Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. வடக்கிற்கான புகையிரத சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்! December 27, 2023 வடக்கு ரயில் மார்க்கத்தை நவீனமயமாக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனவரி 07 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே மஹவ தொடக்கம் அனுராதபுரம் வரையான வடக்கு ரயில் மார்க்கம் அன்றைய தினம் முதல் 06 மாத காலத்திற்கு மூடப்படும் என அதன் பிரதி முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே தெரிவித்துள்ளார். இந்த காலப்பகுதியில் கொழும்பில் இருந்து மஹவ மற்றும் அனுராதபுரத்திலிருந்து காங்கசன்துறை வரை மட்டுமே புகையிரத சேவைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2023/199101/
  2. சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தோருக்கு அம்பாறை மாவட்ட உறவுகள் அஞ்சலி ! By kugen சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தோருக்கு அம்பாறை மாவட்ட உறவுகள் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர். சுனாமி ஆழிப்பேரலையினால் உயிரிழந்தவர்களின் 19ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று (26) அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை ,சாய்ந்தமருது ,பாண்டிருப்பு ,பெரியநீலாவணை, மாளிகைக்காடு ,காரைதீவு ,நிந்தவூர், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களினால் கடைப்பிடிக்கப்பட்டது. இதன் படி கல்முனை பௌத்த விகாரை, பாண்டிருப்பு நினைவாலம் ,காரைதீவு சுனாமி நினைவாலயம் , கல்முனை கடற்கரை பள்ளிவாசலில் இடம்பெற்ற நிகழ்வில் பலரும் தமது உறவுகளை நினைவு கூர்ந்தனர். காரைதீவு கடற்கரையில் அமைந்துள்ள சுனாமி நினைவுத்தூபி முன்றலில் இந்துமத வழிபாடுகளுடன் நடைபெற்றது.இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன், ஆலய நிர்வாகிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர். இது தவிர மருதமுனை பகுதியில் Shams '97' சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில் மருதமுனை மையவாடி சிரமதானமும் சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்குமான துஆ பிரார்த்தனை ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. மேலும் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக இங்கு அமைக்கப்பட்ட பல தூபிகளில் மாலை அணிவிக்கப்பட்டு காலை வேளை பொதுச்சுடர் ஏற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சுனாமி பேரலை அனர்த்தம் இடம்பெற்று இடம்பெற்று இன்றுடன் 19 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் அம்பாறை மாவட்டம் கல்முனை மருதமுனை மற்றும் மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறும் சுனாமி அனர்த்த 19 வது ஆண்டு நினைவேந்தலும்இ சுனாமியால் உயிர் நீத்த உறவுகளுக்கான துஆ பிரார்த்தனையும் கத்தமுல் குர்ஆன் ஓதப்பட்டு விஷேட துஆ பிராத்தனையும் இடம்பெற்றிருந்தது. நாட்டில் கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட இயற்கை ஆழிப்பேரலை (சுனாமி) அனர்த்ததினால் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பகுதி அதிகமான உயிரிழப்புக்களையும், சேதங்களை சந்தித்த பிரதேசம் என்பதுடன் உலகை உலுக்கிய அனர்த்தங்கள் பல இருக்கிறது. அதில் சுனாமி அலையின் தாக்கம் தசாப்தங்கள் பல கடந்தும் அழியா நினைவுகள் கொண்டது. அந்த சுனாமியலையில் சிக்கி எமது நாட்டின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டது. அதில் அம்பாறை மாவட்டத்தின் பாதிப்பு மிக அதிகம். உயிர்கள், உடமைகள்,சொத்துக்கள் என பலதையும் இழந்து நின்ற மக்கள் தமது துயரநாளின் 19 வருடங்கள் கடந்துள்ளதை எண்ணி துஆ பிராத்தனைகள், நினைவஞ்சலிகள் நாடுமுழுவதிலும் நடந்து வருகிறமை குறிப்பிடத்தக்கது. https://www.battinews.com/2023/12/blog-post_495.html
  3. ஆழிப்பேரலையில் காவு கொல்லப்பட்டவர்களின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்! adminDecember 26, 2023 ஆழிப்பேரலையில் காவு கொல்லப்பட்டவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கில் இடம்பெற்றது. உடுத்துறை சுனாமிப் பொது நினைவாலயத்தில் உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் நினைவேந்தல் இடம்பெற்றது. சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு 9.25 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. தொடர்ந்து உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மாலையிட்டு தீபங்கள் ஏற்றி உணவுகளை படைத்து உறவினர்கள் அஞ்சலித்தனர். இதன்போது பெருமளவான பொதுமக்கள்,மதகுருமார்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டதுடன் உறவினர்கள் உயிரிழந்தவர்களை நினைத்து கண்ணீர் மல்கினர். கடந்த 2004 டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை பேரனர்த்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்ததுடன் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் அழிந்தமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2023/199028/
  4. போதமும் காணாத போதம் – 10 ” பூமியை பாவங்களால் நிறைத்தவர்களுக்கு தண்டனையுண்டு. எங்கும் தப்பியோட முடியாதபடி நீதியின் பொறியில் அகப்படுவார்கள். கடந்த காலங்களுக்கான தீர்ப்பு வழங்கப்படும்” அதிவணக்கத்திற்குரிய பிதா இராயப்பு ஜோசப் அவர்கள் குழுமியிருந்த சனங்களுக்கு மத்தியில் உரையாற்றினார். அரச வன்கவர் படையினரால் கடுமையான நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொண்ட பிதா இராயப்பு ஜோசப் பின்வாங்கவில்லை. பயந்தொடுங்கி வெளிறவில்லை. நிகழ்ந்த மானுடப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டுமென குரல் கொடுத்தார். நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு என்று சொல்லி உரையை நிறைவு செய்தார். அக்கா எதையும் கவனிக்காமல் இரண்டு கைகளையும் தூக்கி முட்டுக்காலில் நின்றாள். சாட்சியமற்ற வெளியில் உதிர மறுக்கும் உதிரச் சிறகுகள் குரூரமாய் வளர்ந்திருந்த நினைவது. மூர்க்கமாய் கொந்தளித்து பற்களை நெருமினாள். அக்காவைப் பிடித்துக் கொண்டேன். அவள் கேட்டாள் “எங்கட பாதர் சொல்ற தீர்ப்பு வழங்கப்படும் நாள் எப்ப வரும் தம்பி?” அவலத்தின் புன்சிரிப்புக்கு பதில்களற்று இரையானேன். சில நாட்களில் அக்காவின் உடல் வலுவிழந்திருந்தது. யாழ்ப்பாண பெரியாஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றேன். உளநல மருத்துவ நிபுணரிடம் காண்பித்தேன். ஏற்கனவே அக்காவுக்கு வழங்கப்பட்ட மருந்துகளோடு சிலவற்றை அதிகரித்தார். வாய்ப்பிருந்தால் களவாவோடை அம்மன் கோவிலுக்கு கூட்டிச் செல்லுங்கள் என்றார். துக்க நிவாரணமற்ற வாழ்வு, சிதலங்களின் நீள் சுருள் குறுக்கு மறுக்காக ஓடிக்கிழித்த பாதையில் தனித்துவிடப்பட்டது. நரகத்தில் வெறித்து வருந்தும் பாவிகளாய் எஞ்சிய ஒவ்வொருவருமே சித்தமழிகிறோம் என்றாள் அக்கா. அவளை இறுக அணைத்து தலைதடவினேன். நாங்கள் ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறி பேருந்துக்காக நின்றோம். பீதி நிரம்பிய கண்களோடு சனங்கள் வாழப்பழகினர். எது நேர்ந்தாலும் தாங்கிக் கொள்ளுமளவு மரத்துப் போனார்கள். இராணுவத்தினர் வீதிகளின் இருமருங்கிலும் நின்று யாழ் நகரத்தை கண்காணித்தனர். “இயக்கத்தை அழிச்சிட்டினம் தானே, இப்ப ஆருக்கு பயப்பிடினம்” மாங்காய் விற்கும் சிறுவன் கேட்டான். “எடேய், தம்பியா மொக்குத்தனமாய் கதைச்சு செத்துப்போய்டாத. உன்னட்ட மாங்காய் வாங்கினது பிழையா போயிற்று” நடுநடுங்கி அங்கிருந்து விலகியோடினார் படித்த யாழ்ப்பாணன். மீளக்குடியமர்ந்து சில நாட்களிலேயே அக்காவைப் பீடித்த உளத்துயரினால் வன்னியில் வாழ முடியவில்லை. அவளை அமைதிப்படுத்தவோ சுகப்படுத்தவோ தெய்வங்களிடம் வல்லமை இல்லாதிருந்தது. சொந்தக் கிராமத்தை விட்டு வெளியேறி யாழ்ப்பாணத்தில் வாடகைக்கு குடியிருந்தோம். செப்பனிடப்பட்டு இரண்டு அறைகள் கொண்ட கல்வீட்டில் உறங்கி விழித்தோம். ஏழாலையிலுள்ள பரியாரியார் ஒருவரிடம் அக்காவை அழைத்துச் சென்றோம். அவர் லேகியங்களையும், சூரணங்களையும் வழங்கி சுகமாகும் என்றார். ஆனால் அதற்கான எந்தச் சமிக்ஞைகளும் தோன்றவில்லை. நாளுக்கு நாள் அவளது பிரச்சனை அதிகமாயிற்று. அக்காவுக்கு விசர் என்று யாழ்ப்பாணத்திலும் சொல்லத் தொடங்கினர். வீட்டின் முன்னே நிற்கும் வாதாம் மரத்திலேறி ஊர் விழிக்க கத்தினாள். கோவிலில் தீபாராதனை நடந்து கொண்டிருந்த போது, தன்னுடைய பாவாடையைக் கழற்றி கருவறைக்குள் வீசிவிட்டாள். கட்டுப்படுத்த இயலாமல் அவளுக்கிருந்த ஒரே காலில் உருகுதடமிட்டு கயிற்றால் இறுக்கினோம். வீட்டிற்கு வந்தவர்கள் அக்காவுக்காக பரிதாபம் கொண்டனர். எங்களைப் போன்ற கல்மனம் கொண்டவர்கள் யாருமில்லையென சொல்லினர். தெய்வத்தை விடவுமா? என்றேன். “தம்பி, டாங்க் வருகிற சத்தம் கேக்குது, பங்கருக்குள்ள வா” அக்கா சொன்னாள். அவளுடைய கணுக்காலில் கயிற்றுத் தடம் நிரந்தரமாய் பதியத் தொடங்கியது. “சண்டை முடிஞ்சுது, இனி டாங்க்ம் வராது, கிபிரும் வராது. அமைதியாய் இரு” என்றேன். “போடா விசரா. சண்டை முடிஞ்சுதோ. நீயென்ன தளபதியே. சண்டை நடக்குது. எனக்குச் சத்தம் கேக்குது.” “எடியே வே*! கொஞ்சம் சும்மா இரடி. உதால போற ஆர்மிக்காரங்கள் கேட்டால் எங்கட கெதியென்ன” வீட்டிற்கு வந்திருந்த அத்தை நடுங்கிச் சொன்னாள். அக்கா பல ஆண்டுகளாய் உறங்காதவள். எத்தனையோ மருந்துகள் கொடுத்தும் பயனில்லை. அவள் யாருடனோ கதைத்துக் கொண்டே இருக்கிறாள். தன்னுடைய பெயரை ஒவ்வொரு நாளும் ஒன்றாகச் சொல்லுகிறாள். திடீரென அழத்தொடங்கி நிலத்தில் விழுந்து துடிக்கிறாள். அவளுக்குள் நிகழ்வது என்ன? ஒரு யுகத்தின் வீழ்ச்சியைப் பொடித்து அவளுக்குள் புதைத்தவர்கள் யார்? எப்போதாவது ஜன்னல் வழியாக நட்சத்திரங்களைப் பார்த்து உறைந்திருப்பாள். ஒருநாள் என்னையழைத்துக் கேட்டாள். “இண்டைக்கு வந்திருக்கிற நட்சத்திரங்கள் எல்லாமும் ஆர் தெரியுமா?” வானத்தைப் பார்த்தபடி கேட்டேன், ஆர்? “ஆரோ! எல்லாம் எங்கட குழந்தையள் தான். நாங்கள் இதுவரைக்கும் மண்ணுக்குள்ள புதைச்ச குழந்தையள். ஷெல்லடியிலையும், கிபிர் அடியிலையும் காயப்பட்ட அதுகளின்ர கடைசி நொடித் துடிப்ப மேல உத்துப் பார் என்றாள். நம்பவியலாதபடி எல்லா நட்சத்திரங்களும் துடியாய்த் துடித்தன. தானியங்கள் சொரிவதைப் போல அவை மண்ணில் விழுந்தன. வானில் யாவும் அழிந்திருந்தன. திடுமென மழை கொட்டத் தொடங்கிற்று. அக்கா வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை படுக்கைக்கு அழைத்துச் சென்று நித்திரை கொள் என்றேன். “எனக்கு நித்திரை வரவில்லை. நீ போய் படு” சலிப்புடன் தலையாட்டிவிட்டு விலகினேன். அக்கா கட்டிலிலேயே அமர்ந்திருந்தாள். இல்லாது போன காலின் எஞ்சிய துண்டத்தை பார்த்துக் கொண்டேயிருந்தாள். எக்காளச் சிரிப்போடு எழுந்து நின்றாள். மூதாதையர்களின் காலடியென மழை சீற்றம் கொண்டாடியது. தலையைத் தாழ்த்தி உச்சாடனமாய் அக்கா எதையோ சொல்லத் தொடங்கினாள். படுக்கையை விட்டு எழுந்து வந்து அவளைப் பார்த்தேன். முகம் முழுதும் ஆக்ரோஷத்தின் தீ பழுத்து அவளுடல் காயங்களால் துடிதுடித்தது. பக்கத்தில் செல்லப் பயந்தேன். யாரோடோ அவ்வளவு வேகமாக கதைக்கத் தொடங்கினாள் அக்கா. தெய்வத்தின் லட்சணத்தோடு அகோரம் பூண்டிருந்தாள். குருதியின் வரலாற்றுப் படலம் மிதக்கும் துயரத்திவலையாக அசையாதிருந்தாள். “அக்கா” என்றழைத்தேன். அவளால் முடிந்ததெல்லாம் இதுதான் என்பதைப் போல தன்னுடைய கையிலிருந்த சிறிய தீப்பெட்டியைத் தந்து அதனைத் திறந்து பார் என்றாள். யாரோ கடித்து மிச்சம் வைத்த பிஸ்கட் கடல் மணலும் குருதியும் ஒட்டி உலர்ந்திருந்தது. மீண்டும் மீண்டும் எதுவும் புரியாமல் பார்த்தேன். “இதென்னக்காக, ஆரோ சாப்பிட்ட மிச்ச பிஸ்கட்ட எடுத்து வைச்சிருக்கிறாய். அதில ரத்தம் வேற காய்ஞ்சிருக்கு” என்றேன். “இந்த பிஸ்கட்டும் அதில ஒட்டியிருக்கிற கடல் மணலும் ரத்தமும் தான் எங்கட மிச்சம்” “ஆர் சாப்பிட்ட மிச்சமிது” “எங்கட சந்ததியோட மிச்சம். அந்த மிச்சம் சாப்பிட்ட மிச்சம்” என்று சொல்லிக்கொண்டிருந்த அக்காவின் மீது இறங்கியதொரு நிழல் கண்டேன். கண்களை மூடித் திறந்தேன். அக்கா படுக்கையில் அமர்ந்திருந்து “என்னடா” என்று கேட்டாள். என்னால் எதுவும் சொல்ல இயலவில்லை. மழை பாதாளம் வரை இறங்குகிறேன் என்பதைப் போல அடித்துப் பெய்தது. அன்றைக்கு மதியம் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. வீட்டுக்கு பக்கமிருப்பதால் நானும் அம்மாவும் சென்றோம். அக்கா வீட்டிலிருந்தாள். அவளது கையில் கோவில் நூலைக் கட்டிவிட்டேன். அம்மா காலில் கயிற்றைக் கட்டி இரும்போடு இணைத்தாள். அன்னதானம் முடித்து திரும்பிவருகிற போது அக்கா யாரோடோ கதைப்பது கேட்டது. வாசலை எட்டிப் பார்த்தால் எவரின் செருப்பும் இல்லை. நாங்கள் உள்ளே சென்றோம். அக்கா, தனக்கருகே இருந்த கதிரையை நகர்த்தி வைத்து விட்டு, “இதில இருந்து கதையுங்கோ” என்றாள். அம்மா “ஆரடி மோளே வந்திருக்கிறது” என்று கேட்டாள். “உங்களுக்குத் தெரியாதம்மா. இயக்கத்தில பெரிய ஆள். பெயர் சொல்ல வேண்டாமாம்” அக்கா சொன்னாள். “எனக்கு பெயர் மறைக்கிற இயக்க ஆளை இண்டைக்குத் தான் கேள்விப்படுகிறன். சரி சாப்பிடுகிறாரோ. சமைக்கவா.கேள்” “வேண்டாம் அவர் வெளியால போய் மச்சம் சாப்பிடுகிறாராம். இண்டைக்கு நாங்கள் விரதமெண்டு யோசிக்கிறார்” “எடியே விசரி. வந்திருக்கிறவன் இயக்கமோ, அல்லது கோவில் தர்மகர்த்தாவோ. தெய்வத்துக்கு தானே விரதமிருக்கிறம். அது என்ன கேக்குதோ குடுக்கிறதுதான் விரதம். என்ன வேணுமெண்டு கேள்” “மீன் பொரியலாம்” “சரி அரைமணித்தியாலம் கதைச்சுக் கொண்டிரு. சமையல் முடிஞ்சிடும்” என்றாள் அம்மா. நான் அடுப்படிக்குள் நுழைந்து “என்னம்மா நீயும் அவளோட சேர்ந்து விசராட்டம் போடுகிறாய்” என்று கத்தினேன். அம்மா கண்ணீரை துடைத்து வீசினாள். “ஓலமிட்டு குரல் கரைக்குமளவு சாம்பலின் பாரம் நெஞ்சில இருக்கு, ஆனால் அழக் கூடாது. கழிவிரக்கம் காட்டி துயரத்திட்ட மண்டியிடக் கூடாது. இந்தக் குறுகிய வாழ்வில சித்தம் பிறழ்ந்து வாழ்றதெல்லாம் கொடுப்பினை மோனே. கொக்காவுக்கு எதுவும் தெரியேல்ல. அவளுக்குள்ள கொந்தளிப்புமிருக்கு அமைதியுமிருக்கு. ஆனால் நல்லாய் இருக்கிற எங்களிட்ட அமைதி எங்கயிருக்கு சொல்லு. அவள் ஆரோடையாவது கதைக்கிறாளே அது காணும். எனக்கு அது நிம்மதியாய் இருக்கு” என்றாள். அம்மா கீரி மீன் பொரியலோடு சோற்றைப் பரிமாறினாள். ஏற்கனவே கால் கட்டை கழற்றியிருந்தேன். அக்கா கூந்தலை அவிழ்த்து ஒற்றைக்காலில் நின்று கொண்டு சாப்பிடத் தொடங்கினாள். கண்கள் நிறம் மாறி ஒளிர்ந்தன. வயிறு திறந்து அலறுவதைப் போல அக்கா காற்றை விட்டாள். சோற்றுக் கவளங்களை எரியும் தீயில் வீசுவதைப் போல தனக்குள் தள்ளினாள். பசியின் காலடியில் அவளுடல் நடுங்குகிறது. அவளது பசியா? யாரின் பசிக்கு அக்கா உணவு உண்கிறாள்? அம்மாவை அந்தத் காட்சி தாளமுடியாது உருக்குலைத்தது. தட்டில் மீண்டும் சோறு பரிமாறினோம். புதிய கனவு மாதிரி அக்காவுக்குள் விழித்தெழுந்தது யார்? ஒற்றைக்காலுடன் நின்றுகொண்டே உணவுண்ட அவளின் ஆங்காரம் மெல்ல மெல்ல அடங்கியது. சோற்றுத் தட்டை வீசி எறிந்தாள். யாராலும் அறியமுடியாத மொழியின் தெய்வச் சடங்கா நிகழ்ந்து முடிந்தது. அக்கா அப்படியே சிறுநீர் கழிந்தாள். வீடெங்கும் வெக்கையும் கடல் வாசனையும் எழுந்தது. அம்மா எதுவும் சொல்லவில்லை. நடப்பவற்றை பார்த்தபடி இருந்தாள். சில நாட்களுக்குப் பிறகு ஒரு மழைப் பொழுதில் அக்கா நன்றாக உறங்கினாள். கடைக்குச் சென்று திரும்பிய அம்மாவுக்கு அதுவொரு திருக்காட்சியாக அமைந்தது. சிறிய போர்வையால் அவளது கால்களை மூடினேன். “பரியாரியிடம் போய் அவள் நித்திரை கொண்டதைச் சொல்லு” என்றாள் அம்மா. போகலாமென தலையசைத்தேன். அக்கா விழிக்கும் வரை அருகிலேயே இருந்தேன். ஒருக்களித்துப் படுத்தவள் மல்லாந்து கொண்டாள். அவளுடைய பாயின் விளிம்பில் பிள்ளையார் எறும்புகள் ஓடின. அக்காவின் முகத்தில் இறுமாப்பு சேர்ந்திருந்தது. எல்லாமும் புதைந்த கடைசித் திகதியில் முள்ளிவாய்க்காலை விட்டு வெளியேற முடிவு செய்தோம். அக்கா வர மறுத்தாள். உந்தக் கெடுவார் ஆர்மிக்காரங்களிட்ட வந்து வாழ ஏலாது. என்னை ஆரேனும் சுட்டுக் கொல்லுங்கோ” என்று சத்தமாய் கத்தினாள். அன்றைக்குத் தான் இந்த இறுமாப்பை கடைசியாகக் கண்டது. அக்கா விசுக்கென விழித்தெழுந்து தலையிலடித்தபடி கேட்டாள். “நாங்கள் எப்பிடி தப்பினாங்கள்” “நாங்களும் தப்பேல்ல மோளே” என்றாள் அம்மா. திசை பிறழாது கடல் நோக்கி ஓடினாள். தன்னுடைய நிர்வாணத்தை வெறிகொண்டு படைத்து, “கடலே! மீதியற்று அழிந்து போ, லட்சோப லட்ச சனங்களின் பிணம் விழுங்கிய உன் அலைகளில் கொடுஞ்சாபம் படிந்திருக்கிறது. அழிந்து போ. பூமியிலிருந்து பாவம் மறைந்து போகட்டும். தீயோர் என்றென்றும் அழிந்து போவார்களாக!” என்றாள். அலை ஒடுங்கி இருண்டது கடல். ஊர்ந்து வந்து அக்காவின் தாள் பணிந்து “என் மகளே! மன்னிக்க” என்றது. வானத்தில் சுடர்ந்த நட்சத்திரங்கள் துடிதுடித்தபடி நடப்பவற்றை பார்த்தன. அக்கா மேல்நோக்கிப் பார்த்து “பிள்ளைகளே! உங்களின் பொருட்டு எவரையும் மன்னிக்கேன், நீங்கள் அமைதி கொள்ளுங்கள். உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள்”என்றாள். மோதித்தெறிக்கும் முழக்கத்தோடு மழை பொழிய கடல் மீது ஒலித்த அவளின் குரல் நூற்றாண்டின் முறையீடு. எம்மை வஞ்சித்த பூமி அஞ்சட்டும் என்றனர் சனங்கள். https://akaramuthalvan.com/?p=1388
  5. நல்லவேளை சுமே ஆன்ரி 1998 இல் வீடு வாங்கவில்லை! எதிர்ப்பக்கம் 47 நம்பரில் எங்கள் நண்பர்கள் வாடகைக்கு இருந்தவீடுதான் எங்கள் வார இறுதிக் கொட்டகை! எங்கள் பார்ட்டிகளாலும், பேசிய “வார்த்தை”களாலும், சத்தத்தாலும் அந்தத் தெருவே அதிர்ந்துகொண்டிருக்கும்! கிழவனைக் கண்ட ஞாபகமே இல்லை!
  6. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏராளன்🎉🎂🎊
  7. போதமும் காணாத போதம் – 09 அண்ணாவின் வித்துடலை குருதியூறும் நிலத்தினுள் விதைத்து மூன்றாம் நாள் அதிகாலையில் பெருங்குரலெடுத்து அழுதாள் அம்மா. திகைப்படைந்து எழுந்தவர்கள், மங்கலான உறக்கக் கலக்கத்தோடு பார்த்தார்கள். நீராடி விரிந்திருந்த ஈரக் கூந்தலோடு அண்ணாவின் புகைப்படத்துக்கு முன் அமர்ந்திருந்தாள். சிறிய குத்து விளக்கில் அணையாச் சுடர் ஈகித்திருந்தது. நேற்றிரவு படைக்கப்பட்ட சாப்பாட்டில் ஈரம் விலகியிருந்தது. அம்மா தண்ணீர் செம்பைத் தூக்கி கவிழ்த்துக் காட்டினாள். ஒரு சொட்டு நீரில்லை. மீண்டும் அழத்தொடங்கினாள். வாதையின் செதில்கள் அகலமறுத்துப் பெருகிய பொழுதாயிற்று. “என் நிழலில் மரணத்தின் நித்தியம் முழுமரமாய் வளர்ந்து நிற்கிறது. ஆனாலும் உதிரும் ஓரிலையின் நடுக்கம் கூட என் இதயத்தில் இல்லை. மீளவும் சொல்கிறேன். பீரங்கிகளினதும் போர்விமானங்களினதும் தாக்குதல்களால் பீதியாகமாட்டேன். விடுதலைக்காக போரிட்டு மடியுமிந்த வாழ்வு மகத்தானது. தெளிந்த வானத்தை விடவும் ஆகிருதியில் வலுத்தது என் பெருங்கனவு. இதோ இக்கணத்தில் தியாகத்தின் பலிபீடத்தில் கிடத்தப்பட்டுள்ளேன். என் விழுப்புண் மீது அழுந்தப் பதிந்திருக்கும் ரத்த வரிகளை மேற்கு வானில் தாழும் சூரியன் பார்க்கிறது. நெருப்பேந்தி நாளையது கிழக்கில் தோன்றுகையில் என் முகத்தைச் சூடி வரும். ஆகுதியின் இனிமையை அருளும் நிலத்தை எதனாலும் விழுங்கிவிட முடியாது.” வீரச்சாவு எய்துவதற்கு முன்பாக அண்ணா திரும்பத் திரும்ப சொன்ன வார்த்தைகள் இவையென களமுனையிலிருந்து வந்த படையணிக்காரர்கள் சொன்னார்கள். அண்ணா நன்றாக உரையாற்றுவான். கவிதைகள் எழுதவும் செய்வான். விடுப்பில் வந்திருந்த நாட்களில் எழுதிய சில கவிதைகளை அம்மாவிடம் கையளித்திருந்தான். ஒருநாள் நானும் அவனும் குளத்தில் குளித்துவிட்டு வீடு திரும்பிய போது கொந்தளிப்பாக சிலவற்றைக் கதைத்தோம். “போரால் எதையும் பெறமுடியாது போனால், இத்தனை இழப்புகளும் வீண் அல்லவா” என்றேன். இத்தனை தியாகங்களும் வெறும் இழப்பாகவே எஞ்சுமென உன்னால் நினைத்துப் பார்க்க முடிகிறதா! போரை நம்பியதல்ல இந்தப் போராட்டம். எங்கள் வாழ்வுரிமையை போரின் வழியாக மட்டுமே வலியுறுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தை நம்பமுடியாதபடி காலம் தருவித்துவிட்டது. நீ சொல்வதைப் போல இழப்புக்கள் வீண் போனாலும் மிஞ்சியிருப்பவர்கள் நினைவு கூருவர். மாண்டவர்கள் இங்கேயே தான் இருப்பார்கள். ஏனென்றால் இந்த மண் அவர்களின் மேனி. எஞ்சியவர்களை அவர்கள்தான் சுமப்பார்கள். இறுதியில் இழப்பைத் தான் பெறுவோமென்றால் ஞாலத்தின் அறம் புழுத்துப்போகும். குமட்டல் வாடை மனுஷகுலத்தின் மீது ஈயெனப் பெருகும். அற்பமான நோய்களில் உலகு நொடியும். எம் இனத்தின் புராதனக் கண்ணீரும் குருதியும் அறத்தை விடவும் மேன்மையான ஆற்றலோடு தீவிரமாகும். இழப்பின் ஞாபகங்கள் பரம்பரை பரம்பரையாக எங்கள் மாதர்களின் ஆதிக்குகையுள் அனற்குழம்பெனக் கனன்று கருவாகி வெளியுமிளும். பூர்வீகச் சந்ததி பெருகும்” என்றான். உடலீரம் காய்ந்திருந்தது. அண்ணாவின் சொற்கள் சுதந்திரத்தின் பிரசங்கமென என்னுள்ளே வலுவாக உருகி இறங்கியது. “தியாகங்கள் எல்லாமும் ஞாபகங்களாய் எஞ்சினால், பாழான போரை பூமி நினைவில் வைத்துக் கொள்ளும். அது நன்மைக்கே” என்றேன். “போரை விடவும் பூமி பாழானது. ஏனெனில் போர் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வழி மட்டுமே” என்ற அண்ணா நாயுண்ணிப் பழங்களைப் பிடுங்கி வாயில் போட்டான். இனிப்புச் சுரந்து இதமாய் உடல் மொழிந்தான். அன்றிரவு நேரமாகியும் நான் விழித்திருந்தேன். குப்பி விளக்கு வெளிச்சத்தில் ஓவியமொன்றை வரைந்து கொண்டிருந்தேன். வீட்டின் வெளியே அமர்ந்திருந்து அம்மாவும் அண்ணாவும் கதைத்துக் கொண்டிருந்தார்கள். களமுனையாகவிருக்கும் சொந்தவூரின் கோவில்களுக்கு விளக்கு வைக்குமாறு சொன்னாள். அண்ணாவுக்கு இறை பக்தி அதிகம். சிறிய வயது முதலே சைவ மடத்தில் தீட்சை பெற்று நடராஜருக்கு பூசை செய்தவன். அவனுடைய ஆச்சார நெறிகள் தீவிரமானவையாக இருந்தன. இயக்க வாழ்க்கையில் எல்லாமும் நொறுங்குண்டு தலைகீழானது. மாட்டிறைச்சியை விடவும் ருசியானது எதுவுமில்லை என்பது அண்ணாவின் உச்சாடனமாய் ஆகியிருந்தது. அண்ணாவுக்கு எட்டாம் நாள் படையல் வைக்கும் போது அம்மா மாட்டிறைச்சியையும் சேர்த்துக் கொண்டாள். சொந்தக்காரர்கள் சிலர் முகம் சுழித்து வேண்டாமென்றனர். “பிள்ளைக்கு பிடிச்சததான் வைக்கோணும், உங்களுக்கு பிடிச்சத வைக்க வேணுமெண்டால் நீங்கள் மோசம் போன பிறகு செய்து வைக்கிறன்” என்ற அம்மாவின் கூற்று பலரையும் சங்கடத்தில் ஆழ்த்தியது. செம்பு தளும்ப தண்ணீர் வைக்கப்பட்டு தலை வாழை இலையில் மாமிசக் குழம்புகள் எல்லாமும் படைக்கப்பட்டன. முச்சந்தியில் கழிப்புக் கழித்து பூசணியை இரண்டாகப் பிளந்து குங்குமம் தடவி, எல்லாவற்றையும் சுளகொன்றில் பரப்பி வைத்துவிட்டு வந்தோம். வீட்டில் அனைவரும் நிறைவாகச் சாப்பிட்டனர். அம்மா உபசரித்து கவனித்தாள். தண்ணீர் என்று சபையில் யாரும் கேட்காத வண்ணம் எல்லோருக்கும் வழங்கப்பட்டுக் கொண்டே இருந்தது. வீட்டைச் சுற்றியும் புதுக்குடங்களில் குடிதண்ணீர் நிறைத்து வைத்திருந்தாள். அம்மாவுக்கு சித்தம் குலைந்திற்றோவென நொந்த சிலர் சிறிய தலையசைப்போடு எழுந்து சென்றனர். பிள்ளையின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தாள் அம்மா. “நான் சாகத் தயாரானவன், வீரச்சாவு அடைந்தால் அழாதேங்கோ. நீங்கள் என்னைப் பிரசவித்த தருணத்தை விடவும் பூமிக்குள் விதைக்கும் போது மங்கலம் கொள்வீர்கள்” என்றுரைத்த அண்ணாவின் குரல் அம்மாவின் ஞாபகத்தில் பொங்கி நுரைத்தது.”வந்து கொண்டிருக்கிறான், தேவலோகத்திலிருந்து என் மகன் வருகிறான்” அம்மா ஆனந்தித்து உறுதியாகச் சொன்னாள். பரவசமாகி தன்னுடைய முலைகளை எடுத்து வெளி நோக்கி விரல்களால் பிசுக்கி “பிள்ளைக்கு சரியான தண்ணி விடாய்” என்றாள். இரவு முழுதும் நிலவும் பனியும் விழித்திருந்தது. அம்மா அடிக்கடி குடங்களையும், படையலில் வைக்கப்பட்டிருந்த செம்பையும் சென்று பார்த்தாள். அளவு குறையவில்லை. வீட்டின் வாசலை விட்டு ஒதுங்கியிருந்தாள். அண்ணா உள்ளே செல்ல ஏதும் தடையாக இருக்கவே கூடாது என ஒழுங்குகள் செய்திருந்தாள். ஆவியாய் அலைக்கழியும் அண்ணாவுக்காக சொந்தக்காரர்கள் சிலரும் காத்திருந்தனர். அற்புதங்களுக்காக காத்திருந்த சனங்களின் கதைகள் இரவைத் தீண்டியது. வீட்டினுள்ளே ஒரு பல்லி சொன்னது. அதன் நீளவொலி எல்லோரையும் தன்பக்கம் திருப்பியது. செய்வினைகள் அறுப்பதில் வல்லவளாக இருந்த புறாக்குட்டி அத்தை “காயப்பட்டு துடிதுடித்து பங்கருக்குள்ள தாகமெடுக்க, தண்ணியில்லாமல் தன்ர ரதத்தையே அள்ளி நக்கியிருக்கிறான். அந்தச் சீவன்ர தாகம் பூலோகத்தில தான் இருக்கு. அவன் வருவான்” என்றாள். நான் பொறுமையிழந்து “ எங்களுடைய ஊகத்திற்கும் ஆசைக்கும் எதுவும் நடக்காது. விசர்த்தனமாய் கதைக்கிறத விட்டிட்டு எல்லாரும் போய் படுங்கோ” என்றேன். “இந்தப் பூமியில இரவு வாறதே ஆவிகளுக்காகத் தான். அதுகள் நடமாடுகிற ஒரு பொழுது இது. நீ நம்பாட்டி உள்ள போய் படன்ரா” என்ற கனகு பெரியப்பா சுருட்டை புகைக்கத் தொடங்கினார். “அவன் வந்து தண்ணி குடிப்பான். அதுவரைக்கு நான் முழிச்சிருப்பன்” அடைகாத்திருக்கும் தாய்மையின் தழல் குழம்பு வெடித்தது. “எடியே விசரி. இப்பிடி செத்த இயக்கப் பிள்ளையள் வந்து தண்ணி குடிக்க வெளிக்கிட்டால் எங்கட கடல் தண்ணி வத்தியிருக்குமெல்லே. உள்ளே போய் படு” என்று முஸ்பாத்தியாகச் சொன்ன காங்கேசந்துறை மாமாவை திரும்பிக்கூடப் பார்க்காமல் அம்மா தவிர்த்தாள். “உன்னுடைய முஸ்பாத்திக்கு அந்த செவிட்டுப் பரத்தை சிரிக்கலாம். இஞ்ச ஆரும் சிரிக்க மாட்டினம். எழும்பிப் போடா பு***ண்டி” கனகுப் பெரியப்பாவின் பேச்சில் எச்சரிக்கை தொனி தெரிந்தது. காங்கேசந்துறை மாமா பேச்சிழந்து வெட்கி நின்றார். அம்மாவுக்கு விழித்திருப்பது ஆறுதலாகவிருந்தது. ஆமை போலூர்ந்த இரவு தீர்ந்து போனது. ஆனாலும் செம்பிலோ, குடங்களிலோ தண்ணீர் அப்படியே இருந்தது. அம்மா செம்பு நீரை எடுத்து பூக்கன்றின் அடியில் ஊற்றிவிட்டு புதிய நீர் நிறைத்து வைத்தாள். அவளுக்குள் பிரார்த்தனையின் அழுகுரல் பூகம்பமாய் ஒட்டிக்கிடந்தது. தன்னையிழந்த ஞாபகமாய் அம்மா வீட்டுக்குள் நடமாடினாள். கல்லறைகளும் நடுகற்களும் நிறையும் விதியின் வசியத்தை வாழ்வென எண்ணும் வருத்தம் எனக்குமிருந்தது. சாவளிக்கும் அடைக்கலம் அரணாகவிருந்தது. “அண்ணா வந்து தண்ணி குடிக்கவில்லையெண்டு, கவலைப்படாதேயம்மா. அவன் உன்ர விரும்பத்தை விளங்கிக் கொள்வான்” என்றேன். “அவனுக்கு தண்ணி விடாய், பிள்ளையைத் தெய்வம் அப்பிடி கூட்டிக் கொண்டு போயிருக்க கூடாது. சீவனுக்கு தாகமிருக்கிறது சிவனுக்கு தெரியாமல் போச்சே” “அதுக்காக அவர் ஆவியா வந்து தண்ணி குடிப்பாரே ” “அடேய், அண்டைக்கு வந்து தண்ணி குடிச்சது அவன் தான். அவன் ஆவியில்லை. என்ர பிள்ளை தேவர். முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு நிகர்த்த முதலாமவன்” மறக்கவியலாத தழும்பென பதில் உரைத்தாள் அம்மா. முகம் வெளிறி இயல்புக்கு வர முயன்றேன். தீ பெருகும் காலத்தின் முற்றுகையில் உதிர்காலத்து இலையென கணங்கள் பொசுங்கின. அலைகளின் ஓயாத முறையீடு போல அம்மா பெரும் பொழுதுக்காய் காத்திருந்தாள். பெருங்கூவலோடு மழையின் பெருவிழிகள் திறந்தன. உப்புதிர்க்கும் கடல் காற்று கூரையூடே புகுந்தது. கொடுஞ்சாபமென உறைந்திருந்த நிலப்புழுதி மணமெழுந்தது. இடியதிர மிகுந்து பரவிய மின்னல் ஒளியிழந்து உலர்ந்தது. அண்ணாவின் புகைப்படத்து குத்துவிளக்குத் திரியில் குருதியின் சுளிப்பு நிறம் கொண்டெரிந்தது. “அற்புதங்களின் வருகையை நிரூபிக்க அதிகம் சிரமப்படவேண்டியதில்லை” என்றாள் அம்மா. ஒழுகும் தாழ்வாரத்தின் கீழ் நின்று சிறுநீர் பொழியும் நாயின் கண்கள் சலனமடைந்திருந்தன. நிழல் மரவள்ளி மரத்தில் அடைந்திருந்த கோழிகள் நனைந்து நடுங்கின. அம்மா மழையில் நனைந்தபடி வீட்டுப் படலையைத் திறந்து வைத்தாள். “அவன் வருகிறான், தண்ணி விடாய்ல வருகிறான். இந்தத் தண்ணி போதாது.” என்றாள். துயர் ததும்பும் ஒரு முதுமுரம் மண்ணில் வேரூன்றி மழையில் நனைந்து கிளையசைப்பதைப் போல கையசைத்து சொல்லிக்கொண்டே இருந்தாள். “அவன் வருகிறான் அவனுக்கு சரியான தண்ணி விடாய்” அடுத்தநாள் காலையில் குடங்களில் தண்ணீர் இல்லை. செம்பு காய்ந்திருந்தது. வரலாற்றை தேடுபவளைப் போல வீட்டின் வாசல்வரை அண்ணாவின் காலடித்தடம் தேடி கண்ணீர் கசிந்தாள். கரைக்க இயலாது திணறும் சாம்பல் சேற்றில் அவள் கால்கள் புதைந்து விடுபட மறுத்தன. “அவன் வந்திருக்கிறான். ஆனால் நடந்து வரேல்ல. பறந்து வந்திருக்கிறான். பூமியில் தேவர்கள் நடக்க மாட்டார்கள் அல்லவா” என்றாள். இது நீண்டால் அம்மாவுக்கு சித்தம் பிசகிவிடுமென எண்ணிப் பயந்தேன். எங்கள் சொந்தக்கார பரியாரியிடம் விஷயத்தைச் சொல்லி மருந்து கேட்டேன். “அவளுக்கு சித்தம் நன்றாகவே இருக்கிறது. எங்களுக்குத் தான் பிசகிவிட்டது மோனே. நீ எழும்பிப் போ” என்றார். அம்மா வீட்டுக்குளேயே இருந்தாள். ஊரிலுள்ள குளங்களில் இருந்து கிணறுகள் வரை தண்ணீர் சுத்தமாக இருக்கிறதாவென கூலிக்கு ஆள் வைத்துப் பார்த்தாள். ஒவ்வொரு இரவும் அவள் அண்ணாவுக்காக காத்திருந்தாள். குடங்களையும், செம்பையும் வற்றிய நீரோடு கனவில் கண்டாள். அன்றைக்கு ஊரில் இன்னொரு வீட்டில் வீரச்சாவு. இரவு முழுவதும் அங்கிருக்கலாமெனத் தோன்றியது. ஆனாலும் அம்மாவை தனியாக விடுவது பயமாகவுமிருந்தது. நள்ளிரவு வீட்டுக்கு புறப்பட்டு வந்தேன். இரண்டு நாய்கள் தெருவின் முடக்கில் படுத்திருந்தன. ஒரு நாயின் குழைவொலி கொஞ்சம் துணையாகவிருந்தது. வீட்டின் படலையைத் திறந்து உள்ளே நுழைந்தேன். தாழ்வாரத்தின் கீழே அமர்ந்திருந்த அண்ணா சிதைந்து அறுந்து தொங்கும் காலைப்பிடித்தபடி குடத்திலிருந்து தண்ணீரைக் குடிக்கிறான். இரண்டு கால்களும் சிதைந்து ரத்தம் விலகித் தேங்கியிருந்தது. விடாய் அடங்காது நிலமெனக் கிடக்கும் குருதியை அள்ளி பருகுகிறான். அண்ணா….என்று பெருங்குரலெடுத்து அழுதபடி ஓடிப்போனேன். வீட்டினுள்ளிருந்து அம்மா சொன்னாள் “ எடேய், விசரா கொண்ணா வீட்டுக்குள்ள என்னோட இருக்கிறான். உள்ள வா” வாசலில் நின்று உள்ளே பார்த்தேன். சிதைந்து தொங்கிய கால்களோடு குருதி தேங்கிய சாணத்தரையில் அண்ணாவுக்கு பாலூட்டிக் கொண்டிருந்தாள் அம்மா. என்னைக் கண்டதும் “ இவனுக்கு சரியான தண்ணி விடாய், பா**யை விட்டு வாய எடுக்க மாட்டேன் என்கிறான்” எனச் சொல்லி மகிழ்ந்தாள். அம்மா, என்றபடி அவளருகே ஓடினேன். அவள் என்னை அணைத்துச் சொன்னாள். “சந்ததி சந்தியாய் இவனுக்கு நாங்கள் தண்ணி வைக்கவேணும். அவன் எங்கட வாசலுக்கு பறந்து வருவான்” அண்ணாவின் கால்களைத் தொட்டுப் பார்த்தேன். குருதியின் நீளக் கனியென தணல் பழுத்திருந்தது. கைகளை விசுக்கென எடுத்துக் கொண்டேன். “சரியான வெக்கை என்ன! இதுதான் எங்கட ஞாபகமடா மோனே” என்றாள் அம்மா. https://akaramuthalvan.com/?p=1359
  8. புலமைப் பரீட்சையும் அன்பளிப்புகளும் December 22, 2023 — எழுவான் வேலன் — ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர்களை பரிசு மழையால் மூழ்கடிக்கும் பழக்கம் ஒன்று இப்போ ஆரம்பமாகியிருக்கிறது. வறுமையான பிள்ளைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புலமைப் பரிசில் திட்டம் இப்போ பெற்றோரை வறுமையாக்கும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்த புலமைப் பரீட்சையை நோக்கமாகக் கொண்டு முதலாம் ஆண்டிலிருந்தே பிள்ளைகளுக்கு ரியுசன் ஆரம்பிக்கப்படுகிறது. அன்றிலிருந்து ஐந்து வருடத்துக்கு ரியுசன் காசு கட்ட வேண்டிய நிலைக்கு பெற்றோர்கள் தள்ளப்படுகிறார்கள். (புலமைப் பரீட்சை முடிந்த பின் கட்டப்படுகின்ற ரியுசன் காசு வேறு கணக்கு) நான்காம் ஆண்டுக்குப் போனதும் புலமைப் பரீட்சை கற்பிக்கும் ஆசிரியர்களின் பொறுப்பில் பிள்ளை ஒப்படைக்கப்படுகின்றது. இரண்டு வருடத்துக்கு அவர்கள் காசை உறிஞ்சிக் கொள்வார்கள். இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் பெரும்பாலான இடங்களில் குறித்த பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியரே பிரத்தியேக வகுப்பாக இதை பாடசாலைக்கு வெளியே நடத்துவதாகும். ஆரம்பத்தில் பிள்ளை சித்தியடைந்தால் பிள்ளையின் மகிழ்ச்சிக்காக ஆசிரியர் சக மாணவர்கள் என அனைவருக்கும் இனிப்புக்கள் பகிர்வதைக் காணக் கூடியதாக இருந்தது. பின்நாட்களில் இது குறித்த ஆசிரியருக்கும் தலைமை ஆசிரியருக்கும் விருந்து படைப்பதாக மாற்றமடைந்து இன்று விருந்துடன் ஆசிரியைகளுக்கு சேலையும் ஆசிரியர்களுக்கு சேட், வேட்டி என்பன கொடுப்பதாக மாறியிருக்கிறது. பதினைந்து ஆசிரியர்கள் இருக்கும் ஒரு பள்ளிக் கூடத்தில் மூன்று பிள்ளைகள் மட்டும் சித்தியடைந்தால் ஒரு பெற்றோர் ஐந்து ஆசிரியருக்கு சாப்பாடும் ஆடைகளும் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகிறார். இன்றைய பொருளாதார நெருக்கடியில் ஐந்து பேருக்கும் ஆகக் குறைந்தது பதினைந்தாயிரம் ரூபா செலவழிக்க வேண்டியேற்படுகிறது. சேலை வாங்கிக் கொடுக்காத பிள்ளைகளை அழைத்து சில ஆசிரியர்களும் பெற்றோர்களும் பேசிய நிகழ்வுகளும் இடம் பெற்றிருக்கின்றன. இதனால் அந்தப் பிள்ளையும் பெற்றோர்களும் அவமரியாதைக்கும் குற்ற உணர்வுக்கும் உள்ளாகிறார்கள். என்ன கடன் பட்டாவது இந்த விடயத்திலிருந்து விடுபடுவதற்காக ஆசிரியர்களை மகிழ்விக்க முயல்கிறார்கள். உண்மையில் பிள்ளைகளிடம் கைநீட்டி அன்பளிப்புப் பெறும் ஆசிரியர்களே அவமரியாதைக்கும் குற்ற உணர்வுக்கும் உள்ளாக வேண்டியவர்கள். அன்பளிப்பு என்ற பெயரில் வாங்கப்படும் சேலை, சேட், சாப்பாடு என்பன ஒரு வகை இலஞ்சமேயாகும். ஒழுக்கத்தினையும், நேர்மையினையும், கடமையினையும் கற்றுக் கொடுக்க வேண்டிய பாடசாலைகள் பிள்ளைகளின் பிஞ்சு மனதில் அன்பளிப்பு என்ற பெயரில் இலஞ்சத்தினையும், நேர்மையீனத்தினையும் கடமை துஸ்பிரயோகத்தினையும் நடைமுறை ரீதியாகக் கற்றுக் கொடுக்கின்றன. இந்த மாணவர்கள் நாளை பெரிய பதவிகளுக்குப் போகும் போது தான் செய்கின்ற கடமைகளுக்கெல்லாம் அன்பளிப்பை எதிர்பார்ப்பவர்களாக மாறுவது ஒன்றும் ஆச்சரிப்படத்தக்க விடயமில்லை. ஆசிரியர்கள் தங்கள் கடமைக்கு அன்பளிப்புப் பெறுவதில்லை அது தனது கடமை அந்தக் கடமையை ஆற்றுவதற்காகத்தான் அரசு சம்பளம் தருகின்றது என்பதை நடைமுறை ரீதியாகக் கடைப்பிடிப்பார்களாக இருந்தால் பிள்ளையும் அந்த ஒழுக்கத்தை ஆசிரியர்களிடம் இருந்து கடைப்பிடிக்கக் கற்றுக் கொள்ளும். மாதா, பிதா, குரு, தெய்வம் என தெய்வத்துக்கு முதல் வைத்து நோக்குகின்ற ஆசிரியர்கள் மாணவர்களின் மனதில் கடமையைச் செய்வதற்கு அன்பளிப்பு எனும் எண்ணங்களை ஏன் விதைக்கிறார்கள் என்பதும் இதனை அப்பாடசாலைகளின் அதிபர்கள் உட்பட கல்வி அதிகாரிகள் வரை கண்டு கொள்ளாதிருப்பதன் நோக்கம்தான் என்ன என்பதும் விளங்கவில்லை. என்ன கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை எமது பாடசாலையில், எமது வலயத்தில் எத்தனை மாணவர்கள் புலமைப் பரீட்சை சித்தியடைந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதுதான் எல்லாருக்கும் நோக்கமாக இருக்கிறது போல்த் தெரிகிறது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் தங்கள், தங்கள் கௌரவத்துக்காக, புகழுக்காக பிள்ளைகளைப் பிழிய அதிபர்களும் கல்வி அதிகாரிகளும் தங்கள் பாடசாலை, வலயம் என்பவற்றை உயர்த்துவதற்காக பெற்றோர்களைப் பிழிகிறார்கள் போலத் தெரிகிறது. ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையே இன்று மாணவர்களை மிகவும் கொடுமைப்படுத்துகின்ற பரீட்சையாக இருக்கின்றது. பெற்றோர்களினதும் ஆசிரியர்களினதும் கௌரவத்துக்காக சிறுவர்கள் பலிக்கடாவாக்கப்படுகின்றனர். நான்காம் ஆண்டில் இந்தச் சித்திரவதை தொடங்கி விடும். கிட்டத்தட்ட இரண்டு வருட கடும் பயிற்சி அதன் பிறகு பரீட்சை. இந்தக் காலப்பகுதிக்குள் காலை முதல் அந்தப் பிள்ளை தூங்கும் வரை பல பெற்றோர்கள் ஓய்வின்றிப் பிள்ளையை வருத்துகிறார்கள். என்னதான் சிறுவர் உரிமை பற்றிப் பேசினாலும் கல்வி என்ற பெயரில் இந்தப் பிள்ளைகளின் உரிமை பறிக்கப்படுவதை நாம் எல்லோரும் கண்டும் காணாதது போல் இருந்து வருகிறோம். புலமைப் பரீட்சை முடிவு வந்தவுடன் சித்தியடையாத மாணவர்களின் மனம் நோகா வண்ணம் நடந்து கொள்ளும்படி சில சமூக ஆர்வலர்கள் முகநூல்களில் எழுதுவதுடன் இது முடிந்துவிடுகிறது. இவற்றின் ஊடாக எந்தப் பெற்றோரும் பெரியளவுக்கு விழிப்புணர்வு பெற்றதாக இல்லை. ஏனெனில் ஒவ்வொருவருக்கும் பந்தயத்தில் தாம்தான் முந்த வேண்டும் என்ற நோக்கு இருக்கிறதே தவிர தனது பிள்ளையின் உளநிலை பற்றி அக்கறைப்படுவதாக இல்லை. இந்தப் போக்கு இவ்வாறு வளர்ந்திருப்பதனையும் இதனால் பிள்ளைகள் பாதிக்கப்படுவதனையும் கல்வி அதிகாரிகளும் சமூக ஆர்வலர்களும் அறியாமல் இல்லை. இருந்த போதும் புலமைப் பரீட்சையினை அரசு ரத்து செய்வதாக இல்லை. காலத்துக்குக் காலம் கல்வி அமைச்சர்கள், அதிகாரிகள் இது தொடர்பாக பேசுவார்களே தவிர உருப்படியான காரியம் எதையும் செய்வதாக இல்லை. இதற்குக் காரணம் பாடசாலைகளுக்கு மாணவர்களைச் சேர்ப்பதில் சரியான பொறிமுறையை எவரும் கண்டுபிடிக்கவில்லை என்பது புலனாகின்றது. புலமைப் பரிசில் கொடுப்பதுதான் இந்தப் பரீட்சையின் நோக்கம் என்றால் அதற்கு எவ்வளவோ வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால் புலமைப்பரிசிலை விட பாடசாலை அனுமதிதான் கல்வி அமைச்சுக்கு சிக்கலான விடயமாகத் தெரிகிறது. புலமைப் பரிசு, பாடசாலை அனுமதி என்பவற்றைத் தாண்டி நாட்டுக்கு நற்பிரசைகளை உருவாக்குவதை மறந்து ஆசிரியர்களும் சமூகமும் செயற்படுகின்றது. புலமைப் பரீட்சையின் ஊடாக அன்பளிப்பு என்ற பெயிரில் இலஞ்சம் பெறும் மனோபாவம் ஒன்று உருவாகப் போவதை எவரும் உணர்வதாக இல்லை. இன்று வளர்ந்து வந்து கொண்டிருக்கும் இந்த அன்பளிப்புப் பண்பாட்டை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருவது ஒவ்வோர் ஆசிரியர்களின் கடமையும் பொறுப்பும் ஆகும் இதனை மீறுபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு இந்த சீர்கெட்ட அன்பளிப்பு இலஞ்சம் நிறுத்தப்பட வேண்டும். இதனை கல்வி அதிகாரிகள் செய்ய முன்வரவேண்டும். அடுத்த ஆண்டில் இந்நடவடிக்கை தொடருமாக இருந்தால் அனைத்து ஆதாரங்களுடனும் வெளிப்படுத்தப்பட வேண்டியிருக்கும் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கின்றோம். https://arangamnews.com/?p=10273
  9. prompt 1980களில் யாழ்பாணம் நெல்லியடி வீதியில் மழை தூறிக்கொண்டிருக்கும்வேளை மாட்டுவண்டிகள் நிரையாகச் செல்கின்றன
  10. @ஈழப்பிரியன் ஐயா, போட்டிகளுக்கான அட்டவணை எப்போது வருகின்றதோ அப்போது பார்க்கலாம். குறைந்தது பத்துபேர் கலந்துகொண்டால்தான் நடத்தமுடியும்
  11. போதமும் காணாத போதம் – 08 அபாயம் நெருங்கியதென அச்சப்பட்டு அசையாது நின்றான் சங்கன். கலவரத்தோடு உடல் வியர்த்து மூச்செறிந்தவன் சட்டென கருவறைக்குள் பதுங்கினான். அவனை விழிப்புற வைத்த சத்தம் சில நிமிடங்களிலேயே வெட்டுண்டது. அரிய விலங்கென மடிந்திருந்த தன்னுடலைத் தளர்த்தி விரித்தான். ஆறடி உயரமான ஆகிருதி. தலையுயர்த்தி எழுந்தான். வைரவர் விக்கிரகத்தை அடியோடு தகர்த்து அதனடியிலிருந்த தகடுகளை எடுத்தான். பழமையான ஐம்பொன் சிலைகளை ஈரச்சாக்கில் போட்டான். உண்டியலைப் பிளந்து நாணயங்களை மணல் நிரப்பப்பட்ட சிறிய பைக்குள் போட்டான். தாள் காசுகளை ஈரமான உள்ளாடைக்குள் சுருட்டி வைத்தான். தன்னுடைய தடயங்கள் ஏதேனும் விடுபட்டு இருக்கிறதாவென மீளாய்வு செய்தான். எதுவுமில்லை. காலடித்தடங்களையும் அழித்து கோவிலை விட்டு வெளியேறினான். எத்தனையோ களமுனைகளில் வேவு பார்த்து வென்ற கண்கள். எதிரியின் காலடி வரை ஊர்ந்து சென்று நோட்டமிட்ட தீர உடல். எத்தனையோ பகலிரவுகள் சடமென உருமாறி பகைவர் வழியில் அமைந்திருந்த வல்லபம் சங்கனுடையது. மனுஷ வாடையறியும் கூர் நாசி. பாம்பின் லாவகமாய் நிலம் நீந்தி மறைபவன். தேரைகள் மறைந்து கொள்ளும் இடுக்குகளில் கூட இருந்தான் என்பார்கள். எதிரின் தோல்வியைத் தீர்மானிக்கும் வேவுக்காரன். இயக்கத்தின் தலைவரால் பலமுறை கெளரவிக்கப்பட்டவன். தளபதிகளின் நேசன். சங்கன் பணியாற்றிய களமுனையில் எதிரிகளின் முன்னேற்ற நடவடிக்கைகள் அதிரடியாக முறியடிக்கப்பட்டன. மண்ணை அபகரிக்கும் வன்கவர் வெறியர்களுக்கு எதிரான போராட்ட வரலாற்றில் சங்கன் ஒரு சுருட்டை பாம்பு. அவனிருந்த இடத்தை யாரும் அறியார். எதிரிகளின் காலடிக்குள் மிதிபட்டும் மனுஷ பாவனை காட்டாமல் மரக்குத்தியென கிடந்தது தப்பியவன். அத்தனையும் தடயமற்று அழிந்து போயிற்றே என்று கலங்கிய கண்களையும் துடைக்காமல் சாக்குப்பையை சுருக்கிட்டு கட்டினான். பசி எரிந்து உளம் புகையும் ஏழ்மையின் வயிற்றில் துடிதுடிக்கும் புழுவான வாழ்வு சங்கனுக்கு நேர்ந்திருந்தது. கோவிலை விட்டு வெளியேறி கோபுரத்தை வணங்கினான். கற்பூரச் சட்டியில் இரண்டு பெட்டி காவடி கற்பூரத்தை வைத்துவிட்டு மெல்ல நடக்கத்தொடங்கினான். கொஞ்சத் தூரத்திலேயே அவனைத் தன்னுள் புகுத்தியது இருள். அதிகாலையிலேயே வைரவர் கோவில் பூசாரியின் ஓலம் சனங்களை அழைத்தது. ஐம்பொன் சிலைகள், தகடுகள், உண்டியலென ஒன்றும் மிச்சமில்லாமல் துடைத்து வழிக்கப்பட்டிருந்தது. சூறையில் வேர் பிளந்து தரைவிழுந்த மரமென கருவறை விக்கிரகம் தூக்கி வீசப்பட்டிருந்தது. சனங்கள் மண்ணைவாரி தம்மிலடித்துக் கொண்டனர். “எங்கட ஊர்க்காரன் வைரவரில கை வைச்சிருக்க மாட்டான். கேணியடிக்காரர்கள் தான் வேலையைக் காட்டியிருக்கினம்” முதல் அனுமானத்தைச் சொன்னார் செல்லையா. “அண்ணா என்னவாய் இருந்தாலும் பொலிஸ்ல போ கேஸ் குடுப்பம். அதுதான் முறையாய் இருக்கும்” என்றவர் கொக்குவில் மாமா. “இவ்வளவு சண்டைக்குள்ள தப்பி, கஷ்டப்பட்டு திரும்பவும் ஊருக்கு வந்தோமெண்டு நினைச்சு கோயிலை புனரமைப்புச் செய்தால், களவெடுத்துக் கொண்டு போறாங்களே” என்றனர் ஊர்ப்பெண்கள். “இப்ப நீங்கள் என்ன செய்யப்போறியள். கேணியடி ஊருக்குள்ள புகுந்து ஒவ்வொருத்தனையும் பழி சொல்லி அடிக்கப் போறியளோ” என்று குரல் உயர்த்தினார் விநாயகம். “முதலில கேஸ் குடுக்கலாம். வெளிக்கிடுங்கோ” அழுத்தமாகச் சொன்னார் கொக்குவில் மாமா. “எல்லாத் துன்பத்துக்கும் இவங்கள் தான் காரணம். இவங்களிட்ட போய் நிண்டு எங்கட தெய்வத்தோட சிலை களவு போட்டுதெண்டு முறைப்பாடு கொடுக்க எனக்கு விருப்பமில்லை” என்றார் செல்லையா. “நீங்கள் சொல்றதெல்லாம் நூறுவிதம் சரிதான், ஆனால் வேற என்னதான் வழி. தொடர்ந்து களவு கொடுத்திட்டு இருக்கேலுமோ” கொக்குவில் மாமா கேட்டார். “நாட்டைப் பறிச்சு வைச்சிருக்கிறவனிட்ட போய், கோயிலில களவு போச்செண்டு சொல்லுறதோ” செல்லையாவின் பதில் கேள்வியில் கோபம் அதிகரித்திருந்தது. ஒரு வெள்ளைத்துணியில் சில்லறையை முடிந்து கோவில் வாசலில் கட்டிய செல்லையா “இந்த அநியாயத்த செய்தவன் எவனாயிருந்தாலும், இன்னும் ரெண்டு நாளில இங்க வந்து நிப்பான். வைரவர் பொல்லாதவர். அவற்ற கோபத்துக்கு ஆளானால் அவன்ர குலம் தழைக்காது” என்றார். சில நாட்களிலேயே யாழ்ப்பாணத்திலிருந்து கேதீஸ்வர குருக்கள் வரவழைக்கப்பட்டார். விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. களவாடியவனே விரைவில் எல்லாப் பொருட்களையும் கொண்டு வந்து ஒப்படைப்பான் என அருள் வாக்கு சொன்னார் பூசாரி. சனங்களும் அப்படி நிகழவேண்டுமென விரும்பினர். சங்கன் திருடிய பொருட்களை முந்திரித் தோப்பொன்றில் புதைத்து வைப்பது வழக்கம். ஏற்கனவே தாமரைக்குள முருகன் கோவிலில் திருடிய தங்க வேல் ஒன்றும் அங்குதான் புதைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் வியாபாரப் பேரம் சரியாகப் படியவில்லை. பத்தர் காந்தியோடு மல்லுக்கு நின்றான். “இந்த வேல உருக்கி தங்கக்கட்டியா மாத்திறத்துக்கு எனக்கு கூலி வேண்டாமடாப்பா, ஆனால் நான் சொல்ற விலைக்கு தா” “பத்தரே, நான் சொல்றது தான் காசு. உங்களால வாங்க முடியுமா, முடியாதாவெண்டு சொல்லுங்கோ. எனக்கு உங்கட கூலி இனாமெல்லாம் வேண்டாம்” “உனக்கு உதவி செய்ய இஞ்ச வேற ஆருமில்லை. என்னைத் தவிர எந்தப் பத்தனும் இந்த வேலைக்கு துணிய மாட்டான். விளங்கி நட” “பத்தரே, கரட்டி ஓணான் வெருட்டி**க்குமாம். நீங்கள் அதுக்குத் தான் முயற்சிக்கிறியள். அது என்னட்ட சரிவராது” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போனான். ஐம்பொன் சிலைகளையும் தகடுகளையும் புதைத்துவிட்டு, சில்லறைகளை எண்ணி முடித்தான். இரண்டாயிரத்து நான்கு ரூபாய் இருந்தது. முந்திரித் தோப்பிலிருந்து வீட்டுக்கு போகிற வழியிலிருந்த முருகன் கோவில் உண்டியலில் ஒரு ரூபாய் குற்றியை இட்டு கும்பிட்டான். “முருகனே, நான் செய்யிறது பிழை தான். ஆனால் வேற என்ன செய்ய ஏலும் சொல்லு. இத்தனை துன்பங்களைத் தந்த அரசாங்கத்தையே தண்டிக்காத நீ, உன்னட்ட களவெடுத்த என்னையும் தண்டிக்க மாட்டாய் என்றொரு நம்பிக்கை. என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து தவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா வினோதனென்று உன்திரு வடியை உறுதியென்றெண்ணும் என்தலை வைத்துன் இணையடி காக்க” என்று பாடிக்கொண்டான். எதிர்ப்பட்ட எல்லோரும் சங்கனைப் பார்த்து அகமகிழ்ந்து புன்னகைத்தனர். “சங்கன் நாளைக்கு ஒரு கிணறு வெட்டிருக்கு வாறியோ” வழிமறித்த கிளியனிடம் வருகிறேன் என்றான். கொக்குவில் மாமா பொலிஸ் ஸ்டேசனில் முறைப்பாடு கொடுத்தார். கோவிலில் களவாடியவனை பிடித்து தரவேண்டுமென ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் கடிதம் எழுதி அளித்தார். இவ்வளவு தாமதமாக வந்து முறைப்பாடு தந்தால் எப்படி கண்டுபிடிக்க முடியுமென பொலிஸ் ஆவேசம் கொண்டது. “தெய்வம் பிடிச்சுத் தருமெண்டு வெயிட் பண்ணினாங்கள். அது நடக்கேல்ல, அதுதான் உங்களிட்ட வந்திருக்கிறம்” என்றார். பொலிஸ்காரர்கள் புல்லரித்துப் போனார்கள். கண்டிப்பாக அவனை கைது செய்துவிடுவோமென சிலர் நம்பிக்கையளித்தனர். இந்தச் செய்தியை ஊர்முழுவதும் தேநீரோடு பருகியது. சங்கன் எல்லாவற்றையும் அவதானிக்கத் தவறுவதில்லை. வீட்டு முற்றத்தில் மண்ணள்ளித் தின்னும் நந்திக்கடலின் கையில் லேசாக அடித்து நெஞ்சோடு தூக்கி அணைத்தான். சமையலிலிருந்த மலரினி வெளியே வந்து உங்கட மோளுக்கு ஒரு லோட் மண் வாங்கினால், இருபது வயசு மட்டும் சாப்பிடக் காணும்” என்றாள். வீட்டுக்குப் பின்னாலிருந்த சிறிய கொட்டிலில் இரண்டு போதல்களில் கள்ளு இருந்தது. பொரித்த சூடை மீனோடு கள்ளைக் குடித்து முடித்து அங்கேயே உறக்கம் கொண்டான். மலரினியும் சங்கனும் போராளிகளாக இருந்தவர்கள். ஒரே களமுனையில் சந்தித்துக் கொண்டவர்கள். வேவு அணிக்கு தலைமை தாங்கிய சங்கன் களமுனையிலுள்ள ஏனைய படையணிகளுக்கு வழங்கிய தகவல்கள் மாபெரும் வெற்றிகளை அளித்தது. மலரினி மகளிர் படையணியொன்றின் முக்கியமான தாக்குதல் அணித்தலைவியாக இருந்தாள். நிலமும் பனையும், களமும் சேனையும் சொந்தமாகவிருந்த நாட்களில் இருவரும் காதல் உறவெய்தினர். பின்னர் எல்லாமும் கானலெனக் கலைந்தவொரு காலத்தில் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டனர். போராளிகளாகவிருந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பின்பு திருமணம் செய்தனர். முதற்குழந்தை இறந்து பிறந்தது. பின்னர் வந்துதித்த பெண் குழந்தைக்கு நந்திக்கடல் என்று பெயர் சூட்டினான் சங்கன். பல்வேறு களவுச் சம்பவங்களை ஆராய்ந்து பொலிஸ் தேடுதலை நடத்தியது. கோவிலில் நிகழ்த்தப்படும் களவுகளில் மட்டுமே எந்தத் தடயங்களும் கிடைக்கவில்லையென ஒரு சிறந்த புள்ளியை இனங்கண்டார்கள். திறமையாக திட்டமிடப்பட்டு ஒரு குழுவால் செய்யப்படுவதாக உத்தேசித்தார்கள். தடயமில்லாத ஒன்றின் பின்னால் பயணிக்க இயலாது. அது ஒன்றாகவோ நூறாகவோ கூட இருக்கலாம். பொலிஸ் கைவிரித்தது. எங்கும் பிடி கிடைக்காமல் துருவித் துருவி விசாரித்தனர். சங்கன் கூலி வேலைக்குச் சென்றான். கிணறு வெட்டுவது உடல் வருத்தும் பணி. தசை தசையாக நோவெழும். வயிறு முட்ட கள்ளுக் குடித்தாலும் அலுப்புத் தீராது. இன்று வேலை முடிந்ததும், நேராக பத்தர் ஒருவரைப் பார்க்கச் செல்ல வேண்டும். இவனோடு இயக்கத்தில் இருந்த தோழமை. இப்போது வட்டக்கச்சியில் இருக்கிறான். பொன்னுருக்கும் கூடம் வைத்து சின்னச் சின்ன வேலைகள் செய்வதாக அறிந்திருந்தான். ஒருதடவை சென்று அவனிடம் கதைத்துப் பார்க்கலாமென சங்கனுக்குத் தோன்றியது. வட்டக்கச்சியிலுள்ள வெத்திலை பத்தரின் வீடு தேடிக் கண்டுபிடித்தான். உள்ளே இரண்டு நாய்கள் கட்டப்பட்டிருந்தன. வெளியே நின்று பட்டாம்பூச்சி என்று அழைத்தான் சங்கன். இரண்டு கைகளுமில்லாது வீட்டு வாசலில் வந்து நின்றவொரு உருவம் “நீங்கள் ஆர்” என்று கேட்டது. சங்கனால் அந்தக் குரலை உணர முடிந்தது. “பட்டாம்பூச்சி நான் வியட்நாம். உந்த நாயளைப் பிடி மச்சான்” என்றான். அந்த உருவம் அற்புதமொன்றைக் கண்டதைப் போல திகைப்படைந்து சங்கனை நோக்கி ஓடிவந்தது. அப்போதுதான் பட்டாம்பூச்சியின் முகத்தைப் பார்த்தான் சங்கன். தீக்காயத்தின் தழும்பு மெழுகெனவிருந்தது. கண்கள் எரியும் திரியென சிவந்திருந்தன. வெறிகொண்ட சூனியம் தங்கிய மேனி. “பட்டாம்பூச்சி நாயளைப் பிடி, நான் வியட்நாம்” என்றான். பட்டாம்பூச்சி நாய்களை விரட்டினான். உள்ளே வாங்கோ என்பதைப் போல ஒரு தலையசைப்பு. சங்கன் அவனைக் கட்டித்தழுவினான். பட்டாம்பூச்சி பெருங்குரலெடுத்து விம்மி அழுதான். “ஏன் மச்சான் இப்பிடி குழந்தையள் மாதிரி அழுகிறாய், அழாதே” என்றான். “நீ வீரச்சாவு எண்டு கேள்விப்பட்டனான். அதுவும் ஆனந்தபுரம் பொக்சில. அங்க நிண்டனியோ” பட்டாம்பூச்சி கேட்டான். “நீ கேள்விப்பட்ட மாதிரியே வீரச்சாவு அடைஞ்சிருக்கலாம். ஆனால் இப்ப கிடந்தது உத்தரிக்க வேண்டியிருக்கு” “இயக்கத்திலையும் சரி, சாவிலையும் சரி முடிவு நாங்கள் எடுக்க ஏலாது. ஏற்கனவே எழுதின தாளில கோடுபோட முடியாதெல்லே” “டேய், பட்டாம்பூச்சி தத்துவம் கதைக்கிறது இன்னும் குறையேல்ல. நீ எங்க காயப்பட்டனி. இப்படி எரிஞ்சு போய் இருக்கு” தன்னுடைய இல்லாத கைகளின் மீதத்தைக் காட்டி “இது ரெண்டும் மாத்தளனில போனது. அதுக்குப் பிறகு மெடிஸ்ல இருந்தனான். அங்க பொஸ்பரஸ் குண்டு முகத்தை எரிச்சுப்போட்டுது” “இப்ப முந்திய விட நல்ல வடிவாய் இருக்கிறாய் மச்சான்” “ஓமடா, வெளிநாட்டில தான் கலியாணம் பார்க்கினம். போட்டோவ பார்த்த ஒரு பிள்ளையும் நீ சொன்ன மாதிரி சொல்லுதில்லை.” “ஏன் இஞ்ச இருக்கிற பிள்ளையை நீ கலியாணம் செய்ய மாட்டியோ. உனக்குத் தானே தொழிலிருக்கு” “இப்ப என்ர முடிவுகளை நான் எடுக்கிறதில்லை. நான் எடுத்த முடிவுகள் முள்ளிவாய்க்காலோட முடிஞ்சுது. இனிமேல் அக்காமார் சொல்றத கேட்டு நடப்பம்” “அதுசரி, உன்னட்ட ஒரு விஷயம் சொல்லவேணும். அது எங்கட இயக்க ரகசியத்துக்கு ஒப்பானது. நீ ஆரிட்டையும் சொல்லமாட்டேன் என்றால் சொல்லுகிறேன்” “வியட்நாம் எனக்கு எந்த ரகசியமும் நீ சொல்ல வேண்டாம். நான் அதை வைச்சு என்ன செய்யேலும் சொல்லு” “இல்ல,நீ எனக்கொரு உதவி செய்ய வேணும். அது உன்னால மட்டும் தான் முடியும்” “எனக்கு ஒண்டுமாய் விளங்கேல்ல. சரி என்ன விஷயம் சொல்லு” சங்கன் எல்லாவற்றையும் சொல்லி இறுதியில் “அந்த வேல் இப்பவும் என்னட்டத் தான் இருக்கு. நீ உருக்கித் தரவேணும். எங்களை மாதிரியிருந்து இண்டைக்கு கஷ்டப்படுகிற ஆக்கள் நிறையப் பேர் இருக்கினம். அவையளுக்கு பிரிச்சு குடுக்கலாம்” என்றான். பட்டாம்பூச்சி சரியென்று தலையசைத்தான். மூன்று நாட்கள் கழித்து அதனை எடுத்துவரும்படி சொன்னான். சங்கன் சந்தோசத்தோடு விடைபெற்றுச் சென்றான். மழையும் மின்னலும் இரவில் விழுந்தன. சங்கன் நனைந்து நடுங்கியபடி நெருப்புக்குச்சியைத் தட்ட முயற்சித்தான். சிறுஞ்சுடர் அணிந்த அவளது கண்கள் சங்கனைப் பார்த்தது. அவளது கழுத்தில் அணியப்பட்டிருந்த அலங்கார நகையைக் கழற்றி பையில் போட்டான். கைகளைத் துடைத்து மீண்டுமொருமுறை நெருப்புக்குச்சியைத் தட்டினான். அம்மன் முகத்தில் மழைநீர் சொட்டிக்கொண்டிருந்தது. சங்கன் அவளது நெற்றியில் குங்குமமிட்டு வணங்கினான். கையில் கிடைத்த ஐம்பொன் சிலைகளையும் கைப்பற்றி அங்கிருந்து வெளியேறினான். கோவிலின் வெளிப்புற கதவடியில் கறுப்பு நிறச்சேலை அணிந்த குமரியொருத்தி ஆங்காரமாய் சங்கனை இடை மறித்தாள். அவனால் எதுவும் செய்ய இயலவில்லை. எடுத்தவற்றையெல்லாம் என் கழுத்தில் அணிவித்து உன் உயிரைக் காப்பாற்று என்றாள். “நீ ஆர், உனக்கேன் அணியவேண்டும்” “நான் தெய்வம். உன்னைக் காத்து நிற்கும் தெய்வம்” “சமாதானத்துக்கான யுத்தம், நல்லிணக்கத்திற்கான அரசு, போர்க்குற்ற உள்ளக விசாரணை போல காத்து நிற்கும் தெய்வம், எவ்வளவு பெரிய பம்மாத்து. சனியனே தள்ளி நில்” என்று சுட்டியலை எடுத்து ஓங்கிய சங்கனைக் கண்டு தெய்வம் மறைந்தது. மின்னல் விழுந்தது. இடி முழங்கிற்று. எப்போதும் போல் காற்றின் அரவம் அன்றில்லை. சங்கன் முந்திரித் தோப்புக்குள் நுழைந்து மண்ணைத் தோண்டி நகையையும் சிலைகளையும் புதைக்க ஆயத்தமானான். அப்போது மின்னல் வெளிச்சமொன்று பூமியில் விழுந்தது. அவனின் முன்னே ஓருருவம் நிற்பதைப் போல எண்ணினான். வெளிச்சத்தில் அந்த உருவத்தின் முகத்தைக் கண்டான். ஒளிதுலங்கிய கண்கள். விடுதலையின் கனல் சுமந்த நிமிர்வின் மேய்ப்பன். கம்பீரத்தின் ஞானம் தரித்தவன். திகைப்புக்கும் மிரட்சிக்கும் உள்ளாகிய சங்கன் “தெய்வமே எங்களை ஏன் கைவிட்டாய்” என்று எழுந்தோடிப் போனான். அவனை இறுக அணைத்தபடி அந்த உருவம் சொல்லிற்று. “ஒரு மகத்தான தோல்வியைக் கூடத் தராது யுத்தம் தான் எங்களை கைவிட்டது. இதன்பொருட்டு என்னோடு பொருதாதே இளையவனே” மீண்டும் ஒரு இடி மின்னல். சங்கனை அணைத்த உருவம் அப்போதில்லை. முந்திரித்தோட்டம் முழுதும் சுழன்று பார்த்தான் எவருமில்லை. எடுத்து வந்த பொருட்களை புதைத்தான். அங்கிருந்து வீட்டுக்கு நடக்கலானான். அந்தப் பேரிருளிலும் வீட்டின் முற்றத்தில் அமர்ந்திருந்து மண்ணள்ளித் தின்னும் நந்திக்கடலைத் தூக்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டு “தெய்வம் எங்களைக் கைவிடாது” என்றான். நந்திக்கடல் தனது கைகளில் கிடந்த மண்ணை சீற்றம் கொண்டு குருதியால் துருப்பிடித்த இரவின் முகத்தில் எத்தினாள். https://akaramuthalvan.com/?p=1335
  12. இந்த வருட மாவீரர் நாளில் துவாரகா எனும் பெயரில் கொள்கைப் பிரகடனம் செய்தவரையும், அவரை இயக்கும் சேரமான், அப்துல்லா, கிருபாகரன் போன்றோரையும் முட்டுக்கொடுக்கும் இன்பராசா, காசி ஆனந்தன், நெடுமாறன் போன்றோரையும் வெளிப்படையாகக் கண்டிக்க முடியாமல் உள்ளதே. தலைவர் இருக்கின்றார் என்ற நம்பிக்கை கொஞ்சம் இருப்பதனாலா? அப்படி என்றால் இப்படியான நம்பிக்கையுள்ளவர்களைத்தான் இந்தக்கும்பல் குறிவைத்து செயற்படுகின்றது என்பது புரியவில்லையா?
  13. @நந்தன், ஒரு வாரத்தின் பின்னரும் வலி இருந்தால் கட்டாயம் வைத்தியசாலை போகவேண்டும்
  14. ஆதாரங்கள் இருந்தால் செருகிவிடுங்கள்! ஆங்கில ஆசிரியர் நன்றாக தமிழ் கதைக்கின்றார்!
  15. முள்ளிக்குளம்தான் சரி. நான் மதவாச்சி/ வவுனியா - மன்னார் பாதையில் இருக்கும் குளங்களை எல்லாம் மூளையைக் கசக்கியும், கூகிள் மாப்பைப் பார்த்தும் முள்ளிக்குளம் நினைவுக்கு வரவில்லை! இன்னும் வர இருக்கின்றது!
  16. நீங்கள் புளட் டம்பிங் சங்கிலி கந்தசாமியுடன் இந்தக் கதையில் வரும் சங்கிலி என்பவர் என்று நினைத்து குழம்பியுள்ளீர்கள்! டம்பிங் சங்கிலி கந்தசாமி மிகவும் கொடூரமான புளட்டின் உட்கொலைகள், புலிகள் இயக்கத்தினரை படுகொலைகள் செய்தது என்று தெரிந்திருக்கும். டம்பிங் சங்கிலி இந்திய இராணுவம் நின்ற காலத்தில் புலிகளால் நடாத்பட்ட செட்டிக்குளம் புளட் முகாம் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்றுதான் ஞாபகம் இருக்கின்றது.
  17. போதமும் காணாத போதம் – 07 ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்றி இரண்டாம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை மாலையில் சங்கிலி பெரியப்பாவை புலிகள் இயக்கம் சுட்டுக்கொன்றது. மூன்று பிள்ளைகளையும் அழைத்துச் சென்று வீதியில் கிடந்த கணவனின் உடலத்தின் முன்பாக விழுந்தரற்றினாள் கிடுகு பெரியம்மா. ஊர்ச்சனங்கள் கூடி அவளையும் பிள்ளைகளையும் ஆற்றுப்படுத்தி, சங்கிலியின் இறுதிச் சடங்கை செய்து முடித்தனர். சங்கிலி பெரியப்பா ஆயுதமேந்திய வேறொரு அமைப்பைச் சேர்ந்தவர். அவர்களுக்கும் புலிகளுக்கும் இடையே மோதல்கள் நடந்தன. அந்த நடவடிக்கைகளில் சங்கிலிக்கு பெரிய பங்கிருந்தது. பிறகான நாட்களில் தான் சார்ந்திருந்த ஆயுத அமைப்போடு முரண்பட்டு புலிகளிடம் சரணடைந்து விசாரணைகளைச் சந்தித்தார். உயிருக்கு அச்சமற்று உலகியலோடு மட்டும் அமைந்திருந்தார். கிணறு வெட்டுவது, வேலி அடைப்பது, வீடு வேய்வதென கூலியானார். ஆனாலும் மீண்டும் மீண்டும் விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டார். “பெடியள் உங்களில எதோ ஐமிச்சப்படுறாங்கள். அதுதான் இப்பிடி அடிக்கடி விசாரிக்கிறாங்கள். எனக்கு பயமாயிருக்கு” என்றிருக்கிறாள் பெரியம்மா. பதிலுக்கு “நான் பயப்பிடேல்ல, அதிகபட்சம் சுடுவாங்கள். அதுதானே நடக்கும்” என்றிருக்கிறார். பெரியம்மா மூன்று பிள்ளைகளுக்கு நடுவில் அவரை உறங்குமாறு கூறினாள். அவளுக்கு ஆறுதல் தருகிற ஒன்றைச் செய்வதில் பெரியப்பா பின் நின்றதில்லை. அப்படித்தான் உறங்கவும் செய்தார். குளித்து முடித்து குளத்திலிருந்து வீடு நோக்கி நடந்து சென்றவரை போராளிகள் அழைத்துச் சென்றனர். பெரிய புளியமரத்தின் கீழே நிற்கவைத்து அவருடைய தலைக்கு மேல் துரோகியென எழுதப்பட்ட சிறிய இரண்டடியிலான கரும்பலகையை அறைந்தார்கள். துரோகம் ஒழியட்டும் எனத்தொடங்கும் மரண தண்டனை அறிக்கையை வாசித்து முடித்த குரல் ஓய்வதற்குள் தோட்டாக்கள் பாய்ந்தன. வெளியேறிக் கொதித்த குருதியை வெடியோசைகள் அறைந்தன. சங்கிலி பெரியப்பாவின் உடலுக்கு கொள்ளிவைக்கும் போது சந்தனனுக்கு ஏழு வயது. மிச்ச இருவரும் அவனிலும் இளையவர்கள். தியாகம் துரோகம் எதுவுமறியாத மழலைகள். எச்சில் சிந்தும் அமுத உயிரிகள். சந்தனன் தோளில் கொள்ளிக்குடத்தை வைத்து சங்கிலி பெரியப்பாவின் உடலத்தை மூன்றுமுறை சுந்திவந்தான். ஒவ்வொரு சுற்று முடிந்ததும் தன்னிடமிருந்த கத்தி முனையால் கொள்ளிக்குடத்தைக் கொத்தினார் மார்க்கண்டு மாமா. சந்தனன் கொள்ளி வைத்து திரும்பிப் பார்க்காமல் அழைத்துச் செல்லப்பட்டான். ஆனாலும் அவன் எரியும் சிதையை ஒருகணம் திரும்பி நின்று பார்த்தான். தீயென எரியும் குருதி. நிணமுருக்கும் சுவாலை. மஞ்சள் சிவப்பென எழுந்தாடும் ஒரு போழ்தெனப் பிணையும் வெளிச்சம். அப்பாவென்று அழைத்தான். மார்க்கண்டு மாமா அவனை அணைத்தபடி கண்ணீர் உகுத்தார். காடாற்றும் சடங்குக்காக போயிருக்கையில் சாம்பலை அள்ளி சிறு மண்முட்டியில் போட்டனர். சந்தனன் கையில் வைத்திருந்து அந்த முட்டியைப் பார்த்தான். குருதி தளும்பிக் கிடந்தது. ரத்தமென பயந்தடித்து முட்டியைத் கை தவறிக் கீழே போட்டான். சாம்பல் மண்ணில் கலந்தது. மண்ணெனக் கிடந்த சாம்பலை அள்ளி வேறொரு முட்டியில் அடைத்து கடலில் கரைத்தனர். ஒரு பேரலையின் சீற்றம் சாம்பலை உள்வாங்கிக் கொண்டது. சந்தனன் ஆர்ப்பரிக்கும் கடலைப் பார்த்தான். குருதியலைகள். ஓலங்கள் நிரம்பிய உடலங்கள் அதில் சுருள்கின்றன. திடுமென கடலின் இரைச்சல் கூடி “துரோகி சங்கிலி” என்று ஒலித்தது. கரையொதுங்கிக் கிடந்த மண்டையோடொன்றையெடுத்து வெறிகொண்டு வீசினான். “அப்பாவை ஏனம்மா சுட்டவே” சந்தனன் கேட்டான். காற்று மோதும் குப்பி விளக்கு அணையாது தப்ப “ துரோகம் செய்திட்டாராம். துரோகியாம்” பெரியம்மா சொன்னாள். “துரோகமென்றால் என்னம்மா” இதனைக் கேட்ட சந்தனனை அணைத்துச் சொன்னாள் “ நாங்கள் மனுஷராய் பிறந்தது. அதுவும் இந்த மண்ணில பிறந்தது. இதுதான் துரோகம்” என்றாள். நிலவேறி அலை மடித்து வெறித்திருந்த கடலில் சாம்பல் முட்டி மிதந்தது. இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு நவம்பர் மாதம் இருபத்தேழாம் திகதி. இருபத்தோராவது வயதில் சந்தனன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தான். அவன் எழுதிய கடிதம் செத்தையில் செருகியிருந்தது. பெரியம்மா அதனை வாசித்ததும் அச்சத்தில் துண்டு துண்டாய் கிழித்து அடுப்பை மூட்டி ஒவ்வொன்றாக சாம்பலாக்கினாள். பிள்ளைக்கு எதுவும் நேரக்கூடாதென தெய்வத்திடம் இறைஞ்சி அழுதாள். ஏனைய இரண்டு பிள்ளைகளையும் வெளியே செல்ல வேண்டாமென கட்டளையிட்டாள். தன் பிள்ளையிடம் துளிர்த்த வன்மத்தை எண்ணி கசந்து அழுதாள். ஏற்கமுடியாதவொரு சூளுரையை சந்தானம் அளித்திருக்கிறான். அவனுள் தலைவிரித்து நிற்கும் அனலரவத்தின் விஷம் முறிக்க ஏது வழி? இதற்கெல்லாம் காரணம் தானன்றி வேறு யார்? சொல்லிச் சொல்லி வளர்த்தேனா? என்று நெஞ்சிலடித்து அழுதாள். ரத்தத்தால் பழியழிக்கும் வெறியூட்டிய மார்போ தன்னுடையதென தாய்மை கருக பேதலித்தாள். அன்றிரவு அடிப்படை ஆயுதப் பயிற்சிக்கான முகாமில் சேர்க்கப்பட்டான் சந்தனன். அங்கே பேண வேண்டிய ஒழுங்குகளையும், மீறல்களையும் பயிற்சி ஆசிரியர்களில் ஒருவர் அறிவுறுத்தினார். தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சந்தனன் அமர்ந்தான். அதிகாலையில் விசில் சத்தம் கேட்டதும், எழுந்திட வேண்டுமென கூறப்பட்டிருந்தது. மெல்லக் கண்களை மூடி உறங்கிப் போனான். ஆனால் பெரியம்மா இயல்பு குலைந்திருந்தாள். ஒருதடவையேனும் அவனை நேரில் சந்தித்து அறிவுரை சொல்லவேண்டுமென பதகளித்தாள். அம்மாவைச் சந்திக்க வீட்டிற்கு வந்தாள். அம்மாவைத் தனியாக அழைத்துச் சென்று நடந்தவற்றை சொன்னாள். “உடனடியாக சந்திக்க வாய்ப்பிருக்குமோ தெரியாது. எண்டாலும் கேட்டுப் பார்க்கிறேன்” என்றாள் அம்மா. வெளியே துப்ப இயலாத ஒரு நஞ்சைத் தன்னுள்ளே விழுங்க இயலாமலும் துடித்து நின்றாள் பெரியம்மா. சந்தனனுக்கு இயக்கத்தைப் பிடியாது. எப்போதும் குற்றம் சொல்லுவான். தந்தையைக் கொன்றவர்கள் என்பதைத் தாண்டியும் இயக்கத்திடம் குறைப்பட அவனுக்கு காரணங்களிருந்தன. அந்தப் புளியமரத்தை தாண்டும் போதெல்லாம் “அப்பா கடைசியா இதில தான் படுத்திருந்தவர். ரத்தம் வேரடி முழுவதும் பரவியிருந்தது. குப்புறக்கிடந்த வாயில் ரத்தமும் மண்ணும் ஒட்டிக்கிடந்தது. ரத்தம் குடித்து செழித்து நிற்கும் புளியம் மரம்” என்பான். ஆனால் இன்று இயக்கத்தில் இணைந்திருக்கிறான். அவனுள் நிகழ்ந்திருப்பது திரிபென நம்ப இயலவில்லை. அம்மாவும் பெரியம்மாவும் இரவோடு இரவாக ஓட்டோவில் புறப்பட்டனர். “நான் வரப் பிந்துமடா, நீ படு” என்ற அம்மாவின் கண்களில் ஒருவிதமான அவசரத்தைப் பார்த்தேன். “எங்க போறியள்” கேட்டேன். “கிளிநொச்சிக்கு, ஏன் நீயும் வரப்போறியோ” என்று அம்மா கேட்டாள். அது அழைப்பல்ல. இதற்கு மேல் கேளாதே என்கிற சமிக்ஞை. ஓட்டோ புறப்பட்டது. பெரியம்மாவின் கண்ணீர் வெளியெங்கும் பறந்தது. இரண்டு கைகளையும் கூப்பி ஐந்தெழுத்து மந்திரத்தை சொல்லத் தொடங்கினாள். “இப்ப நடக்கிறதுக்கெல்லாம் நீ தான் காரணம் அக்கா” என்றாள் அம்மா. பெரியம்மா எதுவும் பதில் கதைக்கவில்லை. மூன்று மாத ஆயுதப் பயிற்சி முடித்த சந்தனனை சந்திக்க நாங்கள் போயிருந்தோம். உடல் பெருத்திருந்தான். புலிச்சீருடை அணிந்து மிடுக்கேறி நின்றான். பெரியம்மா அவனது கைகளைப் பிடித்து “சந்தனா, கடிதத்தில நீ எழுதியிருந்த எல்லாத்தையும் மறந்திடு. உன்னைத் தெய்வமாய் பார்த்தனான். ஆனா ரத்தம் கேக்கிற தெய்வமில்லை நீ” என்றாள். அந்தச் சொற்களில் எவற்றையும் பொருட்படுத்தவில்லையென அவன் உடல்மொழி கூறியது. தன்னுடைய கழுத்தில் கிடக்கும் குப்பியை தாயிடம் காட்டி “ இது கழுத்தில மட்டுமில்ல, எனக்குள்ளேயும் கிடக்கு” என்றான். பெரியம்மா அவனை கன்னத்தில் அறைந்து “நீ செத்தொழிஞ்சாலும் கவலையில்லை” என்று கத்தியபடி வெளியேறினாள். பெரியம்மாவுக்கு பின்னால் ஓடினேன். அம்மா சந்தனனிடம் “ நீ அவனைச் சுட்டுப் பழி தீர்க்க நினைக்கிறாய் எண்டு தெரிஞ்சாலே, அவ்வளவு தான்” என்றாள். என்ன நடந்தாலுமென்ன சாகத்தானே போகிறேன். அதிகபட்சம் என்ன செய்வார்கள். சுடத்தானே செய்வார்கள்” என்றான். சங்கிலிப் பெரியப்பாவை சுட்டுக்கொன்றவர் சரித்திரன். இன்றைக்கு முக்கிய பொறுப்பொன்றில் உள்ளவர். அன்று துரோகிகளை அழித்தொழிக்கும் பணியில் துடிப்புடன் இருந்தவர். இத்தனை வருடங்களில் பெரியம்மா சந்தனனுக்கு அடிக்கடி சொன்ன பெயர் சரித்திரன். எங்கு சரித்திரனைக் கண்டாலும் “அங்க பார், அவன் தான்” என்பாள். அப்படித்தான் சந்தனன் குருதியில் தீ மூண்டது. மெல்ல மெல்ல கங்குகள் பிணைந்து, காற்றில் தப்பிப் புகைந்து எரியத்தொடங்கியது. “அப்பாவைச் சுட்டவனை சுடுவேன்” என்று சந்தனன் முதன்முதலில் சத்தியம் செய்தது அந்தப் புளியமரத்தில் தான். அதற்கு ஒரே வழியாக இயக்கத்தில் சேர்ந்தான். ஆதிப்பலிக்கு ரத்தம் கேட்கும் உக்கிரம் அவனுள் உயர்ந்தது. சந்தனன் சொன்னதும் அம்மா அதிர்ச்சியடையவில்லை. அவனிடம் தெளிவாகவும் உறுதியாகவும் சொன்னாள். “இஞ்ச பார் சந்தனன், நீ சின்னப்பெடியனில்லை. உனக்கு நான் சொல்றது விளங்குமெண்டு நினைக்கிறன். பழிவாங்கத் துடிக்கிறது உனக்குத் தான் ஆபத்து.” என்றாள். சந்தனன் எதுவும் கதையாமலிருந்தான். புதிய போராளிகளின் பெற்றோர்கள் அனைவருக்கும் சந்திக்கும் நேரம் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. படையணி முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கிருந்து களமுனைக்கு கொண்டு செல்லப்படும் அணியோடு சேர்க்கப்பட்டான். சந்தனனிடமிருந்த ஆயுதத்தின் ஒயில் வாசனை அவனுக்குப் பிடிக்கவில்லை. மீண்டும் மீண்டும் துணியால் துடைத்தான். இரண்டு நாட்கள் பயணம் செய்து, களமுனைக்கு வந்தடைந்தான். முன்னரங்கு. எப்போதும் விழிப்பு. பதுங்குகுழிகள் நீண்டிருந்தன. காப்பரண்கள் கொதித்தன. நாளுக்கு பத்து மணிநேரம் மோதல் நிகழும் படுகளம். சந்தனனுக்கு காவலரண் ஒதுக்கப்பட்டது. ஏற்கனவே அங்கிருந்தவர்களோடு அறிமுகமானான். துவக்கைத் தன்னுடைய நெஞ்சோடு அணைத்தபடி பதுங்குகுழிக்குள் அமர்ந்தான். அன்றிரவு எந்த மோதலும் நிகழவில்லை. உறக்கம் வாய்த்தது. சந்தனன் மட்டும் விழித்திருந்தான். அவனுடைய காவல் நேரம் தாண்டியும் கடமை செய்தான். டிகரில் வலது கையின் ஆட்காட்டி விரலை வைத்தபடி புளியமரத்தை நினைத்துக் கொண்டான். தேசத்துரோகியென எழுதப்பட்டு முதல் ஆணியில் அறையப்பட்டிருந்த தந்தை பெயரைச் சொன்னான். உள்ளம் எரிந்து கண்ணீர் புகைந்தது. அப்பா அப்பா என்றான். இயலாமை ஊறி இருள் திரண்டு நின்றது. அவனிருந்த திசை நோக்கி குண்டுகள் பொழிந்தன. போழ்தின் இருள் அழிந்து ஊழி பொழிந்தது. சந்தனன் சண்டையில் காயமுற்றான். அவனிருந்த மருத்துவ விடுதியின் தலைமைப் பொறுப்பதிகாரியாய் சரித்திரன் இருந்தார். மேனியெங்கும் நஞ்சின் சூறை தீப்பிடிக்க சந்தனன் யாரோடும் கதையாமலிருந்தான். வீட்டில் செய்த உணவுகளை சரித்திரன் மூலமாய் அம்மா கொடுத்தனுப்பினாள். சந்தனன் அந்த உணவுகளைத் தீண்டக் கூடவில்லை. சரித்திரனுக்கு அது கவலையாகவிருந்தது. சில நாட்கள் கழித்து சரித்திரன் தனது வாகனத்தில் சந்தனனை ஏற்றிக்கொண்டு சென்றான். அவன் எதுவும் கதையாமல் வீதியை வெறித்திருந்தான். மழை பெய்யத் தொடங்கியது. “நீ என்னைச் சுடத்தான் இயக்கத்துக்கு வந்தனியெண்டு கேள்விப்பட்டனான்” என்ற சரித்திரனை அதிர்ச்சியோடு பார்த்தான் சந்தனன். உன்ர தந்தையைச் சுட்டது நானெண்டு தெரிஞ்ச உனக்கு ஏன் சுட்டனான் எண்டு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை” என்று தொடர்ந்தார். “அதுதான் நல்லாய்த் தெரியுமே, தேசத்துரோகி, ஒருத்தனைக் கொல்ல நீங்கள் துவக்கெடுக்க முதல், இப்பிடியொரு பட்டம் வைச்சே கொலை செய்திடுவியள்” என்றான் சந்தனன். சரித்திரன் கொஞ்சம் இறுக்கமாக “அது பட்டமில்லை. தண்டனையோட முதலடி.” என்று சொன்னார். வாகனம் புளியமரத்தடியில் நின்றது. அங்கு நிறைய ஆணிகள் அறையப்பட்டிருந்தன. சரித்திரன் வாகனத்தை விட்டு கீழே இறங்கி, தன்னுடைய பிஸ்டலை அவனிடம் கொடுத்து என்னைச் சுடு என்றார். சந்தனன் வாகனத்தை விட்டு கீழே இறங்கினான். பிஸ்டலை சரித்திரனின் நெற்றி நோக்கி நீட்டினான். மூன்று வெடிகள் முழங்கின. துரோகத்தின் துருவேறிய ஆணிகள் சிதறுண்டு பறந்தன. கிளையில் துளிர்த்திருந்த இலைகள் மெல்லக் காற்றில் அசைந்தன. இராணுவ மிடுக்கோடு, பிஸ்டலை சரித்திரனிடம் கையளிக்க முன்னே நடக்கலானான். துரோகத்தின் ஆணிகள் சிதறிக்கிடந்த நிலத்தில் சந்தனன் அவதானமும் விழிப்பும் கூட்டியிருந்தான். புளியமரத்தின் கீழே இரண்டு பேரும் நின்று கதைக்கத் தொடங்கினார்கள். இத்தனை நாட்களும் ஆறாத தன்னுடைய காயத்தைப் பார்த்தான் சந்தனன். அது கொதியடங்கி ஆறியிருந்தது. https://akaramuthalvan.com/?p=1304
  18. நிழலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎂🎊
  19. ‘வெற்றியை நோக்கி இறுதிவரை நாங்கள் செல்வோம்’ – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த அக்டோபர் 7-ந்தேதி போர் வெடித்தது. இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில், கடந்த மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த தற்காலிக போர் நிறுத்தம் கடந்த 1-ந்தேதி முடிவுக்கு வந்தது. இதையடுத்து காசாவை இஸ்ரேல் மீண்டும் முழு வேகத்துடன் தாக்கத் தொடங்கியது. இதனால் இஸ்ரேல்-ஹமாஸ் போர் மீண்டும் உக்கிரமடைந்துள்ளது. இதனால் அங்கு உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் போர் காரணமாக காசாவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தைக் கடந்துள்ளதாகவும், சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் குறித்து பேசியபோது, “காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாக குண்டுவீசித் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் படையினர் மீதான தாக்குதலில், பாலஸ்தீன மக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். இதேநிலை தொடர்ந்து நீடித்தால் இஸ்ரேல் மிக கடினமான நிலையை சந்திக்க நேரிடும். இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழந்து வருகிறது” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், வெற்றியை நோக்கி இறுதிவரை நாங்கள் செல்வோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “நாங்கள் இறுதி வரை போரை தொடர்வோம். இதற்கு மேல் எந்த கேள்வியும் இல்லை. மிகுந்த வலியுடனும், சர்வதேச நாடுகளின் அழுத்தத்திற்கு மத்தியிலும் இதை நான் கூறுகிறேன். எங்களை எதுவும் தடுத்து நிறுத்தாது. வெற்றியை நோக்கி இறுதிவரை நாங்கள் செல்வோம்” என்று தெரிவித்துள்ளார். https://akkinikkunchu.com/?p=263248
  20. எங்கள் இலக்கு முடியும் வரை உக்ரைனில் அமைதி திரும்பாது: அதிபர் புதின் பேட்டி உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா போர் தொடுத்தது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவி, பொருளாதார ரீதியாக உதவி வருகிறார்கள். குறிப்பாக அமெரிக்கா இதுவரை 111 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.9 லட்சத்து 25 ஆயிரத்து 617 கோடி) வரை நிதி உதவி செய்திருக்கிறது. எனினும், ரஷியா தொடர்ந்து உக்ரைன்மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தனது கட்டுப்பாட்டுக்குள் உக்ரைனைக் கொண்டுவர ரஷியா தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், உக்ரைனில் மொத்தம் 6 லட்சத்து 17 ஆயிரம் படைவீரர்கள் முகாமிட்டுள்ளனர். எனவே மேலும் படைகளை அணிதிரட்ட வேண்டிய அவசியம் இல்லை. எங்களின் இலக்கு நிறைவடையும் வரை உக்ரைன் நாட்டில் அமைதி திரும்பாது என தெரிவித்தார். அதிபராக கடந்த 24 ஆண்டுக்கு மேல் பதவி வகித்துவரும் புதின், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ரஷிய அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவுசெய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://akkinikkunchu.com/?p=263285
  21. Prompt தமிழில் - உருவியது எங்கே என்று ஞாபகமில்லை! செம்பருத்தி இதழ்போல சிவந்த சுருக்கங்கள்கொண்ட உதடுகளும், காதோரம் ஆடும் குறுமயிர்களுமாக. அவளுடைய உடலின் மணம், ஆடையின் தொடுகை, மூச்சின் அலைவு என்னை அடைந்தது. அவள் கைகளின் மென்மயிர். கண்விழித்து அவை கனவென உணர்ந்தபின்னரும் அந்த உணர்வு நீடித்தது. சிலசமயங்களில் மெய்யாகவே அவள் வந்தாள் என்றே என் நினைவு பதியவைத்துக்கொண்டது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.