Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய தேசியமும் தமிழ் தேசியமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தேசியமும் தமிழ் தேசியமும்

B.R. மகாதேவன்

இந்தியாவுக்கு 1947-ல் சுதந்தரம் தரும்போதே, அது நீண்ட காலம் சுதந்தர நாடாக நீடிக்காது/ நீடிக்கக்கூடாது என்பதே பிரிட்டிஷ் உள்ளிட்ட மேற்குலகின் எண்ணமாகவும் எதிர்பார்ப்பாகவும் இருந்தது. ஒவ்வொரு சமஸ்தானமும் இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ சேரலாம்; விரும்பினால் தனியாகவும் இருந்துகொள்ளலாம் என்று மிகவும் தாராள மனதுடன்தான் இந்தியாவை விட்டு வெளியேறியிருந்தார்கள். பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் கூட்டமானது விரைவிலேயே தமக்குள் அடித்துக்கொண்டு மடியும். பிரிட்டிஷாரின் மேலான ஆட்சியை வேண்டாம் என்று எதிர்த்தவர்களுக்கு நல்லதொரு வாழ்க்கை அமைய முடியாது, அமைந்துவிடக்கூடாது என்பதே அந்த கனவான்களின் பெருவிருப்பமாக இருந்தது. ஏற்கெனவே இஸ்லாமியர்களுக்குத் தனி நாடு என பாரத தேசத்தைத் துண்டாடிவிட்டிருந்தார்கள்.

ஒரே இறைவனைத் தொழுபவர்கள் மட்டுமே ஒற்றுமையாக, (பெயரளவிலான) சமத்துவத்துடன் வாழமுடியும் என்பதே மேற்குலகின் நம்பிக்கை. அதன் நீட்சியாக ஒற்றை மொழியைப் பேசுபவர்களே ஒரு தேசமாக ஆக முடியும் என அது எண்ணியது. எனவே பல மொழிகள் பேசப்படும் இந்தியா விரைவிலேயே மொழிவாரியாகப் பிரிந்து சிதறிவிடும் என எண்ணினார்கள். ஆனால், பிரிட்டிஷார் வருவதற்கு முன்பாகவே இந்த நிலப்பரப்பில் வாழ்ந்த பல்வேறு சாதியினரை ஒன்றிணைத்திருந்த இந்து மதமானது பல தெய்வங்களைத் தொழுபவர்களும் ஒன்றாக வாழமுடியும் என்பதை உணர்த்தியிருந்தது. அதன் நீட்சியாகப் பல மொழிகள் பேசும் மக்கள் வெகு அழகாக ஒரே தேசமாக உருவாகி வந்திருக்கிறார்கள். அதன் பல குறைகளுடன் இந்தியா என்ற இந்தப் பரிசோதனை உலகுக்கு ஓர் எளிய பாடத்தை அழுத்தமாக உணர்த்தி வந்திருக்கிறது: வேற்றுமையில் ஒற்றுமை.

ஆனால், இந்த அம்சமானது ஒருபோதும் சாதகமானதாக ஆகி இந்தியா வலுவான தேசமாக ஆகிவிடக்கூடாது. ஒற்றுமையைத் தக்கவைப்பதற்கே முழி பிதுங்கவேண்டும் என ஒரு மறைமுகச் செயல்திட்டமானது மேற்குலகால் தொடர்ந்து பின்பற்றப்பட்டுவந்திருக்கிறது.

முதல் கட்டமாக தன் செல்ல ரவுடியான பாகிஸ்தானைக் கொம்பு சீவிவிட்டு இந்தியாவின் ராணுவச் செலவுகளை அதிகரிக்கச் செய்ததன் மூலம் மேற்குலகம் தமது பொருளாதாரத்தை பலப்படுத்திக்கொண்டதோடு இந்தியாவின் உள்கட்டுமானங்களில் போதாமையை உருவாக்கி அதிருப்தியின் விதைகளை ஊன்றின.

அடுத்தகட்டமாக அந்த அதிருப்தியை அடிப்படையாக வைத்து சாதி, மத, பிராந்திய (மொழி) இடைவெளிகளைப் பெரிதாக்கி உள் நாட்டு உறவைச் சிதைக்க ஆரம்பித்தன. தனியார்மயம், இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்துவிடுதல், இந்திய நலன் சாராத விவசாய ‘முன்னேற்ற’ நடவடிக்கைகள் என பல தளங்களில் இந்திய விரோதச் செயல்களைத் தனது பொம்மை பிரதிநிதிகள் மூலம் முன்னெடுத்தன. அந்தவகையில் இத்தனை ஆண்டுகால ”சுதந்தர’ ஆட்சியினால் எட்ட வேண்டிய உயரத்தை நம் தேசத்தால் எட்ட முடியாமல் போய்விட்டிருக்கிறது.

சுதந்தரத்துக்கு முன்பாகவே மதம், சாதி, மொழி சார்ந்து ஊன்றப்பட்ட கண்ணிவெடிகளில் மதம் மட்டுமே பெரும் அழிவை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் என்ற நாடு இந்தியாவை வெட்டிப் பிளந்து உருவாக்கப்பட்டது. பாகிஸ்தானில் 90 சதவிகித முஸ்லிம்கள் மத்தியில் சிக்கிய பத்து சதவிகித இந்துக்கள் அனைவரும் கொல்லவோ, அடித்துத் துரத்தவோ, மதம் மாற்றப்படவோ, பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படவோ செய்யப்பட்டனர். இந்தியாவில் 90 சதவிகித இந்துக்கள் மத்தியில் வாழ்ந்த இஸ்லாமியர்களில் எல்லைப்புறங்களில் வாழ்ந்தவர்கள் நீங்கலாக பிறர் மீது ஒரு சிறு கீறல் கூட விழுந்திருக்கவில்லை.

உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான இஸ்லாமியர்கள் இந்தியா முழுவதும் இருப்பதால் 1947-துண்டாடலோடு விஷயம் முடிந்துவிடாது என மேற்குலகம் சப்புக் கொட்டியபடி காத்துக் கொண்டிருந்தது. ஆனால், காஷ்மீர் பகுதியில் மட்டுமே பிரிவினைவாதம் தொடர்ந்து நீடித்துவந்தது. எஞ்சிய பகுதிகளில் இஸ்லாமியர்கள் எந்த மாநிலத்திலும் பெரும்பான்மையாக ஆகியிருக்கவில்லை என்பதாலும் அவர்கள் ஏற்கெனவே இந்து மதத்தில் இருந்து மதம் மாறியவர்கள் என்பதாலும் சுமுகமான வாழ்க்கை வாழ ஆரம்பித்திருந்தனர். இது மேற்குலகம் எதிர்பார்த்திராத, விரும்பியிராத திருப்பம்.

நேரு காலத்திய தொழிற்துறைக் கோட்பாடுகளில் சில குறைபாடுகள் உண்டென்றாலும் தேச நலன் சார்ந்த பல நவீனத் திட்டங்களுக்கு அடித்தளமிட்டவகையில் அது முக்கியமானதுதான். இந்திய மாநிலங்கள் பரஸ்பர கொடுக்கல் வாங்கல் மூலம் மெள்ள வளர்ச்சிப் பாதையில் ஒற்றுமையாக முன்னேற ஆரம்பித்தன. இதுவும் மேற்குலகம் எதிர்பார்த்திராதது.

சாதிரீதியில் தூண்டிவிடப்பட்ட பிரச்னைகளும்கூட இந்திய தேசியத்தின்மீது எதிர்பார்த்த வெறுப்பைத் தோற்றுவித்திருக்கவில்லை. ஆக மத, சாதித்துருப்புச் சீட்டுகள் வலுவிழக்கத் தொடங்கிய நிலையில்தான் தனியார் மயம், பிராந்திய (மொழி வாரி) இடைவெளிகளை விசிறிவிடுதல் என புதிய ஏற்பாட்டுத் திருப்பணிகள் ஆரம்பமாகின. அதில் மொழி வாரி கண்ணிவெடியை இடுப்பில் கட்டிக்கொண்டு பாயும் போராளியாகத் தமிழ் தேசியவாதிகள் உருவெடுத்துவருகிறார்கள். இன்று சொற்ப எண்ணிக்கையிலான நபர்கள்தான் இதை முன்னெடுக்கிறார்கள் என்றாலும் அவர்களைப் பின்னின்று இயக்கும் சக்தி எளிதில் புறக்கணிக்கத் தகுந்ததல்ல.

ஒரு கூட்டாட்சியில் எழும் அதிருப்திகள் கூட்டாட்சியினால் உருவானவையா… கூட்டாட்சி சரியாக அமல்படுத்தப்படாததால் (நிர்வாகக் குறைபாடுகளால்) உருவானவையா என்பது முக்கியமான கேள்வி. அடிப்படையில் தேசியம் என்ற உணர்வு அதற்குக் கீழான பல்வேறு குழு அடையாளங்களின் குறைபாடுகளை இல்லாமல் ஆக்கும் தன்மை கொண்டது. உதாரணமாக இந்தியச் சூழலில் சாதி, மதம், மொழி, வர்க்கம் போன்ற அடையாளங்களினால் ஏற்படும் ஏற்றத்தாழ்வை இல்லாமல் ஆக்கும் வலிமை கொண்டது. அல்லது அப்படி அதை ஆக்கிக்கொள்ள முயற்சி செய்யவேண்டும். தேசத்தின் ஆட்சியாளர்கள், அதிகாரவர்க்கம் தவறு செய்தால் அவர்களைக் கட்டாயம் விமர்சிக்கவேண்டும். ஆனால், தேசத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்கக்கூடாது. அதிகாரவர்க்கத்தை விமர்சிப்பதேகூட தேசத்தின் மீதான அக்கறையினால்தான் இருக்கவேண்டும். அதுதான் பிரச்னைகளைத் தீர்க்க விரும்புபவர்களின் இலக்காக இருக்கமுடியும். ஏனென்றால் பிரச்னை தேசியத்தின் அதிகார வர்க்கத்திடம் இருக்கிறது. தேசியத்தில் இல்லை.

ஒரு அமெரிக்கர் புஷ்ஷை விமர்சிப்பார்… ஒபாமாவை விமர்சிப்பார். ஒருபோதும் அமெரிக்காவை இகழமாட்டார். தேசம் ஒருவருக்குத் தரும் வசதி வாய்ப்புகள், உரிமைகள் தொடர்பான அடிப்படை நன்றி விசுவாசம் அது. நாகரிக மனிதரின் குறைந்தபட்ச கண்ணியம் அது. இந்து சமயத்தின் ஆகப் பெரிய விமர்சகரான அம்பேத்கர் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை ஆத்மார்த்தமாக உருவாக்கியதற்க்குக் காரணம் தலித்களின் வாழ்க்கை ஓரளவுக்கேனும் மேம்படவேண்டுமென்றால் அதற்கு வலுவான இந்திய தேசியம் அவசியம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையே. அவர் இந்து மதத்தை பார்ப்பனிய, பனியா மதமாகப் பார்த்தார். ஆனால், இந்திய தேசியத்தை தலித்களின் மீட்சியாகவே பார்த்தார். இந்திய தேசியம் இன்றும் அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்தபடித்தான் இயங்கிவருகிறது. எந்தவொரு பிரிவும் தனது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளத்தேவையான ஜனநாயக வழிகள் அனைத்தையும் உருவாக்கிக் கொடுத்தபடிதான் இந்திய தேசியம் செயல்பட்டுவருகிறது.

தமிழ் தேசியம், இந்திய தேசியம் என்பவை உண்மையில் தனி அடையாளங்களே அல்ல. உருவ வழிபாடு, பல தெய்வக் கோட்பாடு, பூ, பழம், தீபம், படையல் என வழிபடும் விதம், சாதிக் கட்டமைப்பு, விதி மீதான நம்பிக்கை என பல ஆதார விஷயங்களில் இந்தியா முழுவதிலும் வசிப்பவர்களுக்கும் தமிழகத்தில் வசிப்பவர்களுக்கும் இடையே அழுத்தமான ஒற்றுமை உண்டு. ஒற்றுமை என்று சொல்வதைவிட இருவரின் வாழ்க்கைப் பார்வையும் ஒன்று என்பதுதான் சரி. அதிலும் வேறு தெய்வத்தை வழிபடுபவரை எதிரியாகக் கருதாத ஆன்மிக பக்குவம் உள்ள ஒரே மக்கள் திரள் தமிழர்களையும் உள்ளடக்கிய இந்தியர்கள் மட்டுமே. அறுவடைத் திருநாள் என்பது தமிழகத்தில் கொண்டாடப்படும் அதே நாளிலேயே இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. ராமாயணம், மகாபாரதம் என்ற காவியங்களே இந்தியா முழுமைக்கும் இணைப்புச் சரடாக இருக்கிறது. தமிழகமும் அதற்கு விதிவிலக்கல்ல. வட இந்தியர்களுக்கு ராமேஸ்வரமும் தென்னிந்தியர்களுக்கு காசியும் என புனித ஸ்தலங்கள் மற்றும் அனைத்து புனித யாத்திரைகளும் ஓருடம்பின் அங்கங்களே என்பதையே உணர்த்துகின்றன. கையெடுத்துக் கும்பிடுதல், காலில் விழுந்து வணங்குதல் என்ற இந்தியர்களுக்கே உரிய விஷயங்கள்தான் தமிழகத்திலும் நிலவுகிறது.

தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள்… அதிலும் இந்திய பாரம்பரியத்துக்கு எதிரானவர்கள் என்பதெல்லாம் அசட்டு அரசியல்வாதமே அல்லாமல் வேறில்லை. இவர்கள் இந்து மதம் என்பதையும் மறுதலிப்பவர்களாக குறிப்பாக தலித்கள் இந்துக்களே அல்ல என்று சொல்பவர்களாகவே இருக்கிறார்கள். இவர்கள் சொல்லும் தலித் என்ற ஒற்றை அடையாளம்கூட வலிந்து உருவாக்கப்பட்டதுதான். தலித் என்ற பிரிவினருக்கு இடையிலும் எந்தவித ஒட்டும் கிடையாது உறவும் கிடையாது. மாட்டுக்கறி தின்பவர்கள் என்பது நீங்கலாக. இந்து என்ற ஒற்றை அடையாளம் செயற்கையானது என்றால் தலித் என்ற அடையாளம் அதைவிடப் படு செயற்கையானது.

நில உடமையாளராக, குத்தகைதாரராக, விவசாயக் கூலியாக இருக்கும் தலித்களுக்கும் பிற தொழில்களில் ஈடுபடும் தலித்களுக்கும் இடையில் மலைக்கும் மடுவுக்குமான இடைவெளி உண்டு. உண்மையில் இட ஒதுக்கீடு என்பதில் மலம் அள்ளுதல், பிணத்தை எரித்தல், அழுக்குத் துணி துவைத்தல், சிகை அலங்காரம் செய்தல், செருப்புத் தைத்தல் போன்ற இழிவான கடினமான பணிகளைச் செய்பவர்களுக்குத்தான் முன்னுரிமை தரவேண்டும். ஆனால், அதன் அனைத்து பலன்களையும் அனுபவிப்பது யார் என்று பார்த்தால் விவசாயத் தொழிலில் ஈடுபடும் பறையர், பள்ளர் போன்றவர்களே. விவசாயம் சாராத அந்த தலித்களின் வேதனையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் விவசாயம் சார்ந்த தலித்களின் வேதனை ஒன்றுமே இல்லை. உண்மையில் அவர்கள் சூத்திர சாதி என்ற பிரிவுக்குள் வரவேண்டியவர்களே. ஆக உண்மையான தலித்களுக்கு இட ஒதுக்கீடு இன்னும் கிடைக்கவில்லை. அதைக் கிடைக்கவிடாமல் செய்தது தலித் என்ற பெயரில் அணி திரண்டு நிற்கும் சாதிகளே. இது தனியாகப் பார்க்கப்பட வேண்டிய விஷயம்.

தலித்கள் இந்துக்கள் அல்ல என்று சொவதற்கு இணையானதுதான் தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று சொல்வதும். தலித் என்ற செயற்கையான அடையாளத்தைப் போன்றதுதான் தமிழ் என்ற அடையாளமும். ஏனென்றால், பிரிட்டிஷாரின் காலத்தில் இந்தியா ஒரே அரசின் கீழ் வருவதற்கு முன்புவரை தமிழகம் என்பது சேரர்களின் குருதியாலும் சோழர்களின் குருதியாலும் பாண்டியர்களின் குருதியாலும் நனைந்த ஒரு பூமியாகத்தான் இருந்திருக்கிறது. தமிழ் மொழி பேசும் நாமெல்லாம் ஒரே குடும்பத்தினர் என்ற உணர்வு இந்தியாவின் கீழ் ஒன்றிணைவது வரையில் இங்கு இருந்திருக்கவே இல்லை. இந்தியா என்பதே பிரிட்டிஷாரின் கண்டுபிடிப்பு என்று சொல்பவர்கள் தமிழ் நாடு என்பதும் அவர்களுடைய கண்டுபிடிப்பு என்பதையும் சேர்த்தே சொல்லியாகவேண்டியிருக்கும்.

சமகால அரசியலின் அடிப்படையில் பார்த்தால் சிங்கள அரசு மற்றும் விடுதலைப் புலிகளின் தவறான செயல்பாடுகளினால் நேர்ந்த துன்பங்களுக்கெல்லாம் இந்திய அரசே காரணம்; காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னையில் இந்திய அரசு தமிழர்களுக்குத் துரோகம் இழைக்கிறது; வட இந்திய மேலாதிக்கத்தை நிறுவ முற்படுகிறது என்ற ’நியாயமான’ காரணங்களின் அடிப்படையில் தமிழ் தேசிய உணர்வு ஊட்டப்படுகிறது. இந்துத்துவ சக்திகள் தம்மை பலப்படுத்திக்கொள்ள இந்திய இஸ்லாமிய கிறிஸ்தவ சக்திகளை எதிரிகளாகக் கட்டமைப்பதைப் போலவே தமிழ் தேசியவாத சக்திகளும் இந்திய தேசிய எதிர்ப்பைத் தமக்கான ஆயுதமாக எடுத்துக்கொண்டுவருகிறார்கள். ஆரியப் படையெடுப்பு, பார்ப்பனிய மேலாண்மை, வட இந்திய ஆதிக்கம், ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பு என்று சற்றும் பொருத்தமற்ற, ஆதாரமற்ற கோட்பாடுகளால் இந்திய தேசியத்தை விமர்சிக்கும் திராவிடப் பாரம்பரியத்தின் நீட்சியாக தமிழ் தேசியவாதம் முன்வைக்கப்படுகிறது.

ஏற்கெனவே தனி நாடு கேட்டு வீர முழக்கங்கள் எழுப்பிய முன் அனுபவம் கொண்ட திராவிட முன்னேற்றப் போர்வாள்கள் இந்திய தேசிய உறைக்குள் அடங்கிவிட்டதாலும் ஈழப் பிரச்னையின் வீழ்ச்சிக்கு சகோதர யுத்தமே காரணமென்று சொல்வதாலும் இந்தத் தமிழ் தேசிய ஆட்டத்தில் அவர்கள் இப்போதைக்கு ஓரங்கட்டப்பட்டிருக்கிறார்கள். ஸ்டாலின், கலைஞர் ஆகியோரின் காலத்துக்குப் பிறகு இந்திய தேசிய உறையில் இருந்து திராவிடப் போர்வாளை தமிழகத்து ஜான்சி ராணி கனிமொழி உருவுவார் என்ற நம்பிக்கையில் சில கூட்டணிகள், சங்கமங்கள் உருவாகின என்றாலும் இன்று அந்த ஜான்ஸி ராணி பாத்திரத்துக்கு அவரை விடப் பொருத்தமான ஒருவர் கிடைத்துவிட்டிருப்பதால் தமிழ் தேசியப் பட்டறையில் துருத்தி ஊதும் சத்தமும் இரும்படிக்கும் சத்தம் உற்சாகமாகக் கேட்கத் தொடங்கியிருக்கிறது. கையைக் கொண்டே கண்ணைக் குத்த வைப்பதில் அலாதி திருப்திதானே. கலைஞர்ஜிக்கு இதில் வருத்தம்தான். எனினும் நாம் ஓரங்கட்டப்பட்டாலும் நம் கொள்கைகள் முன்னிலைக்கு வந்திருக்கின்றன தலைவரே என அல்லக்கைகள் அவருக்குப் பாடம் எடுக்க ஆரம்பித்தாகிவிட்டது. அதை அவர் புரிந்துகொள்ளும் தன்மையைப்பொறுத்து தமிழ் தேசியம் வீறு கொண்டெழும்.

இந்திய தேசியத்தைக் கட்டிக் காக்கும் பொறுப்பில் இருக்கும் இந்துத்துவ சக்திகள் இந்துஸ்தானை உருவாக்கும் பகல் கனவில் திளைத்திருப்பதான தோற்றம் உருவாக்கப்படுகிறது. சமஸ்கிருதம் கற்றுத் தரும் பள்ளிகளில் சம்ஸ்கிருத வாரம் கொண்டாடச் சொன்னதையும் சமூக வலைதளத்தில் இந்திக்கு முன்னுரிமை கொடுத்ததற்கு (தமிழகம் நீங்கலாக என்று சொன்ன பிறகும்) என்னமோ தேசத்தின் மொழியாக சம்ஸ்கிருதத்தையும் ஹிந்தியையும் ஆக்கியதைப்போல் போர்ப்பரணிகள் பாடப்படுகின்றன. திடீரென ராம்ராஜ் வேட்டிக்கு சல்யூட், ராஜபக்சேவுக்கு எச்சரிக்கை என முத்தமிழில் மூன்றாம் தமிழ் அதீத முக்கியத்துவம் பெறத் தொடங்கியிருக்கிறது. இவையெல்லாம் நீர்க்குமிழ்களாக உடைந்துபோய்விடக்கூடியவை என்று எளிதில் புறந்தள்ளிவிடமுடியாது. அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகர்ந்துவிடும் அபாயம் உண்டு.

ஏற்கெனவே வடக்கு எல்லையில் பாகிஸ்தான் மூலமான பயங்கரவாதம், வட கிழக்கு எல்லைகளில் அமெரிக்க கிறிஸ்தவ பயங்கரவாதம் தலைவிரித்து ஆடும் நிலையில் தென் எல்லையில் தமிழகத்தில் பிரிவினைக் கோட்பாடுகள் மெள்ள முளைவிடத் தொடங்கியிருக்கின்றன. இந்த வெறுப்பின் ஆதார மையம் ஈழப் போராட்டத்தில் அடைந்த படு தோல்வியே.

பங்களாதேசத்தை தனிநாடாகப் பிரித்துக் கொடுத்ததுபோல் ஈழத்தையும் பெற்றுக் கொடுப்பார்கள் என இந்திய அரசை நம்பியதாகவும் இந்திய அரசு துரோகம் செய்ததால் ராஜீவைக் கொன்று பழி தீர்த்ததாகவும் வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. கூட்டாட்சிக்குள் சுயாட்சி என்ற ஒப்பந்தப்படி இந்திய அமைதிப்படை புலிகளிடமிருந்து ஆயுதங்களைப் பறிப்பதில் காட்டிய ஈடுபாட்டை விரும்பாத புலிகள் தரப்பு இந்திய ராணுவம் குறித்த அவதூறுகளை உருவாக்கி உலவவிட்டது. இந்திய ராணுவத்தினரில் சிலர் பாலியல் மீறல்களில் ஈடுபட்டிருக்கக்கூடும். ஆனால், அது மிகையாக ஊதிப் பெருக்கப்பட்டிருக்க அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன. இலங்கை அரசுக்கும் இதில் பெரும் பங்கு உண்டு. விடுதலைப் புலிகள், சிங்கள அரசு இரண்டுக்குமே ராஜீவின் செயல்பாடுகளில் அதிருப்தி இருந்தன. அவையே இந்திய ராணுவத்தின் மீதான அவதூறுகளாக வெளிப்பட்டன. இன்று அவை ஆதாரமே தேவைப்படாத உண்மையாகிவிட்டிருக்கின்றன. நாளையே இந்திய அமைதிப்படையில் பணி புரிந்த ஏதேனும் ராணுவ அதிகாரி தேன்பொறியிலோ வேறு எதிலோ சிக்கிக்கொண்டு சில ’அதிகாரபூர்வ சாட்சியங்களை’ அளித்துவிட்டால் உண்மையின் சிதை மீது இறுதி விறகும் அடுக்கப்பட்டுவிடும். இத்தனைக்கும் அமைதிப்படையில் ”அத்துமீறல்களுக்கு’ ராஜீவ் காந்திக்கு தண்டனை கொடுத்தாகிவிட்டது. மேலும் ஒரு அரசு செய்யும் தவறுக்கு அந்த தேசத்தையே எதிர்ப்பது நிகழ்வுகளின் அடிப்படையில் எடுத்த தீர்மானமல்ல. முன்தீர்மானத்துக்கு ஏற்ப நிகழ்வுகளைத் திரித்துக்கொள்ளும் போக்கு மட்டுமே.

இந்திய ராணுவத்தை (இந்தியாவை) இப்படியான ஒரு பொறியில் சிக்க வைத்ததற்குப் பின்னால் பெரும் சதித்திட்டமே இருக்கிறது. இந்திய ராணுவத்தின் பாரம்பரியம் முற்றிலும் வேறானது.

கிழக்கு பாகிஸ்தான் மக்கள் நில ரீதியான தொடர்ச்சி இல்லாத காரணத்தாலும் வெறும் இஸ்லாமிய அடையாளத்தோடு மட்டுமல்லாமல் வங்காள மொழியோடும் தம்மை இனம் கண்டதாலும் தனி நாடாக வாழ விருப்பம் தெரிவித்தனர். பாகிஸ்தான் அரசும் அதன் ராணுவமும் கட்டவிழ்த்துவிட்ட வன்முறையில் இருந்து இந்திய அரசின் (ராணுவத்தின்) துணையுடன் விடுதலை பெற்றனர். அன்றைய பங்களாதேசத்தின் தெருக்களில் இந்திய ராணுவத்துக்குக் கிடைத்த பெரும் வரவேற்பு பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படவேண்டியவை. காஷ்மீரிலும் கூட பாகிஸ்தான் ராணுவத்தினால் மறைமுக உதவிகள் பெற்று மலைகளில் இருந்து இறங்கிய வெறிபிடித்த பழங்குடி பதான் கூட்டத்திடமிருந்து காஷ்மீர் காப்பாற்றப்பட்டபோதும் இந்திய ராணுவத்துக்கு இதே ரத்னக் கம்பள வரவேற்பு தரப்பட்டது.

பங்களாதேஷைப் பிரித்துத் தனி நாடாக்கியதற்கு பதிலடி கொடுக்கும் முகமாக பஞ்சாபில் காலிஸ்தான் பிரச்னை பாகிஸ்தானால் தூண்டப்பட்டபோதும் இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் மிதமாகவே இருந்திருக்கின்றன. மேலும் காலிஸ்தான் பிரச்னை சுமுகமாகத் தீர்க்கவும்பட்டுவிட்டது.

வட கிழக்குப் பகுதில் கூட இந்திய அரசின் பெரும்பாலான நலத்திட்டங்களும் இந்து என்.ஜி.ஓக்களின் சமூக சேவைத் திட்டங்களும் ராணுவத்தினரின் பங்களிப்புடனே நடந்தும் வந்தன. இவையெல்லாம் மேற்குலகம் துளியும் விரும்பாத விஷயங்கள். எனவே, வடகிழக்குப் பகுதியிலும் இலங்கையிலும் இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் திட்டமிட்டுத் திரிக்கப்பட்டன. எந்தவொரு ராணுவமும் சில அத்துமீறல்களில் ஈடுபடக்கூடும். போர் வியூகத்தின் ஓர் அங்கமாகக்கூட இவை முன்னெடுக்கப்படும். ஆனால், மேற்கத்திய சக்திகளின் கைப்பாவையான ஊடகங்கள் அவற்றை மிகைப்படுத்தின. திரித்தன. இன்று அவையே உண்மையாக நிலைபெற்றும்விட்டன. இந்த “உண்மை’தான் தமிழ் தேசியப் பேரியக்கத்தின் ஆதார உத்வேகமாகவும் இருக்கிறது.

தமிழ் தேசியவாதிகள் முன்வைக்கும் அடுத்த முக்கிய துரோகக் கதை காவிரி தொடர்பானது. கர்நாடகாக்காரன் தண்ணீர் தர மறுக்கிறான். இந்திய அரசு அதைத் தட்டிக் கேட்பதில்லை. பின் நான் இந்தியன் என்று எதற்காகச் சொல்லவேண்டும் என்பது இவர்களின் இன்னொரு முக்கியமான முழக்கம்.

தமிழக விளை நிலங்களில் இறால் பண்ணைகள் அமைப்பது தமிழர்கள்தான்… சாயப் பட்டறைக் கழிவுகளைக் கொட்டி நதிகளை பாழ்படுத்தியதும் தமிழர்கள்தான்… விளை நிலங்களை வீட்டு மனைகளாகப் பட்டா போடுவதும் போட்டி போட்டு வாங்குவதும் அதே தமிழர்கள்தான். குளம், கிணறு, ஏரிகளைத் தூர்வாராமலும் மழை அதிகம் பெய்யும் காலத்தில் வெள்ள நீரை கடலில் கலக்கும்படிவிடுவதும் அதே தமிழர்கள்தான். ஆனால், கர்நாடகாக்காரன் தண்ணீர் தராவிட்டால் மட்டும் உடனே இந்தியாவில் இருந்து பிரிந்து சென்றுவிடுவார்களாம். அதன் பிறகு கடல் நீரை வைத்து வெள்ளாமை செஞ்சு தமிழகத்தை உலகின் நெற்களஞ்சியமாக மாற்றிக் காட்டிவிடுவார்களாம்.

உண்மையில் இந்தக் காவிரி பிரச்னையில் தமிழர்கள் பக்கம் எந்த அளவு நியாயம் இருக்கிறது? கர்நாடகாவில் தோன்றும் காவிரி நதியைக்கொண்டு கர்நாடகாவைவிட இரண்டு மூன்று மடங்கு அதிக நிலத்தில் விவசாயம் செய்வது தமிழர்கள்தான். பிரிட்டிஷாரின் ஆட்சி காலத்தில் மதராஸ் பிரசிடென்ஸி வலுவானதாக இருந்ததால் தமிழகத்துக்குச் சாதகமாக ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதை அடிப்படையாக வைத்துத்தான் இன்றும் எங்களுக்குத் தண்ணீர் தரப்படுவதில்லை என்று தமிழ் தேசியவாதிகள் முழங்குகிறார்கள். கர்நாடகாவில் பாயும் நதிக்கு அவர்கள் அணை கட்ட வேண்டும் என்றாலும் நம்மைக் கேட்டுத்தான் செய்யவேண்டும் என்று ஒரு நியாயத்தை அவர்கள் துணிச்சலாக முன்வைக்கவும் செய்கிறார்கள். சுதந்தரம் பெற்ற பிறகு கர்நாடகத்தினர் தமது விளை நிலத்தை அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்களுடைய பயன்பாட்டுக்குத்தான் முன்னுரிமை தருவார்கள். மத்திய அரசும் அவர்கள் பக்கம் இருக்கும் நியாயத்தைத்தான் ஏற்கவும் முடியும்.

தமிழக விவசாயிகள் மீது தமிழ் தேசியத்தினருக்கு உண்மையான அக்கறை இருந்தால் கிணற்றுப் பாசனம், ஏரிப்பாசனம் ஆகியவற்றை வளர்த்தெடுத்திருக்கவேண்டும். அதிக நீர் தேவைப்படக்கூடிய வேதி உரங்களின் பயன்பாட்டைக் குறைத்திருக்கவேண்டும். மேலும் இது தமிழ் தேசியவாதிகளின் பணி மட்டுமே அல்ல. இந்திய தேசியத்தை முன்வைப்பவர்களின் பணியும்கூட. ஆனால், இந்திய தேசியத்தை இந்து தேசியமாகப் புரிந்துகொண்டிருக்கும் பி.ஜே.பி. அன்கோவோ இஸ்லாமிய வெறுப்பின் மூலமே தமது இலக்கை அடைந்துவிட முடியும் என்று மனப்பால் குடித்துவருகிறது.

சிங்கள அரசுடனான நட்புறவு, எழுவர் தூக்கு, கூடங்குளம் என மத்திய மாநில அரசுகளுக்கிடையே மோதல் வலுப்பதற்கான முகாந்தரங்கள் ஏராளம் இருக்கின்றன. உண்மையில், தமிழர்களால் இந்திய தேசியத்துக்கு எவ்வளவு நன்மை விளைந்திருக்கிறதோ அதே அளவுக்கு இந்திய தேசியத்தால் தமிழர்களுக்கும் நன்மை விளைந்திருக்கிறது. பீகார், உத்தரபிரதேசம் போன்ற பின் தங்கிய (நவீனத்துவ அளவுகோலின்படி) மாநிலங்கள் இந்திய தேசியத்தை எதிர்த்தால்கூட அதில் நியாயம் உண்டு. இந்திய மாநிலங்களில் பல விஷயங்களில் முன்னணியில் இருக்கும் ஒரு மாநிலம் தமிழகம். இந்திய தேசியத்தில் இருந்ததால்தான் இது சாத்தியமாகியும் இருக்கிறது. விவசாயப் பொருளாதாரத்தில் இருந்து நகர்ந்து தொழில்மயமாக்கலினால் முன்னேறிய சமூகங்களில் தமிழ் சமூகமும் ஒன்று. அந்த தொழில்மயமாக்கலுக்கு முக்கிய காரணமான காமராஜர் பழுத்த தேசியவாதி. அவர் காலத்தில் கொண்டுவரப்பட்ட மத்திய அரசின் திட்டங்களே ஒப்பீட்டளவில் சாதிப்பிடியில் இருந்து தமிழகம் விடுபட வழிவகுத்திருக்கிறது. வேறு எந்த வெங்காயத்தைவிடவும் இந்தத் தொழில் வளர்ச்சியே தமிழகத்தின் இன்றைய வளத்துக்கும் சமூக முன்னேற்றத்துக்கும் காரணம். ஆனால், தமிழ் தேசியவியாதிகளோ கடப்பாரையும் கையுமாக அலைகிறார்கள். ஈழத்தைச் சுடுகாடாக்கிவிட்டு இந்தியா பக்கம் இந்தத் தமிழ் தேசியவாதம் தன் கோர விழிகளைத் திருப்பியிருக்கிறது. இந்தியா உஷாராக இருக்கவேண்டும். குறிப்பாகத் தமிழகம்.

0

http://www.tamilpaper.net/?p=8957

  • கருத்துக்கள உறவுகள்

சுத்த அபத்தமான கட்டுரை.

நதியின் கழிமுகத்தில் இருப்பவருக்கே நீரின் அதிக உரிமையுண்டு(ஏனெனில் நதியின் வெள்ளத்தை தாங்குவது அவர்கள்தான்) என்பதாக உலக நதிநீர் பங்கீடு நெறிமுறைகளை மேற்கோள் காட்டி இதற்கு முன் படித்திருக்கிறேன்.

 காவிரி உற்பத்தியாகும் குடகு மலைப் பகுதி தமிழர்கள் வாழ்ந்த இடம். முல்லைப் பெரியாறு பகுதியான இடுக்கி மாவட்டம் மதுரை அரசனுக்கு கப்பம் கட்டிவந்த பூஞ்ஜார் ஜமீனின் பகுதி.

பொந்திய தேசியத்தால் தமிழர்களின் பாரம்பரிய பூமிகளை இழந்ததே அதிகம். அவற்றை மீட்டுத் தருமா பொந்திய தேசம்?

'பொந்திய தேசியம்' என காதில் பூ சுற்றும் பழங்கால யுக்தி இப்பொழுது எடுபடாது. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

சூரத் வழக்கு: நிரபராதிகளின் கொலைக் களமாக குஜராத்!

 
01-advani-modi.jpgபாபர் மசூதி இடிப்பு : சூரத் உள்ளிட்டு நாடெங்கும் முஸ்லீம் எதிர்ப்பு கலவரத்தைத் தூண்டிய அத்வானிக்கு மோடி அன்று அல்லக்கை.

01-surat-congress-minister.jpg20 ஆண்டுகளுக்கு பின் 78 வயதில் நிரபராதி என்று விடுதலை – முன்னாள் காங்கிரசு அமைச்சர் முகமது சுர்தி.

1993-ம் ஆண்டு சூரத்தில் நடந்த இரு குண்டு வெடிப்புகள் தொடர்பான வழக்குகளில், தடா சட்டத்தின் கீழ் பத்து முதல் இருபது ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட 11 முஸ்லிம்களை நிரபராதிகள் என்று கூறி ஜூலை 17-ம் தேதியன்று விடுதலை செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். விடுதலை செய்யப்பட்ட 11 பேரில் ஒருவர் 78 வயதான முன்னாள் காங்கிரசு அமைச்சர் முகமது சுர்தி. மற்ற பலர் காங்கிரசு தொண்டர்கள்.< இதேபோல, 2002 அக்சர்தாம் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் உள்ளிட்ட அனைவரையும் மே-16, 2014 அன்று நிரபராதிகள் என்று கூறி உச்ச நீதிமன்றம் விடுவித்ததும் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அந்தத் தீர்ப்பு மோடியின் வெற்றிக் கொண்டாட்டக் கூச்சலில் அமிழ்ந்து போனது.

தற்போது சூரத் வழக்கில் 11 பேரை விடுதலை செய்திருக்கும் உச்ச நீதிமன்றம், அவர்களிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுவது உள்ளிட்டு குற்றங்கள் ஏதும் நிரூபிக்கப்படவில்லை என்பதுடன், தடா சட்டத்தின் கீழ் (சித்திரவதை செய்து) பெறப்பட்ட வாக்குமூலங்களைத் தவிர வேறு சாட்சியங்கள் எதுவுமே இல்லை என்றும் கூறியிருக்கிறது.

மேலும் தடா சட்டத்தின் கீழ் தண்டித்தக்க ஒரு குற்றத்தை பதிவு செய்வதற்கு முன், அதற்கு மாவட்ட கண்காணிப்பாளரின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்ற விதியை மீறி, மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலரிடம் ஒப்புதல் பெற்றிருப்பது முறைகேடானது என்றும் கூறி அனைவரையும் விடுவித்திருக்கிறது. இது வெறும் முறைகேடல்ல; இந்தப் பொய்வழக்கு மாநில அரசுத் தலைமையால் திட்டமிட்டு போடப்பட்டிருக்கிறது என்பதற்கான நிரூபணம்.

சூரத் பொய்வழக்கு என்பது பானைச் சோறுக்கு ஒரு சோறு. 1990-களின் துவக்கம் முதல் இன்றுவரை இந்தியா முழுவதும் இப்படி சிறை வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி முஸ்லிம்கள் பல்லாயிரம் பேர். அவர்களில் சிலர்தான் இத்தகைய தீர்ப்புகளில் விடுவிக்கப்படுகின்றனர். உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்காடி வெற்றி பெறுவதற்குள் அவர்கள் வாழ்க்கை அழிந்து விடுகிறது. வழக்காட முடியாத ஏழை முஸ்லிம்ளின் வாழ்க்கை சிறையிலேயே கழிகிறது. அவர்களது குடும்பங்கள் சின்னாபின்னமாகின்றன.

அதே நேரத்தில் இத்தகைய அநீதிகளை இழைத்த கிரிமினல் கட்சி ஆட்சியில் அமர்த்தப்படுகிறது. 2002 படுகொலையின் நாயகனை முதல்வராகவும், பிரதமராகவும் ஆக்குமளவுக்கு பெரும்பான்மை சமூகத்தின் “ஞாபகமறதி” முற்றியிருக்கிறது. எனவே, இந்த வழக்கின் பின்புலத்தை விளக்குவது அவசியமாகிறது.

1992, டிசம்பர் 6-ம் தேதியன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டவுடனேயே, நாடு முழுவதும் முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுப்பதற்கு பாரதிய ஜனதா திட்டமிட்டிருந்தது. மறுநாள், டிசம்பர் 7-ம் தேதியன்று, மசூதி இடிப்பைக் கண்டித்து சூரத்தில் ஒரு முஸ்லிம் அமைப்பு கல்வீச்சு மற்றும் தீவைப்பில் ஈடுபட்டது. அடுத்த கணமே 2000-க்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய இந்து மதவெறிக் குண்டர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலைத் தொடங்கினர். முஸ்லிம் மக்கள் தப்பியோட முடியாவண்ணம் தெருக்களில் தடையரண்கள் எழுப்பப்பட்டன. முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் இந்துக்களும் கொல்லப்படுவார்கள் என்று கோயில் ஒலிபெருக்கிகளிலிருந்து அர்ச்சகர்கள் அறிவித்தனர். அடுத்த 6 நாட்கள் நீடித்த இந்தத் தாக்குதலில் சுமார் 200-க்கும் மேற்பட்ட முஸ்லிம்களும் சில இந்துக்களும் கொல்லப்பட்டனர். எண்ணற்ற முஸ்லிம் பெண்கள் கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டனர். சொத்துகள் கொள்ளையிடப்பட்டன. சுமார் 20,000 பேர் உள்ளூரிலேய அகதிகளாகி முகாம்களில் சரணடைந்தனர். கலவரத்துக்கு முன்னர் வாக்காளர் பட்டியல் எடுப்பது போல முஸ்லிம் வீடுகளை இந்து வெறியர்கள் அடையாளம் கண்டு வைத்திருந்தார்கள் என்பது பின்னர் தெரியவந்தது. அன்று சூரத்தில் நடந்த கொடூரங்களை, இன்று நரேந்திர மோடிக்கு கூஜா தூக்கும் பெண் பத்திரிகையாளர் மது கிஷ்வாரின் “மனுஷி” என்ற பத்திரிகை விரிவாகப் பதிவு செய்திருக்கிறது. (மனுஷி, ஜன-ஏப், 1993)

1990-94 காலகட்டத்தில் சிமன்பாய் படேல் தலைமையிலான ஜனதா தளம்(குஜராத்), ஜனதா தளம், காங்கிரசு ஆகியவற்றின் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தது. சூரத் குண்டுவெடிப்பு என்பது 1993 ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்தன. இவற்றில் ஒரு பள்ளிச் சிறுமி கொல்லப்பட்டாள். 30 பேர் காயமடைந்தனர். ஜனவரியில் நடந்த குண்டுவெடிப்புக்காக 22 முஸ்லிம்கள் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அவர்கள் அனைவரையும் நிரபராதிகள் என்று விடுவித்தது நீதிமன்றம். 1995-இல் பா.ஜ.க. ஆட்சி வந்தது. ஏப்ரலில் நடந்த குண்டுவெடிப்புக்காக காங்கிரசு அமைச்சர் சுர்தி உள்ளிட்ட 11 பேரை கைது செய்த போலீசு, ஜனவரி குண்டுவெடிப்புக்கும் சேர்த்து இவர்கள் மீது வழக்கு போட்டது. 2008-ல்தான் தடா நீதிமன்றம் இதனை விசாரித்து தண்டனை விதித்தது. அந்த தீர்ப்பைத்தான் தற்போது உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.

01-advani-modi.jpg

பாபர் மசூதி இடிப்பு : சூரத் உள்ளிட்டு நாடெங்கும் முஸ்லீம் எதிர்ப்பு கலவரத்தைத் தூண்டிய அத்வானிக்கு மோடி அன்று அல்லக்கை.

குஜராத்தில் பாரதிய ஜனதா மட்டுமின்றி, காங்கிரசு, ஜனதா, ராஷ்டிரிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் அனைத்துமே இந்துவெறிக் கட்சிகளாகத்தான் இருந்திருக்கின்றன. சூரத் குண்டுவெடிப்பில் ஒரு உயிர் போனதற்காக 11 நிரபராதிகள் தண்டிக்கப்பட்டனர். ஆனால் 1992-ல் 200 பேரைக் கொன்று இந்துவெறியர்கள் நடத்திய கலவரத்துக்காக எத்தனை பேர் தண்டிக்கப்பட்டிருக்கின்றனர்? ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. (மறந்துவிட்ட கலவரங்கள், இந்தியன் எக்ஸ்பிரஸ், 17.12.2009)

கலவரத்தை விசாரிப்பதற்காக டிசம்பர் 1993-ல் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.எம்.சவுகான் தலைமையில் ஒரு விசாரணைக் கமிசன் அமைக்கப்பட்டது. ஜூன் 1996 வரை அந்தக் கமிசனுக்கு ஊழியர்களே நியமிக்கப்படவில்லை. இந்த நிலையிலும் 30.6.1997-க்குள் 1300 சாட்சிகளை விசாரித்து பதிவு செய்துவிட்ட சவுகான், தனது அறிக்கையை வெளியிட மாநில அரசிடம் மேலும் 4 மாத காலம் அவகாசம் கேட்டார். கால நீட்டிப்பு தரமுடியாதென்று மறுத்து கமிசனைக் கலைத்துவிட்டது வகேலா தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா அரசு.

இம்முடிவை எதிர்த்து மறைந்த வழக்குரைஞர் முகுல் சின்கா குஜராத் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். எதிர் வழக்காடிய வகேலா அரசு, “1992 கலவரத்துக்குப் பின்னர் தற்போது மாநிலத்தில் மத நல்லிணக்கமும் அமைதியும் நிலவுகிறது. இத்தகைய சூழ்நிலையில், கலவரம் நடைபெற்ற சூழல் குறித்த விசாரணையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது. அத்தகைய விசாரணை மீண்டும் இரு பிரிவினருக்கிடையே துவேசத்தை தூண்டிவிடும்” என்று கூறி கமிசனைக் கலைத்ததை நியாயப்படுத்தியது.

இந்த வக்கிரமான வாதத்தை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. “காலம் ஓடி விட்டது. மக்கள் அந்த கருப்பு நாட்களை மறந்து விட்டார்கள். அதை மீண்டும் கிளற வேண்டாம் என்று அரசு கூறுவது சரிதான்” என்று சொல்லி முகுல் சின்காவின் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது குஜராத் உயர் நீதிமன்றம். (9.3.98)

இப்படித்தான், 2002 குஜராத் படுகொலையையும் மறந்து விடச் சொல்கிறார்கள். அரங்கேற்றப்படும் குண்டு வெடிப்பு நாடகங்கள், போலி மோதல் கொலைகள் – ஒவ்வொன்றிலும் நிரபராதிகள் தண்டிக்கப்படுகிறார்கள். இந்த நிரபராதிகளின் வாழ்க்கையை அழித்த இந்து மதவெறியர்களும், பொய் வழக்கு போட்ட போலீசு அதிகாரிகளும், பொய் சாட்சியங்களின் அடிப்படையில் அவர்களைத் தண்டித்த நீதிபதிகளும் கூண்டிலேற்றப்படுவதில்லை. மறந்து விடச் சொல்கிறார்கள். எத்தனை அநீதிகளைத்தான் மறக்க முடியும்?

- அழகு vinavu.com

 

http://namathu.blogspot.de/2014/08/blog-post_816.html

இந்திய தேசியமும் தமிழ் தேசியமும் - கட்டுரைக்குச் சமர்பணமாகுக!.............

  • கருத்துக்கள உறவுகள்
பிரிட்டிஷார் வருவதற்கு முன்பாகவே இந்த நிலப்பரப்பில் வாழ்ந்த பல்வேறு சாதியினரை ஒன்றிணைத்திருந்த இந்து மதமானது பல தெய்வங்களைத் தொழுபவர்களும் ஒன்றாக வாழமுடியும் என்பதை உணர்த்தியிருந்தது.
நம்பிட்டமல்ல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.