Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. நாட்டில் இடம்பெற்று வரும் நிகழ்நிலை கடன் மோசடிகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (12) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, அதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். அத்தோடு, குறுகிய காலத்திற்கு நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களினால் பெரும்பாலும் நிகழ்நிலை கடன்கள் வழங்கப்படுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். புதிய வர்த்தக நடவடிக்கை இது குறித்து அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “இந்த விடயம் தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். புதிய வர்த்தக நடவடிக்கைகளில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டவர்கள். அவர்களுடைய நாடுகளில் இதே போன்ற சில விடயங்கள் உள்ளன. வியாபாரம் செய்துவிட்டு இப்போது இங்கு வந்தவர்கள் பல சமயங்களில் தற்காலிகமாகத் தங்கி, ஒன்றரை வருடங்களாக இந்தப் பணியைச் செய்கிறார்கள். இதில் ஏற்கனவே கவனம் செலுத்தியுள்ளோம். இதை தடுக்க தேவையான புதிய சட்டங்களை மிக விரைவில் கொண்டு வருவோம் என்று நம்புகிறோம்'' என்றார். https://tamilwin.com/article/online-loan-fraud-issue-1705045705
  2. பட மூலாதாரம்,RUPA & COMPANY கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி செய்தியாளர் 21 மே 2023 புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையை மாற்றியதில் 'ரஷோகுல்லா'(ரசகுல்லா)வுக்கு பெரும்பங்கு உண்டு என்று யாருக்காவது தெரியுமா? சுவாமி விவேகானந்தர் சிறுவயதில் இருந்தே சாப்பிடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். 'Swami Vivekananda the Feasting, Fasting Monk' அதாவது 'சுவாமி விவேகானந்தர் விருந்து மற்றும் உண்ணாவிரத துறவி', இது அவரது வாழ்க்கை வரலாற்றின் பெயர். ஆனால் இதன் தலைப்பு வெறுமனே வைக்கப்படவில்லை. வேதங்கள் மற்றும் வேதாந்தம் பற்றிய புத்தகங்களை வாங்குவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே அவர் பிரெஞ்சு சமையல் கலைக்களஞ்சியத்தை தவணைகளில் வாங்கினார் என்பதிலிருந்தே அவருக்கு உணவின் மீதிருந்த ஆர்வத்தை அளவிட முடியும். உலகிலுள்ள எல்லா பழங்களிலும் அவர் கொய்யாவை மிகவும் விரும்பினார். இது தவிர, சர்க்கரை மற்றும் ஐஸ் கலந்த மென்மையான தேங்காயைச் சாப்பிடவும் அவர் விரும்பினார். காந்திஜியை போலவே அவரும் ஆட்டுப்பால் குடித்தார். ஐஸ்கிரீம் விவேகானந்தரின் பலவீனமாக இருந்தது. அதை அவர் எப்போதும் குல்ஃபி என்றே அழைப்பார். அமெரிக்காவின் பூஜ்ஜியத்திற்கு குறைவான தட்பநிலையிலும் சாக்லேட் ஐஸ்கிரீம் சாப்பிடும் வாய்ப்பை விவேகானந்தர் தவறவிட்டதில்லை. ஒரு நாள் அவரது ஒன்றுவிட்ட சகோதரர் ராமச்சந்திர தத்தா, தன்னுடன் தக்ஷிணேஸ்வர் கோயிலுக்கு வரும்படியும், அங்கு வருபவர்களுக்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் ரசகுல்லா கொடுப்பார் என்றும் விவேகானந்தரிடம் கூறினார். அங்கே ரசகுல்லா கிடைக்கவில்லையென்றால் ராமகிருஷ்ணரின் காதை இழுத்துவிடுவேன் என்று விவேகானந்தர் அண்ணனிடம் கூறினார். விவேகானந்தர் அங்கு ஏமாற்றமடையவில்லை. மேலும் அவர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரானார். பட மூலாதாரம்,RUPA & COMPANY சிறுவயதில் இருந்தே துறவி ஆகவேண்டும் என்ற ஆசை விவேகானந்தர் சிறுவயதில் மிகவும் குறும்புக்காரர். அவரின் தலையில் தண்ணீர் ஊற்றுவதுதான் அவரை சாந்தப்படுத்த ஒரே வழி. சுற்றித்திரியும் சாதுக்களிடம் விவேகானந்தருக்கு அதிக பற்று இருந்தது. அவர்களுடைய சத்தத்தைக் கேட்டதும் அவர் வீட்டை விட்டு வெளியே ஓடுவது வழக்கம். சாதுக்களின் குரலைக் கேட்டதுமே அவர் அறையில் பூட்டப்படுவார். அவர்கள் சென்ற பின்னரே அவர் வெளியே வர அனுமதிக்கப்படுவார். அந்த அளவிற்கு சாதுக்கள் மீது விவேகானந்தரின் மோகம் இருந்தது. குழந்தைப் பருவத்திலிருந்தே அவர் துறவியாக விரும்பினார். குழந்தைகள் எழுத்துகளை அடையாளம் காணத் தொடங்கும் வயதில் விவேகானந்தர் எழுதவும் படிக்கவும் தொடங்கினார். அவரது நினைவாற்றல் மிகவும் சிறப்பான ஒன்றாக இருந்தது. புத்தகத்தை ஒருமுறை படித்தாலே அவருக்கு அனைத்தும் நினைவில் இருக்கும். விளையாட்டுகளில், நீச்சல், மல்யுத்தம் மற்றும் சிலம்பம் சுற்றுவதை அவர் விரும்பினார். வாள் சண்டைப் பயிற்சியும் அவர் பெற்று வந்தார். ராய்ப்பூரில் தங்கியிருந்த காலத்தில் செஸ் விளையாட்டிலும் அவர் தேர்ச்சி பெற்றார். சிறந்த மாஸ்டர்களிடம் கிளாசிக்கல் இசைப் பயிற்சி பெற்ற அவர், பகாவஜ், தபலா, இஸ்ராஜ், சிதார் போன்ற இசைக்கருவிகளை மிகவும் திறமையாக வாசிப்பார். ஆனால் பாரம்பரிய இசையில் அவர் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அவருடைய இசைதான் அவரை அவருடைய குரு ராமகிருஷ்ண பரமஹம்சரின் அருகில் அழைத்துச் சென்றது. அவரது இசையால் பரமஹம்சர் மிகவும் ஈர்க்கப்பட்டார். ஒருமுறை அவரது பாடலை கேட்டுக்கொண்டே சமாதி நிலைக்குச் சென்றுவிட்டார். ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரானார் பட மூலாதாரம்,RUPA & COMPANY படக்குறிப்பு, ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒவ்வொரு தந்தையைப் போலவே விவேகானந்தரின் தந்தை விஸ்வநாதரும் அவருக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார். ஆனால் அவரது குரு ராமகிருஷ்ண பரமஹம்சர் அதற்கு எதிராக இருந்தார். விவேகானந்தர் பிரம்மச்சரியத்தை ஏற்றுக்கொண்டு துறவியாக வாழ முடிவு செய்தார். மூத்த மகன் என்பதால் தந்தையின் மரணத்திற்குப் பிறகு ஏழு பேர் கொண்ட குடும்பத்தை நடத்தும் பொறுப்பு அவர் மீது விழுந்தது. அவர் சில நாட்கள் பெருநகர கல்வி அமைப்பில் ஆசிரியர் பணி செய்தார். விவேகானந்தரின் குரு ராமகிருஷ்ண பரமஹம்சர், எளிமை மற்றும் தார்மீக ஆன்மீகத்தின் அடையாளமாக இருந்தார். விவேகானந்தர் தனது செய்தியை உலகம் முழுவதும் எடுத்துச் செல்வார் என்பதில் ராமகிருஷ்ண பரமஹம்சர் உறுதியாக இருந்தார். பட மூலாதாரம்,RKMDELHI.ORG படக்குறிப்பு, ராமகிருஷ்ண பரமஹம்சர் 1886 ஜூலை வாக்கில் ராமகிருஷ்ணரின் உடல்நிலை மோசமாகத் தொடங்கியது. அவருக்கு தொண்டை புற்றுநோய் இருந்தது. கடைசி நேரத்தில் தன் சீடர்கள் அனைவரையும் அழைத்து விவேகானந்தர் தான் தனது வாரிசு என்று அவர் அறிவித்தார். இதற்குப் பிறகு, 1886 ஆகஸ்ட் 16 ஆம் தேதி ராமகிருஷ்ணர் பரமஹம்சர் மகாசமாதி அடைந்தார். அதன் பிறகு விவேகானந்தர் ராமகிருஷ்ணா மிஷனை நிறுவினார். 1898ஆம் ஆண்டு கல்கத்தாவில் பிளேக் நோய் பரவியது. நோய்க்கு பயந்து ஆயிரக்கணக்கான மக்கள் கல்கத்தாவை விட்டு வெளியேறினர். மக்களுக்கு நிவாரணம் வழங்க ராணுவம் வரவழைக்கப்பட்டது. அப்போது விவேகானந்தர் கல்கத்தாவில் தங்கி மக்கள் மத்தியில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டார். நல்ல ஆளுமை உடையவர் பட மூலாதாரம்,RUPA & COMPANY விவேகானந்தரின் உடல்வாகும், உயரமும் நன்றாக இருந்தது. அவர் மிகவும் தர்க்கரீதியானவர், ஒவ்வொரு கூட்டத்திலும் மக்களின் மனதைக் கவர்பவராக இருந்தார். "சுவாமிஜியின் உடல் ஒரு மல்யுத்த வீரரைப் போல வலிமையாகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருந்தது. அவர் 5 அடி 8.5 அங்குல உயரம் கொண்டவர். அவரது மார்பு அகலமானது, அவருக்கு அற்புதமான குரல் இருந்தது," என்று ரோமயா ரோலண்ட் தனது புகழ்பெற்ற புத்தகமான ' லைஃப் ஆஃப் விவேகானந்தா' வில் குறிப்பிட்டுள்ளார். "அனைவருடைய கவனத்தின் மையமாக அவரது பரந்த நெற்றியும், பெரிய கருப்பு கண்களும் இருந்தன. அவர் அமெரிக்கா சென்றபோது, ஒரு பத்திரிகையாளர் அவரது எடை 102 கிலோ இருக்கும் என்று மதிப்பிட்டார். சில நேரங்களில் அவர் தன்னைத் தானே கேலி செய்து 'மோட்டா சுவாமி' என்று அழைத்துக்கொள்வார்.” சரியாக தூங்க முடியாதது தான் அவருடைய பெரிய பிரச்னை. அவர் படுக்கையில் புரண்டுகொண்டே இருப்பார். ஆனால் தூக்கமே வராது. எவ்வளவோ முயற்சி செய்தும் தொடர்ச்சியாக அவரால் 15 நிமிடங்களுக்கு மேல் தூங்க முடியாது. அமெரிக்காவுக்கு அனுப்பிய மைசூர் மகாராஜா பட மூலாதாரம்,RUPA & COMPANY விவேகானந்தர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்தார். முதலில் அவர் வாராணசிக்கு சென்றார், அங்கு அவர் பல அறிஞர்கள் மற்றும் துறவிகளுடன் கருத்துகளை பரிமாறிக்கொண்டார். புத்தர் தனது முதல் உபதேசத்தை வழங்கிய சாரநாத்துக்கும் அவர் சென்றார். இதையடுத்து அயோத்தி, லக்னெள வழியாக ஆக்ரா சென்றார். அதன் பிறகு பம்பாய் சென்றார். அங்கிருந்து பூனாவுக்கு புறப்பட்டபோது தற்செயலாக அவரும் பாலகங்காதர திலகரும் ஒரே காரில் அமர்ந்தனர். இருவருக்கிடையே ஆழமான விவாதம் நடந்தது. திலகர் அவரை தன்னுடன் பூனாவில் தங்கும்படி அழைத்தார். விவேகானந்தர் 10 நாட்கள் திலகருடன் இருந்தார். இதையடுத்து விவேகானந்தர் ரயிலில் பெங்களூர் புறப்பட்டு சென்றார். அங்கிருந்து மைசூர் சென்று அங்கு மகாராஜாவின் விருந்தினராக தங்கினார். ஒரு நாள் மகாராஜா அவரிடம் 'நான் உங்களுக்காக என்ன செய்யவேண்டும்’ என்று கேட்டார். அமெரிக்கா சென்று இந்தியா பற்றியும் அதன் கலாசாரம் பற்றியும் விஷயங்களை பரப்ப விரும்புவதாக சுவாமி அவரிடம் கூறினார். மகாராஜா அவரது அமெரிக்க பயணத்திற்கான செலவுகளை ஏற்க ஒப்புக்கொண்டார். ஆனால் விவேகானந்தர் அந்த நேரத்தில் மகாராஜா அளித்த வாய்ப்பை ஏற்கவில்லை. ஆனால் பின்னர் அதற்கு ஒப்புக்கொண்டார். உலக மதங்களின் பாராளுமன்றத்தில் அனைவரையும் ஈர்த்த உரை 1893 மே 31ஆம் தேதி விவேகானந்தர், மெட்ராஸில் இருந்து 'பெனின்சுலா' என்ற நீராவி கப்பலில் அமெரிக்காவிற்கு தனது பயணத்தைத் தொடங்கினார். தாய்நாடு பார்வையில் இருந்து மறையும் வரை அவர் கப்பலின் மேல்தளத்தில் நின்று கொண்டிருந்தார். அவரது நீராவி கப்பல் கொழும்பு, பினாங், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் வழியாக நாகசாகியை அடைந்தது. ஜூலை 14ஆம் தேதி ஜப்பானின் யாகோஹோமா துறைமுகத்தில் இருந்து 'எம்பிரஸ் ஆஃப் இந்தியா' கப்பலில் அவர் அமெரிக்கா புறப்பட்டார். அந்தப் பயணத்தில் இந்தியாவின் தலைசிறந்த தொழிலதிபர் ஜெம்ஷெட்ஜி டாடாவும் அவருடன் இருந்தார். இருவருக்கும் இடையே இங்கிருந்து தொடங்கிய நட்பு வாழ்நாள் முழுவதும் நீடித்தது. Twitter பதிவை கடந்து செல்ல காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு வான்கூவரில் இருந்து சிகாகோவுக்கு அவர் ரயிலில் சென்றார். உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் சிகாகோவில் நடந்த உலக மதங்களின் பாராளுமன்றத்தில் (Parliament of world’s Religions) பங்கேற்க வந்திருந்தனர். அவர்களில் விவேகானந்தர்தான் வயதில் மிகவும் இளையவர். "உரையாற்றுபவர்களின் வரிசையில் விவேகானந்தர் 31வது இடத்தில் இருந்தார். ஆனால் தன்னை இறுதியில் பேச அனுமதிக்குமாறு அமைப்பாளர்களிடம் அவர் கோரிக்கை விடுத்தார். அவரது முறை வந்ததும் அவரது இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. அவரது நாக்கு பீதியில் உலர்ந்தது,” என்று கௌதம் கோஷ் தனது 'தி பிராஃபெட் ஆஃப் மார்டர்ன் இண்டியா, சுவாமி விவேகானந்தர்' என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். "அவரிடம் உரையும் தயாராக இல்லை. ஆனால் அவர் அன்னை சரஸ்வதியை நினைவு கூர்ந்தார், டாக்டர் பெரோஸ் அவரது பெயரை அழைத்தவுடன் மேடைக்கு விரைந்தார். அவர் தனது முதல் வார்த்தையான 'அமெரிக்காவின் சகோதரிகள் மற்றும் சகோதரர்களே' என்று சொன்னவுடன், அனைவரும் எழுந்து நின்றனர். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இரண்டு நிமிடங்கள் கைதட்டிக்கொண்டே இருந்தனர்,” என்று குறிப்பிட்டுள்ளார். அனைத்து மத சமத்துவத்தின் செய்தி பட மூலாதாரம்,RUPA & COMPANY கைதட்டல் நின்றவுடன் விவேகானந்தர் தனது சிறு உரையைத் தொடங்கினார். அவர் தனது உரையின் தொடக்கத்திலேயே உலகின் பழைமையான நாகரிகங்களில் ஒன்றான இந்தியாவின் சார்பாக உலகின் இளம் நாடுகளில் ஒன்றான அமெரிக்காவிற்கு நன்றி தெரிவித்தார். இந்து மதம் எப்படி சகிப்புத்தன்மையின் பாடத்தை உலகிற்கு கற்பித்துள்ளது என்பதை அவர் கூறினார். உலகிலுள்ள எந்த மதமும் மற்ற மதத்தைவிட சிறந்ததோ கெட்டதோ அல்ல என்றார் அவர். எல்லா மதங்களும் இறைவனை நோக்கிச் செல்வதற்கான வழியைக் காட்டும் ஒன்றுதான் என்று அவர் சொன்னார். அதன் பிறகு அமெரிக்காவின் பல நகரங்களில் அவர் ஆற்றிய உரைகள் மிகவும் விரும்பப்பட்டன. உலக மதங்களின் பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை அவரை உலகம் முழுவதும் பிரபலமாக்கியது. அவர் ஓராண்டு முழுவதும் அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் பயணம் மேற்கொண்டார். இந்தியாவுக்குத் திரும்பும் வழியில் இங்கிலாந்தில் தங்கிய அவர், இந்தியா மீது ஆர்வமுள்ள ஆக்ஸ்ஃபோர்டின் பேராசிரியர் மேக்ஸ் முல்லரை சந்தித்தார். இங்கிலாந்தில் அவர் பிபின் சந்திர பாலையும் சந்தித்தார். விவேகானந்தர் இந்தியா திரும்பியதும் அவரை வரவேற்க எல்லா இடங்களிலும் மக்கள் கூடினர். மெட்ராஸில் இருந்து அவர் கும்பகோணத்துக்கு ரயிலில் சென்றார். அவரைப் பார்க்க வழியில் உள்ள ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் மக்கள் கூடினர். ரயில் நிற்காத ஒரு சிறிய ஸ்டேஷனில் அவரைப் பார்ப்பதற்காக மக்கள் ரயில் தண்டவாளத்தில் படுத்து ரயிலை நிறுத்தினர். மக்களின் அன்பில் உண்ர்ச்சிவசப்பட்ட சுவாமி விவேகானந்தர் தனது பெட்டியிலிருந்து வெளியே வந்து மக்களைச் சந்தித்தார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார் பட மூலாதாரம்,PENGUIN 1901 டிசம்பரில் கல்கத்தாவில் காங்கிரஸ் மாநாடு நடந்தபோது அதில் பங்கேற்ற தலைவர்கள் பலர் பேலூருக்கு வந்து சுவாமிஜியை தரிசித்தனர். அவர்களில் பலர் தினமும் மதியம் அவரைப் பார்க்க வரத் தொடங்கினர். சுவாமிஜி அவர்களுடன் அரசியல், சமூக மற்றும் மதப் பிரச்னைகளைப் பற்றிப் பேசினார். அவரைச் சந்திக்க வந்தவர்களில் பாலகங்காதர திலகரும் ஒருவர். பிரபல தாவரவியலாளர் ஜெகதீஷ் சந்திரபோஸும் அவருடைய நெருங்கிய நண்பர். சுவாமி விவேகானந்தர் விலங்குகளை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவரிடம் வாத்துகள், செம்மறி ஆடுகள், மாடுகள் மற்றும் ஆடுகள் இருந்தன. அவரே அவற்றைப் பராமரித்து, தன் கைகளால் உணவளித்து வந்தார். அவர் தனது நாய்களில் ஒன்றான 'பாகா'வை மிகவும் நேசித்தார். அது இறந்தபோது மடத்திற்கு உள்ளே கங்கை நதிக்கரையில் அதை அடக்கம் செய்தார். பட மூலாதாரம்,WWW.BELURMATH.ORG படக்குறிப்பு, பேலூர் மடம் சுவாமி விவேகானந்தரின் உடல்நிலை எப்போதுமே அவ்வளவு நன்றாக இருந்தது கிடையாது. அவரது கால்களில் எப்போதும் வீக்கம் இருந்தது. வலது கண்ணின் பார்வையும் குறைந்துகொண்டே சென்றது. அவருக்கு எப்போதும் காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது. அவருக்கு மார்பின் இடது பக்கத்திலும் வலி இருந்தது. தந்தையைப் போலவே அவருக்கும் சர்க்கரை நோய் இருந்தது. வாராணாசியில் இருந்து திரும்பியதும், அவரது நோய் மீண்டும் அதிகரித்தது. புகழ்பெற்ற வைத்தியர் சஹானந்த் சென்குப்தாவிடம் அவர் சென்றார். விவேகானந்தர் தண்ணீர் அருந்துவதையும் உப்பு சாப்பிடுவதையும் அவர் தடை செய்தார். அடுத்த 21 நாட்களுக்கு அவர் ஒரு சொட்டு தண்ணீர்கூட குடிக்கவில்லை. கடைசி நாளில் மூன்று மணி நேரம் தியானம் பட மூலாதாரம்,RUPA & COMPANY அவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, தனது நெருங்கிய தோழி சிஸ்டர் நிவேதிதாவுக்கு தனது கைகளால் உணவு பரிமாறவேண்டும் என்று வலியுறுத்தினார். கைகளை கழுவுவதற்காக அவரது கைகளில் தண்ணீரையும் தெளித்தார். இதற்கு சிஸ்டர் நிவேதிதா, 'இதையெல்லாம் நான் செய்ய வேண்டும், நீங்கள் அல்ல' என்றார். அதற்கு விவேகானந்தர், 'இயேசு கிறிஸ்துவும் தன் சீடர்களின் பாதங்களைக் கழுவுவார்' என்று மிகவும் கம்பீரமாக பதிலளித்தார். சுவாமி விவேகானந்தர் தனது மகாசமாதி நாளில் அதிகாலையில் எழுந்தார். அவர் மடத்தின் கர்ப்ப கிருகத்திற்கு சென்று அதன் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் அனைத்தையும் மூடினார். பின்னர் தனியாக மூன்று மணி நேரம் தியானத்தில் அமர்ந்தார். அவர் சக புனிதர்களுடன் தனது மதிய உணவை உண்டார். நான்கு மணிக்கு ஒரு கோப்பை சூடான பால் குடித்தார். பின்னர் பாபுராம் மகராஜுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டார். மாலையில் பிரார்த்தனை மணி அடித்ததும் விவேகானந்தர் தன் அறைக்குச் சென்றார். அங்கே கங்கையின் முன் அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தார். இரவு 8 மணியளவில் அவர் ஒரு துறவியை அழைத்து தன் தலை மேல் விசிறுமாறு கூறினார். அப்போது விவேகானந்தர் படுக்கையில் படுத்திருந்தார். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அவரது நெற்றி வியர்வையால் நனைந்தது. கைகள் லேசாக நடுங்கின. அவர் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டார். எல்லாம் முடிந்துவிட்டது என்பதற்கான அறிகுறியாக அது இருந்தது. அப்போது இரவு 9.10 மணி. அங்கு இருந்த சுவாமி பிரேமானந்த் மற்றும் சுவாமி நிஷ்சயனந்த் ஆகியோர் சத்தமாக அவரது பெயரைக் கூறி அவரை எழுப்ப முயன்றனர். ஆனால் சுவாமிஜியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. மாரடைப்பால் காலமானார் பட மூலாதாரம்,RUPA & COMPANY டாக்டர் மகேந்திரநாத் மஜூம்தார், விவேகானந்தரை பரிசோதிக்க அழைக்கப்பட்டார். செயற்கை சுவாசம் கொடுத்து சுவாமி விவேகானந்தரை அவர் எழுப்ப முயன்றார். இறுதியில் நள்ளிரவில் சுவாமி விவேகானந்தர் காலமானதாக அறிவிக்கப்பட்டது. மாரடைப்புதான் மரணத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டது. சிஸ்டர் நிவேதிதா அதிகாலையில் வந்தார். மதியம் 2 மணி வரை சுவாமி விவேகானந்தரின் கையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தார். சுவாமி விவேகானந்தர் 39 ஆண்டுகள், 5 மாதங்கள் மற்றும் 22 நாட்களுக்குப் பிறகு இவ்வுலகிலிருந்து விடைபெற்றார். எனது 40வது வசந்த காலத்தை என்னால் பார்க்க முடியாது என்று அவர் சொன்ன வார்த்தைகள் உண்மையானது. விவேகானந்தர் பற்றிய சில சுவாரசியமான விஷயங்கள் அவர் வேதங்கள் மற்றும் வேதாந்தம் பற்றிய புத்தகங்களை வாங்குவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, அவர் பிரெஞ்சு சமையல் கலைக்களஞ்சியத்தை தவணைகளில் வாங்கினார். அவர் ஆட்டுப்பால் குடித்து வந்தார். கொய்யா அவருக்கு மிகவும் பிடித்த பழம் மற்றும் ஐஸ்கிரீம் அவரது பலவீனமாக இருந்தது. அவர் பெரிய மாஸ்டர்களிடம் பாரம்பரிய இசைப் பயிற்சி பெற்று பல இசைக்கருவிகளை வாசித்தார். அவர் சில நாட்கள் பெருநகர கல்வி அமைப்பில் ஆசிரியர் பணி செய்தார். சில சமயம் தன்னைத் தானே கேலி செய்து கொண்டு தன்னை 'மோட்டா சுவாமி'(குண்டு சுவாமி) என்று அழைத்துக் கொள்வார். அவருக்கு நன்றாக உறக்கம் வராது. கடுமையாக முயற்சித்தும் ஒரு நேரத்தில் அவரால் 15 நிமிடங்களுக்கு மேல் தூங்க முடியாது. ஒருமுறை அவர் ரயிலில் பயணம் செய்தபோது ஒரு சிறிய ஸ்டேஷனில் ரயில் நிற்கவில்லை. அவரை பார்ப்பதற்காக மக்கள் ரயில் தண்டவாளத்தில் படுத்து ரயிலை வலுக்கட்டாயமாக நிறுத்தினார்கள். அவருக்கு விலங்குகள் வளர்ப்பதில் விருப்பம் இருந்தது. அவரது நாய் 'பாகா' மடத்தின் உள்ளே கங்கை நதிக்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. ஒருமுறை வைத்தியர் தண்ணீர் குடிப்பதையும் உப்பு சாப்பிடுவதையும் தடை செய்தபோது, அவர் 21 நாட்களுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்கவில்லை. https://www.bbc.com/tamil/articles/cd1rk7d0jxmo
  3. ஜெர்மனி முன்னாள் கால்பந்தாட்ட விற்பன்னர் பெக்கன்போயர் மறைந்தார் 09 JAN, 2024 | 05:30 PM (நெவில் அன்தனி) ஜெர்மனியின் முன்னாள் கால்பந்தாட்ட விற்பனரும் அதிசிறந்த வீரருமான ஃப்ரான்ஸ் பெக்கன்போயர் தனது 78ஆவது வயதில் காலமானார். இந்த துயர செய்தியை ஜேர்மனி கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது. கால்பந்தாட்ட விளையாட்டில் இயல்பான தலைவர் என ஜேர்மனி கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் அழைக்கப்படும் பெக்கன்போயர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானதாக சம்மேளனம் குறிப்பிட்டது. ஜேர்மன் கழக மட்டப் போட்டிகளிலும் சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலும் பெக்கன்போயர் அசத்திய தலைவராவார். உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் இரண்டு தடவைகள் சம்பியன் பட்டங்களை வென்றவர் என்ற பெருமைக்குரியவர் பெக்கன்போயர். 1974இல் உலக சம்பியனான ஜெர்மனி அணிக்கு தலைவராக விளையாடிய பெக்கன்போயர், 1990இல் சம்பியனான ஜெர்மனி அணியின் தலைமைப் பயிற்றுநராக கடமையாற்றினார். கழக மட்டத்தில் ஜெர்மன் புண்டேஸ்லிகா (முதல்தரம்) கால்பந்தாட்டப் போட்டிகளில் பயேர்ன் மியூனிச் கழகத்திற்காக 1966இலிருந்து 1977வரை பெக்கன்போயர் 582 போட்டிகளில் விளையாடினார். அக் கழகத்தில் 5 லீக் சம்பியன் பட்டங்களை வென்றெடுத்த பெக்கன்போயர், 3 தடவைகள் ஐரோப்பிய கிண்ணத்தை வென்ற அணியிலும் இடம்பெற்றார். அதன் பின்னர் ஹெம்பர்க் எஸ்.வி. கழகத்திற்காக விளையாடிய பெக்கன்போயர் 1982இல் கடைசித் தடவையாக புண்டேஸ்லிகா கிண்ணத்தை வென்றிருந்தார். அதனைத் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்காவில் நியூ யோர்க் கொஸ்மஸ் கழகத்திற்காக விளையாடிய பெக்கன்போயர் அங்கு 3 தடவைகள் சொக்கர் பௌல் சம்பியன் பட்டத்தை வென்றிருந்தார். அத்துடன் பிரேஸில் காலபந்தாட்ட விற்பன்னர் பேலேயுடனும் சில போட்டிகளில் பெக்கன்போயர் விளையாடியிருந்தார். https://www.virakesari.lk/article/173525
  4. பந்துவீச்சில் ஹசரங்க சாதனை, துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் அதிரடி; தொடர் இலங்கை வசம் 12 JAN, 2024 | 06:44 AM (நெவில் அன்தனி) ஸிம்பாப்வேக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (11) நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்களால் வெற்றியீட்டிய இலங்கை, தொடரை 2 - 0 என்ற ஆட்டக் கணக்கில் கைப்பற்றியது. வனிந்து ஹசரங்கவின் தனிப்பட்ட சாதனை மிகு பந்தவீச்சுப் பெறுதியும் அணித் தலைவர் குசல் மெண்டிஸின் அதிரடி அரைச் சதமும் இலங்கைக்கு இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுத்தன. ஆறு மாதங்களின் பின்னரே சுழல்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். ஸிம்பாப்வே துடுப்பாட்ட வீரர்களை பெரும் சோதனைக்குள்ளாக்கிய வனிந்து ஹசரங்க தனது மீள் வருகையில் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 5.5 ஓவர்கள் வீசி 19 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இது வனிந்து ஹசரங்கவின் அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியாகும். சமிந்த வாஸுக்கு அடுத்ததாக இலங்கையர் ஒருவரால் பதிவுசெய்யப்பட்ட இரண்டாவது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதி இதுவாகும். ஸிம்பாப்வேக்கு எதிராக எஸ்எஸ்சி மைதானத்தில் 2001 டிசம்பரில் நடைபெற்ற போட்டியில் சமிந்த வாஸ் 19 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்களை வீழ்த்தியமையே அனைத்து நாடுகளுக்குமான அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியாக கடந்த 21 வருடங்களாக இருந்துவருகிறது. பல தடவைகள் மழையினால் தடைப்பட்டு மீண்டும் தொடரப்பட்ட இப் போட்டி அணிக்கு 27 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது. குறிப்பிட்ட நேரப்படி ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஸிம்பாப்வே 22.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 96 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. பிற்பகல் 3.04 மணிக்கு மழையினால் ஆட்டம் தடைப்பட்டபோது ஸிம்பாப்வே 7.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 40 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. பிற்பகல் 5.15 மணியளவில் ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது அணிக்கு 43 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது. எனினும் ஆட்டம் நெடு நேரம் தொடரவில்லை. பிற்பகல் 5.34 மணிக்கு மீண்டும் மழை பெய்ததால் போட்டி இரண்டாவது தடவையாக தடைப்பட்டது. (ஸிம்பாப்வே 12 ஓவர்களில் 48 - 3 விக்.) ஆட்டம் மீண்டும் இரவு 8.00 மணிக்கு தொடர்ந்தபோது அணிக்கு 27 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் போட்டி தொடர்ந்து நடைபெற்றபோது இலங்கையர்களின் குறிப்பாக வனிந்து ஹசரங்கவின் பந்துவீச்சை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட ஸிம்பாப்வே 96 ஓட்டங்களுக்கு சுருண்டது. துடுப்பாட்டத்தில் ஜோய்போர்ட் கம்பி (29), டக்குட்ஸ்வனாஷே கய்ட்டானோ (17), சிக்கந்தர் ராஸா (10), லூக் ஜொங்வே (14), வெலிங்டன் மஸக்கட்ஸா (11) ஆகிய ஐவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். ஸிம்பாப்வேயினால் நிர்ணயிக்கப்பட்ட 97 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 16.4 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 97 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. முதலிரண்டு போட்டிகளில் பிரகாசிக்கத் தவறிய அவிஷ்க பெர்னாண்டோவுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட்டபோதிலும் அவர் இத் தொடரில் இரண்டாவது தடவையாக ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். எனினும் ஆரம்ப வீரராக அறிமுகமான ஷெவன் டெனியல் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி குசல் மெண்டிஸுடன் 2ஆவது விக்கெட்டில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்தார். அவர் 12 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். மறுபக்கத்தில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ் 51 பந்துகளில் 9 பவுண்டறிகள், ஒரு சிச்ஸ் உட்பட 66 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். சதீர சமரவிக்ரம 14 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். இந்தப் போட்டியில் வனிந்து ஹசரங்க விளையாடியதால் தசுன் ஷானக்க நீக்கப்பட்டார். ஜெவ்றி வெண்டசெயுக்குப் பதிலாக ஷெவன் டெனியல் அணியில் சேர்க்கப்பட்டார். ஆட்டநாயகன்: வனிந்து ஹசரங்க https://www.virakesari.lk/article/173741 தொடர் நாயகன்: ஜனித் லியனகே
  5. Published By: VISHNU 12 JAN, 2024 | 03:23 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு 2000 இலட்சம் ரூபாவை மேலதிகமாக ஒதுக்குவதன் காரணம் என்ன? நிதி ஒழுக்கத்தை பற்றி பேசும் ஜனாதிபதி முதலில் நிதி ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். அரசியல்வாதிகள் சுகபோகமாக வாழ்வதற்காகவே வரி அறவிடப்படுகிறது. நாமல் ராஜபக்ஷக்கு எவ்வாறு அரச இல்லத்தை வழங்க முடியும். ராஜபக்ஷர்கள் இன்றும் அரச இல்லங்கள் வாழ்கிறார்கள். இவர்களுக்கு வெட்கம் என்பதொன்று இல்லையா என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க கடுமையாக சாடினார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, பாராளுமன்றத்துக்கு குறைநிரப்பு பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி, நிதி ஒழுக்கம் பற்றி அரசாங்கம் பாடம் கற்பிக்கிறது. இவர்களின் நிதி ஒழுக்கத்தை சற்று ஆராய்ந்து பார்ப்போம். டெலிகொம் நிறுவனத்தை மறுசீரமைப்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரச முயற்சியாண்மை திணைக்களத்துக்கு 13 ஆயிரம் இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 13 ஆயிரம் இலட்சம் ரூபா எவ்வாறு செலவு செய்யப்பட்டது என்பதை பாராளுமன்றத்துக்கு அறிவியுங்கள். இதில் நிதி ஒழுக்கம் உள்ளதா? இந்த குறை நிரப்பு பிரேரணையில் ஜனாதிபதியின் மேலதிக செலவுகளுக்காக 2000 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள், எரிபொருள் மற்றும் வாகன பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட மானியத்தின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு 2000 இலட்சம் ரூபா மேலதிகமாக ஒதுக்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. வரவு செலவு திட்டத்தின் போது ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்கள், எரிபொருள் மற்றும் வாகனங்களுக்காக நிதி ஒதுக்கப்படுகிறது. ஜனாதிபதிக்கான செலவினங்கள் நாட்டுக்கு பாரிய சுமை என்பதை பலமுறை குறிப்பிட்டுள்ளோம். இதற்கு மேலதிகமாக 2000 இலட்சம் ரூபாவை ஒதுக்க குறை நிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முதலில் ஜனாதிபதி நிதி ஒதுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற காலத்தில் இருந்து முழு நாட்டையும் வலம் வருகிறார். இலங்கையில் எந்த அரச தலைவர்களும் இவ்வாறு உலகை சுற்றவில்லை. ஒன்று மரண வீட்டுக்கு செல்கிறார். திருமண வீட்டுக்கு செல்கிறார். அல்லது உலக நாடுகளின் அரச தலைவர்கள் பங்குப்பற்றாத மாநாடுகளில் உரையாற்றுகிறார். முழு உலகையும் சுற்றி விட்டு மீண்டும் உலகம் சுற்ற 2000 இலட்சம் ரூபாய் கேட்கிறார். பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்கும், சீருடை வழங்குவதற்கும் மானியம் ஒதுக்கப்படவில்லை. பரீட்சை வினாத்தாள் திருத்தும் ஆசிரியர்களின் கொடுப்பனவு அதிகரிக்கப்படவில்லை. ஆனால் ஜனாதிபதி உல்லாச பயணம் செல்ல 2000 இலட்சம் ரூபா ஒதுக்கப்படுகிறது. ஆகவே இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்றமும் சிந்திக்க வேண்டும், ஜனாதிபதியும் சிந்திக்க வேண்டும். பாடசாலை உபகரணத்தில் இருந்து அத்தியாவசிய உணவு பொருட்கள் வரை வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. வரி வருமானத்தை பெற்றுக் கொண்டு ஜனாதிபதி உலகை சவாரி வருகிறார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி செயலகத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு வரும் போது மஹிந்த ராஜபக்ஷ விஜேராம மாவத்தையில் இருந்து பாராளுமன்றத்துக்கு வரும் போது இவர்களின் வாகன பேரணியுடன் அம்புலன்ஸ் வண்டி வருகிறது. இவர்கள் படுக்கை நோயாளிகளா? ஆனால் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளில் அம்புலன்ஸ் இல்லை. இவ்வாறான செயற்பாடுகளின் போது மக்கள் எவ்வாறு திருப்தியுடன் வரி செலுத்துவார்கள். அரசியல்வாதிகள் சுகபோகமாக வாழ்வதற்காகவே வரி அறவிடப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எப்படி அரச உத்தியோக பூர்வ இல்லத்தில் வாழ முடியும். நாமல் ராஜபக்ஷ அரச இல்லத்தில் வாழ்கிறார். அவரது தந்தை, சித்தப்பா உட்பட குடும்பமும் அரச இல்லத்தில் வாழ்கிறார்கள் வெட்கமில்லையா? நாமலுக்கு எவ்வாறு அரச இல்லம் வழங்க முடியும். முடிந்தால் பாராளுமன்றத்தில் குறிப்பிடுங்கள். கப்பலில் களியாட்டம் நடத்தியது தற்போது பேசுபொருளாக உள்ளது. பகலில் 20 மீற்றர் தூரம் கூட தெரியாதவர்கள் துறைமுகத்தை பார்வையிட சென்றார்களாம். அதுவும் இரவில் யாரை ஏமாற்றுகின்றீர்கள். நாட்டு மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் வகையில் வரியை அதிகரித்து விட்டு அரச நிதியை மோசடி செய்கின்றீர்கள். 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியின் செலவுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு நேர்ந்தது என்ன, ஏன் மேலதிகமாக 2000 இலட்சம் ரூபா குறை நிரப்பு பிரேரணை ஊடாக கோரப்படுகிறது என்பதை பாராளுமன்றத்துக்கு தெளிவுப்படுத்த வேண்டும். இந்த கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிப்பார்கள் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/173789
  6. ஊழலை எதிர்த்துப் போராடுவதில் குடிமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழு முன்வர வேண்டும் : ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா 12 JAN, 2024 | 07:43 PM ஊழலை எதிர்த்துப் போராடுவதில் குடிமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழு முன்வர வேண்டும் என ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா தெரிவித்துள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழு (CIABOC), இப்போது ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் (ACA) கீழ் அதிக அதிகாரங்களைக் கொண்டுள்ளது. அண்மையில் நியமிக்கப்பட்ட மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஆணைக்குழுவிற்கு நீதிபதி நீல் இத்தாவல தலைமை தாங்கியுள்ள நிலையில், முறையான ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கு வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற பாரிய மக்கள் போராட்டம் (அரகலய) ஆழமாக வேரூன்றிய ஊழலும் ஆட்சிசார் பலவீனங்களும் இலங்கையில் முடங்கச் செய்யும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன என்பதை பொதுமக்கள் உணர்ந்ததை எடுத்துக்காட்டியது. இந்தப் பிரச்சினைகளை நல்ல மனதுடன் தீர்ப்பதற்கான அரசின் விருப்பம் குறித்து பரவலான ஏமாற்றமும் விரக்தியும் நிலவுகிறது. சிவில் சமூகம் மற்றும் சர்வதேச நன்கொடை நிறுவனங்கள், குறிப்பாக சர்வதேச நாணய நிதியம் (IMF), ஊழல் எதிர்ப்பு முயற்சிகளில் உண்மையான முன்னேற்றம் நாட்டின் பொருளாதார மீட்சிக்கு முக்கியமானது என்பதை வலியுறுத்துகின்றன. இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பு வரையறைகள், அதன் ஆட்சிசார் குறைநிறைகளைக் கண்டறியும் மதிப்பீட்டு அறிக்கை மற்றும் இலங்கையின் ஊழலுக்கு எதிரான தோற்றப்பாடு பற்றிய சிவில் சமூக பகுப்பாய்வு அறிக்கையின் பரிந்துரைகள் என்பன CIABOC ஐ வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. CIABOC ஆனது, பெரிய ஊழல் வழக்குகளைக் குறிவைத்து, சிறிய குற்றச் செயல்களுக்கு அப்பால் சென்று பெரிய குற்றவாளிகளைத் தொடர்வதன் மூலம் பொதுமக்களின் நம்பிக்கையை மீளப் பெற வேண்டியதன் உடனடித் தேவையை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) வலியுறுத்துகிறது. குறிப்பாக, பெரிய அளவிலான ஊழல் சம்பவங்களில், பொறுப்புக்கூறலை நிறுவுவது, விசாரணைக்கு வருபவர்களையும், சாட்சிகளையும் அச்சமின்றி முன்வர ஊக்குவிக்கும். CIABOC ஆனது முன்னேற்றமடைய, அது சொத்து அறிவிப்புகளுக்கு பொதுமக்கள் அணுகலை துரிதப்படுத்த வேண்டும், முக்கிய ஊழல் வழக்குகளை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும், தனியார் துறை லஞ்சம் மற்றும் விளையாட்டு தொடர்பான ஊழலைக் கையாள்வதற்கான அதன் நோக்கத்தை விரிவுபடுத்த வேண்டும், மேலும் அதன் அர்ப்பணிப்புடன் கூடிய ஈடுபாடு மற்றும் முன்னேற்றத்தை பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இலங்கையில் பரவலாக காணப்படும் ஊழல் பிரச்சினையின் அளவைக் கருத்தில் கொண்டு, ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு தொலைநோக்கு, அச்சமற்ற தலைமைத்துவத்தை வழங்குமாறு புதிதாக அமைக்கப்பட்ட ஆணைக்குழுவிடம் TISL வேண்டிக் கொள்கிறது. நாட்டின் மீட்புப் பாதையில் இந்தத் தீர்க்கமான தருணத்தில் CIABOC க்கு தேவையான நிதி மற்றும் செயல்பாட்டுச் சுதந்திரம் மற்றும் ஆதரவை வழங்குமாறு TISL அரசாங்கத்திடம் கோருகிறது. https://www.virakesari.lk/article/173821
  7. Published By: DIGITAL DESK 3 12 JAN, 2024 | 11:28 AM புத்தரின் மறு அவதாரம் என அழைக்கப்படும் சர்ச்சைக்குரிய நேபாள மதத்தலைவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 'குட்டிப் புத்தர்' என்று அழைக்கப்படும் ராம் பகதூர் போம்ஜன் என்ற மதத்தலைவரே சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் பல வருடங்களாக தலைமறைவாக இருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார். நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவின் தெற்கே உள்ள பாரா மாவட்டத்தில் உள்ள அவரது ஆசிரமத்தில் சீடராக வசித்து வந்த "சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கில்" அவருக்கு எதிராக 2020 ஆம் ஆண்டு கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், நேபாள பொலிஸாரின் மத்திய புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காத்மண்டுவின் புறநகர்ப் பகுதியில் வீடு ஒன்றில் வசித்து வந்த 34 வயதான குறித்த மதத்தலைவரை கண்காணித்து வந்த நிலையில், அவர் தப்பியோட முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து ஒரு தொகை கைத்தொலைபேசிகள், ஐந்து மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்டுகள் மற்றும் 200,000 அமெரிக்க டொலருக்கும் அதிகமான நேபாளி மற்றும் வெளிநாட்டு நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அவருக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் உள்ளனர். அவர் பல மாதங்களாக தண்ணீர், உணவு இன்றி மரத்தின் அடியில் தியானம் செய்து மக்கள் மத்தியில் புகழ்பெற்றவராவார். 2005 காலக்கட்டத்தில் இவர் தலைப்பு செய்திகளில் இடம் பெற்றார். இதையடுத்து தான் அவருக்கான பக்தர்கள் என்பது அதிகரிக்க ஆரம்பித்தது. போம்ஜானின் "புத்த பையன்" என்ற பெயர் அவரது புகழுக்கு மேலும் உதவியது, அவர் காட்டில் இருந்தபோது அவரைப் பார்க்க நாடு முழுவதும் இருந்தும் அண்டை நாடான இந்தியாவிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்தனர். போம்ஜன் தனது முதல் பிரசங்கத்தின் போது சுமார் 3,000 பேரைக் கவர்ந்ததன் மூலம் சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிரசங்கம் செய்ய ஆரம்பித்தார் என அவரது இணையதளம் தெரிவிக்கிறது. பல்வேறு காலக்கட்டத்தில் போம்ஜானின் ஆசிரமத்தில் இருந்து காணாமல் போன சீடர்கள் குறித்து மேலதிக விசாரணைகள் மற்றும் தேடல்கள் நடத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/173748
  8. Play video, "அயலான்: தமிழ் பேசும் ஏலியன் மக்களைக் கவர்ந்ததா? படம் எப்படி இருக்கிறது?", கால அளவு 2,40 02:40 காணொளிக் குறிப்பு, அயலான்: தமிழ் பேசும் ஏலியன் மக்களைக் கவர்ந்ததா? படம் எப்படி இருக்கிறது? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பூமிக்கு வரும் வேற்றுகிரகவாசியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் 'அயலான்' திரைப்படம் சிவகார்த்திகேயன் நடிப்பில், ரவிக்குமார் இயக்கத்தில் கலகலப்பான படமாக வந்துள்ளது. வேற்றுகிரகத்தில் இருந்து பூமிக்கு வரும் ஏலியன், பணத்தாசை பிடித்த தொழிலதிபர் ஒருவரின் பிடியிலிருந்து சமூகத்தைக் காக்க, விவசாயியான சிவகார்த்திகேயனுடன் இணைந்து செயல்படுகிறது. படத்தின் முதல் பாதியில், ஏலியனின் பார்வையில் உலகைக் காட்டும் காட்சிகள் சிரிப்பைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. கருணாகரன், யோகி பாபு ஆகியோர் படத்துக்குப் பலம் சேர்த்துள்ளனர். இரண்டாவது பாதியில் படம் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்ததாக உள்ளது என்று ஊடகங்கள் தங்கள் விமர்சனங்களில் குறிப்பிட்டுள்ளன. ஏலியன் படங்கள் புதிதல்ல என்றாலும் அவை பெரும்பாலும், ஹாலிவுட் படங்களிலேயே பயன்படுத்தப்பட்டது. தமிழ் ரசிகர்கள் அதை மொழிபெயர்ப்புப் படமாக மட்டுமே பார்க்க முடிந்தது. ஆனால் தமிழ்நாட்டில் நடக்கும் கதை ஒன்றில் ஏலியனை பொருத்திப் பார்த்து ரசிக்கும் வாய்பை இயக்குநர் ரவிக்குமார் உருவாக்கி தந்திருக்கிறார். ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக, உருவாகி வரும் அயலான், கொரோனா பெருந்தொற்று காரணமாகத் தாமதமாக வெளியாகியுள்ளது. இந்தப் படம் குறித்து ஊடகங்கள் வெளியிட்டுள்ள விமர்சனங்களை இனி பார்க்கலாம். பட மூலாதாரம்,SIVAKARTHIKEYAN/@X அயலான்: தமிழ் பேசும் ஏலியன் பட மூலாதாரம்,THEAYALAAN/@X முழுக்க முழுக்க கிராபிக்ஸ் காட்சிகளை நம்பியே படக்குழு இதில் இறங்கியிருப்பதைக் காண முடிவதாக தினமணி தன் விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது. மேலும், “அதற்கேற்ற தகுந்த உழைப்பை கிராபிக்ஸ் குழு சரியாகக் கொடுத்திருக்கிறது. ஏலியனை திரையில் துறுத்தல் இல்லாமல் கொடுத்து ரசிகர்களைத் தக்க வைத்திருக்கிறது படக்குழு. ஏலியனை முகபாவனைகளுடன் நடிக்க வைத்திருப்பது, அதற்கு உணர்ச்சிகளைப் பயன்படுத்தியிருப்பது என மெனக்கெட்டிருந்தனர்,” என்று தினமணி விமர்சனம் செய்துள்ளது. மேலும், “நாம் யூகிக்கக்கூடிய கதை என்றாலும் அதை விறுவிறுப்பாகக் கொண்டு செல்வதில் அடங்கியிருக்கிறது இயக்குநரின் திறமை. படத்தின் தொடக்கக் காட்சிகள் சற்று நீண்டதாக இருந்தாலும், அதன் பின் மெதுவாக மெதுவாக வேகமெடுக்கத் தொடங்குகிறது திரைப்படம், ஆறு ஆண்டுகளுக்கு முந்தைய சிவகார்த்திகேயனின் தொடக்கக் கால நடிப்பு சாயல் படத்தில் தெரிகிறது. ஆக்ஷன் ஹீரோவாக மாறிய பிறகு அவரின் பழைய பாணியிலான நடிப்பை பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது,” என்றும் அயலான் திரைப்படத்தைப் பற்றி தினமணி கூறுகிறது. ரசிக்க வைக்கும் ஏலியன் பட மூலாதாரம்,SIVAKARTHIKEYAN/@X ஹாலிவுட் படங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்ட காலப்பயணம் என்ற கருவை இயக்குநர் ரவிக்குமார், 'இன்று நேற்று நாளை' என்ற படத்தில் எளிய தமிழ் கதை மூலம் அனைவருக்கும் புரியும் வகையில் காட்சிப்படுத்தியிருந்தார். ஒன்பது ஆண்டுகள் கழித்து, அவருடைய இரண்டாவது படத்திலும் சையன்ஸ் ஃபிக்ஷன் கருப்பொருளைக் கொண்டுள்ளார். அதுகுறித்த டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம், "ஹீரோ அறிமுக பாடல், காதல், இரண்டு நகைச்சுவை நடிகர்கள், ஒரு கார்ப்பரேட் வில்லன், கொஞ்சம் அம்மா சென்டிமென்ட், இயற்கை முறை விவசாயம் குறித்த சில அறிவுரைகள் என தமிழ் படத்துக்கான எல்லா அம்சங்களும் இந்தப் படத்தில் உள்ளன," என்று விமர்சித்துள்ளது. எனினும், சூப்பர் பவர், பறக்கும் தட்டு, ரோபோக்கள் என ஹாலிவுட் படங்களில் பார்த்த விஷயங்களுக்கு நிகராக இயக்குநர் ரவிக்குமார் கதையில் நிறைய டிவிஸ்டுகள் வைத்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தனது விமர்சனத்தில் கூறியுள்ளது. இந்தப் படம் அனைத்து வயதினருக்கும் ஏற்றதாக உள்ளதற்கு இதுவே காரணம் எனப் பாராட்டியுள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ், "படத்தின் முதல் பாதியில் டாட்டூ என்ற ஏலியனை ரசிக்கும்படியான கார்ட்டூன் கதாபாத்திரம் போல் பயன்படுத்தி நகைச்சுவையைத் தூண்டியிருக்கிறார் இயக்குநர். விசுவல் எஃபெக்ட்ஸ் திரையில் காண்பதற்குத் தங்கு தடையின்றி இருப்பது, படத்தில் கூடுதல் மேஜிக் செய்கிறது,” என்று தனது விமர்சனத்தில் கூறியுள்ளது. அயலான் காட்டும் புதிய உலகம் பட மூலாதாரம்,THEAYALAAN/@X இந்து தமிழ் திசை நாளிதழ் தனது விமர்சனத்தில், “தமிழில் இதுவரை பார்த்திராத அளவு கிராபிக்ஸ் காட்சிகளில் அத்தனை நேர்த்தி. குறிப்பாக, ஏலியனின் உடல் பாகங்கள் தொடங்கி அதன் அசைவுகள், உடல்மொழி வரை துல்லியமாக உருவாக்கப்பட்டுள்ளன," எனப் பாராட்டியுள்ளது. "தொழில்நுட்பக் குழுவினருக்கு ஸ்பெஷல் பாராட்டுகள். வழக்கமாக இந்திய சினிமாக்களில் கிராபிக்ஸ் சொதப்ப காரணம், அதன் லைட்டிங்கில் கவனம் செலுத்தாததுதான் என்று கூறப்படுவதுண்டு. ஆனால் இதில் படம் முழுக்க அப்படியான குறை எதுவும் இல்லாமல் துல்லியமான கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது சிறப்பு. ஏலியனும் கியூட்டாக வடிவமைப்பட்டுள்ளதால் குழந்தைகளைக் கவர வாய்ப்புள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் நடனம் பட மூலாதாரம்,SIVAKARTHIKEYAN/@X தி இந்தியன் எக்ஸ்பிரஸ், “அசர வைக்கும் காட்சிகள் மூலம், இந்த திரைப்படம் உங்கள் கண்களுக்கு விருந்தாக அமையும். திகைப்பூட்டும் காட்சிகள் வேறொரு உலகத்துக்கு உங்களை எடுத்துச் செல்லும்,” என்று கூறுகிறது. “படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள். அதை ஓரிடத்தில்கூட பிசிறு தட்டாமல் காட்சிப்படுத்தி இருக்கிறது கிராஃபிக்ஸ் குழு. ஏலியனுக்கு பின்னணிக் குரலாக வந்திருக்கும் சித்தார்த்தின் குரல் கனகச்சிதமாக பொருந்தியுள்ளது,” என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு இசை அமைத்திருக்கும் ‘இசைப்புயல்’ ஏ.ஆர் ரஹ்மான், ஒரு பாடலில் சிவக்கார்த்திகேயனுடன் சேர்ந்து நடனமாடியும் உள்ளார். மேடைகளில் அதிக சத்தம் போட்டுக்கூட பேசாத ரஹ்மானை பார்த்த ரசிகர்களுக்கு, அவர் நடனமாடியிருப்பது கூடுதல் உற்சாகத்தைத் தருகிறது. இயக்குநர் ரவிக்குமாரும் அதே பாடலில் நடனமாடியுள்ளார். https://www.bbc.com/tamil/articles/cmmddq9jne4o
  9. எங்கு வாழ்ந்தாலும் தாய்த் தமிழ்நாட்டை மறக்காதீர்கள் - அடிக்கடி உங்கள் குழந்தைகளோடு தமிழ்நாட்டிற்கு வாருங்கள் கீழடி, பொருணை, ஆதிச்சநல்லூரை காண்பியுங்கள் - ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள் 12 JAN, 2024 | 01:13 PM எங்குவாழ்ந்தாலும் தாய்தமிழ்நாட்டை மறக்காதீர்கள் -அடிக்கடி உங்கள் குழந்தைகளோடு தமிழ்நாட்டிற்கு வாருங்கள் கீழடி பொருணை ஆதிச்சநல்லூரை காண்பியுங்கள் என அயலக தமிழர் தின நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. இதே அரங்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாடு என்பது, தமிழ்நாட்டை வளப்படுத்த உலகமே திரண்ட மாநாடு என்று சொன்னால், இன்று நடைபெறுவது உலகத்தை வளப்படுத்த சென்ற தமிழர்களை கொண்டாடும் மாநாடு! இந்த மாநாட்டுக்கு கிடைத்த மாபெரும் சிறப்புகளில் ஒன்று சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் மாண்புமிகு சண்முகம் அவர்கள் இங்கு வருகை தந்திருப்பது! அவர், உலகப் புகழ்பெற்ற தமிழன் மட்டுமல்ல, உலகமே கவனிக்கின்ற பதவியில் இருக்கும் தமிழன்! இந்த மேடையில், உலகமெங்கும் பல நாடுகளில் இருக்கக்கூடிய பல்வேறு பொறுப்புகளில், அறிவால், ஆற்றலால் தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள் என்பதற்கு சாட்சியாக அமர்ந்திருக்கும் அனைவரையும் நான் உள்ளபடியே வரவேற்கிறேன், வாழ்த்துகிறேன். அனைவரது வருகைக்கும் முதலில் என்னுடைய நன்றியை தெரிவிக்கிறேன். மேடையிலும், நேரிலும் அமர்ந்திருக்கும், உங்களை எல்லாம் பார்க்கும்போது எனக்குப் பெருமையாக இருக்கிறது. "முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்" என்ற உழைப்புத் திறன்தான் கடல் கடந்தும் தமிழர்கள் வெற்றிகரமாக வாழக் காரணம்! இப்படி புலம்பெயர்ந்த நம் தமிழ்ச் சொந்தங்கள், அந்த நாடுகளுடைய வளர்ச்சிக்கும், உயர்வுக்கும் முதுகெலும்பாக இருந்து வருகிறார்கள். தாய்த் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமில்லாமல், ஒரு தமிழனாகவும் இதை பார்த்து நான் அகம் மகிழ்கிறேன். நீராலும், நிலத்தாலும் ஏன் நாடுகளாலும், கண்டங்களாலும் பிரிந்து இருந்தாலும் நாம் எல்லோரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்! தமிழ் அன்னையின் குழந்தைகள்! அந்த உரிமையுடன் உங்கள் சகோதரனாக நான் உங்களிடம் வைக்கின்ற வேண்டுகோள்... எங்கு வாழ்ந்தாலும் தாய்த்தமிழ் நாட்டை மறக்காதீர்கள்! அடிக்கடி உங்கள் குழந்தைகளோடு தமிழ்நாட்டிற்கு வாருங்கள்! கீழடி, பொருணை, ஆதிச்சநல்லூரை காட்டுங்கள்! தமிழோடு இணைந்திருங்கள்! நீங்கள் எங்கு வாழ்ந்தாலும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், நமது திராவிட மாடல் அரசுக்கும் துணையாக இருந்திடுங்கள்! என்று கேட்டு, அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துகளைக் தெரிவித்து விடைபெறுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/173785
  10. நீங்கள் குறிப்பிடுவது போல் வெற்றி பெற்றவர்களை தூக்கிப் பிடிக்கிறோம். தோற்றவர்களை தூக்கி விடுவது பற்றிச் சிந்திப்பதில்லை.
  11. Published By: VISHNU 12 JAN, 2024 | 01:50 PM சிவபூமி நாய்கள் சரணாலயம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுகிறது. கடந்த நான்குவருடங்களாக இயக்கச்சியில் அமைக்கப்பட்டு செயற்பட்டுவந்த நாய்கள் சரணாலயம் பல கஷ்டங்களுக்கு மத்தியில் நடாத்திவரப்பட்டது. இதனால் இங்கு பல நூற்றுக்கணக்கான கட்டாக்காலி நாய்கள் பராமரிக்கப்பட்டு வந்தன. எனினும் ஐந்தாவது ஆண்டில் கால்பதிக்கும் இந்த நாய்கள் சரணாலயம் சுகாதார வசதிகள் இன்மையாலும் மருத்துவ துறையின் போதிய ஆதரவின்மையாலும், நாய்களை பராமரிப்பதற்கு போதிய பராமரிப்பாளர்கள் இல்லாமையாலும் அறக்கட்டளையினர் நாய்கள் சரணாலயத்தை தற்காலிகமாக முடியுள்ளனர். தகுந்த பணியாளர்கள், மருத்துவ ஒத்துழைப்பு கிடைத்ததும் மீண்டும் திறக்கப்படும் அதுவரை நாய்களை அங்கு விடவேண்டாம் என அறக்கட்டளையினர் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/173774
  12. ரஷ்யாவுடன் போர் நிறுத்தம்: உக்ரைன் ஜனாதிபதி நிராகரிப்பு உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022 ஆம் ஆண்டு முழு அளவில் படையெடுத்தது. உக்ரைனை பிடிக்கும் வரையில் போர் ஓயாது என ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அறிவித்தார். என்றபோதிலும் ரஷ்யாவால் உக்ரைனை முழுமையாக ஆக்கிரமிக்க முடியவில்லை. பிடித்து வைத்திருந்த சில இடங்களை உக்ரைன் மீட்டது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் சண்டையிட்டு வருகிறது. இதனால் ரஷ்யா மிகப்பெரிய அளவில் இழப்பை சந்தித்து வருகிறது. இந்த நிலையில்தான் போர் நிறுத்தம் என்பதை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி நிராகரித்துள்ளார். உக்ரைன் மீதான சண்டையின் நிறுத்தம், போர் நிறுத்தம் என்ற அர்த்தமாகிவிடாது. அது ரஷ்யா மீண்டும் ஆயுதங்களையும், வீரர்களையும் கட்டமைக்க உதவுவதாக இருக்கும். நாங்கள் வீழ்த்தப்படுவோம். அடக்குமுறை தோற்கடிக்கப்பட வேண்டும். அடக்குமுறையாளர் தோல்வியாளராக இருக்க வேண்டும்” என்றார். https://thinakkural.lk/article/287928
  13. 18,333 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2,500 ரூபா கொடுப்பனவு வழங்க திட்டம் - கீதா குமாரசிங்க 12 JAN, 2024 | 01:45 PM பிரதேச செயலக பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 18,333 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2,500 ரூபா கொடுப்பனவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். குறித்த திட்டமானது இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று வியாழக்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், இந்த பணி தொடர்பில் சிறந்த பயிற்சி பெற்ற ஆசிரியர்களே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் புதிதாக இணைந்துள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் இப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. நாட்டில் கிட்டத்தட்ட 19,216 முன்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 37,000 முன்பள்ளி ஆசிரியர்கள் காணப்படுவதோடு பட்டதாரி ஆசிரியர்கள் 29,000 பேர் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/173773
  14. க.பொ.த உயர்தரப் பரீட்சை: புதிய அறிவிப்பு தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் வினாத்தாள் மூன்று மொழிகளிலும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. புதன்கிழமை (ஜனவரி 10) வெளியிடப்பட்ட வினாத்தாள் பரீட்சைக்கு முன்னதாக சமூக ஊடகங்களில் வெளியானதாக சந்தேகம் எழுந்ததால், வினாத்தாள் இரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் பரீட்சைகள் நிறைவடைந்ததன் பின்னர் குறித்த பாடத்திற்கான புதிய வினாத்தாள் வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். குறித்த பரீட்சை நடைபெறும் திகதியை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பின்னர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. https://thinakkural.lk/article/287996
  15. Published By: VISHNU 12 JAN, 2024 | 03:58 PM யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் சிறு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் தமக்கு நல்லதொரு இடத்தினை ஒதுக்கி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். திருநெல்வேலி சந்தையில் நீண்டகாலமாக சிறு பொருட்களை வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர், பிரதேச சபையினால் சந்தைக்குள் வேறு இடம் ஒன்று வியாபார நடவடிக்கைக்காக ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது. முன்னர் பிரதான வாயிலுக்கு அருகில் அவர்கள் வியாபாரம் செய்து வந்த வேளை , சந்தைக்கு வந்து செல்வோர் அவர்களிடம் பொருட்களை வாங்கி செல்ல இலகுவாக இருந்தது. தற்போது ,அவர்கள் முன்னர் வியாபாரம் செய்த இடங்கள் வாகன தரிப்பிட பகுதியாகவும் , சந்தையில் இருந்து பொருட்களை ஏற்றி இறக்கும் வாகன தரிப்பிடமாகவும் மாற்றப்பட்டுள்ளது. அந்த பகுதியில் வியாபாரம் செய்து வந்தவர்களுக்கு சந்தைக்குள் பிறிதொரு இடத்தினை பிரதேச சபை ஒதுக்கி கொடுத்துள்ளது. புதிதாக ஒதுக்கி கொடுக்கப்பட்ட இடமானது , சந்தையின் ஒதுக்கு புறமான பகுதி, அங்கு தமக்கு வியாபாரம் நடைபெறவில்லை. இட வாடகையாக முன்னர் 80 ரூபாய் வாங்கியவர்கள் தற்போது 150 ரூபாய் வாங்குகின்றார்கள். மின்சார வசதிகள் கூட செய்து தரவில்லை. எமது வியாபார நடவடிக்கைக்காக சந்தைக்குள் நல்லதொரு இடத்தினை ஒதுக்கி தர பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர். https://www.virakesari.lk/article/173793
  16. இலங்கையின் சவாலான சீர்திருத்தங்கள் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன - ஜப்பானிய நிதியமைச்சர் Published By: VISHNU 12 JAN, 2024 | 03:20 PM இலங்கையின் சவாலான சீர்திருத்தங்கள் சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஜப்பானிய நிதியமைச்சர் Suzuki Shunichi தெரிவித்தார். இலங்கையின் பொருளாதாரம் கணிசமாக முன்னேற்றம் கண்டிருப்பதாகவும் இதற்கு ஜனாதிபதி வழங்கிய சிறந்த தலைமைத்துவத்தை பாராட்டுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வியாழக்கிழமை (11) சந்தித்த ஜப்பான் நிதி அமைச்சர் Suzuki Shunichi தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் முதலாவது மீளாய்வை இலங்கை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாகவும், இலங்கையின் சவாலான சீர்திருத்தங்கள் சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஜப்பானிய நிதியமைச்சர் Suzuki Shunichi தெரிவித்தார். இலங்கையின் பொருளாதார நிலைமையில் இந்த சாதகமான முன்னேற்றம் நம்பிக்கைக்குரியது என்றும், இது இலங்கை மீதான உத்தியோகபூர்வ மற்றும் தனியார் கடன் வழங்குநர்களின் சர்வதேச நம்பிக்கையை மேம்படுத்த சாதகமாக இருப்பதாகவும் ஜப்பான் நிதியமைச்சர் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/173788
  17. கெஹெலியவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு முன்வைத்துள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டோர் இதன்போது சென்றிருந்தனர். இன்று முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://thinakkural.lk/article/287995
  18. அனைத்து பேருந்துகளிலும் CCTV கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அண்மைக் காலமாக வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோக சம்பவங்கள் பாரிய அளவு அதிகரித்துள்ள நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/287971
  19. வெள்ளத்தில் சிக்கி சீமெந்து, மாவு லொறிகள் விபத்து ; 600 சீமெந்து மூடைகள் நாசம் 12 JAN, 2024 | 01:31 PM திருகோணமலையில் இருந்து சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வாழைச்சேனை பகுதியில் வெள்ளத்தில் சிக்கியதில் லொறி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் லொறியில் ஏற்றிச்செல்லப்பட்ட 600 சீமெந்து மூடைகளும் நாசமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் வாழைச்சேனையில் மாவு ஏற்றிச் சென்ற லொறியொன்றும் வெள்ளத்தில் சிக்கியதில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்குள்ளான லொறியில் உள்ள மாவை மற்றுமொரு லொறிக்கு மாற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/173778
  20. யேமனில் உள்ள ஹூதி நகரங்களுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நடத்திய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் அரேபிய கடலில் எண்ணெய் கப்பலை ஈரான் கைப்பற்றிய செய்தி ஆகியவற்றால் உலகளாவிய எண்ணெய் எதிர்காலம் இன்று கடுமையாக உயர்ந்தது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் ஃபியூச்சர்ஸ் ஆரம்ப வர்த்தகத்தில் ஒரு பீப்பாய்க்கு $74ஐ நோக்கி 2% உயர்ந்தது மற்றும் ப்ரெண்ட் எதிர்காலம் ஒரு பீப்பாய்க்கு $78ஐ நோக்கி 1.5% உயர்ந்தது. செங்கடலில் கப்பல் போக்குவரத்து மீதான ஹூதி தாக்குதல்களுக்கு பதிலடியாக யேமனில் உள்ள 12 இலக்குகள் மீது அமெரிக்க தலைமையிலான கூட்டணி இன்று தாக்குதல்களை நடத்தியது. பதிலடி கொடுப்போம் என ஹூதி துணை வெளிவிவகார அமைச்சர் சபதம் செய்தார். இதற்கிடையில், 145,000 தொன் மசகு எண்ணெய் ஏற்றப்பட்ட செயின்ட் நிகோலஸ் என்ற மார்ஷல் தீவுகளின் கொடியுடன் கூடிய டேங்கரை ஈரானிய கடற்படைப் படைகள் நேற்று கைப்பற்றியதாக ஈரானிய அரசாங்க செய்தி நிறுவனமான IRNA அறிவித்தது. இந்த டேங்கர் ஈராக்கில் உள்ள பாஸ்ராவில் இருந்து புறப்பட்டு துர்க்கியே நோக்கிச் சென்றது, அது ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையில் ஓமன் வளைகுடாவில் நுழைந்த உடனேயே கைப்பற்றப்பட்டது. அதில் 18 பிலிப்பைன்ஸ் மற்றும் ஒரு கிரேக்க குடிமகன் அடங்கிய குழுவினர் உள்ளனர். https://thinakkural.lk/article/287933
  21. Published By: VISHNU 12 JAN, 2024 | 03:19 PM தனியார் தொலைத்தொடர்பு நிலையத்தினால் நடத்தப்பட்ட பண பரிசு குலுக்கலில், பெருந்தொகை பணம் கிடைத்துள்ளது. அந்த பணத்தை பெற்றுக்கொள்ள 18 இலட்ச ரூபாய் வரி கட்ட வேண்டும். அந்த பணத்தை உடனே வைப்பிலிடுங்கள் என கூறி, 18 இலட்ச ரூபாயை மோசடி செய்த குற்றத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு, தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், தன்னை தனியார் தொலைத்தொடர்பு நிலையமொன்றின் பிரதிநிதி என கூறி, தங்கள் நிறுவனத்தால் நடத்தப்பட்ட பரிசு குலுக்கலில் , உங்களுக்கு பெருந்தொகை பணம் விழுந்துள்ளது. அந்த பணத்தினை பெற வரியாக 18 இலட்சம் ரூபாயை செலுத்த வேண்டும். 18 இலட்ச ரூபாயை செலுத்தினால், பரிசு பணத்தினை பெற முடியும் என கூறி, கணக்கிலக்கம் ஒன்றினையும் வழங்கியுள்ளார். அதனை நம்பிய நபர் குறித்த கணக்கு இலக்கத்திற்கு 18 இலட்ச ரூபாய் பணத்தினை வைப்பிலிட்டுள்ளார். அதன் பின்னர் தன்னுடன் தொடர்பு கொண்ட இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்த முயன்ற போது, அந்த இலக்கம் செயலிழந்து காணப்பட்டது. அதனை அடுத்து, குறித்த தனியார் தொலைத்தொடர்பு நிலையத்திற்கு சென்று , விசாரித்த போதே , தான் ஏமாற்றப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், தென்னிலங்கையை சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் மற்றும் தொடர் விசாரணைகளின் அடிப்படையில், கைது செய்யப்பட்ட நபரின் உறவினரான மற்றுமொரு நபரை, மோசடிக்கு துணை போன குற்றச்சாட்டில் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/173787
  22. ஏமனுக்குள் புகுந்து இரான் ஆதரவு பெற்ற ஹூத்திகள் மீது அமெரிக்கா, பிரிட்டன் பல்முனை தாக்குதல் பட மூலாதாரம்,MINISTRY OF DEFENCE/PA WIRE 12 ஜனவரி 2024, 06:35 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்க மற்றும் பிரிட்டன் படைகள் ஏமனில் உள்ள ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் மீது பல்முனை தாக்குதல்கள் நடத்தியுள்ளன. கடந்த நவம்பவர் மாதம் முதல், செங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் மீது ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்தி வரும் தாக்குதல்களுக்கான எதிர்வினையே இது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மக்களை பாதுகாக்கவும், சர்வதேச வர்த்தகத்தை உறுதி செய்யவும், இந்த தாக்குதல்களை தீவிரப்படுத்த தயங்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார். இந்த தாக்குதல்களுக்கு நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா, பஹ்ரைன் ஆதரவு அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஏன் செங்கடலில் தாக்குதல்கள் நடைபெறுகின்றன? கடந்தாண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் தொடங்கியதை அடுத்து, ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தங்கள் தாக்குதல்களை அதிகரித்தனர். இந்த தாக்குதல்களை நடத்தும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தங்களை ஹமாஸ் ஆதரவாளர்கள் என்று அழைத்துக்கொள்கின்றனர். ஏமனின் பெரும்பாலான பகுதிகளை அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இஸ்ரேலை நோக்கி செல்லும் கப்பல்களை குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதாக அவர்கள் தெரிவித்தனர். எனினும், ஹூத்தி கிளர்ச்சியாளர்களால் தாக்கப்பட்ட அனைத்துக் கப்பல்களும் உண்மையில் இஸ்ரேலை நோக்கிச் சென்றதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் இரானின் ஆதரவு பெற்றதாக அறியப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஏமனில் எங்கெல்லாம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன? அக்டோபர் மாதம் முதல் செங்கடலில் சர்வதேச கடல்வழித்தடத்தில் சென்ற 27 கப்பல்களை ஹூத்திகளை தாக்கியுள்ளன என்றும் இதனால் 55 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. பிரிட்டனின் ராயல் விமானப் படையின் போர்விமானங்கள், குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலை நடத்த உதவி புரிந்ததாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல்கள் வரையறுக்கப்பட்டவை, அவசியமானவை மற்றும் தற்காப்புக்கு தேவையான அளவில் நடத்தப்பட்டவை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கடல் வழி சுதந்திர பயணத்துக்கும், தடையில்லா வர்த்தகத்துக்கும் பிரிட்டன் துணை நிற்கும் என்று கூறியிருந்தார். சைப்ரஸிலிருந்து பறந்த, பிரிட்டனின் ராயல் விமானப்படையின் நான்கு டைஃபூன் ஜெட் விமானங்கள் இரண்டு ஹூத்தி இலக்குகள் மீது குண்டு வீசின. இந்த தாக்குதல்கள் ஏமனின் தலைநகர் சனா, செங்கடலில் உள்ள ஏமனின் துறைமுகம் ஹுதயா, தமர் நகரம், சாதா நகரம் ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன. ஜனவரி 11ம் தேதி காலை 2.30 மணியளவில் அமெரிக்க போர்க்கப்பல் தோமாஹாக் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது. அமெரிக்க ஜெட் விமானங்கள் 12க்கும் மேற்பட்ட இடங்களை குறி வைத்து தாக்கின என்று தாக்குதல்கள் குறித்த விவரங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. செங்கடலில் வர்த்தகப் போக்குவரத்தை சீர் செய்ய இந்த தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஹூத்தி வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஹுசைன் அல்-எஸ்ஸி, இந்த அப்பட்டமான தாக்குதல்களுக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார். பட மூலாதாரம்,REUTERS அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லாய்ட் ஆஸ்டின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டு ராணுவ நடவடிக்கைகள் ஹூத்திகளை வலுவிழக்க செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்றன என தெரிவித்திருந்தார். ஹூத்திகளின் ஆளில்லா விமானம், ஆளில்லா கப்பல், தரை வழி தாக்குதல் நடத்தும் ஏவுகணை, கடலோர மற்றும் வான்வழி கண்காணிப்பு கருவிகள் ஆகியவற்றை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவர் விளக்கியுள்ளார். உடல் நலம் குன்றியுள்ள ஆஸ்டின் , மருத்துவமனையிலிருந்து இந்த தாக்குதல்களை நேரடியாக மேற்பார்வையிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஹூத்திகளுக்கு எதிரான பத்து நாடுகள் கூட்டறிக்கை ஆஸ்திரேலியா, பஹ்ரைன், கனடா, டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து, நியூசிலாந்து, தென் கொரியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய அரசுகள் இணைந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன. ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சர்வதேச சமூகத்தின் ஒத்த கருத்து இருப்பதாக கூறும் அந்த அறிக்கை, கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில், செங்கடலில் கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை ஹூத்திகள் நிறுத்த வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சுட்டிக்காட்டியது. ஹூத்திகள் மீது நடத்தப்படும் பல்முனை தாக்குதல்கள், தனிப்பட்ட மற்றும் ஒட்டுமொத்த தற்காப்புக்காக நடத்தப்படுவது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “உலக மிக முக்கியன் கடல்வழிபாதைகளில் ஒன்றில் சர்வதேச வர்த்தகம் மற்றும் சர்வதேச மாலுமிகளின் உயிருக்கு அச்சுறுத்துலாக இருக்கும் ஹூத்திகளின் திறன் மற்றும் சக்தியை வலுவிழக்க செய்யவே இந்த தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன” என்று அந்த அறிக்கையில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. செங்கடலில் நிலவும் பதற்றத்தை தணித்து நிலைமைகளை சீராக்கும் நோக்கில் இந்த தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹூத்திகள் மீது நடத்தப்படும் இந்த தாக்குதல்களுக்கு, அவர்கள் தரப்பிலிருந்து எந்த எதிர்வினையும் வரவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். பட மூலாதாரம்,FAREED KOTB/ANADOLU VIA GETTY IMAGES சவுதி அரேபியா என்ன சொல்கிறது? இதற்கிடையில், செங்கடலில் தாக்குதல்களை அதிகரிக்க வேண்டாம் என்று அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு சவுதி அரேபியா அறிவுறுத்தியுள்ளது. அதன் வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கடலில் பாதுகாப்பான சூழல் நிலவுவதன் முக்கியத்துவத்தை சவுதி அரேபியா உணர்கிறது. ஏமனில் நடைபெறும் பல்முனை தாக்குதல்கள் குறித்து சவுதி அரேபியா கவலைக் கொள்கிறது. எனவே அமெரிக்கா மற்றும் அதன் உடன் நிற்கும் நாடுகள் தாக்குதல்களை தீவிரப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஹூத்திகள் என்ன கூறுகிறார்கள்? ஹூத்திகள் இந்த தாக்குதல்களுக்கு பயப்படவில்லை என்று தெளிவாக தெரிகிறது. ஹூத்தி அதிகாரிகளில் ஒருவர், “அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் கற்பனைக்கு அப்பாற்பட்டு அவர்களின் எதிர்பார்ப்புகளை விக பெரியதாக இந்த போர் இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார். ஹூத்திகளின் செய்தித் தொடர்பாளர் முகமது அப்துல்சலாம், “ஏமனுக்கு எதிரான இந்த தாக்குதல்களுக்கு எந்தவித நியாயமும் கிடையாது. செங்கடல் மற்றும் அரபிக்கடல்களில் சர்வதேச போக்குவரத்துக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது. இஸ்ரேல் கப்பல்கள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீனின் துறைமுகங்கள் நோக்கி செல்லும் கப்பல்கள் மீது தான் தாக்குதல்கள் நடத்தப்பட்டன, அது இனியும் தொடரும். அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தங்கள் தாக்குதல்களினால், பாலத்தீன் மற்றும் காஸாவுக்கு ஆதரவு அளிப்பதை ஏமன் கைவிடும் என்று நினைப்பது தவறு” என்று X தளத்தில் பதிவிட்டிருந்தார். பிற நாடுகள் என்ன கூறுகின்றன? இரான் வெளியுறவுத்துறை அமைச்சகம், ஏமன் மீதான தாக்குதல்களை கண்டித்துள்ளது. “ஏமனின் இறையாண்மையை, பிராந்திய உரிமையை மீறும் செயலாகும். சர்வதேச சட்டங்களையும் இந்த தாக்குதல்கள் மீறுகின்றன. இந்த தாக்குதல்களின் அச்சமும், நிலையற்றத்தன்மையுமே” என்று அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி தெரிவித்துள்ளார். இரானின் ஆதரவு பெற்ற லெபனான் ஆயுதக்குழு ஹிஸ்புல்லாவும் இந்த தாக்குதல்களை கண்டித்துள்ளது. “காஸா மீது சியோனிச எதிரி நடத்திய படுகொலைகளுக்கும் துன்புறுத்தல்களுக்கும் அமெரிக்கா முழு உடந்தை என்பது இந்த தாக்குதல்கள் காட்டுகின்றன” என்று ஹிஸ்புல்லா கூறியுள்ளதாக ராய்டர்ஸ் செய்தி கூறுகிறது. இராக் பிரதமர் அலுவலகம் “இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையிலான மோதலை இந்த பிராந்தியம் முழுவதும் நீட்டிக்கிறது அமெரிக்கா” என்று கூறியுள்ளது. பிரிட்டன் ராணுவத்தின் முன்னாள் தலைவர் லார்ட் டன்னட் பிபிசியிடம் பேசுகையில், இரான் இந்த விவகாரத்தில் முழுமையாக ஈடுபட்டுள்ளது. ஹூத்திகள் மட்டுமல்ல, ஹிஸ்புல்லா, ஹமாஸ் ஆகியவற்றுக்கான ஆதரவையும் வழங்குகிறது. இந்த தாக்குதல்கள் துல்லியமாக கணக்கிடப்பட்டு நடத்தப்படுபவையாக இருந்தால், செங்கடலில் நிலவும் பிரச்னையை துரிதமாக தீர்க்க உதவும். மீண்டும் நமது கவனத்தை இஸ்ரேல் காஸா போரை கட்டுப்படுத்தப்பட்டதாக வைத்திருக்க செலுத்த முடியும்” என்று கூறினார். பிரிட்டன் ஆயுதமேந்தி படைகளின் அமைச்சர் ஜேம்ஸ் ஹேப்பி “நமது நாட்டின், படைகள் மற்றும் அரசு அதிகாரிகள் இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக திட்டமிட்டு நடத்தியுள்ளனர். இதில் நிறைய ஆபத்துகள் இருந்தன. நேற்று இரவு அவர்கள் செய்த காரியத்துக்காக நாம் பெருமைப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார். https://www.bbc.com/tamil/articles/cnd7771x7zko
  23. யேமனில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக அமெரிக்க பிரிட்டன் தாக்குதல் Published By: RAJEEBAN 12 JAN, 2024 | 08:26 AM யேமனில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக அமெரிக்காவும் பிரிட்டனும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. செங்கடல் பகுதியில் ஹெளத்திகிளர்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ள தாக்குதல்களிற்கு பதிலடியாக இந்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார் அமெரிக்க போர்க்கப்பல்கள் குரூஸ் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டன அமெரிக்க விமானங்கள் 12 இலக்குகள் மீது தாக்குதலை மேற்கொண்டன என தகவல்கள் வெளியாகின்றன. யேமனின் தலைநகர் சனா ஹெளத்திகளின் கோட்டையான செங்கடல் நகரம் குடாய்டா ஆகியவற்றின் மீதே தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. சைப்பிரசில் உள்ள தளத்திலிருந்து புறப்பட்ட பிரிட்டனின் போர் விமானங்களும் தாக்குதலை மேற்கொண்டுள்ளன. அவுஸ்திரேலியா கனடா பஹ்ரைன் நெதர்லாந்து உட்பட பல நாடுகள் ஆதரவை வழங்கியுள்ளன. https://www.virakesari.lk/article/173743
  24. Published By: VISHNU 11 JAN, 2024 | 07:32 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நாட்டின் மொத்த சனத்தொகையில் 22,3 வீதமானவர்கள் கடனாளியாகி உள்ளனர். அதில் பெருந்தோட்டங்களில் 42,3 வீதமானவர்கள் கடனாளியாகி உள்ளனர். உழைப்புக்கு ஏற்ற சம்பளம் வழங்கப்படாமையே இதற்கு காரணமாகும் என எம். உதயகுமார் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் மந்தபோசணையை இல்லாது செய்வது தொடர்பில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், அதிகாரமோகம் காரணமாக பல்வேறு சதித்திட்டங்கள் மூலம் மக்களை ஏமாற்றி ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கம் தற்போது நம்பி வாக்களித்த மக்களை நடுத்தெருவில் விட்டுள்ளது. வாழ்க்கைச்செலவு அதிகரித்து மக்கள் தள்ளாடி வருகின்றனர். மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் அறிக்கையின் பிரகாரம் நாட்டில் 30இலட்சத்தி 29ஆயிரத்தி300 குடும்பங்கள் கடனாளி ஆகியுள்ளன.அ தில் 6இலட்சத்தி 97ஆயிரத்தி 300 குடும்பங்கள் தங்களின் அன்றாட உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்கே கடன் பெற்றுள்ளார்கள்.இது பாரதூரமான விடயமாகும். அத்துடன் வாங்கிய கடனை மீள செலுத்துவதற்காக 3இலட்சம் குடும்பங்கள் மீண்டும் கடன்பெற்றுள்ளதாக குறித்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 9இலட்சத்தி 70ஆயிரம் குடும்பங்கள் அடமான முறையில் கடன்பெற்றுள்ளார்கள். வங்கிகளில் 97ஆயிரம் குடும்பங்களும் நிதி நிறுவனங்களில் 2இலட்சத்தி 72ஆயிரத்தி 500 குடும்பங்களும் பண தரகர்களிடமிருந்து 3இலட்சத்தி 3500 குடும்பங்களும் கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் நாட்டின் மொத்த சனத்தொகையில் 22,3 வீதமானவர்கள் கடனாளியாகி உள்ளனர். அதில் நகர் புறங்களில் சுமார் 24,3 சதவீதமானவர்கள் கடனாளியாகி உள்ள நிலையில் பெருந்தோட்டங்களில் அது 42,3 வீதமானவர்கள் கடனாளியாகி உள்ளனர். பெருந்தோாட்டங்களில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லாமையே இதற்கு காரணமாகும். அத்துடன் கடனாளியாகி உள்ளது மாத்திரமல்லாது பெருந்தோட்டங்களில் மந்தபோசணை, வறுமை, போஷாக்கின்மை என்பன அதிகரித்து காணப்படுகிறது. நாட்டுக்காக உழைத்த மலையக பெருந்தோட்ட மக்கள் இன்று கடனாளியாக மாறியுள்ளார்கள் என்றார். https://www.virakesari.lk/article/173738
  25. பட்டியல் சாதி இளைஞரை திருமணம் செய்த பெண்ணை புளியமரத்தில் தூக்கிட்டு கொலை செய்த பெற்றோர் - பிபிசி கள ஆய்வு படக்குறிப்பு, பட்டியல் சாதியைச் சேர்ந்த நவீனும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யாவும் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்தனர் கட்டுரை தகவல் எழுதியவர், பிரபாகர் தமிழரசு பதவி, பிபிசி தமிழ் 11 ஜனவரி 2024 (எச்சரிக்கை: இந்தக் கட்டுரையின் சில உள்ளடக்கங்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக் கூடும்) பட்டியல் சாதியை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்ததற்காக மகளை கொலை செய்து யாருக்கும் தெரியாமல் எரித்த பெற்றோரை தஞ்சாவூர் மாவட்ட போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாளுர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். அவரது மகன் நவீன். இவர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர். இவர் கடந்த 7 ஆம் தேதி வாட்டத்திக்கோட்டை காவல்நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், பக்கத்து கிராமமான நெய்வவிடுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா(19) என்ற பெண்ணை தான் திருமணம் செய்திருந்த நிலையில், பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து கொலை செய்துவிட்டு ஊருக்குள் யாருக்கும் தெரியாமல் சுடுகாட்டிற்கு கொண்டு சென்று எரித்துவிட்டதாக கூறியிருந்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், பெண்ணின் தந்தை பெருமாள் மற்றும் அவரது மனைவி ரோஜா ஆகியோர் இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதை உறுதி செய்து, கைது செய்துள்ளனர். பெருமாளும், அவரது மனைவியும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இச்சம்பவம் தொடர்பாக என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள பிபிசி சார்பில் ஐஸ்வர்யாவின் சொந்த கிராமமான நெய்வவிடுதிக்கும், நவீனின் சொந்த கிராமமான பூவாளுருக்கும் நேரடியாகச் சென்றிருந்தோம். ஐஸ்வர்யா கொலை செய்யப்பட்டது எப்படி? இரண்டு கிராமத்திலும் தற்போதைய நிலவரம் என்ன? காவல்துறையினர் என்ன சொல்கிறார்கள்? படக்குறிப்பு, நவீன் கடந்த இரண்டு வருடங்களாக திருப்பூரில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றினார். என்ன நடந்தது? கடந்த 7 ஆம் தேதி வாட்டத்திக்கோட்டை காவல்நிலையத்தில் நவீன் புகார் கொடுத்துள்ளார். அதன்படி, "பட்டியல் சாதியைச் சேர்ந்த நவீனும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யாவும் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்தனர். நவீன் கடந்த இரண்டு வருடங்களாக திருப்பூரில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றினார். ஐஸ்வர்யா கடந்த ஒன்றரை வருடங்களாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் உள்ள ஒரு தறி மில்லில் பணியாற்றினார். இந்நிலையில், நவீன் பட்டியல் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் ஐஸ்வர்யாவின் அப்பாவும், உறவினர்களும், அவர்கள் இருவரும் காதலிப்பதைத் தெரிந்துகொண்டு அவர்களை பிரிப்பதற்காக திருப்பூர் வருவதாகக் கேள்விப்பட்டு, கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி அவரப்பாளையத்தில் உள்ள விநாயகர் கோயிலில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்" என்று அந்த புகார் மனுவில் நவீன் கூறியுள்ளார். படக்குறிப்பு, ஐஸ்வர்யாவை அவரது தந்தையான பெருமாள், புளியமரத்தடிக்கு இழுத்துச் சென்று தூக்கிட்டு கொலை செய்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர். ஐனவரி 2 ஆம் தேதி, ஐஸ்வர்யாவைத் தேடி பல்லடம் வந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளனர். வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார், ஐஸ்வர்யாவை நவீனிடமிருந்து அழைத்துச் சென்று, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். “மதியம் 2 மணியளவில், ஐஸ்வர்யா, அவரது தந்தை மற்றும் அவரது உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்குள் சென்றனர். அரை மணிநேரம் கழித்து பல்லடம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஐஸ்வர்யாவை அவரது தந்தையும், உறவினர்களும் அழைத்துக்கொண்டு, வெளியே நின்றுகொண்டிருந்த ஒரு காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டனர்,” என நவீன் தனது புகாரில் கூறியுள்ளார். நவீன் புகாரின் அடிப்படையில் பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், ஜனவரி 3 ஆம் தேதி அதிகாலையே ஐஸ்வர்யாவை கொலை செய்துவிட்டு, ஊருக்குள் யாருக்கும் தெரியாமல் சுடுகாட்டில் எரித்துவிட்டது தொடர்பாக தனக்கு தகவல் கிடைத்ததாகவும், அதனை உறுதிப்படுத்திய பின் பயந்துகொண்டு வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். படக்குறிப்பு, ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாளும், அவரது மனைவி ரோஜாவும் கைது செய்யப்பட்ட பின், சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர் ஐஸ்வர்யாவுக்கு என்ன நடந்தது? ஐஸ்வர்யாவின் கிராமமான நெய்வாவிடுதிக்குள் நுழையும்போதே, போலீசார் நடமாட்டத்தை பார்க்க முடிந்தது. தொடர்ந்து போலீசார் வந்து செல்வதால், அப்பகுதியில் உள்ள அனைவரது வீட்டின் கதவுகளும் அடைக்கப்பட்டு இருந்தன. சம்பவம் நடந்ததாகக் கூறப்படும், நெய்வவிடுதி கிராமத்தின் மூலையில் இருந்த ஐஸ்வர்யாவின் வீட்டிற்கு சென்றோம். அங்கு பாதுகாப்பு பணிக்காக அமர்த்தப்பட்டிருந்த போலீசாரோ, யாரையும் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் அனுமதிக்கவில்லை. நவீனின் புகாரை பெற்று வழக்குப்பதிவு செய்த காவல் துறை துணை ஆய்வாளர் நவீன்பிரசாத் கொலை நடந்ததாகக் கூறப்படும் இடத்தை ஆய்வு செய்து கொண்டிருந்தார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், ஐஸ்வர்யா தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தார். விசாரணை முடித்துவிட்டு கிளம்பிய அவரிடம், எங்கே வைத்து கொலை செய்தார்கள் எனக் கேட்க, “அதோ அங்க இருக்கே அந்த புளியமரம், அதில் தான் கயிற்றைப்போட்டு இழுத்திருக்கிறார்கள். தடயங்கள் உள்ளன. அருகில் செல்ல வேண்டாம்,”எனக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார் நவீன் பிரசாத். படக்குறிப்பு, பிபிசி தமிழிடம் பேசிய காவல் ஆய்வாளர் ஐஸ்வர்யா தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தார். தொடர்ந்து, அக்கம் பக்கத்தில் இருக்கும் மக்களிடம் பேச பிபிசி முயற்சித்தது. ஐஸ்வர்யாவின் வீட்டிற்கு அருகில் சிலர், கொலையை பார்த்ததை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், ஐஸ்வர்யாவை அவரின் அப்பா இழுத்துச் சென்றதைப் பார்த்ததாகக் கூறினர். “தேதி ஞாபகம் இல்லை. அது ஒரு இரவு நேரம் தான். ஒரே கூச்சல். அந்த சத்தம் கேட்டுதான் வெளியே வந்து பார்த்தோம். அந்தப் பெண்ணை அப்படியே தரத்தரவென நேராக அந்த புளியமரத்துக்கிட்டத்தான் இழுத்துக்கிட்டு போனார். அதற்குள் என் கணவர் என்னை உள்ளே போகச் சொல்லிவிட்டார்,” என்றார் அந்த பெயர் குறிப்பிட விரும்பாத பெண். ஐஸ்வர்யா கொல்லப்பட்டது எப்படி? இந்த கொலை வழக்கை விசாரித்து வரும் விசாரணை அதிகாரிகளில் ஒருவர் பிபிசி தமிழிடம் பேசினார். அவர், பெருமாளும், அவரது மனைவி ரோஜாவும் கைது செய்யப்பட்ட பின், சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தபோது, கொலை நடந்த நேரத்தில் இருவரும் என்ன செய்தார்கள் என்பதை செய்து காண்பித்ததாகக் கூறினார். “அவர் (பெருமாள்) அந்தப் பெண்ணை காரைவிட்டு கீழே இறங்கியதும் வீட்டிற்குள்கூட அழைத்துச் செல்லவில்லை. நேராக புளியமரத்தடிக்குத்தான் இழுத்துச் சென்றுள்ளார். அங்கு போகும்போதே, மனைவியை நாற்காலியும், கயிறும் எடுத்துவரச் சொல்லியுள்ளார். மனைவி கயிறைக்கொடுக்க, அந்த மரத்தின் கிளையில் கயிற்றைப்போட்டு தூக்கு போடுவதைப்போல சுருக்கு போட்டிருக்கார்,” என விசாரணையின்போது பார்த்ததைப் பகிர்ந்தார் அந்த அதிகாரி. தொடர்ந்து பேசிய அவர், “அப்பாவை மன்னிச்சுருமா. எனக்கு வேற வழி தெரியல. நீயே மாட்டிக்கோமா என மிரட்டியுள்ளார். பின் அந்தப் பெண் கழுத்தில் மாட்டிக்கொள்ள, இவன் கயிற்றின் மறுமுனையைப் பிடித்து, இழுத்து மரத்தில் கட்டியுள்ளார். பின், அந்தப்பெண்ணின் பெரியம்மா ஒருவர் வந்து அந்தக்கயிறை அரிவாளால் வெட்டியுள்ளார்." "அதில், ஐஸ்வர்யா கீழே விழுந்துள்ளார். விழுந்த பெண்ணிற்கு உயிர் இருப்பதை தெரிந்துகொண்டு கழுத்தை நெரித்துக்கொலை செய்துள்ளார். இவை அனைத்தையும் அவனே சம்பவம் நடந்த இடத்தில் செய்து காண்பித்தான். இதைத்தான் வாக்குமூலமாகவும் கொடுத்துள்ளார்,” என்றார் அந்த விசாரணை அதிகாரி. பிபிசியிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத்தும் அதனை உறுதிப்படுத்தினார். “பெண்ணின் தந்தை கொடுத்த வாக்குமூலத்தின்படி, அவர்கள் அந்தப் பெண்ணை தூக்கிலிட்டு, பின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். அவர் கூறிய வாக்குமூலத்தை, மற்றவர்களின் வாக்குமூலங்களோடு ஒப்பிட வேண்டும். இதில், வேறு யாரேனும் ஈடுபட்டுள்ளனரா, இது முன்னதாகவே திட்டமிடப்பட்டு நடந்ததா உள்ளிட்டவையை விசாரித்து வருகிறோம். இது திட்டமிடப்பட்டு இருந்தால், கூடுதலாக சில பிரிவுகளின் கீழ் வழக்கு மாற்றப்படும். ஆனால், அதனை தற்போதே முடிவு செய்ய முடியாது,” என்றார். பள்ளி காலம் முதலே சாதி சொல்லி விலக்கி வைத்த பெற்றோர் இச்சம்பவத்தில், புகார்தாரராகவும், முக்கிய சாட்சியாகவும் உள்ள ஐஸ்வர்யாவின் கணவர் நவீனின் கிராமத்திற்குச் சென்றோம். கிராமத்தின் நுழைவாயிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். “உயர் அதிகாரிகளின் அனுமதியின்றி வெளியாட்கள் உள்ளே செல்லக் கூடாது,” என்றார் பாதுகாப்புக்காக இருந்த அந்த காவல்துறை அதிகாரி. உரிய அனுமதிபெற்று நவீனின் பூவாளுர் கிராமத்திற்கள் நுழைந்தோம். நவீனின் வீட்டிற்கு அருகே சென்றதும் காவல்துறையினர் சுற்றிவளைத்து, காட்சிகள் பதிவு செய்வதற்கு அனுமதி மறுத்தனர். “தற்போது, இரண்டு கிராமங்களுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுவதால், யாரையும் அவர்களின் வீட்டிற்கு அருகே அனுமதிப்பதில்லை,” என்றார் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை அதிகாரி. தொடர்ந்து, காவல்துறையின் விசாரணையில் உள்ள நவீனின் தந்தை பாஸ்கரை வாட்டத்திக்கோட்டை காவல்நிலையத்தில் வைத்து சந்தித்தோம். அப்போது அவர், தன் மகனை ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே எச்சரித்ததாகக் கூறினார். படக்குறிப்பு, இந்தப் பிரச்னைக்கு காரணமே திருமணமானது ஊரில் உள்ள அனைவருக்கும் தெரிந்தது தான் என்றார் பூவாளுரைச் சேர்ந்த பெண். நவீனின் தந்தை பாஸ்கர், பிபிசி தமிழிடம் பேசும் போது, “அவர்கள் இருவரும் வேறு வேறு பள்ளியில்தான் படித்தார்கள். ஆனால், பள்ளிக்கு ஒரே அரசுப்பேருந்தில் செல்லும் போது தான் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே இரு வீட்டாரும் எச்சரித்தோம். பின், எனக்கு பயமாகிவிட்டது. அதனால், அவனை நான் பத்தாம் பகுப்புக்கு மேல் பட்டுக்கோட்டையில் பள்ளிக்கு அனுப்பாமல், வேறு பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் அனுமதித்தேன். ஆனால், கொரோனாவிற்கு பிறகு, அவன் கல்லூரி செல்வதை நிறுத்திவிட்டு, வேலைக்குச் செல்லத் தொடங்கிவிட்டான்,” என்றார் இச்சம்பவத்திற்கு முன், நவீனின் தந்தை பாஸ்கரும், ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாளும் ஒருவருக்கு ஒருவர் தெரிந்தவர்களாகவே இருந்துள்ளனர். “இருவரும் நெருங்கிய நண்பர்கள் இல்லை என்றாலும், பக்கத்து பக்கத்து கிராமம் என்பதால் நல்ல பழக்கம்தான். இந்த சம்பவம் தெரிந்தபோது கூட, இரண்டு பேரும்போய் யாருக்கும் தெரியாமல் அழைத்து வந்துவிடுவோம் என்று என்னை அழைத்தான். ஆனால், அப்போது இவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை,” என்றார் பாஸ்கர். நவீன் - ஐஸ்வர்யா திருமணம் எப்படி ஊருக்கு தெரிந்தது? இந்தப் பிரச்னைக்கு காரணமே திருமணமானது ஊரில் உள்ள அனைவருக்கும் தெரிந்தது தான் என்றார் பூவாளுரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி. “இதுபோன்று பட்டியல் சாதியினர், பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்களை இதற்கு முன்பும் கூட திருமணம் செய்துள்ளனர். அவர்கள் பெரும்பாலும் சில வருடங்களுக்கு ஊருக்குள் வர மாட்டார்கள். ஏன் அவர்கள் திருமணம் செய்தது கூட ஊருக்குள் யாருக்கும் தெரியாது. ஆனால், இவர்கள் விஷயத்தில், இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் வீடியோ வாட்ஸ் அப் மூலம் ஊரில் உள்ள அனைவருக்கும் பரவிவிட்டது. அதுதான் இவ்வளவு பெரிய சம்பவத்திற்கு காரணம்,” என்றார் தமிழ்ச்செல்வி. படக்குறிப்பு, பல்லடம் காவல் நிலைய ஆய்வாளர் முருகையா பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் பல்லடம் காவல் ஆய்வாளர் இடைநீக்கம்: நடந்தது என்ன? பல்லடம் காவல்நிலையத்தில் இருந்து தான் ஐஸ்வர்யா அழைத்துச் செல்லப்பட்டதாகவும், தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாக போலீசார் கூறியதாகவும் நவீன் தனது புகார் மனுவில் கூறியிருந்தார். இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய பல்லடம் டிஎஸ்பி விஜயகுமார், " பெண்ணின் தந்தை பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் ஐஸ்வர்யா மற்றும் நவீனை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்திருந்தோம். ஆனால், நவீன் விசாரணைக்கு ஆஜராகவில்லை. ஐஸ்வர்யாவிடம் நாங்கள் விசாரணை நடத்திய போது அவர் எங்களிடம், நான் என் பெற்றோருடன் ஊருக்கு செல்கிறேன். எங்கள் திருமணம் குறித்து பெற்றோரிடம் பேசி ஒப்புக்கொள்ள வைக்கிறேன் எனக்கூறினார். ஐஸ்வர்யாவின் சம்மதத்தின் பேரில் தான் அவரை பெற்றோருடன் அனுப்பி வைத்தோம். நாங்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கவில்லை," என்றார். 'கொலை மிரட்டல் இருந்ததால் தான் நவீன் விசாரணைக்கு ஆஜராகவில்லையா?' என்ற கேள்வியை டிஎஸ்பி விஜயகுமாரிடம் நாம் முன்வைத்தோம். அதற்கு விளக்கமளித்த அவர், "நவீன் விசாரணைக்கு ஆஜராகியிருந்தால் தானே கொலை மிரட்டல் இருந்ததா இல்லையா என்பது தெரியவரும். அவர் விசாரணைக்கு ஆஜராகவும் இல்லை, கொலை மிரட்டல் இருந்ததாக எதுவும் தெரிவிக்கவில்லை," என்கிறார் அவர். இதற்கிடையில், பல்லடம் காவல் நிலைய ஆய்வாளர் முருகையா பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். https://www.bbc.com/tamil/articles/c3gy2425vg3o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.