Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கூட்டமைப்பைச் சிதைப்பவர்கள் தமிழரசுக் கட்சியினர்- சம்பந்தனுக்கு சுரேஸ் பதிலடி

Featured Replies

"கூட்டமைப்பைச் சிதைக்கும் ஆணையை தமிழர்கள் யாருக்கும் வழங்கவில்லை" என தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் வவுனியாவில் கடந்த 22.09.2012 அன்று நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் மத்தியக்குழுக் கூட்டத்தில் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கூட்டமைப்பு பதிவு செய்யப்படுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேற்கண்ட கருத்தை யாரை நோக்கி சம்பந்தன் வைக்கின்றார் என்பதை அவர் முதலில் தெளிவுபடுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:

கூட்டமைப்பைச் சிதைக்கும் நடவடிக்கையை தமிழரசுக் கட்சியும் அதனை வழிநடாத்தும் தலைவர்களும்தான் மேற்கொண்டுவருகின்றனர் என்பது இன்று உலகறிந்த உண்மை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு பதிவு செய்த கட்சியாக மாற்றிக்கொள்வதை தமிழரசுக் கட்சியே கடந்த மூன்றாண்டுகளாகத் தடைசெய்து வருகின்றது என்பது எல்லோரும் அறிந்ததே.

கூட்டமைப்பை யாரோ சிதைக்கப்போவதாக சம்பந்தன் கூறுகின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரைத் தவிர கூட்டமைப்பிற்கு என்ன வடிவம் இருக்கின்றது? அதற்கென்று ஒரு செயலாளர், பொருளாளர் என யாராவது இருக்கின்றார்களா? முடிவுகளை எடுப்பதற்கு வல்லமை கொண்ட கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளை உள்ளடக்கிய உயர்மட்டக்குழு ஏதாவது இருக்கின்றதா? கீழிருந்து மேல்வரை தலைமையுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளக்கூடிய வகையில் கிராமிய நகர மட்டக்கிளைகள் ஏதாவது இருக்கின்றதா? 2001ஆம் ஆண்டிலிருந்து இயங்கிவரும் இவ்வமைப்பிற்கு குறைந்த பட்சம் நிதிக்குழுவென்று ஏதாவது இருக்கின்றதா? இவை எதுவுமே இல்லையென்பதுதான் நிதர்சனமான உண்மை. இவையனைத்தையும் உருவாக்கத் தடையாக இருப்பது தமிழரசுக் கட்சியும் அதன் தலைமையுமே என்பது அக்கட்சியின் தலைவர் சம்பந்தன் அவர்களுக்குத் தெரியும். நிலைமை இவ்வாறிருக்க கூட்டமைப்பை வேறுயாரோ சிதைக்க முற்படுவதாக அறிக்கை வெளியிடுவதானது மக்கள் மத்தியில் பிழையான ஒரு கருத்தை உருவாக்கும் முயற்சி என்றே எண்ணத் தோன்றுகின்றது.

2001ஆம் ஆண்டு கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலம் முதல் இதனைப் பதிவு செய்து அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியாக இதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென பலபேர் கோரி வந்ததையும் சம்பந்தன் அறிவார்கள். விடுதலைப் புலிகளின் ஆதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதற்குப் பின்னர், இதன் தேவை இன்னும் பன்மடங்கு அதிகரித்துள்ளது என்பதையும் அவர் அறிவார். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஒரு வடிவத்தைக் கொடுக்க அதனைப் பதிவு செய்ய தமிழரசுக் கட்சி தயாரில்லை என்பதை அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்தபொழுது இருந்த களநிலைமை என்பது வேறு. விடுதலைப் புலிகள் இராணுவரீதியில் பலமாக இருந்தனர். பேரம் பேசும் ஆற்றல் உள்ளவர்களாக இருந்தார்கள். புலிகளுடனேயே பேச்சுவார்த்தை நடாத்தப்பட வேண்டும் என்பதை கூட்டமைப்பும் தெளிவாகக் கூறியிருந்தது. ஆனால் 2009ஆம் ஆண்டின் பின்னர் உள்ள கள நிலைமை என்பது வித்தியாசமானது. தமிழ் மக்களின் ஒற்றுமை என்பதைத் தவிர, வேறுபலம் எதுவும் எமக்கிருக்கவில்லை. எனவே, அந்த ஒற்றுமை என்ற பலத்தைத் தக்கவைத்துக்கொள்ள நாம் அனைவரும் விரும்பினோம். ஆனால் தமிழரசுக் கட்சி மாத்திரம் தனிவழி செல்ல விரும்பியது. இன்றும் தனிவழிதான் செல்கின்றார்கள்.

விடுதலைப் பலிகள் ஆயுதரீதியில் மௌனிக்கப்பட்ட பின்னர், தேர்தல் தேவைகளுக்காகவும், பேச்சுவார்த்தையின் தேவைக்காகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயர் பயன்படுத்தப்படுகின்றதே தவிர, நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல், கூட்டமைப்பிற்கு ஒரு சரியான யாப்போ, அன்றி அதற்கான ஒருவடிவமோ இதுவரை இல்லை. அது மட்டுமன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான ஒரு பொதுச்சின்னமோ கொடியோ எதுவும் கிடையாது. மாறாக, தேர்தல் காலத்தில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னம் பாவிக்கப்பட வேண்டுமென அக்கட்சியின் தலைமை நிர்ப்பந்திக்கின்றது.

அண்மைய கிழக்கு மாகாணத் தேர்தலுக்கு முன்னர் கட்சிகள், இயக்கங்கள் என்ற அடிப்படையை விட்டு, சரியான காத்திரமான வேட்பாளர்களை நியமிக்க வேண்டுமென்றும் அதற்காக ஒரு வேட்பாளர் தெரிவுக்குழு அமைக்கப்பட வேண்டுமென்றும் தமிழரசுக் கட்சி தவிர்ந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் கோரியிருந்தன. ஆனால் சம்பந்தனாலும் மாவை சேனாதிராஜாவினாலும் இக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

13 வேட்பாளர்களை நியமிக்க வேண்டிய திருமலை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சிக்கு 10 இடங்களும், ஏனைய நான்கு கட்சிகளுக்கு 3 இடங்களும் கொடுக்கப்பட்டது. 14 வேட்பாளர்களை நியமிக்க வேண்டிய மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சிக்கு 9 இடங்களும் ஏனைய நான்கு கட்சிகளுக்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டது. அதேபோன்றுதான் அம்பாறை மாவட்டத்திலும் நடைபெற்றது. இவ்வாறான ஒரு சர்வாதிகார தேர்தல் கூட்டைத்தான் சம்பந்தன் விரும்புகிறார்போல் தெரிகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படாமல் இருப்பதன் மூலம் சம்பந்தன் பேசுவதையும் செய்வதையும் ஏனையோர் கேட்டு ஏற்றுக்கொள்ள வேண்டுமெனத் தமிழரசுக் கட்சி விரும்புகின்றது.

சம்பந்தரைப் பொறுத்தவரையில், அரசியல் முடிவுகளை எடுக்கும்பொழுது ஏனைய கட்சித் தலைவர்களுடன் கலந்து பேசுவதென்ற நிலை அவரிடம் இருந்ததில்லை. ஜெனிவா மாநாட்டிற்கு முன்பாக நாங்கள் ஜெனிவாவிற்குச் சென்று தமிழ் மக்களின் பிரச்சினையை விளக்குவோம் என்று உலகம் முழுவதிற்கும் அறிவிப்பார். ஆனால் பின்பு தான் தனித்துவமாக ஒரு முடிவெடுத்து ஜெனிவாவிற்குப் போவதில்லை எனவும் அறிவிப்பார். அதனை நியாயப்படுத்த உப்புச் சப்பற்ற காரணங்களையும் புதிதுபுதிதாகக் கண்டுபிடிப்பார்.

யாழ்ப்பாணத்தில் இலங்கையின் தேசியக்கொடியான சிங்கக்கொடியை உயர்த்திப்பிடிப்பார். ஆனால், இது தவறென்று முன்னர் தமிழரசுக் கட்சி கூறியதென நாம் எடுத்துச் சொன்னால் ஆண்டாண்டு காலமாக இதனை நான் ஏற்றிவருகின்றேன் என்று அதனையும் நியாயப்படுத்துவார். அதுமட்டுமன்றி, நான் சரியென்ற அடிப்படையிலேயே அந்தக் கொடியை உயர்த்திப்பிடித்தேன் இதற்காக யாரும் மன்னிப்புக்கோரத் தேவையில்லை என்றும் அழுத்தம் திருத்தமாகக் கூறுவார். பல சமயங்களில் இலங்கை ஜனாதிபதி இந்தியாவிற்குப் போகுமுன்பும், ஜெனிவா மகாநாட்டிற்கு முன்பாகவும் சம்பந்தன் அவர்களுடன் பேச அழைப்பு விடுத்தார். ஜனாதிபதி வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு முன்பாக தனக்கு வரும் அழுத்தங்களைக் குறைத்துக்கொள்வதற்காகவே இச்சந்திப்புக்களை ஏற்பாடு செய்து வந்தார். சம்பந்தன் அவர்களும் இச்சந்திப்புக்களின் மூலம் தமிழ் மக்களுக்கு எதுவித நன்மையும் கிட்டப்போவதில்லை என்பதைத் தெரிந்துகொண்டும் இச்சந்திப்புக்களின் மூலம் இலங்கை அரசாங்கம் தனக்கு வரும் வெளிநாட்டு அழுத்தங்களைக் குறைக்கவே முயற்சிக்கின்றது என்பதைத் தெரிந்துகொண்டும் சம்பந்தன் இப்பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டார். இந்தத் தொடர் சந்திப்புக்கள் கூட தனிப்பட்ட சந்திப்புக்களாகவும் கூட்டமைப்புடன் கலந்துரையாடாத சந்திப்புக்களாகவுமே இருந்து வந்துள்ளன.

இவ்வாறான நிலையில் கூட்டமைப்பிற்கு மக்கள் கொடுத்த ஆணையை யார் சிதைத்து வருகின்றார்கள்? சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக் கட்சியா? அல்லது கூட்டமைப்பில் உள்ள வேறு யாருமா? என்பதனை மக்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகின்றோம்;.

கூட்டமைப்பைப் பற்றிப் பேசும் சம்பந்தன் கூட்டமைப்பு வலிமை பெற வேண்டுமென்றும், கொள்கைரீதியாக ஒன்றுபடக்கூடிய ஏனைய கட்சிகளும் கூட்டமைபபுடன் வந்து இணையலாம் என்றும் அதுதொடர்பில் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறுகின்றார். அதேசமயம் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தமது அடையாளங்களைப் பேணலாம் என்றும் ஆலோசனை கூறுகின்றார்.

மேற்கண்ட இரண்டு விடயங்களுமே ஒன்றுக்கொன்று முரணான விடயங்களாகும். கூட்டமைப்பு வலிமைபெற வேண்டுமானால் முதலாவதாக அது ஒழுங்கமைக்கப்பட்ட சகல அமைப்பு வடிவங்களையும்கொண்ட கட்சியாக மாற்றம் பெறவேண்டும். தமிழ் மக்களின் விடுதலையை வென்றெடுக்கும் பாரிய பொறுப்பை தலையில் சுமக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கேற்ப தன்னை வடிவமைத்துக்கொள்ளாவிட்டால் அதனால் விடுதலை இலக்கை அடைய முடியாமல் போய்விடும். கூட்டமைப்பு என்னும் கட்சிக்குள் கூட்டு முடிவுகள் எட்டப்பட வேண்டும். கட்சிக்குள் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். அதற்கேற்ற பொறிமுறை கட்சியிடம் இருக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைபப்pன் இலக்கினை அடைவதற்கான நிகழ்ச்சி நிரலும் அதற்கான வேலைத்திட்டமும் இருக்க வேண்டும். வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான செயற்றிட்டம் இருக்க வேண்டும். இது எதுவுமே இல்லாமல் வலிமையான தமிழத் தேசியக் கூட்டமைப்பைப் பற்றிப் பேசுவது பொதுமக்களை ஏமாற்ற உதவுமே தவிர, ஆக்கபூர்வமான செய்தியாக இருக்காது.

அதேசமயம் ஒவ்வொரு கட்சியும் தத்தமது அடையாளங்களைப் பேணவேண்டுமெனில், ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக தமக்கான அலுவலகங்கள், தமக்கான மகாநாடுகள், தமக்கான அமைப்புக்கள் எனச் செயற்பட வேண்டும். ஒவ்வொரு கட்சியும் கிராம மட்டங்களில் தமக்கான கட்சிக்கிளைகளை நிறுவ ஆரம்பித்தால் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமை உருவாகுமா அல்லது இடைவெளி அதிகரிக்குமா? வயதில் மிகவும் மூத்த அரசியல்வாதி தமிழ் மக்களின் தலைவர் என்று சொல்லக்கூடியவர் எங்களுக்குத் தரும் ஆலோசனை இதுதான். தனித்துச் செயற்படுங்கள். உங்களது அடையாளங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள். அப்பொழுதுதான் வலுவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க முடியும். இவற்றையெல்லாம் நாம் யாரிடம் சொல்லி அழுவது? கட்சிகளென்று வந்தாலே ஒருவர்மீது ஒருவர் சேறுபூசுவதுதான் இயற்கை.

ஐந்து கட்சிகளும் தனித்தனியாக இயங்க ஆரம்பித்தால் ஒருவர்மீது ஒருவர் சேறடிக்க முயற்சிப்பார்களா அல்லது ஒற்றுமையுடன் செயற்படுவார்களா? சம்பந்தன் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கட்சிகள் தனித்தனியாக இயங்கலாம் என்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதற்காக? வெறுமனே வாக்கு வங்கியை அதிகரிப்பதற்காகவா? எம்மைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெறுமனே தேர்தல் கூட்டல்ல. அது எமது மக்களின் விடுதலைக்கான ஒரு ஸ்தாபனம் என்றே நாமும் தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பார்க்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்காகக் கொடுக்கப்பட்ட விலை கணக்கிட முடியாதது. அதற்காகப் பல தியாகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியொரு தமிழரசுக்கட்சியின் நலனுக்காக அவைகளைப் புறந்தள்ளிவிட முடியாது. தமிழரசுக் கட்சியையோ, அல்லது வேறு எந்தக் கட்சிகளையுமோ அழித்துவிடும்படி நாம் கூறவில்லை. அவர்களது கட்சிகளை ஒருபுறம் வைத்துவிட்டு, இன்றைய தேவையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்தும்படிக் கூறுகின்றோம்.

தீர்வு அண்மித்துவரும்பொழுது, கூட்டமைப்பைச் சிதைக்க இடமளித்தால் அதனால் அரசே இலாபம்பெறும் என்றும் அவர் கூறுகின்றார். திரு.சம்பந்தன் அவர்களின் கூற்று நூறுவீதம் உண்மையானது. கிழக்கு மாகாணத் தேர்தலில் தமிழரசுக் கட்சியால் ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மிகக் கேவலமாக நடத்தப்பட்டபொழுதும், ஒற்றுமை கருதியும் தேர்தலின் வெற்றிகருதியும் ஒன்றாகச் செயற்பட்டோம். அவர்கள் தமிழரசுக் கட்சிக்காகப் பிரச்சாரம் செய்தபொழுது நாம் கூட்டமைப்பிற்காகப் பிரச்சாரம் செய்தோம். மட்டக்களப்பில் எமக்கு ஒதுக்கப்பட்ட ஐந்து ஆசனங்களில் நான்கைக் கைப்பற்றியதன் மூலம் 80வீத ஆசனங்களைப் பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை நிலைநாட்டினோம். திருமலை மாவட்ட்த்தில் வெற்றியீட்டியவர்களும் தமிழரசுக் கட்சியைச் சார்ந்தவர்கள் அல்லர். அவர்கள் மூவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பென்றே வெற்றியடைந்தார்கள். இவ்வாறே அம்பாறை மாவட்டத்திலும் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே வாக்களித்து வெற்றிபெற வைத்துள்ளனர். எனவே மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தார்களே தவிர, தமிழரசுக்கட்சிக்கல்ல என்பதை இனியாவது புரிந்துகொள்ளுங்கள். கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் கௌரவமாக நடாத்தப் பழகுங்கள்.

நாம் தமிழ் மக்களின் சுயமரியாதையை நிலைநாட்டவே போராட வந்தோம். அது எமக்குள்ளேயே இல்லாமல் போவது வருத்தத்திற்குரியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட வேண்டும் என்பதை இனியாவது புரிந்துகொள்ளுங்கள். தேர்தலில் வெல்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வென்றபின் தமிழரசுக் கட்சி என்னும் போக்கினைக் கைவிடுங்கள். இவற்றை நீங்கள் செய்தால் கூட்டமைப்பும் சிதைந்துபோகாது, அரசும் இலாபம் ஈட்ட முடியாது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சிதைப்பதில் தமிழரசுக் கட்சியினராகிய நீங்கள் முன்னணிப் பாத்திரத்தை வகிக்கின்றீர்கள். உங்கள் நடவடிக்கையின் மூலம் ஏனைய கட்சிகளை ஓரம் கட்ட முயற்சிக்கின்றீர்கள். இன்னும் சொல்லப்போனால் ஏனைய கட்சிகளுக்குள்ளும் பிளவை உருவாக்க முயற்சிக்கின்றீர்கள். இவை அனைத்திற்கும் நீங்கள் பொறுப்பாக இருந்துகொண்டு கட்சியை வேறு யாரோ சிதைக்க முயற்சிக்கிறார்கள் என்று சாரப்பட உங்கள் கட்சிக் கூட்டத்தில் பேசுவது அவர்களை ஏமாற்றுவதற்கே தவிர, வேறல்ல.

உங்கள்;உட்கட்சிப் பேச்சானது சகல ஊடகங்களிலும் வெளிவந்ததால், மக்கள் உண்மையை அறிய வேண்டி ஒருசில விடயங்களை இங்கு நாம் சுட்டிக்காட்டியுள்ளோம்.

கூட்டமைப்பை வலுவாகவும் இறுக்கமாகவும் கொண்டுசெல்ல இன்னமும் காலம் கடந்துவிடவில்லை. அதற்கு வலுவான தலைமைத்துவம் தேவை. தமது கட்சியின் நலன்களை முன்னிலைப்படுத்துபவரால் அதனைச் சாதிக்க முடியாது. வவுனியாவில் நடைபெற்ற உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பிலும், அண்மையில் நடைபெற்ற கிழக்குமாகாணசபைத் தேர்தல் பிரச்சார சமயங்களில் பொதுமக்களாலும், புலம்பெயர் சமூகத்தினராலும் கூட்டமைப்பை ஏன் பதிவுசெய்யவில்லை என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. ஆகவே இனியாவது காலம் தாழ்த்தாமல் கூட்டமைப்பைப் பதிவுசெய்வதற்கு ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகின்றோம்.

தமிழ் மக்கள் ஆணை தந்திருப்பது அரசியல் ரீதியாக குறைந்தபட்சம் ஒரு சமஷ்டி அரசை உருவாக்கவும், அதனை நடைமுறைப்படுத்த ஓர் வலுவான கூட்டமைப்பை உருவாக்குவதற்குமே. 2010ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இது தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே தமிழரசுக் கட்சியானது கட்சி அரசியலைப் புறந்தள்ளி மக்களின் நலனை முன்னிறுத்தி கூட்டமைப்பு சிதைந்துபோகுமளவிற்கு நெருக்கடிகளை உருவாக்காமல் புரிந்துணர்வுடனும் யதார்த்தத்தை விளங்கிக்கொண்டும் செயற்படுமாறும் வேண்டுகின்றோம்" என்று தெரிவித்துள்ளார்.

http://tamilleader.c...5-11-17-55.html

Edited by ஊர்பூராயம்

தமிழரசுக் கட்சியின் ஆதரவோடு அடுத்த ஆண்டு ஐக்கிய சுதந்திர முன்னணி வட மாகாணத்தில் ஆட்சி அமைக்கும். கூட்டமைப்பு எதிர்க்கட்சி வரிசையில் அமரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சிலரின் ஆசை.

சேர்ப்பதிலும் சேர்வதிலும் ஆர்வமில்லை,பிரிவதிலும் பிரிப்பதிலும் குறியாக இருக்கிறார்கள்.

ஆசைப்படுபவர்களும் இருக்கிறார்கள். அச்சப்படுபவர்களும் இருக்கிறார்கள். எனக்கென்ன என்பவர்களும் இருக்கிறார்கள்.

ஆசைப்படுபவர்களும் இருக்கிறார்கள். அச்சப்படுபவர்களும் இருக்கிறார்கள். எனக்கென்ன என்பவர்களும் இருக்கிறார்கள்.

எல்லாம் 'அவர்கள்' பார்த்துக் கொள்வார்கள் என்ற மாயையில் வளர்ந்தவர்கள்.

அது சிலரின் ஆசை.

மற்றவர்கள் ஆசையை விடுங்கோ அண்ணை உங்க ஆசை என்ன?

இத்தனை விரிவாக சுரேசிடம் இருந்து ஒரு அறிக்கை வந்திருப்பதை பாரதூரமான ஒன்றாகவே கருதுகிறேன். உள்ளே பேச வேண்டியவைகள் வெளியில் பேசப்படுகின்றன.

2009இலேயே இவர்கள் உடைந்து விடுவார்கள் என்றுதான் எதிர்பார்த்தேன். ஆச்சரியப்படும் வகையில் இவர்கள் இத்தனை காலம் ஒன்றாக இழுத்தக் கொண்டு வந்து விட்டார்கள்.

இதற்குக் காரணம் சம்பந்தன் போன்றவர்கள் அல்ல. சர்வதேச ஆலோசனைகளும் முன்னைநாள் போராட்ட இயக்கங்களின் பெருந்தன்மையான விட்டுக்கொடுப்புக்களுமே.

கிழக்கில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களின் தோல்வியும், மற்றைய இயக்க வேட்பாளர்களின் வெற்றியும் இந்த விட்டுக் கொடுகப்புக்களில் மாற்றத்தைக கொண்டு வரலாம்.

இதை சிங்களத் தரப்பு தனக்கு ஏற்றபடி பயன்படுத்திக் கொள்ளும்.

கூட்டமைப்பு இப்படி சிதைந்து போனால், அது தமிழர் தரப்புக்கு நல்லது இல்லை.

இப்படி பந்தி பந்தியாக அறிக்கை விட சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு நேரம் இருக்கோ? இல்லை பாதி அவர் சொன்னது மீது ஈழதேசம் சுயமாக போட்டதோ?

  • கருத்துக்கள உறவுகள்

பலபேர் கூட்டமைப்பில் சேறடிக்க காத்திருக்கிறார்கள் என்பது உண்மை. கூட்டமைப்பு புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பது கட்சிக்கும் மக்களுக்கும் நல்லது.நீண்ட காலமாக கட்சிக்குள் சிலர் பதவி நாற்காலிகளை கட்டிப்பிடித்த வண்ணம் இருப்பதால் குறிப்பாக சம்பந்தரும் மாவையும், சர்வாதிகாரம் தான் தலை தூக்கும்.

சுரேஸ் உட்கட்சிக்குள் பேசி முடிக்க வேண்டியதை வெளியில் பரகசியப்படுத்துவது எதிரிகளுக்கு தீனி போடுவது போலாகி விடும்.

சுரேஷ் புலம் பெயர் மக்களாலும், இளைஞர்களாலும் மிகவும் விரும்பபடும் தமிழ் தலைவர் ஒருவர். கஜேந்திரன், கஜேந்திரகுமார், பத்மினியின் பாதையில் போய்விடக்கூடாது. கட்சி பிரச்சனைகள் உள்ளே பேசப்படவேண்டியவை. சம்பந்தரின் பேச்சு எவரையும் சுட்டவில்லை.

1 கூட்டமைப்பு என்ற பெயர் தமிழீழத்தில் காட்டும் உறுதியை வெளியே காட்டுமா?

2.தமிழீழ மக்கள் ஆணை பெயரளவில் கூட்டணியிடம் இருக்கிறது. சம்பந்தர் அந்த பெயரை எப்படி பெற்றுக்கொள்வது?

3.தமிழரசுக்கட்சி 100% சம்பந்தரின் கையில் இருக்கு. அவர் அதை முன்னேற்ற முயல்வது தனக்கு 100% அதிகாரம் தேவைப்படும் பொழுதே. வெளிநாட்டு பேச்சுவார்த்தைகளில் தான் தமிழ் மக்களின் பிரதிநிதி என்று சம்பந்தர் அடித்து சொல்ல வேண்டுமாயின் தீர்வு கிடைக்கும் வரை அவருக்கு அந்த பெயரும் வேண்டும். சுரேஷ் சுமந்திரனின் கோபத்தை சம்பந்தரிடம் காட்டாமல் இதில் சற்று நசிந்து கொடுக்க வேண்டும்.

Edited by மல்லையூரான்

முன்னாள் இயக்க பெயர்கள் அல்லது கொள்கைகளை சொன்னால் ஒரு ஆணி கூட புடுங்க முடியாது . தேர்தலில் ஒரு ஆசனம் கிடைப்பதே அருமையா இருக்கும். ஆனால் சம்பந்தன் அவர்கள் தமிழ் கூட்டமைப்பை பதிவு செய்து அந்த பெயரை தமிழர் மத்தியில் ஒரே கட்சியாக வைத்திருக்க முயல வேண்டும். இதில் முன்னைய கட்சிப் பெயர்களோ இல்லை என்றால் இயக்க பெயர்களோ முக்கியத்துவம் பெறுவதை தடுத்து ஒரு கூட்டு தலைமை மத்திய குழு உருவாக்கம். ஆலோசனை மட்டம் என்பன செயல் படுத்த வேண்டும். அதை விடுத்து அதற்குள் தனித்துவம் பேசினால் ரொம்ப கஷ்டம். தனிக் கூட்டமைப்பின் பெயரே நிலை நாட்டப் படவேண்டும் ஏனைய பெயர்கள் மறையப் படவேண்டும் மறக்கப் படவேண்டும். இதுக்கு சம்பந்தன் அவர்கள் பிழையான நபர்களின் ஆலோசனையை கேட்காமல் தானே நன்றாக யோசித்து செயல் படவேண்டும். தமிழ் கூட்டமைப்பே தமிழரின் கட்சி என்ற எழுச்சியை உருவாக்க வேண்டும். தமிழ்க்காங்கிரஸ் கட்சியை தம்முடன் இணைக்க முன் வர வேண்டும். சுரேஷ் அவர்கள் சொல்வது போன்று தனி தனி என்று ஏனைய அமைப்புகளை வளர விட்டால் ஒற்றுமை கலையுமே தவிர வளர்ச்சிக்கு இடமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்க வன்னிப் புலிகளைச் சாட்டி.. முஸ்லீமட்ட.. சிங்களத்தட்டக் குடுத்தாச்சு..! எனி வடக்கை ஆளாளுக்கு மோதி அதனையும் முஸ்லீமிடமே கொடுத்திட்டீங்கன்னா.. நல்லா இருக்கும்.

ஏலவே யாழ் நகர வியாபாரத்தில் பெரும் பகுதி முஸ்லீம்களிடம் போய்விட்டது..! மன்னார் அப்படி. வவுனியா அப்படி..??! மிச்சம் முல்லையும் கிளிநொச்சியும். அதுவும் விரைந்து போயிடும்..! இதற்கு மேலதிகமா சிங்களக் குடியேற்றங்கள் துரிதமா நடக்குது..!

அதுக்குப் பிறகு கூட்டமைப்பும் தேவையில்ல.. தமிழரசுக் கட்சிக்கும் இடமிருக்காது..!

நாங்களோ வெளிநாடுகளில்.. நாலு கவுன்சிலர்.. ஒரு பார்லிமெண்ட் மென்பர் என்று வாங்கி வாய் கிழிய கத்திக்கிட்டே அடிமை வாழ்வில்.. ஜனநாயகம் அனுபவிச்சுக்கிட்டு.. இருப்பம்..! இதை விட எங்களால எதுவும் முடியாது..! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

[size=4]கடந்த வெள்ளி இளையோரின் அமைப்பிற்கு சென்றிருந்தேன். தாயக சிந்தனையுடன் பல இளையோர் பங்குபற்றினர். பல்கலைக்கழக இளைவர்களுக்கும் பாராட்டுக்கள்.[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.