Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைகள் கருணாகரன் கவிதைகள்

Featured Replies

பனையடி வினை

பாடலெல்லாம் சிதைந்திருந்த தெருவழியே

தனித்திருந்த பனை மரங்களைக் கேட்டேன்

இந்த வெறி எங்கே கொண்டு போகும்? என்று

எந்தப்பனையும் எதுவும் பேசவில்லை

நூற்றாண்டுகள் பலவும் வாய் மூடி மௌனமாக இருந்த பழக்கத்தை விடுவதில்

ஏராளம் தயக்கங்கள்

ஒவ்வொரு தளும்பாய் பனை நீளம் படர்ந்திருந்தது.

நானறிய

நூற்றாண்டுகளை விழுங்கி விழுங்கி

எல்லா வெறிக்கும் வழிவிட்ட

பனையே

முறிகின்றாய் பெரும் பழி சூழ் வினையில்.

ஒவ்வொரு பனையாய் முறிகின்றாய்

முறிந்த பனைகள் துளிர்ப்பதுண்டோ?

தோப்பெல்லாம் பெருந்தீ மூண்டெரிந்தாலும்

புதுக் குருத்தெறியும் வரமுடைய

தாலமே

கால நிழலின் குழியுள்

இதோ உனது நாட்கள்

செத்தழிகின்றன

எல்லா வெறிக்கும் வழி விட்ட

முந்தைப் பெரும் பழியெலாம்

இன்று

உன் ஒவ்வொரு தலையாய் கொண்டு போகிறது

என்பேன்;

அதற்கும் மௌனம்தானா

சொல் பனையே

தோப்பென்றும் கூடலென்றும் பேரோடிருந்த

பனங்காடே

பாடலாயிரம் பெருகி இசை பொழிந்த தெருவழியே

நிழல் விரித்திருந்த பனந்தோப்பே

வானளாவி

நிலவும் பரிதியும் மறைந்தொளிந்து விளையாட

ஒளிச்சித்திரங்களால்

பூமியின் சுழற்சியைச் சொன்ன புதிரே

இன்று அகாலத்தில்

பாடல் சிதைந்த தெருவழியே

தனித்திருக்கிறாய்

ஒவ்வொரு பனையாய் முறிகின்றாய்

முறிந்த பனைகள் துளிர்ப்பதுண்டோ?

00

கிரகம்

பரதேசியின் நிழல் அலைந்த தடம்

திசைகளெங்கும்

கலவரத்தோடும்

நிம்மதியின்மையின் பதற்றத்தோடும்

எல்லாத் தெருவிலும்

எல்லா நகரங்களிலும்

சிதறிக்கிடக்கக் கண்டேன்.

தகிக்கும் வாளின் கூராய்

கண்ணை உறுத்தும் தனித்த நட்சத்திரம் அது

பூமியை வானமாக்கி

சிதறிக்கிடந்தது பன்னெடுங்காலமாய்.

விமானங்களின் பறப்பிற்கிடையிலும்

தொலைக்காட்சிகளின் அலைவரிசைகளுக்கிடையிலும்

பெரு நகர் விடுதியில்

மதுவும் இசையும் நடனமும் நிரம்பிய மண்டபத்தில் என

ஒளிர்ந்த பகட்டிலே ஒதுங்கிய

நிழல்

அவமதிப்பின் எச்சில்.

ஆயினுமது வெம்மையாறாத

எரிகோள்.

எந்த நிழலிலும் தங்காத சுவடது.

எந்த மதுவிலும் தணியாத தாக மது

முடியாப் பெரும் பயணத்தில்

நகர்ந்து செல்கிறது

பல்லாயிரம் உள் வெளி வலைகளில்

சிக்கிய நிழல்

கணத்தில் வெளியேறி

விசையெடுத்துப் போகிறது

திசைகளை அழித்து

வெளியையே மாபெரும் திசையாகக் கொண்டு.

00

மலைக்குருவி

வெளியில்

ஆகாயம் தொடும் பெருந்தாகத்தோடு

நிமிர்ந்த மலையில்

நிற்கும் தோறும்

வெளியே கனலும் மூச்சொலிப் பெருக்குப் பெருகுவதைக் கேட்டேன்.

உள்ளே, கருணை பொங்கித் ததும்பும்

ஊற்றொலிச் சங்கீதம்.

தணலும் தண்மையும்

மலையின் அடிவயிற்றுப் பேரருவிகள்.

சுடும் பாறையின் உள்ளிருந்து

பெருக்கெடுத்தோடும் நதி

நதி செல்லும் வழிவிட்டு

வெயில் குடித்துக் காய்ந்திருக்கும்

பெரும்பாறைக் கூட்டம்

ஒரு போதும் வருந்தியதில்லை

இத்தனை பெருக்கெடுத்தோடும் நதி

தன்மடியிருக்கும் போதும்

தான் வெயில் காய்வதையெண்ணி

காற்றாலும் வெளியாலும் ‚

தன்னை நிரப்பி வைத்திருக்கும் பள்ளத்தாக்கு

வான்நோக்கி சிகரத்தை உயர்த்திவிட்டுத்

தான் செல்கிறது

பூமியின் சமதரை நோக்கி

கூடவே தன்னோ டழைத்துப் போகிறது

நதியையும்.

பள்ளத்தாக்கின் மறுபாதி சிகரம்

சிகரத்தின் மறுபாதி பள்ளத்தாக்கு

சிகரத்துக்கும் பள்ளத்தாக்குக்கும்

இடையில் எங்கிருக்கிறது மலை?

நன்றி: மலைகள்.கொம்

http://malaigal.wordpress.com/

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரு கவிஞன்...தன் எழுத்துக்களின் பின் எங்களை கட்டி இழுத்துச்செல்லும் அற்புதமான எழுத்தாற்றல் அவருக்கு...காலம் அவருக்கும் எங்களைப்போல் வெளிநாடு வர வழிவிட்டிருந்தால்.....

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதைகள்!

இணைப்புக்கு நன்றிகள், நிழலி!

  • 9 months later...
  • கருத்துக்கள உறவுகள்

மெழுகாய்க் கனிந்த ஆஸ்பத்திரியில் புன்னகையைத் தவறவிட்ட பெண்

கருணாகரன்

மெழுகாய் உருகிக் கொண்டிருந்த ஆஸ்பத்திரியில் படுத்திருந்தேன்

இருபத்தி நான்காம் அறை

நாற்பத்தி ஏழாம் இலக்கக் கட்டில்.

புன்னகையை வழியிலெங்கோ தவற விட்ட பெண்

அங்குமிங்கும் நடக்கிறாள் தடுமாறிக்கொண்டு.

மருத்துவத் தாதி என்பது

சிகிச்சைக்கும் ஆதரவுக்கும் இடையில்

கனிந்த மலர் என்பதுவா

உதிர்ந்த மலர் என்பதுவா

என்றறிய விரும்பிய மனதில்

கத்திகளும் காயங்களும் மாறி மாறி விழுகின்றன.

அருகே,

முகத்தை மறைக்க விரும்பிய கிழவனொருவன்

அகத்தை மறைக்க முடியாமற் திணறிப் புலம்பினான்.

அவனிடம் உருக்குலைந்த விதியைக் கண்டேன்

மலத்தைச் சுமந்து கொண்டிருக்கும் நாட்களைத் தள்ள முடியாமல்

விதியின் ஓரத்தில் அவனிருக்கையில்

அவனைப் புதுப்பிக்கிறது மருந்தின் வாசனை

என்னையும்தான்.

வழுகிச் செல்லும் புன்னகையை

விலத்திச் செல்ல முடியாமல்

திரும்பி வரும் தாதியிடம் எதையோ சொல்லத் தேடினேன்

அவளிடமிருந்த கவனமற்ற நிலையிலும்

மிச்சமாக இருந்த ஈரத்தை.

மெழுகாய்க்கனிந்து கொண்டிருந்த ஆஸ்பத்திரியில்

எனக்குப் பதிலாக இன்னொருவர்

மேலும் இன்னொருவர் என வந்து கொண்டிருப்போருக்கிடையில்

புன்னகையை வழியிலெங்கோ தவற விட்ட பெண்

அங்குமிங்கும் நடக்கிறாள் தடுமாறிக்கொண்டு.

 

http://vallinam.com.my/version2/blog/2013/06/01/%e0%ae%ae%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d/

 

  • கருத்துக்கள உறவுகள்

கடற்கரையில் நான் நின்ற பின்னேரம்

கருணாகரன்

 

 

ஒரு பின்னேரம் பாழடைந்து போனதைக் கண்டு

தலைகுத்தி விழுந்தேன் கண்ணீருக்குள்.

என்ன வஞ்சமென்று தெரியவில்லை

ஒரு காக்கையுமில்லை அந்த மாலையில்

கரைந்து கரைந்து அதை மெருகேற்ற

கடல்

அழவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல்

தளம்பிக் கொண்டிருந்தது என்முன்னால்.

என் முகம் பார்க்கத் திராணியற்று

வெம்பியது அது.

கதறிக் கதறி அழவேண்டும் போலிருந்தது எனக்கு.

அது பின்னேரமாக இருக்கவில்லை

கடலின் பின்புறமாக

சூரியனை யாரோ இழுத்துச் சென்றார்கள்

ஒரு கொலைகாரனை இழுத்துச் செல்வதைப்போல

அன்றுதான் என்னையும்

இழுத்துக் கொண்டு போனார்கள்

கடல்

அழவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல்

தளம்பிக் கொண்டிருந்தது என் முன்னால்

http://vallinam.com.my/version2/blog/2013/06/01/கடற்கரையில்-நான்-நின்ற-ப/

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நான்கு கவிதைகள் – கருணாகரன்

பால் முகப் பெண்

இந்த மழை அழைத்து வந்து

சேர்த்தது என்னை

உன் வீட்டில்.

நான் வந்தபோது

பாற்காரியாக நின்றாய் நீ.

ஆமாம்

தளும்பும் முலைகளோடு

அந்தக் காலையிருந்தது.

பால்வாசனை பெருகிய காலையில்

ஒரேயொரு மலரைக் கண்டேன்

உன்னில்ளூ நீ நின்ற முற்றத்தில்.

புலுனிகள் தத்தி விளையாடும் வேலியில்

பாதி மறைந்தும் மீதி தெரிந்தும்

மயக்கம் காட்டும்

சூரியனும் நீயும்.

பித்தாகிக் கரைந்தது

அந்தக் காலை.

சொல்

ஒரு வழி எதுவெனச் சொல்.

ஊட்டு

தாகமடங்க ஒரு மிடறு பால்வார்த்தை

எனக்கென.

மீட்டு

பாலமுதுதக் கண்களோடு கிறுங்கும்

இந்தச் செல்லத்தை

உன் விரல் நுனியால்.

00

திசை மாற்றம்

யார் என்று கேட்டேன்

யாருமில்லை என்றார்

ஏதென்று கேட்டேன்

ஏதுமில்லை என்றார்.

பின்னேன் இந்த உன்மத்தமும்

பித்தும்

சூதும் வஞ்சனையும்?

பின்னேன் இன்னுமுண்டு குறுக்குச் சட்டங்கள்

இந்த நேர் வழியில்

யாருக்காக, எதற்காக?

சொல்,

நீ எங்கேயிருக்கிறாய்

குறுக்குச் சட்டங்களுக்கு அப்பாலா,

இப்பாலா?

நானெங்கிருக்கிறேன்

இப்பாலா அப்பாலா?

நழுவிச் செல்லும் சிறகு

எங்கிருக்கிறது

இப்பாலா அப்பாலா?

00

கிளிப்பெண்

ஒன்றைச் சொல்வதற்கும் சொல்லாமல் விடுவதற்குமிடையில்

ஒளிர்ந்து கொண்டிருக்கும் வெளிச்சத்தை

கைகளால் அள்ளிச் சென்று மறைத்தவளைத் தேடி

ஒரு கோடை முழுவதும் அலைந்தேன்

நெடுங்கடலில்.

பின்னொருகாலை

கடற்புறத்தில் நடந்து செல்லும்

ஒரு தூரத்துப் பெண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தேன்

அவள் போன்ற சாயலில்

அந்தக் காலை மாறியது.

எறும்புகளின் வரிசையில் ஒரு பாடலை எழுதிச் சேர்த்து விட்டு

அவள் சென்ற பாதையில்

வந்த கூடை வியாபாரிகளிடம் இருந்த

பழங்களிலும் பூக்களிலும்

இளவேனிலும் மழைச்சாரலும்

ஒரு கிண்ணம் பாலும்

அவள் நினைவும் கலந்திருந்தன

வாசனை பெருக்கும் கள்ளோடு.

நான் பார்க்கும் வேளையில் அவள் மைனாக்களோடிருந்தாள்

நான் காணாத போது கிளிகளோடிருந்தாள்

கிளிப்பேச்சு மைனாப் பேச்சு எல்லாம்

ஒரு குயிற் கூவலின் இனிப்பில் கலந்த முத்துகள்தான் என்றாள்

அந்த முத்துகளைப் பிரித்துப்பார்க்க

வந்த மந்திரவாதி

அவள் கையையும் என் கையையும் பார்த்துச் சொன்ன

ரகசியம்தான் ஆதிக் கதையும் மீதிக்கதையுமா?

இன்னும் சொல்லாமல் விட்டதற்கும் சொல்லியதற்கும் இடையில்

ஒளிர்ந்து கொண்டிருக்கும் வெளிச்சத்தை

எடுத்துச் சென்று கொண்டிருந்தவளைத் தேடி

இந்த மழைக்காலம் முழுதும் அலைகிறேன்.

00

காணாமல் போனவனின் மனைவி கொன்ற

இரவுகளின் சடலம்

என்னுடைய இரவுகளைக் கொன்று

வெளியே வீசுகிறேன்

யாரும் பதில்தராக் கேள்விகளும்

தூங்காதென் விழிகளும்

தீரா வலியும் நிரம்பிய இந்த இரவுகளோடு

இனியும் நான் அலையமுடியாது.

எனவே, இந்த இரவுகளைக் கொன்று வீசுகிறேன்.

இவற்றை நீங்கள் எங்கும் புதைக்க முடியாது

உறங்காத என் விழிகளின் பேரொளியும்

முடிவுறாத என் விம்முதலின் பேரிரைச்சலும்

உங்கள் தூக்கத்தை, அமைதியை

உங்கள் பாதைகளை, உத்தரவாதங்களையெல்லாம்

இடையூறு செய்தால்

அதற்கு நான் பொறுப்பாளியல்ல.

என்னுடைய தூக்கமற்ற இரவுகளுக்கும்

வலிக்கும்

காணாமற் போனவனைப் பற்றிய கேள்விகளுக்கும்,

எவ்விதம் நீங்கள் பொறுப்பாளிகள் இல்லையோ

அவ்விதமே

இந்த இரவுகளைக் கொன்று வீசியதற்கும்

நான் பொறுப்பாளியல்ல.

காணாமற் போனவனின் மனைவி செய்யக் கூடிய

ஒரு சிறிய,

மிகச் சிறிய நிராகரிப்பின் துளியாக

இந்த இரவுகளின் சடலம் இருக்கட்டும்

உங்களுக்கும் எனக்குமிடையில்

ஒரு பொதுவெளியில்

நம் காலப் பெரு வெளியில்

யாராலுமே புதைக்க முடியாத நிலையில்.

00

http://malaigal.com/?p=4118

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'கத்துக்குட்டிகளான' நாங்கள் அண்ணார்ந்து பார்க்கும் உயரத்தில்-உச்சாணியில் உட்கார்ந்து கவிதைக் கோலோச்சியவர்தான் கருணாகரன் ஐயா அவர்கள். அவர்களின் கவிதைகளை இங்கே இணைத்த 'நிழலி' அவர்களுக்கும் 'கிருபன்' அவர்களுக்கும் விதந்துரைத்த அன்பர்களுக்கும் எனது உளப்பூர்வமான நன்றிகள்...!

Edited by எஸ். ஹமீத்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.