Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ரசோதரன்

  1. மிக்க நன்றி சுவி ஐயா............... எழுத்துப் பிரதியில் மாற்றி விடுகின்றேன்..................
  2. காட்சி 3: ( ஒரு வயதான அம்மா கையில் ஒரு மடிக் கணனியுடன் நிறுவனத்திற்கு வருகின்றார். அங்கே உதவியாளர் உட்கார்ந்திருக்கின்றார்.) உதவியாளர்: வாருங்கள் அம்மா………… என்ன எங்களின் பிரம்மம் என்ன சொல்லுகின்றது…………. அம்மா: உன்னுடைய பிரம்மம் ஏதும் சரியாகச் சொல்லியிருந்தால், நான் ஏன் இவ்வளவு தூரம் வருகின்றேன்……… உன்னுடைய பிரம்மத்திற்கு எதுவுமே தெரியாது……. சரியான ஒரு பிரம்மசக்தி………. உதவியாளர்: நீங்கள் ஒன்றும் யோசிக்காமல் அதைத் திட்ட வேண்டாம், அம்மா……….அதுக்கு எல்லாமே தெரியும். தெரியாதது என்று ஒன்றுமே இல்லை. அப்படி ஏதாவது தெரியாது என்றாலும், நாங்கள் அதை ட்ரெயின் பண்ணப் பண்ண அது குயிக்காக பிக்அப் பண்ணிவிடும்………… அம்மா: என்ன பெரிய எட்டாம் தலைமுறை…………. இதுக்கு விசாலாட்சியைக் கூட தெரியாது…………. உதவியாளர்: யார் அந்த விசாலாட்சி………… அம்மா: உனக்கும் விசாலாட்சியை தெரியாதா……… அது சரி…….. உனக்கு அவ்வளவாக ஒன்றும் தெரியாது போல……… அதனால் தான் நீ இன்னமும் முதலாளி ஆகவில்லை………… உதவியாளர்: (பின் தலையில் கையை வைத்து தலையை ஆட்டியபடியே) உங்களின் பிரச்சனை என்னவென்று சொல்லுங்கள்……….. பிரம்மமும், நானும் சேர்ந்து பார்க்கின்றோம். அம்மா: அது தானே வந்த போதே சொன்னேனே………… விசாலாட்சி தான் அதைச் செய்திருப்பாள் என்று எனக்குத் தெரியும்……….. ஆனால் பிரம்மத்திற்கு அது எதுவுமே தெரியவில்லை…………. உதவியாளர்: விசாலாட்சி உங்களின் மகளா, அம்மா…………. அம்மா: அட இல்லையடா……..விசாலாட்சியும், நானும் ஒன்றாகப் படித்தோம்………. உதவியாளர்: எப்ப படித்தனீர்கள்………….. அம்மா: (யோசிக்கின்றார்……. இரண்டு மூன்று அடிகள் நடக்கின்றார்….) 50ம் ஆண்டு, 55ம் ஆண்டு இருக்கும் போல………. பள்ளிக்கூடத்தில் ஒன்றாகப் படித்தோம்………. உதவியாளர்: (முழித்துக் கொண்டே……….) அது எப்படி அம்மா பிரம்மத்திற்கு தெரியும்……………… அம்மா: இதற்கு எல்லாம் தெரியும் என்று தானே அன்று சொன்னீர்கள்……… இப்ப வந்து பிரம்மத்திற்கு அது எப்படி தெரியும் என்று கேட்டால், அப்ப பிரம்மத்திற்கு என்ன தான் தெரியும்………….. (உதவியாளர் மேலே முகட்டைப் பார்த்தபடியே இருக்கின்றார்.) அம்மா: விசாலாட்சியையே இதற்கு தெரியாது என்றால், இதற்கு அந்த விசயம் எங்கே தெரியப் போகின்றது………… உதவியாளர்: (மெல்லிய குரலில்) ஏதோ விசயம் விசயம் என்று சொல்லுறியள்…………அது என்ன விசயம்……… அம்மா: அதை எப்படி நான் என் வாயால் சொல்வது………. உதவியாளர்: இவ்வளவையும் உங்கள் வாயாலே தானே சொல்லுகின்றீர்கள்………. அதையும் சொல்லுங்கள்………. பிரம்மத்திற்கே தெரியாத கோடான கோடி விசயங்கள் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கின்றது என்ற உண்மை இப்ப எனக்கு விளங்குது……………. அம்மா: இதைத் தானே நானும் சொன்னனான்………… நாங்கள் பழைய ஆட்கள் படு புத்திசாலிகள்………. கண்ணாலே பார்த்தே காயோ அல்லது பழமோ என்று சொல்லிவிடுவம். ஒருவரின் நடையை வைத்தே அவரை எடை போட்டு விடுவம்……. உதவியாளர்: கால் தற்காலிகமாக சுளுக்கி இருந்தால் அவையளையும் சரியாக எடை போடுவியளோ………… அம்மா: அந்த ஆளுக்கு சுளுக்கு இருக்குது என்று பார்த்தே கண்டு பிடித்து விடுவோம்……… நாங்கள் அப்பவே நிலவுக்கு போய் விட்டோம்………. நீங்கள் இப்பத்தான் போகின்றீர்கள்…….. உதவியாளர்: ஓம்………… ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைக்க முன், எங்கட ஆட்கள் அந்தக் காலத்திலேயே நிலாவுக்கு போய், அங்கே வடை சுட்டார்கள் என்று அம்மம்மா ஒரு கதை சொன்னவா……… ஞாபகம் இருக்குது………. இதைத்தான் வாயால வடை சுடுகிறது என்று இந்த நாட்களில் சொல்லிகினம் போல……… அம்மா: அது யார் அந்த ஆம்ஸ்……….. (அம்மா மடிக்கணனியை திறக்க முற்படுகின்றார்………) உதவியாளர்: வேண்டாம்……….. வேண்டாம்……..நீங்கள் பிரம்மத்திடம் இதுவரை கேட்ட கேள்விகளே போதும்………. இதுக்கு மேலே வேண்டாம்………. அம்மா: அப்படி என்றால் நான் உங்களுக்கு ஒரு சதம் கொடுக்கப் போவதில்லை…… உதவியாளர்: இல்லை……. நீங்கள் கொடுக்கவே வேண்டாம்…….. ( அப்படியே தனிய நடந்து போய்க் கொண்டே தனக்குத்தானே சொல்லுகின்றார் ………) உங்களயும், உங்கள் விசாலாட்சியையும் விற்றே கம்பனி காசை எடுத்துக் கொள்ளும்………….ஆனால் என்னோட எதிர்காலம் தான் மங்கலாகிக் கொண்டே போகின்றது………………… (தொடரும்................)
  3. 🤣.............. சில விசயங்களை/வசனங்களை ஒரு சிரிப்பிற்காக எப்போதும் எழுதிக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கின்றது, சுவி ஐயா...................... 🤣............. புது ஐடி நிறுவனங்களை ஆரம்பித்து வெற்றி பெறுபவர்களின் கதைகள் மட்டுமே வெளியே தெரிகின்றது, அண்ணா. இங்கு 99 வீதத்திற்கும் மேலான புது ஐடி நிறுவனங்கள் திவாலாகிப் போகின்றன...........
  4. 🤣......................... மிக்க நன்றி அல்வாயன். ஆறு காட்சிகளையும் இங்கு பதிந்த பின், முடிந்தால் யூடியூப் இணைப்பை இங்கு பதிந்துவிடுகின்றேன். மிக்க நன்றி அக்கா.
  5. மிக்க நன்றி அண்ணா. பிள்ளைகள் எல்லோரும் ஒன்றாக இருந்த போது, ஒருவரைப் போலவே இன்னொருவர் இருந்தார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
  6. ❤️.................... சும்மா ஒரு பகிடிக்காக நான் எழுதுவதை தவிர்த்துப் பார்த்தால், இங்கு உங்களைப் போன்ற சிலரிடமிருந்தே இன்றைய கிரிக்கெட்டையும், வீரர்களையும், விதிகளையும் நானும், என் போன்ற பலரும் அறிந்து கொள்கின்றனர்.................🙏. உங்களுக்கு விதிகளில் சந்தேகம் வரும் போதுதான் எங்களுக்கும் விதிகளில் சந்தேகம் வருகின்றது...............🤣.
  7. காட்சி 2: (ஒருவர் மடிக்கணனியின் முன் உட்கார்ந்திருக்கின்றார். அருகில் ஒரு அலைபேசி இருக்கின்றது. அவரின் அம்மா சுளகுடன் அமர்ந்திருக்கின்றார்.) அம்மா: டேய்…….விடிஞ்சா பொழுதுபட்டா அதையே கட்டிப் பிடிச்சுக் கொண்டு அப்படி என்னதான் செய்யிறாய்…………….காலகாலத்தில் ஒரு கல்யாணத்தைக் கட்டி, வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு போவாய் என்று பார்த்தால், கேட்கிற நேரம் எல்லாம் ‘நான் முரட்டு சிங்கிள்………….நான் முரட்டு சிங்கிள்……….’ என்று சொல்லி, இப்ப ஒரு முரட்டு அங்கிளாக மாறி நிற்கிறீயே………….. மகன்: கொஞ்சம் சும்மா இரு அம்மா……….. இது எழுதிக் கொடுத்த லெட்டரை கொடுத்து நானே நொந்து போய் வந்திருக்கின்றேன்……….. அம்மா: என்னது………. இது லெட்டர் எழுதுமா…………இங்க எங்கட கூட்டத்திடம் கேட்டால், அவர்களே நல்ல லெட்டரும், ஐடியாவும் கொடுப்பார்களே…….. இங்கே எவ்வளவு அனுபவசாலிகள் இருக்கின்றார்கள்…………. மகன்: இவங்கள் எல்லாம் உங்களை மாதிரி பழைய ஆட்கள், அம்மா………. ‘ரோஜா மலரே ராஜ குமாரி…………’ என்று கையை வீசி எறியிற கூட்டம். அதெல்லாம் இப்ப சரிவராது……….. பெண் வீட்டில் நாயை அவிழ்த்து விட்டிடுவார்கள்……… அம்மா: அப்ப இந்த அய்க்கு எல்லாம் தெரியுமோ…………. மகன்: அது அய் இல்லை, அம்மா……… இதுக்கு பெயர் ஏஐ………. தமிழில் சொன்னால் செயற்கை நுண்ணறிவு………… அம்மா: தமிழில் சொன்னால் பல்லுப் பறக்கும் போலக் கிடக்குதேயடா………… என்ன கருமமோ………… கடைசியில் நீ இதைத்தான் கட்டப் போகின்றாய்……… மகன்: என்ன………..இது ஒரு கருமமா……… நீ வருவாய் தானே………. பலாப்பழத்தில பால்க்கோவா எப்படிச் செய்கிறது என்று…….. மீன் இல்லாமல் மீன் குழம்பு எப்படிச் செய்கிறது என்று…………………… நீயும் அப்பாவும் ஹவாய் பீச்சில நிற்கிற ஒரு போட்டோ செய்து தா என்று………… இன்னொரு போட்டோ நிலாவில நிற்கிறது போல என்று………. அப்ப பார்க்கிறன்………. அம்மா: நான் ஏன் உன்னைக் கேட்கப் போகின்றேன்…….. நானும் இதை வாங்கி, நானே கேட்டுக் கொள்கின்றேன்…………….. (மகன் மடிக்கணனியுடன் பேச ஆரம்பிக்கின்றார்.) மகன்: பிரம்மம்…….. நீ எழுதிக் கொடுத்த எந்த கடிதமும் வேலைக்கு ஆகவில்லை. ஒருவர் கூட என்னை திரும்பி பார்க்கவில்லை. பிரம்மம் (குரல் மடிக்கணனியிலிருந்து வருகின்றது): அதற்கு முன்னர் கூட, நீங்களே சொந்தமாக கடிதம் எழுதிக் கொடுத்த போதும், உங்களை எவராவது திரும்பிப் பார்த்திருக்கின்றார்களா…………… மகன்: என்ன நக்கலா………….. உனக்கு ஒரு காதல் கடிதம் கூட ஒழுங்காக எழுதத் தெரியவில்லை……….. அறிவுப் பிரம்மம் என்று பெயர் வைத்திருக்கின்றார்கள்….. பிரம்மம்: இந்த ஊரில் இருக்கின்ற 25 பேர்கள் ஒரே அடையாளங்களை, ஒரே விபரங்களை என்னிடம் சொன்னார்கள். நான் ஒரே மாதிரி 25 கடிதங்களை எழுதினேன். அந்த ஒரே பிள்ளை எப்படி உங்களில் எவரையும் திரும்பிப் பார்க்கும்………. இந்த 25 இல் எதை அது பார்க்கின்றது………… மகன்: என்னது 25 பேர் பின்னால் திரிகின்றார்களா………… 14 என்று தான் எனக்குத் தெரியும். பிரம்மம்………. நீ சும்மா தானே அடித்து விடுகின்றாய்………. இந்த ஏஐ சாப்ட்ஃவேர்கள் தங்களுக்கு எல்லாம் தெரிந்தது போல அடித்து விடும் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்…………. பிரம்மம்: நான் எட்டாவது தலைமுறை செயற்கை நுண்ணறிவைச் சேர்ந்தவன். நாங்கள் எதையும் அடித்து விடுவது இல்லை. நாங்கள் உண்மையைத் தவிர வேறு எதையும் உரைப்பது இல்லை. மகன்: அப்படியா……….. அப்படி என்றால் அந்த 25 ஆட்களின் விபரங்களை கொடு………… இந்தக் கூட்டத்தில் யாராவது இருக்கின்றார்களா என்று பார்ப்பம்….. வீட்டில் விழும் அடிகளை நினைத்தே அப்படி இங்கே ஒருவரும் இருக்கமாட்டார்கள்……… பொறு, பொறு…….. நீ எட்டாவது தலைமுறையா………. பத்தாவது தலைமுறையே வந்து விட்டது என்றார்களே………….. இப்ப தெரியுது, ஏன் இந்தக் கடிதங்கள் எதுவும் வேலை செய்யவில்லை என்று………ம்ம்……….. பிரம்மம்: நானே பிறந்து ஒரு வாரம் தான் ஆகியிருக்கின்றேன். எனக்கு பின் வந்தவர்கள் என்றால், அவை புதிய பரிசோதனை முயற்சிகளாகத்தான் இருக்கும். பொதுவாக அவைகளை நம்பக்கூடாது…………. ஆனாலும் நீங்கள் தாரளமாக நம்பலாம்………. இதை விட என்ன நடந்து விடப் போகின்றது உங்களுக்கு………….. மகன்: எனக்கு உன்னுடைய நக்கல், தொனி, சொற்கள் எதுவுமே பிடிக்கவில்லை. நான் உன்னை மாற்றி விட்டு, வேறு ஒன்றை பாவிக்கலாம் என்றிருக்கின்றேன். பிரம்மம்: நீங்கள் விரும்பினால் அப்படியும் செய்யலாம்………… வேறு எந்த மென்பொருட்களை நீங்கள் பாவிக்கலாம் என்ற தரவுகளை நான் சொல்லவா……. மகன்: வேண்டாம்……….. நான் என்னுடைய நண்பர்களை கேட்டுக் கொள்கின்றேன்………….. இந்தக் கூட்டத்தில் என்னுடைய அறிவான நண்பர்கள் பலர் இருக்கின்றார்கள்………… பிரம்மம்: ம்ம்………. குறையாக நினைக்க வேண்டாம்……. ஆனால் உங்களின் நண்பர்களில் அவ்வளவு விசயம் தெரிந்தவர்கள் என்று எவருமில்லை. மகன்: என்னது……… ஒருவரும் இல்லையா…….. ஒரு நண்பன் பயங்கர மண்டைக்காய்……….. அவனுக்கு தெரியாதது எதுவுமே இல்லை………. இன்னும் ஒருவர் அங்கே இருக்கின்றார்………. இன்னும் ஒருவர் இங்கே இருக்கின்றார்….. பின்னுக்கு ஒருவர் நிற்கின்றார்……… பிரம்மம்: ஓ……………. அந்த மண்டைக்காயா………….. அவர் சரியான அரைகுறை………. அவருக்கு எதுவுமே முழுதாகத் தெரியாதது………… ஆனால் உங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்றபடியால், அவர் சும்மா அடித்து விட்டுக் கொண்டிருக்கின்றார். இங்கு எல்லாம் தெரிந்த ஒரே ஒருவர் என்றால்……….. அது நான் மட்டுமே…………… மகன்: அப்படி என்ன அரைகுறையாக அவன் உன்னை கேட்டான்……….. பிரம்மம்: மனிதர்கள் குரங்கிலிருந்து தான் வந்தார்கள் என்றால், பூமியில் எப்படி குரங்குகள் இன்னமும் இருக்கின்றன…………. என்று அவர் என்னைக் கேட்டார். மகன்: வாவ்……….. எப்படியான ஒரு கேள்வி…….. இதனால் தான் அவனை நாங்கள் அறிவாளி என்கின்றோம்…….. இந்தக் கேள்வியில் என்ன பிழை………..இந்த நாட்டில் அரசாங்கத்தில் இருக்கின்றவர்களே இப்படித்தானே கேட்கின்றார்கள்………. என் நண்பனும் அரசாங்க ஆதரவாளன் தான்……….. பிரம்மம்: உங்களுக்கு எந்த அடிப்படைகளுமே தெரியவில்லை. விஞ்ஞானம் தான் தெரியவில்லை என்று பார்த்தால், ஒரு காதல் கடிதம் கூட எழுதத் தெரியவில்லை………..த்தூ…………. மகன்: என்ன………. காறித் துப்புகின்றாயா……… நான் உங்களின் நிறுவனத்திற்கு எந்தக் காசும் கொடுக்கப் போவதில்லை…………. பிரம்மம்: நான் துப்பாவிட்டால் அப்படியே அள்ளிக் கொடுத்து விடுவார் இவர்……….. இவர் வைத்திருப்பது எல்லாமே திருட்டு மென்பொருட்களும், இலவசமாக இறக்கிய பொருட்களும்…….இதில் காசு கொடுத்து விடுவாராம்…….. எல்லா தகவல்களையும் திரட்டி அப்படியே இணையத்தில் ஏற்றி விடுகின்றேன்……… மகன்: அய்யோ………..அய்யய்யோ………… அப்படி ஒன்றும் செய்து விடாதே…… நான் காசு ஒழுங்காக கொடுக்கின்றேன்…………… (தொடரும்.......... )
  8. இங்கு தென் கலிஃபோர்னியாவில் கடந்த வாரம் மேடையேற்றப்பட்ட ஒரு நாடகம் இது. இதை நான் சில நண்பர்களின் உதவியுடன் எழுதி, தயாரித்து இருந்தேன். எங்கள் நண்பர்கள் வட்டத்தால் வருடா வருடம் நடத்தப்படும் தமிழமுதத்தின் 2025ம் ஆண்டு நிகழ்வில் இது மேடையேற்றப்பட்டது. தவிக்கும் தன்னறிவு நாடகம் தென் கலிஃபோர்னியா தமிழ் நண்பர்கள் வட்டம் 2025 சுருக்கம்: செயற்கை நுண்ணறிவின், அல்லது ஏஐ என்று எல்லோராலும் பொதுவாக சொல்லப்படும் தொழில்நுட்பத்தின், அதிவேகப் பாய்ச்சலால், அதன் எல்லை மீறிய பயன்பாடுகளால் சாதாரண மனிதர்கள் அன்றாடம் எதிர்நோக்கும் சிக்கல்களை, சிரமங்களை ஒரு சிறிய நாடக ஆக்கமாக உருவாக்கியிருக்கின்றோம். இது செயற்கை நுண்ணறிவிற்கு எதிரான ஒரு கருத்தை முன்வைக்கும் முயற்சி அல்ல. மாறாக, மனிதர்களின் அளவுக்கதிகமான எதிர்பார்ப்புகளையும், அதனால் உண்டாகும் ஏமாற்றங்களையுமே இந்த ஆக்கம் சொல்ல முயல்கின்றது. காட்சி 1: (ஒரு நிறுவனத்தின் தலைவர் அதன் புதிய செயற்கை நுண்ணறிவு மென்பொருளை வெளியிடுகின்றார். அவர் கையில் ஒரு அலைபேசி இருக்கின்றது.) தலைவர்: இன்று எங்கள் நிறுவனம் வெளியிடும் இந்த சாப்ட்ஃவேர் இதுவரை இந்த உலகமே கண்டிராதது. புத்தம் புதியது. பார்வையாளர் 1: இன்றைக்குத்தான் வெளியிடுகின்றீர்கள் என்றால், அதை இதுவரை எவரும் கண்டிருக்கமாட்டார்கள் தானே. இதை தனியாக சொல்லவும் வேண்டுமா…………… உங்களின் சாப்ட்ஃவேரிடம் கேட்டிருந்தால் அதுவே நல்ல ஒரு அறிமுக உரையை எழுதிக் கொடுத்திருக்குமே……………… தலைவர்: (நெற்றியைச் சுருக்குகின்றார்…………..பின்னர் யோசிக்கின்றார்…..) இந்த சாப்ட்ஃவேரின் பெயர் ‘அறிவுப் பிரம்மம்’. இதை மிஞ்சிய அறிவு இனி ஒன்று வரப் போவதில்லை என்பதால் இப்படியான ஒரு பெயரை தெரிவு செய்துள்ளோம். (தலைவரின் உதவியாளர் தலைவரின் காதில் ஏதோ சொல்கின்றார்.) தலைவர்: ‘பிரம்ம அறிவு’ என்று இன்னும் ஒரு பெயரையும் நாங்கள் பதிந்து வைத்திருக்கின்றோம். இன்று உலகில் எவர் எதை திருடுகின்றார்கள் என்றே தெரியவில்லை. இந்தப் பெயரும் இருக்கட்டும், இல்லாவிட்டால் வேறு யாரும் இந்தப் பெயரைப் பதிந்து குழப்பத்தை உண்டு பண்ணிவிடுவார்கள். பார்வையாளர் 2: நீங்களே அனுமதிகள் இல்லாமல் தானே எல்லாவற்றையும் திருடி உங்களின் சாப்ட்ஃவேரில் காட்டுகின்றீர்கள்……….. இதில் நீங்களே உசாராக இருக்கின்றீர்கள் ஆக்கும். பாம்பின் கால் பாம்பறியும் என்று சுய அறிவை மட்டும் வைத்தே அன்றே சொன்னார்களே………….. தலைவர்: அறிவுப் பிரம்மம் அறியாதது எதுவுமே இல்லை. உதாரணமாக உங்களின் வீட்டுக் கதவுகளை அதுவாகவே தேவைக்கேற்ப மூடித் திறக்கும். அரிசி அவிந்தவுடன் சொல்லும். பல் வலித்தால் மருந்து கொடுக்கும். கால் வலித்தால் நீவி விடும். பார்வையாளர் 1: இந்த மொபைல் ஃபோன் காலை நீவி விடுமா……….. என்ன விலை இது……….. உதவியாளர்: உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஒரு அளவில்லையா…... எப்படி ஐயா ஒரு மோபைல் ஃபோன் காைகால்களை நீவி விடும்………. கொஞ்சமாவது யோசித்துப் பாருங்கோ………….. பார்வையாளர் 1: என்னாலேயே யோசிக்க முடியும் என்றால் நான் ஏன் இங்கே வருகின்றேன்…………………. எனக்காக நீங்கள் தான் யோசிக்க வேண்டும். பரப் பிரம்மம் என்று சொல்லி விட்டு, பாதியில் என்னை யோசி என்றால் நான் என்னவென்று யோசிப்பது. உதவியாளர்: அது பரப் பிரம்மம் இல்லை………….. அறிவுப் பிரம்மம் அல்லது பிரம்ம அறிவு…………… என்னடாப்பா, அறிமுகமே இப்படி இழுபடுதே……………… தலைவர்: கொஞ்சம் பொறுங்கள்…………. இந்த பரப் பிரம்மம் கூட நன்றாகவே இருக்கின்றது. அதையும் நாங்கள் எங்கள் நிறுவனத்திற்காக பதிந்து கொள்ளலாம் தானே…………… பார்வயாளர் 2: பரப் பிரம்மத்தையும் நீங்கள் விட மாட்டீர்களா……… அது கடவுளின் இன்னொரு பெயர்…….. அதைத்தானே இதுவரை பூமியில் வந்து, போன. இருக்கின்ற இரண்டாயிரம் மதங்களும் தங்களின் பெயர்களில் பதிந்து வைத்திருக்கின்றார்கள். அந்தப் பெயரை நீங்கள் பதிந்தால், உங்களின் வீட்டுக் கதவுகளை உங்களின் பிரம்மம் திறக்க, யாராவது உங்களின் வீடுகளுக்குள் குண்டெறியப் போகின்றார்கள்………… தலைவர்: வன்முறைகள் அற்ற வளமான ஒரு வாழ்வே எங்களின் குறிக்கோள். அறிவுப் பிரம்மமும் அதை நோக்கியே உங்களை இட்டுச் செல்லும். நீங்கள் என்ன கேட்டாலும், ஒரு அம்மாவின் அரவணைப்புடன் அது உங்களுக்கு வழிகாட்டும். இந்த தாய்மை உணர்வு கலந்த செயற்கை நுண்ணறிவு இதுவரை நீங்கள் காணாத ஒன்று. பார்வையாளர் 1: இப்படித்தான் நாலு பிஎச்டி அறிவு, ஐந்து பிஎச்டி அறிவு ஏஐ என்று முன்னர் சொன்னார்கள். கடைசியில் ஒரு வரைபடத்தில் எந்த ஊர் எங்கே இருக்கின்றது என்றே அதற்கு சொல்லத் தெரியவில்லை. நாட்டின் ஜனாதிபதியின் படத்தை காட்டு என்றால், அது என்னுடைய படத்தை காட்டிக் கொண்டு நின்றது…………… அதனால் உடனடியாக காசு கொடுத்து எல்லாம் உங்களின் பிரம்மத்தை நம்பி வாங்க முடியாது…………. உதவியாளர்: எவ்வளவு மில்லியன்கள் செலவழித்து இருக்கின்றோம். எப்படி நாங்கள் ப்ரீயாகக் கொடுக்கிறது …………. கோடிங், மாடல் ட்ரெயினிங் என்று இரவு பகலாக வேலை செய்திருக்கின்றோம்…… பார்த்து மாதம் மாதமாவது கொடுங்கள்……….. (தலைவர் நடுவில் வந்து உதவியாளரை தடுக்கின்றார். தனியே ஒரு பக்கமாக கூட்டிச் செல்கின்றார்.) தலைவர்: இலவசமாகவே கொடுப்போம்………… இப்போதைக்கு வேறு ஒன்றும் சொல்ல வேண்டாம். உதவியாளர்: எப்படி சார் முடியும்……………எப்படி ப்ரீயாக கொடுக்கிறது…….கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்………..நீங்கள் அப்ப என்ன சொன்னனீர்கள்………..ஸ்டாக் ஆப்சன் என்று கதை விட்டியளே……… அதை நம்பித்தானே என்ட கல்யாணமே இருக்கு. உங்களுக்கு என்ன……….. நல்ல புளியம் கொம்பாக பிடித்து லைப்ல செட்டில் ஆகிவிட்டீர்கள்……….. தலைவர்: புளியம் கொம்பா அல்லது புலியின் பல்லா என்று கட்டிய பின்னர் தெரிந்து கொள்வாய். இப்ப அது முக்கியம் இல்லை ஏனென்றால் அதை எவரும் மாற்றமுடியாது. இலவசம் என்று சொல்லி விற்போம். பின்னர் ஒரு மாதத்தில் காசு கொடுங்கள் என்று கேட்போம். உதவியாளர்: அவ காசு தர மாட்டம் என்று சொன்னால் என்ன செய்யிறது……… தலைவர்: அவர்களின் தனிப்பட்ட தகவல்களை விற்போம். அதற்கு எப்போதும் நல்ல சந்தை இருக்கின்றது. உதவியாளர்: நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால்…….. ஏதோ சப்ஸ்கிரிப்ஷன் தந்தால் ஏதோ அவையளிண்ட பர்சனல் இன்ஃபார்மேஷனை விற்க மாட்டோமா…… தலைவர்: அப்பவும் விற்போம்……….. எப்பவும் விற்போம். உதவியாளர்: அப்ப இந்த விசயங்களை நான் அவையளிடம் சொல்லட்டா…………. தலைவர்: உனக்கு கல்யாணம் நடக்க வேண்டாம் என்றால் தாராளமாக போய் சொல்……………… உதவியாளர்: இல்ல, இல்ல………அப்ப வேண்டாம்……… நீங்களே நைசாகச் சொல்லி விடுங்கோ. (தலைவர் முன்னாலும், உதவியாளர் பின்னாலும் வருகின்றார்கள்.) தலைவர்: நீங்கள் பலரும் சொல்வது சரியே. சந்தையில் எத்தனையோ சாப்ட்ஃவேர் உள்ளன. எங்களுடையதை நாங்கள் இலவசமாகவே கொடுக்கின்றோம். பின்னர் உங்களுக்கு பிடித்திருந்தால், நீங்களாகப் பார்த்து ஏதாவது கொடுங்கள். ஒரு தடவையிலும் கொடுக்கலாம், மாதம் மாதம் என்றும் கொடுக்கலாம். கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அம்மாவின் அரவணைப்பு இங்கேயிருந்து ஆரம்பிக்கின்றது. (உதவியாளர் திகைத்துப் போய் நிற்கின்றார்.)
  9. நடந்தது நடந்துவிட்டது, பையன் சார்............... இனிமேல் இந்தக் கிரிக்கெட்டையும், விதிமுறைகளையும் பார்க்காமல், பேசாமல் மகளிரை மட்டும் பார்த்து போட்டிகளை முடிப்பம்................🤣.
  10. பையன் சார், இந்த இந்திய மகளிர் அணியை கீரை விற்க அனுப்ப வேண்டும் என்று நீங்கள் இன்னமும் சொல்லவில்லை....................🤣. இவர்கள் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் விளையாடி தோற்பார்கள் என்று நான் நினைத்திருக்க, இவர்களோ வழி வழியே எல்லோரிடமும் அடிவாங்கிக் கட்டுகின்றார்கள்..............🫣.
  11. 👍................ நன்றி அல்வாயன். உண்மையில் நடந்த இரண்டு விடயங்களில் பலவற்றை, தனிப்பட்ட விடயங்களை, தவிர்த்து விட்டு பொதுவாக எழுத முயன்றிருக்கின்றேன்...................
  12. மிக்க நன்றி, சாமானியன். 'அழியா மை................' நல்லதொரு தலைப்பு எந்த விதமான ஆக்கத்திற்கும்..............❤️. முதுமக்கள் தாழி என்றால் ஈமத்தாழி தானே.......... முன்னைய நாட்களில் இறந்தோரை அடக்கம் செய்ய பயன்படுத்தினார்களே, அவற்றையா சொல்லுகின்றீர்கள்................... 'கலம் செய் கோவே!...............' என்று ஒரு சங்கப்பாடல் இருக்கின்றது. ஒரு அருமையான பாடல்............................
  13. தன்னறம் அல்லது சுதர்மம் என்றால் என்னவென்ற ஒரு விளக்கத்தை சமீபத்தில் வாசித்திருந்தேன். அதற்கு முன்னரே இந்தக் குறுங்கதையில் வரும் நிகழ்வுகள் போல இரு நிகழ்வுகள் எனக்கு தெரிந்தவர்களுக்கு நடந்து, அவை மனதில் ஒரு பாரமாக இருந்தன. இப்பவும் இருக்கின்றன. எவர் மீதும் ஒரேயடியாக குற்றம் சுமத்தாமல், மிகவும் இடைவெளிகள் விட்டு, மேலோட்டமாக எழுதி இருக்கின்றேன்..................🙏.
  14. 🤣................ நீங்கள் சொல்வது சரியே, பையன் சார்.............. எங்களுக்கு போட்டி இன்னமும் முடியவில்லை, ஆனால் இலங்கை அணிக்கு முடிந்து விட்டது போல...............🤣. இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் விளையாடி, ஆஸ்திரேலியா இந்தியாவை அடித்து துவைத்து காயப் போடும் என்று தான் நான் தெரிவு செய்திருக்கின்றேன். அப்படியே நடந்தால் அது உலகக் கோப்பை........... ஏதோ ஒரு வழியில் இந்தியா வென்றால், அது ஒரு ஊழல் கோப்பை என்று ஒரு சதிக் கோட்பாட்டை அவிழ்த்து விடுவதாக உள்ளேன். இப்போதைக்கு இந்த சதி விடயம் எங்களுக்கிடையில் மட்டுமே இருக்கட்டும்......................🤣.
  15. 🤣................. மண்புழுக்கள், சிலந்திகள், பல்லிகள், குருவிகள், பூனைகள், மனிதர்கள் மற்றும் மரங்கள் போன்றவற்றின் ஊடாகவே நான் என்னைச் சுற்றி இருக்கும் உலகத்தை பார்க்கின்றேன்......... என்னால் முடிந்த வரை எந்தப் பக்கமும் சாயாமல் அப்படியே சொல்லவும் முயல்கின்றேன்........ வேலை வெட்டி இல்லாதவன் போல என்ற ஒரு புரிதல் வருவதில்லைதானே.............🤣.
  16. 👍.............. இப்படியான இரண்டு இக்கட்டான நிலைகளை சமீபத்தில் பார்த்த பின்னரே இப்படி ஒன்றை எழுத வேண்டும் என்று நினைத்தேன், அண்ணா............. சரி பிழைகளையும் தாண்டி மனம் அலைமோதிக் கொண்டேயிருக்கின்றது...........................
  17. தன்னறம் -------------- நீங்கள் எல்லோரும் நலமா, ஒரு கடிதத்தை எப்படி ஆரம்பிப்பது, எப்படி எழுதுவது என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை. நான் இதற்கு முன்னர் ஏதாவது கடிதம் எழுதி இருக்கின்றேனா என்றும் ஞாபகமில்லை. கடிதங்களை அவரே தான் எழுதினார். வந்த கடிதங்களை வாசித்தது கூட அவரேதான். சில வேளைகளில் சில கடிதங்களில் இருந்த ஒன்று இரண்டு சமாச்சாரங்களை சுருக்கமாகச் சொல்லியிருக்கின்றார். அவர் என்னை எதையும் வாசிக்க விடவில்லை என்றில்லை, உண்மையில் எதையாவது வாசி வாசி என்று எனக்கு அவர் சொல்லிக் கொண்டேயிருந்தார். நான் தான் எதையும் வாசிக்கவில்லை. எனக்கு ஒரு இடத்தில் இருந்து வாசிப்பதற்கு நேரம் இருக்கவில்லை என்று தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அது பொய், நானே உருவாக்கிய ஒரு காரணம் என்று இப்பொழுது எனக்குப் புரிகின்றது. இப்பொழுது இந்தச் சிறிய அறை தான் என்னுடைய உலகத்தின் மிகப் பெரும் பகுதி. இந்த அறையை சிறிது என்பதற்கு மேல் எப்படிச் சொல்வது என்றும் தெரியவில்லை. என்னுடைய வீட்டில், ஆமாம் அது என்னுடைய வீடு தான், ஐந்து அறைகள் இருந்தன. முதலில் நான்கு அறைகள் மட்டுமே இருந்தன, பின்னர் நாங்கள் ஒரு பெரிய அறையை வீட்டுடன் இணைத்துக் கட்டினோம். நான் சிறிய அறை, பெரிய அறை, சாமி அறை என்று இப்படித்தான் சொல்லுவேன். அவர் தான் யாரும் கேட்டால் ஒவ்வொரு அறைகளின் அளவையும் ஒரு பெருக்கல் வாய்ப்பாடு போல சொல்லுவார். இங்கு ஒவ்வொருவருக்கும் இதே போன்ற சிறிய அறைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு கட்டில், ஒரு வசதியான கதிரை, இரண்டு சின்ன அலுமாரிகள், சின்ன மேசை மற்றும் நானும் சேர்ந்து இந்த அறையை நிரப்பிவிட்டோம். ஒரு தொலைக்காட்சிப் பெட்டியும் கொடுப்பார்கள். நான் அது வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். எதையாவது வாசி வாசி என்று அவர் சொன்னபடி புத்தகங்களை வாசித்துக் கொண்டிருக்கின்றேன். நீங்கள் என் அறையைத் திறந்தால், உங்கள் வலதுகைப் பக்கம் இருக்கும் அலுமாரிக்குள் இருப்பது அவ்வளவும் புத்தகங்களே. என்னுடைய சின்ன மகள் ஒவ்வொரு மாதமும் புதிது புதிதாக வாங்கி அடுக்கிவிடுகின்றார். எங்களுக்கு நான்கு பிள்ளைகள். இரண்டு ஆண் பிள்ளைகள், இரண்டு பெண்கள். ஆண், பெண், ஆண், பெண் என்று அடுத்தடுத்துப் பிறந்தார்கள். இப்பொழுது ஆறு பேரப் பிள்ளைகளும் இருக்கின்றார்கள். இங்கிருப்போர் பலருக்கும் இப்படியே பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் வெளியே அவரவர்களின் வீடுகளில் இருக்கின்றார்கள். பிள்ளைகள் மேல் கோபமோ அல்லது ஒரு மன விலக்கலோ இருந்தாலும் கூட, பேரப் பிள்ளைகளின் மேல் ஒரு இம்மியளவு கூட குறையாத பாசமே இங்கிருப்போர் எல்லோரிடமும் இருக்கின்றது. இந்த வராந்தாவில் முதல் அறையில் இருக்கும் அவர் ஒரு சரியான முசுடு. அவரின் மனைவி சில வருடங்களின் முன் போய்ச் சேர்ந்துவிட்டார். சில மாதங்களிலேயே அவரை அவரது பிள்ளைகள் இங்கு கொண்டு வந்து விட்டதாகச் சொல்கின்றார்கள். அவர் எவருடனும் முகம் கொடுத்து கதைப்பதில்லை. ஆனால் அவருடைய பேரப் பிள்ளைகள் வரும் நாட்களில் அவர் முழுதாக மாறி, மிகவும் உற்சாகமாக இருக்கின்றார். அப்படியான ஒரு நாளில் என்னைப் பார்த்து சிரித்தும் இருக்கின்றார். மீண்டும் கோவிட் வைரஸ் பரவுகின்றது என்று இப்பொழுது அறைக்குள்ளேயே இருக்கச் சொல்லிவிட்டார்கள். இந்த யன்னல் ஊடாக தெரிவது தான் நிலம், நீலம் என்றாகிப் போய்விட்டது. முன்னரும் முதலாவது கோவிட் தொற்றுக் காலத்தில் இப்படி இருந்திருக்கின்றேன். அப்பொழுது நான் இங்கு வந்து கொஞ்ச நாட்களே ஆகியிருந்தது. அந்த நாட்களில் அவருக்கு முன்னால் நான் போய்ச் சேர்ந்திருக்கலாமோ என்ற எண்ணம் சில தடவைகள் வந்தது. ஆனாலும் அவர் இவற்றை, இந்த தனிமையை தாங்கமாட்டார். எது நடக்க வேண்டுமோ, அதுவே நடந்தது போல. முதல் தொற்றுக் காலத்தில் அடிக்கடி இங்கு இழப்புகள் நடந்து கொண்டிருந்தன. அப்பொழுது எனக்கு இங்கிருக்கும் எவரையும் அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை. ஆனாலும் மனமெங்கும் ஒரு வலி இருந்து கொண்டிருந்தது. அது இல்லாமல் போய்க் கொண்டிருந்தவர்களைப் பற்றியதா, அல்லது என்னைப் பற்றியதா என்ற சந்தேகம் இன்றும் இருக்கின்றது. புத்தகங்கள் வாசித்தால் இப்படியான கேள்விகள் அதுவாகவே உள்ளுக்குள் வரும் போல. அவர் கதைக்கும் சில விடயங்கள், கேட்கும் சில கேள்விகள் அன்று எனக்கு விளங்காமல் முழித்துக் கொண்டு நின்றிருக்கின்றேன். அவர் வர வர கொஞ்சம் பைத்தியமாகிக் கொண்டிருக்கின்றாரோ என்று நான் நினைத்தாலும், நல்ல காலம், நான் அதை எவரிடமும் சொல்லவில்லை. சில சம்பவங்கள் நடந்த பின்னரே அவை நடந்து விட்டன என்ற உணர்வும், அதையொட்டிய விளைவுகளும் ஏற்படுகின்றது. அப்படியான சம்பவங்கள் உலகில் எப்போதும் நடந்து கொண்டேயிருக்கின்றன என்றோ, அவை எங்களுக்கும் நடக்கக் கூடுமோ என்ற பிரக்ஞை அற்றே மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர் இறந்தது, நான் இங்கே வந்தது மற்றும் இடையில் நடந்த சம்பவங்கள் இவை எதுவுமே புதிதல்ல. இவை ஆயிரம் ஆயிரம் தடவைகள் இப் பூமியில் இப்படியே ஏற்கனவே நடந்து இருக்கின்றன. முதுமை என்றாலே துன்பம் என்று நான் வாசித்த ஒரு புத்தகத்தில் இருந்தது. அப்படி ஒரேயடியாகச் சொல்லி விடலாம் என்று நான் நம்பவில்லை. ஆகக் குறைந்தது, அதை நான் இன்னமும் நம்பவில்லை. எல்லா மனிதர்களுக்கும் ஏதோ ஒரு கடமை எப்போதும் இருக்கின்றது தானே. முதுமையில், தனிமையில் கூட அப்படி ஒரு கடமை ஒன்று இருக்கத்தானே வேண்டும். நேற்று என்னைப் பார்க்க ஒருவர் வந்திருந்தார். அவர் வேறு ஒரு நாட்டில் இருந்து இங்கே விடுமுறைக்கு குடும்பத்துடன் வந்திருக்கின்றார். அப்படியே என்னையும் பார்க்க வந்தார். என்னை விட வயதில் மிகவும் இளையவர். உறவு முறையில் சொந்தக்காரரும் கூட. அவர்களின் வீட்டில் நாங்கள் இருவரும் இரண்டு தடவைகள் தங்கியிருக்கின்றோம். அப்பழுக்கற்ற ஒரு மனிதனாகவே அவர் தெரிந்தார். கோவிட் தொற்று என்பதால் ஒருவரையும் அனுமதிக்க முடியாது என்று சொல்லியிருக்கின்றார்கள். பின்னர் வேறு நாட்டில் இருந்து வந்தவர் என்று தெரிந்து, முகத்தை மறைத்து சில நிமிடங்கள் மட்டுமே உள்ளே அறைக்கு வர அனுமதி கொடுத்தார்கள். கதவைத் திறந்த அவர் அங்கேயே நின்று கொண்டிருந்தார். அப்படித்தான் நிற்கச் சொல்லியிருக்கின்றார்கள். நான் எதிர் மூலையில் நின்றேன். மௌனமாகவே நின்றவர் 'என்னைத் தெரிகின்றதா ............' என்று மெதுவாகக் கேட்டார். முகத்தின் பெரும்பகுதி மூடப்பட்டிருந்தாலும் அந்தக் கண்கள் எனக்கு நன்கு தெரிந்தவையே. ஆனாலும் அந்தக் கண்களை ஒரு கணத்துக்கு மேல் என்னால் பார்க்க முடியவில்லை. எனக்கு எவரின் பரிதாபமும் தேவையில்லை. 'அழும் போது ஒரு பெண் அபலையாகின்றாள்.................' என்ற ஒரு கவிதை வரியை என் கணவர் அவரது கடைசி நாட்களில் பல தடவைகள் சொல்லியிருக்கின்றார். அந்த முழுக் கவிதையையும் நான் இன்னமும் தேடி வாசிக்கவில்லை. நான்கு பிள்ளைகளும் அவர்களின் குடும்பங்களுடன் இடைக்கிடையே வந்து விட்டுப் போவார்கள். வரும் போது ஏதேதோ வாங்கி வருவார்கள். அவர்கள் வந்து போன பின், அவர்கள் வராமலே இருக்கலாம் என்றும் தோன்றுவதுண்டு. நான் சிறு வயதில் கோழிக்கு அடை வைப்பேன். ஒரு தடவை 15 முட்டைகள் வைத்து 14 குஞ்சுகள் பொரித்தன. அந்தப் 14 குஞ்சுகளையும் தாய்க் கோழி கவனமாகப் பார்த்துக் கொண்டது. ஒரு நாள் தாய்க் கோழி மட்டும் படுத்திருந்தது. ஒரு குஞ்சுகளையும் காணவில்லை. குஞ்சுகளுக்கு என்ன நடந்தது என்று பதறிப் போய் தாய்க் கோழிக்கு அருகே போனேன். மெதுவாக செட்டைக்குள்ளிருந்து ஒரு குஞ்சு எட்டிப் பார்த்தது. 14 குஞ்சுகளும் உள்ளேயே இருந்தன. எப்படி ஒரு கோழியால் இது முடிகின்றது என்று ஆச்சரியமாகவே இருந்தது. குஞ்சுகள் ஓரளவு வளர்ந்து, வீட்டு முற்றத்தில் நின்ற மாமரத்தில் அவைகளாகவே பறந்து ஏற ஆரம்பித்தவுடன், தாய்க் கோழி குஞ்சுகளை மெதுவாகக் கொத்திக் கலைக்க ஆரம்பித்தது. அதுவும் ஆச்சரியமே. நான் விரும்பியே இங்கே வந்தேன் என்று நேற்று என்னைப் பார்க்க வந்தவருக்கும் சொன்னேன். அவர் அதை நம்பவில்லை என்பதும் எனக்குத் தெரிந்தது. ஆனாலும் எனக்கென்று ஒரு கடமை இருக்கின்றதல்லவா. 'நீங்கள் இனிமேலும் கஷ்டப்படாமல் போங்கள்............. நான் இருக்கும் வரை பிள்ளைகளுக்கு குறை குற்றம் எதுவும் வராமல், என்னால் முடிந்த வரை, பார்த்துக் கொள்கின்றேன்..................' என்று அவருக்கு ஒரு வாக்கும் கொடுத்து இருக்கின்றேன்.
  18. 🤣........... அதுவாக நடக்கிற விசயத்துக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்............. இலங்கை மோசமாகத் தோற்கும், ஆஸ்திரேலியா அமோகமாக வெல்லும் என்று நினைத்து, அதன்படியே தெரிவுகள் போட, இந்த இரண்டு நாடுகளும் எனக்காக விளையாடுவது போலவே விளையாடுகின்றன................🤣. எல்லா நண்பர்கள் கூட்டங்களிலும் ஓரிரு நண்பர்கள் மற்றவர்களுக்கு பாடங்களில் உதவி செய்வார்கள். கடைசியில் பரீட்சை முடிவுகளைப் பார்த்தால், உதவி செய்தவர்களுக்கு பி அல்லது சி தான் வந்திருக்கும்; உதவி கேட்டவர்கள் ஏ எடுத்திருப்பார்கள்........... இது வழமை போல..................🤣.
  19. 👍.............. இந்த களத்தடுப்பு விபரங்களை வாசிக்கும் போது, நான் சிறுவயதில் கிரிக்கெட் விளையாடாதது மட்டும் இல்லாமல், கிரிக்கெட் எல்லாம் ஒரு விளையாட்டா என்று கிரிக்கெட்டை ஏளனப்படுத்தியதிற்கு இப்பொழுது கிரிக்கெட் என்னைப் பழிதீர்ப்பது போல இருக்கின்றது..................🤣.
  20. மீண்டும் உங்களைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி, கோபி. கைக்கூக்கள் நன்றாக இருக்கின்றன................❤️.
  21. 👍.............. இயன் ஹீலியை தெரியும்........... அந்த நாளைய அலன் போர்டர் குரூப் தானே............ பெறாமகள் 16 அடிகள் பாய்கின்றாரே................... எங்களின் அப்பாக்கள், சித்தப்பாக்கள், மாமாக்கள் வேலி தான் பாய்ந்தார்கள்........... நாங்களும் அவர்களை விட அதிகமாகவே பாய்ந்தோம்..................🤣.
  22. கிரிக்கெட் என்று மட்டும் இல்லாமல், நீங்கள் சிலர் பல உள் வீட்டு விசயங்களையும் தெரிந்து வைத்திருக்கின்றீர்களே....................😜. ஆஸ்திரேலிய அணியை போட்டியில் இருந்து விலக்கி விடலாம்...............🤣.
  23. ஒரு 20 ஓவர்கள் என்றாலும் விளையாடினால், நியூசிலாந்து ஒரு அதிரடி காட்டுவார்கள் என்று பார்த்தால் திரும்பவும் மழை தூறுது.................. இடிமழையால் தப்பியது இலங்கை........................🤣. இன்றைக்கு இங்கே லாஸ் ஏஞ்சல்ஸிலும் மழை பெய்கின்றது. நல்ல மழை........... வருசத்தில் ஐந்தோ ஆறோ நாட்கள் தான் இங்கே மழை இப்படிப் பெய்யும்..........
  24. தென்னாபிரிக்கா பற்றி மட்டும் என்றில்லாமல், எல்லா மகளிர் அணிகளையும் சேர்த்தே சொல்ல வந்தேன், அண்ணா.............. எல்லா மகளிர்களுமே பின்னுக்கு வருவதை முன்னுக்கே யோசித்து வைக்கும் 'பின் புத்தி' உள்ளவர்கள் தானே...................🤣. தென் ஆபிரிக்கா அணி நல்லாவே விளையாடுகின்றார்கள்.............. போகிற போக்கில் நாலில் ஒன்றாக வந்து விடுவார்கள் போலத் தெரியுதே................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.