Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். உதயன் அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி

Featured Replies

யாழ்ப்பாணம் உதயன் நாளேட்டின் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு உள்நுழைந்த ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

உதயன் ஆசிரியர் குழுவினரை நோக்கி இன்று இரவு 7.45 மணியளவில் ஆயுதக் குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். உதயன் அலுவலகத்திற்குள் 40 தடவைகளுக்கும் மேல் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதாக அருகாமையில் உள்ள பொதுமக்கள் தெரிவித்தனர்.

படுகொலை செய்யப்பட்டோர் உதயன் நாளேட்டின் அலுவலக முகாமையாளர் சுரேஸ் என்றும், மற்றொருவர் பத்திரிகை மடிப்பவர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

உதயன் நாளேட்டின் கொழும்பு வெளியீடான சுடரொளியின் அலுவலகத்தின் மீது முன்னர் இருமுறை குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலத்தில் நமது ஈழநாடு, யாழ். தினக்குரல் ஆகியவற்றின் அலுவலகங்கக்குள் சிறிலங்காப் படையினர் அத்துமீறி உள்நுழைந்து தேடுதல்களை நடத்தினர். உதயன் நாளேட்டிற்கும் படையினர் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் உதயன் அலுவலகத்திற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலைகளை இன்று நிகழ்த்தியுள்ளனர்.

யாழ். நகரில் கஸ்தூரியார் வீதியில் உதயன் அலுவலகம் அமைந்துள்ளது.

நன்றி: புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க பத்திரிகைச் சுதந்திரம்!!

ஒரு ரஜனி திரணகமவிற்காய் ஊளையிட்டவர்கள், இத்தனை பத்திரிகைத் துறை சார்ந்தவர்களின் மரணங்களில் ஏன் மரித்துப் போனார்கள்??

உதயன் பத்திரிகை அலுவலகத்துக்குள் ஆயுததாரிகள் கைவரிசை: இருவர் சுட்டுக்கொலை; மூவர் படுகாயம்!

யாழ். உதயன் பத்திரிகை அலுவலகத்துக்குள் புகுந்த ஆயுததாரிகள் சற்றுமுன் அங்கிருந்த ஆசிரியர் பீடத்தினர், ஊழியர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியிருக்கின்றனர். விற்பனை முகவர் ஒருவரும் பத்திரிகை தயார்ப்படுத்துனர் ஒருவரும் கொல்லப்பட்டிருக்கின்றனர். உதவி ஆசிரியர் ஒருவர் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்திருக்கின்றனர்.

சுரேஸ்குமார் (35),

ரஞ்சித்குமார் (28 )

ஆகியோரே கொல்லப்பட்டவர்கள் என்று அதன் சகோதரப் பத்திரிகையான சுடர்ஒளி தெரிவித்திருக்கின்றது.

விநியோகஸ்தர்களான உதயகுமார்,

தயாகரன்,

சதீஸ் ஆகியோர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்

  • தொடங்கியவர்

{3ஆம் பதிப்பு} உதயன் பத்திரிகை அலுவலகத்துக்குள் ஆயுததாரிகள் கைவரிசை: இருவர் சுட்டுக்கொலை!

யாதன்

Tuesday, 02 May 2006

யாழ். உதயன் பத்திரிகை அலுவலகத்துக்குள் புகுந்த ஆயுததாரிகள் சற்றுமுன் அங்கிருந்த ஆசிரியர் பீடத்தினர், ஊழியர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியிருக்கின்றனர். விற்பனை முகவர் ஒருவரும் பத்திரிகை தயார்ப்படுத்துனர் ஒருவரும் கொல்லப்பட்டிருக்கின்றனர். உதவி ஆசிரியர் ஒருவர் உட்பட மூன்று பேர் படுகாயம் அடைந்திருக்கின்றனர்.

சுரேஸ்குமார் (35),

ரஞ்சித்குமார் (28 ) ஆகியோரே கொல்லப்பட்டவர்கள் என்று அதன் சகோதரப் பத்திரிகையான சுடர்ஒளி தெரிவித்திருக்கின்றது.

விநியோகஸ்தர்களான உதயகுமார், தயாகரன், சதீஸ் ஆகியோர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்த வந்தவர்கள் உதயனின் ஆசிரியர் பீடத்தின் முக்கியஸ்தர்களையே தேடியுள்ளனர். அவர்களில் குறிப்பாக செய்தியாளர்களின் பொறுப்பானவரான குகநாதன் என்ற மூத்த செய்தியாளரையே தேடியுள்ளனர்.

அவர் அச்சமயம் முன்னிலையில் இல்லாததால் அகப்பட்டவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு சென்றுள்ளனர்.

உந்துருளியில் வந்தவர்களே தாக்குதல் நடத்தியுள்ளனர். துப்பாக்கிதாரிகள் சிவில்உடையில் தமிழிலேயே உரையாடியுள்ளனர்.

ஈ.பி.டி.பியினரே இத்தாக்குதலை மேற்கொண்டதாக வலுவாக நம்பப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக செய்தியாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கபட்டு வரும் அதேவேளைசெய்தியாளர்கள் படையினரின் நேரடித் தாக்குதல்களுக்கு உட்பட்டு வருகின்றமை தெரிந்ததே

நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்

யாழ்ப்பாணத்தில் உதயன் பத்திரிகை மீது தாக்குதல்; இருவர் பலி

20060502162950colmedia203c.jpg

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள உதயன் தமிழ்த் தினசரிப் பத்திரிகை அலுவலகத்தினுள் இன்று மாலை நுழைந்த கறுப்பு முகமூடி அணிந்த நபர்கள் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டதாகவும் இதில் உதயன் பத்திரிகையின் விற்பனை மேலாளர் சுரேஷ் மற்றும் ரஞ்சித் என்கிற ஊழியர் ஆகியோர் அதே இடத்திலேயே மரணமடைந்ததாக உதயன் பத்திரிகையின் ஆசிரியர் வித்தியாதரன் கூறினார்.

இத் தாக்குதலில் மேலும் இருவர் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்க்கப்படுகிறது. ஆயுதபாணிகள், பத்திரிகை ஆசிரியர்கள் அறையைத் தேடியதாகவும், துப்பாக்கிச் சத்தம் கேட்டவுடனேயே ஆசிரியர் குழுவில் இருந்த பலர் தங்களை ஒளித்துக் கொண்டு விட்டதனால் பலர் உயிர் தப்பியதாகவும் வித்தியாதரன் தெரிவித்தார்.

20060502162937colmedia203b.jpg

இருந்த போதும், அங்கிருந்த கணினி மற்றும் பிற பொருட்களை உடைத்து நாசம் ஏற்படுத்திய பின், ஆயுதபாணிகள் வெளியேறிச் சென்றதாகவும், வித்தியாதரன் தெரிவிக்கிறார். இந்த ஆயுதபாணிகள் தமிழில் பேசியதாகவும், ஏற்கனவே இது போன்ற தாக்குதல்களில் சம்மந்தப்பட்ட குழுவினரே இதிலும் சம்மந்தப்பட்டுள்ளார்கள் என்பது குறித்து தங்களுக்கு எவ்விதச் சந்தேகமும் இல்லை எனவும் வித்தியாதரன் தெரிவித்தார்.

இத் தாக்குதலுக்கு எதிராக சிங்கள ஊடகவியலாளர்கள்

கொலையாளிகள் யாராக இருந்தாலும் சட்டம் ஏன் இவர்களை விட்டு வைத்து இருக்கிறது என்பது தமக்கு வியப்பையும் வேதனையையும் தருகிறது என பீபீசி சிங்கள சேவைக்கு கூறினார்கள்.

நாங்கள் கொலை செய்யப்பட்டவர்களை தமிழர் என புறம் தள்ள முடியாது.

அவர்களும் எம்மைப் போன்ற மனித மனம் படைத்த ஊடகவியளார்கள்தான் என விசனப்பட்டனர்.

"மா புளிப்பது, அப்பத்துக்கு நல்லது" ... உந்த ஒட்டுக்குழுக்களின் ஆட்டமெல்லாம் முடிபிற்கே!!! .... தமிழ்த் தேசியப்படையும் காலம் தாழ்த்தாது வெலிகந்தை தாக்குதல்கள் போல் ஒட்டுக்குழுக்களை கருவறுக்க வேண்டும். சுட்டென்ன, கொழுத்தியென்ன, வெட்டியென்ன, .... எவ்வாறென்றாலும் அழித்தொழியுங்கள். ஒரு சிறு களை கூட எம் தேசத்தில் மிஞ்சக் கூடாது!

பி.கு: அண்மைக்காலங்களில் விடுதலையான தேசங்கள் ( கிழக்குத் தீமோர், பொஸ்னியா, ... தென் சூடான், ... டார்பூர் ) இதே ஒட்டுக் குழுக்களின் செயற்பாடுகளே விடுதலையை விரைவு படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியே போனால் தமிழ் ஊடகவியலாளர்களும் பேனாவிற்கு பதிலாக ஆயுதங்கள் தூக்கவேண்டியதுதான். இது இனவெறி சிங்கள பொய்பரப்புரை ஊடகங்களின் வேலயாகவும் இருக்கலாம். அதாவது நிமலறாஜனில் தொடங்கி சிவராம், நடேசன் இன்று மீண்டும் உதயனின் பணியாளர்களென தமிழ் ஊடகவியலாளரைத்தானே கொல்லப்படுகின்றார்கள். இவற்றிற்கு முடிவு கட்டப்படுதல் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

உதயன் பணியாளர்கள் படுகொலை: கொழும்பில் ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்- இன்று மகிந்த நிகழ்ச்சி புறக்கணிப்பு

யாழ். உதயன் நாளேட்டின் பிரதான பணிமனையில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் அதன் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஊடகவியலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிறிலங்கா ஊடக அமைச்சர் அனுரா பிரியதர்சன யாப்பா ஏற்பாடு செய்திருந்த இரவு நேர விருந்தில் பங்கேற்றிருந்த ஊடகவியலாளர்களுக்கு உதயன் பணியாளர்கள் படுகொலை செய்தி தெரியவந்தது. இதையடுத்து அமைச்சரின் விருந்தைப் புறக்கணித்த ஊடகவியலாளர்கள் கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையம் முன்பாக ஒன்று திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொடரும் ஊடகவியலாளர்கள் படுகொலையில் உரிய விசாரணைகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்றும் ஊடகவியலாளர்கள் குற்றம்சாட்டினர்.

ரிச்சார்ட் டி சோய்சா, மயில்வாகனம் நிமலராஜன், சிவராம் தராக்கி உள்ளிட்ட ஊடகவியலாளர்களின் படுகொலை வரிசையில் உதயன் பணியாளர்கள் தற்போது கொல்லப்பட்டிருப்பதாகவும் குற்றவாளிகளை நீதியின் முன் சிறிலங்கா அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்றும் ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட ஊடக சுதந்திர நாளில் இப்படுகொலை நிகழ்த்தப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் கொழும்பு ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் இப்படுகொலைகளை அரச தரப்பினர் கண்டிப்பதோடும் அரசியல் லாபங்களுக்காக நினைவுநாட்களை நடத்துவதோடும் நின்றுவிடுவதாகவும் ஊடகவியலாளர்கள் கூறினர்.

கொழும்பில் உள்ள எல்லை கடந்த ஊடகவியலாளர் அமைப்பின் ஆசியப் பொறுப்பாளர் வின்சென்ட் ப்ரொசெல் மற்றும் கொழும்பு ஊடகவியலாளர்கள் கூறுகையில், இப்படுகொலைகளுக்குக் காரணமாகக் கூறப்படும் துணை இராணுவக் குழுவினருக்கு தண்டனை அளிப்பதிலிருந்து அரசாங்கம் விலக்கு அளிப்பதாகவும் குற்றம்சாட்டினர்.

உதயன் நாளேட்டின் பணியாளர்கள் படுகொலை குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று சிறிலங்கா காவல்துறை மா அதிபர் மற்றும் இராணுவத்தினருக்கு மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாக சிறிலங்கா ஊடகத்துறை அமைச்சர் அனுரா பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

உதயன் பணியாளர்கள் படுகொலையானது நாட்டினது ஊடகத்துறையின் நிலையை அம்பலப்படுத்துவதாக உள்ளதாக சுதந்திர ஊடக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

"அதி உயர் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள்ளும் நாளேடு ஒன்றின் அலுவலகத்துக்குள் நுழைந்து துப்பாக்கிதாரிகள் படுகொலை செய்யுமுடியுமெனில் பாதுகாக்கப்படாத பகுதிகளின் நிலைமைதான் என்ன?" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் சனத் பாலசூர்யா, இந்தக் காட்டுமிராண்டித்தனமான படுகொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சர்வதேச ஊடக சுதந்திர நாளை முன்னிட்டு இன்று புதன்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மகிந்த ராஜபக்ச பங்கேற்கும் ஊடகவியலாளர்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வைப் புறக்கணிக்கவும் ஊடகவியலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

உதயன் குகநாதனுக்கு இலக்கு?

யாழ். உதயன் நாளேட்டின் தலைமைச் செய்தியாளர் குகநாதனுக்கு இலக்கு வைத்தே துணை இராணுவக் குழுவினர் உட்புகுந்ததாக உதயன் நாளேட்டின் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பி.பி.சி. சிங்கள சேவையான சந்தேசியாவுக்கு உதயன் செய்தியாளர்கள் கூறியுள்ளதாவது:

விளம்பர முகாமையாளர் சுரேஸ் மற்றும் பணியாளர் ரஞ்சித் ஆகியோர் சம்பவ இடத்தில் கொல்லப்பட்டுள்ளனர். மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

எமது தலைமைச் செய்தியாளர் குகநாதனைத் தேடிய ஆயுதக் குழுவினர் அவர் அங்கு இல்லாத நிலையில் பணியாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

கணணிகள் உள்ளிட்ட அலுவலக உபகரணங்கள் மீதும் அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இத்தாக்குதலில் அரச படைகளோ, அரசாங்கமோ ஈடுபடவில்லை. துணை இராணுவக் குழுவினரே ஈடுபட்டனர். தாக்குதலை நடத்தியவர்கள் தமிழிலேயே பேசினர் என்று தெரிவித்துள்ளனர்.

இப்படுகொலைகளுக்கு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஊடகத்துறை அமைச்சர் அனுரா பிரியதர்சன யாப்பா ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

உதயன் பணியாளர்கள் படுகொலை: தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் கண்டனம் யாழ். உதயன் நாளேட்டின் பிரதான பணிமனையில் உட்புகுந்து இன்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டிருக்கும் படுகொலைகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழீழ அரசியல்துறை இது தொடர்பாக வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை:

சுயாதீனமாகச் செயற்படும் தமிழ் ஊடகங்களுக்கு சிறிலங்கா அரச படைகளும் அதன் துணை இராணுவக் குழுக்களும் விடுத்துவரும் அச்சுறுத்தலின் தொடர்ச்சியாக இன்று யாழ்ப்பாணத்தில் உதயன் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டிருக்கின்றது. அதன் இரண்டு பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே, யாழ். குடாநாட்டில் நடுநிலைமையோடு செயற்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் ஈ.பி.டி.பியினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். நடுநிலைமையுடன் ஊடகங்கள் உண்மைகளை தோலுரித்துக் காட்டும் சந்தர்ப்பங்களில் எதிரிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

இதன் பிரதிபலிப்புக்களாக மட்டக்களப்பில் நாட்டுப்பற்றாளர் ஜி.நடேசன், கொழும்பில் மாமனிதர் தராக்கி டி.சிவராம், திருகோணமலையில் சு.சுகிர்தராஜன் ஆகிய பத்திரிகையாளர்கள் சிறிலங்கா அரசின் ஆசீர்வாதத்துடன் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இன்று யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் ஆசிரியர்களை தேடிச்சென்ற ஈ.பி.டி.பியினரும் சிறிலங்கா படையினரும், அவர்கள் எதிர்ப்படாமையால் இரண்டு பணியாளர்களை படுகொலை செய்துள்ளனர்.

மேலும் இச்சம்பவத்தில் மூன்று பணியாளர்கள் படுகாயமடைந்திருக்கின்றனர்.

உதயன் பத்திரிகையை இயங்கவிடாமல் செய்வதற்கு கடந்த காலங்களிலும் சிறிலங்கா அரச படைகள் பலத்த பிரயத்தனங்களை செய்திருந்தன. விமானத் தாக்குதலுக்கும் கூட அதன் பணிமனை இலக்கானது. சிறிலங்கா இராணுவத்தின் ஆக்கிரமிப்பிற்குள் இருந்து கொண்டு அதன் அட்டூழியங்களை வெளிக் கொணர்ந்ததற்காக படையினர் அதை சீல் வைத்து மூடியிருந்தனர்.

இப்போது உதயன் பத்திரிகையை இயங்க விடாமல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் உட்புகுந்து படுகொலையை செய்ததுடன் அதன் அலுவலக உபகரணங்களையும் அடித்து சேதப்படுத்தியிருக்கின்றனர்.

சர்வதேச ரீதியாக ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்காக செயற்படும் அமைப்புக்களும் சர்வதேச ஊடகங்களும் இதனைக் கண்டிப்பதுடன் இத்தகைய அநியாயங்கள் தொடராமல் தடுக்க சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க முன்வரவேண்டும்.

தமிழ் ஊடகங்களுக்கு விடப்படும் இத்தகைய அச்சுறுத்தல்கள், ஒரு போதும் ஜனநாயகத்தையோ சமாதானத்தையோ தோற்றுவிக்க உதவாது.

சிறிலங்கா அரசினதும் அதன் துணை இராணுவக் குழுக்களினதும் உதயன் பத்திரிகை மீதான தாக்குதலை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட உதயன் பத்திரிகையின் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் முட்டாள்கள் உதயன் மீது பாய்ந்தன?

-மட்டக்களப்பு ஈழனாதம்

உதயன் நாளிதழில் அலுவலகத்துக்குள் சிறிலங்கா படையினருடன் புகுந்த ஈ.பி.டி.பியினர் இருவரை கொலை செய்து மூவரை படுகாயப்படுத்தினர்.

ஈ.பி.டி.பி உதயன் பத்திரிகைக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுத்துவந்தது அனைவரும் அறிந்த விடயம். ஆயினும், நேற்றிரவு புகுந்து கொலை வெறியாட்டம் ஆடியமைக்கு காரணம் அது வெளியிட்ட இந்த கேலிச்சித்திரமுமா?

எல்லோரும் அறிந்த செய்தி - உண்மை – யதார்த்தம் கேலிச் சித்திரமாக வெளியானது. அது ஊடக சுதந்திரம், ஜனநாயகம் பற்றி பேசும் ஈ.பி.டி.பிக்கு பொறுக்க முடியாததாகி விட்டதா?

அதனால், தான் யாழ்ப்பாணத்தில் உள்ள ஸ்ரீதர் தியேட்டர் என்ற தனது குகைக்குள் இருந்து புறப்பட்டு சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்புடன் உதயன் அலுவலகத்துக்குள் புகுந்து கைவரிசை காட்டியதா?

அல்லது பொதுவாகவே உண்மையான தமிழ்த் தேசியத்தையும் அதற்கான பணிகளையும் பேராட்டங்களையும் நியாயங்களையும் பேசுபொருளாகக் கொண்டமைக்காக, பத்திரிகை வெளிவரத் துணை நின்ற அதன் பணியாளர் களை கொன்று தீர்த்ததா?

வாளின் கூர்மையை விடவும் பேனா முனை கூர்மையானது என்று அஞ்சியதா ஈ.பி.டி.பி?

எனினும், பேனா முனை மிகவும் கூர்மையானது தான்: அது அநியாயக் காரர்களை என்றும் வாழவிடாது என்பதனை ஊடக உலகம் நிரூபிக்கும். அதற்கு ஈழத்தில் உள்ள தமிழ் ஊடகங்கள் எடுத்துக் காட்டுக்களாக திகழும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

ஒரு நிமலராஜனையோ சுகிர்தராஜனையோ சுட்டுச்சரிப்பதால் உண்மைகளை மறைத்துவிடலாம் என்றோ அல்லது நடேசனையோ சிவராமையோ சாய்த்ததால் தமிழ்த் தேசியத்துக்கான குரல் வளைகளை நெரித்து விடலாம் என்றோ கனவு கண்டவர்கள் முட்டாள்கள் என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது.

மேன்மேலும் ஈ.பி.டி.பி முட்டாள்களின் கூடாரமாக – பைத்தியகாரர்களின் பாசறையாகப் போகின்றதா?

கடைசியாக புதுப்பித்தது

http://www.battieelanatham.com/newsite/ind...id=82&Itemid=37

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைமைச்செய்தியாளர் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டிருந்தால் அது நமக்கு ஈடுசெய்யமுடியாத இழப்பாக இருந்திருக்கும்...

எதிரிக்கு பிரச்சார பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் துணிந்து செய்திகளை வெளியிடும் ஊடகவியளாளர்கள் 'நான் துணிஞ்சவன்' என்று நெஞ்சை நிமித்திக் கொண்டு தமது பாதுகாப்பில் கவனமெடுக்காமல் இருப்பதில் அர்த்தம் இல்லை. அவர்கள் சாய்க்கப்பட்டால் அவர்களின் பிரிவு வேதனை தரும் என்பதோடு அவரிகளின் இடத்தை நிரப்பக் கூடியவர் வெளிப்பட பல வருடங்கள் எடுக்கும்.

தமது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று தெரிபவர்கள் (ஊடகவியலாளர்கள் மட்டுமல்ல) தமக்குரிய பாதுகாப்பை தாமேதான் ஏற்படுத்திக் கொண்டு தமது ஒவ்வொரு அசைவையும் கவனத்துடன் மேற்கொள்ளுதல் கட்டாயமானது.

தமிழ் ஊடகவியலாளர்கள், தமிழுணர்வாளர்கள் தமது உயிரை தேசியத்தின் பெறுமதிமிக்க உயிராக நினைத்து சிரத்தையுடனும் அதேநேரம் அரசபடைகள் நடத்தும் அக்கிரமத்தை 'வெருட்டல் மிரட்டல்களுக்கு' மடியாமலும் துணிந்து செயற்பட கடமைப்பட்டவராகின்றனர்.

01.jpg

"உதயன்" அலுவலகத்துக்குள் புகுந்து ஆயுததாரிகள் நேற்று வெறியாட்டம்!

முகாமையாளர் உட்பட இருவர் பலி மூவர் காயம்; உடைமைகள் நாசம்

060503015ek.gif

060503029td.gif

060503034wj.gif

060503042li.gif

யாழ். நகரில் அமைந்துள்ள "உதயன்" பத்திரிகை அலுவலகத்திற்குள் நேற்றுமுன்னிரவு நுழைந்த ஆயுததாரிகள் நடத்திய வெறியாட்டத்தில் முகாமையாளர் ஒருவர் உட்பட இருவர் அந்த இடத்திலேயே பலியாகினர். மற்றும் இரு பணியாளர்கள் படுகாயமடைந்தனர். முகங்களை துணிகளால் மூடிக்கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்திறங்கிய கும்பல் ஒன்று இந்த அராஜகத்தைப் புரிந்துவிட்டுத் தப்பிச் சென்றது.

பத்திரிகையின் ஆசிரியர் பீடத்திற்குள் நுழைந்து குறிப்பிட்ட உதவி ஆசிரியர் ஒருவரின் பெயரைக் கேட்டு சகட்டு மேனிக்குத் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். அலுவலகத்தின் கணினிப் பிரிவிற்குள் நுழைந்து அங்கிருந்த சகல கணினிகள் மீதும் ரவைகளைப் பொழிந்து அவற்றைச் சுக்குநூறாக்கிச் செயலிழக்கச் செய்தனர். மிகத் தெளிவாக சுத்தமாக தமிழ் பேசிய ஆயுததாரிகளே இந்த ஈனச்செயலைப் புரிந்துவிட்டுச் சென்றனர். "கெல்மெட்" அணிந்திருந்த அவர்கள் தமது முகங்களை துணிகளால் மூடிக் கட்டி மறைத்திருந்தனர். இரவு 7.25 மணியளவில் பத்திரிகை அலுவலகத்தில் வழமைபோன்று பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தன. அலுவலகத்தின் முன்பக்கச் சுவரின் மீதாகத் திடீரென ஏறிப் பாய்ந்த ஆயுததாரிகள் ஐந்து பேர் சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்து இந்த வெறியாட்டத்தில் ஈடுபட்டனர்.

உதயனின் சந்தைப்படுத்தல் முகாமையாளரான பஸ்ரியன் ஜோர்ஜ் சகாயதாஸ் (சுரேஷ்வயது 36), விநியோகப் பகுதி மேற்பார்வையாளரான எஸ்.ரஞ்சித் ஆகியோர் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தனர். விநியோகப் பகுதி ஊழியர்களான எஸ்.உதயகுமார் (வயது 48), நா. தயாகரன் (வயது 24) ஆகியோர் காயமடைந்தனர்.

சுவர் ஏறிக் குதித்து வந்தவர்களில் நால்வர் முதலில் அலுவலகப் பாதுகாப்பு ஊழியர் இருக்கும் இடத்திற்குச் சென்று துப்பாக்கி முனையில் அவரைப் கீழே படுக்க வைத்தனர். நிமிர்ந்தால் சுடுவோம் என்று மிரட்டி விட்டு அவர் அருகில் ஓர் ஆயுததாரி நின்றுகொண்டார். ஏனையவர்களில் இருவர் அலுவலகத்தின் முன்புறம் இருந்த சந்தைப்படுத்தல் முகாமையாளரின் அலுவலகம் நோக்கிச் சென்றனர். எந்தக் கேட்டுக் கேள்வியும் இன்றி அவர் மீது சரமாரியாத் துப்பாக்கிவேட்டுக்களைத் தீர்த்தனர். அவர் இருந்த இடத்திலேயே மடிந்து வீழ்ந்தார்.

பின்னர் அங்கிருந்து திரும்பிய அவர்கள், பாதுகாப்பு அலுவலரின் அருகோடு இருந்த விநியோகப் பதிக்குள் நுழைந்தனர். அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த அனைவரையும் முதலில் கீழே இருக்குமாறு கூறி தாறுமாறாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். பின்னர் அனைவரையும் கீழேபடுக்குமாறு கூறினர். எவரும் நிமிர்ந்து பார்க்கக்கூடாது என்று கூறிவிட்டு மீண்டும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

அதில் பாதுகாப்பு ஊழியருக்கு அருகே நிலத்தில் வீழ்ந்து படுத்திருந்த விநியோகப் பகுதி ஊழியரான உதயகுமார் காயமடைந்தார். காயப்பட்டதும் அவர் "ஐயோ" என எழுப்பிய குரலைக் கேட்டு துள்ளி நிமிர்ந்து பார்த்த ரஞ்சித்தை நோக்கி ஆயுததாரி ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். காயமடைந்து கீழே வீழ்ந்த அவரின் முதுகில் காலை வைத்து மீண்டும் அவர் மீது சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். அதனால் அவரும் அந்த இடத்திலேயே மடிந்தார்.

விநியோகப் பிரிவில் இருந்த உதவி விநியோக அலுவலரின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி "எங்கேயடா "கெட் ஒவ்பிஸ்" காட்டு" எனக் கேட்டுள்ளனர். பின்னர் துப்பாக்கி முனையில் அவரை இழுத்துச் சென்று ஆசிரியர் பீடத்தைக் காட்டுமாறு மிரட்டியதுடன் குறித்த உதவியாசிரியர் ஒருவரின் பெயரைக் கூறி "அவன் எங்கே?" என்றும் கேட்டுள்ளனர்.

பாதுகாப்பு ஊழியரின் பகுதியில் இருந்து உள்ளே, ஆசிரியர் பீடத்திற்குச் செல்லும் வரையும் கண்ணில் கண்ட இடத்திலெல்லாம் சகட்டுமேனிக்குச் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதை அடுத்து சுதாகரித்துக்கொண்ட ஆசிரியர் பீட ஊழியர்களும் கணனிப் பிரிவு ஊழியர்களும் மறைவிடம் ஒன்றில் பதுங்கிக் கொண்டனர் என்பதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிக்கொண்டனர். சகட்டுமேனிக்கு ஆசிரியர் பீடத்திற்குள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட ஆயுததாரிகள் மூவரும் பின்னர் விநியோக உதவி அதிகாரியையும் இழுத்துக்கொண்டு படிகளில் இறங்கத் திரும்பினர். எனினும் திடீரென விழிப்பு வந்தவர்களாக அவர்களில் ஒருவர் ஓடிச்சென்று கணனி அறைக்குள் புகுந்து கன்னாபின்னாவென்று சுட்டுத் தள்ளினார். இதில் அங்கிருந்த கணனிகள் அனைத்தும் சிக்கிச் சிதறி சின்னாபின்னமாகின. பத்திரிகையைப் பிரசுரிப்பதற்குத் முடியாத அளவிற்கு அனைத்துக் கணிகளும் சல்லடைகளாத் துளைக்கப்பட்டன. அதன் பின்னர் அங்கிருந்து வெளியேறிய ஆயுததாரிகள், சென்ற இடங்களிலெல்லாம் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். மீண்டும் பாதுகாப்பு ஊழியரின் பகுதிக்குச் சென்ற அவர்களில் ஒருவர், பத்திரிகையின் அச்சகப் பகுதிக்கு சென்று தாக்க வேண்டும் என்று முறிந்த சிங்களத்தில் தெரிவித்துள்ளார். எனினும் மற்றையவர் அதனை மறுத்து "நேரமாகி விட்டதால் உடனடியாக நாங்கள் செல்லவேண்டும்" என்று சிங்களத்தில் பதிலளித்துள்ளார்.

துப்பாக்கி முனையில் தம்முடன் இழுத்துச் சென்ற விநியோக உதவி அதிகாரியைக் கீழே படுக்குமாறு கூறிவிட்டு சடுதியாக வீதிக்குச் சென்று மோட்டார் சைக்கிள்களில் ஏறித் தப்பிச் சென்றுவிட்டனர் கொலையாளிகள்.

உதயன்

பத்திரிகை சுதந்திரம் இலங்கையில் எந்த அளவில் இருக்கிறது என்று நல்லாத் தெரியுது............துப்பாக்கி சூடு நடத்திய 6பேரை கைது செய்திருப்பதாக படைத்தரப்பு சொல்லுது ????????????

  • கருத்துக்கள உறவுகள்

துணை இராணுவக் குழுவினரே தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும்: உதயன் ஆசிரியர் வித்யாதரன்

யாழ். உதயன் நாளேட்டின் அலுவலகத்திற்குள் படுகொலை வெறித் தாக்குதலை துணை இராணுவக் குழுவினரே நடத்தியிருப்பதாக உதயன் ஆசிரியர் வித்யாதரன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது:

எமது சந்தைப்படுத்துதல் முகாமையாளரும் விநியோகப் பிரிவு உதவியாளரும் படுகொலை செய்யப்பட்டமையைத் தொடர்ந்து மேலதிக காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலை துணை இராணுவக் குழுவினரே நடத்தியிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கிறோம்.

எமது அலுவலகத்தை அண்மித்த பகுதியில் இராணுவ காவலரண் உள்ளது. ஆனால் உதயன் அலுவலகத்துக்குள் 15 நிமிடத்துக்கும் மேலாக நீடித்த இப்படுகொலைச் சம்பவத்தைத் தடுக்க எந்த ஒரு அதிகாரியும் முன்வரவில்லை.

இத்தகைய தாக்குதல்கள் விடுதலைப் புலிகளை குற்றம்சாட்டுகிற ஒரு இரகசியத் திட்டமாகவும் இருக்கலாம் என்று நம்புகிறோம் என்றார்.

இதனிடையே உதயன் நிர்வாகத்தை தொடர்பு கொண்ட மகிந்த ராஜபக்ச, சம்பவம் தொடர்பில் தான் அதிர்ச்சியடைவதாகக் கூறியுள்ளார்.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

உறுதியோடு நிற்பான் உதயன்

சர்வதேச பத்திரிகைச் சுதந்திர தினம் நேற்று. "உதயன்' அலுவலகம் மீதான மிலேச்சத்தனமான கொடூரமான ஆயுததாரிகளின் வெறியாட்டம் பற் றிய செய்திகள் பத்திரிகைகள் அனைத்திலும் முக்கியத் துவம் கொடுத்து பிரசுரித்திருக்க விடிந்திருக்கின்றது.

இந்த வெறியாட்டம்காட்டுத் தர்பார் தனி ஒரு நிறுவனத்திற்கு எதிரானது அல்ல. ஒட்டு மொத்த தமிழ்த் தேசியத்திற்கும் அதன் எழுச்சிக்கும் விழுந்த மரண அடி இது.

ஊடக சுதந்திரத்திற்காக நேற்று முன்தினம் முன் னிரவு 7 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலை யத்திற்கு முன்பாக இலங்கையின் பல்வேறு ஊடகவிய லாளர்களும் ஒன்றுகூடி, தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் விதத்தில் ஐக்கியப்பட்டு மெழுகுதிரி தீபங்களை ஏற்றித் தமது பணியின் மீதான பற்றுதியை வெளியிட்ட அதே சமயம், "உதயன்'அலுவலகத்திற்கு முன் ஆயுததாரிகளின் துப்பாக்கிகள் கனன்றிருக்கின்றன.

இலங்கையில் ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர் களுக்கும் எதிரான படுமோசமான குரூர தாக்கு தல்களில் பெரும்பாலானவை தமிழ் ஊடகங்களுக்கு எதிராகவே புரியப்பட்டு வந்துள்ளன. அந்தவகையில் ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதி பலித்து, அவர்களின் தேசியத்தை முன்னிலைப் படுத்தி வரும் "உதயன்' பல்வேறு இன்னல்களைக் கடந்து இரண்டு தசாப்தகால இருபது ஆண்டுகால வரலாற்றில் சந்தித்திருக்கின்றான்.

ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தல்கள், இந்திய அமை திப் படையினரின் நேரடித் தாக்குதல்கள் நெருக்கு தல்கள் மிரட்டல்கள், இலங்கை விமானப்படை இலக்குவைத்து பணிமனை மீது நடத்திய வான் வழிக் குண்டுவீச்சு, பத்திரிகை அலுவலகம் சீல் வைப்பு, கல் லெறிகள், இடம்பெயர்வுகள், கைக்குண்டுத் தாக்கு தல்கள், செய்தியாளர் படுகொலை, களப் பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் என்று "உதயன்' எதிர்கொண்ட இடுக்கண்கள், அழுத்தங்கள் பலப்பல. அந்த வரிசை யில் இந்த வெறியாட்டமும் சேர்ந்து கொண்டு இரண்டு ஊழியர்களைப் பலிகொண்டு, மேலும் சில ஊழியர் களைக் படுகாயப்படுத்தி, பல லட்சம் ரூபா உடைமைகளை நாசம் செய்து, தன்பணி மீதான " உதயனின்' பற்றுதியை திடசங்கற்பத்தை மழுங்கடிக்க முயற்சித்திருக்கின்றது.

மரணங்கள் மலிந்த பூமியில் கொடூர யுத்தத்திற்கு மத்தியில் தன்னுடைய பணியைக் கடந்து வந்திருக் கும் உதயனுக்கு இந்த இழப்புகள், துன்பங்கள், கஷ் டங்கள் ஒன்றும் புதியவையல்ல.

உதயனின் கடந்த காலத்தை எடுத்து நோக்குபவர் களுக்கு ஒரு விடயம் நன்கு தெளிவாகப் புரியும்; தெரி யும்; புலப்படும். ஈழத் தமிழர்களின் கருத்தியலைப் பிர திபலித்துவரும் உதயனுக்கு, அவன் சார்ந்த மக்களைப் போன்றே அனுபவங்கள் கிட்டின.

யுத்த சன்னதத்தில் தமிழ் மக்கள் குப்புற வீழ்ந்த போதும் மக்கள் மத்தியில் அவர்கள் குரலாக ஊடாடிய உதயனும் குப்புற வீழ்ந்தான். போர் வடுக்களை யுத்த அழிவுகளை இழப்புகளை துயரங்களைச் சுமந்தான். ஆனால் தனது தமிழ் மக்களைப் போலவே அவனும் யுத்த அச்சுறுத்தல் கண்டு துவண்டு விடவில்லை; அதற்கு அடங்கிவிடவில்லை. தனது மக்களைப் போலவே அவனும் சளைக்காமல் அதே சந்தோசத் தோடும், உத்வேகத்தோடும், உறுதியோடும் எழுந்து நின்றான். புத்துயிர்ப்புப் பெற்றான். புது எழுச்சி கொண்டான். அதே வீரத்தோடு வீறாப்போடு வீச் சோடு விவேகத்தோடு தமிழர் தம் நியாயத்தையும் அவர்களின் தேசியத்தின் உரிமையையும் முரச றைந்தான். தமிழரின் உரிமைக்குரலை உல கெங்கும் முழங்கினான்.

அந்தச் சரித்திரச் சக்கரம் தொடர்ந்து சுழல்கின்றது. இப்போது தமிழர் தம் வாழ்வில் பெரும் நெருக்கடி. அதனால், தமிழர்களோடு ஒன்றுபட்டு ஐக்கியப்பட்டு விட்ட உதயனுக்கும் நெருக்கடி. இந்த அரசியல், பாது காப்பு, கள இக்கட்டை தமிழர் சமூகம் எவ்வாறு வெற்றி கொண்டு கடக்கப் போகின்றதோ அதே போன்று உதய னும் கடப்பான். புதுமெருகு பெறுவான். புத்தூக்கம் கொள் வான்.

உதயனின் உயிர்ப்பின் நோக்கமும், அவனின் இயக் கத்தின் வீச்சும், செயற்பாட்டின் தாற்பரியமும், கொள் கைப் போக்கின் இலக்கும் உயர்ந்தவை. கிளைபரப்பி இயங்கும் அதன் விசாலப் பருமன் பரந்தது. தனி மனித அழிப்புகள், அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் போன்றவை மூலம் அவனின் செயற்பாட்டிலும் இயக்கத்திலும் தடங் கல் ஏற்படலாம். ஆனால் அவன் துவண்டு விடமாட் டான். துவளமாட்டான்.

தமிழ் மக்களின் நியாய இலக்கு எதுவோ அதற்காக "உதயன்' குரல் எழுப்பும் காலம் வரைதமிழ் மக்களில் இதயத்தில் அவனுக்கு உயர்ந்த ஆதரவு இடம் இருக் கும்வரை இத்தகைய வெறியர்களின் தாக்குதல்கள் அவனுக்கு தாங்க முடியாத இழப்புகள் அல்ல.

அத்தோடு, அடக்கு முறைக்கும், அச்சுறுத்தல்களுக் கும் மத்தியிலும் ஊடகப் பணியை துணிந்து முன்னெடுக் கும் ஊடகவியலாளர்களுக்கு முன் மாதிரியாக உதயன் அணியினர் திகழ்வர் என்பதும் திண்ணம்.

- உதயன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பத்திரிகை சுதந்திரம் இலங்கையில் எந்த அளவில் இருக்கிறது என்று நல்லாத் தெரியுது............துப்பாக்கி சூடு நடத்திய 6பேரை கைது செய்திருப்பதாக படைத்தரப்பு சொல்லுது ????????????

கைது செய்யப்பட்ட 6 போரில் நால்வர் இம்முறை க பொ த உயர்தரப்பாPட்சை எழுதும் மாணவர்கள் தற்போது நீதவான் இவர்கள் 6 பேரையும் பிணையில் செல்ல அனுமதித்துள்ளார் :roll:

  • கருத்துக்கள உறவுகள்

நியூயோர்க் அமைப்பு கண்டனம்

யாழ்ப்பாணத்தில் "உதயன்' பத்திரிகை அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நியூயோர்க்கை தளமாகக் கொண்டு இயங்கும் ஊடகவியலாளர்களைப் பாது காப்பதற்கான அமைப்பு (சி.பி.ஜே) வன்மை யாகக் கண்டித்திருக்கிறது.

இது தொடர்பில் நேற்று அறிக்கையொன்றை விடுத்த மேற்படி அமைப்பு, இலங்கையில் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருக் கின்றது.

வன்முறைகள் மற்றும் பல்வேறு காரணங் களால் ஊடகவியலாளர்கள் பாதிக்கப்படா மல் இருக்கும் வகையிலான ஏற்பாடுகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இலங் கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு வும் மேற்கொள்ளவேண்டுமென ஊடகவிய லாளர்களைப் பாதுகாப்பதற்கான அமைப்பு அந்த அறிக்கையில் மேலும் கோரியுள்ளது.

-உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

நிதர்சனத்தில் வந்த செய்தி - தேசியனிதியில் உயிரிலந்த பணியாளர்களுக்கு தேசியத்தலைவர் உதவித்தொகை

http://www.nitharsanam.com/?art=17027

  • கருத்துக்கள உறவுகள்

உயிரிழந்த "உதயன்' பணியாளரது

குடும்பங்களுக்கு உதவு தொகை

தேசிய நிதியிலிருந்து வழங்க தலைவர் பிரபா பணிப்பு

கொடூரமாகச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட "உதயன்' பணியாளர்கள் இருவரது குடும்பங்களுக்கும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கும் தமிழீழ தேசிய நிதியிலி ருந்து உதவு தொகைகளை வழங்குமாறு தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் பணித்திருக்கிறார்.

விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் நேற்று இத்தகவலை "உதயன்' ஆசிரியருடன் தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

உயிரிழந்த இரண்டு பணியாளர்களின் குடும்பங்களுக்கும் தலா ஒரு லட்சம் ரூபா வையும் காயமடைந்த இரு பணியாளர்களின் குடும்பங்களுக்கும் தலா 50 ஆயிரம் ரூபா வையும் தமிழீழ தேசிய நிதியில் இருந்து வழங்குமாறு தேசியத் தலைவர் அரசியல்துறை யினருக்குப் பணித்திருக்கிறார் என்று தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

"உதயன்' நிறுவனம் ஊடாக இந்த உதவுதொகையை சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத் தினரிடம் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

- உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

இனத்துக்காக உழைப்பவன் "உதயன்'

அவன்மீதான தாக்குதல் கண்டனத்துக்குரியது

நல்லை ஆதீன முதல்வர் தெரிவிப்பு

தமிழினத்தின் நலனுக்காக ஓயாது உழைப்பவன் "உதயன்' அந்த நிறுவனத்தின் மீதான தாக்குதல் கண்டனத்துக்குரியது.

இவ்வாறு தெரிவித்துள்ளார் நல்லை திருஞான சம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள்.

"உதயன்' மீதான தாக்குதல் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து நல்லை ஆதீன முதல்வர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்:

"உதயன்' பத்திரிகை நிறுவனத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்தும், அதில் முகாமையாளர் உட்பட இருவர் பலியாகியும் இருவர் படுகாயமடைந்தமை தொடர்பான செய்தி அறிந்தும் ஆழ்ந்த கவலையடைந்தேன்.

ஜனநாயக நாடொன்றில் மக்களின் கருத்துகள் உரியமுறைப்படி வெளிப்படுத்தப்படவேண்டும். இந்தவகையில், குடாநாட்டு மக்களின் குரலாக மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைப் புடம்போட்டுக்காட்டி அவற்றுக்குத் தன்னாலான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க அரும்பாடுபட்டவன் "உதயன்' இதனை நாடே அறியும். எத்தனையோ நெருக்கடிகளின் மத்தியிலும் தனது பணியைச் செவ்வனே செய்யவேண்டும் என்பதில் "உதயன்' கொண்டிருந்த மனஉறுதியை நான் அறிவேன்.

இந்த வகையில், இனத்துக்காக உழைக்கும் பத்திரிகை நிறுவனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கப்படவேடண்டியது. இந்தக் கோரத் தாக்குதலின்போது உயிரிழந்த இரண்டு பணியாளர்களது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன், அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

"உதயன்' மீதான தாக்குதலின்போது உதயனின் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதை நேரில் அவதானித்தேன். மிகப்பாரியளவு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் தனக்குள்ள அனைத்துத் தடைகளையும் தாண்டி "உதயன்' தொடர்ந்து வெளிவரவேண்டும் என்று அதில் உள் ளது.

ஊழியர் இருவருக்கும்

உதயனில் இறுதி மரியாதை

"உதயன்' வளாகத்தினுள் வைத்துக் கொடியவர்களால் கோரமாகக் கொலைசெய்யப்பட்ட உதயன் பணியாளர்கள் இருவருக்கும் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்றுக் காலை உதயன் பணிமனை முன்றலில் நடைபெற்றது.

"உதயன்சஞ்சீவி' மற்றும் சக நிறுவனங்களின் பணியாளர்களும் பொது அமைப்புக்கள்

சார்ந்தவர்களும் அப்போது வருகை தந்து தங்கள் இறுதி அஞ்சலிகளைச் செலுத்தினர்.

சந்தைப்படுத்தல் முகாமையாளர் பஸ்ரியன் ஜோர்ஜ் சகாயதாஸ், விநியோகப் பகுதி ஊழியர் இராசரட்ணம் ரஞ்சித் ஆகிய இருவரது பூதவுடல்களும் வைக்கப்பட்ட பேழைகள் "உதயன்' அலுவலகத்திற்கு எடுத்து வரப்பட்டு ஒன்றாக அஞ்சலிக்கு வைக்கப்பட்டன.

உயிரிழந்த இருவரதும் உறவினர்களும் உடன் வந்திருந்தனர்.

"உதயன்' விளம்பரப் பகுதி முகாமையா ளர் தலைமையில் மலரஞ்சலியும் நினை வுரைகளும் இடம்பெற்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளு மன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ்.றோட்டறிக் கழகத் தலைவர் என்.சர வணபவன், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் சிரேஷ்ட துணைப் பொதுச் செய லாளர் ந.பஞ்சலிங்கம், யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத் தலை வர் எஸ்.சிவசுப்பிரமணியம், யாழ். பல் கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதி ரவீந்திரன் மற்றும் றோட்டறக்ட் கழகங்க ளின் பிரதிநிதிகள் உட்படப் பலர் தமது அஞ் சலி உரையாற்றினர்.

"உதயன்சஞ்சீவி' ஆசிரிய பீடத்தவர் கள், பணியாளர்கள், சக நிறுவனங்களின் ஊழியர்கள், பொதுமக்கள் எனப் பலரும் மலரஞ்சலி செலுத்தினர்.

பின்னர் சந்தைப்படுத்தல் முகாமையா ளரின் பூதவுடல், யாழ். சிவகுருநாதர் ஒழுங் கையில் அவர் வசித்த இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு தொடர்ந்தும் அஞ்ச லிக்காக வைக்கப்பட்டது.

விநியோகப் பகுதி ஊழியர் இ.ரஞ்சித் குமாரின் பூதவுடல், நாவற்குழி 5 வீட்டுத் திட்டத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. நேற்று மாலை 3.00 மணியளவில் அவரது இறுதிச் சடங்கு கள் நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப் பட்டது. (ம190)

உதயன்' படுகொலைகளுக்கு

மக்கள் ஒன்றுபட்டு எதிர்ப்பு!

வீதிக்கு இறங்காமல் வீடுகளில் தங்கி அமைதிப் போர்

நேற்றைய ஹர்த்தாலால் குடாநாடு முடங்கி அடங்கியது

யாழ்.நகரில் உள்ள "உதயன்' "சஞ்சீவி' நிறுவன வளாகத்திற்குள் செவ்வாய்க்கிழமை முன்னிரவு ஆயுதபாணிகள் புகுந்து மிலேச்சத்தனமான முறையில் மேற்கொண்ட படுகொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்.குடாநாடு நேற்று முற்றாக முடங்கி அடங்கியது. மக்கள் வீதிகளுக்கு இறங்காமல் வீடுகளில் தங்கி இருந்து தங்கள் ஒருமித்த எதிர்ப்பை அமைதியான முறையில், உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தினர்.

வீதிகள், சந்தைகள், நகரங்கள் வெறிச்சோடின. பொதுப் போக்குவரத்துகள் முற்றாக நின்றுபோயின. மக்கள் வீதிகளில் நடமாடுவதைத் தவிர்த்து வீடுகளுக்குள் முடங்கினர். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்த அழைப்பை அடுத்து அனைத்து மக்களும் பூரண ஹர்த்தாலை அனுஷ்டித்தனர். மிக அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்துச் சேவைகளும் முடங்கின.

அமைதியாக இயங்கிக்கொண்டிருந்த "உதயன்சஞ்சீவி' பணிமனைக்குள் நவீன ஆயுதங்களுடன் தங்களை உருமறைத்துக்கொண்டு திடுதிப்பெனப் புகுந்த நபர்கள் "உதயன்' வளாகம் எங்கும் சகட்டு மேனிக்குச் சுட்டு காட்டுத் தர்பார் புரிந்ததுடன் பணியாளர்கள் இருவரைக் கொடூரமாகக் கொன்றும் கணனிகள் மற்றும் உடைமைகளை சுட்டு

நொறுக்கியும் பெரும் அட்டகாசம் புரிந்த னர்.

இந்தக் கொடூரச் செயலுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் நேற்றைய தினம் ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு யாழ். பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்த அழைப்புக்கு குடாநாட்டு மக்கள் தங்கள் முழு ஆதரவை வழங்கி அமைதியான முறையில் எதிர்ப்பை ஒருமித்து வெளிப்படுத்தியிருக்கின்றனர

  • கருத்துக்கள உறவுகள்

உதயன் ஊழியர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

  • கருத்துக்கள உறவுகள்

உதயன் படுகொலைக்கு உலகத் தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் கண்டனம்

உதயன் நாளிதழ் பணியாளர்கள் படுகொலைக்கு கனடா உலகத் தமிழ் படைப்பாளிகள் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:

யாழ்ப்பாணம் உதயன் செய்தித்தாளின் ஊழியர்கள் இருவர் இராணுவத்தோடு இணைந்து செயற்படும் துணை இராணுவக் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டிருப்பதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

உலகளாவிய ஊடக சுதந்திர நாள் கொண்டாடப்படும் போது இந்தப் படுகொலைகள் நடந்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இந்தத் தாக்குதலை நடத்திய கொலையாளிகள் கறுப்பு உடையில் ரி௫6 ரகத் துப்பாக்கிகளுடன் உதயன் அலுவலகத்துக்குள் நுழைந்து நாலாபுறமும் சுற்றி சுற்றிக் கண்டபடி சரமாரியகச் சுட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல் 15 மணித்துளிகள் நீடித்துள்ளது.

தமிழ் ஊடகவியாலளர்கள் படுகொலை செய்யப்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த காலத்திலும் தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாகத் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

பிபிசி நிருபர் விமலாராசன், மட்டக்களப்பு செய்தியாளர் நடேசன், இராணுவ ஆய்வாளர் சிவராம் போன்ற ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டவர்களில் சிலராவர்.

வழக்கம்போல் இந்தப் படுகொலையை உதட்டளவில் கண்டித்துள்ள சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜசபக்ச கொலையாளிகளைத் தேடிக் கண்டுபிடிக்க சிறப்புப் படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் கொலையாளிகள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்றும் பேசியுள்ளார்.

இப்படியான வெற்றுப் பேச்சுக்களைக் கேட்டுக் கேட்டு எமது காது புளித்துவிட்டது. கொலையாளிகள் யாரும் கைது செய்யப்பட்டதாகவோ நீதிமன்றில் நிறுத்தித் தண்டனை பெற்றுக் கொடுத்ததாகவோ வரலாறு இல்லை என்பதுதான் வரலாறாகும்.

காவல்துறை இக்கொலை தொடர்பாக நான்கு தமிழ்ப் பள்ளி மாணவர்கள் உட்பட ஆறு பேரைக் கைது செய்து நீதி மன்றத்தில் நிறுத்தியுள்ளது. இது உண்மையான கொலையாளிகளைத் தப்புவிக்க காவல்துறையால் அரங்கேற்றப்பட்ட கபட நாடகமாகும்.

இதன் மூலம் ராஜபக்ச தமிழ் மக்களை ஏமாற்ற நினைத்தால் அதில் அவர் வெற்றிகாண மாட்டார் என்பதை உறுதியாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.

இப்படியான படுகொலைகளுக்கு வட- கிழக்கில் நிலைகொண்டுள்ள சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவமே காரணமாகும். இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவே துணை இராணுவக் குழுக்களைத் தங்கள் கையில் வைத்துக் கொண்டு கொலைகளைச் செய்து வருகிறது.

மடியில் பூனையை வைத்துக் கொண்டு சகுனம் பார்ப்பவன் போல வட- கிழக்கில் சிங்கள இராணுவத்தை விட்டு வைக்கும்வரை தமிழ் மக்களது உயிருக்கு எப்போதுமே ஆபத்து இருக்கிறது என்பதே எமது நிலைப்பாடாகும்.

சிங்கள இராணுவத்தை வட-கிழக்கில் இருந்து வெளியேற்றினால் மட்டுமே தமிழ் மக்கள் நிம்மதியோடும் சுதந்திரத்தோடும் வாழமுடியும் எனக் கூறிக் கொள்ள விரும்புகிறோம்.

கொலை செய்யப்பட்ட ஊழியர்களது குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த ஒத்துணர்வைத் (அனுதாபம்) தெரியப்படுத்திக் கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.