Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முத்தப்பா.

Featured Replies

 

முத்தப்பா,  வயது எழுபது . ஊரின் கால அடையாளம்.

 

பெரு மழை இரவுகளிலும் நூலகத்தின் வாசலில் குந்தி இருப்பார். அல்லது கோயிலடி மடத்தில் படுத்திருப்பார். கம்பராமாயணம் முதல் சகுந்தலா காவியம் வரையும், கிளிண்டன் முதல் ஜாக்கிசான் வரையும் அவரிடம் தகவல் இருந்தது. பட்டிமன்றங்களிலும் சரி ஐயர் ஓதும் மந்திரங்களிலும் சரி பிழை பிடித்து ஒரு குரல் ஒலிக்கிறது என்றால் அது முத்தப்பாவினதாகவே இருக்கும்.

 

 

இப்படிதான் ஒரு திருமண நிகழ்வில் ஐயர் வீடு குடிபுகும் போது சொல்ல வேண்டிய  மந்திரத்தை சொல்லிவிட்டார் என்று சண்டையைக் தொடக்க..ஐயர் இங்கேயும்  இப்ப நடப்பது புது வீடு குடிபுகுதல் மாதிரித்தான் அதனால் இந்த மந்திரமும் சொல்லலாம் என்று சமாளிச்சு போனதை  அம்மா நெடுக சொல்லுவார். எந்தளவு படிச்ச மனுசன் எப்படி வாழ்ந்திருக்க வேண்டியவர் பார் என்னமாதிரி இருக்கிறார் என்று.. அவரின் அந்த இருப்பு ஊடாக  வாழ்க்கையை கற்றுக்கொடுக்க நெடுக முனைவார். அம்மா.

 

 

சங்கக் கடையில் இருந்த முத்தப்பாவை ஆமி எங்கை நிக்கிறான் என்று கேட்டதும், முத்தப்பா துள்ளிய துள்ளலும் திட்டிய திட்டும் மனதின் ஓரத்தில் அப்படியே உறைந்திருந்தது சந்தர்ப்பம் வரும் போது பார்க்கலாம் என மனதுக்குள் கறுவியபடி, ஆமி நிக்கிற இடத்துக்குப் போனால் அவங்கள் பிடிச்சுப் போடுவாங்கள் என்ற பயத்தில கேட்டதுக்கே இந்த மனுசன் இந்தக் கொதிப்பு கொதிக்குதே..என திட்டியபடி விலகவேண்டியதாயிற்று.

 

முத்தப்பாவுக்கு என்னைப் பிடிக்காது. காரணம் எனக்கு தெரியாது அல்லது முத்தப்பாவுக்கும் தெரியாமல் இருந்ததோ என்னவோ  பிடிக்காது என்று மட்டும் எல்லோருக்கும் தெரியும். முந்தியெல்லாம் நேசரிக்கு நடந்துபோகேக்கை ரோடுகளில்  கண்டால் ஏதிக்கொண்டுதான் போவார். நானும் வளர அவரும் முதுமையடைய..அவருடையோ முதுமையோ என்னுடைய இளமைத் துடுப்போ தெரியாது பிடிக்காமல் போனதுக்கான காரணம்

 

சரிபிழைகளுக்கு அப்பால் அவரது வெறுப்பு இருந்தது.

 

நித்திரைவராமல் கட்டிலில் படுத்தவாறே  கேஸுக்கு என்ன செய்வது என்றே யோசித்துக் கொண்டிருந்தேன். ஏற்கனவே இல்லாத அண்ணாவை உருவாக்கி ஆமி பிடிச்சு ஆளைக்காணவில்லை என்று கொடுத்தாச்சு. இப்ப பாழாய்போன கேஸ்க்காரன் "தம்பி ரீஅப்பிளுக்கு புதிதாக பிரச்சனையை போடணும் ஏதாவது யோசித்துக் கொண்டுவாரும்"என்று அறுத்துவிட்டு அடுத்தவனின் காசுக்கு கணக்குப் பண்ணத் தொடங்கி விட்டான்.

 

கேஸ்காரங்கள். இது பரிசுக்கு புதிய சொல் என்று யாரும் சொன்னால் சிரிப்பார்கள். மாமா வேலை எப்படியானதோ அதே மாதிரி இதுவும் ஒரு உழைப்புத் தான் அதிலயும் சமூக  சேவைதானே இருக்கு. அட  மாமா வேலையில் என்ன சமூக சேவை இருக்கிறது என்று கேட்கிறீர்களா?  எத்தனை வன்முறைகள்  மாமாக்களின் உதவிகளால்  நிகழாமல் போயிருக்கிறது.

 

பரிசில் யார் வந்து இறங்கினாலும் கேஸ்காரனை சந்திக்காமல் ஒன்றுமே செய்ய முடியாது. ஊரில்  முடி வெட்டுறதுக்கும் உடுப்புத்தோய்க்கிறதுக்கும் என்று பரம்பரை பாரம்பரையாக  ஆக்களை அடிமை மாதிரி வச்சிருந்த குணமாக்கும், இங்கேயும் பரம்பரைக்கு என்றே கேஸ் எழுதுறவர்களை வச்சு இருக்கிறார்கள். தமையனுக்கு எழுதி, தம்பிக்கு எழுதி,அக்காவின் பிள்ளைக்கு எழுதி தங்கச்சியிந்த புருசனுக்கு எழுதி பக்கத்து வீட்டுகாரருக்கு  தெரியாத விண்ணானமெல்லாம் கேஸ்கார்களுக்கு தெரிந்திருக்கும். போட்டோகொப்பி அடிக்க அய்ந்து, ரைப்பன்ன பத்து, ரான்சிலேசனுக்கு ஐம்பது என வேண்டி வேண்டியே மூன்று நான்கு  வீடுகள்  வேண்டிய கேஸ்க்காரர்களும் இருக்கிறார்கள்.

 

"என்னவாம் ஆளைக் கண்டியோ"

தேத்தண்ணியோடு வந்த குமார் கேட்டான்.

"ம்ம்ம் பார்த்தனான் அவன் பாவி புதுசா ஒரு பிரச்சனையை எழுதிக்கொண்டு வரட்டாம்"  சலிப்புடன் சொல்லி விட்டு தேத்தண்ணியை குடிக்கத் தொடங்கினேன்.

 

உண்மையில்  தேநீர்  என்ற ஒன்றை கண்டுபிடித்தவன் யாராக இருந்தாலும் அவனுக்கு ஒரு கோயில் கட்டிக் கும்பிட வேண்டும். பனி  தூவத்தொடங்கிய  மெல்லிய குளிரில் ஆவி பறக்கும் தேநீர் என்பது ஒரு கொடைதான். உடலின் எல்லா இடங்களும்  குளிர தொண்டைக்குள்ள மெல்லிய சூடு இறங்கும் கணமும், தேநீர் கிளாசை உள்ளங்கையால்  பொத்திப் பிடிக்க கையில் மெல்லிய சூடு பரவும்  கணமும் அதெல்லாம் சொல்லில்  புரியவைக்க முடியாது. 

 

கட்டிலில் இருந்து ரசித்து ருசித்து தேநீரை அனுபவித்து குடித்துக் கொண்டிருப்பதை, பார்த்த  குமாருக்கு பத்திப் பிடிச்சிருக்க வேண்டும்.

 

டேய் மாடு கேஸுக்கு என்ன செய்யப்போகிறாய் அதை யோசிக்கிறதை விட்டுட்டு தேத்தண்ணியை உறுஞ்சுறாய்

 

இப்ப என்ன தேத்தண்ணி குடிக்கட்டோ  வேண்டாமோ என்ன இழவுக்கு ஊத்திக் கொண்டுவந்தனி..

 

குடிச்சுட்டு விழுந்து படு நாளைக்கு போய் லாச்செப்பலை அளந்துபோட்டு வா வேலையும் இல்லை விசாவும் இல்லை கல்யாணமும் இல்லை  புறுபுறுத்தபடி குமார் கட்டிலில் ஏறிப்  போர்வைக்குள் முடங்கினான்.

குமாரும் காதலித்தவளை ஊரில்  விட்டுவிட்டு இங்கிருந்து ஒவ்வொருநாளும் ரெலிபோனில் குடும்பம் நடத்தும் சராசரியான வெளிநாட்டு அகதிதான்.

 

விடிய ஊருக்கு அடிக்கணும். எதுக்கும் அங்கை ஒருக்கா கதைச்சால் ஏதும் முடிவு கிடைக்கலாம். வா எண்டுமட்டும்  சொல்லிச்சுதுகள் எண்டா பேசாமல் ஓடிப்போய் ஆடுமாடு வேண்டியாவது வளக்கலாம். இஞ்சை இருந்து மண்டைபிழைச்சு போறதைவிட நின்மதியாக அங்கை ஆடுமாடு வளத்துப் பிழைக்கலாம்..

 

காணுறவன் எல்லாம் வேலைக்கோ வேலைக்கோ என்டுறதும் தம்பி வேலை ஏதும் இருக்கோ எண்டுறதும்  லாசெப்பலில் நின்றால் உதுகள் எங்கை உருப்படப்போகுதுகள் காசை கரியாக்கி இங்கை வந்து நெடுக உதில நிக்குதுகள் என்பவர்களின் தொல்லையும் இல்லாமல் நின்மதியாக இருக்கலாம் அல்லது சாகலாம்.

 

சா என்ன வாழக்கையடா இது . அங்கையிருக்கையிக்கை எங்காவது ஏதாவது ஒரு வெளிநாட்டுக்கு  போனால்காணும் என்று அலைந்து நொந்து இங்கை வந்தால் இங்கை இருக்கிற பிரச்சனைகள் அங்கத்தையை விட மோசமாக கிடக்கு. வேலை பிரச்சனை, மொழி பிரச்சனை, இருக்கிற இடம் பிரச்சனை, சாப்பாடு பிரச்சனை, உடம்பில பிரச்சனை, மனசுல பிரச்சனை, ஊரில ஒரேஒரு பிரச்சனைதான் உயிர்ப்பிரச்சனை. இங்கை உயிர்ப்பிரச்சனை  மட்டும் இல்ல ஆனா மற்ற எல்லாப்பிரச்சனையும் தலைக்கு மேல் இருக்கு. மானத்தில இருந்து மயிர்வரை பிரச்சனைதான்.

 

குமரனின்  போன் அடிக்க, நீண்டுகொண்டிருந்த நினைவுகள் அறுந்து அப்படியே நின்றது.

என்ன மனுசி துவங்கியிட்டா போல என்னை நக்கல் அடிச்ச கடுப்பை இப்படியாவது தீர்த்துவிடனும் என்று கேட்டேன்.

 

"ஓம் சொல்லுடா" இது குமார்.. மறுமுனையில் எதோ சொல்லி இருக்கணும். "இரு வாறன்" என்றுவிட்டு

 

"டேய் தமிழ்க் கடையில ஒரு வேலை இருக்காம் போறியா"...

 

"ம்ம்ம்ம் எங்கை என்று கேள் எந்தளவு சம்பளம் காசு ஒழுங்கா தருவானோ எண்டும் கேள்" என்றேன்.

 

கதைத்துக்கொண்டிருந்த போனை வைத்தவன் "லாசெப்பலில் தானாம் நாளைக்கு போய்க் கேள்" சொன்னவன் கடையையும் சொன்னான்.

 

லாசெப்பலிலோ ம்ம்ம்ம் எங்கட தெரிஞ்ச சனமெல்லாம் வாற இடம். ஊரில வேற அப்படி இப்படி இருந்திட்டு..

"உந்த லூசுக் கதையைவிட்டுட்டு நாளைக்குப் போய் கேள் என்ன" கதையை முடித்தான் குமார்.

 

இனி இவன் கதையான் நாளைக்குதான் கேட்பான்.

 

"உனக்கென்ன நீ விசா இல்லாட்டிலும் வெள்ளையிட்ட வேலைசெயகிறாய்". என மெல்லியதாக இழுத்தேன்.

 

வெள்ளை சும்மாதானே வச்சிருக்கிறான். அவன்ற நாய்க்கு சாப்பாடு வைக்கிறதில இருந்து அவன் வச்சிருக்கிறவள் வரை... பேசாமல் படு. நீயும் ஒருநாளைக்கு வெள்ளையிட்ட  வேலைக்கு போவாய்தானே அப்ப தெரியும்.

 

இனி இவனோடையும் கதைக்கமுடியாது.

 

நாளை விமலுடன் கதைக்க வேண்டும். அவன் மனம் வைத்தால்   நிச்சயமாக செய்துமுடிப்பான். ஏற்கனவே கொழும்பு சென்ற வாகனத்தை,  அநுராதபுரத்தில் வைத்து   லைசென்ஸ் இல்லாமல் பிடித்த பொலிசுக்கு  வல்வெட்டித்துறை பொலிஸ் மூலம் சொல்லி கதைத்து  விடுவித்திருக்கிறான். நல்ல  செல்வாக்கோடு இருக்கிறான் என்றும்  சொன்னாங்கள். ஆமி பொலிசில் நல்ல செல்வாக்கோடு இருக்கிறானாம். பொலிஸ் நிலையத்தின் குசினிவரை போய் வாறவனாம். வழக்கு அடிதடி கொள்ளை களவு எல்லாம் விமலிடம் போனால் சிக்கலில்லாமல் முடிச்சுவேற கொடுக்கிறானாம்.

 

 விமல் என்னைவிட ஒரு அய்ந்து வயது அதிகமான இளைஞன். ஊரில  இழவு என்றாலும் இல்லை  மகிழ்வு என்றாலும் இவன் தான் முன் நின்று செய்வான். குடிப்பான். சண்டையை கிளப்புவான். முழுக்கை சேட்டும் சாரமும் தான் நெடுக அணிந்திருப்பான். அந்தநாட்களில்  இரண்டு நாய் வளத்து முயல் பிடிக்க திரிவான். அவனோடு நானும் இன்னும் கொஞ்சப் பொடியளும் முயல் இறைச்சிக்காக அலைவதுண்டு.

 

மெல்லிய மழை பெய்துமுடிய, சிணுங்கள் தண்ணியில் சின்ன செடிகள்  நனைஞ்சு   கிடக்கும் அப்பேக்கைதான் முயல் வேட்டைக்கு புறப்படுவது. வேட்டை என்றால்  ஏதோ பெரிதாக  இடியன் கிடியன் எல்லாம் எடுத்துக் கொண்டு இல்ல. விமலும் அவன் வளர்த்த  இரண்டு நாய்களும்  கூடவே பின்னால்  நாங்களும்,  கல்லுகளும்  பொல்லுகளும்  கொண்டு தோட்டம் துறவு பத்தை பறுகுகளால்  முயல தேடி திரிவதுதான். நாய் முயலை துரத்திப் பிடிச்சுதெண்டா சரி ,மற்றபடி ஒருநாளும் கல் எறிபட்டோ அல்லது  பொல்லடி பட்டோ முயல் பிடிபட்டதில்லை. சிலநேரம் எங்கயாச்சும் உடும்பும் பிடிபடும். விமலை காள்ளு குடிக்க சைக்கிளில் ஏற்றிக் கொண்டுபோய் திருப்ப கூட்டிக்கொண்டு வந்து இரவிரவாக இருந்து கதைத்து அப்படியே படுத்து எழும்பி திரிந்த  எனக்கு செய்யாமல் யாருக்கு செய்யப் போகிறான்.

 

மறுநாள் 

நேரம் பத்து மணி. 

இடம் லாசெப்பல்.

 

குமார் சொன்ன கடைக்கு முன்னால் நின்று சுற்றுமுற்றும் பார்த்தேன். பெரியகடைதான். சரியான சனம் வரும். வேலையும் கூடவாகத்தான் இருக்கும். எத்தனைபேர் வேலைசெய்கிறாங்களோ தெரியவில்லை. உள்ளட்டு கேட்பமோ...என்ன செய்ய..

 

போனால் போகிறது  கேட்போம் என்றுவிட்டு கடைக்குள் நுழைந்தேன்.

 

 "அண்ணை' "ஓம் தம்பி சொல்லுங்கோ டேய் முருகன் தம்பியை கவனி" என்று விட்டு தன் அலுவலைப் பார்க்க திரும்பினார்.

"இல்லை அண்ணை உங்களிட்டைத்தான் வந்தனான்"

"என்னிட்டையோ சரி சரி சொல்லும்"

"இல்ல அண்ண இஞ்சை வேலை இருக்கு என்று சொன்னனீங்களாம்."

 

"ஒ அத கொஞ்சநேரம் உதில நில்லுங்கோ வாறன் கொஞ்சம் வேலையை கிடக்கு முடிச்சிட்டு"...

 

இவ்வளவு சம்பவமும் நடந்து ஒரு இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. நானும் இதோட எத்தனையாவது தரம் எட்டிப்பார்த்தேன் என்றுகூட மறந்து போனேன்.

 

சரி உன்தாள் இப்போதைக்கு வராது. இவங்களிட்ட கிடந்தது மாயுறதைவிட பிச்சை எடுக்கலாம் என நினைத்தபடி  திரும்ப எத்தனிக்கையில்,

 

அட தம்பி நிக்கிறியே.. ஒருக்கா கூப்பிட்டிருக்கலாம் தானே ..

சரியடா அப்பு வேலை இருக்கு உனக்கு பேப்பர் என்னமாதிரி..

 

இல்லையண்ணை எல்லாம் ரிஜைகட் பண்ணியிட்டான்கள்.

 

ஓ கொஞ்சம் சிக்கல் தான் சரி உன்னையும் பாக்க என்ர தம்பி மாதிரித்தான் கிடக்கு..  ஊரில எந்த இடம் 

வல்வெட்டித்துறை அண்ணை.

 

எட பெரிய இடம் தான் உனக்கு வேலைதராமல் வேற ஆருக்கு கொடுப்பது.

சரி தம்பி தொழில் துறை  என்று வந்தா நான் கொஞ்சம் கெடுபிடிதான் சரியோ

காலமை பத்தில இருந்து இரவு பதினொண்டு மட்டும் வேலை. சம்பளம் இருபதாம் திகதி தான் தருவன். முதல்ல கொஞ்சநாளைக்கு ஐந்நூறு தல்லாம் பிறகு வேலையைப்பார்த்து செய்வம். சரி அப்ப நாளைக்கு வாரும்.

 

கிடந்ததால எறிஞ்சா என்ன எண்டமாதிரி பத்திப்பிடிச்சது உள்ளுக்குள்ள.

ஏழுமணித்தியாலம் வேலை, அதில அரைமணித்தியாலம் லீவு, அரசாங்க நிர்ணயசம்பளம் ஆயிரத்தி முன்னூறு சொச்சம். ம்ம்ம் அதுவும் தொழில்புரட்சி நடந்த நாட்டில எப்படி உழைக்கிறாங்கள். இவங்கள் இப்படி உழைக்க இவங்களிந்த பிள்ளையள் குடிச்சிட்டு இவங்களை மதிக்காமல் திரியவும், இவங்கள் கடையை கட்டிப்பிடிச்சுக்கொண்டு இருக்க இவங்கட... எதுக்கு இவங்கட கதையை. இவங்களே பிழைக்க என்றுதானே வந்தவங்கள் இவன்களிடம் நாங்கள் பிழைப்பது என்றால் இப்படிதானே இருக்கும்.

ஓடிய நினைவுகளை இடையில் வெட்டி,

 

"ஓம் அண்ணை விடிய வாறன்'.

வாய் தன்பாட்டில சொன்னாலும் மனம் போவதில்லை என்ற முடிவை எடுத்துவிட்டது. விசா இல்லாத காரணத்தால தானே அடிமாட்டு சம்பளத்துக்கு கதைக்கிறார்கள் ,எப்படியும் விசாவை எடுக்கணும் ரீஅப்பில கவனமாக எழுதி கேஸ்காரனின் காலில விழுந்தாச்சும் இந்தமுறை வெல்ல வேண்டும்.

 

மறுநாள் இணையங்களிலும் தினசரிகளிலும், கனகசபை முத்தப்பா வயது அறுபத்தொன்பது இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டார் என்று தலைப்பு செய்தியாக வந்திருந்தது.

 

திருப்பத்திருப்ப செய்தியை வாசிக்க மனம் கொஞ்சம் கொஞ்சமாக பதற்றமடையத் தொடங்கியது. கேவலம் கேஸுகாக இப்படி நடந்துகொண்டேனே..அவதியுடன் விமலுக்கு அழைப்பை எடுத்தேன்.

 

சிரிப்புடன் மறுமுனையில் விமல், மச்சான் ஆளைத்தூக்கியாச்சு இவங்கள் ஒரு ஒன்றரை கேட்கிறான்கள். அனுப்புவாயா என்று கேட்டான்.

"மச்சான் காசைப்பற்றி பிரச்சனை இல்லை இன்னும் ஒன்று கூடவே அனுப்புகிறேன் முத்தப்பாவை  ஒன்றும் செய்யாமல் விடச்சொல்லுடா." முடித்தபோது என்னையறியாமல் எனக்குள் இருந்து ஒரு பெருமூச்சு எழுந்தது.

 

"இவர் என்ர பெரியப்பா என்னை தேடி வீட்ட போகேக்கை தான் பிடிச்சவங்களாம். என்னை எங்கே இருக்கிறது என்ற விபரங்களுடன் வரச்சொல்லி இருக்கிறாங்களாம் மிச்சத்தை பாத்து எழுதுங்கோ' என்று சொல்லும் போது தள தளத்த குரலால் உந்தப்பட்ட கேஸ்க்காரன் நிமிர்ந்து பார்த்தான். நான் குனிந்துகொண்டேன் .அச்சுப்பிரதி எடுத்த தாளினை கொடுத்துவிட்டு  வேறு தெரிவுகளின்றி வேலைக்கு செல்ல ஆயத்தமாகினேன்.

 

கடன்பட்டு அனுப்பிய இரண்டு லட்ச ரூபாவுக்கு பொலீசுடனும் போலிகளுடனும்  விமல் குடித்து சிரிக்கும் காட்சி மனதின் ஓரத்தில் எழுந்தது.

 

ஆக்காட்டி இதழில் வெளியான சிறுகதை.

 
 

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கேஸ் நிச்சயம் விசா கிடைக்கும் ....:D வாழ்த்துக்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்

கதையோட கதையாக

எமது அவலங்களைச்சொல்லும் உங்களது பணி  பிடிக்கும்

 

இதிலும்

அகதி  அவலங்கள்

அதை பாவிக்கும் எம்மவர்கள்

புலம்பெயர் தேசத்தவரின் பொறுப்பற்றகொடுப்பனவுகளால் உலையும் தாயக இளைஞர்கள்....

 

நன்றி  தம்பி

தொடருங்கள்..

 

எனக்கும் இந்த கதை (கேஸ்) எழுதுவோருடன் அனுபவங்களுடண்டு

நேரமிருக்கும் போது எழுதுகின்றேன்..

 

(ஒரு சொல் தப்பான அபிப்பிராயம் தருமென்பதால் திருத்தப்பட்டுள்ளது)

Edited by விசுகு

இப்படி ஒன்றும்  தெரியாமல்  வந்து  அவர்கள் கேஸ்  எழுதி விசா  கிடைத்த  பின்  அவர்களை நக்கல் பண்ணி  கதை  எழுதுவது ஏற்புடையது  அல்ல அவர்கள்  தாங்கள்  செய்யும்  வேலைக்குத்தான்  காசு  வாங்கினம் ,பாரிஸில்  எவ்வளவு  பேர்  சும்மா காசை  வாங்கி  கொண்டு  சுத்தி  விடினம் இதில  கேஸ்காரர்  பருவாயில்லை ..

 

தாசனை  மென்மையா  கண்டிக்கிறேன்  :D  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கதையை நகர்த்திய விதம் அருமையாக இருந்தது.
90 களில் எனது சகோதரன் லா சப்பலில் வாழ்ந்தவர். 

பலருக்கும் கேஸ் எழுதியவர்.
ஆனால் ஒரு காசும் வாங்குவதில்லை.

 

நல்லவர்களுக்கு ஆயுள் குறைவு.
கெட்டவர்கள் கொடிகட்டிப்பறப்பார்கள்.

 

அது சரி முத்தப்பா எப்படி இப்போது சுகமாக இருக்கின்றாரா? :D
 

கதையமைப்பு மெருகேறிக்கொண்டே வருகிறது அண்ணா... நுணுக்கமான சின்ன சின்ன விசயங்களை சேர்த்துள்ளது நன்றாக உள்ளது...

 ஊரில் உயிர் மட்டும் தான் பிரச்னை
இங்கு உயிரை தவிர மானத்திலிருந்து மயிர் வரை பிரச்னை... அருமை :)

  • தொடங்கியவர்

நல்ல கேஸ் நிச்சயம் விசா கிடைக்கும் .... :D வாழ்த்துக்கள்.....

 

கனபேருக்கு இப்படித்தான் கேஸ் போகிறது புத்தன். 

அன்புகள் புத்தன். 

கதையோட கதையாக

எமது அவலங்களைச்சொல்லும் உங்களது பணி  பிடிக்கும்

 

இதிலும்

அகதி  அவலங்கள்

அதை பாவிக்கும் எம்மவர்கள்

புலம்பெயர் தேசத்தவரின் பொறுப்பற்றகொடுப்பனவுகளால் உலையும் தாயக இளைஞர்கள்....

 

நன்றி  தம்பி

தொடருங்கள்..

 

எனக்கும் இந்த கதை (கேஸ்) எழுதுவோருடன் அனுபவங்களுடண்டு

நேரமிருக்கும் போது எழுதுகின்றேன்..

 

(ஒரு சொல் தப்பான அபிப்பிராயம் தருமென்பதால் திருத்தப்பட்டுள்ளது)

மிக்க அன்பு விசுகு  அண்ணை. உங்கள் வாழ்த்தும் அன்பும்  என் இருத்தலை இன்னும் வளமாக்கும் 

இப்படி ஒன்றும்  தெரியாமல்  வந்து  அவர்கள் கேஸ்  எழுதி விசா  கிடைத்த  பின்  அவர்களை நக்கல் பண்ணி  கதை  எழுதுவது ஏற்புடையது  அல்ல அவர்கள்  தாங்கள்  செய்யும்  வேலைக்குத்தான்  காசு  வாங்கினம் ,பாரிஸில்  எவ்வளவு  பேர்  சும்மா காசை  வாங்கி  கொண்டு  சுத்தி  விடினம் இதில  கேஸ்காரர்  பருவாயில்லை ..

 

தாசனை  மென்மையா  கண்டிக்கிறேன்  :D  :icon_idea:

 

அவர்கள்  தாங்கள்  செய்யும்  வேலைக்குத்தான்  காசு  வாங்கினம் ///////      ஆஹா ஆஹா 

 

வரவுக்கு நன்றி அஞ்சரன் .

கதையை நகர்த்திய விதம் அருமையாக இருந்தது.

90 களில் எனது சகோதரன் லா சப்பலில் வாழ்ந்தவர். 

பலருக்கும் கேஸ் எழுதியவர்.

ஆனால் ஒரு காசும் வாங்குவதில்லை.

 

நல்லவர்களுக்கு ஆயுள் குறைவு.

கெட்டவர்கள் கொடிகட்டிப்பறப்பார்கள்.

 

அது சரி முத்தப்பா எப்படி இப்போது சுகமாக இருக்கின்றாரா? :D

 

 

இங்கே பலர் இப்போ புதிதாக முளைத்துள்ளார்கள். அவர்கள் கொஞ்சம் அப்படி இப்படித்தான்.

 

முத்தப்பா சுகமாக இருக்கணும். ஒரே ஒரு சம்பவத்தை தவிர மற்றதெல்லாம் கற்பனைதான் வாத்தியார். 

கதையமைப்பு மெருகேறிக்கொண்டே வருகிறது அண்ணா... நுணுக்கமான சின்ன சின்ன விசயங்களை சேர்த்துள்ளது நன்றாக உள்ளது...

 ஊரில் உயிர் மட்டும் தான் பிரச்னை

இங்கு உயிரை தவிர மானத்திலிருந்து மயிர் வரை பிரச்னை... அருமை :)

அன்பு நன்றிடா நண்பா. 

 

இது எழுதி ஒரு நான்கு மாதங்கள் வரும். இதற்குப் பிறகுதான் அலவாங்கு எழுதியது. இணைக்க மறந்துபோனேன். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.