Everything posted by கிருபன்
-
நோர்வேயில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் பெண் சுட்டுக்கொலை!
நடந்த மரணங்களைப் பற்றிய உத்தியோகபூர்வமான விபரங்கள் வராமல், அவற்றைப் பற்றி எதுவித ஆதாரங்களும் இல்லாமல் எழுந்தமானத்திற்கு எழுதுவதும், சம்பந்தமில்லாத விடயங்களை (உறுதி செய்யப்படாத) எழுதி திசையைத் திருப்புவதும் ஆர்வக்கோளாறு அல்லது விடுப்புக்கேட்கும் மனநிலை என்றுகொள்ளமுடியாது. அதையும் தாண்டி ஏதோ ஒரு வெறுப்பு இருக்கின்றது. குடும்பத்தினருக்கு மேலும் வேதனைகளைக் கொடுக்காமல் இருக்க முயற்சிக்கவேண்டும்.
-
மேட்டிமைவாதமா? - ஜெயமோகன்
மக்கள், பாமரர் எனும் சொற்கள். December 28, 2023 தமிழ்ச்சூழலில் சில புனிதச் சொற்கள் உள்ளன. அவற்றில் ஒன்று மக்கள். அச்சொல்லுக்கு நிகராக காலப்போக்கில் உருவாக்கப்பட்ட இன்னொரு சொல் பாமரர். இங்கே கலை, கல்வி, அறிவு, தரம், மேன்மை என்று எதைச் சொன்னாலும் அதற்கு தானியங்கிப் பதிலாக வந்து நிற்பது ‘மக்கள்’ ‘பாமரர்’ என்னும் இரண்டு சொற்கள்தான். அவை முன்வைக்கப்பட்டுவிட்டால் அதன்பின் எதிர்ப்பேச்சே பேசக்கூடாது. பேசுபவர் மக்கள்விரோதி, சுரண்டல்காரர், ஆதிக்கவாதி என நூறு முத்திரைகளுக்கு ஆளாகிவிடுவார். எந்த துடிப்பான புதிய சிந்தனையாளனையும் அச்சொற்கள் பொதுவெளியில் பம்ம வைப்பதைப் பார்க்கிறோம். அச்சொற்களை பயன்படுத்தும் கும்பலுக்கு அவை வெறும் சொற்கள்தான் என்றும், அவர்களின் வாழ்க்கைக்கும் நம்பிக்கைகளுக்கும் அச்சொற்கள் அளிக்கும் பொருளுடன் தொடர்பே இல்லை என்றும் தெரிந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது. அவை மந்திரவாதியின் கோல் போன்றவை. அச்சொற்கள் உருவான வரலாற்றை, அவை அடைந்த பொருள்மாற்றங்களை சற்றேனும் உணர்ந்துகொள்ளாமல் அவற்றை பயன்படுத்துபவர்களை எதிர்கொள்ள முடியாது. மக்கள் என்னும் சொல்லை முன்வைத்தவர்கள் தொடக்ககால ஜனநாயகவாதிகள். அதை புனிதப்படுத்தியவர்கள் இடதுசாரிகள். மக்கள் என்ற சொல்லை பாமரர் என்ற சொல்லுக்குச் சமானமானதாக இழுத்துச்சென்றவர்கள் தேர்தல்கள அரசியல்வாதிகள். * ஜனநாயகவாதிகள் மக்கள் என்னும் சொல்லை உருவாக்கி, முதன்மைப்படுத்திய செயல் என்பது உலகச் சிந்தனைச் சூழலில் ஒரு முக்கியமான நிகழ்வு. அதுவே நவீன ஜனநாயகத்தின் தொடக்கம். இன்றைய விழுமியங்கள் அனைத்தும் அங்கே தொடங்கியவைதான். இதை நாம் பதினேழு- பதினெட்டாம் நூற்றாண்டின் அரசியல் வரலாற்றுப் பின்னணியிலேயே புரிந்துகொள்ள வேண்டும். அன்று உலகமெங்கும் மன்னராட்சி நிலவியது. மன்னரின் அதிகாரமென்பது இனம், ஆசாரம் ஆகிய இரண்டு அடிப்படைகளில் மரபு வழியாக நிறுவப்பட்டதாக இருந்தது. அரசருக்கு இணையாகவோ, அதைவிட மேலாகவோ மதத்தின் அதிகாரம் இருந்தது. அந்த அதிகாரம் நம்பிக்கைகளாலும், அந்நம்பிக்கைகளை உருவாக்கிய தொன்மங்களாலும் ஆனதாக இருந்தது. அந்த இரு அதிகாரங்களிலும் மக்களின் பங்களிப்பு ஏதுமில்லை. மக்கள் ஆளப்படுபவர்கள் மட்டுமே. உழைப்பவர்கள், வரிகொடுப்பவர்கள், சேவகம் செய்பவர்கள், ராணுவமாக போர்களில் ஈடுபட்டு கொல்பவர்கள், கொல்லப்படுபவர்கள். மன்னர், மதம் என்னும் இரு அதிகார மரபுகளுக்கு எதிராக பொதுமக்களின் நலனை முன்வைத்தனர் ஜனநாயகத்துக்காகச் சிந்தனைசெய்த முன்னோடிகள். ஓர் அரசு நிலைகொள்வது மக்களின் நலனுக்காகவே இருக்கவேண்டும். ஒரு மதம் நிலைகொள்வது மக்களின் மீட்சிக்காகவே இருக்கவேண்டும். அதிகாரம் மக்களுக்கு எதிரானது என்றால் அது தேவையற்றது, அழிவுத்தன்மை கொண்டது, ஆகவே அழியவேண்டியது. மக்களுக்கு என்ன வகையான அரசு வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்கலாம் என்று அவர்கள் கூறினர். அந்தச் சிந்தனை மிகமிக மெலிதாக முளைத்து ,பல்வேறு சிந்தனையாளர்கள் வழியாக வளர்ந்து, பல்வேறு அரசியல்போராட்டங்கள் வழியாக உருத்திரண்டு வந்த ஒன்று. அதன் தொடக்கம் Magna Carta போன்று அரசரின் வரம்பில்லா அதிகாரத்திற்கு எதிராக உருவான தொடக்ககால அரசியல் எதிர்ப்புகள். அதன்பின் பிரபுக்களின் அதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்புகள், மதகுருக்களின் ஆதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்புகள் உருவாயின. போர்களும் பஞ்சங்களும் அந்த எதிர்ப்புணர்வை வளர்த்தன. அந்த சிறு கிளர்ச்சிகள் நிகழ்ந்து அவற்றின் வழியாக மக்கள் தங்கள் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை அடைந்தனர். அரசர், மதகுரு ஆகியவர்கள் மேலிருந்த அடிமைத்தனமான பற்றில் இருந்து வெளியே வந்தனர். மெல்ல மெல்ல மக்களுக்கே அதிகாரம் என்னும் அந்த புதியசிந்தனை ஒரு பேரலையாக ஐரோப்பாவை ஆட்கொண்டது. பிரிட்டனில் ஜனநாயகத்திற்கான பிரெஞ்சுப்புரட்சி, அமெரிக்கப்புரட்சி இரண்டும் அதன் முதன்மை விளைவுகள். அங்கிருந்து உலகம் முழுக்க ஜனநாயகம் என்னும் கருதுகோள் சென்று சேர்ந்தது. ஜனநாயகத்திற்கான போராட்டங்களில் இருந்தே மார்க்ஸிய சிந்தனை உருவானது. ருஷ்யப்புரட்சியாக உருத்திரண்டது. இடதுசாரி சிந்தனைகளாக உலகமெங்கும் பரவியது. தொடக்ககாலத்தில் ஜனநாயகத்துக்கான குரல்கள் எழுந்தபோது அதை எதிர்த்த தரப்பினர் மூன்று வகைப்பட்டவர்கள். இனம், குலம் ஆகியவற்றை முன்வைத்தவர்கள் ஒரு பிரிவினர். அவர்கள் அதிகாரத்தைக் கையாள்வதற்கு அதற்கான குடிப்பிறப்பு மரபு இருந்தாகவேண்டும் என்று நம்பினர். ‘தூய குருதிமரபு’ என்னும் சொல்லாட்சி அவர்களுடையது. மத அதிகாரத்தை முன்வைத்தவர்கள் இரண்டாம் வகையினர். அவர்கள் அதிகாரத்தைக் கையாள இறையருளும் அதற்கான தகுதியும் இருக்கவேண்டும் என்றனர். புனிதமான அதிகாரம் என்னும் சொல்லாட்சி அவர்களுடையது. மூன்றாம்தரப்பினர் சிறுபான்மையினர். அவர்கள் அறிவதிகாரத்தை முன்வைத்தனர்.கற்றவர்கள், அறிவுத்தகுதி கொண்டவர்களே அதிகாரத்தைக் கையாள வல்லமைகொண்டவர்கள் என்று அவர்கள் வாதிட்டனர். ‘அறிவின் அதிகாரம்’ என்னும் சொல்லாட்சி அவர்களுடையது. ஜனநாயகம் என்று நாம் சொல்லும் இன்றைய அமைப்பிலேயே இந்த மூன்று எதிர்த்தரப்புகளுக்கும் இடம் உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இம்மூன்று சக்திகளுடன் சமரசம் செய்துகொண்டுதான் ஜனநாயகம் உருவாகி வந்துள்ளது. பிரிட்டிஷ் ஜனநாயகத்தின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் மன்னராட்சிக் காலத்தில் மன்னருக்கு ஆலோசனைசொல்லவும் கட்டுப்படுத்தவும் பிரபுக்களின் அவை ஒன்று அமைந்தது. மன்னரின் வரம்பில்லா அதிகாரம் அவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டதே ஒருவகை ஜனநாயக முன்நகர்வுதான். அதன்பின் பிரபுக்கள் அவைக்கு ஒரு படி குறைவானதாக மக்களவை உருவாகி வந்தது. காலப்போக்கில் மக்களவையின் அதிகாரம் அதிகரித்தபடியே வந்தது. அதுதான் ஜனநாயகம் வளர்ந்த விதம். ஆனால் இன்றும்கூட நமது பாராளுமன்ற மேல்சபை என்பது மேலே சொன்ன மக்களதிகாரத்திற்கு எதிரான மூன்று தரப்பினருக்கும் ஆட்சியதிகாரத்தில் இடமளிப்பதற்காக உருவாக்கப்பட்டது என்பதைக் காணலாம். முன்பு சட்டமன்றத்திலேயே மேல்சபைகள் இருந்தன. தேர்தலையே சந்திக்காமல் மேல்சபை வழியாகவே அமைச்சரானவர்கள், பிரதமரானவர்கள் நமக்கு எப்போதும் உண்டு. அரசியலமைப்புச் சட்ட விவாதங்களில் பி.ஆர்.அம்பேத்கர் இந்த வினாக்களை விரிவாக எதிர்கொண்டிருக்கிறார். மேல்சபை இருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவையை முதன்மை அதிகாரம் கொண்டதாக அவர் தலைமையிலான அரசியல் சாசனக்குழு அமைத்தது. லோக் சபா அல்லது மக்கள் அவை என்னும் சொல்லே முக்கியமான ஒன்று. மேலே சொன்ன மூன்று எதிர்தரப்பினருக்கும் தொடக்க கால ஜனநாயகவாதிகள் பதில் சொன்னபோதுதான் ‘மக்கள்’ என்னும் கருத்துருவை உறுதியாக நிலைநாட்டினர். plebeian என்ற சொல்லில் இருந்து public என்ற சொல் நோக்கிய நகர்வு என அதை சுருக்கமாகச் சொல்லலாம். பிளீபியன் என்ற சொல் பண்டைய கிரேக்கத்தில் அதிகாரத்தில் பங்கில்லாத சமூக உறுப்பினரைச் சொல்ல பயன்படுத்தப்பட்டது. பப்ளிக் என்ற சொல் அரசின்மேல் கூட்டாக அதிகாரம் கொண்ட மக்கள் திரளை சுட்ட பயன்படலாயிற்று. பிறப்பின் வழியான அதிகாரம், மத அதிகாரம் ஆகியவற்றை மிக எளிதில் ஜனநாயகவாதிகள் விவாதத்தில் தோற்கடித்தனர். அறிவின் அதிகாரம் என்னும் கருத்துரு அத்தனை எளிதாக வெல்லப்படத்தக்கது அல்ல. அத்தரப்பு இன்றும் வலுவானதே. இன்றும்கூட உலகமெங்கும் ஜனநாயகத்தை கட்டுப்படுத்தும் இயல்பான விசையாக இருப்பது அறிவதிகாரமே. வெவ்வேறு வகைகளில் அந்த அறிவதிகாரம் செயல்படுகிறது. உதாரணமாக தொழில்நுட்ப நிபுணர்களின் அதிகாரம், உயர்நிர்வாகிகளின் அதிகாரம், வணிகக்குழுக்களின் அதிகாரம், ஊடகங்களின் அதிகாரம். இவை ஒன்றாகத் திரண்டு இன்றைய மக்களின் அதிகாரத்தை கட்டுப்படுத்துகின்றன, பலசமயம் அவையே முன்னோங்கி நிற்கின்றன. அறிவதிகாரம் உருவாக்கிய கேள்விகள் இந்திய அரசியலமைப்புச் சட்ட விவாதத்தின்போதும் எழுந்து வந்தன. படிப்பறிவே இல்லாத, பழங்குடி மனநிலைகள் கொண்ட, பிற்பட்ட நிலையில் தேங்கி நின்றிருக்கும் சாமானிய மக்களிடம் அரசதிகாரத்தை அளிக்கலாமா? நேரடியாகவே அம்பேத்கரிடம் கேட்கப்பட்டது, சாதிவெறி மிக்க இந்தியச் சமூகத்திடம் அதிகாரத்தை அளித்தால் இந்தியா என்றாவது சாதியை ஒழிக்கமுடியுமா? அதற்கான பதிலாகவே ‘மக்கள்’ என்னும் திரள் அடையாளம் முன்வைக்கப்பட்டது. அதாவது தனிமனிதர்களாக மக்கள் படிப்பறிவற்றவர்களாக இருக்கலாம். சிந்தனைத்திறன் அற்றவர்களாக இருக்கலாம். சுயநலமிகளாகவும், பேராசைக்காரர்களாகவும் இருக்கலாம். மூடநம்பிக்கை கொண்டவர்களாகவும், தேங்கிப்போன வாழ்க்கைமுறை கொண்டவர்களாகவும் இருக்கலாம். ஆனால் ‘மக்கள்’ என்னும் கூட்டான சக்தி எப்போதும் வாழவும் முன்னேறவும்தான் விரும்புகிறது என்றனர் ஜனநாயகவாதிகள். மக்கள் தான் சமூகம், அவர்கள்தான் வரலாறு. சமூகம் தன்னை முன்னேற்றிக்கொள்ளவே துடிக்கிறது.வரலாறு முன்னேறவே முயல்கிறது. ஆகவே மக்களுக்கு எது வேண்டும் என அவர்கள்தான் முடிவுசெய்யவேண்டும். அந்த உரிமை அவர்களுக்குண்டு என ஜனநாயகவாதிகள் வாதிட்டனர். மக்களிடம் அவர்களின் தேவை என்ன என்பது உள்ளது. அவர்கள் எங்கே செல்லவேண்டும் என்பது உள்ளது. அதற்கு வாய்ப்பளிப்பதே ஜனநாயகம் செய்யவேண்டியது. அது எப்படியானாலும் முன்னோக்கிய நகர்வாகவே அமையும் என்றனர். மக்களிடம் வரலாற்றின் இயங்குவிசை உள்ளுறையாக உள்ளது என்று ஹெகல் முதலிய இலட்சியவாதிகள் நம்பினர். மார்க்ஸ் அந்நம்பிக்கையை ஹெகலிடமிருந்து பெற்றுக்கொண்டார். மக்களிடம் புனிதமான, மகத்தான ஏதோ ஒன்று உள்ளது என்ற நம்பிக்கையை மிகுந்த நெகிழ்வுடன் பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு இலட்சியவாத எழுத்துக்கள் சித்தரித்தன. புரட்சியாளர்கள் அதை நம்பி உள்ளக்கிளர்ச்சி அடைந்தனர். ஆனால் மக்கள் என்றால் யார்? ஒருவர் கல்விகற்றார் என்றால், சிந்தனை செய்தார் என்றால் அவருக்கென ஒரு தனித்தன்மை உருவாகி வந்துவிடுகிறது. அவருடைய களங்கமின்மை இல்லாமலாகிவிடுகிறது. அப்படியென்றால் கல்வியும் சிந்தனையும் இல்லாத ஒருவரே மக்களின் சரியான பிரதிநிதியாக இருக்க முடியும். மக்கள் என்பது பாமரர்களின் ஒட்டுமொத்தம்தான் என்னும் எண்ணம் அவ்வாறாக உருவானது. விளைவாக படித்தவர்கள், சிந்தனைசெய்பவர்களிடம் இல்லாத பல உயர்பண்புகள் பாமரரிடம் இருக்கின்றன என இலக்கியங்கள் பேச ஆரம்பித்தன. அந்த உயர்பண்புகள் என்பவை மக்கள் என்னும் பொதுவான கருத்துருவின் பண்புநலன்கள்தான். அவைதான் கலாச்சாரம் என்பதன் அடிப்படை அலகுகள். கருணை, அறவுணர்வு, தோழமை என பல உயர்விழுமியங்களாக அவை சித்தரிக்கப்பட்டன. தொடக்ககால மனிதாபிமான இலக்கியத்தின் முக்கியமான பேசுபொருள் என்பது ‘பாமரர்களில் வெளிப்படும் உயர்பண்புகள்’ தான். பாமரரை புனிதப்படுத்தும் இந்த கண்ணோட்டத்தை ஜனநாயகத்தை முன்வைத்த அரசியலாளர் ஒருவகை தத்துவக் கொள்கையாகவே முன்வைக்கலாயினர். பின்னர் மார்க்ஸியர்கள் அதை மறுக்கமுடியாத கோட்பாடாக நம்பிப் பேசலாயினர். அது ஒரு பார்வை மட்டுமே என சொல்பவர்கள் மக்கள் விரோதிகள் ஆயினர்.அவர்கள் மேல் மேட்டிமைவாதி என்னும் முத்திரை குத்தப்பட்டது. மேட்டிமை முத்திரை ஒருதொடக்கம். அது கடைசியில் அழித்தொழிக்கப்படவேண்டிய சமூகவிரோதி என்ற எல்லைவரை சென்று சேரும். பத்தொன்பதாம் நூற்றாண்டு மார்க்ஸிய அரசுகளால் வதைமுகாம்களில் அடைக்கப்பட்ட, கொல்லப்பட்ட கலைஞர்கள் மற்று அறிஞர்கள் அத்தனைபேருக்கும் மேட்டிமைவாதி, மக்கள் விரோதி என்னும் முத்திரைகள்தான் குத்தப்பட்டன. முந்தைய மன்னர் மற்றும் பிரபுக்களின் ஆட்சியிலும், மதகுருக்களின் ஆட்சியிலும் பாமரர் முழுமையாகவே புறக்கணிக்கப்பட்டு சுரண்டப்பட்டு ஒடுக்கப்பட்டனர். அவர்கள் வெறும் மானுடக்குப்பைகளாக போர்க்களங்களில் கொன்று ஒழிக்கப்பட்டனர். பஞ்சங்களில் செத்துக்குவிந்தனர். அவர்களை வரலாற்றில் கொண்டுவந்து நிறுத்தியவர்கள் ஜனநாயகவாதிகளும் பின்னர் மார்க்ஸியர்களும்தான். வரலாறு சாமானியர்களுக்குரியது என்றும் சமூகம் என்றால் அவர்களே என்றும் நிறுவியவர்கள் ஜனநாயகவாதிகளும் மார்க்ஸியர்களும்தான். இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்பு வரை வரிகட்டாதவர்களுக்கு வாக்குரிமை இருக்கவில்லை. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை வந்தது மேலும் பல ஆண்டுகள் கழித்துத்தான்.இலக்கியத்தில் ஒரு பாமரன் கதைநாயகனாக ஆவது ஜனநாயக சிந்தனைகள் திரண்டு, அவற்றின் அடிப்படையில் நவீன இலக்கியம் உருவாகி வந்தபின்னர்தான். தகழி சிவசங்கரப்பிள்ளையின் தோட்டியின் மகன் நாவலில் ஒரு துப்புரவுத்தொழிலாளர் கதைநாயகன் என்பதை அறிந்து இடதுசாரிகளே திடுக்கிட்டதை, வியந்ததை அதை மொழியாக்கம் செய்த சுந்தர ராமசாமி பதிவுசெய்துள்ளார். அத்தகைய சூழலில் மக்கள் என்பது அனைத்துப் பாமரர்களையும் உள்ளடக்கியதுதான் என்னும் சிந்தனை மிகமிக முற்போக்கானது. ஒவ்வொரு பாமரனையும் கருத்தில்கொள்கையிலேயே ஓர் அரசு நலம்நாடும் அரசாக இருக்க முடியும் என்னும் எண்ணம் அரசியலில் ஒரு புரட்சி. பாமரனின் அதிகாரத்தை முன்வைத்த சிந்தனைகள் மிகமிக முற்போக்கானவை. மிகப்புரட்சிகரமானவை. ஜனநாயகத்தில் மிகமிக ஆற்றல்கொண்ட கலைச்சொல்லாக மக்கள் என்பது ஆனது இவ்வாறுதான். மக்கள் என்ற அச்சொல்லை அதன்பின் இடதுசாரிகள் ஒரு ஆயுதமாக ஆக்கிக்கொண்டார்கள். (மேலும்) https://www.jeyamohan.in/195297/
-
போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
போதமும் காணாத போதம் – 13 தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமிலிருந்து தப்புவது சாதாரணமானது அல்ல. அடர்ந்து காட்டிற்குள் திசையறியாது சுற்றிச் சுற்றிச் உணவற்று மாண்டவர்களும் இருக்கிறார்கள். ஆனால் தாயம் கடலில் கலக்கும் நதியைப் போல, தடம் பிசகாமல் வீடு வருகிறான். எந்தச் சவாலுக்கும் ஈடுகொடுக்கும் உடல் வலிமை. எதற்கும் அஞ்சாத உளம். நிராயுதபாணியாக தப்பும் தன்னை, உங்கள் ஆயுதங்களாலும் தேடிக் கண்டுபிடியுங்கள் எனும் சவால். தாயம் புலிகளுக்கு பெரிய தலையிடியாக இருந்தான். பன்னிரெண்டு அடியளவில் உயர்த்தப்பட்ட பாதுகாப்பு வேலி, கண்காணிப்புக்காய் நிற்கும் போராளிகளின் விழிப்பு. இவற்றையெல்லாம் உச்சிவிட்டு எப்படி தப்புகிறானோவென்று தெரியாத குழப்பம் இயக்கத்திற்கு வந்தது. ஒவ்வொரு பயிற்சி முகாமிலிருந்தும் குறிப்பிட்ட நாட்களிலேயே தாயம் வெளியேறிவிடுகிறான் என்று கண்டடைந்தனர். முத்தையன்கட்டு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவென எந்தப் பயிற்சி முகாமிலிருந்தும் அவனால் தப்பிக்க முடிவதை எங்களாலும் நம்பமுடியாமலிருந்தது. ஒரு நாளிரவு இயக்கத்தின் ஆட்சேர்ப்பு பிரிவினர் வீட்டைச் சுற்றிவளைத்தனர். தாயம் தப்பித்தோட வாய்ப்பிருப்பதாக எண்ணியிருந்தார்கள். அவன் மாட்டிறைச்சி குழம்போடு இரண்டு றாத்தல் ரோஸ்ட் பாணைச் சாப்பிட்டு முடித்து அவர்களோடு போனான். ஊரிலுள்ளவர்கள் வியக்குமாறு தாயம் சாகசக்காரனாய் போராளிகளுக்கு நடுவில் நடந்தான். அமளிச் சத்தம் கேட்டு உறக்கமழிந்த தாயத்தின் தங்கச்சி சாதனா ஆயுதமேந்திய போராளிகளை விலக்கியபடி ஓடிப்போனாள். பொத்திய தனது கைக்குள்ளிருந்து இரண்டு தேமாப் பூக்களை தாயத்திடம் கொடுத்தாள். சாதனாவை முத்தமிட்டு “ அண்ணா, வெள்ளனவா வந்திடுவன். நீ குழப்படி செய்யாமல் அம்மாவோட இருக்கவேணும். போய் நித்திரை கொள்ளு” என்றான். வாகனம் புறப்பட்டது. சாதனா வீட்டின் முன்பாக நிற்கும் தேமா மரத்தடிக்கு லாம்போடு ஓடிச்சென்றாள். அங்கு மண்ணால் உருவாக்கப்பட்டிருந்த தெய்வ உருக்களின் முன்பு நின்று கண்ணீர் கசிந்து “கடவுளே அண்ணா, திரும்பி வந்திடவேணும். வந்தால் உனக்கு அவல் தருவேன்” என்றாள். வீட்டிலிருந்து இழுத்துச் செல்லப்பட்டவனை கிளிநொச்சியிலுள்ள முகாமொன்றில் தங்கவைத்தனர். அவனுடைய தப்பித்தல் அனுபவங்கள் குறித்து போராளியொருவர் விசாரணை செய்து அறிக்கை தயாரித்தார். தாயத்தின் சொந்தக்காரர்கள் யார் இயக்கத்தில் இருக்கிறார்கள் என்பது வரை விசாரணை ஆழம் பாய்ந்து முடிந்தது. அதன்பிறகு நிலக்கீழ் அறைக்குள் தாயம் இறக்கப்பட்டான். “பூமியின் தடங்கள் மறக்கும் வரைக்கும் உள்ளேயே இருப்பீர்கள்” என்பது உத்தரவு. “இங்கிருந்து தப்ப இயலாது” என்பது எள்ளலாக வீசியெறியப்பட்டது. தாயம் பூமியின் கீழே விழிபிதுங்கி அமர்ந்தான். மூச்சுத்திணறியது. இருட்குகையில் மோதுண்டு அழியும் காற்றுப் போல கைகளை விரித்து சுவர்களை அறிந்தான். எத்தனை நாட்கள் இருள் தோயவேண்டும். இப்படியொருவன் மூச்சுத்திணற வைக்கப்பட்டு போராட்டத்தில் இணைக்கப்படவேண்டுமா? தாயம் உள்ளேயே சப்பாணிகட்டி அமர்ந்து கொண்டான். தன்னுடைய இறுக்கமான உள்ளாடையை கழட்டி எறிந்து நிர்வாணமானான். சாதனா கொடுத்த தேமா மலர்களை கைகளில் ஏந்தி இருளின் திரட்சியை அழிக்கும் வாசனையை முகர்ந்தான். வீட்டின் முன்பாக தங்கையோடு பூசை செய்து விளையாடும் பொழுதுகள் புலனில் உதித்தன. பூமியின் கீழே பாதைகள் இல்லை. ஆனாலும் தாயம் கண்ணீர் சிந்தவில்லை. அச்சப்படவில்லை. மெல்ல மெல்ல ஆசுவாசத்துக்கு திரும்பினான். போராளிகள் எதிர்பார்த்ததைப் போல கதறியழுது என்னை மீட்டுவிடுங்கள் என்ற இறைஞ்சுதல்கள் எதுவும் நிகழவேயில்லை. உள்ளேயே தாயக்கோட்டினைக் கீறி மண்ணை உருண்டைகளாக்கி தாயம் விளையாடத் தொடங்கினான். மூன்று நாட்கள் கழித்து பூமியின் மேல் இழுத்து வரப்பட்ட தாயம் ஒளியைக் கண்டு கூசினான். வெளிச்சம் பொல்லாத சாத்தானைப் போல அவனைத் தண்டித்தது. அவனது உடலில் எந்தச் சோர்வும் இருக்கவில்லை. சாதனா தருவித்த இரண்டு தேமா மலர்களும் வாடாமலிருந்தன. “எனக்குப் பசிக்கிறது உணவளியுங்கள்” என்கிற ஓலமான குரலைப் பொருட்படுத்த அங்கு எவருமில்லை. பொறுப்பாளர் கீரன் உணவளிக்குமாறு உத்தரவிட்டார். நெத்தலித் தீயலும், குத்தரிசிச் சோறும் கொடுத்தார்கள். ஒரு சட்டித் தீயலை தின்றுமுடித்து, சோற்றுப்பானையைக் காட்டி கொஞ்சமிருக்கு ஏதேனும் பழைய குழம்பு இருக்கிறதா என்று கேட்டான். பருப்புக் குழம்பை கொடுத்தார்கள். இதுவரைக்கும் தப்பித்த பயிற்சி முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, எப்படித் தப்பினான் என்பதை விசாரணை செய்ய குழுவொன்று தயாராகவிருந்தது. தாயம் சரியென்று தலையசைத்தான். முத்தையன்கட்டிலுள்ள முகாமில் அதனைச் செய்து காட்டினான். அடிக்கணக்காக உயர்ந்து நிற்கும் முட்கம்பி வேலியில் ஏறி, கீழே குதித்து ஓடுவதை ஒன்றும் விடாமல் செய்து காட்டினான். மீண்டும் கிளிநொச்சிக்கு அழைத்து வந்து தாயத்தை வீட்டுக்குச் செல்லுமாறு பணித்தனர். “நான், ஏன் போகவேண்டும். எனக்கு வயிறு கொதிக்கிறது சாப்பாடு தாருங்கள்” குரல் உயர்த்தினான். “நீதானே பயிற்சி முகாமிலயிருந்து ஓடிப்போகிறாய். இப்ப நாங்களே உன்னை விடுகிறம். நீ போ” என்றனர். தாயத்தினால் இப்படியொரு பரிவை தாங்கிக்கொள்ள முடியவில்லை. “அண்ணே, என்னை நீங்கள் பிடிச்சுக்கொண்டு போய் பயிற்சி தந்தால் ஓடிப்போவன். இப்பிடி நீங்கள் போகச்சொல்லுறது எனக்கு அவமானம். இப்ப நான் போகமாட்டன்” “சரி, அப்ப நீ இஞ்சயே இரு. உனக்கு எப்ப போகவேணுமெண்டு இருக்கோ. அப்ப வெளிக்கிடு” தாயம் எதிர்பாராததை இயக்கம் வழங்கியது. அவனால் முகாமை விட்டு வெளியே போகமுடியவில்லை. அங்கிருக்கும் சில வேலைகளைச் செய்து வந்தான். பொறுப்பாளர் கீரனோடு வெளியே சென்று வரத்தொடங்கினான். தாயனைப் பார்த்த ஊரவர்கள் சிலர், “என்னடா இயக்கமாகிட்டுயோ” என்று கேட்டார்கள். எதுவும் பதிலளிக்காமல் தாயம் குமைந்தான். அரசியல் போராளிகளோடு வெவ்வேறு இடங்களுக்கு பயணமானான். இயக்கத்திற்கென இழுத்து வரப்பட்டவர்கள் குவிக்கப்பட்டிருக்கும் முகாமொன்றிற்கு சென்ற தாயம் திடுக்குற்று பொறுப்பாளர் கீரனிடம் “ அண்ணை, இப்பிடி பிடிச்சுக் கொண்டு போய், சண்டை செய்துதான் நாட்டை மீட்கவேணுமே” கேட்டான். இதுக்கு நான் பதில் சொன்னால் இயக்கத்துக்கு துரோகியாகிவிடுவன். என்னை நீ பூமிக்கு கீழ வைக்கப் பார்க்கிறாய்” என்றார் கீரன். “உங்களுக்கு இதில உடன்பாடு இல்லைத்தானே, பிறகு ஏன் செய்கிறீர்கள். கட்டாய ஆட்சேர்ப்பின் தீவினை குறித்து தலைமைக்கு ஒரு கடிதம் எழுதுங்களேன்” என்றான். “எல்லாம் கைமீறிப் போய்ட்டுது. உன்னைப் போல எத்தனயோ பிள்ளைகள் பயந்து நடுங்கியிருக்கிறாங்கள். அது தெரியாமல் யாரும் இல்லை” கீரன் சொன்னார். தாயம் தன்னுடைய உடமைகளை எடுத்துக் கொண்டு பயிற்சி முகாம் நோக்கி செல்லும் அணியில் கலந்தான். ஆனைவிழுந்தான் குளத்தில் நீராடி முடித்து தாயம் கரையேறி ஈரந்துடையாமல் வீதிக்கு வந்தான். மாடுகளை சாய்த்தபடி எதிர்திசையில் வந்த பீதாம்பரம் “ எடேய் பெடியா, இயக்க வாழ்க்கை என்ன சொல்லுது” என்று கேட்டார். “இவ்வளவு நாளும் பயிற்சி அண்ணை, இனிமேல் தான் சண்டைக்கு போகவேணும்” என்றான். “அப்ப நீ இன்னும் ஒரு சண்டைக்கும் போகேல்லையோடா, அங்க போயும் சும்மா தான் இருக்கிறாய் என்ன” என்றார் பீதாம்பரம். ஊரியிலான வீதியைக் குறுக்கறுத்து திடுமென அசையாது நின்ற சாரைப்பாம்பில் வன்னி வெயில் ஊர்ந்தது. பீதாம்பரத்துக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் விலகி நடந்து, வீதியோரத்தில் அடர்ந்திருந்த பற்றைகளில் நாயுண்ணிப் பழங்களை பிடுங்கி உண்டான். காலையிலேயே கழுத்து வெட்டி சாவல் குழம்போடு இருபது இடியப்பத்தை தீர்த்த பிறகும் வயிறு கொதித்தது. சாப்பாட்டு இடிஅமீன், இந்தப் பட்டப்பெயரைத் தாயத்துக்கு சூட்டியது மாஸ்டர் கனல் குன்றன். பயிற்சி முகாமில் வழங்கப்படும் அளவுச் சாப்பாடுகள் போதாதுவென தாயம் உண்ணா நோன்பிருந்தான். எருமை மாட்டிறைச்சி குழம்பில் மூவருக்கு வழங்கப்படும் அளவிலான துண்டங்களை இவனுக்கு வழங்குமாறு மாஸ்டர் உத்தரவளித்தார். தாயத்திற்கு வழங்கப்பட்ட விடுப்பு நாளையுடன் முடிவடைகிறது. குளத்திலிருந்து வீட்டிற்கு வந்ததும் புதிய ஆடைகளை அணிந்து, திருநீற்றை அள்ளி பூசினான். சாதனா தேமா மரத்திற்கு அவனை அழைத்துச் சென்று மந்திரங்கள் ஓதுமாறு சொன்னாள். தாயம் “கஜானனம் பூத கணாதி ஸேவிதம், கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம், உமாஸுதம் சோக வினாச காரணம், நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம் “ என்று பாடினான். சாதனா திருநீறள்ளி பூசிவிட்டாள். சுடச்சுட வேர்க்கொம்பு போட்ட தண்ணியை ஆக்கி கொடுத்தாள் தாய். அவனுக்கு வயிறு கொதித்தது. “இடியப்பம் இருக்கே” என்று கேட்டான். “முடிஞ்சுது, சோறு வடிச்சிடுவன். கொஞ்சம் பொறு” என்றாள் தாய். வீட்டின் முன்பாகவிருந்த பூவரசமரத்தின் கீழே அமர்ந்திருந்து வேர்க்கொம்புத் தண்ணியை உறிஞ்சிக் குடித்தான். சாதனா அவனிடம் கேட்டாள். “அண்ணா, சண்டைக்கு போக உனக்குப் பயமா இல்லையோ” “பயமில்லையோ. சரியான பயமாய் இருக்கு” “பயப்பிடு. மாமாவைப் போல பயமில்லாமல் சண்டை செய்து சாகாத.” “சாதனா, நான் செத்துப்போனால் நீ எத்தனை நாள் அழுவாய்” “இப்பிடி பயந்தால் சாகமாட்டாய். எனக்கு அழுகிற வேலை இல்லை” “எடியே, எனக்கு பயமே இல்லை. நான் செத்துப்போடுவனெண்டு சும்மா வைச்சுக் கொள்ளன். எத்தனை நாள் அழுவாய்” “அண்ணா, நீ சாகவே மாட்டாய். பயப்பிடாதவன் சாவுக்குப் பிறகானதை பற்றி கதைக்க மாட்டான்” என்று சொல்லிச் சிரித்தாள். “சரி நீ செத்துப்போனால் நான் எத்தன நாளைக்கு அழ வேண்டும் சொல்” “நீ அழவே கூடாது சாதனா” “சரி, நான் தேமாவுக்கு பூசை செய்து, உன்ர பெயரை நூற்றி எட்டுத் தடவை சொல்லுறன். காணுமே” “நான் என்ன கடவுளே” “செத்தால் எல்லாரும் கடவுள் தான்” “சரி அலட்டாத. காணும்” என்றான். சாதனா தன்னுடைய கைக்குள்ளிருந்த இரண்டு தேமா மலர்களை அவனுக்கு கொடுத்து எப்பவுமே உன்னோட வைச்சிரு என்றாள். தாயம் அவளைக் கொஞ்சி தலையில் குட்டினான். ஒரு வருடத்திற்கு முன்பான மாலை வேளையொன்றில் தாயம் இயக்கத்தில் சேர்ந்தான். அவன் எழுதி வைத்துச் சென்ற கடிதத்தில் “அம்மா, நான் இயக்கத்துக்கு போகிறேன். நீ கவலைப்படாமல் சாப்பிடு. சதனாவை, தேமா மரத்தை பார்த்துக் கொள். நான் போயிட்டு வாறன்” என்று எழுதப்பட்டிருந்தது. லட்சியத்தை நோக்கிய தாயத்தின் புறப்பாடு ஊரையே அதிர்ச்சியாக்கியது. “இவனையெல்லாம் படையில சேர்த்தால் மற்ற இயக்கப் பிள்ளையளுக்கு சோறும் மிஞ்சாது. சொதியும் மிஞ்சாது. இவன்ர வயிறு ஊரெழுக் கிணறு மாதிரி. அடிதெரியாமல் போய்க்கொண்டே இருக்கும்” என்றார் கொய்யாத்தோட்டம் பூசாரி. கோவில் அன்னதானங்களில் தாயம் உக்கிரம் காண்பான். அள்ளியெறிய ஏந்திக் கொள்ளும் பாதாளமாய் அவனது வயிறு திறந்துவிடும். எங்கிருந்து பொங்கிவரும் பசி இவனுள்ளே ஓடிநிரம்புகிறது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்பார்கள். “இவன் வயித்தில இருக்கேக்க, கடுமையான யுத்தம். ஆசைக்குத் தின்னக்கூட சோட்டைத்தீன் இல்லை. அரசாங்கம் ஒண்டையும் உள்ள விடேல்ல. என்ன கிடைச்சுதோ அதைத் திண்டு பசி போக்கினேன். முனுசு தோட்டத்தில விழுந்த குரும்பட்டியையும் எடுத்துக் காந்துவன்” என்றாள் தாயத்தின் தாயார். எனக்கும் தாயத்துக்கும் இடையே சிநேகிதம் உண்டாகிய தொடக்கத்தில் வீட்டுக்கு அழைத்துச் செல்வேன். அவனுக்கு ஒடியல் புட்டும், மீன் குழம்பும் பிடித்தமானது. பீங்கான் தட்டில் உணவைப் பரிமாறி அளிப்பேன். குழைத்து உண்ண வசதி இல்லையென, வாழை இலை கேட்பான். மான் இறைச்சியோடு கீரைப்புட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். தட்டில் உணவைக் கண்டாலே பதற்றமுற்று குழைத்து உள்ளே தள்ளுகிறான். விக்கல் எடுத்தாளும் நீரருந்தேன் என்கிற சத்தியமாயிருக்கும். கறித்துண்டுகளை, எலும்புகளையும் அரைத்து விழுங்கினான். ஏனென்று தெரியாத கடலின் மூர்க்கம் போல உடல் முழுதும் வெக்கை கொள்கிறது. வழியும் உடலின் ஈரத்தில் ஒருவர் தாகம் தீருமளவு வியர்வை. அன்றுதான் தாயம் இயக்கத்தில் இணையவிருப்பதாக என்னிடம் சொன்னான். அப்போது நானும் நம்பவில்லை. ஆனால் இன்று தாயம் ஒரு விடுதலைப் போராளி. அதனை நம்பாமல் இருக்கமுடியவில்லை. தாயம் விடுப்பு முடிந்து வட போர்முனைக் களத்திற்கு புறப்பட்டான். கிளிநொச்சி வரைக்கும் அவனை உந்துருளியில் அழைத்துச் சென்று இயக்க வாகனத்தில் ஏற்றினேன். “சரி மச்சான், அடுத்தமுறை வந்தால் சந்திப்பம்” என்றான். “வராமல் எங்கையடா போகப்போறாய், உதில இருக்கிற முகமாலை தானே. விடுப்பு கிடைக்காட்டி ஓடி வா” என்றேன். தாயம் பதில் எதுவும் கதையாமல் என்னைப் பார்த்துச் சிரித்தான். வாகனம் முன்நகர்ந்தது. சில மாதங்களுக்கு பின்னர் தாயத்தின் வீரச்சாவு செய்தி வந்தடைந்தது. வீட்டின் தேமா மரத்திற்கு பூசை செய்து கொண்டிருந்த சாதனாவுக்கு தெரியவேண்டாமென அவளை வட்டக்கச்சிக்கு அழைத்துச் சென்றோம். அவனுடைய வித்துடல் கிடைக்கவில்லை. வெறும் புகைப்படமாக மட்டுமே வந்தடைந்தான் “வீரவேங்கை நளன்.” எல்லாவிதமான நிகழ்வுகளும் முடிவடைந்து ஆறாவது நாள், சாதனாவை வீட்டுக்கு கூட்டி வந்தோம். ஓடிச்சென்று தேமா மரத்தின் கீழேயிருந்து மந்திரங்கள் ஓதி, பதிகம் பாடி அமைந்தாள். பூக்களை ஏந்தி வந்து வீட்டினுள்ளே புலிச்சீருடையில் புகைப்படமாய் இருக்கும் தாயத்தின் முன்பு படைத்து “ அண்ணா, நீ வெள்ளனவா ஓடி வா, பூசை செய்து விளையாட வேண்டும்” என்றாள். வீரச்சாவு அடைவதற்கு இரண்டு வாரம் முந்தி தாயம் எனக்கு கொடுத்தனுப்பிய கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது. “அன்பின் மச்சான்! வாழ ஆசையாக இருக்கிறது. ஆனாலும் இந்த நிர்ப்பந்தம், கெடுபிடி, போர், பேரழிவு இல்லாமல் இந்தப் பிறவியில் வாழ முடியாது என்றே தோன்றுகிறது. நீ அடிக்கடி சொல்வதைப் போல, இந்த வாழ்க்கையில் எத்தனை நாணயங்களை சுழற்றினாலும் பூவோ, தலையோ எமக்கில்லை. தாயம் வீரச்சாவு அடைந்தான் என்றால் அதில் பெருமை கொள்ளாதே. நான் வீரன் இல்லை. வாழ ஆசைப்படும் அற்பன். இந்தக் குருதியூற்றில் தேமா மலர்களோடு அமர்ந்திருந்து பதிகம் இசைக்க எண்ணும் சாதாரணப் பிறவி. என்னை நீ வீரனாக எழுதாதே. உன் கவிதைகளில் என்னைப் பாடாதே. இத்தனை பேர் உயிரைத் தியாகம் செய்யும் இக்களத்தில் நடுநடுங்கும் என்னை ஒரு சொல்லாலும் புகழாதே. யாழ்ப்பாணத்திலிருந்து இராணுவம் ஒவ்வொரு நாளும் முன்னேறத் துடிக்கிறான். போராளிகள் களமாடுகிறார்கள். என்னுடைய துவக்கை இயக்குவதற்கு கூட துணிச்சல் இல்லாமல் ஒடுங்கியுள்ளேன். சாதனா என்னிடம் சொன்னதைப் போலவே பயந்தவன் சாவதில்லையென்றால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் இங்கு வீரர்கள், கோழைகள், எதிரிகள், எல்லோரும் சாகிறார்கள். நான் வீரனுமில்லை எதிரியுமில்லை. செத்தால் எல்லாரும் கடவுள் என்ற சாதனாவுக்கு நான் கடவுளாக தெரியக்கூடாது. அண்ணனாகவே இருக்க விருப்பம். அவளைக் கவனமாகப் பார்த்துக் கொள். அம்மா தவித்துவிடுவாள். அதற்காக தாயகத்திற்காக தாயம் தன்னுயிரை ஈகம் செய்தானென்று மட்டும் அவளிடம் ஆறுதல் சொல்லாதே. தாய்மார்கள் அழட்டும். அவர்களின் கண்ணீராலேனும் மண்ணின் பாவங்கள் கரைந்து மூழ்கட்டும். சாதனாவுக்கு தேமா மரத்தில் பூசை செய்து விளையாட ஆளில்லை. எப்போதாவது நேரம் வாய்த்தால் அவளது பூசையில் பங்கெடு. ஆக்கினைகள் எல்லாமும் உதிரட்டும். பூக்கள் மலரட்டும். அவள் தந்தனுப்பிய இரண்டு தேமா மலர்களை என்னுடைய ஆயுத அங்கியில் வைத்திருக்கிறேன். இத்தனை ஆயுதங்களுக்கு மத்தியில் இரண்டு பூக்களோடு அமர்ந்திருக்கிறேன். எதிரியானவன் எப்போது வந்தாலும் தேமா மலர்களை நீட்டி, வணக்கம் சொல்வேன். அவனிடமிருக்கும் துவக்கு என்னிடமுமிருக்கிறது. அவனிடமும் மலர்கள் இருந்திருந்தால் என்னிடம் இயக்கம் துவக்கை தந்திருக்காது அல்லவா! இப்படிக்கு நளன் ( தாயம்) ராதா வான்காப்பு படையணி முகமாலை, வடபோர் முனை. https://akaramuthalvan.com/?p=1529
-
நாட்டைக் கட்டியெழுப்பும் அபிவிருத்தித் திட்டத்தில் இணையுங்கள் – பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரச அதிபர் அழைப்பு!
நாட்டைக் கட்டியெழுப்பும் அபிவிருத்தித் திட்டத்தில் இணையுங்கள் – பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரச அதிபர் அழைப்பு! [புதியவன்] பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டை அபிவிருத்தியை நோக்கி அழைத்துச் செல்லும் வேலைத்திட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் முக்கிய பங்கு வகிக்க முடியும் என அரச அதிபர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக் காட்டினார். விவசாயம், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அபிவிருத்திக்காக பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்பை எதிர்பார்ப்பதாக தெரிவித்த அரச அதிபர், இந்த முயற்சிகளில் தீவிரமாக இணைந்து கொள்ளுமாறு பல்கலைக்கழக மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார். யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுடன் அண்மையில் யாழ்.ஜெட்விங் ஹோட்டலில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அரச அதிபர் ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். நாட்டின் அபிவிருத்திக்காக பல்கலைக்கழக சமூகத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னணி பங்களிப்பு குறித்து தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கும் வகையில் வடமாகாணத்தில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் குறித்து மாணவர்களுக்கு தெளிவுபடுத்திய அரச அதிபர், இந்த நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு மாணவர்களை ஒன்றிணையுமாறும் கேட்டுக்கொண்டார். மனித வளமே ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு உந்து சக்தியாக அமைகின்றது என சுட்டிக்காட்டிய அரச அதிபர் ரணில் விக்ரமசிங்க, நவீன தொழில்நுட்பத்தை மையப்படுத்தி அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்குதல் உள்ளிட்ட உயர் கல்வித் துறையை விரிவுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து இதன் போது மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினார். டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற துறைகளில் விரைவான முன்னேற்றத்தின் அவசியத்தையும் அரச அதிபர் விளக்கினார். ஒரு நாடு என்ற ரீதியில் பிராந்திய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அரச அதிபர் ரணில் விக்ரமசிங்க, கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகங்களை வலுவான துறைமுகங்களாக மாற்றுவதற்கான திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடினார். தென்னிந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் வகையில் மன்னாரிலிருந்து இந்தியாவுக்கான நில ரீதியிலான தொடர்பை ஏற்படுத்துவது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தான் கலந்துரையாடியதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 2025 ஆம் ஆண்டளவில் 5% பொருளாதார வளர்ச்சியை அடைவதன் இலக்கையும் 2030 ஆம் ஆண்டளவில் படிப்படியாக அதனை 7-8% ஆக அதிகரிப்பதன் இலக்கு குறித்தும் விளக்கமளித்த அரச அதிபர், இலங்கை உயர் பொருளாதார வளர்ச்சி வீதத்தை விரைவில் அடைய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். வளமான மற்றும் அபிவிருத்தியடைந்த இலங்கையை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை மேலும் வலியுறுத்திய அரச அதிபர் ரணில் விக்ரமசிங்க, பல்கலைக்கழக மாணவர்களும் அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார். இதன்போது மாணவர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரச அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் பதிலளித்ததுடன் அவற்றில் சில கேள்விகளும் அரச அதிபர் வழங்கிய பதில்களும் கீழே தரப்படுகிறது. கேள்வி: ஒரு நாட்டின் வருமானத்திற்கு வரி வருமானம் முக்கிய காரணியாகும். நாங்கள் எங்கள் பல்கலைக்கழக ஆய்வுகளில் தொழில்முனைவோர் ஆலோசனைகள் மற்றும் தொழில்முனைவு பற்றி கற்கிறோம். ஆனால் அரச அதிபர் அவர்களே, அது நடைமுறையில் செயல்படுத்தப்படுவதில்லை. எனவே, தொழில் முனைவோர் நடவடிக்கைகளுக்கான மாணவர்களின் ஆலோசனைகளை உள்ளடக்குவதற்கான நடவடிக்கைகளை மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். பதில்: அத்தகைய வட்டத்தை உங்கள் பீடத்தில் நிறுவி, எமது பொருளாதார விவகாரம் தொடர்பான குழுவுடன் நேரடியாக இணைய முடியும். கேள்வி: அரச அதிபர் அவர்களே, இத்திட்டம் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு ஊக்கமளித்தால், அது மிகவும் பொருத்தமானது என்பதைக் கூற வேண்டும். பதில்: பல்கலைக்கழக மாணவர்களுக்கு குழுக்கள் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு திறைசேரிக்குச் சென்று அது எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து கற்கலாம். கேள்வி: பல்கலைக்கழக மாணவர்கள் ஆங்கில மொழியில் தமது கல்வியைத் தொடர்வதில் பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். ஒரு சந்தர்ப்பத்தில், எமது பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழியில் கல்வி கற்க வேண்டியதன் காரணமாக தற்கொலைச் சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது. எனவே, அடிப்படை நிலையிலிருந்து மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்த ஏற்பாடு செய்ய முடியுமா? பதில்: கொழும்பு பல்கலைக்கழகத்தில் அவ்வாறான பிரச்சினை இல்லை என நான் நினைக்கிறேன். மொரட்டுவ பல்கலைக்கழகத்திலும் அவ்வாறானதொரு பிரச்சினை எழவில்லை. ஆனால் நீங்கள் அனைவரும் ஆங்கிலம் கற்க வேண்டும். ஆங்கிலம் ஒரு சர்வதேச மொழி. நீங்கள் செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பத்துடன் செயற்பட வேண்டுமென்றால் ஆங்கில அறிவு அவசியம். அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, இந்தியா உட்பட உலகின் பல நாடுகள் ஆங்கில மொழியில் பணிகளை மேற்கொள்கின்றன. எதிர்காலத்தில் சீனாவும் இந்த வழிமுறையைப் பின்பற்றும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு (AI) பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில், பல்கலைக்கழக மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்துவது கட்டாயமாகியுள்ளது. அதன்படி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மூலமாகவும் தேவைப்பட்டால், பிரிட்டிஜ் கவுன்சில் போன்ற நிறுவனங்கள் மூலம் அதற்கான வசதிகளை வழங்க நாம் எதிர்பார்க்கிறோம். கேள்வி: ஜனாதிபதி அவர்களே, ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடிப்பதற்கு செலவழித்த காலத்தை விட, ஒரு அரச பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவன் பட்டப்படிப்பை முடிப்பதற்கான கல்வித் தகுதிகளைப் பெறச் செலவழிக்கும் காலம் மிக அதிகம். எனவே நாம் தொழில் சந்தைக்குச் செல்லும்போது, அவர்களுக்கு நம்மை விட அதிக அனுபவம் கிடைக்கிறது.. இதற்கு உங்கள் பரிந்துரை என்ன? பதில்: நான் ஒரு அரச பல்கலைக்கழகத்தில் படித்தேன். நான் 18 வயதில் பல்கலைக்கழக கல்வியைத் தொடங்கி 21 வயதில் பட்டம் பெற்றேன். 23 வயதில் வழக்கறிஞரானேன். இது பல்கலைக்கழகத்தின் உள்ளகப் பிரச்சினை. இன்று சிலர் பல்கலைக்கழக கல்வியை சீர்குலைத்து வருகின்றனர். ஆனால் நாங்கள் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது, முதல் தவணையின் கடைசி இரண்டு வாரங்கள் மட்டுமே வேலை நிறுத்தத்திற்கு ஒதுக்க உபவேந்தருடன் உடன்பாடு ஏற்படுத்திக் கொள்வோம். அவரும் அதற்கு உடன்பட்டார். அவ்வாறே நாமும் நடந்துகொண்டோம். எனவே, நாம் ஒரு முறைமையின் கீழ் செயல்படுவது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். அத்துடன், மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பின்னர், மூன்று அல்லது நான்கு வருடங்களுக்குள் கல்வியை நிறைவு செய்து பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற சட்டத்தை எதிர்காலத்தில் கொண்டு வர எதிர்பார்க்கின்றோம். மருத்துவ பீடங்களுக்கு அது தேவையில்லை. கேள்வி: ஜனாதிபதி அவர்களே , நான் ஒரு ஆலோசனை முன்வைக்கலாமா? பெரும்பாலும் அரசாங்க பாடசாலைகள் அனைத்தும் ஒரே நாளில் தொடங்கி ஒரே நாளில் தான் நிறைவடைகின்றன. ஏன் அரசாங்கப் பல்கலைக் கழகங்களால் அதைச் செய்ய முடியாது? பதில்: பல்கலைக்கழகங்களின் கல்வியாண்டு அக்டோபரில் தொடங்குகிறது. அது அடுத்த ஆண்டு செப்டம்பர் 30 இல் முடிவடைகிறது. நாங்கள் பல்கலைக்கழகத்தில் இருந்தபோதும், கல்வி ஆண்டு அக்டோபரில் தொடங்கியது. பல நாடுகளில், பல்கலைக்கழக கல்வியாண்டு அக்டோபர் முதல் செப்டம்பர் வரை செயற்படுத்தப்படுகிறது என்றார். பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, வடமாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் விசேட திட்டப்பணிப்பாளர் திக்ஷன அபேவர்தன, ஜனாதிபதியின் தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, யாழ்.பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ். ஸ்ரீ சற்குணராஜா யாழ் பல்கலைக்கழக முன்னாள் உப வேந்தர் வசந்தி அரசரத்னம் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். -ஜனாதிபதி ஊடக பிரிவு- https://newuthayan.com/article/நாட்டைக்_கட்டியெழுப்பும்_அபிவிருத்தித்_திட்டத்தில்_இணையுங்கள்_–_பல்கலைக்கழக_மாணவர்களுக்கு_அரச_அதிபர்_அழைப்பு!
-
ஜனாதிபதியின் யாழ். விஜயத்தில் எந்த பயனுமில்லை என்கிறது ஜேவிபி!
ஜனாதிபதியின் யாழ். விஜயத்தில் எந்த பயனுமில்லை என்கிறது ஜேவிபி! ஜனாதிபதியின் வடக்கு விஜயம் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படாத மக்களின் வரிப்பணத்தை வீணடித்த வெற்றுபயணமாகவே அமைந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துநெந்தி தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களின் அடிப்படை வசதிகள் இன்னும் பூர்த்தி செய்யாத வகையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். காணி விடுவிப்பு, மீள்கட்டுமானம், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தீர்வு மற்றும் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு என தமிழ் மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இவ்வாறான ஒரு நிலையில் வடமாகாணத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒரு துண்டு காணியேனும் அந்த மக்களுக்கு விடுவித்துக் கொடுக்கவில்லை. நான் கொழும்பிலிருந்து வருகை தரும்போது வடக்கு அதிகாரிகள் சிலருடன் கதைத்தேன், ஜனாதிபதி விஜயம் எவ்வாறு இருந்தது என அவர்கள் கூறினார்கள், வாகனப் பவனியை கண்டு இரசித்ததாகக் கூறினார்கள் . ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ். விஜயத்தை எதிர்த்து யாழ். மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் போராட்டம் நடைபெற்றது. ஜனநாயக வழியில் தமது எதிர்ப்பை தெரிவித்த போராட்டக்காரர்களை பொலிஸார் இழுத்துச் சென்றதையும், தாக்குதலுக்கு தயாராக இருந்த பொலிஸாரையும் ஊடகங்களில் ஊடாகப் பார்த்தேன். நாட்டை அதல பாதாளத்திற்கு கொண்டு சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை ஜனாதிபதி கதிரையிலிருந்து மக்கள் விரட்டியடித்த போது ரணில் விக்கிரமசிங்க பின் கதவால் ஜனாதிபதியானார். நாட்டை முன்னேற்ற போகிறேன் என கூறிக்கொண்டு நாட்டு வளங்களை வெளிநாட்டுக்கு தாரை வார்க்கும் செயற்பாட்டில் ரணில் விக்கிரமசிங்காக ஈடுபட்டு வருகிறார். நாட்டை பாதுகாப்பதற்காக பொதுமக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்பினர் மேற்கொள்ளும் போராட்டங்களை பாதுகாப்பு தரப்பினர் மூலம் அடக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தியே ஆக வேண்டும் என அரசியல் அமைப்பு கூறுகின்றது. இவ்வாறான நிலையில் ஜனாதிபதி கதிரையில் மீண்டும் அமர்வதற்காக தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காது வடக்குக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வட மாகாணத்தின் வளம் மிக்க பகுதிகளான மன்னார், பூநகரி, தீவகம் போன்ற பகுதிகள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கும் நிலையில் அப்பிரதேச மக்களின் கோரிக்கைக்கு ஜனாதிபதி பதிலளிக்கவில்லை. நாடு பொருளாதார ரீதியில் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில் ஜனாதிபதி ஆடம்பரமாக வாகன தொடரணிகள் சகிதம் வருகை தந்து நான்கு நாட்கள் வடக்கில் முகாமிட்டமை மக்களின் பிரச்சனையை தீர்க்க அல்ல, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரமே என அவர் மேலும் தெரிவித்தார். http://www.samakalam.com/ஜனாதிபதியின்-யாழ்-விஜயத/
-
தை பிறக்கும் வழி பிறக்குமா ? - நிலாந்தன்.
தை பிறக்கும் வழி பிறக்குமா ? நிலாந்தன். adminJanuary 7, 2024 அண்மையில் கோண்டாவில் உப்புமடச் சந்தியில், ஒரு சமகால கருத்தரங்கு இடம்பெற்றது. தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் அக் கருத்தரங்கை ஒழுங்குபடுத்தியது. அதற்குத் தலைமை தாங்கிய ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் சொன்னார்… தனக்கு தெரிந்த பலர் ஒரு வேளை உணவை, குறிப்பாக காலை உணவைத் தவிர்ப்பதாக. காலை உணவைக் கட்டாயம் எடுக்க வேண்டும், இரவு உணவைத் தவிர்க்கலாம் என்று தான் ஆலோசனை கூறியபோது, அவர்கள் சொன்னார்களாம், காலை சாப்பிடாவிட்டால் அன்றைய அலுவல்களில் மூழ்கும்போது பசி தெரியாது. ஆனால் இரவு சாப்பிடாவிட்டால் பசி தெரியும்; நித்திரை வராது என்று. இதுதான் பெரும்பாலான கீழ் மத்தியதர வர்க்க குடும்பங்களின் நிலைமை. ஆண்டு இறுதியில் இதுதான் நிலைமை என்றால் தை பிறந்தாலும் வழி பிறக்குமா? சாதாரண மக்களுக்கு வழி பிறக்குமோ இல்லையோ,அரசியல்வாதிகள் அதிகாரத்தைச் சுவைப்பதற்கான புதிய வழிகளைத் தேடித் திறக்கத் தொடங்கிவிட்டார்கள். ரணில் விக்கிரமசிங்கவை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற வைப்பதற்காகப் புதிய கூட்டணி ஒன்றை நோக்கி ஒரு புதிய அலுவலகம் கடந்த முதலாம் தேதி ராஜகிரியவில் திறந்து வைக்கப்பட்டது. அதே நாளில், மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகிய ஷான் விஜயலால் டி சில்வா எதிரணியோடு அதாவது ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொண்டார். இவர் தென்மாகாண சபையின் முதலமைச்சராக இருந்தவர். அவர் எதிரணியில் இணைந்து கொண்டதன் மூலம் எதிரணி தானும் பலமடைவதான ஒரு தோற்றத்தைக் கட்டியெழுப்ப முயற்சிக்கின்றது. அதாவது ,புதிய ஆண்டு அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான தயாரிப்புகளோடு பிறந்திருக்கிறது என்று பொருள். மக்கள் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் இருக்கலாம். மரக்கறிகளின் விலை வாங்க முடியாத அளவுக்கு உயர்ந்து போகலாம். வரியானது மக்களை ஈவிரக்கமின்றிக் கசக்கிப்பிழியலாம். மோட்டார் சைக்கிள் ஒரு லக்சறிப் பொருளாக மாறலாம். ஆனால் அரசியல்வாதிகளின் அதிகாரப்பசி குறையப் போவதில்லை என்பதைத்தான் ஆண்டின் தொடக்கம் நமக்கு உணர்த்துகின்றது. இவ்வாறு தென்னிலங்கையில் ஒரு ஜனாதிபதி தேர்தலை நோக்கி பிரதான கட்சிகள் ஏற்கனவே உழைக்க தொடங்கி விட்டிருக்கும் ஒரு பின்னணியில், தமிழ்த்தரப்பு என்ன செய்து கொண்டிருக்கிறது? ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக முதலில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது குத்துவிளக்கு கூட்டணிதான். சில மாதங்களுக்கு முன் கூட்டணியின் கூட்டம் மன்னாரில் நடந்த பொழுது ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டது. ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்துவது என்று அக்கூட்டு முடிவெடுத்தது. அந்த முடிவை வலியுறுத்தி கூட்டுக்குள் அங்கம் வகிக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார். சுரேஷ் அவ்வாறு கருத்து தெரிவித்த பின் அண்மையில் விக்னேஸ்வரன் அதற்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்திருந்தார். ஒரு தமிழ் பொது வேட்பாளராகத் தான் களமிறங்கத் தயார் என்றும் அவர் அறிவித்துவிட்டார். இவ்வாறு விக்னேஸ்வரன் அறிவித்த பின் கஜேந்திரக்குமார் அதற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்திருந்தார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தலை பகிஷ்கரிக்கும் என்பது அக்கட்சியின் நிலைப்பாடாகும். அதே சமயம் தமிழரசுக் கட்சி அதன் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. அது தன் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் மினக்கெடுகின்றது. எனினும் சுமந்திரனுக்கு நெருக்கமான சாணக்கியன் தமிழ்ப்பொது வேட்பாளர் என்ற தெரிவுக்கும் பகிஷ்கரிப்புக்கும் எதிராகக் கருத்து தெரிவித்திருக்கிறார். தமிழரசுக் கட்சி யாராவது ஒரு சிங்கள வேட்ப்பாளரை நோக்கித் தமிழ் வாக்குகளைத் திருப்பும் நோக்கத்தோடிருந்தால், அக்கட்சி பொது வேட்பாளரை எதிர்க்கும். கடந்த 15 ஆண்டுகளில் நடந்த மூன்று ஜனாதிபதி தேர்தலின் போதும் ஒரு தமிழ்ப்பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலிமையாக முன்வைத்தது, தமிழ்மக்கள் பேரவையால் உருவாக்கப்பட்ட சுயாதீனக் குழுதான். கடைசியாக நடந்த ஜனாதிபதி தேர்தலையொட்டி உருவாக்கப்பட்ட அக்குழுவின் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. எனினும்,அக்குழு அந்த முடிவை நோக்கி கருத்துருவாக்க வேலைகளைச் செய்தது. இம்முறை குத்துவிளக்குக் கூட்டணி அந்த முடிவை எடுத்திருக்கின்றது. குத்துவிளக்கு கூட்டணி இந்தியாவுக்கு விசுவாசமான ஒரு கூட்டணியாகப் பார்க்கப்படுகின்றது. இந்தியாவுக்கு ஆதரவான ஒரு கூட்டு என்று கருதப்படும் குத்துவிளக்கு கூட்டணி தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற கருத்தை கையில் எடுத்ததனால் அது இந்தியாவின் வேலையோ என்ற சந்தேகம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஏற்பட்டிருக்கலாம். முதலில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை ஏன் நிறுத்த வேண்டும் என்று பார்ப்போம். ஒரு தமிழ் பொது வேட்பாளர் நிச்சயமாக வெல்லப் போவதில்லை. ஆனால் அவர் பிரதான சிங்கள வேட்பாளர்களின் வெற்றிகளை சவால்களுக்கு உட்படுத்துவார். எப்படியென்றால்,ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழ் கட்சிகள் கடுமையாக உழைத்தால்,தமிழ் வாக்குகள் பெருமளவுக்கு அவருக்குத்தான் விடும். அப்படி விழுந்தால்,பிரதான சிங்கள வேட்பாளர்களுக்கும் 50 வீதத்துக்கு மேலான வாக்குகள் கிடைக்காமல் போகக்கூடும். இம்முறை இரண்டுக்கு மேற்பட்ட சிங்கள வேட்ப்பாளர்கள் அரங்கில் காணப்படுகின்றார்கள். அதாவது சிங்கள வாக்குகளே சிதறும் ஒரு நிலமை. இதில் தமிழ் வாக்குகளின் கிடைக்கா விட்டால், எவருக்குமே முதற் சுற்று வாகுக்கு கணக்கெடுப்பில் வெற்றி கிடைக்காமல் போகலாம். அப்பொழுது இரண்டாவது சுற்று வாக்கு கணக்கெடுப்புக்கு போக வேண்டிவரும். அதில் தமிழ் மக்கள் யாருக்கு தமது இரண்டாவது விருப்பு வாக்கை வழங்குகிறார்களோ அவரே வெற்றி பெறுவார். அதாவது யார் ஜனாதிபதியாக வர வேண்டும் என்பதனை தமிழர்கள் தீர்மானிக்கக்கூடிய பேர வாய்ப்பைப் பரிசோதிக்கும் ஒரு முயற்சியே அது. பிரதான சிங்கள வேட்பாளர்களுக்கு தமிழ் வாக்குகள் கிடைக்காது என்றால், அவர்கள் தமிழ்த் தரப்போடு பேரம்பேச வருவார்கள். அப்பொழுது தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் ஒருவருக்கு தமிழ்மக்கள் தமது இரண்டாவது விருப்பு வாக்கை அளிக்கலாம். அதாவது தமிழ் வாக்குகளை ஒரு சிங்கள வேட்பாளருக்கு “பிளாங்க் செக்”காக வழங்குவதற்கு பதிலாக பேர வாய்ப்பாக அதைப் பயன்படுத்துவது. ஆனால் இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால் தமிழ் மக்களோடு வெளிப்படையான ஓர் உடன்பாட்டுக்கு வரும் சிங்கள வேட்பாளர் தென்னிலங்கையில் தோற்கடிக்கப்படும் ஆபத்து அதிகமுண்டு என்பதுதான். அதனால் எந்த ஒரு சிங்கள வேட்பாளரும் தமிழ் மக்களோடு பேரம்பேசத் தயங்குவார். ஆனால் அதுகூட தமிழ் மக்கள் வெளி உலகத்துக்கு ஒரு உண்மையைச் சொல்வதற்குரிய வாய்ப்பை உருவாக்கும். அது என்னவெனில், சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்கள் யாருமே இனப்பிரச்சினை தொடர்பில் தமிழ் மக்களுக்கு வெளிப்படையான வாக்குறுதிகளை வழங்கத் தயாரில்லை என்பதுதான். எனவே ஒரு தமிழ்ப்பொது வேட்பாளர் தமிழ் மக்களுக்கு உள்ள பேர வாய்ப்புகளை பரிசோதிக்கலாமோ இல்லையோ,தமிழ் மக்களின் மக்கள் ஆணையை புதுப்பிப்பதற்கு உதவுவார். அவர் தமிழ் மக்களின் உச்சபட்ச கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் வாக்குகளைக் கேட்பார். தேர்தல் என்று வந்தால் அது ஒரு ஜனநாயகக் கொண்டாட்டம். அங்கே கட்சிகளுக்கு புது ரத்தம் பாச்சப்படும். கட்சித் தொண்டர்கள் உற்சாகமாக இறங்கி வேலை செய்வார்கள். கிராமங்கள்தோறும் கட்சி அலுவலகங்கள் திறக்கப்படும். கிராம மட்டத்தில் கட்சி வலையமைப்புகள் பலப்படுத்தப்படும். ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி எல்லா கட்சிகளும் அவ்வாறு உழைக்கும் பொழுது, அது தமிழ் மக்களை ஆகக்கூடிய பட்சம் ஒரு தேசமாகத் திரட்டும். ஏற்கனவே கடந்த 15 ஆண்டுகளிலும் நடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தலில் போதும் தமிழ் மக்கள் ராஜபக்சங்களுக்கு எதிராகத் திரளாக வாக்களித்து இருக்கிறார்கள். அவ்வாறு ஒரு சிங்கள வேட்பாளருக்கு எதிராக விழும் வாக்குகளை தமிழ் மக்கள் ஆணைக்கான வாக்குகளாக மாற்றினால் என்ன? கஜேந்திரகுமார் கூறுகிறார்,ஒரு தமிழ்ப்பொது வேட்பாளர் இறுதியாக யாராவது ஒரு சிங்கள வேட்பாளரை ஆதரிப்பார் என்பதனால் அந்தத் தெரிவை தாம் ஏற்கவில்லை என்று. மேலும் ஒற்றை ஆட்சிக்குள் ஒரு தீர்வை ஏற்றுக் கொள்ளும் கட்சிகள் அவ்வாறு ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டுகிறார். ஆனால் இங்கு ஏற்கனவே பார்த்ததுபோல,பிரதான சிங்கள வேட்பாளரோடு பேரம் பேசக்கூடிய நிலைமைகள் குறைவாக இருக்குமென்றால்,அதை தமிழ் மக்களின் ஆகப்பிந்திய ஆணையைப் பெறுவதற்கான ஒரு மறைமுக வாக்கெடுப்பாக தமிழ்மக்கள் பயன்படுத்தலாம். தமது உச்சமான கோரிக்கைகளை முன்வைத்து அதற்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்பதனை வெளியுலகத்துக்கு எடுத்துக் கூறலாம். இந்த கோரிக்கையை முன்வைப்பது சுரேஷ் பிரேமச்சந்திரன் அல்லது குத்து விளக்கு கூட்டணி அல்லது விக்னேஸ்வரன் என்பதற்காக அதனை எதிர்க்கத் தேவையில்லை. அது தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டும் வாய்ப்புகளை அதிகப்படுத்தும் என்ற அடிப்படையிலாது அதைப் பரிசோதிக்கலாம். ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் ரணில்,சஜித் உட்பட எல்லா சிங்கள வேட்பாளர்களையும் சவால்களுக்கு உட்படுத்துவார். அவர்களை தமிழர்களை நோக்கி வரச்செய்வார். அல்லது அவர்கள் தமிழர்களுக்கு எதிரான வெளிப்படையான நிலைப்பாட்டை எடுக்கக்கூடிய நிலைமைகளை ஏற்படுத்துவார். அதாவது சிங்கள வேட்பாளர்களை அம்பலப்படுத்துவார். ஆனால் இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, அவர் தமிழ் மக்களின் ஆகப் பிந்திய மக்கள் ஆணையை வெளிக்கொண்டு வருவார். தமிழ் மக்களை ஐக்கியப்படுத்துவார். அந்த ஐக்கியத்துக்கு தகுதியானவர்கள் தலைமை தாங்கலாம். ஒரு தமிழ்ப்பொது வேட்பாளர் கட்டாயமாக விக்னேஸ்வரனாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. கிழக்கிலிருந்து ஒருவரைத் தெரிவு செய்யதால் அது மிகச்சிறப்பு. ஒரு பெண்ணாக இருந்தால் அதுவும் சிறப்பு. அவர் ஒரு குறியீடு. கட்சிகளாக,வடக்குக் கிழக்காக,சமயங்களாக,சாதிகளாக,ஒரே கட்சிக்குள் இருவேறு குழுக்களாக,முகநூல் குழுக்களாக,சிதறிக்கிடக்கும் ஒரு சமூகத்தை,ஒரு தேர்தலை நோக்கியாவது ஆகக்கூடிய பட்சம் ஒரு தேசமாகத் திரட்ட அவருக்கு வாய்ப்பளித்தால் என்ன ? https://globaltamilnews.net/2024/199465/
-
என்னை கொல்ல வந்தவரை மன்னித்து விட்டேன் - டக்ளஸ் தேவானாந்தா
என்னை கொல்ல வந்தவரை மன்னித்து விட்டேன் adminJanuary 7, 2024 தன்னை கொலை செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பெண்மணியை தான் மன்னித்து விட்டதாகவும், அவரது விடுதலை தொடர்பில் சட்டமா அதிபருடன் கலந்துரையாடி, அவரது விடுதலைக்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தை வாழ்விடமாகக் கொண்டு, முன்பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான செ.சத்தியலீலா என்பவர், கடந்த 2004 ஆம் ஆண்டு, அமைச்சர் டக்லஸ் தேவானந்தா மீதான குண்டுத் தாக்குதல் சம்பவம்தொடர்பில், அவசரகாலச் சட்டவிதியின் கீழ் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு 14 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருந்தார். அவ்வாறிருக்க, வழக்கு விசாரணையின்போது கொழும்பு மேல்நீதிமன்றம் இவருக்கு ‘15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட, இரன்டாண்டுகால சிறைதண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்தவேண்டும்‘ என்கின்ற நிபந்தனையுடன் 2018 ஆம் ஆண்டு விடுதலை செய்துள்ளது. எனினும் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் திருப்தியுற்றிராத சட்டமா அதிபர் திணைக்களம் அத்தீர்மானத்தை ஆட்சேபித்து மேல்முறையீட்டு நீதிமன்றில் மேல்முறையீடு செய்திருந்தது. அந்த வகையில், மேன்முறையீட்டு நீதிமன்றமானது மேல் நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்து, அரசியல் கைதியான சத்தியலீலாவுக்கு 2023 இல் மரண தண்டனைத் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் அவர், மேல்முறையீட்டு நீதிமன்றம் தனக்கு அளித்த தண்டனத் தீர்ப்பை மீள் பரிசீலனைக்கு உட்படுத்தி வழக்கிலிருந்து விடுவிக்குமாறு உயர் நீதிமன்றில் மீ்ண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார். இவ்வாறிருக்கையில் சத்தியலீலா, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரலுயர்த்தி வருகின்ற, ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பின் ஊடாக ஜனாதிபதிக்கு ஒரு கருணை மனுவினை அனுப்பி வைத்துள்ளார். அதில் அவர், “என்னைப் பொறுத்தமட்டில் 14வருடங்களாக பட்ட துன்ப துயரங்களுக்குப் பின்னரும் ஒரு மரணதண்டனைக் கைதியாக மீண்டும் சிறைக்குச் செல்வதை இந்த ஜென்மத்தில் நினைத்துப் பார்க்கவே முடியாது. அதைவிட உயிரை மாய்த்துக் கொள்வதே மேல். எனவே, ஜனாதிபதி அவர்கள், பிள்ளைகளையும், பெற்றோரையும் பிரிந்து14 ஆண்டுகாலம் சிறையில் வாடி விடுதலையான பின்பும் மரணதண்டனைத் தீர்ப்பிற்கு ஆளாகியுள்ள எனக்கு கருணை அடிப்படையில் பொது மன்னிப்பு வழங்கி எனது இயல்பு வாழ்விற்கு வழிவகுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்திருந்தார். குறித்த கருணை மனு தொடர்பில் நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது, குரலற்றவர்களின் குரல் அமைப்பினால், ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்போது, ஜனாதிபதிக்கு அருகிலிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், “அந்தப் பெண்மணியை எப்போதோ நான் மன்னித்துவிட்டேன். ஆகையால், இந்த விடயம் சம்மந்தமாக நான், சட்டமா அதிபருடன் கலந்துரையாடி அவரது துரிதமான விடுதலைக்கு நடவடிக்கை எடுப்பேன் ” என்ற உறுதிமொழியை வழங்கியுள்ளார். https://globaltamilnews.net/2024/199463/
-
மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வடக்கிற்கு செல்கிறார் ரணில்
உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள மத ஸ்தங்களுக்கு விரைவில் தீர்வு adminJanuary 7, 2024 வடக்கில் உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் இருக்கும் கோவில்கள் மற்றும் தேவாலயங்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகள் வழங்கப்படும் எனவும், அந்த மத ஸ்தலங்களை மீளமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை மத தலைவர்களுடனான சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். பொருளாதார அபிவிருத்திக்கு மத நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது. வடக்கில் யுத்தத்தினால் இழந்த வருமானத்தை வடக்கிற்கு மீள வழங்குவதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்த எதிர்பார்த்துள்ளோம். அதற்கு மதத் தலைவர்கள் ஆற்றக்கூடிய பணிகள் பாரியதாக இருக்கும். அனைத்து மதத் தலைவர்களும் நல்லூர் ஆலய பொறுப்பாளர்களும் விரும்பினால் நல்லூர் ஆலயத்தை விட பெரிய ஆலயத்தை அமைக்க முடியும். கிறிஸ்தவ தேவாலயங்களில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக மடு தேவாலயத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும். யுத்த காலத்தில் முஸ்லிம் மக்கள் இந்தப் பிரதேசங்களை விட்டு வெளியேறியதாகவும், அவர்கள் மீள்குடியேறுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இனம் மற்றும் மதம் என்ற அடிப்படையில் பிளவுபட வேண்டிய அவசியமில்லை. அனைத்து மக்களினதும் உரிமைகளைப் பெற்றுக் கொண்டு ஒரு நாடாக முன்னோக்கிச் செல்ல வேண்டும். நாட்டின் சமய மற்றும் கலாசார விழுமியங்களை முன்வைத்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என தெரிவித்தார். https://globaltamilnews.net/2024/199446/
-
ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்: வவுனியாவில் பதற்றம்!
ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்: வவுனியாவில் பதற்றம்! வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மீது பொலிசார் பலப்பிரயோகத்தை முன்னெடுத்ததுடன் சங்கத்தின் தலைவி உட்பட இருவர் வலுக்கட்டாயமாக கைதுசெய்யப்பட்டனர். இதனால் குறித்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெள்ளிக்கிழமை (5) வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்ததுடன் நகரசபை மண்டபத்தில் இடம்பெறும் வன்னிமாவட்டங்களிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். இதனையடுத்து வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்காக நிகழ்வு இடம்பெற்ற மண்டபத்திற்குள் செல்ல முற்ப்பட்டனர். அவர்களை தடுத்து நிறுத்திய பொலிசார் ஜனாதிபதியை சந்திப்பதற்கு அனைவருக்கும் அனுமதி வழங்கமுடியாது என்றும் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கமுடியும் என்றும் தெரிவித்தனர். இதனை மறுத்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அனைவரையும் அனுமதிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்ப்பட்டது. இதனையடுத்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றா பொலிசாரால் குண்டுக்கட்டாக தூக்கிச்செல்லப்பட்டு பொலிசாரின் பேருந்தில் ஏற்றப்பட்டு கைதுசெய்யப்பட்டார். அவருடன் மற்றொரு பெண்ணும் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த சம்பவத்தால் அந்தப்பகுதியில் குழப்பநிலை ஏற்ப்பட்டிருந்தது. இதேவேளை கைதுசெய்யப்பட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவுக்கு இன்றையதினம் போராட்டம் எதனையும் முன்னெடுப்பதற்கு நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.samakalam.com/ஜனாதிபதிக்கு-எதிராக-போரா/
-
யாழில். தொடரும் காணி மோசடிகள் – ஐந்து நொத்தாரிசுகள் முன் பிணையில்!
யாழில். தொடரும் காணி மோசடிகள் – ஐந்து நொத்தாரிசுகள் முன் பிணையில்! adminJanuary 4, 2024 யாழ்ப்பாணத்தில், கடந்த சில மாதங்களில் காணி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஐந்து நொத்தாரிசுகள் முன் பிணை பெற்றுள்ளனர். அதேவேளை மேலும் சில நொத்தாரிசுகள் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு, தற்போது பிணையில் விடுக்கப்பட்டுள்ள நிலையிலும் அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன இந்நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல சட்டத்தரணியும் , நொத்தாரிசுமானவரை ஐந்து இலட்ச ரூபாய் சரீர பிணையில், யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்று முன் பிணை வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பாக ஏற்கனவே நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியிருந்தது. அந்தத் தீர்ப்புக்கு மாறாக மோசடியாகத் தயாரிக்கப்பட்ட உறுதி ஊடாக அந்தக் காணி விற்பனை செய்யப்பட்டுள்ளது என அது தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது. அந்நிலையில் குறித்த காணி உறுதிப்பத்திரம் தொடர்பாக அந்த உறுதிப்பத்திரங்களை வரைந்த பிரசித்த நொத்தாரிசும், சட்டத்தரணியுமான ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்பிணை விண்ணப்பத்தை தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, இந்த உறுதியை வரைந்த பிரசித்த நெத்தாரிசு உண்மைக்குப் புறம்பாகத் தகவலை இட்டு மோசடியான முறையில் ஆவணம் ஒன்றைத் தயாரித்ததாகக் கூறி அவரைக் கைது செய்ய வேண்டும் என்று காவற்துறையினர் மன்றிடம் வேண்டுகோள் விடுத்தனர். சட்டத்தரணிகள் மற்றும் காவற்துறையினரின் சமர்ப்பணங்களின் பின்னர் கட்டளைக்காக நேற்றைய தினம் புதன்கிழமை குறித்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது, நீதிமன்றம் முன் பிணை கோரிய சட்டத்தரணிக்கு 5 லட்சம் ரூபா சொந்த சரீரப் பிணை என முன்பிணை வழங்கி கட்டளையிட்டது. அதேவேளை குறித்த சட்டத்தரணிக்கு எதிராக ஏற்கனவே நடைபெற்று வரும் காணி வழக்கில் முன்னிலையாக வேண்டும் என்றும் மன்று உத்தரவிட்டது. https://globaltamilnews.net/2024/199315/
-
கனடா பீல் நகர காவல்துறை தலைமையரான துரையப்பாவின் பேரப்புள்ளை கொழும்பில்
நிஷான் துரையப்பா நேற்று யாழ்களத்தை hack பண்ணினாரா? 😁 இடையில் நாலு பக்கத்தைக் காணோம்!🤪 அவருக்கு கனடாவில நல்ல சம்பளம் கிடைக்கின்றது! https://www.ontariosunshinelist.com/people/nishan-duraiappah/regional-municipality-of-peel-police-services
-
ஊருலா
ஒரு சுவாரசியமும் இல்லாத வெள்ளவத்தை வாழ்க்கை! சுத்தமான காத்து இல்லாத கொழும்பு வாழ்க்கைக்கு ஊர்ப்பக்கம் எவ்வளவோ பரவாயில்லை. ஆனால் பலர் இன்னமும் கொழும்பைத்தான் விரும்புகின்றார்கள்!
-
மேட்டிமைவாதமா? - ஜெயமோகன்
மேட்டிமைவாதம் என்னும் சொல்… jeyamohanDecember 27, 2023 மேட்டிமைவாதமா? மேட்டிமைவாதம் என்னும் சொல்லை வேறுபல தமிழ்ச்சொற்களைப்போல ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்து, குத்துமதிப்பாக, எல்லா இடங்களிலும் பயன்படுத்துகிறோம். ஒரு சொல் கிடைத்தால் அதைப்பற்றி மேற்கொண்டு சிந்திப்பதில்லை, அதையே எங்கும் எதற்கும் பயன்படுத்தி சூழலை மலினப்படுத்துகிறோம். தமிழில் அச்சொல்லை elitism என்ற ஆங்கிலச்சொல்லுக்கு மொழியாக்கமாக ஆரம்பகால இடதுசாரிகள் பயன்படுத்தினர். அச்சொல்லின் தொடக்கப் பொருள் என்பது ‘தகுதி கொண்ட உயர்வட்டத்தினரின் இயல்பு’ என்பது. அதன் பழையகால நேர்ப்பொருள் ’உயர்குடிப் பிறந்த, உயர்பதவிகொண்ட, அதன் விளைவாகவே உயர்கல்வி கொண்டவர்களின் ரசனையும், வாழ்க்கைமுறையும்’ என்பது. அது மார்க்ஸியர்கள் எதிர்த்த கருத்துநிலை. ஆகவே அதை மேட்டிமைவாதம் என மொழியாக்கம் செய்தனர். ஆனால் கலைகளில், இலக்கியத்தில் எலைட்டிசம் என்னும் சொல் மேலும் மேலும் விரிவடைந்து நுட்பமான பல பொருட்களைக் கொண்டதாக ஆகியது. இலக்கியத் திறனாய்வில் அது பின்னர் அதுவரையிலான மிகச்சிறந்த மரபை ஓர் அளவுகோலாக முன்வைத்தலை குறித்தது. ஒரு சூழலில் இலக்கியத்திலும் கலைகளிலும் மிகச்சிறந்த தேர்ச்சிபெற்றவர்களின் உள்வட்டத்தைக் குறிக்க பயன்பட்டது. class எனும் சொல்லுக்குச் சமானமான சொல்லாக அது மாறியது. இலக்கியவிமர்சனத்தில், குறிப்பாக பிரிட்டிஷ் இலக்கிய விமர்சனத்தில், எலைட்டிசம் என்பது எதிர்மறைப்பண்பு கொண்டது அல்ல. அது ஒரு ஆதாரமான கருத்துநிலை மட்டுமே . எந்தச்சூழலிலும் அது அடிப்படையானது, தவிர்க்கமுடியாதது. ஒரு சூழலில் எலைட்டிசம் இல்லாமலாவது என்பது மரபும் தரமும் இல்லாமல் ஆவதுதான். கபிலனும் கம்பனும் எழுதிய மொழி தமிழ் என ஒருவன் உணர்வது மேட்டிமைவாதம் அல்ல. இன்று எழுதும் கவிஞனிடம் அவன் அந்த தொடர்ச்சியையும் அதற்குரிய தரத்தையும் எதிர்பாப்பதும் மேட்டிமைவாதம் அல்ல. அப்படி ஓர் அளவுகோல் இல்லாத இலக்கிய – பண்பாட்டுச்சூழல் இருக்க முடியாது. எலைட்டிசம் என்பது எங்கே எதிர்மறைப் பண்பு கொண்டதாக ஆகிறது? ஜனநாயகத்தில் மக்களின் உரிமைகள் நிகர் என்பது அடிப்படை நெறி. அங்கே ஒரு வட்டத்திற்கு கூடுதல் உரிமைகள் உண்டு என்று பேசப்படுமென்றால் அங்கே எலைட்டிசம் எதிர்மறையான சொல். அதாவது, எங்கே உரிமைகள் பேசப்படுகிறதோ அங்கெல்லாம் எலைட்டிசம் எதிர்மறையானதே. மானுடர் அனைவரும் உரிமைகள் விஷயத்தில் சமமானவர்கள் , தகுதிகள் மற்றும் பொறுப்புகளில் அப்படி அல்ல. ஆனால் இன்றைய உலகம் உரிமைகள் சார்ந்த அனைத்திலும் எலைட்டிசத்தை முழுமையாக ஏற்கிறது. பணமிருந்தால் நீங்கள் விமானநிலையத்தில் வரிசையில் நிற்கவேண்டியதில்லை. எலைட் கிளாஸ் என்றே அந்த அமைப்புக்குப் பெயர் இருக்கும். நீதிமன்றத்தில்கூட உங்களுக்கு தனி உபசரிப்புதான். செல்வத்தால், பதவியால், பிறப்புசார்ந்த பின்புலத்தால் உரிமைகளில் ஒருவர் முன்னுரிமை கோரினால் அந்த எலைட்டிசம் கண்டனத்திற்குரியது- ஆனால் அதை இங்கே நாம் இயல்பாக ஏற்க பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோம். நமக்கு எந்த அரசியல்வாதி மீதும், எந்த செல்வந்தர் மீதும் புகார்களே கிடையாது. நம்முடைய குறி முழுக்க நம்மில் ஒருவர் அறிவுத்திறனாலோ சாதனையாலோ சற்று மேலானவர் என்று அறியப்பட்டால் அவரை தாக்கி அழிப்பதில்தான். ஓர் அறிவார்ந்த சூழலில், அறிவுத் தகுதியால் மேலிடத்தில் இருப்பவர்களின் தரப்பு ஒன்று எலைட்டிசம் என்னும் சொல்லால் குறிப்பிடப்பட்டதுண்டு. இன்று அச்சொல்லை பரவலாக பயன்படுத்துவதில்லை, வேறு அரசியல் சரிநிலை கொண்ட சொற்கள் வந்துவிட்டன. உதாரணமாக, பல அறிவுத்துறைகளில் peer circle என்னும் சொல் புழக்கத்திலுள்ளது. அதை மேட்டிமைவாதம் என்று மொழியாக்கம் செய்வதைப்போல அபத்தம் வேறில்லை. ஒரு துறையில் பயிற்சியும் தேர்ச்சியும் சாதனையும் கொண்டவர்களும் பிறரும் ஒன்றல்ல. பயிற்சியும் தேர்ச்சியும் சாதனையும் கொண்டவர்களின் கருத்தும் பிறர் கருத்தும் சமானம் அல்ல. அறிவுத்துறைகளில் அதில் பயிற்சியற்றவர்களின் எக்கருத்துக்கும் எந்த மதிப்பும் இல்லை. அப்படி ஒரு நிலை உண்டு என்றால் அங்கே அறிவுச்செயல்பாடே இல்லை என்றே பொருள். சமூகவலைத்தளங்கள் உருவான பின் எவரும் எங்கும் எதைப்பற்றியும் கருத்துசொல்லலாம் என்னும் நிலை உள்ளது. அவர்கள் ஒரு துறையின் சாதனையாளரை ஒன்றுமே தெரிந்துகொள்ளாமல் விமர்சனமும் ஏளனமும் வசையும் புரிகிறார்கள். ஆனால் அந்த பாமரரின் கருத்தை அந்த சாதனையாளர் ஒரு பொருட்டாகக் கருதவில்லை என்றால் அவரை மேட்டிமைவாதி என்று முத்திரை குத்துகிறார்கள். கொஞ்சம் சிந்திப்பவர்களாவது இந்த மாபெரும் அசட்டுத்தனம் பற்றிய புரிதல் கொண்டிருக்கவேண்டும். இலக்கியத்தில் , சிந்தனையில் எலைட்டிசம் என்பது பலசமயம் மரபு, தரமதிப்பீடு என்னும் இரண்டு அடிப்படைகளை முன்வைப்பதாகவே அமைகிறது. இன்று ஒருவர் தமிழில் சிறுகதை எழுதினால் அவர் புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ஜெயகாந்தன், ஜானகிராமன், வண்ணதாசன், நாஞ்சில்நாடன் என நீளும் ஒரு மரபின் தொடர்ச்சியாக ஆகிறார். அந்த மரபு உருவாக்கிய அளவீடுகளை அவர் முன்னெடுக்கவேண்டும், கடக்கவேண்டும். அந்த எதிர்பார்ப்பை முன்வைப்பவர் ஒரு ’எலைட்’ தான். உலகம் முழுக்க சென்ற இருநூறாண்டுகளில் சிறுகதை என்னும் கலைவடிவம் பெற்ற வெற்றிகளை அறிந்த ஒருவர் சிறுகதை எழுதுபவரில் அந்த அளவீட்டை போட்டுப்பார்க்கிறார், எதிர்பார்க்கிறார். அவரும் ’எலைட்’ தான். அந்த எதிர்பார்ப்பு வழியாகவே இலக்கிய விமர்சனம் செயல்படுகிறது. அதன் வழியாகவே மதிப்பீடுகள் உருவாக்கப்படுகின்றன. அப்படி அல்ல என்று சொல்வோம் என்றால் எழுதப்படும் எல்லாமே இலக்கியம்தான் என ஆகும். அப்படி ஒரு பார்வை இருப்பதை சிறுகதை எழுதும் எவருமே ஏற்கப்போவதில்லை. ஒவ்வொருவரும் அவர்கள் இருக்கும் படிநிலை என ஒன்றை அவர்களே மதிப்பிட்டு வைத்திருப்பார்கள். அதற்கு கீழே என அவர் நினைக்கும் ஒருவரிடம் அவரை ஒப்பிட்டு இருவரும் ஒன்றே என்று சொல்லிப்பாருங்கள் தெரியும், கொந்தளித்துவிடுவார். ரசனை என்பதே மதிப்பீடும் ஒப்பீடும் மட்டுமே. மேலான கலையை, இலக்கியத்தை அறிந்து அதை முன்வைத்துக்கொண்டே இருப்பவர் கலையையும் இலக்கியத்தையும் முன்னெடுக்கும் சக்தி. அது வ.வே.சு.ஐயரோ, பாரதியோ, புதுமைப்பித்தனோ, க.நா.சுவோ, சி.சு செல்லப்பாவோ, வேதசகாயகுமாரோ எவராயினும். அவ்வாறு அறிவார்ந்த தகுதிகொண்டவர்கள் ஒரு வட்டம். ஒவ்வொரு தலைமுறையிலும் அப்படி ஒரு வட்டம் உருவாகி வந்திருக்கும். ஒவ்வொரு துறையிலும் அப்படி ஒரு வட்டம் திரண்டிருக்கும். அதற்கு ஓர் அறிவார்ந்த ஆற்றல் இருக்கும். சாதியால், செல்வத்தால் உருவாகும் வட்டம் அல்ல அது. திறனால், சாதனையால் உருவாவது. அதை எதிர்க்கவேண்டுமென்றால் அதற்கு எதிரான இன்னொரு அறிவார்ந்த வட்டத்தை உருவாக்குவது மட்டுமே ஒரே வழி. அதற்கு மாறாக அந்த அறிவார்ந்த வட்டத்தையே ஒருவர் மேட்டிமைவாதம் என சொல்வாரென்றால் அவருக்கு அறிவியக்கமே அறிமுகமில்லை என்று பொருள். சிந்தனைக் களத்திலும் இன்னொருவகை எலைட்டிசம் உண்டு. ஒரு சிந்தனையாளன் தன் சூழலைப்பற்றிய விமர்சனத்தில் இருந்தே தொடங்குகிறான். தான் காணும் சமகாலச் சூழலில் அவன் கொள்ளும் முரண்பாடு, ஒவ்வாமை, எதிர்ப்பு ஆகியவையே அவனை சிந்தனைசெய்ய வைக்கின்றன. சமூகவிமர்சனம் இல்லாமல் இலக்கியம் இல்லை. தத்துவம் இல்லை. சமூகப்பணியும் நிகழ்வதில்லை. முரண்பாடு, ஒவ்வாமை, எதிர்ப்பு எனும் மூன்றும் ஒருவன் சமூகத்தில் இருந்து விலகி சற்றேனும் அன்னியமாகும்போதே உருவாகின்றன. ‘மக்களோடு மக்களாக’ இருப்பவனுக்கு அவை உருவாவதில்லை. அவனுக்கு எந்தச் சிக்கலும் தென்படுவதில்லை. எந்தக்குறைபாடும் சமூகக்குறைபாடாகத் தோன்றுவதுமில்லை. சிந்தனையாளன் சமூகத்தின் ஒரு பகுதியாக நின்றே சமூகத்தை அறிகிறான், சமூகத்தைவிட மேலெழுந்து நின்றே அதை விமர்சனம் செய்கிறான். ஆகவே எந்தச் சிந்தனையாளனுக்கும் ஒரு ’எலைட்’ தன்மை இருந்தே தீரும். அவன் சமூகத்தின் சராசரியின் ஒருபகுதியாக இருக்கமுடியாது. சமூகத்தின் பொதுச்சிந்தனைகள், பொது உணர்வுநிலைகளில் அவனும் கரைந்திருக்க முடியாது. அவன் ஒரு படி மேல்தான். அதனால்தான் அவனுக்கு அந்தப்பார்வை அமைகிறது .உரிமையால் அல்ல, அறிவால் உருவாவது அது. அந்த அறிவையே அவன் முன்வைக்கிறான். அந்த விமர்சனத்தால் சமூகச் சராசரியாகத் திகழ்பவர்கள் எரிச்சல் கொள்வார்கள், எதிர்ப்பார்கள். அது இயல்பு. ஆனால் அதற்காக ஓட்டுப்பிடிக்கும் அரசியல்வாதிகள் போல கலைஞன், சிந்தனையாளன், இலக்கியவாதி சமூகத்தை விமர்சனம் செய்யாமல் இருக்க முடியாது. அப்படி ஒருவன் விமர்சனம் செய்யாமலிருந்தால் அவன் வெறும் பசப்புவாதி. அந்த விமர்சனத்தால் விமர்சனத்துக்குள்ளாகிறவர்கள் புண்படுவது இன்றுநேற்றல்ல, சாக்ரடீஸ் காலம் முதல் நிகழ்வது. கபிலர் காலம் முதல் நிகழ்வது. சாக்ரடீஸ் நஞ்சூட்டப்பட்டார். கபிலர் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார். அந்த விமர்சனத்தால் புண்படும் பாமரர்கள் தங்கள் பாமரத்தனத்தால் கண்டடைந்து பயன்படுத்தும் சொல்லாக இன்று ‘மேட்டிமைவாதம்’ எனும் சொல் ஆகியுள்ளது. அதாவது உரிமைகளில் மேட்டிமை பேசுபவர்களை இயல்பாக ஏற்கும் நமது பாமரர்கள் அறிவால் மேன்மை கொண்டிருப்பவர்களை ஏற்காமல் எகிறுகிறார்கள். இதுவே நம் சூழல். இச்சூழலில் ஓர் அறிவியக்கவாதி தன் மேல்நிலையை தானே உணர்ந்திருக்க வேண்டும். ஆம், இந்த இடத்தில் நான் ஒருபடி மேல்தான், ஆகவேதான் இதைச் சொல்கிறேன் என சொல்லும் நிமிர்வு அவனுக்குத் தேவை. அவனை மேட்டிமைவாதி என பாமரர் சொல்லும்போது அவன் கூசவேண்டியதில்லை. அது பாமரரின் புரியாமையின் விளைவான எரிச்சல் மட்டுமே என்று அவன் புரிந்துகொள்ளவேண்டும். அந்த நிமிர்வும் நம்பிக்கையும் இல்லை என்றால் அவன் காலப்போக்கில் சிந்தனையை இழப்பான். அவனுடைய விமர்சனம் மழுங்கும். அவன் இலக்கியத்தில் செயலற்றவனாக ஆவான். இன்னொன்றுமுண்டு, வாசகர்களாக அறிமுகமாகும் ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒருவகையில் நான் இதைச் சொல்கிறேன். ஓர் அறிவியக்கவாதி நினைத்தால்கூட பாமரர்களுடன் இணைந்து அவர்களில் ஒருவராக இருக்க முடியாது. நடிக்கலாம், நடிப்பு சலிப்பையே ஊட்டும். இங்கே ஒரு குடிகாரர் குடியின் பொருட்டு நாணமடைவதில்லை. ஒரு தீனிப்பைத்தியம் அதன்பொருட்டு கூச்சமடைவதில்லை. ஆனால் ஒரு புத்தகம் படிப்பவன் அதன்பொருட்டு கூச்சமடைந்து புத்தகத்தை ஒளித்து வைத்துக் கொள்ளவேண்டியுள்ளது என்றால் அது வெறுமே இந்த சூழலின் தேக்கநிலை மட்டுமல்ல. அந்த இலக்கிய வாசகனின் ஆளுமைக் குறைபாடும்கூடத்தான் . அவனுக்கு தன் செயல்பற்றி தனக்கே ஒன்றும் தெரியவில்லை. தன்மேலேயே நம்பிக்கை இல்லை. அறிவியக்கம் மீது நம்பிக்கை இல்லை. அப்படியென்றால் எளியோரை இகழவேண்டுமா, அன்னியப்படுத்திக்கொள்ள வேண்டுமா? இதை மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள். பாமரர்களின் பாமரத்தனத்தைச் சுட்டிக்காட்டுவது என்பது அவர்களை மக்கள் என்றவகையில் இகழ்வதல்ல, அங்கே அந்த பாமரத்தனம்தான் இகழப்படுகிறது. பாமரத்தனம் சுட்டிக்காட்டப்படுவது என்பது மேட்டிமைத்தனத்தால் அல்ல, அதை வென்று அச்சமூகம் மேலே செல்லவேண்டும் என்னும் அறிவார்ந்த விழைவால்தான். அறியாமையையே அறிஞன் எதிர்கொள்ளவேண்டும். அறியாமையைக் கொண்டாடும் அறிஞன் இருக்கவியலாது. ஆகவே இடித்துரைத்தலும் கடிந்துரைத்தலும் இல்லாமல் சிந்தனையாளன் செயல்படவே இயலாது. எந்தச் சிந்தனையாளனும் மக்களை வெறுப்பதில்லை. சமூகத்தை வெறுப்பதில்லை. மக்கள்மேலும் சமூகம் மேலும் கொண்ட ஈடுபாட்டல்தான் அது மேம்படவேண்டும் என அவன் தன் வாழ்க்கையை அதற்காகச் செலவிடுகிறான். தன்னலமே உருவான மக்கள் நடுவே அவன் அனைத்தையும் அதன் பொருட்டு இழக்கச் சித்தமாக இருக்கிறான். அவன் மக்ககளில் ஒருவனாக உணர்ந்துதான் அவர்களை அறிகிறான். மக்களில் இருந்து மேலே நின்று விமர்சிக்கிறான். எந்த நல்ல எழுத்தாளனையும் கவனியுங்கள், அவன் எளிய சாமானிய மனிதர்களையே மிகுந்த உயிர்ப்புடன் எழுதியிருப்பான். அது பேரன்பால்தான். ஆனால் அவன் அவர்களைக் கூர்ந்து கவனித்திருப்பான். அந்த கவனம் நிகழ்வது அவன் அவர்களை கொஞ்சம் விலகிநின்று பார்ப்பதனால்தான். மேட்டிமைவாதம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் உண்மையில் மேட்டிமை நோக்கு கொண்டவர்கள், ஆனால் அறிவார்ந்த பாமரர்கள், அவர்களுக்கு அறிவுசார்ந்த மேல்நிலை கொண்டவர்களைக் காண்கையில் உருவாரும் எரிச்சலையே அப்படி வெளிப்படுத்துகிறார்கள். மெய்யாகவே அச்சொல்லை பயன்படுத்துபவர்கள் இடதுசாரிகள். அவர்கள் மேட்டிமைவாதம் என்னும் சொல்லை ஓர் அரசியல்சொல்லாக கையாள்கிறார்கள். ஆனால் அவர்களிடம் தாங்கள் மக்களில் ஒருவரல்ல என்னும் தெளிவு எப்போதுமிருக்கும். மக்களுக்கு தலைமைதாங்குபவர்களாக, வழிகாட்டுபவர்களாக, மக்களின் மனசாட்சியாக மட்டுமே அவர்கள் தங்களை எண்ணியிருப்பார்கள். அந்த மேட்டிமையுணர்வால்தான் அவர்கள் போராடுகிறார்கள், தியாகம் செய்கிறார்கள். நம் சூழல் செல்வத்தின் மேட்டிமையை, அதிகாரத்தின் மேட்டிமையை இயல்பாக ஏற்றுக்கொள்வது. அதை அடைய ஒவ்வொருவரும் முட்டிமோதுவது. ஆனால் அறிவின் மேட்டிமையை அது ஏற்பதில்லை. அறிவின் மேட்டிமையை, கலையின் மேட்டிமையை அது குனிந்து நோக்குகிறது. இன்று ஒவ்வொரு அறிவுஜீவியும் கலைஞனும் அறிவின் மேட்டிமையை அந்த பாமரப்பெருஞ்சூழலுக்கு முன் ஆணித்தரமாக முன்வைத்தாக வேண்டும். https://www.jeyamohan.in/194622/
-
திருவேட்கை - ப.தெய்வீகன்
திருவேட்கை by ப.தெய்வீகன் 01 லண்டனிலுள்ள கப்பல் கட்டுமானத் துறையில் உயர் பதவி வகித்தவர் மோர்கன். அவருடைய ஒரே மகன் அல்பேர்ட் தன்னுடைய வீட்டுப் பணிப்பெண் கரோலினாவுடன் பள்ளி முடித்து திரும்பி வந்து கொண்டிருந்தான். வீதியோரச் சந்தை கடையொன்றில் சரிகை வைத்த சிறிய கைக்குட்டைகள் பல வண்ணத்தில் தொங்கின. நெரிசலான கடை தெருவில் கூடத் தொடங்கிய பலரும் பெறுமதியான கைக்குட்டைகளை ரசித்து வாங்கினார்கள். ஆசிர்வதிக்கப்பட்ட நூலால் நெய்யப்பட்டதைப் போன்று சிலர் உளம் கனிந்து ஆனந்தப் பெருக்கு அடைந்தனர். கரோலினாவின் கைகளைப் பிடித்தபடி, கைக்குட்டைகளையும் அங்கே கூடியிருந்தவர்களையும் வியந்து பார்த்துக் கொண்டிருந்தான் அல்பேர்ட். வீட்டில் தகப்பனும் தாயும் வைத்திருந்த கைக்குட்டைகளை, அல்பேர்ட் ஒருபோதும் தொட்டறிந்ததில்லை. தந்தை மோர்கனின் கைக்குட்டையை எடுத்துப் பார்ப்பதற்கே அல்பேர்ட்டுக்குத் துணிவிருக்கவில்லை. ஒருநாளிரவு குளிர் மிகுந்திருந்தது. தணலடுப்பில் குளிர்காய்ந்தபடி புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்த தாயிடம் அல்பேர்ட் கேட்டான். “அம்மா எனக்குமொரு கைக்குட்டை வேண்டும்” “என் வைரமே! கைக்குட்டையானது உனது பெருமைகளில் ஒன்று. நீ அடைய விரும்பும் உன்னதங்களில் முதன்மையானது. அதனை அணிந்து கொள்ள ஒரு மொழியிருக்கிறது. அது உன் வசப்படும் நாள் வரைக்கும் காத்திரு. இதன் மகத்துவம் இப்போதுனக்குப் புரியாது. அப்பாவும் நானும் அழகான கைக்குட்டையொன்றை உனக்குப் பரிசளிப்போம். அது வரை காத்திரு” என்றாள். ஆனால், இன்று கரோலினாவுடன் சந்தையில் நின்று கொண்டிருந்த அல்பேர்ட்டிற்கு வண்ணமான கைக்குட்டைகளையும், அதனை வாங்கி களிப்புறும் மக்கள் திரளையும் கண்டு மூச்சு வேகமானது. “என்னால் பெற இயலாத ஒன்றா இது?” என்ற கேள்வி எழுந்தது அவனுக்கு. அவனுக்குள் ஒரு தீ மழை இறங்கிற்று. தன்னுடைய சிறகுகளை விரித்துத் தாழப்ப றந்திறங்கும் கழுகின் மூர்க்கம் அவனுக்குள் அலகு தீட்டியது. வட்டத் தொப்பியணிந்து கைக்குட்டையை வைத்துப் பார்த்துக் கொண்டிருந்த வயோதிகனை இலக்கு வைத்தான். அவருடைய கையிலிருந்த கைக்குட்டையைப் பறித்துக் கொண்டு உயரப் பறக்கும் வேகத்தோடு ஓடி மறைந்தான். தன் குஞ்சைப் பறிகொடுத்த திகைப்போடு கழுகை விரட்டுபவளைப் போலவே கரோலினா, அல்பேர்ட்டை துரத்தினாள். “அல்பேர்ட் அல்பேர்ட்… ஓடாதே நில்லு” வீதியின் குறுக்காய் பாய்ந்து வந்த குதிரை வண்டியில் மோதி இடறி விழுந்தான் அல்பேர்ட். கரோலினா ஓடிச் சென்று அவனைத் தாங்கிப் பிடித்தாள். இருவரின் மூச்சிரைப்பும் வீதியில் கூடி நின்றவர்களை நோக்கி குற்றத்தால் அதிகரித்தது. அல்பேர்ட் தாழ்த்திய தனது முகத்தை நிமிர்த்தாமல் பூமியையே பார்த்தான். அதிவேகமாக வந்த கைக்குட்டை கடைக்காரன் கரோலினாவை முதுகில் உதைத்து விழுத்தினான். அல்பேர்ட் விசுக்கென ஓடித் தப்பித்தான். கரோலினாவும் கைக்குட்டையும் வீதியில் பேசு பொருளாகின. இரண்டு போலீஸார் கூட்டத்தை விலத்திக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள். இரண்டு நாட்களிலேயே வோர்விக் நீதிமன்றத்தில் கைக்குட்டை திருடிய குற்றவாளியென கரோலினாவுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது. சர்வ வல்லமைகளாலும் தனது மகனைக் காப்பாற்றிய மோர்கன் குடும்பம் வோர்விக் நகரைவிட்டு வெளியேறினார்கள். குற்றத்தின் வேதனையில் நெளிந்தபடி அல்பேர்ட் தாயிடம் சொன்னான். “அம்மா, கைக்குட்டையைத் திருடியது நான்தான். இவர்கள் ஏன் கரோலினாவை தண்டிக்கிறார்கள்?” சுவாசத்தில் வெக்கையும் அவமானமும் இருந்தது. பிளவுண்ட தன்னுடைய சொற்களை நடுங்காமல் தொகுத்து, ஒரு சூரியோதம் போல புன்னகையோடு அல்பேர்ட்டின் தாய் சொன்னாள். “அவர்கள் ஏழைகள். தண்டிக்கப்படுவதற்காகவே பூமிக்கு வருகிறார்கள். நீ அவர்களைப் பற்றி கவலை கொள்ளாதே” அல்பேர்ட் தனது கண்களைத் தடாலென மூடிக் கொண்டு “கரோலினா என்னை மன்னித்துக் கொள்” என்றான். லண்டன் நீதிமன்றத்தில் ஐந்து வருடங்களுக்கு அதிகமாகச் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் தனது காலனித்து நாடான ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்கு முடிக்குரிய பிரித்தானிய அரசு தீர்மானித்தது. கரோலினாவும் அவளது ஒரே மகனுமான டேவிட்டும் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தார்கள். அழுகையை உண்டாக்கும் திகிலோடு காற்று மூச்சு வாங்கி பறந்து போனது. ஆயிரத்து நாநூற்றி எழுபத்து ஆறாம் ஆண்டு மார்ச் மாதம் இருபத்தாறாம் திகதி ஞாயிற்றுக்கிழமை மழையும் காற்றும் மிரட்டியது. ஆனாலும் குற்றவாளிகளைக் கப்பலில் அனுப்பும் முடிவில் பிரித்தானியா தாமதிக்கவில்லை. கடலில் விழுந்து அழுகினாலும் கவலையில்லையென அதிகாரிகள் அறிவித்தனர். கைக்குட்டை திருடிய குற்றத்தில் தண்டனை வழங்கப்பட்ட நூறுபேர் உட்பட நூற்று நாற்பது குற்றவாளிகளுடன் “பிறின்ஸ் ஒவ் ஹம்ஷயர்” கப்பல் புறப்பட்டது. கரோலினா டேவிட்டை அணைத்து வைத்தபடி அமர்ந்திருந்தாள். விரிந்த கடலில் விழும் மானுடர் கண்ணீர் தனித்த கழிவு. 02 ஆஸ்திரேலியாவின் வன் டீமன் தீவுக் கரையைக் கப்பல் வந்தடைந்தது. கைதிகள் இறக்கப்பட்டார்கள். அந்நியத்தின் காற்று முகம் மோத கரோலினா மகனைத் தூக்கி வைத்திருந்தாள். குற்றமற்றவர்கள் தண்டிக்கப்படும் அநீதியின் துறைமுகமென காணும் வெளிமுழுதும் நீண்டிருந்தது. கரோலினாவின் கண்ணீர் கனத்து விழுந்த கப்பல் அலைகளில் நிதானமற்று ஆடியது. நீதியின் உப்பு பூமியில் மிஞ்சுமென்று அவளால் நம்ப முடியாமலிருந்தது. ஈரக்காடுகள் சூழ்ந்த மலையுச்சியில் உறைந்து கிடந்த சிறை. நூற்றுக்கணக்கான பெண் சிறைவாசிகளோடு அடைக்கப்பட்டாள். குழந்தைகளைப் பராமரிப்பதற்குப் பிரத்தியேக இடம். சுண்ணாம்பு சுவர்களாலான நீண்ட மண்டபத்தில் ஆடைகள் தயாரிக்கும் முழு நேர வேலை. ஏழு வருட தண்டனையை ஒவ்வொரு நாளாக எண்ணத் தொடங்கினாள் கரோலினா. பணியிடத்தில் அழுது அரற்றுபவர்களின் மேனியைச் சிறையதிகாரிகளின் கசையடிகள் ரத்தம் பார்த்தன. சிலர் மாதக் கணக்கில் இருட்டறையில் வீசப்பட்டார்கள். நீண்ட வெள்ளை துணிகளைத் தொட்டிகளில் முக்கியெடுத்து, சாயம் பூசுகின்ற வேலையைப் பார்த்து வந்தாள் கரோலினா. இழந்த வாழ்வின் வண்ணங்கள் எல்லாமும் கரைந்து போனதெனும் துயர் நுரைக்க கதறி அழுவாள். லண்டனில் கைக்குட்டை கடைக்காரன் தரையில் அழுத்தி விளாசிய அவமானச் சீழ் கொதித்து வலித்தது. தண்ணீர் கொண்டு வந்த வாகனத்துக்குள் பதுங்கி சிறையிலிருந்து தப்பியோட முற்பட்ட பெண் கைதிகள் எல்லோர் முன்னிலையிலும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். டேவிட்டை அணைத்த கரோலினாவின் கைகள் அச்சத்தில் நடுங்கின. நெஞ்சு அதிர்ந்தது. குற்றமே செய்யாமல், தண்டனைக்குள் தலை கவிழ்த்துக் கிடக்கின்ற பாரம். தன் குழந்தையை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற தாய்மையின் தவிப்பு ஓலமாய் அவளுக்குள் எரிந்தது. ஐந்து வருட சிறைத்தண்டனை பூர்த்தியானவர்களில் நன்நடத்தையின் அடிப்படையில் சிலர் விடுதலை செய்யப்பட்டனர். ஆஸ்திரேலியாவில் அவர்கள் விரும்பிய தொழிலைச் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. கரோலினாவும் டேவிட்டும் விடுதலையாகியும் கொஞ்ச நேரம் சிறையின் முன்பாக அமர்ந்திருந்தனர். அவள் டேவிட்டின் மடியில் தலை வைத்து, வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கண்ணீர் பெருக்கில் அவனது கால்களை நனைத்தாள். “அம்மா, நாம் இப்போது குற்றமற்றவர்களா?” “டேவிட், எப்போதுமே குற்றமற்றவர்கள் நாம். ஆனாலும் எப்போதும் தண்டிக்கப்படுவோம்” என்றாள். “ஏனம்மா?” “பூமியில் நாதியற்றவர்களை இப்படித்தான் பாலைப் புழுதி மூடும்” என்றாள். டேவிட் கரோலினாவை முத்தமிட்டான். “பூமி நமக்கெனப் படைத்த குடிசையொன்றும் குற்றமற்ற சூரியனும் இங்கு இருக்கும். எழுந்து செல்வோம்” என்றான். 03 லீட் பகுதியில் குடியேறினார்கள். அருகிலிருந்த கிராமத்துப் பாடசாலைக்கு டேவிட்டை அனுப்பினாள். அங்கேயே ஒரு சிற்றுண்டியகத்தை வைத்துக் கொண்டாள். எல்லா விதமான பலகாரங்களையும் விற்று வருவாயை ஈட்டினாள். ஒரு நாள் அதிகாலையில் சமையல் கட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கரோலினா மயக்கமாகி சரிந்தாள். பாத்திரங்களின் சத்தம் கேட்டு உறக்கம் விழித்த டேவிட் தாயின் மூச்சற்ற உடலைக் கட்டியணைத்தான். அவளது கால்களைத் தொட்டு அம்மாவென்று கதறினான். பூமி நன்றாக விடியும் வரை தாயின் கைகளைப் பற்றி வெறித்துக் கொண்டிருந்தான். குற்றமற்ற சூரியன் எழுந்து குடிலினுள்ளே ஒளி புகுந்தது. தாயின் பெருந்துயர் அவனுள் தகித்துக் குழம்பென உருப்பெருத்தது. நீதியால் வஞ்சிக்கப்பட்ட இனிமையான வாழ்வை இனி எவராலும் தர முடியாதென உணர்ந்தான். திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்ட தனது தாயின் அழிவிற்கு அவன் பதில் சொல்ல விரும்பினான். படிப்பை நிறுத்தினான். சிற்றுண்டியகத்தில் முழு கவனத்தையும் செலுத்தினான். முன்பிலும் பார்க்க பலர் உணவருந்த வந்தார்கள். தன்னிடம் ரொட்டியும் தயிர்க்கட்டியும் வாங்கும் அனைவருக்கும் இலவசமாக ஒரு கைக்குட்டையைக் கொடுக்கத் தொடங்கினான் டேவிட். தாயின் வாழ்விலிருந்து உதிர்ந்த வண்ணங்களை, ஒவ்வொரு கைக்குட்டைகளிலும் கோர்த்தெடுத்தான். இரவில் பல மணி நேரம் விழித்திருந்து கைக்குட்டைகளை உருவாக்கினான். அதன் பிறகு, காலையில் ரொட்டி செய்ய வேண்டிய மாவைப் பிசைந்து வைத்துவிட்டு, படுக்கைக்குப் போனான். டேவிட்டின் ரொட்டியைவிட, லீட் பகுதியெங்கும் அவனது கைக்குட்டையே பிரபலமானது. இலவச கைக்குட்டை பற்றிக் கேட்டவர்களிடம் தனது தாய்க்கு நேர்ந்தவற்றைச் சொன்னான். எந்தக் குற்றமுமற்ற அப்பாவிப் பெண்ணைப் பிரித்தானிய நீதிமன்றம் எவ்வாறு கடூழியச் சிறைக்குத் தள்ளியதென்ற சரித்திரம் லீட் பிரதேசத்தில் அனைவரிடமும் பரவியது. பாடசாலையிலுள்ளவர்கள் டேவிட்டின் தாய்க்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக வருத்தம் தெரிவித்தார்கள். நீண்ட இரவுகளாய் தனித்திருந்து துயரத்தின் துணியால் அவன் கைக்குட்டைகளைச் செய்தான். “ உன்னுடைய அம்மாவின் பொருட்டு நீ கைக்குட்டைகளை வழங்கியது போதும்” என்றனர். “நான் கைக்குட்டையை உங்களிடம் தருவதாக நீங்கள் நம்புகிறீர்கள். ஆனால் நான் அளிப்பது, நீதியின் கறையால் அழிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கருப்பையை, அவளது மேன்மையைக் கருக்கிய ரத்தம் உலராத கொடுமையின் நான்கு மூலை கொண்ட நினைவுச் சின்னத்தை” டேவிட் சொன்னான். 04 இரண்டாயிரத்து இருபத்து மூன்றாம் ஆண்டு இயேசு பாலன் பிறந்த அன்றைக்குத் தேவாலயம் ஒன்றின் முன்பாக டேவிட்டின் சந்ததிப் பேத்தியான மிஷேல் கைக்குட்டையை எல்லோருக்கும் வழங்கினாள். அவளுக்கும் எனக்குமிடையே காதல் உண்டானமைக்குப் பெரிய காரணங்கள் எதுவுமில்லை. அவளுடைய மூதாதையர்களைப் போல நானும் ஆஸ்திரேலியாவுக்குக் கடல் வழியாக வந்தவன். சொந்த மண்ணில் யுத்தத்தினால் கசக்கி வீசப்பட்ட கைக்குட்டைகளைப் போல குழந்தைகளும், பெண்களும் கொல்லப்பட்டார்கள். கரோலினாவைத் திருடியென வீதியில் அறைந்ததைப் போல, எங்களைத் தமிழர்கள் என்று கொன்று குவித்த தீவிலிருந்து வந்தடைந்தேன். மிஷேலும் நானும் முதன் முறையாகக் கலவியில் முயங்கி மீந்திருந்தபோது, அவள் சொன்னாள். “நானும் நீயும் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ளும்போது பூமிக்கு நீதி திரும்பிவிடும்” “அப்படியான எந்த அசட்டு நம்பிக்கையும் எனக்கில்லை மிஷேல். பூமிக்கும் நீதிக்குமிடையே பெரும்பாழ் தோன்றிவிட்டது” என்றேன். “தளராதே, இந்தப் பூமிக்கு எங்கள் கைக்குட்டை நீதியை அழைத்து வரும் திலீபா. நான் கைக்குட்டையைக் கையளிப்பது போல, எனக்கு நீ குழந்தையை அளிக்க வேண்டும்” “மிஷேல். நீ என்ன சொல்ல வருகிறாய்” “நீ ஆயுதங்களாலும், கொடூர வஞ்சகங்களாலும் அழித்தொழிக்கப்பட்ட இனத்தின் மிச்சம். கொல்லப்பட்ட குழந்தைகள். நாங்கள் கையளிக்கும் கைக்குட்டைகள் போல. இந்தப் பிரபஞ்சம் முழுதும் புலம்பெயரும் பறவைகள் கிளைகளில் அமர்ந்து பறப்பதைப் போல, ஆசுவாசம் கொள்ள எம்மிடமிருப்பது நினைவுகள் மட்டும் தான்” “எமக்குப் பிறக்கப் போகும் குழந்தை எப்படி நினைவாக இருக்கும்” “இருக்கும். நினைவு என்பது இறந்த காலத்தில் உறைந்தது மட்டுமல்ல. நிகழ்வதும் தான். நாம் வழங்கும் கைக்குட்டை நினைவா? நிகழ்வா? நீயே சொல்” அவளை இறுக அணைத்து முத்தமிட்டுச் சொன்னேன். “பூமிக்கு நீதி திரும்பிவிடும் மிஷேல். உன்னுடைய முப்பாட்டன் டேவிட் பிறந்ததும், அவனை நல்லூர் முருகன் கோவிலுக்கு அழைத்துச் செல்வோம்” “ஆனாலொன்று திலீபா. அவனை நாம் கடல் வழியாக அழைத்துச் செல்ல வேண்டும். சமுத்திரம் முழுதும் கைக்குட்டைகளை நிறைக்க வேண்டும்” என்றாள். “இங்கிருந்து போவதற்குச் சாத்தியமில்லை. அங்கிருந்து வேண்டுமானால் கடல் வழியாக வந்துவிடலாம்” “அது எப்படி” “அகதிகள் வருவார்கள் அல்லவா” கடல் முழுதும் அகதிகள் படகுகளில் கையசைத்து ஆஸ்திரேயாவின் கடற்கரையில் கரையொதுங்கினார்கள். மிஷேல் சொன்னாள் “ அவன் வந்திறங்கியிருப்பான். வா சென்று பார்க்கலாம்” “ஆர்?” “எங்களுடைய பிள்ளை” என்று சொல்லி கட்டி அணைத்தாள். எனக்குள் ஒரு கடல் அந்தியொளியில் அலையற்று அசைந்தது. https://vallinam.com.my/version2/?p=9442
-
மேட்டிமைவாதமா? - ஜெயமோகன்
மேட்டிமைவாதமா? jeyamohanDecember 26, 2023 அன்புள்ள ஜெ உங்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம் அடிக்கடி சமூகவலைத்தளங்களில் பயன்படுத்தப்படும் சொல் ’மேட்டிமைவாதம்’ என்பது. அதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். உண்மையில் என்னைப்போன்ற சாமானியர்களுக்கே இந்தப்பிரச்சினை உள்ளது. சமூகத்தையோ அல்லது சுற்றியிருக்கும் நண்பர்களையோ எதாவது குறைசொன்னால் உடனே மேட்டிமைவாதம் என்கிறார்கள். வரும் ஜனவரி 1 அன்று மெரினாவில் குடித்துவிட்டு பைக் ஓட்டி கூச்சல்போட திட்டம்போட்டு பட்ஜெட் போடுகிறார்கள். அது ஒரு வகை கேனத்தனம் என்று சொன்னால் உடனே மேட்டிமைவாதம் என்று சொல்லிவிடுகிறார்கள். இதைச் சொல்பவர்கள் ஒன்றரை லட்சம் ரூ கொடுத்து ஐஃபோன் வாங்குபவர்கள். முப்பதாயிரம் ரூபாய்க்கு ஷூ வாங்குபவர்கள். ஆனால் ஒரு புத்தகத்தை கையில் வைத்திருந்தால் மேட்டிமைவாதம் என்கிறார்கள். ஆலோசனை சொல்ல வருகிறார்கள். இவர்களைப்பற்றி உங்களுக்குச் சலிப்பாக இல்லையா? பிரதீப்ராஜ் அன்புள்ள பிரதீப், அண்மையில் பலபேர் இதைச்சுட்டி ‘ஆலோசனைகள்’ ‘வழிகாட்டுதல்கள்’ எழுதியிருந்தனர். இங்கே சமூகவலைத்தளங்களில் பேசப்படும் ஒவ்வொன்றும் நான் அவர்களைப் பற்றி என்ன சொல்கிறேனோ அதற்கான நேரடியான சான்றுகள். இலக்கியம், கலை என்பது குறித்த எந்த அறிதலுமற்ற ஒரு சூழல் இங்கே இருப்பதைத்தான் நான் சுட்டிக்காட்டுகிறேன். அவற்றின் இடம் பற்றி, இலக்கியவாதிகள் அல்லது கலைஞர்களின் வாழ்க்கை பற்றி அடிப்படைப் புரிதல்கூட இல்லாத பாமரத்தனம். பாமரர்களாக இருக்கிறோம் என்பதுகூட தெரியாது, பாமரராக இருப்பதில் பெருமையும் உள்ளது. அந்த பாமரத்தனத்தையே எதிர்வினைகளாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள். நான் எதையும் நிரூபிக்கவே வேண்டியதில்லை. எழுதினால்போதும், நம் பொதுப்புத்தியினரின் எதிர்வினைகளே நான் சொன்னவற்றுக்கான நிரூபணங்களாக எழுந்து வரும். அண்மையில் சாகித்ய அக்காதமி விருது குறித்து ஒரு பேச்சு உருவானது. அதில் மிகப்பெரும்பாலானவர்கள் எழுதியிருப்பதைக் கவனியுங்கள். ‘வெறும் ரெண்டு லட்சம் ரூபாய். அதுக்கு இவ்ளவு சண்டை’ இதுதான் பாமரத்தனம் என்பது. இவர்களுக்கு நோபல் பரிசுகூட அதிலுள்ள தொகை மட்டுமே. இவர்களுக்கு இவ்வுலகில் தெரிந்த ஒரே ‘மதிப்பு’ என்பது பணம், அதன் விளைவான அதிகாரம் மட்டுமே. இப்படி பேசுபவர்களில் பலர் நம் சூழலில் அளிக்கப்படும் ‘உயர்’கல்வி கற்றவர்கள். பலர் பொறுப்பான பணிகளில் இருப்பவர்கள். இலக்கியம் வாசிக்கும் நாம் இவர்களைத்தான் எதிர்கொள்கிறோம். இந்தப் புரிதல் நம்மிடம் இருக்கவேண்டும். (சுந்தர ராமசாமி எழுதினார். மேரி க்யூரி நோபல் பரிசு பெற்றபோது ‘என்ன பிரைஸ் வாங்கினா என்ன, அறுத்துக்கட்டுற சாதிதானே?’ என்று ஓர் ஐயர் சொன்னாராம். அந்தக்கால பொதுப்புத்தி. இப்போது பேசும் விதம் மட்டுமே மாறியிருக்கிறது. மனநிலை அதேதான்) இச்சூழலை வேறு எப்படி எதிர்கொள்ளமுடியும்? அவர்களுக்கு கலையிலக்கியம், சிந்தனை, தத்துவம் எதுவும் எளியமுறையில்கூட அறிமுகமில்லை. கோடிக்கணக்கில் செலவிடப்பட்டு இங்கே பிரச்சாரம் செய்யப்படும் மூன்று விஷயங்கள் மட்டுமே அவர்கள் அறிந்தவை. கட்சியரசியல், நுகர்வுப்பொருட்கள் , கேளிக்கை. அவை அவர்கள் அறிந்துகொண்டவை அல்ல, அவர்களின் மூளைக்குள் திணிக்கப்பட்டவை. வேறு எதையும் அறியும் ஆர்வமோ, அறிவுத்திறனோ இல்லை. அதேசமயம் அறியாமை அளிக்கும் அபாரமான தன்னம்பிக்கை உள்ளது. ஒரு பத்தி எழுதவோ ஒரு பக்கம் படிக்கவோ தெரியாதவர்கள் எழுத்தாளர்களுக்கு ஆலோசனை சொல்வதை, வழிகாட்டுவதை ஒவ்வொரு நாளும் பார்க்கிறோம். அந்த வெட்கமற்ற கீழ்மையை சந்திப்பது எப்படி என்பது கலையிலக்கியங்களில், அறிவியக்கத்தில் ஈடுபடுபவர்களுக்கு மிகப்பெரிய சவால். இதை என்னிடம் சொல்லாதவர்களே இல்லை. அண்மையில் ஒருவர், இசைத்துறையில் வளர்ந்து வருபவர், சொல்லிச்சொல்லி வருந்தினார். அவருடைய கனவு, முயற்சி எதுவுமே நம் சூழலுக்கு ஒரு பொருட்டல்ல. இசையென்றால் என்னவென்றே தெரியாதவர்கள் சொல்லும் ‘வாழ்க்கை ஆலோசனை’கள்தான் தன் மிகப்பெரிய பிரச்சினை என்றார். ‘யாரைப்பாத்தாலும் பயமா இருக்கு சார்’ என்றார். ’நான் ஜனங்களை ஃபேஸ் பண்றதே இல்லை…பொழைக்கிற வழியப்பாருன்னு ஆரம்பிச்சிருவாங்க’ நான் அவரிடம் ’ஜெயகாந்தன் சொன்னதுதான் ஒரே வழி’ என்றேன். ‘அற்பத்தனங்களை அகங்காரத்தால் எதிர்கொள்வது’ ஓவியர்கள், கலைஞர்கள் அனைவரும் இங்கே சந்திக்கும் சிக்கல் இது. இதே சிக்கல் இங்கே சமூகப்பணியாளர்களுக்கும் உண்டு. அவர்களுக்கு பிரச்சினையே இரண்டுவகை ஆலோசனைகள்தான். ஒன்று, சமூகப்பணியை எல்லாம் நிறுத்திவிட்டு எப்படி நல்ல உலகியல்வாழ்க்கையை வாழ்வது என்னும் ஆலோசனை. இரண்டு, சமூகப்பணி என்றால் என்னவென்றே தெரியாத கும்பல்கள் சமூகப்பணியை எப்படிச் செய்வது என்று அளிக்கும் ஆலோசனைகள். ஆச்சரியமென்னவென்றால், இங்கே ஏதேனும் துறையில் ஆய்வுசெய்பவர்களுக்கேகூட இன்று இப்பிரச்சினை உள்ளது. அறிவியலிலோ பிற துறைகளொலோ முனைவர் பட்டம் பெற முப்பது வயது கடந்துவிடும். ‘தம்பி என்ன செய்றீங்க? ஏதாவது வேலைக்கு போலாம்ல? இந்தக்காலத்திலே ரிசர்ச்சுக்கெல்லாம் என்ன மதிப்பு? நம்ம பையன் இப்பவே ஒரு லெச்சம் சம்பாரிக்கிறான்’ என்ற வார்த்தைதான் நாலாபக்கமிருந்தும் வரும். அந்த ’ஒரு லட்சம் வாங்கும் வெற்றிபெற்ற இளைஞன்’ ஆப்பிள் கணிப்பொறியை நோண்டியபடி ‘லைஃப்ல ஜாலியா இருக்கணும் புரோ’ என்பான். ஆய்வுமாணவன் கூனிக்குறுகி புன்னகைக்கவேண்டும். சமூகப்பணியாளர் இந்த ஆலோசனைக் கும்பலை ஓர் எளிய பணிவுப்பாவனையில் கடந்து செல்வார். கூடவே மனதுக்குள் சிரித்துக் கொள்வார். “ஆமாங்ணா..அப்டியே செய்றேங்ணா’ என அவர்கள் பவ்யமாகச் சொல்வதைக் கண்டு நானும் கூட நின்றே சிரித்திருக்கிறேன். ஆய்வு செய்பவர்கூட இவ்வகையில் இவர்களை கடந்து செல்லலாம். அறிவியக்கவாதி கடந்து செல்லமுடியாது. ஏனென்றால் அவன் உரையாடியே ஆகவேண்டியவன். அவன் என்ன நிலைபாடு எடுக்கவேண்டும்? அதைத்தான் நான் சொல்கிறேன், ’நிமிர்வு’. நிமிர்வினூடாக அன்றி இந்த கும்பலைச் சமாளிக்க முடியாது. நிமிர்வு சற்றுக் குறைந்தால்கூட உங்கள் தன்னம்பிக்கையை அழித்து , உங்களை மீளாச்சோர்வில் தள்ளி, செயலற்றவர்கள் ஆக்கிவிடுவார்கள். அல்லது உங்களை எரிச்சலூட்டி எரிச்சலூட்டி எதிர்மறை மனநிலை கொண்டவர்கள் ஆக்கிவிடுவார்கள். இரண்டுமே அறிவியக்கச் செயல்பாடுகளுக்கு எதிரான உளநிலைகள். இந்த அற்பர்களின் பாவனைகள் ஏராளமானவை. ‘சமூகத்துக்கு பயனுள்ள மக்கள் பிரச்சினைகளை எழுதணும் சார்’ என்பது தொடக்கம். (சமூகத்திற்கு மிகமிகப் பயனுள்ளவராக வாழ்ந்துகொண்டிருப்பவர் அவர் என்பது அவருடைய தோரணை). அந்தப்பேச்சு அப்படியே நீண்டால் ‘எழுதி என்ன ஆகப்போகுது? யார் சார் இப்பலாம் படிக்கிறாங்க? ஒரு நாலுபேருக்கு நல்லது செய்தா அதனாலே பிரயோசனம் உண்டு’ என்ற இடத்துக்கு வந்துசேரும். (அப்படி நாலுபேருக்கு அவர் என்ன செய்கிறார் என்று கேட்கக்கூடாது. அவர் செய்வது முகநூலில் அரசியல், சாதிச்சண்டை ’சவுண்டு’ விடுவதுதான்) அடுத்தது ‘எழுதுறது எல்லாம் சரிதான், நல்ல மனுசனா இருக்கணும் சார்’ (அதாவது அதைச் சொல்பவர் ஒரு அதிதூயோன்) அதன் முதிர்வு நிலை ‘யாரும் எதுவும் செஞ்சு ஒண்ணும் ஆகப்போறதில்லை. எல்லா பேரும் திருடன் சார்” . முத்தாய்ப்பு வரி “நாம நம்ம பொழைப்பப் பாப்பம்” ஆக, என்னைப்போல நீயும் வெந்ததைத் தின்று, விடியலில் அதை கழித்து, ஊடகம் ஊட்டுவதை மூளைக்குள் தேக்கி, அவற்றை பேஸ்புக்கிலும் வாட்ஸப்பிலும் ரீல்ஸிலும் அதைக் கழித்து வைத்து வாழ் என்பது சாராம்சம். இந்தக் கும்பலில் இருந்து முடிந்தவரை விலகி, தனித்து நிலைகொண்டாலொழிய இங்கே எந்தத்துறையிலும் எதையும் செய்துவிடமுடியாது. அதற்கான வழி என்பது தன்னைப் பற்றிய பெருமிதம். தன் செயல்பற்றிய நம்பிக்கை. தான் காலத்தின் குழந்தை என்னும் புரிதல். சமூகப்பெருக்கில் ஒருவனல்ல, அதை நடத்திச்செல்லும் சிலரில் ஒருவன் என்னும் தற்தெளிவு. அதையே நிமிர்வு என்று சொல்கிறேன். அதை ஏன் மேட்டிமைவாதம் என்கிறார்கள்? ஏனென்றால் அது இந்தப் பாமரர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. அதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அது அவர்களை விமர்சனமும் செய்கிறது. ஆகவே வேறு வழியே இல்லை. பாமரன் எதையேனும் சொல்லி அறிவியக்கத்தை, கலையை நிராகரித்தே ஆகவேண்டும். மூர்க்கமான நிராகரிப்பு, அல்லது கேலிதான் அவன் அறிந்த வழிகள். அதற்கு அவன் கண்டடையும் சில நிரந்தரமான வரிகள் உண்டு. பழைய ஆட்கள் ‘இதனால் பணலாபம் உண்டா’ என்பார்கள். அதே மனநிலை கொண்டவர்கள் சமூகவலைத்தளங்களில் ‘இதனாலே சமூகத்துக்கு என்ன பயன்?’ என்பார்கள். இரண்டும் ஒரே கேள்விதான். எந்த பாமரனுக்கும் ஒன்று உள்ளூரத் தெரியும், அவன் வாழ்க்கை சாதாரணமானது, சாதாரணமான அந்த வட்டத்தை விட்டு வெளியே செல்ல அவனுக்கு அறிவாற்றலோ துணிவோ இல்லை. ஆனால் அந்த பாமர வாழ்க்கை அவனுக்குச் சலிப்பையும் அளிக்கும். அவனுக்குத் தெரியும், அறிவியக்கத்திலோ கலையிலக்கியத்திலோ வாழ்பவர்களின் வாழ்க்கை பெரியது என்று. ஆகவேதான் அறிவியக்கவாதி அல்லது கலைஞன் பாமரனை தாழ்வுணர்ச்சி அடையச்செய்கிறான். அந்த தாழ்வுணர்ச்சியே எரிச்சலை மூட்டுகிறது பாமரனுக்கு. அறிவியக்கவாதி அல்லது கலைஞன் ஒன்றுமே செய்யவேண்டாம், சும்மா இருந்தாலே பாமரனை அவன் கூச்சம் கொள்ளச் செய்வான். ஆகவே பாமரனால் இகழப்படுவான். அதை அறிவியக்கவாதி அல்லது கலைஞன் எதிர்கொண்டே ஆகவேண்டும். நான் சொல்வது எழுத்தாளனையோ, கலைஞனையோ, ஆய்வாளனையோ, சமூகப்பணியாளனையோ மட்டும் அல்ல. நம் சூழலில் சாதாரணமாகப் புத்தகம் படிப்பவன், ஒரு நல்ல சினிமாவை தேடிப்பார்ப்பவன் கூட இதைச் சந்தித்தே ஆகவேண்டும். அதற்கான வழியே நிமிர்வு. ஆக, நான் மிகமிக திட்டவட்டமாகச் சொல்லிக்கொள்கிறேன். நான் முன்வைப்பது ஒருவகை மேட்டிமைவாதத்தையே. இன்று நம் சூழலில் ஓர் அறிவியக்கவாதி அல்லது கலைஞன் நிலைகொள்ள அந்த மேட்டிமையுணர்வு இன்றியமையாதது. இன்று தமிழில் எத்தனை வசைகளைப் பெற்றுக்கொண்டாலும் பாமரனை அவன் பாமரன் என்று சுட்டிக்காட்டியே ஆகவேண்டும். அது ஒரு சமூகக் கடமை. அதற்குப் பதிலாக ஜனநாயகம், மனிதசமத்துவம் என்றெல்லாம் பசப்புவார்கள் அதே பாமரர். ஜனநாயகமும் மனிதசமத்துவமும் உரிமைகளில் மட்டுமே. தகுதியில் அல்ல என்று சொல்லியாகவேண்டும். ஒரு சிறுபகுதியினரேனும் தாங்கள் பாமரர்களாகவே இந்த சூழலில் வளர்க்கப்பட்டிருக்கிறோம் என உணர்ந்தால், ஏதேனும் வகையில் மெலே செல்லமுயன்றால் அதுவே நம் சாதனை. சென்ற முப்பதாண்டுகளாக நான் திரும்பத் திரும்பச் சொல்லிவருவது கலையிலக்கியமும், சிந்தனையும் , சமூகப்பணியும்தான் ஒரு சூழலில் முதன்மையான செயல்பாடுகள் என. பிற பணிகள் அனைத்துக்கும் மேலாக அவற்றுக்கு ஓர் இடம் உண்டு என. அந்த மதிப்பும், அவற்றின் மீதான நம்பிக்கையும் கொண்ட சமூகங்களே வென்று வாழும். அந்த நம்பிக்கையும் மதிப்பும் நம் சமூகத்தில் இன்றில்லை, அவை உருவாக வேண்டும் என. நூற்றுக்கணக்கான கட்டுரைகளில் அதையே எழுதியிருக்கிறேன். இங்கே ஏதேனும் ஒரு தருணம் அமைந்தால் உடனடியாக அறிவியக்கவாதியை கும்பலாகக் கூடி வசைபாடி கும்மியடித்து மகிழ எத்தனைபேர் கூடுகிறார்கள் என்று பாருங்கள். எனக்கு எதிராக அப்படி கூடுவதற்கு என் நிமிர்வும், என் கருத்துக்களும் காரணமாக இருக்கலாம் என நினைக்கிறீர்கள் என்றால்; மிகப்பணிவான, அரசியலே பேசாத, அன்பையே முன்வைக்கும் அறிவியக்கவாதிகள்கூட தருணம் கிடைத்தால் இதே கும்பலால் இதே போல கும்பல்கூடி வசைபாடப்பட்டிருப்பதை எப்படி விளக்குவீர்கள்? இங்கே வசைபாடப்பட அறிவியக்கச் செயல்பாடு ஒன்றே போதும், வேறொன்றும் தேவையில்லை. நம் சூழலில் கலைஞனிடம், அல்லது அறிவியக்கவாதியிடம் ஒருபோதும் தாழ்வும் பணிவும் அமையலாகாது எனறு நான் வலியுறுத்துகிறேன். ஏனென்றால் இங்கே மிக எளிய உலகியல்வெற்றி அமைந்தவர்கள்கூட ஒருவகை மிதப்புத் தோரணையுடன் கலைஞனையும் அறிவியக்கவாதியையும் அணுகும் மனநிலை ஓங்கியுள்ளது. பரிவுடன் பார்ப்பார்கள். தட்டிக்கொடுப்பார்கள். தமிழின் தலைசிறந்த கவிஞனிடம் ‘ஏதாவது வேலைக்குப் போகலாம்ல?’ என்று கெத்தாகக் கேட்ட கார்ப்பரேட் குமாஸ்தாவை கண்டு உண்மையிலேயே குமட்டலெடுத்திருக்கிறது எனக்கு. இவர்கள் ஓர் எழுத்தாளன் வறுமையில் இருந்தால் உள்ளூர மகிழ்வார்கள். மனதுக்குள் நல்லவேளை நானெல்லாம் வேலைக்கு வந்துவிட்டேன் என நினைத்துக்கொண்டு வெளியே அடாடா என்பார்கள். கலைஞர்களும் எழுத்தாளர்களும் உலகியலில் துன்புற்று தோல்வியுற்றால் இவர்களுக்குள் ஒரு நிறைவு உருவாகிறது. கலைஞன் இவர்களுக்கு அளிக்கும் தாழ்வுணர்ச்சியின் எரிச்சல் சற்றுக் குளிர்கிறது. அந்த கலைஞனை அவன் உலகியலில் தோல்வியடைந்து இறக்கும்போது ஆகா அடடா என்று கொண்டாடுவார்கள். அப்படியே மறந்தும் விடுவார்கள். எண்ணிப்பாருங்கள், பிரான்ஸிஸ் கிருபா சாவின்போது இங்கே என்னென்ன பேசப்பட்டது என்று. அவரை சுட்டிக்காட்டி பிறரை வசைபாடினார்கள். ஆனால் இன்று அவரை இவர்கள் எவராவது பேசுகிறார்களா? பிரான்ஸிஸ் கிருபா இன்றும் நமக்குத்தான் முக்கியம். நாம்தான் அவருடைய கலைவெற்றியையும் கலைச்சிதறல்களையும் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். இவர்களுக்கு அவர் ஓர் அடையாளம். கலைஞன் எனும் நிலை ஒரு தோல்வி என்றும், தாங்கள் வென்றவர்கள் என்றும் சொல்லிக்கொள்ள ஒரு சான்று, அவ்வளவுதான். ‘அசல் கலைஞன்யா’ என்பார்கள். அடுத்த கணமே ‘குடிச்சே அழிஞ்சான்யா’ என்பார்கள். கலைஞன் என்றால் அழியவேண்டியயவன் என தங்களுக்கே சொல்லிக்கொள்ள அவன் ஒரு முகம், அதற்கப்பால் ஒன்றுமில்லை. இந்த பாமரர்களின் மனநிலைதான் ஒரு கலைஞன் உலகியலில் கொஞ்சம் வென்றால் உடனே வசைபாடச் செய்கிறது. அவனுடைய வெற்றியையோ நிமிர்வையோ கண்டால் எரிய வைக்கிறது. ஏனென்றால் அவன் இவர்கள் தாங்கள் அடைந்துவிட்டதாக எண்ணும் ஒரே வெற்றியைக்கூட இவர்களுக்கு அளிக்காமல் இவர்களைவிட மேலே அங்கும் சென்று நின்றிருக்கிறான். அதை அவர்களால் தாள முடிவதில்லை. அவர்களுக்கு முன் கலைஞனின் வெற்றியை, அவன் வாழ்வின் தீவிரத்தை நாம் முன்வைப்பதென்பது ஓர் அறிவார்ந்த அறைகூவல். உலகியலில் நாலுகாசு சேர்த்தவனின் வெற்று மேட்டிமைத்தனம் அல்ல இது. இங்கே ஒருவர் இன்னொருவரைச் சந்தித்ததுமே தன் பொருளியல்நிலையைத்தான் தன்னடையாளமாகச் சொல்கிறார் என்பதை கவனியுங்கள். தன் பணி, தன் தொடர்புகள் இரண்டையும் சொல்வார். அவற்றை அடைந்தவர் தன்னை ‘வெற்றியடைந்தவர்’ என நினைத்துக்கொள்கிறார். அதை வெற்றி என ஒருபோதும் கலைஞன், அறிவியக்கவாதி ஒப்புக்கொள்ளக்கூடாது. அந்தப் பாமரன் அப்படி நம்ப அனுமதிக்கக்கூடாது. அவன் முன் பணிவதென்பது அவன் அப்படி நம்ப வழியமைப்பதே. அது அறிவியக்கத்துக்கும் கலைக்கும் இழைக்கப்படும் துரோகம். ஆகவே சென்ற தலைமுறை எழுத்தாளர் சிலரின் மிகைப்பணிவு, தன்னிரக்கப் பாவனை ஆகியவற்றைக் கண்டும் எனக்கு அதே குமட்டல் உண்டு. அந்த உலகியலாளர் முன் நிமிர்ந்து நின்று ’நான் கலைஞன், நான் அறிவியக்கவாதி’ என்று சொல்லி கூடவே ’நான் இச்சமூகத்தில் மிக வெற்றிகரமானவன், உங்களை விட தீவிரமானதும் அதேசமயம் வெற்றிகரமானதுமான வாழ்க்கையை வாழ்பவன்’ என்று சொல்பவனே இன்றைய சூழலுக்குத் தேவையானவன். அவன் இந்தச் சமூகத்திற்கான மிகமிக அடிப்படையான ஒரு செய்தியைச் சொல்கிறான். இன்றைய அற்பர்களின் எல்லா வசைகளையும் வாங்கிக்கொண்டு அவன் நாளைய தலைமுறைக்காக அந்தப்பணியைச் செய்தாகவேண்டும் நாம் நீண்டகாலம் பஞ்சத்தில் உழன்ற ஒரு சமூகம். சென்ற தலைமுறை வரை உணவுக்கே போராடிய சமூகம். நம்மில் பெரும்பாலானவர்கள் கீழ்நடுத்தர, அடித்தளத்தில் இருந்து சென்ற ஒரு தலைமுறைக் காலத்தில் மேலெழுந்து வந்தவர்கள். இன்று நாம் அடிப்படை வறுமையை கடந்துவிட்டோம். சாப்பாட்டைப் பற்றி பதற்றப்படும் நிலையில் நம்மில் பெரும்பாலானவர்கள் இல்லை. இனி நாம் வெல்லவேண்டியது அறிவுத்தளத்தில், கலையில். இன்று தொழில், வணிகம் ஆகியவற்றுக்கு இணையாகவே கலையிலும் அறிவுத்தளத்திலும் நாம் முன்னகர்ந்தாகவேண்டும். நம் அடுத்த தலைமுறையினர் அதில் சாதித்தாகவேண்டும். அதற்கு நாம் நம் மூதாதையரின் பல உளநிலைகளை கடந்துசென்றாகவேண்டும். நம் மூதாதையர் நம்மிடம் அடிப்படையான ஒரு வருமானத்தில் நிலைகொள்ளும்படி கற்பித்தனர். ‘செட்டில்’ ஆவதைப்பற்றியே சொல்லிக்கொண்டிருந்தனர். நிலைகொண்டுவிட்டால் நிம்மதி அடைந்தனர். பொருளியல்நிலை தவிர எதற்குமே எந்த மதிப்பும் இல்லை என்று நமக்குக் கற்பித்தனர். பொருளியல் நிலையை அடைந்ததுமே முழுநிறைவு கொள்ள பயிற்றுவித்தனர். கலை, இலக்கியம், ஆய்வு என அறிவார்ந்த வாழ்க்கை அர்த்தமற்றது என்றும் அது மனிதனை தோல்வியடையச்செய்யும் என்றும் நம்பினர். இனியேனும் நாம் அந்த மனநிலையை கடந்தேயாகவேண்டும். இல்லையேல் நம் சமூகம் வெறும் நுகர்வுக்கூட்டமாகச் சுருங்கிவிடும். வெற்றுக்களியாட்டுகளில் வீணாகி அழியும். அதன் இறுதிநிலை என்பது ‘காஸினோ’க்கள்தான். இன்றே அதன் தடையங்களைக் காண்கிறோம். நீங்கள் சொல்லும் புத்தாண்டுக்கொண்டாட்டம் எல்லாம் அதன் வெளிப்பாடுகளே. பொருளியல்செயல்பாடு முக்கியம்தான். அதுவே மைய ஓட்டம் . ஆனால் சமூகத்தின் ஒரு பகுதியினரேனும் கலை, இலக்கியம், அறிவுச்செயல்பாடுகளில் ஈடுபடவேண்டும். மொத்தச் சமூகத்திற்கும் அச்செயல்பாடுகள் மேல் மதிப்பு உருவானாலொழிய அது நிகழாது. அந்த மதிப்பை அறிவுச்செயல்பாடுகளில், கலையிலக்கியங்களில் ஈடுபட்டுள்ள நாம் இன்று உருவாக்கவேண்டும். ஆகவே கலைஞனை, அறிவியக்கவாதியை பொதுச் சமூகம் குனிந்து பார்க்கலாகாது. நம் மேல் இரக்கமும் , ஊக்குவிப்பும் காட்டலாகாது. நம்மை நிமிர்ந்து பார்க்கவேண்டும். வியக்கவேண்டும். கலைஞனும் இலக்கியவாதியும் இரவலனாக இருந்த காலம் முடிந்துவிட்டது. அவன் கொடுப்பவனாக திகழ்ந்தாகவேண்டும். அவ்வாறு இலக்கியவாதி வெளிப்படும்போது உருவாகும் பொறாமை, கசப்பு, புகைச்சல், வசைபாடல் எல்லாம் நல்லதே. அவையெல்லாம்கூட பாமரர்களின் பாராட்டுதான். அவர்களின் பரிவும் கனிவும் மட்டும் உருவாகக்கூடாது. அவ்வாறு உருவானால் அடுத்த தலைமுறையில்கூட கலையிலக்கியம் மற்றும் அறிவுச்செயல்பாடுகள் மேல் சமூகமதிப்பு உருவாகாது. நான் நன்கு அறிந்த ஒன்றுண்டு. தமிழில் மிகப்புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலர் தங்கள் இல்லத்தில் ஒரு புத்தகம்கூட வைத்துக்கொண்டதில்லை. தங்கள் குழந்தைகள் ஒரு புத்தகம்கூட வாசிக்க அனுமதித்ததில்லை. தங்கள் வாரிசுகள் முறையாகப் படித்து, ‘நல்ல வேலைக்கு’ சென்று விடவேண்டும் என்று அல்லும் பகலும் அப்படைப்பாளிகள் முயன்றனர். வாரிசுகள் அவ்வாறு வேலைக்குச் சென்றபின் அதை அப்படைப்பாளிகள் தங்கள் வெற்றியாக , வாழ்நாள் சாதனையாகச் சொல்லிக்கொண்டே இருப்பதை கண்டிருக்கிறேன். ‘நம்மைப்போல நம்ம பிள்ளை இருந்திரக்கூடாது’ என்று என்னிடம் சொன்ன பல எழுத்தாளர்களை நான் அறிவேன். அப்படியென்றால் அவர்களுக்கு உண்மையில் இலக்கியம், அறிவியக்கம் பற்றிய மதிப்புதான் என்ன? அவர்கள் சமூகத்துக்கு அளிக்கும் செய்திதான் என்ன? அவர்கள் இந்தச் சமூகத்தின் மொண்ணைத்தனத்தால் அவ்வளவு புண்பட்டார்கள் என கொள்வதா? நான் எதை நம்பினேனோ அதையே என் குடும்பத்திற்கு அளித்தேன். இலக்கியத்தை, அறிவுச்செயல்பாட்டை. அதுதான் பெருமைக்குரியது என எண்ணினேன். அதன் பொருட்டு எனக்கு வந்து குவிந்த அறிவுரைகள், குழந்தை வளர்ப்பு வழிமுறைகள் நான் எழுதிய நூல்களின் வரிகளை விட மிகுதி. ஆனால் என் வாரிசுகள் வேறெந்நிலைக்குச் சென்றாலும் ஏமாற்றமே அடைந்திருப்பேன். என் வாரிசுகளை இளமையிலேயே அதைச் சொல்லித்தான் வளர்த்தேன். இன்று அதன் பொருட்டு பெருமிதம் கொள்கிறேன். என் குடும்பமே அறிவுச்செயல்பாட்டில் ஈடுபாடுகொண்டிருப்பதை ஓர் இழிவென கேலி செய்து எழுதப்பட்ட நாலைந்து குறிப்புகள் என் கண்ணுக்குப் பட்டன. இந்த பாமரர் நடுவே நான் நிமிர்வை மட்டுமே முன்வைக்க முடியும் இல்லையா? அறிவியக்கச் செயல்பாடு, கலைச்செயல்பாடு உடனடியான வெற்றிகளை அளிப்பது அல்ல. அதற்கு நீண்டகாலத் தவம் தேவைப்படுகிறது. உறுதியான குறைந்தபட்ச வெற்றிக்கும் வாய்ப்பில்லை. அதில் எவ்வளவோ தற்செயல்கள் செயல்படுகின்றன. ஆய்வுகளுக்கும் இதுவே பொருந்தும். ஆனால் ஒரு சமூகத்தில் ஒரு சிறு பகுதியினரேனும் அவற்றுக்கு தங்கள் குழந்தைகளை துணிந்து அனுப்பவேண்டும். அவர்களுடன் நின்றிருக்கவேண்டும். சூழல் அளிக்கும் அழுத்தத்தை தாக்குப்பிடிக்க வேண்டும். படித்து வேலைக்குப்போய் சம்பாதிப்பது மட்டும் வெற்றி அல்ல என்றும் அறிவுச்செயல்பாடு மேலும் பெரிய வெற்றி என்று அவர்கள் நம்பவேண்டும். அவர்கள் பிறரிடம் அதைச் சொல்லவேண்டும். அந்த மனநிலையை இன்று நாம் உருவாக்கியாகவேண்டும். அண்மையில் மிகச்செல்வந்தரான ஓர் இளைஞரிடம் பேசினேன். அவர் ஏதாவது தொழில் செய்யவேண்டும் என குடும்பமும் சூழலும் சொல்வதாகச் சொன்னார். அவர் அறிவியக்க ஈடுபாடும், அதற்கான கூர்மையும் கொண்டவர். அவர் ஏன் சம்பாதிக்கவேண்டும் என்று நான் கேட்டேன். அவர் ஏன் தன் அகம் விழையும் அறிவுச்செயல்பாட்டில் ஈடுபடலாகாது? அவர் எவ்வளவு பெரும்பணிகளை ஆற்றமுடியும் . அவருக்கான நேரம் அவரிடமுள்ளது. அவருக்குத்தேவையான அடிப்படை முதலீடு கையிலுள்ளது. ஆனால் சம்பாதிக்காவிட்டால் சமூக மதிப்பு இருக்காது என குடும்பம் நினைப்பதாகச் சொன்னார். ’சம்பாதிப்பதை மட்டுமே மதிப்பெனக் கருதும் பாமரர்கள் எல்லா வற்கத்திலுமுண்டு. அவர்களின் மதிப்பை வைத்து என்ன செய்யப்போகிறீர்கள்?’ என்று நான் கேட்டேன். ‘தாகூர் என்ன சம்பாதித்தார்?’ என்று கேட்டபோது அவர் திகைத்து அமர்ந்திருந்தார். உலகமெங்கும் மகத்தான அறிவியக்கவாதிகள் பலர் செல்வந்தக் குடியில் பிறந்து அதையே நல்வாய்ப்பென பயன்படுத்திக்கொண்டவர்கள். நவீன ஐரோப்பாவை உருவாக்கியவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களே. பதினாறாம் நூற்றாண்டு முதல் ஐரோப்பாவில் அறிவியக்கமே முதன்மையான சமூகச்செயல்பாடு என்ற பொதுமனநிலை உருவானது. எந்த அளவு செல்வமும் பதவியும் இருந்தாலும் ஒரு நல்லநூலை எழுதாவிட்டால், ஓர் அறிவியல்கண்டுபிடிப்பில் ஈடுபடாவிட்டால் எங்கும் மதிப்பில்லை என்னும் சூழல் முந்நூறண்டுக்காலம் ஐரோப்பாவில் இருந்தது. அதுவே ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கு வழிகோலியது. இன்றைய உலகம் ஐரோப்பிய மறுமலர்ச்சியால் உருவாகி வந்த ஒன்று. மிகச்சிலருக்கேனும் தங்கள் வாரிசுகள் கலைஞர்களாகவும் அறிஞர்களாகவும் ஆய்வாளர்களாகவும் ஆவது பெருமைக்குரியதே என நம்மால் காட்டமுடிந்தால் நம் வரலாற்றுப்பணியை ஆற்றுகிறோம். கலைஞர்களை, அறிஞர்களை, ஆய்வாளர்களை மதிப்புடன் நிமிர்ந்து பார்க்கும் ஒரு சூழலை அடுத்த தலைமுறையிலேலும் நாம் உருவாக்க முடிந்தால் நாம் வென்றோம். இன்று பாமரர்கள் பொறாமையால் எரிவதுகூட அதற்கான ஒரு தொடக்கமே. ஜெ https://www.jeyamohan.in/194617/
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசாவின் எகிப்து எல்லையை கைப்பற்ற இஸ்ரேல் திட்டம்: போர் பல மாதங்களுக்கு நீடிக்கும் வாய்ப்பு ரபாவில் அடைக்கலம் பெறும் மக்களுக்கு இடமில்லை damithJanuary 1, 2024 காசாவில் தொடர்ந்து உக்கிர மோதல் நீடிக்கும் நிலையில் எகிப்துடனான காசா எல்லையை மீட்பதாக குறிப்பிட்டிருக்கும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்தப் போர் பல மாதங்கள் நீடிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் போர் உச்சத்தை தொட்டிருப்பதாக கடந்த சனிக்கிழமை (30) செய்தியாளர்களிடம் கூறிய நெதன்யாகு, எகிப்துடனான காசாவின் எல்லையை ஒட்டிச் செல்லும் இடை வலயப் பகுதி இஸ்ரேலின் கைகளில் இருக்க வேண்டும் என்றார். ‘அந்தப் பகுதி மூடப்பட வேண்டும். நாம் எதிர்பார்க்கும் இராணுவமயமற்ற நிலையை எட்டுவதற்கு அதைத் தவிர வேறு வழி இல்லை’ என்று நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் விரிவாக எதுவும் குறிப்பிடாதபோதும், இது 2005 ஆம் ஆண்டு காசாவில் இருந்து இஸ்ரேல் வாபஸ் பெற்றதை மாற்றும் ஒரு செயலாக அமைவதோடு அது காசா பகுதியை முழுமையாக கட்டுப்படுத்தும் முயற்சியாக இருக்கும். காசாவில் இஸ்ரேலிய தரைப்படை தனது தாக்குதல்களை புதிய இடங்களுக்கு விரிவுபடுத்தி வரும் நிலையில் இந்தப் போர் பல மாதங்கள் நீடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தெற்கு காசாவின் கான் யூனிஸில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருக்கும் பாடசாலை ஒன்றை இலக்கு வைத்து இஸ்ரேல் நேற்று (31) நடத்திய பீரங்கி தாக்குதல்களில் குறைந்தது 10 பேர் காயமடைந்தனர். இஸ்ரேலிய இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை கான் யூனிஸ் மற்றும் ரபா பகுதிகளின் பல இடங்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் அது தெற்கு காசாவில் அண்மைய நாட்களில் தனது படை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் மத்திய மற்றும் தெற்கு காசாவின் அல் புரைஜ், நுஸைரத், மகாசி மற்றும் கான் யூனிஸ் பகுதிகளை இலக்கு வைத்து கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியதாக அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இதில் மத்திய காசாவில் உள்ள அகதி முகாம்களில் இஸ்ரேல் சனிக்கிழமை இரவு முழுவதும் நடத்திய வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களில் 25 பேர் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது. மேலும் தெற்காக எகிப்தை ஒட்டிய எல்லை நகரான ரபாவில் பெரும் எண்ணிக்கையான மக்கள் இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து பாதுகாப்புப் பெற அடைக்கலம் பெற்றபோதும் அங்கும் பலஸ்தீன போராளிகளுடன் மோதல் நீடித்து வருகிறது. ‘இந்தப் போர் போதும்! நாம் முற்றிலும் களைப்படைந்துவிட்டோம்’ என்று கான் யூனிஸில் உள்ள தனது விட்டில் இருந்து தப்பி வந்து ரபாவில் அடைக்கலம் பெற்றிருக்கும் 49 வயது அபூ கத்தர் தெரிவித்தார். ‘இந்த குளிரான காலநிலைக்கு இடையே நாம் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தொடர்ச்சியாக இடம்பெயர்ந்து வருகிறோம். குண்டுகள் இரவு, பகல் பாராது எம்மீது விழுகின்றன’ என்றும் அவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவத்திடம் கூறினார். இஸ்ரேலின் வான் தாக்குதல் ஒன்றில் ஹமாஸ் ஆயுதப் பிரிவின் மூத்த உறுப்பினர் ஒருவரான அப்தல் பத்தா மாலி கொல்லப்பட்டதை அந்த அமைப்பு உறுதி செய்துள்ளது. மேற்குக் கரையைச் சேர்ந்த அவர் 2011 கைதிகள் பரிமாற்றத்தின்போது காசாவுக்கு வெளியேற்றப்பட்டிருந்தார். மறுபுறம் காசாவில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய துருப்புகளின் எண்ணிக்கை 172 ஆக உயர்ந்துள்ளது. இதில் காயமடைந்த 431 இஸ்ரேலிய இராணுவத்தினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் 44 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலை அடுத்து ஆரம்பமான இந்தப் போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 21,672 ஆக அதிகரித்துள்ளது. இதில் மேலும் 56,165 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ரபாவில் குவியும் மக்கள் காசாவின் குறுகிய நிலப்பகுதியின் 2.3 மில்லியன் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட அனைவரும் போல் தமது விடுகளை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில் இடம்பெயர்ந்த பெரும்பாலான மக்கள் பூங்காக்களின் திறந்த பகுதிகளில் தங்கி இருப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிவாரண அமைப்பின் ஜூலியட் டூமா தெரிவித்துள்ளார். எகிப்துடனான எல்லைப் பகுதியாக உள்ள ரபாவுக்கு கடந்த சில நாட்களில் குறைந்தது 100,000 பேர் தப்பி வந்திருப்பதாக ஐ.நாவின் மனிதாபிமான அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. எனினும் ஐ.நாவால் மட்டுப்படுத்தப்பட்ட உதவிகளையே இவர்களுக்கு வழங்க முடியுமாக உள்ளது என்று டூபா குறிப்பிட்டுள்ளார். எனினும் காசாவின் மனிதாபிமான தேவைகள் பாரிய அளவில் அதிகரித்து வருவதாக அவர் கூறியுள்ளார். உதவிகள் செல்வதை கட்டுப்படுத்தவில்லை என்று இஸ்ரேல் கூறியபோதும் அதன் உக்கிர தாக்குதல்கள் உதவி விநியோகத்திற்கு இடையூறை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரபாவில் இருந்து பி.பி.சி. செய்தி நிறுவனத்திற்கு பேசிய ஐ.நா நிவாரண அமைப்பின் காசா பணிப்பாளர் டொம் வைட், இந்த நகரில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அடைக்கலம் பெற்றிருப்பதாக தெரிவத்தார். பாடசாலைகள் மற்றும் மாநகர சபை வசதிகள் என்று ரபாவில் உள்ள அனைத்து இடங்களிலும் அளவுக்கு அதிகமான மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் நிலையில் அங்கு மேலும் மக்கள் அடைக்கலம் பெறுவதற்கான இடம் தீர்ந்துவிட்டதாக டொம் வைட் சுட்டிக்காட்டியுள்ளார். ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது திறந்த வெளியில் உறங்கி வருவதாக டூமா வழங்கிய கூற்றை பிரதிபலிப்பதாக இது உள்ளது. தெற்கு மற்றும் மத்திய காசாவில் உக்கிரமடைந்திருக்கும் தாக்குதல்கள் காரணமாகவே ரபா பகுதியை நோக்கி மக்கள் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் காசாவில் இடம்பெயர்ந்துள்ள மக்களிடையே தொற்று நோய்கள் பரவும் அச்சுறுத்தல் பற்றி உலக சுகாதார அமைப்பு மீண்டும் ஒருமுறை எச்சரித்துள்ளது. காசாவில் கடந்த ஒக்டோபர் நடுப்பகுதியில் இருந்து டிசம்பர் நடுப்பகுதி வரையான காலத்தில் நோய் பரவல் அதிகரித்திருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டொக்டர் டெட்ரொஸ் அதனொம் கெப்ரியேசுஸ் குறிப்பிட்டுள்ளார். காசா பகுதியில் உள்ள முகாம்களில் சுமார் 136,400 வயிற்றுப்போக்கு, 55,400 சொறி மற்றும் சிராங்கு மற்றும் 126 மூளைக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிராந்திய பதற்றம் இந்தப் போர் பிராந்தியத்தில் பரவும் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக லெபனான், ஈராக், சிரியா மற்றும் யெமனில் உள்ள ஈரான் ஆதரவு போராட்டக் குழுக்கள் இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டாளியான அமெரிக்காவை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. சிரியாவில் இஸ்ரேல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் வான் தாக்குதல்களில் 23 பேர் கொல்லப்பட்டாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சிரியாவின் அல் பொகாமால் பகுதி மீது நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்தத் தாக்குதல்களில் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்களே கொல்லப்பட்டிருப்பதாக பிரிட்டனைத் தளமாகக் கொண்ட அந்த மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது. முன்னதாக சிரியாவின் அலெப்போ நகரை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. https://www.thinakaran.lk/2024/01/01/world/33228/காசாவின்-எகிப்து-எல்லையை/
-
2024 புதுவருட வாழ்த்துக்கள்
யாழ் கள உறவுகள் அனைவருக்கும் இனிய 2024 புத்தாண்டு வாழ்த்துக்கள்!💫🎆🎇
- IMG_6820.jpeg
-
போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
போதமும் காணாத போதம் – 12 கிளிநொச்சி சந்தையில் மரக்கறிகளை வாங்கி அவசர அவசரமாக வெளியே வந்த “பச்சை” இரணைமடுவுக்குச் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தார். உளமழுத்தும் இன்னல் முகம் முழுதும் நின்றது. வியர்வையில் தோய்ந்திருந்தார். இன்னுமிரண்டு நாட்களில் பயணம் சரிப்பட்டால் பிள்ளைகளைக் காப்பாற்றி விடமுடியுமென்ற வேண்டுதல். பச்சைக்கு அருகில் வந்தமர்ந்தார் கருவாட்டி யாபாரி மாசிலா. அவரின் பொய்க்கால் நன்றாகப் பழுதடைந்திருந்தது. வெண்புறா நிறுவனத்தில் புதிய பொய்க்கால் வேண்டிப் பதிவு செய்துள்ளதாக பச்சையிடம் தெரிவித்தார். இரணைமடு பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய பச்சை, ஜன்னல் வழியாக மாசிலாவைப் பார்த்தார். மாசிலா தனது பொய்க்காலை சரிப்படுத்தி கொஞ்சம் ஆசுவாசமாக அமர்ந்திருந்தான். வீட்டில் நின்ற இரண்டு கிடாய்களுக்கும் தவிடு கரைத்து வைத்த “கொண்டோடி” சுகந்தா படலைக்குள் நுழையும் பச்சையை பார்த்தாள். புருஷனின் நடையில் ஏதாவொரு குழப்பமிருப்பதாக உணர்ந்தாள். “என்னன, ரத்தச் சோகை வந்த ஆக்கள் மாதிரி தெம்பில்லாம நடக்கிறியள்” என்று கேட்டாள். பச்சையிடம் பதிலில்லை. வாசலிலிருந்த வாளி நீரில் கால்களைக் கழுவி, வீட்டிற்குள் நுழைந்தார். இரண்டு கிடாய்களும் தவிட்டுத் தண்ணியை மூசி மூசி உள்ளிளுக்கும் சத்தம் மத்தியான வெயிலோடு கூடியிருந்தது. கறுத்து மினுமினுத்து நன்றாக உயர்ந்து நிற்கும் முதல் கிடாய் சித்திரனுக்கும், செவி நீண்ட கறுப்பு நிறத்திலான துடியான மற்ற கிடாய் அப்பனுக்குமென பாலத்தடி சிவன் கோவிலுக்கு நேர்த்தியாக வளர்த்தாள். ஆனால் பிள்ளைகளை காப்பாற்ற தெய்வத்தால் முடியாதென்றும், அது தெய்வத்தையே படைத்த மனுஷனாலேயே ஆகும் காரியமெனவும் பச்சை நம்பினார். தன்னிடமிருந்த பணத்தையும், சொத்துக்களையும் மனம் நிறுத்தி எண்ணினார். கனகாம்பிகைக் குளத்தடியில் ஏக்கர் கணக்கிலிருந்த தென்னந்தோப்பும், முறிகண்டியில் தரிசாகக் கிடக்கும் எழுபது ஏக்கர் நிலமும் வேண்டாமெனத் தோன்றியது. கையிருப்பிலிருந்த பணம் பல லட்சங்கள். வங்கியில் வைப்பிலுள்ள பணத்தையும் கணக்குப் போட்டார். தமிழீழ வைப்பகத்தில் இருக்கிற பணத்தை எடுப்பதில்லை என முடிவு செய்தார். சொத்துக்களை விற்பது இயக்கத்திற்கு தெரிந்தாலும் ஆபத்து நேரும். எதுவும் வேண்டாம். “உயிர். அந்த பொக்கிஷத்தை மட்டும் மீட்டுவிட்டால் போதுமானது. “எத்தனை காலம் இந்த மயிரெல்லாம் நீடிக்கப்போகிறது. இவர்கள் எல்லாம் அழிந்து போகுமொரு நாள் வராமலா போகும். நிலத்துக்காக சாவதெல்லாம் விஷர்த்தனம். ஆயுத வெறி. இத்தனை வசதிகளோடு இருக்கும் எனது பிள்ளைகள் ஏன் துவக்கெடுத்து சண்டை செய்ய வேண்டும்?” என்று கற்பூரத்தைக் கொளுத்தி பாலத்தடி சிவனை வழிபட்டார் பச்சை. “கொண்டோடி”சுகந்தாவிடம் பச்சைத் தண்ணீர் கேட்டால் கூட கிடைக்காது. கோவில் உண்டியலில் ஒரு ரூபாய் போட்டுக்கூட சனங்கள் பார்த்ததில்லை. இயக்கம் சனங்களிடம் நகையும், பணமும் கேட்ட காலத்தில் தன்னுடைய இரண்டு தோட்டையும் கழற்றிக் கொடுத்ததாக ஒரு வரலாறு சொல்லுவாள். ஏற்பாடுகள் எதனையும் சுகந்தாவிடம் பச்சை சொல்லவில்லை. அவளை நம்பமுடியாது. யாரிடமாவது வாய்தவறிச் சொல்லவும் செய்வாள். சித்திரன் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அப்பன் பதினோராவது வகுப்பு. இருவரும் நல்ல கெட்டிக்காரர்கள். இந்தியாவிற்கு அழைத்துச் சென்று தனது பிள்ளைகளை பெரிய படிப்பெல்லாம் படிக்க வைக்கவேண்டுமென பச்சை ஆவலாதிப்பட்டார். முதன்முதலில் சித்திரனுக்கு தனது திட்டத்தைச் சொல்லலாமென பச்சை உறுதி பூண்டார். வீட்டுக்குப் பின்னாலுள்ள மாந்தோப்பில் கட்டிலில் உறங்கியிருந்த சித்திரனை தட்டியெழுப்பினார். எப்போதுமற்ற பழக்கமொன்றை எதிர்கொண்ட திகைப்பில் கொஞ்சம் நேரம் கதையாமல் இருந்தான். ஆனாலும் பச்சை கதைக்கத் தொடங்கினார். “சித்து, நாங்கள் இஞ்ச இருந்து வெளிக்கிடலாம், இயக்கம் நல்லா இறுகப்போகுது. பிள்ளையளை பிடிச்சு போருக்கு படைக்கப்போறாங்கள். நான் எல்லா ஏற்பாட்டையும் செய்திட்டன். நாளைக்கு பின்நேரமாய் இஞ்சயிருந்து வெளிக்கிட்டு போய்டலாம். பிறகு கடலால இந்தியாவுக்கு” “அப்பா, உங்கட திட்டம் சரி வருமே, ஏதேனும் தகவல் கசிஞ்சால் கூட இயக்கம் மன்னிக்காது. எல்லாத்தையும் பறிச்சுப்போட்டு உள்ள தள்ளிடுவாங்கள்” சித்திரன் ஒத்துக்கொண்டது நல்ல சகுனமென எண்ணினார். பச்சைக்கு கொஞ்சம் தெம்பு வந்தது. “அதைப் பற்றி நீ கவலைப்படாத. கொம்மாவை மட்டும் சம்மதிக்க வைச்சுப் போடு. அதுதான் இப்ப ஒரே தலையிடி.” என்றார். “நாங்கள் எல்லாரும் வெளிக்கிடப் போகிறம் எண்டால் அம்மா இஞ்ச தனிய இருப்பாவே, வரத்தானே வேணும்” காலில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டிவிட்டு, நான் அம்மாவிட்ட கதைக்கிறன்” என்றான் சித்திரன். அன்றிரவு வீட்டில் கடுமையான வாக்குவாதங்கள் நிகழ்ந்தன. “இத்தனை சொத்துக்களையும், நிலங்களையும் அம்போவிண்டு விட்டிட்டு ஆள்தெரியாத ஊருக்கு எதுக்கு ஓடோணும். செத்தால் சாவம். எல்லாற்ற பிள்ளையளுக்கும் நடக்கப்போறது தானே எனக்கும் நடக்கப்போகுது. நான் அதைத் தாங்கிக் கொள்வன். ஆனால் இந்த ஊரை விட்டு என்னால வர ஏலாது” சுகந்தா மறுத்தாள். அப்பனுக்கு எந்த விருப்பும் வெறுப்பும் இல்லை. அவன் எல்லாவற்றையும் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தான். “சுகந்தா நாட்டில நடக்கப்போறது என்னெண்டு தெரியாமல் கதையாத, இஞ்ச இருக்கிற ஒருத்தரும் மிஞ்சப்போவதில்லை. அந்த நிலைமைக்குத் தான் இவங்கள் ரெடியாகுறாங்கள்”பச்சை சொன்னார். “உயிர் சாம்பலாய்ப் போனாலும் இந்த மண்ணில போகட்டும். இவ்வளவு சனமும் இஞ்ச இருக்க நாங்கள் மட்டும் சாகப்பயந்து ஓடித்தப்புறத நினைக்க குமட்டுது. அவமானம்” “எடியே வே*, உனக்கு அப்பிடியென்னடி கரப்பன் வியாதி. இஞ்ச ஆரோடையோ படுக்க நாள் பார்த்து வைச்சிருக்கிறியோ. நான் என்ன சொல்லுறனோ. அதைச் செய்” அப்பன் வெகுண்டு துடித்தான். அவனது கை நரம்புகளில் கொலைத்துடி எழுந்தது. பச்சையை நோக்கி நடந்து போய் பளார் என்று கன்னத்தில் அறைந்தான். சித்திரன் அதிர்ச்சி அடைந்து அப்பனை இழுத்துப் பிடித்தான். பச்சை கன்னத்தைப் பிடித்தபடி பார்வை மங்க அமர்ந்தார். உடல் சிவந்து தளும்பி அழுதார். சுகந்தா அப்பனை அரவணைத்து நின்றாள். மாந்தோப்பிலிருந்த கட்டிலில் அமர்ந்திருந்த பச்சையிடம் “ அப்போய், இவையள் வராட்டி என்ன நீங்களும் நானும் வெளிக்கிடுவம்” சித்திரன் சொன்னது அவ்வளவு தீவிரமாயிருந்தது. அது பச்சையின் உடலில் எரிந்தடங்க மறுத்த காயத்தின் எரிச்சலுக்கு குளிர் பரப்பியது. ஆனாலும் வேண்டாமென்று மறுத்தார். எல்லாரும் மனம் ஒத்து வெளிக்கிடுவம். அது விரைவிலேயே நடக்கும். பொறுத்திருப்பம்” என்றார். “அதுக்குள்ள தமிழீழம் கிடைச்சால் என்ன செய்யிறது” சித்திரன் கேட்டான். பச்சை தன்னுடைய கன்னத்திலிருந்த கையை எடுத்து “எழும்பிப் போடா மடப்*** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம்யாண்டி” என்று ஏசினார். ஒரு சில மாதங்களில் வன்னியில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தன. “புலிகள் படையில் சேர்க” என்ற பிரச்சாரங்கள் வீதிகள் தோறும் நிகழ்ந்தன. பள்ளிக்கூடம் சென்று வருகிற இளவட்டங்களை நிறுத்தி வைத்து போராட்டத்தின் அவசியத்தையும் இக்கட்டையும் பிரச்சாரப் பிரிவு போராளிகள் முன்வைத்தனர். கதைத்து விளங்கவைத்து இயக்கத்தில் இணையுங்கள் என்பது மேலிடத்து ஆணையாம். சுகந்தாவுக்கு சில சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்தின. சித்திரன் நாளும் பொழுதும் தாயிடம் ஒப்புக்கொள்ளல் வாங்கவே நேரம் செலவழித்தான். பச்சை முல்லைத்தீவுக்குச் சென்று ஓட்டியைச் சந்தித்து வந்தார். ஏற்கனவே நடந்ததைப் போல ஏமாற்றம் எதுவும் இந்தத் தடவை நிகழாதென ஓட்டிக்கு உறுதியளித்தார். சுகந்தா ஆடுகளையும் வீட்டிலுள்ள சில பொருட்களையும் சொந்தக்காரர்களிடம் ஒப்படைக்க விரும்பினாள். “எதுவும் செய்ய வேண்டாம். நாங்கள் இல்லையென அறிந்த பிறகு மாமாவே எல்லாவற்றையும் வந்து எடுத்துவிடுவார்” என்றான் சித்திரன். கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் பச்சை இறங்கினார். அங்கிருந்து இரணைமடுவுக்கு செல்லும் பேருந்துக்காக காத்திருந்தார். சித்திரன் தன்னுடைய நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான். அப்பன் வீரபத்திரர் கோவிலுக்குப் பின்புறமுள்ள பெரிய கல்லொன்றில் அமர்ந்திருந்தான். சுகந்தா தன்னுடைய நகைகளை எடுத்து ஒரு பெரிய தலையணைக்குள் பதுக்கினாள். தங்கத் தலையணை. அதற்கு மேல் எத்தனையோ மெழுகுத்தாள்களால் அரண் அமைத்தாள். எல்லோருக்குள்ளும் நெடிய வலி குறுக்குமறுக்காக தையலிட்டது. எதன்பொருட்டு நிலம் பிரிந்தாலும் வருந்துயர் ஆறாதது. அப்பனுக்குப் பின்னால் வந்து நின்றாள் நறுமுகை. அவளது கைகளில் பனங்காய் பனியாரம் நிரம்பியிருந்தது. நிலத்தின் வாசனையோடு கமழும் பொழுது. அப்பன் அவளை இறுகக் கட்டியணைத்து முத்தமிட்டான். அவளுடைய கைகள் தளர்ந்தன. மண்ணில் சிறுமுலைக்காம்புகள் தோன்றியதைப் போல பனங்காய்பனியாரம் சிதறுண்டன. கல்லின் மீது யாக்கைகள் கனன்றன. அமுதுண்ணும் பொலிவுடன் வண்டுகள் பறந்தன. அப்பனின் மூச்சில் சிவந்த உதடுகளால் நறுமுகை தாகம் பெருகி மிடறு எச்சில் விழுங்கினாள். அப்பனின் தவிப்புக்கூடியது. அவன் சொன்னான் “ நாங்கள் இஞ்ச இருந்து தப்பியோடப் போகிறம்” “எங்க” “இந்தியாவுக்கு. அப்பா ஏற்பாடு செய்திட்டார். படகில போகப் போகிறம்” “உங்கட குடும்பத்துக்கு என்ன விசரே, கடல் முழுக்க இயக்கம் தான். அலைகளையே எண்ணிக் கொண்டிருப்பினம். இதில நீங்கள் எங்க தப்பி, எங்க போகப்போறியள்” “தெரியேல்ல, நடக்கிறது நடக்கட்டும். எல்லாரும் போய், நான் மட்டும் நிண்டால் இயக்கம் என்னைத்தான் சிறையில அடைக்கும்” “நீ, போய் இயக்கத்திட்ட சொல்லு. அப்படியெண்டால் உனக்கு தண்டனை இருக்காது” “அய்யோ, குடும்பத்தைக் காட்டி குடுக்கச் சொல்லுறியோ, அம்மா பாவம்” “அப்ப, கடலில போய் சாகப்போறாய். அப்பிடித்தானே?” “நீ இயக்கத்தில போய் சொல்லிப்போடாத, எனக்கு பயமாயிருக்கு. எதோ ஒரு குறுகுறுப்பில உன்னட்ட சொல்லிட்டேன்” “எனக்கு அது வேலை கிடையாது. ஆனால் உங்கட அப்பா, இதுமாதிரி திட்டத்தில இருக்கிறார் என்று இயக்கத்துக்கு தெரியாமல் இருக்காது. ஊரில இருக்கிற முகவர்கள் ஆரேனும் மணந்து பிடிச்சிருப்பினம்” “எப்பிடி உறுதியாய் சொல்லுறாய் நறுமுகை” “இஞ்ச எதையும் ஆரும் ரகசியமாய் செய்து தப்ப ஏலாது. ஏனென்டால் இயக்கத்தை விடவும் அதைச் செய்ய உலகத்தில ஆளில்லை. ஆனா நீ உந்தப் பயணத்தில சேராத. எனக்காக மட்டுமில்ல, உனக்காகவும் சொல்லுறன்” என்று சொல்லிய நறுமுகை மண்ணில் விழுந்து கிடந்த பனங்காய் பணியாரங்களை ஊதி ஊதி அவனுக்கு தீத்திவிட்டாள். “இவ்வளவு உருசையாய் கிடக்கு” அப்பன் கேட்டான், “மண்ணில இருந்தெடுத்தால” என்ற நறுமுகை அங்கிருந்து புறப்பட்டாள். அப்பன் அதே கல்லிலேயே அமர்ந்திருந்தான். இரவு முழுவதும் அவனைக் காணாது தேடிய சித்திரன் அதிகாலையில் அப்பனைக் கண்டான். வீட்டிற்கு தன்னால் வரமுடியாதென மறுத்து அங்கேயே அமர்ந்தான். சுகந்தா சென்றழைத்தும், பச்சை கெஞ்சிக் கேட்டும் வரப்போவதில்லையென உறுதியாக கூறிவிட்டான். குறிப்பிட்ட நாளில் மூவரும் வீட்டிலிருந்து புறப்பட்டனர். அப்பன் அதே கல்லிலேயே அமர்ந்திருந்தான். சுகந்தா சென்று பயணம் சொன்னாள். அவன் கைகளை காட்டி செல் என்றான். இரண்டு நாட்கள் வெவ்வேறு இடங்களில் பதுங்கியிருந்த மூவரும் கடற்கரைக்கு ஓட்டியொருவரால் அழைத்துச் செல்லப்பட்டனர். பச்சை ஒரு தலைக்கு ஐம்பதாயிரம் ரூபாய்ப் படி பணத்தை அளித்தார். படகு இந்தியாவை நோக்கிப் புறப்பட்டது. அடுத்தநாள் காலையிலேயே படகு ஆளற்ற கரையை அடைந்தது. கண்டல் செடிகளும் தென்னைகளும் நிரம்பி நின்றன. “வந்திட்டமா” பச்சை ஓட்டியிடம் கேட்டார். “ஓம் அண்ணே, இன்னும் கொஞ்சத் தூரம் நடந்து போனால் ராமேஸ்வரம் கோவிலே வந்திடும். இறங்குங்கோ. அக்கா பார்த்து இறங்க வேணும்” என்றான் ஓட்டி. சித்திரன் பாய்ந்து இறங்கி தாய்க்கு கைகொடுத்தான். கடல் மணலில் புதையுண்ட பாதங்களை முன்நகர்த்தாமல் பின்நோக்கித் திரும்பி அவள் இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி “என்ர பாலத்தடி சிவனே, அப்பனைக் காப்பாற்றிப் போடு” என்று வணங்கினாள். கொஞ்சத் தூரத்தில் நடந்து சென்றதும் ஓட்டி சொன்னதைப் போலவே விசாரணை அதிகாரிகள் அவர்களை அகதிகளாக பதிவு செய்தனர். பிறகு அவர்களை கூட்டிச் சென்றதொரு வாகனத்தில் ஏற்றினார்கள். வாகனம் சில நிமிட பயணத்துக்குப் பின்பு வீதிக்கு வந்தது. முல்லைத்தீவு என்று கடைப்பலகைகள் தொங்கின. பச்சை அதிகாரிகளிடம் கேட்டார் “ இஞ்சையும் ஒரு முல்லைத்தீவு இருக்கோ” “இருக்கு. அதுக்கு நீங்கள் விசுவமடுவாலையே வந்திருக்கலாம். ஏன் இப்பிடி சுத்தி படகில வந்தனியள்” – அதிகாரியொருவர் கேட்டார். பச்சைக்கு வியர்த்துவிட்டது. சித்திரனுக்கு நடுங்கத் தொடங்கியது. சுகந்தா தனது கைகளை மேலே உயர்த்தி என்ர அப்பனே, உன்னட்டையே கூட்டிக்கொண்டு வந்திட்டாய்” என்றாள். பச்சை அழுது புலம்பி அவர்களின் கையப்பிடித்து “தம்பியவே என்னை மன்னிச்சுக் கொள்ளுங்கோ” என்றார். “இயக்கத்தைச் சுத்திப் போட்டு போகலாமெண்டு நினைச்சியளோ” என்று கேட்டார்கள். “ ஓம். அதுக்கு என்ன, பிள்ளையள அம்மா அப்பா ஏமாத்தக் கூடாதோ?” “அம்மா, நீங்கள் வீட்டுக்கு போகலாம். இவர்களை மட்டும் விசாரணை செய்து விட்டு அனுப்பி வைக்கிறோம்” என்றார்கள். சுகந்தாவை இன்னொரு இயக்க வாகனத்தில் வீட்டில் கொண்டே இறக்கினார்கள். அவள் நேராக அப்பன் அமர்ந்திருக்கும் கல் நோக்கி ஓடினாள். அப்பன் அப்படியே அமர்ந்திருந்தான். “பிள்ளை, அம்மா வந்திட்டன். எழும்பி வா. இனி எங்கையும் போகேல்ல” “நானும் தான். இனி இதுதான் என்னோட இடம். என்னைப் பார்க்க ஆர் வந்தாலும் இங்க வரட்டும்” என்றான். இயக்கத்தினரால் விசாரணை செய்யப்பட்ட பச்சைக்கும் சித்திரனுக்கும் ஆறுமாதம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. தண்டனைப் பணமாக லட்சங்கள் அளிக்கப்பட்டன. பச்சை சிறைக்குள் தனது ஓட்டியை ஒருநாள் கண்டார். புலிச்சீருடையணிந்த அவனது இடுப்பில் கைத்துப்பாக்கி பட்டியில் இருந்தது. அவனுக்குப் பின்னால் பொய்க்காலால் தாண்டித் தாண்டி கருவாட்டு யாபாரி மாசிலா புலிச்சீருடையோடு வந்திருந்தார். பச்சைக்கு நடுநடுங்கியது. மாசிலாவை அழைத்த பச்சை “நீயும் இயக்கமே, என்னட்ட ஒருநாளும் சொன்னதேயில்லையே” என்றார். உங்களுக்கும் எனக்குமிடையே கருவாட்டில் விலைகுறைப்பதற்கு தானே பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. கருவாடு வாங்கிற எல்லாரிட்டையும் நான் இயக்கமெண்டு சொல்லி என்ன நடக்கப்போகுது “ என்றார். கல்லின் மீது அமர்ந்திருந்த அப்பன் ஒரு நாள் காணாமல் போனான். நறுமுகையையும் காணவில்லை. ஊரிலுள்ளவர்கள் தேடும் போது இருவரும் மறுகரையில் படகை விட்டு கீழே இறங்கினர். வேதாரண்யம் கடற்கரையில் மீனவர்கள் சிலர் அவர்களைக் கண்டனர். ஓடிச் சென்று அரவணைத்தனர். அப்பனும் நறுமுகையும் அவர்களிடம் குடிப்பதற்கு தண்ணீர் தாருங்கள் எனக்கேட்டனர். அளிக்கப்பட்ட நீரை அள்ளித்தரும் மீனின் வாசனையோடு பருகினர். “இருவரும் கணவன் மனைவியா” “ஓம்” “சின்னஞ்சிறுசுகளாக இருக்கிறீர்களே” “எங்கள் நாட்டில் எல்லோரும் சீக்கிரமாக வளர்ந்து விடுவோம்” “ஏன்” “துவக்கேந்த வேண்டும்” என்றான் அப்பன். https://akaramuthalvan.com/?p=1481
-
மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வடக்கிற்கு செல்கிறார் ரணில்
வடக்கில் தொடர் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ள ரணில் புத்தாண்டில் நான்கு நாள் பயணமாக வடக்குக்கு வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார். இதற்கமைய எதிர்வரும் 4 ஆம் திகதி யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி மாலை 3 மணி முதல் 5.30 வரை மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் பங்குகொள்கின்றார். அன்று மாலை 7 மணி முதல் 9.30 வரை சிவில் சமூகப் பிரதிநிதிகளை அவர் சந்திக்கின்றார். 5ஆம்திகதி காலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும், மாலை 2 மணி தொடக்கம் 3 மணி வரையில் பூநகரிப் பிரதேச அபிவிருத்தி மற்றும் நகர மயமாக்கல் தொடர்பில் பூநகரிப் பிரதேச செயலகத்தில் இடம்பெறும் கலந்துரையாடலிலும் அவர் கலந்துகொள்கின்றார். 6 ஆம் திகதி காலை 9 மணி முதல் 10 மணி வரையில் யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணம், வவுனியா பல்கலைக்கழக உபவேந்தர்கள் மற்றும் கிளிநொச்சி வளாகப் பீடாதிபதி உள்ளிட்ட விரவுரையாளர்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து 10 மணிமுதல் 11.30 வரையில் சர்வமதப் பிரதிநிதிகள், மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலையின் நலன்புரிச் சங்சத்தின் பிரதிநிதிகளை ஜனாதிபதி சந்திக்கின்றார். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி தலைமையில் மாலை 3 மணி முதல் 5 மணி வரை யாழ்.மாவட்ட செயலகத்தில் நிபுணர்களுடனான சந்திப்பும், 7 ஆம் திகதி தந்தை செல்வா மண்டபத்தில் பனை தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடனான சந்திப்பும் இடம்பெறவுள்ளது. (ஐ) https://newuthayan.com/article/வடக்கில்_தொடர்_சந்திப்புகளை_மேற்கொள்ளவுள்ள_ ரணில்
-
மனதும் இடம்பெயரும்
வாழ்த்துக்கள் சுமே ஆன்ரி! நூல் வரவுக்காகக் காத்திருக்கின்றோம். 😀 மூனா அண்ணாவின் அட்டைப்படத்தைக் காணவில்லை! நீங்கள்தான்! உங்கள் நீளமான பெயரில் தங்களுக்குப் பிடித்தமானவர்களைக் காண்கின்றார்கள்😊 மெசோ, மியா, சுமே, மேரி- இன்னும் எத்தனையோ!
-
போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
போதமும் காணாத போதம் – 11 இருண்டு கொட்டும் மழையில் வீட்டின் கதவு தட்டிக் கேட்டது. சிறிய கோடாக உடைந்திருந்த ஜன்னலில் கண் புதைத்துப் பார்த்த அம்மா, ரகசியமாய் சுதாகர் என்றாள். மீண்டும் கதவு தட்டும் சத்தம் கொஞ்சம் மூர்க்கமாக ஒலித்தது. என்னை அறைக்குள் போய் இருக்குமாறு கைகாட்டினாள். ஒரு நாடகத்தின் தொடக்கம் போல திரைவிலக வசனம் தொடங்கிற்று. “ஆர் வந்திருக்கிறது?” “நான் தான் சுதாகர் கதவைத் திறவுங்கள்”. அம்மா கதவைத் திறந்தாள். நனைந்திருந்தவரிடம் பெரிய துவாயைக் கொடுத்தாள். சேர்ட்டைக் கழற்றி உடம்பைத் துடைத்தார். அணிந்திருந்த ஜீன்சை கழற்றுவதற்கு முன்பாக பிஸ்டலை வெளியே எடுத்து தண்ணீரை துடைத்தார். ஒரு சாறமும் சேர்ட்டும் கொடுத்து மாற்றிக் கொள்ளச் சொன்னாள். சுடச்சுட இஞ்சி போட்டு ஒரு தேத்தண்ணி கொடுத்தாள். கொஞ்சம் இளைப்பாறிய பின் “இந்த நேரம் எதுக்கடா இஞ்ச வந்தனி” என்றாள். சின்னதொரு வேலையாய் ஊரெழு வரைக்கும் போய்ட்டு வந்தனான். கொஞ்சம் பிந்தீட்டுது. மழை வேற பேயாய் அடிக்குது. அதுதான் இஞ்ச வந்தனான்.” என்றார். “வேற எதுவும் திருகுதாளம் பண்ணிட்டு பாதுகாப்புத் தேடி இஞ்ச வரேல்ல தானே” அம்மா எச்சரிக்கையோடு கேட்டாள். அவர் கண்களைத் தாழ்த்தி தேத்தண்ணியைப் பார்த்தபடி ஆவி நுகர்ந்தார். பிறகு கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி தைரியத்தை வரவழைத்திருப்பார் என்றே தோன்றுகிறது. “அண்ணி, அப்பிடி ஒண்ட செய்திட்டு உங்களிட்ட வந்தாலும், நீங்களே என்னைச் சொல்லிக்குடுத்திடுவியள் தானே” சுதாகர் கேட்டார். “பின்ன, உங்களைப் பாதுகாத்து சனங்களுக்கு என்ன பயன்” அம்மா கேட்டதும் சுதாகருக்கு ஆத்திரமும் அடக்கமுடியாத அவமானமும் தோன்றியிருக்கலாம். உடனடியாக கதவைத் திறந்து வீட்டின் வெளியே போனார். மழையின் பேரிகை விடாது ஒலித்தது. திறந்திருந்த கதவின் வழியாக சாரல் புகுந்தது. “எடேய், நீ உள்ள வாறதெண்டால் வா. இல்லாட்டி நான் கதவைச் சாத்தப் போறன்” அம்மா குரல் கொடுத்தாள். “இல்ல நான் வெளியேயே படுக்கிறேன், வெள்ளனவா எழும்பிப் போகிறேன்” என்றார். “அடிசக்கை, பெரிய ரோஷக்காரன்ர வீம்பு. இதில கொஞ்சம் ரோஷம் உண்மையா இருந்திருந்தால் ஆர்மிக்காரனோட சேர்ந்து பிள்ளையள சுட்டுத் தின்ன மனம் வராது” என்று சொல்லி கதவை அடித்துச் சாத்தினாள். மழையை மிஞ்சி கதவில் ஒலித்தது இடி. அதிகாலையிலேயே எழுந்து சென்றுவிட்டார். அவர் படுத்திருந்த இடத்தில் சீவல் பாக்கு கொட்டுண்டு இருந்தது. அம்மா பூக்களை ஆய்ந்து வந்து அப்பாவின் படத்திற்கு வைத்தாள். நான் எழும்பி குளித்துமுடித்து படிக்க அமர்ந்தேன். முட்டைக் கோப்பியை அடித்து பொங்கச் செய்த அம்மாவின் முன்னேயே ஒரே மிடறில் அருந்தினேன். “இனிமேல் சுதாகர் வீட்டுக்கு வந்தால் அவனை அண்டக்கூடாது பெடியா” சொன்னாள் அம்மா. “ஓம் அம்மா, ஆளைப்பார்க்கவே பயமாய் இருக்கிறது. தாடியும் தலைமுடியும். கண்ணெல்லாம் பாழிருட்டு. விடிவற்ற முகம்” “இவங்களுக்கு எங்க விடியும். மாறி மாறி ஆக்களை காட்டிக் குடுக்கிறதும். கடத்திக் கொண்டே சுடுகிறதும் வேலையா வைச்சிருக்கிறாங்கள். உலகம் அழியிறதுக்கு முதல் இவங்களும் – இவங்களின்ர இயக்கமும் அழியவேணும்.” “எங்கட இயக்கம் இவங்களை அழிக்காதோ” “முந்தியொருகாலம் அதெல்லாம் செய்தவங்கள். இப்ப கொஞ்சம் யோசிக்கிறாங்கள் காட்டு யானை மாதிரி ஒருநாள் வெளிக்கிட்டால் எல்லாரையும் முறிச்சு எறிவாங்கள்” என்றாள் அம்மா. பல வருடங்களுக்குப் பிறகு அதிசயமாக காந்தி மாமா வீட்டிற்கு வந்திருந்தார். அமைதிக்காலமென்றாலும் வன்னியிலிருந்து யாழ்ப்பாணத்திற்குள் வருவதற்கு இயக்கம் எல்லாப் போராளிகளுக்கும் அனுமதி வழங்கவில்லை. காந்தி மாமா வீட்டிற்கு வந்ததையடுத்து மீனும், கணவாயும் சமைத்தோம். “எப்பிடி மேலிடம் உனக்கு பெம்மிஷன் தந்தது. ஆச்சரியமாய் இருக்கு” கேட்டாள் அம்மா. “தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் தரப்படும் எண்டு சொல்றது இதைத்தான். பன்னிரெண்டு தடவை கடிதம் எழுதியிருக்கிறன். இண்டைக்குத் தான் அனுமதி கிடைச்சது” என்றார். “நல்ல விஷயம். நாளைக்கு தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவிலுக்கு போவம். அங்க உனக்காக வைச்சவொரு நேர்த்தி செய்ய வேண்டியிருக்கு” என்றாள் அம்மா. “எனக்காக என்ன நேர்த்தி வைச்சனியக்கா?” “உன்ர அலகில ஐஞ்சடிக்கு வேல் குத்தி காவடி எடுக்கிறனென்டு ஒரு சின்ன நேத்தி” சொன்ன அம்மா கொடுப்புக்குள் சிரித்தாள். மாமா அதெல்லாம் ஒன்று பெரிய பிரச்சனை இல்லையென கண்ணைக் காட்டினார். காந்தி மாமாவின் இடது தோள்பட்டையில் விழுப்புண் தழும்பு மெழுகேறிக் கிடந்தது. எப்போதாவது அதனைத் தடவிக் கொள்கிறார். போராளி தனது விழுப்புண்ணின் தழும்பை தடவிப் பார்ப்பது எதனால்? அவர்களுக்கு ஏதோவொரு தியானத்தை அது வழங்குகிறதா? நினைவுகளை அது கொதிக்கச் செய்கிறதா? லட்சியத்தின் தீ வளர்க்க அந்த வருடல் அவசியமோ என்றெல்லாம் கேள்விகள் தோன்றின. கோயில் செல்ல ஆயத்தமாகி காந்தி மாமாவும் நானும் வீட்டின் வெளியே அமர்ந்திருந்தோம். அம்மா கதவைச் சாத்திவிட்டு “சரி வெளிக்கிடுவம்” என்றாள். வீதிக்கு வந்து பேருந்துக்காக காத்திருந்தோம். கோவில் வரை செல்லும் பேருந்து வருவதற்கு தாமதம் ஆனது. ஓட்டோ பிடிச்சால் போய்ட்டு வந்திடலாமென்றார் மாமா. அதுக்கு குடுக்கிற காசில பத்து நாள் வீட்டுச் சீவியம் போக்கிடலாம் சும்மா இரு காந்தியென்றாள் அம்மா. பேருந்து முடக்கத்தை தாண்டி வருவதைக் கண்டதும் “அம்மன் எங்களைக் கைவிடாது. வாகனம் வந்திட்டு பாத்தியோ” என்று ஆனந்தித்தாள். காந்தி மாமா வேட்டி உடுத்தியிருந்தார். அகலக் கரை அவருக்கு பிடித்தமானது என்று அம்மா சுன்னாகத்தில் வாங்கிவந்தது. எடுப்பாக ஒரு தங்கச் சங்கிலி. அணிய மாட்டேனென்று எவ்வளவு சொல்லியும் அம்மா வேண்டிக் கேட்டதால் அணிந்தார். நெற்றி நிறைந்த திருநீற்று பட்டை. “மாமா, வடிவான ஆள்தான் நீங்கள், இந்தியாவுக்கு போனால் விஜய்க்கு சகோதரனாய் நடிக்கலாம்” “சிறுவா, உனக்கு இண்டைக்கு மாட்டு இறைச்சியில கொத்துரொட்டி வாங்கித்தரலாமெண்டு நினைச்சனான். அதை கட் பண்ணிட்டன்” “மாமா, இப்ப நான் சொன்னதில என்ன பிழை.” “நீ சொன்னது எல்லாமும் பிழை தான் சிறுவா” என்று எனது காதைத் திருகினார். நான் செல்லமாக பாவனையழுகையை எழுப்பினேன். அம்மா எங்களிருவரையும் பார்த்து புன்னகைத்தாள். கோவிலை வந்தடைந்து மாமாவின் பெயரில் அர்ச்சனை செய்தோம். அடுத்த மாதத்தில் ஒருநாளில் அபிஷேகத்திற்கு அம்மா திகதி கேட்டு வந்தாள். வன்னியில நீங்கள் எந்த இடமென்று ஐயர் மாமாவிடம் கேட்டார். உடனடியாக ஜெயபுரம் என்றார் மாமா. என்ன வேலை செய்கிறீர்கள் அடுத்த கேள்வி வந்ததும் தேங்காய் யாபாரம் என்று சொன்ன மாமாவைப் பார்த்தேன். எத்தனையோ ஆண்டுகாலம் தேங்காய் யாபாரம் செய்யும் சிவத்தான் மாமாவை விடவும் உடல் மொழியைக் கொண்டு வந்திருந்தார். “மாமா, உங்கள நான் விஜய்க்கு அண்ணாவாக நடிக்கலாமெண்டு சொன்னது பிழைதான். நீங்கள் சிவாஜிக்கு அண்ணா” “என்ன தேங்காய் யாபாரியை வைச்சு சொல்லுறியோ” “ம். அப்பிடியே சிவத்தான் மாமா மாதிரியெல்லெ நிண்டனியள்” “பின்ன, இப்ப என்ர படையணி, இயக்கப்பெயர், தகட்டிலக்கம், ராங்க் எல்லாத்தையும் சொல்லவே முடியும்” “அதுவும் சரிதான். ஆனால் ஐயர் உங்களை இயக்கமெண்டு கண்டுபிடிச்சிட்டார்” “அதனால அற்புதமும் இல்லை. ஊழும் இல்லை. நான் அவரிட்ட அதை மறைக்கேல்ல. ஆனால் சொல்லவுமில்லை. அவ்வளவு தான்” நாங்கள் வீட்டினை அடைந்தோம். நாளைக்கு நல்லூர் கோவிலுக்கு போகலாமென நானும் மாமாவும் முடிவு செய்திருந்தோம். அம்மா கதவைத் திறந்து உள்ளே போனாள். கொஞ்சம் இருண்டிருந்தது. மின்விளக்குகள் ஒளிர்ந்தன. புட்டும் பழைய மீன்குழம்பும் ருசி குழைத்துண்டோம். மாமாவின் கைக்குழையல். உருசையூறும் கணம். அம்மா சின்ன வெங்காயத்தை உரித்து வைத்தாள். வீட்டின் கதவு தட்டும் சத்தம் கேட்டது. அம்மா உடைந்த ஜன்னல் வழியாக கண்களை ஒத்திப் பார்த்தாள். சுதாகரும் அவனது கூட்டாளி தாடி ஜெகனும். சாப்பிட்டுக் கொண்டிருந்த எங்களிடம் தகவல் சொன்னாள். மாமாவை மறைந்திருக்குமாறு சொன்னேன். அவர் அடுப்படிக்குள்ளிருந்த புகைக்கூட்டிற்குள் பதுங்கினார். அங்கே அதற்கான நிரந்தர ஏற்பாடுகளை ஏற்கனவே செய்து வைத்திருந்தோம். கதவைத் திறந்ததும் சுதாகர் உள்ளே வந்தார். அப்பாவின் புகைப்படம் முன்னே காய்ந்திருந்த பூக்களை விரல்களால் ஒவ்வொன்றாக தவர்த்திப் பார்த்துவிட்டு “அண்ணி, அண்டைக்கு நீங்கள் அப்பிடி கதைச்சிருக்க கூடாது. ஒரே கவலையாய் போயிற்றுது” என்றார். “பின்ன, நீங்கள் செய்யிற அநியாயத்த பார்த்துக் கொண்டு நாங்கள் ஐஸ்பழமே குடிக்கிறது. உங்களுக்கு கொலையெண்டால் கொப்புலுக்கி நாவல் பழம் தின்னுற மாதிரியெல்லே” “இஞ்ச எல்லாருக்கும் அப்பிடித்தான். முதலில ஆர் கொப்பு உலுக்கிறது எண்டு தான் போட்டி. மிச்சப்படி எல்லாரும் அப்படித்தான் நாவல் பழம் சாப்பிடினம்” “சுதாகர், உன்னை முந்தியொருக்கால் அவங்கள் சுட வெளிக்கிடேக்க மடிப்பிச்சை கேட்டு தப்ப வைச்சனான். இப்ப அப்பிடியெல்லாம் கருணை காட்ட மாட்டங்கள். நீ உதெல்லாத்தையும் விட்டிட்டு எங்கையாவது வெளிநாட்டுக்கு வெளிக்கிடு.” “அண்ணி, நீங்கள் வெருட்டுறத பார்த்தால் எனக்குச் சிரிப்புத்தான் வருகுது. நாங்களும் போராளிகள் தான். இந்த நாட்டோட விடுதலைக்காக போராடத்தான் ஆயுதமேந்தினாங்கள். சுட்டால் சுடட்டும். அதுக்காக இவையளுக்கு பயந்து ஒடேலுமோ” “நீங்களும் போராளியள் எண்டு சொல்ல வெக்கமாய் இல்லையோடா, இல்ல கேக்கிறன். அரசாங்கம் தருகிற மாஜரின சனங்களின்ர பிணங்களில பூசி தின்னுறதெல்லாம் விடுதலைப் போராட்டம் இல்ல. விளங்குதா” “நாங்கள் எந்த இயக்கத்துக்கும் பயப்பிடேல்ல. உண்மையா போராட விரும்பினாங்கள். ஆனால் இண்டைக்கு நானும் தாடி ஜெகனும் எங்கட அமைப்பில இருந்து விலகலாமெண்டு முடிவெடுத்திட்டம். ஆனால் எங்கள ரைகேர்ஸ் மன்னிக்க மாட்டாங்கள். அவங்களிட்ட நாங்கள் சரணடையவும் மாட்டம். எங்கட வாழ்க்கையும் நாங்களுமெண்டு இருப்பம்” என்றார். “இயக்கம் மன்னிக்காது எண்டு என்னால உறுதியாய் சொல்ல முடியாது. ஆனால் நீங்கள் உடன விலகிடுங்கோ. அதை எப்பிடியாச்சும் இஞ்ச உள்ள அரசியல்துறை செயலகங்களுக்கு தெரியப்படுத்துங்கோ” என்றாள் “இல்ல, அதுக்கான நேரமில்லை. நாங்கள் விலகப் போற தகவல் எங்கட அமைப்புக்குள்ள தெரிஞ்சு போச்சு. எங்கட லீடர் தோழருக்கு தெரிஞ்சால் அவ்வளவுதான்” என்றார் சுதாகர். “தெரிஞ்சால் என்ன செய்வாங்கள். நீ அந்த பேப்பர்காரனை சுட்டுக்கொண்டது, எம்.பியை சுட்டுக்கொண்டது, மானவர் பேரவை பெடியனைச் சுட்டுக்கொண்டது மாதிரி உன்னையும் சுடுவாங்கள் அதுதானே. “விதை விதைத்தவன் வினை அறுப்பான்” எண்ட பழமொழி எல்லாத்துக்கும் பொருந்தும். சுதாகர் நான் சொல்றத கேள். இப்பவே ஏதேனும் ஒரு அரசியல்துறை பேஸ்ல போய் சரணடையுங்கோ. அதுதான் உங்களுக்குப் பாதுகாப்பு” வீட்டின் முகப்பு வாசலில் வெள்ளை வேன் வந்து நின்றது. சுதாகர் அதைப் பார்த்து “அண்ணி, எங்கடை ஆக்கள் தேடி வந்திட்டாங்கள். என்னை காப்பாத்துங்கோ” என்று பயந்தடித்து அழுதார். தாடி ஜெகனுக்கு கால்கள் நடுங்கி கண்ணீரோடு மூத்திரமும் கழன்றது. அம்மா கதவை இறுகச் சாத்திவிட்டு தாழ்ப்பாள் போட்டுக் கொண்டாள். கண்ணாடியில் கண்களைப் பதித்து வெளியே எத்தனை பேரெனப் பார்த்தாள். இருவர் மட்டுமே வந்திருந்தனர். ஒருவனுடைய வலது தோள்பட்டையில் ஏகே -47 ரக துவக்கு தொங்கிக் கொண்டிருந்தது. கதவைத் தட்டத் தொடங்கினார்கள். அம்மா கொஞ்சம் வேடிக்கை பார்த்தாள். வெளியே நின்றவன் பெரிதாக “ ரைகேர்சுக்கு வாலாட்டுற வே* கதவைத் திறவடி. உன்ர சாமானில வெடி வைக்கிறன்” என்று கூச்சல் போட்டான். “காந்தி இஞ்ச ஒருக்கால் வா” அம்மா மெதுவாக குரல் கொடுத்தாள். புகைக்கூண்டுக்குள் பதுங்கியிருந்த புலி கதவருகே வந்தது. “படத்தட்டுக்குப் பின்னால ஒரு உப்பு பையிருக்கு அதுக்கு கீழே உள்ள பெட்டியை எடுத்துக் கொண்டு வா” என்றாள். மாமாவிடம் கொண்டு வந்து கொடுத்தேன். பளபளக்கும் உலோகம். மாமா பிஸ்டலை ஏந்தி நின்றதும் இன்னும் வடிவு கூடியிருந்தார். சுதாகரும் தாடி ஜெகனும் விழிபிதுங்கி கீழே அமர்ந்திருந்தார்கள். ஒரு நாடகத்தின் தொடக்கம் போல திரைவிலக வசனம் தொடங்கிற்று. “ஆர் வந்திருக்கிறது” என்று கேட்டபடியே பதிலுக்கு நேரமளிக்காமல் கதவைத் திறந்தாள். மாமாவின் கையிலிருந்த உலோகத்திலிருந்து சத்தமற்று வெளிச்சம் மட்டுமே பாய்ந்தது. வாசலிலேயே ரத்தம் கொப்பளிக்க கிடந்த இரண்டு பிணங்களையும் அள்ளி ஏற்றிக் கொண்டு அதே வெள்ளை வேன் புறப்பட்டது. சுதாகரும் தாடி ஜெகனும் அதற்குள்ளேயே அமர்ந்திருந்தனர். காந்தி மாமா வாகனத்தை இயக்கினார். அம்மா ஓடிச்சென்று “காந்தி இவர்களை நீ எதுவும் செய்யக்கூடாது. அரசியல் துறையினரிடம் ஒப்படைத்து விடு” என்றாள். சரியென்று தலையசைத்தபடி மாமா புறப்பட்டார். அடுத்தநாள் காலையில் நான்கு பிணங்களைச் சுமந்த வெள்ளை வேன் ஒன்று வீதியின் நடுவே நின்றது. சடலங்கள் அடையாளம் காணப்பட்டன. சுற்றி நின்று பார்த்த சனங்கள் சுதாகரைப் பார்த்ததும் “ஓ…இவையளே பெடியள் கொஞ்சம் பிந்தினாலும், சரியாய் செய்து போடுவாங்கள்” என்றனர். வீட்டிற்கு வந்திருந்த மாமாவிடம் நீ அவர்களைச் சுட்டிருக்க கூடாது என்று கோபமாக கத்தினாள். இருவரும் தம்மைத் தாமே சுட்டுக்கொன்றார்கள் என்றார் மாமா. இரவு சாப்பிடும் போது கேட்டேன். “மாமா, அவர்களை நீங்கள் சுடேல்லையோ?” “சிறுவா, மாமாவோட பேர் என்ன” “காந்தி” “மாமா, பொய் சொல்லுவேனா” “இல்லை. ஆனால் சுடுவியள் தானே” மாமா உறுதியாக ஓமென்று தலையசைத்தார். “காந்தி நீயே சுட்டனி” கேட்ட அம்மாவைப் பார்த்து, உறுதியாக இல்லையென்று தலையசைத்தார். சூரியனாய் தகிக்கும் ஒருபெரும் கனவின் நெடும்பயணத்தில் அஞ்சாமல் துஞ்சாமல் நிமிர்வின் குரலாக எதிரொலிக்கும் ஒவ்வொரு கணத்திலும் வரலாற்றின் கடைவாயில் துரோகக் குருதி வழிந்தது. கொப்பளித்தடங்கிய எரிமலையின் நாளங்களில் தீயின் உறைதல் திவலையாய்த் தேங்கின. பலிபீடத்தின் விளிம்பில் பதுங்கியமர்ந்த புலியின் கண்களில் “எவ்வளவு வலிமையானது தியாகம்” என்ற திருப்தி. கண்களைத் திறந்தபடி பாயில் படுத்திருந்த மாமாவுக்கு திருநீற்றை பூசிய அம்மா, “வேதத்திலுள்ளது நீறு, வெந்துயர் தீர்ப்பது நீறு, போதந் தருவது நீறு, புன்மை தவிர்ப்பது நீறு” என்ற பதிகவரிகளை பாடிக்கொண்டே அருகில் அமர்ந்தாள். உறக்கத்தின் கிளைகள் மாமாவை அடர்ந்து மூடின. இதுவரை வஞ்சித்த இரவின் ஜன்னல் வழியாக காற்றுப் புகுந்தது. கருணையின் வளைவற்ற பாதையைப் போல நீட்டி நிமிர்ந்து ஆழ்ந்துறங்கிய மாமாவின் கைவிரல்களை முத்தமிட்டேன். எண்ணிறைந்த ஒளித்துளியுள் நினைவின் குளிராக எப்போதும் உள்ளது அன்றிரவு. https://akaramuthalvan.com/?p=1445
-
Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்
தன்மானமும், சுயகௌரவமும் : 1986ல் விஜயகாந்த் கொடுத்த பேட்டி! KaviDec 29, 2023 14:26PM சினிமா, அரசியல் சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்புகளில் விஜயகாந்திடம் பேரன்பும், வெளிப்படை தன்மையான வெள்ளந்தி தனமும் வெளிப்படும். வரம்புமீறி கேள்விகள், வார்த்தைகள் செய்தியாளர்களிடம் இருந்து வரும் போது பெரும் கோபமும் விஜயகாந்திடமிருந்து வெடித்து கிளம்பும். அரசியல்வாதியான பின்பு அந்த பழக்கம் மாறாதவராகவே விஜயகாந்த் வெள்ளந்தி தனமாக இருந்தார். அதுவே அவரது அரசியல் பின்னடைவுக்கான காரணங்களில் ஒன்றாக இருந்தது என அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர். இப்போது இல்லை சினிமாவில் தொடக்ககாலத்திலேயே அதே போன்றுதான் இருந்திருக்கிறார் என்பதற்கான சான்றாக இருக்கிறது 1986ஆம் ஆண்டு சினிமா பத்திரிக்கைக்கு அவர் கொடுத்த பேட்டி. அவற்றில் இருந்து குறிப்பிட்ட பகுதி. விஜயகாந்த் பேட்டி புது நடிகன்னா மதிக்கமாட்டாங்க இங்கிலீஷ்ல ‘இன்சல்ட்’னு சொல்வாங்களே அதுதான். சினிமா இண்டஸ்ட்ரியில ரொம்ப அதிகமான அவமானங்களைத் தாங்கிக்கிட்டவங்களில் ஒருத்தன் நான். சென்னை வந்து போய்க்கிட்டிருந்த நான், பாண்டி பஜார் ரோஹிணி லாட்ஜ்ல இருபதாம் நம்பர் ரூம்ல வந்து தங்கினேன். அந்த லாட்ஜ்ல சினிமா லட்சியத்தோடு பல இளைஞர்கள் இருந்தாங்க. பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன் இவங்களாம் அந்த லாட்ஜுலதான் இருந்தாங்க. முதல்ல, டைரக்டர் எம்.ஏ.காஜா, ‘இனிக்கும் இளமை’ படத்தில் அறிமுகப்படுத்தினார். அப்ப விளம்பரங்கள்ல என் நிஜப் பெயரான ‘விஜயராஜ்’ தான் இருந்தது. அப்புறம்தான் வேறு நடிகர் விஜயராஜ்ங்கிற பேர்ல வந்துகிட்டிருக்கார்னு தெரியவர, காஜாதான் உடனே விஜயகாந்த்னு பேர் வெச்சார். முதல் நாள் ஷூட்டிங், அடையாறு மேனன் பங்களாவில் நடந்தது. இந்த சினிமாவுலகிலே புது நடிகன்னா யாரும் மதிக்கக்கூட மாட்டாங்க. தீண்டத்தகாதவன் மாதிரி புதுமுகங்களுக்கு சாப்பாடு போடுவாங்க. அப்ப சுதாகர், மீரா, ராதிகாவெல்லாம் ஏற்கெனவே பாப்புலர். அவங்களுக்கெல்லாம் ஏக உபசரிப்புகள்! நான் ஒரு மூலையிலே நின்னுக்கிட்டிருப்பேன். ஆனா, ‘இனிக்கும் இளமை’ படம் வெளிவந்ததும், என் பெயர் கொஞ்சம் வெளியே தெரிய வந்தது. அதை வைத்து விடாம பல இயக்குநர்களைச் சந்தித்தேன். பார்க்கிறவர்கள் எல்லாருமே, ‘அதுதான் ஒரு ரஜினிகாந்த் இருக்காரே, நீ எதுக்கு ஒரு விஜயகாந்த்‘னு சொல்லுவாங்க. அன்னிக்கு அப்படிக் கேட்ட பலருடைய படத்துல இப்ப நான் ஹீரோ. நினைச்சுப் பார்த்தா தமாஷாத்தான் இருக்கு! ‘அகல் விளக்கு’ படத்துக்கு எனக்கு சான்ஸ் வந்தது. இந்தப் படத்துல தான் நிறைய அவமானங்கள். அப்போ ஷோபா ரொம்ப பாப்புலர். பிஸி ஆர்ட்டிஸ்ட். ‘அகல் விளக்கு’ படப்பிடிப்பு அன்னிக்குக் காலையிலேருந்து மத்தியானம் சாப்பாட்டு வேளை வரைக்கும் ஷோபா வரலை. எனக்கு நல்ல பசி. பசி பொறுக்காம கடைசியிலே மதியம் சாப்பிட உட்கார்ந்தேன். உடனே ஷோபா வந்துட்டாங்கனு சொல்லி, சாப்பிடக்கூட விடாம பாதியிலேயே எழுப்பி இழுத்துக்கிட்டுப் போனாங்க. ஒரு நிமிஷம் மனசு கலங்கிட்டேன். இதையெல்லாம் மீறி தட்டுத்தடுமாறி முன்னுக்கு வந்துக்கிட்டிருந்தேங்கறது உண்மை! டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர், ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்துக்கு என்னை புக் பண்ணினார். ‘ஒருதலை ராகம்’ படம் அப்போ நல்லா ஓடிக்கிட்டிருந்தது. அதில் நடிச்ச ஒரு நடிகர் தனக்குத்தான் அந்த ரோலைத் தரணும்னு டைரக்டர்கிட்ட பிரஷர் கொடுத்தாரு. ஆனால், தயாரிப்பாளர் சிதம்பரம் ‘நான் படம் பண்ண வந்திருக்கேன். என் இஷ்டப்படிதான் படம் பண்ணுவேன். என் படத்திலே ஒரு தமிழன் தான் நடிக்கனும்’னு சொல்லிட்டார். ‘சட்டம் ஒரு இருட்டறை’ ரிலீஸாச்சு. படம் நல்ல ஹிட். பல மொழிகள்ல அந்தப் படத்தை எடுத்தாங்க. அதுக்குள்ள ரோஹிணி லாட்ஜுலேருந்து பக்கத்துக் கட்டடத்துல ஒரு ரூமுக்கு மாறியிருந்தோம். அதிலதான் நானும் என் நண்பன் இப்ராஹிமும் இருப்போம். நான் ஷூட்டிங் போயிட்டா இப்ராஹிம்தான் என் பேன்ட், ஷர்ட்டெல்லாம் ‘வாஷ்’ பண்ணுவான். என்னைப் பார்க்க யார் வந்தாலும், அவன் டீ, காபி வாங்கிக்கிட்டு வருவான். ரூம்ல நானும் அவனும் மட்டும் இருப்போம். ‘சட்டம் ஒரு இருட்டறை’ ரிலீஸானதும், ரூம்ல ஏகக் கூட்டம். ஆனால், பல மாதங்கள் சினிமாக்காரங்க பின்னால் அலைஞ்சதனால் நல்லவங்க யாரு, கெட்டவங்க யாருன்னு எங்களால் புரிஞ்சுக்க முடிஞ்சது. ஆட்களைத் தேர்ந்தெடுத்துப் படம் ஒப்புக்கிட்டோம். அதுக்கப்புறம் சில படங்கள். எல்லாமே ஃபெயிலியர். மறுபடியும் ரூம்ல நானும் இப்ராஹிமும் மட்டும்தான்! ஒரு வருஷம் சும்மா இருந்தோம். அதுக்கப்புறம்தான் பி.எஸ்.வி. பிக்சர்ஸ் ‘சாட்சி’ படம் வந்தது. ஹிட் ஆச்சு. ஒரு வழியா நின்னேன்!‘‘ விஜயகாந்த்துடன் நடிக்க மறுத்த நடிகைகள் ‘இந்த அவமான கட்டங்களைத் தாண்டிய பிறகு மட்டும் என்ன வாழ்ந்தது? அடுக்கடுக்காகத் திரைமறைவு சூழ்ச்சிகள் நடந்துக்கிட்டே இருந்தன. ‘பார்வையின் மறுபக்கம்’ படம் ஊட்டியில் ஷூட்டிங். எனக்கு ஜோடி ஸ்ரீப்ரியா. ஊட்டி போய்க் காத்துக் கிடந்தோம். அவங்க வரலை. விசாரிச்சா, என்னோடெல்லாம் அவங்க நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்களாம். இதை அவங்ககிட்டேயே கேட்டேன். அதே மாதிரி சரிதாவும் என்னோட நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. எனக்குக் காரணமே புரியலை. ‘நான் அவங்ககூட நடிக்க விரும்பலை’ன்னு சொன்னதாக யாரோ சரிதாகிட்டே சொன்னாங்களாம். இந்த மாதிரி பிரச்னைகளை வளரவிடக் கூடாதுன்னு முடிவு பண்ணி, நானே நேரே சரிதா வீட்டுக்குப் போனேன். அவங்க அம்மாவும் தங்கையும் இருந்தாங்க. ‘இதப் பாருங்க… நான் உங்க பொண்ணுகூட நடிக்கமாட்டேன்னு சொல்லலை. யாராவது சொன்னதை நம்பாதீங்க. உங்க பொண்ணுகூட நடிச்சாத்தான் எனக்கு வாழ்க்கைங்கறதுக்காக நான் நேரா உங்க வீட்டுக்கே வந்து கேட்கிறேன்னு நினைக்க வேண்டாம். கலைஞர்களுக்குள்ள உட்பூசல் இருக்கக்கூடாது. அதுக்காகத்தான் வந்தேன்‘னு பளிச்சுனு சொல்லிட்டு வந்துட்டேன். அதேமாதிரிதான் ராதிகாவும் என்னோட நடிக்க விருப்பப்படலை! இன்னிக்கு இவங்கள்லாம் என்னோட நடிக்கிறாங்க. அதுக்குப் பிறகு ராதிகாவும் நானும் நிறைய படங்கள்ல நடிச்சோம், நடிச்சிக்கிட்டிருக்கோம். ஆரம்பத்தில் இவங்க, ‘நடிக்கமாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சாங்க’னு சொல்றதை விட, என் பக்கம் திரும்பாம ஒதுங்கிக்கிட்டாங்க என்பதுதான் உண்மை. தப்பு இவங்க பேர்ல இல்லை. இவங்களுக்குப் பின்னால் பெரிய சக்திகள் இயங்கிக்கிட்டிருந்தது. ‘இவனோடெல்லாம் நடிச்சா, உங்க இமேஜ் கெட்டுடும்’ என்கிற பயமுறுத்தல் நிறைய இருந்தது. சாதாரண பெண்களுக்கே ‘தங்களுக்குப் பாதுகாப்பில்லை’னு எப்பவும் மனசுல ஒரு பயம் இருக்கும். சினிமாவில் இருக்கிற பெண்களுக்குக் கேட்க வேண்டுமா..? எப்பவும் Insecured-ஆ நினைப்பாங்க. இந்த ஃபீலிங், சம்பந்தப்பட்ட இந்த நடிகைகளுக்கும் இருந்ததில் வியப்பென்ன..? பின்னால் இந்த நடிகைகள் என்னோட நடிக்க ஆரம்பிச்ச பிறகுதான் அவங்க மனசுல களங்கமில்லேனு புரிஞ்சுக்கிட்டேன். எய்தவங்க யாரோ, அம்பை நொந்து என்ன பயன்..?’’ ‘‘தங்கள் படங்கள்ல ஒரு நாளாவது என்னை நடிக்க வெச்சு, அதுக்குப் பிறகு அந்தப் படத்தையே கேன்ஸல் பண்ணிட்டு, ‘விஜயகாந்துக்கு நடிக்க வரலை. அதனாலதான் அந்தப் படத்தை எடுக்கலை’னு பத்திரிகைகளுக்கு அறிக்கை கொடுக்கணும்னு இன்னிக்கும் ஆசைப்படற பெரிய மனிதர்கள் இருக்காங்க தெரியுமா? அதே சமயம் இவங்களே பினாமி மூலம் கால்ஷீட் கேட்கறதும் உண்டு. அவங்க மேலேயே நான் கோபப்படலை, நடிகைகள் மேலா கோபப்படப் போறேன்..? இன்னிக்குச் சொல்றேன், எழுதி வெச்சுக்குங்க. தன்மானத்தையும், சுயகௌரவத்தையும் இழந்து நடிச்சிக்கிட்டே இருக்கணும்கிற அவசியம் எனக்கில்லை. அப்படிச் செய்யவும் மாட்டேன். அதே சமயம், அடுத்தவங்க தன்மானத்தைக் குறைக்கிற மாதிரி நான் நடந்துக்கவும் மாட்டேன். இது நிச்சயம். என்னோட பழகினவங்களுக்கு தெரியும். அவமானத்தில் வளர்ந்தவங்களுக்கு மனசுல ஒருவிதமான கோபம் படிஞ்சு போயிடும். நாம பட்ட வேதனைகளை அடுத்தவனும் படனும்னு மத்தவங்களை அவமானப்படுத்துவாங்க. ஆனால், கடவுள் புண்ணியத்துல என் மனசுல அந்த மாதிரி எண்ணங்கள் வளரலை. “நாம பட்ட கஷ்டங்கள் மத்தவங்க படக்கூடாதுன்னு நினைக்கிறேன். நல்ல நடிகன்கிறதைவிட, நல்ல மனுஷன்னு பேர் எடுக்கிறதுதான் என் லட்சியம். இன்னிக்கு ஓரளவுக்கு அந்தப் பெயர் வாங்கியிருக்கேன். என் காம்பவுண்டுக்குள்ளே வந்து யாரும் அவமானப்படக்கூடாது. அதேமாதிரி பசியோட யாரும் திரும்பிப் போகக் கூடாது. தினமும் முப்பது, நாற்பது பேருக்காவது இங்க சாப்பாடு இருக்கும்.’’ ‘இது ஒருவிதமான ‘பப்ளிசிட்டி ஸ்டன்ட்’னு சொல்வாங்களே..?ன்னு கேட்டா அடுத்தவங்க சொல்றதைப் பத்தி எனக்குக் கவலையில்லை. தமிழ்நாடு முழுக்க ரைஸ் மில் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டுப் போராட்டம் நடத்தினப்போ, எங்க மில்லில் மட்டும் ‘ஸ்டிரைக்’ கிடையாது. எங்க மில்லில் கூலியும் அதிகம். அவங்க வயிறு வாட விடவும் மாட்டேன். இதெல்லாம் நான் நடிகனாகறதுக்கு முன்னாடியே! நான் சாப்பாடு போடறதை விளம்பரம் பண்ணியா போடறேன்..? அதேமாதிரி என் சொந்தப் படமான ‘உழவன் மகன்’ ஷூட்டிங்கின்போது எனக்கு என்ன சாப்பாடோ, அதுதான் எல்லா தொழிலாளர்களுக்கும். சோத்துல வேறுபாடு காண்பிச்சா உருப்படவே முடியாது. கடவுள் உண்டுன்னு நான் நம்புகிற மாதிரி இதுவும் என் அடிப்படை நம்பிக்கை…’’ என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார் விஜயகாந்த். https://minnambalam.com/cinema/self-esteem-and-self-respect-interview-given-by-vijayakanth-in-1986/
-
நாகபட்டினம் - காங்கேசன்துறை சரக்குக் கப்பற்சேவை விரைவில்!
நாகபட்டினம் - காங்கேசன்துறை சரக்குக் கப்பற்சேவை விரைவில்! எதிர்வரும் தைப்பொங்கலின் பின்னர் நாகப்பட்டினம் காங்கேசன்துறைக்கு இடையிலான சரக்குக் கப்பற்சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்தக் கப்பற்சேவைக்கான வளநிலைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் (28)நேற்று இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் இந்தியாவில் இருந்து வர்த்தகப் பரிமாற்றத்துக்காக டொலரைப் பயன்படுத்தல், இந்தியாவில் இருந்து சில பொருள்களை இலங்கைக்குள் இறக்குமதி செய்தல், சுங்கம் சாதகமான பதிலை வழங்கினால் இந்திய ரூபாவில் வர்த்தம் செய்தல், முதலீட்டாளரின் நல்லெண்ணம் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களுக்கான கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், மண்ணெண்ணெய் இறக்குமதிக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதன் மூலம் வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களுக்கு அனுகூலங்களை ஏற்படுத்தல் தமிழ் மக்கள் நெருக்கடிகள் இல்லாமல் வாழ்வதற்குத் தேவையான பொருள்களை இறக்குமதி செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வர்த்தகர் ஒருவர் இறக்குமதிக்கான கோரலை வழங்கியுள்ளார். கோரல்களைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் ஏற்றுமதி, இறக்குமதிக் கட்டணங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. கலந்துரையாடலில், யாழ். இந்தியத் துணைத்தூது வராலய அதிகாரி மனோஜ்குமார், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணம் மாவட்டச்செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், யாழ்.மாவட்ட வர்த்தகர்கள், மறவன்புலவு சச்சிதானந்தன், சிவசேனை அமைப்பினர், இந்திய, இலங்கை வங்கிகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். https://newuthayan.com/article/நாகபட்டினம்_-_காங்கேசன்துறை_சரக்குக்_கப்பற்சேவை_விரைவில்!
-
Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்
கனல் தெறிக்கும் கண்களுடன் அனல் தெறிக்கும் வசனங்களைத் திரையில் பேசியவர். எல்லோரையும் அன்புடனும், சமமாகவும் நடத்தியவர். ஆழ்ந்த இரங்கல்கள்.