Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நந்தியாவட்டை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நந்தியாவட்டை

 

 
பர்வதம் பாட்டியின் தொணதொணப்பு நின்றபாடில்லை. நேற்று காலையில் இருந்து துவங்கிய இந்தத் தொணதொணப்பு நிற்காது போலிருக்கிறது.  வயதான காலத்தில் பாட்டிக்கென்று என்ன இருந்து விடப் போகிறது? உடல் நலம் பேணுவதில் ஏதாவது உதவி கேட்பாளாயிருக்கும்.
“என்ன பாட்டி? இப்படித் தொந்தரவு குடுக்குற ஆளாயிருந்தா, நீ அத்தையோட வீட்லயே இருந்துக்க. இங்க வராத. இப்ப என்ன வேணும் உனக்கு?”
 
“தங்கம், டேய்… இராசா, உங்க தாத்தன் நெனப்பைக் கூட்டியாறப் பொறந்த ஆளுடா நீ. பாட்டிக்குக் கண்ணு ரெண்டும் எதோ மசமசன்னு இருக்குடா.  விஜயம்மா வீட்டுக்குப் போயி நாஞ்சொன்னேன்னு சொல்லு, நந்தியாவட்டைப் பூ பறிக்க விடுவாங்க. கொஞ்சம் நிறையவே பறிச்சுட்டு வாடா!”
பாட்டிக்காகப் பூப்பறிக்க விஜயம்மா வீட்டுக்குப் போனான். கம்பிகளாலான வாயிற்கதவு உள்பக்கமாகத் தாளிடப்பட்டு இருந்தது. திரும்பிப் போகலாமா, அல்லது உள்பக்கமாகக் கைவிட்டுத் திறந்து கொண்டு உள்ளே போகலாமா என யோசிக்க முற்பட்ட கணத்தில்தான் கவனித்தான். கைக்குழந்தையை இடுப்பில் வைத்தபடி நின்றிருந்தாள் அக்கா. கன்னத்தில் குழி விழச் சிரித்தது இடுப்பில் இருந்த அவளது குழந்தை.
“நான்… வந்து… இரங்காச்சாரி கடைக்குப் பக்கத்துல இருக்குற சீதாராமய்யர் பையன் வசந்த்!”
“தம்பி, உள்ள வாப்பா. உன்னை நல்லாத் தெரியும். உள்ள வாப்பா. உங்க அக்கா சந்திரா நல்லா இருக்காளா? பர்வதம் பாட்டி எப்படி இருக்காங்க? இப்பவெல்லாம் இராமர் கோயிலுக்கு வர்றதே இல்லை போல!”
 
“பாட்டி, கொஞ்சநாள் சுசீலா அத்தை வீட்டுக்கு கும்பகோணம் போயிருந்தாங்க அக்கா!”
“உட்காரு. வர்றேன்!”, முன்னறையில் இருந்த பிரம்பு இருக்கையைக் காட்டிச் சென்றிருந்தாள் அவள். இறக்கிவிடப்பட்ட குழந்தை அங்கிருந்த பந்தினை எடுத்து அவனை நோக்கி எறிந்தது. பதிலுக்கு அவனும் குழந்தையை நோக்கி உருட்டி விட்டான்.  சற்று நேரத்தில் விஜயம்மா பாட்டி வந்தாள், “வாப்பா! சங்கரூ…”  
 
“பாட்டி, நான் வசந்த். எங்கண்ணன் பேர்தான் சங்கர். அவன் சிந்தாமணியில அக்கவுண்டன்ட் வேலை பாக்குறான் பாட்டி!
 
”அட, சீதாராமனோட ரெண்டாவது பையனா நீயி? ஆளுகெல்லாம் ஒசரத்துக்கு வந்துட்டீங்கப்பா. ஆமா, சொர்க்க வாசல் திறப்புக்கு வந்ததுதான். அப்புறம் மேலு பர்வதத்தைப் பாக்கவே முடியலையே? உடம்புக்கு சொகமில்லையா கண்ணூ?”
 
“சுசீலா அத்தையப் பார்க்கப் போயிருந்தாங்க பாட்டி!”
“ஓ, அதான பார்த்தேன்!”, பாட்டி சொல்லி முடிக்கவும் தண்ணீர்க் குவளையுடன் நின்றிருந்தாள் அக்கா. “லோக்க போய்யி, பின்னாண்டிகி காப்பி ஏசி எத்திகினி ஒச்சேனு சுதா! மாட்டாடிகினு உண்டு நுவ்வு”, விறுக்கென எழுந்து சென்றாள் பாட்டி. பாட்டியின் மாட்லாடுதலில் இருந்து தெரிகிறது  அந்த அக்காவின் பெயர் சுதா என்று.
 
“தம்பி, நீ எந்தப் பள்ளிக்கூடத்துல படிக்கிற? மணீஸ் ஸ்கூலா?”
“சபர்பன்தானுங்க அக்கா. ப்ளஸ் ஒன்!”
 
“அட, ஒட்டுமொத்த இராம்நகரே சபர்பன்தான் போலிருக்கு! உங்க அக்காவும் நானும் பத்து வருசம் ஒரே வகுப்புதாம்ப்பா. சரியான லொல்லு பிடிச்சவ அவ!”, சொல்லிச் சிரித்தாள் சுதா. என்னவென்று புரியாமலே அருகிலிருந்த குழந்தையும் வாய் விட்டுச் சிரித்தது. நடந்து கொண்டிருந்த அளவளாவலில் தன்னையும் இணைத்துக் கொண்டாள் புரூக்பாண்ட் காப்பியுடன் திரும்பி வந்த விஜயம்மா பாட்டி.
சற்று நேரம் வீட்டு முன்னறையில் பேசிக் கொண்டிருந்த அவர்கள், வீட்டின் முன்புறமிருந்த பூக்காட்டில் இருக்கும் நந்தியாவட்டைப் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தார்கள்.  சுதா, உள்ளே சென்று பொரி வாங்கி வந்த மழைக்காகிதப் பையில் பூக்களை இட்டு நிரப்பிக் கொடுத்தாள்.
 
“வசந்த், எனக்கும் ஒரு உதவி வேணும். கல்கியில ஜெயலலிதா எழுதின உறவின் கைதிகள் தொடர்கதையச் சேகரம் செஞ்சி பைண்ட் போட்டு வெச்சிருக்கிறதா மங்களாதேவி சொன்னா. உங்க பக்கத்து வீடுதானே? நாளைக்கு இந்தப் பக்கம் நீ வந்தியானா, அதை வாங்கிட்டு வந்து தர முடியுமா வசந்த்?”
 
”சரிங்க அக்கா, கண்டிப்பா வங்கிட்டு வர்றேன்!”, அன்று துவங்கியது சுதா அக்காவுக்கும் அவனக்குமான பிணைப்பு.
 
அக்காவுக்கு ஒரே மகள் சுமதி. சுமதிக்கு அப்பா இல்லை என்பதைவிட, அக்காவுக்குக் கணவன் இல்லை என்பதுதான் ஊராருக்கு முதன்மை.  சுதா அக்காவைப் பற்றி சுதா அக்காவிடமே கேட்டுத் தெர்ந்து கொள்ள மனம் வரவில்லை வசந்த்துக்கு. மயிலாடு துறையிலிருந்து அவ்வப்போது வரும் சந்திராக்கா சொல்லித்தான் தெரிந்து கொண்டான் நிறைய. விஜயம்மா பாட்டி, சுதா அக்கா,  சிறுமி சுமதி என அவர்கள் குடும்பத்தைப் பார்ப்பவர் எவர்க்கும் கனிவு பிறக்கும்.
 
பின்னாளில் வசந்த்துடன் படிக்கும் காட்டூர் சேகரும் அவனுடன் சேர்ந்து கொண்டான். வசந்த்தும் சேகரும் அவ்வப்போது சுதா அக்காவைப் பார்க்கப் போவார்கள். குறிப்பாக, நூலகத்தில் இருந்து நாவல்கள் பலவற்றை எடுத்து வரச்சொல்வாள் அக்கா.  எடுத்துத்தருவதும், பிறகு கொண்டு போய் நூலகத்தில் சேர்ப்பதுமாகத் தொடர்ந்தது அவர்களது நட்பு. வசந்த் சி.ஐ.டியில் மெக்கானிக்கல் படிக்கப் போனான். சேகர், பி.எஸ்.ஜியில் டெக்ஸ்டைல்ஸ் படித்தான். தன் கணவன் விட்டுச் சென்ற மாவு அரைக்கும் இயந்திரங்களுக்கான உதிரிபாகங்களை வாங்கி விற்கும் தொழிலைப் புதுப்பித்திருந்தாள் சுதா அக்கா. இதன் நீட்சியாக, அவர்கள் மூவருக்குமிடையில் உண்டான போக்குவரத்தும் படிப்படியாக அருகிப் போனது.
 
ஒருநாள் வசந்த், சேகர் இருவரையும் சாப்பிட அழைத்திருந்தார்கள் விஜயம்மா பாட்டியும் சுதா அக்காவும். இருவருமாகச் சேர்ந்து விருந்து பரிமாறி அசத்தினார்கள். விஜயம்மா பாட்டிதான் எதெதோ சொல்லிச் சிரிக்க வைத்துக் கொண்டே இருந்தாள். விடை பெறும் தருவாயில், சேகருக்கும் வசந்த்துக்கும் தனித்தனியாகப் பரிசொன்றைக் கொடுத்தாள் சுதா அக்கா.  சிவசங்கரி எழுதிய “அவன்” எனும் நாவல்தான் அது.  அவர்களிருவரும் அதைப் படித்தார்களா எனக் கண்டறிவதற்காய்,  பின்னாளில் வாய்வழித் தேர்வெல்லாம் நடத்தி அவர்களைச் சோதித்துப் பார்த்தாள் சுதா அக்கா. கல்லூரி மாணவர்கள் என்றாலே நடத்தை தவறக் கூடியவர்களெனும் மனோபாவம் வெகுவாகப் பரவியிருந்த காலகட்டமது.
 
காலவெள்ளத்தில் ஆளுக்கொரு திசையாக அடித்துச் செல்லப்படுவார்கள் என்பதற்கு அவர்களும் விதிவிலக்காய் இருந்திருக்கவில்லை.  சுதா அக்கா இன்னும் அதே வீட்டில்தான் வசித்து வருகிறாள். சேகர், பட்டப்படிப்பை முடித்திருக்கவில்லை. அவ்வப்போது செய்யும் வேலைகளை மாற்றிக் கொண்டு வந்தவன், தற்போது நூற்பாலைகளுக்கான உதிரிபாகங்களை உற்பத்தி செய்து உள்ளூர்ச் சந்தையில் வணிகம் செய்கிறான்.  வசந்த் எனும் நாமகரணம் கொண்டவனாகிய அவனோ, சில பல நாடுகளைச் சுற்றி வந்து தற்போது அமெரிக்காவில் இருக்கிறான்.
 
”ஏங்க, தீவாளியன்னைக்கு என்ன தொணதொணன்னு போன்ல ஒரே பேச்சு? வந்து கொழந்தைகளைக் கவனிங்க!”, எப்போதும் போல அரற்றி மிரட்டினாள் அவனுடைய ஆத்துக்காரி.
“இரு இன்னும் ஒன்னே ஒன்னு.  காட்டூர் தடியனுக்கு மட்டும் தீவாளி வாழ்த்து சொல்லிட்டு வந்திடுறேன் கண்ணம்மா!”
 
பலமுறை அழைத்தும் சேகர் தொடர்புக்கு வருகிறான் இல்லை. அவனுடைய மனைவியின் அலைபேசி எண்ணைத் துழாவி எடுத்து அழைத்தான். “செல்வி, நமஸ்காரம்! தீவாளி எல்லாம் வந்துடுத்தா? சேகர் ஏன் போனை எடுக்க மாட்டேங்குறான்?”
 
“அண்ணா, ஹேப்பி தீவாளி! அவர் மாடியில் இருக்கார். இருங்கோ குடுக்கறேன்!”
“டே… ஹேப்பி தீவாளிடா! நல்லா இருக்கியா?”
“இருக்கன்டா.  கொஞ்சம் மூடு அவுட், அதான்!”
“ஏண்டா, சொல்லு, என்ன விசயம்?”
“நம்ம விஜயாப் பாட்டி சுதா அக்கா இல்ல? அவங்க நேத்து இராத்திரி சூசைடு அட்டெம்ப்ட்டாம்டா! சபர்பன் ஸ்கூல் வட்டாரம் பூரா இதாம்பேச்சு”
 
“என்னடா சொல்லுற? அவங்க மகள் எல்லாம் கல்யாண வயசுல இருப்பாங்களேடா இப்ப?”
“ஆமாம். அவங்க சொந்தக்காரங்க தொல்லை இன்னும் தீர்ந்தபாடில்லை போலிருக்கு. என்ன செய்யுறதுன்னே தெரியலை. நான் அவங்க வீட்டுக்குப் போயி நாலஞ்சி வருசம் ஆச்சி. போனா, என்னையும் சேர்த்துக் கதை கட்டி வுட்றுவாங்கன்னு போறது இல்லை! ப்ச்!!”
“சேகர் நாயே, நாம ஏதாவது செய்யணும்டா. சந்திராக்கா தீவாளிக்கு வந்திருக்காங்க. நான் கூப்பிட்டுச் சொல்லுறேன். நீ இப்ப காட்டூர்லதான இருக்க? போடா, சந்திராக்காவைக் கூட்டிட்டுப் போயி சுதாக்காவைப் பாருடா, ப்ளீஸ்!”
 
”பார்த்து என்னடா செய்ய முடியும்? ஆறுதல் சொல்லலாம். தீவாளி முடிஞ்சதும் எல்லாரும் கலைஞ்சி ஆளுக்கொரு திசையில ஓடப் போறோம்??”
 
“இல்ல. நீ மொதல்ல என்ன காரண காரியம்னு தெரிஞ்சி வை. அக்காவோட ஒப்புதலின் பேரில், தற்கொலை முயற்சிக்குக் காரணமானவங்களை சட்டத்தின் முன்னாடி நிறுத்துறோம்! ’விடோ லேடீஸ்’னா இளப்பமா? உனக்கும் மகளுக இருக்காங்க. எனக்கும் இருக்காங்க. இதே நிலைமை நாளைக்கு நம்ம குழந்தைகளுக்கும் வரலாமில்லையா?”
 
“இப்பத்தான்டா எனக்கு மனசு கொஞ்சம் நல்லா இருக்கு. இதா, இப்பவே போறன்!”
சந்திரா அக்கா,  தேசிய வங்கி ஒன்றில் மேலாளர். வசந்த்தின் சுக துக்கங்கங்கள் அனைத்தையும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு சிலருள் இவளுக்கும் தனியிடமுண்டு. எல்லாமும் சந்திராக்கா, சேகர் வழியாகவே நடந்தேறியது.
 
சுதா அக்கா, மிகப் பெரிய வெற்றியை அடைந்திருக்கிறாள். கணவன் விட்டுச் சென்ற கடையை மீட்டுத் தானே நடத்தி வருகிறாள். ஆனாலும் ஊராருக்கு அவளொரு விதவை! யாரோடு வேண்டுமானாலும் இணைத்துப் பேசலாம்.  அக்கா, தங்கை எனும் உறவின் பேரில் எப்போது வேண்டுமானாலும் காசு, பணம் கேட்டு உருட்டி மிரட்டலாம். தன் வீட்டு வேலைகளுக்கு அவளையும் அவளது மகளையும் வந்திருந்து வேலை செய்யச் சொல்லலாம். தங்களுக்குச் சுமையாக இருக்கும் பெரியவர்களை அவளது வீட்டில் கொண்டு போய்த் தள்ளி விட்டு வரலாம்.  ஏனென்றால் அவளொரு விதவை.
 
”அக்கா, நான் அமெரிக்காவுல இருந்து சபர்பன் சந்திரகலாவோட தம்பி வசந்த் பேசுறன்க்கா!”
“டேய், இன்னும் என்னை ஞாவகம் வெச்சிருக்கியாடா? சந்திரா, சேகர் எல்லாரும் இந்த ஒருவாரமா எங்கூடத்தான். இனிமே எனக்கு சாவே கிடையாதுடா.  எனக்கெதோ ஒரு புதுப்பிறவி எடுத்திருக்குறா மாதிரித்தான்டா இருக்கு. எப்படா வசந்த் ஊருக்கு வருவ? உன்னைப் பார்க்கணும் போல இருக்குடா. விஜயம்மா இருக்குற வரைக்கும் உன்னையும் உங்கண்ணன் சங்கரையும் அடிக்கடி நினைச்சுக்கும் தெரியுமா? கோவிச்சக்காதடா வசந்த்!  நீ…  ஒரு…, ஒரு மணி நேரங்கழிச்சுக் கூப்பிடுறியா? யாருன்னு தெரியலை, நந்தியாவட்டைப் பூ வேணுமின்னு கேட்டு அந்தப் பையன் வந்திருக்கான்னு நினைக்கிறேன். மறுபடியுந் தவறாமக் கூப்புடு, செரியா?!”
 
“நந்தியா வட்டைப் பூக்கள் என்றென்றும் அக்காவைப் பார்த்துக் கொள்ளும்!”, தனக்குத் தானே பேசிக் கொண்டவன் சுற்றிலும் முற்றிலும் பார்த்தான்.  உவப்புக் கொண்டவனுக்கு உடனே தன் மகள்களையும் மனைவியையும் பார்க்க வேண்டும் போல இருந்தது. மிசிசிப்பி ஆற்றங்கரைக் காற்று அவன் முகத்தில் பட்டுத் தெறிப்பதை அனுபவித்தபடி, தன் குழந்தைகளை வாரிக் கொஞ்சியணைத்து முத்தமிடும் நோக்கில் மாடியிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தான் வசந்த்.
 
அங்கே மற்றுமொரு நட்புக் கேடயமொன்று உருபெற்றுக் கொண்டிருந்தது; நந்தியாவட்டை மலர்கள் பூத்திருக்கும் விஜயம்மா வீட்டுப் பூக்காட்டில்!!
 
நன்றிவல்லமை

 

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி நுனா.

  • கருத்துக்கள உறவுகள்

சமூகத்தின், மாறுபட்ட பார்வைகளை, நந்தியாவட்டைப் பூக்களை வைத்துக் கதை பின்னிய விதம், அருமை!

 

நன்றிகள், நுணாவிலான்!

இணைப்பிற்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி .......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.