Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பின்நவீனத்துவம் – ஓர் அறிமுகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன் நவீனத்தும் பற்றி யாரும் புத்துகம் எழுதவில்லையா?

பின் நவீனத்துவம் பற்றி எழுத இவ்வளவு இருக்கும்போது......

முன் நவீனத்துவத்தில் எம்மட்டு இருக்கும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பின்நவீனத்துவம் என்றால் நவீனத்துவதற்குப் பின்னானது.. :)

  • கருத்துக்கள உறவுகள்

பின்நவீனத்துவம் என்றால் நவீனத்துவதற்குப் பின்னானது.. :)

அப்பா 5012 ஆண்டளவில்தான் தொடங்குமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்திற்கும் அடிப்டை, சுயமாகச் சிந்திக்கத் தெரியவேண்டும். நாம் நாமாகச் சிந்திப்பதோடு எமது சிந்தனைகளின் பலாபலன்களை எதிர்கொள்ளக் கூடியவர்களாக இருக்கும் வரை, நாம் எமது முதன்மை மட்டுமல்ல மூர்க்கமானதுமான விமர்சககராக இருக்கும் வரை, மற்றறையவர்கள் எல்லாம் மடையர்கள் நாம் அதிமேதாவிகள் என்று நினைக்காதவரை, 'இசம்' சர்ந்து அலட்டிக்கொள்ளவோ, எந்த இசம் நல்லம் எந்த இசம் கூடாது என்று ஆராயவோ தேவையில்லை என்பது எனது அபிப்பிராயம்.

பொட்டில் அடித்தால் போலிருக்கின்றது :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பின்நவீனத்துவம் தத்துவமும் அரசியலும் கலந்த ஒரு கலை சார்ந்த கோட்பாடு. அது போலவே பிற கோட்பாடுகளும் (யதார்த்தவாதம், இருத்தலியல்வாதம், அமைப்பியல்வாதம், நவீனத்துவம் போன்றவை) தத்துவத்தையும் அரசியலையும் கலந்துதான் உள்ளன!

முதலாளித்துவத்தின் ஆரம்பத்தில் யதார்த்தவாதம் மூலம் வாழ்வைப் புரிந்துகொள்ளவும், வார்த்தைகளால் விபரிக்கவும், விளக்கவும் முடியும் என்று நம்பப்பட்டது. எனினும் முதலாம் இரண்டாம் உலக மகா யுத்தங்களிற்கு இடைப்பட்ட காலத்தில் தோன்றிய கலாச்சார நெருக்கடிகளையும், மனவேறுபாடுகளையும் யதார்த்தவாதத்தால் விளக்க முடியாத நிலை ஏற்பட்டபோது உருவானதுதான் நவீனத்துவம்.

யதார்த்தத்தை கலைகளில் திரித்துத் தருவதுதான் நவீனத்துவம். நவீனத்துவத்திற்குள் சர்ரியலிசம், சிம்பலிசம் என்று பல வகைகள் உள்ளன. தமிழில் புதுக்கவிதை நவீனத்துவத்திற்குள் வருகின்றது.

கோட்பாடுகளைக் கொண்டு உலகத்தைப் புரிந்துகொள்ளமுடியாது. முற்று முழுதான உண்மை என்று எதுவுமே இல்லை. படைப்பு என்று எதுவுமே இல்லை. வாசகன் பிரதிக்குக் கொடுக்கும் அர்த்தமே படைப்பின் பொருள் போன்ற கருத்துக்கள்தான் பின்நவீனத்துவத்தின் அடிப்படைகள். அதாவது பின்நவீனத்துவம் யதார்த்தத்தைச் சிதைத்துவிடும் தன்மை வாய்ந்தது. கட்டுக்கோப்பற்ற, சிதறுண்ட நிலையைக் குறிக்கின்றது.

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒன்னுமே புரியல.. இந்த திரியில.. :huh:
என்னமோ கிறுக்குது.. மர்மமா இருக்குது.. :o

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்னுமே புரியல.. இந்த திரியில.. :huh:

என்னமோ கிறுக்குது.. மர்மமா இருக்குது.. :o

 

என்ன பகிடியா விடுறீங்கள், இரண்டு வருசமா படிச்சும் இன்னும் புரியவில்லையா?பின்நவீனத்துவம் என்றால் Postmodernism.:D

பின்நவீனத்துவ படைப்புகளில் மையம் என்ற ஒன்று இருப்பதில்லை. காட்டில் வழி தேடி அலையும் மனிதனுக்கு முன்னர் ஒரே ஒரு வழியை மட்டும் காட்டிவிட்டு, பிற வழிகளை நிராகரிப்பது நவீனத்துவம் (அவ்வழி சரியானதாகக்கூட இருக்கலாம்). அவனிடம் போய், ‘இந்த ஒரே வழியை நம்பாதே.. இன்னமும் பல வழிகள் இருக்கின்றன’ என்று சொல்வது பின்நவீனத்துவம் (இங்கே ஒரே ஒரு வழி என்று நிறுவப்பட்டுள்ளது உடைக்கப்படுகிறது. அதைத்தவிரவும் இன்னும் பல வழிகள் இருக்கின்றன என்று சொல்லப்படுவதன்மூலம்).

------

 

அதாவது மிகச் சிறந்தது, சரியானது என ஒன்றை கண்டு பிடித்து அதை நிரூபித்து அதை மட்டும் வைத்துக் கொண்டு பிறவற்றை நிராகரிக்கும் போக்குதான் நவீனத்துவம். அப்படிச் செய்தால் பெரும்பாலானவர்கள் ஒடுக்கப் படுவார்கள் என உணர்வதே பின்நவீனத்துவம். இது ஒற்றைத் தன்மைக்கு எதிராக பன்மையை முன்வைக்கிறது. எல்லாவற்றுக்கும் அவற்றுக்கான இடம் அளிக்கப்பட வேண்டும் என்கிறது. அப்படி மையப் படுத்தும் சிந்தனைகளை பிரித்து ஆராய்ச்சி செய்கிறது. ஒருமை கொண்ட வடிவங்களை பிரித்துப் பரப்பிப் பார்க்கிறது.

வென்றவர்களின் வரலாறு அளவுக்கே தோற்றவர்களின் வரலாறும் முக்கியம் என நமக்கு கற்பித்தது பின்நவீனத்துவமே

-- ஜெயமோகன்

 

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பா எல்லாரையும் போட்டு குழப்புறீங்கள்? இவ்வ்வ்ளோ பெரிய அப்பாடக்கர் சாருவுக்கே கடுப்பை கௌப்பிற கேள்வி என்டா அதில ஏதோ மர்மம் இருக்கனும்.

 

இணையத்தில தேடி பார்த்ததிலை நான் கண்டு பிடிச்சது என்வென்டா...

 

முந்தின காலங்களில பெண்களை தலைமுடியை என்னத்தால சேப் ஆக்கினவை? "hair" பின்னாலே! சரியா?

 

இந்த "hair" பின் முன்னைய காலத்தில இப்படி இருக்கும். 

20120714220844!Hairpin-lrg.png

 

இப்ப உலக நவீனமயமாக்கலுக்கு பிறகு புதிசு புதிசா மாடர்னா பின் வந்திருக்கு. அது இப்படி இருக்கும்.

trail-order-girl-christmas-hair-pin-cand

இப்படி நவீனமான பின்கள் நிறைய வந்துகொண்டிருக்கு.

 

அதனால தான் "பின்"நவீனத்துவம் என்டு ஒரு சொல் வந்திருக்க வேணும். "hair" என்ற சொல் வரலியே என்டு நீங்கள் கேட்கிறது விளங்குது. "hair" என்டா தமிழில ஒரு கெட்ட வார்த்தை. அதனால தான் எங்கட தமிழ் இலக்கியவாதிகள் அந்த சொல்லை தவிர்த்திட்டினம் 

 

இப்ப விளங்குதே பிள்ளையள்? இதுக்கு போய் மண்டைய சொறிஞ்சு கொண்டு நிக்கிறீங்கள்.  :icon_idea:

Edited by ஊர்க்காவலன்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் பின் நவீனத்துவக் கட்டுரை வனையலாம்

ஜெயமோகன்

இப்போதைய சிற்றிதழ்கள் பொதுவாக நீளமான கட்டுரைகளை வெளியிடுவதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.வெளியிட்டால் அவை பின்நவீனத்துவக் கட்டுரைகளாகவே இருக்கும். பழங்காலத்தில் கப்பல்களில் அடிக்குவட்டில் எடை வேண்டுமென்பதற்காக உப்பு ஏற்றப்பட்டது போல சிற்றிதழ்களை தீவிர இதழ்களாக தோற்றமளிக்கச் செய்வதற்கு பின் நவீனத்துவக் கட்டுரைகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஒரு நல்ல பின்நவீனத்துவக்கட்டுரையானது பின்நவீனத்துவக் கட்டுரை எழுதும் அல்லது எழுத விரும்பும் பிறரால் மட்டுமே படிக்க முயலப்படும் என்பதை முதலில் உணரவேண்டும். எனவே துணிந்தவனுக்கு துக்கமில்லை என்பதே பின்நவீனத்துவ எழுத்தின் முதல்கொள்கையாகும்.

பின் நவீனத்துவத்தின் முதல்கோட்பாடு ‘ஆசிரியனின் மரணம்’. பின் நவீனத்துவ ஆசிரியன் எண்பதுகளின் தொடக்கத்தில் ரோலான் பார்த் என்பவரால் கொலைசெய்யப்பட்டார். இப்போது எழுதுபவர்கள் ஆசிரியனின் ஆவிகளே. ஒரு பின் நவீனத்துவ ஆசிரியன் என்பவன் தனக்குத்தானே ஆவியாக நின்று எழுதுபவன் என உணர்க. பிறருக்கும் , உரிய முறையில் கௌரவிக்கப்பட்டால், அவன் ஆவியாக ஆகலாம்

ஆவிகளின் இயல்புகள் ஐந்து.

1.ஆவிகளுக்கு கால்தரிக்காது. ஆகவே பின் நவீனத்துவர் எங்கும் நிலைக்க வேண்டியதில்லை. எழுதும் கட்டுரைக்கான நிலைபாட்டை அதற்கு சிற்சில மணித்துளிகளுக்கு முன்னர் படித்த கட்டுரையிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

2. ஆவிகள் தலைகீழாகத் தொங்கும் பான்மை கொண்டவை. ஆகவே பின் நவீனத்துவர் கருத்துலகில் எப்போதும் நேர்மாறான காட்சிகளைக் கண்டு சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறார்.

3. ஆவிகள் பிற உடலில் கூடும் இயல்புள்ளவை. பின் நவீனத்துவர் தன் சீடர்கள் உடல் வழியாக பேசுவதும் வழக்கமாகும். அப்படிப்பேசும்போது பலமொழிகள் பேசுதல், முகத்திலும் உடலிலும் வலிப்புகள் காட்டுதல், சிரித்தல், விசும்பி அழுதல் முதலிய மெய்ப்பாடுகள் காணப்படும்

4. ஆவிகள் பிளான்செட் முதலிய ஊடகங்கள் வழியாக தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றன. பின் நவீனத்துவ அவருக்கான சிற்றிதழ்கள் தேவைப்படும் நிலையிலிருக்கிறார். உடைவு, ஒடிவு, சதைவு, வாதம்,பித்தம் ,கபம் அல்லது மாற்று, ஊற்று, கலக்கு, குடி, உமிழ் முதலிய பெயர்களில் இவ்வூடகங்கள் அவ்வப்போது அச்சிடப்பட்டு வெளியிடப்படுகின்றன

5. ஆவிகளை மந்திரித்து ஓட்டமுடியும். பின் நவீனத்துவர்களை பின்நவீனத்துவ மந்திரங்கள் மூலமே ஓட்ட முடியுமென உணர்க. அதைச்சொல்ல இன்னும் பெரிய பின்நவீனத்துவ ஆவி தேவையாகிறது. ‘பேச்சு பேச்சென்னும், பெரும் பிரேம் வந்தக்கால் கீச்சு கீச்சென்னும் சாரு’ என்ற பழமொழியை நினைவுகூர்க.

பின் நவீனத்துவர்கள் மொழியையே அனைத்துமாகக் கருதுகிறார்கள். அதிகாரம், அரசியல், பண்பாடு, மனம், நனவிலி எல்லாமே மொழிதான். சமீபத்தில் பின் நவீனத்துவர் ஒருவருக்குவயிற்றுச்சிக்கல் வந்தபோது கூட மொழிக்குதான் மருந்து கொடுத்திருக்கிறார்கள். மொழி என்பது ஒரு அமைப்பு என்பது அமைப்பியலாளார் கூற்று. பின்அமைப்பியலார் மொழியை ஒரு பின்அமைப்பு என்று கருதுகிறார்கள். இவர்கள் பின்னால் சென்று பின்அமைப்புகளை விரிவாக ஆராய்ச்சி செய்கிறார்கள்.

பின்நவீனத்துவர்களைப் பொறுத்தவரை மொழி என்பது மொழிதல் என்ற செயல்பாடு மட்டுமே. ஆகவே அச்செயல் இருக்கும் வரைத்தான் எல்லாமே இருக்கும். அவர்கள் அயராது மொழிய நேரிடுகிறது. ‘நான் பேசுகிறேன் ஆகவே நான் இருக்கிறேன்’ என்று பண்பலைவானொலிகளால் இன்று பாவிக்கப்படும் வரியானது உண்மையில் பின்நவீனத்துவர்களிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டதாகும்.

பின்நவீனத்துவத்தைப் பற்றிய கீழ்க்கண்ட வரிகள் உங்கள் கவனத்துக்குரியவை.

1. பின் நவீனத்துவத்தை எப்படி புரிந்துகொள்வது என்பது அல்ல வாசகன் முன் உள்ள வேலை, எப்படி எதிர்கொள்வது என்பதே.

2. பின் நவீனத்துவத்தைப் புரிந்து கொள்ள முயலாமல் இருப்பதே அதை புரிந்துகொள்ள உகந்த வழியாகும்

3. பின் நவீனத்துவத்தைப் புரிந்துகொள்ள பின்நவீனத்துவக் கட்டுரைகளை படிப்பதைவிட அவற்றை எழுதுவதே சிறந்த வழி.

4. பின்நவீனத்துவக் கட்டுரை என்பது கருத்துக்களினால் ஆனது அல்ல, மொழியால் ஆனது. [மொழி என்பது வார்த்தைகளினால் ஆனது. வார்த்தைகள் ஒலியால் ஆனவை. ஒலி என்பது ஓர் அமைப்பு அல்ல, செயல். ஒலித்துக் கொண்டிருப்பதனால் அது ஒலி.]

பின்நவீனத்துவக் கட்டுரை தன்னைத்தானே நிகழ்த்திக் கொள்வது என அதன் முன்னோடிகள் சொல்லியிருக்கிறார்கள். சிறுநீர் கழிப்பதுபோல. அதற்கான உந்துதல் வந்ததும் நாம் செய்யவேண்டியதெல்லாம் உரிய இடத்தை தேர்வுசெய்வது மட்டுமே. நடுவே நிறுத்துவது கடுப்பைக்கிளப்பும். ‘பாஷை என்பது வேட்டைநாயின் கால்தடம்’ என்பது நவீனத்துவக் கூற்று. ‘பாஷை என்பது நாட்டு நாயின் நீர்த்தடம்’ என்பதே பின்நவீனத்துவம். சகநாய்கள் மட்டுமே அவற்றை மோந்து கண்டுபிடிக்கின்றன.

பின்நவீனத்துவக் கட்டுரைகள் கீழ்க்கண்ட ஐந்து இயல்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.

1. கட்டுடைத்தல். ஏற்கனவே எழுதிக் கொண்டிருக்கும் கட்டழகர்களை பிடித்து வாகாக நிறுத்தி உடைப்பது. கட்டுடைப்பதில் இருவகை உண்டு. ஒன்று, உடைத்தவற்றை கூடையில் அள்ளி அப்பால் கொட்டும் முறை. இதை விமர்சகர் நாகார்ஜுனர் என்பவர் செய்து மேற்கொண்டு உடைக்க ஒன்றுமில்லாமலாகி லண்டனின் போய் அமைந்தார். இரண்டு. உடைப்பதற்கு முன்னரே உடைத்த துண்டுகள் என்னவாக இருக்க வேண்டுமென்ற திட்டத்துடன் செயல்படுதல். இதை அ.மார்க்ஸ் என்ற அறிஞர் செய்து வழிகாட்டினார்.

2. அங்கதம். இது கிட்கிந்தையில் மன்னர்கள் வாலிசுக்ரீவர் முன்னே அங்கதன் என்பவரால் செய்து காட்டப்பட்டமையால் இப்பெயர் பெற்றது. வாலாட்டுதல் என்று நாட்டு வழக்கு. இளித்துக்காட்டுதலும் உண்டு. பின்நவீனத்துவ அங்கதம் என்பது செவ்வியல், கற்பனாவாத, நவீனத்துவர்களைக் கண்டு எம்பிக்குதித்தும் அந்தர்பல்டி அடித்தும் வாலாட்டிக்காட்மும் இளித்தும் சொறிந்தும் குறிகாட்டியும் அவர்களை அழஅழ அடிப்பதாகும். இதற்கு ஒவ்வாமல் அவர்கள் செவ்வியல் அங்கதம் என்கிற வாழைப்பழஊசியை [அல்லது குதக்கடப்பாரையை] பயன்படுத்தினால் ஐம்பத்தெட்டு பக்கங்களுக்கு விசும்பி விசும்பி அழுவதும் பின்நவீனத்துவ முறைமையே ஆகும்.

. மேற்கோள். பின் நவீனத்துவம் என்பதே ஒட்டுமொத்தமாக ஒரு மாபெரும் மேற்கோள் ஆகும். எனவே மேற்கோள் இல்லாமல் பின்நவீனத்துவம் இல்லை. எந்த நூலில் இருந்தும் எப்படியும் மேற்கோள் காட்டலாம் என்பதே பின்நவீனத்துவமாகும். மேற்கோள்களுக்கு நடுவே உள்ள சொற்றொடர்கள் இளைப்பாற்றும் தன்மை கொண்டிருக்க வேண்டும். மேற்கோள்கள் எத்தனை நீளமாக இருக்கின்றனவோ அந்த அளவுக்கு கட்டுரை சிறப்புறுகிறது. பின்நவீனத்துவக் கட்டுரை மேற்கோள்களினால் ஆனது என்பதனால் மேற்கோள்களுக்குள் மேற்கோள்களுக்குள் மேற்கோள் இருப்பதும் இயல்பேயாகும்.

4. அடிக்குறிப்பு. பின் நவீனத்துவக் கட்டுரைகள் தங்கள் சொந்த சிம்மாசனத்தின் மீது அமர்ந்திருப்பவை, அனுமார் ராவணன் சபையில் தன் வாலையே சுருட்டி வைத்து அமர்ந்ததுபோல. அடிக்குறிப்புகள் மூலக்கட்டுரையைவிடப் பெரிதாக இருப்பது நல்லது. குறிப்புகள் பலவகை.

அ. நூலடைவு. ‘பார்க்க- ரோலான் பார்த்தின் குறியியலும் காயத்ரி ஸ்பிவாக்கின் பின்குறியியலும் ஓர் இணைவு’ என்பதுபோல. சொற்களை கலைக்களஞ்சியத்தில் நோக்கி அங்கே உள்ள நூல்களை இங்கே எடுத்து எழுதுவது மரபு. மொத்த கலைக்களஞ்சியத்தையுமே கொண்டுவர எண்ணலாகாது. கலைக்களஞ்சியங்கள் பொதுவாக பின் நவீனத்துவக் கட்டுரைகளை விட நீளமானவை.

ஆ. கட்டுரைக்குள் சொல்லிய விஷயத்தின் நீட்சி. உதாரணம் , ‘பின்அமைப்பியலைப்பற்றிய இக்குறிப்புக்கு ஸ்ரீவித்யா, மடோன்னா கியோருக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்’.

இ. எதிரிகளை புகை மூட்டமாக வசைபாடுவது. உதாரணம். ‘இந்த விஷயத்தைப் பற்றி ஒரு நண்பர் எழுதிய கேனத்தனமான உளறலில் தெரிதா தன்னிலையின் இறுக்கத்தைக் கட்டவிழ்த்தார் என்று சொல்லியிருந்தார். தெரிதாவுக்கு அந்த வழக்கமே கிடையாது’

ஈ. தன்னுடைய பிற கட்டுரைகளை தொகுத்தளித்தல்.’மூலநூல்வாதம் பற்றிய இந்த விஷயத்தை மேலும் காண இவ்வாசிரியர் எழுதிய ‘பௌத்திர நிவாரணி அல்லது அறுவைசிகிழ்ச்சை தேவை இல்லை’ என்ற நூலைப்பார்க்கவும்

உ. பிறவகை. அதாவது இன்னதென தெரியாத அடிக்குறிப்புகள். இவை பெரும்பாலும் சொல்லிணைவுகளாக இருக்கும் ‘முழுமையின் தன்னிலையைப்பற்றிய இவ்வரிகளுக்கு தன்னிலையின் முழுமையைப்பற்றிய சார்த்ரின் கூற்றுகளோடு ஒப்புமையும் முழுமையும் இருப்பதை கவனிக்கும்போது உருவாக்கும் கருத்துநிலையின் முழுமையிலிருந்து பெறும் தரவுகளும் அவற்றின் விளைவுகளும் இவற்றின் பின்பொருட்சூழலில் கவனத்திற்குரியன’ என்பதுபோல

5.கலைச்சொற்கள். கலைச்சொற்கள் இல்லாமல் பின்நவீனத்துவம் இல்லை. பலரும் பிழையாக எண்ணுவதுபோல கலைக்கும் இவற்றும் தொடர்பு இல்லை. கலைந்த சொற்கள், கலையும் சொற்கள், கலைக்கும் சொற்கள் என்னும் பொருளில் உருவாகிவந்த சொல்லாட்சி இது. கலைச்சொற்கள் எப்போதும் ஆங்கில மொழியில் இருந்து மொழியாக்கம் செய்யப்படுவன. மூலமொழிச் சொல் காதில் விழும்போது ஒரு பரவசம் ஏற்படுகிறது. அதன் உடனடி எதிர்வினையே கலைச்சொல்லாக ஆகி மூலச்சொல்லை நிரந்தரமாகக் கலைத்து விடுகிறது.

கலைச்சொல்லாக்கத்துக்கு பல வழிகள் உள்ளன என்றாலும் தொடக்கநிலையாளர்களுக்காக ஓர் எளிய உத்தியைச் சொல்லல்லாம். எந்த ஒரு சொல்லுடனும் இயல் என்ற சொல்லைச் சேர்த்தால் கலைச்சொல்லாகிறது. ‘பருப்புவிலையேற்றத்தால் மக்கள் துயரம்’ என்பது செய்தி. ‘பருப்பியல்தளத்தின் விலையியல் மாற்றங்களால் உருவாகும் வாழ்வியல் துயரம்…’ என்பது பின் நவீனத்துவ வரி. இதேபோல ‘ஆக்கம்’ ‘மயமாதல்’ போன்ற சொற்களையும் கையாளலாம்.

கலைதல் என்பது ஒரு தொடர்ச்செயலாதலால் கலைச்சொற்களும் புதிதாக வந்தபடியே வந்தபடியே இருக்கின்றன. ஒரு பொருளில் ஒன்பதுபேர் ஒன்பதுசொல்லை பயன்படுத்தும்போதே அது கலைச்சொல் என்ற அங்கீகாரத்தைப் பெறுகிறது. ·பார்மலிசம் என்றசொல்லை உருவவியல் என்றும் வடிவவியல் என்றும் பலவகையில் சொல்லும்போது தாலுகா ஆபீஸ் குமாஸ்தாவாக வேலைசெய்யும் பின்நவீனத்துவர் ஒருவர் படிவவியல் என்று மொழியாக்கம் செய்தது தெரிந்ததே.

ஒரு நல்ல பின் நவீனத்துவக் கட்டுரையானது. தேவையான இடத்தில் கலைச்சொற்களைப் போட்டு எழுதுவதாகும். இரு முற்றுப்புள்ளிகளுக்கு நடுவே கால்புள்ளிகளாலும் அரைப்புள்ளிகளாலும் பிரிக்கப்பட்டு தரப்படும் இடம் முழுக்கவே தேவையான இடம்தான் என்பதே பின்நவீனத்துவக் கோட்பாடாகும். ஒரு கலைச்சொல்லை விளக்க இன்னொரு கலைச்சொல்லையே பயன்படுத்தவேண்டும்.

6.பிரதி இன்பம். இது ஒருவகை சுயஇன்பம். மலையாளப்பட தனிமொழியில் இன்பசுகம். நவீனத்துவக் கட்டுரைகளைப் படிக்கும்போது நாம் இருத்தலிய துயரம் அடைகிறோம். மாறாக பின்நவீனத்துவக் கட்டுரைகளைப் படிக்கும்போது படுத்தலிய இன்பம் கிடைக்க வேண்டும். மனிதர்களுக்கு உச்ச கட்ட இன்பத்தை வழங்குவது வசையே– பிறரை பிறர் வசைதல். எனவே பின்நவீனத்துவக் கட்டுரைகளில் ஆழமான வசைகள் நிறைந்திருத்தல் வேண்டும்.

பின்நவீனத்துவக் கட்டுரைகளை வாசகர் எளிதில் இனம்கண்டு விலகும்படி அமைக்கவேண்டும் என்பது மரபு. ஆகவே எண்பது சொற்களுக்கு குறையாத சொற்றொடர்கள் அமைப்பதும் இரண்டு பக்கங்களுக்கு நீளும் பத்திகளை அமைப்பதும் வழக்கம். இதழாசிரியரும் மிகச்சிறிய எழுத்துருவில் அவற்றை அச்சிட்டு நமக்கு உதவி செய்கிறார்.

நெடுங்காலமாக மொழியானது இரண்டு அடிப்படைக் கருதுகோள்களினால் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அவற்றிலிருந்து விடுதலை பெறுவதே பின் நவீனத்துவ உரைநடையின் இயல்பு என்க.

ஒன்று, இலக்கணவாதம். மொழிக்கு இலக்கணம் தேவை என்றும் அவ்விதிகளுக்கு அது கட்டுப்பட்டே ஆகவேண்டும் என்றும் சொல்லும் அடக்குமுறைக்கு எதிராக பின் நவீனத்துவம் கலகம்செய்கிறது. எழுவாய்பயனிலை, செய்வினைசெயப்பாட்டுவினை, தன்னிலை பிறனிலை, காலம் போன்றவற்றை உதறும்போதும் மொழிக்கு அலாதியான ஒரு வல்லமை கிடைக்கிறது. அதன்பிறகு அது எதற்குமே கவலைப்படத்தேவை இல்லை. குறிப்பாக அச்சுப்பிழை என்ற சிற்றிதழ்பூதம் அதை ஒன்றுமே செய்யமுடியாது.

இரண்டு, பயன்பாட்டுவாதம். மொழி என்பது ஒரு நிகழ்வு. ஆறுபோல, பாறை போல. அது ஒரு குறிப்பிட்டவகையில் பயன்படும் பொருட்டே இயங்க வேண்டும் என்பது மொழியின் மீதான சமூகத்தின் அத்துமீறலாகும். மொழிக்கு அப்படிப்பட்ட பயன்பாட்டு நோக்கமேதும் இருந்தாகவேண்டிய தேவை இல்லை. மொழி மொழியாக மட்டுமே தனித்து இயங்க முடியும். அவ்வப்போது அதில் அர்த்தமும் வந்து செல்லலாம். அது மொழியின் பிழையல்ல.

செந்தமிழும் நாப்பழக்கம். எக்கலையும் கைப்பழக்கம். பின்நவீனத்துவம் ‘ஆர்ட் இஸ் ஃபார்ட்’ என்ற கோட்பாடுகொண்டதாக இருப்பதால் அதுவும் பழக்கமே. பழகிவிட்டால் நம்மை மீறி நம்மிடமிருந்து பின்நவீனத்துவக் கட்டுரை வந்தபடியே இருக்கும். அந்தப் பழக்கம் வரும்வரை சாதாரணமான கட்டுரைகளை மனதுக்குள் எழுதி அவற்றை பின்நவீனத்துவக் கட்டுரையாக மாற்றுவதே சிறந்த வழியாகும்.

தினமணி நாளிதழை எடுத்துக் கொள்ளுங்கள். ஏதேனும் ஒரு செய்திக்கட்டுரையை பிரித்து வைத்துக் கொள்ளுங்கள்.ஆழமாக அதை இருமுறை படியுங்கள். மேலே சொன்ன விதிகளைப் பயன்படுத்தி அதை பின்நவீனத்துவக் கட்டுரையாக ஆக்குங்கள்.

‘எழுபதுகளின் இறுதியில்தான் பிராய்லர் கோழிகளை வளர்த்தல் பரவலாகியது. அரசின் ஊக்குவித்தலுடன் நாமக்கல் ஈரோடு வட்டாரங்களில் கோழிப்பண்ணை வைப்பது பெருந்தொழிலாக வளர்ந்தது. அன்றுவரை விவசாயத்தின் ஒரு பகுதியாக இருந்த கோழிவளர்த்தல் என்பது ஒரு தொழிற்சாலை உற்பத்தியாக மாறியது. இதன் விளைவாக கோழியிறைச்சி மற்றும் முட்டை விலை ஒப்புநோக்க மலிவாகியது. தமிழர்கள் ஞாயிறுதோறும் கோழியிறைச்சி உண்ண ஆரம்பித்தார்கள். முன்பெல்லாம் இது வருடத்திற்கு ஒருமுறை விசேஷ தினங்களில்தான் என்பதை நாம் நினைவுகொள்ளவேண்டும். கோழிவளர்த்தல் தொழிலாக மாறி லாப நோக்கம் கொண்டபோது சுகாதார விதிகள் புறக்கணிக்கப்பட்டு தோல்தொழிற்சாலைக் கழிவுகளை கோழிகளுக்குக் கொடுத்து அவற்றை பருக்க வைத்தல், ஊக்க ஊசிகளைப் போடுதல் போன்ற முறைகேடுகள் நிகழ ஆரம்பித்தன. இதன் மூலம் சமூக ஆரோக்கியம் பாதிப்படைந்தது. அதிக புரோட்டீன் உற்பத்திமூலம் மக்கள் ஆரோக்கியம் மேம்படுதல் என்ற நிலைக்கு நேர் மாறான நிலை இது என்பதைக் காணலாம்.”

இந்தப்பத்தியை பின்நவீனத்துவக் கட்டுரையின் ஒற்றை வரியாக மாற்ற ஒரே வழிதான் உள்ளது. ‘எங்கிருந்தாவது தொடங்கி எப்படியோ கொண்டுபோய் எங்கோ முடித்தல்’ என அதை அறிஞர்கள் வகுத்திருக்கிறார்கள். பார்ப்போம்.

”கோழியிறைச்சி மற்றும் முட்டையின் விலையியலில் ஏற்பட்ட மலிவியல் மாற்றமானது எழுபதுகளின் இறுதிக்காலகட்டத்தில் நாமக்கல் மற்றும் ஈரோடு பகுதியில் கோழிப்பண்ணையியலில் ஏற்பட்ட தொழில்மயமாதல் மற்றும் பெருந்தொழிலாக்கம் மற்றும் வேளாண்மையியலாக்க நீக்கம் முதலிய பண்புக்கூறேற்றம் மற்றும் அரசுமுறை சார் ஊக்குவித்தலடிபப்டையின் நிகழ்முறை விளைவாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவான ஒரு தலைகீழாக்கமாக நிகழ்ந்த காரணத்தினால் தொழிற்சாலைத்தன்மையும் உற்பத்தியியலில் ஒட்டுமொத்தத்தமயமாதலும் நிகழ்ந்து உருவான வேளாண்மை மற்றும் பெருந்தொழில் சார் ஈரடித்தலின் விளைவாக நிகழ்ந்த நுண்குடிமை வளார்ச்சிப்போக்கு என்று சொல்லும்போது அதில் இயல்பாக குடியேறிய தொழிலியல் இலாபநோக்கின் அதீதப்பெருக்கம் காரணமாக சுகாதாரவியல் விதிகளின் புறக்கணிப்பாக்கம் நிகழ்ந்து அதன் ஊடுவிளைவாகவும் இடுபொருளியக்கமாகவும் தோல்தொழிச்சாலைக் கழிவுகளையும் [கழிவுகள் என்பவை உற்பத்தியின் பேரளவான பண்பியல் கூறுகளினால் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட பொருள்நிலைகளே என்று லக்கான் சொல்வதை இங்கே கணக்கில் கொள்ளவேண்டும்] மற்றும் ஊக்கமருந்துகளையும் [ ஊக்க மருந்துகள் செயற்கையாக உருவாக்கப்படும் விரிவாக்க முயற்சிகள் என்பதுடன் அவை எந்த சூழலில் எவற்றை ஊக்குவிக்க அளிக்கப்படுகின்றன, அவற்றின் உள்ளார்ந்த அரசியல் என்ன என்பதையும் ஊக்குவிக்கப்படும் கூறுகள் எவையெவற்றை அடிப்படுத்தவும் மறைக்கவும் காரணமாக உள்ளன என்பதையும் கருத்தில் கொண்டு அளிக்கப்படும் விரிவான நுண்ணாய்வுக்கான தரவுகள் நம் பண்பாட்டுத்தளத்தில் உள்ளுறைந்துள்ளன என்ற விஷயத்தை இங்கே விரிவாக விவாதிக்க இடமில்லையாதலால் குறிப்புணர்த்தியாகவேண்டும்] கோழிகளுக்கு அளிப்பதனூடாக அவற்றை அதிகளவிலான புரோட்டீன் உற்பத்திக்கான கருவிகளாக ஆக்கி அவற்றின் மூலம் நுகர்வியலின் அடித்தளமாக உள்ள சுவைமையில் பாரதூரமான விளைவுகளை உருவாக்கி பொதுச்சுகாதாரத்தை சீரழிக்கும்நிலையில் நாம் கருத்தில் கொள்ள வேண்டியதாக உள்ள கருத்தமைவென்பது அதிகபுரோட்டீன் அதிக ஆரோக்கியத்தை உருவாக்குமென்ன்ற செவ்வியல் நிலைபாடுகளின் முழுமறுப்பாக்கமும் மாற்றுக்கூற்றுகளின் தோற்றவியலுமாகும் என்ற நிலையில்…..”

இவ்வண்ணம் நான்கு கட்டுரைகளை எழுதிப்பார்த்தபிறகு நீங்களே சுயமாக கட்டுரைகளை எழுதி சிற்றிதழ்களுக்கு அனுப்பலாம். அவை அச்சிடப்படாவிட்டால் சுயமாக இணையத்தில் ‘கசந்தவனின் அசைவுகள்’ அல்லது ‘கூறிலியின் கூற்று’ என்ற பேரில் வலைப்பூ தொடங்கி அவற்றை வரலாற்றில் ஏற்றலாம். தொடர்ந்து இப்படி கட்டுரை எழுத எழுத பின்நவீனத்துவம் என்றால் என்ன என்று உங்களுக்குப் புரிந்து ஒருமாதிரி சமநிலை கைவரும்போது நிறுத்திக் கொள்வீர்கள்.

[மறுபிரசுரம் முதற்பிரசுரம் ஆகஸ்ட் 20 2008]

http://www.jeyamohan.in/?p=321

Edited by கிருபன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.