Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீண்டா மலம் - தீண்டத்தகாத மனிதன்

Featured Replies

தீண்டா மலம் - தீண்டத்தகாத மனிதன் biggerfont.png smallfont.png சி. இராஜாராம்

 

ஒரு மனிதன் விடுதலை பெற்றுக் கடவுளை அடைய வேண்டுமானால் அவன் முங்கி இருக்கிற மலங்களிலிருந்து வெளிவர வேண்டும் என்று சொல்லப்படுகின்றது. ஆணவம், கன்மம், மாயை. இந்த மலங்களை உதறி எழாத எந்த மானுடப்பிறவியும் கடவுளை அண்ட முடியாது. ஆனால் மலங்களை உதறவும் கடவுளின் புனிதப் பார்வை வேண்டும். இன்னொருபுறம் இடுப்புக்குக் கீழுள்ள எந்தப் பகுதியும் அசுத்தமானது. மலம் சார்ந்தது. அதனைக் கைகள் தொட்டுவிட்டால் கூட மீண்டும் சுத்தம் செய்யாமல் கடவுளை வணங்க முடியாது என்பவையும் வைதீகக் கோட்பாட்டின் மையமான பகுதியாகும்.

 

தமிழ் இலக்கணங்களில்கூட சமூகத்தில் சிலவற்றைப் பற்றியப் பேச்சு வரும்போது அவற்றை வெளிப்படையாகச் சொல்லாமல் மறைத்துச் சொல்வது என்பன போன்றவற்றுக்கு மங்கல வழக்கு, இடக்கரடக்கல், குழூஉக்குறி, அவையல்கிளவி என்று விளக்கப்படுகின்றன. மலம் முதலான சொற்களை அவையில், இலக்கியத்தில் சொல்லக்கூடாது. குறிப்பாக பலரறிய இத்தகைய சொற்களைப் பேசுபவன் நாகரிகமற்றவன் அல்லது நாகரிகமறியாதவன் என்னும் கருத்துடையவை (இடக்கரடக்கல், அவையல் கிளவி ஆகியன)1 என்று இதற்கான விளக்கங்கள் நீள்கின்றன.

 

தொல்காப்பியம் எச்சவியலில் வரும் ‘அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல்’ ‘பகர இ’ என்பது மனிதக் கழிவைக் குறிக்கும் இடக்கரடக்கல் சொல்.2img_1780.jpg

 

ஆனால் சமண மரபில் வரும் நீலகேசி காவியத்தில் 829ஆம் பாடலிலிருந்து நான்கைந்து செய்யுட்களில் மலத்தை மையமாக வைத்தே ஆசிரியர் தம் கருத்தை விளக்குகிறார். வேதவாதச் சருக்கம் என்னும் அப்பகுதியில் வேதங்கள் என்றால் என்ன, அவை யாரால் படைக்கப்பட்டன என்னும் நீலகேசியின் கேள்விகளுக்கு வேதவாதி, ‘வேதம் யாராலும் படைக்கப்படாதது; அது தான் தோன்றி’ என்பதற்கு நீலகேசி, ‘நள்ளிரவில் மக்களெல்லாம் உறங்கும் நேரத்தில் ஊர் நடுவே ஒருவன் மலங்கழித்துச் சென்றால் அதை, தான்தோன்றி என்பாயோ? ஆயுர் வேத வைத்தியப்படி பரிசீலித்த நோயாளியின் மலம், நோஞ்சானின் மலம், வலிமையானவனின் மலம் என்று பகுக்கலாம். அந்த நோயாளிக்கு என்ன நோயென்று கூடப் பார்க்கலாம். அதை விட்டுவிட்டுத் தான் தோன்றி என்பது பகுத்தறிவுக்கு ஒவ்வுமா’ என்று கேட்கிறான். இந்த ஓரிடம் தவிரத் தமிழ் இலக்கிய வரலாற்றில் மலப்பகுப்பாய்வு வேறெங்கும் இல்லை. சொன்னவர்களும் வைதிகத்திற்கு எதிரான அவைதிகர்கள் என்பது கவனிக் கத்தக்கது என்று கோ. வேல்சாமி எடுத்துக்காட்டுகிறார்.3

 

இவ்வாறு மலம் என்ற சொல்லைக்கூட தமிழர்கள் மறைத்தே சொல்லியிருக்கும்போது, தான் கழித்த மலத்தைக் கொஞ்சமும் அருவருப்பின்றி சக மனிதனை அள்ளச் சொல்லும் நிலைக்கு நம் சமூகம் மாறியது எப்போது?

 

நமக்கு கிடைத்திருக்கும் தரவுகளின்படி பார்த்தால் 17ஆம் நூற்றாண் டிற்கு முன்பு வரை மனிதக் கழிவை மனிதர் அகற்றும் வழக்கம் இல்லை; 17ஆம் நூற்றாண்டில் மனிதக் கழிவை மனிதன் அகற்றும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு கொண்டு வரப்பட்டவர்களின் வாயிலாகப் பெருகிய இத்தொழிலாளர்களின் எண்ணிக்கை இந்தியாவில் இப் பொழுது பல லட்சம் பேராக உள்ளனர்.4

 

இதன்படி தற்போது “இந்தியாவில் ஒரு லட்சத்து 35 ஆயிரம்பேர் மனிதக் கழிவை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தில்தான் அதிகபட்சமாக மனிதக் கழிவை அகற்றும் தூய்மைத் தொழிலாளர்கள் 22 ஆயிரத்து 822 பேர் இருக்கிறார்கள்” என்று சமூக நீதி இணை அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் சட்ட ஆணையத்தின் தலைவர் ஏ.ஆர். லட்சுமணன், மத்திய சமூக நீதி அமைச்சகத்திற்கு 14.10.2008 அன்று எழுதியுள்ள கடிதத்தில், ‘சபாய் கரம்சாரி அந்தோலன்’ என்கிற அறிக்கையைக் குறிப்பிட்டு, “இந்தியாவில் 13 லட்சம் மக்கள் மனிதக் கழிவை அள்ளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்”5 என்று குறிப்பிட்டுள்ளார். 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி நாட்டில் (இந்தியாவில்) மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் 26 லட்சம் குடும்பங்கள் ஈடுபட்டிருப்பதாக மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அவர்கள் கூறியுள்ளார்.668a9823f-1c6e-4de6-88ea-4325ec6d75e8.jpg

 

பொதுவாக நம் சமூகத்தில் தெருக்களைச் சுத்தம் செய்வது, குப்பைகளைப் பொறுக்குவது, தோல் பயன்பாடுடைய தொழில், மனித - மிருக சடலங்களை அப்புறப்படுத்துவது / எரியூட்டுவது, பன்றிகள் வளர்ப்பது / மேய்ப்பது, மனித மலத்தை அள்ளுவது / அப்புறப்படுத்துவது போன்ற துப்புரவுப்பணிகள் பட்டியலிடப்பட்டிருக்கிறது.7

 

இந்தச் சமூகத்தில் கழிப்பிடங்களைத் தூய்மை செய்யாமல், இறந்து போன விலங்குகளின் தோலை உரிக்காமல், செத்தவர்களின் உடலை அடக்கம் செய்யாமல் இருந்தால் சாதி இந்துக்களின் வாழ்க்கை தீட்டாகிவிடும்; அசுத்தமாகிவிடும், நோய் பீடிக்கும். இந்த வேலைகள் எல்லாம் அருவருக்கத்தக்க வெறுப்புணர்ச்சியைத் தூண்டுகின்றன. எனவே, இந்த வேலைகளைச் செய்யும் தலித்தும் அருவருக்கத்தக்கவராகிறார். இந்த வேலையைச் செய்தே தீரவேண்டும் என வற்புறுத்துகிறார்கள் சாதி இந்துக்கள் என்று இதன் பின்னணியை சரண்குமார் லிம்பாலே விவரிக்கிறார்.8

 

மலம் தீண்டப்படுவதில்லை, அதனைத் தீண்டி சுத்தம் செய்வோரும் தீண்டப்படுவதில்லை. இறந்த ஆடு, மாடுகளைத் தீண்டுவதில்லை, அவற்றைச் சுத்தம் செய்வோரும் தீண்டப்படுவதில்லை9 என்கிற நிலையே இங்கிருக்கிறது.

 

மொத்தத்தில் ஒரு சமூகம் தன்னுடைய தூய்மையை, சுத்தத்தைக் காப்பாற்றிக் கொள்ள தலித்துகளை இவ்வுலகின் ஓரத்திற்கேத் தள்ளி விட்டது10 என்பதே உண்மை.

 

சாக்கடை நீர் காலில் பட்டுவிடக்கூடாது என்பதற்காகப் பார்த்து பார்த்து ஒதுங்கி நடக்கும். நாமும் மனிதர்கள்தான், பல்லாயிரக்கணக்கான மக்களின் கழிவுகளைச் சுமந்து கொண்டு ஓடிவரும் சாக்கடையைப் புனித ஆறாகக் கருதி எவ்விதச் சலனமும் இல்லாமல் உள்ளே இறங்கித் தொழில் தர்மத்தைக் காக்க துன்பத்தை நாளும் அனுபவிக்கும் அவனும் மனிதன்தான்.11 ஆனால் அவனுக்கு ‘ஒரு மனிதன்’ என்ற அடையாளத்தைக் கூட கொடுக்க மறுக்கிறது இந்தச் சமூகம்.

 

செத்துப் போன எலிகள், பூனைகள், பிராணிகளின் தசைகள் மக்கிச் சிதைந்து அரைகுறையாக மிதந்து கொண்டிருக்கும் பாதாளச் சாக்கடையில், நகர மக்களின் மலமும் சிறுநீரும் அசுத்தங்களும் கரைந்து கூடியிருக்கும் பாதாளச் சாக்கடையில், அசுத்த நீரில் தலை நனைய உடல் நனைய, காது மூக்கு துவாரங்களில் நீர் நுழைய, வாயிலும் அந்த அசுத்தநீர் பட்டு வெளியேறுவதால் உடல், உளவியல் அடிப்படையில் ஏற்படும் கொடுமையான பாதிப்புகளைச் சொல்ல முடிவதில்லை.12

 

amudhan_2.jpgஒரு கிராம் மனிதக் கழிவில் ஏறக்குறைய 10 கோடி வைரஸ்கள், 10 லட்சம் வகை பாக்டீரியாக்கள், ஆயிரம் ஒட்டுண்ணி முட்டைகள் இருக்கின்றன. சளி, இருமல், மூளைக்காய்ச்சல் வயிற்றுக் கோளாறுகள், சிறுநீரகச் செயல் இழப்பு, ரத்த சோகை போன்றவற்றை ஏற்படுத்தும் ஈகோலி (மீ.நீஷீறீவீ) வயிற்றுப் போக்குக்குக் காரணமான பேஸிலஸ் (bacillus) போன்ற ஏராளமான கிருமிகள், ஷி ஜெல்லோஸிஸ் (Shigellosis), சால்மோனெல்லா (ஷிணீறீனீஷீஸீமீறீறீணீ) வகை பாக்டீரியா போன்ற தோல் நோய் பரவச் செய்து தொடை இடுக்குகளில் வரும் அரிப்புக்குக் காரணமான பூஞ்சைகள் உள்ளதும் கழிவுநீர் நிலைகளில் காணப்படும் ஒரு மனிதனுக்கு அதிகப்படியான நோயை உண்டுபண்ணுவதும் சாக்கடைகளே.13 இவ்வளவு நோய்களை உண்டு பண்ணும் சாக்கடைகளுக்குள்தான் அம்மக்கள் தினந்தோறும் பணி செய்கின்றனர். நம் உடம்பின் வியர்வைத் துர்நாற்றத்தையும், மலத்துவாரம்வழி வெளிவரும் காற்றின் துர்நாற்றத்தையும் பொறுக்க முடியாமல் முகம் சுளிக்கும் நாம் நம் உடம்பிலிருந்து வெளியேறிய மலத்தை, நம்மிடையே ஒருவராக இருக்கும், அதே உணர்வுகளை உடையோராக இருப்போரைக் கைகளால் தூய்மைப்படுத்தச் சொல்வது நியாயமான செயலா?14 என்று ஆய்வாளர் சி. வாசுகி எழுப்பும் கேள்வி சரியே.

 

மலம் அள்ளுபவர்கள் தங்கள் வாழ்விடங்கள் சார்ந்தும் பணி சார்ந்தும் பலவித நோய்களுக்கு ஆளாகிறார்கள். டெங்கு, மலேரியா, வயிற்றுப்போக்கு, சத்துக் குறைபாடுகள், சுவாசக் கோளாறுகள் என ரகம் ரகமான நோய்களுக்குப் பஞ்சமில்லை. குழந்தைப் பருவத்திலேயே பல சிசுக்களின் இறப்பிற்கு இவர்களின் வாழ்விடங்களே காரணம் எனப் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன15 என்கிறார் அ. முத்துக்கிருஷ்ணன்.

 

எல்லோரும் எல்லாத் தொழில் களையும் செய்யலாம் என்று அரசியல் சட்டம் குறிப்பிடுகிறது. ஆயினும் இன்னமும் அர்ச்சகர் தொழில் பார்ப்பனருக்கு என உச்சநீதிமன்றம் குறிப்பிடுகின்றது. துப்புரவுத் தொழில் தாழ்த்தப்பட்டோருக்கே எனச் சமூக நடைமுறை வலியுறுத்துகிறது.16

 

ஒவ்வொரு நாளும் குறைந்தது மனிதன் தன் மலத்தைத் தானே தொட்டுக் கழுவும் தோட்டியாக உள்ளான். ஆனால் மற்றவர்கள் மலத்தை, சமூகநலம் கருதி அப்புறப்படுத்தியவனைச் சமூகத்திலிருந்தே தூர ஒதுக்கி விடுகிறான். தீண்டப்படாதவனென்றும், தோட்டி என்றும் மலத்தைத் தொடா மனிதன் உண்டா?17

 

கையால் மலம் அள்ளுதல் ஒரு தேசிய அவமானம் என்று எல்லோரும் முழுமனதோடு தாழ்வான குரலிலும் அறிவிக்கிறார்கள். தேசிய அவமானம் என்பது ஒரு தேசத்தின் பொறுப்பு, ஆனால், எவரும் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. சுத்தமான பணி, அசுத்தமான பணி என்று பார்க்கப்பட்டு, சாதியப் படிநிலையின் அடியில் இருப்பவர்கள் மட்டுமே சுத்தமற்ற வேலைகளை செய்ய வேண்டும் என்று விதிக்கப்பட்டிருப்பதாக நம்பப்பட்டு வருகிறது.18

 

இந்தியாவில் மட்டும் பாதாளச் சாக்கடைகளில் இறங்கி விஷவாயுக்கள் தாக்கி இறப்பவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தொழிலாளர்கள் நோய்வாய்ப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 22,000 பேர் என்று புள்ளிவிவரம் கூறுகிறது.19

 

‘மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளக்கூடாது’ என்று உயர்நீதிமன்ற உத்தரவு இருந்தும், தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளில் இதனால் உயிரிழந்தோர் 800 பேர் என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.20

 

ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்து இறக்கும் சிறுவர்/சிறுமியர்களை நேரடி ஒளிபரப்பாகக் காட்டும் ஊடகங்கள், சாக்கடைக்குள் இறங்கி உயிரைப்போக்கும் மனிதர்களைக் காட்டுவதில்லை.21

 

மிக அண்மையில் தூத்துக்குடியில் செப்டிக் டேங்கைச் சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 வாலிபர்கள் பலியானார்கள் (தினகரன் 04.03.2013 பக்கம் 12). தர்மபுரியில் கழிவுநீர் அடைப்பை இரவு நேரத்தில் சுத்தம் செய்த மூன்று தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி இறந்தனர். (தினகரன் 21.03.2013 பக்கம் 15) கடந்த 30 மாதங்களில், 26 தொழிலாளர்கள் சாக்கடைகளிலும் மலக்குழிகளிலும் இறந்திருக்கிறார்கள்.22Manual-scavenger.jpg

 

1992ஆம் ஆண்டு 73வது சட்டத்திருத்தமாகத் துப்புரவுத் தொழிலாளர் நலனுக்காகவும், கிராம சுகாதாரத்துக்காகவும் ஒரு தேசிய திட்டம் கொண்டு வரப்பட்டது. மலம் நீக்குவதற்கு மனிதர்களைப் பயன்படுத்துதல் மற்றும் உலர் கழிப்பறைகளைக் கட்டுதல் (தடுப்புச்) சட்டம் 1993ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது.23 20 ஆண்டுகளாக ஒரே ஒருவர்கூட இச்சட்டத்தின்கீழ் விசாரிக்கப்படவில்லை. இச்சட்டத்தில் பல குறைகள் இருந்தன என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், ஒரே ஒருவர்கூட இச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்படாததற்கு நிச்சயம் இது காரணமாக இருக்க முடியாது. கையால் மலமள்ளுபவர்களுக்கு ஏன் எந்த மறுவாழ்வும் வழங்கப்படவில்லை? சட்டத்தை உருவாக்குபவர்களுக்கு அதை நடைமுறைப்படுத்தும் உறுதி இல்லை என்பதே உண்மை.24

 

சாக்கடைத் துப்புரவுத் தொழிலில் மனிதர்களை ஈடுபடுத்தினால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதா பாராளுமன்றத்தில் 06.09.2013 அன்று நிறைவேறியது. இந்த மசோதாவை அறிமுகம் செய்து பேசிய சமூக நீதித்துறை மற்றும் அதிகாரம் வழங்கல்துறை அமைச்சர் செல்ஜா அவர்கள் கூறும்போது “சாக்கடைத் துப்புரவுத் தொழிலில் மனிதர்களை ஈடுபடுத்தத் தடை செய்து ஏற்கனவே 1993ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டம் வலுவான விதத்தில் இல்லை என்பது நிரூபணமாகி உள்ளது. எனவே இந்தப் புதிய மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. மனித நேயமற்ற இந்த நடைமுறையை முடிவுக்கு கொண்டு வந்து விட்டோம்” என்று கூறினார்.25 இந்தப் புதிய சட்டத்திற்குத் “துப்புரவுத் தொழிலாளர்கள் பணி நியமன தடுப்பு மற்றும் மறுவாழ்வு மசோதா - 2013” என்று பெயர்.

 

தீண்டப்படாதவர்களுக்கு எதிராக பாரபட்சம் இல்லாத ஒரே துறை துப்புரவுப் பணிதான். இதில் பாரபட்சத்திற்கு இடமில்லை; ஏனென்றால், துப்புரவுப் பணி முழுவதும் தீண்டப்படாதவர்களுக்கே விடப்பட்டுள்ளது. அதில் இந்துக்கள் போட்டியிடுவதில்லை. அசுத்தமான வேலைகள் எல்லாம் தீண்டப்படாதவர்களால் செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் நம்புவதே இதற்கு காரணம். ஆனால், அசுத்தத்தைத் தொடத் தேவையில்லாதவையும் அதிகம் சம்பளம் உள்ளவையுமான மேற்பார்வைப் பதவிகளில் எல்லாம் இந்துக்களே அமர்த்தப்படுகிறார்கள்.26 கடந்த 2013 செப்டம்பர் மாதம், கிராமப் பஞ்சாயத்துக்களில் 16 ஆயிரத்து 726 துப்புரவுப் பணியாளர்களை நியமிக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.27 இந்தத் துப்புரவு பணிக்குச் சாதி இந்துக்கள் போட்டியிட்டிருக்க வாய்ப்பில்லை. அது முழுக்க முழுக்க தலித் மக்களுக்கான பணியே என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. வேறு எந்த நிலைகளிலும் இடஒதுக்கீட்டைச் சரியாய்ப் கடைப்பிடித்துப் பணியாளர்களை நிரப்பாத அரசுகள் கடைநிலை மற்றும் துப்புரவுத் தொழில் பணியிடங்களில் இடஒதுக்கீட்டுக்கு அதிகமாகவே தொழிலாளர்களை நிரப்புகின்றன.

 

மத்திய அரசின் ‘மலம் அள்ள மனிதனைப் பயன்படுத்தக் கூடாது’ என்ற சட்டமும், தமிழக அரசின், ‘துப்புரவுப் பணியாளர்கள் நியமன உத்தரவும்’ தலித் மக்களுக்கான சட்டமாக உள்ளது.

அடிக்குறிப்புகள்

1. பொற்காலங்களும் இருண்ட காலங்களும்-
பொ. வேல்சாமி
2. நியூசெஞ்சுரியின் ‘உங்கள் நூலகம்’ ஆகஸ்ட் 2013- டாக்டர் இராதா செல்லப்பன் அவர்களின் கட்டுரையிலிருந்து. பக்கம் 47
3. பொற்காலங்களும் இருண்ட காலங்களும் - பொ. வேல்சாமி.
4. தலித்தியச் சிக்களும் தீர்வுகளும் - முனைவர் சி. வாசுகி
5. தலித் முரசு. அக்டோபர் 2008
6. தினத்தந்தி 12.12.2012 - பக்கம் 2
7. மலத்தில் தோய்ந்த மானுடம்- அ. முத்துக்கிருஷ்ணன் - உயிர்மை பதிப்பகம் முதல் பதிப்பு டிசம்பர் 2008.
8. தலித் இலக்கியம்: விடுதலையின் திசைகள் - சரண்குமார் லிம்பாலே, தமிழில்: அன்பு செல்வம். புத்தா வெளியீட்டகம்.
9. தமிழர் மானிடவியல் - பக்தவத்சல பாரதி. மெய்யப்பன் தமிழாய்வகம்
10. தலித் இலக்கியம்: விடுதலையின் திசைகள்- சரண்குமார் லிம்பாலே. தமிழில்: அன்புசெல்வம். புத்தா வெளியீட்டகம்.
11. தலித்தியச் சிக்கல்களும் தீர்வுகளும் - முனைவர் சி. வாசுகி.
12. மேலது
13. காலைக்கதிர் 05.11.2012
14. தலித்தியச் சிக்கல்களும் தீர்வுகளும் - முனைவர் சி. வாசுகி
15. மலத்தில் தோய்ந்த மானுடம்: அ. முத்துக்கிருஷ்ணன் (பக்கம் 30-39)
16. அம்பேத்கரும் சாதிய ஒழிப்பும் - முனைவர் கோ. கேசவன். வெளியீடு: சரவணபாலு பதிப்பகம்.
17. தீண்டாமையைத் தீயிடு - டாக்டர் பேராசிரியர் ப. சீனிவாசன்
18. தலித் முரசு. மே. 2012 (பக்கம் 30-33)
19. மலத்தில் தோய்ந்த மானுடம் - அ. முத்துக்கிருஷ்ணன் (பக்கம் 30-39)
20. தினகரன் 22.6.2012
21. மலத்தில் தோய்ந்த மானுடம் - அ. முத்துக்கிருஷ்ணன் (பக்கம் 30-39)
22. புதிய தலைமுறை 29 ஆகஸ்ட் 2013. ‘பாடம்’ நாராயணன் அவர்களின் கட்டுரையிலிருந்து.
23. தலித் பெண்ணிய அழகியல்- அரங்க மல்லிகா, அறிவுப் பதிப்பகம் சென்னை.
24. தலித் முரசு. மே 2012 (பக்கம் 30-33)
25. தினத்தந்தி 8.9.2013 (பக்கம் 9)
26. தீண்டாமை எப்போது தோன்றியது. ஓர் அம்பேத்கரியப் பார்வை. மு. நீலகண்டன். நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்.
27. தினமணி 15.09.2013 (பக்கம் 9)

 

http://www.kalachuvadu.com/issue-170/page37.asp

நன்றி நிழலி ,

இந்த ஆக்கத்தை வாசித்தபோது எழுபதுகளில் எனது மாமா எழுதிய "பிரளயம் " எனும் சிறுகதை நினைவு வந்தது .யாழ் வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகில் இருக்கும் மலகுழிக்குள் விழுந்த ஒரு சிறுவனை மலம் அள்ளும் ஒருவரை கொண்டுவந்து மீட்பது பற்றியது .

இளவயதில் குடியால் இறந்த மாமாவின் நினைவு வர சும்மா GOOGLE ஐ தட்டிப்பார்த்தேன் .அவரைப்பற்றிய ஒரு சிறு குறிப்பு ஒன்று இருந்ததை பார்க்க மிக்க மகிழ்சியாக இருந்தது .

பிரளயம் சிறுகதை எங்காவது தேடிப்பிடிக்க வேண்டும் .இத்துடன் மாமா பற்றிய குறிப்பையும் இணைத்துவிடுகின்றேன் .இவர் நிர்மலா என்ற சினிமாவிலும் நடித்தார்.

எழுத்தாளர் துருவன்

thuruvan.jpgஇலங்கை நிர்வாக சேவை அதிகாரியாகவிருந்து மிக இளம் வயதிலே அமரத்துவம்  அடைந்த துருவன் என்னும் எழுத்துலகப் புனைபெயர் கொண்ட அமரர் கனகரத்தினம் பரராஜசிங்கம் (22.11.1943 – 07.04.1989) நல்லூர் செங்குந்தா இந்துக் கல்லூரியில் இடைநிலைக் கல்வியை நிறைவு செய்து பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியற் சிறப்புப் பட்டதாரியானவர். தனது கல்லூரி ஆசிரியராகவும் பின்னர் அதிபராகவும் விளங்கிய சிவ சரவணபவான் (சிற்பி) அவர்களின் ஆசிரியத்தின் கீழ் இயங்கிய ”கலைச்செல்வி” சஞ்சிகையின் வாயிலாக எழுத்துலகில் பிரவேசித்த துருவன் கல்லூரி மாணவர் சஞ்சிகையான ”சுடரொளி” யிலும் தன் எழுத்தின் தடம் பதித்தவர். குறுகிய காலத்துள் பெருவிருட்சம் போல் படர்ந்து இலக்கிய உருப்பெற்றவை இவரின் சிறுகதைகளாகும்.

இவரின் தந்தையார் நகைச்சுவைப் பாத்திரங்களில் நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்ற ”பபூன் சின்னத்துரை” என அழைக்கப்பட்டவர். அவர் வழியில் இவரும் நாடக நடிகராகவும், நாடக எழுத்தாளராகவும், இயக்குனராகவும் விளங்கியவர். நகைச்சுவை ஆக்கங்களைப் படைப்பதிலும் இவர் வல்லவராக விளங்கினார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இருந்து முகிழ்ந்த பிரபல எழுத்தாளர்களான செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், குந்தவை, அங்கையன், செ. யோகநாதன், செ. கதிர்காமநாதன், சிதம்பரபத்தினி, முதலானவர்களின் சமகால பல்கலை மாணவனாக துருவன் அவர்களும் எழுத்துலகில் ஒன்றாக படைப்பிலக்கியம் தந்தவர். அறுபது எழுபதுகளில் புனைகதைகள் படைப்பதில் போட்டியிருந்தது. அந்தப் போட்டியினூடே வளர்ந்த எழுத்தாளர் துருவன் ”பூ” என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் அவர் மறைவின் பின் அவரது துணைவியார் செல்வராணியால் அவர்களின் மணி விழா நாளில் நூலுருப் பெற்று வெளிவந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள், நிழலி!

 

எனது வாழ்க்கையில் நான் மறக்க முடியாத ஒருவர், எமது கல்லூரி விடுதியின் மலசல கூடங்களுடன், மற்றும் 'கழிவு வாய்க்கால்' போன்றவற்றையும் சுத்தப்படுத்துபவர். அவரது பெயர் 'கறுப்பன்' என்று நினைவு. என்ன காரணத்தாலோ, அவர்களை ஒருவரும் 'நல்ல' பெயர் கொண்டு அழைப்பதில்லை! :o

 

சனி, ஞாயிறு தினங்களில் 'குமாரசாமி' ஹால் பக்கம் போய்க், கள்ள மாங்காய் பிடுங்குவது, பிலாப்பழம் இறுக்குவது போன்ற வேலைகளைச் சிறுவர்களாக இருந்த நாங்கள் செய்வது வழக்கம்!

 

நாங்கள் பொழுது போகாமல் செய்கின்றோம் எண்டு உங்களுக்கு விளங்கும் தானே!

 

எம்மில் சிலர் 'கறுப்பனை' ஒரு மனிதனாகப் பார்த்ததே கிடையாது.

 

ஒரு நாள், மாங்காய் பிடுங்கிற நேரத்தில, வீட்டுக்கார மாஸ்டர் வளவுக்கை வந்திட்டார்.

 

எல்லாரும் மதிலால பாஞ்சு, கறுப்பன் வீட்டுப் பக்கத்தால தான் 'தப்பியோட' வேண்டி வந்திட்டுது! வெளியால நிண்ட 'கறுப்பன்' எல்லாரையும் வடிவாப் பார்த்தான்!

 

பின்னர் மாஸ்டர், வேலிக்கு மேலால எட்டிக் கறுப்பனிடம் 'ஆரு பெடியள்' எண்டு விசாரிக்கக் 'கறுப்பன்' நான் கவனிக்கேல்லை மாஸ்டர் எண்டு சொல்லிப்போட்டு, வீட்டுக்குள்ள போட்டான்!

 

அவன் நினைச்சிருந்தால், அவ்வளவு பேருக்கும் அடுத்த நாள், அசம்பிளியில ஒரு 'திருவிழா' நடத்தியிருக்கலாம்! :D

 

அவனது வெள்ளை மனசு, இண்டைக்கும் மனதிலை நிக்குது!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை நினைக்கப் பாவமாகத்தான் இருக்கு. எங்கள் நாட்டில் இந்தியா போல் மோசம் இல்லையே

வல்லரசு இந்தியாவில் கையால் மலம் அள்ளும் வேலை

 

06-scavenging-1.jpg

 

கையால் மலத்தை அள்ளிக் கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும் இழிதொழிலை ஒழித்துக்கட்டக் கோரும் போராட்டங்கள் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் நிலையில், மைய அரசு தூக்கத்திலிருந்து திடீரென விழித்துக் கொண்டதைப் போல, கடந்த செப்டம்பர் மாதத்தில் இதற்காகப் புதிய சட்டமொன்றை – கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்துவதைத் தடை செய்தல் மற்றும் அவர்களது மறுவாழ்வுக்கான சட்டம் – நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒருமனதாக நிறைவேற்றியிருக்கிறது. ஐ.டி. கம்பெனிகள், இணையதளம், முகநூல், மால்கள், காபி ஷாப், பங்குச் சந்தை, செவ்வாய் கோளை நோக்கிப் பறந்து கொண்டிருக்கும் “மங்கள்யான்” விண்கலம் எனப் பளபளப்பாகக் காட்டப்படும் இந்தியாவின் இருண்ட, இழிந்த பக்கம்தான் கையால் மலம் அள்ளும் தொழில். இந்தத் தொழில் இந்தியாவின் ஏதோவொரு பின்தங்கிய மாநிலத்தின், பின்தங்கிய குக்கிராமத்தில் நடைபெறலாம் என யாராவது நினைத்துக் கொண்டால், அதைவிட அறியாமை வேறு எதுவும் இருக்க முடியாது.

கையால் மலம் அள்ளும் இழிதொழில் பின்தங்கிய பீகாரில் மட்டுமின்றி, வளர்ச்சிக்கே வழிகாட்டும் மாநிலமாகப் பீற்றிக் கொள்ளப்படும் குஜராத்திலும் இன்றளவும் நடந்து வருகிறது. தலைநகர் டெல்லி, குஜராத்தின் அகமதாபாத் உள்ளிட்டு நாட்டின் பல்வேறு நகரங்களிலும் 256 மாவட்டங்களிலும் காணப்படுகிறது. உள்ளூராட்சி நிர்வாகம் தொடங்கி ரெயில்வே துறை, பாதுகாப்புத் துறை என மைய அரசின் பல்வேறு பிரிவுகளிலும் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

2011-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு, “நாடெங்கிலும் 7,50,000 குடும்பங்கள் கையால் மலம் அள்ளும் தொழிலைச் செய்து வருவதாக”க் குறிப்பிடுகிறது. “இந்தப் புள்ளிவிவரம் ரெயில்வே துறையில் வேலை செய்துவரும் மலம் அள்ளும் தொழிலாளர்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு தயாரிக்கப்படவில்லை” எனக் குற்றஞ்சுமத்தும் அரசுசாரா அமைப்புகள், அத்தொழிலாளர்களையும் சேர்த்தால், நாடெங்கும் ஏறத்தாழ 13 இலட்சம் குடும்பங்கள் கையால் மலம் அள்ளும் தொழிலைச் செய்து வருவதாகக் கூறுகின்றன.

சுகாதாரப் பணி என அலங்காரமாகச் சோல்லப்படும் மலத்தை அள்ளுவதும், சாக்கடையைச் சுத்தம் செய்வதும் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்குள்ளேயே அடித்தட்டில் இருக்கும் அருந்ததியர், ஆதி ஆந்திரா, வால்மீகி உள்ளிட்ட சில பிரிவு மக்களின் மீது திணிக்கப்பட்டுக் கடைபிடிக்கப்படுகிறது. நகர்ப்புறங்களில் பாதாளச் சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டால், அதற்குள் இறங்கி அடைப்பை நீக்கும் ‘பொறுப்பை’த் தாழ்த்தப்பட்ட ஆண்கள் மீது சுமத்தியிருக்கும் இந்தியச் சாதி சமூக அமைப்பு, மலத்தைக் கையால் அள்ளிச் சுத்தம் செய்வதைத் தாழ்த்தப்பட்ட பெண்கள் மீது சுமத்தியிருக்கிறது.

06-scavenging-6.jpgதெருவில் சாக்கடைத் தண்ணீர் வழிந்தோடினால், அதில் கால்படாமல் லாவகமாகத் தாண்டிச் செல்லுகிறோம். வீட்டிற்குள் குழந்தைகள் மலம் போய் விட்டால், அதைத் தூக்கிப் போடுவதற்குக் கூட அருவெறுப்பு அடைகிறோம். அப்படியிருக்கையில் நம்மைப் போன்ற சகமனிதன் மலமும் கழிவு நீரும் பொங்கி வழியும் சாக்கடைக்குள் இறங்குவதையும், யாருடைய மலத்தையோ கையால் வழித்துக் கூடைக்குள் போட்டுக் கொண்டு அதைத் தலை மேல் வைத்து எடுத்துச் செல்வதையும் கண்டு அதிர்ந்திருக்கிறோமா? இந்தத் தொழிலை சாதிக் கட்டுப்பாடு-கட்டாயத்தின் கீழ் செய்துவரும் அந்தத் தாழ்த்தப்பட்டோரின் மனோநிலையை அறிந்து வைத்திருக்கிறோமா?

“என்னுடைய உடம்பின் ஒவ்வொரு அங்கமும் நாறுகிறது; பலமுறை குளித்த பிறகும் நாறுகிறது. என்னால் சோற்றில் கை வைக்க முடியவில்லை; எனக்கு வேறு எந்த வேலையாவது கொடுங்கள். தயவு செய்து இந்த நரகத்திலிருந்து எனக்கு விடுதலை கொடுங்கள்” என்கிறார், உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த மலம் அள்ளும் தொழிலாளி சரசுவதி. அவர் மலத்தை அள்ளிக் கொண்டு வரும்பொழுது ஆதிக்கசாதியைச் சேர்ந்த இளைஞர்கள், “இன்று நீ நடிகை கார்தீனா கைஃப் போல இருக்கிறா” எனக் கேலி பேசுவார்கள். “அதைக் கேட்டும் கேட்காதது போல நான் நடந்து செல்வேன்” என்று அன்றாடம் தனது மனது படும் வலியை விவரிக்கிறார், சரசுவதி.

இந்தியாவைக் காக்க வந்திருக்கும் ரட்சகனாக நம்முன் நிறுத்தப்படும் மோடி, “வால்மீகி சாதியினர் மலத்தைக் கையால் அள்ளிச் சுத்தம் செய்வதை ஆன்மப் பரிசோதனையாகச் செய்து வருகின்றனர்” எனச் சாதித் திமிரோடு நியாயப்படுத்திப் பேசியிருக்கிறார். நம்முள் பலர் இந்தளவிற்கு வெளிப்படையாகக் கேவலமாக நடந்து கொள்வதில்லை என்றாலும், அவர்கள் நம்மை நெருங்கிவிடாதபடி தள்ளித்தான் வைத்திருக்கிறோம். அவர்களின் நிலை குறித்து அக்கறையற்று, சோரணையற்று நடந்து வருகிறோம்.

***

பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சஃபாய் கர்மாச்சாரி அந்தோலன் (துப்புரவு தொழிலாளர் இயக்கம்) எனும் அமைப்பு கையால் மலம் அள்ளும் தொழிலை முற்றிலுமாகத் தடை செயக் கோரும் போராட்டங்களை 1980-களின் தொடக்கத்தில் எடுத்தது. இப்போராட்டங்கள் தொடங்கி 13 ஆண்டுகள் கழித்து, 1993-இல்தான் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணியமர்த்துதல் மற்றும் உலர் கழிப்பறைகள் கட்டுதல் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தது, மைய அரசு. இச்சட்டத்தைப் பற்றி ஒரே வரியில் சொன்னால், பாம்பும் சாகக் கூடாது, தடியும் நோகக் கூடாது என்பதுதான் மைய அரசின் நோக்கமாக இருந்தது.

06-scavenging-2.jpg

தமிழகத்தில் கடந்த 30 மாதங்களில், பாதாளச் சாக்கடைக்குள் இறங்கிய பொழுது விஷவாயு தாக்கி இறந்து போன தொழிலாளர்களின் எண்ணிக்கை முப்பதைத் தொட்டு விட்டது.

கையால் மலம் அள்ளுபவரைப் பணிக்கு அமர்த்துபவருக்கு ஒரு வருடம் வரை சிறைத் தண்டனையும் 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என இச்சட்டம் பூச்சாண்டி காட்டினாலும், இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எந்தவொரு துறையும் பொறுப்பாக்கப்படவில்லை. இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தவறியதாக எந்தவொரு அதிகாரி மீதும் குற்றஞ்சுமத்தவும் முடியாது; தண்டிக்கவும் முடியாது. இப்படிப்பட்ட பல்வேறு ஓட்டைகளுடன் இச்சட்டம் கொண்டு வரப்பட்டதால், பெரும்பாலான மாநிலங்களும், மைய அரசின் ரயில்வே துறை, பாதுகாப்புத் துறையும் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை. இத்தகைய மோசடித்தனங்களின் விளைவாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உலர் கழிப்பறைகள் இருந்து வருவது தடை செயப்படவுமில்லை; கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தியதாக ஒருவர் கூடத் தண்டிக்கப்படவுமில்லை.

இச்சட்டம் அதன் இயல்பிலேயே அக்கறையற்றும் அலட்சியமாகவும் உருவாக்கப்பட்டுள்ளதை அம்பலப்படுத்தியும், அச்சட்டத்தைத் திருத்தம் செய்யக் கோரியும் துப்புரவு தொழிலாளர் இயக்கத்தின் தலைவர் பெசவாடா வில்சன் உச்சநீதி மன்றத்தில் 2003-ஆம் ஆண்டில் பொதுநல வழக்குத் தொடுத்தார். மைய அரசு கடந்த பத்தாண்டுகளாக வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கியே வழக்கை இழுத்தடித்தேயொழிய, சட்டத்தில் உரிய திருத்தங்களைச் செய்ய முன்வரவில்லை.

இதனிடையே சென்னையைச் சேர்ந்த “பாடம்” பத்திரிகையின் ஆசிரியர் நாராயணன், கையால் மலம் அள்ளும் தொழிலை உடனடியாகத் தடை செயக் கோரி 2005-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். இவ்வழக்கில் கையால் மலம் அள்ளுவதைத் தமிழகத்தில் தடை விதித்துத் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதி மன்றம், “1993-ஆம் ஆண்டு சட்டத்தில் உடனடியாகத் திருத்தங்களைச் செய வேண்டும்; தவறினால், பிரதம மந்திரி அலுவலகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் நீதிமன்றக் கூண்டில் ஏற வேண்டியிருக்கும்” என எச்சரித்தது. இதே போல குஜராத் உயர்நீதி மன்றமும் மைய அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்துத் தீர்ப்பளித்தது.

இப்பிரச்சினையில் அடுத்தடுத்து வழக்குகளையும், நீதிமன்றக் கண்டனங்களையும் சந்தித்த மைய அரசு, இவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளும் தந்திரத்தோடும், துப்புரவுப் பணிகள் தனியார் மயமாக்கப்பட்டிருப்பதன் பின்னணியிலிருந்தும் புதிய சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. பழைய கள்ளு புதிய மொந்தை என்பதைத் தாண்டி இப்புதிய சட்டமும் இந்த இழிந்த தொழிலை ஒழிக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதோடு, அதனை மலினமான வழிகளில் நவீனப்படுத்தி, 21-ஆம் நூற்றாண்டிலும் தொடருவதை உத்தரவாதப்படுத்துகிறது.

06-scavenging-3.jpg

ரயில்வே துறையில் நவீனமான கருவிகளைப் பயன்படுத்திக் கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படுவதாகத் துணிந்து பொய் சொல்கிறது மைய அரசு.

உலர் கழிவறையை நவீனப்படுத்தி விட்டால் அது பூஜை அறையாகி விடுமா? ஆனால், அரசோ கையால் மலம் அள்ளும் தொழிலாளியிடம் ஒரு கருவியைக் கொடுப்பதன் மூலம் அத்தொழிலின் இழிவைத் துடைத்துப் போட்டு விட்டதாகச் சாதிக்க முயலுகிறது. துப்புரவுப் பணிகளை காண்டிராக்டு எடுத்துள்ள பன்னாட்டு நிறுவனங்கள் தமது தொழிலாளர்களுக்கு ஒரு கையுறையையும், கோட்டு ஒன்றையும் மாட்டி விடத் தவறுவதில்லை. அது போல சட்டமும் கையுறையைப் போட்டுக் கொண்டு மலத்தை அள்ளும் யோசனையை முன் வைக்கிறது. தாழ்த்தப்பட்டோருக்கு அரிசன் என்ற நாமகரணம் சூட்டி காந்தி ஏய்த்ததற்கும் இதற்கும் எந்த வேறுபாடு கிடையாது. இந்தப் பாதுகாப்பு கவசத்தை மாட்டிக் கொண்டு உலர் கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும் தொழிலாளியைக் கையால் மலம் அள்ளும் தொழிலாளியாக வரையறுக்க முடியாது எனக் கூறுகிறது, இப்புதிய சட்டம்.

கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்திவரும் மிகப் பெரிய குற்றவாளி மைய அரசின் ரெயில்வே துறைதான். ஆனால், அத்துறை இந்த வேலையை அயல்பணி ஒப்படைப்பின் மூலம் காண்டிராக்டு தொழிலாளர்களைக் கொண்டு நடத்தி வருவதால், எத்துணைத் துப்புரவுத் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்ற விவரத்தைத் திரட்டுவது கூடக் கடினமாகி விட்டது என்கிறார், துப்புரவு தொழிலாளர் இயக்கத்தின் தலைவர் பெசவாடா வில்சன். இதற்கேற்ப புதிய சட்டமும் ரெயில்வே துறையில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் பல்வேறு நவீன சாதனங்களைக் கொண்டு கழிப்பறைகளைச் சுத்தம் செய்வதால் அவர்களைக் கையால் மலம் அள்ளுபவர்களாகக் கருத முடியாது எனச் சாதிக்கிறது.

06-scavenging-4.jpg

திருச்சி நகரில் பாதாளச் சாக்கடைக்குள் விஷவாயு தாக்கி இறந்து போன ராஜூ, பாஸ்கர் என்ற இரு தொழிலாளர்களின் சடலங்கள். (கோப்புப் படம்)

ரயில் பெட்டிகளில் உள்ள கழிப்பறைகளை நவீனமான உயிரிக் கழிப்பறைகளாக (Bio-toilets) மாற்றுவதற்கு எந்தக் காலக்கெடுவும் சட்டத்தில் நிர்ணயிக்கப்படவில்லை. அதனை ரெயில்வே துறை முடிவு செய்து கொள்ளலாம் எனப் பொறுப்பைக் குற்றவாளியிடமே ஒப்படைக்கிறது. அனைத்திற்கும் மேலாக, மைய அரசு விரும்பினால் இச்சட்டத்தைக் குறிப்பிட்ட பகுதியிலோ துறையிலோ நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்கலாம் என்ற விதியைச் செருகி, இந்த இழிதொழிலை ஒழிக்கும் நோக்கமெல்லாம் தனக்குக் கிடையாது எனப் பறைசாற்றி விட்டது.

செப்டிக் டாங்குகளுக்குள்ளும், பாதாளச் சாக்கடைகளுக்குள்ளும் இறங்கி அடைப்புகளை நீக்குவதென்பது கையால் மலம் அள்ளுவதை விட அருவெறுக்கத்தக்கது, அபாயகரமானது. தற்சமயம் பாதாளச் சாக்கடை அடைப்புகளைச் சுத்தம் செய்வதற்கு இடுப்பில் ஒரு துண்டைக் கட்டிக் கொண்டுதான் தொழிலாளர்கள் அதற்குள் இறங்குகிறார்கள். குழிக்குள் மீத்தேன் வாயு உள்ளதா எனப் பரிசோதிப்பதற்கு தீக்குச்சியைக் கொளுத்திப் பார்ப்பதைத் தாண்டி, வேறெந்த விதமான நவீன முறைகளும் கையாளப்படுவதில்லை. பல இடங்களில் இந்தத் தீக்குச்சி கொளுத்தும் சோதனைகூட நடைபெறுவதில்லை. அதிகார வர்க்கத்தையும் இந்தத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கும் காண்டிராக்டர்களையும் கேட்டால், இவர்களுக்குச் சாராயம்தான் ஒரே பாதுகாப்புக் கவசம் என எகத்தளமாகப் பதில் அளிக்கிறார்கள்.

பாதாளச் சாக்கடைக்குள் இறங்கும் தொழிலாளர்கள் ஒன்று விஷவாயுவிற்குப் பலியாகும் அபாயத்தைச் சந்திக்கிறார்கள்; அல்லது நல்வாய்ப்பாக உயிர் பிழைத்திருக்கும் தொழிலாளர்களோ பல்வேறு சுவாசக் கோளாறுகள், கல்லீரல் நோய்கள், வயிற்றுப் புற்று நோயால் தாக்கப்பட்டுச் சிறுகச்சிறுக இறக்கிறார்கள். புதிய சட்டமோ அபாயகரமான இந்தத் தொழிலை இயந்திரமயமாக்குவது பற்றியோ, தற்சமயம் அத்தொழிலில் ஈடுபடுத்தப்படும் தொழிலாளர்களுக்கு உரிய பயிற்சி அளிப்பது பற்றியோ, அவர்களுக்குத் தொடர் மருத்துவ உதவிகள், நிவாரண உதவிகள் வழங்குவது பற்றியோ பேச மறுக்கிறது. மாறாக, சட்டத்தால் வரையறுக்கப்படும் பாதுகாப்புச் சாதனங்களை வழங்க வேண்டும் என மொட்டையான விதியை மட்டும் முன்வைக்கிறது.

06-scavenging-5.jpg

கையால் மலம் அள்ளும் இழிவை முற்றிலுமாகத் தடை செய்யக் கோரி, “மலக்கூடையைக் கொளுத்துவோம்” என்ற முழக்கத்தின் கீழ் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)

கடந்த முப்பது மாதங்களில் தமிழகத்தில் மட்டும் பாதாளச் சாக்கடைக்குள் இறங்கும் பொழுது விஷவாயு தாக்கி இறந்து போன தொழிலாளர்களின் எண்ணிக்கை முப்பதைத் தொட்டுள்ளது. இத்தொழிலாளர்களுள் பெரும்பாலோர் எந்த விதமான பயிற்சியும் அளிக்கப்படாத ஒப்பந்தத் தொழிலாளர்கள். அதிகார வர்க்கத்தின் அலட்சியத்திற்கு, ஒப்பந்த நிறுவனங்களின் இலாபவெறிக்குப் பலியான இத்தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, இதற்காக எந்தவொரு அதிகாரியும் ஒப்பந்ததாரரும் தண்டிக்கப்படவில்லை என்பதும் கண்கூடு. தனியார்மயம் துப்புரவுப் பணியில் எந்தவொரு நவீனமயத்தையும் கொண்டு வரவில்லை என்பதோடு, அப்பணியாளர்களைப் பலிகிடாக்களை விடக் கேவலமான நிலைக்குத் தள்ளி விட்டுள்ளது என்பதே உண்மை.

சாவுக்குத் தப்படிக்க மறுக்கும் தாழ்த்தப்பட்டோரை, செத்த மாடுகளை அகற்றும் இழிதொழிலைச் செய்ய மறுக்கும் தாழ்த்தப்பட்டோரைத் தாக்குவது, கிராமத்தை விட்டு ஒதுக்கி வைப்பது போன்ற அச்சுறுத்தல்கள் மூலம் அவர்களை அந்த இழிதொழில்களைச் செய்ய வைக்க ஆதிக்க சாதி வெறியர்கள் தொடர்ந்து முயற்சி செய்கின்றனர். மைய அரசோ கையால் மலம் அள்ளும் தொழிலை ஒழிக்கக் கோரும் தாழ்த்தப்பட்டோரை விடுவிப்பதற்குப் பதிலாக, நளினமான, நுண்ணியமான வழிகளில் அந்தத் தொழிலைத் தொடரும்படி நிர்பந்திக்கிறது. தீண்டாமையைப் பச்சையாகக் கடைப்பிடிப்பதற்கும், நளினமாக, நுண்ணியமான வழிகளில் கடைப்பிடிப்பதற்கும் இடையில் ஏதாவது வேறுபாடு இருக்க முடியுமா? கையுறையும், நவீன கருவிகளும் அந்தத் தொழிலாளர்களின் மனவலியை மட்டுமல்ல, அவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள சமூக இழிவையும் நீக்கி விடாது.

- திப்பு

 

http://www.vinavu.com/2013/12/30/manual-scavenging-govt-apathy/

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.