Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு குட்டி ரெட்ரோ – கிருஷ்ணமூர்த்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குட்டி ரெட்ரோ – கிருஷ்ணமூர்த்தி



என்னிடம் பலர் பேசும் போது நான் நிறைய உலக சினிமாவும் உலக இலக்கியத்தையும் வாசித்ததாக நினைத்து நிறைய கேட்கிறார்கள். அவர்கள் கேட்கும் சினிமாக்களும் இலக்கியங்களும் நான் அறிந்தது கூட இல்லை. தெரியாது என்று சொல்லி சொல்லி வாய் வலித்தது தான் மிச்சம். சில நேரங்களில் இந்த உண்மையை சொல்லக் கூட பயமாக இருக்கிறது. என்னால் அவர்களின் கேள்வியை எதிர்கொள்ள முடியும். முடியாத விஷயம் ஒன்றும் இருக்கிறது. அவர்கள் அந்த குறிப்பிட்ட சினிமாவையோ இலக்கியத்தையோ வைத்து இது கூட தெரியாமல் எப்படி நீ சினிமா இலக்கியத்தைப் பற்றியெல்லாம் எழுதலாம் என்கிறார்கள். இக்கேள்விக்கு நான் என்ன பதில் சொல்வேன் ? மௌனம் மட்டுமே என் வசம் மீதம் இருக்கும். அவர்களுக்கு சொல்லமுடியாத ஒரு பதில் என்னிடம் ஒன்று உள்ளது. எனக்கு கிடைத்த ஒரு வரம் என் வயது. இன்னமும் நான் நினைத்ததை வாசிக்கவும் பிடித்த சினிமாக்களை பார்க்கவும் போதுமான அளவு வயது இருக்கிறது. ஒருவேளை வயது முடியும் நேரத்தில் வருத்தம் கொள்வேன் இன்னமும் மீதி வைத்து செல்கிறேனே என்று. இப்போதோ அக்கவலை என்வசம் இல்லை.

இக்கவலை இல்லாததால் தான் இந்த கட்டுரையை தைரியமாக எழுத முடிகிறது. பொதுவாக மலைகள் இதழுக்கு சினிமா சார்ந்து எழுத நினைப்பேன். அப்படி எழுதுவதற்கு நான் ஏதேனும் ஒரு இயக்குனரின் அனைத்து படங்களையும் பார்க்க வேண்டும். அப்படி பார்பதற்கு நான் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அப்படியே செய்தாலும் எனக்கிருக்கும் இணைய வசதியில் அது இடையில் தடைபட்டுவிடும். இதனாலேயே கடந்த இரண்டு முறையும் எழுத முடியாமல் போனது. இம்முறையும் வாய்ப்பை தழுவ நினைக்கவில்லை. மற்றும்மொரு விஷயம் இம்முறையும் சரக்கு இல்லை.

அப்படியெனில் எழுதப்போவது ? நான் பழைய தமிழ்ப்படங்களிலேயே பார்ப்பதற்கு நிறைய படங்களை வைத்திருக்கிறேன். ஒருபுறம் அப்படங்கள் நமக்கு ஒரு படம் பார்ப்பதன் திருப்தியை கொடுக்குமா என்று கூட சந்தேகத்தை ஏற்படுத்தியதுண்டு. இது ஒரு ஃபாஸிச மனப்போக்கும் கூட. உலக சினிமாவை பார்ப்பதால் இந்திய சினிமா எப்போதுமே தரக்குறைவானது என்னும் எண்ணத்தை வளர்த்துக் கொள்வது. இந்ட்த மனப்பாங்கில் இருந்து நானும் மீளவில்லை. அப்படிப்பட்ட எனது மன ஓட்டத்திற்கு பலத்த அடியாய் விழுந்தது ஒரு பழைய திரைப்படம்.

இப்படம் 1978 இல் வெளியாகியிறுக்கிறது. இயக்கியவர் ருத்ரய்யா. பட்த்தின் பெயர் – அவள் அப்படித்தான்.

வெறுமனே இப்படத்தை மட்டும் சொல்லாமல் ஒரு டிட் பிட்ஸாக இன்னுமொரு படத்தையும் இறுதியில் சொல்கிறேன். இந்தப்படத்தை உறுதியாக சொல்ல முடியும் இது ஒரு உலகத்தரமான திரைப்படம் என்று. அதற்கு இரு காரணங்கள் உள்ளது. மூன்று மணி நேர திரைப்படம் என்று வைத்துக் கொள்வோம். மற்றொன்று ஐந்திற்குள் அடங்கும் கதாபாத்திரங்கள் கொண்ட திரைப்ப்படம். இந்த இரு திரைப்படமும் ஒரே வித தாக்கத்தை தான் பார்வையாளனிடம் ஏற்படுத்தும். அதாவது இரு இடத்திலும் பார்வையாளனை உட்கார வைப்பதே பெரிய சவால். இந்த இரண்டாம் ரக சினிமாவில் பார்வையாளனை உட்கார வைப்பது முன்னதை காட்டிலும் கடினமானது.

மிகக் குறைந்த அளவில் கதாபாத்திரங்களை கொண்டு ஒரு சினிமா செய்கிறோம் எனில் அங்கு அந்த கதாபாத்திரங்களின் ஒவ்வொரு செயல்களும் கணக்கில் கொள்ளப்படும். அல்லது அவர்கள் பேசும் வசனம் பிரதானமாகும். ஒருவேளை வசனம் பிரதானமாவதாக இருப்பின் அது அதி சுவாரஸ்யமாக அல்லது பார்வையாளனுடன் நெருக்கத்தில் செல்லக்கூடிய வசனங்களாக இருக்க வேண்டும். அப்படி இல்லையேல் அங்கும் படம் தன் தோல்வியையே தழுவி நிற்கும்.

இந்தப்படம் எனக்கு எங்குமே தொக்கி நிற்பதாக தெரியவில்லை. அதை விட மேன்மையான ஒரு விஷயம் எந்த ஒரு படமாகினும் அது பார்வையாளனுக்கு ஒரு புதுமையை தர வேண்டும். அதற்கு முந்தைய படங்களின் சாயல் அதில் தெரிதல் கூடாது. மேலும் இப்படத்தின் சாயல் அதற்கு பின்னாட்களில் வந்த படங்களில் காப்பியடிக்கப்பட்டிருந்தாலும் இப்படம் தனியே ஒரு ஸ்தூலமாக நிற்க வேண்டும். அவள் அப்படித்தான் படம் மேற்கூறியபடியே நிற்கிறது.

குறைந்த கதாபாத்திரங்களை கொண்டு எடுக்கப்படும் படங்கள் மெல்லிய கதையம்சத்தை கொண்ட்டிருக்கும்.(ex – following, pi). இப்படத்தில் கதை மூன்று இழையாக இருக்கிறது. ஒன்று ரஜினியின் பாத்திரம். அவர் ஒரு ஆணாதிக்கவாதி. பெண்களை எப்போதும் ஒரு பண்டமாக பாவிக்கும் ஒரு மனது. அடுத்து கமல். படத்தினுள் இயக்குனராக இருக்கிறார். அவர் பெண்களை மையமாக வைத்து அவர்களும் ஆண்களும் சரி சம்மானவர்களே என்று ஒரு படம் எடுக்க முயற்சிக்கிறார். ரஜினி மூலமாக கமலின் அப்படத்திற்கு உதவி செய்ய வரும் பெண் தான் ஶ்ரீ ப்ரியா. அவளுக்கு ஆண்களை கண்டாலே பிடிக்காது. அவள் வாழ்க்கையில் கண்டு வந்த ஆண்கள் எல்லோரும் காமத்துப்பாலால் நிறைந்து வேட்கையை சுமந்து திரியும் ஜடமாக மட்டுமே இருந்திருக்கிறார்கள். தான் தான் பெரியவள் என்னும் கர்வம் என்று ஒரு கம்பீரப்பெண்ணாக வருகிறார். இம்மூன்று பேரும், மூன்று கோட்பாடுகளும் இணையும் புள்ளி எப்படி இருக்கும் ? ஒரு தீர்வு கிடைக்குமா ? கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா ? இது தான் கதை.

மூன்று பேர் என்பதற்கு பதில் மூன்று கோட்பாடுகள் என்பது தான் உசத்தியாக இருக்கும். எல்லா காலங்களிலும் பெண்ணிற்குள் எப்போதும் தன் சுயம் சார்ந்த ரகசியங்கள் அழுகிக் கொண்டே இருக்கிறது. ஆயுள் முழுக்க வெளிக்காட்ட ஒருவரை தேடிக் கொண்டே இருக்கிறாள். சிறியதொரு நம்பிக்கை கூட அவளுக்கு பெரிய தூணாக இருந்து விடுகிறது. அந்த நிலைமையில் அவனை/அவளை பற்றிய மதிப்பீடுகள் அவளுக்கு தேவையற்றதாக அமைந்து விடுகிறது. தன் ரகசியங்களை அந்த மனிதர்களிடம் மனம் விட்டு பேச ஆரம்பித்து விடுகிறாள். அப்போது கொள்கை ?

கொள்கை பிடிப்பு எப்போதும் நிரந்தரமான ஒன்று அல்ல. கொள்கையை கட்டிக் கொண்டே இருந்தால் நாம் நிகழ்காலத்தில் ஏதோ ஒன்றை எப்போதும் இழந்து கொண்டே தான் இருக்க வேண்டியிருக்கும். கொள்கைபிடிப்பு மிக மெலிதான ஒன்று. எப்போது வேண்டுமெனினும் அது கழன்று பறந்து கொண்டிருக்கலாம். மனிதனோ பறந்து கொண்டிருப்பதைக் கண்டு அழுது கொண்டிருக்கிறான். இந்த இரு நிலைகளையும் படத்தில் மிக அழகாக சித்தரித்திருக்கிறார் இயக்குனர்.

எடுக்கப்பட்ட விதத்திலும் படம் கொஞ்சமும் சோடையில்லை. படத்தின் பெயர்கள் போடும் நேரத்தில் பிண்ணனியில் கசாமுசா என்று வசனக் குவியல்களாய் ஓடிக் கொண்டிருக்கும். அவை என்ன என்று தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அவையனைத்தும் அந்த படத்தின் உள்ளே வரும் வசனங்கள். அதை பெயர் போடும் போதே இட்டு காட்டியிருக்கும் முறை அக்காலத்தில் ஒரு நவீன முயற்சியாக நிச்சயம் இருந்திருக்கும். இது மட்டுமின்றி சில பேட்டிகள், படம் எடுப்பது பற்றிய படங்கள், ஆவணப்படங்களின் அக்காலத்திய நிலை, மக்களிடம் சென்று ஒரு இயக்குனர் பேசும் வெளிப்படையான விஷயங்களும் பதில்களும் என ஒவ்வொரு காட்சியும் எனக்கு இப்போதும் புதுமையை கொடுக்கிறது.

கொண்டாடிய படம் என்றே சொல்ல வேண்டும். ரஜினியின் நடிப்பு அதி அபாரமானது. எங்கே போனார் ரஜினி என்றே இக்கட்டுரைக்கு தலைப்பிட நினைத்தேன். ஏனோ மாற்றிவிட்டேன். அப்படியொரு நடிப்பை கொடுத்திருப்பார். இப்போதிருக்கும் நடிகர் சிவாவின் நடிப்புகள் அவரின் காப்பியோ என்று சந்தேகத்தை கொடுக்கிறது.

இது கறுப்பு வெள்ளைப்படம் தான். அதற்காக இக்காலத்தியவர்கள் நிராகரித்துவிடாதீர்கள். இக்காலப்படங்களில் நாம் காணமுடியாத ஒரு நவீனம் இப்படத்தில் மிளிர்கிறது. இதை எனக்கு அறிமுகபடுத்தியவர் யார் என்று எப்படி நினைத்தாலும் நினைப்பில் வரமாட்டேன் என்கிறது. அந்த பெயர் மறந்து போன பாக்கியவானுக்கு என் நன்றிகள்.

பின் குறிப்பு : இன்னுமொரு படத்தை சொல்கிறேன் என்று சொல்லியிருந்தேன். அது கேங்க்ஸ் ஆஃப் வாசேப்பூர் என்னும் ஹிந்திப்படம். இப்படம் இரண்டு பாகம். இப்படத்தை நான் என் இணையத்தில் எப்போதோ எழுதியிருந்தேன். சமீபத்தில் நான் செய்த மீள்பார்வையின் விளைவு இந்த வார்த்தைகள். ஒரு பழிவாங்கும் படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டு இந்த படம். கில்பில் என்னும் ஆங்கில படத்தை எடுத்த போது அதன் இயக்குனர் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அது இரண்டு பாக திரைப்படம். இரண்டு பாகத்திரைப்படத்தின் முக்கிய பங்கு முதல் பாகத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் அறிமுகம் ஆக வேண்டும். மேலும் இரண்டு பாகங்களும் தனித்தனியாக ஒரு முழு படத்திற்கான திருப்தியை கொடுக்க வேண்டும் என்று. இந்த இரண்டில் இரண்டாவதை முழுமையாக இப்படம் செய்கிறது. முதல் விஷயத்தில் உள்ள பிரச்சினை யாதெனில் இரண்டாம் பாகத்தில் சில கதாபாத்திரங்களும் பெயர்களும் சேர்கிறது. இப்படத்தில் இருக்கும் authenticity என்னை அதிகம் கவர்கிறது. இப்படத்தில் இருப்பது முழுக்க வதையின் கொண்டாட்டமான உருவம். வதை விரும்பிகளுக்கான ஒரு அறுசுவை விருந்து கேங்க்ஸ் ஆஃப் வாசேப்பூர்.


http://malaigal.com/?p=2943

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று மீண்டும் "அவள் அப்படித்தான்" படத்தை யூரியூப்பில் பார்த்தேன். கறுப்பு வெள்ளைப் படம் என்றாலும் வசனங்கள் யாழ் உறுப்பினர்கள் பலரை நினைக்கத் தூண்டியது.

நீங்களும் பாருங்கள் (பொறுமை இருந்தால்)

கிருபன் இதில் யார் யார் யாழ்க்கள உறுப்பினர்கள் என்று சொன்னால் வசதியாக இருக்கும். :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் இதில் யார் யார் யாழ்க்கள உறுப்பினர்கள் என்று சொன்னால் வசதியாக இருக்கும். :icon_mrgreen:

படத்தைப் பார்த்தாலே உங்களுக்கு இலகுவில் புரிந்துவிடும் நாரதர்!
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது அப்படித்தான் - ஒளிப்பதிவாளர் நல்லுசாமி

 

 

nallasami%201.jpg

நான் சேலம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன். சென்னைஅடையார் பிலிம் இன்ஸ்டிட்டில் 1972-ல் சேர்ந்தேன். 1975-ல் படிப்பை முடித்தேன். ருத்ரய்யா என் வகுப்புத் தோழர். அவர் எங்கள் ஊருக்கு அருகில் தலைவாசலைச் சேர்ந்தவர். அவரது டிப்ளமோ படத்துக்கு நான்தான் காமிரா. படிப்பை முடித்த பின் டெல்லி தூர்தர்ஷனில் கொஞ்ச நாள் வேலைபார்த்தேன். பின் சென்னைக்கு திரும்பி வந்து இங்கே தூர்தர்ஷனில் சேர்ந்தேன். ருத்ரய்யாவும் அங்கே பணியாற்றினார்.  78-ல் சேலத்தில் இருந்து ஒரு ப்ரொட்யூசர் வந்திருந்தார்.

 

தி.ஜானகிராமனின் அம்மா வந்தாளை படமாக எடுக்க நினைத்தோம். கமல் நடிப்பதாக இருந்து அது பின்னர் கைவிடப்பட்டது.  இதற்கிடையில் ருத்ரய்யாதான் அவள் அப்படித்தான் படத்துக்கான் கருவினைச் சொன்னார். சோம சுந்தேரேஷ்வர் (ராஜேஷ்வர்) என்கிற எங்கள் திரைப்படக் கல்லூரி நண்பர் அதற்கு ஒன்லைன் தயார் செய்தார். அதை அனந்துவிடம் கொடுத்தோம். திரைக்கதையை ராஜேஷ்வர் எழுத பெரும்பாலும் வசனங்களை அனந்து எழுதினார். மீதியை வண்ணநிலவன் எழுதினார்.பாடல்களையும்அவரையேஎழுதச்சொன்னோம். அவர்மறுத்துவிட்டார்.

அப்போது வளர்ந்து வரும் நடிகையாக இருந்த படாபட் ஜெயலட்சுமியை தெரிவு செய்தோம். அவரும் ஒப்புக் கொண்டார். ஆனால் கமல் பிஸியாக இருந்தார். அவர் எப்போது ஓய்வாக இருக்கிறாரோ அப்போது தான் நாங்கள் படமெடுக்க முடியும் என்கிற நிலை. எங்களால் தேதிகளைக் கூற முடியாததால் படாபட் ஜெயலட்சுமியை நடிக்க வைக்க முடியவில்லை.

 

ஸ்ரீப்ரியாவை நடிக்க வைக்கலாம் என்று கமல் கூறினார். அப்போது அவரது ஆட்டுக்கார அலமேலு மிகபெரிய ஹிட். அவரே போன் செய்து ஸ்ரீப்ரியாவிடன் எங்களைக் கதைசொல்ல அனுப்பினார். நானும் ருத்ரய்யாவும் சென்றோம். அவர்ஒப்புக்கொண்டார். சம்பளம்எப்படிஎன்றோம். சொல்லிஅனுப்புகிறேன்என்றார். மேடம்ஒருலட்சரூபாய்வாங்குகிறார். இப்படத்துக்கு 30,000 ரூபாய்கொடுத்தால்போதும்என்றுதகவல்வந்தது. ஒப்புக்கொண்டோம். கமல்தான் இளையராஜாவையும் இப்படத்துக்கு புக் செய்தார். இது மட்டுமல்ல படத்துக்காக பலவிஷயங்களை கமல்தான் செய்தார்.

 

இப்படத்துக்கு கமலுடன் ரஜினியையும் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று அனந்து சொன்னார். அனந்து, கமல் ரஜினியுடன் நினைத்தாலே இனிக்கும் படப்பிடிப்புக்காக சிங்கப்பூர் சென்றார். அங்கேயே பேசி ரஜினியும் சம்மதித்தார். யாருக்கும் நாங்கள் அட்வான்ஸ் கொடுக்கவில்லை. பூஜை போட்டோம். அப்போதெல்லாம் இசையமைப்பாளர்கள் பட ஆபீசுக்கே வருவார்கள். ஆழ்வார்ப் பேட்டையில் அலுவலகம் போட்டிருந்தோம். எங்கள் அலுவலகத்தில் பேன் கிடையாது. மறுநாள் இளையராஜா வரப்போகிறார் என்பதால் முதல் நாள் மாலையே பேன் வாங்கிமாட்டினோம். ஆனால் இளையராஜா வந்தபோது மின்சாரம் இல்லாமல் போய்விட்டது.

 

மூன்று பாடல்கள் கம்போசிங். கண்ணதாசனை வைத்து பாடல்கள் எழுதலாம் என்று தீர்மானித்தோம். எங்கள் அலுவலகத்துக்குப் பக்கமே கண்ணதாசன் நடத்திய கவிதா ஹோட்டல். அங்குதான் கவிஞர் இருப்பார். இசையமைப்பாளர்கள் அங்கே செல்வார்கள். அங்கே இளையராஜா வேறு ஒரு பாடல் கம்போசிங்கிற்காக வருகிறேன். அங்கேயே வந்து விடுங்கள் என்றார். நடந்தே சென்றோம்.

 

பிரம்பு நாற்காலியில் பனியன் போட்டுக் கொண்டு கவிஞர் அமர்ந்திருந்தார். அவரிடம் வசந்தகாலக் கோலங்கள்.. வானில் விழுந்த கோடுகள் பாட்டு போல எங்களுக்கு வேண்டும் என்றோம். அவர் ஒரு 20 பல்லவிகளை எங்களுக்குச் சொன்னார். எதுவுமே பிடிக்க வில்லை. எங்களுக்கு முழு திருப்தி இல்லையென்றாலும் ‘வாழ்க்கை ஓடம் செல்ல’ பல்லவியைத் தேர்ந்தெடுத்தோம். பாட்டெழுதிக் கொடுத்தார். படம் வெளியாகி ப்ளாப் ஆனதும் இப்படி ஒரு அபசகுனமான பாட்டை முதலில் எழுதினால் இப்படித்தான் ஆகும் என்று கூடச் சொன்னார்கள்.

 

சோவின் தம்பி அம்பியின் பள்ளியில் முதல் இரண்டு நாட்கள் இந்த பாட்டை எடுத்தோம். அடுத்து ஸ்ரீப்ரியா படப்பிடிப்பு. அவர் முதல் நாள் சேர் கொண்டு வந்திருந்தார். ஆனால் எங்கள் படப் பிடிப்பு விதமோ வழக்கத்தில் இருந்து வேறுபட்டு இருந்தது.  அங்கே யாருக்கும் சேர் இல்லை. அவர் புரிந்து கொண்டு மறுநாள் முதல் சேர் கொண்டு வரவில்லை. எங்களுடனே அவரும் தரையில் அமர்ந்து கொண்டார். சாப்பாடும் நாங்கள் ஆழ்வார்ப் பேட்டையில் ஒரு மெஸ்ஸில் சாப்பிடுவோம். அங்கிருந்து தான் உணவு வரும். லோ பட்ஜெட் படம். சுமாரான சாப்பாடு தான். அதைத் தான் கமல் உள்பட எல்லோரும் சாப்பிட்டார்கள்.

 

ரஜினி, கமல், நடிகர்கள் என்ன ஆடை அணிந்து படப்பிடிப்புக்கு வருகிறார்களோ அதுதான் அவர்களுக்கு அன்று ஆடை. ஆடை வடிவமைப்பாளர் என்று யாரும் இல்லை. மேக்கப்பும் இல்லை. எங்களுக்கு எப்போது என்ன எடுப்போம் என்றே தெரியாது. திடீரென்று போன்வரும். இன்னிக்கு கமல் ப்ரீயாக இருக்கிறார். எதாவது காட்சி எடுக்கலாமே என்று. உடனே மற்ற நடிகர்கள் யார் ப்ரியாக இருக்கிறார்கள் என்று பார்த்து அவர்களை அழைத்து அனந்துசாரிடம் டயலாக் வாங்கி, லொகேஷன் பார்த்து படம் எடுப்போம். கமல்சார்வீடு, எங்க அலுவலகம், ஸ்ரீபிரியா வீடு இப்படித்தான் படம் எடுத்தோம்.

 

நானும்சரி, ருத்ரய்யாவும் சரியாரிடமும் உதவி இயக்குநர்களாக பணியாற்றியிருக்கவில்லை. இளங்கன்று பயமறியாது என்பது போல துணிச்சலாக எடுத்தோம். நேரம் மிகவும் குறைவு. டிரைபாடில் வைத்து படம் பிடிக்க நேரம் ஆகும் என்பதால் பல காட்சிகளை நான் காமிராவை  கையில் வைத்தே எடுத்தேன்.  நேரம் சேமிப்பதற்காக கட் பண்ணி எடுக்க வேண்டிய பல சீன்களை ஒரே ஷாட்டில் எடுத்தோம். ஸ்ரீப்ரியா, கமல் இருவருமே ரீடேக்கே போகமாட்டார்கள். ஒரே டேக்கில் நடித்துக் கொடுத்து விடுவார்கள். மொத்த படமுமே 27000 அடியில் எடுத்தோம். கமலோ, ஸ்ரீப்ரியாவோ டப்பிங்கில் கூட ஒரே ஒரு முறை லூப்பைப் பார்ப்பார்கள். அப்படியே பேசிவிடுவார்கள்.

 

படம் தயாரிப்பில் இருக்கும் போதே விற்பனை ஆகிவிட்டது. ரஜினி, கமல், ஸ்ரீப்ரியா, இளையராஜா கூட்டணியில் ஸ்ரீதர் தயாரிப்பில் அப்போது வெளியாகி இருந்த இளமை ஊஞ்சலாடுகிறது படம் நன்றாக ஓடியதால் எங்கள் படம் மீதும் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. விநியோகஸ்தர்கள் கொடுத்த பணத்தை வைத்தே படம் எடுத்துவிட்டோம்.

 

படம் முடிந்து விநியோகஸ்தர்களுக்கு போட்டுக் காட்டினோம். அன்று தான் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத நாள். படம் பார்த்தவுடன் அனைவர் முகத்திலும் சவக்களை! ரேட் குறைவாகத்தான் விற்றிருந்தோம். எனவே அனைவரும் பிரிண்டுகளை வாங்கிக் கொண்டார்கள். ஆனால் நல்ல தியேட்டர்களில் வெளியிடவில்லை. இப்படம் 1978 தீபாவளிக்கு ரிலீஸ். 12 படங்கள் ரிலீசாகின. கமலுக்கு மூன்று படம். ரஜினிக்கு மூன்று படம். ஆனந்தவிகடன் விமர்சனத்தில் எங்கள் படத்துக்குத்தான் குறைவான மார்க்.நூற்றுக்கு 28 மார்க்.

 

படம்வெளியானதும் மோசமான எதிர்வினை. சில இடங்களில் தியேட்டர் நாற்காலிகளை ரசிகர்கள் உடைத்ததாகத் தகவல். இரண்டே வாரத்தில் தமிழ்நாடு முழுக்க படம் தியேட்டர்களை விட்டு எடுக்கப்பட்டு விட்டது. படம் ஓடவில்லை. நாங்கள் தோற்று விட்டோம் என்று நினைத்த போது ஓர் அதிசயம் நடந்தது. புகழ் பெற்ற இயக்குநர் மிருணாள்சென் சென்னைக்கு வந்து தங்கினார். ஓர் இரவு எதாவது படம் பார்க்கலாமே என்றுஅவள் அப்படித்தான் படத்தை தியேட்டரில் பார்த்திருக்கிறார்.

 

மறுநாளே அவர்தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு பத்திரிகையாளர்களை வரவழைத்து படம் மிகவும் அற்புதமாக உள்ளது. ஏன் நீங்கள் நல்ல படத்தை ஆதரிப்பதில்லை என்று புகழ்ந்து பேட்டி கொடுத்தார். பத்திரிகைகள் அவர் பேட்டியை வெளியிட்டதுடன் ரஜினி, கமல், ஸ்ரீபிரியா, ருத்ரய்யா பேட்டிகளையும் வெளியிட்டன.

 

படம் ஓட ஆரம்பித்துவிட்டது. சென்னை, கோவை, திருச்சி, மதுரைபோன்றஇடங்களில் 100 நாள் ஓடியது.  இதற்கு தமிழக அரசின் மூன்று விருதுகள் கிடைத்தன. எனக்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதும் கிடைத்தது.  இதன் பின்னணியில் ஒரு சுவாரசியம் உள்ளது. அது 20 ஆண்டுகள் கழித்துத்தான் எனக்குத் தெரிந்தது. அந்த விருதுக் குழுவில் இடம் பெற்றிருந்த சாருஹாசன் என்னிடம் சொன்னார். அப்போது கறுப்பு வெள்ளைப்படமாக இருந்தததால் ஒளிப்பதிவுக்கான சிறந்த படங்களைத் தேர்வு செய்யும் நடுவரான மார்கஸ் பாட்லேயிடம் அவள் அப்படித்தான் படத்தைப் போட்டுக் காட்டவில்லையாம். வண்ணப் படங்களை மட்டும் திரையிட்டுக் காட்டி ஸ்ரீதரின் அழகே உன்னை ஆராதிக்கிறேன் படத்தைப் அவர் தெரிவும் செய்துவிட்டார். சிறந்த இயக்கத்துக்கான படங்களைத் தேர்வு செய்யும் போது எதேச்சையாக மார்க்ஸ் பாட்லே வந்திருக்கிறார். அப்போது எங்கள் படத்தைப் பார்த்திருக்கிறார். அதில் ஒளிப்பதிவு அவருக்குப் பிடித்துப் போய்விட்டது. இதற்குத் தான் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது கொடுக்கவேண்டும் என்று கூறிவிட்டார்.  ஏற்கெனவே ஒருவரைத் தெரிவு செய்து விட்டதால் அந்த ஆண்டு முதல் முதலாக இரண்டு விருது கொடுத்தார்கள். ஒன்று சிறந்த வண்ணப்பட ஒளிப்பதிவுக்காக; இன்னொன்று கருப்பு வெள்ளைக்காக எனக்கு.

 

(தொகுப்பு: முத்துமாறன்)

 

அந்திமழை ஏப்ரல்’2013 மாத இதழில் வெளியான சிறப்பு கட்டுரை

- See more at: http://andhimazhai.com/news/view/nallusamy-12-4-2013.html#sthash.XSBDVEOs.dpuf

படத்தைப் பார்த்தாலே உங்களுக்கு இலகுவில் புரிந்துவிடும் நாரதர்!

முழுப்படமும் பார்க்கவில்லை, பார்த்ததில் இருந்து கமல் பாத்திரம், கிருபன், ரஜனி நெடுக்காலபோவான், சிறிபிரியா, ரதியா?

 

நான் எழுதினது சரியோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முழுப்படமும் பார்க்கவில்லை, பார்த்ததில் இருந்து கமல் பாத்திரம், கிருபன், ரஜனி நெடுக்காலபோவான், சிறிபிரியா, ரதியா?

 

நான் எழுதினது சரியோ?

ஐயையோ! நெடுக்ஸும் ரதியும் அடிக்க வரப் போகின்றார்கள்!

ஒரு வசனம்:

கமல்: உனக்கு பெண்கள்னாலே ஏன் இவ்வளவு வெறுப்பு?

ரஜனி: வெறுப்பா? பொண்ணுங்கள் மேல வெறுப்பு வந்துடுத்தன்னா நான் தற்கொலை பண்ணிக்குவேன். அதுக்கப்புறம் என்னடா வாழ்க்கை போடா! டே, நீ என்னமோ பெண்ணுங்களைப் பற்றி பெரிசா டாக்குமென்டரி அது இதுன்னு எடுக்குறேன்னு சொல்றியே. நான் அவங்கமேல பெரிய ஆத்திசூடே வச்சிருக்கின்டா!

பொண்ணை அனுபவி! ஆராயாதே! அவ உன்னைத் தொடருட்டும். நீ அவளைத் தொடராதே! பொண்ணைத் தேடு. அவள் இதயத்தைத் தேடாதே!

பொண்ணுகிட்டயம் ஏமாறாதே! பொண்ணுக்காகவும் ஏமாறாதே!

டே, மச்சான்! வளையக் கூடியது இரும்பு மட்டும் இல்லடா, பொண்ணும்தான்டா!

சில சில வசனங்கள் சிலரை நினைவுக்குக் கொண்டுவந்தது. அதற்காக படத்தில் வரும் காரெக்டர்கள் அப்படியே ஒருவருக்கு பொருந்தாது! கமலின் பாத்திரம் நம்மைப் போல பெண்ணியம் பேசுபவர்களுக்குப் பொருந்துவதாகத் தோன்றலாம். ஆனாலும் அந்தப் பாத்திரத்தைப் போல இறுதிக் காட்சியில் தகப்பன் பார்த்து வைத்த, பெண்விடுதலை என்னவென்று தெரியாத அப்பாவிப் பெண்ணைக் கட்டியது போல எல்லாம் நம் வாழ்வில் நடக்கவில்லை!

 

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இப்படியான கதைகளை இப்ப தமிழ் சினிமா எடுக்கிறதில்ல. இந்தக் காலத்தில அந்தக் காலம் தேடின சுதந்திரம் எல்லாம் எல்லாருக்கும் கிடைச்சிட்டுதுன்னு நினைச்சிட்டாங்க போல..!

 

பகிர்விற்கு நன்றி கிருபன் அண்ணா. :)

ஐயையோ! நெடுக்ஸும் ரதியும் அடிக்க வரப் போகின்றார்கள்!

ஒரு வசனம்:

கமல்: உனக்கு பெண்கள்னாலே ஏன் இவ்வளவு வெறுப்பு?

ரஜனி: வெறுப்பா? பொண்ணுங்கள் மேல வெறுப்பு வந்துடுத்தன்னா நான் தற்கொலை பண்ணிக்குவேன். அதுக்கப்புறம் என்னடா வாழ்க்கை போடா! டே, நீ என்னமோ பெண்ணுங்களைப் பற்றி பெரிசா டாக்குமென்டரி அது இதுன்னு எடுக்குறேன்னு சொல்றியே. நான் அவங்கமேல பெரிய ஆத்திசூடே வச்சிருக்கின்டா!

பொண்ணை அனுபவி! ஆராயாதே! அவ உன்னைத் தொடருட்டும். நீ அவளைத் தொடராதே! பொண்ணைத் தேடு. அவள் இதயத்தைத் தேடாதே!

பொண்ணுகிட்டயம் ஏமாறாதே! பொண்ணுக்காகவும் ஏமாறாதே!

டே, மச்சான்! வளையக் கூடியது இரும்பு மட்டும் இல்லடா, பொண்ணும்தான்டா!

சில சில வசனங்கள் சிலரை நினைவுக்குக் கொண்டுவந்தது. அதற்காக படத்தில் வரும் காரெக்டர்கள் அப்படியே ஒருவருக்கு பொருந்தாது! கமலின் பாத்திரம் நம்மைப் போல பெண்ணியம் பேசுபவர்களுக்குப் பொருந்துவதாகத் தோன்றலாம். ஆனாலும் அந்தப் பாத்திரத்தைப் போல இறுதிக் காட்சியில் தகப்பன் பார்த்து வைத்த, பெண்விடுதலை என்னவென்று தெரியாத அப்பாவிப் பெண்ணைக் கட்டியது போல எல்லாம் நம் வாழ்வில் நடக்கவில்லை!

 

 

சும்மா பகிடிக்கு எழுதினது,உண்மை தான் பாத்திரங்கள் அச்சொட்டாகப் பொருந்துவதில்லை.நல்ல படம் . அந்தக் காலத்திற்கு முந்திய படமாக இருந்திருக்கும். ருத்திரையா

வேறு படம் எடுத்தாரா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ருத்திரையா வேறு படம் எடுத்தாரா?

கிராமத்து அத்தியாயம் என்று இரண்டாவது படம் எடுத்திருந்தார் (பார்க்கக் கிடைக்கவில்லை). அது ஒரு தோல்விப்படமாக அமைந்ததால் அதற்குப் பிறகு ருத்திரையா படம் எதுவுமே எடுக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு படங்களிலும் நல்ல பாடல்கள் உள்ளன..

முன்பு பார்த்தது. தமிழில் வந்த தரமான சினிமாவில் ஒன்று. அந்தக் கால ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள். சமகாலத்தில் நல்ல சினிமாக்கள் வெளி வந்தன. தொடர்ச்சியான மசாலாப் படங்களின் வெற்றிகள் தரமான சினிமாவின் வளர்ச்சியை அழித்து விட்டது.

மீண்டும் பார்க்க வேண்டும். இணைப்பிற்கு நன்றி கிருபன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.