Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை தினம்- 375 (சென்னை அரிய புகைப்படத் தொகுப்பு)

Featured Replies

இப்படிதான் இருந்தது ஐஸ் அவுஸ்

 

சென்னை நகரம் பிறந்த நாள் கொண்டாடப்போகிறது.

 
சென்னை நகரத்தின் நிறுவன நாள் ஆகஸ்டு 22 , 1639 என கருதப் படுகிறது.
 
 
-தற்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள சிறிய நிலப்பகுதி அன்று தான் கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கை மாறியது. பிரான்சிஸ் டே, அவருடைய துபாஷி (இரு மொழி பேசுபவர்) மற்றும் அவர்களுடைய மேலதிகாரி அண்ட்ரூ கோகன் விஜய நகர நாயக்கர்களுடன் இந்தப் பரிமாற்றத்தை நடத்தினர்.
 
gallerye_083600378_1049362.jpg
 
பிறகு, கோட்டையைச் சுற்றி குடியிருப்புகள் உருவாகத் தொடங்கின. அருகருகே இருந்த கிராமப் பகுதிகள் இணைக்கப் பட்டன. பழைய, புதிய சிறு நகரங்கள் இணைந்து சென்னை மாநகரமாக உருவாகியது.
 
 
இன்று சென்னை மாநகரம் கல்வி,மருத்துவம், ஆட்சித்துறை, பாதுகாப்பு, தொலைத்தொடர்பு எனப் பல துறைகளில் சிறப்புப் பெற்ற நகரமாகத் திகழ்கிறது.
 
 
இப்படி தான் இருந்தது ஐஸ் அவுஸ்
 
சென்னையை எத்தனை முறை, எத்தனை புகைப்படங்கள் வழியாக பார்த்தாலும், அது, காஞ்சி பெரியவர் சொன்னதுபோல, யானையையும், ரயிலையும் பார்க்க பார்க்க சலிக்காதது போல, சலிக்காது தான். இந்த பகுதியில், 
 
 
சென்னையின் பழைய புகைப்படங்களை, நீங்கள் இதுவரை பார்த்திராத, பார்த்திருந்தாலும் மனதில் பட்டிராத புகைப்படங்களை பார்க்க போகிறீர்கள்!
 
இங்கு இடம் பெற்றிருப்பது, சென்னை மெரீனா கடற்கரையில் இன்று பிரமாண்டமாய் காணப்படும் விவேகானந்தர் இல்லத்தின், 1880ம் ஆண்டு தோற்றம்.
 
அப்போது, சென்னையில் இருந்த வெளிநாட்டவரின், ஐஸ் தேவைக்காக, பிரடெரிக் தியோடர் என்பவர் கட்டிய கட்டடம் இது. அதனால், இது ஐஸ் அவுஸ் என அழைக்கப்பட்டது. இன்றும் அந்த பெயர் தான் நின்று நிலவுகிறது.
 
பின்னாளில், இந்த கட்டடத்தை, பிலிகிரி அய்யங்கார் வாங்கி, விதவைகள் மற்றும் ஏழைக் குழந்தைகளுக்கான கருணை இல்லமாக்கினார்.
 
கடந்த, 1897ம் ஆண்டு, சென்னை வந்த, சுவாமி விவேகானந்தர் இந்த கட்டடத்தில், ஒன்பது நாட்கள் தங்கியிருந்தார். அப்போது இந்த பகுதியில் ஆள் நடமாட்டமே இருக்காதாம். உணவு வாங்கித் தரக்கூட ஆள் இல்லாமல், விவேகானந்தர், பல நாட்கள் பட்டினி இருந்திருக்கிறார்.
 
 
தற்போது, ராமகிருஷ்ண மடம், இந்த கட்டடத்தை, விவேகானந்தர் இல்லமாக ஆக்கி பராமரித்து வருகிறது. கட்டடம் தொடர்பான, பழைய புகைப்படங்களையும், அங்கு வைத்துள்ளனர். சென்னையின் ஒரு பகுதியை, அங்கு நாம் காணலாம்.
 

சென்னையின் முதல் சந்தை கொத்தவால் சாவடி

 

விறைப்பான அரைக்கால் சட்டை, பெரிய தொப்பி யுடன் (அப்போதும்) வேடிக்கை பார்த்தபடி ஒரு போலீஸ்காரர் நிற்க, கைவண்டிக்காரர்கள் வழியை மறித்து, தங்களது வண்டிகளை போட்டிருக்கும், இந்த இடம் தான், கொத்தவால் சாவடி.

கடந்த, 1803ம் ஆண்டில் இருந்து செயல்படும், இந்த கொத்தவால் சாவடிதான், ஒரு காலத்தில் மொத்த சென்னைக் கும் தேவைப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்களை மொத்தமாகவும், சில்லரையாகவும் வினியோகித்து வந்தது.
 
gallerye_102517731_1049367.jpg
 
பின், இட நெருக்கடி காரண மாக, 1996ம் ஆண்டு முதல் கோயம்பேடு பகுதிக்கு மொத்த காய்கறி கடைகள் இடம் பெயர்ந்தன. அதன் பின், எப்போதும் சேறும், சகதியுமாக இருந்த கொத்தவால் சாவடி சாலை கொஞ்சம் சிமென்ட் பூசிக்கொண்டது.
 
கைவண்டிக்கு பதிலாக டிரக், ஆட்டோ போன்ற வாகனங்கள் ஆக்கிரமித்துள்ளன. இப்போதும் கொத்தவால் சாவடியில் காய்கறி கள் மற்றும் பழங்கள் விற்பனை நடந்து கொண்டுதான் இருக்கிறது. இப்போது கூடுதலாக உலர்பழங்கள் மற்றும் வெளியூர், வெளிநாட்டு பழங்களும் கிடைக்கின்றன.
 
ஆனாலும், கொத்தவால் சாவடி யின் நெரிசல் அப்படியே தான் இருக்கிறது.
 

சென்னையின் அடையாளம் அண்ணா மேம்பாலம்
 
சென்னையின் அடையாளங்களில், ஒன்று, அண்ணா மேம்பாலம் எனப்படும்,ஜெமினி மேம்பாலம்.
அண்ணாசாலை (அன்றும் இன்றும் மவுண்ட் ரோடு) நுங்கம்பாக்கம் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, ஜி.என்.செட்டி சாலை ஆகிய சாலைகளின் போக்குவரத்தை முறைப்படுத்த, 1250 அடி நீளம் மற்றும் 48 அடி அகலத்தில் 66 லட்சம் ரூபாய் செலவில், 21 மாதங்களில் கட்டப்பட்டு, 1973, ஜூலை 1ம் தேதி, அண்ணா மேம்பாலம் திறந்து வைக்கப்பட்டது.
அப்போது அந்த பகுதியில் ஜெமினி ஸ்டூடியோ இருந்ததால், அது ஜெமினி மேம்பாலம் என்று மக்களால் அழைக்கப்பட்டது, ஆனால் திறப்பு விழாவின்போது அண்ணா மேம்பாலம் என்று பெயர் சூட்டப்பட்டது.
 
gallerye_10115245_1050280.jpg
 
பாலம் கட்டப்பட்ட ௧௯௭௨, ஜூலை மாதத்தில் எடுத்த பழைய படமும், இப்போதைய படமும் இங்கே இடம் பெற்று உள்ளன.
இந்த மேம்பாலத்தில் நாள் தோறும் லட்சத்திற்கும்அதிகமான வாகனங்கள் கடந்து செல்கின்றன
 
 

17 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்!

 

வரலாற்றில் தேடிப்பார்த்தால், தேவார மூவரில் ஒருவரான, திருநாவுக்கரசர், தமது வைப்புத் தலங்களில் ஒன்றாக, எழுமூர் என, எழும்பூரைத் தான் குறிப்பிடுகின்றார் என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து.

 
எலிஹூ யேல் என்ற ஆங்கிலேயர், சென்னையின் ஆளுனராக, 1720ம் ஆண்டு இருந்தபோது, எழும்பூர் கிராமத்தை, நவாப் சுல்பீர் கான் என்பவரிடம் இருந்து வாங்கினார்.
 
எழும்பூர் என்ற சொல் உச்சரிக்க கஷ்டமாக இருந்ததால், ஆங்கிலேயரின் வாயில், அது, 'எக்மோர்' ஆனது. இன்று வரை, நமக்கும் 'எக்மோர்' தான்.
 
gallerye_091012479_1051153.jpg
 
கடந்த, 1908ம் ஆண்டு, 17 லட்சம் ரூபாய் செலவில், ராபர்ட் சிஸ்ஹோம் என்ற ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்டு, சாமிநாதப் பிள்ளை என்ற ஒப்பந்ததாரரால் இந்திய-மொகலாய கட்டடக் கலைகள் கலந்து கட்டப்பட்டதுதான், இந்த எழும்பூர் ரயில் நிலையம். 
 
இந்தியாவில் கல்கத்தாவின் ஹவுரா ரயில் நிலையத்திற்கு அடுத்தபடியாக எழும்பூர் ரயில் நிலையத்தில்தான், அந்த காலத்தில், ரயில் நிற்கும் இடம் வரை கார் போகும் வசதி இருந்தது. அகல ரயில் பாதை வந்த பின் அந்த வசதி அடிபட்டு போனது.
 
இங்கிருந்து தனுஷ்கோடி வரை ரயிலில் போய், பின் அங்கிருந்து கப்பலில் தலைமன்னார் சென்று திரும்பவும் வரும், 'போட் மெயில்' வசதி அப்போது இருந்தது. அதற்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் வழங்கப்பட்டது. தனுஷ்கோடி, புயலால் அழிந்தபிறகு, இந்த ரயில் நிறுத்தப்பட்டது.
 
- எல்.முருகராஜ்
 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

22-1408683462-chennai-old-pic-600.jpg

 

இன்று 375வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது ‘சென்னை’...

ஹேப்பி பர்த்டே டூ யூ!

 

வந்தாரை வாழ வைக்கும் நகரம் எனப் புகழப்படும் சென்னை இன்று தனது 375வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது.

 

இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களில் ஒன்று என்ற பெருமையுடன் இன்று உலா வரும் நமது சென்னை ஒரு காலத்தில் கிராமமாக இருந்தது என்று கூறினால் உங்களால் நம்புவதற்குக் கொஞ்சம் கடினமாகத் தான் இருக்கும். ஆனால், அது தான் உண்மை.

 

பல்வேறு நிலைகளில் படிப்படியாக வளர்ச்சியடைந்து, பல ஊர்களுக்கு சிம்மச் சொப்பனாக விளங்கும் சென்னைக்கு இன்று 375வது பிறந்தநாள்.

 

சென்னைப்பட்டணம்...

கிராமமாக இருந்த சென்னைப் பட்டிணம் ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்னால் மதராசப்பட்டிணம் ஆனது.

 

22-1408683486-chennai-old-600.jpg

 

காற்று வாங்கிய சாலைகள்...

வண்டி ஹார்ன் ஓசைகளுக்கிடையே நடப்பதற்குக் கூட இடமில்லாமல் வாகன நெருக்கடிகளுக்கு மத்தியில் உள்ள இன்றைய சாலையில் அன்று மாட்டு வண்டிகள் தான் சென்றுள்ளன.

22-1408683526-chennai-madhara-600.jpg

 

சென்னையின் பிறந்தநாள்...

1639ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை நகரை கிழக்கு இந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ் டே என்பவர் விலைக்கு வாங்கிப் பதிவு செய்துள்ளார். அப்போதுதான் முதல் முறையாக சென்னை என்ற பெயர் அந்தப் பத்திரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த தினத்தையே மக்கள் சென்னையின் பிறந்த தினமாக கொண்டாடி வருகிறார்கள்.

 

புனித ஜார்ஜ் கோட்டை...

1640ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி ஆங்கிலேயர்களால் புனித ஜார்ஜ் கோட்டைக் கட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னை முக்கிய வணிக மற்றும் கலாச்சார நகரமாக உருமாறத் தொடங்கியது.

22-1408683595-chennai-city-124-600.jpg

ஓல்ட் இஸ் கோல்ட்....

நாகரீகமான நகரமாக உருமாறியதில் இந்தியாவின் மற்ற முக்கிய நகரங்களான கொல்கத்தாவை விட 50 ஆண்டுகளும், மும்பையை விட 35 ஆண்டுகளும் பழமையானது சென்னை.

 

சென்னை...

சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழகத்தின் தலைநகரானது மதராஸ். பின்னர், மதராஸ் கடந்த 1996ம் ஆண்டு முதல் சென்னை என அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்டு வருகிறது.

 

22-1408683653-chennai-central-66600.jpg

 

375வது பிறந்தநாள்...

இந்நிலையில் இன்று தனது 375வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது சென்னை. வேலை, கல்வி என பல்வேறு இடங்களில் இருந்து வந்துள்ளோருக்கு அடைக்கலம் தந்து வாழ்வாதாரமாக விளங்குகிறது சென்னை.

 

கொண்டாட்டங்கள்...

சென்னையின் 375வது பிறந்தநாளை சுமார் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே கொண்டாடத் தொடங்கிவிட்டனர் நம்ம மக்கள். சென்னை தொடர்பாக ஆல்பம்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் சென்னையில் அழகு வித்தியாசமான கோணங்களில் படமாக்கப் பட்டுள்ளது.

நன்றி தற்ஸ்தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

33lfnzq.jpg

 

 

இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னைக்கு வாழ்த்துக்கள்..

உன்கு 375 வருசமாமே..! மெய்யாலுமா? ஷோக்காதான் கீறே..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னைக்கு வாழ்த்துக்கள்..

 
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை நகரம் 375 பழமை வாய்ந்தது, அழகானது . அப்படிப் பழமை வாய்ந்த நகரம்  அரசியல் வாதிகளின் கைகளில் அகப்பட்டு அதன் தொன்மை அழியும் நிலையில் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=ujMYkmG6cqA
 

இன்று பிறந்த நாள் கொண்டாடும்... சென்னைக்கு, வாழ்த்துக்கள்...... :rolleyes:
ஹாப்பி பேர்த் டே.... சென்னை. :D 

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னைக்கு வாழ்த்துக்கள்..!

  • தொடங்கியவர்

சென்னை 375 - சிறப்பு வீடியோ பதிவு

 

 

-the hindu-

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

மதறாஸப்பட்டணத்துக்குப் பெருமை சேர்த்த முதல் விமானம்.

 

mad1_2075649g.jpg

 

mad2_2075648g.jpg

 

ஆசியாவின் முதல் விமானம் எங்கே பறந்தது தெரியுமா? நாட்டின் பல முதன்மைகளைப் பெற்ற நமது பழைய மெட்ராஸில்தான். உலகின் முதல் வெற்றிகரமான விமானத்தை ரைட் சகோதரர்கள் செலுத்தி, அடுத்த 7 ஆண்டுகளில் இந்த விமானம் சென்னையில் றெக்கை கட்டிப் பறந்திருக்கிறது.

தின்பண்டத் தயாரிப்புத் தொழிலில் வெற்றிகரமாக ஈடுபட்டிருந்தவர் இத்தாலியிலுள்ள மெசினா பகுதியைச் சேர்ந்த ஜாகோமோ டி ஏஞ்சலிஸ் (Giacomo D'Angelis). வியாபாரம் செய்யும் எண்ணத்துடன் 1880-ல் இந்தியாவுக்கு வந்து மேசன் ஃபிரான்சேஸ் நிறுவனத்தை அன்றைய மெட்ராஸ் மவுண்ட் ரோடில் (இன்றைய அண்ணா சிலை சந்திப்பு அருகே) தொடங்கினார். இந்தியாவில் உணவு விநியோகிக்கும் சேவை யைத் தொடங்கிய முதல் நிறுவனம் அதுதான். ஆம்ப்டில் பிரபு காலத் தில் மெட்ராஸ் ஆளுநரின் அதிகாரப்பூர்வ உணவு விநியோகஸ்தராக ஏஞ்சலிஸின் நிறுவனம் இருந்திருக்கிறது. இதில் நல்ல அனுபவம் பெற்ற டி ஏஞ்சலிஸ், 1906-ல் ஓட்டல் டி ஏஞ்சலிஸ் என தன் பெயரிலேயே ஒரு உணவகத்தைத் தொடங்கினார். இந்த ஓட்டல் இந்தியாவில் நவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தியதாகக் கருதப்படுகிறது.

சென்னையிலேயே முதன்முறையாக இந்த ஓட்டலில்தான் மின் தூக்கி, மின்விசிறிகள், ஐஸ் தயாரிப்பு அமைப்பு, குளிர்பதனக் கிடங்கு, வெந்நீர்க் குழாய்கள் போன்றவை இருந்திருக்கின்றன.

டி ஏஞ்சலிஸ் நடத்திய அந்த ஓட்டல் இருந்த இடம் எதுவென்றால், இன்றைய சென்னை அண்ணா சாலை கெயிட்டி திரையரங்கம் அருகே உள்ள பாட்டா ஷோரூம் இருந்த இடம்தான்.

ஜாகோமோவுக்குப் பின்னால் சுவாரசியமான மற்றொரு கதை இருக்கிறது. ஓட்டல் ஆரம்பித்து கொஞ்ச காலத்திலேயே பிரான்சைச் சேர்ந்த பிலாரியோ, விமானம் மூலமாகவே ஆங்கிலேயக் கால்வாயைக் கடந்து ஆச்சரிய சாகசம் நிகழ்த்திய செய்தி ஜாகோமோவின் கண்களில் பட்டிருக்கிறது. நவீன தொழில்நுட்பம் மீது தீவிர ஆசை கொண்டிருந்த ஜாகோமோவுக்கு, தானும் பறக்க வேண்டும் என்று ஆசை றெக்கை வெளியே எட்டிப் பார்த்தது. தானே ஒரு விமானத்தை வடிவமைத்தார். அது ஒரு பைபிளேன். ரைட் சகோதரர்கள் ஓட்டியது போன்று, மேலும் கீழும் இரண்டு றெக்கைகள் பொருத்தப்பட்டதே பைபிளேன்.

பிறகு மெட்ராஸ் சிம்சன் நிறுவனத்தில், அதை உருவாக்கித் தர அவர் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. அந்த நிறுவனத்தில் இருந்த அன்றைய பிரபல பொறியாளர் ஜான் கிரீன் அதை வடிவமைத்திருக்கலாம். ஏனென்றால், விமானத்தை உருவாக்கியது சிம்சன் நிறுவனம் என்று பாரதியாரின் ‘இந்தியா’ இதழ் குறிப்பிடுகிறது. ‘‘இவ்விமானம் சென்னையில் டாஞ்சலிஸ் ஓட்டலின் பிரெஞ்சு முதலாளி டாஞ்சலிஸின் திட்டப்படி சிம்சன் கம்பெனி பட்டறையில் ‘தமிழ் வேலைக்காரர்களால்’ கட்டப்பெற்றது’’ என்று பாரதியார் எழுதியிருக்கிறார்.

சிறிய இன்ஜின் கொண்ட அந்த விமானத்தை பல்லாவரம் மலைப் பகுதியில் ஓட்டி முதலில் பரிசோதித்துப் பார்த்திருக்கிறார் டி ஏஞ்சலிஸ். அதில் நம்பிக்கை கிடைக்கவே, தீவுத் திடலில் பொது மக்களிடம் கட்டணம் வசூலித்து பறந்து காட்டியிருக்கிறார். அது நடந்த நாள் 10 மார்ச் 1910. இந்த விமானத்தில் ஒரே நாளில் பல முறை அவர் பறந்து காட்டியிருக்கிறார். அவருடைய அழைப்புக்கு ஏற்ப கூட்டத்தில் இருந்த ஒருவரும், விமானத்தில் உடன் பறந்துள்ளார்.

ஆசியாவிலேயே ஓடிய முதல் எரிசக்தி விமானம் அதுதான். இதன் மூலம் ஆசியாவிலும் இந்தியாவிலும் முதல் விமானத்தை ஓட்டியவர் என்ற பெருமையை டி ஏஞ்சலிஸ் பெறுகிறார். இந்தச் செய்தி ராயல் ஏரோ கிளப் இதழான ‘ஃபிளைட்'டில் உடனடியாக, அதாவது 1910 மார்ச் 26-ம் தேதியே பதிவாகியுள்ளது. லெவிட்டஸ் நிறுவனமே இந்தத் தகவலை வெளியிட்டது. இந்திய விமான வரலாற்றிலோ அலகாபாதில்தான் முதல் விமானம் பறந்ததாக பதிவாகியுள்ளது. ஆனால், அதற்கு 9 மாதங்களுக்கு முன்னதாகவே டி ஏஞ்சலிஸ் இந்த விமானத்தை ஓட்டியிருக்கிறார்.

‘‘இந்தியாவில் மட்டுமல்ல; ஆசியாவில் பறந்த முதல் விமானமும் ஏஞ்சலிஸ் ஓட்டிய விமானம்தான்’’ என்று விமான வரலாற்று ஆராய்ச்சியாளரும் ஓய்வுபெற்ற கேப்டனுமான கபில் பார்கவா குறிப்பிட்டிருக்கிறார். 1910 டிசம்பர் 10-ம் தேதி அலகாபாத்தில் முதல் விமானம் பறந்ததாகவும், அதே ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி கொல்கத்தாவில் இரண்டாவது விமானம் பறந்ததாகவும் பதிவுகள் உள்ளன. வழக்கம்போல இதிலும் முந்திக்கொண்டு உயரப் பறந்து, வானை அளந்து, சாதனை படைத்துவிட்டது நமது மெட்ராஸ்.

இந்தச் சாதனையில் இன்றைய அண்ணா சாலையும் ஒரு தனிப் பெருமையைப் பெறுகிறது. டி ஏஞ்சலிஸின் ஓட்டல் இருந்த இடம், சிம்சன் நிறுவனம், தீவுத்திடல் ஆகிய மூன்றும் அமைந்திருக்கும் இடம் மெட்ராஸின் அன்றைய மவுன்ட் ரோடு, சென்னையின் இன்றைய அண்ணா சாலை!

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article6346961.ece?homepage=true&theme=true

  • தொடங்கியவர்

மனதில் நிறைந்திருக்கும் மதறாஸ்

 

madras1_2075638g.jpg

 

 

நினைவில் உறைந்திருக்கும் சென்னையின் தோற்றம் மாறினாலும் அதன் மனசு மாறிவிடவில்லை.

எனக்கும் சென்னைக்குமான (என்னுடைய மனதில் என்றும் மதறாஸ்தான்) உறவு மிக நெருக்கமானது; உணர்வுரீதியாக மட்டுமல்ல; புவியியல்ரீதியாகவும். ஏனெனில், நான் இருந்த செங்கல்பட்டுக்கும் சென்னைக்கும் இடையிலான தூரம் 60 கிலோ மீட்டர்தான். என்றாலும், நான் சென்னைக்கு வந்தது எனது 13-வது வயதில்தான்.

ஒரு நாள் மாலை என் அப்பா திடீரென்று, “நாளைக்கு என்னுடன் மெட்றாஸ்க்கு வர்றியாடா?” என்று கேட்டார். அப்போதெல்லாம் சென்னைக்குப் போவது என்பது கிட்டத்தட்ட வெளிநாடு போவதுபோலத்தான். உடனே, சந்தோஷமாகத் தலையாட்டினேன். மறுநாள், சென்னை செல்லும் பேருந்தில் ஏறி அப்பா மடியில் உட்கார்ந்ததும், காற்று தாலாட்ட நன்றாகத் தூங்கிவிட்டேன். “மெட்றாஸ் வந்துடிச்சி” என்று அப்பா உலுக்கியவுடன், விழித்த என் கண்கள் முன் பரந்து விரிந்து கிடந்தது சென்னை. பாரி முனையில் இறங்கினோம். ஒரே ஜன நெரிசல், பரபரப்பு. பேருந்து நிலையம் எதிரில் அப்பா பதநீர் வாங்கிக் கொடுத்தார். பழக்கடை தாண்டி கந்தகோட்டம் என்று ஓர் இடத்தில்தான் அப்பா, தன் கில்ட் கடைக்குத் தேவையான பொருட்களை வாங்குவார். இந்த முறை, என்னையும் சென்னைக்கு அழைத்துவந்திருந்தார்.

 

நினைவின் சொர்க்கம்

பின்னர், தேவி பாரடைஸ் திரையரங்கம் வளாகத்துக்குள் நுழைந்தோம். அங்கு படம் பார்க்கவில்லை. வெறுமனே திரையரங்கைச் சுற்றிக் காண்பித்தார் அப்பா. அங்கே வட்டமான, சரிவுப் பாதை ஒன்று இருக்கும். படிக்கட்டு இல்லாமல் சுற்றிச் சுற்றி மேலும் கீழும் போகக்கூடிய பாதை. அது எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அந்த வட்டப் பாதைக்கு நடுவில் சுமார் மூன்று அல்லது நான்கு அடி பருமனும், அண்ணாந்து பார்த்தால் கழுத்து வலிக்கும் அளவுக்கு உயரமும் கொண்ட செவ்விந்தியர் ஒருவரின் சிலை ஒன்றிருக்கும். அதன் மேல் தண்ணீர் பீறிட்டு அடிக்கும்படி செயற்கை நீரூற்று ஒன்றை அமைத்திருந்தார்கள். மறக்க முடியாத நினைவு அது. சென்னைக்கு வந்த முதல் நாளில் அணிந்திருந்த உடைகூட நினைவிருக்கிறது.

அதன் பின்னர், சென்னை என் வாழ்க்கையின் பிரிக்க முடியாத அங்கமானது. கிறிஸ்தவக் கல்லூரியில் பி.யு.சி. படித்தேன். அவ்வப்போது ரயிலில் ஏறி தாம்பரத்திலிருந்து பாரி முனைக்குப் போய்வருவேன். எப்போதாவது கோடம்பாக்கம் லிபர்ட்டி, குரோம்பேட்டை வெற்றி போன்ற திரையரங்குகளில் படம் பார்ப்போம். நான் நடிகனாக வேண்டும் என்று விரும்பிய என் அப்பா, சென்னை திரைப்படக் கல்லூரியில் என்னைச் சேர்த்துவிட்டார்.

அப்போதெல்லாம் செங்கல்பட்டிலிருந்து ரயிலில் வந்து மாம்பலத்தில் இறங்குவேன். பனகல் பூங்கா ஓரமாக நடந்து, ஜி.என். செட்டி சாலை வழியாக வேர்க் கடலையைக் கொறித்துக்கொண்டே நடந்து போனால், ஜெமினி சர்க்கிள் வரும். அதைத் தாண்டிய வுடன் திரைப்படக் கல்லூரி. ஜி.என். செட்டி சாலையில் கடலையை மென்றுகொண்டே நடந்துபோவது ஒரு சுகமான அனுபவம். அவ்வளவாக ஆள் நடமாட்டமே இருக்காது. பெரிய பெரிய மரங்கள் இருந்தன. அந்தச் சாலை எனக்கு ஒரு நண்பன்போல. அதில் உட்கார்ந்து அழுதிருக்கிறேன். அங்கிருந்த ஒரு பூங்காவில் தூங்கியிருக்கிறேன்.

70-களில் சென்னையில் தனி வீடுகள்தான் நிறைந் திருந்தன. வழக்கமாக நான் போகும் ஜி.என்.செட்டி சாலையில் ஒரு வீட்டுக்கு வெளியே ‘நச்சினார்க்கினிய சிவன், வண்டார் பூங்குழலி' என்று பெயர்ப் பலகை இருக்கும். அந்தப் பெயர்களைப் பார்த்துவிட்டுத்தான் கடந்து போவேன். திரைப்படக் கல்லூரியிலிருந்து சபையர், அங்கிருந்து பிரிட்டிஷ் கவுன்சில், கொஞ்சம் தள்ளி ஸ்பென்சர்ஸ், பிறகு தேவி பாரடைஸ், சாந்தி, ஜங்ஷனைக் கடந்தால் ராஜாஜி ஹால் ஊடே நுழைந்து வலது பக்கம் திரும்பினால் டி.வி. ஸ்டேஷன், அதையும் கடந்தால் மெரினா பீச்; இவ்வளவுதான் அப்போதைய சென்னை. நடந்தே கடந்து சென்றுவிடக்கூடிய நகரமாகத் தான் சென்னை அப்போது எனக்குத் தோன்றியது.

தாஜ் கோரமண்டலில் வேலை செய்தபோது, நுங்கம்பாக்கம் பகுதிகளிலெல்லாம் சைக்கிளில் சுற்றுவேன். ஷிஃப்ட் முறையில் வேலை செய்ய வேண்டி யிருந்தது. செங்கல்பட்டிலிருந்து வரவும் முடியாது. இங்கே அறை எடுத்துக்கொண்டு தங்கவும் வசதியில்லை. எனவே, நானும் என் நண்பர்களும் இப்போது உள்ள அண்ணா மேம்பாலம் சர்க்கிளில் தூங்குவோம். எங்களைப் போலப் பலரும் அங்கு தூங்குவார்கள். விடியும் வரை நாங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு, அதன் பிறகு தூங்கி எழுந்து தாஜ் கோரமண்டல் பணியாளர் களுக்கான ஓய்வறையில் தயாராகி, வேலைக்குச் சென்றுவிடுவோம். அதன் பின் வாழ்க்கையில் பல மாற்றங்கள். அனைத்திலும், சென்னை எனக்கு ஆறுதலாக, கூடவே பயணித்தது.

 

மாறிப்போன முகம்

இப்போதைய சென்னையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் என்னவோ மனதுக்கு உவப்பானதாக இல்லை. அன்று நடந்ததுபோல இன்று ஜி.என். செட்டி சாலையில் நடக்க முடியாது. நடைபாதைகளும் இல்லை, மரங்களும் இல்லை. நச்சினார்க்கினிய சிவனும் வண்டார் குழலியும் எங்கு போனார்களோ தெரியவில்லை. அந்த இடத்தில் பளபளப்பான வணிகக் கட்டிடங்கள் நின்றுகொண்டிருக்கின்றன.

இப்போது இருப்பதை வளர்ச்சி என்று கூறுவது விசித்திரமாக இருக்கிறது. நாம் நாமாகவே இருக்க வேண்டும் என்றால், அதற்கு இப்போதைய சென்னையில் இடமே இல்லை. அப்போது மூர் மார்க்கெட் இருந்தது. விரக்தியான மனநிலையில் அங்கே நுழைபவர்களை உற்சாகமாக மாற்றிவிடும் அதிசயப் பிரதேசம் அது. பழைய கடிகாரங்கள், வித்தியாசமான பொருட்கள், புத்தகங்கள், மீன்கள், பறவைகள் என்று பல விஷயங்களும் அங்கு இருக்கும். அதேபோல், பழைய ஸ்பென்சரும் வசீகரமான இடம்தான். ஆனால், அது மேல்தட்டு மக்களுக்கானது.

இன்றைய சென்னைக்கென்று தனிப்பட்ட எந்த அடையாளமும் இருப்பதாகத் தெரியவில்லை. இப்போதுள்ள பல இடங்கள் பிடிக்காதபோதும், கதீட்ரல் சாலையில் இருக்கும் தாவரவியல் பூங்கா எனக்குப் பிடிக்கும். அதேபோல், எழும்பூர் அருங்காட்சியகமும், அதன் பின்னால் அடைந்திருக்கும் காடும் மிகவும் பிடித்தமானவை. கலைஞர்கள், இலக்கியவாதிகள் கூடும் இடமாக இருந்த டிரைவ் இன் உட்லேண்ட்ஸ் இடிக்கப்பட்டது பெரும் வலியைத் தந்தது. குப்பைகளும் அழகுணர்ச்சியின்மையும் சென்னையின் அழகைக் குறைக்கின்றன என்பது உண்மைதான். ‘நான் வாழும் நகரம் இது' என்ற பொறுப்பு வந்தாலே எல்லாம் மாறிவிடும்.

 

மாறாத மனசு!

பொதுவாக, சென்னைவாசிகள் நடந்துகொள்ளும் முறை, பழகும் முறை, விருந்தினர்களைக் கவனிப்பது ஆகியவற்றைப் பற்றி எதிர்மறையான கருத்துகள் உண்டு. என்னைப் பொறுத்தவரை தன்னை நாடி வருபவர்களுக்கு நம்பிக்கை தரும் நகரம் இது. காசில்லாமல்கூட எப்படியாவது இங்கே வந்துவிட்டுப் போகலாம். இன்னும் கையேந்தி பவன்கள் உள்ளன. ஒன்றுமில்லாதவருக்குக்கூட ஏதாவது ஒன்று இங்கே கிடைத்துவிடும். இன்னொரு நல்ல விஷயம். சென்னைவாசிகளிடம் நாம் ஏதாவது கேட்டால், நின்று, பொறுமையாகச் சொல்லிவிட்டுத்தான் போவார்கள். என்னைப் பொறுத்தவரை என்றுமே ஒரு நட்புணர்வுள்ள நகரமாகத்தான் இன்றும் இருக்கிறது, என் ‘மதறாஸ்’.

 

- நாசர், நடிகர், இயக்குநர், தொடர்புக்கு: kameelanasser@gmail.com

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/article6346442.ece?homepage=true&theme=true

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.