Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புத்தனாவது சுலபம் - எஸ்.ராமகிருஷ்ணன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]புத்தனாவது சுலபம்-எஸ்.ராமகிருஷ்ணன்[/size]

அருண் இரவிலும் வீட்டிற்கு வரவில்லை.

பின்னிரவில் பாத்ரூம் போவதற்காக எழுந்து வந்தபோது கூட வெளியே பார்த்தேன் அவனது பைக்கைக் காணவில்லை. எங்கே போயிருப்பான்.

மனைவியிடம் கேட்கலாமா என்று யோசித்தேன். நிச்சயம் அவளிடமும் சொல்லிக் கொண்டு போயிருக்க மாட்டான். கேட்டால் அவளாகவே அருண் எங்கே போயிருக்கக் கூடும் என்று ஒரு காரணத்தைச் சொல்வாள். அது உண்மையில்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும், பிறகு எதற்குக் கேட்டுக் கொள்ள வேண்டும்.

பலநாட்கள் அருண் பின்னிரவில் தான் வீடு திரும்பிவருகிறான். இப்போது அவனுக்கு இருபத்திநாலு வயதாகிறது. இன்ஜினியரிங் படிப்பை கடைசிவருசத்தில் படிக்காமல் விட்டுவிட்டான். இனிமேல் என்ன செய்யப்போகிறான் என்று கேட்டபோது பாக்கலாம் என்று பதில் சொன்னான்.

பாக்கலாம் என்றால் என்ன அர்த்தம் என்று கோபமாகக் கேட்டேன்.

பதில் பேசாமல் வெறித்த கண்களுடன் உதட்டைக் கடித்துக் கொண்டே தன் அறைக்குள் போய்விட்டான்.

என்ன பதில் இது.

பாக்கலாம் என்றால் அதை எப்படி எடுத்துக் கொள்வது.

கடந்த ஐந்து வருசமாகவே அருண் வீட்டில் பேசுவதைக் குறைத்துக் கொண்டே வருவதை நான் அறிந்திருக்கிறேன். சில நாட்கள் ஒருவார்த்தை கூடப் பேசியிருக்க மாட்டான். அப்படி என்ன வீட்டின் மீது வெறுப்பு.

எனக்கு அருண் மீதான கோபத்தை விடவும் அவன் பைக் மீது தான் அதிக கோபமிருக்கிறது. அது தான் அவனது சகல காரியங்களுக்கும் முக்கியத் துணை. பைக் ஒட்டிப்போக வேண்டும் என்பதற்காகத் தானோ என்னவோ, தாம்பரத்தை அடுத்துள்ள பொறியியல் கல்லூரியில் படிக்க சேர்ந்து கொண்டான்.

சிலநாட்கள் என் அலுவலகம் செல்லும் நகரப்பேருந்தில் இருந்தபடியே அருண் பைக்கில் செல்வதைக் கண்டிருக்கிறேன். அப்போது அவன் என் பையனைப் போலவே இருப்பதில்லை. அவன் அலட்சியமாக பைக்கை ஒட்டும் விதமும். தாடி வளர்த்த அவனது முகமும் காண்கையில் எனக்கு ஆத்திர ஆத்திரமாக இருக்கும்.

அருண் சிகரெட் பிடிக்கிறான். அருண் பியர் குடிக்கிறான். அருண் கடன்வாங்குகிறான். அருண் யாருடனோ சண்டையிட்டிருக்கிறான். அருண் அடுத்தவர் சட்டையைப் போட்டுக் கொண்டிருக்கிறான் . உறவினர் வீட்டு திருமணத்திற்கு அருண் வருவதில்லை. அருண் ஒரு பெண் பின்னால் சுற்றுகிறான். அருண் காதில் கடுக்கன் போட்டிருக்கிறான். கையில் பச்சை குத்தியிருக்கிறான். தலைமயிரை நிறம் மாற்றிக் கொண்டுவிட்டான். இப்படி அவனைப் பற்றி புகார் சொல்ல என்னிடம் நூறு விசயங்கள் இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் அவனது ஒரே பதில் மௌனம் மட்டுமே.

என் வீட்டில் நான் பார்க்கவே வளர்ந்து, நான் பார்க்காத ஆளாக ஆகிக் கொண்டிருக்கிறான் அருண்.

அது தான் உண்மை.

அவனது பதினாறுவயது வரை அருணிற்கு என்ன பிடிக்கும். என்ன சாப்பிடுவான். எதற்குப் பயப்படுவான் என்று நன்றாகத் தெரியும். ஆனால் பதினேழில் இருந்து இன்றுவரை அவனைப்பற்றி கேள்விப்படும் ஒவ்வொன்றும் எனக்கு வியப்பாகவே இருக்கிறது. சிலவேளைகளில் பயமாகவும் இருக்கிறது.

நான் அனுமதிக்ககூடாது என்று தடுத்துவைத்திருந்த அத்தனையும் என் மகனுக்குப் புசிக்கத் தந்து உலகம் என்னை பரிகாசபபடுத்துகிறதோ.

சில வேளைகளில் குளித்துவிட்டு கண்ணாடி முன் நின்றபடியே நீண்ட நேரம் அருண் எதற்காக வெறித்து தன்னைத் தானே பார்த்துக் கொண்டிருக்கிறான். அந்தத் தருணங்களில் யாரோ அந்நியன் நம் வீட்டிற்குள் வந்துவிட்டது போல எனக்கு மட்டும் தான் தோன்றுகிறதா. சாப்பாட்டுத் தட்டின் முன்னால் உட்கார்ந்த வேகத்தில் பாதி இட்லியைப் பிய்த்து விழுங்கிவிட்டு எழுந்து போய்விடும் அவனது அவசரத்தின் பின்னால் என்னதானிருக்கிறது.

ஒருநாள்மாலையில் வீட்டின் முன்னால் உள்ள இரும்புக்கதவைப் பிடித்துக் கொண்டு இரண்டுமணிநேரம் யாருடனோ போனில் பேசிக் கொண்டேயிருப்பதை பார்த்தேன். எதற்காக இப்படி நின்று கொண்டே போனில் பேசுகிறான். இவன் மட்டுமில்லை. இவன் வயது பையன்கள் ஏன் நின்று கொண்டேயிருக்கிறார்கள். உட்கார்ந்து பேசவேண்டும் என்பது கூடவா தோன்றாது.

அருண் போனில் பேசும் சப்தம் மற்றவருக்குக் கேட்காது. வெறும் தலையசைப்பு. முணங்கல். ஒன்றிரண்டு ஆங்கிலச்சொற்கள் அவ்வளவு தான். எதற்காக போனில் ஆங்கிலத்திலே பேசிக் கொள்கிறார்கள். ரகசியம் பேசத் தமிழ் ஏற்ற மொழியில்லையா?

சில நேரம் இவ்வளவு நேரமாக யாருடன் பேசுகிறான் என்று கேட்கத் தோன்றும். இன்னொரு பக்கம், யாரோ ஒருவரோடு போனில் இரண்டுமணி நேரம் பேசமுடிகின்ற உன்னால் எங்களோடு ஏன் பத்து வார்த்தைகள் பேசமுடியவில்லை என்று ஆதங்கமாகவும் இருக்கும்.

உண்மையில் இந்த ஆதங்கங்கள், ஏமாற்றங்களை எங்களுக்கு உண்டாக்கிப் பார்த்து அருண் ரசிக்கிறான் என்று கூட நினைக்கிறேன்.

பள்ளிவயதில் அருணைப்பற்றி எப்போதுமே அவனது அம்மா கவலைப்பட்டுக் கொண்டேயிருப்பாள். நான் அதிகம் கவலைப்பட்டதேயில்லை. ஆனால் அவன் படிப்பை முடித்த நாளில் இருந்து நான் கவலைப்பட்டுக் கொண்டேயிருக்கிறேன். அவனது அம்மா கவலைப்படுவதை நிறுத்திவிட்டாள்.

மிகுந்த ஸ்நேக பாவத்துடன், அவனது தரப்பு நியாயங்களுக்காக என்னோடு சண்டையிடுகின்றவளாக மாறிப்போய்விட்டாள். இது எல்லாம் எப்படி நடக்கிறது, இல்லை இது ஒரு நாடகமா.

ஒருவேளை நான் தான் தவறு செய்கிறேனா என்று எனக்குச் சந்தேகமாகவும் இருக்கிறது.

முந்தைய வருசங்களில் நான் அருணோடு மிகவும் ஸ்நேகமாக இருந்திருக்கிறேன். ஒன்றாக நாங்கள் புட்பால் ஆடியிருக்கிறோம். ஒன்றாகச் சினிமாவிற்குப் போயிருக்கிறோம். ஒன்றாக ஒரே படுக்கையில் கதைபேசி சிரித்து உறங்கியிருக்கிறோம்.

என் உதிரம் தானே அவனது உடல், பிறகு எப்படி இந்த இடைவெளி உருவானது.

வயதால் இரண்டு பேரின் உறவைத் துண்டித்துவிட முடியுமா என்ன?

என்ன காரணமாக இருக்கும் என்று ஏதேதோ யோசித்திருக்கிறேன்.

திடீரென ஒரு நாள் ஒரு உண்மை புரிந்தது.

உலகில் உள்ள எல்லா இருபது வயது பையன்களுக்கும் வரும் வியாதி தான் அருணையும் பிடித்திருக்கிறது. அதை நான் ஒருவன் சரிசெய்துவிட முடியாது .

அதை வியாதி என்று சொல்வது அவர்களுக்குக் கோபமூட்டும்.

அவர்கள் அதை ஒரு உண்மை. ஒரு விடுதலை. ஒரு ஆவேசம் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

ஏதோவொரு எழவு அவர்களைப் பிடித்து ஆட்டுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இந்தப் பிரச்சனையை பற்றி என்னைப்போலவே உடன் வேலை செய்யும் பிற ஊழியர்களும் கவலைபடுகிறார்கள். சந்தானமூர்த்தி தனது கல்லூரியில் படிக்கும் மகன் கழிப்பறைக்குள் போனால் வெளியே வர இரண்டு மணி நேரமாகிறது. என்ன தான் செய்வான் எனத் தெரியவில்லை என்று புலம்புவதைக் கேட்கையில் எனக்கு உண்மையில் சற்று ஆறுதலாகவே இருக்கிறது, என்னைப் போலவே பல தகப்பன்களும் இதே மனக்குறையிலே தானிருக்கிறார்கள்.

நான் மற்றவர்களைப் போல எனது மனக்கவலையை அதிகம் வெளியே காட்டிக் கொள்கின்றவனில்லை. நானும் பிகாம் படித்திருக்கிறேன். கூட்டுறவு பயிற்சிக் கல்லூரியில் சிறப்பு பயிற்சி முடித்து பால்வளத்துறையில் வேலை செய்கிறேன். பதவி உயர்விற்காக தபாலில் தமிழ் எம்ஏ கூடப் படித்திருக்கிறேன். கடந்தபத்து வருசமாகவே வள்ளலாரின் திருச்சபையில் சேர்ந்து தானதரும காரியங்களுக்கு உதவி செய்கிறேன். இந்த நற்குணங்களில் ஒன்றைக் கூட ஏன் அருண் கைக்கொள்ளவேயில்லை. ஒருவேளை இவை எல்லாம் அர்த்தமற்றவை தானா. நான் தான் அதைப் புரிந்து கொள்ளாமல் சுமந்து திரிகின்றேனா

நான் படிக்கின்ற காலத்தில் ஒன்றிரண்டு பேர் குடிப்பதும் ஊர்சுற்றுவதும் பெண்களை தேடிப்போவதுமாக இருந்தார்கள் என்பது உண்மை தான். அன்றைக்கு ஊருக்குப் பத்து பேர் அப்படியிருந்தார்கள். இன்று ஊரில் பத்து இளவட்டங்கள் ஒழுக்கமாக இருந்தால் அபூர்வம். இதெல்லாம் எனக்கு தோன்றுகின்றன புகார்களா அல்லது இது தான் உண்மையா.

இது போன்ற விசயங்களைத் தொடர்ச்சியாக யோசிக்க ஆரம்பித்தால் எனக்கு ரத்தக்கொதிப்பு வந்துவிடுகிறது. உண்மையில் இது என்னுடைய பிரச்சனை மட்டுமில்லை. ஆனால் என் பிரச்சனையாகவும் இருக்கிறது.

நான் படித்து முடித்தவுடனே திருமணம் செய்து கொண்டுவிட்டேன். உண்மையை சொல்வதாக இருந்தால் எனது இருபத்திநாலாவது வயதில் அருண் பிறந்து ஒன்றரை வயதாகி விட்டான். ஆனால் அருண் இன்னமும் வேலைக்கே போகவில்லை. ஏன் இவ்வளவு தாமதப்படுத்துகிறான். ஏன் இவ்வளவு மெதுவாக, வாழ்க்கையின் மீது பற்றே இல்லாமல் நடந்து கொள்கிறான். இது தான் இன்றைய இயல்பா.

ஒருவேளை நான் தான் அவர்களைப் புரிந்து கொள்ள முடியாமல் வண்டிவண்டியாக புகார்களோடு அலைந்து கொண்டேயிருக்கிறேனா. அப்படியே இருந்தாலும் என் புகார்களில் உள்ள நியாயம் ஏன் மறுக்கபடுகிறது

இந்த இரவில் கூட படுக்கையில் படுத்தபடியே அருண் எங்கே போயிருக்ககூடும் என்று நானாக எதை எதையோ யூகித்துக் கொண்டிருக்கிறேன். அது என்னை உறங்கவிடாமல் செய்கிறது. கற்பனையான பயத்தை உருவாக்குகிறது. அதை ஏன் அருண் புரிந்து கொள்ள மறுக்கிறான்.

இந்த நேரம் அருண் என்ன செய்து கொண்டிருப்பான். நிச்சயம் என்னைப்பற்றிய நினைவே இன்றி எங்காவது உறங்கிக் கொண்டிருப்பான். யாரையும் பற்றி நினைக்காமல் எப்படி ஒரு ஆளால் வாழ முடிகிறது. அதுவும் ஒரே வீட்டிற்குள் இருந்து கொண்டு மற்றவர்களைப் பற்றி எப்படி கவலைப்படாமல் இருக்க முடிகிறது.

அருண் எங்களோடு தானிருக்கிறான். ஆனால் எங்கள் வீட்டிற்குள் அவனுக்காக ஒரு தனித்தீவு ஒன்று இருப்பதை போலவே நான் உணர்கிறேன். அங்கே அவனது உடைகள் மட்டுமே காயப்போடப்பட்டிருக்கின்றன. அவனது பைக் நிற்கிறது. அவனது லேப்டாப் ஒடிக் கொண்டிருக்கிறது. அவன் வாங்கி வளர்க்கும் ஒரு மீன்குஞ்சு மட்டுமேயிருக்கிறது. வேறு ஒரு மனிதருக்கு அந்த்த் தீவில் இடம் கிடையாது. டேபிள் வெயிட்டாக உள்ள கண்ணாடிக் கோளத்தினுள் உள்ள மரத்தை, எப்படி நாம் கண்ணால் மட்டுமே பார்க்க முடியும் கையால் தொட முடியாதோ அப்படியான ஒரு இடைவெளியை, நெருக்கம் கெர்ளளவே முடியாத சாத்தியமின்மையை அருண் உருவாக்கி வைத்திருக்கிறான்.

அப்படி இருப்பது எனக்கு ஏன் பிடிக்கவேயில்லை, நான் அவனை கண்காணிக்க விரும்புகிறேனா.

இது அருண் பற்றிய பிரச்சனை மட்டுமில்லை.

பைக் வைத்துள்ள எல்லா இளைஞர்களும் ஒன்று போலவே தானிருக்கிறார்கள்

அருணிற்கு பைக் ஒட்ட யார் கற்றுக் கொடுத்தது.

அவனாகவே கற்றுக் கொண்டான்.

பதினோறாம் வகுப்பு படிக்கும் போது ஒரு நாள் அவன் பைக்கில் போவதைக் கண்டேன். அவன் பின்னால் ஒரு பையன் உட்கார்ந்திருந்தான். ஒருகையை காற்றில் அசைத்தபடியே அவன் மிக வேகமாக பைக் ஒட்டிப்போவதைப் பார்த்தேன். அன்று வீட்டில் பெரிய சண்டையே நடந்தது.

உனக்கு ஏது பைக். யாரு பைக் ஒட்டக் கற்றுக் கொடுத்தது. அது யாருடைய பைக் என்று கத்தினேன். அருண் அதற்குப் பதில் சொல்லவேயில்லை. அவன் ஒரேயொரு கேள்விமட்டுமே கேட்டான்

பைக் ஒட்டுனா தப்பா

பைக் ஒட்டுவது தப்பா என்ற கேள்விக்கு இன்றைக்கும் என்னிடம் சரியான பதில் இல்லை.

ஆனால் எனது உள்மனது தப்பு என்று சொல்கிறது. காரணம் பைக் என்பது ஒரு வாகனமில்லை. அது ஒரு சுதந்திரம். அது ஒரு சாகசம். அப்பாவிற்கும் மகனுக்குமான இடைவெளியை அதிகப்படுத்தும் ஒரு சாதனம். அப்பாவைச் சீண்டி விளையாட மகன் கண்டுபிடித்த ஒரு தந்திரம்.

அந்த வாகனத்தை எனக்குப் பிடிக்கவேயில்லை. ராணுவத்தில் உள்ளவர்கள் பயன்படுத்துவதற்காக கண்டுபிடிக்கபட்டது தான் பைக் என்கிறார்கள். ஆனால் அது எப்படியோ பிரபலமாகி இன்று என் வீடு வரை பிரச்சனையாகியிருக்கிறது.

இந்த நகரில் பைக்கில் செல்லும் எல்லா இளைஞர்களும் ஒன்று போலவே நடந்து கொள்கிறார்கள். சாலையில் செல்வதை மகத்தான ஒரு சாகசம் என்றே நினைக்கிறார்கள். பலநேரங்களில் எனக்குத் தோன்றுகிறது பைக்கில் சாலையில் செல்லும் இளைஞனுக்கு அவனைத் தவிர வேறு மனிதர்கள், கண்ணில்படவே மாட்டார்கள். எந்த ஒசையும் கேட்காது. மொத்தச் சாலையும் வெறுமையாகி அவன் மட்டுமே செல்வது போன்று தோன்றும் போல.

அதிலும் பைக்கில் செல்லும் போதே செல்போனில் பேசிக் கொண்டு போகும் இளைஞர்களைக் காணும்போது என்னால் ஆத்திரத்தைக் கட்டுபடுத்தவே முடியவேயில்லை. அப்படி என்ன பேச்சு வேண்டியிருக்கிறது என்று மனம் பதைபதைக்கிறது. ஆனால் அவர்கள் முகத்தில் பதற்றத்தின் ஒரு துளி கூட இருக்காது. திடீரென அவர்களுக்குக் கூடுதலாக இரண்டு கைகள் முளைத்துவிட்டது போலவே நடந்து கொள்கிறார்கள்.

அருண் பைக் ஒட்டவே கூடாது என்று கண்டிப்பாக இருந்தேன்.

அப்படி நான் சொல்வதற்குக் காரணம் விபத்து குறித்த பயம் என்று ஒரு பொய்யை சொல்லி என் மனைவியை நம்ப வைத்தேன்.

உண்மையில் நான் பயந்த காரணம் ஒரு பைக் என்பது என் வீட்டிற்கும் இந்த பரந்த உலகிற்குமான இடைவெளியை குறைத்துவிடும். வீட்டிலிருந்து பையனை முடிவில்லாத உலகின் வசீகரத்தைக் காட்டி இழுத்துக் கொண்டுபோய்விடும் என்று பயந்தேன்

ஆனால் அருண் பைக் ஒட்டுவதை என்னால் தடுக்கவே முடியவில்லை.

ஒருவேளை நான் திட்டுவதையும் கண்டிப்பதையும் செய்யாமல் போயிருந்தால் பைக் ஒட்டுவதில் அக்கறை காட்டாமல் போயிருப்பானோ என்னவோ

.இல்லை ,, இது சுயசமாதானம் செய்து கொள்கிறேன். அது உண்மையில்லை

.

பைக் என்பது ஒரு விஷப்பாம்பு

அது எல்லா இளைஞர்களையும் அவர்களது இருபது வயதைத் தாண்டும் போது கடித்துவிடுகிறது. அதன் விஷம் பத்து ஆண்டுகளுக்காகவாவது உடலில் இருந்து கொண்டேதானிருக்கும். அந்த விஷமேறிய காலத்தில் பைக் மட்டும் தான் அவர்களின் உலகம். அதைத் துடைப்பதும் கொஞ்சுவதும் பராமரிப்பதும் கோவித்துக் கொள்வதுமாகவே இருப்பார்கள்.

அருணிற்கும் அப்படிதான் நடந்தது.

அவன் பனிரெண்டாம் வகுப்பு முடித்த கோடை விடுமுறையில் நாமக்கல்லில் உள்ள அவனது மாமா வீட்டிற்கு போய்விட்டு புதுபைக்கிலே சென்னைக்குத் திரும்பியிருந்தான். காலேஜ் போய்வருவதற்காக மாமா புது பைக் வாங்கி தந்ததாக சொல்லியபடியே பைக்கை துடைத்துக் கொண்டிருந்தான்.

உனக்கு லைசன்ஸ் கிடையாது. நாமக்கல்லில் இருந்து ஏன் பைக்கில் வந்தே. வழியில் லாரியில் அடிபட்டு இருந்தா என்ன செய்வது என்று நான் கத்திக் கொண்டிருந்த போது அவன் மௌனமாக ஒரு குழந்தையின் காதைத் டர்க்கித்துண்டால் பதமாக துவட்டுவது போல மிருதுவாக பைக்கை துடைத்துக் கொண்டேயிருந்தான்.

அதன்பிறகு அவனாக லைசன்ஸ் வாங்கிக் கொண்டான். நாளடைவில் அந்த பைக்கை தனது உடலின் இன்னொரு உறுப்பைப் போல மாற்றிக் கொண்டுவிட்டான்.

சிலநாட்கள் காலை ஆறுமணிக்கு அவசரமாக எழுந்து பைக்கில் வெளியே போய்விடுவான்.

எங்கே போகிறான். யார் இந்த நேரத்தில் அவனை வரவேற்க்க் கூடியவர்கள்.

பைக்கில் சாய்ந்து கொண்டுநின்றபடியே பேசுவதும், பைக்கில் ஏறி உட்கார்ந்து தேநீர் குடிப்பது என்று பைக்கில்லாமல் அவன் இருப்பதேயில்லை. அதற்கு எவ்வளவு பெட்ரோல் போடுகிறான். அதற்கு பணம் எப்படிக் கிடைக்கிறது. எதற்காக இப்படி பைக்கில் வெயிலேறச் சுற்றியலைய வேண்டும், எதற்கும் அவனிடமிருந்து பதில் கிடையாது.

அவனது அம்மாவிற்கு அருண் பைக் ஒட்டுவது பிடித்திருக்கிறது. அவள் பலநேரங்களில் அருண் பின்னால் ஏறி உட்கார்ந்துகொண்டு கோவிலுக்குப் போகிறாள். ஒயர்கூடை பின்னும் பொருள் வாங்கப் போகிறாள். அவர்கள் இருவரும் சிரித்துக் கொண்டே போகிறார்கள். ஆனால் என்னால் அப்படி பைக்கில் போக முடியாது. ஒருநாள் என்னை அலுவலகத்திற்கு பைக்கில் கொண்டுவந்து விட்டபோது கூட அவன் இயல்பாக பைக் ஒட்டவில்லை என்றே பட்டது.

அருண் உடலுக்குள் ஒரு கழுகு இருக்கிறது என்பதை ஒரு நாள் நான் கண்டுபிடித்தேன். அந்த கழுகு அவனுக்குள் மட்டுமில்லை. எல்லா இருபது வயதைக்கடந்த பையன்களுக்குள்ளும் இருக்கவே செய்கிறது. அது வீட்டை விட்டு வெளியேறி மிக உயரமான இடம் ஒன்றுக்குப் போய் உட்கார்ந்து கொண்டு, தனியாக உலகை வேடிக்கை பார்க்க விரும்புகிறது. தானும் மற்றவர்களும் ஒன்றில்லை என்று சொல்லத் துடிக்கிறது. தன்னால் மற்றவர்களால் செய்ய முடியாத ஒன்றை அடையமுடியும் என்று காட்ட முயற்சிக்கிறது.

வேட்டையை விடவும் கழுகுகள் உலகை வேடிக்கை பார்க்கத் தான் அதிகம் விரும்புகின்றன. அதிலும் தன் அகன்ற சிறகை அடித்துக் கொண்டு யாரும் தொடவே முடியாத உயரத்தில் ஏறி நின்று உலகைக் காண்பதில் ஆனந்தம் கொள்கின்றன. அதில் ஏதோ ஒரு இன்பமிருக்கிறது. ஏதோ ஒரு அலாதியிருக்கிறது போலும்.

அந்த கழுகின் ரெக்கைகள் அருணிற்குள்ளும் படபடப்பதை நான் அறியத் துவங்கினேன். அதன் சிறகடிப்பு ஒசை என் முகத்தில் படுவதை நன்றாகவே உணர்ந்தேன். எனக்குப் பயமாக இருந்தது. இந்தகழுகு அவனை திசைதவறிக் கூட்டிக் கொண்டு போய் அலைக்கழிக்கும் என்று பயந்தேன். ஆனாலும் தடுக்க வழியில்லாமல் பார்த்துக் கொண்டேதானிருந்தேன்

உண்மையில் அந்தக் கழுகு தான் அவனது பைக்கின் வடிவம் கொண்டுவிட்டிருக்கிறது

சில சமயங்களில் ஒருவார காலம் அருண் வீட்டிலிருந்து வெளியே கிளம்பி போய்விடுவான். எங்கே போயிருக்கிறான் என்று கேட்டால் என் மனைவி பிரண்ட்ஸைப் பார்க்கப் போயிருப்பான் என்று சொல்வாள்.

பையன்களுக்காக பொய் சொல்வதை அம்மாக்கள் விரும்புகிறார்கள். அது ஒரு சதி. பையன்கள் வளர வளர வீட்டில் உள்ள அப்பா அம்மாவைப் பிரிக்கத் துவங்குகிறார்கள். அல்லது பிள்ளைகளின் பொருட்டு பெற்றவர்கள் சண்டையிட்டு மனக்கசப்பு கொண்டுவிடுகிறார்கள்.

பெரும்பான்மை நாட்கள் அருண் நள்ளிரவுக்குப் பிறகு வீடு வந்து சேர்ந்து வீட்டின் இரும்புக்கதவை தள்ளி திறக்கும் ஒசையை கேட்டிருக்கிறேன். எங்கே போய்விட்டுவருகிறான் கேட்டு சண்டைவந்தது தான்மிச்சம்.

எவ்வளவு முறை கேட்டாலும் பதில் சொல்லவும் மாட்டான். நேராக அவன் அறைக்குள் போய் உட்கார்ந்து கொண்டுவிடுவான். வீட்டில் இரவு சாப்பிடுவதும் இல்லை.

நள்ளிரவுக்கு பின்பு வந்தாலும் அவன் பாட்டுக்கேட்க மறப்பதேயில்லை. அதுவும் சப்தமாகவே பாட்டுகேட்கிறான். வீட்டில் நானோ அவனது அம்மாவோ, த்ஙகையோ இருப்பதை முழுமையாக மறந்துவிட்டவனைப்போலவே நடந்து கொள்கிறான்.

அருண் சப்தத்தை குறைச்சிவச்சிக்கோ என்று படுக்கையில் இருந்தபடியே அவன் அம்மா சொல்லுவாள். நான் சொன்னால் அதையும் கேட்கமாட்டான்

ஆனால் அம்மா சொல்வதற்காக சப்தத்தை குறைக்காமல் கதவை மூடிவைத்துக் கொள்ளுவான். அவனால் உரத்த சப்தமில்லாமல் பாடல்களைக் கேட்க முடியாது. அதுவும் அவனது பிரச்சனையில்லை. எல்லா பதின்வயதுபையன்களும் இந்த விசயத்தில் ஒன்று போலதானிருக்கிறார்கள்.

அவர்கள் கேட்கும்பாடல்களில் ஒருவரி கூட என்னை ஈர்ப்பதில்லை. ஒரே காட்டுக்கத்தல்.

எனக்கு கர்நாடக ச்ங்கீதம் மற்றும் திரையிசைப்பாடல்களில் விருப்பம் உண்டு. படிக்கின்ற காலத்தில் ரிக்காடு பிளேயரில் நிறையக் கேட்டிருக்கிறேன். இப்போதும் கூட தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கறுப்பு வெள்ளைப் பாடல்களை விடாமல் கேட்கிறேன். ஆனால் அருண் உலகில் கறுப்பு வெள்ளைக்கு இடமே கிடையாது.

அவன் எட்டாம்வகுப்பு படிக்கையில் ஒருநாள் டிவியில் பாசவலை என்ற பழைய படம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. நான் மிக ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். என் அருகில் வந்து எப்படிப்பா இதை எல்லாம் பாக்குறீங்க என்று கேட்டான்.

நல்லா இருக்கும் அருண், கொஞ்ச நேரம் பாரு என்றேன்.

அவன் என்னை முறைத்தபடியே உங்களுக்கு டேஸ்டேயில்லைப்பா என்று சொல்லிவிட்டு சைக்கிளை எடுத்து கொண்டு போனவன் இரவு வரை வீடு திரும்பவேயில்லை.

இப்போது அவ்வளவு நேரடியாக என்னிடம் பதில் சொல்வதில்லை. ஆனால் என்னைப்பற்றி அதே அபிப்ராயத்தில் தானிருக்கிறான்.

அவன் கேட்கும்பாடல்களை விடவும் அந்த தலைவிரிகோலமான பாடகர்களை எனக்குப் பிடிப்பதேயில்லை. கறுப்பன் வெள்ளை என்று பேதமில்லாமல் அசிங்கமாக இருக்கிறார்கள். ஒருவன் கூட ஒழுங்கான உடை அணிந்திருப்பதில்லை. அடர்ந்து வளர்ந்த தலைமயிர். கோரையான தாடி, வெளிறிப்போன உதடுகள். கையில் ஒரு கிதார். அல்லது கீபோர்ட். உடலுக்கு பொருத்தமில்லாத உடைகள். போதையில் கிறங்கிப்போன கண்கள்.

ஒருவேளை இப்படி இருப்பதால் தான் அவர்களின் பாடல்களை இந்த பதின்வயது பையன்களுக்கு பிடிக்கிறதா, அதைப் பாடல் என்று சொல்வது கூட தவறு. கூச்சல். கட்டுப்பாடற்ற கூச்சல்.

அந்தக் கூச்சலின் உச்சத்தில் யாரோ யாரையோ கொல்வது போலிருக்கிறது. அல்லது காதலின் துயரத்தை தாங்கிக் கொள்ளவே முடியாதது போல ஒரு பொய்யான பாவனையில் ஒருவனோ ஒருத்தியோ கதறிகதறிப்பாடுகிறாள். அதைக் கையில் ஒரு சிகரெட்டுடன் கேட்டு அருணும் சேர்ந்து கண்ணீர்வடிக்கிறான்.

ஏன் அருண் இப்படியிருக்கிறான் என்று எரிச்சலாக இருக்கிறது. ஆனால் அதைப்பற்றி பேசினால் எனக்கு ரசனையில்லை என்பான்.

சில வேளைகளில் அவன் சொல்வது உண்மை என்றும் கூட தோன்றியிருக்கிறது. ஒரு நாள் அவன் அறையைக் கடந்து போகையில் கசிந்துவந்த ஒரு பெண் குரல் பாடலே இல்லாமல் உன்மத்தம் பிடித்தவள் போல ஒரே வார்த்தையை ‘ஹம்பண்ணிக் கொண்டேயிருந்ததை கேட்டேன்

மொத்தமாக ஒரு நிமிசம் தான் கேட்டிருப்பேன். ஆனால் தேள்கொட்டியது போல ஒரு கடுகடுப்பு உருவானது. அடுத்த நிமிசத்தில் கடுமை உருமாறி எல்லையில்லாத ஆனந்தமாகி அந்த ஹம்மிங்கை மனதிற்குள்ளாகவே வைத்துக் கொண்டேயிருந்தேன்.

பின்பு நாலைந்துநாட்களுக்கு அந்த ஹம்மிங் என் மண்டைக்குள் ஒடிக்கொண்டேயிருந்தது. அந்த பெண் எதற்காக இவ்வளவு துயரத்தோடு பாடுகிறாள். அவளது அப்பா அம்மா யார். அவர்கள் இவளை எப்படிப் பாட அனுமதிக்கிறார்கள். தாடிவைத்த கஞ்சா புகைக்கும் இந்த இசைக்கலைஞர்களின் அப்பாக்களும் அவர்களுடன் என்னைப் போலவே சண்டை போட்டுக் கொண்டுதானிருப்பார்களா.

இந்த உலகில் காதலை தவிர வேறு எதற்காகவாவது பையன்கள் இப்படி உருகி உருகிக் கதறுவார்களா என்ன. அப்படி என்ன இருக்கிறது காதலில்.

ஒரு பெண்ணின் தேவை என்பது உடற்பசியோடு சம்பந்தபட்ட ஒன்று தானே.

அதற்கு எதற்கு இத்தனை பொய்பூச்சுகள், பாவனைகள்.

இந்த உலகில்காதலைப்பற்றி மித மிஞ்சிய பொய்கள் நிரம்பியிருக்கின்றன. ஒவ்வொரு தலைமுறையும் அந்தப் பொய்களை வளர்த்தெடுப்பதில் தனது பெரும்பங்கை அளிக்கிறது. பெண்கள் எல்லாம் ஏதோ வேற்றுகிரகத்தில் இருந்து வந்தவர்கள் என்பது போல எதற்காக இவ்வளவு வியப்பு. பிரமிப்பு,

இந்த பயல்களை ஒரு நாள் பிரசவ விடுதிக்குள் கொண்டுபோய்விட்டுவந்தால் இந்த மொத்த மயக்கமும் தெளிந்துபோய்விடும் என்று தோன்றுகிறது.

நான் இப்படி எல்லாம் யோசிப்பதற்கு வயதாகிவிட்டது தான் காரணம் என்று என் மனைவியே சொல்கிறாள். எனக்கு மட்டும் தான் வயதாகிறதா என்ன. அவளுக்கும் வயதாகிறது.

நான் குடியிருக்கும் இந்த நகருக்கு வயதாகிறது.

நான் பேருந்தில் கடந்து போகிற கடலுக்கு வயதாகிறது.

ஏன் தலைக்கு மேலே இருக்கிற சூரியனுக்கும் நிலாவிற்கும் கூட தான் வயதாகிறது.

வயது அதிகமாக அதிகமாக நம்மைப் பற்றி முதுக்குப் பின்னால் பலரும் கேலி செய்வது அதிகமாகிக் கொண்டே தான் போகிறது.

உண்மையில் எனக்கு அப்படி ஒன்றும் வயதாகிவிடவில்லை. ஐம்பத்தியொன்று தான் நடக்கிறது. ஒருநாள் பேப்பரில் படித்தேன். இத்தாலியில் ஒரு ஐம்பது வயது ஆள் திடீரென மலையேறுவதில் ஆர்வம் வந்து ஒவ்வொரு மலையாக ஏறி இறங்கி முடிவில் தனது அறுபத்திரெண்டுவயதில் கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறிவிட்டான் என்று.

நான் அந்தவகை ஆள்இல்லை. எனக்கு புதிதாக ஆசைகள் உருவாவதேயில்லை. இருக்கின்ற ஆசைகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.

வாழ்க்கை உண்மையில் சலிப்பாகவே இருக்கிறது. வாழ்ந்து நான் அடைந்த சலிப்பை அருண் ஏன் இருபத்திநாலு வயதில் அடைந்திருக்கிறான். எப்படி ஒருவனால் மௌனமாக லேப்டாப் முன்பாகவே பலமணிநேரங்கள் இருக்க முடிகிறது. ஏன் அலுக்கவே மறுக்கிறது

எனக்கு அருணை நினைத்தால் பயமாக இருக்கிறது. ஆனால் அவனது அம்மா அந்த பயத்திலிருந்து எளிதாக விடுபட்டுவிட்டாள். பெண்களால் நெருக்கடியை எளிதாக சந்தித்து கடந்து போய்விட முடிகிறது, எப்படி என்ன சூட்சும்ம் அது.

எனக்கு உறக்கம் வரவில்லை. விடிவதற்கு இன்னும் இரண்டு மணி நேரமிருக்கிறது. உலகின் இன்னொரு பகுதியில் இந்நேரம் விடிந்திருக்கும். யாரோ ஒரு பையன் வீட்டிலிருந்து பைக்கில் கிளம்பியிருப்பான். யாரோ ஒரு தகப்பன் அதைபற்றிய புகாரோடு வெறித்து பார்த்தபடியே நின்று கொண்டிருப்பான், அந்த்த் தகப்பனைப் பற்றி நினைத்தால் எனக்குத் தொண்டையில் வலி உண்டாகிறது.

என்னால் இனிமேல் உறங்க முடியாது.

விடியும் வரை என்ன செய்வது என்றும் தெரியவில்லை. எதற்காக நான் படுக்கையில் கிடக்க வேண்டும். இப்போதே எழுந்து சவரம் செய்து கொள்ளப் போகிறேன்

எனக்கு வயதாகிறது என்கிறார்கள். ஆமாம். கண்ணாடி அப்படித்தான் காட்டுகிறது.

முகத்தில் முளைத்துள்ள நரைமயிர்கள் என்னைப் பரிகசிக்கின்றன.

நான் ஒரு உண்மையை உங்களிடமிருந்து மறைக்கிறேன். நானும் இளைஞனாக இருந்த போது இதே குற்றசாட்டுகளை சந்தித்திருக்கிறேன், நானும் பதில் பேசாமல் வீட்டை விட்டு போயிருக்கிறேன், இன்றும் அதை நான் நன்றாகவே உணர்ந்திருக்கிறேன். எனக்குத் தோன்றுகிறது

இருபது வயதில் பையன்கள் இலவம்பஞ்சைப்போல எடையற்று போய்விடுகிறார்கள். காற்றில் மிதந்து திரிவது தான் சுபாவம் என்பது போலிருக்கிறது அவர்களின் செயல்கள்.

யாருக்காவும் எதற்காகவும் இல்லாத பறத்தல் அது.

அப்படி இருப்பது தான் இயல்பு என்பது போல அலைந்து திரிகிறார்கள்.

இலவம்பஞ்சு ஒரு போதும் பள்ளதாக்கைக் கண்டு பயப்படுவதில்லை. பாறைகளைக் கண்டு ஒதுங்கிக் கொள்வதுமில்லை. அது மரத்திலிருந்து விடுபட்டு பறக்கிறது. அந்த விடுபடலை யாராலும் தடுக்கவே முடியாது. அது தான் உண்மை. எனக்குப் புரிகிறது. ஆனால் ஒரு தகப்பனாக அதை ஏற்றுக் கொள்ள முடியாது. நீங்கள் தகப்பன் ஆகும் நாளில் இதை உணர்வீர்கள்.

நான் நிறைய குழம்பிபோயிருக்கிறேன்.

எனது பயமும் குழப்பமும் முகமெங்கும் படிந்துபோயிருக்கிறது. தண்ணீரை வைத்துக் கழுவிக் கொள்வதால் பயமும் குழப்பமும் போய்விடாது என்று எனக்குத்தெரியும்

ஆனால் என்னால் இதைத்தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாதே.

**

கணையாழி ஏப்ரல் 2011

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை. வாழ்வில் ஏற்படும் யதார்த்தை உணர்த்துகிறது.

கதை பகிர்வுக்கு நன்றிங்கோ.

கடந்த ஐந்து வருசமாகவே அருண் வீட்டில் பேசுவதைக் குறைத்துக் கொண்டே வருவதை நான் அறிந்திருக்கிறேன்.

பேசுவதை குறைத்தது அருண் மட்டும் இல்லை அப்பாவும்தான். தவறு அப்பாவிடமும் இருக்கிறது. அப்பா மகனிடம் பழகிய விதம்............ அதையும் தாண்டி ஒரு பரஸ்பரம் இருந்திருக்க வேண்டும்.

நான் ஒரு உண்மையை உங்களிடமிருந்து மறைக்கிறேன். நானும் இளைஞனாக இருந்த போது இதே குற்றசாட்டுகளை சந்தித்திருக்கிறேன், நானும் பதில் பேசாமல் வீட்டை விட்டு போயிருக்கிறேன், இன்றும் அதை நான் நன்றாகவே உணர்ந்திருக்கிறேன். எனக்குத் தோன்றுகிறது

இதே மாதிரியான வளர்ப்பு முறை புலத்திலும் இருக்கிறது தான் வாழ்ந்த வாழ்க்கையை மறந்து, தனது கெளரவத்தை பிடித்து வைத்துக்கொண்டு வாழ்வது...........

மற்றும் அப்பா என்றால் இப்படிதான் என்று தனக்குள்ளிருக்கும் வட்டத்திலிருந்து வெளியே வரவேண்டும்.

கதை பற்றிய எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.

இலவம்பஞ்சு ஒரு போதும் பள்ளதாக்கைக் கண்டு பயப்படுவதில்லை. பாறைகளைக் கண்டு ஒதுங்கிக் கொள்வதுமில்லை. அது மரத்திலிருந்து விடுபட்டு பறக்கிறது. அந்த விடுபடலை யாராலும் தடுக்கவே முடியாது. அது தான் உண்மை. எனக்குப் புரிகிறது. ஆனால் ஒரு தகப்பனாக அதை ஏற்றுக் கொள்ள முடியாது. நீங்கள் தகப்பன் ஆகும் நாளில் இதை உணர்வீர்கள்.

நீங்கள் இணைக்கும் கதைகளில் நான் பல விடையங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்றது . இணைப்பிற்கு நன்றிகள் கிருபன் .

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், கிருபன்!

நாம், எமது, என்பதில் அதிக அழுத்தம் கொடுக்கும் போது, தான் பிரச்சனைகளே ஆரம்பிக்கிறது!

வீதியில் நடந்து போகும் பெண், அவள் பாட்டுக்குப் போய்க் கொண்டிருப்பாள்.

பறக்கும் வண்ணத்துப் பூச்சியைப் பார்ப்பது போல், பார்த்துவிட்டுப் போய் விட்டால், ஒரு பிரச்சனையும் இல்லை!

அவளை, காதலியாக அடைய வேண்டும், என்று நினைக்கையில் 'பார்வை' மாறுகின்றது!

உங்கள் இணைப்புக்கள், மிகவும் சிந்திக்க வைப்பவை!

எதைக் கொண்டு வந்தாய், உன்னுடன் எடுத்துச் செல்வதற்கு? ..... கீதை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருநாளும் இல்லாத திருநாள பச்சை முடிந்து போட்டுது. கதை வாசித்து கருத்து எழுதினவர்களுக்கு பச்சை போட்டால் , கதைக்கு போட பச்சை இல்லை :)

நாங்கள் தயார் இல்லை, 16 வயதில் துரத்தி விட தயார் இல்லை. எனக்கு தெரிந்த வெள்ளை ஒருவர், 6 பிள்ளைகள் - 3 அவருடையது, 2 ஸ்டேப் பாதர், ஒன்று தத்து- இப்ப இன்னும் 4 பேர் இருக்கினமாம், அவர்களுக்கும் 16 வர தான் வேலைய விடுவாராம். 24 வயது பொடியனுக்கு பயந்தால் எதுவும் நடக்க போவதில்லை. ஆனால் அது என்னவோ முடியாத காரியமே- நான் நினைக்கவில்லை நான் அந்த நிலைக்கு வருவேன் என்று.:(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதையில் சொல்லப்பட்டது பருவ வயதில் பிள்ளைகள் உள்ளவர்களுக்குப் பொருந்தும். பெற்றோர்களும் இந்த வயதைத் தாண்டி வந்தபோது எதையும் பற்றிக் கவலைப்படாத இலவம் பஞ்சைப் போன்றே இருந்தார்கள். ஆனால் இறுகிய பாறையாக மாறியதும் எல்லாம் மறந்துவிடுகின்றது அவர்களுக்கு.

பிள்ளைகளுடன் நண்பர்களாகத் தொடர்ந்து இருந்தால் இடைவெளி குறையும், ஆனால் பிள்ளைகள் நண்பர்களாக ஏற்றுக்கொள்வார்கள் என்பதும் சந்தேகமே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.