Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. இலங்கை தமிழரசுக்கட்சியின் செயலாளரா திருகோணமலையை சேர்ந்த குகதாசன் தெரிவு? Vhg ஜனவரி 27, 2024 இலங்கை தமிழரச கட்சியின் பொதுச் செயலாளராக திருகோணமலை சேர்ந்த குகதாசனை நியமிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று (27-01-2024)காலை திருகோணமலையில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்தக் கூட்டத்தில் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://www.battinatham.com/2024/01/blog-post_8929.html
  2. கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு ‘Man of East’ பட்டம் - 14 சிவில் அமைப்புகள் இணைந்து கௌரவப் பட்டம் Rizwan Segu MohideenJanuary 27, 2024 கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் சேவையை பாராட்டி ‘Man of East’ எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (25) திருகோணமலையில் இடம்பெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கிழக்கு மாகாண ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கிழக்கில் உள்ள 14 சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் சேவையை பாராட்டி ‘Man of East’ என்ற பட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழர் பேரவை, மக்கள் மறுமலர்ச்சி மன்றம்,பசுமை இல்லம், புதிய உதயம், பெண்கள் உதவி அறக்கட்டளை RI Association, திருக்கோணமலை மாவட்ட வணிக சங்கங்கள் உட்பட பல அமைப்புகள் இணைந்து ‘Man of East’ என்ற பட்டத்தை செந்தில் தொண்டமானுக்கு வழங்கி வைத்துள்ளனர். கிழக்கு மாகாணத்தில் பல வருட காலமாக பல ஆளுநர்கள் இருந்த போதிலும் அவர்கள் செய்யாத பல வேலைதிட்டங்களை 5 மாத கால கட்டத்தில் செய்து முடித்தமைக்காகவும், ஆளுநரின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்வு உலக சாதனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டமைக் காகவும் இவ்விருது வழங்கி வைக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து மதத்தவர்களும் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் விழாவை சிறப்பித்தனர். https://www.thinakaran.lk/2024/01/27/breaking-news/38656/கிழக்கு-ஆளுநர்-செந்தில்-4/
  3. பாடகி பவதாரிணி உடல் சொந்த ஊரில் இன்று நல்லடக்கம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த இளையராஜாவின் மகள் பவதாரிணி, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. சென்னை விமான நிலையம் வந்தடைந்த பவதாரிணி உடல் தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு பவதாரிணியின் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதைப்போல நடிகர்கள் சிவகுமார், ராமராஜன், விஷால், கார்த்தி, சிம்பு, விஜய் ஆண்டனி, விஷ்ணு விஷால், சதீஷ், ஆனந்த்ராஜ், உதயா, விஜய்யின் தாயாரும், பாடகியுமான ஷோபா சந்திரசேகர்,காயத்ரி ரகுராம் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். மேலும் டைரக்டர்கள் எஸ்.பி.முத்துராமன், மணிரத்னம், மிஷ்கின், லிங்குசாமி, ஆர்.கே.செல்வமணி, எழில், வெங்கட் பிரபு, வெற்றிமாறன், சீனு ராமசாமி, சுதா சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், கவிஞர் முத்துலிங்கம் உள்ளிட்ட பிரபலங்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். ஏராளமான பொதுமக்களும் பவதாரணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பவதாரிணியின் மறைவுக்கு நடிகர்கள் கமல்ஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தெலுங்கு முன்னணி நடிகரும் ஜனசேனா கட்சித்தலைவருமான பவன் கல்யாண் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் அஞ்சலியை தொடர்ந்து, பவதாரிணியின் உடல் நேற்று இரவு அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு லோயர் கேம்ப் பகுதியில் இளையராஜாவின் அம்மா சின்னத்தாய் மற்றும் மனைவி ஜீவாவின் சமாதி அருகே பவதாரிணியின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.((15) http://www.samakalam.com/பாடகி-பவதாரிணி-உடல்-சொந்/
  4. யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட கலையரங்கில் யாழ்ப்பாண சட்ட மாநாடு! adminJanuary 27, 2024 “நெருக்கடிகளுக்கூடான வழிகள்” என்னும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத் துறை, இந்தியாவின் சுரனா மற்றும் சுரனா சர்வதேச வழக்கறிஞர்கள் நிறுவனத்துடன் இணைந்து இன்றைய தினம் சனிக்கிழமை (27.01.24) மற்றும் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை (28.01.24) ஆகிய இரு நாட்களும் இந்த மாநாட்டை நடாத்துகின்றது. இம்மாநாட்டின் நோக்கங்களாக சட்டப் பரப்பில் அதிகம் பேசப்படாத விடயங்ளைப் பேசுதல், பன்மைத்துவ ஆய்வை ஊக்குவித்தல், அவ்வகை ஆய்வு முயற்சிகளை கலந்துரையாடுவதற்கான களமொன்றை அமைத்தல், சட்டப் புலமையாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரையும் அவர்களின் ஆய்வுச் சிந்தனைகளையும் ஒன்றிணைத்தல், எழுத்திலுள்ள சட்டத்திற்கும் அதன் செயற்பாட்டிற்குமான இடைவெளியைக் குறைத்தல், சட்ட மாணவர்களுக்கு சடடத்துறை சார் ஆய்வுச் சிந்தனைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் துறைசார் நிபுணர்களுடனான வலையமைப்பை ஏற்படுத்தல் ஆகிய பல்வேறு நோக்கங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்றைய ஆரம்ப நிகழ்வில் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம், ஐக்கிய நாடுகளின் முன்னாள் நேருதவிச் செயலாளரும் சிறுவர் மற்றும் ஆயுத முரண்பாடு தொடர்பான செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியுமான கலாநிதி ராதிகா குமாரசுவாமி, ஜனாதிபதி சடடத்தரணி கலாநிதி கனகேஸ்வரன், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் சொர்ணராஜா, கலாநிதி ஆறு திருமுருகன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி கலாநிதி சி.ரகுராம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கோசலை மதன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். https://globaltamilnews.net/2024/200139/
  5. தமிழரசு எம்முடன் இணைய வேண்டும் adminJanuary 26, 2024 இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகப் பதவியேற்றதன் பின்னர் சிவஞானம் சிறிதரன் ஐக்கியத்தைப் பற்றிப் பிரஸ்தாபித்திருப்பதை வரவேற்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியராகிய நாம், இலங்கைத் தமிழரசுக் கட்சியும் எம்முடன் இணைந்து பயணிக்க முன்வரவேண்டும் என்றும் வேண்டுகிறோம் என அழைப்பு விடுத்துள்ளது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் அதன் பேச்சாளர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் சிவஞானம் சிறிதரனுக்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது. தந்தை செல்வா அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, இராஜவரோதயம், ராசமாணிக்கம், வன்னியசிங்கம், நாகநாதன், அமிர்தலிங்கம் போன்றோரால் தலைமை தாங்கப்பட்டு, தமிழ் மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த பாரம்பரியமிக்க ஒரு கட்சியின் தலைவராக நீங்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றீர்கள் தமிழரசுக் கட்சி தனித்து நின்று, தனது கோரிக்கைகளை வெல்ல முடியவில்லை என்ற காரணத்தினால் இலங்கைத் தமிழரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போன்றவை இணைந்து, தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கிய பாரம்பரியமும் தந்தை செல்வா தலைமையில் நடைபெற்றது. இவ்வாறு தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக 1976ஆம் ஆண்டிலிருந்து தனது கட்சியான தமிழரசுக் கட்சியை முன்னிலைப்படுத்தாமல், தமிழர் விடுதலைக் கூட்டணி என்பதே தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடும் ஓர் ஐக்கிய முன்னணி என்பதை தந்தை செல்வா அடையாளம் காட்டினார். அதன் பின்னர், 1985ஆம் ஆண்டில் பூட்டான் நாட்டின் தலைநகரான திம்புவில் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலைப் புலிகள், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழப்புரட்சி அமைப்பு ஆகியோர் இணைந்து திம்பு கோட்பாடு எனப்படும் நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தனர். அதுவே தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடைப்படையாகக் கொள்ளப்படுகின்றது. 2002ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகியவை இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் செயற்பட்டு வந்தனர். தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக விடுதலைப் புலிகள் ஆயுதப்போராளிகளாக செயற்பட்ட வேளையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக வழிமுறையில் தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தினை முன்னெடுத்திருந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் அனுசரணையுடன் செயற்பட்டு வந்தார்கள். சம்பந்தனால் தலைமையேற்று நடாத்தப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் நிலவிய பல்வேறு முரண்பாடுகள் காரணமாக அதில் இணைந்திருந்த பல கட்சிகளும் தனிநபர்களும் வெளியேறியது மாத்திரமல்லாமல், இறுதியில் 2023ஆம் ஆண்டு நடைபெற இருந்த உள்ளுராட்சித் தேர்தல்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தாங்கள் தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற காரணத்திற்காக, அவர்களும் கூட்டமைப்பிலிருந்து வெளியேறினார்கள். அதன் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயலிழந்துள்ளது. இந்த நிலையில் ஈபிஆர்எல்எவ், ரெலோ, புளொட், தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயக போராளிகள் ஆகியோர் இணைந்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்ற ஒரு ஐக்கிய முன்னணியை அமைத்துள்ளோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான ஒரு யாப்போ அமைப்பு வடிவமோ இல்லாத காரணத்தால் கூட்டமைப்பிற்குள் பல்வேறு முரண்பாடுகள் அவ்வப்போது தோற்றம் பெற்றது. இவற்றை நிவர்த்தி செய்யும்பொருட்டு, நாம் உருவாக்கிய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்காக ஒரு யாப்பு வரையப்பட்டிருக்கின்றது. அது தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்யப்பட்டும் இருக்கின்றது. இந்தக் கூட்டணிக்கென்று குத்துவிளக்கு சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. .இந்த ஐக்கிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கி, யாப்பின் அடிப்படையில் நிறைவேற்றுக்குழுவையும் கட்சிக்கான கட்டமைப்பையும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காலத்தின் தேவை கருதி, 2002ஆம் ஆண்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டபோதும் அதனைப் பதிவு செய்ய வேண்டும் என்று அதில் அங்கம் வகித்த பல்வேறு கட்சிகள் தொடர்ந்தும் கோரிக்கைகளை வைத்தபோதும் தமிழரசுக் கட்சி அதற்கு செவிசாய்க்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது 22வருட காலமாக தமிழ் மக்களுக்காகப் போராடும் ஒரு அரசியல் கட்சியாக தன்னை நிறுவனப்படுத்திக்கொள்ளாமல், தேர்தல் காலங்களில் கூட்டாகவும் பின்னர் தமிழரசுக் கட்சியாக முடிவெடுத்துச் செயற்படுவதுமே இன்றுவரை தொடர்கின்றது. இதன் காரணமாகவே இடைப்பட்ட காலங்களில் பல கட்சிகளும் அதிலிருந்து வெளியேறின. இந்த நிலையில் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் சிவஞானம் சிறிதரன் அவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியோரை ஒன்றிணைத்து 2009ஆம் ஆண்டிற்கு முன்பிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை ஊடகங்களினூடாக வெளிப்படுத்தியுள்ளார். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளும் தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் ஒருவலுவான அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதில் தீர்க்கமான சிந்தனையுடன் பயணிக்கின்றது. இதன் அடிப்படையில்தான் ஒரு வருடத்திற்கு முன்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி உருவாக்கப்பட்டு, அது இன்றுவரை தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. இவ்வாறான ஒரு சூழ்நிலையில், புதிய புதிய அமைப்புகள் தொடர்பாக சிந்திப்பதை விடுத்து, ஏற்கனவே செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஐக்கிய முன்னணியில் தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியப் பரப்பில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஏனைய கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் என்று விரும்புகிறோம் – என்றுள்ளது. https://globaltamilnews.net/2024/200129/
  6. பெண் எழுத்தாளருக்கு, 83.3 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு வழங்க, டிரம்பிற்கு உத்தரவு! adminJanuary 27, 2024 பெண் எழுத்தாளர் ஒருவர் தொடர்ந்த அவதூறு வழக்கில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 83.3 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என நியூயோர்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க பெண் எழுத்தாளர் ஜீன் கரோல் என்பவர் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். கடந்த 1996-ம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள வணிக வளாகத்தில் உடை மாற்றும் அறையில் டிரம்ப் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜீன் கரோல் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த டிரம்ப், தனது சமூக வலைதளத்தில் ஜீன் கரோலை விமர்சித்து பல்வேறு பதிவுகளை வெளியிட்டார். இந்நிலையில் டிரம்புக்கு எதிராக நியூயோர்க் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த ஜீன் கரோல், தனக்கு 10 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க டிரம்புக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர். இதன்படி, எழுத்தாளர் ஜீன் கரோலுக்கு நஷ்ட ஈடாக டொனால்டு டிரம்ப் 83.3 மில்லியன் டொலர் வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். எழுத்தாளர் ஜீன் கரோல் கேட்டதை விட சுமார் 10 மடங்கு அதிக தொகையை இழப்பீடாக வழங்க டிரம்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணையின்போது, தீர்ப்பை வாசிப்பதற்கு முன்னதாகவே நீதிமன்றில் இருந்து டிரம்ப் வெளியேறினார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “இது அமெரிக்கா இல்லை” என்று கூறிவிட்டுச் சென்றார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த தீர்ப்பு டிரம்புக்கு பின்னடைவை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். https://globaltamilnews.net/2024/200144/
  7. காற்றில் கலந்த கீதமே…! Jan 26, 2024 11:15AM IST பவதாரிணி. திரையிசைப் பின்னணிப் பாடகிகளில் தனித்துவமான குரலுக்குச் சொந்தக்காரர். இசைஞானி இளையராஜாவின் வாரிசுகளில் ஒருவர். தந்தையை, சகோதரர்களைப் போன்று இசையமைப்பிலும் ஈடுபட்டவர். அவ்வப்போது அவரிடம் இருந்து இசை வெளிப்பட்டாலும், அவை அனைத்தும் நம் மனதில் என்றென்றும் ரீங்காரம் இடும் வகையில் இருக்கும். கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2024 ஜனவரி 25 ஆம் தேதியன்று மரணமடைந்தார் பவதாரிணி. அந்தத் தகவல் அறிந்ததும் பதைபதைத்த ரசிக மனங்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. அந்தக் கணத்தில் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் நம் நினைவுக்குள் வந்துபோனது. பதின்ம வயதின் சில்லிப்பு சில பாடல்களைக் கேட்கையில், ‘இதைப் பாடியது அவரா, இவரா’ என்று சில கலைஞர்கள் குறித்த எண்ணங்கள் அலைமோதும். அந்தக் குரலில் தென்படும் தனித்துவத்தைத் தனியாகக் கண்டறிந்து, அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் ‘போதும் போதும்’ என்றாகிவிடும். பின்னணி பாடுவதற்கென்று ஒவ்வொரு காலகட்டத்திலும் வகுக்கப்பட்ட வரையறைகளுக்குள் அந்தக் குரல்கள் அடங்கியிருப்பதும் அதற்கொரு காரணம். அதில் இருந்து விலகிச் சட்டென்று ரசிகர்கள் அடையாளம் காணும் குரல்களில் ஒன்று பவதாரிணியுடையது. பவதாரிணி பின்னணி பாடகியாக முதன்முறையாக அறிமுகமானது, ராசய்யா படத்தில் இடம்பெற்ற ‘மஸ்தானா மஸ்தானா’ பாடல் வழியாகத்தான். தமிழ் ரசிகர்கள் அவரைக் கண்டறிந்த பாடல் அதுவே. அதற்கு முன்னரே, ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ படத்தில் ‘தித்தித்தை தாளம்’ என்ற பாடலை அவர் பாடியிருக்கிறார். இவ்விரு பாடல்களில் ‘தித்தித்தை தாளம்’ பாடலில் அவரது குரலில் ஒரு இளம்பெண்ணின் தொனி தென்படும். ஆனால், ‘மஸ்தானா மஸ்தானா’ தொட்டுப் பல பாடல்களில் பதின்ம வயதின் சில்லிப்பை உணர முடியும் என்பது ஒரு ஆச்சர்யமான விஷயம். அதுவே, அவரது குரலின் மிக முக்கியமான சிறப்பம்சமாகவும் உள்ளது. அலெக்சாண்டர் படத்தில் வரும் ‘நதியோரம் வீசும் தென்றல்’, கருவேலம் பூக்கள் படத்தில் இடம்பெற்ற ‘பல்லக்கு வந்திருக்கு’, காதலுக்கு மரியாதையில் உள்ள ‘என்னைத் தாலாட்ட வருவாளா’, ‘இது சங்கீதத் திருநாளோ’, ‘ஓ பேபி பேபி’, அழகியில் வரும் ‘ஒளியிலே தெரிவது தேவதையா’, ப்ரெண்ட்ஸ் படத்தின் ‘தென்றல் வரும் வழியைப் பூக்கள் அறியாதா’ உட்படப் பல பாடல்களில் அந்த சில்லிப்பை உணர முடியும். அப்பாடல்களில் பதின்ம வயதுக்குரிய பெண்ணின் துடிப்போடு, அவ்வயது ஆண் மகனின் குரலில் இருக்கும் வன்மையின் சிறு துளியும் நிறைந்திருக்கும். ஆனால், அவற்றைப் பகுத்துப் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு அப்பாடல்களின் கட்டமைப்பு நம் மனதில் இன்னொரு உலகை விரியச் செய்யும். காற்றில் வரும் கீதமே ’ஒருநாள் ஒரு கனவு’ படத்தில் இடம்பெற்ற ‘காற்றில் வரும் கீதமே’ பாடல் இளையராஜா பிரியர்களின் பேவரைட் பாடல்களில் ஒன்று. மலரினும் மெல்லிய என்ற பதம் சொல்லப்படுமே, அத்தகைய ஒன்றை அப்பாடலில் கேட்கலாம். தன்னை முழுவதுமாகச் செலுத்திக் கலையை வெளிப்படுத்துபவரால் மட்டுமே நிகழ்த்த முடிகிற மாயாஜாலம் அது. சில பாடல் கச்சேரிகளில் அதனை பவதாரிணி பாடுகிறபோது, அக்குரலில் கொஞ்சம் வெட்கம் தெரியும். அதுவே கூட, அவர் இசையமைப்பிலும் பாடுவதிலும் நிறைய பங்களிக்காமல் போனதற்குக் காரணமாக இருக்கலாம். தனது படைப்பைக் கொடுத்துவிட்டு, ரசிகர்களிடம் இருந்து விலகி நிற்கும் விருப்பம் கூட அவரிடம் இருந்திருக்கலாம். தந்தை மட்டுமல்லாமல் கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா என்று சகோதரர்கள் இசையிலும் பாடியிருக்கிறார் பவதாரிணி. கார்த்திக் ராஜாவின் இசையில் ‘முத்தே முத்தம்மா’, ‘நடனகலாராணி’, ’மடோனா பாடலா நீ’, ‘அடி ரெண்டே காலுல மான்குட்டி’, ‘முட்டைக்குள்ள இருக்கும்போது’ உட்படப் பல பாடல்களைத் தந்திருக்கிறார். அதேபோல, யுவன் இசையில் ‘ஆல் தி பெஸ்ட்’ தொடங்கி ’பூத்தது பூத்தது மனது’, ‘நீ இல்லை என்றால்’, ‘சடுகுடு ஆடாதே’, ‘மெர்க்குரி பூவே’ என்று நிறைய பாடியிருக்கிறார். அப்பாடல்கள் அனைத்தும், அவரது குரலால் தனிக்கவனத்தைப் பெறுவதாக இருக்கும். பிற இசையமைப்பாளர்களைப் பொறுத்தவரை சிற்பி, தேவா, ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடியிருக்கிறார். அப்பாடல்களும் கூட திரும்பத் திரும்பக் கேட்டு ரசிக்கும் ரகத்தில் சேர்பவை. ’மித்ர மை ப்ரெண்ட்’, ‘வெள்ளச்சி’ உட்பட பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைப்பு செய்திருக்கிறார். அனைத்துக்கும் மேலே, யுவனின் தொடக்க காலத்தில் அவருக்கான இசை வழிகாட்டியாகவும் திகழ்ந்திருக்கிறார். மிக முக்கியமாக, வெகு அரிதாகத் தன் குடும்பத்தினரோடு மேடையில் பார்க்கும் தருணங்கள் ரசிகர்களுக்கு வாய்த்திருக்கின்றன. அப்போதெல்லாம், அவர்களை ஒன்றிணைக்கும் இழையாகவும் அவர் திகழ்ந்ததை உணரலாம். இப்படிப் பவதாரிணியை நினைவூட்டும் விஷயங்கள் நிறைய, அவரது குடும்பத்தினருக்கு, இணைந்து பணியாற்றியவர்களுக்கு, நட்பு வட்டத்தில் இருந்தவர்களிடம் கொட்டிக் கிடக்கும். வழிந்தோடும் குதூகலம் திரைப்படங்களைப் பார்க்கையில் ரசிகர்களைக் குதூகலம் தொற்றுவதென்பது மிக முக்கியமானது. அந்த தருணங்கள் தான் திரையோடு ஒருவரைக் கட்டிப் போடுகிறது. அது சரியாக நிகழ்ந்தால், அந்த படைப்பும் கொண்டாடப்படும். அவற்றோடு சம்பந்தப்பட்ட கலைஞர்களைக் கொண்டாடித் தள்ளுவார்கள் ரசிகர்கள். தனது குரலின் வழியே, அப்படியொரு குதூகலத்தையும் கொண்டாட்ட மனநிலையையும் உருவாக்கியவர் பவதாரிணி. தன்னில் இருந்து வெளிப்பட்ட இசையின் வழியாக அதைச் சாதிக்க வேண்டுமென்ற விருப்பத்தின் பிரதிபலிப்பாகவே அதனைக் கருத வேண்டியிருக்கிறது. மிகக்குறைவான படைப்புகளில் அவர் பங்களிப்பு அமைந்திருந்தாலும், அவற்றில் ஒன்றைக் கூட நம்மால் விலக்கி வைக்க முடியாதென்பது அவரது சிறப்புகளில் ஒன்று. ‘டைம்’ படத்தில் இடம்பெற்ற ‘தவிக்கிறேன் தவிக்கிறேன்’ பாடலில் ‘காலமே காலமே காலத்தால் அழியா வாழ்வு கொடு’ என்ற வரிகளைப் பாடியிருப்பார் பவதாரிணி. தெரிந்தோ தெரியாமலோ அது அவரது வாழ்வுக்கும் பொருந்திப்போனதை என்னவென்று சொல்வது?! https://minnambalam.com/cinema/singer-and-composer-bhavatharinis-best-songs-and-moments/
  8. விதியே, விதியே, தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய்? January 25, 2024 — கருணாகரன் — இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகச் சிவஞானம் சிறிதரன் தெரிவு செய்திருப்பதை அடுத்து அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறு கருத்துகள் முன்வைக்கப்படுவதொன்றும் புதியதுமல்ல. பெரியதுமல்ல. அரசியற் கட்சிகளின் விடயங்கள் என்றால் பொதுப்பரப்பில் அதைப்பற்றிய உரையாடல்கள் நிகழ்வதுண்டு. ஆகவே இதொரு சாதாரணமான விடயம். ஆனால், இதைக் கடந்து இந்தக் கருத்துகளின் பின்னால் செயற்படுகின்ற உளநிலையும் அரசியற் காரணங்களும் முக்கியமானவை. இதற்கு அடிப்படையாகச் சில காரணங்கள் உண்டு. 1. இதற்கு முன்னெப்போதும் தமிழரசுக் கட்சியின் தலைமைக்கான போட்டி இப்படிப் பகிரங்க வெளியில் நடந்ததில்லை. இப்போதுதான் அது முதற்கடவையாக இந்த நிலைமையைச் சந்தித்திருக்கிறது. அதற்குக் கட்சிக்குள் நிலவும் உட்பலவீனங்கள் காரணமாகும். ஆனாலும் இதொரு சாதாரணமான உட்கட்சி விடயமே. இதைப்போல, தமிழ்நாட்டில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், இலங்கையில் ஐ.தே.க, சு.க போன்ற பெருங்கட்சிகளுக்கும் தலைமைப் போட்டிகள் நடந்ததுண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைமைப் போட்டியில் நீதி மன்றம் வரையில் சென்றது. அப்படிச் சில கட்சிகளுக்குள் சில சந்தர்ப்பங்களில் நிகழ்வது வழமை. கட்சியின் அரசியல் யாப்பே இதை உரைக்கிறது. இதையெல்லாம் உணர்ந்து கொள்ளாமல் அல்லது இதைத் தெரிந்து கொண்டும் இந்தப் போட்டியை ஏதோ தேசிய அளவிலான ஒரு போட்டிபோலக் காட்டியதால் – ஊதிப் பெருப்பித்ததால் ஏற்பட்டதே இந்தப் பரபரப்பு. 2. இதைப் பெரிய விவகாரமாக்கி, ஊதிப்பெருப்பிக்கக் காரணமாக இருந்த தரப்புகள், ஊடகங்களும் தமிழ்ப் பத்தியாளர்களுமாகும். காரணம், ஏற்கனவே இருக்கின்ற தமிழ்த்தேசிய அரசியற் கட்சிகளிடத்தில் காணப்படுகின்ற போதாமை உணர்வே இந்தத் தரப்புகளை தமிழரசுக் கட்சியின் தலைமைப் போட்டியின்மீது கவனத்தை உண்டாக்கியது. ஏற்கனவே தலைமைப் பொறுப்பிலிருந்த மாவை சேனாதிராஜாவும் கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் திரு. சம்மந்தனும் முதுமை மற்றும் செயலின்மை காரணமாக கட்சியையும் அரசியலையும் மந்த நிலைக்குள்ளாக்கி விட்டனர் என்று பலராலும் கருதப்பட்டது. மறுபக்கத்தில் கஜேந்திரகுமார், விக்கினேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் போன்றோர் தமிழ்த்தேசியவாத அரசியலைத் தீவிரமாகப் பேசினாலும் அதற்கான கட்டமைப்பு – செயற்பாட்டு விளைவு போதாதிருக்கிறது என்ற உணர்வு பலரிடத்திலும் காணப்பட்டது. அந்தப் போதாமை உணர்வென்பது எதிர்ப்பரசியலின் மீதான நாட்டத்தினால் ஏற்பட்டது. ஆக இன்று ஈழத்தமிழ் அரசியல் வெளியானது எதிர்ப்பரசியலிலேயே மையம் கொண்டுள்ளது. அதனுடைய விளைவே இதுவாகும். 3. இன்னொரு நிலையில் இன்னொரு சாரார், தீவிர எதிர்ப்பரசியலுக்குப் பதிலாக மென்போக்கான முறையில் பலரோடும் பேசக்கூடியவாறு தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். அவர்களே சம்மந்தன், சுமந்திரன், சாணக்கியன் போன்றோரை ஆதரிக்கின்றனர். ஆனாலும் அந்தத் தரப்பு பொதுவெளியில் இன்னும் பலமடையவில்லை. 4. ஆகவே மென்போக்கான முறையில் பன்மைத்துவத்தோடு கட்சியின் கொள்கையைக் கொண்டு செல்ல வேண்டும் என்று ஒரு சாராரும் (சுமந்திரனை ஆதரிப்போர்) அப்படியல்ல, தமிழரின் அரசியலை, விட்டுக் கொடுப்புகளற்ற முறையில் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என்று மறுசாராரும் (சிறிதரனை ஆதரிப்போரும்) கருதுவதால் ஏற்பட்டுள்ள எதிரெதிர் முனைப்புகளால் இந்தப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 5. எப்போதும் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாகவே சிறிதரன் இருப்பதாகும். மட்டுமல்ல, கட்சிக்கு உள்ளும் வெளியிலும் ஒரு தொகுதியினரின் எதிர்ப்புகள் அவருக்கு உண்டு என்பதால் ஏற்பட்ட அலைகள். அதைப் போல அவரைத் தீவிர நிலையில் ஆதரிப்போரும் உண்டு. இதனால் உண்டாகும் உள் – வெளி முரண்கள் வெளித்தெரிகின்றன. 6. சிறிதரன் முன்னெடுக்க முயற்சிக்கின்ற அரசியலானது, கஜேந்திரகுமார் முன்னெடுத்து வரும் அதிதீவிரவாத அரசிலை ஒத்திருப்பதால், இரண்டு அரசியற் தரப்புகளுக்குமிடையில் முன்னரைப்போல (இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் – இலங்கைத் தமிழரசுக் கட்சி மோதல் அல்லது ஜீ.ஜீ.பொன்னம்பலம் – எஸ்.ஜே.வி. செல்வநாயகம் மோதல்) இரு தரப்புப் போட்டிகள், உரசல்கள், மோதல்களைக் கொண்டிருக்கும் என்பது. இதனுடைய விளைவுகள் அவ்வளவு நல்லதாக அமையாது என்ற உணர்வினால் எழும் அச்சம் இந்த விவாதங்களைக் கிளப்பியுள்ளது. 7. சிறிதரன் முன்னெடுக்க விரும்பும் அரசியலானது, தமிழரசுக் கட்சியின் காலாவதியாகப் போன அரசியல் மட்டுமல்ல, விடுதலைப் புலிகளின் தொடர்ச்சி போன்ற பாவனையைக் கொண்டிருக்கிறது என்ற தோற்றப்பாட்டைக் கொண்டது என்பதால் இரண்டும் நிகழ்காலத்திற்கோ எதிர்காலத்திற்கோ உரியதல்ல என்பதால் எழுந்துள்ள கருத்துகள். 8. புலிகளைப் போற்றிப்பாடித் தன்னுடைய அரசியல் வழிமுறையை முன்னெடுப்பதாகக் காட்டிக் கொண்டாலும் புலிகள் மேற்கொண்ட அரசியற் கொள்கை, அவர்களுடைய செயற்பாடுகள், அவர்கள் உருவாக்கிய நடைமுறை போன்றவற்றுக்கு அப்பாலேயே சிறிதரன் நிற்கிறார் என்பது. அதாவது அவர் புலிகளின் பிரதிநிதிபோல நாடகமாடுகிறார் என்பது. இல்லையென்றால் குறைந்த பட்சம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்ளாள் உறுப்பினர்கள், அவர்களுடைய இயக்கத்தைச் சேர்ந்த மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கான இடம் இனி அளிக்கப்படுமா என்று எழுகின்ற கேள்வி. 9. விடுதலைப் புலிகளின் தொடர்ச்சியைப் பேணும் அரசியலுக்கு தென்னிலங்கையிலும் பிராந்திய ரீதியாக இந்தியா, சீனா மற்றும் சர்வதேச ரீதியில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகின் அங்கீகாரமும் கிடைக்குமா என்ற கேள்விகள். இவ்வாறு பல கேள்விகளும் அடிப்படைக் கருத்து நிலைகளும் தமிழரசுக் கட்சியின் மீதும் அதனுடைய தலைமை (சிறிதரனின்) மீதும் முன்வைக்கப்படுகின்றன. ஈழத் தமிழரின் அரசியல், ஆயுதப் போராட்டத்துக்கு முன்பும் ஆயுதப் போராட்டத்துக்குப் பின்பும் தமிழரசுக் கட்சியின் கைகளில்தான் இருந்தது, இருக்கிறது. அதற்கான தகுதி அதற்கு இருக்கிறதோ இல்லையோ வரலாற்றுச் சூழல் அப்படித்தான் அமைந்துள்ளது. இதற்கு இன்று தமிழ் அரசியல் பரப்பிலுள்ள ஏனைய சக்திகளின் பலவீனமும் ஒரு காரணமாகும். விடுதலைப் புலிகளால் பல கட்சிகளையும் இயக்கங்களையும் இணைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற கட்டமைப்பு உருவாக்கப்பட்டாலும் அதற்குத் தமிழரசுக் கட்சியே தலைமை தாங்கும் நிலை வளர்ந்தது. இதற்கு மாறாக தமிழரசுக் கட்சியின் திமிர்த்தனத்தினால் (ஜனநாயக முரண்பாடுகளால்) ஏனைய கட்சிகள் வெளியேறினாலும் அவற்றினால் தமிழரசுக் கட்சியை மீறி நிற்க முடியவில்லை. இவ்வளவுக்கும் தமிழரசுக் கட்சியின் பாராம்பரியத் தொடர்ச்சியைக் கொண்டவர்கள் இன்றில்லை. புதியவர்களே அதற்குத் தலைமை ஏற்றுள்ளனர். இருந்தும் ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களால் (அவர்களுக்கு நீண்டதொரு செயற்பாட்டு அரசியற்பாரம்பரியம் – விடுதலை இயக்க அரசியல் வழித் தொடர்ச்சி இருந்தாலும்) தமிழரசுக் கட்சியின் இந்தப் புதிய முகங்களை எதிர்கொள்ள முடியாமலே உள்ளனர். இவ்வளவுக்கும் தமிழரசுக் கட்சி செயற்பாட்டுத் தளத்தில் மிகப் பலவீனமானது. அதற்கு 75 ஆண்டுகாலப் பாரம்பரியமிருந்தாலும் அதனால் நிகழ்கால அரசியலையோ எதிர்காலத்துக்கான அரசியலையோ முன்னெடுக்கக் கூடிய சிந்தனைத் திறன் (கொள்கை), செயற்பாட்டுத் திறன் எதுவும் இல்லை. தமிழ் மக்களுடைய அரசியல் விடுதலைக்கும் சமூக மேம்பாட்டுக்கும் எந்த வகையிலும் பயன்தராத, பங்களித்திருக்காத, பங்களிக்கவே முடியாத நிலையில்தான் அது இன்னமும் உள்ளது. உண்மையில் திரு. S.J.V.செல்வநாயகம் காலத்துக்குப் பிறகு அது தேவையற்ற ஒன்றாக ஆகி விட்டது. அதாவது அது காலாவதியாகி (Expired) விட்டது. அதைச் செல்வநாயகமே “தமிழ் மக்களை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று பகிரங்கமாக வெளிப்படுத்தியுமிருந்தார். அதைச் சற்று வேறுவிதமாக்கி தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற புதிய லேபிளில் வைத்திருந்தார் திரு. அ. அமிர்தலிங்கம். அதுவும் பின்னர் செல்லாக்காசாகி விட்டது. விடுதலைப்புலிகள் தம்முடைய அரசியல் தேவைக்காக தாம் ஏற்றுக்கொள்ளாமல் வெளியே தள்ளி வைத்திருந்த தமிழ்க்கட்சிகளையும் இயக்கங்களையும் தற்காலிகமாகப் பயன்படுத்த விளைந்ததன் விளைவாக மீண்டும் செயற்கைச் சுவாசமளிக்கப்பட்டு அரங்குக்குக் கொண்டு வரப்பட்டதே தமிழரசுக் கட்சி. அவர்கள் கூட முதலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தையே பயன்படுத்தினார்கள். திரு. வீ. ஆனந்தசங்கரியுடன் ஏற்பட்ட பிணக்கையடுத்தே தமிழரசுக் கட்சியின் வீடு சின்னம் புலிகளால் பயன்படுத்தப்பட்டது. புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி அரசியல் செய்து வருகிறது தமிழரசுக் கட்சி. ஆயினும் அதனுடைய பலவீனங்கள் அதை வளர்த்துப் புதிய – காலப் பொருத்தமுடைய அரசியல் இயக்கமாக மாற்றவில்லை. அதற்கான அனைத்து வாய்ப்புகளும் அதற்கிருந்தன. பதிலாக அந்தப் பலவீனங்கள் இன்றைய சீரழிவுக்கும் தலைமைப் போட்டிக்கும் அதைக் கொண்டு வந்து விட்டுள்ளது. அதாவது அதைச் சேற்றுக்குள் தள்ளி விட்டுள்ளது. உண்மையில் இப்பொழுது தன்னுடைய மனச்சாட்சியின்படி தமிழரசுக் கட்சி அரசியல் அரங்கிலிருந்தே விலகுவதே தமிழ் மக்களுக்கும் இந்தக் காலத்துக்கும் செய்கின்ற பெரும்பணியாக இருக்கும். நல்லதைச் செய்ய முடியாது விட்டால் பரவாயில்லை. நல்லன நிகழ்வதற்கு முட்டுக்கட்டையாக இருக்காது விட்டாலே அது ஒரு பெரிய பணியும் பங்களிப்பும்தான். ஏனென்றால் சரி பிழைகளுக்கு அப்பால் புலிகள் உருவாக்கியளித்த கூட்டமைப்பு என்பதைக் கூட தமிழரசுக் கட்சியினால் தக்க வைக்க முடியவில்லை. புலிகளுக்குப் பிறகு காலம் அளித்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்தி தமிழ்ச்சமூகத்தின் சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டு அடிப்படைகளைக் கூட அது நிர்மாணம் செய்யவில்லை. ஆனால் அதற்கான கடப்பாடும் பொறுப்பும் அதற்கிருந்தது. அதைச் செய்யாமல் பதிலாக எல்லாவற்றையும் சிதைத்து, இறுதியில் தன்னையே அழிக்கும் நிலைக்கு வந்துள்ளது. இதற்குத் தனியே தமிழரசுக் கட்சியினர் மட்டும் பொறுப்பில்லை. அதை ஆதரித்தும் அனுசரித்தும் நின்ற, நிற்கின்ற அனைவருக்கும் இந்தப் பொறுப்பும் பழியும் உண்டு. வரலாறு நிச்சயம் இவர்களை நிந்திக்கும். இப்பொழுது சிவஞானம் சிறிதரன் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தலைவராகியவுடன் சிறிதரன் சென்றது கிளிநொச்சியில் உள்ள மாவீரர் துயிலுமில்லத்துக்கு. இது ஏற்கனவே கூறப்பட்டுள்ளதைப்போல அவர் தன்னைப் புலிகளின் அரசியல் தொடர்ச்சியாகக் காட்ட முற்பட்டதற்காகவாகும். ஆனால், இதை தென்னிலங்கைச் சக்திகள் நற்சமிக்ஞையாகப் பார்க்கப் போவதில்லை. ஏன் முஸ்லிம்கள் கூட இதை எதிராகவே பார்ப்பார்கள். அவ்வாறே இந்தியாவும் மேற்குலகும் எதிர்நிலை நின்றே நோக்கும். புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு என்ற பேர் இருந்தாலும் சம்மந்தன் அதனைக் கடந்து பல்வேறு தரப்பினருடைய கவனத்தையும் கோரக் கூடிய அரசியலை முனனெடுத்து வந்தார். இந்த நிலைப்பாடு சர்வதேசப் பரப்பிலும் தமிழ்த் தரப்பின் தலைவர் என்ற அடையாளத்தைச் சம்மந்தனுக்குக் கொடுத்தது, அவர் மேற்கொண்ட பன்மைத்துவத்தை நோக்கிய அரசியலாகும். ஆனால், அதுதான் தமிழ்த்தரப்பில் சம்மந்தனுக்கும் அவரைத் தொடர்ந்த சுமந்திரனுக்கும் எதிரான விமர்சனங்களையும் கடந்த காலத்தில் உருவாக்கியிருந்தது. சுமந்திரன் தலைமைக்கு வர முடியாமல் போனதற்குக் காரணமும் இதுதான். ஆனால் போருக்குப் பிந்திய அரசியலை தனியே எதிர்ப்பு அரசியலாக முன்னெடுக்க முடியாது. இன்றைய யதார்த்தம் வேறு. இதைத் தெளிவாகவே சர்வதேச சமூகமும் இந்தியாவும் இலங்கையும் பொதுவாக உலகப் போக்கும் சொல்கின்றன. இப்படியான நிலைக்குப் பிறகும் தமிழ் மக்கள் (இங்கே மக்கள் என்பது அவர்களுக்காகச் சிந்திப்பதாகக் கருதப்படும் ஊடகவியலாளர்கள், அரசியற் பத்தியாளர்கள், தமிழர்களின் கல்விசார் துறையினர், சமூகச் செயற்பாட்டாளர்கள் உள்பட எனப் பொருள்படும) தமிழரசுக் கட்சியை தமக்கான மீட்புப் படகாகக் கருதினால் அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியுள்ளது. அவர்களைக் குறித்தே கேள்வி எழும்புகிறது. விடுதலைக்காக ஒரு சிறிய மக்கள் கூட்டம் தன்னுடைய சக்திக்கு அப்பால், மாபெரும் தியாகங்களைச் செய்துள்ளது. அளவுக்கு அதிகமான இழப்புகளைச் சந்தித்திருக்கிறது. இந்த இழப்புகள் சாதாரணமாகக் கடந்து போகக் கூடியவையல்ல. மட்டுமல்ல, உள் நாட்டிலும் நாட்டிற்கு வெளியேயும் தொடர் அலைச்சல்களில் சந்தித்த பிறகும் திக்குத் தெரியாத காட்டில் தடுமாறுவதைப்போலிருந்தால், ஈழத்தமிழரின் ஊடக, அரசியல், அதுசார் அறிவு நிலையைப் பார்த்தால் சிரிப்பு வரும். சற்று ஆழமாகச் சிந்தித்தால் கடுமையான கோபமே ஏற்படும். தங்களுடைய சொந்த அனுபவத்திலிருந்து கூட எதையும் கற்றுக் கொள்ள முடியாத சமூகமாக ஈழத்தமிழர்கள் சீரழிந்துள்ளனர். இல்லையென்றால் நாற்பது ஆண்டுகளாகப் போராடிய பட்டறிவைக் கூட நினைவில் வைத்துப் பரிசீலிக்க முடியாத அளவுக்கு, எல்லாவற்றையும் மறந்து போய், நாற்பது ஆண்டுகளுக்கு முன்னான அரசியல் குழிக்குட் போய்க் கண்மூடித்தனமாக விழுவார்களா? “விதியே விதியே, தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய்?” என்று பாரதியார் பாடியதை இங்கே நினைவிற் கொண்டு பேச வேண்டியதாக உள்ளது. பாரதியார் மனம் வருந்தி இதைச் சொன்னது, இந்திய சுதந்திரப் போராட்ட காலத்திலாகும். அப்போது வரலாற்றுச் சிறப்பெல்லாம் இருந்தும் கூட தமிழர்கள் உள்நாட்டிலும் உலகம் முழுவதும் கூலிகளாகவும் ஏதிலிகளாகவும் சிதறிப் பரந்து அல்லலுற்றுக் கிடந்தனர். அதைப் பார்த்து வெம்பித் துயரடைந்தார் பாரதி. கவிஞரின் மனம் சிறுமை கண்டு, கொடுமை கண்டு கொதிப்பதைப்போல, அறியாமையைக் கண்டும் கொதிப்படைவது. காலம் கடந்தாலும், சூழல் மாறினாலும் ஈழத்தமிழரின் நிலையில் மாற்றமில்லை. வரவர நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது. https://arangamnews.com/?p=10397
  9. தமிழரசு கட்சியின் பெரும் உடைவை தடுக்குமா பொதுச்செயலாளர் பதவி இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும், தேர்தல் மூலமே தெரிவாக வாய்ப்புள்ளதாக அந்த கட்சியின் உயர் வட்டாரங்கள் மூலம் அறியவருகின்றது. இதன்மூலம், தேர்தல் இன்றியே இதுவரை காலமும் பொதுச்செயலாளர் தெரிவு செய்யப்பட்டு வந்த சம்பிரதாயம் மாற்றமடைந்து, கிழக்கு மாகாணத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் தமிழ்த் தேசிய அரசியலை மீண்டும் கேள்விக்குள்ளாக்குவதற்கான அதிக சந்தர்ப்பங்கள் ஏற்படலாம் என அரசியல் விமர்சகர்கள் பலரும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தல் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் (21.01.2024) அன்று நடைபெற்றது. குறித்த தேர்தலின் வேட்பாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகிய மூவரும் போட்டியிட்டிருந்தனர். இந்த தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்,184 வாக்குகளையும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் 137 வாக்குகளையும் பெற்ற நிலையில் சி.சிறீதரன்,இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்டார். இந்த சூழ்நிலையில் பொதுச்செயலாளர் பதவியானது,மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்கப்பட வேண்டும்.குறிப்பாக கிழக்கு மாகாணத்திற்கு வழங்கப்படுகின்ற யாப்புக்கு அப்பாற்பட்ட ஒரு மரபு ரீதியான நடைமுறை தமிழரசு கட்சியில் இருந்து வருகின்றது. கடந்த காலத்தில்,ராசமாணிக்கம் தலைவராக இருந்த போது,வடக்கில் செயலாளர் இருந்தார், வடக்கில் மாவை சேனாதிராஜா இருந்த போது கிழக்கில் செயலாளர் இருந்த மரபுகள் எல்லாம் இருந்தன. இதனடிப்படையில்,மட்டக்களப்பிற்கு பிரச்சாரத்திற்கு சென்ற இரு தலைமைத்துவ வேட்பாளர்களும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு செயலாளர் பதவியை வழங்குவதாக உத்தரவாதம் அளித்திருந்தனர். அதனடிப்படையில் கடந்த வாரம் தலைவர் தெரிவிற்கு முன்னர் இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு கிளை கூட்டம் நிறைவுபெற்ற பின்னர் கருத்துக்களை பகிர்ந்துகொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுவின் முக்கியஸ்தருமான பா.அரியநேந்திரன் தமது சார்பில் ஸ்ரீநேசனை முன்மொழிவதாக குறிப்பிட்டார். இதனை ராசமாணிக்கம் சாணக்கியன் அது அவருடைய தனிப்பட்ட கருத்து அதை இப்போது பரிசீலிக்க முடியாது என குறிப்பிட்டிருந்தார். இதனை தொடர்ந்து தலைவர் தெரிவின் பின்னர் மீண்டும் அரியநேந்திரன் இந்த கருத்தை முன்மொழிந்திருந்தார். அதாவது வடக்கு கிழக்கு ஆதரவாளர்கள் சார்பில் ஸ்ரீநேசனை முன்மொழிவதாகவும் அதனை அனைவரும் ஏற்பார்கள்,காரணம் இது வடக்கு கிழக்கு என்ற பிரதேச வாதத்திற்கு அப்பாற்பட்ட முடிவு என கூறியிருந்தார். இதனை இலங்கை தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் முக்கிய பிரமுகர் வேலமாளிதரன் இந்த முடிவை சரியானது எனவும் அதனை தாங்கள் ஒத்து செல்வதாக கூறியிருந்தார். இந்த நிலையில் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவு எதிர்வரும் சனிக்கிழமை திருகோணமலையில் இடம்பெற உள்ளது. இந்த சூழலில் செயலாளர் பதவியை ஒரு போட்டி விவகார சூழலுக்குட்படுத்த ஒரு தரப்பு முனைவதாக இலங்கை தமிழரசு கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தலைவர் தெரிவில் போட்டியிட்டு தோல்வியுற்ற ஒருவர் இந்த விடயங்களில் தனக்கு சார்பான ஒருவரை பொதுச்செயலாளராக நிறுத்துவதற்கு பல முயற்சிகளை எடுத்துள்ளதாகவும் அவை தொடர்பில் அவருடைய ஆதரவாளர்களுடன் கலந்துரையாடப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை தேவையற்ற மனக்கசப்புக்கள் இன்றி பொதுச்செயலாளர் போட்டியின்றி தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கிழக்கில் உள்ளது. கிழக்கில் பிரதேசவாசம் பேசுபவர்களுக்கு இந்த செயலாளர் பதவிக்கான போட்டி தீனி போடுவதாக அமைந்துவிடும் என்றும் அது ஆரோக்கியமான விடயமல்ல என்றும் இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர். பொதுவாக இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் பதவி தொடர்பில் இப்போது திரைமறைவில் மீண்டும் ஒரு பகிரத்தன பிரயத்தனம் இடம்பெற்று கொண்டிருக்கிறது. https://akkinikkunchu.com/?p=266704
  10. இலங்கையர்களுக்கான புலமைப்பரிசில் விண்ணப்பம் கோரல் இலங்கையர்களுக்காக சுமார் 200 முழு நிதியுதவி புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களை இந்தியா கோரியுள்ளது மருத்துவம்,துணை மருத்துவத்துறை மற்றும் சட்டப் படிப்புகளை தவிர்ந்த, ஏனைய துறைகளுக்காக இந்த புலமைப்பரிசில்கள், இந்திய நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் ஊடாக வழங்கப்படுகின்றன. இலங்கையர்களுக்காக பிரத்தியேகமாக வழங்கப்படும் இந்தப் புலமைப்பரிசில்கள் 2024-2025 கல்வி அமர்வுக்கானது என கொழும்பு இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. 1 – நேரு நினைவு புலமைப்பரிசில் திட்டம்: பொறியியல், அறிவியல், வணிகம், பொருளாதாரம், மனிதநேயம் மற்றும் கலை போன்ற பல்வேறு களங்களில் பட்டதாரி மற்றும் முதுகலை பட்டங்களை உள்ளடக்கியது. 2 – மௌலானா ஆசாத் புலமைப்பரிசில் திட்டம்: பொறியியல், அறிவியல் மற்றும் விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கும் முதுகலை பட்டப் படிப்புகள் 3 – ராஜீவ் காந்தி புலமைப்பரிசில் திட்டம்: குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் பட்டதாரி படிப்புகளின் கீழ், இளங்கலை பொறியியல் மற்றும் இளங்கலை தொழில்நுட்பக் கற்கைகள். இந்த மூன்று திட்டங்களுக்காக, பாடநெறியின் முழு காலத்திற்கான முழு கல்விக் கட்டணம், மாதாந்த சத்துணவு கொடுப்பனவு மற்றும் நூல்கள் மற்றும் நிலையானவற்றுக்கான வருடாந்த மானியம் ஆகியவை வழங்கப்பபடும். அத்துடன் இந்தியாவின் அருகிலுள்ள இடங்களுக்கான விமானக் கட்டணம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கான கல்விச் சுற்றுப்பயணங்களுக்கான வருடாந்த மானியம், பல துணைப் பலன்களைத் தவிர. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அந்தந்த வளாகங்களுக்குள் விடுதி வசதியும் வழங்கப்படும். இந்த புலமைப்பரிசில்களை வழங்குவதற்காக இந்திய அரசாங்கம், இலங்கை அரசின் கல்வி அமைச்சுடன் இணைந்து தகுதியானவர்களை தெரிவுசெய்யவுள்ளது. இலங்கை கல்வி அமைச்சின் www.mohe.gov.lk என்ற இணையத்தளத்தில் தேவையான விபரங்கள் தரப்பட்டுள்ளன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள், தகுதிக்கான அளவுகோல்கள் மற்றும் தேர்வு நடைமுறைகள் பற்றி மேலும் அறிந்துக்கொள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் கொழும்பு (eduwing.colombo@mea.gov.in) அல்லது கல்வி அமைச்சு, இலங்கை அரசாங்கத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். https://thinakkural.lk/article/289381
  11. சுதந்திர காற்றை சுவாசிக்க முடியாது இருக்கிறோம்: ஸ்ரீதரன் ரொசேரியன் லெம்பட் தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களை சிங்கள மக்கள் அனுபவிக்க தொடங்கி விட்டனர். இதனால் அரசு அச்சத்தில் மூழ்கியுள்ளது. இதுவும் தமிழர்களுக்கான பாதை திறக்க வழியாகும். ஆகவே நாம் எல்லோரும் இணைந்து ஒருமிக்க வேண்டிய காலகட்டம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் கடந்த 21 ந் திகதி தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து மன்னார் மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்களினால் வியாழக்கிழமை(24) மாலை வரவேற்பு நிகழ்வு மன்னார் அலுவலகத்தில் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,,, மனிதர்களுடைய வாழ்விலே பிறப்பிலிருந்து இறப்பு வரை எவ்வளவோ நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறே தமிழர்களுடைய வாழ்வில் பல அடையாளங்களோடும் எதிர் பார்ப்புகளோடும் கடந்து சென்று கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் மன்னார் மக்களுடன் நான் உரையாடுவது எனது வரலாற்றில் ஒரு பதிவாகின்றது. என்னுடைய தெரிவுக்கு மன்னார் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கு நன்றியுடன் அத்துடன் உங்களுடன் நம்பிக்கையுடன் பயணிக்க இருக்கிறேன். இந்த மண்ணிலே நாம் பல உயிர்களை தியாகம் செய்திருந்தும் நாம் இன்னொரு சுதந்திரமான காற்றை சுவாசிக்க முடியாத கட்டத்தில் இருக்கிறோம். நாம் இன்னும் அந்நியப்படுத்த பட்டிருக்கின்றோம். நாம் 75 ஆண்டுகளுக்கு மேலாக போராடி போராடி வரும் ஓர் இனமாக இருக்கின்றோம். 1949 ஆம் ஆண்டு தந்தை செல்வா கூறியது தமிழர் ஒரு தேசிய இனம். இழந்துபோன இறைமையை மீட்டு எடுத்து எமது தேசிய அடையாளத்தோடு வாழ வேண்டும் என செயல்பட ஆரம்பித்தார். தந்தை செல்வா மன்னார் மண்ணுக்கும் வந்து சென்றுள்ளார். அவருடைய காலத்தில் பலர் இந்த மண்ணில் எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் இருந்துள்ளனர்.அவருடைய தேசிய சின்னத்துடன் இந்த மண்ணில் தேசிய மாநாடு இங்கு நடந்துள்ளது. இவ்வாறு வரலாறு இப்பொழுதும் எமக்கு புதிய பணியை தந்துள்ளது. இது ஒரு தனி மனிதன் ஆற்றும் பணியல்ல. மாறாக நாம் யாவரும் ஒன்றிணைந்து ஒரு சக்தியாக தமிழர் என்று திரள்கின்ற பொழுது இந்த சமூகம் உலகம் எம்மை அங்கிகரிக்கின்ற நாள் நெருங்கிக் கொண்டு இருக்கின்றது என்ற நம்பிக்கை எம்மிடம் இருக்க வேண்டும். எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்குள் உலகம் முழுவதும் பாரிய மாற்றங்கள் இடம்பெற இருக்கின்றன. இன்று உலகத்தில் நிகழ்கின்ற சண்டைகள் அரசியல் நிகழ்வில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இலங்கை நாடும் இங்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று கண்ணை மூடிக் கொண்டு இருக்கிறார்கள். இலங்கை உலகத்தை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றது என உலகம் தெளிவாக புரிந்து கொண்டு இருக்கின்றது. தமிழர்களின் தேசிய அபிலாசைகளை உலகம் புதிய பரிமாணத்துடன் சிந்திக்க முற்பட்டுள்ளது. நாம் இழந்த ஆத்மாக்கள் இப்பொழுது எமக்கு உத்வேகத்தை தருகிறது.நாம் எந்த நோக்கத்துக்காக எமது உறவுகளின் உயிர்களை இழந்தோ மோ அந்த நோக்கங்கள் இன்னும் அழிந்து போகவில்லை.சிங்கள மக்களுக்கு முன்பே நமது தமிழினம் இங்கு வாழ்ந்துள்ளது. நாம் இங்கு பல அடையாளங்களுடன் வாழ்ந்திருக்கிறோம். ஆகவேதான் இழந்த இறைமையை தான் நாம் மீண்டும் பெற போராடுகின்றோம். எமது மொழி , இடம் , கலை பண்பாட்டு இவைகள் எமது தமிழ் தேசிய அடையாளத்தை பற்றியுள்ளது.நாம் பல சவால்களை சந்தித்து இன்னும் மனிதர்களாக இருக்கிறோம் என்றால் நாம் அறத்தின் மீதும் தர்மத்தின் மீது பற்றுக் கொண்டவர்களாக இருக்கின்றோம்.இலங்கை அரசுக்கு ஒரு செய்தியை கூறுகின்றோம். தமிழர்களுக்கு வெளிச்சமான பாதை தொடங்கியுள்ளது. ஆகவே நாம் ஒருமித்த கரங்களாக இணைந்து கொள்வோம். நமக்கு இந்த நாடு நிம்மதியான அமைதியை தருமா? என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டு நிற்கின்றோம். இலங்கை அரசு தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்காவிடில் இந்த நாடு பெரும் பாதாளத்துக்குள் விழும் என்பது ஐயம் இல்லை. நாம் பெற்ற துன்பங்களை சிங்கள மக்கள் அனுபவிக்க தொடங்கி விட்டனர். இதனால் அரசு பயத்தில் மூழ்கியுள்ளது. இதுவும் தமிழர்களுக்கான பாதை திறக்க வழியாகும். ஆகவே நாம் எல்லோரும் இணைந்து ஒருமிக்க வேண்டிய காலகட்டம் என தெரிவித்தார். https://www.tamilmirror.lk/வன்னி/சுதந்திர-காற்றை-சுவாசிக்க-முடியாது-இருக்கிறோம்-ஸ்ரீதரன்/72-332139
  12. நிகழ்நிலைக் காப்புச்சட்டம் திரும்பப்பெறல் வேண்டும்! - சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்து சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்து ஆதவன். நிகழ்நிலைக் காப்புச்சட்டத்தை உடனடியாக மீளப்பெற்று மக்களின் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறு சர்வதேச மன்னிப்புச்சபை இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. நிகழ்நிலைக் காப்புச்சட்டம் தொடர்பாக, சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய ஆய்வாளர் ருவான் பத்திரண வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் உள்ளதாவது:- எதிர்க்கட்சியினதும் ஆர்வக்குழுக்களினதும் எதிர்ப்பையும் மீறி நிகழ்நிலைக் காப்புச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சமூக வலைத்தளத்தில் பதிவுகளை மேற் கொள்ளும் குற்றத்துக்காக ஒருவருக்கு ஐந்து வருடங்கள் வரை சிறைத்தண்டனை கிடைக்க இந்தச் சட்டம் இடமளிக்கின்றது. இணையக் குற்றங்கள், சிறுவர் துஷ்பிரயோகம் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் நோக்குடனே இந்தச்சட்டம் கொண்டு வரப்படுவதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு, ஆசிய இணைய கூட்டமைப்பு, சர்வதேச நீதிமன்றம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் போன்றன இந்தச் சட்டத்திலுள்ள சில பிரிவுகளைப் பற்றி சுட்டிக்காட்டியுள்ளன. இந்தச் சட்டம் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கு ஏற்ப அமையவில்லை. கருத்துச்சுதந்திரம், தனிநபர் சுதந்திரம் என்பவற்றைக் கடுமையாகப் பாதிக்கிறது. அத்துடன் இணையப் பாதுகாப்புக் குழுவுக்கு அளவு கடந்த அதிகாரத்தை அளிக்கிறது. இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கிய வேளையில் மக்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக குரல் கொடுத்தார்கள். இந்தச்சட்டம் எதிர்க்கருத்துகளை இல்லாமல் செய்கிறது. அத்துடன் அதிகாரத்திலுள்ளவர்கள் இந்தச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தவும் வழி வகுக்கிறது என்றுள்ளது. (ச) https://newuthayan.com/article/நிகழ்நிலைக்_காப்புச்சட்டம்_திரும்பப்பெறல்_வேண்டும்!
  13. இந்தியாவின் குடியரசுதினம் யாழில் முன்னெடுப்பு! இந்தியாவின் 75ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை துணைத்தூதரகத்தில் சிறப்பாக இடம்பெற்றது. இந்திய எல்லைப்படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் யாழ்- இந்திய துணைத்தூதுவர் அழைத்துவரப்பட்டு இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டு குறித்த நிகழ்வு ஆரம்பமானது. மேலும், இந்திய குடியரசுத் தலைவரின் சிறப்புரையினை யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் வாசித்ததைத் தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் இந்திய துணை தூதுவராலய அதிகாரிகள் மற்றும் இந்திய பிரஜைகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (ச) https://newuthayan.com/article/இந்தியாவின்_குடியரசுதினம்_யாழில்_முன்னெடுப்பு!
  14. இலங்கையின் சுதந்திர தினம் சிங்கள மக்களுக்கும் கரி நாளே! January 26, 2024 இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என அழைப்பு விடுத்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சிங்கள மக்களுக்கும் கரிநாள் என்பது பொருத்தமானதே என தெரிவித்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்தனர். இலங்கை தீவிலே தமிழ் மக்கள் தங்கள் இருப்புக்களை தக்க வைப்பதற்கு அன்றிலிருந்து இன்று வரை தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள் . அதனடிப்படையில் எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்தினை கரி நாளாக பிரகடனபடுத்தி வடக்கு கிழக்கு தழுவிய பிரகடனத்தை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துகின்றோம். குறிப்பாக இந்த இலங்கைத் தீவிலே தமிழ் மக்களுக்கான உரிமைகள் இருப்புக்கள் மீறப்பட்டுக் கொண்டே வருகின்றது. ஆட்சிகள் மாறுகின்றது ஆட்சியாளர்களும் மாறிக்கொண்டே இருக்கின்றார்கள்.ஆனால் தமிழ் மக்களுக்கு இன்றுவரை எந்த ஒரு தீர்வு திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை. அது வெறும் பேச்சுமட்டத்திலே மாத்திரமே நல்லிணக்கத்தை பேசி வருகின்றார்கள். இதய சுத்தியுடன் தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுதர சிங்கள தரப்புக்கள் தயாராக இல்லை. வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்,சிவில் சமூகங்கள் ,சமூக செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள், அனைத்து தொழிற்சங்கங்களும் சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்த ஆதரவினை வழங்கவேண்டும். தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தினை சிதைக்கும் நோக்கில் இலங்கை அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றபட்டுள்ளது. இந்த நாட்டிலே ஊடக சுதந்திரத்தை , ஒரு பொதுமகனின் கருத்து சுதந்திரத்தை கூட இந்த அரசாங்கம் பறித்தெடுத்து கொண்டுதான் இருக்கிறது.இதன்மூலம் போராட்டங்களில் ஈடுபடுகின்றவர்களை ஒடுக்க இவ்வாறான சட்டங்களை நடைமுறைபடுத்தி மல்லினபடுத்தி அவர்களை கைது செய்கின்ற தொலைதூர நோக்கோடு இந்த அரசு செயற்பட்டு வருகின்றது. இவர்கள் ஒருபொழுதும் தமிழர்களுடைய அரசியல் தீர்வு, அரசியல் கைதிகள் விடுதலை , காணாமலாக்கப்பட்டோர் விவகாரம்,வடக்கு கிழக்கில் அத்துமீறி நிகழுகின்ற குடியேற்ற திட்டங்கள், திட்டமிட்ட பௌத்தமயமாக்கலையோ நிறுத்த போவதில்லை .எமக்கான தீர்வு கிடைக்கும் வரை நாம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு ஆகவேண்டும் என்பது வரலாற்று உண்மை. மேலும் கரிநாள் என்பது சிங்கள மக்களுக்கும் பொருத்தமானதே காரணம், சிங்கள மக்களுக்கும் எதிரான சட்டங்கள் உருவாக்கப்பட்ட வண்ணமே உள்ளது.இதனை அனைத்து தரப்புக்களும் புரிந்துகொள்ளவேண்டும். சமநேரத்தில் எங்களுக்குரிய நிரந்தர அரசியல் தீர்வை பெற்று தருவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் அதனடிப்படையில் 13 ஆவது திருத்தம் தமிழர்களுக்கான ஆரம்ப புள்ளியோ முடிவு புள்ளியோ கிடையாது .13இனை நாம் ஒரு போதும் ஏற்றுகொள்ள முடியாது.ஆகவே தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை காணாது நாங்கள் எங்களுடைய போராட்டங்களையோ போராட்ட வடிவங்களையோ கைவிடப்போவதில்லை என பல்கலைக்கழக மாணவர் சமூகமாக வலியுறுத்துகின்றோம். எங்களுடைய இனம் விடுதலை பெற வேண்டும்.இனத்திற்குரிய நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க இலங்கையின் சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனபடுத்த பூரண ஆதரவினை தந்துவுமாறு அவர் மேலும் தெரிவித்தார். https://globaltamilnews.net/2024/200113/
  15. நிகழ்நிலை - ஒன்லைன் என்பதை அழகுதமிழில் சொன்னால் எப்படிப் புரியும்? இந்த சட்டமூலத்தால் சமூகவலைத் தளங்களில் பதியப்படும் விடயங்களை இறுக்குவார்கள். நீக்கவும் உத்தரவு கொடுப்பார்கள்.
  16. ஆழ்ந்த இரங்கல்கள்.பவதாரிணி அதிகம் பாடாவிட்டாலும், பல சிறந்த பாடல்களை பதின்ம வயதுக் குரலில் தந்துள்ளார்.
  17. இப்படி ஒரு போலியான புலனாய்வுத் தகவலை நம்பி உக்கிரேனியர் விமானத்தைச் சுட்டுவீழ்த்தியதால் விமானத்தில் இருந்த உக்கிரேனிய இராணுவ பிணைக்கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிகின்றது. ரஷ்யர்கள் உக்கிரேனியர்களை உக்கிரேனைக் கொண்டே கொலைசெய்துள்ளனர்.
  18. மக்கள் எனும் திரளை எதிர்கொள்வது… jeyamohanDecember 30, 2023 இன்று என்னை வந்து சந்திக்கும் இளைஞர்களில் பாதிப்பேர் புலம்புவது புத்தகம் வாசிப்பவர்களாக, சிந்திப்பவர்களாக அவர்கள் இருப்பதனாலேயே சந்திக்கநேரும் இழிவுபடுத்தல்கள், கேலிகிண்டல்கள், புறக்கணிப்புகள் பற்றி. எல்லா புதியவாசகர் சந்திப்புகளிலும் குறைந்தது ஒரு மணிநேரம் இந்த கேள்விக்கான பதிலாக நீண்ட பதில் சொல்லியிருக்கிறேன். புத்தகம் வாசிக்கும் ஓர் இளைஞர் அதைப்பற்றி ஒரு வார்த்தைகூட நண்பர்களிடம் பேசாதவராக இருக்கலாம். நண்பர்கள் சொல்லும் எதையுமே மறுத்து விவாதிக்காதவராக இருக்கலாம். நண்பர்கள் விரும்புவது போலவே இருப்பவராக இருக்கலாம். ஆனாலும் கேலி கிண்டல்களில் இருந்து தப்ப முடியாது. நட்பான கேலி கிண்டல் அல்ல. வஞ்சமும் காழ்ப்பும் கொண்டவை. நேரடியான இழிவுபடுத்தல்கள். பொதுவெளிச்சிறுமைகள். இந்த இழிவுபடுத்தல்களில் சேர்ந்துகொண்டு மிகமிக மகிழ்ந்து கொண்டாடுபவர்கள் இளம்பெண்கள். நான் அந்த அறிவியக்க இளைஞரிடம் அவருடைய ஆளுமையை வடிவமைத்துக் கொள்வது பற்றித்தான் பேசுவேன். ஒருவன் நாள் முழுக்க பரோட்டா பற்றிப் பேசினால் அது கேலிக்குரியதாவதில்லை. அதற்கு ரசிகர்கள் உருவாவார்கள். அரைமணி நேரம் வாசித்த புத்தகம் பற்றிப் பேசினால் காழ்ப்பும் கீழ்மைப்படுத்தலும் வருகிறது. எனில் பிரச்சினை எங்குள்ளது? நம் சமூகத்தின் பாமரத்தனமே பிரச்சினை. அப்பிரச்சினையை எப்படி ஒரு தனிமனிதர் தீர்க்கமுடியும்? அப்பாமரர்களை எதிர்கொள்வது, அவர்கள் நடுவே தன் ஆளுமையை பாதுகாத்துக்கொள்வது பற்றி மட்டுமே சிந்திக்க முடியும். அவர் தன்னை பாமரர்களில் ஒருவராக ஆக்கிக்கொள்ளவே முடியாது. அவர் என்ன நடித்தாலும் அவர் பாமரர் அல்ல என்று பாமரர்களுக்கு தெரியும். அவர் தன்னை வரையறைசெய்துகொள்ளவேண்டும். தன் இடத்தை தானே தீர்மானித்துக்கொள்ள வேண்டும். பரோட்டாவை பற்றி இரவுபகலாகப் பேசுபவனுக்கு வெட்கமில்லை, புத்தகம் படிப்பவனுக்கு புத்தகத்தை வெளியே காட்ட வெட்கமாக இருக்கிறது என்றால் பிரச்சினை அவனிடமே. அவன் அறிவியக்கம் என்றால் என்ன என்று அறிந்துகொள்ளவேண்டும். அதன் ஒரு பகுதியாக இருப்பதன் பெருமிதத்தை அடையவேண்டும். அவனுக்கு அந்த நிமிர்வு இருக்குமென்றால் பாமரர்களின் கேலியும் கிண்டலும் அவனைச் சீண்டாது. அவர்கள்மேல் பரிதாபமே உருவாகும். பலநாடுகளில் அறிவியக்கவாதியை முச்சந்திகளில் அடிக்கிறார்கள். இங்கே வசைபாடி கிண்டல்செய்கிறார்கள், அவ்வளவுதானே? மிக வசதியான இடத்தில் அல்லவா நாம் இருந்துகொண்டிருக்கிறோம்? மக்கள், பாமரர் என்னும் கருத்துருவின் இரண்டு நிலைகள் வரலாற்றில் உள்ளதை கண்டோம். மன்னராட்சிக்காலங்களில் சாமானியர்கள் எவ்வகையிலும் பொருட்படுத்தப்படாத சூழலில் ஜனநாயகக் கொள்கைகளை உருவாக்கிய முன்னோடிகள் மக்கள் என்னும் கருத்துருவை உருவாக்கி நிலைநாட்டினர். மக்களில் மிகமிக அடிநிலையினர்கூட உட்படுவார்கள் என்னும் பொருளில் பாமரர்களும் மக்களே என்றனர்.அதை மிகைப்படுத்திக்கொண்ட இடதுசாரிகள் மக்கள் என்றால் பாமரர் மட்டுமே என்று வரையறை செய்தனர்.பாமரர்களை போற்றித்துதிக்கும் சிந்தனைகள் உருவாயின. ஜனநாயகம் உருவாகி, மக்கள் அதிகாரத்தை அளிக்கும் சக்தியாக ஆனபோது மக்களை துதிபாடலாயினர் அரசியல்வாதிகள். மக்களின் விருப்பப்படி எல்லாமே நடைபெறவேண்டும் என்று பேசலாயினர். மக்கள் என்பது ஒரு தெய்வம் போல ஆக்கப்பட்டது. பின்னர் மெல்லமெல்ல மக்களை தங்கள் விருப்பப்படி வடிவமைக்கலாயினர். மக்களின் உணர்வுகளைத் தூண்டி அதிகாரங்களை அடைந்தனர். வரலாற்றில் நிகழ்ந்த பேரழிவுகளுக்கெல்லாம் மக்கள் என்னும் பெருந்திரளில் இருந்து உருவான ஆதரவு காரணமாக அமைந்தது. இந்த இருநிலைகளுக்குப் பின் உருவானது இன்றைய சூழல். இன்று மக்கள் என நாம் சொல்வது எவரை? அரசியல், நுகர்வு, கேளிக்கை ஆகிய மூன்று மாபெரும் அமைப்புகளின் பிரம்மாண்டமான பிரச்சார வல்லமையால் கட்டமைக்கப்பட்ட கூட்டான ஒரு தொகுப்புமனத்தைத்தான் நாம் மக்கள் என்கிறோம். அது தானாக ஒன்று திரண்டது அல்ல. அதிகார நோக்குடன், வணிக நோக்குடன் ஒன்று திரட்டப்பட்டது. சென்றகால ஜனநாயகச் சிந்தனையாளர்கள் மக்கள் எனும்போது அடைந்த நெகிழ்வுக்கெல்லாம் இன்று பொருளே இல்லை. இன்று முன்பிலாத ஒன்று உருவாகியுள்ளது. இருபதாண்டுகளுக்கு முன்புகூட ‘சாமானியர்’ எனப்படும் கோடிக்கணக்கான மக்களுக்கு தங்களை நேரடியாக வெளிப்படுத்த ஊடகம் இருக்கவில்லை. ஏதாவது கணக்கெடுப்பில், கருத்துப்பதிவில் அவர்களின் குரல் தற்செயலாக பதிவானால்தான் உண்டு. இன்று மின்னூடகம், சமூகவலைத்தளம் அவர்களுக்கு ஊடகத்தை அளிக்கிறது. இது உண்மையில் ஒரு பெரும்புரட்சி. இது நிகழ்ந்தபோது இதை ‘மாபெரும் ஜனநாயக வெளி’ என்றும் ‘சாமானிய மக்களுக்கு வரலாற்றில் முதல்முறையாகக் குரல் கிடைத்துள்ளது’ என்றும் புளகாங்கிதம் கொண்டவர்கள் உண்டு. அவர்கள் பெரும்பாலும் இடதுசாரிகள். அப்போதே அதற்கு எதிராக நான் என் அவநம்பிக்கையை எழுதினேன். ஏனென்றால் ஏற்கனவே எது ‘மக்கள்’நடுவே பேசப்பட்டதோ அதுவே அந்த ஊடகங்களிலும் திரண்டு வரும் என நான் நினைத்தேன். அன்றே மக்கள் எதிர்மறைவிசைகளால் இயக்கப்படுவது கண்கூடாக இருந்தது. இன்று ஐயமற நிரூபிக்கப்பட்ட ஒன்று உண்டென்றால் அவ்வாறு மின்னூடகம் வழியாக உருவாகிவந்த சாமானியனுக்கான இடம் எந்தவகையிலும் ஜனநாயகத்துக்கு உதவவில்லை என்பதே. அது பாமரத்தனம் ஒருங்குதிரண்டு ஒரு பெரும்வல்லமையாக ஆகவே வழியமைத்தது. இன்று அறிவுச்செயல்பாடுகளின் மிகப்பெரிய எதிர்விசையாக அது உலகமெங்கும் மாறியுள்ளது. அதைப்பற்றி மிகமிக விரிவான ஆய்வுகள் வந்துள்ளன. இரு முனைகளில் இது நிகழ்ந்தது. ஒருமுனையில் சாமானியர்கள் தங்கள் அறிவை அந்த ஊடகம் வழியாக பகிர்ந்து கொண்டதை விட, தங்கள் உரிமைக்குரல்களை பதிவு செய்ததை விட, பலநூறு மடங்கு கூடுதலாக தங்கள் காழ்ப்புகளையும் அச்சங்களையும் பேராசைகளையும்தான் பதிவுசெய்தனர். அவை மிகப்பெரிய அளவில் ஒருங்கு திரண்டன.ஒற்றைப் பேரமைப்பாக ஆகி ராட்சத வல்லமை கொண்டன. இன்னொரு முனையில் சாமானியர்களின் அந்த வெளிப்பாடுகளை கண்காணிக்கவும், திரட்டவும் அதிகார அமைப்புகளுக்கும் வணிக அமைப்புகளுக்கும் வாய்ப்பு அமைந்தது.அவற்றின் வழியாக அவர்கள் மிக எளிதாக சாமானியர்களை கட்டுப்படுத்தினர். அவர்களின் கருத்துக்களையும் ரசனையையும் வடிவமைத்தனர். உலகமெங்கும் மின்னணு- சமூகவலைத்தள ஊடகங்கள் வலுப்பெற்ற பின்னர் உரிமைப்போர்கள் வலுப்பெறவில்லை. மாறாக இனவாத, மொழிவாத, மதவாத, தேசியவாத வெறிகள்தான் வலுப்பெற்றன. அவற்றை முன்வைக்கும் கட்சிகள் ஆட்சிகளைப் பிடித்தன. அந்தப்போக்கு மேலும் வலுப்பெற்று வருகிறது. இன்று ஓரு வெறிக்கு மாற்றாக இன்னொரு வெறியைத்தான் முன்வைக்கவேண்டும் என்னும் அளவுக்கே உலக அரசியல் உள்ளது. மதவெறிக்குப் பதிலாக இனவெறி. தேசியவெறிக்குப் பதிலாக வட்டாரவெறி. எந்த ஒரு புதிய ஊடகவடிவம் வந்தாலும் அதில் ‘மக்கள்’ எதை வெளிப்படுத்துகிறார்கள் என்று பாருங்கள். தங்கள் காம-குரோத-மோகங்ங்களைத்தான் வெளிப்படுத்துகிறார்கள். அரசியல், நுகர்வு, கேளிக்கை ஆகியவை அவர்கள் மண்டைக்குள் எதை செலுத்துகின்றனவோ அவற்றையே இன்னும் கீழிறங்கி திரும்ப வெளிப்படுத்துகிறார்கள். மக்கள் நேரடியாக தெரிவுசெய்யும்போது எதை விரும்பி ஆதரிக்கிறார்கள்? இன்றைய சமூக ஊடகங்களில், மின்னூடகங்களில் கெட்டவார்த்தைகளாகப் பொழியும் ஒருவருக்கு இருக்கும் கவனத்தில் நூறில் ஒரு பங்கு ஒரு மக்கள் பணியாளருக்கு இல்லை என நாம் அறிவோம். அபத்தமான சதிக்கோட்பாடுகளையும் வெறுப்புகளையும் கக்கும் ஒரு அரைவேக்காடுக்கு இருக்கும் வரவேற்புக்கு ஆயிரத்தில் ஒரு பங்கு ஓரு மெய்யான அறிஞனுக்கு அமைவதில்லை. ஆர்வமூட்டும் ஒன்று இன்று உருவாகியுள்ளது. ஏதேனும் ஒருவகையில் கவனத்தை ஈர்த்துவிட்டால் அக்கவன ஈர்ப்பே ஒருவருக்கு முக்கியத்துவத்தை உருவாக்கி அவருடைய சொற்களுக்கு மதிப்பை உருவாக்குகிறது. ஆகவேதான் வசைபாடிகள் புகழ்பெறுகிறார்கள். கோமாளிகள் மேலும் புகழ்பெறுகிறார்கள். அவர்கள் ‘செல்வாக்குநர்’ (இன்ஃப்ளூயன்ஸர்) எனப்படுகிறார்கள். அவர்கள் உண்மையாகவே சமூகத்தின்மேல் செல்வாக்கு செலுத்துகிறார்கள் இன்றும் ஒருவர் ‘மக்களுக்குத் தெரியும்’ ‘மக்களின் எண்ணம் புனிதமானது’ ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்று சொல்லிக்கொண்டிருந்தார் என்றால் ஒன்று அவர் சென்றகாலத்திலேயே நின்றுவிட்ட பித்துக்குளி. அல்லது மிகச்சாமர்த்தியமான அயோக்கியர். இன்று மக்கள் மீதான கடுமையான விமர்சனத்தில் இருந்தே எந்த அறிவுஜீவியும் தொடங்க முடியும். முதலில் இங்கே ‘அரசியல்- நுகர்வு – கேளிக்கை’ ஆகிய மூன்றும் உருவாக்கும் பிரச்சாரங்களை நிராகரித்து தனக்கான சிந்தனையை தன் வாசிப்பின் வழியாக, விவாதங்கள் வழியாக ஓர் அறிவுச்செயல்பாட்டாளன் உருவாக்கிக் கொள்ளவேண்டும். அந்த நிராகரிப்பு வழியாகவே அவன் மக்களிடமிருந்து விலகிவிடுவான். மக்கள் பேசும் எதையும் பேசாதவனாகவும் மக்கள் விரும்பும் எதையும் விரும்பாதவனாகவும் ஆகிவிடுவான். தன்னை மக்களிடமிருந்து தனிமைப்படுத்திக் கொள்வான். அதன்பொருட்டு மக்களால் இகழவும் வெறுக்கவும்படுவான். அடுத்தபடியாக அவன் மக்களை விமர்சனம் செய்தே ஆக்வேண்டும். இன்று எந்த ஒரு உண்மையான சிந்தனையும் மக்களின் மீதான விமர்சனமாகவே இருக்க முடியும். மக்களின் ரசனையை, அவர்களின் பொதுவான புரிதல்களை விரிவாக நிராகரிதேயாகவேண்டும். அவற்றை ஏற்றுக்கொள்பவன் ‘அரசியல்- நுகர்வு- கேளிக்கை’ ஆகிய அமைப்புகளுடன் இணைந்திருப்பவன் மட்டுமே. அவனுக்கு அதில் லாபங்கள் இருக்கலாம். அவன் சிந்தனையாளன் அல்ல, வணிகன். இன்று மக்களை அணுகவேண்டிய முறை என்பது பழைய மார்க்ஸியர்கள் போல பக்தனாக இடுப்பில் துண்டைக்கட்டிக்கொண்டு கைகூப்பி கண்ணீர்மல்கி நிற்பது அல்ல.மக்கள் என நம் முன் நிற்பது ‘கள்ளம் கபடமற்ற மக்கள் தன்னியல்பாக திரண்டு உருவான அமைப்பு’ அல்ல. அது அதிகார சக்திகளாலும் வணிக சக்திகளாலும் கட்டமைக்கப்பட்டதும், காழ்ப்புகள் பேராசைகள் ஆகியவற்றாலானதுமான ஓர் அமைப்பு என்னும் புரிதல் நமக்கு வேண்டும். அந்த அமைப்புக்குள் ஓர் அறிவியக்கவாதி ஏற்பவை, மதிப்பவை ஏராளமாக உண்டு. நீண்ட வாழ்க்கைத்தொடர்ச்சி வழியாக கற்கப்பட்ட அனுப அறிதல்கள் முதன்மையாக முக்கியமானவை. மொழியினூடாகவும் கலை வழியாகவும் திரண்டு வந்த ஆழ்படிமங்கள் மேலும் முக்கியமானவை. அவை மக்களே அறியாமல் மக்கள் அறிந்த மெய்மைகள். தங்கம் மண்ணுடன் கலந்திருப்பதுபோல அவை ஆசாரங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளுடன் கலந்தே காணப்படும். அவற்றை பிரித்தறியும் நுண்ணுணர்வு அறிவியக்கவாதிக்கு இருந்தாகவேண்டும். எந்த இலக்கியத்திற்கும் வேர்நிலம் என்பது மக்கள்தான். ஆகவே இலக்கியவாதி மக்கள்மேல் பெரும்காதல் கொண்டவனாகவே இருப்பான். மக்களை அவன் கவனித்துக்கொண்டே இருப்பான். மக்களிடமிருந்து வாழ்க்கைக்கூறுகளையும் ஆழ்படிமங்களையும் எடுத்து இலக்கியமாக்குவான். மக்களிடமிருந்து எடுத்தவற்றை மறு ஆக்கம் செய்து மக்களுக்கே அளிப்பதுதான் கலை, இலக்கியம், சிந்தனை எல்லாமே. அதாவது மக்கள் என்றால் இரண்டு அடுக்குகள் கொண்ட ஓர் அமைப்பு. திரண்டு நம் முன் நின்றிருக்கும் மக்கள் என்னும் கூட்டம் வெறும் கூச்சல்களால் ஆனது. அரசியல்வாதிகளாலும் வணிகர்களாலும் உருவாக்கப்பட்ட வெற்றுத்திரள். அதனிடம் நாம் உரையாட ஒன்றுமில்லை, அறியவும் ஒன்றுமில்லை. அதன் குரல்களுக்கு நம் வகையில் எந்த மதிப்பும் இல்லை. அதேசமயம் அதன் அடியில், அதுவே அறியாத ஓர் அடுக்கில் ஒவ்வொரு துளியிலும் நாம் அறியும் அறிவு, கலை என சில உள்ளது. அந்த வேறுபடுத்தும் பார்வை நமக்குத்தேவை. ஓர் இலக்கியவாதி, ஓர் அறிவியக்கவாதி பேசுவதும் மக்களின் அந்த அறியப்படாத நுண்வடிவை நோக்கியே. நான் பல்லாயிரம் பக்கங்கள் எழுதியுள்ளேன். இங்கே சமூகவலைத்தளங்களிலும் மின்னூடகங்களிலும் கூச்சலிடும் பெருங்கும்பல் அவற்றை வாசிக்கும் என எந்த எண்ணமும் எனக்கில்லை. வாசிக்கவே கூடாது என்னும் எண்ணமே உள்ளது. ஆனால் மக்கள் என்னும் அத்திரளுக்குள்தான் என் வாசகர்களும் உள்ளனர். அவர்களைத்தான் நான் அறிவியக்கம் நோக்கி இழுத்துக்கொண்டே இருக்கிறேன். இலக்கியம், கலை, சிந்தனை ஆகியவை மக்கள் என்ற ஒட்டுமொத்த திரளிடம் பேசுவதில்லை. தனித்தனியாக மனிதர்களிடம்தான் பேசுகின்றன. அந்த தனிமனிதர்களும் மக்கள் எனும் திரளில் உறுப்புதான். ஆனால் வாசிக்க, கலையை ரசிக்க, சிந்திக்க ஆரம்பித்ததுமே அவர் தனித்துவிடுகிறார். அந்த உரையாடல் நிகழ்வது அவருக்குள் உள்ள ஆழ்மனதுக்கும் கலைஞனின், எழுத்தாளனின் ஆழ்மனதுக்கும்தான். ஒருவகையில் அது மக்களில் ஒரு துளி மக்களில் இன்னொரு துளியுடன் உரையாடுவதுதான். மக்களின் ஆழ்மனம் தனக்குள் உரையாடிக்கொள்வதுதான். இன்று ஒரு சமூகப்பணியாளன் மக்களைப் பார்க்கவேண்டிய கோணமும் இதுவே. அவன் மக்கள் என இன்று திரண்டிருக்கும் இந்த அமைப்பின் ஒரு பகுதி அல்ல. அந்த அமைப்பின் ஏற்புக்காக அவன் பணியாற்ற முடியாது. மக்கள் என்னும் அந்த அமைப்பின் சுயநலமும் ஏமாற்றுத்தனமும் அவனுக்கு முன் வந்து நின்றுகொண்டேதான் இருக்கும். அவன் பணியாற்றவேண்டியது அந்த மக்களில் இருக்கும் தனிமனிதர்களுக்காக. அந்த மக்களில் உறையும் ஒரு தொடர்ச்சியின் நலனுக்காக. ஆகவே கலைஞனும் எழுத்தாளனும் மக்கள்பணியாளனும் மக்கள் பற்றிய எந்த கற்பனாவாத நெகிழ்வையும் கொண்டிருக்க முடியாது. பொதுவாக அத்தகைய நெகிழ்வுகளை கொண்டிருப்பவர்கள் எந்த வகையிலும் களப்பணி ஆற்றாத , மக்களை சந்திக்கவே வாய்ப்பற்ற போலி இலட்சியவாதிகள் மட்டுமே. அதேசமயம் அவன் மக்கள் மேல் கசப்பையும் கொண்டிருக்க மாட்டான். ஏனென்றால் மக்கள் எனும் அந்த திரள்தான் அவன் செயல்பாட்டுக்கே அடிப்படை. அவனுக்கு ஞானத்தையும் கற்பனையையும் அள்ளி தருபவர்கள். மக்கள்மேல் பெரும் பற்றுடன் மட்டுமே இலக்கியவாதி எழுத முடியும். சமூகப்பணியாளன் செயல்பட முடியும். ஆனால் மக்களின் விருப்பப்படி எழுத்தாளன் எழுத கூடாது. மக்கள் சொன்னபடி செயல்பட்டால் சமூகப்பணியாளன் ஊழலை மட்டுமே செய்ய முடியும். நோயாளியை கேட்டு, அவன் விருப்பப்படி மருத்துவன் செயல்பட முடியாது. எல்லாமே மக்கள் விருப்படி செய்பவன் மக்களை பயன்படுத்திக்கொள்ளும் அரசியலாளனும் வணிகனும் மட்டுமே. மக்களின் நலனுக்காக எழுதுபவன் இன்று ஒரு அறிவியக்கவாதி அல்லது சமூகப்பணியாளன் மக்களைப் பற்றி விமர்சனம் செய்தால் உடனே எதிரில் வந்து சவால்விடுவது அரசியல்வாதிகளாலும் வணிகர்களாலும் திரட்டப்பட்ட கும்பல்தான். ‘மக்களைக் குறை சொல்கிறாயா?” என கூச்சலிடுவார்கள். அவர்களை திரட்டி வைத்திருக்கும் அரசியல்வாதிகளும் கூடவே வந்து தொடைதட்டுவார்கள். அந்த சலம்பல்களை நாம் செவிகொடுக்கலாகாது. “டேய், போடா. எனக்கு உண்மையான மக்கள் என்றால் யார் என்று தெரியும்’ என்று நாம் பதிலுரைக்கவேண்டும். (மேலும்) https://www.jeyamohan.in/195317/
  19. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சி வேட்பாளர்; முன்னிலையில் டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி உள்ளன. அந்நாட்டு அதிபராக ஜோ பைடன் செயல்பட்டு வருகிறார். அவர் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர் ஆவார். இதனிடையே, அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் பணியில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி ஈடுபட்டு வருகின்றன. அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கவும் அந்நாட்டில் தேர்தல் முறை பின்பற்றப்படுகிறது. அதன்படி, அந்நாட்டில் உள்ள மாகாணங்களில் தங்கள் கட்சி வேட்பாளரை தேர்ந்தெடுக்க தனித்தனியே தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் நியூ ஹம்ப்ஷர் மாகாணத்தில் குடியரசு கட்சி வேட்பாளருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹெய்லி உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இதில் 52.5 சதவிகித ஆதரவு பெற்று டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்றார். அதேவேளை, 46.6 சதவிகித ஆதரவு பெற்று நிக்கி ஹெய்லி 2ம் இடம் பிடித்தார். இதன் மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் தேர்வில் டொனால்டு டிரம்ப் முன்னிலையில் உள்ளார். இதன் மூலம் அதிபர் தேர்தலில் டிரம்ப் களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அதேவேளை, நியூ ஹம்ப்ஷர் மாகாணத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://akkinikkunchu.com/?p=266498
  20. ரஷ்ய வீரர்களின் மனைவிகளால் புதிய சிக்கலில் புதின் 2022 பெப்ரவரி மாதம், ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தது. இதனை எதிர்த்து மேற்கத்திய நாடுகளின் துணையுடன் உக்ரைன் போரிட்டு வருகிறது. இரண்டாம் வருடத்தை நெருங்கும் இப்போரில் இரு தரப்பிலும் பலத்த உயிர்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. ரஷிய தரப்பில் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 2022ல் சுமார் 3 இலட்சம் உபரி இராணுவ வீரர்களை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் படையில் சேர்த்தார். நீடிக்கும் போரினால் இராணுவ வீரர்கள் உயிரிழப்பதும், நீண்ட நாட்கள் குடும்பங்களை விட்டு பிரிந்திருப்பதும், படுகாயங்களால் உடல் உறுப்புகளை இழப்பதும் நடப்பதால், இந்த இராணுவ வீரர்களின் மனைவிகள் பொறுமை இழந்து வருகின்றனர். இது குறித்து சமூக வலைதளங்கள் வழியாக அவர்கள் உரையாடி, ஒருங்கிணைந்து “தி வே ஹோம்” (The Way Home) எனும் ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளனர். நாட்டிற்காக ஆற்ற வேண்டிய கடமையில் தங்கள் கணவர்கள் அவர்களது பங்கை சரிவர செய்து விட்டதாகவும், இனி அவர்கள் திருப்பி அனுப்பப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர். போரிஸ் நடெஸ்டின் (Boris Nadezhdin) எனும் முக்கிய அரசியல் தலைவரிடம் இது குறித்து முறையிட்ட வீரர்களின் மனைவிகள், ” இரண்டாம் உலகப் போரின் போது ரஷியாவில் இருந்த நிலை வேறு. அப்போது நாங்கள் தாக்கப்பட்டோம். இப்போது நிலைமை அப்படி இல்லையே; நேரெதிரான நிலைதான் உள்ளது. எங்கள் கணவர்களை திருப்பி அனுப்ப எப்போது அரசாங்கம் முடிவெடுக்கும்? அவர்கள் கைகள் அல்லது கால்களை இழந்த பிறகா? படுகாயங்களினால் வெறும் காய்கறிகளை போல் அவர்கள் மாறியதும்தான் அவர்களை திருப்பி அனுப்புவீர்களா? இல்லை, அவர்களது உடல்கள் பிரேத பெட்டியில் அடைக்கப்பட்டு அனுப்பப்படும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டுமா?” என கோபத்துடன் கேட்டனர். போர் குறித்து பொதுவெளியில் எந்த விமர்சனம் செய்தாலும் ரஷியாவில் தண்டனைக்குரிய குற்றமாக பார்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/289214
  21. கிளிநொச்சியில் அதிகாலை நடந்த கோர விபத்து! கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச பேருந்துடன், கொழும்பியிருந்து யாழ்ப்பாணம் நோக்கி எதிரே பயணித்த வேன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பேருந்து, விதியில் பயணித்த மாடுகளுடன் மோதிய பின் வேனுடன் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் வவுனியாவை சேர்ந்த 50 வயதுடைய திருமணி திருச்செல்வம் எனும் பெண் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்தவர்களில் ஐவர் கிளிநொச்சி வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, குறித்த விபத்தில் 8 மாடுகளும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.samakalam.com/கிளிநொச்சியில்-அதிகாலை-ந/
  22. நடிகைகளால் சிக்கலில் சிக்கிய அமைச்சர் ஜீவன்! ஹட்டனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் கொண்டாட்டத்தில் தென்னிந்திய நடிகைகளான ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா மேனன் மற்றும் மீனாட்சி (பிங்கி சர்க்கார்) ஆகியோர் கலந்துகொண்டமை தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) பொதுச் செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் சர்ச்சைக்குரியவராக மாறியுள்ளார். அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகளை அறிவித்த போதிலும், இந்த தென்னிந்திய கலைஞர்கள் வரி செலுத்துவோரின் பணத்தைப் பயன்படுத்தி நிதியுதவி செய்தார்களா? என்று அவரைக் கேள்வி எழுப்பும் அவரது அரசியல் எதிரிகளின் விமர்சனத்திற்கு அவர் ஆளாகியுள்ளார். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் மக்கள் அவதியுறும் இவ்வேளையில்,ஜீவன் தொண்டமான் ஏன் தேசிய பொங்கல் விழாவை இவ்வளவு ஆடம்பரமாக கொண்டாட நடவடிக்கை எடுத்தார்? என ஐக்கிய மக்கள் சக்தியின்(SJB) பசறை அமைப்பாளர் லெட்சுமணர் சஞ்சய் கேள்வியெழுப்பியுள்ளார். நுவரெலியா மாவட்டத்தில் மாணவர்களின் இடைவிலகல் அதிகரித்துள்ளதோடு, பல குடும்பங்கள் பட்டினியால் வாடுகின்றனர். மக்கள் 100,000 க்கும் அதிகமான வாக்குகளை அளித்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி அவர்களுக்கான சேவைகளை பெற்றுக் கொடுத்தனர். ஆனால், இவ்வாறான சூழ்நிலையில் தென்னிந்திய நடிகைகளை அழைத்து வருகிறார் ஜீவன் தொண்டமான். வருகைக்கான பணம் எங்கிருந்து வந்தது? இவ்வாறு மக்களின் பணத்தை வீண் விரயம் செய்தமைக்கு மக்கள் பிரதிநிதி என்ற வகையில் ஜீவன் தொண்டமான் நிச்சயம் பதில் சொல்ல வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகைகளை அழைப்பதற்கு பதிலாக, உள்ளூர் கலைஞர்களை கலந்துகொள்ள ஊக்கப்படுத்தியிருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.samakalam.com/நடிகைகளால்-சிக்கலில்-சிக/
  23. மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும்-தமிழ்த் தேசியக் கட்சிகள் கோரிக்கை! மாகாண சபைகளின் தேர்தலை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திடம் நிதியில்லை என்றால் அந்நிதியை இந்தியா வழங்க வேண்டும் என இலங்கைக்கான இந்தியாவின் புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தவைர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பிலே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை இனப்பிரச்சினைகான நிரந்தரமான தீர்வினை வழங்குவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். குறித்த சந்திப்பில் தமிழரசுக்கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன், தமிழ்த் தேசியக் முன்னியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன் இரா.சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா எம்.ஏ.சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன், சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம், வினோநோதராதலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். http://www.samakalam.com/மாகண-சபை-தேர்தலை-நடத்துவ/
  24. ஒடுக்கப்படும் சாமானிய மக்களுக்காக தமிழ் அரசு கட்சியின் புதிய தலைமைத்துவம் செயற்பட வேண்டும் : சிறிதரனுக்கான வாழ்த்தில் சந்திரகாந்தன் கோரிக்கை ! kugenJanuary 22, 2024 மேட்டுக்குடிகளின் நலன்களுக்கு அப்பால் ஒடுக்கப்படும் சாமானிய மக்களின் நலன்பேணும் தலைமையாக தமிழரசுக்கட்சியின் வரலாற்றுப் பாத்திரமானது புதிய பாதையில் பயணிக்க வேண்டும் என்று விரும்புவதாக இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசு கட்சியின் தலைமைத் தேர்வு முடிவுகள் தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் கிராமிய வீதிகள்அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். நீண்ட நெடிய அரசியல் வரலாற்றினை கொண்ட எம் சமூகத்தின் பழம் பெரும் கட்சி ஒன்றுக்கு தலைமை ஏற்றிருக்கும் தங்கள் பயணம் வெற்றுக் கோச சித்தாந்த அரசியலுக்கப்பால் தமிழ் மக்களின் நிலம், நிருவாகம், உரிமை மற்றும் இருப்பு சார்ந்து வெற்றியடைய வேண்டும் என விரும்புகின்றேன். மேட்டுக்குடிகளின் நலன்களுக்கு அப்பால் ஒடுக்கப்படும் அடிமட்ட சாமானிய மக்களின் நலன்பேணும் தலைமையாக தங்கள் வரலாற்றுப் பாத்திரமானது புதிய பாதையில் பயணிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். https://www.battinews.com/2024/01/blog-post_438.html
  25. ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம் 2012 ஆம் ஆண்டு முதல் ரஷ்ய ஜனாதிபதியாக பதவி வகித்து வருபவர் விளாடிமிர் புடின். இவரது ஆண்டு வருமானம் 1.4 இலட்சம் டொலர் என்றும் 800 சதுர அடியில் வீடு, 3 மகிழுந்துகள் மட்டுமே தன்னிடம் இருப்பதாகவும் முன்னதாக அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் புடினின் உண்மையான சொத்து மதிப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. விளாடிமிர் புடினின் சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவலின் அடிப்படையில், அவரது மொத்த சொத்து மதிப்பு 200 பில்லியன் டொலர் என குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், கருங்கடலை ஒட்டி அவருக்கு 1.9 இலட்சம் சதுர அடியில் மிகப் பெரிய மாளிகை உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் குறித்த மாளிகையை பராமரிப்பதற்கு மாத்திரம் 2 மில்லியன் டொலர் செலவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதுதவிற 19 சொகுசு வீடுகள், 700 மகிழுந்துகள், 58 விமானங்கள் மற்றும் 6 இலட்சம் டொலர் மதிப்பிலான கைக்கடிகாரங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன், தி ப்ளெயிங் என்ற விமானத்தில் தங்கத்தில் ஆன கழிவறை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. https://thinakkural.lk/article/288992

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.