Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வில்லிசை "சின்னமணி" இயற்கை எய்தினார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் ஊர் திருவிழாவில் கட்டாயம் இவர் வில்லுப்பாட்டு இருக்கும் நான் ஊரில் இருந்த காலங்களில்

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

உலகப்புகழுக்குரிய உன்னத கலை விளக்கு கலாவிநோதன் சின்னமணி..

வில்லிசைக் கலைஞர் சின்னமணி அவர்கள் தொடர்பான சிறப்பு ஆக்கம்..mani37.jpg

தவில் வாத்தியக் கலைஞர்கள் எப்படி அமரர் கலைஞர். தட்சணாமூர்த்தியை தமது தூரத்து ஓவியமாக அல்லது கலங்கரை விளக்காக பார்ப்பார்களோ அதுபோல ஈழத்தின் வில்லிசைக் கலைஞர்கள் அமரர் சின்னமணி நா. கணபதிப்பிள்ளையை தமது இலக்காகப் பார்ப்பார்கள்… அத்தகைய கலங்கரை விளக்கமாக விளங்கிய ஒரு கலைஞர் இன்று நம்மிடையே இல்லை..

இவரல்லோ கலைஞர் என்று போற்றி பரவுமளவுக்கு இசையிலும், நடிப்பிலும், கதை சொல்லும் பாங்கிலும், பாவனையிலும், ரசிகர் மனதை கொள்ளை கொள்வதிலும் சின்னமணிக்கு நிகர் சின்னமணியே என்று கூறுமளவுக்கு ஈழத்தின் கலை வானில் தனக்கான ஒரு முத்திரையை பதித்துக் கொண்ட கலைஞர்.

சின்னமணியைப் போல பாட்டோடு பிரிக்க முடியாதவாறு கதை சொல்ல வேண்டும் என்று பல வளரும் வில்லிசைக் கலைஞர்கள் அக்காலத்தே பேசிக்கொள்வதைக் கேட்டிருக்கிறேன், அதன் பின்னர்தான் வில்லிசைக்கலைஞர்களே விரும்பும் அந்தக் கலைஞரின் ஆற்றலைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகம் பிறந்தது.

அக்காலத்தே இரா.சிவசோதி, அன்புக்கடல் ஆறுமுகம், பின்னர் உடுவை யோகனின் வில்லிசை என்று பல்வேறு வில்லிசைக் குழுக்களின் நிகழ்ச்சிகளை எமது பாடசாலை சரஸ்வதி பூஜைக்காலங்களில் கேட்டிருக்கிறோம்.

அந்தத் தருணங்களில் சின்னமணி என்ற கலைஞர் வில்லிசையில் புகழ் பூத்தவராக யாழ் குடாநாட்டை சல்லடை போட்டுக்கொண்டிருந்தார், அவருடைய வில்லிசை இப்போதும் காதுகளுக்குள் நீங்காத ஜீவனம் பண்ணுகிறது..

அவருடைய சிறப்புக்கள் என்ன..?

வில்லின் மீது தாளமிடும்போது அவர் கரங்களை சிலாவி வீசிக் கொடுக்கும் ஒரு பாவனை மற்றவர்களிடம் இல்லாத புதுமையாக இருந்தது, குரல் இசையோ தேனில் குளித்த பலாப்பழச் சுளை போல அவருடைய வாயில் இருந்து இனிமையாகப்பிட்டுக் கொண்டு கனிந்து வெளியேறியது.

இசை நாடக மரபில் இருந்து வந்த காரணத்தினால் அதிக நேரம் கதையை சொல்லி பாடல்களை குறைக்காமல், மேலும் ஒரே விதமாக பாடல்களை இசைக்காமல், பாடலில் வரும் இரண்டு வரிகளை மறுபடியும் வசனமாக மாற்றி உரைத்து தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவாள நடைபோல இசையும் தமிழும் கலந்த தனது கதை சொல்லும் பாணியை வகுத்துக் கொண்டார்.

இசை, கதை, தமிழ், குரல் ஓசை போன்ற அனைத்திலும் சரளமான தகுதி இருந்த காரணத்தினால் அவருடைய வில்லிசைக்குழுவில் பலவீனமான பக்கம் ஒன்றை அவதானிக்க முடியாதபடி அனைத்துப் பக்கங்களுமே அடைக்கப்பட்டிருக்கும்.

அசாதாரண திறமையுள்ள ஒரு கலைஞரால் அன்றி மற்றவர்களால் இந்த இசைக்கதைக் கோபுரத்தை கட்டியமைக்க இயலாது.

வில்லிசைக் கலைஞர்களில் பலர் கதை சொல்வதில் வல்லவர்களாகவும், இசையில் சிறிது குறைவாகவும், வேறு சிலரோ இசையில் வல்லவராகவும் கதை சொல்வதில் பின்னடைவுடையோராகவும் காணப்படுவர், இரண்டும் சேர்ந்தவர் மிகச் சொற்பம், அதில் முக்கியமானவர் கலாவிநோதன் சின்னமணி அவரிடம் இரண்டுமே சேர்ந்து விளையாடும்.

வில்லிசை என்ற பாரம்பரிய கலையின் வடிவம் என்ன, அதை நாம் சீர்குலைக்காது மேலே வளர்ப்பது எப்படியென்ற தேடலும், வளர்ச்சியும் அவரிடம் இருந்தது, அதனால்தான் அவர் ஒவ்வொரு மேடையாக வளர்ந்து சிகரங்களைத் தொட்டிருந்தார்.

mani210.jpg

சின்னமணி அவர்களின் வில்லுப்பாட்டின் சிறப்பம்சம் அதன் கலைத்துவ அழகை காப்பாற்றிய ஓர் உன்னத முயற்சியாகவே காணப்பட்டது.

ரசிகர்களை கவர வேண்டும் என்பதற்காக அபரிமிதமான பகடிகளோ.. இரட்டை அர்த்தங்களோ.. கேலிகளோ இடம் பெறவேண்டும் என்ற எண்ணங்கள் வில்லுப்பாட்டின் கொலுவைக் குலைத்துவிடும் என்ற தெளிவும் நேர்த்தியும் அவர் குரலில் இருந்தது.

ஆள் பாதி ஆடைபாதி என்பதை உணர்ந்து அவர் வழங்கிய தோற்றம் மிகவும் வித்தியாசமானது, அருள்மொழி அரசு திருமுருக கிருபானந்தவாரி அவர்கள் பிரசங்கம் செய்யும் போது தனக்கான ஒரு பிரத்தியேக வெளித்தோற்றத்தை உருவாக்கிக் கொண்டது போல சின்னமணியும் தனக்கான ஒரு வெளித்தோற்றத்தை உருவாக்கிக் கொண்டார், அதற்கேற்பவே அவருடைய வில்லிசை முழங்கியது.

உன்னுடைய வெளித்தோற்றமே உனது வாழ்க்கை விதி என்ற பழமொழிக்கு அவர் நல்ல உதாரணம்.

சின்னமணி வில்லிசையில் மட்டுமல்ல இசை நாடகத்திலும் வல்லவராக இருந்தார், அரிச்சந்திர மயான காண்டம் நடிகமணியால் நடிக்கப்பட்டபோது அவர் சத்தியகீர்த்தியாக நடித்திருந்தார்.

தாளத்திற்கும், பாட்டுக்கும், இசைக்கும் அசைவு கொடுத்து மேடையை வளைத்துப் போடுவதில் ஆயிரக்கணக்கான மேடைகள் கண்டு சாதனை படைத்தவர் நடிகமணி வைரமுத்து, காலத்தில் அளவை இசையால் சுழற்றி பந்து போல விளையாடுவதில் அவர் பெற்ற வல்லமை சாதாரணமான ஒன்றல்ல.

புறூஸ்லி என்ற குங்பூ கலைஞன் எப்படி அதை வளைத்துப் போட்டானோ அதுபோல இசை நாடகத்தை வளைத்துப்போட்டவர் நடிகமணி வைரமுத்து.

கலைத்துவத்தின் நுண்பாக இரகசியங்களும், அது கொலு இருக்கும் உன்னதங்களும் ஒருவனால் புரியப்படும்போது, அவன் முன் நடிகமணி ஒரு தேவதையாக நிற்பான் என்று சக நாடகக் கலைஞர்கள் கூறுவார்கள்.

அப்படிப்பட்ட இமாலயக் கலைஞனுடன் ஈடு கொடுத்து சத்தியகீர்த்தியாக நடிப்பது சாதாரண விடயமல்ல மாபெரும் திறமையாகும், இசை நாடகம் ஒரு கண்காட்சிக் கிரிக்கட்டைப் போன்றது, துணை நடிகன் பந்து வீச்சாளன் போன்றவன், சரியாக பந்தை வீசினால்தான் ரசிகர்கள் மகிழும்படி தலைமை நடிகன் பந்தை ஆகாயத்தில் கிளப்ப முடியும்..

அது எல்லோராலும் முடியாது தலைமை நடிகனின் பாடலை சரியாக தெறிக்கும் வர்ணக் கண்ணாடி போல துணை நடிகன் அமைய வேண்டும், அதில் சின்னமணி அவர்கள் பெற்ற வெற்றியே பிற்காலத்து அவருடைய வில்லிசை வெற்றிக்குள் நின்றதாகவே கருத வேண்டும்.

எழுபதுகளில் நடைபெற்ற லாலா சோப் நாடகப்போட்டியில் பங்கேற்க எமது நாடக மன்றமான வல்வை பாரத் கலாமன்றத்துடன் ஒரு நடிகனாக நானும் போயிருந்தேன்.

அன்றைய தினம் நாடகப்போட்டி இரண்டு பிரிவாக நடைபெற்றது, ஒன்று சமூக நாடகப்பிரிவு, இன்னொன்று சரித்திர இதிகாச நாடகப் பிரிவு.

சமூக நாடகங்கள் நான்கு, சரித்திர நாடகங்கள் நான்காக மொத்தம் எட்டு நாடகங்கள் மோதின..

அன்றைய தினம் நடைபெற்ற இதிகாச, புராண நாடகப்பிரிவில் ஒன்று மாதனை சோமசுந்தரம் அரிச்சந்திரனாக நடித்த மயானகாண்டம், அதில் சத்தியகீர்த்தியாக சின்னமணி நடிப்பதால் பலத்த பரபரப்பு நிலவியது.

இதே சோமசுந்தரம் நடித்த நக்கீரர் நாடகம் அதற்கு முதல் ஆண்டு லாலா சோப் நாடகப் போட்டியில் முதல் பரிசு பெற்றிருந்த காரணத்தினால் இந்த ஆண்டும் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை இருந்தது.

அதே தினம் இன்னொரு மயானகாண்டமும் நடைபெற்றது, அது அல்வாய் விவேகானந்தனின் நடித்த மயானகாண்டம் அவர் கவிஞர் செல்லையாவின் மகன், நடிகமணியின் மாணவனும் கூட, மிகச்சிறந்த ஈழத்துப் பாடகர்.

mani38.jpg

வாழ்வா சாவா என்ற பொறி கக்கும் போட்டி..

இதற்கிடையில் மாவிட்டபுரம் மறுமலர்ச்சி நாடக மன்றத்தின் பல தங்கப்பதக்கங்கள் வென்ற ஏன் இந்த அவலம் என்ற இதிகாச நாடகம், அடுத்து வல்வை ஹெலியன்ஸ் நண்பர்களின் சிசுபாலன் என்ற மனோகர் பாணி அரங்கமைப்பு நாடகம், அரண்மனைகள், எலக்ரோனிக் மலைப்பாம்புகள் என்று கலாவிநோதன் வெ. முத்துச்சாமி சிசுபாலனாக நடித்தார்.

பருத்தித்துறை மாதனை, அல்வாய் இரண்டுமே இசை நாடகத்திற்கு பெயர் போன இடங்கள் மாலை நேரத்தில் அப்பகுதிக்கு சென்றால் ஆர்மோனிய பெட்டியின் இசை காதுகளில் மோதிச் செல்லும்… முகாரி இராகத்தில் மோதும் மயானகாண்டப்பாடல் நடக்கவிடாமல் கால்களுக்கு கட்டுப்போட்டுவிடும்.

அப்படி தினசரி மயான காண்டத்தை சாதகம் பண்ணும் கலைஞர்களுக்கிடையே மோதல்..

மத்தியஸ்தர்களாக பிரபல எழுத்தாளர் மூதறிஞர் சொக்கன், மற்றும் மாதகல் கந்தசாமி ஆகியோர் வந்திருந்தனர்.

இரண்டு மயான காண்டத்திற்கும் போட்டி ரசிகர்கள் அதையே பார்த்தபடி இருந்தனர், சின்னமணி வருவதால் விவேகானந்தன் அமோகமாக நடித்திருந்தார்..

சின்னமணி இருக்கிறார்தானே என்றோ என்னவோ சோமசுந்தரத்தின் மயான காண்டம் விறுவிறுப்பு குன்றியிருந்தது.. போட்டியில் தங்கப்பதக்கத்தை விவேகானந்தனின் மயானகாண்டம் பெற்றது சின்னமணி சத்தியகீர்த்தியாக நடித்த மயானகாண்டம் நாலாவது இடத்திற்கு போய் பரிசு பெறவில்லை.

அதற்கு முதல் வாரம் கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் மேடையேற்றப்பட்ட எமது பொன்னகரம் என்ற நாடகமும் போட்டியில் சமூக நாடகங்களின் வரிசையில் நான்காவதான கடைசி இடத்திற்கு போயிருந்தது.

கொழும்பில் போட்ட புகழ் இருந்தால் அதே நாடகம் அச்சுவேலியிலும் வெற்றிபெற வேண்டிய அவசியம் இல்லை என்பது அந்தத் தோல்வியால் நாம் படித்த பாடம்.

ஆனால் நம்மைப் போன்ற ஒரு தோல்வி சின்னமணியை எப்படிப் பாதிக்கிறது என்று அவதானித்தேன்..

பொதுவாக பெரிய கலைஞர்கள் என்று கருதுவோர் தோல்வியை சகிக்கமாட்டாது போட்டி முடிந்ததும் மத்தியஸ்தருக்கு எதிராகக் கலவரங்களை ஏற்படுத்துவது வழமை..

ஆனால் சின்னமணி மிக நாகரிகமாக இளம் கலைஞர் விவேகானந்தனின் வெற்றியை அங்கீகரித்தார்.

நடிகமணியோடு நடித்த காரணத்தினால் ஒருவர் வெற்றிபெற வேண்டுமென கருத முடியாது, நடிக மணி போல மற்றவருடனும் நீடித்த பயிற்சியை சேர்ந்து எடுத்தாலே நாடகம் முழுமை பெறும் என்ற தகவலை சொல்லிவிட்டு அவர் வெளியேறியதை அவதானித்தேன்.

நடிகர்களில் பெரியவர் சிறியவர் என்ற கணிப்பு வெற்றிக்கு உதவாது, இணைந்த கடும் பயிற்சியே வெற்றியின் அடி நாதம் என்று தனது அமைதியால் உணர்த்திச் சென்றார்.

வெற்றியை ஏற்றுக் கொண்டு பெருமையடையும் அதே நேரம் தோல்வியையும் ஏற்றுக் கொண்டு மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்ற தெளிவு அவரிடம் இருந்ததை அன்று அவதானித்தேன்.

இதே நல்ல பழக்கம் நடிகமணி அவர்களிடமும் இருந்தது, ஒரு கலைஞனின் படைப்பு எல்லா இடங்களிலும் சரியாக வாய்த்துவிடாது, அதைப்புரிந்து கொண்டு சிறப்பிற்கும், சிறப்பின்மைக்கும் நடுவால் நிதானமான ஒரு பயணம் செய்வதே கலைஞனின் கடமையாகும்.

mani43.jpg

அதை நேர்த்தியாக செய்தவரே கலாவிநோதன் அச்சுவேலி தந்த அரும்பெரும் புத்திரன் வில்லிசைக் கலைஞர் சின்னமணி.

தன்னைப் புரிந்து, வெற்றி தோல்விகளை சமமாக ஏற்று, மற்றக்கலைஞர்களை மதித்து, ஈகோ பிரச்சனையால் சிக்குண்டு போகாது இறுதிவரை வெற்றி காண்பதுதான் ஒரு கலைஞன் முன் காலம் வைக்கும் சவாலாகும், அதை வென்றவர் ஆயிரத்தில் ஒருவரே.

எத்தனையோ ஈழத்தின் கலைஞர்கள் தமது வாழ்வை ஏழ்மையிலும், மதுவிலும் அழித்து துயரமான வாழ்வை வரலாறாக எழுதி அடையாளமின்றிப் போனது தொடர்கதை, ஆனால் ஒரு கலைஞன் கலையில் மட்டுமல்ல வாழ்விலும் வெற்றி பெற்றான் என்ற வரலாற்றை எழுதிய கலைஞர்கள் மிகமிக சொற்பம்.. அந்த சொற்பமானவர்களில் ஒருவரே நமது வில்லிசைக் கலைஞர் சின்னமணி.

நமக்குத் தெரியாதா கலைஞன் என்றால் இப்படித்தானே என்று சமுதாயம் எள்ளி நகையாட முடியாத கலை வாழ்வை தரும் கலைஞன் மற்றைய கலைஞர்களுக்கு பெருமை தந்து செல்கிறான்.. அத்தகைய பெருமை என்ற பொன் ஆபரணத்தை வென்று கழுத்தில் போட்டு விடைபெற்றுள்ளார் சின்னமணி அவர்கள்.

அன்று ஈழத்தின் பேராசிரியர்களும், தமிழகத்தின் மதிப்பீட்டாளரும் இத்தகைய நுண்பாக கலைஞர்களின் ஆளுமைகைளை மதிப்பிட்டபோது நாம் பெருமை கொண்டோம்.

ஆனால் ஐரோப்பா வந்து ஐரோப்பிய வாழ்வியலில் அவர்கள் தமது கலைஞர்களை எப்படி மதிக்கிறார்கள் என்று எண்ணிப்பார்த்தால் நமது மகிழ்ச்சி நீர்க்குமிழி போல உடைந்துவிடக் காண்கிறேன்.

அந்தத் தார்மீகக் கோபமானது ஈழத் தமிழினத்தின் மேல் கடுமையான சமுதாய விமர்சனத்தை வைக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுவதை உணர்கிறேன்.

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால் என்ற பாரதி பாடல் நெஞ்சாங்கூட்டில் உதைகக்கக் காண்கிறேன்.

ஆனால் பாரதி சொன்னது போல வீணே நமக்குள் பழங்கதைகள் பேசி காலம் கழிப்பதைவிட இத்தகைய மகத்தான கலைஞர்களை உலக அரங்கு கொண்டுவர நாம் ஏதோ ஒன்று செய்ய வேண்டியிருக்கிறது சிந்திப்பதே தற்போதைக்கு அறிவுடமையாகும்.

ஈழத்தின் கலைகளையும், கலைஞர்களையும் உலக மன்றுக்கு கொண்டுவர நாம் ஏதாவது செய்ய வேண்டும்..

mani52.jpg

செய்யத் தவறினால் புலம் பெயர் வாழ்வின் மீது நாளைய வரலாறு காறி உமிழும் என்பதை சொல்லவும் வேண்டுமோ..?

ஆம்..

சின்னமணி அவர்களின் வில்லிசை இந்த நேரம் அந்த ஆதங்கத்தை நமது இனத்தின் முன் பதிவு செய்து ஒலிக்கிறது…

கலைஞர் சின்னமணி நினைவுகளுக்காக..

கி.செ.துரை 06.02.2015

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.