Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திரும்பி வராத குரல் – யோ.கர்ணன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
திரும்பி வராத குரல் – யோ.கர்ணன்
 

 

thirum-head-1024x349.jpg

yo-karnan-1024x337.jpg

 

 

ஆயிரத்து தொளாயிரத்து தொன்னூறுகளின் மத்திய பகுதியில் அது நடந்தது. யாழ்ப்பாணத்தின் இருபாலையிலுள்ள முகாமொன்றின் சமையல்கூடத்திற்கு பக்கத்தில், ஒரு பின்மதியப் பொழுதில் சத்தியப்பிரமாணத்தை சரியாக நினைவில் கொண்டுவர முடியாமல், நானும் என் வயதையொத்த இன்னும் இரண்டு நண்பர்களுமாக மல்லுக்கட்டிக் கொண்டிருந்தோம். அது நாங்கள் இயக்கத்திற்கு சேர்ந்த புதிது. சத்தியப்பிரமாணத்தை மனனம் செய்ய வேண்டுமென்ற கட்டுப்பாடெல்லாம் அப்பொழுதில்லை. எங்களைத்தான் ஆர்வக் கோளாறு விடவில்லை.

 

kar-1.jpg

 

முகாமிலிருந்த சீனியர்கள் காலையில் சத்தியப்பிரமாணமெடுப்பதைப் பார்த்ததும் பெரும்பாலானவர்களிற்கு இருக்க முடியாமல் போய்விட்டது. சீனியர்களின் ஒவ்வொரு அங்க அசைவுகளையும் கவனித்து, அதனைப் பின்பற்றுவதிலேயே பெரும்பாலானவர்கள் குறியாகயிருந்தோம். ஒரு நாள் யாரோ ஒருவர் பிஸ்ரல் கட்டியபடி வந்திருந்தார். அது இடுப்பில் கட்டப்பட்டிருந்ததால், கைகளை சாதாரணமாக உடலுடன் ஒட்டி வைத்திருக்க முடியாமல் கைகளை சற்று அகல விரித்து நடந்தார். அதனைப் பார்த்ததிலிருந்து பெரும்பாலானவர்கள் பறவை சிறகு விரித்தது போல கைகளை அகல விரித்தபடி நடந்தார்கள். சாதாரணமாக, நடக்கும் பொழுதே கைகளை எப்படி வைத்திருந்தார்கள் என்றெல்லாம் கவனிப்பவர்கள், சத்தியப்பிரமாணத்தை தவற விடுவோமா?

 

‘எமது புரட்சி இயக்கத்தின் மேன்மை மிகு குறிக்கோளாம்’ என்ற வரிக்கடுத்ததெதுவும் வாய்க்குள் வரமாட்டேன் என்றது. ஏதோ ஒரு தமிழீழம் என்பது தெரியும். என்ன தமிழீழம் என்பது தெரியவில்லை. தமிழீழத்திற்கு முன்னாலிருந்தவற்றை  நாங்கள் யாரும் முன்னப்பின்ன கேள்விப்பட்டுமிருக்கவில்லை.

 

முகத்தில் பூனை ரோமங்கள் கூட அரும்பாமலிருந்த மூவர் மல்லுக்கட்டுவதைக் கவனித்துவிட்டு, முன்தலை சற்றே தெரியத் தொடங்கிய வயதிலிருந்த ஒருவர் வந்தார். அவருக்கும் பொழுது போகவில்லைப் போல. எங்களணியிலிருந்த வயதானவர்களில் அவருமொருவர். அதிக வயதுகள் கிடையாது. இருபதுகளின் இறுதிகளிலிருந்திருக்கக்கூடும்.

 

அவர்தான் தமிழீழத்திற்கு முன்னாலிருந்த வில்லங்கமான விசயங்களை வாய்க்குள் புகுத்தினார். ‘சமவுடமை, தன்னாட்சித் தமிழீழம்’ என்பதேயது.

 

அன்று மாலையில் விளையாட்டுத்திடலில் மீளவுமவரைச் சந்தித்தேன். மிக நட்பாகச் சிரித்தார். சற்றுக் கடுமையானவரைப் போல தோற்றத்தில் தெரிந்தாலும், அவரது இயல்பும், குரலும் அதற்கு நேர்மாறானவை. சத்தியப்பிரமாணம் பாடமா எனக் கேட்டார். இயக்கத்திற்கு வந்து இத்தனை நாளாகியும் சத்தியப்பிரமாணத்தை பாடமாக்கவில்லையென மிகவும் வெட்கமாக இருந்தது. இது அவ்வளவு பெரிய குற்றமில்லையென்பதைப் போல, முதுகில் தட்டிவிட்டுச் சென்றார்.

 

கடற்கரையின் சனத்திரளிற்குள் தொலைந்த சிறுவனைப் போலவே இயக்கத்தில்ச் சேர்ந்த புதிதிலிருந்தேன். யாரையும் தெரியாத கூட்டத்திற்குள் பிரமிப்படங்காமலும், சூழலை எதிர்கொள்ளும் அனுபவமற்றனாகவும் திரிந்தேன். சாதாரணமாக நடக்கும் பொழுது காலடியெடுத்து வைக்கும் பொழுதே தயக்கமிருந்தது. சமாளிக்க முடியாத சவாலிற்குள் இறங்கிவிட்டேனோ என்ற எண்ணமெல்லாம் உருவாகத் தொடங்கிவிட்டது.

 

சாதாரணமாகப் பார்த்ததும் அவருக்கும் புரிந்திருக்க வேண்டும். ‘காத்து வளம் பார்த்து எதுவும் செய்யத் தெரியாதது’ என்று முகத்தில் போஸ்டர் அடித்து ஒட்டாத குறையாக முழிசிக் கொண்டு திரிந்திருப்பேன் என நினைக்கிறேன். அவருக்கு இரக்கம் தோன்றியிருக்கலாம், அன்பாகவுமிருக்கலாம். எப்படியோ சில நட்புகள் இப்படியும் ஆரம்பிக்கின்றன. நீண்டநாட்களாக அது நீடித்தது.

 

அவருக்கு பெற்றவர்கள் என்ன பெயர் வைத்தார்கள் என்பதெல்லாம் இப்பொழுது நினைவிலில்லை. இயக்கமிட்ட பெயர் வாணன். இப்பொழுது நினைத்தாலும் நெஞ்சு நெகிழும் எண்ணற்ற நண்பர்கள் விடயத்திலுமிதுதான்- அவர்களது சொந்தப் பெயர் தெரியாது. அது பற்றி அப்பொழுது அக்கறைபடுவதில்லை. யுத்தத்தின் பின்னர், யார் யார் பிழைத்தார்கள் என்பதையறிவதற்காக விசாரிக்கத் தொடங்கும் பொழுதுதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது.

 

நீர்வேலி விவசாயக் குடும்பமொன்றிலிருந்து வந்தவர். சற்றே வறுமையான பின்புலமுடையவர்.

 

அது புதிய போராளிகளிற்கான முகாம். இயக்கத்தில் சேர்பவர்கள் பயிற்சிக்குச் செல்வதன் முன்னர் அங்கு தங்கவைக்கப்பட்டிருந்தனர். முகாமிலிருந்த பெரிய மண்டபத்தில்த்தான் எல்லோரும் தங்கியிருந்தோம். நூற்றைம்பது பேராகவதற்காக காத்திருந்தோம். நூற்றைம்பது பேரானால் பயிற்சி முகாமிற்குச் சென்றுவிடலாம்.

 

kar-2.jpg

 

அந்த முகாமிலிருந்த காலத்தில் எங்களின் பிரதான பொழுதுபோக்கு சுதா அண்ணைதான். அப்படித்தான் சொல்ல வேண்டும். காலைக்கடன்களை முடித்ததும், மண்டபத்திற்குள் உட்கார்ந்து விடுவோம். எட்டுமணியளவில் வருவார். முன்னாலிருந்த மேசையில் உட்கார்ந்து கதைக்கத் தொடங்குவார். சில சமயங்களில் ஆர்வமாகவும், சில சமயங்களில் வேறு வழியில்லாமலும் கேட்டுக் கொண்டிருப்போம். ஏனெனில், அவர்தான் முகாம் பொறுப்பாளராகயிருந்தார். பின்னாட்களில் தங்கன் என்ற பெயருடன் அரசியல்துறை துணைப் பொறுப்பாளராகயிருந்தார்.

 

இயக்கம் என்ற திரைப்படத்தின் எழுத்தோட்டத்தை அவர்தான் காட்டினார். ஆள்க் கொஞ்சம் ‘அணில்கந்தன்’. இயக்கத்தின் தலைவர் பெயர் என்ன என்பதிலிருந்து ஆரம்பித்து, இயக்கத்தின் கொள்கை, கோட்பாடு, தலைவரினதும் போராளிகளினதும் சாகசங்களென கதைகதையாகச் சொன்னார்.

 

மதிய உணவின்பின் கலைநிகழ்ச்சி. மாலையில் விளையாட்டு. இரவில் படம் என பழக்கப்படுத்தப்பட்டிருந்தோம். இடையில் சாப்பாடு, தேனீர், ஒன்று, இரண்டுக்கு மட்டும் எழும்பலாம்.

 

கலைநிகழ்ச்சி என்ற பெயரில் நடந்ததெல்லாம் பாட்டு மட்டும்தான். இன்னும் வெளிப்படையாகச் சொன்னால், பாட்டு என்ற பெயரில் நடந்ததெல்லாம் பலரது கதை வசனங்கள்தான். பாடக்கூடியவர்கள் பாடலாம் என்றதும், கூட்டங்களில் பேசுபவர்களைப் போல முன்னால் நின்று கதைத்தார்கள். என்ன, அதெல்லாம் புதுவையினதும், காசியானந்தனினதும் பாடல்வரிகளாகயிருந்தன.

 

இதனால் மதியம் வந்தாலே ஒருவித நடுக்கம் பிடிக்க ஆரம்பித்தது. மண்டபத்தை விட்டும் வெளியேறவும் முடியாது. வாழ்க்கையென்றாலே சோதனைதானென்ற புரிதல் வந்த காலமது.

 

மதியம் ‘பாட்டு நேரம்’ ஆரம்பித்ததும் வழமையான கதைவசன முகங்கள் வரிசையாக வரத் தொடங்குவார்கள். இந்த முகங்கள் அதிகமில்லை. நான்கைந்துதான். இரண்டு மூன்று மணித்தியாலங்களை தங்களிற்குள் பங்கிட்டுக் கொண்டார்கள்.

 

ஒருநாள் திடீரென கூட்டத்தில் சின்னச்சலசலப்பு. யாரோ ஒருவனை சிலர் மல்லுக்கட்டி இழுத்து எழுப்புகிறார்கள். அந்தாள் எழும்பமாட்டன் என அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார். மிகந்த பிரயத்தனப்பட்டு அவரை எழுப்பியாயிற்று. அது வாணன். நல்ல குரல்வளமுடையவரென்பது யாருக்கோ தெரிந்திருக்கிறது.

 

பொறுப்பாளர் சுதா அண்ணையும் அவரை முன்னால் வரும்படி வற்புறுத்திக் கொண்டிருந்தார். மிகுந்த தயக்கத்துடன், கால்களை நிலத்தில் உரசியபடி மெதுமெதுவாக முன்னால்ப் போனார். பாடச் சொன்னதும், உடம்பை நெளித்து, கைகளைப் பிசைந்து சற்றே வெட்கப்பட்டபடி பாட ஆரம்பித்தார்.

 

‘…’ என ஆரம்பித்ததும் மண்டபம் நிசப்பதமானது. அப்படியொரு குரல். கோவிந்தராஜனிற்கிருப்பதைப் போல கணீரென்ற குரல் என்று சொல்ல முடியாது. ஆனால் அவருக்கிருந்ததைப் போல வசீகரம்மிக்க இனிமையிருந்தது.  குரலில் துள்ளலிருப்பதில்லை. மெல்லிய சோகம் கவிந்திருக்கும். இப்படியொரு குரலை வைத்துக் கொண்டு இத்தனை நாளும் எதற்காகப் பாரம் சுமந்தோமென பலரும் நினைத்திருப்பார்கள்.

 

kar-3.jpg

 

அதன் பின் வந்த நாட்களில் அவர்தான் ஆஸ்தான பாடகரானார். தினமும் குரலடைக்கும் வரை அவர் பாட வேண்டியிருந்தது. மாலை நேரமானதும் முகாமிலிருந்த சீனியர்களும் மண்டபத்திற்கு வரத் தொடங்கினர். சீனியர்களே எமது நிகழ்ச்சிகளைக் காண மண்டபத்திற் வருவது எமக்கெல்லாம் பிடிபடாத பெருமையைத் தந்து கொண்டிருந்தது. அவர்களும் ஆளாளுக்கு விருப்பமான பாடல்களைச் சொல்லிக் கொண்டிருந்தனர். அவரும் சலிக்காமல்ப் பாடிக் கொண்டிருந்தார்.

 

நூற்றிற்குமதிகமானவர்கள் குந்தியிருக்கும் மண்டபம் அவரது குரலால் நிறைந்திருந்தது. மெல்லிய சோகம் இழையும் பாடல்கள்தான் அவரது தேர்வுகளாகயிருந்தன. இயல்பாகவே அவரது குரலில் கவிந்திருந்த சோகத்தின் மெல்லிய இழைகள் எங்கள் எல்லோரது இதயங்களிலும் படரத் தொடங்கியது. பிரிவின் துயர் தாங்காமல் கனத்த இதயங்களையெல்லாம் அவரது குரல் ஆறுதல்படுத்திக் கொண்டேயிருந்தது.

 

சில நாட்களில் அணியின் எண்ணிக்கை அதிகரித்தது. பயிற்சிக்கு செல்ல இன்னும் மிகச்சிலரே தேவையென்ற நிலை வந்தபோது, அங்கிருந்தவர்களை அணிகளாகப் பிரித்தார்கள். வாணன் எங்கள் அணிக்கு வந்தார். பயிற்சிமுகாம்களிலுள்ள சிறுவர்கள் பெரியவர்களின் அன்பிற்குப் பாத்திரமாவது சகஜமானது. சிறுவர்களில் பெரியவர்கள் அன்பாகயிருப்பதற்கு பிரதானமாக இரண்டு காரணங்களிருந்தன. முதலாவது இயல்பானது. இரண்டாவது வில்லங்கமானது. வில்லங்கமான காரணத்தின் நிமித்தமாகத்தான் பயிற்சிமுகாம்களில் கடுமையான நடைமுறையொன்று பின்பற்றப்பட்டது. இரவுத் தூங்கத்தின் போது இரண்டு பாய்களிற்கிடையில் குறைந்தது ஒரு அடி இடைவெளியாவது இருக்க வேண்டும். பாய் இடைவெளியைக் கண்காணிப்பதற்கு இரவில் பயிற்சி ஆசிரியர்கள் வருவார்கள். (அப்படி வருபவர்கள் பற்றிய நிறைய கதைகளுமுண்டு. தங்குமிடத்தின் முன் வாசலில் படுத்து, பின் வாசலால் எழுந்து செல்வார்கள் என நகைச்சுவையாகக் குறிப்பிடுவார்கள்.) எனக்கு முதல் வகையான அண்ணர்கள் அள்ளை கொள்ளையாகக் கிடைத்தனர். வீட்டில் பெண்பிள்ளைகளைப் பொத்தி வளர்ப்பது மாதிரி இவர்கள், இரண்டாவது வகையானவர்களிடமிருந்து என்னைக் காத்தார்கள். துரதிஸ்டசமாக அவர்களில் யாருமே இன்று உயிருடனில்லை.

 

ஓரு நாள் விசித்திரமான சம்பவமொன்று நடந்தது. வாணன் பாடி களைத்திருந்தார். அவர் தொடர்ந்தும் பாட வேண்டுமென்பதற்காக, விருப்பமான ஏதாவதொரு பாட்டைப்பாடும்படி சுதா அண்ணை சொன்னார். எதுவும் பேசாமல் வாணன் சங்கடத்துடன் நெளிந்து கொண்டிருந்தார். சுதா அண்ணை வற்புறுத்திக் கேட்டதன் பின்னர்தான் சொன்னார், தனது விருப்பமான பாடல் சினிமாப்பாடலென. இயக்கம் பற்றிய எழுத்தோட்டத்தைக் காட்டும்போதே சினிமாப்பாடல் தடைசெய்யப்பட்டுள்ளதாக சுதா அண்ணை சொல்லியிருந்தார். இதனால் அந்தப் பாடலைக் கேட்பதற்கான சந்தர்ப்பம் நமக்கு இல்லாமல் போய்விடுமென நினைத்தேன். ஆனால் ஆச்சரியமாக, அந்தப் பாடலைப்பாடும்படி அவர் சொன்னார்.

 

தலையை மேலும் கீழுமாக அசைத்து தொண்டையைச் செருமி குரலைச்சரி செய்து கொண்டு, கைவிரல்களை முன்பக்கமாக கோர்த்துப் பிடித்துக் கொண்டு, தலையைச் சற்றே நிமிர்த்தி கண்களை மூடித்தான் எப்பொழுதும் பாட ஆரம்பிப்பார். அன்றும் அப்படித்தான். ‘பொன்வானில் மீனுறங்க’ என ஆரம்பித்தார்.

 

இப்படியொரு பாடலிருப்பதை அன்றுதான் அறிந்து கொண்டேன். பாடல் எனக்கும் மிகவும் பிடித்திருந்தது. யாராவதொருத்தியைக் காண நேர்ந்து, காதல் கொண்டிருந்தால், அவளிற்கு எழுதியிருக்கும் கடிதத்தில் இப்படியான பாடல்களைப் பாவிக்கும் வயதில் நானுமிருந்ததனால் அதிகமாகப் பிடித்திருக்கக்கூடும். என்னைப் போலத்தான் பெரும்பாலானவர்களுமிருந்தார்கள். அதன்பின்னர், தினமும் அந்த முகாமில் பொன்வானில் மீனுறங்கிக் கொண்டிருந்தது.

 

kar-4.jpg

 

சில நாட்களிலேயே பயிற்சிக்காக மணலாற்றுக்காட்டிற்குச் சென்றுவிட்டோம். அங்கு சுதா அண்ணை மாதிரியான யாருமிருக்கவில்லை. வாத்திமாரெல்லாம் கையில் கொட்டன்களுடன் திரிந்தார்கள். கேட்டுக் கேள்வியில்லாமல் விளாசிக் கொண்டிருந்தார்கள். காலை நான்கிற்கு விழிப்பு. ஆறுக்கு சத்தியப்பிரமாணம். எட்டரைவரை காலைப்பயிற்சி. ஒன்பதரைக்கு அரசியல், இராணுவத்தளபாட வகுப்பு. பன்னிரண்டரைக்குச் சாப்பாடு. இரண்டரைக்கு பயிற்சி. நான்கரைக்கு விளையாட்டு. ஆறுமணிக்கு ஆட்தொகைக் கணக்கெடுப்பு. அப்பொழுதே காட்டிற்குள் இருண்டுவிடும். அதன் பின்னர் நடமாட்டமெல்லாம் கிடையாது. பிறகு, எழரை மணிக்கு ஒரேயொரு தரம் சாப்பாட்டிற்கு வெளிக்கிடுவோம். இருபத்தியிரண்டு பேருள்ள அணிக்கு ஒரு அரிக்கன் லாம்பிருந்தது. காட்டிற்குள்ளிருந்த ஒற்றையடிப்பாதையில் வரிசையாக ஒருவரது தோளை மற்றவர் பிடித்தபடி சென்று சாப்பிட்டுவிட்டு வருவோம்.

 

பயிற்சிமுகாமில் புதிதாக அணி பிரித்த போது, சிறிவர்களான நாங்கள் ‘வக்குட்டான்’ ரீமிலும், வயதான வாணன் கடைசி அணியிலுமாகப் பிரிந்தோம். இந்தக்காலத்தில் சினிமாப்பாட்டிற்கு இடமேயிருக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்து, வாணனும் பாடினார்தான். ஆனால் இயக்கப்பாட்டுக்கள்தான் பாடினார்.

 

பிறகு எந்தச் சந்தர்ப்பத்திலும் இருவரும் ஒரே அணியில் இருக்கவேயில்லை. ஆரம்பப் பயிற்சி முடிவில் பிறிதொரு பயிற்சிக்காக புதிதாக அணி பிரிக்கப்பட்ட சமயத்தில் நான் முதலாம் ‘பிளாட்டூனி’லும், அவர் இரண்டாம் ‘பிளாட்டூனி’லுமிருந்தோம். இப்படி அணி பிரிக்கும் சமயங்களில் மிக நெருங்கிய நண்பர்கள் ஒரே அணியில் இருக்க வேண்டுமென்பதற்காக பல சுத்துமாத்துக்கள் செய்வோம். ஆனால் அவர் விடயத்தில் அப்படியெதுவுமே நான் செய்திருக்கவில்லையென்பதை இப்பொழுது நினைக்க வருத்தமாகயிருக்கிறது. நட்பைப் பேணத் தெரியாத சிறு வயதிலிருந்தமையினால் இது நடந்திருக்கலாம். என் வயதில் ஏராளம் புதிய நண்பர்கள் உருவாகியிருந்ததும் காரணமாகயிருந்திருக்கலாம்.

 

அப்பொழுது குடாரப்பில் கடல் சார்ந்த பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தோம். கடற்கரையில் தினமும் சில நிமிடங்கள் பேசிக் கொள்வோம். அப்பொழுதெல்லாம் மிகப் பரிவுடன் என்னுடன் நடந்து கொள்வார். சுகதுக்கங்களை விசாரிப்பார். பயிற்சின் கடுமையினால் மனச்சோர்வடையக் கூடாதென சொல்லிக் கொண்டேயிருப்பார். வயதில் மிக மூத்த அண்ணனொருவன் புத்திமதி சொல்ல, பவ்வியமாக் கேட்டுக் கொண்டிருக்கும் ஒருவனாகப் பல தடவைகள் குடாரப்புக் கடற்கரையில் நின்றிருக்கிறேன்.

 

பிறகு வந்த யாழ் இடப்பெயர்வைத் தொடர்ந்து, முல்லைத்தீவுச் சண்டைக்கான தயாரிப்புகள் நடந்தன. எங்கள் பயிற்சியும் இடைநிறுத்தப்பட்டு, சண்டைக்கான பயிற்சியில் ஈடுபட்டோம்.

 

இதுவரை ஒரே முகாமில் சில அணிகளாகயிருந்தது போய், இப்பொழுது பல படையணிகள் ஒன்றாகயிருந்தன. பயிற்சிமுகாமில் ஒவ்வொரு அணியாகத்தான் செயற்பட வேண்டும். மற்ற அணியுடன் சாதாரணமாக கதைக்க முடியாத நிலையெல்லாமிருந்தது. இப்பொழுது அந்த நிலைமாறி, படையணியாகச் செயற்பட்டோம். குறிப்பாக முன்னிரவுகளில் எங்கள் படையணி நண்பர்கள் ஒன்றாகயிருக்க ஆரம்பித்தோம். இந்த நாட்களில் மீளவும் ‘பொன்வானில் மீனுறங்க’ ஆரம்பித்தது.

 

அப்பொழுதுதான் அந்தப் பாடலை பாடி முடித்திருப்பார். நான் அந்த இடத்தில் இருந்திருக்கமாட்டேன். சற்று தாமதித்து வந்து, அந்தப் பாடலைப் பாடும்படி கேட்டால், அவர் சலிப்பின்றிப் பாடினார். இரண்டாவது முறையாகக் கேட்பதற்கு தயாரில்லாத அவரது நண்பர்கள் எவ்வளவு சொன்னாலும், அவர் பாடினார். முல்லைத்தீவுச் சண்டைக்காக புறப்படும்வரை இது நடந்து கொண்டிருந்தது.

1996 ஜூலை நடுப்பகுதியில் திடீரெனப் புறப்பட்டோம். அளம்பில் பகுதியில் இரண்டு மூன்று நாட்களிருந்த பின்னர், சண்டையிலீடுபட்டோம்.

 

அனேகமாக அந்த மாதம் 21ம் திகதியாக இருக்க வேண்டும். முல்லைத்தீவு இராணுவத்திற்கான உதவி அணிகள் அளம்பிலில் தரையிறங்கின. அதற்கு ‘திரிவிஹடபகர’ என்று இராணுவம் பெயரிட்டது. ஏற்கனவே அளம்பிலில் கடற்புலிகளின் சிறிய அணியொன்றும், சிறுத்தைப்படையணியும் நிலை கொண்டிருந்தது. அவர்களது எதிர்ப்பைச் சமாளித்துக் கொண்டு இராணுவம் தரையிறங்கிவிட்டது. அதன் பின்னர்தான் எங்கள் படையணி சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது.

 

kar-5.jpg

 

முல்லைத்தீவு நகர மையத்திலிருந்து கடற்கரையோரமாக அலம்பிலை நோக்கி ஓடினோம். கடலலையில் கால்கள் புதைய ஓடிக் கொண்டிருந்தோம். ஆழ் கடற்பரப்பிற்கு மேலாக ‘பைற்றர்’ ஒன்று சுற்றிக் கொண்டிருந்தது. கரையோரமாக அணியொன்று நகர்ந்து கொண்டிருந்ததை அவதானித்துவிட்டது. எங்களை இலக்க வைக்கத் தொடங்கியது. வலதோ இடதோ என்று நினைவில்லை. ஏதோ ஒரு பக்கம்தான் சுடுகுழலிருந்தது. ஒருமுறை தாக்கினால் சிறிய வட்டமொன்றடித்துத்தான் அடுத்த தடவை தாக்க வேண்டும். (தாக்கும் சமயத்தில் வானத்தில் நிலையாக நிற்கவும் கூடியது). சிறிய வட்டமடித்து வட்டமடித்து தாக்கத் தொடங்கியது. இப்பொழுது நினைத்துப் பார்க்க மட்டுமல்ல, அப்பொழுது கூட அதொரு நகைச்சுவையான சம்பவமாகவேயிருந்தது.

 

‘பைற்றர்’ தனது சுடுகுழல் பக்கத்தை எங்கள் பக்கம் திருப்பியதும் இலேசாகச் சரியும். சிறிய சிறிய கோடுகளாக ஆறேழு புகைக் கோடுகள் சமாந்தரமாகக் கிளம்பும். உடனடியாக நாங்கள் தரையில் படுத்துவிடுவோம். தகரங்கள் உராய்வதால் உண்டாகும் ஒலியையொத்த ஒலி வரும். அதன் பின்னால் குண்டுகள் வரும். வெடித்ததும் மறுபடியும் ஓடத் தொடங்குவோம். கடற்கரைக்கும் கரையிலிருந்து ஐம்பது மீற்றர்கள் தொலைவிலிருந்த பனங்கூடல்களிற்குமிடையிலான சிறிய நிலப்பகுதியை ‘பைற்றறில்’ இருந்த சிப்பாயினால் இறுதிவரை அனுமானிக்கவே முடியவில்லை. எந்தச் சேதாரமுமின்றி அளம்பிலையடைந்தோம்.

 

அதுவரை இராணுவத்தின் விசேடபடையணி ஒரேயொரு தரையிறக்கத்தைத்தான் செய்திருந்தது. கடற்கரையை அண்டிய பகுதியில் நிலையெடுத்திருந்தார்கள். சின்னச்சின்ன பற்றைக்காடுகளாலான பகுதியது. இடையிடையே வெட்டவெளிகளாகவுமிருந்தன. அந்தப்பகுதிக்கப்பால் தென்னந்தோப்புகள். அதற்ககுள் புகுந்துவிட்டோம். நீண்ட தொலைவை ஒடிக்கடந்ததனால் அதிக களைப்பாகயிருந்தது. தாக்குதலுக்கான திட்டங்களை பொறுப்பானவர்கள் வகுக்கும் வரை கிடைத்த சிறிய இடைவெளியில் தென்னைகளுடன் சாய்ந்து உட்கார்ந்துவிட்டோம். இடையிடையே செல்கள் விழுந்து கொண்டிருந்தன. அடுத்த தரையிறக்கத்தை செய்யவிடாமல் கடற்புலிகள் கடலில் தடுத்துக் கொண்டிருந்தனர். இதனால் கடற்கரைப்பக்கம் அதிர்ந்து கொண்டிருந்தது. தென்னந்தோப்பை விட்டு சற்று வெளியே வந்து பார்த்தபோது, சமுத்திரம் தீப்பற்றியெறிந்து கொண்டிருந்த அதிசயங்களையெல்லாம் காணக் கிடைத்தது.

 

நானும் வசதியான தென்னையொன்றுடன் சாய்ந்து விட்டேன். களைப்பு சிறிது ஆறிய பின்னர்தான் கவனித்தேன், என்னிலிருந்து சிலமீற்றர்கள் தொலைவில் வாணன் உட்கார்ந்திருந்தார். எனக்கு உற்சாகம் பிறந்துவிட்டது. இடம், சூழல் பற்றிய பிரக்ஞையெதுவுமேயிருந்திருக்கவில்லை. செல் விழுந்து கொண்டிருக்கிறது. அடுத்த சில நிமிடங்களில் இராணவம் மீது தாக்குதல் நடத்தப் போகிறோம். எல்லோரும் பரபரப்பாகயிருக்கிறார்கள்.

 

நான் வாணனிடம் ஒடிச் சென்றேன். அவர் மிகச் சோர்வாகயிருந்தார். தலை ஒரு பக்கமாகச் சாய்ந்திருந்தது. என்னைக் கண்டதும் மிக அன்பாகச் சிரித்து தனக்கு மிக அண்மையாக உட்காரச் செய்தார். நான் வாய் திறந்து முதலில் உச்சரித்த வசனம், அந்தப் பாடலைப் பாடும்படி கேட்டதுதான்.

 

அவருக்கு உடனடியாகவே எரிச்சல் வந்திருக்க வேண்டும். முகத்தில் தெளிவாகத் தெரிந்தது. சலித்தபடி முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டார். என்னிடம் அன்றுதான் முதன்முதலாக முகத்தைச் சுளித்திருந்தார். பிறகு ‘உனக்கென்ன விசரா.. என்ன நடக்குதென்டே விளங்கயில்லையா’ என்றார் சினந்தபடி. எனக்கு உற்சாகம் வடிந்தது மட்டுமல்ல, எனது வேண்டுகொளொன்று அவரால் ஏற்றுக் கொள்ளப்படாமல் போன கணத்தை எப்படி எதிர் கொள்வதென்றே தெரிந்திருக்கவில்லை. மிகுந்த தடுமாற்றமாகயிருந்தது.

 

அவருக்கு அது புரிந்திருக்க வேண்டும். சட்டென என் கையைப்பிடித்தார். குறை நினைக்க வேண்டாமெனவும், தான் மிகக் களைத்திருப்பதாகவும், இந்தச் சண்டை முடிந்ததும் பாடிக் காட்டுவதாகவும் கூறினார். அவரது குரல் இறைஞ்சுவதைப் போலிருந்தது. சரியென எழுந்து சென்றுவிட்டேன்.

 

 

kar-6.jpg

 

அப்பொழுது தென்னந்தோப்பிற்குள் வேறொரு பிரச்சனையும் நடந்து கொண்டிருந்தது. பின்னாளில் ஆனந்தபுரச் சண்டையில் மரணமடைந்த கேணல் ராஜேஸ் எங்கள் படையணியின் பொறுப்பாளாகயிருந்தார். எங்களது படையணியுடன் மன்னாரின் விக்ரர் படையணியும் இணைக்கப்பட்டு தற்காலிகமாக உருவாக்கப்பட்டிருந்த தாக்குதலணிக்கு பானு பொறுப்பாகயிருந்தார். அடுத்த நிலையில், அப்பொழுது மணலாறு மாவட்டத் தளபதியாகயிருந்த அன்ரன் இருந்தார். பானு முல்லைத்தீவில் எஞ்சிய அணிகளுடன் நின்றார். இங்கே வந்த அன்ரனும் ராஜேசும் வாய்த்தர்க்கப்பட்டுக் கொண்டிருந்தனர்.

 

அதாவது பட்டப்பகலில் வெட்டைவெளியில் நாங்கள் தாக்குதல் நடத்தக் கூடாதென்பது ராஜேசின் வாதம். ஏனெனில், இராணுவம் பாதுகாப்பாக பதுங்கியிருக்கிறது. நாம் வெட்டைவெளியில் நகர்வது தற்கொலைக்குச் சமமானது. ஆனால் அன்ரன் இதனைக் கணக்கெடுக்கவில்லை. உடனடியாகத் தாக்குங்கள் என்பது அவரது கட்டளை. தனது அணியை இறக்கமாட்டேன் என பகிரங்கமாகவே ராஜேஸ் வாதம் செய்தார். இறுதியில் கட்டளை ஜெயித்தது. எந்த விளைவுகளிற்கும் தான் பொறுப்பல்ல என ராஜேஸ் விலகிக்கொள்ள, எங்களணியை இராணுவத்தின் பகுதிக்குள் முன்னேறுமாறு அன்ரன் கட்டளையிட்டார்.

 

வாணன் இருந்த பிளாட்டூன் முதலில் இறங்கியது. எங்களது பிளாட்டூன் அடுத்ததாகச் சென்று பனைகளின் பின்பாக நிலையெடுத்தது. இராணுவத்தின் எந்த அசைவும் தெரியவில்லை. துப்பாக்கிளை நீட்டியபடி, எதிரேயிருக்கும் பற்றைகளிற்குள் யாராது இருக்கிறார்களா என்பதை உற்றுப்பார்த்தபடி அவர்கள் சென்று கொண்டிருப்பதை பதட்டத்துடன் அவதானித்துக் கொண்டிருந்தோம்.

 

இராணுவமும் இரை நன்றாகச் சிக்கும் வரை காத்திருந்திருக்கிறது. தமக்கு மிக அருகில் வரும்வரை காத்திருந்து தாக்கத் தொடங்கினார்கள். முன்னுக்குச் சென்றர்கள் சுருண்டு சுருண்டு விழுந்தார்கள். திருப்பித் தாக்குதவதற்கான எந்த அவகாசமும் அவர்களிற்கிருக்கவில்லை. நம்மவர்கள் முன்னால் நிற்பதால் பின்னாலிருந்தவர்களும் உடனடியாகத் திருப்பித் தாக்க முடியாமல் போய்விட்டது.

 

ஆரம்ப வெடிகளிலொன்று வாணனையும் தாக்கியது. அனேகமாக அவரது விலாப்பகுதியைத் தாக்கியிருக்க வேண்டும். அவர் சுருண்டு விழுவதை அதிர்ச்சி தீராமல் பார்த்துக் கொண்டு நின்றேன்………..

 

பின்னாட்களில் விடுதலைப்புலிகள் வெளியிட்ட ஒளிவீச்சு வீடியோ சஞ்சிகையின் ஆரம்ப இசை ஒலிக்கும் பொழுது உணர்ச்சிகரமான காட்சியொன்று காட்டப்பட்டது. காயம்பட்டு தரையில் வீழ்ந்த போராளியொருவன் சிரமப்பட்டு மறுபக்கம் புரண்டு, காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களிற்கு கையசைப்பான்.  இந்த உலகத்திலிருந்து விடைபெறுவதைப் போலிருந்தது.

 

அதுதான் வாணனின் இறுதி அசைவுகள். ஆரம்ப வெடிகளிலொன்று அவரையும் தாக்கியது. சுருண்டு விழுந்தவர், ஒரு கையினால் காயம்பட்ட பகுதியைப் பிடித்துக் கொண்டு, மறுபக்கம்- எங்கள் பக்கமாகப் புரண்டார். பின்னால் நின்ற எங்களைப் பார்த்து, இப்படிக் கையசைத்தார். வீடியோக் கமரா வைத்திருந்த கோபி அதனைப் படம் பிடித்துவிட்டான்.

 

பின்னாட்களில் அந்தக் கையசைவை வீடியோக்களில் காண நேர்கையில்தான் அதற்கு இன்னொரு அர்த்தமிருப்பதை உணர்ந்தேன். சம்பவ இடத்தில் அதற்கு வேறொரு அர்த்தமிருந்தது. யாரையும் வரவேண்டாமென்று அப்பொழுது அர்த்தம் கொண்டோம்.

 

அதற்குப் பிறகு அந்தத் தாக்குதல் முயற்சியை கைவிட்டு, வீழ்ந்து கிடந்தவர்களை மீட்பதில் கவனம் செலுத்தினோம். அன்று எங்கள் தரப்பில் நாற்பது பேர் மரணமடைந்தார்கள். பத்து வரையான உடல்களை எடுக்கவே முடியவில்லை. (ஐந்து நாளின் பின் இராணுவம் விரட்டப்பட்டதும், சில அழுகிய சடலங்களையும், தகடுகளையும் கண்டெடுத்தோம்)

 

அன்று தோல்வியடைந்த முயற்சியில், இரண்டொரு நாட்களின் பின்னர் வெற்றி கொண்டோம். இடைப்பட்ட நாட்களில் எதனையும் யோசிப்பதற்கு அவகாசமிருந்திருக்கவில்லை. சண்டை முழுமையாக முடிந்ததன் பின்னர்தான், அவரது மரணத்தின் இழப்பை முழுமையாகப் புரிந்து கொண்டேன்.

 

யாராலும் உட்காரப்பட முடியாத பல நாற்காலிகள் இப்பொழுது மனதில் காலியாக உள்ளன. உட்கார்ந்திருந்தவர்கள் யாருமிப்போதில்லை. நாற்காலியொன்று காலியான முதலாவது சந்தர்ப்பமது. காலியான நாற்காலியுடன் நாட்களைக் கடத்துவது அவர் விடயத்தில்தான் ஆரம்பித்தது.

 

அதன் பிறகு தொடர்ந்து இன்றுவரையும் அந்தப்பாடலைக் கேட்டு வருகிறேன். ஒரு வரி விடாமல் மனதில் பதிந்துள்ளது. ஆனால் ஜேசுதாஸின் குரல் பதியவேயில்லை. தண்ணீர்ப் போத்தலில் தாளம் தட்டியபடி பாடும் அந்தக் குரல்தான் பதிந்துள்ளது. திரும்பி வராத குரல் அது!

 

http://eathuvarai.net/?p=2489

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாணன் பாடிய பாடல்:

 

http://www.youtube.com/watch?v=SSLVxlNmg8I

மனதைக் கனக்க வைத்த குரலை இணைத்ததிற்கு மிக்க நன்றிகள் கிருபன் .

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கிருபன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிருபன் ஒரு பேய்க்காய்தான் :)

இணைப்புக்கு நன்றி..

கதையை பற்றி அரைகுறையாக கருத்து சொல்லாமல், சிறந்த கதை/படைப்பு என்று சொல்லி நிறுத்தி கொள்ளுகிறேன்.   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
கிருபன் ஒரு பேய்க்காய்தான் :)

 

:unsure:  ஏனென்றும் சொல்லலாமே எரிமலை!

 

யோ. கர்ணன் கதைகளில் வருபவை இட்டுக்கட்டல்கள் அல்ல என்று நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கர்ணனை மாதிரி ஆட்களை இயக்கத்தில் வைத்திருந்தால் இயக்கம் முள்ளி வாய்க்காலில் தோற்காமல் என்ன செய்யும்?...தலைவர் உறுதியானவர் என்ட படியால் மு.வாய்க்கால் வரைக்கும் தாக்குப் பிடிச்சார்...கர்ணன் மாதிரி ஆட்கள் நாளைக்கு புலி வந்தால் அரசையும்,ஆமியைப் பற்றியும் இப்படித் தான் கதை எழுதுவினம்...மற்றப் படி கதையைப் பற்றி சொல்வதானால் வழமையான கர்ணனின் நக்கல் நையாண்டி கதை வித்தியாசமாக ஒன்றுமில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.