Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கர்ணன்கள் , போராளிகள்

Featured Replies

Troy நகரைக் கிரேக்கப் படைகள் சூழ்ந்திருக்கின்றன. கொடியின் எதிரே யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் களம். அன்றைய நாள் மோதல் வித்தியாசமானது, முக்கியமானது. அந்நாட்டின் மிகச்சிறந்த வீரனும் நாட்டின் பிரதான படைத்தளபதியுமான இளவரசன் ஹெக்டர் தன் மனைவியிடமும், குழந்தையிடமும் விடைபெற்றுக் கொள்கிறான். அவன் அக்கலிஸ் உடன் ஒற்றைக்கு ஒற்றையாக மோதப் போகிறான்.

அக்கலிஸ் வெல்லப்பட முடியாதவன் என எதிரிகளாலும் மதிக்கப்படும் பெரும்வீரன். ஒரு விடிகாலையில் அக்கலிஸ்சின் தலைக்கவசத்தை அணிந்துகொண்டு போரிடுகிறான் அனுபவமில்லாத இளவயதினனான அவன் உறவினன். அவனை அக்கலிஸ் எனத் தவறுதலாக நினைத்துக் கொன்றுவிடுகிறான் ஹெக்டர். அதற்குப் பழிவாங்கவே ஹெக்டரை ஒற்றைக்கு ஒற்றை அழைக்கிறான் அக்கலிஸ்.

யுத்தம் ஆரம்பிக்கிறது. கோட்டையின் மேற்தளத்தில் ஹெக்டரின் மனைவி ஆரம்பத்திலேயே எதையும் பார்க்காமல் திரும்பி மடங்கி உட்கார்ந்து அழுகிறாள். அவளுக்குத் தெரிந்துவிடுகிறது ஹெக்டர் திரும்பப் போவதில்லை என்பது. மன்னருக்கும் தெரிகிறது தன் மூத்தமகன் முடிவு. இந்தப் போருக்கே காரணமான அவன் தம்பி, ஏனைய படைத்தளபதிகள், ஏன் ஹெக்டருக்கே கூட தெரிந்துவிடுகிறது அது தன் இறுதியுத்தம் என்பது. ஏற்கனவே அவன் தன் தம்பியைக் காப்பாற்றுவதற்காக யுத்தவிதிகளை மீறியிருக்கிறான். அவன் தன்னளவில் உறுதியாகப் போரிடுகிறான். உயிர்துறக்கிறான்.

Troy (2004) படம் பார்க்கும்போது, ஹெக்டரின் கதாபாத்திரம் எனக்குக் கர்ணனையே நினைவூட்டியபடியிருந்தது. தன் முடிவு தெரிந்தும், களம் தனக்குச் சாதகமாயில்லை என்பது தெரிந்தும், தனக்கான இறுதியைத் தான் விரும்பியபடியே எதிர்கொள்ளும் ஒவ்வொருவனும், தன் கொள்கைக்காக, தான்கொண்ட நியாயத்துக்காக, நன்றிக்காக, நம்பிக்கைக்காக தோற்கப்போவது தெரிந்தும் இறுதிவரை மனம்தளராது முழுமனதுடன் போராடி மடியும் யாவரும் கர்ணனையே நினைவூட்டுகிறார்கள்.

மகாபாரதக் கதையில் கர்ணன் மாதிரி தேவர், முனிவர், அரசர், சாதாரண மனிதர் ஆகிய எல்லாத் தரப்பினராலும் மோசமாகப் பாதிக்கப்பட்ட, பலி(ழி) வாங்கப்பட்ட வேறொரு பாத்திரம் இருந்ததாகத் தெரியவில்லை. போர்க்களம் போகுமுன்பாகவே மிகப் பலவீனமாக்கப்பட்ட நிலையில் களம்புகுந்த வீரனாக அவன் மட்டுமே இருந்தானென நினைக்கிறேன். சின்ன வயதில் மகாபாரதக் கதை தெரிந்துகொண்டபோது, ஏனோ கர்ணனை மிகவும் பிடித்திருந்தது. நிச்சயமாக இது பலவீனமானவர்கள் மீது பரிதாபம் கொள்ளும் மனநிலையல்ல. அவனும் பலவீனமானவனல்ல.

கர்ணன் தன் வாழ்நாள் முழுவதும் போராளியாகவே வாழ்ந்திருக்கிறான். துரதிருஷ்டத்திற்கும், ஒடுக்குமுறைக்கும் எதிரான முழுமையான போராளியாக! துரதிருஷ்டம் துரத்த, துரோகங்கள் தொடர, நயவஞ்சகர்களால் ஏமாற்றப்பட்ட நிலையில் தன் முடிவு தெரிந்திருந்தும், இறுதிவரை தன் கொள்கையிலிருந்து மாறாமல், நிலைகுலையாமல் போராடினான். அவனுக்குத் தனது முடிவு தெரிந்தேயிருந்தது. தன் பாதுக்காப்பை உறுதிப்படுத்தும் எல்லாச் சாத்தியங்களையும் அவனாகவே மனமுவந்து விட்டுக் கொடுத்து தன்னை அழிப்பதற்கான சாதகமான சூழலை அவனே ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறான். தான் கற்ற வித்தையை மட்டுமே நம்பிக் களமிறங்குகிறான். முடிவு தெரிந்தும் தளர்ந்துவிடாமல் போராடி மடிகிறான். அவன் வாழ்நாள் முழுவதும் போராளியாகவே வாழ்கிறான். வர்க்க வேறுபாடுகளுக்கும், அடையாளச் சிக்கலுக்குமிடையில் வாழ்நாள் முழுவதும் யாருக்கோ தன்னை நிரூபித்துக் கொண்டே இருந்த முழுமையான போராளி.

மகாபாரதம்! எந்தக் காலத்துக்கும் பொருந்தக் கூடிய மாபெரும் காப்பியம். மிகச் சுருக்கப்பட்ட வடிவம் எனச் சொல்லப்படுகிற ராஜாஜி எழுதிய 'வியாசர் விருந்து' ஏழாம் வகுப்புப் படிக்கும்போது வாசிக்கக் கிடைத்தது. அதற்குமுன்னர் கண்ணாடித்தாத்தா கதை சொல்லக் கேட்டதும், தூர்தர்ஷன் தொலைக்காட்சித் தொடராகப் பார்த்ததும், 'அமர்சித்திரக்கதா' வில் தனித்தனியாக ஒவ்வொரு பாத்திரங்களின் கதைகளை வாசித்ததும், ஏராளமான கிளைக்கதைகளைப் படித்ததுமாகத் தெரிந்திருந்தது. ஏராளமான கதாபாத்திரங்கள். அவை ஒவ்வொன்றுக்கும் விரிவான தனிக்கதைகள், முன்கதைகள். தியாகம், வீரம், நட்பு, துரோகம், நன்றி, காமம், காதல், அறியாமை, குருவிசுவாசம், அரசதர்மம், போரியல்தர்மம், போரியல் வியூகங்கள், சூழ்ச்சி, வஞ்சகம், அரசியல், அத்துமீறல், வர்க்கபேதம், நம்பிக்கைத்துரோகம், பழிவாங்கல் என இன்னும் ஏராளமாக, விரிவாகச் சொல்லப்படுகிறது. முன்பின் நகரும் திரைக்கதைபோன்ற உத்தி, கிளைக்கதைகள் என ஆச்சரியமளிக்கும் மகாபாரதத்தின் கும்பகோணம் பதிப்பை ஒருமுறை வாசித்துவிட வேண்டும்.

நான்காம் வகுப்புப் படிக்கும்போது, எங்கள் தமிழாசிரியர் பாடப்புத்தகத்தைத் தவிர, நிறையக் கதைகள் சொல்வார். அருமையாகப் பாடுவார். இராமாயணம், பெரியபுராணம், மகாபாரதம், இவற்றிலிருந்தெல்லாம் நிறையப் பேசுவார். பாடுவார். எங்கள் எல்லோருக்கும் அவரை மிகவும் பிடித்திருந்தது! மகாபாரதக் கதை சொல்லும்போது ஒரு சிக்கல் வந்தது. ஆசிரியரோடு ஒன்றமுடியவில்லை. ஆசிரியருக்கு பெரும்பாலானோரைப் போலவே அர்ச்சுணனைப் பிடித்திருந்தது. அது இயல்பானதுதான். மகாபாரதத்திலும் அப்படித்தான். அர்ஜூனன் வீரன் என்பதில் ஐயமேதுமில்லை. ஆனால் அவன் மட்டுமே வீரனாக இருக்கவேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட கண்ணன், துரோணர் உள்ளிட்டவர்களால் செய்யப்பட்ட அரசியல்கள் சொல்லப்பட்டிருக்கின்றனவே!

ஆனால், கதை சொல்பவர் கதையில் தனக்குப் பிடித்த, தான் மிக ரசித்த கதாபாத்திரத்தின் சார்பாகவே கதை கூறிச் செல்வதைப் புதிதாகக் கதை கேட்பவனால் மட்டுமே ரசிக்கமுடியும். பெரும்பாலான கதைகளே யாரோ ஒருவர் சார்பாகவே எழுதப்பட்டிருக்கும். அப்படியிருப்பினும் சொல்லப்பட்ட கதையை அப்படியே சொல்வதே கதைசொல்பவரின் நடுநிலை. ஆனால் அதற்கும் மேலாகத் தான் ரசிக்கும் பாத்திரத்தை உயர்த்தி, சிலாகித்துப் பேசுவதை, முக்கியத்துவம் கொடுத்ததை ரசிக்கமுடியவில்லை.

வகுப்பில் ஒரு சிலருக்கு மட்டும் என்னைப்போலவே கர்ணனைப் பிடித்திருந்தது. ஒருவர் தனக்குப் பிடித்த கதாபாத்திரத்தைச் சிலாகித்துப் பேசுவது இயல்பானதுதான் என்கிறபோதிலும், நான்காவது வகுப்பில் படிக்கும் எனக்கு 'இவர் அர்ச்சுணனை மட்டுமே அளவுக்கு மீறி முன்னிலைப் படுத்துகிறார்' எனப் புரியுமளவுக்கு தன்னை வெளிப்படுத்திக் கொண்டதை ஏற்க முடியவில்லை. அது, முதன்முறையாக அவர் பற்றிய எங்கள் எண்ணத்தில் மாற்றம் கொண்டுவந்தது. இறுதியில் வெல்பவனே ஹீரோ, தோற்பவன், இறந்து விடுபவன் வில்லனாகவே இருக்கவேண்டும் என்பது போன்ற நம்பிக்கையின் அடிப்படையில் கர்ணனை மோசமானவனாகவே சித்தரித்தார். தமிழ் சினிமாவைப் போலவே பெரும்பான்மையானோர் எதிர்மறையான குணங்கள் கொண்டவர்களை, பலவீனங்கள் கொண்ட மனிதனை ஹீரோவாக யாரும் ஏற்றுக் கொள்வதில்லை.

ஒரு விஷயத்தை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தும், சொல்லிக் கொடுக்கும் நிலையில் இருப்பவர்கள், மிக முக்கியமாக ஆசிரியர்கள் தங்களின் சொந்த விருப்பு வெறுப்புகளை மற்றவர்கள்மேல் திணித்துவிடாமல், மாணவர்கள் சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் சுதந்திரத்தை அனுமதிப்பது அவசியம். ஆனால் துரதிருஷ்டவசமாக என்னைப்போலவே பலருக்கும் அப்படி வாய்த்ததில்லை. அதனால் சின்னவயதிலேயே நடிக்கத் தொடங்கிவிட்டோம். எங்கள் சொந்தக் கருத்துக்களை மனதில் புதைத்துக் கொண்டு வெளியில் 'ஆமாமா நீங்கள் சொன்னால் சரிதான்!'. இதுபற்றியெல்லாம் ஆசிரியரிடம் பேச முடியாது. பின்னர் ஆசிரியர் இதே கர்ணனைக் காரணமாக வைத்து இன்னோர் சந்தர்ப்பத்தில் 'கர்ண கொடூரமாக' நடந்துகொள்ளும் அபாயமிருந்தது!

ஒருமுறை தொலைக்காட்சியில் 'கர்ணன்' படம் ஒளிபரப்பானபோது உடனேயே அணைத்துச் சென்றுவிட்டேன். சிவாஜியூடாக கர்ணனைக் காண விரும்பாததே காரணம். மற்றபடி சிவாஜி கர்ணனாக நடித்ததுக்கும் கர்ண கொடூரத்துக்கும் எந்த சம்பந்தமிருப்பதாக நான் கூறவில்லை. நாம் ரசித்த எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதனைத் திரையில் எதிர்கொள்வதில்தான் பிரச்சினையே! நாம் மனதில் உருவாக்கி வைத்திருக்கும், அல்லது நாம் முதன்முதலில் ஓவியமாகவோ, திரையிலோ ரசித்த விம்பத்தை பாத்திரமேற்று நடிக்கும் நடிகர் ஈடு செய்ய வேண்டுமே என்ற கவலைதான். மேலும் முதல் மரியாதை, தேவர்மகன் போன்ற ஒரு சில படங்கள் தவிர்த்து, சிவாஜி தனது எல்லாப்படங்களிலும் நடிகர் சிவாஜி கணேசனாகவே எனக்குத் தெரிகிறார்.

வாழ்வில் வெற்றி பெற்றவர்களையே நாம் விரும்புகிறோம், ஆதர்ஷமாகக் கொள்கிறோம். அந்த அடிப்படையில் கர்ணனைப் பலருக்கு பிடிக்காமல் போயிருக்கலாம்.

ஒரு மாவீரனின் முடிவு, ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி என்பது சடுதியில் நிகழும் ஒன்றா? என்றால் இல்லை என்றே தோன்றுகிறது. ஒருவன் வீரியத்தொடு வளர்ந்து வரும் அதே வேகத்திலேயே படிப்படியாக சிறு சிறு ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத நிகழ்வுகளாக அவனது வீழ்ச்சிக்கான காரணிகளும் எந்தக் கவனத்தையும் பெறாமல் வளர்ந்து வருகிறது. ஏதோ ஒரு முக்கியமான தருணத்தில், அல்லது எதிர்ப்பாராத வேளையில் சிறு சறுக்கலில் எல்லாமே ஒரே இடத்தில் குவிந்து விடுகின்றன. அல்லது சறுக்கல் நிகழ்வதாலேயே அது முக்கியமானதாகிவிடுகிறது. கர்ணனுக்கு எதிர்பார்க்கப்பட்ட, வாழ்வின் மிக முக்கியமான போரில் அது நிகழ்ந்துவிடுகிறது. கர்ணனின் முதல் சறுக்கல் எதுவாக இருக்கும்? பரசுராமரிடம் போய் சொல்லி வித்தை கற்றதாக இருக்கக்கூடும்.

'நியாயமே வெல்லும்' என்று போதிக்கப்பட்டிருப்பதால், நம்பப்படுவதால், வெல்பவர்கள் நியாயவாதிகளாகவும், தோற்றவர்கள் அநியாயம் செய்தவர்களாகவும் நிலைநிறுத்தப் படுகிறார்கள். அப்படியே ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள். வெற்றி பெற்றவர்களின் வரலாறுகள் மட்டுமே இங்கே தேடப்படுகின்றன. விரும்பப்படுகின்றன. அவற்றைப் படித்து மகிழ்ந்து, நம்பிக்கையை வளர்த்துக் கொள்கிறோமே தவிர, தோல்வி கொடுக்கும் பாடங்களை கற்றுக் கொள்ளவோ, காரணங்களைத் தெரிந்துகொள்ளவோ விரும்புவதில்லை. காலங்கடந்து விழித்துக் கொள்ளும்போது அதற்கான அவசியமும், அவகாசமும் இல்லாமலே போய்விடுகிறது!

ஒரு போராளியின் கண்களை எதிர்கொள்வது எப்போதும் கடினமானதாகவே இருந்திருக்கிறது. அவை ஒரு பெருங்கனவை எப்போதும் தேக்கி வைத்துக் கொண்டிருக்கலாம். உள்ளே கொண்டிருக்கும் எரியும் இலட்சியத் தீயின் ஏற்படுத்திய வெம்மையைக் கனன்று கொண்டிருக்கலாம். அந்தக் கண்களில் எங்களுக்கான கேள்வி ஏதேனும் அடங்கியிருக்கலாம். அதன் கூர்மையை தாங்கிக் கொள்ள முடியாமல் தவிர்த்துக் கொள்வதற்கான நம் முயற்சியா அது? சமயங்களில் அவர்களும் நம் பார்வையைத் தழைத்துக் கொள்வதையோ இலக்கின்றி தொலைதூரத்தில் எதையோ தேடுவதைப் போலவோ ஒரு பார்வையை நீங்களும் சந்தித்திருக்கலாம். நம் கண்களில் தெரியும் கேள்விகளை இருவருமே தவிர்க்க நினைக்கிறோமா? தோற்றுப் போன ஒரு போராளியின் கண்களைச் சந்திக்க நாம் நிர்த்தாட்சண்யமாக மறுத்துவிடுவதற்கு என்ன காரணமிருந்துவிடப் போகிறது? கலைந்துபோன கனவுகளின் எச்சங்கள் தெரிந்துவிடக் கூடுமென்றா? தீர்க்க முடியாத நிரந்தர சோகம் நிறைந்திருப்பதை, நிராகரிக்கப்பட்டவர்களின் வலியை, அது எங்கள் மனச்சாட்சியை எந்தக் கேள்வியும் கேட்டுவிடக் கூடாதென்பதில் காட்டும் கவனமா? குற்றவுணர்ச்சியிலிருந்து தப்பித்துக் கொள்ளும் மனோபாவமாகவும் இருக்கலாம். ஒருவித அக்கறையாகவுமிருக்கலாம்.

போராளிகளை முன்னாள் போராளிகள், இந்நாள் போராளிகள் என அழைப்பதுதான் எவ்வளவு அபத்தமானது! அதற்கான அவசியத்தை நம் சமூகம் எப்போதும் வழங்குவதாக இல்லை. போராளிகள் என்றும் போராளிகளே! வாழ்நாள் முழுவதும் போராடுவதற்காக விதிக்கப்பட்ட வர்களாகவே வைத்திருக்கிறது. அதுவும் தோற்றுப்போன, தோற்கடிக்கப்பட்டதாக நம்பப்படும் போராளிகளின் நிலை மிக மோசமானது.

தோற்கடிக்கப்பட்ட இனத்தின் போராளியான ஒருவனின் போருக்குப் பின்னரான மனநிலை என்னமாதிரியானது? தான் நேசித்த, தன் சொந்தமண்ணில் வாழ நேரிடுவது மிகவும் கொடுமையானது. யாருக்காகப் போராடினானோ அவர்களாலேயே கண்டுகொள்ளப்படாமல், எச்சரிக்கையுடன் கவனமாகத் தவிர்க்கப்பட்டு, செயற்கையான புன்னகைய்டன் கடந்து செல்பவர்களை எதிர்கொண்டு வாழ்வதென்பதுதான் பெரும் போராட்டம். உண்மையில் அவர்களின் போராட்டம் போருக்குப் பின்னர்தான் ஆரம்பமாகிறதோ?

யாரென்றே தெரியாத எங்கிருந்து என்றே புரியாத பல நூறு கண்கள் சதா காலமும் உற்று நோக்கிக் கொண்டிருப்பது போன்ற பிரமையை உணரக்கூடும். எப்போதும் சந்தேகத்துடன் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கக்கூடும். முகறியாத, எதுபற்றியும் தெரிந்துகொள்ளாத, புரிந்து கொள்ள விரும்பாத யாரோ ஒருவர் முகத்துக்கு நேரே கைநீட்டி குற்றம் சுமத்திவிடலாம். தோற்றுப்போன ஒரு போராளி மீது யார் வேண்டுமானாலும் கல்லெறியலாம் என்கிற ஜனநாயகச் சூழல் மிகக் கொடுமையானது. அதுவும் யாருக்காக போராடினானோ அதே தன் சார்ந்த சமூகத்தின் அவதூறு அவன் வாழ்ந்த அல்லது இழந்துவிட்ட வாழ்க்கையை முழுவதுமாக அர்த்தமற்றதாக்கி விடுகின்றன.

ஒரு தோற்றுப்போன போராளி எண்ண பேச வேண்டும் என்பதையும் நாங்களே தீர்மானிக்க விரும்புகிறோம். எவற்றைப் பேசக் கூடாது என்பதை எதிர்த்தரப்பு கவனமாயிருக்கிறது என்பது இயல்பானதுதான் அல்லது ஏற்கனவே எதிர்ப்பார்க்கப்பட்டதுதான். உண்மை பேசுவது சமயத்தில் யாருக்குமே உவப்பானதாக இருப்பதில்லை. உண்மை சமயத்தில் மிகுந்த பதற்றம் கொள்ள வைக்கிறது. ஏனெனில், உண்மை யார் சார்ந்தும் இருப்பதில்லை. உண்மை எப்போதும் உண்மையாக மட்டுமே இருக்கிறது. உண்மையை நீ ஏன் சொல்கிறாய்? எதற்கு உண்மையைப் பேச வேண்டும்? இப்பொழுது ஏன் உண்மை பேச வேண்டும்? எப்போதுமே உண்மையைப் பேசக் கூடாது என நாம் உண்மையை எதிர்கொள்ளும் முறையே அலாதியானது. வேடிக்கையானது!

எமது விருப்பங்களையே, நம்பிக்கைகளையே அவர்களும் பேச வேண்டும் என எதிர்பார்க்கிறோம். நம் கற்பிதங்களை அவர்கள் சிதைத்துவிடக் கூடாது உண்மை நாம் எதிர்பார்த்ததற்கு சற்று மாறுபாடானதாக இருந்தாலும் அவர்கள் மீது அவதூறுகளை அள்ளிவீச தயாராகிவிடுகிறோம். உடனடியாகத் துரோகி என்று முத்திரை குத்திவிடுகிறோம். அவன் யார்? அவன் இழந்தவை எல்லாம் என்னென்ன? யாருக்காக இழந்தான்? அவனது தற்போதைய நிலை என்ன? அவனின் எதிர்காலம்? அவனுக்காக நாம் என்ன செய்யலாம்? எந்த வகையில் உதவ முடியும்? இதுபற்றி எல்லாம் நமக்குக் கவலை இல்லை. அவன் ஏதாவது பேசுகிறானா? அதில் எமக்கு ஒவ்வாத விடயங்கள் இருக்கின்றனவா என்பது மட்டும் கவனித்துக் கொண்டிருக்கிறோம். நான் யார் எனக்கு என்ன தகுதி இருக்கிறது? நான் என்ன செய்துகொண்டிருந்தேன் என்பது பற்றியெல்லாம் வசதியாக மறந்துவிட்டு இருப்பதிலேயே மிக உயர்வான போராட்ட முறையான துரோகிப் பட்டம் வழங்கிக் கொள்வோம். ஒரு கணணியும் இணைய இணைப்பும் மட்டுமே போதும் யாரை வேண்டுமானாலும் துரோகியாக்கிவிட முடியும் என்கிற ஜனநாயகம்தான் எவ்வளவு விநோதமானது?

வாழ்நாள் முழுவதும் தம்மை யாருக்கோ நிரூபித்துக் கொண்டிருப்பது கர்ணனுக்கு மட்டும் விதிக்கப்பட்டதல்ல. தோற்றுப்போன வாழ்நாள் போராளிகளுக்கும் கூடத்தான். வாழ்நாள் போராளிகள் ஒவ்வொருவரும் ஒருவகையில் கர்ணன்கள்தான். கர்ணன்கள் பாவம்!

http://4tamilmedia.com/social-media/google-plus/27334-2014-11-20-09-21-35

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி.

சிறு வயதில் மகாபாரதம் படித்தபோது பாண்டவர்கள் பக்கம்தான் (எப்போதும் நல்லவர்கள் பக்கம்தானே!). ஆனால் கர்ணன் படம் பார்த்தபோது கர்ணனின் வேடத்தில் சிவாஜியின் (மிகை) நடிப்பினால் கவரப்பட்டு கர்ணன்மேல் ஒரு பிடிப்பு வந்தது. தொடர்ந்து கர்ணன், ஏகலைவன் போன்றவர்களைப் பற்றித் தேடித் தேடிப் படித்தேன்.

கட்டுரையில் சொல்லப்பட்டபோதுபோல் போராளிகளாக இருப்பவர்கள் மேல் எப்போதும் விருப்பம் வருவதில் ஆச்சரியமில்லை.

கர்ணனைப் பிடித்ததால் அவர் போன்றே இறுதிவரை தலைவருடன் நின்ற பொட்டு அம்மானையும் மிகவும் பிடிக்கும். சரி, பிழைகளுக்கு அப்பால் விசுவாசம் என்பது மனிதனுக்கு இருக்கவேண்டும் என்பதை நிரூபித்தவர் அவர்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு எப்பவும் பிடித்தது கர்ணன் தான்.அர்ச்சுனன் பச்சைக் கள்ளன்:lol: என்பது அன்றில் இருந்து மனதில் பதிந்து விட்டது...கிருபன் விசுவாசம் ஓவராய் போகக் கூடாது அதுவே மேலும் அழிவுக்கு வழி வகுக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

நானும், கிருபனும், ரதியும் ஒரே பாதையில் பயணிக்கின்றோம் போல உள்ளது!

 

எனக்கும் ஏகலைவனைப் பிடிக்கும்... கர்ணனையும் பிடிக்கும்...!

 

அதே போலப் பரதனையும் பிடிக்கும்! இராவணனையும் பிடிக்கும்!

 

எல்லோருமே நிஜ உலகில் இல்லாத பாத்திரங்களைக் 'காவியங்களில்' தேடுகின்றோமோ... என்னவோ? :D

 

ஆனால் கம்பனையும் பிடிக்கிறது! :o

 

அது தான் ஏனென்று தெரியவில்லை!

 

நன்றிகள் அபராஜிதன்!

 

  • கருத்துக்கள உறவுகள்

அம்புலிமாமா ராணி காமிக்ஸ் பருவங்களைக்கடந்து பின் பாலகுமாரனை தாண்டும் வரைக்கும் எனக்கும் கீறோ கண்ணணும் அற்ஜுனனும்தான்.. ஏனென்றால் நாம் படித்த புத்தகங்களின் திணிப்பு அப்படி.. தேடலும் கற்றலும் விரிந்தபோது ஒரு திரையைப்போல அந்த மாய உலகம் மறைந்துபோக நிய உலகம் பிரித்தறியவைக்கும் பகுத்தறிவின் துணையுடன் விரிந்தபோது இப்படித்தான் பல அங்கு தலைகீழாகியது எனக்கும்.. நன்றி அபராஜிதன் இணைப்பிற்கு..

என்னுடன் கூட வருவது என் நிழல் தான் என்று உறுதிப்படித்திய பின்னே தான் தூக்க போவான் என்று சொல்வாராம் தலைவர் பொட்டம்மான் பற்றி ...

 

தோழமை என்பது பெரு மதிப்புடையது .

  • தொடங்கியவர்

கருத்துகள் வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.