பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் குறித்து மிகுந்த கரிசனை கொண்டுள்ளோம். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது இலங்கையின் உள்நாட்டு பாதுகாப்பிற்கான ஒரு அர்த்தமுள்ள சீர்திருத்தமாகயிருக்க வேண்டும். ஆனால் இந்த முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலமானது கடந்தகாலத்தின் உரிமை மீறல் வடிவங்களை ஆபத்தை கொண்டுள்ளது. தற்போது உத்தேச சட்டமூலம் கடந்தகாலங்களில் விமர்சனத்தின் பின்னர் கைவிடப்பட்ட சட்ட மூலங்களிற்கு ஒப்பானது, இது பயங்கரவாதம் என்பதற்கான வரைவிலக்கணங்களை மிகவும் பரந்துபட்டதாக வரையறுக்கின்றது. நீதித்துறையின் உத்தரவாதங்களின் வரம்பை கட்டுப்படுத்துகின்றது. குறிப்பாக சட்டபூர்வமற்ற தடுத்துவைத்தல் குறித்த நீதித்துறையின் உத்தரவாதங்களை கட்டுப்படுத்துகின்றது. மேலும் இந்த சட்ட மூலம் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை மனித உரிமை ஆணைக்குழு பார்வையிடுவதை அந்த இடங்களிற்கு செல்வதை கட்டுப்படுத்துகின்றது தற்போதைய வடிவத்தில் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அது உரிமைகளை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதிக்கு அதிகளவு அதிகாரங்களை வழங்கும்.மேலும் இத்தகைய அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்வதை தடுப்பதற்கான பாதுகாப்புகள் இல்லை மேலும் பிடியாணை இன்றி பாதுகாப்பு படையினர் தனிநபர்களை கைதுசெய்வதற்கான ஆபத்து அதிகரிக்கும் - இது குறித்த சட்ட அடிப்படைகளை உத்தேச சட்டமூலம் பலவீனப்படுத்தும். மேலும் இந்த சட்டமூலம் விசாரணைகளிற்கு முன்னர் நீண்டகாலம் தடுத்துவைப்பதற்கும் அனுமதிக்கும். https://www.virakesari.lk/article/174358
  2. 20 JAN, 2024 | 10:40 AM மின்சார சபையை மறுசீரமைக்கும் சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட மின்சார சபையின் மேலும் 51 ஊழியர்களின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, மின்சார சபையை மறுசீரமைக்கும் சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துக் கொண்ட மின்சார சபையின் 15 ஊழியர்களின் சேவை ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், சேவை இடைநிறுத்தப்பட்டுள்ள மின்சாரசபையின் ஊழியர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது. உத்தேச மின்சார சபை சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார சபையின் ஊழியர்கள் கடந்த 03 ஆம் திகதி முதல் மூன்று நாட்கள் பகல் உணவு வேளையின் போது கொழும்பில் உள்ள மின்சார சபையின் தலைமை காரியாலயத்துக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்சார சபையின் சேவையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் கடந்த 2 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சார சபையின் பதில் பொதுமுகாமையாளர் மின்சார சபை சேவையாளர்களின் சகல விடுமுறைகளையும் இரத்து செய்யும் வகையில் விசேட சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தார். இவ்வாறான நிலையில் இந்த சுற்றறிக்கையை பொருட்படுத்தாமல் மின்சார சேவையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிறுவன மட்டத்தில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு எதிராகவும் பொது மக்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையிலும் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக நிறுவன மட்டத்தில் நடவடிக்கை எடுக்குமாறு மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். இவ்வாறு சேவையில் இருந்த இடை நிறுத்தப்பட்ட ஊழியர்கள் மின்சார சபையின் நிதி கருமபீடத்தை மூடி விட்டு போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்கள். இதனால் கட்டணம் செலுத்த வந்த வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நிறுவன மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து 66 ஊழியர்களின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மின்சாரபை மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/174371
  3. 19 JAN, 2024 | 09:59 PM நிலவை ஆய்வு செய்யும் நோக்கில் ஜப்பானால் அனுப்பப்பட்ட “மூன் ஸ்னைப்பர்” விண்கலம் சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. இதையடுத்து விண்கலத்தை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கிய 5 ஆவது நாடாக ஜப்பான் இடம்பிடித்தது. இதற்குமுன்னர் நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கிய நாடுகளாக ஐக்கிய அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனியன், சீனா, இந்தியா ஆகிய நாடுகள் காணப்படுகின்றன. ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிலையம், Smart Lander for Investigating Moon என்ற திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டது. மோசமான வானிலை காரணமாக மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட பின்னர், H-IIA ரொக்கெட் செப்டம்பர் மாதம் ஜப்பானின் தெற்கு தீவான தனேகாஷிமாவிலிருந்து லேண்டரை சுமந்து சென்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/174363
  4. படக்குறிப்பு, ஒரு பாட்டில் ‘ஆடம்பர தண்ணீரின்’ விலை பல நூறு டாலர்கள் இருக்கும். கட்டுரை தகவல் எழுதியவர், சுனேத் பெரேரா பதவி, பிபிசி உலக சேவை 19 ஜனவரி 2024, 12:27 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஒயின் மதுபானத்திற்கு பதிலாக 'ஆடம்பரமான தண்ணீரை' மெனுவில் வைத்துள்ள உணவகம் குறித்து நீங்கள் கேள்விபட்டிருக்கிறீர்களா? அல்லது மகிழ்ச்சிகரமான ஜோடிக்கு ஷாம்பைன் மதுபானம் அல்லது பழச்சாறுக்கு பதிலாக ‘ஆடம்பர H2O’ வழங்கப்பட்ட திருமணம் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த தண்ணீர் வழக்கமான மினரல் அல்லது குழாய் நீரை விட தரம் வாய்ந்தது என்கின்றனர். இந்த ஒருபாட்டில் தண்ணீருக்காக நீங்கள் பல நூறு டாலர்களை (பல ஆயிரம் ரூபாய்கள்) செலவழிக்க வேண்டியிருக்கும். வைன் போன்றே இந்த தண்ணீரை ஸ்டீக் (இறைச்சி உணவு) முதல் மீன் உள்ளிட்ட உணவு வகைகளுடன் சேர்த்து அருந்தலாம். செலவுமிக்க இந்த ஆடம்பர தண்ணீர் எரிமலை பாறைகளிலிருந்தும் பனிப்பாறைகளிலிருந்து ஐஸ் கட்டிகளை உருக்கியும் மூடுபனியிலிருந்தும் எடுக்கப்படுகின்றன. மேகங்களிலிருந்து நேரடியாகவும் இந்த தண்ணீரை பிரித்தெடுக்க முடியும். இந்த தண்ணீர் எதிலிருந்து வருகிறது என்பதைப் பொறுத்து அதன் தன்மை மாறுபடும். வழக்கமான தண்ணீரை போன்றல்லாமல் இது சுத்திகரிப்பு செய்யப்படாதது ஆகும். உலகம் முழுவதும் இதற்கென பல பிராண்டுகள் உள்ளன. இதுகுறித்து உங்களுக்கு அறிவுரை கூறுவதற்கென நிபுணர்களும் உள்ளனர். இந்த தண்ணீருக்கென தனி சுவை உள்ளதா? படக்குறிப்பு, குழந்தைகளுக்கு தண்ணீரை சுவைத்துப் பார்ப்பதற்கென அமர்வுகளை நடத்தி வருகிறார் மிலின் படேல். எப்படி ஒயினைச் சுவைத்து பரிமாறுவதற்கென பணியாளர்கள் உள்ளனரோ அதேபோன்று இந்த தண்ணீரில் என்னென்ன தாதுக்கள் உள்ளன, அதன் சுவை எப்படி இருக்கும், அதன் சுவை நமது நாக்கில் எப்படி தனித்துத் தெரியும் என்பதையெல்லாம் பார்த்து சொல்வதற்கு பணியாளர்கள் இருப்பார்கள். ”தண்ணீர் என்பது வெறும் தண்ணீர் அல்ல. உலகிலுள்ள ஒவ்வொரு தண்ணீரும் வித்தியாசமானது மற்றும் சுவை கொண்டது,” என தண்ணீர் ஆலோசகரும் லண்டனில் தற்காலிக சந்தை (pop-up store) நடத்தி வருபவருமான மிலின் படேல். குழாய் மற்றும் பாட்டில் தண்ணீர் உட்பட இத்தகைய தண்ணீர் வகைகளை அனுபவிக்க ஆசைப்படுபவர்களுக்கு அவற்றைச் சுவைப்பதற்காக பல அமர்வுகளையும் அவர் நடத்திவருகிறார். பலவித தண்ணீர் வகைகள் மற்றும் அவற்றின் சுவைகள் குறித்து மக்களுக்கு, குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு, கற்றுக்கொடுக்கும் பணியை செய்துவருவதாக மிலின் படேல் பிபிசியிடம் தெரிவித்தார். "பள்ளியில் நாம் ஆவியாதல், உறைதல், மழைப்பொழிவு என, இயற்கையான நீரியல் சுழற்சி முறைகள் குறித்து கற்றது நினைவிருக்கும். ஆனால், நாம் ஒன்றை தவிர்த்து விட்டோம். அதுதான் மறு கனிமமயமாக்கல்,” என்கிறார் அவர். “மழைநீர் மண்ணில் விழும்போது அந்நீர் நிலத்தில் வெவ்வேறு பாறைகள் மற்றும் மண்ணில் ஊடுருவி கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம், சிலிக்கா உள்ளிட்ட தாதுக்களை பெறும். இந்த செயல்முறைதான் தண்ணீருக்கு தாதுக்களின் சுவையை வழங்குகிறது,” என படேல் கூறுகிறார். படக்குறிப்பு, இந்த வகை தண்ணீரில் சில ஹவாயில் உள்ள எரிமலை பாறைகளிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன; நார்வேயில் உருகும் பனிப்பாறைகளிலிருந்தும் எடுக்கப்படுகின்றன. டஸ்மானியாவின் காலை மூடுபனியின் துளிகளிலிருந்தும் எடுக்கப்படுகின்றன. பனிப்பாறைகள் அல்லது மழை ஆதாரங்களிலிருந்து பெறப்படும் தண்ணீர், நிலத்தில் இயற்கையாக ஊடுருவாது என்பதால் இவை, நீரூற்றுகள் மற்றும் கிணறுகளிலிருந்து பெறப்படும் தண்ணீரை விட குறைவாகவே மொத்த கரைந்த திடப்பொருட்களை (TDS - Total dissolved solids) கொண்டிருக்கும். உலகம் முழுவதிலுமிருந்து குழாய் தண்ணீர் முதல் ஒரு பாட்டிலுக்கு 318 டாலர்களுக்கு விற்கப்படும் ஆடம்பர தண்ணீர் வரை பலவித தண்ணீர் வகைகளை படேல் சேகரித்து வைத்துள்ளார். அவர் நடத்தும் அமர்வுகளில் மக்கள் அதனை சுவைத்த பின்னர், ஒவ்வொரு தண்ணீரின் சுவையும் எப்படி தனித்துவமானது என கூறுவர். "தண்ணீர் சுவையற்றது என்பதைத் தாண்டிப் பார்க்கும் வாய்ப்பை நாங்கள் மக்களுக்கு வழங்குகிறோம். நீங்கள் அதனை மனதுக்கு நெருக்கமாக அனுபவித்து அருந்தும்போது அதன் சுவையை வர்ணிக்க உருவாகும் புதிய சொற்களைக் கண்டு ஆச்சர்யப்படுவீர்கள்," என படேல் விவரிக்கிறார். "மென்மையானது, க்ரீமி, கூசுவது போன்ற உணர்வு, வெல்வெட் போன்றது, கசப்பு, புளிப்பு சுவையுடவை என பல அழகான சொல்லாடல்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன. இதனை நான் அக்வாடேஸ்டாலஜி என்பேன்," என படேல் கூறுகிறார். "பெரும்பாலானோர், ‘இது என்னுடைய இளமைக்காலத்தை நினைவுபடுத்துகிறது', 'என்னுடைய விடுமுறை நாட்களை நினைவுபடுத்துகிறது', 'என்னுடைய தாத்தா, பாட்டி வீட்டை நினைவுபடுத்துகிறது' எனக்கூறுவார்கள்," என்கிறார் அவர். தண்ணீரை சுவைக்கும் போட்டிகள் 'தி ஃபைன் வாட்டர் சொசைட்டி' ஒவ்வோர் ஆண்டும் பூடான் முதல் ஈக்வடார் வரை, உலகம் முழுவதிலுமிருந்து இத்தகைய தண்ணீர் உற்பத்தியாளர்களை வரவழைத்து சர்வதேச அளவில் தண்ணீரை சுவைக்கும் போட்டிகளை நடத்துகின்றது. தொலைதூர பகுதிகளிலிருந்து தண்ணீர் உற்பத்தி செய்யும் குடும்ப தொழில்களை நடத்துபவர்களே இதில் அதிகம் கலந்துகொள்கின்றனர். படக்குறிப்பு, 2018-ஆம் ஆண்டில் ஈக்வடாரில் சர்வதேச அளவில் தண்ணீர் சுவைக்கும் போட்டியை ஃபைன் வாட்டர்ஸ் நடத்தியது. "இந்த போட்டிகள் ஆரம்பத்தில் மிக அபத்தமானதாக கருதப்பட்டது," என்கிறார் ஃபைன் வாட்டர் சொசைட்டி மற்றும் ஃபைன் வாட்டர் அகாடமியின் இணை நிறுவனர் டாக்டர் மைக்கேல் மஸ்சா. "20 ஆண்டுகளுக்கு முன்பு நான் மது அருந்துவதை நிறுத்தியபோது இந்த செயல்பாடுகளைத் தொடங்கினேன்," என அவர் பிபிசியிடம் தெரிவித்தார். "ஒயின் என்னுடைய உணவு மேசையிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் நான் அதனை சுற்றியும் பார்த்தேன். அப்போது நான் முன்பு பார்த்திராத வேறொரு பாட்டில் இருந்தது, அதுதான் தண்ணீர். ஒயினுக்கு பதிலாக தண்ணீரைச் சுவைக்கலாம் என்கிற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது," எனவும் அவர் கூறுகிறார். இத்தகைய தண்ணீர் தாகத்தைத் தீர்ப்பதுடன் பலவற்றை வழங்குவதாக அவர் நம்புகிறார். தனித்துவமான ஒன்றை ஆராயவும் பகிரவும் மகிழ்வதற்கான வாய்ப்பை அவை வழங்குவதாகவும் ஒயின்-ஐ போன்றல்லாமல் இதனை நம் குழந்தைகளுடனும் பகிர்ந்துகொள்ள முடியும் என்றும் அவர் கூறுகிறார். இந்த தண்ணீருக்கான தேவை அதிகரித்து வருவதாகவும், ஆரோக்கியமான வாழ்வியலுக்காக மதுபானங்கள் மற்றும் கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்களை குறைவாக நுகரும் போக்கு குறிப்பாக இளம் தலைமுறையினரிடையே வளர்ந்துவரும் போக்கினால் இது நிகழ்வதாக அவர் கூறுகிறார். இந்த அரிதான, சுத்திகரிக்கப்படாத தண்ணீர், ’வின்டேஜ் ஒயின்’-ஐ போன்று ஓர் பின்னணி கதையுடன் சந்தைப்படுத்த முடியும் என்பதும் இதனை நோக்கி ஈர்க்கப்படுவதற்குக் காரணமாக உள்ளது. தண்ணீரும் உணவும் படக்குறிப்பு, வைன்-ஐ போன்று இவ்வகை தண்ணீரை உணவுடனும் சேர்த்து அருந்த முடியும். ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவில் உள்ள சில உணவகங்கள் இத்தகைய ஆடம்பரமான தண்ணீரை தங்கள் மெனுவில் மற்ற உணவுகளுடன் சேர்த்துள்ளன. "நான் இப்போது அமெரிக்காவில் உள்ள மூன்று நட்சத்திர மிஷலின் உணவகத்திற்கு இந்த தண்ணீர் மெனுவை தயாரித்து வருகிறேன். உணவு மற்றும் சூழலுக்குத் தகுந்தவாறு கவனமாக தொகுக்கப்பட்ட 12 முதல் 15 தண்ணீர் வகைகளை மெனுவில் சேர்க்க நாங்கள் திட்டமிட்டு வருகிறோம்," என டாக்டர் மஸ்சா கூறுகிறார். "நீங்கள் மீன் சாப்பிடும் போது, மாட்டுக்கறியுடன் வழங்கப்படுவது போன்றல்லாமல் வேறுவிதமான தண்ணீர் வழங்கப்படும். மீனுடன் (சுவையுடன்) குறுக்கிடுவதைத் தவிர்க்கும் வகையில், குறைந்த கனிமத்தன்மையுடனான நீர் தான் அதற்கு தேவை," என்கிறார் அவர். மேலும், ஒயின் அறைகளுக்கு பதிலாக தண்ணீரை அருந்தும் அறைகளுடன் கூடிய மிக ஆடம்பரமான வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களிலும் மஸ்சா பணியாற்றி வருகிறார். மத காரணங்களுக்காக மதுபானங்களை தவிர்க்கும் கலாசாரங்களிலும் இவ்வகை தண்ணீர் பிரபலமாகிவருவதாக குறிப்பிடும் மஸ்சா, திருமணங்களில் இவை பிரபலமடைந்து வருவதாக கூறுகிறார். செலவுகரமான ஷாம்பைனுக்கு பதிலாக சிறந்த மாற்று பரிசாகவும் இது இருக்கும் என்கிறார் அவர். இந்த போக்குக்கு விமர்சனங்களும் உள்ளன. 'தார்மீக ரீதியாக தவறானது' படக்குறிப்பு, ஐ.நா. அறிக்கையின்படி, 2022-ஆம் ஆண்டில் 220 கோடி பேர் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் உள்ளனர். உலகளவில் கோடிக்கணக்கான மக்கள் சுத்தமான தண்ணீர் கிடைக்க போராடிக்கொண்டு வரும் வேளையில், அடிப்படையான ஒன்றுக்கு இவ்வளவு பணம் செலவு செய்யும் இந்த யோசனை ஆபத்தானது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. ஐ.நா. அறிக்கையின்படி, 2022-ஆம் ஆண்டில் 220 கோடி பேர் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் உள்ளனர். அவர்களுள் 70.3 கோடி பேர் அடிப்படை தண்ணீர் விநியோகம் கூட இல்லாமல் உள்ளனர். இது ஏமாற்றுகர போக்கு என மற்ற விமர்சகர்கள் வாதிடுகின்றனர். தண்ணீர் என்பது வெறும் தண்ணீர் தான் என்றும் விலையை தவிர குடிக்கத்தகுந்த குழாய் நீர், பாட்டில் தண்ணீர் அல்லது 'ஃபைன் வாட்டர்' என்ற வித்தியாசமெல்லாம் இல்லை என்கின்றனர். எந்தவித பாட்டில் தண்ணீராக இருந்தாலும் அவை குப்பைகளாக மாறுவதால் அது நம் பூமிக்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கோடிக்கணக்கான பேர் சுத்தமான தண்ணீர் கிடைக்கப் போராடும் நிலையில், ஒரு பாட்டில் தண்ணீருக்கு பல நூறு டாலர்கள் செலவழிப்பது தார்மீகமற்ற செயல் என, லண்டனில் உள்ள கிரெஷாம் கல்லூரியில் சுற்றுச்சூழல் துறை பேராசிரியர் கரோலின் ராபர்ட்ஸ். "நீங்கள் மற்றவர்களுடன் சேர்ந்து இரவு உணவுக்கு செல்லும்போது உங்களின் செல்வசெழிப்பை காட்டுவது போன்றதுதான் இது. 'அண்டார்டிகா அல்லது ஹவாயிலிருந்து எங்கிருந்தோ பறந்து வந்த இந்த அழகான பாட்டில் தண்ணீருக்கு நான் செலவு செய்கிறேன்' என்று கூறுவதை மக்கள் சிறந்ததாக நினைக்கின்றனர். ஆனால், யதார்த்தத்தில் இதில் யாருக்கும் பலன் இல்லை. இது முழுக்க பணம் சார்ந்தது மட்டுமே," என அவர் பிபிசியிடம் தெரிவித்தார். "மேலும், முக்கியமாக இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். மைக்ரோபிளாஸ்டிக்காக சிதைவடையும் பிளாஸ்டிக், உற்பத்திக்கு புதைபடிவ எரிபொருட்களின் தேவை அல்லது தண்ணீர் அடைக்கப்படும் மிக கடினமான கண்ணாடி, தொலைதூரப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்குக் கொண்டு செல்லப்படுதல் என, இவ்வகை தண்ணீர் கார்பன் உமிழ்வில் பாதிப்பை ஏற்படுத்துகிறது" என்கிறார் அவர். "எனவே இது பணத்தைச் சார்ந்தது மட்டுமல்ல. இவ்வகை தண்ணீர் சுற்றுச்சூழலில் ஏற்படும் சேதங்களையும் கவனிக்க வேண்டும்," என்கிறார் அவர். படக்குறிப்பு, ஒவ்வொரு நாளும் பிளாஸ்டிக் நிரப்பப்பட்ட 2,000 குப்பை லாரிகளுக்கு சமமான குப்பைகள் உலகின் பெருங்கடல்கள், ஆறுகள் மற்றும் ஏரிகளில் கொட்டப்படுகின்றன என்று ஐ.நா. கூறுகிறது ஆனால், இவ்வகை தண்ணீர் பணக்காரர்களுக்காக மட்டுமே தயாரிக்கப்படுவது அல்ல என்றும் வெறும் இரண்டு டாலர்களுக்கும் இத்தகைய தண்ணீர் கிடைப்பதாக டாக்டர் மஸ்சா கூறுகிறார். இயற்கையான இத்தகைய தண்ணீருக்கும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீருக்கும் உள்ள வித்தியாசத்தை சுட்டிக்காட்டும் அவர், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்கிறார். "குழாய் தண்ணீரை பிளாஸ்டிக் பாட்டிலில் அடைப்பது எந்த அர்த்தத்தையும் கொடுப்பதில்லை. நீங்கள் பல்பொருள் அங்காடிக்கு உங்களின் எஸ்.யூ.வி காரில் சென்றுவிட்டு பிளாஸ்டிக் பாட்டில்களை வீட்டுக்குக் கொண்டு வந்து அருந்திவிட்டு அதனை தூக்கியெறிந்து விடுவீர்கள். நம்ப முடியாத வகையில் அது வீண் தான்," என்கிறார் அவர். சுத்திகரிக்கப்பட்ட பாட்டில் நீரைவிட, குழாய் நீரை தாகத்தைத் தீர்க்க பயன்படுத்தலாம் என அவர் பரிந்துரைக்கிறார். "உண்மையிலேயே குடிநீர் குழாய் கொண்டிருப்பது, உலகெங்கிலும் உள்ள பலருக்குக் கிடைக்காத ஒரு பாக்கியம் தான் என்பதை நாம் மறந்து விடுகிறோம்," என அவர் முடித்தார். https://www.bbc.com/tamil/articles/ce7k7gkejp6o
  5. Published By: RAJEEBAN 19 JAN, 2024 | 03:58 PM இலங்கை தனக்கு கடன்வழங்கிய உத்தியோகபூர்வ கடன்கொடுப்பனவாளர்களுடன் விரைவில் இறுதி உடன்படிக்கைகளை பூர்த்தி செய்வது அவசியம் என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. தனிப்பட்ட கடன்கொடுப்பனவாளர்களுடன் இலங்கை தீர்மானமொன்றிற்கு வருவதும் அவசியம் எனவும் சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகளின் இலங்கைக்கான விஜயத்தின் இறுதியில் இந்தகருத்து வெளியாகியுள்ளது. இலங்கையின் அதிகாரிகள் முன்னெடுத்துள்ள பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக பொருளாதார மீட்சிக்கான ஆரம்ப கட்ட அறிகுறிகள் தென்படுகின்றன என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. எனினும் இந்த முன்னேற்றங்கள் இலங்கை மக்களின் வாழ்க்கை தரத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும் என்பதால் சவால்கள் தொடர்ந்தும் நீடிக்கின்றன எனவும் சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. 2023ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு பகுதியில் சாதகமான உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி காணப்பட்டுள்ளது, பணவீக்கம் குறைவடைந்துள்ளது, வருமானங்களை பெற்றுக்கொள்ளுதல், அந்தியசெலவாணிகையிருப்பு அதிகரித்தமை போன்றவற்றில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது எனவும் சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு கடன் மறுசீரமைப்பினை முன்னெடுத்தமை ஒரு மைல்கல் எனவும் சர்வதேச நாணயநிதியம் பாராட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/174344
  6. பட மூலாதாரம்,RODONG SHINMUN கட்டுரை தகவல் எழுதியவர், பிரான்செஸ் மாவோ பதவி, பிபிசி செய்திகள் 6 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் மேற்கொண்ட கூட்டுப் பயிற்சிகளுக்கு பதிலடியாக, வடகொரியா நீருக்கடியில் தனது அணு ஆயுத அமைப்பை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது. நீருக்கடியில் அணு ஆயுதத்தை சுமந்து செல்லக்கூடிய டிரோன் ஒன்று, கிழக்கு கடற்கரை பகுதியில் சோதனை செய்யப்பட்டதாக வடகொரிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சோதனைகள் நடத்தப்பட்டதற்கு வேறு எந்த ஆதாரமும் இல்லை மற்றும் டிரோன்களின் திறன் பற்றிய வடகொரியாவின் விளக்கங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்று தென் கொரியா முன்பு கூறியிருந்தது. இன்று வெளியான வடகொரியாவின் அணு ஆயுத சோதனை அறிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்க ஜப்பான் மறுத்துவிட்டது. தனது 'ஹெயில்-5-23' அணு ஆயுத அமைப்பின் சோதனைகள் குறித்து முன்னரே அறிவித்திருந்தது வடகொரியா, ஆனால் கடந்த சில வாரங்களாக இராணுவ நடவடிக்கைகளை வடகொரியா தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவம் இப்போது வெளிவந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று திட எரிபொருள் மூலம் இயங்கும் ஒரு புதிய பாலிஸ்டிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக கூறியது வடகொரிய அரசு. ஜனவரி முதல் வாரத்தில் தென் கொரியாவுடனான கடல் எல்லையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகக் கூறியது. கொரிய தீபகற்பத்தில் நிலவும் போர் சூழல் பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த சில மாதங்களில் பல அமைதி ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ள வடகொரிய அதிபர் கிம் ஜோங்-உன், தனது கொள்கைகளை அமல்படுத்துவதில் மிகவும் ஆக்ரோஷமாக செயலாற்றி வருகிறார். அரசு நிறுவனமான கே.சி.என்.ஏ-வின் அறிக்கையில், அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் மேற்கொண்ட கூட்டுப் பயிற்சிகளே, வடகொரியா நீருக்கடியில் அணு ஆயுதங்களை சோதனை செய்வதற்கு தூண்டுகோலாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த கூட்டுப் பயிற்சிகள் 'பிராந்திய நிலைமையை மேலும் சீர்குலைக்கும்' என்றும் வடகொரியாவின் பாதுகாப்பிற்கு அவை அச்சுறுத்தலாக இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. அதே வேளையில், அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகியவை வட கொரியாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் கடந்த ஆண்டு அதிக பயிற்சிகளை நடத்தியதாக கூறுகின்றன. அணுசக்தி ஏவுகணைகளின் பலகட்ட சோதனைகள் மற்றும் புதிய ஆயுதங்களை ஏவுதல் ஆகியவை வட கொரியாவின் இராணுவ நடவடிக்கைகளில் அடங்கும். இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் ஐ.நா.வின் தடைகளை மீறுவதாகும். ஆனால், கொரிய தீபகற்பத்தில் எந்த நேரத்திலும் போர் வெடிப்பதற்கான சூழ்நிலை இருப்பதால், அதற்கு தயாராக இருக்க தனது அரசு இராணுவ ஆயுத சோதனைகளை செய்வதாக கிம் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், தென் கொரியா குறித்த தனது நிலைப்பாட்டில் சில அடிப்படைக் கொள்கை மாற்றங்கள் ஏற்படும் என மறைமுகமாக கூறியிருந்தார். இந்த வார தொடக்கத்தில் தென் கொரியாவுடன் மீண்டும் ஒன்றிணைவதற்கான முன்னாள் அடித்தள இலக்கு முடிந்துவிட்டதாக கிம் அறிவித்தார். மேலும் தென் கொரியாவை 'முதல் எதிரி' என்று குறிப்பிட்டார். வடகொரிய நாட்டின் இராணுவ மற்றும் அணுசக்தி திறன்களை மேலும் மேம்படுத்தும் வகையில், கிம்மின் ஆட்சியில் நீருக்கடியில் அணு ஆயுத அமைப்பு சோதனை போன்ற ஆயுத சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த செப்டம்பரில், அணு ஆயுதங்களை ஏவக்கூடிய திறன் கொண்ட தனது முதல் நீர்மூழ்கிக் கப்பலை வடகொரியா அறிமுகப்படுத்தியது. உலக நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தலா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்ய தலைவர் புடினுடன் வடகொரிய அதிபர் கிம் ‘சுனாமி’ என பெயரிடப்பட்ட அணு ஆயுதம் மார்ச் 2023 முதல், 'ஹெயில்' எனப்படும் அணு ஆயுத அமைப்பின் சோதனைகள் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டு வந்தது வடகொரியா. ஹெயில் என்பவை நீருக்கடியில் அணு ஆயுதம் சுமந்து செல்லும் டிரோன்கள். ஹெயில் என்றால் கொரிய மொழியில் 'சுனாமி' என்று பொருள். இந்த ஆயுதங்கள் அல்லது அவற்றின் செயல்திறன் பற்றி அதிகம் அறியப்படவில்லை. ஆனால் அவை எதிரிகளின் கடல் எல்லைக்குள் புகுந்து, நீருக்கடியில் மிகப்பெரிய வெடிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை என்று விவரித்துள்ளன வடகொரிய ஊடகங்கள். வடகொரியா ஊடகங்கள் கூறுவது போன்ற செயல்திறனுடன் இந்த ஆயுதங்கள் இருந்தாலும், கிம் அரசின் அணு ஏவுகணைகளை விடவும் முக்கியத்துவம் குறைந்த ஆயுதமாகவே அவை பார்க்கப்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். "வடகொரியாவின் இராணுவ அறிவியல் மற்றும் ஆயுதங்கள் இன்னும் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது என்ற உண்மையைக் கருத்தில் கொண்டால், ஒரு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கட்டத்திற்கு அவை இன்னும் வரவில்லை" என்று வட கொரிய ஆய்வுகளுக்கான உலக நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஆராய்ச்சியாளரான ஆன் சான்-இல், ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். பல முயற்சிகளுக்கு பிறகு, வடகொரியாவின் உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்வெளியில் நிலைநிறுத்திவிட்டதாக கடந்த ஆண்டு கிம்மின் அரசு அறிவித்தது. மேலும் இந்த ஆண்டு மேலும் மூன்று உளவு செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தப் போவதாகவும் வடகொரிய அரசு கூறியுள்ளது. செயற்கைக்கோள் உண்மையில் செயல்படுகிறதா என்பது இன்னும் சரிபார்க்கப்படவில்லை. ஆனால்,யுக்ரேனில் நடந்த போருக்காக வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை ரஷ்யா பெற்றதாகவும், அதற்கு கைமாறாக தான் வடகொரியாவின் செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்த ரஷ்யா உதவியது என்றும் தென் கொரியா கூறியது. கிம் கடந்த ஆண்டு ரஷ்யாவின் தலைவர் விளாடிமிர் புடின் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு ஆகியோருடன் முக்கிய சந்திப்புகளை நடத்தினார். வடகொரியாவின் வெளியுறவு அமைச்சரும் இந்த வாரம் மாஸ்கோவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cy6w636epw1o
  7. விமான விபத்து: உதவி வரும் வரை உயிர் பிழைக்க இறந்தவர்களின் பிணங்களைத் தின்ற பயணிகள் பட மூலாதாரம்,URUGUAYAN AIR FORCE படக்குறிப்பு, "விமானம் உடைந்திருந்தது, வெளியே நான் பனியால் சூழப்பட்டிருந்தேன்." 3 மணி நேரங்களுக்கு முன்னர் அக்டோபர் 13, 1972 அன்று மான்டிவிடியோவை சேர்ந்த ஓல்ட் கிறிஸ்டியன்ஸ் கிளப் பள்ளியைச் சேர்ந்த ரக்பி அணி, சிலியின் சாண்டியாகோவுக்கு செல்ல உருகுவே விமானப்படை விமானத்தை வாடகைக்கு எடுத்திருந்தது. அந்த நகரத்தில் உள்ள ஓல்ட் பாய்ஸ் குழுவுக்கு எதிரான போட்டியில் அவர்கள் விளையாட இருந்தனர். ஆனால், அவர்களோடு சேர்த்து 45 பேரோடு பயணித்த எப்எச் - 227D விமானம் ஆண்டெஸ் மலைகளின் மேல் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்கு உள்ளானதில் சம்பவ இடத்திலேயே 12 பேர் உயிரிழக்க நேர்ந்தது. இதர 17 பேர் அடுத்தடுத்த நாட்களில் காயம் காரணமாகவும், உணவு இல்லாமை மற்றும் அங்கிருந்த அசாதாரண நிலைமைகளாலும் உயிரிழந்தனர். இந்த விபத்து வரலாற்றில் “தி மிராக்கில் ஆஃப் ஆண்டெஸ்” என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில்கூட “தி ஸ்னோ சிட்டி” என்ற பெயரில் படமாகவும் வெளிவந்துள்ளது. விமான போக்குவரத்து வரலாற்றில் இது மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயம். காரணம் இதிலிருந்து தப்பித்த மீதி 16 பேரும், விபத்தில் இறந்து போன சக நண்பர்களின் பிணங்களைத் தின்று பிழைத்திருந்தனர். அவர்கள் அனைவரும் விபத்து நடந்து 72 நாட்கள் கழித்தே மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் ஒருவரான ராபர்டோ கேனெஸ்ஸா தற்போது குழந்தைகள் இதய மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற இதய மருத்துவராக உள்ளார். மார்ச் 2016இல் அவர் எழுதிய "நான் உயிர் பிழைக்க வேண்டும்: ஆண்டெஸ் மலையில் ஏற்பட்ட விமான விபத்து எவ்வாறு உயிர்களைக் காக்க என்னைத் தூண்டியது," புத்தகத்தை அவர் வெளியிட்ட நேரத்தில், பிபிசியின் விக்டோரியா டெர்பிஷையர் நிகழ்ச்சி அவரை நேர்காணல் செய்தது. விமான விபத்தில் பிழைத்தவரின் வாக்குமூலம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரார்ட்டோ கேனெஸ்ஸா 1974 இதுவே அவரது சாட்சியம். "நாங்கள் ஆண்டெஸ் மலைக்கு மேலே பறந்து கொண்டிருந்தோம். அப்போது அங்கு மேகமூட்டமாகக் காணப்பட்டது. திடீரென்று , ஒரு விமான ஊழியர் பயணிகளை 'உங்கள் சீட் பெல்ட்களை வேகமாக அணிந்து கொள்ளுங்கள், நாம் மேகங்களுக்கு நடுவே செல்ல இருப்பதால், விமானம் குலுங்கப் போகிறது' என்று கூறினார். உடனடியாக விமானமும் குலுங்கத் தொடங்கியது. யாரோ ஒருவர் என்னை ஜன்னல் பகுதியைப் பார்க்க சொன்னார், நாங்கள் மலைகளுக்கு மிக அருகில் பறந்து கொண்டிருந்தோம். உடனே சிலர் 'நான் சாகக்கூடாது' என்று சொல்லத் தொடங்கினர். விமானம் உயரத்திற்குப் பறக்க முயற்சி செய்தது, ஆனாலும் விபத்தில் சிக்கிக் கொண்டது. நான் என்னுடைய இருக்கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டேன். விமானம் தனது இரண்டு இறக்கைகளையும் இழந்து மலைகளில் சறுக்கத் தொடங்கியது. இறுதியில் அது நின்றபோது, எனக்கு முன்னாள் இருந்த பாறையின் மீது மிக வேகமாக நான் பறந்துபோய் விழுந்தேன். எனது தலை கடுமையாக இடித்துக் கொண்டதில் எனக்கு மயக்கம் வருவது போல் இருந்தது. விமானம் நின்றுவிட்டதை என்னால் நம்பவே முடியவில்லை. என்னுடைய கை, கால்கள் இன்னமும் அங்கேயே இருப்பதை என்னால் பார்க்க முடிந்தது. ஆம் நான் பிழைத்துவிட்டேன்." பட மூலாதாரம்,COURTESY "என்னால் அதை நம்பவே முடியவில்லை. சுற்றிப் பார்த்தால் எல்லாமே மோசமாக நொறுங்கிக் கிடந்தது. சில நண்பர்கள் இறந்திருந்தனர், மற்றவர்கள் காயமடைந்திருந்தனர், ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. சிலரின் உடம்பில் உடைந்த உலோகத் துண்டுகள் குத்திக் கொண்டிருந்தது. நான் இங்கிருந்து வெளியே போக வேண்டும், காவல்துறை வந்துவிடும், அவசர ஊர்தி, தீயணைப்பு வீரர்கள் வந்து விடுவார்கள் என்றெல்லாம் எனக்கு நானே சொல்லிக்கொண்டு விமானத்தின் வால் பகுதிக்குச் சென்றுவிட்டேன். விமானம் உடைந்திருந்தது, வெளியே நான் பனியால் சூழப்பட்டிருந்தேன். அமைதி நிறைந்த மலைகளுக்கு நடுவில் நாங்கள் மாட்டிக்கொண்டதால் நான் மிகவும் சோகமாக உணர்ந்தேன்." உடலை வாட்டிய கொடூரப் பசி பட மூலாதாரம்,URUGUAYAN AIR FORCE படக்குறிப்பு, "அங்கிருந்த அதீத குளிரால் நாங்கள் உறைந்து போயிருந்தோம்" "அங்கு தீயணைப்பு வீரர்களும் இல்லை, உதவி எதுவுமே இல்லை. விமானி உயிரோடுதான் இருந்தார், ஆனால் விமானி அறைக்குள் சிக்கிக் கொண்டிருந்தார். அங்கிருந்தவர்களால் அவரை வெளியே கொண்டு வர முடியவில்லை. அப்போது அவர் தன் பெட்டியில் துப்பாக்கி இருக்கிறது என்று சொன்னார். அவர் தற்கொலை செய்துகொள்ள நினைத்தார். இரவு முழுவதும் வேதனையில் துடித்துக் கொண்டிருந்தார். ஆனால், எங்களால் அவரை வெளியே எடுக்கவே முடியவில்லை. அங்கிருந்த அதீத குளிரால் நாங்கள் உறைந்து போயிருந்தோம். அடுத்த நாள், மிகவும் மோசமாகக் காயமடைந்த ஒருவர் இறந்துவிட்டார். அது எனக்கு நல்லதாகவே தோன்றியது, காரணம் அவருக்கு வலி பொறுத்துக்கொள்ள முடியாததாக இருந்தது. பிழைத்திருந்த மற்றவர்களுக்கு வெறும் பனியும், பாறைகளும் மட்டுமே இருந்தது. வேற எதுவுமே உண்பதற்கு இல்லை. எங்களுக்கு மிகவும் மோசமான பசி மட்டும் இருந்தது. கொடூரமான பசியில் இருக்கும்போது உங்களின் உள்ளுணர்வு எதையாவது சாப்பிடு என்று சொல்லிக் கொண்டே இருக்குமல்லவா? அதனால் காலணிகளின் லெதர் அல்லது பட்டைகளை உண்ணலாமா என்று நாங்கள் யோசித்தோம். அதனால் காலணியின் லெதரை மெல்லத் தொடங்கினோம். ஆனால் அதில் அதிகமான ரசாயனங்கள் இருக்கும் என்பதால் அது எங்களுக்கு விஷமாக மாறக்கூடும் என்று நாங்கள் உணர்ந்தோம். அதைத் தவிர அந்த நேரத்தில் எங்களிடம் உண்ண வேறு எதுவுமே இல்லை." மனித சோதனை "ஒருகட்டத்தில் அங்கிருந்த ஒருவர் 'எனது மனநலம் பாதிக்கப்பட்டு விட்டதாக உணர்கிறேன். ஏனென்றால் நமது நண்பர்களின் உடலை உண்ணலாம் என்று எனக்குத் தோன்றுகிறது,' என்று கூறினார். உடனே அங்கிருந்தவர்கள் அது முட்டாள்தனம், நாம் அதைச் செய்யக்கூடாது, நாம் நரமாமிசம் உண்பவர்களாக மாறக்கூடாது என்று அவருக்குப் பதிலளித்தனர்." பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "எனது நண்பர்கள் உயிர் வாழ எனது உடல் உதவியாக இருக்குமானால் நான் பெருமையாக உணர்ந்திருப்பேன்." "அந்த நேரத்தில் நான் ஒரு மருத்துவ மாணவன் மற்றும் அந்த உடல்கள் அப்போது இறைச்சி, கொழுப்பு, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டாக மட்டுமே தெரிந்தது. எனது நண்பர்களின் தனியுரிமையை மீறி அவர்களின் உடலின் பாகங்களை வெட்டுவது எனக்கு மிகவும் கடினமானதாக இருந்தது. அங்கிருந்தவர்களில் யாரோ ஒருவர், இயேசு கிறிஸ்து தனது லாஸ்ட் சப்பரில் ‘என்னுடைய உடல் மற்றும் ரத்தத்தை எடுத்துக்கொள்’ என்று சொன்னால் மட்டும் பரவாயில்லையா?' என்று கத்தினார். ஆனால் எனக்கோ அது லாஸ்ட் சப்பர் கிடையாது. இதே நான் அங்கிருந்த பிணங்களில் ஒன்றாக இருந்திருந்தால் என்ன நினைத்திருப்பேன் என்று சிந்தித்தேன். எனது நண்பர்கள் உயிர் வாழ எனது உடல் உதவியாக இருக்குமானால் நான் பெருமையாக உணர்ந்திருப்பேன். இன்றும் எனது நண்பர்களின் ஒரு பகுதி எனக்குள் இருப்பது போன்று நான் உணர்கிறேன். மேலும் அவர்களுக்கு நன்றியுள்ளவனாக உணர்கிறேன். உடல்களை உண்டு மீட்கப்படும் வரை பிழைத்திருப்பது ஒரு சிலருக்கு மற்றவர்களைவிட மிகக் கடினமாக இருந்தது. அது ஒரு மனித சோதனை என்று நான் அடிக்கடி நினைப்பேன். பின்னால் பிழைத்திருந்தவர்களோடு இறைச்சியைப் பகிர்ந்து கொள்வது வழக்கமாகிவிட்டது." பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விபத்து நடந்து 40 ஆண்டுகள் கழித்து எடுக்கப்பட்ட படம் பிணங்களை உண்டதைவிடக் கடினமான சவால் "இறந்து போனவர்களின் குடும்பங்கள் எங்களுக்கு ஆதரவாகவே இருந்தன. அவர்கள் இறந்து போனவர்களின் உடல்களுக்கு என்ன ஆனது என்பது குறித்துக் கவலைப்படவில்லை. இறந்தவர்கள் உயிரோடு இருந்தபோது என்ன ஆனது என்பது மட்டுமே அவர்களது கவலையாக இருந்தது. இது வேடிக்கையானது, காரணம் இந்தக் கதைக்கு இரண்டு பார்வைகள் உள்ளதாக நான் நினைக்கிறன். ஏனெனில், உயிர் பிழைத்திருக்க நாங்கள் எதிர்கொண்ட கடுமையான சவால்களில், பிணங்களை உண்டதெல்லாம் கடினமான விஷயமாகத் தெரியவில்லை. சிலர் 'அட! பிணங்களைத் திண்றதால் நீங்கள் உயிர் பிழைத்தீர்களா" என்று இது ஏதோ மாயமந்திரம் போலக் கேட்கிறார்கள். ஆனால் பிணங்களை உண்டது வெறும் பிழைத்திருப்பதற்கான நேரத்தை அதிகரிப்பது மட்டுமே. நாங்கள் அணியாக இருந்து ஒன்று சேர்ந்து பணியாற்றி ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டதால் நாங்கள் பிழைத்தோம் என்பதே கடினமான ஒன்று." பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செப்டம்பர் 2010இல், உயிர் பிழைத்தவர்களின் குழு சிலியில் சுரங்கம் ஒன்றில் மாட்டிக்கொண்ட 33 பேரின் உறவினர்களை பார்க்கச் சென்றது. "மலைகளில் இருந்து வெளியேறி 11 நாட்கள் நடந்ததால் நாங்கள் பிழைத்தோம். எங்களுக்குள் ஒற்றுமையாக இருக்கவும் தொடர்பு கொள்வதற்கும் உதவிய விஷயங்களில் ஒன்று நாங்கள் ஒரு குழுவாக இருந்தோம் என்பதும், ஒன்றாக வளர்ந்தோம் என்பதும்தான். எங்களிடம் இருந்ததெல்லாம் உயிர் மட்டுமே. 'அனைத்து முரண்பாடுகளையும் கடந்து இதைச் செய்வோம், என்ன நடக்கிறது என்று பார்த்து விடுவோம்' என்று சொல்லிக்கொண்டோம். நான் மலைகளில் இருந்தபோது எனது நண்பர்கள் இறப்பதைப் பார்த்தேன். அடுத்தது நானாக இருக்கலாம் என்று எனக்குத் தெரியும். அப்போதுதான் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் உள்ள கோடு எவ்வளவு மெல்லியது என்பதைப் புரிந்துக் கொண்டேன். அப்போதிலிருந்து கூடுதல் நாட்களை மகிழ்ச்சியுடன் வாழ்கிறேன்." https://www.bbc.com/tamil/articles/c4ny1g0eleno
  8. ஸிம்பாப்வேயுடனான கடைசிப் போட்டியில் 9 விக்கெட்களால் வெற்றிபெற்ற இலங்கை தொடரையும் கைப்பற்றியது 18 JAN, 2024 | 10:14 PM (நெவில் அன்தனி) ஸிம்பாப்வேக்கு எதிராக கொழும்பு, ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 3ஆவதும் தீர்மானம் மிக்கதுமான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 9.1 ஓவர்கள் மீதமிருக்க 9 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிபெற்ற இலங்கை தொடரை 2 - 1 ஆட்டக் கணக்கில் கைப்பற்றியது. இந்தியாவுக்கு எதிராக 2021 ஜூலை மாதம் ஈட்டிய தொடர் வெற்றிக்குப் பின்னர் 30 மாதங்கள் கழித்து இருதரப்பு சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடர் ஒன்றை முதல் தடடைவயாக இலங்கை கைப்பற்றியுள்ளது. வனிந்து ஹசரங்கவின் 4 விக்கெட் குவியல், ஏஞ்சலோ மெத்யூஸ், மஹீஷ் தீக்ஷன ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள், பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டங்கள் என்பன இலங்கைக்கு இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுத்தன. இப்போட்டியில் ஸிம்பாப்வேயினால் நிர்ணயிக்கப்பட்ட 83 ஓட்டங்கள் என்ற மிகவும் இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 10.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 88 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ஆரம்ப வீரர்களான பெத்தும் நிஸ்ஸன்கவும் குசல் மெண்டிஸும் சுமாரான வேகத்தில் துடுப்பெடுத்தாடி 53 பந்துகளில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். குசல் மெண்டிஸ் 27 பந்துகளில் 4 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 33 ஓட்டங்களைப் பெற்று சோன் வில்லியம்ஸின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். முதல் இரண்டு போட்டிகளில் பிரகாசிக்கத் தவறிய பெத்தும் நிஸ்ஸன்க இந்தப் போட்டியில் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 23 பந்துகளில் 5 பவுண்டறிகள் ஒரு சிக்ஸ் உட்பட 33 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அவர் வெற்றி இலக்கை சிக்ஸுடன் நிறைவு செய்தார். தனஞ்சய டி சில்வா ஆட்டம் இழக்காமல் 15 ஓட்டங்களைப் பெற்றார். இன்றைய போட்டியில் இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. குசல் ஜனித் பெரேரா நீக்கப்பட்டதுடன் சரித் அசலன்க உபாதை காரணமாக விளையாடவில்லை. அவர்கள் இருவருக்குப் பதிலாக தனஞ்சய டி சில்வாவும் கமிந்து மெண்டிஸும் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். தனஞ்சய டி சில்வா 9 மாதங்களின் பின்னரும் கமிந்து மெண்டிஸ் 12 மாதங்களின் பின்னரும் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடினர். ஸிம்பாப்வே அணியில் ரெயான் பேர்லுக்குப் பதிலாக டோனி மொன்யொங்கா விளையாடினார். அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 14.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 82 ஓட்டங்களைப் பெற்றது. ஏஞ்சலோ மெத்யூஸ் முதலாவது ஓவரிலேயே க்ரெய்க் ஏர்வின்ஸை (0) ஆட்டம் இழக்கச் செய்தார். (9-1) ஆனால், டில்ஷான் மதுஷன்க வீசிய அடுத்த ஓவரில் 19 ஓட்டங்கள் பெறப்பட்டது. எனினும் மெத்யூஸ் தனது 2ஆவது ஓவரில் அதிரடி ஆட்டக்காரர் ப்றயன் பெனெட்டின் விக்கெட்டைக் கைப்பற்றி இலங்கைக்கு ஆறுதலைக் கொடுத்தார்.(35 - 2 விக்) பெனெட் 12 பந்துகளில் 6 பவுண்டறிகள், ஒரு நான்குடன் 29 ஓட்டங்களைக் குவித்தார். பெனெட் ஆட்டம் இழந்த பின்னர் ஸிம்பாப்வேயின் ஓட்ட வேகம் சுமாராக இருந்தது. மொத்த எண்ணிக்கை 51 ஓட்டங்களாக இருந்தபோது மற்றைய ஆரம்ப வீரர் டினாஷே கமுன்ஹுகம்வே 12 ஓட்டங்களுடன் மஹீஷ் தீக்ஷ்னவின் பந்துவீச்சில் களம் விட்டு வெளியேறினார். 9ஆவது ஓவரில் ஸிம்பாப்வே 3 விக்கெட்களை இழந்து 64 ஓட்டங்களைப் பெற்று ஓரளவு நல்ல நிலையில் இருந்தது. அப்போது சிரேஷ்ட வீரர்களான அணித் தலைவர் சிக்கந்தர் ராஸா, சோன் வில்லியம்ஸ் ஆகிய இருவரும் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்ததால் ஸிம்பாப்வே கனிசமான ஓட்டங்களைப் பெறும் என கருதப்பட்டது. ஆனால் கடைசி 7 விக்கெட்கள் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்தன. ராஸாவின் விக்கெட்டை மதுஷன்கவும் சோன் வில்லியம்ஸின் விக்கெட்டை தனஞ்சய டி சில்வாவும் முன்யொங்கா, 2ஆவது போட்டி நாயகன் லூக் ஜொங்வே, வெலிங்டன் மஸகட்ஸா, ரிச்சர்ட் ங்கராவா ஆகியோரின் விக்கெட்களை அணித் தலைவர் வனிந்து ஹசரங்கவும், கடைசியாக க்ளைவ் மதண்டேயின் விக்கெட்டை மஹீஷ் தீக்ஷனவும் கைப்பற்றினர். அவர்களில் சோன் வில்லியம்ஸ் (15), சிக்ந்தர் ராஸா (10) ஆகிய இருவரைத் தவிர மற்றையவர்கள் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெறவில்லை. பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 15 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும், மஹீஷ் தீக்ஷன 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஏஞ்சலோ மெத்யூஸ் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். வனிந்து ஹசரங்க ஆட்டநாயகனாகவும் 3 வருடங்களின் பின்னர் சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் மீள் பிரவேசம் செய்த ஏஞ்சலோ மெத்யூஸ் தொடர்நாயகனாகவும் தெரிவாகினர். https://www.virakesari.lk/article/174280
  9. செங்கடல் ஊடாக பயணிக்கும் சீன ரஸ்ய கப்பல்களிற்கு எந்த ஆபத்தும் ஏற்படாது - ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் Published By: RAJEEBAN 19 JAN, 2024 | 11:46 AM செங்கடல் ஊடாக சீன, ரஸ்ய கப்பல்கள் பாதுகாப்பாக பயணிக்கலாம் அந்த நாட்டு கப்பல்களை தாக்கப்போவதில்லை என ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். செங்கடலில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்சியாக சரக்கு கப்பல்களை தாக்கிவரும் நிலையிலேயே சீன ரஸ்ய கப்பல்கள் தாக்கப்படாது என்ற உத்தரவாதம் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் உட்பட சில நாடுகளுடன் தொடர்புபட்ட கப்பல்களை தவிர ஏனைய நாடுகளின் கப்பல்களிற்கு ஆபத்தில்லை என அவர் தெரிவித்துள்ளார். ரஸ்யா, சீனா உட்பட ஏனைய நாடுகளின் கப்பல்கள் அந்த பகுதியில் பயணிப்பதால் ஆபத்து ஏதுவும் ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/174310
  10. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் களம் இறங்கியுள்ளார். அவருக்கு கட்சியினரிடம் அதிக ஆதரவு உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியிட உள்ளார். அவரும் டிரம்ப் மீது கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். இதனால் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது இந்நிலையில், அமெரிக்க துணை ஜனாதிபதியும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது கமலா ஹாரிஸ் கூறியதாவது டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக மீண்டும் வெற்றி பெற்று வெள்ளை மாளிகைக்குத் திரும்புவார் என நினைத்தாலே எனக்கு பயமாக இருக்கிறது. இதனால்தான் நான் நாடு முழுவதும் பயணம் செய்து பிரசாரம் செய்கிறேன். டிரம்ப் ஜனாதிபதியாவது பற்றி நாம் அனைவரும் பயப்பட வேண்டும். இது அமெரிக்காவுக்கு நல்லதல்ல. நாம் பயப்படும்போது அதற்கு எதிராக நாம் போராட வேண்டும். ஜனநாயக கட்சியினரை மீண்டும் போராட அழைப்பு விடுக்கிறேன் என தெரிவித்தார். https://thinakkural.lk/article/288557
  11. சர்வதேச வர்த்தகத்தின் உயிர்நாடியாக நாணயங்கள் கருதப்படுகிறது. இது ஒரு நாட்டின் பொருளாதார வலிமையை காட்டுகிறது. நாணயங்கள் உயரும் போது, நாட்டின் பொருளாதாரமும் வளர்கிறது. இது முதலீடுகளை ஈர்க்கிறது மற்றும் உலகளவில் உறவுகளை ஊக்குவிக்கிறது. சில நாணயங்கள் பிரபலமாக இருந்தும், பரவலாகப் பயன்பாட்டில் இருப்பினும் அவற்றின் மதிப்பு மற்றும் வலிமை குறைவாகவே இருக்கிறது. அமெரிக்க வணிக இதழான போர்ப்ஸ் உலகின் வலிமையான பத்து நாணயங்களின் பட்டியலையும், அவற்றின் வெற்றிக்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளது. குவைத் தினார் ₹ 270.23 மற்றும் $3.25 என்ற மதிப்பில் முதல் இடத்தில் இருக்கிறது. பஹ்ரைன் தினார் ₹ 220.4 மற்றும் $2.65 மதிப்பில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஓமானி ரியால் ₹ 215.84 மற்றும் $2.60 விலையில் மூன்றாவது அதிக மதிப்புடையது. அதைத் தொடர்ந்து ஜிப்ரால்டர் பவுண்ட், பிரிட்டிஷ் பவுண்ட், கேமன் தீவுகள் டொலர், சுவிஸ் பிராங்க் மற்றும் யூரோ போன்ற நாணயங்களின் பட்டியலில் வரிசைப்படுத்தபட்டு இருக்கிறது. மிகவும் பரவலாக வர்த்தகம் செய்யப்பட்டும், முதன்மை இருப்பு நாணயமாக இருந்தாலும், வலிமையான நாணயத்தில் அமெரிக்க டொலர் கடைசியாக 10 ஆவது இடத்தில் உள்ளது. ஒரு அமெரிக்க டொலர் மதிப்பு₹ 83.10. ஒரு அமெரிக்க டொலருக்கு 82.9 என்ற மதிப்பில் இந்தியா 15ஆவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் குவைத் தினார் அந்த நாட்டின் பொருளாதார நிலை, எண்ணெய் இருப்பு மற்றும் வரி இல்லாத அமைப்பு காரணமாக முதல் இடத்தை பிடித்துள்ளது. https://thinakkural.lk/article/288515
  12. கடந்த 2023 அக்டோபர் 7 அன்று தொடங்கிய ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்க இஸ்ரேல் பாலஸ்தீன காசா பகுதியில் தொடுத்துள்ள போர், 100 நாட்களை கடந்தும் தீவிரமடந்து வருகிறது. பாலஸ்தீன காசா பகுதியில் தற்போது வரை 24,285 பேர் உயிரிழந்ததாகவும், 61,154 பேர் காயமடைந்ததாகவும் காசா சுகாதார துறை அறிவித்துள்ளது. தற்போதைய பாலஸ்தீன நிலவரம் குறித்து ஐ.நா. சபையின் மனித உரிமை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காசா பகுதியில் உள்ள ஒவ்வொரு மனிதரும் பசியுடன் உள்ளனர். அங்குள்ள மக்கள் தொகையில் 25 சதவீதத்திற்கும் மேல் உணவுக்காகவும், குடிநீருக்காகவும் திண்டாடி வருகின்றனர். உணவுக்கும், நீருக்கும் அங்கே கடும் பஞ்சம் நிலவுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு சத்தான உணவோ, மருத்துவ வசதியோ கிடைக்கவில்லை. 5 வயதிற்கு உட்பட்ட சுமார் 3,35,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் தவிக்கின்றனர். ஒரு தலைமுறையை சேர்ந்தவர்கள் வளர்ச்சி குன்றியவர்களாக உருவாக போகின்றனர். காசாவில் எந்த இடமும் பாதுகப்பானதாக இல்லை எனும் நிலை அங்கு தோன்றி விட்டது என தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பினர் பலவந்தமாக பிடித்து சென்ற பணய கைதிகளை மீட்க இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை கொண்டுள்ள அமெரிக்கா, ஹமாஸ் ஹமாஸ் அமைப்பினரை ஆதரிக்கும் கட்டார் நாட்டுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டது. https://thinakkural.lk/article/288462
  13. “ஹமாஸ் தான் வெள்ளை கொடியை காட்ட வேண்டும்” – இஸ்ரேல் அமைச்சர் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி பாலஸ்தீன காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலின் தெற்கு பகுதியில் தாக்குதல் நடத்தி 2500க்கும் மேற்பட்டவர்களை கொன்று, 250க்கும் மேற்பட்டவர்களை பணய கைதிகளாக பிடித்து சென்றனர். இதை தொடர்ந்து பாலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவ படை தொடர் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. போர் 100 ஆவது நாளை எட்டியும் இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தவில்லை. போர் நிறுத்தம் குறித்து உலக நாடுகள் முன்வைத்த ஆலோசனைகளை இஸ்ரேல் புறக்கணித்தது. இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு சார்ந்துள்ள லிகுட் கட்சியை (Likud party) சேர்ந்த அந்நாட்டின் பொருளாதார மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர் பர்கட் (Nir Barkat) போர் நிலவரம் குறித்து பேட்டி அளித்தார். அப்போது பர்கட் கூறியதாவது: இஸ்ரேலியர்களாகவும், யூதர்களாகவும் இருந்ததற்காக அப்பாவிகளை அக்டோபர் 7 அன்று ஹமாஸ் கொன்று குவித்தது. எங்கள் நாட்டில் அனைவரின் குறிக்கோளும் போரை வென்று, பணய கைதிகளை மீட்க வேண்டும் என்பதே ஆகும். ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான எங்கள் போர் அந்த அமைப்பினர் முழுவதும் சரணடையாமல் நிற்காது. எந்த நிபந்தனையும் இன்றி அவர்கள் சரணடைய வேண்டும். எங்கள் நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பணய கைதிகள் அனைவரும் ஒப்படைக்கப்பட வேண்டும். இதற்கெல்லாம் உடன்பட்டு ஹமாஸ் அமைப்பினர்தான் வெள்ளை கொடி காட்ட வேண்டும். இல்லையென்றால் போர் தொடரும். இதை தவிர வேறு எந்த மாற்று வழியும் கிடையாது. எங்கள் நாட்டு மக்களை கொல்லவோ, இஸ்ரேலை உலக வரைபடத்திலிருந்து அழிக்கவோ நினைக்காத ஒரு அமைப்பின் கீழ் புதிய பாலஸ்தீனம் நிறுவப்பட வேண்டும் என பர்கட் கூறியுள்ளார். “வெற்றி பெறும் வரை போர் தொடரும்” என சில தினங்களுக்கு முன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/288330
  14. மரக்கறி விலை: வீட்டுத்தோட்டம் அமைக்குமாறு பொதுமக்களிடம் விவசாய அமைச்சர் கோரிக்கை இலங்கையில் மரக்கறிகளின் விலை உயர்வைத் தணிக்க வீட்டுத் தோட்டங்களைப் பராமரிக்குமாறு பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பெய்த கடும் மழையினால் பல மரக்கறி தோட்டங்கள் அழிவடைந்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தற்போது மரக்கறிகளுக்கு அதிக விலை அறவிடப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொடர் கனமழையால் இதுபோன்ற நிலை ஏற்படும் என முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தேன். எனவே, மிளகாய், தக்காளி, பல்வேறு கீரைகள் போன்ற அடிப்படைத் தேவைகளைக் கொண்ட வீட்டுத் தோட்டத்தை பராமரிப்பதில் கவனம் செலுத்துமாறு பொதுமக்களை அமைச்சர் ஊக்குவித்துள்ளார். விலைவாசி உயர்வுக்காக என்னையும், விவசாய அமைச்சையும் பலர் திட்டுகிறார்கள். கனமழையால் மரக்கறி தோட்டங்களில் ஏற்படும் பாதிப்புகளை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது,” என்றார். இதற்கு தீர்வாக வீட்டுத்தோட்டத்தை பராமரிப்பதில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டுமென அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/288577
  15. ஒரு மாதத்தில் 40,590 பேர் கைது – டிரான் அலஸ் போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் நாட்டில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ளது. இந்த சுற்றிவளைப்புகளின் ஊடாக இதுவரை 40,590 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று முற்பகல் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டார். அத்தோடு கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 4,791 மில்லியன் ரூபா என மதிப்படப்பட்டுள்ளது. இந்தநிலையில், குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களின் 725 மில்லியன் ரூபா சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/288576
  16. Published By: VISHNU 18 JAN, 2024 | 08:47 PM ஊடக நிறுவனங்கள், சிவில் அமைப்புகள், ஜனநாயகத்திற்காக செயற்படும் குழுக்கள், தொழிற்சங்கங்கள் போன்ற தரப்பினர் எதிர்க்கட்சியின் பல பிரதான கட்சிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் தெளிவான முடிவை எட்டியுள்ளனர். இதன் பிரகாரம், அரசாங்கம் முன்வைத்துள்ள நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை தானும் தனது குழுவினரும் முற்றாக நிராகரித்து இதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துக்கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அரசாங்கம் நிறைவேற்ற முயற்சிக்கும் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் தொடர்பில் சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் ஏனைய அமைப்புகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். குழந்தைகள், தாய்மார்கள், பொது மக்கள் மற்றும் நலிந்த பிரிவினரின் உரிமைகளைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில், இதுபோன்ற ஜனநாயக விரோத சட்ட விதிமுறைகளை கொண்டு வந்து, அரசாங்கம் நாட்டில் ஏகாதிபத்தியத்தை நிலைநாட்டி, பேச்சு சுதந்திரம், கலந்துரையாடல் சுதந்திரம், ஒன்று கூடி பேசும் சுதந்திரம், தகவல் அறிதலுக்கான சுதந்திரம் உள்ளிட்ட மனித உரிமைகள் போலவே, அடிப்படை உரிமைகளை மீறும் கடுமையான ஜனநாயக விரோத நடைமுறைக்கு பிரவேசித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார். ஜனாதிபதி தான் ஒரு ஜனநாயகவாதி என்பதை நாட்டுக்கும் உலகிற்கும் எடுத்துக்காட்டிய போதிலும், இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அவர் கட்டமைத்த பிம்பம் பொய் என்பது நிரூபணமாகியுள்ளது. இந்தச் சட்டத்தின் மூலம், அவரும் அவர் நியமிக்கும் ஆணைக்குழு உறுப்பினர்களும், அவர் நியமிக்கும் பாதுகாப்புப் படையினரும் இந்நாட்டின் சாதாரண மக்கள் மீது தம் இஷ்டத்துக்கு ஏற்றால் போல் அழுத்தம் கொடுக்க முடியும். “பேசினால் சிறை செல்ல வேண்டிவரும்” என்ற அச்சத்தை ஏற்படுத்தி மக்களை வாயடைக்கும் வேலைத்திட்டத்தை ஜனாதிபதி கையாண்டுள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி உண்மையான ஓர் ஜனநாயகவாதியாக இருந்தால், இந்த மோசமான சட்டமூலத்தை வாபஸ் பெற்று, சகல பங்குதாரர்களுடனும் பயன்பெறும் உகந்த கலந்துரையாடலில் ஈடுபடுமாறும், இந்நாட்டிலிருந்து சமூக ஊடகங்களை காணாமலாக்கும் வேலைத்திட்டத்தில் ஈடுபடாது, தெளிவான ஜனநாயக வேலைத்திட்டத்தை அணுகுவது விரும்பத்தக்கது என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார். ஜனநாயகத்தை மதிக்கும் மாற்று அரசாங்கமான ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் ஆணை மூலம் ஆட்சிக்கு வந்தவுடன், தன்னிச்சையாக நிறைவேற்றப்பட்ட சகல ஜனநாயக விரோத சட்டங்களையும் நீக்கி ஜனநாயகம் நிலைநாட்டும். அதுவரை இந்த விவகாரத்தில் தலையிடுமாறு தூதுவர்களிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும், இந்த ஜனநாயக விரோத சட்ட ஆணைகளை தோற்கடிக்க ஜனநாயக ரீதியாகவும் அமைதியான முறையிலும் எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/174274
  17. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உடல் பருமன், நீரிழிவு உள்ளிட்ட பிரச்னைகளைக் குறைக்க சர்க்கரை சாப்பிடுவதில் கவனமாக இருக்கவேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கட்டுரை தகவல் எழுதியவர், சுசீலா சிங் மற்றும் பாயல் புயன் பதவி, பிபிசி நியூஸ் 12 நிமிடங்களுக்கு முன்னர் டெல்லியில் வசிக்கும் 15 வயது ரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கழுத்து, அக்குள் மற்றும் விரல் மூட்டுகளில் தோலில் கருமை நிற திட்டுக்கள் தோன்றும் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெறச் சென்ற போது, அவர் ரியாவை உட்சுரப்பியல் நிபுணரிடம் (endocrinologist) சிகிச்சை பெறுமாறு பரிந்துரைத்தார். ரியாவை பரிசோதித்தபோது, காலை உணவுக்கு முன் அவரது ரத்தத்தில் சர்க்கரை அளவு 115 ஆகவும், காலை உணவு சாப்பிட்ட பிறகு 180 ஆகவும் இருந்தது. மருத்துவர்களின் கூற்றுப்படி, காலை உணவுக்கு முன் இரத்த சர்க்கரை 100 வரை இருக்கலாம் என்பதுடன் காலை உணவுக்குப் பிறகு 140 வரை இருப்பது சாதாரண அளவாகக் கருதப்படுகிறது. ரியாவுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் சுரேந்திர குமார் கூறுகையில், "ரியா ஜங்க் ஃபுட் சாப்பிட்டு வந்தார். மேலும் அவரது குடும்பத்தில் சர்க்கரை நோய் இருந்த வரலாறும் இருந்தது. அவள் உடற்பயிற்சி கூட செய்யவில்லை. பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருந்தால், குழந்தைக்கு சர்க்கரை நோய் வர 50% வாய்ப்புள்ளது,” எனத்தெரிவித்தார். ரியாவுக்கு இன்சுலின் எதிர்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். கலிபோர்னியா பல்கலைகழகத்தின் குழந்தை மருத்துவ உட்சுரப்பியல் நிபுணரும், 'சுகர், தி பிட்டர் ட்ரூத்' (Sugar, the Bitter Truth) என்ற நூலின் ஆசிரியருமான, பிரபல அமெரிக்க மருத்துவரான ராபர்ட் லுஸ்டிக் கூறுகையில், பெரியவர்களிடம் மட்டுமே காணப்பட்ட இந்நோய் தற்போது குழந்தைகளிடமும் காணப்படுகிறது என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பெரியவர்களிடம் மட்டுமே காணப்பட்ட நீரிழிவு பிரச்னை சிறு வயதில் இருப்பவர்களையும் பாதிக்கிறது. குழந்தைகளைப் பாதிக்கும் பெரியவர்களின் நோய்கள் அவர் கூறும்போது, “இப்போது பெரியவர்களுக்கு ஏற்படும் அதே நோய்களால் குழந்தைகளும் பாதிக்கப்படுவதைக் காணமுடிகிறது. அவர்கள் 2 ஆம் வகை நீரிழிவு, கொழுப்புமிகு ஈரல் போன்ற பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றனர். அவரைப் பொறுத்தவரை, 1980-களில் இந்த நோய்கள் பெரியவர்களிடம் மட்டுமே காணப்பட்டன. கொழுப்புமிகு ஈரல் நோய் பொதுவாக மது அருந்துபவர்களுக்கு ஏற்படுகிறது. ஆனால் இப்போது அமெரிக்காவில் 25% குழந்தைகளுக்கு கல்லீரலில் கொழுப்பு பிரச்சனை உள்ளது. குழந்தைகள் மது அருந்துவதில்லை என்ற உண்மையுடன் பொருத்திப் பார்த்தால் இது ஒரு வியப்பூட்டும் தகவலாக உள்ளது. டாக்டர் ராபர்ட் லுஸ்டிக் இது குறித்துப் பேசியபோது, "முன்பெல்லாம் குழந்தைகளுக்கு இப்போது கிடைக்கும் சர்க்கரை சார்ந்த பொருட்களான மிட்டாய் மற்றும் சாக்லேட் போன்ற பொருட்கள் கிடைக்கவில்லை. இப்போது இதெலாம் எளிதாகக் கிடைக்கின்றன,” என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இனிப்புகளை சாப்பிடும் பழக்கம் அனைவரிடமும் ஒரு வழக்கமாக மாறிவிட்டது. உடலுக்கு கார்போஹைட்ரேட் ஏன் தேவை? உணவுப் பொருட்களில் மூன்று கூறுகள் உள்ளன - கார்போஹைட்ரேட்டுகள் (மாவுச்சத்து), கொழுப்புகள் மற்றும் புரதங்கள். மனித உடலுக்கு ஆற்றலுக்காக கார்போஹைட்ரேட்டுகள் தேவை. இந்த கார்போஹைட்ரேட்டுகள் பல வகையான உணவுகளில் இயற்கையாகவே காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் பழங்களில் காணப்படுகின்றன. சர்க்கரை ஒரு கார்போஹைட்ரேட் ஆகும். சர்க்கரையைத் தவிர, அரிசி அல்லது மாவு போன்ற பிற எளிய கார்போஹைட்ரேட்டுகளும் நம் உடலுக்குள் நுழையும் போது, நமது குடல் அவற்றை உடைத்து அதிலிருந்து குளுக்கோஸை பிரித்தெடுக்கிறது. இந்த குளுக்கோஸ் உடலில் எரிபொருளாக செயல்பட்டு இயக்கத்துக்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சர்க்கரை சாப்பிடுவது ஒரு வகையில் மகிழ்ச்சியை தருகிறது என்கின்றனர் மருத்துவர்கள் இன்சுலின் எதிர்ப்பைப் பற்றி விளக்கிய மும்பையைச் சேர்ந்த நீரிழிவு சிகிச்சை மையத்தின் டாக்டர் ராஜீவ் கோவில் மற்றும் டாக்டர் சுரேந்திர குமார் ஆகியோர், இன்சுலின் என்ற ஹார்மோன் நம் உடலில் ஒரு இயக்கியாக செயல்படுகிறது என்று கூறுகிறார்கள். இது சிறுநீரகம் மற்றும் இதயம் உள்ளிட்ட பிற உறுப்புகளின் செல்களுக்கு குளுக்கோஸை எடுத்துச் செல்கிறது. இது குறித்து மேலும் விளக்கியவர்கள், "இன்சுலின் அளவு அதிகரிக்கும் போது அது வேலை செய்வதை நிறுத்துகிறது. அத்தகைய சூழ்நிலையில், குளுக்கோஸ் மற்ற வழிகள் மூலம் நுழைய முயற்சிக்கிறது, இது உயிரணுக்களில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. அத்தகைய சூழ்நிலையில், குளுக்கோஸ் கொழுப்பு வடிவில் உடலில் சேரத் தொடங்குகிறது, பின்னர் பிரச்சினைகள் தோன்றத் தொடங்குகின்றன,” என்றார். இதனால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரித்து பல வகையான நோய்கள் உருவாகத் தொடங்குவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய்கள், புற்றுநோய் கூட ஏற்படும் அபாயம் உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பழங்கள் மற்றும் காய்கறிகளில் நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றி உள்ளன சர்க்கரை என்றால் என்ன? சர் கங்காராம் மருத்துவமனையின் உட்சுரப்பியல் மற்றும் வளர்சிதை மாற்றப் பிரிவின் டாக்டர் சுரேந்திர குமார், சர்க்கரை பல வகைகள் இருப்பதாக விளக்குகிறார். சர்க்கரையைப் பற்றி அவர் பேசுகையில், அது கரும்பிலிருந்து பதப்படுத்தப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இதில் அதிகபட்ச கலோரி மற்றும் இனிப்பு உள்ளது. இது சுக்ரோஸ் என்றும் அழைக்கப்படுகிறது என்றார். சர்க்கரையின் மற்ற வகைகள் குளுக்கோஸ், லாக்டோஸ், சுக்ரோஸ் மற்றும் பிரக்டோஸ் ஆகும். “பழங்களில் குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் அதிகமாக உள்ளன,” என்கிறார் டாக்டர் சுரேந்திர குமார். பால் மற்றும் சீஸ் போன்ற பால் பொருட்களில் லாக்டோஸ் காணப்படுகிறது. இதேபோல், தேன் மற்றும் பழங்களில் குளுக்கோஸ் காணப்படுகிறது. அது தீங்கு விளைவிப்பதில்லை. அதே நேரத்தில், பதப்படுத்தப்பட்ட சர்க்கரை, அதாவது சுக்ரோஸ் சேர்க்கப்படும் பொருட்கள், அதிக அளவில் எடுத்துக் கொண்டால், அது தீங்கு விளைவிக்கும். எவ்வளவு நார்ச்சத்து இருக்க வேண்டும்? இயற்கையான சர்க்கரை கொண்ட உணவுகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் அவை நமக்கு அதிக ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. பழங்கள் மற்றும் காய்கறிகள் நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளைக் கொண்டிருக்கும் போது, பால் பொருட்களிலிருந்து புரதம் மற்றும் கால்சியம் ஆகியவற்றைப் பெறுகிறோம். டாக்டர் ராஜீவ் கோவில் பேசியபோது, “இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்தாலும், மக்கள் 75% முதல் 80% வரை கார்போஹைட்ரேட் சாப்பிடுகிறார்கள். இந்த அளவுக்கு இதைச் சாப்பிடுவது உலகிலேயே அதிகமானது ஆகும். இங்குள்ள மக்களின் சர்க்கரை அளவும் அதிகமாக உள்ளது," என்கிறார். உதாரணத்திற்கு, தினை, சோளம் போன்ற தானியங்களைச் சாப்பிட்டால், அவற்றில் உள்ள சத்துக்கள் முறிக்கப்படுவது உடலில் மெதுவாக நிகழ்கிறது. இது சர்க்கரையை சரியாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது. அத்தகைய சூழ்நிலையில், உடலில் சர்க்கரை திடீரென அதிகரிக்காது. மாறாக, கோதுமையால் செய்யப்பட்ட மாவு அல்லது மைதா சாப்பிடும் போது அவற்றில் உள்ள சத்துக்கள் உடனடியாக உடைந்து சர்க்கரையாக மாறும், எனவே அவற்றை நாம் சாப்பிடக்கூடாது. அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்வதால் உடனடியாக உடலில் இன்சுலின் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இது பசியை அதிகரிக்கிறது என்பதுடன் அது ஒரு சுழற்சியாக மாறும். இதற்குப் பிறகு பல வகையான பிரச்சனைகள் எழுகின்றன. டாக்டர் ராஜீவ் கோவில் மேலும் விளக்கிய போது, “மற்ற கார்போஹைட்ரேட்டுகளை விட சர்க்கரையை நேரடியாகச் சாப்பிடுவதால் உடலுக்கு அதிக கலோரிகள் உடனடியாக கிடைக்கும். இது நமக்கு ஆற்றலைத் தருவதோடு மகிழ்ச்சியையும் தருகிறது,” என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிறுதானியங்களைச் சாப்பிடும் போது, அவற்றில் உள்ள கார்போஹைட்ரேட் மெதுவாக உறிஞ்சப்படுவதால் திடீரென ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிப்பதில்லை. சர்க்கரை மகிழ்ச்சியைத் தரும் மகிழ்ச்சியான சந்தர்ப்பங்களில் 'இனிமையான ஒன்று' என்று நினைப்பது இயல்பு. பூஜை அல்லது திருவிழா போன்றவற்றின் போது பெறப்படும் பிரசாதம் பெரும்பாலும் இனிப்பாக இருக்கும். சர்க்கரை நமது மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதை குளுக்கோஸ் வடிவில் எடுத்துக் கொண்டால், நமக்கு உடனடி ஆற்றல் கிடைப்பதோடு, மகிழ்ச்சியாகவும் உணர்கிறோம். இது குறித்து டாக்டர் ராஜீவ் கோவில் கூறுகையில், ''நமது மூளையின் 80% வேலை குளுக்கோஸைச் சார்ந்தது. உடலுக்கு குறைந்த அளவில் குளுக்கோஸ் கிடைக்கும் போது, தலைசுற்றல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும்," என்றார். அதே சமயம், “சர்க்கரை சாப்பிடுவதும் ஒருவித மகிழ்ச்சியைத் தருகிறது,” என்கிறார் டாக்டர் சுரேந்திர குமார். "நாம் அதைச் சாப்பிட்டு, அது நம் மூளையில் உறிஞ்சப்படும்போது, எண்டோர்பின் ஹார்மோன்கள் வெளியிடப்படுகின்றன. இவை நம்மை மகிழ்ச்சியாக உணரச் செய்கின்றன. ஆனால் நாம் இனிப்புகளை சீரற்ற முறையில் சாப்பிடத் தொடங்குகிறோம் என்று இது பொருட்படுத்தப்படுவதில்லை," என்றார். நாம் போதுமான உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி செய்யாதபோது சர்க்கரை அதிகமாக சாப்பிடுவதால் பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்றும் பின்னர் அது சிக்கல்களை உருவாக்கத் தொடங்குகிறது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பெண்கள் ஒரு நாளைக்கு 25 கிராம் அல்லது 100 கலோரிகளுக்கு மேல் சர்க்கரையை உட்கொள்ளக்கூடாது. ஒருவர் எவ்வளவு இனிப்பு சாப்பிட வேண்டும்? உலக உடல் பருமன் குறியீட்டின்படி, 2035-ஆம் ஆண்டில், உலகில் 51% அல்லது 400 கோடி பேர் அதிக உடல் எடையைக் கொண்டவர்களாக (அல்லது பருமனாக) இருப்பார்கள். அதே நேரத்தில், குழந்தைகளின் உடல் பருமன் விகிதம் இரண்டு மடங்கு அதிகமாக அதிகரிக்கும். உலகளாவிய ஒரு அறிக்கையின்படி, பெண் குழந்தைகளின் உடல் பருமன் விகிதம் ஆண்களை விட இரு மடங்கு அதிகமாக இருக்கும். இந்தியாவில், 2035-க்குள் 11% பெரியவர்கள் பருமனாக இருப்பார்கள், இதனால் பொருளாதாரத்திற்கு சுமார் 13,000 கோடி ரூபாய் செலவாகும். அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின் படி, ஒரு ஆண் ஒரு நாளைக்கு 36 கிராம் அல்லது 150 கலோரிகளுக்கு மேல் சர்க்கரையை உட்கொள்ளக்கூடாது. அதே நேரத்தில், பெண்கள் 25 கிராம் அல்லது 100 கலோரிகளுக்கு மேல் சர்க்கரை எடுத்துக்கொள்ளக்கூடாது. பொதுவாக வளர்ந்த நாடுகளில் சர்க்கரை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்தியாவிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்கிறார் டாக்டர் ராஜீவ் கோவில். 1980-களின் நடுப்பகுதியில் அல்லது 1990-களில், எடை அதிகரிப்பு அல்லது நீரிழிவு பிரச்சினை பணக்கார குடும்பங்களைச் சேர்ந்தவர்களிடம் காணப்பட்டது என்று அவர் கூறுகிறார். ஏனென்றால், அவர்களுக்கு உணவு ஒரு ஆடம்பரமாக அல்லது இன்பமாக இருந்தது. ஆனால் இப்போது கடந்த 15 ஆண்டுகளாக, குழந்தைகளும் இதே போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர், ஏனெனில் அவர்கள் பல உணவுப் பொருட்களை அதிக அளவில் உண்கிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எதிர்காலத்தில் உடல் பருமன் மோசமான பிரச்னையாக மாறும் என உலகளாவிய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 'சிக்கனமான மரபணு வகை' கருதுகோள் தேசிய மருத்துவ நூலகத்தில் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, பல தசாப்தங்களுக்கு முன்னர் கொழுப்பைச் சேமிக்கக்கூடிய மரபணுக்கள் பொதுமக்களிடம் உருவாயின. மனிதர்களுக்கு உணவு கிடைப்பதில் சிரமம் இருந்த நேரத்தில் இந்த மரபணுக்கள் மனித உடலில் வளர்ந்ததாக இரு மருத்துவர்களும் கூறுகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், சிக்கனமான மரபணுக்கள் கொண்டவர்கள் கொழுப்பு வடிவில் உணவை சேமித்து வைத்தனர். வறட்சி மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டால், உடல் இந்த கொழுப்பை ஆற்றல் தேவைக்கு பயன்படுத்தலாம். வருடத்தில் ஆறு மாதங்கள் சாப்பிட்டுவிட்டு, மீதமுள்ள ஆறு மாதங்கள் எதுவும் சாப்பிடாமல் உயிர் வாழும் வட அமெரிக்க எலி இதற்கு சிறந்த உதாரணம் என்று டாக்டர் சுரேந்திர குமார் விளக்குகிறார். ஆனால், நமக்கு நன்மை செய்து வந்த இந்த மரபணுவின் செயல்பாடு, தற்போது பாதிப்பை ஏற்படுத்துவதாக இரு மருத்துவர்களும் கூறுகின்றனர். இப்போது மக்களுக்கு உணவு கிடைப்பது மட்டுமல்லாமல், சாப்பிடுவதற்கும் பல விருப்பங்களும், தேர்வுகளும் உள்ளன. இன்னும் இந்த மரபணு முன்பு போலவே கொழுப்பைச் சேமித்து வைக்கிறது. அதேசமயம் மக்கள் உண்ணும் உணவின் அளவோடு ஒப்பிடுகையில் அவர்கள் மிகக் குறைவான அளவுக்கு மட்டுமே உடல் செயல்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள். குறைந்த அளவு உடற்பயிற்சியில் மட்டுமே அவர்கள் ஈடுபடுகிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மருத்துவர்களின் கூற்றுப்படி, அதிகப்படியான இனிப்புகளை சாப்பிடுவது உடல் பருமன் உள்பட மற்ற நோய்களை ஏற்படுத்தும். அதிக சர்க்கரை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் அதிகப்படியான இனிப்புகளை சாப்பிடுவதால் உடலுக்கு பல பாதிப்புகள் ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதில் உடல் பருமன் பிரச்னை முதலாவதாக இடம்பெற்றுள்ளது. அதன் பிறகு உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு, நீரிழிவு மற்றும் பிற இதய நோய்கள் போன்ற பிற சிக்கல்களும் எழுகின்றன. ஆனால் அதிக சர்க்கரை சாப்பிடுவது உடல் பருமனுக்கு வழிவகுக்காது என்றும் மருத்துவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். அதே போல் பிற பிரச்சனைகளும் முன்னதாகவே எழலாம். உதாரணமாக, பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சனையும் இருக்கலாம். அதே நேரத்தில் தோலில் கருமை அல்லது வேறு ஏதாவது நிறமி உருவாகலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செயற்கை சர்க்கரையை அதிக அளவு பயன்படுத்தினால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். சர்க்கரைக்கும் புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு மருத்துவர்களின் கூற்றுப்படி, உடலில் அதிக அளவு இன்சுலின் இருப்பது புற்றுநோய்க்கான காரணங்களில் ஒன்றாக உள்ளது. ஆனால் புற்று நோயாளி இனிப்பு சாப்பிடக் கூடாதா? புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்கள் சர்க்கரையைக் கைவிட வேண்டும் என்று எந்த வழிகாட்டுதலும் இல்லை என்று டாக்டர் ராஜீவ் கோவில் கூறுகிறார். ஆனால் உடலில் சர்க்கரை அதிகமாக இருந்தால் புற்றுநோய்க்கு சாதகமான சூழல் உருவாகும் என்பது உண்மைதான் என்கிறார். அவரைப் பொறுத்தவரை, புற்றுநோய் என்பது உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயுடன் தொடர்புடையது. ஏனெனில் இதுபோன்ற நோயாளிகளுக்கு புற்றுநோய் பாதிப்பு 20% அதிகம். புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் இருந்தாலோ, குளுக்கோஸைத் தாங்க முடியாமல் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்க ஆரம்பித்தாலோ, இனிப்பு சாப்பிடக் கூடாது என்கிறார் டாக்டர் சுரேந்திர குமார். ஆனால் அத்தகைய பிரச்சனை இல்லை என்றால் நோயாளி குறைந்த அளவில் இனிப்புகளை எடுத்துக் கொள்ளலாம். உதாரணமாக, "யாராவது ஐஸ்கிரீம் சாப்பிட விரும்பினால், அவர் முழு ஸ்கூப்பையும் ஒரே நேரத்தில் எடுக்கக்கூடாது. அவர் ஒரு நாளைக்கு வெவ்வேறு நேரங்களில் ஸ்கூப்பில் இருந்து ஒரு ஸ்பூன் ஐஸ்கிரீமை எடுத்து அதை சாப்பிட வேண்டும். ஒரு நீரிழிவு நோயாளியும் இப்படித் தான் ஐஸ் கிரீமைச் சாப்பிடவேண்டும்," அவர் விளக்கினார். இதற்கான காரணத்தை விளக்கும் டாக்டர் சுரேந்திர குமார், “புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் தினமும் வெவ்வேறு நேரங்களில் சிறிதளவு ஐஸ்கிரீம் சாப்பிட்டால், அவர்களது உடலில் இருக்கும் இன்சுலின் அதைத் தாங்கும். ஆனால், அதிக அளவு சர்க்கரை உடனடியாக உள்ளே நுழைந்தால் அதை இன்சுலின் கையாளமுடியாது," என்றார். செயற்கை அல்லது இயற்கை சர்க்கரை : எது சிறந்தது? வெல்லம், ரொட்டி போன்ற பல பொருட்களில் சர்க்கரை பயன்படுத்தப்படுகிறது. ஜாமில் பிரக்டோஸ் மட்டுமே உள்ளது. இயற்கையான இனிப்பு என்றால் அது தீங்கு விளைவிக்காது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் சர்க்கரையை தனித்தனியாக சேர்த்தால், அதை நீண்ட நேரம் உட்கொள்வது தீங்கு விளைவிக்கும். இதுபோன்ற உணவுகளை சாப்பிடுவதால் திருப்தி ஏற்படாது என்றும், மீண்டும் மீண்டும் சாப்பிட ஆசைப்படுவதாகவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். பின்னர் இது ஒரு சுழற்சியாக மாறும். அது உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தத் தொடங்குகிறது. இயற்கை சர்க்கரை இல்லாத இனிப்புக்களை, அதாவது செயற்கை சர்க்கரை சேர்க்கப்படும் பொருட்களை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், சர்க்கரை இல்லாத உணவுகப் பொருட்களை ஏற்றுக்கொள்ளலாம். சைவம் மற்றும் அசைவ உணவுப் பொருட்களில் பச்சை மற்றும் சிவப்பு வட்டக் குறியீடுகள் உள்ளதைப் போலவே, நீரிழிவு நோயாளிகளுக்கு பாதுகாப்பான உணவுப் பொருட்களையும் வழங்க வேண்டும் என்று மகாராஷ்டிர சுகாதார அமைச்சகத்திடம் பரிந்துரைத்ததாக டாக்டர் ராஜீவ் கோவில் கூறுகிறார். இந்திய மக்களிடையே உணவு லேபிள்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாதது மட்டுமின்றி, உடல்நலம் சார்ந்த அறிவும் அதாவது உடல்நலம் தொடர்பான அடிப்படை விஷயங்களைப் பற்றிய தகவல்களும் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். உணவுப் பொருட்களின் காலாவதி தேதியைப் பார்க்கிறார்கள். ஆனால் அந்த உணவுப் பொருளில் என்ன இருக்கிறது என்பதைப் படிப்பதில்லை. அதேசமயம் அதைத் தெரிந்துகொள்வது தான் மிகவும் முக்கியமானது. https://www.bbc.com/tamil/articles/c72y2qnrjw7o
  18. 18 JAN, 2024 | 08:38 PM இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று (18) ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் கலந்து கொண்டார். வழிபாடுகளில் கலந்துகொண்ட உயர்ஸ்தானிகர் மல்வத்து மற்றும் அஸ்கிரிய விகாரைகளுக்குச் சென்று பீடாதிபதிகளைச் சந்தித்து உயர்ஸ்தானிகரிடம் இரு நாடுகளுக்கிடையில் கடந்த காலத்திலிருந்து நிலவும் நட்புறவு மற்றும் இலங்கையின் அபிவிருத்திக்கு இந்திய அரசாங்கத்தின் பங்களிப்பு குறித்து அவர்கள் தெரிவித்தனர். இங்கு இலங்கைக்கான தூதுவராக பதவியேற்கும் முன்னர் இந்திய அரசியல் தலைமைத்துவம் இந்த நாட்டு மக்களுக்கு சிறந்த சேவையை செய்யுமாறு தமக்கு அறிவித்ததாக தூதுவர் பிரமுகர்களிடம் தெரிவித்தார். பல நூற்றாண்டுகள் பழமையான இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதற்கு முன்னைய உயர்ஸ்தானிகர் பெரும் பங்களிப்பை வழங்கியதாகவும், புதிய தூதுவரும் அவ்வாறே செய்வார் என தாம் நம்புவதாகவும் மல்வத்து விகாரையின் பீடாதிபதி வண. ஸ்ரீ சித்தார்த்த சுமங்கலதேரர் தெரிவித்தார். சகோதர நாடான இந்தியா இலங்கையின் வளர்ச்சிக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பதுடன், இந்தியாவில் இருந்து தூய பௌத்த மதம் வந்தமையால் இரு நாடுகளுக்கும் இடையில் உடைக்க முடியாத மத, கலாசார பிணைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிகழ்வில் கண்டியில் உள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகர் டாக்டர் அதிரா எஸ். உள்ளிடட அதிகாரிகள் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/174278
  19. 1700 ரூபா சம்பளம் சாத்தியமற்றது : முதலாளிமார் சம்மேளனம் திட்டவட்டமாக அறிவிப்பு : பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டது Published By: VISHNU 18 JAN, 2024 | 08:45 PM பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம் தொடர்பான மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம் ஆகக்குறைந்தது 1700 ரூபா சம்பள அதிகரிப்புடன் உற்பத்தித்திறன் கொடுப்புனவும் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது இலக்கு என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சட்ட ஆலோசகர் கே. மாரிமுத்து தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள தொழில் திணைக்களத்தில் இடம்பெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்தார். தொழில் ஆணையாளர் தலைமையில் பெருந்தோட்ட தொழிலாளர் சம்மேளனத்துக்கும் தொழிற் சங்கங்களுக்கும் இடையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம் தொடர்பில் இதுவரை இரண்டு சுற்றுப்பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதில் தொழிற்சங்கங்களின் சார்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸானது தொழிலாளர்களுக்கு திருப்தி அளிக்கக்கூடிய சம்பள அதிகரிப்பை கோரியிருந்தது. அதேவேளை குறித்த சம்பள அதிகரிப்பு உடன்படிக்கையானது கூட்டுஒப்பந்த முறையில் நடைமுறைப்படுத்தப்படுமாயின் அதற்கும் ஒத்துழைப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் கடந்த வருட இறுதியில் இந்த விவகாரம் ஜனாதிபதியிடம் எடுத்து செல்லப்பட்டது. இதையடுத்து தோட்டத்தொழிலாளர்களுக்கு 1700 ரூபாவையேனும் வழங்க முடியுமா என்பது தொடர்பில் டிசம்பர் 30 திகதிக்குள் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் அறிவிக்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இந்தநிலையில் நேற்றையதினம் இடம்பெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையின்போது 1700 ரூபா என்ற சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது என பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்தது. மேலும் கூட்டு ஒப்பந்த முறைக்கு மாறாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவித்திருந்ததுடன் அடிப்படை சம்பள அதிகரிப்புக்கு மாறாக உற்பத்தித்திறன் கொடுப்பனவு என்ற அடிப்படையில் புதிய கொடுப்பனவு ஒன்றை வழங்குவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. எனினும் அந்த கொடுப்பனவு தொகை எவ்வளவு என்பதை அறிவிக்கவில்லை. முதலாளிமார் சம்மேளனத்தின் இந்த யோசனைக்கு தொழிற்சங்க பிரதிநிதிகளான நாம் மறுப்பு தெரிவித்ததுடன் ஜனாதிபதியின் அறிப்புக்கிணங்க ஆகக்குறைந்தது 1700 ரூபா சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை திட்டவட்டமாக தெரிவித்தோம். இதையடுத்து தொழில் ஆணையாளர் குறித்த பேச்சுவார்த்தையை பிறிதொரு தினத்துக்கு ஒத்திவைத்ததாக தெரிவித்தார். தொழிற்சங்கங்களின் சார்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு, தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/174275
  20. 18 JAN, 2024 | 07:19 PM கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் புகையிரத விபத்தில் சிக்கி இளம் குடும்பத்தர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்ராணி புகையிரதத்துடன் மோதுண்டே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் முறிகண்டி பகுதியை சேர்ந்த 43 வயதுடைய கேதீஸ்வரன் விஜயானந்தன் எனும் 2 பிள்ளைகளின் தந்தையான ரிப்பர் சாரதியே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் உயிரிழந்த நபரின் சடலம் புகையிரத அதிகாரிகளால் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் குறித்த சடலம் புகையிரத நிலைய அதிகாரிகளால் கிளிநொச்சி வைத்தியசாலையிடம் ஒப்படைக்கப்பட்டது. பொலிஸ் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்படவுள்ளதாக புகையிரத நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/174277
  21. சிங்கப்பூரின் சுற்றுலாத் துறையை மாற்றிய தமிழ் வம்சாவளி அமைச்சர் பதவி விலகியது ஏன்? – முழு பின்னணி பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் தமிழ் வம்சாவளி அமைச்சரான சுப்பிரமணியம் ஈஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் மிக அரிதான, அசாதாரணமான இந்த வழக்கு அந்த நாட்டை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. ஈஸ்வரன் மீது மொத்தம் 27 ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்துள்ளார். கார் பந்தயமான ‘ஃபார்முலா ஒன் கிராண்ட் ப்ரி’ (F1) சிங்கப்பூரில் பிரமாண்டமாக அறிமுகமானபோது, சிங்கப்பூரின் சுற்றுலாத் துறையை நிர்வகித்ததற்காக அறியப்பட்டவர் ஈஸ்வரன். ஈஸ்வரன் தனது பதவியை வியாழக்கிழமை (ஜனவரி 18) ராஜினாமா செய்தார். எனினும் அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான செய்திகள் சிங்கப்பூர் ஊடகங்களில் எங்கும் பரவி வருகின்றன. கட்டிடத் தொழிலதிபரான ஓங் பெங் செங்கின் வணிக நலன்களை மேம்படுத்துவதற்காக ஈஸ்வரன் இலவச விமானங்கள், ஹோட்டலில் இலவச அறைகள், மற்றும் கிராண்ட் ப்ரி கார் பந்தயத்திற்கான இலவச டிக்கெட்டுகளைப் பெற்றதாக இவர்மீதான குற்றப்பத்திரிகைகள் கூறுகின்றன. இதற்கெல்லாம் செலவான தொகை 1 லட்சத்து 60 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்கள். இந்திய மதிப்பில் இது கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் (99 லட்ச ரூபாய்). பட மூலாதாரம்,GETTY IMAGES அமைச்சர் எஸ் ஈஸ்வரன் என்ன சொல்கிறார்? லண்டனின் புகழ்பெற்ற வெஸ்ட் எண்ட் மியூசிகல் நாடகங்களுக்கும், அது தவிர கால்பந்து போட்டிகளுக்கும் அவர் டிக்கெட்களைப் பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஓங் பெங்குடன் சுப்பிரமணியம் ஈஸ்வரன் கைது செய்யப்பட்டார். மே 2008 இல் சிங்கப்பூரில் F1 பந்தயத்தை அறிமுகப்படுத்தியதில் ஓங் பெங் முக்கியப் பங்காற்றியதாகக் கருதப்படுகிறது. ஈஸ்வரன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளிலும் ஓங்கின் பெயர் உள்ளது. ஓங் பல வழக்குகளில் லஞ்சம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. "நான் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறேன், நான் நிரபராதி" என்று ஈஸ்வரன் பிரதமர் லீ சியென் லூங்கிற்கு வியாழக்கிழமை எழுதிய கடிதத்தில் குறிப்பிடிருந்தார். ராஜினாமா செய்வதோடு, கடந்த ஜூலை மாதம் முதல் தற்போது வரை தான் பெற்ற சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவுகளையும் திருப்பித் தருவதாகவும் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட பிறகு, ஈஸ்வரன் விடுப்பில் அனுப்பப்பட்டார், ஆனால் அவர் ஒவ்வொரு மாதமும் 8,500 சிங்கப்பூர் டாலர் (5.25 லட்சம் இந்திய ரூபாய்) சம்பளமாகப் பெற்றார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவருக்கு மாதந்தோறும் 15,000 சிங்கப்பூர் டாலர்கள் (9.3 லட்சம் இந்திய ரூபாய்) உதவித்தொகையாக வழங்கப்பட்டு வந்தது. உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். இங்கு அமைச்சர்களுக்கு ஆரம்ப சம்பளமாக 45,000 சிங்கப்பூர் டாலர்கள் கிடைக்கும் (9.2 லட்சம் இந்திய ரூபாய்). இந்த உயர் சம்பளம் ஊழலுக்கு எதிராக போராட உதவும் என்று கூறி சிங்கப்பூர் அரசியல்வாதிகள் கூறிவந்தனர். சிங்கப்பூரில் ஆட்சியில் இருக்கும் மக்கள் செயல் கட்சியின் (பி.ஏ.பி) மூத்த தலைவரான ஈஸ்வரன் பல பெரிய நிறுவனங்களின் இயக்குநர் பதவியை வகித்துள்ளார். ஆட்சியில் இருந்தபோது, பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகம், தகவல் தொடர்பு, சுற்றுலாத்துறை, உள்ளிட்ட பல முக்கியப் பொறுப்புகளை வகித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஈஸ்வரனின் அரசியல் வளர்ச்சி வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தில் நீண்ட காலம் பணியாற்றிய காலத்தில் தான் அவர் பரவலாக அறியப்பட்டார். 2000-களிலும் 2010-களிலும் சிங்கப்பூர் சுற்றுலாத் துறையின் முகத்தை மாற்றியதில் அவர் பெரும் பங்கு வகித்ததாகக் கருதப்படுகிறது. சூதாட்ட விடுதிகள், ஹோட்டல்கள், சுற்றுலாத்தலங்கள் கட்டுவதற்கு அரசாங்கம் பெரும் வளங்களை வாரி இறைத்து. F1 பந்தயங்கள் போன்ற நிகழ்வுகள் மற்றும் பல நூறு கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடுகள் வந்த காலம் இது. ஏஸ்வரன் சிங்கப்பூரில் நடந்த பல நிகழ்ச்சிகளின் மேடைகளில் நன்கு அறியப்பட்ட முகமாக இருந்தார். பி.ஏ.பி கட்சியை உலுக்கிய அரசியல் ஊழல்களில் ஈஸ்வரன் மீதான வழக்கும் ஒன்று. ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை நீண்ட காலமாக பெருமையாகக் கூறி வரும் கட்சி இது. சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், ஈஸ்வரனின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாகவும், தனது அரசாங்கம் இந்த விஷயத்தை ‘கடுமையாக’ கையாண்டதாகவும் தெரிவித்தார். மேலும் அவர், " கட்சி மற்றும் அரசாங்கத்தின் நேர்மையை நிலைநிறுத்த நான் உறுதிபூண்டுள்ளேன். சிங்கப்பூர் மக்கள் அதை எதிர்பார்க்கலாம்," என்றார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, 61 வயதான ஈஸ்வரன் 2006-இல் பிரதமர் லீ சியென் லூங்கின் அமைச்சரவையில் இளைய அமைச்சராக இணைந்தார். படிப்படியாக உடர்ந்து மே 2021-இல் சுற்றுலா அமைச்சரானார். பட மூலாதாரம்,GETTY IMAGES சிங்கப்பூருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி சிங்கப்பூர் அரசு ஊழலற்ற நிர்வாகம் நடத்துகிறது என்று பெயர்பெற்றிருக்கிறது. தற்போது, ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனலின் ஊழல் தொடர்பான 180 நாடுகளின் வருடாந்திர பட்டியலில் சிங்கப்பூர் ஐந்தாவது இடத்தில் உள்ளது. அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் போடுவது சிங்கப்பூரில் மிக அரிதான விஷயம். இதற்குமுன் சிங்கப்பூர் அமைச்சர் ஒருவர் ஊழல் வழக்கில் விசாரணையை எதிர்கொண்டது கடைசியாக 1986ஆம் ஆண்டு நடந்தது. அப்போது, தேசிய வளர்ச்சித் துறை அமைச்சர் டெஹ் சியாங் வான் மீதான லஞ்சப் புகார் குறித்து விசாரணை நடந்தது. எனினும், குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதற்கு முன்பே அவர் தற்கொலை செய்து கொண்டார். சி.என்.என் அறிக்கையின்படி , சிங்கப்பூரின் ஊழல் தடுப்பு நிறுவனமான 'ஊழல் நடைமுறைகள் புலனாய்வுப் பணியகம் (சி.பி.ஐ.பி), பிரதமருக்கு நேரடியாக அறிக்கை அளிக்கும், ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையை வழிநடத்துகிறது. அதே அறிக்கையில், ஈஸ்வரன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கும் நேரம் பிரதமர் லீயின் பார்வையில் முக்கியமானது என்று கூறப்பட்டுள்ளது. 20 ஆண்டுகள் தலைமைப் பொறுப்பில் இருந்த அவர் இப்போது பிரதமர் பதவியை விட்டு விலகத் திட்டமிட்டுள்ளார். சிங்கப்பூரில் 2025-இல் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த நவம்பரில் நடந்த பி.ஏ.பி நிகழ்வில் ஈஸ்வரனின் விசாரணை பற்றி பேசிய லீ, "அரை நூற்றாண்டு ஆட்சிக்கு பிறகும், பி.ஏ.பி.யின் தரநிலைகள் இன்னும் அப்படியே உள்ளன என்பதை சிங்கப்பூர் மக்களுக்கும் உலகிற்கும் கட்சி காட்ட வேண்டும்," என்று கூறினார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் அறிக்கைபடி, ஈஸ்வரனுக்கு எதிரான 27 குற்றச்சாட்டுகளில் ஊழல் மற்றும் சட்டப்பூர்வ விசாரணைக்கு இடையூறு செய்த குற்றச்சாட்டும் அடங்கும். ராய்ட்டர்ஸ் இந்த விவகாரம் குறித்து தொழிலதிபர் ஓங்கின் அலுவலகத்தையும் தொடர்பு கொண்டது, ஆனால் அவர்களுக்கு, எந்த பதிலும் கிடைக்கவில்லை. ஈஸ்வரன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஒரு லட்சம் சிங்கப்பூர் டாலர்கள் (62 லட்ச இந்திய ரூபாய்) வரை அபராதம் அல்லது ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம். https://www.bbc.com/tamil/articles/ckk5klg3ww7o
  22. பட மூலாதாரம்,GETTY IMAGES 17 ஜனவரி 2024 புதுப்பிக்கப்பட்டது 50 நிமிடங்களுக்கு முன்னர் சுரங்கத்திலிருந்து லித்தியம் எடுப்பது தொடர்பாக இந்தியா மற்றும் அர்ஜெண்டினா இடையே மிக முக்கியமான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே கடந்த திங்கள் கிழமை ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள இந்த திட்டத்துக்கான மொத்த செலவு ரூ.200 கோடி என இந்திய அரசின் சுரங்க அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன் கீழ், அரசு நிறுவனமான ‘மினரல் பிதேஷ் இந்தியா லிமிடெட் (கேபில்)’ அர்ஜெண்டினாவின் கேடமர்கா மாகாணத்தில் ஐந்து சுரங்கங்களை உருவாக்கி லித்தியம் எடுக்கும். கேபில், காடமார்காவின் அரசாங்க எரிசக்தி நிறுவனமான கேமியனுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஐந்து சுரங்கங்களின் மொத்த பரப்பளவு 15,703 ஹெக்டேர் என்றும், அர்ஜெண்டினாவின் கேடமர்காவில் கேபில் கிளை அலுவலகத்தையும் அமைக்கும் என்றும் அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், கேபில் நிறுவனம் இந்த சுரங்கங்களை வணிக ரீதியான உற்பத்திக்கு பயன்படுத்தும். இந்த ஒப்பந்தம் இந்தியாவின் லித்தியம் தேவையை பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், உப்பு வகை லித்தியம் சுரங்கத்திற்கான தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு அனுபவத்திற்கும் உதவும் என்று சுரங்க அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,@PIB_INDIA படக்குறிப்பு, புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள உடன்படிக்கை சீனாவுக்கு ஒரு போட்டியை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. லித்தியம் என்றால் என்ன? லித்தியம் மின் ஆற்றல் சேமிப்பிற்கான மிக முக்கியமான கனிமம் என்பதுடன் அது மட்டுமே இப்போது கிடைக்கும் கனிமமாக அறியப்படுகிறது. மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புகளில் பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் பேட்டரிகளில் இது மிக முக்கியமான பகுதியாகும். எளிமையான வார்த்தைகளில் சொன்னால், லித்தியம் என்பது ஒரு வகை கனிமமாகும். இது மின்சார வாகனங்கள், மொபைல் போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் பொருத்தப்படும் பேட்டரிகளில் பயன்படுத்தப்படுகிறது. ரீசார்ஜபிள் பேட்டரிகளில் லித்தியம் பயன்படுத்தப்படுகிறது. இந்த பேட்டரிகள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் முதல் மின்சார கார்கள் வரை அனைத்திலும் பயன்படுத்தப்படுகின்றன. டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைப்பதில் இது மிகவும் முக்கியமானது என்று நம்பப்படுகிறது. உலகின் பாதிக்கும் மேற்பட்ட லித்தியம், மூன்று தென் அமெரிக்க நாடுகளில்தான் உள்ளன. சிலி, பொலிவியா மற்றும் அர்ஜெண்டினா ஆகிய இந்த மூன்று நாடுகளும் 'லித்தியம் முக்கோணம்' என்று அழைக்கப்படுகின்றன. அர்ஜெண்டினா உலகின் இரண்டாவது பெரிய லித்தியம் இருப்பு நாடு என்பதுடன் நான்காவது பெரிய உற்பத்தி வசதியைக் கொண்டுள்ள நாடாக அறியப்படுகிறது. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி பேசுகையில், "இந்தியா மற்றும் அர்ஜெண்டினாவுக்கு இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். ஏனெனில் கேபில் மற்றும் கேமியன் இடையேயான ஒப்பந்தத்தின் மூலம், இருதரப்பு உறவுகளில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது," என்றார். "இந்த நடவடிக்கை ஒரு நிலையான எதிர்காலத்தை நோக்கி ஆற்றல் சேமிப்பில் முக்கிய பங்கு வகிக்கும். ஆனால் இந்தியாவில் உள்ள பல்வேறு தொழில்களுக்கு அத்தியாவசிய கனிமங்கள் கிடைப்பதையும் உறுதி செய்யும்." பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லித்தியம் பிரித்தெடுக்கும் சுரங்கத்திற்காக இந்தியா மற்றும் அர்ஜெண்டினா இடையே மிக முக்கியமான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தியாவில் லித்தியம் இருப்பு கடந்த ஆண்டு பிப்ரவரியில், ஜம்மு காஷ்மீரில் முதல் லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக இந்திய அரசு அறிவித்தது. முன்னதாக 2021ஆம் ஆண்டு இதேபோன்ற லித்தியம் இருப்பு கர்நாடகாவில் கண்டறியப்பட்டது. அளவு அடிப்படையில் அது மிகவும் சிறியது. ஜம்மு காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் இருப்பை இந்திய புவியியல் ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளதாக பிப்ரவரி 2023 இல் அரசாங்கம் அறிவித்தது. இந்த இருப்புகள் ரியாசி மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளன. இந்த பகுதி செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்ட 690 மெகாவாட் சலால் மின் நிலையத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. லித்தியம் இருப்புகள் காணப்பட்ட சலால் பகுதியைச் சுற்றியுள்ள பகுதியில் தற்போது குடியிருப்புகள் எவையும் இல்லை. இந்தப் பகுதியைச் சுற்றி சுமார் ஐந்து வார்டுகள் உள்ளன. இதுவரை லித்தியம் தேவைக்காக சீனா, ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா போன்ற நாடுகளையே இந்தியா நம்பியிருக்கிறது. பட மூலாதாரம்,MOHIT KANDHARI படக்குறிப்பு, இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் லித்தியம் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் மிகப்பெரிய லித்தியம் இருப்பு இருப்பது புவி வெப்பமடைதலுக்கு காரணமான கார்பன் வெளியேற்றத்தை குறைக்கும் இந்தியாவின் முயற்சிகளுக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இதன் காரணமாக, 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டில் மின்சார வாகனங்களின் உற்பத்தி 30 சதவீதம் உயரக்கூடும். ஜூலை 2023 இல், இந்திய அரசு அதன் சுரங்க விதிகளைத் தளர்த்தியது என்பதுடன் கனிமங்களை ஆய்வு செய்வதற்காக தனியார் சுரங்க நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது. அர்ஜெண்டினாவைச் சேர்ந்த கேமியனுடன் இணைந்து இரண்டு பகுதிகளில் லித்தியம் சுரங்கத்தில் பணிகளைத் தொடங்க கேபில் ஆர்வமாக இருப்பதாக இந்திய அரசு முன்னதாக அறிவித்தது. கேபில் நிறுவனம் நால்கோ, ஹெச்.சி.எல். மற்றும் எம்.ஈ.சி.எல். ஆகியவற்றின் கூட்டு நிறுவனமாகும். இது 2019 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் நோக்கம் முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களான லித்தியம் மற்றும் கோபால்ட் ஆகியவற்றை வெளிநாட்டிலிருந்து வாங்குவதே ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லித்தியம் எடுக்கும் தொழிலில் மேற்கொள்ளப்படும் வேதிவினைகளால் சுற்றுச் சூழல் மாசு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தென் அமெரிக்காவில் சீனாவுடன் இந்தியா போட்டியா? சீனாவும் தொடர்ந்து லித்தியம் அகழ்விற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்றொரு தென் அமெரிக்க நாடான பொலிவியாவுடன் அதற்காக கடந்த ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை சீனா செய்துள்ளது. இது ஒரு பில்லியன் டாலர் ஒப்பந்தம் ஆகும். பொலிவியாவில் 21 மில்லியன் டன் லித்தியம் இருப்பதாக நம்பப்படுகிறது. இது உலகின் மிகப்பெரிய லித்தியம் இருப்பு என்று கருதப்படுகிறது. இந்தியாவின் புதிய ஒப்பந்தத்திற்குப் பிறகு, இந்த முக்கியமான கனிமத்தின் மீது சீனா மட்டுமே கட்டுப்பாட்டைக் கொண்டிருக்காது என்றும், லித்தியம் சுரங்கத்தில் இந்தியாவும் அதனுடன் போட்டியிட முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 2020-21 ஆம் ஆண்டில், இந்தியா சீனாவிலிருந்து சுமார் 54 சதவீத லித்தியத்தை இறக்குமதி செய்தது. அந்த ஆண்டு மொத்தம் ரூ.6,000 கோடி மதிப்புள்ள லித்தியம் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், அதில் ரூ.3,500 கோடி மதிப்புள்ள லித்தியம் சீனாவில் இருந்துதான் வந்ததாகவும் ஒரு புள்ளிவிவரம் காட்டுகிறது. நிலையான ஆற்றலுக்குத் தேவையான கனிமங்களைப் பெறுவதில் இந்தியா தொடர்ந்து சமரசம் செய்து வருகிறது. அமெரிக்கா தலைமையிலான கனிம பாதுகாப்பு கூட்டாண்மையிலும் (MSP) இந்தியா ஒரு அங்கமாக இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், முக்கியமான கனிமங்களின் விநியோகச் சங்கிலியைப் பாதுகாப்பதில் இந்தியா உதவி பெறும். 2021 ஆம் ஆண்டில், விநியோகச் சங்கிலியில் ஏகபோகக் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்ததால் சீனாவுக்கு எதிராக இந்த கூட்டாண்மை உருவாக்கப்பட்டது. ஆஸ்திரேலியா, கனடா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், கொரியா, சுவீடன், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் உறுப்பினர்களாக உள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியாவின் புதிய உடன்படிக்கை காரணமாக பாட்டரி உற்பத்தித் துறையில் கணிசமான முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. லித்தியம் சுரங்கம் பற்றிய கவலைகள் என்ன? மின்சார வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு சிறந்தவையாகக் கருதப்பட்டாலும், சில வல்லுநர்கள் லித்தியம் சுரங்க செயல்முறை சுற்றுச்சூழலுக்கு உகந்தது இல்லை என்று நம்புகின்றனர். உப்பு நீர்த்தேக்கங்கள் மற்றும் பூமியில் உள்ள கடினமான பாறைகளில் இருந்து லித்தியம் பிரித்தெடுக்கப்படுகிறது. இது ஆஸ்திரேலியா, சிலி மற்றும் அர்ஜெண்டினா போன்ற நாடுகளில் அதிக அளவில் காணப்படுகிறது. லித்தியம் எடுக்கப்படும் போது, அது கனிம எண்ணெயைப் பயன்படுத்தி எரிக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதி முற்றிலும் எரிந்து காய்ந்து கரும்புள்ளிகள் உருவாகின்றன. இது தவிர, சுரங்கத்தில் இருந்து லித்தியத்தைப் பிரித்தெடுக்கும் செயல்பாட்டில் நிறைய தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது என்பதுடன் கார்பன் டை ஆக்சைடு அதிக அளவில் வளிமண்டலத்தில் வெளியேற்றப்படுகிறது. அர்ஜெண்டினாவில் லித்தியம் சுரங்கத்தில் அதிக அளவு தண்ணீர் பயன்படுத்தப்படுவதால், உள்ளூர்வாசிகள் லித்தியம் எடுக்கும் சுரங்கத் தொழிலை எதிர்த்து வருகின்றனர். https://www.bbc.com/tamil/articles/cnkdeg5jqkgo
  23. Published By: VISHNU 18 JAN, 2024 | 03:48 PM சுயதொழில் முயற்சிகளை விருத்தி செய்வதன் ஊடாக உள்ளூர் உற்பத்திகளை அதிகரித்து முயற்சியாளர்களின் சுய பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதனூடாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பு இருப்பதற்கு ஏதுவான நிலைமை உருவாகும் எனவும் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை (18) முற்பகல் சுயதொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்தும் நோக்கில் கலந்துரையாடலொன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது குறித்த கலந்துரையாடலில் சுயதொழில் முயற்சியாளர்கள் தாம் எதிர் நோக்கியுள்ள தொழில்சார் நடைமுறை பிரச்சினைகளையும், வங்கிகள் ஊடக கடன் வசதிகளை பெற முற்படும் போது ஏற்படும் இறுக்கமான நடைமுறைகளால் ஏற்படும் அசௌகரியங்கள் குறித்தும் அமைச்சரிடம் சுட்டிக்காட்டியிருந்தனர். குறித்த சுயதொழில் முயற்சியாளர்களின் கருத்துக்களில் அவதானம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - உள்ளூர் உற்பத்திகளை மேம்படுத்துவதற்கான முதலீடுகளை எதிர்பார்க்கின்ற சுயதொழில் முயற்சியாளர்கள் அதற்கான திட்ட முன் மொழிவுகளை சமர்ப்பிக்கும் பட்சத்தில் அதற்கான ஒத்துழைப்பினையும் வழிகாட்டல்களையும் வழங்க முடியும் எனதெரிவித்திருந்தார். அத்துடன் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் முற்சிகளை ஊக்குவிப்பதற்கு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் இருந்து நன்மைகளை பெற்றுக் கொள்வதற்கான முன்மொழிவுகளையும் வழங்க முடியும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார். குறித்த கலந்துரையாடலில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் துறைசார் அதிகாரிகள், வங்கிகளின் முகாமையாளர்கள், சுயதொழில் முயற்சியாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/174250
  24. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நிதியமைச்சிடம் வலியுறுத்திய விடயம் ! Published By: DIGITAL DESK 3 18 JAN, 2024 | 02:27 PM பொருளாதார மீட்சிக்காக அமுல்படுத்தப்பட்டுள்ள செயற்திட்டங்கள் மகிழ்ச்சியளிப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். அத்துடன், பொருளாதார மீட்சிக்காக அமுல்படுத்தப்பட்டுள்ள செயற்திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நிதியமைச்சிடம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/174239
  25. பல பகுதிகளில் காற்றின் தரம் இயல்பு நிலைக்கு திரும்புமாம் ! Published By: DIGITAL DESK 3 18 JAN, 2024 | 01:41 PM நாட்டின் பல பகுதிகளில் குறைவடைந்திருந்த காற்றின் தரம் இன்று வியாழக்கிழமை (18) வழமைக்கு திரும்பும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் காலி ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் குறைந்து காணப்பட்டது. புதன்கிழமை (17) கொழும்பில் காற்றின் தரச்சுட்டெண் 100ஐ கடந்தது. மற்றைய பகுதிகளில் காற்றின் தரச்சுட்டெண் 50க்கும் 100க்கும் இடையில் இருந்தது என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்தார். திங்கட்கிழமை (15) பத்தரமுல்லை மற்றும் கொழும்பு கோட்டையைச் சூழவுள்ள காற்றின் தரச் சுட்டெண் 105 ஆகவும், யாழ்ப்பாணத்தில் 100 ஆகவும் பதிவாகியிருந்தது. சர்வதேச காற்றுத் தரக் குறியீட்டின்படி காற்றின் தரக்குறியீடு 100ஐ கடப்பது ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. https://www.virakesari.lk/article/174231

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.