Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டால், டிக்கி, டமால் – சாத்தானின் குழந்தைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டால், டிக்கி, டமால் – சாத்தானின் குழந்தைகள்

கிரிஷாந்

யாழ்ப்பாணத்தின் பக்கத்தில் ஒரு மினி நகரம் தான் திருநெல்வேலி. செல்லமாக தின்னவேலி என்று அழைப்பார்கள். இங்கே மிடில் கிளாஸ்தான் ஆதிக்கம் அதிகம். பெரும்பாலும் வியாபாரிகள், அரச உத்தியோகத்தர்கள், வங்கிகளின் மற்றும் தனியார் கம்பனிகளின் கொத்தடிமைகள் என்று நகரமே பரபரப்பாகதானிருக்கும். ஸ்பெஷலாக சொல்வதென்றால், தின்னவேலி மார்க்கெட் ரொம்ப பிரபலம். காலையிலேயே களை கட்டிவிடும். பொடி நடையாக நடந்துபோனால் பின்வருபவனவற்றை நீங்கள் பார்க்கலாம். பீடியை இழுத்து பனியில் அற்புதமாக விடும் வீபூதி பூசிய வயதான முகங்கள், கொஞ்சம் தள்ளி மரக்கறி வந்து நிற்கும் வண்டிகள், மூட்டை தூக்கும் தொழிலாளிகள், அவர்கள் எப்போதும் மூட்டையை தூக்குவதில்லை, கைப்பற்றுவார்கள். எப்படி என்றால், ஒரு மோட்டார் சைக்கிளில் மூட்டை வருகிறதென்றால், ரன்னிங்க்லையே போய் கொக்கியை மாட்டி விடுவார்கள், பிறகென்ன, சாவகாசமாக போய் இறக்கி வைப்பார்கள். அவ்வளவு போட்டி! இதுல கூட போட்டியா எண்டதும், ரொம்ப பீலிங் ஆகாம இருப்பீர்கள் என்றால், அவர்கள் பற்றிய சில கதைகளை உங்களுக்குச் சொல்கிறேன்.

திருநெல்வேலிக்கு பக்கத்தில் இருக்கும் இடம் பால்ப்பண்ணை. அதை சுற்றியிருக்கும் இடங்களை எங்கள் வீடுகளில் கொலனி என்று குறிப்பிடுவார்கள். அங்கே இருப்பவர்கள் சாதி குறைந்தவர்கள் என்று நாங்கள் சின்னதாக இருக்கும்போதே சொல்லி வைத்திருந்தார்கள். அவர்களில் அழகன்கள் இல்லை, அழகிகள் இல்லை, கிழவிகள் முதல் குமரிகள் வரை பெரும்பாலும் ஒரே நிறம்தான். கலைந்த தலைமுடி, நாறும் உடல், மண் ஒட்டிய தோல்… இது தான் அவர்கள். தமிழ்நாட்டின் குப்பம், சேரி போன்ற இடங்களை சினிமாவில் பார்த்திருப்பதால், இவர்கள் அப்படி தானோ என்று நினைத்தேன், இருந்தும் இவர்கள் என் வயது பிள்ளைகள், எனக்கு இப்போது 20. 13 வயதில் பாரதியாரை தெரியும் வரை இவர்களை எனக்கு கீழாகவே நினைத்திருந்தேன். யெஸ், அவர்களை ஒரு ஸ்லம் (Slum) ஆகவே நான் எண்ணினேன். பின், நான் பள்ளிக்கூடம் போனேன், அவர்கள் போகவில்லை. பள்ளிக்கூடங்களை பார்த்து பயந்தார்கள் அல்லது போக வசதியில்லை. கோயில் திருவிழாக்களில் அபிஷேகம் செய்த இளநீர் கோம்பைகளை நாங்கள் கொடுக்கவில்லை. ஆகவே, திருடினார்கள். நான் தங்கச் சங்கிலி போட்டிருந்தபோது, அவர்கள் சட்டை பட்டன் இல்லாமல் நின்றார்கள்.

இவை எனது கடந்தகால நினைவில் இருப்பவை.

இப்பொழுது மீண்டும் அவர்களைப் பார்க்கிறேன். சைக்கிள் கடைகளில் வேலை செய்கிறார்கள். கையில் கொக்கிகளுடன் வீதியில் மூட்டை தூக்கிகளாக நிற்கிறார்கள். சிலர் என் முகத்தை தெரியாதது போல் திரும்பினார்கள். சிலர் எதற்கென்றே தெரியாமல் முறைத்தார்கள்.

இனி, அவர்களுடைய இன்றைய தலைமுறை பற்றிய கதை, டால் என்பவன்தான் இருப்பதிலேயே வயது கூடியவன். அநேகமாக அந்தக் கூட்டத்தின் தலைவன். பெயர்க் காரணம் – பெரிய பருப்பு என்பதால். அடுத்தது டிக்கி இவன்தான் இருக்கிறதிலேயே வயது குறைந்தவன். ஜட்டி போடும் பழக்கம் அறவே இல்லையென்பதாலும், பின்புறத்தை எப்போதும் காட்டும் படி காற்சட்டை போடுவதாலும் அவனை டிக்கி என்று அழைப்போம். டமாலுக்கு, துப்பாக்கி சுடும் படங்கள்தான் மிகப் பிடிக்கும். சரி, இவர்கள் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்றால், யாருக்கும் தெரியாமல் கொத்து ரொட்டி சாப்பிட்டு விட்ட, எங்கள் வாசலில் கொட்டியிருக்கும் மணல் கும்பியில் ரெஸ்லிங் விளையாடுகிறார்கள்! அடி என்றால் அடி, மரண அடி, அந்த அடி எனக்கு விழுந்திருந்தால் அழுது கொண்டு அம்மாவிடம் போய் நின்றிருப்பேன். ஆனால், அவனோ, சிரித்துக் கொண்டு எழுந்து நின்றவன் தமிழ் சினிமாவின் அநேக கதாநாயகர்களில் ஒருவனாக தன்னை கற்பனை செய்துகொண்டு, டிக்கியை தூக்கி டமால் என்று தரையில் போட்டான். கழுத்தெலும்பு ‘டிக்’ என்றது, பயந்துபோன நான் பிடித்து நிறுத்தினேன், “அண்ணை பயந்துட்டார்” எண்டான் டால். அழுதுகொண்டு ஓடிய டிக்கியை பிடித்து சமாதானம் பண்ணினார்கள். அவனும் தினசரி பழக்கப்பட்டவன் தானே சமாதானமாகிவிட்டான். நானும் அவன் பாவம் என்று நினைத்தேன்.

இரவில் அவன் செய்த ரவுடித்தனத்தை பார்த்தபோது, அடக் கடவுளே நானே நாலு போட்டிருப்பன். அவனது அப்பாவின் சாறத்தை பிடித்து இழுத்தான் (அவருக்கு இப்பொழுது தான் தாடி அரும்பியிருக்கிறது. ரொம்ப சின்ன வயசு. திருமணம்! அப்பா! குடும்பம்!) “அடிடா பாப்பம்” என்று அப்பாவை திட்டிக் கொண்டிருந்தான், பக்கத்து வீட்டுக்காரர்கள், “டேய், அப்பாண்ட சாறத்த களட்றா, களட்றா” என்று உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தார்கள். இந்த கண்கொள்ளா காட்சியை பார்த்து அடுத்த சில நாட்களில் டிக்கியின் அப்பா யாரையோ அடித்து விட, இறங்கிய பெண்கள் கூட்டம், பேசிய பேச்சென்ன! ஆடிய ஆட்டமென்ன! ஒரு கிழவி, எல்லாவற்றையும் முறையாக தொடங்குவது போல், வேழூழூழூழூழூ (இது ஒரு தடை செய்யப்பட்ட கெட்ட வார்த்தை) அந்த கடவுளுக்குத் தான் எல்லாம் தெரியும் என்று கடவுளைத் திட்டி தனது உரையை ஆரம்பித்து முடித்தாள். டிக்கி வயதும் டமால் வயதும் இருக்கும் நிறைய குழந்தைகள் தெரு முழுதும் அலறினார்கள், கத்தினார்கள், ஆரவாரித்தார்கள். தடிகள், பியர் போத்தல்கள் ஆயுதமாயின. பின் கலைந்து சென்றனர். எப்போதும் நடப்பது போல்.

டால், நேற்று போகும்போது என்னைப் பார்த்து புன்னகைத்தான். டிக்கி ஒரு கொடுப்புச் சிரிப்பொன்று சிரித்தான். குழந்தைகளா? கொலைகாரர்களா? இவர்கள். இவர்களின் இசை பற்றிய கொண்டாட்டத்தை இன்னொரு பத்தியில் கூறுகிறேன், அற்புதமாக இருக்கும்.

கடவுளும் – சாத்தானும் வாழும் பகுதியில் ஒரு அப்பாவியாக இருக்கும் என்னை அவர்கள் ஏன் முறைக்கிறார்கள். ஏன் ஒதுங்குகிறார்கள். என் முன்னோர் சொன்ன சொற்கள் என்னிலும் ஒட்டியிருக்கும், அவர்களுக்குத் தெரிகிறதோ என்னமோ? அவர்கள் வீட்டில் என்னைப் பற்றி என்ன சொல்லியிருப்பார்கள், நான் சாத்தானா? கடவுளா?

http://maatram.org/?p=1611

  • கருத்துக்கள உறவுகள்

இளமை கால த்தை நினைவூட்டும் கிராமத்து  நினைவுகள்  பகிர்வுக்கு நன்றி.

'பால்பண்ணை' பற்றி சிறு வயதில் ஓரிருமுறை கேள்விப்பட்டுள்ளேன். இன்றுதான் அவர்கள் பற்றிய ஒரு கட்டுரையை வாசிக்கின்றேன்.

 

இவர்கள் ஏன் இப்படி உள்ளார்கள்? எவருக்காவது இவர்கள் பற்றி மேலும் தெரியுமா? 30 வருட போராட்டம் இவர்களின் வாழ்க்கையில் எந்த மாற்றத்தினையும் கொண்டு வரவில்லையா?

  • 2 weeks later...

கொலனி pillaigalai nanum arugil irunthu parthiruken. satru muratu pillaigal. aanal anbanavargal.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டால், டிக்கி, டமால் – கொண்டாட்டத்தின் இசை!
கிரிஷாந்


P4041025-800x365.jpg

ஆதிவாசிகள் நெருப்பைச் சுற்றி ஆடுவதை நீங்கள் திரைப்படங்களில் பார்த்திருக்கக் கூடும். அது தெய்வமாகிய நெருப்பை சாட்சியாக வைத்து ஆடும் நடனம். அப்படி பல்வேறு வகையான இசை பாரம்பரியங்கள் உலகெங்கும் உண்டு. மேட்டுக் குடிக்கும் உண்டு. தாழ்த்தப்பட்டோருக்கும் உண்டு. டைட்டானிக் படத்தில் இந்த மேட்டுக்குடி பம்மாத்துகளுக்கும் எளிய மக்களின் கொண்டாட்டத்திற்கும் ஒரு அருமையான உதாரணம் உண்டு. கதாநாயகன் ஜாக் கதாநாயகி றோசை காப்பாற்றுவான், அதற்காக அவளுக்கு நிச்சயம் செய்திருக்கும் மாப்பிள்ளை அவனை விருந்துக்கு அழைப்பான். அப்போது மேட்டுக் குடியின் உணவுக் கலாசாரம் மற்றும் விருந்து என்பன எவ்வளவு போலியான வெற்றுப் பம்மாத்து என்பதை காட்டுவார்கள். பின் ஜாக், றோசை, தனது தளத்திற்கு (மூன்றாம் தர பயணிகள் இருக்கும் இடம்) அழைத்துச் செல்வான். அங்கே, ஆடலும் பாடலும் குடியும் கூத்தும் ஒரு வகை பித்த நிலையில் இருக்கும். அங்கே யாரும் ஆடாமல் இருக்க முடியாது. அந்த இசை அப்படி. அந்த மக்கள் அப்படி, அப்படி பட்டதே உண்மையான கொண்டாட்டம், கொண்டாட்டத்தில் வெட்கம் இல்லை. துயரம் இல்லை, போலித்தனம் இல்லை, அங்கே நீங்களே கூட இல்லை. கொண்டாட்டத்தில் நீங்கள் ஆடலும் பாடலும் உன்மத்தமும் தான்.

பெரும்பாலும் எளிய மக்களின் இசை, கையில் கிடைக்கும் சிறிய மத்தளங்களும் நரம்புக் கருவிகளும், வாய்ப்பாட்டும் தான். இப்படி இயற்கையின் அமைப்பிலிருந்தே உருவாகும் இந்த வகை இசை ஒரு வகை ஓர்கானிக் தன்மை கொண்டது. அதனால், அதான் அதற்கு அப்படி ஒரு வசியமும் ஈர்ப்பும் இருக்கிறது. மரண வீடுகளில் வாசிக்கும் பறை எனப்படும் வாத்தியக் கருவி டையோனியன் வகையைச் சேர்ந்தது. பொதுவாக இசைக் கருவிகள் தரும் அனுபவத்தைப் பொறுத்து அதை இரண்டாக பிரிக்கலாம். அப்பலோனியன் என்பது, இசையை ஒரு ஆன்மீக மற்றும் தனிமனித அகம் சார்ந்த எழுச்சியாக மாற்றுவது. ஒரு தியானம் மாதிரி. டையோனியன் இதற்கு எதிர்மாறானது. உடலின் ஒவ்வொரு தசையையும் ஆட வைக்கும் ஒரு பிரபஞ்ச இசை அது. அது மனிதர்களை, தங்களை மறந்து ஆட வைப்பது. பறை இரண்டாம் வகை. ஆனால், நமது சமூகத்திலோ பறை வாசிப்பவர்களை அவர்களது வாத்தியத்தை குறியீடாக்கி சாதிப் பெயராக இழிவுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால், பறையை அடிக்கும்போது ஆடத் தோன்றாதவர்களே இல்லை. மரணத்தைக் கூட கொண்டாட்டமாக்கும் இசையை சிருஷ்டிப்பவர்களை நாம் தீண்டத்தகாதவர்கள் ஆக ஒதுக்கி வைத்திருக்கிறோம்.

அடுத்து, இப்பொழுது யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பாடல் முயற்சிகள் பற்றி, பொதுவாக அவை வரவேற்புக்குரியவை. ஆனால், சின்னச் சின்ன சமூக அக்கறை கொண்டவையாக அவை இருப்பது கவலையாக இருக்கிறது. பாடலை கேட்டுவிட்டு ஒருத்தன் திருந்தினாலும் போதும் என்று வெற்று ஜால் ஜாப்புகளை கூறிக் கொண்டிருக்கிறார்கள் படைப்பாளிகள். இசை என்பது உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது, இன்னும் வருகிறது, அது புரட்சியை ஏற்படுத்துகிறது அல்லது குறைந்தபட்சம் கொண்டாட்டத்தை வலியுறுத்துகிறது. இங்கே ஒரே அழுகுனிப் பாப்பா கதைதான். சமூகம் திருந்த வேணும். காதல் லீலைகள் என்று ஒரே புலம்பல். இதில் இந்த காதல் பாடல்கள் இருக்கிறதே, கடவுளே! எல்லோருக்கும் ஈசியா வாறது இது தான். தமிழ் உணர்வு வேற அப்ப அப்ப பொங்கும். இதில இவர்களை சொல்லி குற்றமில்லை. அப்படி ரசனை கெட்ட சமூகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், வேறு என்ன தான் சொல்ல.

இசை விடுதலையின் குறியீடு, கொஞ்ச வருஷங்களுக்கு முன்னர் இருந்த புலிகள் அமைப்பு அதை தவறாகவே பயன்படுத்தியதாக நான் கருதுகிறேன். அவர்கள் விடுதலையை அமைப்பின் வெற்றியாக, பக்தியாக மாற்றிவிட்டார்கள். இலத்தீன் அமெரிக்க நாடுகளைப் போலவோ, ஆபிரிக்க நாடுகளை போலவோ இசையை மொழியாகவும் விடுதலையின் வடிவமாகவும் மாற்றியிருக்கலாம். ஆனால், நடந்தது உலகறிந்தது. (நாடக ஆற்றுகைகள் இதில் கருத்தில் கொள்ளப்படவில்லை, தனியே பாடல்கள் மாத்திரம்)

விக்தர் ஹாரா என்ற சீலே நாட்டு பாடகர் ஒருமுறை இப்படி சொன்னார்,

“என்னைச் சுற்றிலும் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்து நான் மிகவும் வேதனைப் படுகிறேன்.

“என் தேசத்தின் வறுமை, உலகின் பல்வர் பகுதி மக்களின் வறுமை, வார்ஸாவில் யூதர்களுக்காக எழுப்பபட்டிருக்கும் நினைவுச் சின்னங்கள், வெடிகுண்டுகளால் மக்களிடையே ஏற்பட்டிருக்கும் திகில் போரின் காரணமாக மனித குலத்திற்கு ஏற்பட்டிருக்கும் துயரம்… ஆனால் இவ்வளவுக்கும் இடையிலும் அன்பின் வலிமையை நான் கொண்டிருக்கிறேன்.

“நான் விரும்புவது அமைதியை. அதுவே எல்லாவற்றுக்கும் மேலானது. என் கிதார் நரம்புகளின் வழியே துக்கமும் சந்தோஷமும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் வழியே இதயத்தை துளைக்கும் பாடல்கள் வந்து கொண்டிருக்கின்றன; நாமே நம்மை பார்த்துக் கொள்வதினின்றும் விலகி, இந்த உலகை புதிய கண்களால் பார்க்க உதவும் சில கவிதை வரிகளும் அதன் வழியே வந்து கொண்டிருக்கின்றன”

- கலகம் காதல் இசை (சாரு நிவேதிதா)

இப்படி சொல்லும் ஒருவர் தானும் இங்கே கிடைக்காமல் போனது நமது துரதிர்ஷ்டம் தான். துரதிர்ஷ்டம் என்பது ஒரு தொற்று நோய் என்று தாஸ்தவேஸ்கி சொன்னது போல் இன்றைய படைப்பாளிகள் வாய்த்திருக்கிறார்கள். அவர்களின் உலகம் தென்னிந்தியாவோடு நின்று விட்டது. இன்னும் ஏதாவது எழுதினால், படைப்புச் சுதந்திரம் அது இதென்று கதைக்கத் தொடங்கி விடுவார்கள். ஆகவே, அவர்களின் முழு படைப்புக்களையும் உள்ளடக்கி என் பார்வையை பின்னர் எழுதுகிறேன்.

சரி, டால் டிக்கி டமால் கதைக்கு வருவோம். மாலை வேளைகளில் சூரியன் பழுத்து பூமியே சிவப்பாக மாறும்போது வருவார்கள், உடைந்த டின்கள், ரப்பர் வாளிகள் சகிதம். பின்னர் டின்களில் அடிப்பார்கள், வாயால் கத்துவார்கள். உற்றுக் கேட்டால், மெல்ல மெல்ல ஒரு தாளத்தை உணரலாம். அவர்களின் வெற்றுக் கத்தல்களில் ஒரு ஒருங்கிணைவை கேட்கலாம். கோயில்களில் சாமியை உள்ளே கொண்டு போகும் போது வாசிக்கும் நாதஸ்வரத்தை டமால் வாயாலேயே வாசித்தான். டிக்கி எழுந்து ஆடினான். பின்னர் ஐய்யப்பன் பாடலொன்று. பின்னர் மாரியம்மா. கொஞ்சம் கொஞ்சமாக வெறியேறி, உச்சத்தை அடைந்தார்கள். நான் எழுதிக் கொண்டிருந்தேன், எனக்கே எழுந்து ஆட வேண்டும் போலிருந்தது. அப்படி ஒரு வாசிப்பு, அப்படி ஒரு கிரகிப்பு. அதை மீண்டும் நினைவிலிருந்து அப்படியே, வாயாலும் டின்களிலும் வாசிக்கும் இவர்களை கடந்த பத்தியில் நான் சாத்தான் என்றேன். ஆனால், டிக்கி கேட்ட ஒரு கேள்வி, இவர்கள் தேவ தூதர்களோ என்று என் கண்களை பனிக்க வைத்துவிட்டது. ஒரு சின்ன கேள்விதான், ஆனால், இந்த ஊரின் கோயில்களுக்கோ, பாட்டு கோஷ்டி வைக்கும் ஊடகங்களுக்கோ இல்லாத இங்கிதம் அவன் கேள்வியில் இருந்தது. அவன் கேட்டது இவ்வளவுதான், “அண்ணை, எழுதிக் கொண்டிருக்கிறியள், குழப்பிறமா? நிப்பாட்டட்டுமா?”, நான், “நானும் கேட்டுக் கொண்டிருக்கிறேன், நல்லா இருக்குது தொடர்ந்து வாசியுங்கோ” என்றேன்.

இரவு நடக்கப் போகும் மெகா பிளாஸ்ட் போன்ற நிகழ்வுகளுக்கு, நூலகங்களுக்கு பக்கத்தில் காலையிலிருந்தே பாடல் போட்டு, இம்சை கொடுக்கும் சில ஊடக ரவுடிகளுக்கு (அது ஏன் என்று அடுத்த பத்தியில் கூறுகிறேன்) டிக்கியின் அளவுக்கு கூட Sense இல்லாமல் போய்விட்டது. ஏனென்றால், டிக்கியின் இசை கொண்டாட்டம், அதுபோக தனது கொண்டாட்டத்தின் சுதந்திரம் அவனுக்கு தெரிந்திருக்கிறது. அவன் போன்றவர்களுக்கே இசை ஒரு கொண்டாட்டம். மற்றவர்களுக்கு அது ஒரு பிழைப்பு. அவ்வளவு தான்.

 

http://maatram.org/?p=1720

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.