Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திராவிடர் என்று ஓர் இனம் இருப்பது மூட நம்பிக்கை - முனைவர் த. செயராமன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை- மறைமலை நகரில் 18.11.2012 அன்று நடைபெற்ற தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய கலைஞர் கருணாநிதி, “திராவிட இனம் நமது பூர்வீக இனம். அந்த இனத்தின் உரிமையைப் பெற இளைஞர் அணி தங்கள் பணி என்ன என்பதை வகுத்துக் கொள்ள வேண்டும்” என்றும் “திராவிடத்தை ஏற்காதவர்களை புறம் தள்ள வேண்டும்” என்றும் கூறியிருக்கிறார்.

“ஊக- வரலாறெழுதுதல்” என்ற அடிப்படையில் தவறான ஒரு சொல் தொல் குடியினரான தமிழர்களுக்குச் சூட்டப்பட்டு திரும்பத் திரும்ப நிலை நிறுத்தப்படுகிறது. “திராவிடர்” என்ற பெயர் தமிழினத்துக்கு வரலாற்றில் ஒரு போதும் வழங்கியதில்லை. ஆனால், தென்னிந்தியப் பகுதிக்கு வந்தேறிய ஆரியர்களை, வட இந்தியாவில் இருந்த ஆரியக் குடியினர் “திராவிடர்”( தென்புலம் குடியேறியோர்) என சமஸ் கிருத இலக்கியங்கங்களில் குறித்தனர். ஆரியத்தின் தென்கிளையே திராவிடர் ஆவர்.

 

 

தமிழினம் தன்னை ஒரு போதும் “திராவிடர்” என்று அழைத்துக் கொண்டதில்லை. எந்தத் தமிழ் இலக்கியமும் தமிழர்களைத் “திராவிடர்” என்று குறித்ததில்லை. அதுமட்டுமன்றி, தென்னிந்திய மொழியினங்கள் எவையும் தங்களைத் “திராவிடர்” என்று எந்த இலக்கியத்திலும் குறித்ததில்லை; இன்றுவரைத் தங்களைத் “திராவிடர்” என்று கருதியதுமில்லை.

 

திராவிடர் என்ற பழைய சொல்லுக்கு, புதிய பொருளை வழங்கியவர் பிஷப் இராபர்ட் கால்டுவெல். 1856-ஆம் ஆண்டு இராபர்ட் கால்டுவெல்லின் “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” தென்னிந்திய மக்களுக்குத் “திராவிடர்” என்ற இனப் பெயரைச் சூட்டியது. “தமிழகம்” என்ற சொல்லின் திரிந்த வடிவமே “திராவிடம்” என்பது. தென்னிந்திய நிலப்பகுதியைக் குறிக்க நீண்டகாலமாகத் திராவிடம் என்ற சொல் ஆரியர்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. ஆனால், தென்னிந்திய மக்கள் திராவிடர்கள் என்று அழைக்கப்பட்டதில்லை.

 

கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 8-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவராகக் கருதப்படும் குமாரில பட்டரின் “தந்திர வார்த்திக” என்னும் பூர்வமீமாம்ச சூத்திரத்திரத்தின் உரைக்கான் துணை உரை நூலில், பயன்படுத்தப்பட்டுள்ள “ஆந்திர-திராவிட பாஷா” என்னும் சொற்கோவையை கால்டுவெல் ஒரு சான்றாக எடுத்துக் கொண்டார். தென்னிந்திய மொழிகளை ஆய்வு செய்த கால்டுவெல், அவை ஒரு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதைக் கூறினார். குமரிலப்பட்டர் குறிப்பிடும் “ஆந்திர” என்பது தெலுங்கையும் அதிலடங்கிய கன்னடத்தையும் குறிக்கும் என்றும், “திராவிட” என்பது தமிழையும் மலையாளத்தையும் சேர்த்துக் குறிக்கும் என்றும் கூறினார்.

 

திராவிடம் என்ற சொல் தமிழைக் குறிக்க, பிராமணர்களாலும், தமிழ்மேதாவிகளாலும் அப்போது பயன்படுத்தப்பட்டு வந்தது. தமிழைக் குறிக்கத் “தமிழ்” என்ற சொல்லையும், மொழிக் குடும்பத்தைக் குறிக்கத், “திராவிட” என்ற சொல்லின் அடைமொழிவடிவமான “Dravidian” என்பதையும்தான் தெரிவு செய்து கொள்வதாகக் கால்டுவெல் கூறினார். “நான் காணும் சிறந்த சொல் இதுவே என்றாலும் அதுவும் குழப்பத்திற்கு அப்பாற்பட்டதாக இல்லை” என்றும் குறிப்பிடுகிறார்.

 

தென்னிந்திய மொழிகள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவை என்பது சரியானது. ஆனால் அதைக் குறிக்க “திரவிடியன்” என்று தன் விருப்பப்படி ஒரு சொல்லைத் தேர்வு செய்தது தவறானது. தமிழையும் தொடர்புடைய பிற மொழிகளையும் குறிப்பிட Tamulic மற்றும் Tamulian என்ற சொற்களையே ஐரோப்பியர் அதுவரை பயன்படுத்தி வந்தனர். ஆனால், கால்டுவெல் அவற்றைக் கைவிட்டு “திராவிடியன்” என்ற சொல்லை அம்மொழிகளுக்குச் சூட்டினார். திராவிட மொழிக் குடும்ப மொழிகளைப் பேசிய மக்கள் “திராவிடர்” என அடையாளப்படுத்தப்பட்டனர்.

 

தென்னிந்திய மக்களுக்கு இன அடையாளமாகத் “திராவிடர்” என்ற சொல்லைக் கால்டுவெல் சுமத்தினர். இந்தத் “திராவிடர்” என்ற சொல்லை வழங்கிய மூல ஆவணங்கள் மனுஸ்மிருதி, மகாபாரதம், பாகவத புராணம் போன்றவையே ஆகும். மனுஸ்மிருதி (X 43,44), “கீழ்க்காணும் சத்திரியக் குடிகள் புனித சடங்குகளை பின் பற்றாமையாலும், பிராமணர்களின் தொடர்பற்றுப் போனமையாலும் சாதியிறக்கம் பெற்று “விரிஷாலா” ஆயினர்’ என்று கூறி 12 குடியினரைக் குறிக்கிறது. “சத்திரியர்” என்று குறிப்பதன் மூலம் அவர்கள் ஆரிய வருணங்கள் நான்கில் இரண்டாவது பிரிவினர் என்பதை மனுஸ்மிருதி தெளிவுப்படுத்துகிறது. அந்த 12 குடியினரில் திராவிடரும் குறிப்பிடப்படுகின்றனர். சாதியிறக்கம் பெற்ற சத்திரியரான திராவிடர் மட்டுமே தென்னிந்தியப் பகுதியினர் என்று கால்டுவெல் கருதினார்.

 

இதில் சோழர், பாண்டியர் போன்ற ஆளும் குடியினரின் பெயர்கள் வட இந்தியாவில் அறியப்பட்ட ஒன்று என்றும், “திராவிடர்” என்பது அனைவரையும் சேர்த்து குறிக்கும் சொல் என்றும் கால்டுவெல் குறிப்பிடுகிறார். பாகவத புராணத்தில் குறிப்பிடப்படும் சத்தியவிரதன் என்பவன் “திராவிட மன்னன்” என்று அந்தப் பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் கால்டுவெல் குறிப்பிடுகிறார். தென்னிந்திய மக்களின் இனம் “திராவிட இனம்” என்று காட்டுவதற்கு கால்டுவெல் காட்டும் சான்றுகள் இவைதாம். ஆரியச்சார்புடைய, பார்ப்பனிய சமஸ்கிருத இலக்கியங்களைத்தான் கால்டுவெல் சான்று காட்டுகிறார்.

 

உண்மையில் புராண இதிகாசங்கள் குறிப்பிடும் திராவிடர்கள் யார்?

யுதிஷ்ட்ரன் ராஜசூய யாகம் செய்ய முற்பட்ட போது, சகாதேவன் திக் விஜயம் மேற்கொண்டு, திராவிடர், சோழர், கேரளர், பண்டியர் ஆகியோரை வென்றான் என்றும், பட்ட மேற்பு விழாவிற்கு சோழர், திராவிடர், ஆந்திரர் போன்றோர் வருகை புரிந்தனர் என்றும் மகாபாரதம் குறிப்பிடுகிறது. திராவிடர் என்போர் சேர, சோழ, பாண்டியர் அல்லாதவர் என்பதையும், அப்படி ஒரு திராவிட தேசம் இருந்தது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

 

யார் இந்த திராவிடர்கள்? எது திராவிட தேசம்? கி.பி.7 ஆம் நூற்றாண்டில் இந்தியா வருகை தந்த சீனப் பயணி யுவான் சுவாங் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்ட பல்லவ நாட்டைத் “திராவிட தேசம்” என்று குறிக்கிறார்.

 

பல்லவர்கள் தங்கள் செப்பேடுகளில் தங்களைப் பரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், பரத்வாஜர் துரோணர், அஸ்வத்தாமன் வழிவந்தவர்கள் என்றும், தாங்கள் “சத்திரிய- பிராமணர்கள்”( சத்திரியத் தொழிலை மேற்கொண்ட பிராமணர்கள்) என்றும் விவரிக்கிறார்கள். இவர்கள்தம் திராவிட தேசத்தை ஆண்டு வந்தவர்கள்.

 

பல்லவர் ஆட்சி நிறுவப்பட்டவுடன்(கி.பி.400) பெருவாரியாக வட இந்திய ஆரியக் குடியினர் தென்னிந்தியாவுக்குள் புகுந்து பல்லவத் தலைநகரான காஞ்சிபுரத்தை மையமாகக் கொண்டு பரவினர். இவ்வாறு தென்னிந்தியாவுக்கு வந்தேறிய ஆரியக் குடிகளை வட ஆரியர் “திராவிடர்” என்று அடையாளப்படுத்தினர். தென்னிந்தியா திராவிடம் என்று வடமொழியாளர்களால் குறிக்கப்பட்டது. பார்ப்பனியமும், சமஸ் கிருதமும், வேதக் கல்வியும் செழித்த பல்லவ திராவிட தேசத்திலிருந்து தென்னிந் தியா முழுவதும் திராவிடர் என்ற தென் ஆரியர் பரவினர்.

 

அவர்கள் கைக்கொண்ட புதியவகை கடுஞ்சடங்கு முறைக்கு “திராவிட சம்பிரதாயம்” என்று பெயர். இச்சம்பிரதாயத்தைக் கைக்கொண்ட பார்ப்பனர்கள் “திராவிடர்” என அறியப்பட்டனர். தமிழகம்( கேரளம் உள்ளிட்டு), ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம், கூர்ஜரம்(குஜராத்) ஆகிய ஐந்து பகுதிகளில் திராவிட சம்பிரதாயத்தைக் கைக் கொண்ட பிராமணர்கள் பரவினர். இவர்களே “பஞ்ச திராவிடர்” என அடையாளம் பெற்றனர்.

 

சமஸ்கிருதக் குடிவழி தொடர்பற்ற (Non – Sanskritic) மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் பேசும் பார்ப்பனர்களும், சம்ஸ்கிருதத்தில் தோற்றம் பெற்ற (Sanskritic) மராத்தி, குஜராத்தி மொழிப் பார்ப்பனர்களும் “பஞ்ச திராவிடர்” என்ற ஒரு சமூக அடையாளத்தை இவ்வாறே பெற்றனர்.

திராவிடர்கள் என்ற சொல் நீண்டகாலமாக ஆரியர்களின் தென்கிளையைக் குறிக்கும் சொல்லாக விளங்கி வந்த நிலையில்தான், கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம் அச் சொல்லை தென்னிந்திய மொழிகளைப் பேசும் மக்களுக்குச் சூட்டியது. இத் தவறான பயன்பாடு 1947-இல் சுட்டிக் காட்டப்பட்டது.

என்சைக்ளோ பீடியா பிரிட்டானிகா தனது 15- வது பதிப்பில்(1947) ஒரு வரலாற்றுத் திருத்ததைப் பதிவு செய்கிறது:

 

“திராவிடர்” என்ற பெயர் இந்திய வழக்கில் பார்ப்பனர்களின் தென்னகப் பிரிவை மட்டுமே குறிக்கும் பெயர் ஆகும். ஆனால், “திராவிடர்” என்ற சொல், “துரதிர்ஷ்ட வசமாக” Unfontunately) இந்தியாவில் விந்திய மலைகளுக்குத் தெற்கேயும், இலங்கையின் வடக்குப் பாதிப் பகுதியிலும் வாழும் மண்ணின் மக்களுக்கு (Indigenous peoples) பயன்படுத்தப்படுகிறது. அது (திரவிடம் என்ற சொல்) இப்பகுதிகளின் மொழிகளைக் குறிக்க மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்”

அதன் பிறகு, “திரவிடியன்” என்ற சொல் ஓர் இனத்தைக் குறிக்கப்பயன்படுத்தப் படுவதைக் கூறி, தென்னிந்திய மக்களின் உடற்கூறு, பண்பாடு ஆகியவற்றை விவரிக்கிறது.

 

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், இச்சொல் சமூக உணர்வாளர்களைத் தொட்டது. “மண்ணின் மைந்தர்களான திராவிடர்களுக்குச் சூத்திரப்பட்டம் கட்டி, ஆரியப் பார்ப்பனர்கள் அவர்களை இழிநிலைக்குத் தள்ளினர்” என்ற கால்டுவெல்லின் கருத்து சமூக உணர்வாளர்களைப் பற்றிக்கொண்டது. அயோத்திதாசப் பண்டிதர், மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை போன்றோர் “திராவிட” என்ற சொல்லைப் பயன் படுத்தினர்.

 

1901-அம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, இனவகையில் பதிவு செய்தனர். 1901-இல் தென்னிந்திய மக்களுக்கு “திராவிடர்” என்று இனப்பெயராகப் பதிவு செய்து அருள்பாலித்தவர் அன்றைய கணக்கெடுப்பு ஆணையாளரான சர் ஹெர்பர்ட் ரிஸ்லி. இதன் பிறகு “திராவிடர்” என்ற சொல் அதிக அளவில் பயன்படத் தொடங்கியது.

 

மொழியியல், மாந்தவியல், தொல்லியல் ஆகிய துறைகள் 19 ஆம் நூற்றாண்டில் வளர்ச்சி பெற்றன. பல மொழியினங்கள் உள்ளன. தென்னிந்தியா பற்றி அய்வுகளுக்கு ஒரு “கூட்டுச் சொல்” ஆய்வாளர்களுக்குத் தேவைப்பட்டது. கால்டுவெல் வழங்கிய “திராவிடர்” என்ற சொல் ஆய்வாளர்களுக்கு வசதியாக(convenience) இருந்தது. திராவிட மொழிகள், திராவிட இனம், திராவிட நாகரிகம் என ஆய்வுகள் தொடங்கின. ஆய்வாளர்களைப் பொறுத்தவரை அச்சொல் அவர்கள் தேவையை நிறைவு செய்தது. உண்மையில் இவை “தமிழின மொழிகள்” “மரபு தமிழினம்”, “தமிழர் நாகரிகம்” என்று அடையாளப் படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

 

திராவிடர் என்பது தமிழர்களின் பூர்வீக இனம் என்று காட்டுவதற்குக் கலைஞர் காட்டும் சான்றுகள் கருதும் தகுதியற்றவை. “ஜன கன மன “ என்னும் பாடலில் தாகூர் தென்னிந்தியாவைத் “திராவிடம்” என்று குறிப்பிடுவதைச் சுட்டுகிறார். ஆரியர்கள் அவ்வாறுதான் தென்னிந்தியவைக் குறிபிட்டனர். திராவிடர் ஓர் இனம் என்பதை இது எப்படி நிரூபிக்கும்?

மனோன்மணியம் சுந்தரனாரும் “திராவிட நல் திருநாடு” பற்றி பேசுகிறார். இதில் இனம் எங்கே குறிப்பிடப்படுகிறது?

 

உ.வே.சாமிநாதய்யரின் பட்டத்தைப் பார்த்தாலே அது முழுமையாகச் சமஸ்கிருதப் பட்டம் என்பது புரியும் “மகா மகோ பாத்யாய டாக்டர் திராவிட வித்யா பூஷண்” என்ற பட்டத்தில் தமிழைத் திராவிட என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். 20 ஆம் நூற்றாண்டிலும் கூட ஆரியர்களும், பார்ப்பனர்களுக்கு இணையான சமூகத் தகுதி வேண்டிக் கிடந்த தமிழ்ப் புலவ மேதாவிகளும் தமிழைத் திராவிடம் என்றே குறித்தனர். இவற்றில் திராவிட இனம் பூர்விக இனம் என்பதற்கு என்ன சான்று இருக்கிறது?

 

தமிழினத்திற்கோ, தென்னிந்திய பிற மொழியினங்களுக்களுக்கோ “திராவிடர்” என்ற பெயர் ஒரு போதும் இருந்ததில்லை. திராவிடர் என்ற தவறான அடையாளத்துடன் சமூக இயக்கம் எழுந்ததும், பின்னர் அரசியல் கட்சிகளாகி ஆட்சி அதிகாரம் செய்வதும் வேறு விடயம். ஆனால் “திராவிட இனம் நமது பூர்வீக இனம்” என்று இளைஞர்களுக்குச் சொல்லிக் கொடுப்பது உண்மைக்குப் புறம்பானது. உண்மைக்குப் புறம்பான ஒன்றைச் சொல்லிக் கொடுப்பது திராவிடக் கட்சிகளின் எதிர்கால அரசியலை உத்தரவாதப்படுத்தும் முயற்சியே ஆகும்.

 

தன்னை பகுத்தறிவாளர் என்று கூறிக்கொள்ளும் கலைஞர், “திராவிடம்” என்று ஓர் இனம் இருப்பதாக பரப்பும் மூட நம்பிக்கையைக் கைவிடட்டும்.

 

இக்கட்டுரை,தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2012 டிசம்பர் 1-15 இதழில் வெளிவந்தது. கட்டுரையாளர் முனைவர்த.செயராமன் மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரி முன்னாள் வரலாற்றுத்துறைத் தலைவர்.

 

http://kannotam.com/site/?p=2407

இவர் புதிசா குழப்புகிறார்.

 

1.பழைய மக்களும், ஆபிரிக்காவிலிருந்து நேராக வந்தவர்களும் (கி.மு100,000-7,000)

2.திராவிடர் அல்லது முதல் வெள்ளை இன குடியேற்றம் (கி.மு 7,000-2,000)

3 ஆரியர் அல்லது ஐரோப்பிய இனங்களுடன் தொடுக்க கூடிய குடியேற்றம்(கி.மு 2,000- 0000)

4.முகலாயரும் மற்றும் புதிய குடியேற்றங்களும்(கி.பி 1000- 1700)

 

இதில் இந்தியாவில் மிக வெற்றிகரமான குடியேற்றம் திராவிடக் குடியேற்றம். இவர்கள் தெற்கில் கிட்டதட்ட முழுமையாகவும்(சிறிய தொகை பழங்குடியினரும், சிறிய தொகை ஆரியரும் கலந்திருக்கிறார்கள்), வடக்கில் 60-70 % மாகவும் குடியேறி இருக்கிறார்கள். வடக்கில் உண்மையாக ஆரியர் குடியேற்றம் 20-25%மாகத்தான் இருக்கும்.

 

கருத்து திருத்தம்:

கீழே விவசாயி விக் கூறியிருப்பது போல கிழக்கிலும் திராவிடக் குடியேற்றம்தான் அதிகம்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்போதும் வடக்கில் 20 விகிதத்திற்கு குறைந்தோர் தான் ஆரியர்.

யீனோம் புராஜெக்டில் எம். 20 யார்?

திராவிடத்தில் மலையாளம், தமிழ், தெலுகு,கன்னடம்,மராத்தி, பெங்காளி வரும்.

தமிழரை தம் இனத்தில் இருந்து பிளக்க இப்படியான கட்டுரைகள் உதவும்.

என்னோடு வேலை செய்யும் தெலுங்கர் தன்னை திராவிடன் என்பார்.

 

விக்..எனக்கு இந்த திராவிட கோசங்களில் நம்பிக்கை இல்லை...இந்த திராவிட கோசம் தமிழ் நாட்டில் உள்ள எழுச்சி மிக்க சிந்திக்க கூடிய ஒரு பகுதி மக்களிடம் இருந்து தமிழின உணர்வை மேவி திராவிட உணர்வு என்ற மாயை உருவாக்கி தமிழ்தேசிய சிந்தனை தீவிரமாக மிளிரவிடாமல் தடுக்கிறது...மிக முற்போக்கான இந்த மக்களின் இன உணர்ச்சி இந்த திராவிட கோசத்தால் மளிங்கப்படிருக்கிறது என்பதே உண்மை..பல சமூக சீர்திருத்தங்கலை உருவாக்கியது திராவிடமே என்றாலும் இன அடையாளத்தை இழக்கமுடியாதுதானே அதற்காக...தமிழ்தேசியம் திராவிடம் அறிமுகப்படுத்திய சமூகதீர்திருத்தங்களையும் உள்வாங்கிக்கொண்டு இன்னும் தீவிரமாக இயங்கினால் தமிழ் இன உணர்வு தமிழகத்தில் அதிகரிக்கும்..அது ஒரு புரட்சிகரமான மாற்றத்தை தமிழ் நாட்டில் உருவாக்கும்..அதன் வழி ஈழத்தமிழினமும் நன்மைகளை பெற்றுக்கொள்ளும்..

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடம் என்ற சொல்  அரசியல்செய்ய மட்டுமே தமிழ்நாட்டவன் நீர் கேட்டால் அப்ப தெரியும் திரவிடமாவது மயி.....................

 

  • கருத்துக்கள உறவுகள்

இது தொடர்பாக நீண்ட விவாதங்கள் ஆய்வுகள் இங்கே யாழிலும் நடந்துள்ளன. அன்றும் இன்றும் என்றும் சொல்கிறோம்.. திராவிடம் தமிழர்களின் அடையாளத்தை அழிக்க வந்த ஒரு மாயை. தமிழன் தமிழனாக அடையாளப்படுத்தப்பட வேண்டுமே தவிர அவனுக்கு மாயைத் திராவிடப் போர்வை அவசியம் இல்லை..! எனியும் அது வேண்டாம்..! தமிழர்கள் மட்டுமே திராவிடத்தால் ஆளப்படுகின்றனர். வேறு எவரும் அல்ல..! அந்த வகையில் திராவிடம் மாயை மட்டுமல்ல.. தமிழர்களைப் பலவீனப்படுத்தும் ஒரு சூழ்ச்சிக் கருத்தியல்.. சித்தாந்தம்.. சொற் பிரயோகம். அது கைவிடப்பட்டு திராவிடத்துக்குள் உள்வாக்கப்பட்டிருக்கும் தமிழர் வரலாறும் தொல்பியல் சான்றுகளும் தமிழர்களினது என்றாக வேண்டும். அவை தமிழர்களின் நிலை இருப்பை பாதுகாக்க காலம் நெடுகிலும் பாதுகாக்கப்படனும். .! :icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.