Everything posted by கிருபன்
- IMG_6941.jpeg
- IMG_6942.jpeg
-
‘நெரு’ (Neru-மலையாளம்) பாதிக்கப்படும் பெண்களுக்கு போராடக் கற்றுத் தரும் படம்!
பாதிக்கப்படும் பெண்களுக்கு போராடக் கற்றுத் தரும் படம்! -வசந்த் பாரதி ‘நெரு’ (Neru). மலையாளச் சொல்லுக்கு ‘உண்மை’ என்று அர்த்தம். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பார்வையற்ற இளம் பெண், உண்மையை நிலை நாட்ட நடத்தும் சட்டப் போராட்டமே கதை! ஆரம்பம் தொடங்கி இறுதி வரை அறம் பிறழாமல், விறுவிறுப்பு குறையாமல் சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் திரைக் கதை, இயக்கம் அசத்துகிறது! மலையாள இயக்குனர்கள் தமக்குள்ள சமூக பொறுப்பில் சிறிதும் சமரசம் செய்து கொள்வதில்லை. தாம் கூற வருவதை அவர்கள் தெள்ள தெளிவாக கூறி பரந்த அளவில் பாராட்டையும் பெற்று வணிக ரீதியாகவும் வெற்றியடைகிறார்கள்! திரைக்கதை உருவாக்கத்தில் அவர்கள் கோடம்பாக்கத்தை விட மேம்பட்ட தளத்தில்இருப்பதை இது போன்ற திரைப்படங்கள் நிரூபித்து வருகின்றன. திரிஷியம் படைத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்பின் சமீபத்திய படமே நெரு. இந்த படத்தின் குற்றவாளியான மைக்கேல் ஒரு பெரும் செல்வந்தரின் மகன்! கண் பார்வையற்ற ஒரு இஸ்லாமிய இளம் பெண்ணை வீட்டில் தனியே இருக்கையில் அந்த மிருகம் சிதைத்து விடுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குரலை நசுக்க பார்க்கிற முயற்சிகள் பல விதங்களில் அரங்கேறுகிறது. இயக்குனர் ஜித்து ஜோசப்புடன் மோகன்லால். வலுவான உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ராஜசேகர் ( சித்திக்) மூலமாக பணத்தை கொடுத்து சரி கட்டி விடலாம் என்ற ரீதியில், கொலை மிரட்டல் மூலமாக முயற்சிகள் அரங்கேறுகிறது. குற்றவாளியை தப்பிக்க செய்யும் சாட்சியங்களை ஆதாரங்களை எல்லாவற்றையும் தவிடு பொடியாக்குகிறார் நாயகன் மோகன்லால்! பொதுவாக ஒரு குற்றம் நிகழும் போது அந்த குற்றவாளியை தப்பிக்க வைக்க கையாளுகிற உத்தி, அந்த குற்ற சம்பவம் நிகழும்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபர் அந்த குற்ற சம்பவம் நடந்த இடத்தில இல்லை என்பதே. இந்த உத்தியை திரிஷ்யம் படத்தில் இயக்குனர் லாவகமாக பயன்படுத்தியிருப்பார். அதில் குற்ற சம்பவம் நிகழ்ந்த அன்று மோகன்லால் குடும்பத்தினர் அந்த ஊரிலேயே இல்லை என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்து அந்த குடும்பம் தண்டனையிலிருந்து தப்பித்து இருக்கும். அந்த படத்திற்கு நேர்மாறாக இந்தப் படத்தில் நிஜமாகவே திமிர்த்தனத்துடன் அரங்கேறிய குற்றத்தை மறைக்க குற்றம் சுமத்தப்பட்டவரின் வழக்கறிஞர் தன்னுடைய சாதூர்யத்தனத்தால் வீடியோ ஆதாரங்களை அழித்து, நீதிமன்றத்தை திசை திருப்ப முயல்வதை அறிந்து நாயகன் மோகன்லால் அதனை பொய் என்று நிரூபிக்கிறார். பாதிக்கப்பட்ட இஸ்லாமிய இளம் பெண்ணின் தாய் இரண்டாம் தாரமாக வாழ்க்கைபட்டவள்! ஆகவே, வளர்ப்பு தந்தையே தன் மகளை கற்பழித்திருக்க வாய்ப்புண்டு என்ற கொடூர திசைதிருப்பல்கள் நடக்கின்றன! இதனையும் மோகன்லால் மிக நேர்த்தியாக முறியடிக்கிறார். இந்தப் படத்துக்கு இன்னொரு சிறப்பம்சம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணிற்கு பழக்கப்பட்ட தனிச் சிறப்பம்சம் கையால் தடவி உருவத்தை மனக்கண்ணால் உள்வாங்கி களிமண்ணால் உருவத்தை வடிக்கின்ற ஆற்றல் அதனைக் கொண்டு அந்தப்பெண் அந்த குற்றவாளி உருவத்தை களி மண்ணால் வடித்து கொடுத்ததால் போலிஸ் குற்றவாளியை கண்டு பிடித்து விடுகிறது. இது பற்றியும் நீதிமன்றத்தில் கேள்வி எழுகிறது குற்றம் சுமத்தப்பட்டவரின் வழக்கறிஞர் மூலமாக! அது எப்படி உன்னை ஒருவன் பலாத்காரம் செய்யும்போது அவன் முகத்தை கைகளால் வருடிக்கொண்டிருப்பாய் .அவன் செயலை நீ அனுபவித்தாயோ என்பதான கேள்விகள் எல்லாம் முகம் சுளிக்க செய்யும் கேள்விகள்! அதற்கு பதிலாக இயக்குனர் வைக்கும் வாதம் தான் அருமையான ஒன்று; அந்த காமக் கொடூரனிடம் தான். தப்பிக்க முடியாது சிக்கி கொண்டவுடன் அந்த குற்றவாளியை தப்பிக்க விடக்கூடாது என்பதால் தான் அந்த இளம் பெண் அந்த கொடியவன் முகத்தை தனது கைகளால் தொட்டு பார்த்தாள் என்று மோகன்லால் மூலமாய் இயக்குனர் தமது நியாயப்படுத்துதல் வாதத்தையை முன் வைத்திருப்பார். அந்த இளம் பெண்ணின் அந்த சிறப்பு திறமை தான் குற்றவாளியை தப்பிக்க விடாது செய்தது .அதோடு மட்டுமன்றி, அந்த பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் அந்த திறமையை நம்ப மறுக்கிறது குற்றவாளி தரப்பினர் . அப்போது நீதிமன்றத்தின் முன்பாகவே அந்த பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் உருவத்தை தொட்டுத்தடவி களிமண்ணால் உருவமாக படைக்க வேண்டும் என்று கேட்டு கொண்டதைத் தொடர்ந்து அவர் எதிர் தரப்பினர் ஒருவரின் உருவத்தை உருவாக்க ஒத்து கொள்கிறார் . அந்த உருவம் உச்ச நீதி மன்ற வழக்கறிஞர் சித்திக்கின் உருவம் ஏற்கனேவே இந்த வழக்கு தோற்று விடும் என்கிற வெறியில் இருக்கும் இவர் தம்மை இந்த இளம் பெண் உருவமாய் வடிக்கக்கூடாது என்று அவரை திசை திருப்ப வக்கிரத்தன கேள்விகளை எல்லாம் கேட்டு வார்தைகளால் கொடுமைப்படுத்துவார். அதனை எல்லாம் கண்ணீரோடு சகித்துக் கொண்டு அந்த இளம் பெண் நேர்த்தியாய் அந்த வழக்கறிஞர் உருவத்தை வடித்து தமது தனித் திறமையை நீதி மன்றத்தில் நிருபிப்பார்! இது போன்ற வழக்குகளில் எல்லா வழக்கறிஞர்களும் மோகன்லால் போல புத்திக் கூர்மை உள்ளவர்களாக இருப்பதில்லை. முதலில் இந்த வழக்கை விசாரிக்கும் அரசு தரப்பு வழக்கறிஞரை எதிர்தரப்பு விலைபேசி விடுவதால் அவர் சொதப்புவார்! இதைத் தொடர்ந்து ஒரு திற்மையான வழக்கறிஞ்ரை தேடும் போது ஆரம்பத்தில் மோகன்லால் மறுப்பார்! ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதிமன்றத்தில் நீதி மறுக்கப்படக் கூடிய சூழல்கள் அவர் கவனத்திற்கு வரவும் தானே மனம் மாறி, இந்த வழக்கிற்குள் நுழைகிறார்! அதன் பிறகு விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லை. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் அவமானப்பட வேண்டியதில்லை. துணிந்து போராட முடியும். அதற்கு உதவ மனித நேயம் கொண்ட வழக்கறிஞர்களும், சமூக ஆர்வலர்களும் உண்டு! எதிர் தரப்பினர் எவ்வளவு வலுவானவர்கள் ஆனாலும், உண்மையை நிலை நாட்ட முடியும் என இந்தப் படம் தரும் செய்தி மிக முக்கியமானது. பாதிக்கப்பட்ட பெண் சாராவாக நடித்திருக்கும் அனஸ்வரா ராஜன், அவமானங்களை பொறுத்துக் கொண்டு உறுதி குலையாமல் போராடுவதில் பார்வையாளர்களின் இதயங்களில் இடம் பெறுகிறார்! குறிப்பாக, உச்சகட்ட க்ளைமாக்ஸ் காட்சியில் எதிர்த ரப்பு வழக்கறிஞரின் வக்கிரமான வாதங்களை எதிர் கொண்டதில் அசத்தி இருக்கிறார்! பிரியாமணி, சித்திக், சாந்தி, ஜெகதீஷ், மேத்யூ வர்கீஸ் ஆகிய அனைத்து நடிகர்களும் சிறந்த பங்களிப்பை தந்துள்ளனர். ஜித்து மற்றும் சாந்தி மாயாதேவியின் திரைக்கதை வசனம், விநாயக்கின் நுணுக்கமான படத் தொகுப்பு விஷ்ணு ஷ்யாமின் சூழலுக்கு உகந்த பின்னணி இசை அகியவை படத்தை தூக்கி நிறுத்துகின்றன! இந்த படம் ஆரம்பம் முதல் இறுதி வரை தான் கையில் எடுத்த விசயத்திலிருந்து எள்ளளவும் விலகி செல்லாது வணிக ரீதியிலான மசாலாத்தனங்கள் இன்றி ஒரே நேர்கோட்டில் பயணித்துள்ள வகையில் இயக்குனர் தனக்குள்ள சமூக பொறுப்பை உணர்ந்து செயல்பட்டதை பாராட்டியாக வேண்டும். மலையாளம் மட்டுமின்றி, தமிழ், இந்தி, தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ள இந்த சினிமாவை ஹாட் ஸ்டார் ஓடிடியில் பார்க்கலாம்! விமர்சனம்; வசந்த் பாரதி https://aramonline.in/16488/neru-malayalam-cinema/
-
76வது சுதந்திர தினம் கிழக்கில்
76வது சுதந்திர தினம் கிழக்கில் 2024 ஜனவரி 30 இலங்கையின் 76வது தேசிய சுதந்திர தின விழா கிழக்கு மாகாணத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் எதிர்வரும் நான்காம் திகதி 3மணிக்கு நடைபெறவுள்ள சுதந்திர தின விழா தொடர்பான முன்னோட்ட கூட்டம் ஆளுநர் சுற்றுலா விடுதியில் திங்கட்கிழமை (29) நடைபெற்றது. கூட்டத்தின் பின்னர் மட்டக்களப்பு வெபர் அரங்கு கல்லடி பாலம் உள்ளிட்ட இடங்களையும் ஆளுநர் தலைமையிலான குழு பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது. வி.ரி.சகாதேவராஜா https://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/76வது-சுதந்திர-தினம்-கிழக்கில்/73-332331
-
’பகிடிவதைக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை’ - சுரேன் ராகவன்
’பகிடிவதைக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை’ பகிடிவதைகள் தொடர்பான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், சந்தேகநபர் ஒருவருக்கு சுமார் 12 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்குவதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ளன என்று உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், " பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் புதிய மாணவர்களை இலக்கு வைத்து புரியப்படும் பகிடிவதைகள் தொடர்பில் சட்டரீதியான கவனம் செலுத்தப்படும். கடந்த வருடத்தில் கிடைக்கப்பெற்ற 80 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பகிடிவதையுடன் தொடர்புடையனவாக கருத முடியாது. அதேநேரம், பகிடிவதை தொடர்பான முறைப்பாடுகளுக்கு சுமார் 12 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. எனவே, பல்கலைக்கழக மாணவர்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை உரிய வகையில் பயன்படுத்த வேண்டும் என்பதுடன் எதிர்கால நலனை சிந்தித்து செயற்பட வேண்டும்." - என்றார். (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/பகிடிவதைக்கு-12-ஆண்டுகள்-சிறைத்-தண்டனை/175-332310
-
மோனாலிசா ஓவியம் மீது சூப் வீசிய பெண்கள்
மோனாலிசா ஓவியம் மீது சூப் வீசிய பெண்கள் 16-ம் நூற்றாண்டில் ஓவியர் லியோனார்டோ டா வின்சியால் வரையப்பட்ட புகழ்பெற்ற மோனா லிசா ஓவியம் பிரான்ஸின் தலைநகர், பாரிசில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், உலக புகழ்பெற்ற மோனா லிசா ஓவியத்தின் மீது பெண் போராட்டக்காரர்கள் சூப்பை ஊற்றியுள்ளனர். துப்பாக்கி குண்டுகள் துளைக்காத கண்ணாடிக்கு பின்னால் பத்திரமாக மோனா லிசா ஓவியம் வைக்கப்பட்டு இருப்பதால் இந்த சம்பவத்தால் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோவில் உணவு அக்கறை என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட ஆடை அணிந்து வந்த இரண்டு பெண்கள் ஓவியத்தின் மீது சூப் ஊற்றியுள்ளனர். மேலும், தாக்குதலுக்கு பிறகு ஓவியத்தின் முன் நின்று கொண்டு 'ஆரோக்கியமான மற்றும் நிலையான உணவு' உரிமை வேண்டும் என்றும், நமது விவசாய முறை நோய்வாய்ப்பட்டு விட்டது என்றும் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடந்தவுடன் அருங்காட்சியக பொறுப்பாளர்கள் ஓவியத்தை கருப்பு துணி கொண்டு மூடினர். ஓவியர் லியோனார்டோ டா வின்சி அவர்களால் வரையப்பட்ட புகழ்பெற்ற மோனா லிசா ஓவியம் இதற்கு முன்பாக பலமுறை சேதப்படுத்தப்பட்டதும், ஒருமுறை திருடப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/மோனா-லிசா-ஓவியம்-மீது-சூப்-வீசிய-பெண்கள்/50-332327
-
ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் விடுதலை செய்யப்பட்டோரை இலங்கைக்கு அனுப்பக்கோரி சிறீதரன் கடிதம்!
ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் விடுதலை செய்யப்பட்டோரை இலங்கைக்கு அனுப்பக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கடிதம்! நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கடிதம்! யோகி. மறைந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்டு, 32 வருட சிறைத்தண்டனையின் பின் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் திகதி இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தன், முருகன், ரொபேட்பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் இலங்கைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இதுதொடர்பில் சாந்தனின் தாயாரால் தனக்கு சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைக் கடிதத்தை மேற்கோள் காட்டி அவரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; 32 ஆண்டுகால சிறைத்தண்டனையின் பின்னர் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், அவ்வழக்கிலிருந்து விடுதலையான இலங்கைப் பிரஜைகளான சாந்தன், முருகன், ரொபேட்பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் இலங்கைக்கு வரவழைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட எந்த முயற்சிகளும் பலனளிக்காததால் இன்றுவரை அவர்கள் நால்வரும் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை தாங்கள் கரிசனையோடு அணுகுவீர்கள் என எதிர்பார்க்கிறேன். தனது இளமைக்காலம் முழுவதையும்; சிறையில் கழித்து, முதுமைக்காலத்தில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சிறுநீரகப் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு என்பவற்றால் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சாந்தன், தற்போது சென்னை மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் கடந்த 33 ஆண்டுகளாகத் தனது மகனைக் காணாது பரிதவித்திருக்கும் சாந்தனின் தாயார், 77 வயது நிரம்பிய தனது முதுமை நிலையில் ஒருதடவையாவது தனது மகனை நேரில் பார்வையிட வேண்டும் எனவும், அவரை இலங்கைக்கு வரவழைக்க ஆவனசெய்யுமாறும் மிக உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றதிலிருந்து ஈழத்தமிழர்கள் விடயத்தில் அதீத கரிசனை கொண்டிருக்கும் தாங்கள், இவ்விடயத்தை மனிதாபிமான அடிப்படையில் அணுகி நோய்வாய்ப்பட்டிருக்கும் சாந்தனின் உடல்நிலை கருதியும், அவரது குடும்பத்தினரின் உணர்வுநிலைப்பட்ட எதிர்பார்ப்பைக் கருத்திற்கொண்டும் சாந்தன் உள்ளிட்ட நால்வரையும் இலங்கைக்கு அனுப்பிவைக்க ஆவனசெய்யுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். – என்றார். (ச) https://newuthayan.com/article/ராஜீவ்_காந்தியின்_கொலைவழக்கில்_விடுதலை_செய்யப்பட்டோரை_இலங்கைக்கு_அனுப்பக்கோரி
-
கருத்துச் சுதந்திரமா? அது கிரிமினல் குற்றம்
கருத்துச் சுதந்திரமா? அது கிரிமினல் குற்றம் சமூக வலைத்தளங்களில் பொய்யான கூற்றுகளை அறிவிக்கின்ற நபர்களுக்கு அத்தகைய கூற்றுகள் அறிவிக்கப்படுவதை நிறுத்துமாறு அறிவுறுத்தவும், பணிப்புரை வழங்கவும் தடை செய்யப்பட்ட கூற்றொன்றைக் கொண்டுள்ள நிகழ்நிலை அமைவிடமொன்றுக்குள் (online location) இந்த ஆணைக்குழு உறுப்பினர்கள் பிரவேசித்து விசாரணை நடத்தும் சந்தர்ப்பத்தைப் பெற்றிருக்கின்றனர். அரசாங்கத்தால் அவசரமாக முன்மொழியப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தின் ஆபத்துக்களை ஊடக அமைப்புகளும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களும் சுட்டிக்காட்டியபோதும், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் அதனைச் செவிமடுக்கும் நிலையில் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் 12 (1) ஆவது சரத்தை வெவ்வேறு வழிகளில் மீறுவதற்கு இடமளிக்கக்கூடும் என்று ஊடக அமைப்புகள் எச்சரித்துள்ளன. இணையப் பாதுகாப்பு எனப்படும் நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை மீறும் ஒருவர் கிரிமினல் குற்றவாளியாகக் கருதப்படும் ஆபத்தும் உண்டு. கருத்துச் சுதந்திர மீறல் என்பது கிரிமினல் குற்றச்சாட்டாக நிரூபிக்கப்பட்டால், ஒருவருக்கு ஆகக் குறைந்தது இருபது வருடங்கள் வரை சிறைத் தண்டனை வழங்க முடியும். செய்தி அல்லது ஒரு தகவல் தவறான முறையில் வெளியிடப்பட்டிருந்தால் அதனைத் திருத்துவதற்கு அல்லது தண்டிப்பதற்கு வேறு வழிகள் உண்டு. ஆனால் இச் சட்ட மூலம் எந்த ஒரு சாதாரண பொதுமகனும் சிந்திப்பதைத் தடுக்கிறது. நிகழ்நிலை காப்பு நகல் சட்டமூலம் (Online Safety Bill) அரச வர்த்தமானியில் சென்ற வருடம் ஓகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டிருந்தது. இந்த நகல் சட்ட மூலத்துக்கு எதிராகச் சுமார் நாற்பத்து ஐந்து மனுக்கள் இலங்கை ஒற்றையாட்சி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவற்றைப் பரிசீலனைக்கு உட்படுத்தியிருந்த நீதியரசர்கள் சில திருத்தங்களோடு நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையோடு நிறைவேற்ற முடியும் என்று சபாநாயகருக்கு அறிவித்திருந்தனர். ஆனால் 23 ஆம் திகதி புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட குறித்த நகல் சட்டமூலத்தில் உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகள் சேர்க்கப்படவில்லை. அதுபற்றி விவாதிக்கவும் இல்லை. எதிர்க்கட்சிகள் முன்வைத்த திருத்தங்களும் ஏற்றுக் கொள்ளப்படாமல் இச் சட்டமூலம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு 46 மேலதிக வாக்குகளினால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இச் சட்டம் குறித்து ஊடகவியலாளர்கள், சமூகவலைத்தள செயற்பாட்டாளர்கள் மாத்திரமல்ல வர்த்தகர்களும் அரசசார்பற்ற நிறுவனங்களும் அச்சமடைந்துள்ளன. மூன்று வருடங்கள் பதவிக்காலம் கொண்ட ஐந்து பேர் கொண்ட Online Safety Commission எனப்படும் நிகழ்நிலை காப்பு ஆணைக்குழு ஒன்றை அமைத்துச் சில தொடர்பாடல்களை தடை செய்வது இதன் பிரதான நோக்கமாகும். ஐந்து உறுப்பினர்களின் எண்ணிக்கை தேவைகளைப் பொறுத்து மேலும் அதிகரிக்கப்படலாம். ஆணைக்குழு உறுப்பினர்களை ஜனாதிபதியே நியமிப்பார். தடை செய்யப்பட்ட நோக்கங்களுக்காக நிகழ்நிலை கணக்குகள் (Online Account) மற்றும் போலி நிகழ்நிலை கணக்குகளை பயன்படுத்துவதை தடுப்பது உள்ளிட்ட சில விடயங்கள் இந்த நகல் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. போலி நிகழ்நிலை கணக்குகள் குறிப்பாக முகநூல், ரூவிற்றர் போன்ற சமூகவலைத்தளங்களை ஒருவர் போலியாக வைத்திருப்பதாக இந்த ஆணைக்கு கருதினால் அல்லது முறைப்பாடு கிடைத்தால் அந்தக் கணக்குகள் தடை செய்யப்படும். ஆனால் உண்மையான முகநூல் கணக்கு ஒன்றையும் அரசியல் நோக்கில் இந்த ஆணைக்குழு போலியானது எனக் கூறித் தடை செய்யலாம் என்று ஊடக அமைப்புகள் அச்சம் வெளியிட்டுள்ளன. ஏனெனில் பிரதான ஊடகங்களில் வெளியிட முடியாத பல விடயங்களை குறிப்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல்சார்ந்த உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், மற்றும் அரசாங்கத்துக்கு விசுவாசமானவர்கள் மேற்கொள்ளும் ஊழல் மற்றும் அதிகாரத் துஸ் பிரயோகங்களை சமூகவலைத்தளங்கள் வெளிப்படுத்துகின்றன. இதனால் குறித்த சமூகவலைத்தளக் கணக்குகளை இந்த ஆணைக்குழு அரசியல் நோக்கில் திட்டமிட்டுத் தடுக்கக்கூடிய ஏற்பாடுகள் இச் சட்ட மூலத்தில் உண்டு என்பது பகிரங்கமாகும். ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தகவல் தொழில்நுட்பவியல், சட்டம், ஆட்சி, சமூக சேவைகள், ஊடகவியல், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பவியல் அல்லது முகாமைத்துவ துறைகளின் ஒன்றில் அல்லது அதற்கு மேற்பட்டவற்றில் தகைமைகள் மற்றும் அனுபவத்தைக் கொண்டவர்களாக இருப்பர். இவ்வாறு நிபுணர்களைக் கொண்ட குறித்த ஆணைக்குழு பிரதான செய்தி ஊடகம் ஒன்றில் வெளியான செய்தி ஒன்றினால் பாதிக்கப்பட்ட அல்லது அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட அறிக்கையை வெளியிட்ட நபருக்கு (ஊடகவியலாளருக்கு) அல்லது அவற்றுடன் தொடர்புடைய நபர்களுக்கு எச்சரிக்கை உத்தரவுகளை இந்த ஆணைக்குழு வழங்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது. இந்த எச்சரிக்கைக்கு எதிராக குறித்த செய்தியாளர் அல்லது குறித்த சமூகவலைத்தளச் செயற்பாட்டாளர் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்க இயலாது. அத்துடன் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், அத்தகைய தடை செய்யப்பட்ட அறிக்கையிடலுக்கு பதிலளிப்பதற்கான வாய்ப்பை வழங்குமாறு பணிப்புரை வழங்கவும் முடியும். சமூக வலைத்தளங்களில் பொய்யான கூற்றுகளை அறிவிக்கின்ற நபர்களுக்கு அத்தகைய கூற்றுகள் அறிவிக்கப்படுவதை நிறுத்துமாறு அறிவுறுத்தவும், பணிப்புரை வழங்கவும் தடை செய்யப்பட்ட கூற்றொன்றைக் கொண்டுள்ள நிகழ்நிலை அமைவிடமொன்றுக்குள் (online location) இந்த ஆணைக்குழு உறுப்பினர்கள் பிரவேசித்து விசாரணை நடத்தும் சந்தர்ப்பத்தைப் பெற்றிருக்கின்றனர். அல்லது அத்தகைய நிகழ்நிலை அமைவிடத்தில் இருந்து தடை செய்யப்பட்ட கூற்றை அகற்றுவதற்கு எவரேனும் இணைய சேவை வழங்குநர்களுக்கு அல்லது இணைய இடையீட்டாளர்களுக்கு அறிவித்தல்களை வழங்கவும் நீதிமன்றத்தை அவமதிக்கும் அல்லது நீதித்துறையின் அதிகாரம் மற்றும் பக்கசார்பின்மையின் பேணுகைக்கு பாதகமாகவுள்ள எவையேனும் தொடர்பாடல்களை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது. இந்த ஐந்து பேர் கொண்ட ஆணைக்குழுவிற்கு எதிராக எந்தவிதமான சிவில் அல்லது குற்றவியல் வழக்கொன்றைத் தொடுக்க முடியாது. இணையத்தளத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்ற பல்வேறு செயற்பாடுகள் இந்த நகல் சட்டமூலத்தில் குற்றங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. இலங்கைக்குள் இடம்பெறுகின்ற சம்பவங்கள் தொடர்பாக பொய்யான கூற்றுக்களை பகிர்தல், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான பொய்யான அறிவிப்புகளை செய்தல், கலகத்தை ஏற்படுத்துவதற்காக பொய்யான கூற்றுகள் மூலம் அநாவசியமான முறையில் ஆத்திரமூட்டுதல், பொய்யான கூற்றொன்றின் மூலம் மதக்கூட்டம் ஒன்றைக் குழப்புதல், மத உணர்வுகளை புண்படுத்த வேண்டும் என்ற திடமான உள்நோக்கத்துடன் போலியான கூற்றுகளை பகிர்தல், மோசடி செய்தல், ஆள் மாறாட்டம் செய்து ஏமாற்றுதல், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் உள்நோக்கத்துடன் பொய் கூற்றுகளின் மூலம் வேண்டுமென்றே நிந்தை செய்தல், கலகத்தை அல்லது அரசாங்கத்திற்கு எதிரான குற்றமொன்றை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் பொய்யான அறிவிப்புகளை பரப்புதல், துன்புறுத்தல்களை மேற்கொள்வதற்கான சம்பவங்கள் தொடர்பான கூற்றுகளை தொடர்பாடல் செய்தல் குற்றங்களாகும். அத்துடன் சிறுவர் துஸ்பிரயோகம், தவறொன்றைச் செய்வதற்காக தன்னியக்கச் செய் நிரல்களை உருவாக்குதல் அல்லது மாற்றுதல், ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட பணிப்புரையுடன் இணங்கி செயற்படத் தவறுதல் என்பன இந்த சட்டத்தின் கீழ் பாரிய குற்றங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சட்டத்தின் கீழ் தவறிழைக்கும் ஒருவருக்கு விளக்கமறியல் உத்தரவை பிறப்பிக்க, அபராதம் விதிக்க அல்லது குறித்த இரண்டு தண்டனைகளையும் ஒரே தடவையில் விதிக்க முடியும் எனவும் இ;ச் சட்டமூலம் தெளிவாகக் கூறுகின்றது. இதேபோன்றதொரு சட்ட அமைப்பு பிரித்தானியாவில் கடந்த யூலை மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த நான்கு வருடங்களாக பொதுமக்கள். ஊடகத்துறையினர், சமூகவலைத்தளச் செயற்பாட்டாளர்கள் என பலரோடும் கலந்துரையாடியே சட்டம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. எவருக்கும் பாதிப்பில்லாத வகையில் அதேநேரம் இணையப் பாதுகாப்புக்கு ஏற்ற முறையிலும் சமூகவலைத்தளச் செயற்பாட்டாளர்களின் உரிமைகளையும் கருத்துச் சுதந்திரத்தையும் பாதிக்காத முறையில் சட்டம் இயற்றப்பட்டிருக்கின்றது. ஆனால் இலங்கைத்தீவில் இச் சட்டமூலம் உருவாக்கப்பட்டபோது எவருடனும் கலந்துரையாடப்படவில்லை. குறிப்பிட்ட சில சட்டத்தரணிகளும் சட்டமா அதிபர் திணைக்களமும் இச் சட்ட மூலத்தை தயாரித்திருக்கின்றன. அத்தோடு உயர் நீதிமன்றம் கூட இதனை அங்கீகரித்திருக்கிறது. குறிப்பிட்ட சில சரத்துக்களில் மாத்திரம் நாடாளுமன்றத்தில் திருத்தம் செய்ய வேண்டுமென உயர் நீதிமன்றம் சபாநாயகருக்கு அறிவுறுத்தியிருக்கிறது. நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துக்காக எதிர்வரும் 23 ஆம் திகதி புதன்கிழமை சமர்ப்பிக்கப்பட்டாலும் ஐந்துபேர் கொண்ட ஆணைக்குழுவை நியமிக்க நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் வழங்கப்படுமா அல்லது ஜனாதிபதிக்கு தன்னிச்சையாக நியமிக்கும் அதிகாரம் வழங்கப்படுமா என்பது குறித்து இதுவரை எவருக்குமே தெரியாது. உயர் நீதிமன்ற அறிவுறுத்தல்களின் பிரகாரம் திருத்தங்களைச் செய்வதற்குக் கூட நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. போர் நடைபெற்ற 2009 மே மாதம் வரையும் சமூகவலைத்தளங்கள் இலங்கைத்தீவில் பெரியளவில் இயங்கவில்லை. ஆனால் ஊடகங்களைக் கட்டுப்படுத்த குறிப்பாக தமிழ் ஊடகங்களையும் தமிழ் ஊடகவியலாளர்களையும் கட்டுப்படுத்த மிகக் கடுமையான முறையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை அரசாங்கம் வடக்குக் கிழக்கில் நடைமுறைப்படுத்தியிருந்தது. தமிழ் ஊடகத்துறை விவகாரத்தைக் கையாள இராணுவமும் புலனாய்வுத் துறையும் தன்னிச்சையாகவும் செயற்பட்டிருந்தது. இதுவரை தமிழ் ஊடகத்துறையைச் சேர்ந்த 39 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஊடக நிறுவனங்கள் பல தடவைகள் குண்டு வீசித் தாக்கப்பட்டிருக்கின்றன. 1981 ஆம் ஆண்டு யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரையும் தமிழர்களின் கருத்துச் சுதந்திரத்தை இலங்கை அரசாங்கம் கிரிமினல் குற்றமாகவே ஓரக் கண்ணால் பார்க்கிறது. ஆனால் தற்போதுதான் சிங்கள ஊடகத்துறையும், சிங்கள சிவில் சமூக அமைப்புகளும், சிங்கள சமூகவலைத்தளச் செயற்பாட்டாளர்களும் கருத்துச் சுத்தந்திரத்தைக் கிரிமினல் குற்றமாகக் கருதக்கூடிய அளவுக்குச் சட்டங்களை இயற்ற முடியுமா என்று கேள்வி எழுப்பி அச்சமடைகின்றனர். அதேநேரம் மட்டக்களப்பு மயிலத்தமடுமாதவனை கூளாவடி குளத்துவெட்டை பகுதிகளில் அத்துமீறிப் பயிர் செய்கையிலீடுபடும் சிங்கள விவசாயிகள், இராணுவத்தின் ஒத்துழைப்புடன் போடப்பட்ட மின்வேலிகளில் சிக்கி உயிரிழக்கும் பசுமாடுகள் பற்றிய செய்திகளை வெளியிட சிங்கள ஆங்கில ஊடகங்கள் வெளியிட மறுக்கின்றன. அவ்வாறு வெளியிட்டாலும் சிங்கள விவசாயிகளைத் தடுக்கும் தமிழ்ப் பயங்கரவாதிகள் என்றே குறிப்பிடுகின்றன. ஆகவே இச் சட்டமூலத்தை கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான கிரிமினல் குற்றம் என்றால், தமிழர்கள் விடயத்தில் சிங்கள ஊடகத்துறையினர் கையாளும் செய்தியிடல் முறையும் கிரிமினல் குற்றமல்லவா? போர்க் காலத்தில் சில சிங்கள ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதை மறுப்பதற்கில்லை. அவ்வாறு முற்போக்காகச் சிந்திக்கக் கூடிய சிங்கள ஊடகவியலாளர்கள் தற்போது மிகவும் அரிதாகவே உள்ளனர். http://www.samakalam.com/கருத்துச்-சுதந்திரமா-அ/
-
மன்னிப்புக் கேட்பவர்கள்-மிலன் குந்தேரா (Milan kundera)
பல வருடங்களுக்கு முன்னர் ஆங்கிலத்தில் படித்திருந்தேன். இதைப் பற்றி யாழில் அல்லது முகநூலில் உரையாடிய நினைவு ஆனால் ஒரு பதிவையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. பிரெஞ்சில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்தது: https://www.newyorker.com/magazine/2015/05/04/the-apologizer
-
ஜோர்தான் சிரியா எல்லையில் அமெரிக்க இராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் பலி 30 பேர் காயம்
ஜோர்டானில் ஆளில்லா விமான தாக்குதல் : 3 அமெரிக்க இராணுவ வீரர்கள் பலி சிரியா ஜோர்தான் எல்லையிலுள்ள அமெரிக்க இராணுவதளத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் மூன்று அமெரிக்க படையினர் கொல்லப்பட்டுள்ளதோடு பலர் காயமடைந்துள்ளனர். ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலின் பின்னர் பிராந்தியத்தில் அமெரிக்க படையினர் கொல்லப்படுவது இதுவே முதல்தடவையாகும். ஈரான் ஆதரவு குழுக்களே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளன என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி நாங்க்ள பதிலடிகொடுப்போம் என தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலிற்கு காரணமானவர்களை நாங்கள் தகுந்த தருணத்தில் உரிய விதத்தில் பொறுப்புக்கூறச்செய்வோம் என பைடன் தெரிவித்துள்ளார். நேற்றிரவு நாங்கள் மத்தியகிழக்கில் மிகவும் சவாலான சூழ்நிலையை எதிர்கொண்டோம் மூன்று துணிச்சல் மிக்க ஆன்மாக்களை இழந்துள்ளோம் எனஅவர் தெரிவித்துள்ளார். கொல்லப்பட்ட அமெரிக்க படையினரின் பெயர் விபரங்களை இன்னமும் வெளியிடாத அதிகாரிகள் குடும்பத்தவர்களிற்கு தகவல்களை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மூளை காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் 34 படையினரை மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தியதாகவும் காயமடைந்த சிலர் மேலதிக சிகிச்சைக்காக முகாமிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் எனவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படையினர் தங்கியிருக்கும் பகுதிகளை இலக்குவைத்தே ஆளில்லா விமானதாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதல்வடகிழக்கு ஜோர்தானிலேயே இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதியும் மத்தியகட்டளை பீடம் தெரிவித்துள்ள அதேவேளைசிரியாவிற்குள்ளேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. எங்கள் பகுதிக்குள் இந்த தாக்குதல் இடம்பெறவில்லை என ஜோர்தான் தெரிவித்துள்ளது. டவர் 22 என்ற தளத்தின் மீதே தாக்குதல் இடம்பெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. https://canadamirror.com/article/drone-attack-on-us-military-base-hree-were-killed-1706503268
-
மனதும் இடம்பெயரும்
"மனமும் இடம் பெயரும்" என்ற சிறுகதைத்தொகுப்பு நூல் கிளிநொச்சியில் வெளியீட்டு: (யோகி) யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக்கொண்டு தற்போது புலம்பெயர்ந்து வாழும் நிவேதா உதயராஜன் எழுதிய "மனமும் இடம்பெயரும் "என்ற சிறுகதைத்தொகுப்பு நூல் வெளியீடு (28)இன்றைய தினம் கிளிநொச்சி கல்வி பண்பாட்டு அபிவிருத்தி நிறுவன மண்டபத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலய அதிபர் பெ.கணேசன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கவிஞர்கள்,மாவட்ட பொது அமைப்பு சார்ந்தோர்,பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர். https://newuthayan.com/article/"மனமும்_இடம்_பெயரும்"_என்ற_சிறுகதைத்தொகுப்பு_நூல்_கிளிநொச்சியில்_வெளியீட்டு:
-
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுகள் திருகோணமலையில் இன்று
தமிழரசுக் கட்சி விவகாரம்: ”விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை” வாக்கெடுப்பின் மூலமாகத்தான் பொதுச் செயலாளர் பதவிக்குரிய நபரைத் தெரிவு செய்ய வேண்டும் என்பதை நாம் மிகவும் ஆணித்தரமாக கூறியுள்ளோம் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “பொதுச் செயலாளர் தெரிவின் போது வாக்களிப்புக்கு அழைக்கப்படாதவர்கள், அங்கு உணவு பரிமாறியவர்கள் உள்ளிட்டோரும் இருந்துள்ளார்கள். ஆகவே அந்த வாக்களிப்பு உண்மையிலேயே ஏற்றுக் கொள்ள முடியாதிருந்தது. எனவே மீண்டும் பொதுச் சபையின் வாக்கெடுப்பின் மூலமாகத்தான் பொதுச் செயலாளர் பதவிக்குரிய நபரைத் தெரிவு செய்ய வேண்டும் என்பதை நாம் மிகவும் ஆணித்தரமாக கூறியுள்ளோம்” என தெரிவித்துள்ளார். -(3) http://www.samakalam.com/தமிழரசுக்-கட்சி-விவகாரம்/
-
இலங்கை தமிழரசுக்கட்சி உடைந்துவிட்டது! - சித்தார்த்தன்
இலங்கை தமிழரசுக்கட்சி உடைந்துவிட்டது! adminJanuary 29, 2024 இலங்கை தமிழரசுக்கட்சி இரண்டாக உடைந்து இருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். நேற்று (28.01.24) யாழில் ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், தமிழ் கட்சிகள் தேசிய அரசாங்கத்துடன் இணைந்து அரசாங்கமாக செயற்பட மாட்டார்கள். தம்மை பொறுத்த வரையில் தாம் இணையப்போவதில்லை அது வேறு விடயம், ஆனால் மற்றைய கட்சிகள் இணைய வாய்ப்புக்கள் இருக்கலாம். தமிழரசுக்கட்சியின் தலைவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதிலும் சிக்கல் ஒன்று காணப்படுகிறது. அதன் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதை விட முக்கியமான விடயம் தமிழரசுக்கட்சி இரண்டாக உடைந்து இருக்கிறது. அது இரண்டா, மூன்றாகவா என்று தெரியவில்லை ஆனால் உடைந்து இருக்கிறது என சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார். https://globaltamilnews.net/2024/200207/
-
மன்னிப்புக் கேட்பவர்கள்-மிலன் குந்தேரா (Milan kundera)
மன்னிப்புக் கேட்பவர்கள்-மிலன் குந்தேரா (Milan kundera) ஜூன் மாத காலையில், கிழக்கில் கிளம்பிய சூரியனைப் போல, மெதுவாக பாரீஸ் வீதியில் சென்று கொண்டிருந்தான் அலயன். எதிர்ப்பட்ட அனைத்து இளம் பெண்களும் குட்டையாக அணியப்பட்ட மேல் சட்டைக்கும், இறக்கமாக அணியப்பட்ட கால் சட்டைக்கும் இடையில் மையமாக, விகாசமாகத் தொப்புள் தெரியுமாறு உடுத்தி இருந்ததைக் கவனித்தவாறே நடந்தான். அவனைப் பொறுத்த வரை, பெண்கள் மீதான கவர்ச்சியின் மையல் தொடை, மார்பு, பின்புறங்களிலிருந்து ஏகமாக விலகி, இந்த வட்ட வடிவ மையப் புள்ளியில் தேங்கி விட்டதைப் போல, அந்த காட்சிகளால் ஈர்க்கப்பட்டு, வசீகரிக்கப்பட்டு, சலனத்திற்கு உள்ளாகி இருந்தான். தொப்புளின் மீதான இந்த திடீர் மையல், பெண்மையின் கவர்ச்சி சார்ந்து புதிய கேள்விகளையும் சிந்தனைகளையும் அவனுக்குத் தூண்டியது. விளைவாக, தொடையைக் கவர்ச்சியின் பிரதான மையமாகக் கருதுபவனின் (கருதும் தலைமுறையின்), காமம் சார்ந்த ரசனையையும், தனித்த பார்வையையும் எவ்வாறு புரிந்து கொள்வது என்ற கேள்வி எழுகிறது. களிப்பையும் நிறைவையும் நோக்கிய பயணத்தில், நீளும் ஒவ்வொரு கணத்திலும் இன்பத்தைப் பொதித்து வைத்திருக்கும் நீண்ட சாலையுடன் நீளும் கால்களை ஒப்பீடு செய்கிறான். அதன் முடிவாக, கூடலின் போது, அனுபவித்து உணர்ந்திடாத மாய ஜாலங்களை நிகழ்த்தக் கூடிய ஆற்றலைப் பெண்களுக்கு அளிக்கக் கூடியது அத்தகைய கால்கள் என்று கற்பிதம் செய்து கொள்கிறான். இதைத் தொடர்ந்து அதே கேள்வி பெண்களின் பின்புறங்களில் மையல் கொண்டவர்களை நோக்கி எழுகிறது. அதை இரட்டை இலக்குகளை ஒன்று சேர அடையக்கூடிய விரைவான பாதையுடன் ஒப்பீடு செய்கிறான். அதன் தொடர்ச்சியாக, அதை அதீத உற்சாகமும், முரட்டுத்தனத்தையும் வெளிப்படுத்தும் ரசனைத் தேர்வு என்ற புரிதலுக்கு வருகிறான். அடுத்ததாக மார்பகங்களின் மீதான ஈர்ப்பை நோக்கி அந்த கேள்வி இடம் பெயர்கிறது. அந்த ரசனை வெளிப்பாட்டை, மேரியிடம் பால் குடிக்கும் குழந்தை இயேசுவுடன் ஒப்பிட்டு, பெண் படைப்பின் புனித நோக்கங்களின் முன் ஆண்கள் மண்டியிட்டு ஆராதிப்பதாக முடிவுக்கு வருகிறான். ஆயினும், உடலின் மையப் புள்ளியான, குழிவான தொப்புளின் கவர்ச்சியில் மையல் கொள்ளும் ரசனையை எவ்வாறு வரையறுப்பது? மெதுவாக வீதிகளில் உலவியபடி தொப்புளைப் பற்றிச் சிந்திப்பது அவன் வழக்கமாக இருந்தது. மீண்டும் மீண்டும் அதைப் பற்றிச் சிந்திப்பது எந்த விதத்திலும் அவனுக்குச் சலிப்பைத் தரவில்லை. அந்த சிந்தனை அவனது தாயுடனான கடைசி சந்திப்பைப் பற்றிய நினைவுகளை அடிமனதிலிருந்து மீட்பதாலேயே, பிடிவாதமாகத் தொப்புளைப் பற்றிச் சிந்தித்தான். அவனுக்குப் பத்து வயது இருக்கும். அலயன் விடுமுறையைக் கழிக்க நீச்சல்குளமும் தோட்டமும் கொண்ட வாடகை சொகுசு விடுதியில், தந்தையுடன் தங்கி இருந்தான். பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவள் இப்பொழுது தான் முதன்முறையாக அவர்களைச் சந்திக்க வருகிறாள். பூட்டிய அந்த சொகுசு விடுதி கதவுகளுக்குப் பின்னால் அவளும் அவள் முன்னாள் கணவரும் மட்டும். பல மைல் தொலைவிலும் அந்த சூழலின் உஷ்ணம் உணரப்பட்டது போல் இருந்தது. எவ்வளவு நேரம் அங்கு இருந்தாள்? அதிகபட்சம் ஒன்றிரண்டு மணி நேரம் இருக்கலாம். அந்த சமயத்தில் அலயன் நீச்சலில் பொழுதுபோக்கிக் கொண்டிருந்தான். அங்கிருந்து கிளம்பத் தயாரான அவள், அவன் நீச்சல்குளத்திலிருந்து மேலேறி வந்ததைக் கவனித்து விட்டு, அவனிடம் விடை பெறுவதற்காக நின்றாள். தனியாக இருந்த அவளிடம் அலயன் என்ன பேசினான்? அவள் என்ன பேசினாள்? எதுவும் அவனுக்கு நினைவில் இல்லை. அவனுக்கு நினைவில் இருப்பது அந்த தோட்டத்து இருக்கையில் அவள் அமர்ந்திருந்ததும், நீர் வடியும் நீச்சலுடையில் அவளைப் பார்த்தவாறு அவன் நின்றிருந்ததும் மட்டுமே. அவளுடனான சம்பாஷனைகள் அவன் நினைவுகளைத் தப்பி இருந்தாலும், ஒரு கணம் மட்டும் காலத்திற்குமாக அவன் நினைவுகளில் உறைந்து விட்டிருந்தது. அது அந்த இருக்கையிலிருந்தவாறு அவன் தொப்புளை ஊடுருவிப் பார்த்த அவள் பார்வை. இன்னமும் அந்த பார்வையின் வீச்சை அவனால் உணர முடிகிறது. அவனைப் பொறுத்தவரை அது அன்பும் அவமதிப்பும் கலந்த விவரிக்க முடியாத ஒரு பார்வை. அதே உணர்வு அவள் புன்னகையின் உதட்டு சுழிப்பிலும் பிரதிபலித்தது. அந்த இருக்கையிலிருந்தவாறே, முன் சாய்ந்து, தன் ஆள்காட்டி விரலால் அவன் தொப்புளைத் தொட்டாள். உடனடியாக எழுந்து, அவனை முத்தமிட்டு விட்டு, அந்த முத்தத்தை அவன் சந்தேகத்துக்கிடமின்றி முத்தம் என உணரும் முன், அந்த இடத்தை விட்டுச் சென்று விட்டாள். அதன் பிறகு அவளை அவன் சந்திக்கவே இல்லை. ஒரு பெண் காரிலிருந்து இறங்குகிறாள் ஆற்றை ஒட்டிய சாலையில் ஒரு கார் பயணிக்கிறது. புறநகருக்கும் கிராமப்புறத்திற்கும் இடைப்பட்ட, குடியிருப்புகளும் ஜன சந்தடியும் குறைவாக இருந்த, அந்த நிலப்பரப்பின் மந்தமான சூழலை, மேலும் பரிதாபத்திற்குரியதாக உணரச் செய்தது அந்த காலையின் குளிர்காற்று. அப்பொழுது அந்த கார் சாலை ஓரத்தில் நிற்கிறது. அழகிய இளம்பெண் ஒருத்தி அந்த காரில் இருந்து இறங்குகிறாள். பூட்டப்பட்டு விடாதவாறு அந்த கார் கதவை, அவள் அலட்சியமாகச் சாத்தியது வினோதமாக இருக்கிறது. அந்த அலட்சியத்தின் பொருள் என்ன? இந்நாட்களில் திருட்டு பயம் குறைந்துவிட்டதா? அந்த பெண்ணின் கவனச்சிதறலா? கவனச்சிதறலாக இருக்க முடியாது என்பதை அந்த பெண்ணின் முகத்தில் பரவி இருந்த தீர்க்க ரேகைகள் உணர்த்தியது. தனக்கு என்ன தேவை என்பதில் தீர்க்கமாக இருந்தாள். பரிபூரணமான நெஞ்சுரம் மிக்கவள் இவள். சாலையை ஒட்டி சில நூறு அடிகள் நடந்து, பிறகு ஆற்றுப் பாலத்தை நோக்கி நடந்தாள். அந்த பாலம் சற்றே உயரமாகவும், குறுகலாகவும், வாகனப் போக்குவரத்தில் இருந்து விலக்கப்பட்டதாகவும் இருந்தது. அவள் அந்த பாலத்தில் ஏறி மறுகரையை நோக்கி சுற்றிலும் நோட்டம் விட்டவாறு நடக்கிறாள். அந்த பார்வை யாரையும் எதிர்பார்ப்பதாக இல்லாமல், யாரும் தன்னை எதிர்பார்த்து விடக் கூடாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதாக இருந்தது. நடுப் பாலத்தை எட்டியவுடன் நிற்கிறாள். முதலில் தயக்கத்தால் நின்றதைப் போலத் தோன்றினாலும், தயக்கத்தின் காரணமாகவோ, திடீரென எடுத்த முடிவின் காரணமாகவோ அவள் நிற்கவில்லை; மாறாகக் கவனத்தைக் கூர்மையாக்குவதற்காகவும், தன் நெஞ்சுரத்தைத் திடப்படுத்துவதற்காகவும் நின்றாள். நெஞ்சுரம் எனில்? சரியாகச் சொல்வதென்றால் விரக்தி. தயக்கத்தைப் போல் தோன்றிய அந்த இடைவெளி, அவளது உணர்வுகளுடனான முறையிடல்- தன் விரக்தி தன்னை கைவிட்டு விடாமல், தன் முடிவிற்குத் துணையாகவும் ஆதரவாகவும் இருப்பதற்காக அவள் வேண்டுகிறாள். பாலத்தின் கைப்படியில் கால் வைத்து, காற்று வெளிக்குள் பாய்கிறாள். பாய்ச்சலின் முடிவில், உறைந்த ஆற்றின் மேற்பரப்பில் மோதி, குளிரால் செயலிழந்து போகிறாள். சில வினாடிக்குப் பிறகு, அவள் நீருக்கு மேல் தலை காட்டுகிறாள். அவளது உள்ளார்ந்த நீச்சல் திறன்கள், சாக விரும்பும் அவள் முடிவிற்கு விரோதமாக, அனிச்சையாக வெளிப்பட்டு விட்டது. தன்னை மூர்ச்சையடையச் செய்ய, மீண்டும் நீருக்குள் மூழ்கி, காற்றுடன் நீரையும் வலிந்து நுரையீரலுக்குள் திணிக்க முயலுகிறாள். எதிர்பாராத விதமாக மறுகரையிலிருந்து ஒரு அபயக்குரல். யாரோ ஒருவர் பார்த்து விட்டார். திடீரென மரணம் தன்னை விட்டு விலகுவதை உணர்கிறாள். தன் கட்டுப்பாட்டை மீறிய நீச்சல் திறன்களை விட, தன் கவனத்திலிருந்து தப்பிய ஒருவனே மிகப் பெரும் இடையூறாக இருப்பான் என்பது புரிகிறது. தன் சாவை மீட்டெடுக்க அவள் கடுமையாகப் போராட வேண்டி இருக்கும். அவள் கொல்கிறாள் அவள் குரல் வந்த திசையைப் பார்க்கிறாள். யாரோ ஒருவர் ஆற்றினுள் பாய்ந்தார். யாருடைய முயற்சி வெற்றி பெறக்கூடும் என ஆலோசிக்கிறாள்- தண்ணீரை உள்ளிழுத்து, மூழ்கிச் சாகும் தன் முயற்சியா? தன்னை காப்பாற்ற விரைந்து வருபவரின் முயற்சியா? நுரையீரலில் நீர் புகுந்து, பலகீனமான நிலையில் மூழ்கிக் கொண்டிருக்கும் போது, அவளைக் காப்பாற்ற முனைபவரின் நோக்கத்திற்கு அவள் எளிதான இலக்காகி விடக்கூடுமல்லவா? அவன் அவளைக் கரைக்கு இழுத்துச் சென்று, படுக்க வைத்து, கையால் அழுத்தியும், வாயால் உறிஞ்சியும் நீரை வெளியில் எடுத்து, மீட்புக்குழுவையும், காவலர்களையும் அழைத்து, அவளைக் காப்பாற்றக்கூடும். இதனால் வாழ்க்கை முழுதும் கூடுதலாக அவள் அவமானப்பட நேரிடும். “நில்! நில்!” அவன் கத்துகிறான். அனைத்தும் மாறிவிட்டது. அவள் நீருள் மூழ்குவதற்குப் பதிலாக, நீருக்கு மேல் எழும்பி, ஆழமாக மூச்சை இழுத்து தன் பலத்தைத் திரட்டிக் கொள்கிறாள். இதற்கிடையில் அவன் அவளை நெருங்கி விட்டான். இந்த முயற்சியின் மூலம் நாளிதழ்களில் இடம்பிடித்து, புகழ்பெற விரும்பும் பதின்ம வயது இளைஞன் அவன். “நில்! நில்!” எனத் தொடர்ந்து கூறியவாறு, அவளை நோக்கி தன் கைகளை நீட்டுகிறான். அவன் பிடியிலிருந்து விலகுவதற்குப் பதிலாக, அவள் அந்த கைகளை இறுகப் பிடித்து, ஆற்றின் ஆழமான பகுதியை நோக்கி அவனை இழுக்கிறாள். வேறெந்த வார்த்தையையும் பேசி அறிந்திடாதவனைப் போல, “நில்!” என மீண்டும் இரைகிறான். அதுவே அவன் பேசிய கடைசி சொல். அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு, அவன் தலை நீருக்குள் மூழ்கும் விதமாக தன் உடலை அவன் உடலோடு பின்புறமாகப் பொருத்திக் கொண்டு, அவனை ஆற்றின் அடிப்பகுதியை நோக்கி இழுக்கிறாள். தண்ணீரை உள்ளிழுத்து விட்ட அவன், கைகளை வீசுகிறான், விளாசுகிறான்; அந்த பெண்ணை வீழ்த்த போராடுகிறான். ஆனால் அவன் நீருக்கு வெளியில் தலையைத் தூக்கி மூச்சை இழுத்து விட முடியாதபடி அவள் அவன் மீது அழுத்தமாகப் பரவி இருக்கிறாள். சில நீண்ட, மிக மிக நீண்ட விநாடிகளுக்குப் பிறகு, அவன் அசைவுகளை இழந்து விட்டான். சோர்ந்து, நடுங்கி, ஓய்வெடுப்பதைப் போல, அந்த நிலையிலேயே அவன் மீது சிறிது நேரம் இருந்தாள். தன் பிடியில் இருக்கும் உடலில் எந்த அசைவுகளும் மீதம் இல்லை எனச் சமாதானம் அடைந்த பிறகே அந்த உடலை விட்டு விலகினாள். நடந்து முடிந்த நிகழ்வுகளின் நிழல் கூட தன்னுடன் வராதவாறு, அங்கிருந்து திரும்பித் தான் வந்த கரையை நோக்கி நகர்ந்தாள். என்ன நடக்கிறது இங்கே? தன் முடிவை மறந்துவிட்டாளா அவள்? அவள் ஏன் தன்னை நீரில் மூழ்கடிக்கவில்லை? அவள் சாவை அவளிடமிருந்து பறிக்க வந்தவன் உயிருடன் இல்லை என்பதாலா? தன்னை தடுக்க யாருமில்லாத போது, அவள் ஏன் சாவை தேடிப் போகவில்லை? எதிர்பாராத விதமாக மீட்கப்பட்ட வாழ்க்கை, அவளது தீர்மானங்களை நொறுக்கி விட்டது. தற்கொலை முயற்சியில் கவனம் செலுத்துவதற்கான மனபலத்தை அவள் இழந்து விட்டாள். திடீரென தன்னிடமிருந்த நெஞ்சுரத்தையும், பலத்தையும் இழந்து விட்டதால், அவள் நடுங்குகிறாள். அனிச்சையாக அவள் காரை விட்டு வந்த இடத்தை நோக்கி நீந்துகிறாள். அவள் வீடு திரும்புகிறாள் கொஞ்சம் கொஞ்சமாக தனக்குக் கீழிருக்கும் ஆற்றின் ஆழம் குறைந்ததை உணர்ந்தவள், தரையைத் தொட்டு நிற்கிறாள். அப்பொழுது சேற்றில் புதைந்து தவறிய காலணிகளைத் தேடக் கூட தெம்பின்றி, கரையேறி, சாலையை நோக்கி நடக்கிறாள். இப்பொழுது இந்த உலகம் வரவேற்க்கத்தக்கதாக தோன்றவில்லை. மாறாக ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டது: கார் சாவி கையில் இல்லை. சாவி எங்கே? அவளது பாவாடையில் பைகளும் இல்லை. மரணத்தை மனதில் வரித்துக் கொண்டு செல்கையில், வழியில் எதைப் புறக்கணித்து விட்டுச் செல்கிறோம் என்பதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அவள் காரை விட்டுச் செல்லும் பொழுது, எதிர்காலம் என்ற ஒன்று இல்லை. அவள் மறைக்க எதுவும் இல்லை. ஆனால் இப்பொழுது அவள் அனைத்தையும் ஆதாரமில்லாமல் மறைக்க வேண்டும். அவள் பதற்றம் அதிகரித்துக் கொண்டே இருந்தது: சாவி எங்கே? வீட்டை எப்படி அடைவது? அவள் காரை அடைந்து கதவைத் திறக்க முயலுகையில், ஆச்சரியமூட்டும் விதமாகக் கதவு திறந்து கொண்டது. ஓட்டுநர் இருக்கை முன் அவளால் புறக்கணிக்கப்பட்ட சாவி அவளுக்காகக் காத்துக் கிடந்தது. இருக்கையில் அமர்ந்து, தன் வெறுங்கால்களை பெடலில் வைத்தாள். பதற்றத்தோடு குளிரும் சேர்ந்து அவள் நடுங்கிக் கொண்டிருந்த நிலையில், முற்றிலுமாக நனைந்துவிட்ட ஆடைகளிலிருந்து, அனைத்துப் புறமும் அழுக்கான ஆற்று நீர் காருக்குள் வடிந்தது. இந்நிலையில் அங்கிருந்து காரை கிளப்பினாள். ஒரு புறம் அவளுக்கு வாழ்வை மீட்டுத்தர முயன்றவன் நீரில் மூழ்கி இறந்து விட்ட நிலையில், மறுபுறம் அவள் கொல்ல நினைத்த சிசு இன்னும் அவள் வயிற்றில் உயிருடன் இருந்தது. தற்கொலை எண்ணத்தை மறு சிந்தனைக்கு இடமின்றி சாஸ்வதமாகக் கைவிட்டு விட்டாள். நடந்து முடிந்தவற்றை மறைக்க எதுவும் செய்யத் தயாராக இருந்தாள். அவள் நடுங்கிக் கொண்டிருந்த போதும், அவளது மனோதிடம் மீண்டும் உயிர் பெற்று விட்டது. இப்பொழுது அவள் சிந்தனை முழுவதும் அடுத்தகட்ட செயல்பாடுகள் பற்றியதாக இருந்தது: எவர் கண்ணிலும் படாமல் காரில் இருந்து செல்வது எப்படி? ஈரம் சொட்டும் ஆடையுடன் வரவேற்பாளர் கவனத்திலிருந்து தப்பி அறைக்குச் செல்வது எப்படி? அலையன் தோளின் மீது வலிமையான தாக்குதலை உணர்ந்தான். “முட்டாள், கவனமாக போ” என்றொரு குரல் கேட்டது. வேகமாகவும் ஆவேசமாகவும் தன்னைக் கடந்து செல்லும் இளம்பெண்ணை அலையன் திரும்பிப் பார்த்தான். மன்னிக்கவும்” என்ற அவனது பலவீனமான குரல் அவளை பின் தொடர்ந்தது. அவள் திரும்பாமலே பலமான குரலில் வசைச் சொற்களை உமிழ்ந்துவிட்டுக் கடந்து விட்டாள். மன்னிப்பு கோருபவர்கள் இரண்டு நாட்களுக்கு பிறகும் கூட தன் தனிப்பட்ட குடியிருப்பில் இருக்கும் சமயம் அலையன் தன் தோள்பட்டையில் அந்த வலியை உணர்ந்தான். அந்த பெண் தன்னை வேண்டுமென்றே இடித்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறான். அவள் தன்னை கடுமையான குரலில் “முட்டாள்” எனத் திட்டியது நினைவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து “மன்னிக்கவும்” என்ற இவன் குரலும், அவளது வசைச் சொற்களும் கூட நினைவிற்கு வந்தது. மீண்டும் ஒருமுறை தவறேதும் செய்யாமல் மன்னிப்பு கேட்டிருந்தான். எதற்கெடுத்தாலும் அனிச்சையாகவே மன்னிப்பு கேட்டுவிடுகிற தன் முட்டாள்தனத்தை எண்ணிப் பார்த்தான். அந்த எண்ணங்கள் அவனை இம்சிக்கவே, யாருடனாவது பேச வேண்டும் எனத் தோன்றியது. தன் காதலி மெடலைன்னை அழைத்தான். அவள் பாரீஸில் இல்லை. அவள் கைப்பேசியும் தற்சமயம் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவன் சார்லஸ்ஸை அழைத்தான். மறுமுனையில் சார்லஸ்ஸின் குரலைக் கேட்டதும் மன்னிப்புக் கேட்டான். “என் மீது கோபப்படாமல் கேள். நான் மோசமான மனநிலையில் இருக்கிறேன். உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்”. “சரியான சமயத்தில் தான் அழைத்திருக்கிறாய். நானும் அதே மனநிலையில் தான் இருக்கிறேன். நீ எதனால் அப்படி இருக்கிறாய்?”. “அனைத்து சந்தர்ப்பங்களிலும் குற்றவுணர்வுடனே இருப்பது குறித்து நான் என் மீதே கோபமாக இருக்கிறேன்”. “ அதுவொன்றும் மோசமான விசயமில்லை”. “குற்றவுணர்வுடன் இருப்பதா, இல்லாமல் இருப்பதா என்பது தான் பிரச்சினை. அனைவருக்கும் அனைத்திற்கும் எதிரான போராட்டம் தான் வாழ்க்கையின் பொதுவான அம்சம். ஆனால் அந்த போராட்டம் ஒரு நாகரிகமான சமூகத்தில் எவ்வாறு நிகழ்கிறது? ஒருவர் மற்றொருவரை நேரடியாகத் தாக்குவதற்குப் பதிலாக, ஒரு குற்றம் செய்த அவமான உணர்வை மற்றவருக்கு ஏற்படுத்த முனைகிறார்கள். அந்த முயற்சியில், பிறருக்கு அந்த குற்றவுணர்வை ஏற்படுத்த இயலுகிறவர்கள் வெல்கிறார்கள். குற்றத்தை ஏற்றுக் கொள்பவர்கள் தோற்கிறார்கள். நீ ஒரு சாலையோரம் சிந்தனைவயப்பட்டு நடந்து செல்கிறாய். அப்பொழுது, தனக்கே அந்த சாலை சொந்தம் என்பது போலச் சுற்றும் முற்றும் கவனிக்காது நேரெதிரே வரும் பெண்ணுடன் மோத நேரிடுகிறது. அது தான் மனித இயல்பின் யதார்த்தம் வெளிப்படும் துல்லியமான தருணம்- யார் தன் அதட்டலால் மற்றொருவரை வீழ்த்தி சரணடைய வைக்கிறார் என்பது தான் அது. இது ஒரு வழமையான, யதார்த்தமான நிகழ்வு. அந்த விபத்தில் இருவருக்கும் சமபங்கு இருந்த போதிலும், சில சந்தர்ப்பங்களில் ஒருவர் முன்வந்து குற்றத்தை ஏற்று மன்னிப்பு கேட்கும் பொழுது, மற்றொருவர் தன்னை பாதிக்கப்பட்டவர் போல் பாவித்து குற்றம் சுமத்தத் துவங்கிவிடுகிறார். இந்த சந்தர்ப்பத்தில் நீ என்ன செய்வாய்- குற்றம் சுமத்துவாயா மன்னிப்புக் கேட்பாயா?” “நான் நிச்சயம் மன்னிப்புக் கேட்பேன்”. “அப்படியென்றால் நீயும் மன்னிப்புக் கேட்பவர்கள் குழுவைச் சேர்ந்தவன் தான். நீ உன் மன்னிப்பின் மூலம் அடுத்தவரைச் சமாதானம் செய்ய முயல்கிறாய்” “ஆமாம்” “அது தவறு. முதலில் முன்வந்து மன்னிப்புக் கேட்பதன் மூலம் நாம் நம் குற்றத்தை ஒப்புக் கொள்கிறோம். இதன் விளைவாக மற்றவர் நம் மீது பொதுவெளியில் குற்றம் சுமத்தவும் அவமானப்படுத்தவும் சந்தர்ப்பத்தையும் உரிமையையும் தருகிறோம்.” “அதுவும் சரிதான். ஒருவர் மன்னிப்புக் கேட்டாக வேண்டியதில்லை. ஆனால் எந்த நிபந்தனையுமின்றி, உள்நோக்கமின்றி, விதிவிலக்கின்றி தேவைப்படாத சூழ்நிலைகளிலும் கூட, மனிதர்கள் மன்னிப்புக் கேட்பவர்களாக இந்த உலகில் இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.” அலையன் தன் கைப்பேசியை எடுத்து மீண்டும் மெடலைன்னை அழைத்தான். மறுமுனையில் பதில் இல்லை. இது போன்ற சமயங்களில் அவன் சுவரில் மாட்டி இருக்கும் அந்த புகைப்படத்தின் மீது தன் கவனத்தைச் செலுத்துவது வழக்கம். தன் தாயின் அந்த இளமைக்கால புகைப்படத்தைத் தவிர அவன் ஸ்டூடியோவில் வேறு புகைப்படம் கிடையாது. அலையன் பிறந்த சில மாதங்களில் அவள் தன் கணவனைப் பிரிந்து சென்று விட்டாள். அவன் தந்தை ஒரு மென்மையான, கண்ணியமான மனிதர். அவருக்கே உரிய இயல்பின் காரணமாக அவளைப் பற்றி தவறாக எதுவும் பேசியதில்லை. இது போன்ற ஒரு மனிதரை ஒரு பெண் எப்படிப் பிரிந்து சென்றாள் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. முக்கியமாகச் சிறுவயது முதலே மென்மையாகவும் கண்ணியமாகவும் நடந்து கொள்ளக் கூடிய தன் மகனை எப்படிப் பிரிய முடிந்தது என்பது அதை விடப் புதிராக இருந்தது. “அம்மா எங்கே வசிக்கிறாள்?” தந்தையிடம் கேட்டான். “அமெரிக்காவில் வசிக்க கூடும்”. “வசிக்க கூடும் என்றால்?” “எனக்கு அவள் முகவரி தெரியாது”. “ஆனால் அதை உங்களுக்குத் தெரிவிப்பது அம்மாவின் கடமை”. “அவள் எந்த வகையிலும் எனக்குக் கடமைப்பட்டவள் இல்லை” “எனக்கும் இல்லையா? என்னைப் பற்றி அவள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லையா? நான் எப்படி இருக்கிறேன் என்று? நான் அவளைப் பற்றிச் சிந்திப்பது பற்றித் தெரிய வேண்டியதில்லையா?” ஒருமுறை தந்தை பொறுமையிழந்து கூறினார்: “நீ தொடர்ந்து நிர்ப்பந்தித்துக் கேட்பதால் இதைத் தெரிவிக்கிறேன். அவளுக்கு உன்னைப் பெற்றெடுக்க விருப்பமில்லை. நீ சௌகரியமாகத் தூங்கும் அந்த சாய்வு நாற்காலியில் தூங்க வைக்க விருப்பமில்லை. உன்னைப் பற்றிய எதுவும் அவசியமில்லை. இப்பொழுது புரிகிறதா? தந்தை உணர்ச்சிவசப்படக்கூடியவர் அல்ல. என் பிறப்புரிமையை மறுத்த என் தாயுடன் அவருக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவர் இயல்பான அமைதியை மீறி, அதன் அதிருப்தி வெளிப்பட்ட போது அதை மறைக்க முயலவில்லை. அலையனுடைய தாயுடனான அவனது கடைசி சந்திப்பைப் பற்றி முன்பே கூறியிருந்தேன். அது அவனது பத்தாவது வயதில் ஒரு சொகுசு விடுதியின் நீச்சல் குளத்தின் அருகில் நிகழ்ந்தது. அவனுக்கு பதினாறு வயது இருக்கும் போது அவன் தந்தை இறந்து விட்டார். அவரது இறுதிச் சடங்கு முடிந்த சில நாட்கள் கழித்து, அவர்களது குடும்ப படத்திலிருந்து தாயின் படத்தைத் தனியே கிழித்து சட்டம் போட்டு தன் அறையில் மாட்டினான். அவனது தந்தையின் புகைப்படம் எதுவும் அவன் அறையில் இல்லை. அதற்கான காரணம் எதுவானாலும் அது நியாயமில்லாதது; புரிந்து கொள்ள முடியாதது. ஆனால் அது தான் உண்மை. அவன் அறையிலிருந்த ஒரே புகைப்படமான தன் தாயின் படத்துடன் அவ்வப்போது உரையாடுவான். ஒரு மன்னிப்புக் கேட்பவனைப் பெற்றெடுப்பது எப்படி “நீங்கள் ஏன் கருக்கலைப்பு செய்து கொள்ளவில்லை? அப்பா தடுத்துவிட்டாரா?” அந்த புகைப்படத்திலிருந்து ஒரு குரல் கேட்டது: “அதை உன்னால் எப்பொழுதும் தெரிந்து கொள்ள முடியாது. என்னைப் பற்றி உன்னிடம் இருப்பது அனைத்தும் மாயாவாதக் கற்பனையே. ஆனால் அவை எனக்கும் கூட பிடித்தே இருக்கிறது. ஆற்றில் ஒரு இளைஞனை மூழ்கடித்த கொலைகாரியாக என்னை நீ கற்பனை செய்தது உட்பட அனைத்தும். அது போன்று மீண்டும் ஒரு கற்பனைக்காகக் காத்திருக்கிறேன். சொல்லு அலையன்”. அலையன் மீண்டும் கற்பனை வயப்பட்டான். அவன் தந்தையைத் தாய் மீது கற்பனை செய்தான். தான் கருத்தடை மாத்திரை எடுத்துக்கொள்ளவில்லை என்று அவள் எச்சரித்தாள். மீண்டும் ஒரு முறை அவன் உறுதியளிக்கவும், பரஸ்பர நம்பிக்கையுடன் சல்லாபித்தனர். அவன் முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களிலிருந்து அவன் உச்சநிலையை அடைவதைப் புரிந்து கொண்டவள், “கவனம். என்னால் முடியாது; வேண்டாம்” எனக் கதறினாள். ஆனால் அவன் முகம் மேலும் சிவக்க, வெறுப்புணர்வு ததும்பத் தொடர்ந்தான். அவள் தன்னை ஆக்கிரமித்திருந்த தேகத்திடம் இருந்து விடுபடப் போராடினாள்; அவன் பிடி மேலும் இறுகியது. இது கண்மூடித்தனமான களிப்பால் நிகழவில்லை; தன் மீது திட்டமிட்டு மனவுறுதியுடன் வெளிப்படுத்தப்படும் வன்மம் என்று அவளுக்குப் புரிந்து விட்டது. தன் போராட்டம் தோல்வியடைந்ததன் காரணமாக, அவளுக்குள் அதுவரை இருந்த உணர்வுகள் அனைத்தும் திரண்டு கட்டுக்கடங்கா வெறுப்பாக மாறியது. அவர்களது கூடலை அலையன் கற்பனை செய்வது இது முதல் முறையல்ல. அந்த கற்பனையால் அவன் மதிமயங்கி இருந்ததன் விளைவாக, ஒவ்வொரு மனிதனும் அவன் கருவில் உருவாகிய தருணத்தின் பிரதிபலிப்பு என்று கருதினான். கண்ணியமான, வலிமையான தன் தந்தையின் வெறுப்பும், மனதளவில் தைரியமும் உடலளவில் பலவீனமும் சேர்ந்த தன் தாயின் வெறுப்பும் என இரண்டு விதமான வெறுப்பின் கலவையான வெளிப்பாடே தான் என்று அவன் பிறப்பைக் கருதினான். கண்ணாடி முன் நின்று அந்த வெறுப்பின் ரேகைகளை தன் முகத்தில் தேடினான். அத்தகைய வெறுப்புகளின் சங்கமத்தால் பிறப்பவன் மன்னிப்புக் கேட்பவனாகத்தான் இருக்க முடியும் என எண்ணினான். தன் தந்தையைப் போலக் கண்ணியமாகவும் புத்திசாலியாகவும் தன்னை குறித்து எண்ணும் அதே வேளையில் தன் தாயின் பார்வையில் தன்னை ஒரு அத்துமீறுபவனாகவும் கருதினான். அத்துமீறுபவனாகவும் கண்ணியமானவனாகவும் இருக்கும் ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் கண்டனத்துக்குரியவனாகவும் மன்னிப்பு கோருபவனாகவும் தான் இருக்க முடியும் என்பது மறுக்கமுடியாத யதார்த்தம். மீண்டும் சுவரில் இருக்கும் தன் தாயின் புகைப்படத்தைப் பார்க்கிறான். இப்பொழுது அவள் தன் முயற்சியில் தோல்வியடைந்து, ஈரம் சொட்டும் ஆடைகளுடன் காரில் ஏறி, எவர் கண்ணிலும் படாமல் அறையை அடைந்து, தன்னுள் அத்துமீறி உருவாகி வளரும் சுமையை அங்கேயே இறக்கி விட்டு, சில மாதங்களில் நிரந்தரமாக மீண்டும் ஒரு முறை வெளியேறுகிறாள். ஏவாளின் மரம் அலையன் தன் ஸ்டுடியோவில் சுவரில் சாய்ந்தவாறு தலைகுனிந்து அமர்ந்திருந்தான். ஒருவேளை உறங்கி இருக்கலாம். ஒரு பெண்ணின் குரல் அவனை எழுப்பியது. என்னிடம் நீ கூறிய அனைத்தும் நன்றாக இருக்கிறது. உன் கற்பனையின் கண்டுபிடிப்புகள் அனைத்தும் பிடித்திருக்கிறது என்பதைத் தாண்டி, உன்னிடம் சொல்ல வேறெதுவும் இல்லை. ஆனால் தொப்புள் குறித்த உன் கற்பனையிலிருந்து மாறுபடுகிறேன். உன் பார்வையில் தொப்புள் இல்லாத பெண் தேவதை போல் தெரிகிறாள். ஆனால் என் வரையில் உலகின் முதல் பெண்ணான ஏவாள் தான் தொப்புள் இல்லாதள். காரணம் அவள் கருவிலிருந்து பிறப்பதற்கு மாறாக இறைவனால் படைக்கப்பட்டவள். அவளது கருப்பையிலிருந்து தான் முதல் தொப்புள் கொடி தோன்றியிருக்க வேண்டும். பைபிளின் படி, அனைத்து தொப்புள் கொடிகளும் அதில் துவங்கியே தோன்றியிருக்க வேண்டும். ஒவ்வொரு கொடியின் முடிவிலும் ஒரு ஆணோ பெண்ணோ பிணைந்திருப்பார்கள். ஆண்களின் உடலுடன் அந்த சங்கிலி தொடர்ச்சியின்றி முடிந்துவிட்டாலும், ஒவ்வொரு பெண்ணின் கருப்பையிலிருந்தும் மேலும் தொப்புள் கொடி சங்கிலி தொடர்ந்து, ஒரு ஆணுடனோ பெண்ணுடனோ பிணைந்திருந்தது. இவ்வாறாக, லட்சோபலட்சம் முறை இது தொடர்ந்து, நீண்டு, எண்ணற்ற மனித உடல்களால் ஆன ஒரு வானளாவிய மரமாக வளர்ந்து நின்றது. அந்த மரத்தின் ஆணிவேர் தொப்புளற்ற ஏவாளின் கருப்பையிலிருந்தே நீண்டிருந்தது. நான் கருவுற்ற சமயம், என்னை நான் அந்த மரத்தின் ஒரு பகுதியாக, ஒரு கொடியில் இணைந்திருப்பதாக உணர்ந்தேன். என்னிலிருந்து வெளிப்படும் ஒரு கொடியின் முனையில் நீ ஊசலாடிக் கொண்டிருப்பதாகக் கற்பனை செய்து கொண்டேன். அந்த சமயம் முதல், ஒரு கொலைகாரன் கத்தியோடு அந்த மரத்தின் அடியாழத்தில் ஏவாளின் கழுத்தை வெட்டுவதாகக் கற்பனை செய்தேன். மரணத்தின் பிடியில் அவள் துடிதுடிக்க, அவளுள் இருந்து கிளைத்தெழுந்த அந்த பிரம்மாண்ட மரம், வேரின்றி பிடிப்பிழந்து, வீழ்வதைக் காட்சி செய்து கொண்டேன். அதன் எண்ணிலடங்கா கிளைகள் ஒரு பெருமழையைப் போல விழுவதாகக் கண்டேன். இதை மனித இனத்தின் அழிவாகவோ, எதிர்காலத்தை நிர்மூலமாக்குவதாகவோ புரிந்து கொள்ள வேண்டாம். மாறாக, இதன் மூலம் ஆதி முதல் அந்தம் வரை, நீரோ முதல் நெப்போலியன் வரை, இயேசு முதல் புத்தன் வரை, மனிதக் குலத்தின் இருப்பையே எந்த சுவடுகளும் நினைவுகளும் இன்றி, கடந்தகாலம், எதிர்காலம் என எதுவும் இன்றி மறையச் செய்ய வேண்டும் என்பதே நோக்கம். தனக்கு எந்த நன்மையையும் விளைவிக்கவியலாத, ஒரு துயரகமான கூடலால் வரும் பின்விளைவுகளை அறியாமல், அதற்காகக் காலந்தோறும் மனிதர்கள் எத்தகைய விலையை தங்கள் வாழ்நாள் முழுவதும் கொடுக்க வேண்டி இருக்கும் என எந்த புரிதலும் இல்லாத, ஒரு தொப்புள் இல்லாத பெண்ணின் கருவிலிருந்து உருவாகி கிளைத்தெழுந்த மரத்தை முற்றிலுமாக அழித்தொழிக்க வேண்டும் என்பதும் ஆகும்”. அந்த குரல் மீண்டும் அமைதியானது. அலையன் சுவரில் சாய்ந்து மீண்டும் உறங்கிப் போனான். மோட்டர்பைக்கில் நிகழ்ந்த உரையாடல் மறுநாள் காலை பதினொரு மணியளவில், லக்சம்பர்க் தோட்டத்தின் அருகில் உள்ள அருங்காட்சியகம் முன்பு தன் நண்பர்கள் ரேமொன் மற்றும் கலிபான் இருவரையும் அலையன் காண வேண்டி இருந்தது. தன் குடியிருப்பிலிருந்து கிளம்பும் முன், தன் தாயின் புகைப்படத்திடம் திரும்பி விடைபெற்றுக் கொண்டு, கீழிறங்கி வீதிக்கு வந்து, சற்று தள்ளி நிறுத்தியிருந்த தன் மோட்டர்பைக்கை நோக்கி நடந்தான். அவன் பைக்கில் ஏறியவுடன், ஒருவர் அவனை நெருங்கி அவன் மீது சாய்வது போல் உணர்ந்தான். அவன் காதலி மெடலைன் அவனுடன் பைக்கில் இருப்பது போல் உணர்ந்தான். இந்த கற்பனை தடுமாறச் செய்தது; அவள் மீதான அவன் காதலை உணர்த்தியது. அவன் வண்டியைச் செலுத்தினான். தன் பின்னால் ஒரு குரல் கேட்டது. “நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்”. அந்த உணர்வை அடையாளம் கண்டு கொண்டான். அது அவன் தாயின் குரல். சாலையில் போக்குவரத்து குறைவாக இருந்தது. அவன் தாய் தொடர்ந்து கூறினாள்: “நம்மிடையே பரஸ்பர புரிதல் இருப்பதாக, நாம் தவறாகக் கருதிவிடக் கூடாது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்”. ஒரு பாதசாரி இரு கார்களுக்கிடையில் புகுந்து சாலையைக் கடக்க முயன்றதால், அலையன் சட்டென வண்டியை நிறுத்தினான். அவன் அலையனை நோக்கி மிரட்டும் தொணியில் கையசைத்து விட்டு போனான். “நான் வெளிப்படையாகக் கூறுகிறேன். ஒரு உயிரை அவர்களது அனுமதியின்றி இந்த உலகில் திணிப்பதை மோசமான செயலாக உணர்கிறேன்”. அலையன் ஆமோதித்தான். “உன்னைச் சுற்றிப் பார். இங்கிருக்கும் ஒருவர் கூட தன் விருப்பத்தின் பேரில் வந்தவர் இல்லை. இப்பொழுது நான் சொன்னது இதுவரை நாம் கண்டறிந்ததிலேயே மிகச் சாதாரணமான உண்மை. அது மிகச் சாதாரணமாகவும் அடிப்படையானதாகவும் இருப்பதாலேயே நாம் அதைப் பார்ப்பதும் கேட்பதும் இல்லை”. சில நிமிடங்களுக்கு தன் இருபுறமும் சென்ற காருக்கும் லாரிக்கும் இடைப்பட்ட சாலையில் சீராகச் சென்றான். “அனைவரும் மனித உரிமையைப் பற்றிப் பிதற்றுகிறார்கள். என்ன ஒரு வேடிக்கை. நம் இருப்பே நம் விருப்பத்தின் பேரில் நிகழவில்லை. அதோடு இந்த மனித உரிமை பாதுகாவலர்கள் நாம் விரும்பிய வண்ணம் மரணத்தைத் தேடிக் கொள்ளக் கூட அனுமதிக்க மாட்டார்கள்”. சாலையின் சந்திப்பிலிருந்த விளக்கு சிவப்பிற்கு மாறியது. அவன் வண்டியை நிறுத்தினான். சாலையின் இருபுறமிருந்தும் மனிதர்கள் எதிர்புறத்தை நோக்கி விரைந்தனர். அவன் தாய் தொடர்ந்தாள்: “அவர்களைப் பார். பாதிக்கும் மேற்பட்டவர்கள் மோசமாகக் காட்சியளிப்பவர்களாக இருக்கிறார்கள். அசிங்கமாக இருப்பது கூட மனித உரிமையா? வாழ்க்கை முழுவதும் அசிங்கமான உருவத்தைச் சுமந்து திரியும் உணர்வு எத்தகையது என்று உனக்குத் தெரியுமா? ஒரு நிமிடம் கூட ஆசுவாசம் இருக்குமா? உன் பாலினம்? நீ ஒரு போதும் அதைத் தேர்வு செய்ய முடியாது. உன் விழியின் நிறம்? நீ பூமியில் வாழும் காலகட்டம்? உன் நாடு? உன் தாய்? இது எதுவும் முக்கியமில்லை. நம் உரிமைகள் என்பது முக்கியமில்லாத விசயங்களுடனே சம்மந்தப்பட்டிருக்கிறது. அதனால் உரிமைகளின் பொருட்டு நாம் சண்டையிடவோ பெரிதாக பிரகடனங்கள் செய்வதோ தேவையில்லாதது”. அவன் மீண்டும் வண்டியைச் செலுத்தினான். அவனது தாயின் குரலும் சற்று உயர்ந்து, “நான் பலவீனமாக இருந்ததால் நீ இவ்வாறு இருக்கிறாய். அது என் தவறு. மன்னித்து விடு” என்றாள். சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு, அலையன் மெதுவாகப் பேசினான். “எதற்காக நீங்கள் மன்னிப்பு கேட்கிறீர்கள்? என் பிறப்பைத் தடுக்க பலம் இல்லதாதற்காகவா? என் வாழ்க்கையில் மீண்டும் இணைந்து கொள்ளாததற்காகவா? இப்பொழுதிருக்கும் நிலையில் அதுவொன்றும் அவ்வளவு மோசமாக இல்லையே?” என்றான். சிறிய இடைவெளி விட்டு, “நீ சொல்வது கூட சரிதான். அப்படியானால் என் குற்றவுணர்வு இரட்டிப்பாகிறது”. “நான் தான் உங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். ஒரு குப்பையைப் போல் உங்கள் வாழ்விற்கிடையே விழுந்தேன். அமெரிக்காவிற்கு விரட்டியடித்தேன்” என்றான் அலையன். “மன்னிப்புக் கேட்பதை நிறுத்து. என் முட்டாள் மகனே, உனக்கு என் வாழ்வைப் பற்றி எதுவும் தெரியாது. உன்னை நான் முட்டாள் என அழைக்கலாமா? கோபித்துக் கொள்ள வேண்டாம். என் பார்வையில் நீ ஒரு முட்டாள் தான். ஆனால் உன் முட்டாள்தனத்தின் பிறப்பிடம் எது தெரியுமா? உன் நல்ல இயல்பு தான். உன் உன்மத்தமான நல்லதனத்தில் இருந்து தான் உன் முட்டாள்தனம் உருவாகிறது”. அவன் லக்சம்பர்க் தோட்டத்தை அடைந்து, வண்டியை நிறுத்தினான். “எதிர்ப்பு தெரிவிக்காமல் என்னை மன்னிப்பு கேட்க விடுங்கள்” என்றான் அலையன். “நான் ஒரு மன்னிப்பு கேட்பவன். அப்படித்தான் நீங்கள் இருவரும் என்னை உருவாக்கினீர்கள். இப்படி இருப்பது எனக்கு மகிழ்ச்சியே. நாம் பரஸ்பரம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளும் உணர்வு நன்றாக இருந்தது. அதில் ஒரு அன்பு இருந்தது இல்லையா?” அவர்கள் அருங்காட்சியகத்தை நோக்கி நடந்தனர். தமிழில்~ கோடீஸ்வரன் கந்தசாமி https://kanali.in/மன்னிப்புக்-கேட்பவர்கள்/
-
தமிழரசை சாகடிக்கும் தலைமைகள்…!
தமிழரசை சாகடிக்கும் தலைமைகள்…! January 28, 2024 — அழகு குணசீலன் — தமிழரசுக்கட்சியின் அன்றைய தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் எப்போது “தமிழ்மக்ளை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று சொன்னாரோ அன்றே இந்தக்கட்சி கலைக்கப்பட்டு இருக்கவேண்டும். தமிழ்மக்களுக்கு தலைமை தாங்கக்கூடிய தகைமையை அது இழந்து விட்டது. எஸ்.ஜே.வி.யின் இந்த வார்த்தைகள் கட்சியின்,தலைமைத்துவத்தின் இயலாமையின் வெளிப்பாடு. இந்த இயலாமையை மறைத்து வீரவசனங்களைப்பேசி உசுப்பேத்திய அமிர்தலிங்கம் முதல் மாவை, சம்பந்தர் முதலான கூட்டம் மக்கள் நலன் சார்ந்து அன்றி அரசியல் வியாபாரத்திற்காகவே -பதவிக்காக வண்டியை கொண்டு இழுத்தது. இந்த நிலையில் கடந்த அரை நூற்றாண்டு கால தலைமைத்துவ இயலாமை வட்டுக்கோட்டை தலைநகர் திருகோணமலையில் சந்திக்கு வந்திருக்கிறது. யாழ்.மேலாதிக்கம் அதிகார,பதவி வெறி பிடித்தது என்பதை தமிழரசு நிர்வாகத்தேர்வு மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. தமிழரசில் தலைவர்தெரிவு பாரம்பரியம் போட்டியற்ற ஏகமனதானது (?) என்று காதிலே பூச்சுத்திய கதை பொய்யாகி ஒரு வாரமாகிறது. இந்த பொய்யை மறைக்க -தவிர்க்க முடியாத நிலையில் போட்டி இடம்பெறுவது ஜனநாயகமானது என்று மறு வளத்துக்கு கயிறு திணிக்கப்பட்டது. மொத்தத்தில் இங்கு “ஏகமனதும்” இல்லை ஜனநாயகமும் இல்லை. இந்த இரண்டும் கெட்டான் நிலைதான் தமிழரசின் இன்றைய நிலை. 27 ஜனவரி 2024 இல் திருகோணமலையில் நடந்த பொதுச்சபை கூட்டத்தில் அனைத்து சாணக்கியங்களும், குள்ளத்தனங்களும், சுத்துமாத்துக்களும் அரங்கேற்றப்பட்டுள்ளன. பதவி வெறிக்கு கிழக்குமாகாண மக்களை பயன்படுத்துவதும், பலிக்கடாவாக்குவதும் யாழ்ப்பாண அரசியல் தலைமைகளின் வரலாறு. அதுவே ஆயுதப்போராட்டத்திலும் கொலைவெறியாகத் தொடர்ந்தது. தட்டிக்கேட்ட கிழக்குமாகாண மக்கள், சிவில் சமூகத்தினர், சமூகச்செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், புத்திஜீவிகள் துரோகிகளாக பட்டம் சூட்டப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்கள். வால்பிடித்த கோடரிக்காம்புகளுக்கு பட்டம், பதவி வழங்கி ஆராதனை செய்யப்பட்டது. ஜீ.ஜீ.பொன்னம்பலம் மந்திரி பதவிக்கு மலையக மக்களை அரசியல் அநாதைகளாக்கினார். தனக்கு தலைமைப்பதவிக்காக எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தமிழரசுக்கட்சியை ஆரம்பித்தார். அ. அமிர்தலிங்கம் இராசதுரையின் தலைமைப்பதவியை தடுக்க காசி ஆனந்தனை கருவியாக்கினார். தொடர்ந்த இந்த பதவிவெறி வே.பிரபாகரனையும் விட்டு வைக்கவில்லை. இவர் மட்டும் எப்படி விதிவிலக்காக முடியும். யாழ்.மையவாதத்தின் இரத்தம் இவருக்கும் தானே ஓடியது. இந்த பதவிவெறி குணாம்சம் இன்னும் முடிந்த பாடில்லை. இரா.சம்பந்தர் எம்.பி. பதவியிலும், கூட்டமைப்பு பதவியிலும் இருக்க சாகாவரம்பெற்றவராம். மாவை சேனாதிராஜாவுக்கு தமிழரசின் தலைமைப்பதவியை விட்டு சுயமாக விலகும் எண்ணம் துளியும் இல்லை. ஜனவரி 21, தலைவர் தெரிவுக்கு முன்னர் மத்திய குழுவை கூட்ட மாவை எடுத்த முயற்சி செயலாளர் சத்தியலிங்கம் சுகவீனம் (?) என்று அறிவித்ததால் சாத்தியப்படவில்லை. இதன் உள்ளார்ந்த நோக்கம் சூழ்நிலையைப் பயன்படுத்தி தலைவர் தெரிவை பின்போடுவது. தானே தலைவர் பதவியில் தொடர்வது. ஜனவரி 27. பொதுச்சபை கூட்ட குழப்ப சூழல் அதை அவருக்கு சாத்தியப்படுத்தியிருக்கிறது. பதவி ஆசை தில்லுமுல்லுகளுக்கு மத்தியில் நிர்வாகத்தெரிவை செல்லுபடியற்றதாக்கி, ஜனவரி 28 இல் நடக்கவிருந்த தமிழரசுக்கட்சி மாநாட்டை காலவரையின்றி பின்போட்டிருக்கிறார் மாவை. பழம் நழுவி பாலில் விழுந்த கதை. இதன் விளைவுகள் என்ன? தமிழரசுக்கட்சிக்கு மாவை சேனாதிராஜாவே உத்தியோகபூர்வ தலைவராக தொடர்வார். புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சி.சிறிதரன் பதவி ஏற்கும் வரை உத்தியோகபூர்வ தலைவர் அல்ல. சிறிதரனுக்கு கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லை. ஆக, 21ம்திகதிக்கு முந்திய “பாரிசவாத” தமிழரசுக்கட்சி நிருவாகம்தான் இன்னும் தமிழரசுக்கட்சி நிருவாகம். ஜனவரி 27 சனிக்கிழமை அன்று திருகோணமலையில் நடந்திருப்பது என்ன? தமிழரசுக்கட்சியின் தலைவர் வடக்கை (யாழ்ப்பாணம்) சேர்ந்தவராக இருந்தால் செயலாளர் கிழக்கை (மட்டக்களப்பை) சேர்ந்தவராக இருக்கவேண்டும். இதை மட்டக்களப்பு தமிழரசாரே எழுதாத நியதியாக இதுவரை பெருமையடித்துக் கொண்டார்கள். ஒருவகையில் இந்த நியதி தலைமையை வடக்கில் வைத்துக்கொள்வதற்கான ஒரு பொறி. இது இனிப்பு முலாம் பூசப்பட்ட கசப்பு. பெருமையடிக்க இதில் எதுவும் இல்லை. உண்மையில் இதன் உள்நோக்கம் எப்போதும் யாழ்ப்பாணத்துக்கே தலைமைப்பதவி. மட்டக்களப்புக்கு செயலாளர் என்பதுதான். இது உண்மை இல்லை என்றால் சி.மு.இராசமாணிக்கத்திற்கு முன்னரும், அல்லது பின்னரும் தலைவராக கிழக்கு மாகாணத்தவர் தெரிவு செய்யப்படாதது ஏன்? என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகிறது. கடந்த 50 ஆண்டுகளாக கிழக்குக்கு தலைமைப்பதவி உரிமை மறுக்கப்பட்டுவந்துள்ளது . தலைமைப்பதவிக்கு போட்டியிடவிருந்த சீ.யோகேஸ்வரன் சிறிதரனுக்கு ஆதரவு வழங்கியதால் கிழக்குமாகாண வாக்குகளால் சிறிதரன் சுமந்திரனை இலகுவாக வெற்றி பெற முடிந்தது. அதே வேளை வேட்பாளர் யோகேஸ்வரன் தொடர்பாகவும், அவர் சிறிதரனுக்கு ஆதரவளிப்பது தொடர்பாகவும் நடுநிலை தவறிய சுமந்திரனின் ஆதரவாளரான மேலாண்மை சிவஞானம் யோகேஸ்வரனை டம்மி என்று “இழக்காரமாக” பேசியிருந்தார். இது நடந்தும் சூடு,சொரணை இன்றி ஏதாவது ஒரு பதவிக்காத யோகேஸ்வரன் அன் கோ இன்னும் திருகோணமலைக்கு காவடி எடுக்கிறார்கள். மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனின் பெயரை பொதுச்செயலாளர் வேட்பாளராக அறிவித்தவர் மட்டக்களப்பு முன்னாள் எம்.பி. அரியநேத்திரன். இவர்கள் தலைவர் தெரிவில் சிறிதரனை ஆதரித்தவர்கள் என்பதால் அதைத் தடுப்பதற்கான “சகுனி” திட்டத்தை சாணக்கியனும்,சுமந்திரனும் சேர்ந்து தீட்டினர். கூட்டத்தில் சாணக்கியனின் ஆதரவுடன் தான் செயலாளராக வருவதற்கு முயற்சி செய்துள்ளார் சுமந்திரன். கிழக்குக்கு வழங்கப்பட்ட போடுகாய் செயலாளரையும் சுருட்டும் எண்ணம். இது யாழ்மேலாதிக்க பிரதேசவாதமாகிவிடும் என்று பலரும் மந்திரம் ஓதியதால் பிளான் “B” யில் இறங்கினார்கள் சகுனிகள். அம்பாறை மாவட்ட தமிழரசுக்கட்சி தலைவர் கலையரசன், மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி தலைவர் சாணக்கியன், திருகோணமலை மாவட்ட தமிழரசுக்கட்சி தலைவர் குகதாசன் இவர்களில் ஒருவர் செயலாளராக தெரிவு செய்யப்படுவதே சரியானது என்று வாதாடியுள்ளார் சுமந்திரன். நிரபராதியை குற்றவாளி என்று உள்ளே தள்ளுவதை தொழிலாக கொண்டவருக்கு இதில் வாதாடுவதில் என்ன கஷ்டம் கிடக்குது? இந்த மூவரில் தான் சீனியர் எனக்குத்தான் செயலாளர் பதவி என்று தனக்குத்தானே குகதாசனும் ஆஜரானார். எப்படியோ சிறிநேசன் செயலாளராவதை தடுப்பதே சகுனிகளின் திட்டம். யோகேஸ்வரன் அணி பலமாக இருந்ததாலும், மட்டக்களப்புக்கு நன்றிக் கடன்செலுத்த வேண்டிய தேவை சிறிதரன் தரப்புக்கு இருந்ததாலும் பிளான்” B” பிசுபிசுத்தது. ஆனால் சிறிதரனுக்கோ தான் பதவி ஏற்பதற்கு பொதுச்சபை கூடியாகவேண்டும் என்பதால், ஒரு கட்டத்தில் சிறிநேசனை குகதாசனுக்கு விட்டுக்கொடுக்க சொன்னதால் மட்டக்களப்பார் ஆத்திரம் அடைந்திருக்கிறார்கள். கூட்டத்தில் குழப்பமும் கூச்சலும் ….. தனது பதவியை தக்க வைக்க தன்னை ஏற்றிய கிழக்கு ஏணியை தள்ளிவிடும் தந்திரோபாயம். கூட்டத்தில் நிலவிய குழப்பத்தால் மாவை சேனாதிராஜா கூட்டத்தை காலவரையின்றி ஒத்தி வைத்ததும் ஒருபகுதி உறுப்பினர்கள் மண்டபத்தை விட்டு வெளியேறிய நிலையில் மாவையையும் மீறி கூட்டத்தை நடாத்தி இருக்கிறார் சுமந்திரன். அந்த வாக்கெடுப்பில் தான் குகதாசன் 113 வாக்குகளையும், சிறிநேசன் 104 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதில் வாக்குகளை கணக்கிட்ட (கைஉயர்த்தும் வாக்கெடுப்பு) சுமந்திரன் இரண்டு கைகளை உயர்த்தியவர்களையும், அங்கத்தவர்கள் அற்ற மண்டபத்தில் உணவு பரிமாற்றம், மற்றும் கடமையில் இருந்தவர்களின் கைகளையும் சேர்த்து கணக்கிட்டுள்ளார். இந்த சுமந்திரன்தான் இணைய வழி பாதுகாப்பு சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் வாசிக்க தெரியாதவர்கள் என்று பாராளுமன்றத்தில் பேசியவர். இவருக்கு கணக்கு. … ? தெரிந்ததெல்லாம் கள்ளக்கணக்கு! இந்த குளறுபடியில் மாவை திட்டவட்டமாக கூட்டத்தைப்பின்போட்ட நிலையில் “கட்சிக்கு எதிராக வழக்குப்போடுவேன்” என்று தனது அப்புக்காத்து தனத்தையும் காட்டியுள்ளார். “ஏலுமென்டால் போடு மேன்” என்றாராம் சிறிதரன். இதற்கெல்லாம் முன்னர் நிர்வாகத்தேர்வை மத்திய குழு தேர்வு செய்து பட்டியலை பொதுச்சபையில் வாசித்தபோது பொதுச்சபை மத்திய குழுவின் நியமனங்களை நிராகரித்து செயலாளர் பதவிக்கு வாக்கெடுப்பு கோரியுள்ளது. அந்த கணக்கெடுப்பில்தான் சட்டாம்பி தப்புக்கணக்கு போட்டுள்ளார். மத்திய குழு பட்டியலில் பொதுச்செயலாளராக குகதாசன். சிறிநேசனுக்கு இணைப்பொருளாளர்பதவி. ஐந்து துணைத்தலைவர்களில் கலையரசன், அரியநேத்திரன் இருவர். ஐந்து இணைச்செயலாளர்களில் சாணக்கியனும், சரவணபவனும். மட்டக்களப்பாருக்கான இந்த போடுகாய் பதவிப்பங்கீடட்டிலும் கோஷ்டி அரசியலையும், குள்ளத்தனங்களையும் காணமுடிகிறது. செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட சிறிநேசனுக்கு இணைச்செயலாளர் பதவி கூட வழங்கப்படாத அளவுக்கு கதவுக்கு பின்னால் திட்டம் வலுவாக இருந்துள்ளது. தமிழரசு யாப்பு என்ன உள்ளடக்கத்தை கொண்டிருந்தாலும், பொதுச்சபையே அதிகாரம் மிக்கது. மத்திய குழுவை நியமிப்பதும் பொதுச்சபைதான். பாரம்பரிய பழக்க தோஷத்தில் பதவிகளை மத்திய குழுவுக்குள் பங்கிட்டுக்கொண்டு அதற்கு பொதுச்சபையில் அங்கீகாரம் கோரியதே அனைத்துக் குழப்பங்களுக்கும் அடிப்படைக்காரணம். அதனால் வெளிப்படைத்தன்மையற்ற, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட இந்த வழிமுறையை பொதுச்சபை நிராகரித்திருக்கிறது. இதனால் கிழக்குக்கு எதிரான சுமந்திரன் அணியின் திட்டம் தோல்வியில் முடிந்தது. பழம்பெருமை பேசுகின்ற தமிழரசுக்கட்சி இருபத்தியோராம் ஆண்டின் சமகால அரசியலுக்கு பொருத்தமற்றது. அதனை முற்று முழுதாக இளைய தலைமுறை பொறுப்பு ஏற்று முழுமையான புனரமைப்பைச் செய்யவேண்டும். அது தனது இயலாமையை மக்களுக்கு பகிரங்கமாக அறிவிப்பது மட்டுமன்றி கடந்த 50 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றியதற்கும், யாழ்மையவாதத்தை முதன்மைப்படுத்தி கிழக்கு, மலையக, வன்னி மக்களுக்கான சம உரிமையை மறுத்து ஏமாற்றி போலி அரசியல் செய்ததற்காகவும் பொதுவாக ஒட்டுமொத்த தமிழ்மக்களிடமும் சிறப்பாக கிழக்குமாகாண மக்களிடமும் மன்னிப்புக் கோரவேண்டும். இல்லையேல்…… கட்சியை கலைத்துவிட்டு கடையை மூடுவதற்கான காலம் இன்னும் அதிக தூரத்தில் இல்லை. https://arangamnews.com/?p=10400
-
சிறப்பு முகாம் எனும் சித்ரவதைக்கூடத்தில் வைத்து இன்னும் எத்தனை பேரைக் கொல்லப்போகிறீர்கள் முதல்வரே? – சீமான் கேள்வி
சிறப்பு முகாம் எனும் சித்ரவதைக்கூடத்தில் வைத்து இன்னும் எத்தனை பேரைக் கொல்லப்போகிறீர்கள் முதல்வரே? – சீமான் கேள்வி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, திருச்சி, சிறப்பு முகாமில் நான்கு ஆண்டுகளுக்கு மேல் இருந்த ஈழ உறவான ஐயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மாரடைப்பால் மறைவெய்திய செய்தி பெரும் அதிர்ச்சியையும், ஆழ்ந்த மனத்துயரத்தையும் அளிக்கிறது. சிறப்பு முகாம் எனும் பெயரில் சித்ரவதைக் கூடங்களில் அடைத்து வைத்திருப்பதன் விளைவினால், அங்குள்ள சொந்தங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. ஐயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இதய நோயினால் பாதிக்கப்பட்டு, மருந்துகளை எடுத்து வந்த நிலையில் அவை தீர்ந்துபோய் அதிகாரிகளிடம் முறையிட்டும் அவை கிடைக்கப் பெறவில்லை. இந்நிலையிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலை அவர் உயிரிழந்திருக்கிறார். அதிகாரிகளின் அலட்சியமும், அரசின் மெத்தனப்போக்குமே அவரது உயிரைப் போக்கியிருக்கிறது என்பது மறுக்கவியலா உண்மையாகும். ஏற்கனவே, தம்பி சாந்தன் அவர்கள் பெரும் உடல்நலக்குறைபாடு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், தம்பி ராபர்ட் பயசும், அண்ணன் ஜெயக்குமாரும் உடல் நலிவுக்கு ஆட்பட்டு நாளும் அவதிப்பட்டு வரும் நிலையில் ஐயா கிருஷ்ணமூர்த்தி அவர்களது இறப்புச்செய்தி சிறப்பு முகாமிலுள்ள உறவுகள் குறித்து பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. ஈழத்தமிழர் எங்கள் ரத்தமென சட்டமன்றத்தேர்தலுக்கு முன்பு முழக்கமிட்ட முதல்வர் ஸ்டாலின் அவர்களே! சிறப்பு முகாம் எனும் பெயரில் சித்ரவதைக்கூடத்தில் அடைத்து வைத்து இன்னும் எத்தனை உயிர்களைக் கொல்லப் போகிறீர்கள்?. இன்றைக்கு ஐயா கிருஷ்ணமூர்த்தி! நாளைக்கு யார்?. ஈழத்தமிழர்களுக்குக் குடியுரிமை வேண்டுமென ஒருபுறம் கூறிக்கொண்டே, மறுபுறம் அவர்களை மனித உரிமைகள் அற்ற நிலையில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்துவது எந்தவிதத்தில் நியாயம்? இதுதான் நீங்கள் தருவதாகக் கூறிய விடியல் ஆட்சியா? வெட்கக்கேடு! பேரவலம்! ஆகவே, தம்பிகள் சாந்தன், இராபர்ட் பயஸ், முருகன் மற்றும் அண்ணன் ஜெயக்குமார் ஆகியோரை சிறப்பு முகாமிலிருந்து உடனடியாக விடுவித்து, மாற்றிடத்தில் தங்க வைக்க வேண்டுமெனவும், விரும்பிய நாட்டுக்கு அவர்களை அனுப்பி வைக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமெனவும், வழக்கு முடிந்தும் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள மற்ற ஈழச்சொந்தங்களையும் அவர்கள் விரும்பும் நாட்டுக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது https://akkinikkunchu.com/?p=266964
-
நல்லூர் எசமானி காலமானார்
நல்லூர் எசமானி காலமானார் January 28, 2024 நல்லூர் எசமான் அம்மா சுகிர்தா தேவி குமராதாஸ் மாப்பாணமுதலியார் குகபதமடைந்தார். நல்லூர் கந்தசாமி கோவிலின் பத்தாவது நிர்வாக அதிகாரி அமரர் குமாரதாஸ் மாப்பாண முதலியார் அவர்களது துணைவியாரும் தற்போதைய பதினொராவது நிர்வாக அதிகாரி குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ மாப்பாண முதலியார் அவர்களது தாயாருமாகிய அமரர் சுகிர்தாதேவி குமாரதாஸ் மாப்பாண முதலியார் இன்று (28) குகபதமடைந்தார். அன்னாரது இறுதிகிரிகைகள் யாழ்ப்பாணம் நல்லூர் மாப்பாணர் வளவில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்று தகனகிரிகைகளுக்காக செம்மணி இந்து மயானத்திற்க்கு எடுத்துச் செல்லப்படும். https://globaltamilnews.net/2024/200166/
-
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுகள் திருகோணமலையில் இன்று
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மாநாட்டில் குழப்பம்- நடந்தது என்ன? Vhg ஜனவரி 27, 2024 இலங்கை தமிழ் அரசு கட்சியின் மாநாட்டில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நாளை நடைபெறவுள்ள தேசிய மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் நடந்த தேசிய மாநாட்டில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இன்று (27-01-2024)காலையில் மத்தியகுழு கூட்டம் நடந்த போது, கூட்டத்தின் ஆரம்பத்தில், மட்டக்களப்பு முன்னாள் எம்.பி பா.அரியநேத்திரன் எழுந்து, ஞா.சிறிநேசனை செயலாளர் பதவிக்கு முன்மொழிந்தார். இதையடுத்து, குகதாசன் எழுந்து- தான் 1965ஆம் ஆண்டிலிருந்து கட்சியில் இருப்பதாகவும், இம்முறை செயலாளர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்தார். உடனே எழுந்த எம்.ஏ.சுமந்திரன், நேற்றிரவு சிறிதரன் தன்னுடன் தொலைபேசியில் தன்னுடன் பேசியதாகவும், தான் அந்த பதவியை ஏற்கவில்லையென்றும், செயலாளர் பதவிக்கு தான் போட்டியிடப் போவதாக அறிவித்தார். தலைமை பதவிக்கு போட்டியிட்ட சிறிதரன் தலைவராகி விட்டார், தோல்வியடைந்த நான் செயலாளராக வருவதே பொருத்தம், அப்படியானாலே இரண்டு அணிகளும் சமபலமாக இருக்கும் என்றார். இதையடுத்து, வடக்கை சேர்ந்தவரே தலைவர், அந்த பகுதியை சேர்ந்தவரே செயலாளராக நியமிக்கப்பட முடியாது என எதிர்ப்பு எழுந்தது. இதன்போது, கொழும்பு கிளையை சேர்ந்த இரட்ணவேல் என்பவர், சாணக்கியனை செயலாளராக நியமிக்கலாமென பரிந்துரைத்தார். உடனே எழுந்த சுமந்திரன், அம்பாறை மாவட்ட தலைவர் த.கலையரசன், மட்டக்களப்பு மாவட்ட தலைவர் சாணக்கியன், திருமலை மாவட்ட தலைவர் குகதாசன் ஆகியவர்களில் ஒருவர் செயலாளரானால், தான் போட்டியிலிருந்து விலகுவதாக கூறினார். இதை தொடர்ந்து, சிறிதரன்- சுமந்திரனுக்கு இடையில் தனிப்பட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதன்போது, குகதாசனுக்கு செயலாளர் பதவியை வழங்கலாமென இருவரும் இணக்கப்பாட்டுக்கு வந்தனர். அத்துடன், ஏனைய பதவிகள் குறித்தும் இணக்கப்பாடு எட்டப்பட்டது. பொதுச் செயலாளர்- குகதாசன் சிரேஷ்ட உப தலைவர்- சீ.வீ.கே.சிவஞானம் இணை பொருளாளர்கள்- ஞா.சிறிநேசன், கனகசபாபதி துணைத் தலைவர்கள்- கே.வி.தவராசா, சாள்ஸ் நிர்மலநாதன், த.கலையரசன், பா.அரியநேந்திரன், பா.சத்தியலிங்கம் இணை செயலாளர்கள்- சாந்தி, சிறிஸ் கந்தராஜா, ரஞ்சனி கனகராஜா, ஈ.சரவணபவன், இரா.சாணக்கியன், சி.சிவமோகன் ஆகியோரும் 13 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர். இந்த முடிவு மத்தியகுழு கூட்டத்தில் வெளியிட்ட போது, அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்த முடிவை பொதுக்குழு ஏற்றுக்கொண்டால் மாத்திரமே குகதாசன் செயலாளராக அங்கீகரிக்கப்படலாம் என தீர்மானிக்கப்பட்டது. சிறிதரன் தனது அணியை சேர்ந்த சிறிநேசனிடம் வந்து, ஒரு வருடத்துக்கு அவர்களுக்கு விட்டுக்கொடுக்கலாம் என சமசரம் செய்தார். இதை தொடர்ந்து, பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதன்போது, இந்த பதவிகள் விபரம்முன்மொழியப்பட்டபோது, கூட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியது. நீங்களே இப்படி தீர்மானிப்பதெனில் எதற்கு பொதுச்சபை கூட்டம் நடத்துகிறீர்கள் என எகிறினர். இதன்போது, சுமந்திரன் கூட்டத்தை சமரசம் செய்ய முயன்றார். இப்படியான சந்தர்ப்பங்களில் போட்டிகளை தவிர்த்து, ஒருவருக்கு விட்டுக்கொடுத்து நடப்பது சிறந்தது, அதை பொதுக்குழு ஏற்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். அப்போது கூட்டத்திலிருந்து எழுந்த ஒருவர்- அப்படியானால் தலைவர் தெரிவில் நீங்கள் ஏன் போட்டியிட்டீர்கள்? சிறிதரனுக்கு விட்டுக் கொடுத்திருக்க வேண்டுமல்லவா? என கேட்டார். அத்துடன், சிரேஸ்ட உப தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளுக்காக வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென ஒரு சாரர் வலியுறுத்தினர். இதை தொடர்ந்து, நீண்ட வாய்த்தர்க்கம், கருத்து மோதல் ஏற்பட்டது. நீண்ட இழுபறியின் பின்னர், செயலாளர் பதவிக்கான வாக்கெடுப்பை நாளை (28-01-2024) நடத்தலாம் என தலைவர் மாவை அறிவித்தார். இதை தொடர்ந்து கூட்டத்திலிருந்து பலர் எழுந்து செல்லத் தொடங்கினர். இந்த சமயத்தில் எம்.ஏ.சுமந்திரன் திடீரென எழுந்து வந்து, தானே பதில் செயலாளர் என குறிப்பிட்டு, குகதாசனை செயலாளராக நியமிக்கலாமென்ற மத்தியகுழுவின் பரிந்துரையை எத்தனை பேர் ஆதரிக்கிறீர்கள், ஆதரிப்பவர்கள் கையை உயர்த்தலாம் என்றார். அந்த பரிந்துரைக்கு ஆதரவாக 112 பேர் கையை உயர்த்தினர். குகதாசனை செயலாளராக நியமிக்கும் பரிந்துரையை எத்தனை பேர் எதிர்க்கிறீர்கள் என சுமந்திரன் கேட்டார். 104 பேர் கையை உயர்த்தினர். இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொதுக்குழுவில் வாக்களிக்க தகுதியுள்ளவர்கள் 341 பேர் என்றும், வாக்களிப்பு நாளை என்பதால் நூறுக்கும் மேற்பட்டவர்கள் எழுந்து வெளியில் சென்று விட்டார்கள் என்றும் ஒரு சாரர் எதிர்ப்பு தெரிவித்தனர். குகதாசனை ஆதரித்து கையை உயர்த்தியவர்களில், அவர் அழைத்து வந்த பணியாளர்கள், வாகன சாரதிகளும் உள்ளடங்குவதாகவும், அவர்கள் மத்தியகுழு உறுப்பினர்கள் அல்லவென்றும் சுட்டிக்காட்டப்பட்டது. சுமந்திரனின் நடவடிக்கை கேலிக்கூத்தானது என்றும் விமர்சித்தனர். இந்த பின்னணியில், நாளை நடக்கவிருந்த கட்சியின் தேசிய மாநாட்டை ஒத்திவைப்பதாகவும், கட்சியின் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தெரிவையும் ஒத்திவைப்பதாக தலைவர்கள் மாவை அறிவித்து கூட்டத்தை ஒத்திவைத்தார். விரைவில் மத்தியகுழு கூட்டத்தை நடத்தி, மாநாட்டு திகதியை தீர்மானிக்க முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்தின் பின்னரும், வெளியில் சூடான நிலைமை காணப்பட்டது. சுமந்திரன் அணியில் இணைந்துள்ள- முல்லைத்தீவு முஸ்லிம் சுயேட்சைக்குழுவில் தேர்தலில் போட்டியிட்ட பீற்றர் இளம்செழியன் போன்ற- அரசியல் அனுபவமற்ற இளையவர்கள் அங்கு வாய்ச்சவடால் விட்டபடியிருந்தனர். செயலாளர் தெரிவு செய்யப்பட்டு விட்டார், அதை நிராகரிக்கும் கட்சியின் முடிவுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டுமென சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் பேசிக்கொண்டிருந்த இடத்தில் எம்.ஏ.சுமந்திரனும் நின்றார். அங்கு வந்த புதிய தலைவர் சி.சிறிதரன் இதை கேட்டு ஆத்திரமடைந்தார். “நீங்கள் யாரும் வழக்கு போடுவதெனில் போடலாம்… கட்சியை விட்டு போவதெனிலும் போகலாம். எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை“ என கோபமாக கூறினார். https://www.battinatham.com/2024/01/blog-post_140.html தமிழரசுக் கட்சியின் உச்சக்கட்ட ஜனநாயகம்!! Vhg ஜனவரி 28, 2024 தமிழரசுக் கட்சியில் பொதுச் செயலாளர் தெரிவின் போது பொதுக்குழுவிடம் கைகளைத் தூக்கி வாக்களிக்கும்படி சுமந்திரன் கோரிக்கை விட்டதும், உறுப்பினர்கள் தமது கரங்களை உயர்த்தி அளித்த வாக்குகளின் அடிப்படையில் குகதாசன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்ததும் யாவரும் அறிந்ததே. இந்த விடயம் பற்றி கட்சியின் தலைவரிடம் சில கேள்விகளை ஒரு ஊடகமாக எழுப்ப விரும்புகின்றோம் பொதுச்சபை முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட 100 இற்கும் அதிகமானவர்கள் வெளியேறிய பின்னர்தான் கைதூக்கி வாக்களிப்பதற்கான கோரிக்கையை சுமந்திரன் விடுத்திருந்தார் என்று கூறப்படுகின்றதே.. இது உண்மையா? கைதூக்கி வாக்களிக்கும் முறையை சுமந்திரன் கோரியதில் கட்சியின் தலைவராக நீங்கள் உடன்பட்டீர்களா? கைதூக்கி அளிக்கப்பட்ட வாக்குக்கள்தான் எண்ணப்பட்டன என்பது உண்மையானால், யார் அதனை எண்ணியது? குகதாசன் பொதுச்செயலாளராக வரவேண்டும் என்றோ அல்லது அவர் வரக்கூடாது என்றோ வாக்களித்த பொதுச்சபை உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் எடுக்கப்பட்டனவா? பொதுச்செயலாளர் தெரிவின் போது கட்சியின் பொதுச்சபை உறுப்பினர் அல்லாதவர்கள் வாக்களித்தார்கள் என்பது உண்மையா? தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியின் பிரமுகர் ஒருவர் தனது இரண்டு கைகளையும் தூக்கி வாக்களித்தார் என்று கூறப்படுகின்றதே அது உண்மையா? அவரது வாக்குகள் இரண்டாகக் கணக்கு வைக்கப்பட்டதா அல்லது ஒரு வாக்குத்தான் கணக்கில் எடுக்கப்பட்டதா? அப்படி அவரது வாக்கை கணக்கில் எடுத்தவர் யார்? மேலே உள்ள புகைப்படத்தில் இரண்டு கைகளையும் தூக்கி வாக்களித்த உங்கள் கட்சி உறுப்பினரின் செயல் சரியானதா? பிழை என்றால் அவருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை ஏதாவது எடுக்கப்படுமா? கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இரண்டு கைகளையும் தூக்கி வாக்களித்ததாகக் கூறப்படுகின்றதே உண்மையா? தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவு நியாயமாக நடந்தது என்று உறுதியாக நம்புகின்றீர்களா? இல்லை என்றால் அடுத்து என்னசெய்யப்போகின்றீர்கள்? https://www.battinatham.com/2024/01/blog-post_331.html
-
சிறீதரனுக்கு முன்னுள்ள பொறுப்புக்கள் – நிலாந்தன்.
சிறீதரனுக்கு முன்னுள்ள பொறுப்புக்கள் – நிலாந்தன். January 28, 2024 தமிழரசு கட்சிக்குள் நடந்த தேர்தல் ஏன் முக்கியத்துவமுடையது? செல்வநாயகம் தமிழ் மக்களைக் கடவுளிடம் ஒப்படைத்த பொழுதே அக்கட்சி செயல்பூர்வமாக இறந்து போய்விட்டது. அப்படிப்பட்ட ஒரு கட்சிக்கு யார் தலைவராக வந்தாலும் எதுவும் நடக்கப் போவதில்லை என்று ஒரு விமர்சனம் சமூக வலைத்தளங்களில் வைக்கப்படுகின்றது. கோட்பாட்டு ரீதியாக அது சரி. ஆனால் நடைமுறையில் தமிழரசுக் கட்சி இப்பொழுதும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. உள்ளதில் பெரிய கட்சி அது. தமிழ் மக்கள் மத்தியில் மக்கள் இயக்கம் எதுவும் கிடையாது. இருக்கின்ற கட்சிகளின் பிரதிநிதிகள்தான் தமிழ் அரசியலை முன்னெடுக்கின்றார்கள். அரசியல் என்பது சாத்தியக்கூறுகளின் கலை. இருப்பதை வைத்துத்தான் அரசியல் செய்யலாம். இருப்பதை வைத்துத்தான் அரசியலை எழுதலாம். கற்பனைகளில் இருந்தோ அல்லது விருப்பங்களில் இருந்தோ அரசியலை ஆய்வு செய்ய முடியாது. உள்ளதில் பெரிய கட்சி; அதற்குள் நடக்கும் தேர்தல் என்று பார்க்கும்பொழுது தமிழரசு கட்சிக்குள் நடக்கும் தேர்தலுக்கு முக்கியத்துவம் உண்டு. அதே சமயம் அது தமிழ் அரசியலின் இயலாமையைக் காட்டும் ஒரு தேர்தல் என்பதிலும் சந்தேகம் இல்லை. ஏனென்றால் தமிழ் அரசியல் கட்சி தேர்தல் மைய அரசியலாகச் சுருங்கிபோய் இருப்பதை அது காட்டுகின்றது. இது முதலாவது காரணம். இரண்டாவது காரணம், தமிழரசுக் கட்சியின் ஆங்கிலப் பெயர் சமஸ்டி கட்சி. அதற்கு இப்பொழுது 73 வயது. 73 ஆண்டுகளாக கட்சி தன் பெயரில் வைத்துக் கொண்டிருக்கும் சமஸ்டியை அடைய முடியவில்லை. எனவே அதன் தேர்தல் வாக்குறுதிகள், இலட்சியங்கள் என்பவற்றின் அடிப்படையில் சொன்னால், தமிழரசுக் கட்சி ஒரு தோல்வியுற்ற கட்சி. அதன் புதிய தலைவர் கட்சியை வெற்றிப் பாதையில் செலுத்துவாரா? அதற்கு என்ன செய்ய வேண்டும்? அவர் கடந்த 73 ஆண்டு கால தோல்விகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அதுபோல, அண்மையில் கட்சிக்குள் நடந்த தேர்தலில் இருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும். 73 ஆண்டு கால தோல்விக்குக் காரணம் தமிழரசுக் கட்சியிடம் பொருத்தமான வினைத்திறன் மிக்க வழிவரைபடம் இருக்கவில்லை என்பதுதான். விக்னேஸ்வரன் கூறுவது போல எல்லாருமே சமஸ்டிப் பண்புடைய தீர்வைதான் கேட்கின்றார்கள். ஆனால் ஒருவரிடமும் சமஷ்டிக்கான வழிவரைபடம் கிடையாது. சமஸ்டியை எப்படி அடைவது? நிச்சயமாக நாடாளுமன்ற அரசியலுக்கு ஊடாக மட்டும் அடைய முடியாது. நாடாளுமன்ற அரசியலுக்கு வெளியே ஒரு மக்கள் இயக்கம் தேவை. அதே சமயம் அந்த மக்கள் இயக்கத்தின் வழிநடத்தலின் கீழ் பொருத்தமான ஒரு வெளிவிவகாரக் கொள்கையை முன்னெடுக்கும் வினைத்திறன் மிக்க ஒரு வெளிவிவகாரக் கட்டமைப்பு வேண்டும். ஏனென்றால், எல்லாத் தேசிய இனப் பிரச்சினைகளும் சாராம்சத்தில் பிராந்திய மற்றும் அனைத்துலகப் பிரச்சினைகள்தான். அவற்றுக்கு அனைத்துலகத் தீர்வுதான் உண்டு. அவை உள்நாட்டுப் பிரச்சினைகள் அல்ல. உள்நாட்டுப் பிரச்சினை ஒன்றை வெளிநாடுகள் கையாளும்போது அது அனைத்துலகப் பரிமாணத்தைப் பெறுகின்றது. எனவே வெளிநாடுகளின் அழுத்தத்தால்தான் அதற்குத் தீர்வு வரும். இந்த அடிப்படையில் பார்த்தால்,வெளிநாடுகளைக் கையாள்வதற்குத் தேவையான பொருத்தமான வினைத்திறன்மிக்க ஒரு வெளியுறவுத் தரிசனமும் வெளியுறவுக் கட்டமைப்பும் வேண்டும். தமிழ் அரசியலில் அப்படியேதும் உண்டா? தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் இந்தச் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். சிறீதரன் இப்பொழுது ஒரு மாவட்டத்தின் பிரதிநிதி மட்டுமல்ல. அவர் ஒரு கட்சியின் தலைவர். எனவே மூன்று தளங்களில் அவர் ஒருங்கிணைப்பைச் செய்ய வேண்டும். முதலாவதாக, கட்சிக்குள் ஐக்கியத்தை ஏற்படுத்த வேண்டும். தேர்தலின் விளைவாக கட்சி துருவமயப்பட்டிருக்கிறது. இரண்டு பகை அணிகளையும் ஒன்றாகச் சேர்ந்து செயல்படும் ஒரு சூழலை ஏற்படுத்த வேண்டும். தேர்தலை நடத்தி ஒரு தலைவரை தேர்வு செய்த விடயத்தில் தமிழரசுக் கட்சி ஒரு முன்னுதாரணத்தை ஏனைய கட்சிகளுக்குக் காட்டியிருக்கின்றது. பெருமளவுக்கு பரம்பரை பரம்பரையாக வரும் தலைவர்களையும் கேள்விக்கிடமற்ற தலைவர்களையும் கொண்ட ஒரு பிராந்தியத்தில், தமிழரசுக் கட்சியின் முன்னுதாரணம் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளும் பின்பற்ற வேண்டிய ஒன்று. தேர்தலில் தோற்ற தரப்பு கட்சியை விட்டு வெளியேறினால், அந்தத் தேர்தல் மூலம் வெளிப்படுத்தப்பட்ட ஜனநாயக மாண்பு சிதைந்து விடும். சுமந்திரன் அனைத்துலகத் தொடர்புகளை அதிகமாக வைத்திருப்பவர். அது ஒரு வளம். ஒரு வெளியுறவுக் கட்டமைப்புக்குள் அவருக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் ஒரு வெளியுறவுக் கொள்கைக்கு அவர் பொறுப்புக்கூற வேண்டும். ஒரு தேர்தலை நோக்கி நிலைமைகளை நகர்த்தியவர் அவர்தான். ஏனெனில் வெற்றி தனக்கே என்று அவர் திட்டவட்டமாக நம்பினார். அதற்காக அவர் பல ஆண்டுகள் உழைத்துமிருக்கிறார். சிறீதரன் அவமானகரமான ஒரு தோல்வியைத் தழுவுவார் என்று சுமந்திரனின் ஆதரவாளர்கள் தொடக்கத்தில் நம்பினார்கள். ஆனால் சிறீதரன் கடுமையாக உழைத்தார். அவருடைய பிரதான பலம் கிளிநொச்சியில் இருக்கின்றது. அதோடு, மட்டக்களப்பு தொடக்கத்திலிருந்து அவரோடு நின்றது. சிறுதொகுதி உறுப்பினர்கள் சாணக்கியனோடு நின்றார்கள். ஏனையவர்கள் திட்டவட்டமாக சிறிதரனை ஆதரித்தார்கள். வெற்றிக்குரிய அடிப்படை வாக்குகளில் மட்டக்களப்பு வாக்குகள் உண்டு. அடுத்தது, யாழ்ப்பாணம் தீவுப்பகுதி. அமிர்தலிங்கத்திற்கும் காவலூர் நவரத்தினத்துக்கும் இடையிலான பகிரங்க விவாதத்தில் தொடங்கி தீவுப் பகுதிக்கு என்று சிறப்பான முன்னுதாரணங்கள் உண்டு. நவரத்தினம் தனிநாட்டுக் கோரிக்கையின் பிதாக்களில் ஒருவர். பலமான தமிழரசுக் கட்சியின் தலைமையை அவர் எதிர்த்தார். அவரோடு பக்கபலமாய் நின்றவர்கள் அநேகர் தீவுகளைச் சேர்ந்தவர்கள்தான். அண்மையில் கட்சிக்குள் நடந்த தேர்தலில் தீவுப்பகுதி உறுப்பினர்கள் ஒரு சிறிய தொகை. எனினும் அச்சிறு தொகை அசையாது சிறீதரனோடு நின்றது. இவைதவிர கடைசி நேரத்தில் வெல்பவரின் பக்கம் சாய்பவர்கள் சிறீதரனை வெற்றிபெற வைத்தார்கள். சிறீதரன் அதற்காகத் திட்டமிட்டு உழைத்தார். வெல்லமுடியும் என்ற நம்பிக்கையை அவர் தொடக்கத்திலிருந்து இழக்கவில்லை. அதை ஒரு கொள்கை வெற்றி என்று கூறுவது மிகைப்படுத்தலாக இருக்கலாம். தமிழரசுக் கட்சி மட்டுமல்ல ஏனைய கட்சிகளுக்குள்ளும் விசுவாசக் கட்டமைப்புகள் கொள்கையின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படவில்லை. அவை நலன்களின் அடிப்படையில்தான் கட்டியெழுப்பப்பட்டிருக்கின்றன. தமிழ் அரசியல்வாதிகளில் எத்தனை பேர் நேர்மையானவர்கள்? எத்தனை பேர் தேசியம் என்றால் என்ன என்பதனை அதன் நடைமுறை அர்த்தத்தில் விளங்கி வைத்திருக்கிறார்கள்? கடந்த 15 ஆண்டுகளில் தேசியம் எனப்படுவது திருடர்களும் பொய்யர்களும் பாலியல் குற்றவாளிகளும் எடுத்தணியும் முகமூடியாக மாறியிருக்கிறது. இதை இவ்வாறு கூறுவதன்மூலம் தமிழரசுக் கட்சிக்குள் இருக்கக்கூடிய நேர்மையான தேசியவாதிகளை இக்கட்டுரை கொச்சைப்படுத்தவில்லை. ஆனால் அது ஒரு பொதுப்போக்கு. கடந்த 15 ஆண்டு கால தேசிய நீக்க அரசியலின் விளைவு. எனவே கட்சியை கொள்கை ரீதியாக வார்த்தெடுக்க வேண்டிய ஒரு பொறுப்பு சிறீதரனுக்கு உண்டு. அவர் இப்பொழுது தனது சொந்த வெற்றியின் கைதி. தனக்குக் கிடைத்த வெற்றி கொள்கை வெற்றிதான் என்று அவர் நிரூபித்துக்காட்ட வேண்டும். இது முதலாவதாக சிறீதரன் செய்ய வேண்டியது. அதாவது கட்சிக்குள் கூட்டொருமைப்பாட்டை ஆகக்கூடியபட்சம் கட்டியெழுப்புவது. இரண்டாவதாக, சிறீதரன் தனது சொந்த மாவட்டத்திலேயே தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்க வேண்டும். அங்கே அவர் அரசியலை துருவமயப்படுத்தி வைத்திருக்கின்றார். தமிழரசுக் கட்சியின் ஏனைய மாவட்டக் கிளைகளோடு ஒப்பிடுகையில், கிளிநொச்சியில்தான் துரோகி-தியாகி என்ற உரையாடல் அதிகமாக உண்டு. அதற்குக் காரணம் சந்திரகுமாரின் சமத்துவக் கட்சி அங்கே ஒரு பலமான வாக்குத் தளத்தைக் கொண்டிருப்பதுதான். அதற்கு ஒரு பலமான காரணம் உண்டு. கிளிநொச்சி போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டம். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் இறுதிக்கட்டத் தலைநகரமாக இருந்தது. 2009க்குப் பின் அங்குள்ள புனர்வாழ்வு பெற்ற போராளிகளில் ஒரு பகுதியினருக்குச் சந்திரக்குமார் பெருமளவுக்குப் புகலிடம் கொடுத்தார்; பாதுகாப்புக் கொடுத்தார்; தொழில் கொடுத்தார். அவ்வாறு அவரால் அரவணைக்கப்பட்ட முன்னாள் இயக்கத்தவர்கள் பலர் முன்பு இயக்கத்தில் நிர்வாகப் பொறுப்புகளில் இருந்தவர்கள். அந்த ஊரவரல்லாத சந்திரக்குமாருக்கு அவர்கள் பலமான ஒரு வாக்குத்தளத்தைக் கட்டியெழுப்பினார்கள். சந்திரகுமாரின் சமத்துவக் கட்சியில் மாவட்ட அமைப்பாளரும் உட்பட முக்கிய பொறுப்புக்களில் பல முன்னாள் புலிகள் இயக்கத்தவர்கள் உண்டு. தமிழ்த் தேசியப் பரப்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சிக்கு வெளியே அதிகம் முன்னாள் விடுதலைப் புலிகளைக் கொண்ட கட்சி சமத்துவக் கட்சிதான். மேலும் சந்திரக்குமார் அங்கே பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் அதிகமாக வேலை செய்திருக்கிறார். அவருடையது அபிவிருத்தி மைய அரசியல். இவ்வாறு சிறீதரனின் சொந்த மாவட்டத்துக்குள்ளேயே அவருக்குச் சவாலாக பலமான எதிர் வாக்குத்தளம் உண்டு. அது இனப்படுகொலையாளிகளின் வாக்குவங்கி என்று கூறி முத்திரை குத்திவிட்டுப் போக முடியாது. அல்லது தியாகி-துரோகி என்ற அளவுகோல்களால் அதை மதிப்பிடவும் முடியாது. இந்த விடயத்தில் சிறீதரன் பண்புருமாற்றம் ஒன்றுக்குத் தலைமை தாங்கத் தயாராக இருக்க வேண்டும்.இது இரண்டாவது. மூன்றாவது,கட்சிகளை ஒருங்கிணைப்பது. 2009க்கு முன் இருந்த அதே ஐக்கியத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது. கடந்த 15 ஆண்டுகால அனுபவத்தின் அடிப்படையில் தேசத் திரட்சியை எப்படிப் பாதுகாப்பது என்று சிந்திக்க வேண்டும். எல்லாவற்றையும் கடடமைப்புக்குள்ளால் சிந்திக்க வேண்டும். குறைந்தபட்சம்வெளி விவகாரத்திலாவது கட்சிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு தேசிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இந்தியாவையும் ஐநாவையும் மேற்கு நாடுகளையும் அக்கட்டமைப்புத்தான் கையாள வேண்டும். தனிநபர்கள் தனியோட்டம் ஓடுவதற்கு அனுமதிக்கக்கூடாது. அது சிறீதரனுக்கும் பொருந்தும். எனவே சிறீதரன் முதலில் கட்சிக்குள் துருவ நிலைப்பட்டிருக்கும் உறுப்பினர்களை ஒரு திரளாக வார்த்தெடுக்க வேண்டும். ஒரு கூட்டுணர்வை உருவாக்கவேண்டும். இரண்டாவதாக, தனது மாவட்டத்தில் அதைச் செய்ய வேண்டும். மூன்றாவதாக,தேசிய மட்டத்தில் அதைச் செய்யவேண்டும். அதாவது ஒரு பண்புரு மாற்றத்திற்குத் தலைமை தாங்க வேண்டும்.அதற்கவர் தயாரா? https://globaltamilnews.net/2024/200153/
-
சமனற்ற நீதி ? – நிலாந்தன்.
- இரண்டாம் பயணம்
கரவெட்டி இல்லை. நம்ம ஊர் கரணவாய்.😀 ஆனால் உள்ளொழுங்கை, குச்சொழுங்கை, பனங்கூடல் ஒற்றையடிப் பாதைகள் என்று சைக்கிளில் உழக்கியதால் இந்தப் பிரதேசங்கள் எல்லாம் நன்றாகவே தெரியும்🤓 ஆனால் யாழ்ப்பாணம் நகரம் இப்பவும் தெரியாது- போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
போதமும் காணாத போதம் – 16 பிந்திப்புலர்ந்த விடியலுக்கு முன்பாகவே மழை துமித்தது. உறக்கம் கலைந்து லாம்பைத் தீண்டினேன். ஆறு மணியாகியிருந்தது. அதிவேகமாய் வீட்டின் கதவைத் திறந்து பட்டியடிக்கு ஓடினேன். ஆரம்ப சுகாதார நிலையத்தை தாண்டி வலதுபுறம் திரும்பினால் வருகிற குச்சொழுங்கையில் அரைக்கட்டை நடந்தால் பட்டியடி சிவன் கோவில் வரும். அதற்குப் பின்னாலிருக்கும் பாழடைந்த வீட்டில்தான் சந்திப்பதாகவிருந்தது. நான் சென்றடைவதற்கு முன்பாகவே யசோ வந்திருந்தாள். பீத்தல் விழுந்த குடையொன்றை ஏந்தி நின்றாள். பீத்தல் புகுந்து அவளை நனைக்கும் மழைத்துளிகள் பேறுடையன. ஆயிரம் கண்களுடைய மயில் தோகையை நினைவுபடுத்தும் வடிவமைப்பிலான ஆடை அணிந்திருந்தாள். ஈரம் விழுந்து துளிர்த்த தளிரென குளிர்பதுக்கி நின்ற யசோவை கட்டியணைத்து முத்தமிட்டேன். விசுக்கென தள்ளி விலக்கினாள். என் யாக்கையின் மாண்பு திகைத்து திணறியது. மீண்டும் முன்நகர்ந்து அவளை இறுக அணைத்து முத்தமிட விழைந்தேன். அவள் விளையமறுத்த நிலமென முகத்தை பலகோடுகளாய் கோணலாக்கி இறுக்கியிருந்தாள். “யசோ! என்ன நடந்தது? ஏதேனும் பிரச்சனையோ!” கேட்டேன். சடை பின்னப்பட்டிருந்த கூந்தலை அவிழ்த்து விரித்தாள். காமக் களிறை உருவேற்றும் பெண் கூந்தலில் காட்டுப் பூ வாசனை. அவளுடைய கண்களில் பெருகும் கள்ளம் என்னை ஆணாக அறிவித்தது. அவளருகே என்னை அழைத்தாள். வசியமிடப்பட்ட அடிமை நான். எத்தனை சவுக்குகளையும் என்னில் வீசும் உரிமை படைத்தவள். ஆயிரம் கண்கள் கொண்ட மயில் தோகையை கழற்றி வீசினாள். பீத்தல் கூடையை சுருக்கி வைத்தாள். எப்போதும் சுருக்கவியலாத மேகமெனும் பிரமாண்டமான குடையில் எத்தனை பீத்தல்கள். யசோ! பருவத்தின் காற்றில் அசைந்து வளரும் பூக்களும், காய்களும், கனிகளும் கொண்டவள். என்னை முத்தமிட்டு முத்தமிட்டு களிகூர்ந்தாள். என் ஆடைகளை உருவி எறிந்தாள். மழையில் நிர்வாணம் பூத்து நின்றோம். “மழையில் கூடல், உடலுக்கு சுதி, உனக்கு எப்பிடி” என்று கேட்டேன். அவளுக்கு களைப்பாய் இருந்தது. அடிவயிற்றில் குளிரளித்து நின்றது சுக்கிலத்து ஈரம். யசோ எழுந்து ஆடைகளை அணிந்தபடி “நான் இண்டைக்கு வரமாட்டேன் என்று நினைத்தாய் அல்லவா” என்று கேட்டாள். “பின்ன, மழை பெய்கிறது. இவ்வளவு கஷ்டப்பட்டு சந்திக்கத்தான் வேண்டுமா. ஆனாலும் நீ வந்திருப்பாய் என்று மனம் சொன்னது” என்றேன். “சரி நேரம் போய்ட்டுது. ஆடுகளை பட்டியிலிருந்து சாய்த்துவிடவேண்டும். வெளிக்கிடுகிறேன்” “இன்றைக்குப் பின்னேரம் சந்திக்கிறோமா” “வாய்ப்பில்லை. எங்கட சொந்தக்காரர் வீட்டு விஷேசம். அங்க போகவேண்டும்” “எந்த இடத்தில” “அதுவோ… உருத்திரபுரம். ஏன் வரப்போறியளோ” “இல்லையில்லை. நீ போய்ட்டு வா. நாளைக்குப் பார்க்கலாம்.” “ஏன் நாளைக்கும் மழை பெய்யுமோ” என்று கேட்டபடி அங்கிருந்து ஓடிச்சென்றாள். பட்டியில் ஆடுகள் நனைந்து நின்றன. அவள் திறந்ததும் பழக்கப்பட்ட திசைவழியில் ஓடின. வழிமாறிய ஆடுகளை மேய்த்தபடி பாழடைந்த வீட்டைப் பார்த்தாள். கூரைவரை உயர்ந்தேறிய கொடியில் மஞ்சள் பூக்கள் அசைய வானம் குனிந்து பார்த்தது. அங்கிருந்து வீட்டிற்குப் போகும் வழியிலேயே இருந்த வாய்க்காலில் குளித்தேன். ஆயிரம் புரவிகளில் ஏறித்திரிந்த கம்பீரத்தின் தினவு உடல் புகுந்திருந்தது. தண்ணீரில் நின்று கண்களை மூடினால், யாவும் அளிக்கும் ஒரு அமிழ்தக் கொடியாக நிலத்தில் படர்ந்திருக்கிறாள் யசோ. அடிவயிற்றில் மீன்களின் தீண்டல். பாதங்களை உய்விக்கும் பாசிகளின் அசைவு. தண்ணீரில் கொதிக்கும் என்னுடல். யசோ! உன்னுடைய கானகத்தின் பாதையில் திக்கற்று நிற்கும் என்னை எங்ஙனம் தாங்குவாய் சொல்! யசோவுக்கும் எனக்குமிடையே காதல் மலர்ந்து இரண்டு வருடங்கள் ஆகியிருந்தன. அவளுடைய தாயார் இறந்துபோன அன்றைக்குத்தான் முதன்முறையாக என்னுடைய கைகளைப் பிடித்து, வீட்டினுள்ளே அழைத்துச் சென்றாள். “உன்னை விட்டால் எனக்கினி யார்” என்பதைப் போல என்னுடைய விரல்களைப் பற்றினாள். போராளியாக களமுனையிலிருந்த யசோவின் சகோதரி அடுத்தநாள் காலையிலேயே வரமுடியும் என்பதால் அன்றிரவு முழுதும் தாயின் பூதவுடல் வீட்டில் கிடத்தப்பட்டிருந்து. மூன்று பெற்றோல் மாக்ஸ் வெளிச்சத்தில் பந்தல் ஒளிர்ந்தது. கடதாசிக் கூட்டம் விளையாடுபவர்கள், பீடி புகைப்பவர்கள், வெற்றிலை போடுபவர்கள், அரசியல் கதைப்பவர்கள் என எல்லோருக்கும் மத்தியிலும் பூதவுடல் தனிமையிலிருந்தது. யசோ, தாயின் தலைமாட்டிலிருந்து வேப்பிலையால் பூச்சிகளை விரட்டினாள். சோர்வும் தனிமையும் அவளை மிரட்ட ஆரம்பித்திருந்தன. அழுது அடைத்திருந்த குரலோடு, முகம் காய்ந்திருந்தது. அவளருகே சென்று “எப்பனாய் சாப்பிடுங்கோ யசோ” என்றேன். அவள் வேண்டாமென்று தலையசைத்துவிட்டு தாயின் பூதவுடலில் விழுந்து ஊர்ந்த சக்கரபாணி வண்டைத் தூக்கி எறிந்தாள். நள்ளிரவு இரண்டு மணிவரை அப்படியே அமர்ந்திருந்தாள். ரத்தச் சொந்தங்களில் சிலர் இழவு காத்தனர். தயாரின் மூத்த சகோதரி நேரம் பிசகாமல் ஒப்பாரி பாட விழித்திருந்தாள். “என்னையழைத்த யசோ “எனக்குத் துணையாக வரமுடியுமா” என்று கேட்டாள். “எங்கே போகவேண்டும்” கேட்டேன். “எனக்கு சுகமில்ல, துணிமாத்த வேணும். வீட்டுக்குப் பின்னாலவுள்ள மறைப்புக்குத்தான்” “ஆரும் பார்த்தால் பிழையாய் நினைப்பினம்” என்று தயங்கினேன். “இனைச்சால் இனைக்கட்டும். என்னோட வாங்கோ” கையிலிருந்த டோர்ச் லையிற் வெளிச்சத்தோடு யசோவை கூட்டிச்சென்றேன். வீட்டுக்குப் பின்பக்கத்தில் அவள் சொன்னது மாதிரி மறைப்பு ஏதும் இல்லை. அவளின் பின்னால் நடந்து சென்றேன். கொஞ்சம் தள்ளி வாய்க்கால் ஓடிக்கொண்டிருந்தது. என்னிடமிருந்த டோர்ச் லையிற்றை வாங்கியவள் ஒருமரத்தின் கீழே எதையோ சுற்றுமுற்றும் தேடினாள். பிறகு அங்கேயே அமர்ந்து என்னையும் அப்படியே பணித்தாள். “யசோ…துணி மாத்தேல்லையோ, நீங்கள் மாத்துங்கோ நான் நிக்கிறன்” என்றேன். என்னை இறுக கட்டியணைத்து மூச்சொலி தெறிக்க முத்தமிட்டு ஆடைகளைக் களைந்தாள். வெறுமையிருள் பிளந்து இனிமை சுரக்கும் சுடர் ஏந்தி என்னை ஆட்கொண்டாள். வாய்க்காலின் நீர்ப்பெருக்கு புதிய இச்சைகளோடு சப்தமிட்டது. யசோ வானத்துக்கும் பூமிக்கும் பறந்து விழுகிற உக்கிரத்தோடு இயங்கினாள். அழிவற்ற கண்ணீருக்கு அங்குண்டு பீடம். உடல் எழுந்து பறையென அதிர்கிறது. மலையிருந்து நிலமோடி வருகிற நீர்த்தடத்தின் வெளிச்சமென யசோவும் நானும் அங்கே துய்த்து நிறைந்தோம். “உன்னுடைய அம்மா, அங்கே தனித்திருக்கிறாள். எழுந்து செல்வோம் யசோ” “அப்பாவை ஆர்மியிடம் பறிகொடுத்த நாளிலிருந்து இற்றைக்கு இருபதாண்டுகளாக அம்மா இப்படித்தான் இரவுகளைப் போக்கினாள். அவளுக்கு நிம்மதிமிக்க இரவு இன்றுதான் வாய்த்திருக்கிறது. அதையெண்ணி நீ கவலைப்படாதே” “ஆனாலும், போகலாம். ஆராவது உன்னைத் தேடி வந்தால் பிழையாகிவிடும். நீயேன் பொய் சொல்லி என்னை அழைத்து வந்தாய்” “அது பொய்யில்லை. உண்மைதான். ஆனால் இப்ப ஒண்டையும் காணேல்ல” யசோ சிரித்தாள். இருவரும் வாய்க்காலில் இறங்கி உடலைக் கழுவினோம். யசோ அடிவயிற்றில் மீன்களைப் போல தீண்டி இரையாடினாள். காணும் போகலாம் என்றேன். “அமைதியாக இரு. கொம்புத்தேன். வெறுமையையும் துக்கத்தையும் எரிக்கிறது. தண்ணீரில் நீ விறைத்து நிற்கிறாய். உன்னுடைய உடலில் சுடரும் நிலவின் வெளிச்சம் என்னை மோகிக்கிறது. துண்டு துண்டாகி சிதறிக்கிடக்கும் உளத்தை சிறுசிறு அகல் விளக்காக மாற்றும் இந்தச் சுகத்தை நீ எனக்குத் தராமல் போகாதே. கொம்புத்தேன் உருகட்டும்” என்றாள். நாங்களிருவரும் பந்தலுக்குள் நுழையும் போது இன்னும் சிலர் உறங்கியிருந்தனர். கடதாசிக் கூட்டம் விளையாடிக்கொண்டிருப்பவர்கள் அளவில் குறைந்திருந்தனர். தாயின் தலைமாட்டில் போய் அமர்ந்தாள். அடிக்கடி என்னைப் பார்த்து கண்களை மருளச் செய்தாள். யசோவிடம் ஏதோவொரு மூர்க்கம் பெருகி நிற்கிறது. அவளினுள்ளே தணல் மூண்டிருக்கும் தீயின் சடசடப்பை அறியக் காத்திருந்தேன். அதிகாலையிலிருந்து ஆட்கள் வரத்தொடங்கியிருந்தனர். களமுனையிலிருந்து யசோவின் சகோதரி வந்திருந்தார். தாயின் பூதவுடலைக் கட்டியணைத்து அழுதார். அம்மா.. அம்மாவென்ற அரற்றல் சுருக்கமாகவே தீர்ந்தது. அதன்பிறகு யசோவும் நானும் பலதடவைகள் சந்தித்துக் கொண்டோம். எங்களிடம் தீர்ந்து போகாத தாழிகளில் காமம் நொதித்து கள்ளென வழிந்தது. கலவியிலிருந்த கணமொன்றில் கண்கள் பனித்து “ இப்பிடி இருக்கேக்க மட்டும்தான் எங்கட நாட்டில யுத்தம் நடக்கிறதே மறந்து போகுது. ஒரு அஞ்சு நிமிஷம் அப்பிடிச் சுகமாய் இருக்கு” என்றாள் யசோ. “நல்லாயிருக்கு உங்கட கதை. நாங்கள் ரெண்டு பேரும் சந்தோசமாய் இருக்கேக்க, எத்தின பேர் நாட்டுக்காக உயிரை விடுகினமோ!” என்றேன். “இதுவும் ஒரு போராட்டம் தானே. யுத்தத்தை மறக்க ஒரு உபாயம். அப்பாவை ஆர்மிக்காரன் பிடிச்சிட்டு போன நாளிலயிருந்து அம்மா பட்ட கஷ்டங்களில இதுதான் பெரிசு. உன்ர கொப்பர் கனவில வந்து கொஞ்சச் சொல்லி அடிக்கடி கேக்கிறாரடி என்பாள் அம்மா. அப்பிடியொரு கனவு வருகிற கணங்கள் மட்டும்தான் அம்மாவோட உளம் இந்த யுத்த அவலங்களை மறந்திருக்கும். இல்லையோ!” “துயரம் தான் யசோ” “கவலைப்பட எதுவுமில்லை. ஆனால் இவ்வளவு யுத்தத்துக்கு மத்தியிலும் எங்கட ஆஸ்பத்திரிகளில குழந்தைகள் பிறக்கினம் தானே. யுத்தம் ஒட்டுமொத்த மனுஷனிட்ட தோக்கிற இடமிதுதான்” “அடிசக்கை… இதை நீங்கள் எங்கட தவபாலன் அண்ணைக்கு சொன்னியள் எண்டால், ரெண்டுநாள் பெரிய ஆய்வுக்கட்டுரை வாசிப்பார்” “இப்பிடியொரு உண்மையை இயக்கத்தின்ர ரேடியோவில சொல்லுறதால அதைப் பொய்யெண்டு நம்பவும் வாய்ப்பிருக்கு. அதை நானே வைச்சுக் கொள்கிறேன்” என்றாள். ஆடுகளை மேய்த்துவந்து பட்டியில் அடைத்து அந்தியின் சிவந்த ஒளியில் வியர்வை சிந்த எங்கள் வீட்டிற்கு வந்திருந்தாள். காலையில் பெய்த மழையில் நம்வெள்ளம் நீந்தியதை அவளுக்கு நினைவுபடுத்தினேன். உணவை சட்டியில் போட்டுக் கொடுத்து “அம்மா வீட்டில் இல்லை, இரணைமடு வரைக்கும் போயிருக்கிறா” என்றேன். அதே ஆயிரம் மயில் கண்கள் திறந்த சட்டை. ஆட்டு மந்தையின் மொச்சை மணம் ஏறிய கிளர்ச்சி. வெயிலில் காய்ந்த யசோ தகித்திருந்தாள். எங்கிருந்தோ எம்மைத் தேர்ந்தடுக்கும் இந்த உணர்வை இறையிருக்கையில் அமர்த்தி பூசிக்கவேண்டும். யுத்தம் பொல்லாத செருக்கின் அநீதி. ஆனாலும் நானும் யசோவும் உடல்களை இழைத்து யுத்தத்தை மூடினோம். அது தருவித்த தழும்புகளில் ஒரு வழித்தோன்றலை உருவாக்க எண்ணினோம். யசோவை வீட்டினுள்ளே அழைத்தேன். அவள் வேண்டாமென மறுத்தாள். என்னுடைய கைகளைப் பற்றி முத்தமிட்டு, வேறொரு நாளில் வைத்துக் கொள்வோம் என்றாள். இப்போதே, இக்கணமே நாம் யுத்தத்தை மறக்கவேண்டுமென தோன்றுகிறது என்றேன். நாம் யுத்தத்தை சில கணங்கள் மறப்போமாக! அது நம்மீது சுமத்திய காயங்களை எடையற்ற இறகுகளாக ஊதிப் பறக்க விடுவோமாக! என்று சொல்லியபடி நிலத்தின் மீது கொடியெனப் படர்ந்து பூவின் அதழ்களைத் திறந்தாள். இயங்கி முயங்கும் அந்திப்பொழுதில் முன்நிலவு மேலெழுந்து வானறைந்தது. “ஆராவது வந்துவிடப் போகிறார்கள், நிறுத்திக்கொள்ளலாம்” யசோ சொன்னாள். “அம்மா வருவதற்கு நேரம் செல்லும். நீ ஏன் புதிதாகப் பயப்படுகிறாய்” என்று கேட்டேன். “யுத்தத்தை மறக்கலாம். ஆனால் இது சனங்களுக்குத் தெரிஞ்சால் மானக்கெடுத்து போடுங்கள்” “இதைத்தானே நான் அண்டைக்கு இரவும், வாய்க்காலடியில வைச்சு சொன்னான்” “எண்டைக்கு இரவு” “உங்கட அம்மா செத்த அண்டைக்கு, வாய்க்காலுக்கு கூட்டிக்கொண்டு போனியளே” “அங்கே, ஏன் நான் கூட்டிக்கொண்டு போனான். உங்களுக்கு என்ன விசரே” “நல்ல கதையாய் இருக்கே. கூட்டிக்கொண்டு போய் செய்யாத வேலையெல்லாம் செய்துபோட்டு, இப்ப அப்பாவி மாதிரி, வேஷம் போடுறியள்” “சத்தியமாய் நான் அப்பிடி ஒண்டும் செய்யேல்ல. விடியும் வரை அம்மாவின்ர தலைமாட்டில இருந்து வேப்பிலையால விசுக்கி கொண்டெல்லே இருந்தனான்” “அய்யோ, இதென்ன பொய். உங்களுக்கு சுகமில்லை. துணி மாத்தவேணும். வா எண்டு என்னைக் கூட்டிக்கொண்டு போனியளல்லே” “சத்தியமா இல்ல” “அப்ப, நான் சொல்லுறது பொய். அப்பிடித்தானே” “நான் சொன்னானோ எனக்குத் தீட்டு எண்டு?” யசோவின் இந்தக் கேள்வியிலிருந்த தீவிரம் சூழலுக்கு மிக அந்நியமாய் இருந்தது. ஆனாலும் நான் ஓமென்று தலையசைத்தேன். “அம்மா செத்த அண்டைக்கு அவாவுக்கு தான் மூன்றாம் நாள் தீட்டு லேசாய் இருந்தது” என்ற யசோ என்னை இறுக அணைத்தாள். “யசோ, நீ என்ன சொல்லுகிறாய்?” “இருபது வருஷத்துக்கு பிறகு அம்மா அண்டைக்கு நிம்மதியாய் உறங்கியிருக்கிறாள். அவளும் சில கணங்கள் யுத்தத்தை மறந்து இருந்திருக்கிறாள்” என்று சொல்லியபடி யுத்தம் ஒழிக! யுத்தம் ஒழிக! என்று முயங்கினாள். https://akaramuthalvan.com/?p=1664- இரண்டாம் பயணம்
சின்ன வயதில் இப்படி நானும் குளிப்பாட்டப்பட்டிருக்கின்றேன். 😊 மறந்ததை நினைவுக்கு கொண்டு வந்ததற்கு நன்றி.- இரண்டாம் பயணம்
இப்படி ஒரு வீட்டைப் பார்த்த நினைவு உள்ளது- மேட்டிமைவாதமா? - ஜெயமோகன்
பாமரரை எதிர்கொள்வது… jeyamohanDecember 31, 2023 பாமரர் என்று நாம் மொழியாக்கம் செய்து பயன்படுத்தும் சொல் கடைக்கோடிக் குடிமகன் என்னும் பொருளில் மேலைநாட்டு ஜனநாயக விவாதங்களில் பயன்படுத்தப்பட்டது. ஜான் ரஸ்கினின் Unto This Lastஎன்னும் நூலில் இருந்து உருவான கருதுகோள் அது. அரசு என்பது கடைக்கோடி மனிதனுக்கும் நலம்புரிவதாக, அவனையும் கருத்தில்கொள்வதாக அமையவேண்டும் என அன்றைய ஜனநாயகவாதிகள் சொன்னார்கள். அது ஓர் உயர்ந்த சிந்தனை. ஜனநாயகத்தின் அடிப்படைக் கருதுகோள். ஒரு குடிமகன் படிக்காதவனாக, பண்படாதவனாக, தன் உரிமைகள் என்ன என்பதையே அறியாதவனாக இருக்கலாம். அப்போதும் ஜனநாயகம் அவனை ஒதுக்கிவிடக்கூடாது. அவனுக்காகவும் அது நிலைகொள்ளவேண்டும். அவனுக்கும் உரிமைகளில் எந்த பாகுபாடும் இருக்கலாகாது. அதற்கு அடுத்த படியில் இடதுசாரிகள் பாமரர்களை கற்பனாவாத நெகிழ்வுடன் மகிமைப்படுத்தலானார்கள். படித்தவர்கள் படித்த படிப்பென்பது நிலவுடைமைச் சமூகத்தின் கல்வி. அல்லது முதலாளித்துவச் சமூகத்தின் கல்வி. அக்கல்வியால் அவர்கள் கறைபட்டவர்கள். பாமரர் அந்த கறையேதும் இல்லாத தூய குடிமகன். மக்கள் என்பவர்கள் உண்மையில் பாமரர்களே என அவர்கள் வாதிட்டனர். அந்தப் பாமரர்களை வழிநடத்தவேண்டியவர்கள் புரட்சிக்கல்வி கற்றவர்களாகிய தாங்கள் என்றனர். (மார்க்ஸியர்களான மாவோ சே துங்கும் போல்பாட்டும் பாமரர் அல்லாதவர்களை கொன்று குவித்து சமூகத்தை தூய்மைப்படுத்தியதும் உண்டு) பாமரரை புனிதப்படுத்துதல் என்பது இடதுசாரிச் சிந்தனையின் ஒரு பகுதியாக நம் இலக்கியங்களில் ஊடுருவியது. தொடக்ககால எழுத்துக்களின் மையக்கருவே பாமரர்களில் வெளிப்படும் உயர்பண்புகளை விதந்தோதுவதுதான். ஆரம்பத்தில் அது விந்தையான ஒரு புதியசிந்தனையாக இருந்தது. பின்னர் ஏற்பு பெற்றது. பின்பு அரசியல்சரிநிலையாக ஆகியது. இன்று பாமரன் என்றாலே நல்லவன், பண்பானவன் என்று சொல்லவேண்டும் என்பது ஒரு அறிவுத்தளக் கெடுபிடி. பாமரனை கொண்டாடவேண்டுமே ஒழிய விமர்சிக்கவே கூடாது என்கிறார்கள். பாமரனை கொண்டாடும் இந்த மனநிலை முன்னர் மதங்களில் இருந்தது. இந்தியப் பக்தி இயக்கம் பாமரர்களை கொண்டாடுவதை காணலாம். அறிஞர்களுக்கு காணக்கிடைக்காத கடவுள் மூர்க்கமான பக்தி கொண்ட பாமரனுக்கு அருள்கிறார் என பக்திக்கதைகள் சொல்கின்றன. கிறிஸ்தவ மரபிலும் கல்வி சாத்தானுடன் தொடர்புபடுத்தப்பட்டது, கல்லாமை நேரடியாக ஏசுவுக்கு அணுக்கமானதாக கொண்டுசெல்லும் என்று சொல்லப்பட்டது. ஏசு பாவிகளை மீட்கவே வந்தார் என்னும் நம்பிக்கையானது அவ்வாறு மீட்டமைக்கப்பட்டது. கிறிஸ்தவம் , பக்தி இயக்கத்தின் சைவ வைணவப் பெருமதங்கள் முதலியவை பாமரரைக் கொண்டாடுவதன் வழியாக பாமரரைக் கவர்ந்து பெரிய அமைப்புகளாக மாறின. அதையே பின்னர் இடதுசாரி புரட்சிகர அமைப்புகள் செய்தன. அவையும் பாமரரை புகழ்ந்து பாமரரை ஒருங்குதிரட்டி ஆற்றல்கொண்டவையாக ஆயின. அந்த வழியையே இன்று அரசியல்வாதிகளும் செய்கிறார்கள். அவர்கள் பாமரரை புகழ்வது பாமரர்களின் ஆதரவைப் பெறுவதற்காகவே. ஓர் அறிவியக்கவாதி ஒருபோதும் பாமரரைப் புகழமுடியாது. அது அவன் செயல்படும் அறிவியக்கத்தையே அவன் நிராகரிப்பது போன்றது. மானுடகுலம் உருவானபோதே தோன்றி இன்று வரை நீடிக்கும் மானுட அறிவு என்னும் மாபெரும் சக்தியை மறுப்பது போன்றது. மனிதகுலம் பிற உயிர்களில் இருந்து வேறுபட்டிருப்பது அந்த அறிவியக்கத்தால்தான். மனிதகுலம் உருவாக்கியுள்ள சமூக அமைப்புகள், நம்பிக்கைகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், சிந்தனைகள், கலைப்படைப்புகள் அனைத்தும் அதன் அறிவியக்கத்தின் உருவாக்கங்கள்தான். பாமரர் என்றால் யார்? ‘சமூகத்தில் நிகழும் அறிவியக்கத்துடன் எவ்வகையிலும் பிரக்ஞைபூர்வமாக தொடர்பு கொள்ளாத ஒருவர்’ என பொதுவாக வரையறை செய்யலாம். அந்த அறிவியக்கத்துடன் இருவகையில் தொடர்புகொள்ள முடியும். அதை அறிந்துகொள்ளுதல், அதில் பங்களித்தல். இரண்டையுமே செய்யாதவர் பாமரர். அப்படி, அறிவியக்கத்துடன் தொடர்பே அற்றவர்கள் உண்டா என்று கேட்கலாம்.அறிவியக்கத்தால் தொடப்படாத ஓர் மானுட உயிர் பூமியில் இருக்க முடியாது. ஏனென்றால் ஆசாரங்கள், வாழ்க்கைமுறைகள், மதம், அறிவியல் எல்லாமே அறிவியக்கத்தால் உருவானவைதான். கல்வி எதுவானாலும் அறிவியக்க அறிமுகம்தான். ஆனால் பாமரர் என்பவர் அறிவியக்கம் பற்றி அறியாமல், தனக்கு புகட்டப்பட்டதை மட்டும் அறிந்திருப்பார். தன் உயிர்வாழ்தலுக்குத் தேவையானவற்றை மட்டும் கற்றிருப்பார். அதற்குமேல் அக்கறையே அற்றவராக இருப்பார். அத்தகையோரை நாம் அன்றாடம் சந்தித்துக்கொண்டே இருக்கிறோம். அத்தகைய பாமரர்கள் பயனற்றவர்கள் என்றோ, அவர்கள் வெறுக்கப்படவேண்டியவர்கள் என்றோ எந்த அறிவியக்கவாதியும் சொல்ல மாட்டான். அறிவியக்கம் பாமரர்களுக்கு எதிரானது அல்ல. பாமரர்களுக்கும் அவர்களுக்குரிய சமூகப்பங்களிப்பு உண்டு. அவர்கள் அறிவியக்கத்தின் ஆராய்ச்சிக்குரிய மூலப்பொருட்கள், அறிவியக்கத்தின் பேசுபொருட்கள் மட்டுமே. அவர்கள் சமூகத்தின் பகுதியினர் என்பதனால் அறிவியக்கம் அவர்களின் நலனையும் கருத்தில்கொண்டே செயல்படமுடியும். ஆனால் அறிவியக்கத்தின் பார்வையில் அவர்களின் கருத்துக்கள் பொருட்படுத்தப்படவேண்டியவை அல்ல. அவர்களை அறிவியக்கம் ஒரு தரப்பாகக் கொள்ளாது. அவர்கள் அறிவியக்கம் மீது கொண்டுள்ள அச்சம், இளக்காரம் ஆகியவை எதிர்கொள்ளப்படவேண்டிய எதிர்மறை விசைகள். அவர்களிடமிருந்து அறிவியக்கம் பாதுகாக்கப்படவேண்டும். இன்று, சமூகவலைத்தளச் சூழலில் பாமரர்களுக்கு ஊடகம் அமைந்துள்ளது. அவர்களின் கருத்துக்கள் திரண்டு ஆற்றல் கொண்டவை ஆகியுள்ளன. இன்று அந்த பாமரர் அறிவியக்கத்தை அழிக்கும் ஆற்றல் கொண்டவர்களாகத் திரண்டுள்ளனர். அந்த புரிதல் அறிவியக்கத்தில் செயல்படுபவர்களுக்குத் தேவை. சென்ற காலகட்டத்தில் ஜனநாயகத்தை முன்வைத்த அறிவியக்கவாதிகளும் இடதுசாரிகளும் பாமரர் பற்றி கொண்டிருந்த கற்பனாவாத நெகிழ்வுடன் இன்று அவர்களை அணுகுவது அறிவியக்கத்தின் அழிவுக்கே வழிவகுக்கும். பாமரர் என்ற சொல்லை இரண்டு வகைகளில் மேலும் பகுத்து விரித்துக்கொள்ள வேண்டியுள்ளது. துறைசார் பாமரர்கள் இன்று உண்டு. ஏனென்றால் இன்று எல்லா அறிவுத்துறைகளும் பிரம்மாண்டமாக பெருகி வளர்ந்து தனி உலகங்களாக மாறிவிட்டிருக்கின்றன. முறையான பயிற்சியின்றி எந்த அறிவுத்துறைக்குள்ளும் நுழைய முடியாது. ஆகவே ஒரு துறை அறிஞர் இன்னொரு துறையில் பாமரர் ஆக இருக்க முடியும். முன்புபோல எல்லாத்துறைகளிலும் ஓர் அறிதல் இன்று இயல்வது இல்லை. நான் கணிதம் அல்லது கணிப்பொறியியல் போன்ற ஏராளமான துறைகளில் பாமரனே. அங்கே சென்று என் கருத்துக்களைச் சொல்ல மாட்டேன். எனக்கு புரியாதவை என்பதனால் அவற்றை இகழ மாட்டேன். எனக்கு என்ன தெரியும், எங்கு நான் கருத்து சொல்லலாம் என்று தெரிந்திருப்பதே இன்று ஓருவனின் அடிப்படைத் தகுதி. அது இல்லாதவர் பாமரர். ஒரு துறையில் நீங்கள் எந்நிலையில் நின்று கருத்து சொல்கிறீர்கள் என்பதை நீங்களே வரையறை செய்துகொள்ளவேண்டும். உதாரணமாக நான் பங்குச்சந்தையில் வெறும் எளிய முதலீட்டாளனாக மட்டுமே எதையேனும் சொல்லமுடியும். நிபுணனாக அல்ல. ஆனால் இன்று சமூகவலைத்தளச் சூழலில் கணிப்பொறியியலில் உயர்தகுதி கொண்ட ஒருவர் மருத்துவத்தில் புகுந்து கருத்துச் சொல்வது சாதாரணமாகக் காணக்கிடைக்கிறது. ஒரு கணித நிபுணர் தொல்லியல் தேவையற்றது என இகழ்வதை கண்டுள்ளேன். அவர்கள் அந்ததந்த களங்களில் பாமரர்களே. இன்னொரு வகை பாமரர்களை ‘படித்த பாமரர்’ என்று சொல்லலாம். இன்று கல்வி பரவலாக ஆகியுள்ளது. தொழில் வாய்ப்புகள் பெருகியுள்ளன. ஊடகம் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளது. ஆகவே ஏராளமானவர்களுக்கு தங்கள் துறைகளின் தேர்ச்சி உண்டு. செய்திகளை தெரிந்தும் வைத்திருப்பார்கள். ஆனால் அவர்களும் ஒருவகை பாமரர்களாக இருக்கக்கூடும். ஒருவர் இன்றுள்ள ‘அரசியல்- நுகர்வு- கேளிக்கை’ என்ற மூன்று மாபெரும் பிரச்சார அமைப்புகளால் மூளைக்குள் திணிக்கப்பட்டவற்றை மட்டுமே அறிந்து, அவற்றை மட்டுமே பேசிக்கொண்டிருப்பவர் என்றால் அவர் படித்த பாமரரே. தனக்குரிய சுயமான தேடலுடன், தனக்குரிய களத்தில் படித்தும் அறிந்தும் முன்செல்லாதவர் அனைவருமே பாமரர்கள்தான். ஏதேனும் ஒருவகையில் மெய்யான அறிவியக்கத்துடன் தொடர்புகொண்டிராதவர் பொதுக்களத்தில் என்ன அறிந்திருந்தாலும் பாமரரே.இந்நூற்றாண்டு உருவாக்கிய ஒருவகை நவீனப்பாமரர்கள் இவர்கள். இப்படி ஒரு கூட்டம் இருக்கிறது என்பதை அறிவியக்கத்தில் செயல்படுபவர் உணர்ந்தாகவேண்டும். இவர்களை நாம் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். இவர்களிடம் ஏமாந்துகொண்டே இருக்கிறோம். ‘படிச்சவனா தெரியறான் சார், ஆனா….’ என்று அடிக்கடி நாம் சொல்ல நேர்கிறது. ஆனால் அவர்களை நம்மால் வரையறை செய்துகொள்ள முடிவதில்லை. அதனால் பல இடர்கள் நம் சிந்தனையிலேயே உருவாகின்றன. என் இளம் நண்பர் ஒருவர் சொன்னார். ‘எம்.பி.பி.எஸ் படிச்சிருக்கான் சார். ஆனா அரசியல் கட்சிக்கு அடியாள் மாதிரி மூர்க்கமாப் பேசிட்டிருக்கான்… கல்லத்தூக்கி வீசுற தொண்டனைவிட கேவலமா இருக்கான்’. இங்கே ஒரு பாமரர் ஒரு பட்டம் வைத்திருப்பதுதான் குழப்பத்தை உருவாக்குகிறது. பாமரர்களின் இயல்பு அவர்களுக்கு புகட்டப்பட்டவற்றில் அப்படியே மூழ்கிவிடுவது. அதன் விளைவாக அரசியல், மதம், இனவாதம், மொழிவாதம், தனிநபர் வழிபாடு போன்றவற்றில் கண்மூடித்தனமாக இருப்பது. சில அடிப்படை நம்பிக்கைகளை வெறியுடன் சொல்லிக்கொண்டிருப்பது. இன்னொரு நண்பர் புதியவாசகர் சந்திப்பின்போது சொன்னார். ‘நல்ல படிச்சிருக்காங்க. அரசியல் சினிமா எல்லாம் பேசுறாங்க. ஆனா உங்கள ஒருத்தன் அடிச்சப்ப புளிச்சமாவுன்னு சொல்லி இளிப்பான் போட்டுட்டு இருந்தாங்க. இப்பவும் எங்க போனாலும் அதைச் சொல்லி ஒரு இளிப்பான் போடுறாங்க…இவங்களை எப்டிசார் எடுத்துக்கிடுறது?’ அதேதான் இங்கும் பிரச்சினை. பாமரர்கள், அறிவியக்கத் தொடர்பே அற்றவர்கள். ஆனால் கூடவே இங்கே மூன்று களங்களில் பிரச்சாரம் செய்யப்படும் பொதுவான கருத்துக்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைத்தான் படித்த பாமரர் என வரையறை செய்கிறோம் இதை எழுதும் இன்று இரண்டுபேரை சந்தித்தேன். பிராமணச் சாதியில், மிக உயர்ந்த பொருளியல் சூழல் கொண்ட குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் மிகப்பெரிய கல்வி கற்று மிகமிக வெற்றிகரமாகத் தொழில் செய்து வருபவர் ஒருவர். ஒரு மணி நேரம் அவர் பேசினார். நூறாண்டுகளுக்கு முன் ஓர் அக்ரஹாரத்தில் கல்வியறிவே அற்ற ஒருவர் என்னென்ன பேசுவாரோ அதையேதான் நிறைய ஆங்கிலம் கலந்து ஒருவகை மழலையில் சொல்லிக்கொண்டிருந்தார். ஆசாரமூடத்தனம், மதமூடத்தனம், சாதிப்பெருமிதம், அதன் விளைவான அரசியல் மூர்க்கம். கூடவே எல்லாவற்றுக்கும் அபத்தமான அறிவியல் விளக்கம். நான் ஒரு வார்த்தை பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தேன். புன்னகையுடன் கைகுலுக்கி நான் அவருக்கு அளிக்கவேண்டிய செக்கை அளித்துக்கொண்டு கிளம்பினேன். திரும்பும் வழியில் என்னுடன் வந்த இன்னொருவர் ‘என்ன சார் பேசாமலிருக்கீங்க?’ என்றார். அவரும் மிகச்செல்வந்த குடியில் பிறந்தவர். நிர்வாகவியலில் உயர்கல்வி கற்றவர், தொழிலதிபர். அவர் பேச ஆரம்பித்தார். பிராமணர்கள் பற்றி இங்கே சொல்லப்படும் எல்லா அபத்தமான காழ்ப்புக் கருத்துக்களையும் வரிசையாகச் சொன்னார். அவரும் எல்லாவற்றுக்கும் அறிவியல் விளக்கமும் சொன்னார். பெரியார், அண்ணா பற்றிய எல்லா பொய்க்கதைகளையும் வரிசையாகச் சொன்னார். இன்னொரு வகை பாமரர். இங்கும் நான் புன்னகையுடன் அமர்ந்திருந்தேன். இவர் எனக்கு பெரிய தொகையை தந்தவர். ஆகவே இரண்டு மடங்கு புன்னகை புரிந்தேன். இந்தவகைப் பாமரர்கள் சூழ வாழும் சூழல் இன்று அறிவியக்கவாதிக்கு அமைகிறது. நண்பர்கள், தொழிலில் உடனிருப்பவர்கள், ரயிலில் சந்திப்பவர்கள். இவர்களை கடந்துசெல்லும் பொறுமை இன்றியமையாதது. சமூகவலைத்தளங்களில் இவர்களே திரண்டு ‘கருத்துத்தூண்’ மாறியிருக்கையில் நாம் இவர்களின்மேல் சென்று முட்டிக்கொள்ளக்கூடாது. ‘கருத்துமூட்டம்’ ஆக இவர்கள் திரண்டிருக்கையில் நாம் மூச்சுத்திணறலாகாது. இவர்களை கடந்து நம் சிந்தனையை பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. பாமரரை கையாளத் தெரியாமல் இந்நூற்றாண்டில் இனி எவரும் சிந்தனைக் களத்தில் செயல்பட முடியாது. அவர்களை எவ்வகையிலும் பொருட்படுத்தவேண்டியதில்லை. ஆனால் தேவையானபோது சொல்லியே ஆகவேண்டும், பாமரர் என்பவர் பாமரரே. பாமரராக இருப்பதில் பெருமை ஏதுமில்லை. பாமரர் என்பது புனிதமான ஒரு நிலை அல்ல. பாமரரை எந்த வகையிலும அறிவியக்கவாதி நிறைவுசெய்யவேண்டிய தேவை இல்லை. அறிவியக்கவாதி பாமரரை நிமிர்வால் மட்டுமே எதிர்கொள்ள முடியும். தன்னுடைய அறிவுத்தகுதி பற்றியும் அறிவியக்கத்தில் தன் பங்களிப்பு பற்றியும் மானுடச் சிந்தனை வரலாற்றில் ஒரு துளியாகவேனும் தனக்கு ஒரு இருப்பு உண்டு என்பது குறித்தும் அவன் பெருமிதம் கொண்டிருக்கவேண்டும். அதை பாமரர் மேட்டிமைவாதம் என்பார்கள். அப்படியென்றால் அப்படியே வைத்துக்கொள், நீ பாமரன், என்றேனும் நீ மேலெழுந்து வந்தாலொழிய உன்னிடம் எனக்கு உரையாடல் இல்லை என்றே அறிவியக்கவாதி பதில் சொல்லவேண்டும். அந்த நிமிர்வால் பாமரர் சீண்டப்படுவார்கள். கூச்சலிடுவார்கள். கூட்டாக சூழ்ந்துகொண்டு ஏளனமும் வசையும் பொழிவார்கள். ஆனால் அவர்களில் மிகச்சிலருக்கு தாங்கள் மெய்யாகவே பாமரர் என்று தெரியவரக்கூடும். அந்த தன்னுணர்வால் அவர்கள் அறிவியக்கம் நோக்கி வரக்கூடும். அந்த மிகச்சிலருக்காக பாமரரை நோக்கி நீ பாமரன் என்று சொல்லிக்கொண்டேதான் இருக்கவேண்டும். (நிறைவு) https://www.jeyamohan.in/195323/ - இரண்டாம் பயணம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.