Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்களுக்குக் கேட்டதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்குக் கேட்டதா?
கார்த்திக் பாலசுப்பிரமணியன்


என்னிடமிருந்து அப்படியொரு கேள்வியை அந்தப் பெரியவர் எதிர்பார்க்கவில்லை போலும்.

பார்வையால் மேலிருந்து கீழாக என்னை அளந்தவாறே, “என்ன?” என்றார்.

மீண்டும் ஒரு முறை அவரிடம் அழுத்திக் கேட்டேன். “அதாங்க டி.வி, ஜன்னல் இல்லாத ஒரு ரூம் வேணும். மூணு நாளைக்கு. இருக்குதா? ” என்றேன். வழுக்கைத் தலை. ஒடிசலான தேகம். நெற்றியை நிறைத்த பட்டை. அவரைப் பார்த்தால் அந்த லாட்ஜில் வேலை செய்பவர் போன்றுதான் தெரிந்தது.

“கொஞ்சம் இருங்க.. பாத்துதான் சொல்லணும்” என்று சொல்லிவிட்டு அருகிலிருந்த ஒரு நீளமான நோட்டுப் புத்தகத்தை எடுத்துப் பார்க்கத் தொடங்கினார். அந்த நோட்டைப் பார்த்ததை விட என்னை நோட்டம் விட்டதுதான் அதிகம்.

” ஐயா.. நீங்க பயப்படுற மாதிரி ஆள் நான் இல்லீங்க. ஒருத்தர்கிட்ட அசிஸ்டண்ட் டைரக்டராக வேலை பார்க்குறேன். கதை ஒண்ணு எழுதணும். அதான் மூணு நாள் யார் தொல்லையும் இல்லாமல் எழுதலாம்தான் இங்க வந்துருக்கேன். ” என்றேன்.

நான் சொன்ன பொய்யை அவரும் நம்பியது போல்தான் தோன்றியது. ” அப்படியிலீங்க தம்பி.. இந்தக் காலத்துல யாரையும் நம்ப முடியறதில்ல.. அதான்.. ” என்று இழுத்தார்.

” அடப் பரவாயில்லீங்க.. மூணு நாளைக்கு யாரும் கொஞ்சம் தொந்தரவு பண்ண வேண்டாம். பயப்படவும் வேண்டாம். ” என்று சொல்லிவிட்டு அவரிடமிருந்து சாவியை வாங்கிக் கொண்டு, இரண்டாவது மாடியிலிருந்த ரூம் நம்பர் 208 க்குச் சென்றேன். நான் கேட்ட மாதிரியே ஜன்னல் இல்லாத அறை. மொசைக் தரை. மிகச் சாதாரணமான லாட்ஜ் தான். ஏதோ கொஞ்சம் பெட்சீட்டையெல்லாம் மாற்றிச் சுத்தமாக வைத்திருந்தார்கள்.

வந்ததும் முதல் வேலையாக மொபலை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு, வாட்சை கழற்றி மேசை மீது வைத்தேன். மணி இரவு எட்டு. இன்னும் மூன்று நாட்களுக்கு இங்குதான் வாசம். முற்றிலுமாக பரிபூர்ண விடுதலை, குறைந்த பட்சம் மூன்று நாளைக்கு.

 

cock_fights_road_cones_chicken_boxing_li

 

நான் இந்த முடிவை என் முழு புத்தி சுவாதீனத்துடன் தான் எடுத்திருக்கிறேன். இதில் எனக்கு எந்தக் குழப்பமும் இல்லை. எனது பல்சரை கோயம்பேட்டில் உள்ள வாகன காப்பகத்தில் விட்டுவிட்டேன். அவன் தந்த வண்டி பாஸை எடுத்து பர்ஸில் பத்திரப் படுத்திக் கொண்டேன். ஒரு சாதாரண நாள் என்றால் எனது வண்டியை இது போன்ற வாகன காப்பகத்தில் விடுவதற்கு முன் ஒரு முறைக்கு ஆயிரம் தடவை யோசித்திருப்பேன். ஊரிலிருந்து அம்மாவை இங்கே கூட்டி வந்து தனி வீடு பார்த்ததிலிருந்து வண்டியை காப்பகத்தில் விடுவது போன்ற சந்தர்ப்பங்கள் அதிகம் வாய்த்ததில்லை.

அம்மாவிற்கும் போன் செய்துவிட்டேன். ஆபிஸ் வேலை காரணமாக வெளியூர் செல்வதாகவும், முக்கியமான கஸ்டமர் மீட்டிங் காரணமாக பெரும்பான்மையான சமயங்களில் எனது போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப் பட்டிருக்கும். அதன் பொருட்டு கவலைப் பட வேண்டாம். ஊருக்குத் திரும்பும் பொழுது நானே அழைக்கிறேன் என்றும் சொல்லிவிட்டேன். வழக்கம் போல ஒழுங்காக நேரத்திற்கு சாப்பிடச் சொல்வாள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவள் ஒன்றும் அப்படிச் சொல்லவில்லை. ஆச்சர்யமாக அவளிடம் வேறெந்த கேள்வியும் இல்லை.

காஞ்சிபுரம் என்று போர்டு போட்டிருந்த பேருந்தில் ஏறினேன். இதில் தான் ஏற வேண்டும் என்ற எந்தவித முன் திட்டமுமில்லை. கையில் ஒரு டவல், கோல்கேட் சாம்பிள் பேஸ்ட், ஹமாம் சோப்பு, இரண்டு பிரட் பாக்கெட்டுகள், ஒரு ஜாம் பாட்டில் வாங்கிக் கொண்டேன். மூன்று நாட்களுக்கு இது போதும் என்று தோன்றியது. திடீரென்று ஞாபகம் வரவே ப்ரெட் பாக்கெட்டை எடுத்து எக்ஸ்பைரி டேட் பார்த்தேன். அடுத்த நான்கு நாட்களுக்கு வைத்திருந்தாலும் பிரச்சனையில்லை.

இன்று காலையில் அலுவலகம் செல்லும் வரையில் இப்படி மூன்று நாட்கள் எங்காவது யார் கண்ணிலும் படாத தனிமையில் தொலைந்து போக வேண்டும் என்ற எண்ணமேயில்லை. வழியில் சுள்ளென்ற வெயிலில் சிக்னலில் காத்துக் கொண்டிருந்தேன். சிவப்பிலிருந்து பச்சைக்கு மாறியது சிக்னல். இருந்தாலும் என் முன்னால் இருந்த வண்டிகள் நகர்வதாகத் தெரியவில்லை. எனக்குப் பின்னால் மாருதி ஸ்விப்ட் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. பளிச்சென்ற வெள்ளைக் கார். ஹார்ன் அடித்தான். எதிர்பார்த்தது தான். நான் ஒன்றும் கண்டு கொள்ளவில்லை. மறுபடியும் ஹார்ன் அடித்தான். என் பங்கிற்கு நானும் ஹார்ன் அடித்தேன். ஆனால் அவன் விடுவதாயில்லை. ஹார்ன் அடித்துக் கொண்டே இருந்தான். நான் நிறுத்திக் கொண்டேன். வீட்டில் பெண்டாட்டியுடன் சண்டை போட்டுவிட்டு வந்திருப்பான் போல. முட்டாள். எனக்கு முன்னால் இருந்த வண்டிகளோ உருமிக் கொண்டிருந்ததே தவிர ஒன்றும் நகர்வதாய் இல்லை. அடித்த அக்னி வெயிலில் சட்டையெல்லாம் தொப்பலாக நனைந்து விட்டது. பின்னால் இவன் வேறு டார்ச்சர் செய்து கொண்டிருந்தான். எனது பொறுமையின் எல்லையில் ஏறி நின்று குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தான்.

வண்டியை அங்கேயே ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு. காரின் கண்ணாடிக்கு வெளியிலிருந்து திட்டத் தொடங்கினேன். ஆவேசம் வந்தவனாய் கத்தத் தொடங்கினேன். என்னிடமிருந்து இப்படி ஒரு தாக்குதலை அவன் எதிர்பார்த்திருக்க மாட்டான். எனக்கு இத்தனை கெட்ட வார்த்தைகள் தெரியும் என்பது எனக்கே இன்றுதான் தெரிந்தது. சுற்றியிருந்தவர்களும் எனக்கு ஆதரவாய் இருப்பது போல் தோன்றியது. அந்த தைரியத்தில், இன்னும் கொஞ்சம் சத்தத்தைக் கூட்டினேன். என்னைப் போல அவர்களும் சற்று கடுப்படைந்திருப்பார்கள் தானே. அவர்கள் செய்ய நினைத்ததைத் தான் நான் செய்து கொண்டிருந்தேன். முதலில் கண்ணாடியை இறக்கி கொஞ்சம் பதிலுக்கு பேசியவன். நான் ஆவேசம் கொண்டு காரின் முன்பக்கக் கதவில் ஓங்கி தட்டியதும் கதவின் கண்ணாடியை மூடிக் கொண்டான். இதற்கிடையில் முன்னால் வண்டிகள் நகரத் தொடங்கவே, பக்கத்திலிருந்த சிலர் என்னைச் சமாதானப்படுத்தி வண்டியைக் கிளப்ப வைத்தனர்.

வரிசையாக ஒவ்வொரு சிக்னலிலும் நின்று சென்றேன். இன்றோடு மூன்றாவது நாளாக காலையில் தாமதாக சென்றதால் என் பெருமதிப்பிற்குரிய மேலாளர் என்னை அரை நாளுக்கு விடுப்பு போட்விடும் படி ‘அன்புடன்’ வேண்டிக் கொண்டார். போட்டேன். எனக்காகவென்று யாரோ ‘காக்ரோச் தியரி’யை செயல்படுத்துவது போன்று தோன்றியது. அந்த முட்டாள்தான் முதல் காக்ரோச்.

இன்றைக்கு இப்படி ஒரு நாளாக அமையும் என்று நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை. இனம் புரியாத எரிச்சல் தலைக்கேறியது. சுற்றியிருந்த அத்தனை பேரின் மீதும் வெறுப்பு பற்றிப் படர்ந்தது. வேலை, சாலை, வீடு என்ற வட்டத்திலிருந்து விடுபட முடியாததன் இயலாமை ஆட்டிப் படைத்தது. வேலையில் கவனம் ஓடவில்லை. அலுவலகத்திற்கு வெளியே இருந்த பெட்டிக் கடைக்கு வந்து ஒரு டீயும் ஒரு பாக்கெட் சிகரெட்டும் சொன்னேன். பக்கத்தில் இருந்த வெற்றிடத்தில் சிறுவர்கள் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தார்கள். வெயில் கொளுத்தித் தள்ளியது. அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்தியதாய்த் தெரியவில்லை. வெயிலின் புழுக்கம் என் மனதை மேலும் கசகசக்கச் செய்தது.

தொடர்ச்சியாக மூன்றாவது சிகரெட்டை உள்ளிழுத்துக் கொண்டிருக்கும் போதுதான் இந்த ஐடியா தோன்றியது. இந்த பரபர வாழ்விலிருந்து, ஒரு மூன்று நாட்கள் முற்றிலுமாக விடுதலை பெற்றால் என்ன? யார் கண்ணிலும் படாமல், யார் முகத்தையும் பாராமல், எவர் குரலையும் கேளாமல் என்னை யார் என்றே தெரியாத ஓரிடத்திற்குச் சென்றால் என்ன?? இந்த ஐடியா எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. சிகரெட்டை அணைத்துவிட்டு, அலுவலகம் சென்றேன். உள்ளே சென்ற கொஞ்ச நேரத்தில் ஒரு முக்கியமான கால் வந்தது போல காட்டிக் கொண்டேன். பதற்றத்தை முகத்தில் கொண்டு வருவது ஒன்றும் அவ்வளவு கடினமாக இருக்கவில்லை.

 

city_life_skyscrapers_cloud.png

 

எதிர்பார்த்தது போலவே பக்கத்தில் இருந்த ரமேஷ் கேட்டான், ” என்ன மச்சான் ஆச்சு? எதுனா பிரச்சனையா??”

” ஆமாண்டா.. சித்திக்கு உடம்புக்கு முடியலையாம். சீரியசாக இருக்காங்கலாம். ஊருக்கு போகணும் “

” ஹே சீக்கிரம் அப்போ லீவு சொல்லிட்டு கிளம்புடா.. வேலையெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் ” பாவம், உண்மையான அக்கறையுடன் சொன்னான்.

அடுத்த மூன்று நாட்களுக்கு விடுப்பு சொல்லிவிட்டு வெளியே கிளம்பினேன். அதன் பிறகு நடந்ததைத் தான் வரிசைக் கிரமமாக சொல்லியாகி விட்டதே. பேஸ்ட்டிலிருந்து துண்டு வரை பொறுப்பாக வாங்கி வந்துவிட்டு சிகரெட் பாக்கெட்டை மறந்துவிட்டேன். ஆனால் என்னவானாலும் சரி இந்த ரூமை விட்டு இனி வெளியே செல்வதாக இல்லை. இப்போதைக்கு மூன்று சிகரெட்டுகள் மிச்சம் இருந்தன. நாளுக்கு ஒன்றாக வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து கொண்டேன். எனக்கிருந்த ஒருவித உற்சாகத்தில் அதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

காலையில் ஆறு மணிக்கு எழ வேண்டிய கட்டாயம் இல்லை. ஜிம் கூட இல்லை. நாளை எனக்குப் புது நாளாக விடியப் போகிறது. இப்படியான கற்பனைகளுடன் தூங்கிப் போனேன். எத்தனை நாட்களாக தேக்கி வைத்த களைப்போ, பத்து மணி வரை நன்றாகத் தூங்கினேன். பல்தேய்த்து குளித்து ப்ரெட் ஜாமை எடுத்து சாப்பிடத் தொடங்கினேன். அப்போதுதான் எனக்குத் தோன்றியது மூன்று நாட்கள் என்ன செய்யப் போகிறோம் என்று. நாளுக்கொன்றாய் வைத்திருந்த மூன்று சிகரெட்களையும் அப்போதே புகைத்து எரித்தேன். எறிந்தேன்.

மறுபடியும் பெட்டில் படுத்து மின்விசிறியை பார்த்துக் கொண்டிருந்தேன். அது என் பால்ய கால நினைவுகளைக் கிளறியது. பொற்செல்வி மிஸ்ஸின் நினைவு வந்தது. என் வீட்டுப் பெண்கள் ஏன் அவரைப் போல மிடுக்காக புடவை கட்டுவதில்லை என்ற வருத்தம் எனக்கு எப்போதும் இருந்தது. மிஸ்ஸின் குட்டிப் பெண் ஓவியாவிற்கு இப்போது சுமாராக எத்தனை வயதிருக்கும். ஒரு பிறந்த நாள் அன்று அப்பெண் கொடுத்த ஃபைவ் ஸ்டார்தான் நான் முதன் முதலில் சாப்பிட்ட பெரிய சாக்லெட். சிறுவயதில் இருந்தே பிறந்த நாட்களை நான் கொண்டாடியதே இல்லை ஏன்? என் பதின்ம வயதுப் பிறந்தநாள் ஒன்றின் போது நான் பார்த்த விபத்து. இப்படி தொட்டு தொட்டு எண்ணங்கள் வளர்ந்து சென்று மறுபடியும் நேற்றைய ட்ராஃபிக்கில் வந்து நின்றது. அங்கேயே என் எண்ணச் சங்கிலியை துண்டித்துக் கொண்டேன்.

பசிக்கத் தொடங்கியது. மீண்டும் ப்ரெட் ஜாம். மணியைப் பார்த்தேன் மதியம் மூன்றாகியது. நான் செய்வது என்ன மாதிரியான பைத்தியக்காரத்தனம் என்று எனக்கே புரியவில்லை. அது பைத்தியக்காரத்தனம் என்பது மட்டும் புரிந்தது. ஆனாலும் பிடித்திருந்தது. அலுவலகத்தில் பின் மதிய வேளைகளில் கண்களைச் சுழலற்றும் உறக்கம். இங்கே கண்களை இறுக மூடி வலிந்து அழைத்தும் வரவேயில்லை. நான் என் வாழ்க்கையில் மறந்தே போயிருந்த நபர்களையெல்லாம் ஒவ்வொருவராய் ஞாபகப் படுத்திக் கொண்டிருந்தேன். கேன்சருக்குப் பலியான மணி சித்தப்பா, புரோட்டாக் கடை மாரியண்ணன், அப்பாவின் கடையில் வேலைபார்த்த கணக்காப்பிள்ளை தாத்தா இப்படி ஒவ்வொருவரையும் அவர்களின் பிரத்யோக அடையாளங்களுடன் நினைபடுத்திப் பார்த்தேன்.

நேரம் ஓடவேயில்லை. இத்தனைக்கும் பிறகும் மணி ஆறினைக்கூடத் தொடவில்லை. என்னவானாலும் மூன்று நாட்கள் இங்குதான் என்று நினைத்துக் கொண்டேன். இரவுச் சாப்பாடாக ப்ரெட்டை வயிறு ஏற்றுக் கொள்ளவில்லை. பசித்தால் தன் போல் உள்ளே இறங்கும் என்று விட்டுவிட்டேன். அம்மா செய்யும் இட்லி, பொங்கல், பணியாரம் என்று ஒவ்வொன்றாக நினைவில் வந்தது. வீட்டிற்கு போனதும் செய்யச் சொல்லலாம் என்று சமாதானப் படுத்திக் கொண்டேன்.

இரவில் தூக்கம் அவ்வளவாய் கைகூட வில்லை. போதாக் குறைக்கு கரண்ட் வேறு போய் போய் வந்து கொண்டிருந்தது. எப்படியோ சமாளித்து உறங்கிவிட்டேன்.

இரண்டாவது நாள் இன்னும் கொடூரமாய் இருந்தது. ப்ரெட்டை வாயில் வைக்கவே பிடிக்கவில்லை. ஜாமை மட்டும் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக நக்கிக் கொண்டிருந்தேன். ஒரு நிமிடம் அறையைக் காலி செய்துவிடலாமா என்று தோன்றியது. ஆனாலும் நான் தளரவில்லை. இரண்டாவது நாளில் நான் ஒரு விளையாட்டு கற்றுக் கொண்டேன்.

அந்த அறையின் கதவைத் திறந்து கொண்டு மஞ்சு வந்தாள். என் பழைய காதலிகளில் மனதுக்குக் கொஞ்சம் அதிகம் நெருக்கமானவள். இளம்பச்சை நிற காட்டன் புடவை உடுத்தியிருந்தாள். காதில் பச்சை நிறக் கம்மல், கழுத்தில் பச்சை நிற பாசி மாலை அணிந்திருந்தாள். இன்னும் மேட்சுக்கு மேட்ச் அணியும் பழக்கத்தை விடவில்லை போலும். கொஞ்சம் பூசினாற் போலிருந்தாள். வர்ணிக்கக் கூடாத இடங்கள் எல்லாம் வாளிப்பாக, அநியாயத்திற்கு அழகாக இருந்தாள். அடுத்தவன் பெண்டாட்டி. அதனால் இதோடு நிறுத்திக் கொள்வதே உத்தமம். பெட்டிற்கு அருகிலிருந்த நாற்காலி ஒன்றை இழுத்துப் போட்டு, கால் மேல் கால் போட்டு ஒய்யாரமாக அமர்ந்தாள். நான் தலை குனிந்து உட்கார்ந்திருந்தேன். என் கண்களை கட்டுப்படுத்த எனக்கு வேறு வழி தெரியவில்லை.

சில நிமிடங்கள் அமைதியில் கரைந்தன. கடைசியாக நிறுத்திப் போன, அவளே ஆரம்பித்தாள்.

panic_artwork_women_painting-227x300.png
” ஊரில் அம்மா எல்லோரும் நலமா ?”

எத்தனை சுலபமாக ஒரு சம்பாஷணையை ஆரம்பித்துவிட்டாள். நிறுத்துவதானாலும் சரி, ஆரம்பிப்பதானாலும் சரி இவளைப் போல் இவ்வளவு எளிதில் என்னால் முடியாது. நான் வார்த்தைகளைச் சேர்த்து பதில்களைக் கோர்த்துக் கொண்டிருந்தேன்.

” இப்போது என்னோடுதான் இருக்கிறார்கள். உன் பையனுக்கு என் பெயரை வைத்திருக்கிறாயாமே? “

” எனக்கிருப்பது ஒரே மகள் “

கணேசன் அடுத்தமுறை வீட்டுக்கு வரட்டும். சனியன், பொய் சொல்லியிருக்கிறான். இப்போது அவளை அவமரியாதை செய்தே ஆக வேண்டும். இப்போதாவது செய்ய வேண்டும்.

” உ ங் க.. உனக்கு அந்தத் தமிழ் புத்தாண்டு நாள் ஞாபகம் இருக்கிறதா? “

இப்போது அவள் தரையைப் பார்த்துக் கொண்டே ” இல்லை ” என்றாள். நான் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டேன். அவளின் இடுப்பெல்லாம் வியர்த்திருந்தது.

” அந்தப் புத்தாண்டு நாளில், உன் அம்மாவிற்கும் தெரியாத மச்சத்தை எனக்குக் காட்டினாயே. அது இன்றும் அங்கேயேதான் இருக்கிறதா? “

நான் கேள்வியை நிறுத்தவும், அவள் எழுந்து செல்லவும் சரியாக இருந்தது. அப்படியென்ன நான் தப்பாக கேட்டுவிட்டேன். போகட்டும்.

அன்றைக்கு பின்மதியம் அந்த அறையில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் வந்தார். என்னவொரு ஆளுமை! தொப்பி,கண்ணாடியில்லாமல் கை வைத்த பனியனில், சுருள்முடியை தோள் வரை படரவிட்டு அட்டகாசமாய் சிரித்தார். அவரும் நானும், நாட்டு நடப்பு, கண்டி, சதிலீலாவதி, ஆண்டிப்பட்டி, பொன்னியின் செல்வன் என்று பல விஷயங்களைப் பேசிக் கொண்டோம். பேசிக் கொண்டோம் என்றா சொன்னேன்? இல்லை இல்லை பேசிக் கொண்டிருந்தார். நான் கேட்டுக் கொண்டிருந்தேன். நடுவில் ஏதோ ஒரு அவசர வேலையின் பொருட்டு விடை பெற்றுக் கொண்டார்.

எம்.ஜி.ஆருக்குப் பின்னர் லியான்னல் மெஸ்ஸி வந்தார். கடந்த வருடம் சென்று வந்த ஸ்பானிஷ் கிளாசிலிருந்தே மெஸ்ஸியை எனக்குத் தெரியும். அவருக்குப் பின் தூக்கு போட்டுக் கொண்ட என் தாத்தாவின் மூத்த மனைவி, ஸ்டீவ் ஜாப்ஸ் என்று ஆளாளுக்கு வந்து போய்க் கொண்டிருந்தனர். இதற்கு நடுவில் பசித்தது. ப்ரெட்டை தண்ணீரில் நனைத்துச் சாப்பிட்டேன். அடுத்த விளையாட்டாக எனக்குப் பிடித்த படங்களை காட்சி பை காட்சியாக என் மனத்திரையில் ஓட்டிப் பார்த்தேன். மெளன ராகம், இயற்கை, எங்கள் வீட்டுப் பிள்ளை என்று ஒவ்வொன்றாய்.

ரூமிற்குள்ளேயே அங்கும் இங்கும் நடந்தேன். கஷ்டப்பட்டு 250 புஷ் அப்புகளை பத்து இடைவெளிகளில் எடுத்தேன். கையில் இரண்டு பேர் ஏறி நிற்பதுபோல் வலித்தது. அது எனக்குப் பிடித்திருந்தது. மீண்டும் என் மன உறுதி கொஞ்சம் தளர்ந்தது. இறுக்கிப் பிடித்துக் கொண்டேன்.

பெட்டிலிருந்து இறங்கி தரையில் காலை அகட்டி, காலை விரித்துப் படுத்துக் கிடந்தேன். கண் விழித்த பொழுது ஒரு வழியாக மூன்றாவது நாளுக்குள் வந்து விட்டேன். நல்ல சாப்பாட்டிற்காக நாக்கு ஏங்கித் தவித்தது. யாரையாவது பார்க்க மாட்டோமா? யாராவது நம்மிடம் பேசமாட்டார்களா? என்று ஏங்கத் தொடங்கினேன். முதல் இரண்டு நாட்களில் நான் கண்டறிந்த சில பல யுத்திகளை வைத்து ஒரு வழியாக மூன்றாவது நாளின் மாலை வரை கடந்துவிட்டேன். இன்னும் இரண்டே மணி நேரம் தான். என்னுள் இதுவரையில் இல்லாத ஒருவித உற்சாகம் கரைபுரண்டு ஒடியது. கொஞ்சம் வார்ம் அப் செய்து கொண்டேன். பின்பு குளித்தேன். பேக்கை எடுத்துக் கொண்டு சரியாக எட்டு மணிக்கு கதவைத் திறந்தேன்.

உலகமே புத்தம் புதிதாய்த் தெரிந்தது. தென்றல் முகத்தை வருடியது. ரூமை காலி செய்துவிட்டு, பஸ்ஸில் ஊருக்கு வந்து கொண்டிருந்தேன். அம்மாவிற்கு போன் செய்து இட்லியும், மல்லி சட்னியும் செய்யச் சொன்னேன். எச்சில் ஊறியது. பஸ்ஸில் இருந்த எல்லோரும் பழகிய மனிதர்கள் போல் தெரிந்தார்கள். கொஞ்ச நேரத்திற்கு பஸ் நகரவேயில்லை. இங்கேயும் ஒரு சிக்னல். நேரம் இரவு 8:30. பீக் அவர். பின்னாலிருந்து வேறு ஒரு பஸ் ட்ரைவர் ஹார்னை அழுத்தினார். அழுத்திக் கொண்டேயிருந்தார். அதில் ஒரு வித ராக நயம் இருந்தது. எனக்குக் கேட்டது.

 
http://solvanam.com/?p=26381
 
 

  • கருத்துக்கள உறவுகள்

கதை வித்தியாசமாக இருக்கிறது. நன்றி பகிர்வுக்கு கிருபன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமான கதை. தற்செயலாக இந்தக் கதையை வாசிப்பதற்கு முதல் நாள் இரவு Into the Wild  என்ற உண்மைக் கதையைத் தழுவிய படம் பார்த்தேன். பொருள்வாதத்தினாலும் பரபரப்புடைய வாழ்க்கையினாலும் சலித்துப் போன ஒரு இளைஞன் வீட்டை விட்டுப் போய் அலாஸ்காவின் பனிப் படர்ந்த காட்டில் தனியாக வாழ ஆரம்பிக்கிறான். ஒன்பது வாரங்கள் தான், மனிதர்களின் சகவாசமும் உறவுகளும் தேவை என்று உணர்ந்து திரும்பிப் போகப் புறப்படுகையில் காட்டாறு பெருக்கெடுத்து திரும்பிப் போக விடாமல் செய்து விடுகிறது. பிறகு உணவுக்குப் பஞ்சம் வந்து ஒருமெல்லக் கொல்லும் நஞ்சை உணவாக உட் கொள்ள வேண்டி வந்து மூன்று மாதங்கள் அந்தரித்து மரணிக்கிறான். எல்லாவற்றையும் எழுதி வைத்து விட்டுப் போனதில் புத்தகமும் படமும் வெளிவந்திருக்கின்றன!

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாளைக்கேனும் யாரோடும் நேரில் அல்லது தொலைபேசியில் அல்லது இணைய மூலமோ கதைக்காமல் இருந்திருக்கிறீர்களா :lol:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் முன்னர் அடிக்கடி செல்லும் வட துருவ நாட்டில் இருப்பவர்கள் பள்ளிவிடுமுறை காலமாகிய ஜூலை மாதம் என்றாலே 4 வாரம் லீவு எடுத்துக்கொண்டு பல நூறு கி.மீ. களுக்கு அப்பால் இருக்கும் அடிப்படை வசதிகள் மட்டும் இருக்கும் அவர்களது summer cottage களுக்குப் போய்விடுவார்கள். இயற்கையோடு இயற்கையாக வாழவும், வேட்டையாடவும், hiking போகவும், நீண்ட ஏரிகளில் மீன்பிடிக்கவும், பின்னேரங்களில் வந்து smoke sauna க்களில் அதிகூடிய வெப்பத்தில் படுத்திருந்து வியர்வையை வெளியேற்றவும் என்றே நாட்களைக் செலவழிப்பார்கள். விடுமுறை முடிந்து புத்துணர்ச்சியுடன் வருவார்கள். எனவே batterries ஐ recharge செய்ய இப்படியான retreat தேவைதான்!

 

ஒரு நாளைக்கேனும் யாரோடும் நேரில் அல்லது தொலைபேசியில் அல்லது இணைய மூலமோ கதைக்காமல் இருந்திருக்கிறீர்களா :lol:

ஆமாம். நல்ல புத்தகம் இருந்தால் எவருடனும் கதைக்காது தொலைக்காட்சி பார்க்காது நேரம் போவது தெரியாமலேயே இருக்கலாம். 

சதா நேரமும் ஓடுப்பட்டுத் திரியும் இலண்டனை விட்டு அமைதியான வெளிப் பிரதேசங்களில் வாழ்ந்தால் வாழ்வில் எதற்காக இப்படி ஓடுப்பட்டுத் திரிகின்றோம் என்ற கேள்வி கட்டாயம் வரும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.