Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - மூனா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம்

மூனா

58dc7777-f446-4509-98e4-5b58f4d05d0e1.jp

'நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம்' என்ற இந்த கட்டுரையானது எனது புனர்வாழ்வுப் பணியில் நான் பயணித்த பொழுது பெற்ற ஞானம். எதையுமே இலகுவாகத்தான் எடுத்துக் கொண்டேன்.

ஒற்றுமையாக நாம் இணைந்து பயணித்தால் நாங்கள் நலம் பெறலாம், நாடு வளம் பெறலாம் என்பது எனது இந்தப் பாதையினூடான அனுபவம். அந்தப் பாதையில் நீங்களும் இணைந்து கொண்டால் மகிழ்ச்சி அடைவேன்.

கட்டுரைக்கு வருவதற்கு முன்,

தமிழர் புனர்வாழ்வுக் கழக யேர்மன் கிளையின், வெண்புறா நிறுவனத்திற்கான யேர்மன் தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்து அதை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத் திட்டத்தில் பலர் உழைத்திருக்கிறார்கள். அதில் முக்கிய பங்கு தமிழர் புனர்வாழ்வுக் கழக யேர்மனிக் கிளை தொண்டர்களுக்கே போய்ச் சேர்கிறது.

இந்தத் திட்டத்திற்கான முக்கிய தேவையே பணம்தான். அதைப் பெற்றுத் தந்தவர்கள் கழகத்தின் தொண்டர்கள். நிறையவே அவர்கள் சிரமப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து நானும் செயற்பட்டதனால் அவர்கள் பட்ட சிரமங்கள் எனக்குத் தெரியும்.

முழு நேர வேலை, அதன் பின்னர் பகுதி நேர வேலை என்று பணம் சம்பாதித்து வசதிகளை பெருக்கவும் ஆடம்பர வாழ்க்கை வாழவும் யேர்மனியில் ஏகப்பட்ட வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனாலும் முழு நேர வேலைக்கே விடுமுறை போட்டுவிட்டு கழகத்துக்காக உழைத்தவர்கள் புனர்வாழ்வுக் கழகத் தொண்டர்கள். அதைவிட வார இறுதி நாட்களிலும், தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறைகளில் ஊர் உலா என்று உலகை வலம் வராமல் புனர்வாழ்வுப் பணிக்காக தங்களை அர்ப்பணித்தவர்கள் அவர்கள்.

யேர்மன் நகரங்களில் வருடந்தோரும் வெளிநாட்டவர்களுக்கான விழாக்களில் ஆயிரமாயிரம் மக்களுக்கும், கேவலார் தேவாலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் தமிழர் திருப்பூசையில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும், யேர்மனிய மாவீரர் வணக்க நிகழ்வில் பதினைந்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்களுக்குமாக உணவு விடுதியில் நெருப்பில் வெந்து, வியர்வையில் குளித்து, உடலை துன்புறுத்தி சமைத்துப் போட்ட தொண்டர்களின் சிரமங்கள் பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. சட்டத்திற்கும், சமூகத்திற்கும் இடையூறு இல்லாத வண்ணம் புனர்வாழ்வுப் பணிக்கு நிதி சேகரிக்க தங்களை முழுமையாக ஈடுபடுத்தி புனர்வாழ்வுப் பணிக்கு தொண்டு செய்தவர்கள் அவர்கள்.

தொண்டர்களைப் பற்றி மட்டுமல்ல, புனர்வாழ்வுக்கான தேவையை உணர்ந்து ஆர்வத்தோடும் நம்பிக்கையோடும் பணம் உதவி செய்த உறவுகளைப் பற்றியும் சொல்லியாக வேண்டும்.

58dc7777-f446-4509-98e4-5b58f4d05d0e4.jp

எங்களது தேவை இப்படி இருந்தது. ஒவ்வொரு தமிழரும் குறைந்த பட்சம் பத்து யூரோக்களை புனர்வாழ்வுப் பணிக்குத் தந்து தங்களையும் தாயகத் துயர் துடைப்பில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அது. அதற்காக தாயக கொள்கையில் மாற்று எண்ணங்களை வைத்திருந்தாலும் அவர்களைக் கூட நாங்கள் சந்தித்தோம். ஒரு அரசசார்பற்ற புனர்வாழ்வுக் கழகமாகவே செயற்பட்டோம்.

நாங்கள் ஒரு நகரத்துக்கு புனர்வாழ்வுக்கான நிதி சேகரிக்கச் சென்றால் ஒருநாளில் ஏறக்குறைய பதினைந்தில் இருந்து இருபது தமிழ்க் குடும்பங்களை அல்லது தனி நபர்களைச் சந்தித்து மாதாந்த நிதியை வங்கி மூலம் பங்களிக்கக் கேட்டுக் கொள்வோம். தங்கள் பங்களிப்புகளை மட்டுமல்ல, எங்களுக்கு உணவு தந்து, தேனீர் தந்து அன்போடு உபசரித்து அனுப்பிய உள்ளங்களுக்கும், எந்தவித ஊதியத்தையும் எதிர்பார்க்காது தங்கள் கலைகளை புனர்வாழ்வுக் கழகம் நடத்திய நிகழ்ச்சிகளுக்குத் தந்த கலைஞர்களுக்கும் இந்த கட்டுரையின் மூலமாக நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

இந்தக் கட்டுரையைப் பற்றி நண்பர் சிவறஞ்சித்திடம் நான் சொன்ன பொழுது, 'எழுதுங்கள்' என உற்சாகம் தந்து கட்டுரையை முழுமை பெறச் செய்தார். 'பொங்கு தமிழ்' இந்தக் கட்டுரையை வெளியிட முன்வந்ததற்கு அதன் ஆசிரியர் மற்றும் நிர்வாகக் குழுவுக்கு எனது நன்றி.

புலம்பெயர் தமிழர் சமூகத்தில் தாயகத்துக்காக உழைத்த பல விடயங்கள் பதியப்படாமலேயே போய் விடுகிறது. இந்தக் கட்டுரையை நான் எழுத முனைந்ததற்கு அதுவும் ஒரு காரணமாகிறது.

எத்தனை சிக்கல்கள், எவ்வளவு சிரமங்கள். இவற்றை எல்லாம் புறந்தள்ளி தாயகத்தில் அல்லற்படும் மக்களின் துயர் தீர்ப்பதே எங்கள் பணி என்று சேவை செய்த தமிழர் புனர்வாழ்வுக் கழக யேர்மனியக் கிளைத் தொண்டர்களுக்கு, 'நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தரலாம்' என்ற இந்தக் கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்.

'கூட்டுறவாக நாம் இருந்தாலே நாட்டின் கவலைகள் அகலுமே'

அன்பன்

மூனா

****

பகுதி 1

யேர்மனியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பிரச்சாரப் பொறுப்பாளராக நான் இருந்த காலகட்டம். நிறையவே சிரமப்பட்டிருக்கிறேன்.

பிரச்சாரப் பொறுப்பாளராக நான் இருந்தாலும், தாயகத்திலிருந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தலமையகத்துடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள எனக்கு வாய்ப்பு இல்லை. அதற்கான அனுமதி எனக்குத் தரப்படவில்லை என்றும் குறிப்பிடலாம். அதுதான் சரியாக இருக்கும்.

யேர்மனிக் கிளைக்கு ஒரு தலைமைப் பொறுப்பாளர் இருந்தார். அவர் பெயர் ஆனந்தராஜா. ஆனந்தண்ணை என்றே அவரை அழைப்போம். ஆனந்தண்ணை குறிப்பிடும் வேலைத் திட்டங்களைத்தான் நான் பிரச்சாரத்துக்கு எடுத்துக் கொள்வேன். அவர் தரும் தகவல்களை வைத்தோ அல்லது நான் சேகரித்த தகவல்களை அவரிடம் காட்டி, அதற்கான ஒப்புதல்களைப் பெற்றோதான் பிரச்சாரத்திற்கான வேலைகளைத் தொடங்குவேன். அந்த விடயங்களை வைத்துத்தான் துண்டுப் பிரசுரங்களையோ அல்லது சிற்றேடுகளையோ வெளிக் கொண்டு வருவேன்.

திங்கள் முதல் வெள்ளி வரை எனது வேலை. சனி, ஞாயிறு அல்லது விடுமுறை நாட்களில்தான் புனர்வாழ்வுக் கழகத்துக்கான எனது செயற்பாடுகள் இருக்கும். இத் தினங்களில் யேர்மனியில் ஏதாவது ஒரு நகரத்தில் அந்த நகரத்துத் தொண்டருடன் புனர்வாழ்வுக் கழகத்துக்கான பிரச்சாரத்தில் நிற்பேன்.

யேர்மனியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை சட்ட ரீதியாக ஓர் உதவி நிறுவனமாகப் பதிந்திருந்தோம். அதனால் நிதி சேகரிப்பு, மற்றும் சேகரித்த நிதியை நாட்டுக்கு அனுப்புவதற்கான வழிமுறைகள் எல்லாமே ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. யேர்மனியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பதிவில் இருந்ததால், அதற்கு அன்பளிப்புகள் செய்பவர்களின் நிதிகளுக்கு வரிவிலக்கு இருந்தது. அநேகமான நிதிகள் வங்கிகள் மூலமாகவே கிடைக்க ஏற்பாடு செய்திருந்தோம். வருட இறுதியில் அவரவர்கள் தந்த நிதிகளுக்கான பற்றுச் சீட்டுகளை வங்கியில் இருந்து பெற்று உரியவர்களுக்குச் சேர்த்து விடுவோம்.

எல்லா விடயங்களிலும் ஒரு நேர்த்தி இருந்தும் பிரச்சாரத்துக்குத் தேவையான தகவல்களில் எப்போதும் பற்றாக்குறை இருந்தே வந்தது. அவைகளைப் பெறுவதில் அதிக சிரமங்கள் எனக்கு இருந்தன.

காந்தி நிலையம், குருகுலம், இனிய வாழ்வு இல்லம், வெற்றிமனை, பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு, முன்பள்ளி, தொழில்சார் பயிற்சி நிலையம், சத்துணவு நிலையங்கள் என்று இன்னும் பல திட்டங்கள் நாட்டில் இருந்தும் யேர்மனியக் கிளைக்குப் போதுமான செயற் திட்டங்கள் தரப்படவில்லை என்பது எனது ஆதங்கமாக இருந்தது. இது விடயமான எனது வருத்தத்தை நேரடியாக ஆனந்தண்ணைக்கு பல தடவைகள் தெரிவித்திருக்கிறேன். அடிக்கடி நான் அவரை நச்சரித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் அவரிடம் இருந்து எனக்கு பதில் வந்தது. 'நான் என்ன செய்ய முடியும்? இருக்கிற நல்ல திட்டங்களை எல்லாம் அவையள் மற்றைய நாடுகளுக்குப் பிரிச்சுக் குடுத்திட்டீனம். நானும் பல தடவை கேட்டுப் பார்த்திட்டன். வெண்புறா திட்டத்தை யாரும் எடுக்கேல்லை. வேணுமென்றால் எடுத்துச் செய்யுங்கோ என்று பதில் வந்திருக்கு' என்றார்.

எல்லோரும் கைவிட்ட ஒன்று எங்கள் கைக்குக் கிட்டியது. வெண்புறா திட்டத்தை யேர்மனிக்கு எடுத்துச் செய்தால் என்ன என்ற எண்ணம் எனக்குள் பலமானது. வெண்புறா சம்பந்தப்பட்ட தகவல்களை சேகரிக்க ஆரம்பித்தேன். ஆனந்தண்ணையும் தனக்கு கிடைப்பதை எனக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்.

செயற்கைக் கால்கள் பொருத்தும் பணியை இந்தியாவில் இருந்த வந்த ஜெய்ப்பூர் செயற்கை உறுப்புகள் பொருத்தும் நிலையம் செய்து கொண்டிருந்தது. அதுவும் அவர்கள் பணி யாழ்ப்பாணத்தில் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் அவர்களது செயற்திறன் யாழ் மாவட்டத்துக்கே போதுமானதாக இருக்கவில்லை. யாழ்ப்பாணத்தை விட வன்னியிலும் கிழக்கு மகாணத்திலும் அதிகப் பேர் கால்களை இழந்திருந்தனர். அவர்களுக்கான சேவையை வெண்புறா நிறுவனத்தின் மூலம் எவ்வாறு அதிகரிக்கலாம் என ஆராயத் தொடங்கினோம்.

வன்னியில் வெண்புறா நிறுவனம் தகரத்தினால் செய்யப்படும் செயற்கைக் கால்களைப் பொருத்தும் பணியைச் செய்து கொண்டிருந்தது. அதற்கான பயிற்சிகளை அவர்கள் பெற்றிருந்தனர். ஆகவே தகரத்தினால் செய்யப்படும் கால்களுக்கான உதிரிப்பாகங்களை வாங்க, அதைச் செய்யும் நிபுணர்களின் தொகையை அதிகரிக்க, அவர்களுக்கான மாதச் சம்பளத்தை வழங்க யேர்மனிய தமிழர் புனர்வாழ்வுக் கழக நிதியைப் பயன்படுத்தலாம் என தீர்மானம் ஆனது.

இத்தனைக்கும் செயற்கைக் கால்களை இலவசமாகவே வெண்புறா செய்து கொடுத்துக் கொண்டிருந்தது. கால்களைப் பொருத்திக் கொள்ள வருபவருக்கான செயற்கை உறுப்பைப் பொருத்தி அவர் சுகமான முறையில் நடமாடும் வரை அவருக்கான பயிற்சி, தங்குமிட வசதி, உணவு போன்றவை வெண்புறா நிறுவனத்தில் இலவசமாகவே வழங்கப்பட்டது. ஆகவே பெருமளவு நிதி சேகரிக்கும் பணி எங்களிடம் வந்து சேர்ந்தது. தொண்டர்கள் எல்லோரும் சுறுசுறுப்பானோம். நகரங்கள் தோறும் 'புனர்வாழ்வுக் கலைத்தென்றல்' என்ற கலை நிகழ்ச்சியை ஒழுங்கு செய்து கட்டணம் வசூலித்து நடாத்தினோம். எங்கள் பணிக்காக எங்கள் கலைஞர்கள் பணம் ஏதும் பெற்றுக் கொள்ளாது இலவசமாகவே தங்கள் கலைகளை புனர்வாழ்வுக் கலைத்தென்றலுக்குத் தந்தார்கள். முற்று முழுதாக ஈழத் தமிழர்கள் வழங்கிய கலை நிகழ்ச்சிகளாகவே எங்கள் நிகழ்ச்சிகள் அமைந்தன. இவ்வகையான நிகழ்ச்சிகளுக்கு கனடாவில் இருந்து வந்து பொன் சுந்தரலிங்கம் மற்றும் வர்ண ராமேஸ்வரன் ஆகியோர் தங்கள் இசை நிகழ்ச்சியை அர்பணித்ததை குறிப்பிட்டே ஆக வேண்டும்.

நிதிகள் எதிர்பார்ப்பை விட அதிகமானதாக இருந்தது. புனர்வாழ்வுக் கலைத்தென்றலுக்கு தமிழ் மக்களிடம் போதிய வரவேற்பு இருந்தது. கலை நிகழ்ச்சியின் பொழுது மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த சிற்றுண்டிச்சாலை நல்ல விற்பனையைப் பெற்றிருந்தது. வேறு சில தமிழ் அமைப்புகளும் கலை நிகழ்ச்சிகளை செய்து கொண்டிருந்ததால், அவர்களுக்கு வழி விட்டு எங்களது புனர்வாழ்வுக் கலைத்தென்றல் நிகழ்ச்சிகளை மட்டுப்படுத்தி பெரிய நகரங்களில் மட்டுமே நடத்தி வந்தோம்.

தகரத்தால் செய்யப்படும் கால்களைப் பொருத்துவதால் கால்களை மடிக்க முடியாது இருக்கிறது. கடல் தொழிலுக்குச் செல்பவர்களுக்கு சிரமமாக இருக்கிறது என வெண்புறா நிறுவனத்தில் இருந்து தகவல் ஒன்று வந்திருந்தது. இது குறித்து என்ன செய்யலாம் என ஆராய்ந்தோம். ஆனால் ஆக்கபூர்வமாக எதையும் எங்களால் செய்யமுடியாதிருந்தது. வெண்புறா நிறுவனத்திற்கு ஏதாவது உதிரிப் பாகங்கள் தேவைப்பட்டால் யேர்மனியில் இருந்து அவர்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தோம். அப்படி அவர்கள் கேட்ட பொருட்களை வாங்குவதற்கு ஆனந்தண்ணை ஒரு கை, கால் செயற்கை உறுப்பு செய்யும் நிறுவனத்துக்குச் சென்ற பொழுது, அவர்கள் அவரிடம் இவை எதற்கு எனக் கேட்க, அவரும் வெண்புறா நிறுவனத்தைப் பற்றிச் சொல்ல, வேண்டுமானால் தங்களது தொழில் நுட்பத்தை அங்கு பயன்படுத்தலாமா எனக் கேட்டிருக்கிறார்கள். இந்தத் தகவலை அவர் என்னிடம் சொல்ல, எனக்கு அது நல்லதாகவே பட்டது. எங்களது வருடாந்தக் கூட்டத்தில் இந்தப் பிரச்சினையைக் கொண்டு வந்தோம். அது ஏகமனதாக நிறைவேறியது.

அடுத்து என்ன.. துரிதகதியில் செயற்பட்டோம். வெண்புறா நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு, அங்கு பெற வேண்டிய உத்தரவாதம் மற்றும் ஒழுங்குகளை ஆனந்தண்ணை செய்து கொண்டார். யேர்மனிய செயற்கை உறுப்பு செய்யும் நிறுவனமும் தங்களது தொழில் நுட்ப வல்லுனர் ஒருவரை அங்கு அனுப்ப தெரிவு செய்து கொண்டது. இனி அவரை அங்கே அனுப்பி திட்டங்களை அமுல்படுத்துவதுதான் மிச்சமாக இருந்தது.

ஆனந்தண்ணையை ஒருநாள் கேட்டேன்.

'எப்போ யேர்மன்காரனை அனுப்பி யேர்மனியத் தொழில் நுட்பத்தை வெண்புறாவில் செய்யப் போறம்?'

'அதை நீங்கள்தான் முடிவு செய்யோணும்'

'நானா? நான் என்னத்தை முடிவு செய்யிறது..?

'நீங்கள்தானே அவனைக் கூட்டிக் கொண்டு போகோணும்'

அவரிடம் இருந்து அந்தப் பதில் வர எனக்குத் தூக்குவாரிப் போட்டது. நாட்டுக்கா? நானா? போவதா? அங்கே இருக்க முடியாமல்தானே இங்கே ஓடி வந்திருக்கிறேன்.

எனது முகம் இருந்த நிலையை அவர் புரிந்து கொண்டார். 'பயப்படாதையுங்கோ. ஒன்றும் நடக்காது. இப்ப சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திட்டிருக்கினம். அவையே ஒரு பிரச்சினையும் இல்லாமல் எல்லா இடமும் ஓடித் திரியினம். உங்களுக்கு ஒன்றும் நடக்காது. வேலை இடத்திலை லீவுக்கு அப்பிளை பண்ணிட்டுச் சொல்லுங்கோ. ஓத்தப்பேடியோடை கதைக்கோணும்.. மற்ற ஒழுங்குகளையும் செய்யோணும்'

மாற்றம் இல்லை. நான்தான் போக வேண்டும் என்பதில் அவர் திடமாக இருந்தார். பேசாமல் வேலை இடத்தில் விடுமுறைக்கு விண்ணப்பம் செய்தேன். பயணத்துக்குத் துணையாக எனது மனைவியையும் சேர்த்துக் கொண்டேன். எதுவும் அசம்பாவிதம் நடந்தால் சேர்ந்தே போகலாம் என்ற பொது எண்ணம்தான்.

தொடரும்….

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=11&contentid=58dc7777-f446-4509-98e4-5b58f4d05d0e

  • கருத்துக்கள உறவுகள்
ஏன் இதை இப்ப எழுதுறார் .....?
என்பது இன்னமும் சிலருக்கு புரியாமல் இருக்கலாம்!
 
புரியாதவர்கள் உள்ளவரை ...
புதிர் காட்டுபவர்களுக்கு பஞ்சம் வர போவதில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு தாயகத்துக்காக  வேலை செய்தவர்களின் வலிகளைப்பதிவு செய்திருக்கிறார்

நன்றிகள்..

 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - பகுதி 2

பொதிக்குள் இருந்த மண்டையோட்டுப் படம்

மூனா

138c07e5-f8d8-4970-8786-32898abdffcb1.jp

புறப்படும் நாளுக்கு முதல் நாள் எனது மாநிலத்தில் புனர்வாழ்வுக் கலைத் தென்றல் நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது. அந்த நிகழ்ச்சிக்காக ஒரு மாதத்திற்கு மேலாக ஓய்வு இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தேன். ஓயாத வேலை. கலைஞர்கள், மண்டபம், நிகழ்ச்சி ஒழுங்கு, வரவு செலவு என ஏகப்பட்ட பொறுப்புகள். நிறையவே களைத்து விட்டேன். நிகழ்ச்சி முடிய அப்படியே கலைஞர்கள் பயணிக்கும் பஸ்சில் வூப்பெற்றால் நகரத்துக்குப் பயணமானோம். நித்திரை கொள்ள வாய்ப்பில்லாமல் இருந்தது. அன்று இரவு நடந்த கலை நிகழ்ச்சிகள் பற்றியே எல்லோரும் கதைத்துக் கொண்டு வந்தார்கள். இடையிடையே கேள்விகள் என்னை நோக்கியும் வரும். எனது இதே பரிதாபகரமான நிலையிலேயே ஆனந்தண்ணையும் இருந்தார். அவரும் நிறையவே களைத்துப் போய் இருந்தார். நித்திரை இல்லாமல் 450 கிலோ மீற்றர் பயணம்.. நிறையவே நான் சோர்ந்து போயிருந்தேன்.

காலையில் வூப்பெற்றால் போய்ச் சேர்ந்தோம். தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் யேர்மன் கிளை வூப்பெற்றால் நகரிலேயே இருந்தது. அங்குதான் காலை உணவு எடுத்துக் கொண்டேன். செயற்கைக் கால் செய்வதற்கான யேர்மனிய தொழில் நுட்பத்துக்கு வேண்டிய பொருட்கள் எல்லாம் ஏற்கெனவே பெட்டிகளில் போட்டு கட்டி வைக்கப்பட்டிருந்தன. உள்ளே என்ன இருக்கிறது எனப் பிரித்துப் பார்க்க வாய்ப்பில்லை.

'செயற்கைக் கால்களைச் செய்வதற்கான சில இரசாயனப் பொருட்களும் இதுக்குள்ளை இருக்கு. எல்லாத்தையும் அங்கை கொண்டு போய்ச் சேர்க்கிறது எங்கடை பொறுப்பு என்ற பேச்சோடைதான் ஒத்தப்பேடியோடை ஒப்பந்தம் செய்திருக்கிறம். நீங்கள்தான் கொண்டு போகோணும். இவை எல்லாம் உங்கடை பொறுப்பு. இங்கை, ஏர்போர்ட்டில் ஏதாவது பிரச்சினை எண்டால் நாங்கள் நிக்கிறம்தானே. திருப்பி எடுத்துக் கொண்டு வரலாம். அங்கை நீங்கள்தான் பாக்கோணும்' ஆனந்தண்ணை சொல்லிக் கொண்டிருந்தார்.

அங்கே போவதற்கு ஏற்கெனவே பயமாக இருக்கிறது. இதற்குள் இது வேறையா? மனதுக்குள் கேட்டுக் கொண்டேன். குறிப்பிட்ட நேரம் வந்தது. என்னுடன் வெண்புறா நிறுவனத்துக்கு வரும் தொழில் நுட்பவியலாளர் வந்து சேர்ந்தார். தன்னை என்னிடம் அறிமுகம் செய்து கொண்டார்.

'என் பெயர் கொல்கர் றாம்' (Holger Tham)' புன்னகையுடன் தன்னை அறிமுகம் செய்தார். சிரித்த முகம். கனிவாகப் பேசினார். பார்த்தவுடன் மனதில் இடம் பிடித்து விட்டார்.

இனி அடுத்த நான்கு கிழமைகள் இவர் எங்களோடுதான். வன்னியில் நுளம்பு, பூச்சிகள், பூரான்களுடன் சிரமப்படப் போகிறான் என நினைத்துக் கொண்டேன்.

டுசுல்டோர்ப் விமான நிலையத்தில் இருந்து கொழும்பு புறப்பட பயண ஏற்பாடு. குறித்த நேரத்தில் அங்கே நின்றோம்.

138c07e5-f8d8-4970-8786-32898abdffcb4.jp

பயணப் பொதிகளை கொடுத்து போடிங் பாஸ் எடுத்துக் கொண்டோம். இப்பொழுது எங்கள் தோள்களில் தொங்கும் அடக்கமான சிறிய பையே மிகுதியாக இருந்தது.

ஆனந்தண்ணையைப் பார்த்தேன். சோர்வாக இருந்தார்.

'நித்திரை காணாது போலை?'

'முந்தநாளும் நித்திரை இல்லை. நேற்றும் இல்லை. உங்களை அனுப்பிப் போட்டு, இரண்டு நாளுக்கு ஒரு வேலையும் செய்யிறதில்லை. பேசாமல் வீட்டிலை இருக்கப் போறன்'

ஆனந்தண்ணை மிகவும் சோர்வாகவே பேசினார். அவரே கேட்டார். 'நேரம் இருக்குத்தானே கோப்பி குடிப்பமே?'

எனக்கும் அது நல்லதாகப் பட்டது.

விமான நிலையத்துக்குள் இருந்த கோப்பி பாரில் நிறைய கூட்டமாக இருந்தது. எங்களுக்காககவே ஒதுக்கப்பட்டது போல் ஓர் இடம் பாரின் மூலையில் இருந்தது. அமர்ந்து கொண்டோம்.

கோப்பி வந்தது. அதை பருக ஆரம்பித்தோம். அப்போதைக்கு அது அமிர்தமாக இருந்தது.

'அங்கை ஏதாவது பிரச்சினை என்றால் எனக்கு போன் செய்யுங்கோ' சொல்லிக் கொண்டிருந்த ஆனந்தண்ணை கதிரையில் இருந்து நழுவி தரையில் விழுந்து துடித்துக் கொண்டிருந்தார்.

இது யாரும் எதிர்பார்க்காதது.

நிலைமையை அவதானித்த பாரின் ஊழியர் ஒருவர் எங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் திரை மறைப்பு ஒன்றை தற்காலிகமாகப் போட்டார்.

ஆனாலும் ஆனந்தண்ணை நிலத்தில் இருந்து துடிப்பதை அவதானித்த அங்கிருந்தவர்கள், ஏதோ அசம்பாவிதம் நடக்கிறது எனப் பயந்து பாரை விட்டு ஓட ஆரம்பித்தார்கள். சில செக்கன்கள்தான் பார் வெறுமையாக இருந்தது.

கொல்கர் உடனடியாகவே அம்புலன்சிற்கு போன் செய்தான்.

ஆனந்தண்ணையுடன் கூட வந்தவர் அவருக்கு எப்போதாவது இப்படி வரும் என்று சொன்னார்.

கொல்கர் உட்பட நாங்களும் நிறையப் பயந்து போயிருந்தோம்.

அம்புலன்ஸ் வந்தது. ஆனந்தண்ணைக்கு அவசர சிகிச்சை தந்தார்கள். வைத்தியசாலைக்கு கொண்டு போவதற்கு அவரை தள்ளு வண்டியில் வைத்து நகர்த்தினார்கள்.

ஆனந்தண்ணையால் உரையாட முடியவில்லை கண்கள் சொருகி இருந்தன.

'நித்திரை கொள்ளாதீர்கள்' என அவரைத் தட்டித் தட்டி எழுப்பியபடியே அம்புலன்ஸில் ஏற்றினார்கள்.

ஆனந்தண்ணையுடன் கூட வந்தவரும் அவர்களது வாகனத்திலே ஏறிக் கொண்டார்.

நாங்கள் தனித்து நின்றோம்.

பார் உரிமையாளர் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். 'பாவிகளே எங்களின்ரை வியாபாரத்தை நாசமாக்கிட்டீங்களே' என்று அந்தப் பார்வை எனக்கு விளக்கம் சொன்னது.

நேரம் நெருங்கி விட்டிருந்தது. போடிங் பாஸைக் காட்டி விட்டு விமானத்துக்குள் ஏற முற்படும் பொழுது ஒலிபெருக்கி என் பெயரைச் சொன்னது.

'நீங்கள் கொண்டு செல்லும் பொதிகளில் உள்ள பொருட்களைப் பற்றிய விளக்கம் தேவைப்படுகிறது. எங்களது இடத்துக்கு தயவுசெய்து உடனடியாக வரவும்' என்று அது மேலும் சொன்னது.

விமான சிப்பந்தி என்னை அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்துக் கொண்டு சென்றார்.

மேசையில் எனது பொதி இருந்தது. திறந்து காட்டச் சொன்னார்கள்.

அப்பொழுதுதான் நானும் அதை திறந்து பார்க்கிறேன்.

'நீங்கள்தானே இதை பக் செய்தது?'

வெளியார் யாரும் பொதிகளை தந்தார்களா? நீங்கள்தான் எல்லாவற்றையும் பொதி செய்தீர்களா என்று பொதிகளைக் கையளிக்கும் பொழுது கேட்ட கேள்விகளுக்கு அடியேன் எல்லாம் நான்தான் என்று ஒப்புதல் கொடுத்திருக்கிறேன். ஆகவே இப்பொழுது மறுக்க முடியாது. இல்லை என்று மறுத்தால் பிரச்சினை அதிகமாகும். ஆனந்தண்ணையும் இல்லை. உள்ளே ஆயுதங்கள் ஏதாவது..? மனது படபடத்தது. ஆனாலும் துணிவுடன் பொதியை திறந்து காட்டினேன்.

பொதிக்குள் இருந்து மருந்துகள் நிறைந்த இரண்டு தகர டப்பாக்களை எடுத்து மேசையில் வைத்தார்கள். இரண்டு தகர டப்பாக்களிலும் மண்டை ஓட்டுப் படம் இருந்தது.

தொடரும்...

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=11&contentid=138c07e5-f8d8-4970-8786-32898abdffcb

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - பகுதி 3

அடுத்தநாள் கட்டுநாயக்காவில் நின்றோம்

மூனா

cd51e8d1-f1f9-4dcb-aa9e-1364e572cf2a1.jp

மண்டையோட்டுப் படம் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பது போல் எனக்குத் தோன்றியது.

மண்டையோடு மட்டுமல்ல அதிகாரிகளும் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

'எங்களின் கொம்பியூட்டர்களில் இவை தெரிந்தன. இவைகளை விமானத்தில் கொண்டு செல்ல அனுமதி இல்லை'

பண்பாகப் பேசினார்கள்.

அது எனக்குப் போதுமானதாக இருந்தது. எனது பயணத்தின் நோக்கத்தைப் பற்றி சொல்ல ஆரம்பித்தேன். கூடவரும் கொல்கரின் பெயரையும் இழுத்து விட்டேன்.

'நல்ல நோக்கத்திற்கான பயணம். ஆனாலும் இப்படியான பொருட்களைக் கொண்டு செல்வதானால் அதற்காக பிரத்தியேகமான படிவங்களை பூர்த்தி செய்து அனுமதியை நீங்கள் பெற்றிருக்க வேண்டும்'

பிரச்சினை எனக்குப் புரிந்தது. ஆனால் பொதிக்குள் என்ன என்ன இருக்கிறது என்பதை அவர்கள் சொல்லவில்லையே.

'செயற்கைக் கால்களைச் செய்வதற்கான சில இரசாயனப் பொருட்களும் இதுக்குள்ளை இருக்கு. எல்லாத்தையும் அங்கை கொண்டு போய்ச் சேர்க்கிறது எங்கடை பொறுப்பு என்ற பேச்சோடைதான் ஒத்தப்பேடியோடை ஒப்பந்தம் செய்து இருக்கிறம். நீங்கள்தான் கொண்டு போகவேணும். இவை எல்லாம் உங்கடை பொறுப்பு' ஆனந்தண்ணை சொன்னது காதில் கேட்டுக் கொண்டிருந்தது.

முடிந்தளவு வாதாடிக் கொண்டிருந்தேன். அவர்கள் இறங்கி வரவில்லை.

'இப்படியான பொருட்களை பொதிக்குள் வைத்திருந்ததற்காக பேசாமல் உங்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கையளித்துவிட்டு, நாங்கள் எங்களது அடுத்த வேலையைப் பார்க்கலாம். ஆனாலும் ஒரு புனர்வாழ்வுப் பணிக்காக போகும் உங்களுக்குப் பிரச்சினைகள் தர நாங்கள் விரும்பவில்லை. உங்களை நாங்கள் நம்புகிறோம். வேண்டுமானால் அந்த இரண்டு பொருட்களையும் எடுத்து வைத்துவிட்டு உங்கள் பயணத்தை தொடருங்கள்'

அந்த இரண்டு பொருட்களும் இல்லாமல் பயணம் செய்வதில் அர்த்தம் இல்லை. வன்னியில் அவற்றைப் பெறுவதற்கு வாய்ப்புகள் இல்லை. ஆனந்தண்ணைக்குத் தகவல் தருவதற்கும் முடியவில்லை. எண்ண அலைகள் எனக்குள் எழுந்து, என்னை அங்கே இங்கே என்று இழுத்துக் கொண்டிருந்தன.

விமானத்தில் இருந்து என் பெயர் சொல்லி இறுதி அறிவிப்பு வந்தது. அங்கே அவர்கள் கதவைப் பூட்டப் போகிறார்கள்.

எனக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் எனது மனைவியும், கொல்கரும் விமானத்துக்குள் இருந்து தவித்துக் கொண்டிருப்பார்கள்.

'இங்கிருந்து தொலைபேசி எடுக்கலாமா?'

யாருடன் கதைக்க வேண்டும்?

எங்களது கழகத்தின் தலைமையுடன்.

சற்று தாமதித்தார்கள்.

இலக்கத்தைச் சொல்லுங்கள்.

சொன்னேன். நல்லவேளை அலுவலகத்தில் வூப்பெற்றால் நகரத் தொண்டர் இருந்தார்.

அவருக்கு நிலமையைச் சொல்லி அந்த இரண்டு தகர டப்பாக்களையும் பொறுப்பேற்று எனக்கு வன்னிக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி சொன்னேன். அவரது பெயர் மற்றைய விபரங்களை அலுவலகருக்கு எழுதிக் கொடுத்தேன். அவர்களுக்கு அது திருப்தியாகப் பட்டது.

'உங்களுக்கு நேரமாகி விட்டது. இங்கிருந்து ஓடிப் போனால் மட்டுமே விமானத்தில் ஏற வாய்ப்பு இருக்கிறது. முயற்சி செய்யுங்கள்' அலுவலகர் சொன்ன பொழுது பகீர் என்றது. அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு ஓட ஆரம்பித்தேன்.

கடைசி செக்கன் என்பார்களே அதை அன்றுதான் உணர்ந்தேன். திட்டாத குறையாக உள்ளே போக அனுமதித்தார்கள்.

விமானத்தின் உள்ளே போய் இருக்கையில் அமரும் பொழுது, மனைவியிடம் இருந்தும் கொல்கரிடமும் இருந்து ஒரே கேள்வி வந்தது. மொழிகள் மட்டும் இரண்டாக இருந்தது.

'என்ன பிரச்சினை?'

'இரண்டு மருந்தை விடமாட்டார்களாம்' ஒரு மொழியில் சொன்னேன்.

'நாங்கள் அப்பவே சொன்னனாங்கள். தாங்கள் எல்லாம் செய்யிறம் எண்டு சொல்லிச்சினம். அந்த மருந்து இல்லாமல் போறதிலை பிரயோசனம் இல்லை' கொல்கர் தலையில் அடித்துக் கொண்டான்.

'இறங்கிப் போய் திரும்ப எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு வருறதுக்கு இனி வாய்ப்பில்லை. அங்கை போயிட்டு, ஏதாவது வழி இருக்கிறதா எனப் பார்பபோம். பிளேன் இப்ப ரன்வேயில் ஓடிக்கொண்டு இருக்குது'

கொல்கர் சமாதானம் ஆகவில்லை என்பது தெரிந்தது.

எல்லாம் சரியாக நடக்கும் என்று என் மனம் சொன்னது.

அடுத்தநாள் இலங்கையில் கட்டுநாயக்காவில் நின்றோம். பெரிய பெரிய பொதிகளை தள்ளு வண்டிகளில் வைத்துத் தள்ளிக் கொண்டு வந்தோம்.

நாங்கள் வைத்திருந்த பெரிய பொதிகளை அதிகாரிகள் அதிசயமாகப் பார்த்தார்கள். எங்கள் மூவரையும் ஏற இறங்கப் பார்த்துவிட்டு தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

சமரசங்களும், சாமர்த்தியங்களும் சேர்ந்து உதவியதால், பொதிகளைப் பிரிக்காமலே எங்களைப் போக அனுமதித்தார்கள்.

வாசலில் எனது அண்ணன் எங்களுக்காகக் காத்து நின்றார். அவர் கொழும்பில் ஒரு சட்டத்தரணியாக இருப்பதால், அவரையே விமானநிலையத்துக்கு வரும்படி கேட்டிருந்தேன். ஏதாவது சிக்கல்கள் இருந்தால் வக்கீல் ஒருவர் தேவை என்ற முன் ஏற்பாடுடனேயே அந்த ஒழுங்கைச் செய்திருந்தேன்.

இருபது வருடங்களுக்கு முன்னர் பார்த்த அதே தோற்றம். மாற்றங்கள் பெரிதாகத் தெரியவில்லை. சகோதரப் பாசங்களைக் காட்டிவிட்டு கொல்கரை அண்ணனுக்கு அறிமுகப் படுத்தினேன்.

நாங்கள் மூவரும் தங்குவதற்கு ஒரு வீட்டை வெள்ளவத்தையில் ஒழுங்கு செய்திருந்தார்.

கொழும்பு நோக்கி வாகனத்தில் பயணம் செய்யும் பொழுதே அண்ணன் கேட்டார்,

'வன்னிக்குப் போறதுக்கு டிபென்ஸ் மினிஸ்ரியிடம் இருந்து பாஸ் எடுக்கோணும். யேர்மனியில் இருந்து வெளிக்கிடக்கை அப்பிளை பண்ணிப் போட்டே வந்தனீ?'

'இல்லை இங்கை உடனேயே எடுக்கலாம் எண்டு சொல்லிச்சினம்'

'நான் நினைக்கேலை குறைஞ்சது ஒரு கிழமையாவது வேணும். சில நேரங்களிலை ஒரு மாதமும் செல்லலாம்'

இருப்பதோ நான்கு கிழமைகள்தான். ஒருநாள் என்றால் ஓகே. ஆனால் அனுமதி கிடைக்க ஒரு கிழமையானால்?

'உங்களைச் சந்திக்கிறதுக்கு ரி.ஆர்.ஓவில் இருந்து ஒருவர் கொழும்புக்கு வருவார். பாஸ் எடுக்கிறதிலை இருந்து உங்களை வன்னிக்குக் கூட்டிக் கொண்டு போற வேலை எல்லாம் அவர் பார்ப்பார்' ஆனந்தண்ணை சொன்னது நினைவில் வந்தது. அதை அண்ணனிடம் ஒப்புவித்தேன்.

'உங்கள் இரண்டு பேரிட்டையும் ஐடென்ரிக் கார்ட் இருந்தால் உங்களுக்குப் பாஸ் எடுக்கத் தேவை இல்லை. கொல்கருக்கு மட்டும் எடுத்தால் போதும்' அண்ணன் சொன்ன பொழுது மனைவியைப் பார்த்தேன். ஐடென்ரிக் கார்ட் இருப்பதாகச் சொன்னார்..

தொடரும்…

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=11&contentid=cd51e8d1-f1f9-4dcb-aa9e-1364e572cf2a

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - பகுதி 4

வன்னி செல்ல பாஸ் எடுத்தாயிற்று

மூனா

2146c3a6-888e-494b-a8a3-6567a2816a9c1.jp

வெளிநாட்டவருக்கு சுலபமாக வன்னிக்கு செல்வதற்கு அனுமதி கிடைத்து விடும் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது.

வெள்ளவத்தையில் அண்ணன் ஒழுங்கு செய்து தந்த வீடு, சகல வசதிகளையும் கொண்டிருந்தது. சாப்பாட்டு வசதிகளை தனது வீட்டிலேயே அண்ணன் ஒழுங்கு செய்திருந்தார். ஆகவே எங்களுக்கு கொழும்பில் தங்குமிடம், உணவு என்ற பிரச்சனை இருக்கவில்லை.

நான் செய்யவேண்டிய வேலைகளை வரிசைப்படுத்தினேன்.

முதலாவதாக எங்களைச் சந்திப்பதற்காக ரிஆர்ஓ வில் இருந்து வந்திருப்பவரை தொடர்பு கொள்வது.

இரண்டாவதாக கொல்கருக்கு வன்னிக்குச் செல்வதற்கான அனுமதியை பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து பெறுவது

மூன்றாவதாக ஆனந்தண்ணையை தொலைபேசியில் தொடர்புகொள்வது

நான்காவது வன்னிக்குப் புறப்படுவதற்கான பயண ஏற்பாடு செய்வது.

நான் கொழும்பில் சந்திக்க வேண்டியவரின் பெயர் சிவா மாஸ்ரர். அவரது இலக்கத்துக்கு தொலைபேசி எடுத்து என்னை அறிமுகம் செய்து கொண்டேன்.

'வந்திட்டீங்களா? யேமன்காரரும் வந்தவரோ? இண்டைக்குப் பின்னேரம் வன்னிக்குப் போகலாம்தானே?'

நான் பேசுவதற்கு முன்னர் அவரிடம் இருந்து அவசரமாகக் கேள்விகள் வந்து விழுந்தன.

'யேர்மன்காரர் வந்திருக்கிறார். ஆனால் அவருக்கு வன்னிக்குப் போறதுக்கு பாஸ் எடுக்கோணும்'

'எப்ப எடுக்கப் போறீங்கள்?'

அவர் அப்படிக் கேட்டதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

'நீங்கள்தானே அதுக்கான ஒழுங்குகள் பார்க்கோணும்' நான் அப்படிச் சொன்னதும் அங்கிருந்து மௌனமே பதிலாக இருந்தது.

சிறிது நேரத்துக்குப் பின், 'உங்களை வன்னிக்குக் கூட்டிக் கொண்டு வரச் சொல்லித்தான் என்னை அனுப்பினவையள். மற்றதை எல்லாம் நீங்கள்தான் கவனிக்கோணும்' தயங்கித் தயங்கி அவரிடம் இருந்து பதில் வந்தது.

எனக்கு அவரது பதில் அதிர்ச்சியை மட்டும் தரவில்லை. கூடவே எரிச்சலையும் தந்தது.'எங்கை இருக்கிறியள்? விலாசத்தைச் சொல்லுங்கோ. நான் நேரிலேயே வாறன்'

முகவரியைத் தந்தார். காலி வீதியில் வெள்ளவத்தையும், தெகிவளையும் சந்திக்கும் வீதியில், ரொக்கி தியேட்டருக்கு முன்பாக அந்த முகவரி இருந்தது.

படிக்கும் காலங்களில் இந்த வழியாக இரண்டடுக்கு பாடசாலை பஸ்ஸில் மாணவனாக பயணித்த எனது பழைய நினைவுகள் வந்து போயின. எதுவுமே மாறவில்லை. அப்படியே இருந்தன.

அவர் குறிப்பிட்ட கட்டிடத்தின் முன்னால் இருந்த தமிழர் புனர்வாழ்வுக் கழக கொழும்புக்கிளை அறிவிப்புப் பலகை எங்களை வரவேற்றது. உள்ளே சென்றோம்.

அவருடன் உரையாடும் பொழுதே தெரிந்து கொண்டேன். அவருக்கு சொல்லப்பட்டது எல்லாம் இதுதான், 'வருபவர்களை அழைத்துக் கொண்டு வன்னி வந்து சேருங்கள்'

இப்பொழுது கொல்கருக்கு வன்னிக்கு பாஸ் எடுப்பதும் எனது வேலையாயிற்று.

வன்னிக்கு பாஸ் எடுத்திட்டு உங்களுக்குத் தகவல் தருகிறேன் என்று சொல்லிவிட்டு விடைபெற்றேன்.

'தம்பி தெண்டிச்சு நாளைக்கு எடுத்துப் போடுங்கோ. நான் உடனை வந்திடுவன் எண்டு வீட்டை சொல்லிப் போட்டு வந்தனான்', வாசல் வரை அவரது குரல் கேட்டது.

தங்கியிருந்த வீட்டிற்குப் போகும் வழியில் இருந்த தொலைத் தொடர்பு நிலையம் ஒன்றில் இருந்து ஆனந்தண்ணைக்கு தொலைபேசி எடுத்தேன்.

'ஒரு கிழமைக்கு ஆஸ்பத்திரியிலை இருக்கச் சொல்லிட்டாங்கள். உடம்பிலை எங்கெங்கை வயருகள் பொருத்த வசதியோ அங்கே எல்லாம் பொருத்தியிருக்கிறாங்கள். அசைய முடியாமல் கட்டிலிலை படுத்திருக்கிறன்' என்று ஆனந்தண்ணையிடம் இருந்து பதில் வந்தது.

அவரது நிலைமையைக் கேட்க சிரமமாக இருந்தது. ஆனாலும் எனது நிலைமைகளைச் சொன்னேன்.

ஆனந்தண்ணை வைத்தியசாலைக் கட்டிலில் படுத்திருந்தாலும், காரியங்களைச் செய்து கொண்டே இருந்தார்

'நீங்கள் எயர்போட்டிலை விட்டிட்டு போன பொருட்களை உடனையே எடுத்திட்டம். கன பேர் இஞ்சை இருந்து இப்ப ஊருக்கு வெளிக்கிட்டுக் கொண்டிருக்கினம். ஆரிட்டையாவது குடுத்து விடுறம். நீங்கள் கொல்கருக்கு வன்னிக்கு போறதுக்கான பாஸை எடுத்துக் கொண்டு அங்காலை போற அலுவலைப் பாருங்கோ' ஆறுதலான வார்த்தைகள் அவரிடம் இருந்து வந்தன.

நலம் பெற வாழ்த்தைச் சொல்லி விட்டு தொலைபேசியை வைத்தேன்.

அடுத்தநாள் சந்தியில் இருந்த ஆட்டோவை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு நம்பிக்கையோடு பாதுகாப்பு அமைச்சகத்துக்குச் சென்றோம்.

கொல்கருக்கான விண்ணப்பப் படிவத்தைக் கொடுத்தோம். நாங்கள் தங்கி இருக்கும் முகவரி, தொலைபேசி இலக்கங்கள் அந்த விண்ணப்பப் படிவத்தில் இருந்தன.

எல்லாவற்றையும் சரி பார்த்து விட்டு, அலுவலகர் நிமிர்ந்து பார்த்தார். அந்தப் பார்வை 'நீங்கள் இடத்தைக் காலி பண்ணுங்கள்' என்பது போன்று இருந்தது.

'வன்னிக்கான பாஸ்' வார்த்தையை மெதுவாக இழுத்தேன்.

அலுவலகர் விண்ணப்பப் படிவத்தை இன்னும் ஒரு தடவை பார்த்து விட்டு, 'விலாசம் இருக்கு. எல்லாம் முடிஞ்சாப் போலை அறிவிக்கிறம்'

'அவசரமா வன்னிக்குப் போகோணும். நாங்கள் எடுத்துக்கொண்டு வந்த லீவும் குறைவு'

'உங்கள் அவசரத்துக்கு நாங்கள் வேலைசெய்ய முடியாது. நேரம் இருந்தால் நாளைக்கு வந்து பாருங்கோ. முடிஞ்சிருந்தால் உடனையே தந்து விடுகிறோம்'

நம்பிக்கை கொஞ்சம் துளிர்த்தது.

அடுத்தநாள் பாஸ் கிடைத்தவுடன் வன்னிக்குப் போய் விடுவோம். அங்கு சேவைகளை செய்து விட்டு திரும்ப கொழும்பு வரும்பொழுது போதுமான நேரம் கிடைக்காது என்ற எண்ணம் தோன்ற, கொல்கருக்கு கொழும்பைச் சுற்றிக் காட்டினேன்.

கொல்கர் மகிழ்ச்சியாக இருந்தான். கடற்கரையில் நின்று குதூகலித்தான். மிளகாய்த் தூளும், உப்பும் தூவிய அன்னாசி வாங்கிக் கொடுத்தேன். சற்றுத் தயங்கினான். சாப்பிட்டுவிட்டு நன்றாக இருக்கிறது என்றான். இரவு நேரம் சென்றே வீடு திரும்பினோம்.

மறுநாள் காலையில் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு முன்னால் நின்றோம்.

அலுவலகரின் பார்வை அவ்வளவு நல்லதாகத் தெரியவில்லை.

அவரை நெருங்கிப் போனோம்.

'மன்னிக்கவும் உங்களுக்கான பாஸ் என் கைக்கு இன்னும் வரவில்லை' என்றார்.

ஏமாற்றமாக இருந்தது.

செய்ய வேண்டியவை நிறையவே இருக்க கொழும்பில் நேரம் வீணாகப் போய்க் கொண்டிருந்தது.

'நான் உடனை வந்திடுவன் எண்டு வீட்டை சொல்லிப் போட்டு வந்தனான்' சிவா மாஸ்ரர் சொன்னதும் காதில் கேட்டுக் கொண்டிருந்தது.

கொல்கர் தலையாட்டி விட்டு சிரித்தான். 'ஏன் தாமதிக்கிறார்கள்? நாங்கள் சேவை செய்யத்தானே போகிறோம்'

தங்களுக்கு என்றால் சிவப்புக் கம்பளம் விரிப்பார்கள். நாங்கள் போக வேண்டியதும் சேவை செய்ய இருப்பதும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு என்று அவனுக்குச் சொல்ல நினைத்தேன். வேண்டாம் என்று உள்ளுணர்வு சொன்னதால் நிறுத்திக் கொண்டேன்.

அலுவலகர் எங்களையே பார்ப்பது தெரிந்தது. கொஞ்சம் கதைத்தப் பார்த்தால் என்ன என்ற எண்ணம் வந்தது. அவர் தனியாக இருந்தது இன்னும் எனக்கு வசதியாகப்பட்டது.

எங்களது நிலைமையை அவருக்கு மீண்டும் விளக்கினேன். பணம் செலவானாலும் பரவாயில்லை.. தருகிறேன் என்றேன். எல்லாவற்றையும் கொல்கர் பார்த்தும் கேட்டும் கொண்டிருந்தான். எனது சாமர்த்தியத்தை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் அவன் பார்த்திருந்ததால், என்மீது அவனுக்கு அலாதியான நம்பிக்கை இருந்தது.

அலுவலகர் உதவ முன்வந்தார். எங்களை வெளியே காத்திருக்கும்படி சொல்லிவிட்டு யார் யாருடனோ எல்லாம் தொலைபேசியில் பேசினார்.

சிறிது நேரத்துக்குப் பின் எங்களைக் கூப்பிட்டார். உள்ளே போனோம்.

'ஒபீசரோடை கதைச்சனான். (கொல்கரைக் காட்டி) இவர் தன்ரை அவசரத்தைச் சொல்லி அவரோடை கதைச்சால் அலுவல் முடிஞ்சிடும்'.

கொல்கரும் சரி என்றான்.

தொலைபேசி அழைப்பில் அவர் குறிப்பிட்ட ஒபீசர் வந்தார். கொல்கர் கதைக்க ஆரம்பித்தான்.

'காசு தரலாம்... வன்னிக்குப் போக பாஸ் தாருங்கள். எவ்வளவு எதிர்பார்க்கிறீர்கள்?'

தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது.

அலுவலகருக்கும் எனக்கும் அதிர்ச்சியாக இருந்தது. கொல்கரைச் சொல்லிக் குற்றம் இல்லை. எங்கே எப்படி கதைக்க வேண்டும் என்று அவனுக்குத் தெரியவில்லை.

அலுவலகர் நீங்கள் போகலாம் என்ற பார்வை பார்த்தார்.

வெளியேறினோம்.

கொல்கர் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டே இருந்தான்.

'எப்பிடி அவர் ரெலிபோனைக் கட் பண்ணலாம்?'

கொஞ்ச நேரத்தில் அமைதியானான். 'தவறு செய்திட்டேன்' என்றான். 'பரவாயில்லை. அது முடிந்து போயிற்று' என்று அவனுக்கு ஆறுதல் சொன்னேன். ஆனால் இனி நான் தனியாகவே இதைக் கையாள்வது என்று முடிவு செய்தேன்.

மீண்டும் கடற்கரை, கட்டிடங்கள், காட்சிகள் என்று அன்றைய நேரம் போனது.

அலுவலகரின் தொலைபேசி இலக்கத்தை நான் முன்னரே வாங்கி வைத்திருந்தது எனக்குப் பயன்பட்டது.

அவருடன் தனியாகவே தொலைபேசியில் உரையாடிக் கொண்டேன்.

மறுநாள் காலை கொல்கரையும் அழைத்துக் கொண்டு வாடகை ஓட்டோவில் பாதுகாப்பு அமைச்சகம் நோக்கி போய்க் கொண்டிருந்தேன். எங்களை முட்ட வருவது போல் ஒரு ஓட்டோ பக்கவாட்டில் வந்தது. இரண்டு ஓட்டோக்களுமே ஒரே பாதையில் சமாந்தரமாகப் பயணித்துக் கொண்டிருந்தன. எனக்கு கொஞ்சம் பயம் இருந்தாலும் நான் அதைக் காட்டிக் கொள்ளவில்லை.

பக்கத்தில் வந்த ஓட்டோவில் இருந்த சாரதி எங்களது ஓட்டோ சாரதியைப் பார்த்து, 'என்ன இண்டைக்கு வீட்டிலை கோழியோ? என்று கேட்டுவிட்டு விலகிப் போனார்.

எங்கள் ஓட்டோ சாரதியைப் பார்த்தேன். அவரது முகத்தில் மகிழ்ச்சி இல்லை.

'கோழி என்றாரே. அப்பிடி என்றால் என்ன?' ஆர்வ மிகுதியால் அவரிடம் கேட்டேன்

வெறுப்பாகவே அவரிடம் இருந்து பதில் வந்தது. 'பொதுவா வெள்ளைக்காரனை ஓட்டோவிலை ஏத்திக்கொண்டு போனால், அவன் பாத்தும் பாராமலும் அள்ளித் தருவான். அப்பிடிக் காசு கிடைக்கிற நேரத்திலைதான் வீட்டிலை கொஞ்சம் வசதியான சாப்பாடு சாப்பிடுவம். அதுக்குத்தான் அப்பிடிக் கேட்டிட்டுப் போறான்'

நாங்கள் தங்கி இருந்த வீதியின் முனையில்தான் இந்த ஓட்டோ எப்பொழுதும் நிற்கும். அதில்தான் நாங்கள் எப்பொழுதும் பயணித்திருக்கிறோம். இன்றும் அதில்தான் போய்க் கொண்டிருக்கிறோம். வெள்ளையன் அதில் பயணித்தாலும் சாரதிக்கு கோழி கிடைக்க வாய்ப்பில்லை. காரணம் கறுப்பன் நானும் அல்லவா சேர்ந்து பயணிக்கிறேன்.

பாதுகாப்பு அமைச்சகத்தக்கு முன்னால் ஓட்டோ நின்றது. கொல்கரும் நானும் இறங்கிக் கொண்டோம். ஒட்டோ சாரதிக்கான பணத்தைக் கொடுத்தேன். ஆச்சரியமாக நிமிர்ந்து பார்த்தார்.

'நாலைஞ்சு நாளைக்கு உங்கடை வீட்டிலை கோழி'

ஓட்டோவை விட்டு இறங்கி நன்றி சொல்லிவிட்டுப் போனார்.

உள்ளே போகும்போது, 'இண்டைக்கு நான் அந்த ஒபிசரோடை நல்ல முறையிலை கதைக்கிறேன்' என்று கொல்கர் சொன்னான்.

'தேவை இல்லை'

'என்னை நம்பு, நான் நல்ல முறையிலை கதைக்கிறேன்' நின்றவன் கையை பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தபடியே சொன்னேன்.

'அவசியம் இல்லை'

'ஏன்?'

'எல்லாம் முடிஞ்சுது. கையெழுத்துப் போட்டு பாஸை வாங்கிட்டு வா'

'உனக்கு எப்பிடித் தெரியும்?'

'காலையிலை அலுவலகரோடை போனிலை கதைச்சனான்'

கொல்கரின் பார்வையில் சில கேள்விகள் இருந்தன. அவனது உதடு சிரித்துக் கொண்டது.

'சரி வன்னிக்கு எப்போ போகிறோம்?' கொல்கரின் கேள்வியில் தயக்கம் தெரிந்தது.

'இன்று இரவு'

'அப்போ இன்றிரவு உன் அண்ணனோடை நான் பியர் குடிக்க வாய்ப்பில்லையா?'

'போறதுக்கு முன்னால் வேணுமானால் கொஞ்சம் போட்டுக் கொள். அடுத்த மூன்று கிழமைக்கு அதற்கான சந்தர்ப்பம் உனக்கு இல்லை.'

'தெரியும் அங்கை கிடைக்காது என்று. அது ஒழுங்கும் கட்டுப்பாடும் கொண்ட இடம் என்று எனக்கு ஏற்கெனவே தெரியும்'

ஒருவாறு கொல்கருக்கு வன்னி செல்வதற்கான பாஸ் எடுத்தாயிற்று.

தொடரும்.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=11&contentid=2146c3a6-888e-494b-a8a3-6567a2816a9c

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

இது அப்படியே என்னுடைய கதையும் பயணமுமாக இருக்கு..

தொடருங்கள்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தரலாம் - பகுதி 5

சோதனைச் சாவடி திறந்தது

மூனா

788e78c9-c135-4958-ae4c-5ff4f69413a11.jp

சிவா மாஸ்ரருக்கு தொலைபேசி எடுத்தேன். 'வன்னிக்கு இன்றிரவு புறப்படலாம்' என்றேன். வன்னிக்குப் போவதற்கான வாகனத்தை ஒழுங்கு செய்துவிட்டு தனக்குச் சொல்லும்படி சொன்னார்.

அதையும் நானா செய்ய வேண்டும்? அவரிடம் கேட்டால் 'வருபவர்களை அழைத்துக் கொண்டு வன்னி வந்து சேருங்கள்' என்றுதான் தனக்குச் சொல்லி விட்டவர்கள் என்று பதில் வரும். ஆகவே மேற்கொண்டு அவரிடம் கதைப்பதில் ஏதும் பயனில்லை. வாகனம் ஒன்றை ஒழுங்கு செய்யச் சொல்லி அண்ணனிடம் சொன்னேன்.

சிறிய வான். சிவா மாஸ்ரருக்கு வீட்டுக்கு எப்போ போய்ச் சேரலாம் என்ற நினைப்பு. வாகனத்தின் முன்னுக்கு அமர்ந்து கொண்டார். எங்களுக்கு பின்னால் இருப்பதற்கு போதுமான இடம் இருந்தது. சாரதியும் அவரது உதவியாளரும் முன்னால் அமர்ந்து கொண்டார்கள். சில நாட்களானாலும் அண்ணனும், கொல்கரும் அதிகநாள் நண்பர்கள் போல் தங்கள் பிரிவின் துயரைக் காட்டிக் கொண்டார்கள். எல்லாம் பியர் தந்த நட்பு என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

போகும் வழியில் வெள்ளையப்பம் அதோடு சேர்த்துச் சாப்பிட சீனிச் சம்பல், பூப்போன்ற இடியப்பம் அதற்கான 'பொல்' சம்பல், சொதி என இரவுச் சாப்பாடு நன்றாகவே இருந்தது.

அதிகாலை, இருள் விலகவில்லை. வவுனியாவைச் சென்றடைந்தோம். அங்கிருக்கும் ஒரு விடுதியில் குளித்து, இளைப்பாறி மறுநாள் பயணம் செய்வதாக ஏற்பாடாகி இருந்தது.

வீதியில் மாடுகள் படுத்திருந்தன. எதையும் பொருட்படுத்தாது அவை அசை போட்டுக் கொண்டு அமைதியாக இருந்தன. அவைகளை எல்லாம் விலகி வாகனம் சென்று விடுதி முன் நின்றது.

வவுனியாவில் எங்களை வரவேற்பவர் விடுதி வாசலிலேயே காத்திருந்தார். தன்னை எங்களிடம் அறிமுகம் செய்து கொண்டார். 'உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யச் சொல்லி என்னட்டை சொல்லி இருக்கினம்'

அறிமுகத்தோடு நலன் விசாரிப்பையும் முடித்துக் கொண்டு விடுதிக்குள் சென்றோம்.

கொல்கருக்கு அந்த விடுதி பிடிக்கவில்லை. ஆகவே அங்கு தங்கும் எண்ணத்தைக் கைவிட்டோம்.

'அங்காலை போறதுக்கு கன சனம் ராத்திரியே வந்து காத்துக் கொண்டிருக்குது. நீங்கள் இண்டைக்குப் போறதாயிருந்தால் இப்ப போய் கியூவிலை நிண்டால்தான் மத்தியானத்துக்காவது அங்காலை போகலாம்' வவுனியாவில் எங்களுக்கு உதவிக்கு வந்தவர் தகவல் தந்தார்.

ஆகவே காலைத் தேவைகளை உடனடியாக முடித்துக் கொண்டு வன்னிக்கான பயணத்தை தொடர்வது எனத் தீர்மானித்துக் கொண்டோம்.

'சூட்கேசுக்குள்ளை வில்லங்கமான சாமான்கள் இருந்தால் எடுத்து வைச்சிட்டுக் கொண்டு போங்கோ. வெள்ளைக்காரனோடை போகக்கை செக்கிங் கூடவாக இருக்கும்' உதவிக்கு வந்தவர் எச்சரித்தார்.

இருக்கும் பொருட்களை அவர்கள் எடுத்துக் கொண்டால் அல்லது தடுத்து விட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் எனக்குள் ஓடியது.

'அங்காலை இதைக் கொண்டு போறதுக்கு ஏதாவது வழி இருக்குதோ?' அவரிடம் கேட்டேன்.

அவரது வாய் ஓரம் சிரிப்பு ஒன்று தோன்றி மறைந்தது.

'வைச்சிட்டுப் போங்கோ இரண்டு நாளிலை வந்து சேரும்'

அவர் அப்படிச் சொன்னதன் பின் கொல்கர் என்னிடம் தந்து வைத்திருந்த செயற்கைக் கால் செய்வதற்கான பொருட்கள் அடங்கிய பெட்டியை அவரிடம் ஒப்படைத்தேன்.

அவர் அந்தப் பெட்டியை பத்திரமாக வண்டியில் இருந்து இறக்கி விடுதி வாசலில் வைத்தார். இதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த கொல்கரின் முகம் மாறிப் போயிற்று.

'என்னத்துக்கு இதை அவரிட்டை குடுக்கிறாய்? யேர்மனியிலை விட்டிட்டு வந்தது காணாதெண்டு மிச்சத்தையும் இங்கை துலைக்கப் போறியோ? இதுகளும் இல்லாமல் அங்கை போய் என்ன செய்யப் போறம்?' என்று ஏகத்துக்கு கேள்விகளை என்னிடம் கொல்கர் அடுக்கிக் கொண்டே இருந்தான்.

'எல்லாம் சரியாக நடக்கும்' என்று நான் கொல்கரை சமாதானப்படுத்தினேன். அவன் சமாதானம் ஆகவில்லை என்பதை அவன் முகம் காட்டி நின்றது. பிழையான ஆளை தன்னுடன் சேர்த்து விட்டார்களோ என்ற அச்சம் கூட அவனுக்கு வந்திருக்கலாம்.

எதற்கும் இருக்கட்டும் என்று உதவிக்கு வந்தவரிடம் இன்னும் ஒரு தடவை உறுதிப் படுத்திக் கொண்டேன்.

'நாளையிண்டைக்கு அங்கை கொண்டு வந்து சேர்ப்பீங்கள்தானே?'

'பயப்படாதையுங்கோ'

கொல்கரை ஒருவாறு சமாதானம் செய்து கொண்டு ஓமந்தை சோதனைச் சாவடி எல்லையை நோக்கிப் பயணமானோம்.

பெட்டிகள், பொதிகள் என்று ஏகப்பட்ட பொருட்களோடு தார் வீதியில் மக்கள் கூட்டமாக ஆக்கிரமித்திருந்தார்கள். வீதியின் ஓரமாக நீண்ட வரிசைகளில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

நாங்கள் வாகனத்துக்குள்ளேயே இருந்தோம். எங்களுக்கு முன்னால் பெரியளவில் பொருட்களை உள்ளடக்கிய பல லொறிகள் நின்றன. அவற்றின் பிற் பக்கங்களில் மூன்றெழுத்து ஆங்கில எழுத்துகள் அழகழாக, பெரிதாக எழுதப்பட்டிருந்தன. லொறிகளின் உரிமையாளர்கள் தங்களுடைய தந்தை, பாட்டானர் பெயர்களின் முதல் எழுத்துக்களுடன் தங்களது பெயர்களின் முதல் எழுத்தையும் சேர்த்து அழகாக பதிந்து வைத்திருக்கும் பழக்கம் இன்னமும் தொடர்கிறது என்று எண்ணிக் கொண்டேன்.

வெயில் ஏறிக்கொண்டே இருந்தது. சோதனைச் சாவடி திறந்த பாடில்லை.

'நேற்றும் திறக்கேல்லை. இண்டைக்கும் திறக்க மாட்டாங்களோ?' வெளியில் நின்றவர்களில் ஒருவர் பொறுமை இழந்திருந்தார் போலும். இப்படி ஒரு குண்டைப் போட்டு மற்றவர்களை சலனப்படுத்தி விட்டிருந்தார்.

இன்றைக்கு சோதனைச் சாவடி திறக்காவிட்டால் என்ன செய்யலாம் என்ற எண்ண அலைகள் எனக்குள் எழுந்தன. வவுனியா வெய்யில் தாள முடியாமல் வாகன யன்னல் கண்ணாடியை தனது துவாயால் மூடி வைத்துவிட்டு வாகனத்துக்குள் இருந்து கொல்கர் அவிந்து கொண்டிருந்தான். அவனது முகம் உடல் எல்லாம் சிவப்பு வண்ணமாக மாறிக் கொண்டிருந்தன. எங்களுக்கு உதவுவதற்காக வந்து இவ்வளவு சிரமப்படுகிறானே என்று எனது மனது வெந்து கொண்டிருந்தது.

'வேண்டுமானால் வாகனத்தை விட்டு வெளியே இறங்கி நின்று கொள்ளேன்' என்று அவனிடம் கேட்டுப் பார்த்தேன். அவசியம் இல்லை என்றான்.

வழியில் தேவைப்படும் என்று நிறைய தண்ணீர் போத்தல்களை வாங்கி வாகனத்துக்குள் வைத்திருந்தேன். அதை எல்லாம் கொல்கர் இப்பொழுது குடித்து முடித்துக் கொண்டிருந்தான்.

வெளியில் சில்லறை வியாபாரங்களும் நடந்து கொண்டிருந்தன. ஒருவாறு சோதனைச் சாவடியைத் திறந்தார்கள். ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் சோதனைச் சாவடியை மூடி விடுவார்கள் என்பதால் எல்லோரும் தங்கள் அவசரத்தைக் காட்டினார்கள்.

வாகனங்களுக்கான சோதனைகளுக்கு தனியான ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. லொறிகளில் கொண்டு செல்லப்பட்ட சகல பொருட்களும் முற்றாக இறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டன. அவற்றை இறக்குவதற்கும், ஏற்றுவதற்கும் என அங்கே தொழிலாளர்கள் பலர் இருந்தார்கள். இந்தச் செயற்பாடானது பல தொழிலார்களுக்குப் பிழைப்பாக இருந்தது. முதலாளிகளுக்கு மட்டும் பணச் சேதாரமாக இருந்தது.

ஒரு லொறி ஓட்டுனரைக் கேட்டேன், 'இவ்வளவையும் இறக்கி ஏற்றுவது என்பது நேர விரயமாக இருக்குமே?'

'எப்பிடியும் பின்னேரம் ஆகும். இஞ்சை மட்டுமில்லை. அவங்கடை செக் பொயின்ற்றிலையும் இதே பிரச்சினைதான். இறக்கி ஏத்திறதோடை அவையளின்ரை வரியும் சேர்ந்து வரும். நாளைக்குப் பின்னேரமும் முடியுமோ தெரியேல்லை.'

ஒரு பொருளை ஒரு பகுதியில் இருந்து அடுத்த பகுதிக்குக் கொண்டு செல்லும் வேலை என்பது அவ்வளவு எளிதானது அல்ல என்பதை புரிந்து கொண்டேன். எவ்வளவு பொறுமைகளை அவர்கள் கடைப் பிடிக்கிறார்கள் என்பதும் தெளிவானது.

எங்கள் முறை வந்தது. அதிகாரிகள் எங்களைப் பார்த்தர்கள். எங்கள் அடையாளப் பத்திரங்களைப் பரிசோதித்தார்கள். ஒரு பெட்டியை திறக்கச் சொன்னார்கள். திறந்தேன். பார்த்தார்கள். தொடர்ந்து பயணிப்பதற்கு அனுமதி தந்தார்கள்.

கொல்கர் என்னைப் பார்த்தான். 'பேசாமல் அந்தப் பெட்டியையும் கொண்டு வந்திருக்கலாம். அங்கை விட்டிட்டு வந்திட்டியே பாவி' என்று அந்தப் பார்வைக்கான அர்த்தத்தைப் புரிந்து கொண்டேன்.

தொடரும்.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=11&contentid=788e78c9-c135-4958-ae4c-5ff4f69413a1

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தரலாம் – பகுதி 6

வெண்புறாவுக்குள் வாகனம் நுழைந்தது

மூனா

14725257-4500-4dfd-84e7-48769c2bb43f1.jp

இப்பொழுது சிறிலங்காவை விட்டு இன்னும் ஒரு நாட்டுக்குள் நுழைவது போன்ற பிரமை. எனது மனதில் எழுந்த உணர்வுகளை எப்படி எழுதுவது என்று எனக்குத் தெரியவில்லை.

முழு இரவும் பயணம் செய்த களைப்பு. காலையில் சாப்பாடு இல்லை. வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் வெய்யில். இருந்தாலும் மனது மட்டும் குளிர்ச்சியாக இருந்தது. உடலில் ஒரு புத்துணர்ச்சி தானாக வந்து சேர்ந்தது.

கொல்கரின் கண்கள் என்னை நோக்கிக் கொண்டிருந்தன. அவன் எனது மகிழ்ச்சியைப் புரிந்து கொண்டிருந்தான் என்று அவனது புன்னகை சொன்னது.

சிவந்த மண் பாதை வளைந்து வளைந்து சென்றது. போராடிப் போராடி மண்ணும் சிவந்து போய் விட்டதோ என்று எனக்குள் ஒரு கற்பனை வந்து போனது. ஆங்காங்கே தமிழீழக் காவல்துறைப் பணியாளர்கள். ஆண், பெண் என்று நீலநிறச் சீருடை அணிந்து அழகாக ஆனால் விறைப்பாக கடமையே கண்ணாக நின்று கொண்டிருந்தார்கள்.

14725257-4500-4dfd-84e7-48769c2bb43f4.jp

இப்பொழுது தமிழீழச் சோதனை நிலையத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு இறங்கினோம். இருவர் எங்களை நெருங்கி வந்தார்கள். ஒருவர் ஒரு காலை இழந்திருந்தது தெரிந்தது. ஆனால் ஆள் உயரமாகவும், திடகாத்திரமாகவும் இருந்தார். மற்றவர் சாதாரண உயரத்தில் இருந்தார்.

'உங்களை அழைத்துப் போக வெண்புறாவில் இருந்து வந்திருக்கிறோம். திடகாத்திரமானவரின் பேச்சு கனிவாக இருந்தது.

'நாங்கள் வெண்புறாவுக்கு வாறம் எண்டு யார் சொன்னது?'

'தெரியும். வெள்ளைக்காரன் வந்திருக்கிறான். மற்றது சிவா மாஸ்ரர். இந்த இரண்டும் போதும்தானே. உங்களைக் கண்டுபிடிக்க.'

அவர் உடனடியாகவே நட்பாகிப் போனார். வெண்புறா நிறுவனத்தின் தொழில் நுட்பப் பொறுப்பாளர் அவர். அவரது பெயர் கரிகரன். மற்றவர் அவரது உதவியாளர் சடகோபன்.

அறிமுகங்கள் முடிந்தவுடன் 'போகலாமா?' என்றேன்.

'போகலாம். அங்கை போய் அனுமதி எடுக்காமல் உள்ளை விட மாட்டினம்' கரிகரன் காட்டிய திசையில் அலுவலகம் இருந்தது. ஆனால் அவை எல்லாம் அவசர அவசரமாக கட்டிய கட்டிடங்களாக காட்சி தந்தன. தமிழீழத்திற்கும் சிறிலங்காவிற்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்ட சில வாரங்களில் நாங்கள் அங்கே நிற்கின்றோம். இன்னும் சரியான முறையில் கட்டிடங்கள் கட்டப்படாமல் இருப்பது தெரிந்தது.

அனுமதி தரும் பணியகத்துக்கு உள்ளே ஒருவர் இருந்தார். வெளியே நின்றுதான் விண்ணப்பிக்க வேண்டும். கடவுச் சீட்டை பணிமனையில் கொடுத்தேன். எனது கடவுச்சீட்டை வாங்கிப் பார்த்த அந்த இளைஞன், அவருக்கு இருபது வயதுக்குள்தான் இருக்கும்.

'நேற்று அல்பா எண்டு ஒருத்தர் வந்தார். இண்டைக்கு ஆழ்வாப்பிள்ளை எண்டு ஒருவர் வாறார்'

அந்த இளைஞனின் பேச்சில் இருந்த ஏளனத்தைப் புரிந்து கொண்டேன்.

'தம்பி ஆழ்வாப்பிள்ளை ஒரு பழைய பெயர். உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். நீங்கள் பாஸைத் தாங்கோ' நான் அப்படிப் பேசியது அந்த இளைஞனுக்குப் பிடிக்கவில்லை. பேசாமல் எழுந்து உள்ளே போய் விட்டான்.

உள்ளே இருந்து ஒன்று இரண்டு பேர்களாக வந்து எட்டிப் பார்த்தார்கள். எனது பக்கத்தில் நின்றிருந்த கரிகரன் என்னைப் பாவமாகப் பார்த்தான்.

தேவை இல்லாமல் வாயைக் கொடுத்து விட்டேனோ என்று எண்ணம் வந்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் நின்றேன்.

பத்து நிமிசம் போயிருக்கும். அந்த இளைஞன் மீண்டும் வந்தான்.

'வெள்ளைக்காரனுக்குத் தேவை இல்லை. மற்ற இரண்டுக்கும் ஆளுக்கு ஐநூறுப்படி ஆயிரம் ரூபா தாங்கோ' என்னை அந்த இளைஞனுக்குப் பிடிக்கவே இல்லை என்பது தெரிந்தது. என் முகத்தைப் பார்ப்பதை அவன் தவிர்த்ததில் இருந்து அதைப் புரிந்து கொண்டேன்.

நானும் மேற்கொண்டு எதுவும் பேசாமல் பணத்தைக் கொடுத்து உள்ளே செல்வதற்கான அனுமதிப் பத்திரத்தை வாங்கிக் கொண்டேன்.

வெண்புறாவை நோக்கி எங்களது பயணம் ஆரம்பமானது. கிளிநொச்சி வரும் வரை பெரிதாக ஆட்களின் நடமாட்டங்கள் இருக்கவில்லை. நகரத்தை நெருங்க நெருங்க ஆட்களின் நடமாட்டங்களும் தமிழீழ பணியகங்களின் வாகனங்களும், சைக்கிள்களும் என வீதிகள் நிறைந்திருந்தன. எங்களது வாகனம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வளாகத்துக்குள் சென்று நின்றது.

பணியகத்தின் வாசலில் இருவர் எங்களுக்காகக் காத்திருந்தார்கள். தனது பெயர் இனியவன் என்று ஒருவர் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். மெலிதான தேகம், சிரித்த முகம். தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் இணைப்பாளரின் உதவியாளர் அவர். மற்றவர் அன்ரனி. வெள்ளை சேர்ட், கறுத்த ரவுசர், சுருள் முடி, சிரித்த முகம். வெண்புறாவின் நிர்வாகி அவர்.

எனக்குக் கிடைத்த தகவலின்படி தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் இணைப்பாளர் கே.பி.ரெஜி என்னை வந்து சந்திப்பார் என்று இருந்தது. ஆனால் வந்து சந்தித்ததோ இணைப்பாளரின் உதவியாளர். நான் அவரிடமே கேட்டேன், 'உங்கள் இணைப்பாளர் வரவில்லையா?

'அவருக்குக் காய்ச்சல். இப்ப இங்கை மலேரியா உலாவுது' இனியவன் சொல்லும் பொழுது, எனக்கு மலேரியா பயம் பிடித்துக் கொண்டது. இனியவனுடன் கதைத்துக் கொண்டிருக்கும் பொழுதே வாழை மரங்கள் நிறைந்திருந்த இடத்தில் ஒருவர் வாந்தி எடுத்துக் கொண்டிருந்ததைக் கண்டேன். நான் அந்த இடத்தைப் பார்ப்பதைப் பார்த்த அன்ரனி சொன்னார். 'அவர்தான் ரெஜி'

'மலேரியா வந்தால் உடம்பை வாட்டி எடுத்துப் போடும்' அன்ரனி சொல்லும் பொழுது உடல் நடுங்குவது போன்ற உணர்வு.

'அது ஐஞ்சாறு 'குயினின்' போட்டால் சரியாப் போடும். நீங்கள் பாருங்கோ இன்னும் மூன்று நாளிலை ரெஜி உங்களை வந்து சந்திப்பார்' அன்ரனி நம்பிக்கை தந்தார்.

'நேற்று இரவு வெளிக்கிட்டது. களைச்சுப் போயிருப்பீங்கள். போய் ரெஸ்ற் எடுங்கோ. நாளைக்கு நான் உங்களை வந்து சந்திக்கிறன்' இனியவன் சொல்ல அன்ரனியும் அதை ஆமோதித்தார்.

'உங்களுக்கு வெண்புறாவிலேயே தங்குவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறன். பிடிச்சால் சரி. இல்லை எண்டால் ஹொட்டலிலை தங்கலாம்' அன்ரனி சொல்லி விட்டு என் முகத்தைப் பார்த்தார்.

'வசதி எண்டு எங்களுக்கு ஒண்டும் பெரிசா தேவை இல்லை. இங்கை பெரிய வசதி இருக்காது எண்டு கொல்கரிட்டை நான் ஏற்கெனவே சொல்லிட்டன்'

'அப்ப வாங்கோ வெண்புறாவுக்கே போவோம்'

வெண்புறா நிலையத்தைப் பார்த்தவுடன் எனக்கு பழைய கிளிநொச்சி, பரந்தன் நகரங்கள் நினைவுக்கு வந்தன.

வெண்புறா நிலையம் அமைந்திருந்த இடம் முன்னர் ஒரு பன்னசாலையாக இருந்தது. அந்த ஒற்றைப் பனைமரமும் அதனருகே இருந்த அரசமரமும் எனக்கு பழையதை நினைவு படுத்தின. நிலத்தைத் தொடுவது போல் கிளைகள் பரப்பி இருந்த அரச மரத்தின் கீழ் முன்னர் புத்தர் இருந்தார். இப்பொழுது பிள்ளையார் அமர்ந்திருந்தார். சுற்று மதிலுக்குப் பின்னால் சற்றுப் பருத்து, பெருத்து ஓலைகளால் சடைத்து நின்றது ஒரு ஆண்பனை.

வாசலில் வெண்புறா சின்னத்துடனான தொழில் நுட்ப நிறுவனத்தின் அறிவுப்புப் பலகை. 'இராணுவச் சீருடைகளுடனோ, ஆயுதங்களுடனோ தயவு செய்து உள்நுழையாதீர்கள்' என அந்த அறிவுப்புப்பலகையின் இறுதி வாசகங்களில் குறிப்பிட்டிருந்தன. எங்கள் வாகனம் கிளிநொச்சி கரடிப் போக்குச் சந்தியில் அமைந்திருந்த வெண்புறாவுக்குள் நுழைந்தது.

அங்கிருந்தவர்கள் ஒரு தயக்கத்துடன் மெதுவாக வந்து தங்களை அறிமுகம் செய்து கொண்டார்கள். போராட்டச் சூழலில் வாழ்ந்தவர்கள் இன்று சற்று ஓய்வாக அமைதியான காற்றைச் சுவாசிக்கிறார்கள். அவர்களது இருப்பிடத்திலேயே தங்கி அவர்களுக்கு பயிற்சி தர ஒரு வெள்ளைக்காரன் வந்திருக்கின்றான் என்ற எண்ணம் அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்திருந்தது.

சமாதான ஒப்பந்த நேரத்தில் வெளிநாட்டில் இயங்கும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கிளை ஒன்றில் இருந்து தாயக மக்களுக்கு உதவி செய்யச் சென்றது நாங்கள்தான் என்ற எண்ணம் எங்களுக்குப் பெருமையாக இருந்தது. அதேநேரம் அங்கிருப்பவர்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் வளர்ந்தவர்கள். அவர்களை எந்த வகையில் அணுக வேண்டும். கொண்டு வந்த பொருட்களையோ, பணத்தையோ கொடுத்தால் வாங்கிக் கொள்வார்களா?

ஏதாவது கொடுக்கப் போய் கேள்விகள் ஏதாவது வந்து சேருமா என்ற ஒருவித அச்சம் எனக்குள் இருந்தது.

தொடரும்..

http://ponguthamizh.com/showcontentnews.aspx?sectionid=11&contentid=14725257-4500-4dfd-84e7-48769c2bb43f

  • கருத்துக்கள உறவுகள்

"இப்பொழுது சிறிலங்காவை விட்டு இன்னும் ஒரு நாட்டுக்குள் நுழைவது போன்ற பிரமை. எனது மனதில் எழுந்த உணர்வுகளை எப்படி எழுதுவது என்று எனக்குத் தெரியவில்லை."

 

 

 

மெய்சிலிர்க்க மறுத்த உணர்வுகள்........

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தரலாம் – 7

எறும்புகளின் ஊர்வலம்..

மூனா

fc2155d0-fc57-4c4c-b51d-0625d4ae06611.jp

வெண்புறாவில் நாங்கள் தங்குவதற்காக கொல்கருக்கு ஒரு அறையையும் எனக்கும் எனது மனைவிக்கும் ஒரு அறையையும் ஒழுங்கு செய்திருந்தார்கள். மலசல கூடத்தை ஐரோப்பிய முறையில் அமைத்திருந்தார்கள். அதனருகே ஒரு குளியல் அறை இருந்தது. மின்சார வசதி இல்லாததால் ஜெனரேட்டர் பாவனையில் இருந்தது. அதுவும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இரவு பத்து மணிக்கு மேலே அரிக்கன் விளக்குதான் உதவி.

'நீங்கள் வாறதெண்டு தகவல் கிடைச்ச உடனை அவசர அவசரமாகக் கட்டினது' அன்ரனி அப்படிச் சொன்னபொழுது, எங்களுக்காக இவ்வளவு சிரமம் எடுத்திருக்கிறார்களே. எங்களைத் தங்களோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்றுதானே எல்லா ஒழுங்குகளையும் செய்திருக்கிறார்கள். இவர்களை விட்டு விட்டு ஹொட்டேலில் போய் தங்கி எதைக் காணப் போகிறோம் என்ற எண்ணம் எனக்கு வந்தது.

'நாங்கள் ஒன்றும் சுற்றுலாவுக்கு வரவில்லையே. சேவை செய்யத்தானே வந்திருக்கிறோம். இந்த வசதி எனக்குப் போதும்' என்று கொல்கர் பச்சைக்கொடி காட்டினான்.

கொல்கர் அவ்வாறான ஒரு கட்டிலை தனது வாழ்வில் பார்த்திருக்கவே மாட்டான். டச்சுக்காலத்துக் கட்டில் ஒன்று அவன் உறங்குவதற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. தனது சௌகரியங்களைப் பற்றி அவன் பெரிதாக ஒன்றும் எதிர்பார்க்கவில்லை. தருவதை மகிழ்வாகப் பெற்றுக் கொண்டான்.

வெண்புறா நிலையத்தைப் பற்றிய சில தகவல்களை அங்கே எடுத்துக் கொண்டேன்.

வரவேற்பகம், பணியகம், பார்வையாளர் தங்குமிடம், தொழிற்கூடம், பயனாளிகள் ஆண், பெண் இருபாலாரும் தங்குவதற்கான விடுதிகள், பணியாளர்கள் தங்குவதற்கான விடுதியென பல கட்டிடங்கள் அங்கே இருந்தன.

32 பேர் அங்கே கடமையில் இருந்தனர். அவர்களில் 15பேர் தொழில்நுட்பவியலாளர்கள். மற்றவர்கள் திட்ட இணைப்பாளர், நிர்வாக அலுவலகர், வரவேற்பாளர், தட்டச்சாளர், கணக்காளர், காசாளர், சமையலாளர், பராமரிப்பாளர், கள அலுவலகர், விழிப்புணர்வுப் பணிப்பாளர்கள், மருத்துவர் என கடமையில் இருந்தார்கள். இது தவிர கண்ணிவெடி அகற்றும் பிரிவிலும் பலர் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.

fc2155d0-fc57-4c4c-b51d-0625d4ae06614.jp

கண்ணிவெடி அகற்றும் பணி என்பது மிகவும் ஆபத்தானது. கண்ணிவெடிகளைக் கண்டறியும் கருவிகள் எதுவும் இன்றியே அவர்கள் அங்கே வேலை செய்து கொண்டிருந்தார்கள். இலங்கை ரூபா 4,000 தான் அவர்களது ஆபத்தான வேலைக்கான மாதாந்த ஊதியமாக இருந்தது. நாங்கள் சென்றிருந்த நேரம் வரை அவர்கள் 12,000க்கு மேற்பட்ட கண்ணிவெடிகளை அகற்றியதாக பதிவேட்டில் குறிப்பு இருந்தது.

வீதிகள் தோறும் கண்ணிவெடி விழிப்புணர்வுப் படங்களை பெரியளவில் வைத்திருந்தார்கள். கண்ணிவெடி அகற்றப்படாத இடங்களை இனம் காணும் விதமாக எச்சரிப்புப் பலகைகளை வைத்திருந்தார்கள்.

அன்று மாலை கொல்கருடன் வீதியில் சிறிது நடந்தோம். வெண்புறா நிலையத்தில் இருந்து அரசியல்துறை அலுவலகத்துக்கு சிறிது அப்பால் சென்று திரும்பிக் கொண்டிருந்தோம்.

வீதி ஓரத்தின் மரத்தடியில் ஒரு மூதாட்டி கச்சான் விற்றுக் கொண்டிருந்தார். அந்த மூதாட்டியைப் பார்த்து கொல்கர் தனது நடையை சிறிது தளர்த்தினான்.

'நடந்து களைத்துப் போய் விட்டதா?' நான் அவனைக் கேட்டேன்

'பார், அந்த மூதாட்டியை. நாங்கள் இந்த வழியால் போகும் போது பார்த்தேன். அந்தத் தட்டில் பன்னிரண்டு பொட்டலங்கள் இருந்தன. அந்தப் பன்னிரண்டும் இன்னும் அப்படியே இருக்கின்றன. ஒருத்தரும் வாங்கக் காணோமே'

'பன்னிரண்டு என்பது அவரின் கணக்காக இருக்கலாம். விற்பனையாகும் பொழுது பெட்டிக்குள் இருந்து புதிதாக எடுத்து தட்டில் வைத்திருக்கலாம்' என்றேன்.

'இருக்காது பொருள் விற்றிருந்தால் அவரின் முகத்தில் மகிழ்ச்சி இருந்திருக்கும்.' கொல்கர் என்னை மறுதலித்தான்.

'அந்தப் பொட்டலத்துக்குள் என்ன இருக்கும்?'

'கச்சான்' என்றேன்.

'நான் வாங்கிக் கொள்கிறேன்' என்றான்.

மூதாட்டியிடம் இருந்து ஒரு சரை கச்சானை எடுத்து அவனிடம் கொடுத்தேன். தனக்கு முழுவதும் வேண்டும் என்றான். மேல் தட்டில் இருந்தது பன்னிரண்டு. உள்ளே பெட்டிக்குள் எவ்வளவு இருக்கும் என்று தெரியவில்லை. ஆனாலும் கொல்கரின் விருப்பத்தை மறுக்க நான் விரும்பவில்லை.

'ஆச்சி, கச்சான் இவ்வளவுதானோ? பெட்டிக்குள்ளை இன்னும் இருக்குதோ?

'இவ்வளவுதான் தம்பி இருக்கு'

கொல்கரின் கணிப்பு சரியாக இருந்தது.

'இவ்வளவு சின்னதாக கச்சானை இப்பொழுதுதான் பார்க்கிறேன்' என்றான்.

'மரபணுக்களை மாற்றி நீங்கள் பெரிதாக்குகிறீர்கள். நாங்கள் இயற்கையானதுடன் இருந்து விட நினைக்கிறோம்'

கொல்கர் அந்த மூதாட்டிக்கு பணத்தைக் கொடுத்து விட்டு கச்சான் சரைகளை வாங்கிக் கொண்டான்.

'இவ்வளவு கச்சானையும் என்ன செய்யப் போகிறாய்?'

'வெண்புறாவில் இருப்பவர்களுக்கு கொடுக்கலாம்' என்றான்.

முதல் நாளைய பயணக் களைப்பு. இரவு சாப்பாடு முடிந்ததும் படுக்கைக்குப் போய் விட்டோம்.

மறுநாள் விடிந்திருந்தது தெரிந்தது. எழுந்துகொள்ள மனமில்லை. இன்று என்னென்ன செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டு படுக்கையில் இருந்தேன். அறைக்கு வெளியில் இருந்து 'அங்கிள்.. அங்கிள்..' என்று கூப்பிடும் சத்தம் கேட்டது. குரலில் ஒரு பதட்டம் இருந்தது.

ஏதோ பிரச்சனை என்று தெரிந்தது. கதவைத் திறந்து வெளியே வந்தேன். வெண்புறா பணியாளர்களில் ஒருவரான கண்ணன் பதட்டத்துடன் நின்று கொண்டிருந்தான்.

என்னைக் கண்டவுடன், 'அங்கிள்.. அங்கிள்.. யேர்மன்காரன் (இன்னமும் கொல்கரின் பெயர் அவனுக்கு பாடம் வரவில்லை) கட்டிலிலை பேயடிச்ச மாதிரி இருக்கிறான். கோப்பி கொண்டு போய் மேசையிலை வைச்சிட்டு வந்திட்டன்'

என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டு கொல்கரின் அறைக்குச் சென்றேன். காலை வணக்கம் சொன்னேன். பதிலுக்கு அவனும் வணக்கம் சொன்னான். இரவு நித்திரை எப்படி என்று கேட்டேன். படுக்க முடியவில்லை என்று பதில் வந்தது. கட்டிலில் மெத்தை இல்லாதது அவனுக்கு சிரமமாக இருந்திருக்கும் என நினைத்தேன். ஆனால் அவனது நித்திரையின்மைக்குக் காரணம் வேறாக இருந்தது. கொல்கர் கட்டிலில் இருந்து சுட்டிக் காட்டிய இடத்தைப் பார்த்தேன்.

எறும்புகள் கூட்டம், இரண்டு வரிசை கட்டி ஒரு வழியாகப் போய் மறுவழியாக திரும்பி வந்து கொண்டிருந்தன. அவை போகும் இறுதி இடத்தைப் பார்த்தேன். நேற்று மூதாட்டியிடம் வாங்கிய கச்சான் சரைகளே அவற்றின் இறுதி இடமாக இருந்தது.

'அந்த எறும்புகள் பேசாமல் கச்சானை எடுத்துக் கொண்டு போயிருக்கலாம். என் உடம்பிலும் அல்லவா ஊர்வலம் போக ஆசைப்பட்டிருக்கின்றன' கொல்கரின் வார்த்தைகளில் பரிதாபம் தெரிந்தது. உடலில் ஆங்காங்கு சிவந்திருந்தன.

இந்த அமளியைக் கேட்டு அன்ரனி, கொல்கரின் அறைக்குள் வந்தார். நிலைமையைப் புரிந்து கொண்டு 'முதலிலை அந்தக் கச்சான் சரைகளை தூக்கி எறிஞ்சு போட்டு அறையைச் சுத்தம் செய்யுங்கோ. கட்டில் கால்களுக்கு டீடீரி கொஞ்சம் தூவி விடுங்கோ' என்று தனது பணியாளர்களிடம் பணித்தார்.

துரிதகதியில் அறை சுத்தம் ஆயிற்று. எறும்புகள் இப்பொழுது வெண்புறா நிலையத்திற்கு பின்புறமாக இருந்த காணியின் குப்பைமேட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தன.

தொடரும்...

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=11&contentid=fc2155d0-fc57-4c4c-b51d-0625d4ae0661

Edited by கிருபன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தரலாம் - 8

திலகரைச் சந்தித்தேன்..

மூனா

5a384951-edd1-48b4-9e01-7bfa7b99e55a1.jp

சொன்னபடி அன்று காலை இனியவனால் வரமுடியவில்லை. அவர் தனது உதவியாளரை அனுப்பி இருந்தார்.

யேர்மனியில் விட்டு வந்த பெட்டிகள் வந்து சேரவில்லை. வவுனியாவில் கொடுத்து விட்டு வந்த பொதியைப் பற்றிய தகவலும் வரவில்லை. ஆகவே இன்று எந்தவித வேலையும் இல்லை. அதுவரை ஏதாவது இல்லங்களைப் பார்வையிடலாம் என்று தோன்றியது. அதை அவரிடம் சொல்ல வாருங்கள் என்று கூட்டிப் போனார்.

கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்துக்குப் போய் அங்கு துயிலும் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினோம். அங்கிருந்து குருகுலம் போய் பிள்ளைகளைச் சந்தித்தோம். கொல்கருக்கு அந்த பிள்ளைகளின் வாழ்க்கையைப் பற்றியும், குருகுலத்தின் சேவையைப் பற்றியும் சொன்னேன். அந்தப் பிள்ளைகளின் மேம்பாட்டுக்கு நான் பணம் அன்பளிப்புச் செய்ததைக் கண்டு, கொல்கர் தானும் பணம் அன்பளிப்புச் செய்தான். அந்தக் கள்ளம் கபடம் இல்லாத பிள்ளைகளை கொல்கருக்குப் பிடித்துப் போனது. நீண்ட நேரம் விளையாடிக் கொண்டிருந்தான்.

குருகுலம் இல்லத்தோடு சேர்ந்து ஒரு காணி இருந்தது. அதில் பிள்ளைகளுக்கான விளையாட்டு மைதானம் ஒன்று அமைக்க விரும்புவதாகவும் அதற்கு நிதி தேவைப்படுவதாகவும் குருகுலத்தின் நிர்வாகி சொன்னார். அதை நான் குறிப்பு எடுத்துக் கொண்டேன். யேர்மனிக்குத் திரும்பிய பின் குருகுலத்துக்கான விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான நிதி சேகரிப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நினைத்தேன். எனது அந்த நினைப்பு ஏனோ நிறைவேறாமலே போயிற்று. யேர்மனியில் சிறுவர் விளையாட்டு மைதானங்களைக் காணும் பொழுதெல்லாம் இன்றும் குருகுலத்துப் பிள்ளைகள் நினைவில் வந்து போகிறார்கள்.

வெண்புறா நிறுவனத்துக்கு எதிராக வீதியின் மறுபக்கத்தில் இருந்த கட்டிடத்திலேயே சமையல் செய்வார்கள். அந்தச் சமையலுக்கான உணவுப் பொருட்களை விடுதலைப் புலிகளின் நிர்வாக அமைப்பே வழங்கிக் கொண்டிருந்தது. அங்கிருந்து என்ன கிடைக்கிறதோ அதுவே அன்றைய சாப்பாடு ஆகிறது. எல்லோருக்கும் ஒரே சாப்பாடுதான் பகிர்ந்து மகிழ்ந்து உண்டோம்.

மறுநாள் காந்தி இல்லம் சென்று சிறுவர்களைச் சந்தித்தோம். குருகுலத்துக்கு அன்பளிப்பு செய்ததைப் போல் அந்தச் சிறார்களின் மேம்பாட்டுக்காக கொல்கரும், நானும் அன்பளிப்பு கொடுத்தோம். குருகுலமும் சரி, காந்தி இல்லமும் சரி, நாங்கள் அதாவது புலம்பெயர் மக்கள் நீண்ட வேலைத் திட்டங்களை எடுத்து செயற்பட வேண்டிய தேவைகள் இருப்பதை உணர்த்தின.

அடுத்து பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு நிலையத்திற்குச் சென்றோம். அங்கே வசதிகள் என்பது மிகவும் குறைவாகவே இருந்தது. தரையில் பாய்களை விரித்து அதில் இருந்து கொண்டே அன்றாடம் தங்கள் பயிற்சிகளை அங்கிருந்த பெண்கள் மேற்கொண்டிருந்தார்கள். விதவைகள், பாதிப்புக்குள்ளான பெண்கள் எனச் சிலரை அங்கே சந்திக்க முடிந்தது. பெண்கள் மீது, குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் மீது எனது மனைவி அதிகம் கவனம் செலுத்துவதால் அந்த இடத்தில் நாங்கள் அதிக நேரம் நிற்க வேண்டியதாயிற்று. பயிற்சி கொடுப்பதற்காக தங்களுக்கு சில தையல் இயந்திரங்கள் தேவைப்படுகின்றன என பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு நிலைய நிர்வாகி கோரிக்கை ஒன்றை எங்களிடம் வைத்தார். ஏற்பாடு செய்வதாக உறுதி தந்தேன்.

5a384951-edd1-48b4-9e01-7bfa7b99e55a4.jp

பெண்கள் புனர்வாழ்வு அபிவிருத்தி நிலையத்தில் இருந்து திரும்பி வரும் போது, தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணிமனையில் நான் மட்டும் இறங்கிக் கொண்டேன். என்னைக் கண்டதும் இனியவன் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து எங்களது நலன்கள் தேவைகளை விசாரித்துத் தெரிந்து கொண்டார். எதற்காக நான் அலுவலகத்துக்கு வந்திருக்கிறேன் என்ற கேள்வி அவரிடம் இருந்திருக்கும். ஆனால் என்னிடம் அவர் எதுவும் கேட்கவில்லை. நானே ஆரம்பித்தேன்.

'லோறன்ஸ் திலகரைப் பார்க்க வேண்டும்'

'அவருக்கு இப்ப நேரமிருக்குமோ தெரியாது, கேட்டிட்டு வாறன்' வார்த்தைகள் வந்த வேகத்துடனேயே இனியவன் உள்ளே போனார்.

ஐந்து நிமிடங்களுக்குள் சந்திப்பு ஏற்பாடாகியது.

சந்திப்புக் கூடத்தில் காத்திருந்தேன். வேகமான நடை போட்டபடி லோறன்ஸ் திலகர் வந்தார். என்னை அவர் முன்னர் சந்தித்தது கிடையாது. நான் யாரென்றும் அவருக்குத் தெரியாது. எதற்காக வந்திருக்கிறேன், எதற்காகத் தன்னைச் சந்திக்க விரும்புகிறேன் என்ற கேள்விகள் அவருக்குள் கண்டிப்பாக இருந்திருக்கும்.

நானே என்னை அறிமுகம் செய்து கொண்டேன். 1992 இல் தமிழர் புனர்வாழ்வுக் கழக யேர்மன் கிளையில் அவர் ஏற்படுத்திய மாற்றத்தில் எனக்கு உடன்பாடில்லை என்பதை அவருக்குச் சொல்வதே அவருடனான சந்திப்பில் எனது முக்கிய நோக்கமாக இருந்தது. நான் சொல்வதை அவர் அமைதியாகக் கேட்டார்.

அவர் பதில் தருவதை சாமர்த்தியமாகத் தவிர்க்கிறார் என்பதை அவருடனான உரையாடலின் பொழுது புரிந்து கொண்டேன். விடயத்தைத் திசை திருப்பினேன். நாட்டு நடப்பு, புனர்வாழ்வு எனப் பலதையும் பேசினோம்.

'நீங்கள் வன்னிக்கு வந்தது, மற்றும் உங்களது சேவைகளை அரசியல் துறைக்கு தெரியப்படுத்துவது உங்கள் கடமை. அவர்களைச் சந்திப்பதற்கு ஒரு விண்ணப்பத்தை எழுதி அவர்களது அலுவலகத்தில் கொடுத்து விடுங்கள்' என்று சொன்னார். அவரிடம் இருந்து விடைபெறும் பொழுது அவரின் மதிப்பு என்னிடம் உயர்ந்திருந்தது.

மாலையில் வெண்புறாவின் முற்றத்தில் நானும், கொல்கரும், அன்ரனியும் பிளாஸ்ரிக் நாற்காலியில் இருந்து கதைத்துக் கொண்டிருந்தோம். முற்றத்து மண்ணில் இருந்த உடைந்த போத்தல் துண்டு ஒன்றை கொல்கர் எனக்குச் சுட்டிக் காட்டினான்.

'இங்கை வேலை செய்யிற பலருக்கு ஒரு கால் இல்லை. போதாததற்கு செருப்பும் போடுறதில்லை. இப்பிடியான கண்ணாடித் துண்டுகளால் ஆபத்திருக்கு'

கொல்கர் எனக்குச் சொன்னதை அன்ரனி புரிந்து கொண்டிருக்க வேண்டும் தூரத்தில் நின்ற பணியாளரைக் கூப்பிட்டு அந்தப் போத்தல் துண்டை எடுக்கும் படி பணித்தார்.

அதை எடுப்பதற்கு வந்தவரும் ஒரு காலை இழந்திருந்தார். இதைப் பார்த்த கொல்கர் என்னிடம் சொன்னான் 'தானே அந்தப் போத்தல் துண்டை எடுத்திருக்கலாம்' என்று.

அந்தப் பொழுதில் இருந்து வெண்புறா முற்றத்தில் இருந்த கண்ணாடித் துண்டுகளைக் காணும் நேரங்களில் எல்லாம் நானும், கொல்கரும் அவைகளை எடுத்துப் பாதுகாப்பான இடங்களில் போட ஆரம்பித்தோம். நாளடைவில் அங்கிருந்து எல்லோரும் அந்தப் பணியைச் செய்ய ஆரம்பித்திருந்தார்கள். அதில் அன்ரனியும் இருந்தார்.

சொன்னபடியே வவுனியாவில் நாங்கள் கொடுத்து விட்டு வந்த பொதி இரண்டாம் நாள் வந்து சேர்ந்தது. கொல்கருக்கு இப்பொழுது என்மேல் உள்ள நம்பிக்கை இன்னும் வலுத்திருந்தது.

தொடரும்..

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=11&contentid=5a384951-edd1-48b4-9e01-7bfa7b99e55a

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தரலாம் – 9

என்ன முதலாளி சௌக்கியமா?

மூனா

29645454-b74a-4711-9b12-3aefd7a212a11.jp

மறுநாள் காலை வெண்புறா நிலையத்தில் இருந்த அந்த ஒற்றைப் பனைமரத்தின் கீழ் கொல்கர் அமர்ந்திருந்தான். அந்த ஒற்றைப் பனைமரத்தின் கீழ் அமர்ந்திருப்பது அவனுக்குப் பிடித்திருந்தது. சில நேரங்களில் அவன் தியானத்தில் இருப்பது போல் எனக்குத் தோன்றும். பனைமரத்தின் கீழ் அவனுக்கு ஞானம் கிடைத்து விட்டதோ என நான் நினைத்ததுண்டு.

நீண்டு உயர்ந்திருந்த பனைமரத்தின் கீழ் காலைவேளை நிழலில் இருந்த அவனைப் பார்த்துக் கேட்டேன்

'யேர்மனி நினைவு வந்திட்டுதோ?'

'இன்னும் இல்லை. ஆனால் ஒரு கேள்வி. இந்தப் பனைமரத்திலை ஒரு காயையும் காணேல்லை. ஆனால் அந்தக் காணிக்குள்ளை உள்ள மரங்களிலை எல்லாம் காய்கள் இருக்கின்றனவே. ஏன்?'

'அதுவா? இது ஆண் பனை..' 'நீ எப்போதாவது நொங்கு சாப்பிட்டிருக்கிறாயா?'

'இந்தப் பயணத்திலைதானே நான் முதல் முதலா பனையையே பார்க்கிறன்'

அப்பொழுது அங்கே வந்த அன்ரனியிடம் விடயத்தைச் சொன்னேன்.

29645454-b74a-4711-9b12-3aefd7a212a14.jp

'நொங்குதானே? நொங்கு சாப்பிடுறது உடம்புக்கு நல்லது. பழக்கம் இல்லாததாலை காலைமை வெள்ளென சாப்பிடக்கிளை கொல்கருக்கு வயித்திலை பிரச்சினை ஏதும் வந்தால் நான் பொறுப்பில்லை'

கொல்கர் உடன்படிக்கைக்கு ஒத்துக் கொண்டான். அன்ரனி மயூரனைக் கூப்பிட்டு நுங்கு பறித்து வரும்படி சொன்னார்.

இங்கே மயூரனைப் பற்றி ஒரு சிறிய குறிப்பு.

இயற்கை அவனது பேசும் திறனை பறித்திருந்தது. சைகைகளும், சிரிப்புமே அவனது மொழியாக இருந்தது. எல்லோரிடமும் அன்பாகப் பழகினாலும் கோபப்படுவதில் வல்லவன். கொல்கரை அவனுக்குப் பிடிக்கும். அங்கிருந்தவர்களில் அவனைத்தான் கொல்கருக்கும் அதிகம் பிடிக்கும். விதவிதமான நிலையில் நின்று தன்னை புகைப்படம் எடுக்கச் சொல்லி கொல்கரைக் கேட்பான். கொல்கரும் மறுபேச்சின்றி அவனைப் புகைப்படம் எடுத்துத் தள்ளுவான்.

இப்பொழுது கொல்கருக்கு நொங்கு சாப்பிட விருப்பம் என்றவுடன் உடனடியாக மயூரன் பனையில் ஏறிவிட்டான். மயூரன் பனை ஏறும் அழகை ரசித்து கொல்கர் அதனையும் புகைப்படம் எடுத்துக் கொண்டான்.

நுங்கு சாப்பிடும் முறையை கொல்கருக்குச் சொல்லிக் கொடுத்தேன். ஆரம்பத்தில் சிரமப்பட்ட கொல்கர் பின்னர் எங்களை விட வேகமாகச் சாப்பிடத் தொடங்கினான்.

அன்று தமிழீழ அரசியல்துறைக்கு கடிதம் ஒன்றை எழுதும்படி எனது மனைவிக்குச் சொன்னேன். எங்கள் வரவு, நாங்கள் செய்ய இருக்கும் சேவை பற்றி விளக்கமாக அவர் எழுதித் தந்த கடிதத்தை அரசியல்துறை அலுவலகத்தில் கொடுத்து விட்டு வந்தேன்.

'நீங்கள் வன்னிக்குப் போனதும் கஸ்ரோவோடை தொடர்பு கொள்ளுங்கோ' என்று ஆனந்தண்ணை சொன்னது நினைவுக்கு வர கஸ்ரோவின் அலுவலகத்துக்கு தொலைபேசி எடுத்து என்னை அறிமுகம் செய்து கொண்டேன். கஸ்ரோவை சந்திக்க வாய்பிருக்கிறதா என்றும் கேட்டேன். அடுத்தநாள் மாலையே சந்திப்புக்கு நேரம் குறித்து பதில் வந்தது. எனக்கு மட்டும் தனியாக அழைப்புத் தந்தார்கள். மற்றவர்களை வெண்புறாவில் கஸ்ரோ நேரடியாக வந்து சந்திப்பதாக எனக்குச் சொல்லப்பட்டது.

கொல்கர் தனித்து விடுவானோ என்று ஒரு சஞ்சலம் வந்தது. கொல்கரிடம் இதைப் பற்றிக் கேட்டேன்.

'நீ சந்திக்க வேண்டியவர்களை போய் சந்தி. எனக்கு இங்கை நிறைய சினேகிதர்கள் இருக்கிறார்கள்' என்றான்.

'நீங்கள் கஸ்ரோவை சந்திக்கப் போகும் பாதை குண்டும் குழியுமாக இருக்கும். ஆளை குலுக்கி எடுத்துப் போடும். குலுக்கிற குலுக்கலிலை குடல் வாய்க்குள்ளாலை வெளியிலை வந்திடும் போலை இருக்கும். எதுக்கும் ஓமோ வோட்டர் வாங்கி வைக்கிறன்' என்று அன்ரனி அச்சமூட்டினார்.

நாங்கள் வந்ததை அறிந்து கொண்ட லலி எங்களை, குறிப்பாக எனது மனைவியைப் பார்க்க வந்தார். லலி எனது மனைவியின் பள்ளித் தோழி. இருவரும் நெருக்கமான நண்பிகள். வாழ்க்கையில் இருவரும் வௌ;வேறு பாதைகளில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் பயணத்தில் இருவரும் சந்திக்க இப்பொழுது ஒரு சந்தர்ப்பம் கிட்டியது.

அழகான மடிப்புக் கலையாத உடைகளுடனேயே முன்னர் நான் லலியைக் கண்டிருக்கிறேன். இப்பொழுது உடலில், உடையில் செம்மண்கள் (கிரவல்) ஒட்டியிருக்க தாய், தந்தை இல்லாத பிள்ளைகளுக்கு எல்லாமுமாய், செஞ்சோலைப் பொறுப்பாளரான ஜனனியாக வந்திருந்தார்.

ஐனனியின் நலன்கள், நிலைகளை விசாரித்து விட்டு பழைய நண்பிகளை தனியாகக் கதைக்க விட்டு நான் ஒதுங்கிக் கொண்டேன். நண்பிகள் இருவரும் நீண்ட நேரம் கதைத்தார்கள். ஜனனியின் வண்டியில் ஏறி எங்கெங்கெல்லாமோ போய் வந்தார்கள். அன்று ஜனனி எங்களுடனேயே உணவருந்தினார். நீண்ட வருடங்களின் பின்னரான சந்திப்பு இரண்டு பக்கமும் மகிழ்ச்சியையே தந்தது.

அடுத்தநாள் மாலை கஸ்ரோவைச் சந்திக்கும் ஆவலுடனும், குண்டும் குழியுமான பாதையில் பயணிக்கும் அச்சத்துடனும் காத்து நின்றேன். சரியாக குறிப்பிட்ட நேரத்துக்கு என்னை அழைத்துப் போக கஸ்ரோ அனுப்பிய வாகனம் வந்தது.

பரந்தன் சந்தியில் விசுவமடு நோக்கிய பாதையில் வாகனம் சென்றது. கடலில் கூட கப்பல் இவ்வளவு ஆட்டம் போட்டிருக்காது. எழுந்து விழுந்து வாகனம் செல்லும் போது அன்ரனி சொன்னது நினைவுக்கு வந்தது. ஒன்றல்ல எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஓமோ வோர்ட்டர்கள் அன்ரனி வாங்கி வைத்தால் நல்லது என்று பட்டது.

மாஞ்சோலைக்குள் இருந்தது கஸ்ரோவின் வீடு. உண்மையில் அது ஒரு நந்தவனம்தான்.

என்னை அழைத்து வந்தவர் வரவேற்பறையில் என்னை இருத்திவிட்டு நான் வந்து விட்டதை கஸ்ரோவுக்கு தெரிவிக்க உள்ளே போனார்.

கஸ்ரோ வரும்வரை பேசாமல் இருப்பதை விட்டு ஏதாவது செய்யலாமே என்ற எண்ணம் வர எனது இளமைக் கால நினைவுகளுக்குப் போக ஆரம்பித்தேன்.

எழுபதுகளின் பிற்பகுதி. எனது அண்ணன் 'கமலா அன் பிறதர்ஸ்' என்ற பெயரில் புத்தகக் கடை ஒன்று வைத்திருந்தார். அங்கே அவருக்கு உதவியாளர் நான்தான். எங்கள் கடை இருந்த பருத்தித்துறை நகரத்திலே குமார் அச்சகம் இருந்தது. அதன் உரிமையாளர் காந்திதாசன். காந்திதாசனுக்கு அவரது தம்பி கிருஸ்ணகுமார் உதவியாளராக இருந்தார். எங்களிடம் பேப்பர் கோட்டா இருந்ததால் எல்லாவகையான பேப்பர்களும் எங்கள் கடையில் இருக்கும். அச்சகத்துக்கு பேப்பர்கள் தேவை என்றால் கிருஸ்ணகுமாரே வந்து எங்களிடம் வாங்கிப் போவார். இதுவே அவரிடம் எனக்கு பழக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அதிகம் பேசமாட்டார். எப்பொழுதும் அவரிடம் ஒரு அமைதி குடிகொண்டு இருக்கும். அந்த அமைதியான பேர்வழி ஒருநாள் விடுதலைப் புலிப் போராளியாகி விட்டார். போராளி ஆகியவர் தளபதி ஆகி, வெளிநாட்டுக்கு பொறுப்பாளராகி, ஒரு நாள் ஆகுதியும் ஆகிப்போனார்.

இன்னும் ஒருவர். அவர் ஒரு பள்ளி மாணவன். பெயர் மணிவண்ணன். அடிக்கடி எங்கள் கடைக்கு வருவதால் எனக்கு பரிச்சயமாகிப் போனவர்.

'என்ன முதலாளி சௌக்கியமா?' குரல் கேட்டு பழைய நினைவுகள் உடனடியாக கலைந்து போயிற்று. எனக்கு முன்னால் சக்கர நாட்காலியில் கஸ்ரோ சிரித்த முகத்தோடு இருந்தார். நான் பார்க்கத் துள்ளித் திரிந்த மணிவண்ணன் இடுப்புக்கு கீழே இயங்காமல் சக்கர நாட்காலியில் கஸ்ரோவாக அமர்ந்திருந்ததைப் பார்க்க மனது அழுதது. ஆனாலும் முகம் சிரித்து 'சௌக்கியம்' என்றேன்.

கஸ்ரோவுக்கு அருகில் தோழமையுடன் ஒருவர் நின்றிருந்தார். அவரை கஸ்ரோ எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

'இவர் சிவா. சிவா மாஸ்ரர் எண்டால் இஞ்சை எல்லாருக்கும் தெரியும் எங்களுக்குப் பக்கத்திலைதான். உடுப்பிட்டிதான் இவரின்ரை இடம்'

நாங்கள் சந்தித்துக் கொண்டதிலான மகிழ்ச்சியை நானும் சிவா மாஸ்ரரும் ஆளாளுக்குத் தெரிவித்துக் கொண்டோம்.

தொடரும்...

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=11&contentid=29645454-b74a-4711-9b12-3aefd7a212a1

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தரலாம் – 10

கண்ணில் தெரியும் வானம்

மூனா

899d8b82-2db7-410f-8544-48267ad86b5e1.jp

கொழும்பில் இருந்து வன்னிக்கு என்னை அழைத்துக்கொள்ள வந்த சிவா மாஸ்ரருக்கும், என் முன்னால் நிற்கும் இந்த சிவா மாஸ்ரருக்கும் இடையில் நிறையவே வித்தியாசங்களைக் காண முடிந்தது. அளந்துதான் பேசினார். அதிலும் ஆழம் தெரிந்தது. பேச்சில் ஆளுமையும் சேர்ந்திருந்தது.

யேர்மனியில் இருந்து வன்னிக்குப் புறப்படும் பொழுதே யார் யார் என்னைச் சந்திப்பார்கள் என்று ஓரளவு கணித்து வைத்திருந்தேன். அவர்களைச் சந்திக்கும் பொழுது மரியாதை நிமித்தம் அவர்களுக்கு எதைக் கொடுப்பது என்று என்னுள் தெளிவில்லாமல் இருந்தது. அதைக் கொடுக்கலாமா இதைக் கொடுக்கலாமா என்று குழம்பிப் போய் இருந்த எனது கண்ணில் பட்டதுதான் பத்மநாப ஐயர் தமிழியல் ஊடாக வெளியிட்ட 'கண்ணில் தெரியும் வானம்' புத்தகம். பல புலம் பெயர் எழுத்தாளர்கள் அதில் எழுதி இருந்தார்கள். போதாததற்கு மூனாவின் சில கேலிச் சித்திரங்களும் அதில் இருந்தன. தமிழ் கார்டியனில் வெளியாகி அப்பொழுது அதிகம் பேசப்பட்ட கேலிச்சித்திரமும் அவற்றில் ஒன்று. Norway சமாதான பேச்சுக்கு வருகிறது. ஒரு புத்த பிக்கு No Way என்று சொல்கிறார். இதுதான் அந்தக் கேலிச்சித்திரம். அந்தப் புத்தகங்களையே அன்பளிப்பாக நான் சந்திப்பவர்களுக்கு கொடுப்பதென தீர்மானித்து எடுத்து வந்திருந்தேன்.

இப்பொழுது கஸ்ரோவைச் சந்திக்க வரும்பொழுது ஒரு புத்தகத்தையே நான் கொண்டு வந்திருந்தேன். 'உங்களுக்கு பிறகு தருகிறேன்' என்று சிவா மாஸ்ரரிம் சொல்லி விட்டு கஸ்ரோவுக்கு ´கண்ணில் தெரியும் வானம்' புத்தகத்தைக் கொடுத்தேன்.

'முதலாளி இன்னும் புத்தகங்களோடைதான் இருக்கிறார் போலை' கஸ்ரோ சிரித்தபடி சொன்னார்.

'இப்போ நான் முதலாளி கிடையாது. ஐரோப்பியத் தொழிலாளி'

'நீங்கள் அப்பவும் சரி இப்பவும் சரி எங்களுக்கு முதலாளிதான்'

மணிவண்ணன் மட்டுமல்ல பல மாணவர்கள் அன்று என்னை முதலாளி என்றே அழைத்தார்கள். எனது நண்பர்கள்தான், 'இவரென்ன எங்களுக்கு பெரிய முதலாளியோ' என்று பின்னுக்கு இருந்த மூன்றெழுத்துக்களை வெட்டி விட்டு முதல் எழுத்துடன் என்னை அழைக்க ஆரம்பித்தார்கள். யேர்மனியில் நான் அகதிகள் முகாமில் இருந்த பொழுது அங்கு வந்த பாடசாலை நண்பன் ஒருவன் 'மூனா´ என என்னை அழைக்கப் போய் முகாமில் எல்லோருக்கும் அது எனது பெயராகப் போனது. அந்தப் பெயரே எனக்கு இப்பொழுதும் நின்று நிலைக்கிறது.

'இஞ்சை ஒரு புத்தகக் கடை... இல்லை.. இல்லை பொத்தகக் கடை இருக்கு. ஓமெண்டால் சொல்லுங்கோ. பழையபடி ஒரு கலக்கு கலக்கலாம்' கஸ்ரோ தனது விருப்பத்தைச் சொன்னார்

'அவர் அங்கை இருக்கிறதாலைதானே இப்ப இஞ்சை வந்து உதவி செய்யக் கூடியதா இருக்கு' சிவா மாஸ்ரர் சொன்னதை கஸ்ரோ ஏற்றுக் கொண்டார்.

'அதுவும் சரிதான்'

கதைகள் இயல்பாகப் போய்க் கொண்டிருந்த நேரம் மெதுவடையும், தேநீரும் வந்தன. வடை பெரிதாக இருந்தது. வடையில் இருந்து வந்த வாசனை, அது இப்பொழுதுதான் சூடான எண்ணைக் குளியல் முடித்திருக்கிறது என்று காட்டியது. நான் வடையைப் பார்த்து விட்டு கஸ்ரோவைப் பார்த்தேன்.

'என்ன பாத்துக் கொண்டிருக்கிறீங்கள் சாப்பிடுங்கோ. இஞ்சை பொம்பிளையள் இல்லை. எல்லாரும் ஆம்பிளையள்தான். இது ஆம்பிளை சுட்ட வடை'

'அதுதான் வடை இவ்வளவு பெரிசா இருக்கு. யேர்மனியிலை எங்கடை ஆக்கள் கேட்டால் கஸ்ரோட்டை போனால் பெரிய்..ய்ய்ய வடை தருவார் எண்டு சொல்லலாம்'

'கஸ்ரோவைப் போலை வடையும் பெரிசு எண்டுறியள்'

'இல்லை கஸ்ரோவின்ரை மனசு போலை'

கஸ்ரோ குழந்தை போல் சிரிக்க ஆரம்பித்தார். இப்படியே சிரிப்புகளுடன் நாங்கள் கதைத்துக் கொண்டிருக்கும் பொழுது, எனக்கு அந்தக் கடிதம் ஞாபகத்துக்கு வந்தது.

நான் வன்னிக்கு வெளிக்கிடும் பொழுது ஸ்ருட்கார்ட் என்ற நகரத்தில் இருந்த ஒரு தாய் கடிதம் ஒன்றை எனக்குத் தந்து அதை கஸ்ரோவிடம் சேர்த்து விடும்படி கேட்டிருந்தார். அந்தத் தாயின் மகன் ஒரு போராளி. அவரது இயக்கத்திற்கான பெயர் கவியுகன். மகன் இயக்கத்தில் இணைந்து சிறிது காலத்தில் அவனது பெற்றோர்கள் யேர்மனிக்குப் புலம்பெயர்ந்து வந்து விட்டனர். யேர்மனிக்கு வந்த பின் அவர்களுக்கு அவர்கள் மகனுடனான தொடர்புகள் கிடைக்கவில்லை. எனவே தங்களது மகன் விடயமாக ஒரு கடிதம் எழுதி என்னிடம் தந்திருந்தார்கள்.

இப்பொழுது அந்தக் கடிதத்தை கஸ்ரோவிடம் கொடுத்தேன். உடனேயே பிரித்துப் படித்து விட்டுச் சொன்னார்.

'இஞ்சை ஒரு பெயரிலை கன போராளியள் இருப்பினம். நான் சரியா விசாரிச்சுப் போட்டு நீங்கள் யேர்மனிக்குப் போறதுக்குள்ளை உங்களுக்கு தகவல் தாறன்'

கடிதத்தைப் பத்திரமாக மடித்து தனது உதவியாளரைக் கூப்பிட்டுக் கொடுத்தார்.

வெண்புறாவில் எங்களுடைய செயற்பாட்டின் விபரங்களைக் கேட்டார். சொன்னேன். சோதனைச்சாவடியில் அந்த இளைஞனுக்கும் எனக்கும் இடையிலான ஊடலையும் அவரிடம் குறிப்பிட்டேன்.

'சமாதான ஒப்பந்தம் நடந்த உடனை சில வேலையளை உடனடியாகச் செய்ய வேண்டி இருந்தது. அதிலை செக்கிங் பொயின்றும் ஒண்டு. பீல்ட்டிலை போராடிக் கொண்டிருந்த ஆக்களைத்தான் நாங்கள் அங்கை போட்டிருக்கிறம். பீல்டிலை இருக்கிறபோது அங்கை கதைக்கிற மாதிரி அவையள் இங்கையும் கதைக்கினம் போலை. கொஞ்சம் பழக்கி எடுக்கோணும். அடுத்தமுறை நீங்கள் வரக்கை கனக்க மாற்றம் இருக்கும்'

கஸ்ரோவின் பேச்சில் இருந்த உண்மை விளங்கியது.

'போராட்டத்திலை பாதிக்கப்பட்ட போராளியள் கனபேர் இங்கை இருக்கினம். என்னைப் போலை இடுப்புக்குக் கீழை இயங்காதவையள், கை, கால், கண் இழந்தவையள் எண்டு கனக்க... இதிலை கண் இழந்த போராளிகளுக்கு அறிவுத் தேடல் இருக்கு. இசை படிப்பு எண்டு அவையளுக்கு ஏதாவது செய்ய வேணும். உங்களாலை ஏதாவது செய்யேலுமோ எண்டு பாருங்கோ' கஸ்ரோ என்னிடம் ஒரு வேண்டுகொளை விடுத்தார்.

'அவையளுக்கு என்ன வேணுமேண்டு சரியாத் தெரிஞ்சால் நாங்கள் யேர்மனி TROவாலை ஏதாவது செய்யலாம்'

'அதுக்கு நீங்கள் அவையளை நேரை போய் சந்திச்சுக் கதைக்கிறதுதான் நல்லது. இஞ்சை பக்கத்திலைதான். நவம் அறிவுக் கூடம் எண்டு கேள்விப்பட்டிருப்பீங்கள். சிவா மாஸ்ரர்தான் பொறுப்பு. இதைப் பற்றிக் கதைக்கிறதுக்குத்தான் அவரையும் இண்டைக்கு இங்கை வரச் சொன்னனான்'

'நல்லது. நாங்கள் ஒருக்கால் சந்திப்போமே'

'நான் நாளைக்கு கொழும்புக்குப் போக வேண்டி இருக்குது. திரும்பி வாறதுக்கு சில நேரம் ஒரு கிழமையாவது செல்லலாம்' சிவா மாஸ்ரர் அப்படிச் சொன்னதும், அவர் திரும்பி வரும்பொழுது அவரை சந்திக்க வாய்ப்பும் நேரமும் இல்லாமல் போய் விட்டால் என்ற கேள்வி எழ 'நாளைக்கு நீங்கள் கொழும்புக்குப் போறதுக்கு முன்னாலை சந்திக்கிறதுக்கு ஏற்பாடு செய்யுங்களேன்' என்றேன்.

'அதுவும் நல்லதுதான். நாளைக்கு பின்னேரம் ஆறு மணிக்கு உங்களாலை வரேலுமோ?'

'பின்னேரம் ஆறுமணி எண்டால் எப்பிடி கொழும்புக்குப் போவீங்கள்? செக்கிங் பொயின்ற் பூட்டிப் போடுவாங்களே?'

நான் அப்படிக் கேட்டது கஸ்ரோவுக்கும், சிவா மாஸ்ரருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அவர்களுக்குள் வெளியே சொல்ல முடியாத விடயங்கள் சில இருக்கலாம். அவசரப்பட்டுக் கேட்டு விட்டேன்.

'அவர் கொழும்புக்குப் போறதுக்கு முன்னாலை ஒரு சந்திப்பு இருக்கு’ கஸ்ரோ பதில் தந்தார்.

'ஆறுமணிக்கு நீங்கள் வந்தால், நான் உங்களை அவையளுக்கு அறிமுகம் செய்திட்டு வெளிக்கிட்டிடுவன். நீங்கள் அவையளோடை நேரத்தைச் செலவழிக்கலாம்'

'கொல்கரையும், எனது மனைவியையும் அழைத்துக் கொண்டு வருகிறேன்' என்றேன். மகிழ்ச்சியோடு சிவா மாஸ்ரர் ஒப்புதல் தந்து 'வாகனம் அனுப்பி வைக்கிறேன்' என்றார்.

நன்கு இருட்டி விட்டிருந்தது. தட்டில் இருந்த மெதுவடைகள் எல்லாம் சாப்பிட்டாயிற்று. கஸ்ரோவிடம் மகிழ்வான சந்திப்புக்கும், சுவையான பெரிய வடைக்கும் நன்றி சொல்லி மீண்டும் சந்திக்க வாய்ப்பிருக்கு என்று விடைபெற்றுக் கொண்டேன்.

வாகனம் வரை வந்து வழியனுப்பிய சிவா மாஸ்ரருக்கு நாளையும் நாங்கள் சந்திப்போம் என்று சொல்லி வெண்புறா நோக்கிப் பயணமானேன்.

தொடரும்..

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=11&contentid=899d8b82-2db7-410f-8544-48267ad86b5e

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தரலாம் – 11

எங்களுக்கு கண்தான் தேவை

மூனா

cf34f640-4767-45e5-a4d7-6a391143d43f1.jp

அடுத்தநாள் மாலை, சிவா மாஸ்ரர் சொன்னபடியே நேரம் தவறாமல் எங்களை அழைத்துப் போக வாகனத்தை அனுப்பி இருந்தார்.

நவம் அறிவுக் கூடத்திற்கான பயணம் ஆரம்பமாயிற்று. முதல் நாள் நான் அந்தப் பாதையில் பயணித்ததால் எனக்கு கொஞ்ச அனுபவமும் கூடவே அவதானமும் இருந்தது. ஆகவே வாகனத்தில் இருந்த கம்பியை இறுகப் பிடித்திருந்தேன். எனது மனைவியும், கொல்கரும் பயணத்தில் சிரமப்பட்டார்கள்.

நாங்கள் நவம் அறிவுக்கூடத்திற்குச் சென்றபொழுது அங்கே மாலை நேர விளையாட்டுக்கள் நடந்து கொண்டிருந்தன. கைப்பந்தாட்டம், கயிறு இழுத்தல் என மைதானமே களைகட்டி நின்றது.

சிறுவயதில் கெந்தி விளையாடும் பொழுது ஒரு காலில் தொடர்ந்து கெந்த முடியாமல் சமநிலை தவறி மறு காலையும் ஊன்றி விட்டு, அளாப்பி விளையாடியது அப்பொழுது சட்டென்று நினைவுக்கு வந்தது. இங்கே சிலர் ஒரு காலோடு கைப்பந்தாட்டம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். கொல்கர் ஆச்சரியப்பட்டுப் போனான். இது உண்மையில் அதிசயம் என்றான். இரண்டு கால்கள் கொண்டு இவர்களது வேகத்துக்கு தன்னாலேயே விளையாட முடியாது என்றான்.

ஒரு காலை இழந்து விட்டாலும் அவர்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. அந்த நம்பிக்கையையும், விளையாட்டுக்கான பயிற்சியையும் வழங்கிய சிவா மாஸ்ரர் அங்கே அமைதியாக நின்றார். விளையாட்டு முடிந்ததும் ஒரு காலோடு நடனமும் ஆடினார்கள். விளையாட்டில் வென்றவர்கள் மட்டுமல்லாது தோற்றவர்களும் சேர்ந்தே ஆடி மகிழ்ந்தார்கள்.

இளநீர் தந்தார்கள். கொஞ்சம் முன்னர் வந்திருந்தால் இன்னும் பல விளையாட்டுக்களைப் பார்த்திருக்கலாம் என்றார்கள்.

வாழ்க்கையில் தோற்றுப் போனவர்கள் அங்கே ஒரு தடவை போய் வந்தால் தன்னம்பிக்கை என்பது தானாக வந்துவிடும்.

cf34f640-4767-45e5-a4d7-6a391143d43f4.jp

சிவா மாஸ்ரர் எங்களை பார்வை இழந்தவர்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்துப் போனார். நாங்கள் வந்துவிட்டதை தெரிந்து கொண்டு அங்கிருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பிடித்தபடி வரிசையாக வந்து அமர்ந்தார்கள். அவர்களுக்கு ஒரு பொறுப்பாளர் இருந்தார். அவர் பெயர் கலைக்கோன். தெளிவாகக் கதைத்தார். அவருடன் உரையாடும் பொழுதே புரிந்து விட்டது, அவர் ஒரு அறிவாளி என்று.

'நாங்கள் உங்களுக்கு ஏதாவது செய்ய விரும்புகிறோம்' என்று கலைக்கோனிடம் சொன்னேன்.

'நல்லது. அவர்களுக்கு என்ன வேண்டும் என்று நீங்களே அவர்களிடம் கேளுங்கள்' என்றார்.

'உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. கஸ்ரோ சொல்லி இருக்காவிட்டால் உங்களைச் சந்திக்கும் பாக்கியம் எங்களுக்குக் கிட்டாமல் போயிருக்கும்' என்று அவர்களிடம் சொல்லி விட்டு, 'உங்களுக்கு எந்த வகையில் நாங்கள் உதவலாம் என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறோம். உங்களது தேவைகளைச் சொல்லுங்கள்' என்று அவர்களைப் பார்த்துக் கேட்டேன்.

உடனேயே ஒருவர் பதில் தந்தார் 'எங்களுக்கு கண்தான் தேவை'

சொல்லி விட்டுச் சிரிக்க ஆரம்பித்தார். மற்றவர்களும் சேர்ந்து சிரித்தார்கள். ஏன் அவர்கள் சிரிக்கிறார்கள் என்பது கொல்கருக்கு தெரியவில்லை. அவனுக்கு விளக்கம் சொன்னேன் இப்பொழுது கொல்கரும் சேர்ந்து சிரித்தான்.

ஒரு முறையான கண் நிபுணரால் அவர்களுக்கு உதவ முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. அது விடயமாக யாராவது விபரங்கள் தெரிந்தவர்கள் உதவலாம் என நினைத்தேன்.

இசைக்கருவிகள், தட்டச்சு இயந்திரம் மற்றும் பார்வை இழந்தவர்கள் உபயோகிக்கும் பொருட்கள் எனப் பலதை தேவை என்றார்கள். குறித்துக் கொண்டேன்.

'ரைப் றைட்டர் வாங்கங்கை அதுக்கான பேப்பரும் வேணும். அது இஞ்சை எடுக்கிறது கஸ்ரம்' என்று கலைக்கோன் தன் பங்குக்குச் சொன்னார்.

பெரிதாக அவர்களும் எதுவும் கேட்கவில்லை. தாங்கள் பார்வையை இழந்து விட்டாலும் ஏதோ ஒரு வகையில் உலகை அறிந்து கொள்ளும் தங்கள் விருப்பத்தை மட்டுமே தெரிவித்திருந்தார்கள்.

அதை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது. ஆனாலும் இது பரந்தளவில் செய்யப்படவேண்டிய விடயம். ஆகவே இதை புலம்பெயர்ந்து வாழும் தமிழர் பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்பினேன்.

'நீங்கள் ஒரு தடவை ஐரோப்பிய நாடுகளுக்கு வரலாமே. அங்குள்ள தமிழர்கள் உங்களை நேரடியாக காணும் பொழுது பலன் அதிகமாக இருக்கும்' என்று கலைக்கோனிடம் சொன்னேன்.

சிரித்து விட்டுச் சொன்னார். 'அதெல்லாம் நடக்கிற காரியமே? உள்ளூருக்குள்ளேயே நடந்து திரியறதுக்கு ஒரு ஆள் எனக்குத் தேவைப்படுது'

அன்று அவரிடம் நம்பிக்கை இருக்கவில்லை. ஆனாலும் அவர் அதை மனதில் பதிய வைத்திருந்தார் போலும். ஒரு தடவை அவர் ஐரோப்பாவில் வாழும் தமிழர்களை வந்து சந்தித்தார். ஆனால் அவர் யேர்மனிக்கு வந்திருந்த பொழுது என்னால் அவரைப் போய் சந்திக்க முடியாமல் போயிற்று.

மீண்டும் குண்டும் குழியுமாக இருந்த பாதையினூடாக வெண்புறா நிலையத்துக்கு வந்தோம்.

அடுத்தநாள் காலை வெண்புறா பொறுப்பாளர் அன்ரனி எங்களது நவம் அறிவுக் கூட அனுபவங்களைக் கேட்டார். எங்கள் அனுபவங்களைச் சொன்னேன்.

'இங்கே இனியவாழ்வு இல்லம் எண்டு ஒண்டு இருக்கு. அங்கேயும் பார்வை இல்லாத பிள்ளையள் இருக்கினம். பார்வை இல்லாமலே அட்வான்ஸ் லெவல் படிக்கிற மாணவர்களும் இருக்கினம். அந்த இல்லத்துக்கு நான்தான் பொறுப்பு. நீங்கள் நவம் அறிவுக்கூடத்திற்கு பொருட்கள் கொண்டு வரக்கை ஏலுமெண்டால் இனிய வாழ்வு இல்லப் பிள்ளைகளுக்கும் கண்தெரியாத ஆக்கள் படிக்கிறதுக்கு ஏதாவது கொண்டு வாங்கோ'

வரவர சுமைகள் அதிகமாவது புரிந்தது. இவ்வகையான இல்லங்களுக்கான வேலைத் திட்டங்களை தாயகத் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வெளிநாட்டில் இயங்கும் தனது கிளைகளுக்குப் பகிர்ந்து கொடுத்திருக்கிறது. எங்களது யேர்மனிக் கிளைக்கு இனியவாழ்வு இல்லத்திற்கான வேலைத் திட்டங்கள் இல்லை என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் அன்ரனி என்னிடம் கேட்கும் பொழுது எனக்கு 'ஓம்' என்று தலையாட்டுவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.

நான் ஏதாவது செய்யப் போய், அது ஏடாகூடமாக ஆகிவிடுமோ என்று பயம் இருந்தது. 'இது எங்களுக்கான வேலைத் திட்டம் இல்லை. உங்களை ஆர் தன்னிச்சையா முடிவெடுக்கச் சொன்னது?' என்ற கேள்வி யேர்மனி தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்குள் வரலாம் என்ற கலக்கமும் இருந்தது. அவசரப்பட்டு தலையாட்டி விட்டேனோ என்ற ஒரு குற்ற உணர்வும் கூடவே வந்தது. எனது சங்கடமான நிலையை அன்ரனிக்கு நான் காட்டிக் கொள்ளவில்லை.

எதுக்கும் தகவலைப் பெற்று வைப்போம், பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து அன்ரனியிடம் இனிய வாழ்வு இல்லம் பற்றிக் கேட்டேன்.

விரல் நுனியில் விபரங்களை வைத்திருந்தாரா தெரியவில்லை. கடகடவென இனியவாழ்வு இல்லம் பற்றிய தகவல்கள் அவரிடம் இருந்து வந்தன.

'ஐஞ்சு ஏக்கர் காணியிலை இனிய வாழ்வு இல்லம் இருக்கு. பிள்ளைகள் தங்கிற, படிக்கிற கட்டிடங்கள் எல்லாம் கிடுகாலைதான் மேயப்பட்டிருக்கு. மழை வந்தால் சிரமமாக இருக்கும். ரொயிலற் கூட கிடுகாலை கட்டினதுதான். எல்லாமா 64 பிள்ளையள் இருக்கினம். அதிலை 53 பேருக்கு பிறவியிலேயே குறைபாடு. இன்னும் தங்கடை பிள்ளையளையும் சேருங்கோ என்று கனக்க விண்ணப்பங்கள் வருது. இடவசதி காணாததாலை ஆக்களை எடுக்க முடியாமல் இருக்கு'

அவர் அப்படி சொல்லும் பொழுது, தகவல்களைக் காது கேட்டாலும் எனது யோசனை இதற்கு என்ன செய்யலாம் என்றுதான் இருந்தது.

சமாதானப் பேச்சு தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் நாங்கள் வன்னிக்குப் போய் இருந்தோம். ஆகவேதான் வேண்டுதல்கள் எங்களிடம் அதிகமாகவே வந்து கொண்டிருந்தன. இன்னும் சில நாட்களிலோ வாரங்களிலோ பலர் வரப் போகிறார்கள். நிலைமைகளைப் பார்க்கும் பொழுது அவர்கள் உதவி தாராளமாக வந்து சேர்ந்து விடும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

தொடரும்

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=11&contentid=cf34f640-4767-45e5-a4d7-6a391143d43f

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி கிருபன்...! தொடருங்கள்...!!

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தரலாம் - 12

தாடி ஏன் சிவந்து போயிற்று?

மூனா

<p>தாடி ஏன் சிவந்து போயிற்று?</p>
 

 

மறுநாள் வெண்புறாவில் வெளியாட்களுக்கான கால் பொருத்தும் வேலைகளும், திருத்த வேலைகளும் இருந்தன.

பலர் செயற்கைக் கால் திருத்த வேலைகளுக்கு வந்திருந்தனர். ஒரு பெண் கால் பொருத்துவதற்காக வந்திருந்தார். அவர் பெயர் ராஜலட்சுமி. மூன்று பிள்ளைகளின் தாய். நிலத்தில் இருந்த கண்ணிவெடியில் காலை இழந்ததாகச் சொன்னார்.

கால் பொருத்திய அந்தப் பெண் தனது பயிற்சியை எடுக்கும் போது கொல்கர் கூடவே நின்று அவதானித்துக் கொண்டான்.

மாலையில் நாங்கள் தொழிற்கூடத்தில் இருக்கும்பொழுது அரசியல் துறைப் பெறுப்பாளர் வர இருப்பதாக அன்ரனி வந்து சொன்னர். நான் அங்கே இருந்த பொழுதுகளில் யாராவது வருவதாக இருந்தாலும் சரி அல்லது நாங்கள் போய் சந்திப்பதாக இருந்தாலும் சரி முன் கூட்டியே அறிவித்துவிடும் ஒரு சிறப்பான வழக்கம் அங்கே காணப்பட்டது.

குறிப்பிட்ட நேரத்துக்கு வாகனம் ஒன்று வந்தது. அரசியல்துறைப் பொறுப்பாளர் வந்து விட்டதாகச் சொன்னார்கள்.

அரசியல்துறையில் உள்ள சிலர் தொழிற் கூடத்துக்குள் வந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வந்தவரிடம் இருந்து அவரை முந்திக்கொண்டு அவரது சிரிப்பு முன்னால் வந்தது.

அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனுக்கு இங்கே அறிமுகம் தேவை இல்லை.

<p>தாடி ஏன் சிவந்து போயிற்று?</p>

உள்ளே வந்த உடன் கேட்டார் 'எல்லாம் வசதியாக இருக்குத்தானே?' என்று

ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டோம். என்னை அண்ணர் என்றுதான் அழைத்தார். எல்லா விபரங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

'நீங்கள் ஹொட்டேலில் தங்கலாம்தானே, அங்கே வசதிகள் எல்லாம் இருக்கு' என்றார்.

அவரது வேண்டுகோளுக்கு நன்றி சொன்ன கொல்கர், தனக்கு வெண்புறாவில் உள்ளவர்கள் நண்பர்கள் என்றும், ஹொட்டேலில் அது கிடையாது என்றும், வெண்புறா நிலையத்தில் இருப்பதையே தான் விரும்புவதாகவும் சொன்னான்.

கொல்கரின் பேச்சு தமிழ்ச்செல்வனுக்கு பிடித்துப் போனது. 'உங்களுக்கு ஏதும் தேவை என்றால் எனக்கு தகவல் தாருங்கோ. மற்றது எப்ப வேணுமெண்டாலும் நீங்கள் ஹொட்டேலிலை வந்து தங்கலாம். அதுக்கான ஏற்பாடுகளை நான் செய்துதாறன்' என்றார்.

நன்றி சொன்னோம். மீண்டும் சந்திப்பதாகச் சொன்னர். எனது மனைவியுடனும் உரையாடி விட்டு விடைபெற்றுக் கொண்டார்.

அவர் சென்றதன் பின் மேலெல்லாம் செம்புழுதி படிந்திருக்க, வெண்தாடி செந்தாடியாக சிரித்தபடி ஒருவர் வந்தார். அவரை இதற்கு முன் நான் சந்தித்திருக்கவில்லை. ஆனாலும் என்னை நன்றாகத் தெரிந்தவர் போல் அவரது பாவனை இருந்தது. அவர் யார் என்று என்னை அவர் அதிகம் யோசிக்க விடவில்லை.

'நான் நாவண்ணன். கவிஞர் நாவண்ணன்' என்றார்.

அவரது கவிதைக் குரலை புலிகளின் குரலில் கேட்டிருக்கிறேன். இப்பொழுதுதான் கவிதையின் வண்ணனை உடலோடு பார்க்கிறேன்.

கவிஞர் நாவண்ணன் ஒரு கவிஞர் மட்டுமல்ல ஓவியர், சிற்பி என அவரிடம் பல கலைகள் நிறைந்திருந்தன. நாவண்ணன் எனது மனைவியின் சகோதரன் தீட்சண்யனின் நண்பன். தீட்சண்யனுடன் இணைந்து புலிகளின் குரலில் கவிதைகள் தந்தவர். தீட்சண்யன் மரணித்த பொழுது 'நாற்பது என்ன நமன் கொண்டு போகும் வயதா?' என தீட்சண்யனுக்காகக் கவிதைகளைக் கொட்டி அழுது தீர்த்தவர்.

நாவண்ணனின் மகன் விடுதலைக்காக இருபது வயதில் விதையாகிப் போனதால் உடலாலும், மனதாலும் அவர் தளர்ந்து போயிருந்தார். அவரது நரைத்துவிட்ட தாடி அவரின் வயதை இன்னும் கூட்டிக் காட்டியது.

எனது மனைவியுடன் நீண்ட நேரம் தீட்சண்யன் பற்றிப் பேசினார். தன்னிடம் இருந்த தீட்சண்யனின் கவிதைகளை எனது மனைவியிடம் தந்தார். 'தீட்சண்யனின் கவிதைகளை நான் உங்களுக்குத் தருவதற்குக் காரணம், இதை நீங்கள் புத்தகமாகக் கொண்டு வரவேண்டும். ஒரு சகோதரியாக அவருக்கு நீங்கள் செய்யும் கடமையாக அது இருக்கும்' என்றார்.

அவரது வேண்டுகோள் ஏழு ஆண்டுகள் கழித்து 2009இல் சாத்தியமாயிற்று.

தீட்சண்யன் கைப்பட எழுதிய அவரது கவிதைகளைத் தரும் பொழுது, 'சந்தியிலை பெடியள் நிக்கிறார்கள்’ என்ற தீட்சண்யன்ரை கவிதை இதிலை இருக்கு. புலிகளின் குரலில் ஒலிபரப்பான கவிதை அது. பின்னாளில் இந்தக் கவிதையை தன்ரை கவிதை என்று புதுமை செய்த கவிஞரும் இங்கை இருக்கினம்' என்றார்.

பாண்டிய மன்னனும், குலோத்துங்க சோழனும் வெவ்வேறு அரசுகளைக் கொண்டிருந்தார்கள். அவர்களின் அரச புலவர்களான புகழேந்திப்புலவரும், ஒட்டகக்கூத்தரும் தங்கள் தங்கள் அரசுகளின் பெருமைகளைப் பாடிக் கொண்டார்கள். அதனால் அந்த இரு புலவர்களுக்கும் மோதல்கள் வந்திருந்தது இயல்பானது. ஆனால் இங்கே ஒரு அரசில் இருக்கும் இரு புலவர்கள் ஏன் வேறுபட்டு நின்றார்கள். அதுவும் வன்னியில் என்று எனக்குள் வந்த எண்ணத்தை அவரிடம் நான் கேட்கவில்லை.

'தாடி ஏன் சிவந்து போயிற்று?' என்று அவரிடம் கேட்டேன்.

'தாடி சிவந்ததுக்கு செம்பாட்டு மண்தான் காரணம். வண்டியும் மண்ணெண்ணையில் ஓடுவதால் ஆடியாடித்தான் பயணமும் இருக்குது' கேள்விக்கான பதிலோடு தனது ஏழ்மையை அவர் மெதுவாகச் சொன்னது புரிந்தது.

அவருடன் நீண்ட நேரம் உரையாட மனம் விரும்பியது. பல கதைகளையும் கவிதைகளையும் அவர் சொல்லும் விதமே ரசிக்கத் தக்கதாக இருந்தது. நன்கு இருட்டிய பின்னரே எங்களிடம் இருந்து விடைபெற்றார்.

மீண்டும் ஒரு நாள் கடந்து விட்டிருந்தது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் இணைப்பாளர் கே.பி.றெஜி குணமாகி விட்டதாகவும் எங்களை வந்து சந்திப்பார் எனவும் தகவல் வந்தது. அவர் வரவுக்காகக் காத்திருந்தேன். நாங்கள் சந்திக்க வேண்டிய முக்கியமானவராக ரெஜியே இருந்தார். ரெஜியின் பொறுப்பின் கீழேயே எங்களது செயற்பாடுகள் இருந்தன. அவரைச் சந்திக்கும் பொழுது எங்களுக்குத் தேவையானதை இலகுவாகப் பெறமுடியும் என்ற நம்பிக்கை இருந்தது. குறிப்பாக அப்பொழுது இருந்த சூழ்நிலையில் வன்னியில் எங்களது தொலைபேசி இயங்கவில்லை. முற்று முழுதாக வெளி இடங்களுக்கும், எங்களுக்குமான தொடர்பாடல் இல்லாமலும் இருந்தது.

யேர்மனியில் நாங்கள் விட்டு வந்த பொருட்கள் என்னவாயிற்று என்று அறிய ஆனந்தண்ணையை தொடர்புகொள்ள முடியாமல் இருந்தது. ஒருவேளை அந்தப் பொருட்கள் வராமலே போய் விட்டால் மாற்று வழி என்ன? இவற்றிற்கெல்லாம் ரெஜியைச் சந்தித்தால் முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன்.

எதிர்பார்த்தபடி ரெஜி என்னை வந்து சந்தித்தார். அவரைப் பார்த்த பொழுது இவரை எப்படி நோய் தாக்கும் என்ற எண்ணமே வந்தது. உருண்டு திரண்டு திடகாத்திரமாக இருந்தார். அவரிடம் மலேரியா கிருமிகள் முயன்று பார்த்து தோற்றுப் போய் இருக்க வேண்டும். நோயில் விழுந்திருந்தவர் போல் இல்லாமல் மிகமிக உற்சாகமாகக் காணப்பட்டார்.

ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டோம். கொல்கரை ரெஜிக்கு அறிமுகம் செய்தேன். சில நிமிடங்களில் பலநாள் நண்பர்கள் போல் தெரிந்தார்கள்.

எங்கள் செயற்பாடுகள் பற்றிக் கேட்டார். சொன்னேன் முக்கியமாக ஆனந்தண்ணையோடு தொடர்புகொள்ள வேண்டிய அவசியத்தைச் சொன்னேன்.

தனது அலுவகத்துக்குக் கூட்டிப் போனார். தொலைத்தொடர்பு ஏற்படுத்தி ஆனந்தண்ணை என்னோடு உரையாட ஏற்பாடு செய்து தந்தார்.

'அந்தப் பொருட்களை ஏற்கெனவே குடுத்து விட்டிட்டம்' ஆனந்தண்ணை பதில் தந்தார்.

'இன்னும் எங்களுக்கு வந்து சேரவில்லை'

'நாட்டுக்கு வெளிக்கிட்டவை உடனை வன்னிக்கு வருவினம் எண்டு எதிர்பார்க்கக் கூடாது. கொழும்பிலை எங்கையாவது சுத்தலாம். ஆனாலும் பொருள் அங்கை வரும்' ஆனந்தண்ணையின் பதில் இப்படியாக இருந்தது.

வரும், ஆனால் எப்பொழுது வரும்? தெரியாமல் தவிப்பாக இருந்தது. ஒருவேளை இன்னும் சில நாட்களில் வராமலே போய்விட்டால் வந்த வேலை முற்றுப் பெறாமலே நாங்கள் யேர்மனி திரும்புவதைத் தவிர வேறு வழி இல்லை.

மனது மெதுவாக சோர்வடைய ஆரம்பித்தது. உற்சாகம் என்னிடம் சொல்லாமல் என்னை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தது.

தொடரும்..

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=11&contentid=2e5b7eb5-248e-4f66-9676-033129ebc640

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தரலாம் – 13

முல்லைத்தீவுக்கு ஒரு 'மல்போரா டூர்'

மூனா

 

70a2d35d-97c7-422f-94a3-50e1e874b98e1.jp

 

தமிழர் புனர்வாழ்வுக் கழக அலுவலகத்தில் இருந்து வெண்புறா நிலையத்துக்கு வந்தோம். மதியவேளை நெருங்கிக் கொண்டிருந்தது. வெண்புறா நிலையத்தின் வரவேற்பறையில் இருந்து எங்களது செயற்பாடுகள் பற்றி நானும், ரெஜியும், கொல்கரும் உரையாடிக் கொண்டிருந்தோம்.

அந்த வெப்பமான வேளையில் சுந்தரம் எங்களுக்கு குடிப்பதற்கு செவ்விளநீர் தந்துவிட்டுப் போனார்.

எங்களுக்காக ஓர் இளநீர் கூடமே சுந்தரம் வைத்திருந்தார். வெண்புறா நிறுவனத்தின் இணைப் பொறுப்பாளர் அவர்.

இங்கே சுந்தரத்தைப் பற்றி குறிப்பிடுவது நல்லது. சிங்கள இராணுவத்தின் செல் விழுந்து ஒரு காலை இழந்து நிற்கின்றார். இதே நிலைதான் கரிகரனுக்கும். வெண்புறா நிலையத்தில் பணிபுரிபவர்கள் போராட்டத்தில் களம் கண்டவர்கள் அல்லர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் நிறையக் கதைகள் இருந்தன.

தற்செயலாக வரவேற்பறைக்கு வந்த அன்ரனி நாங்கள் கதைப்பதைக் கேட்டுவிட்டு 'இங்கை சொல்லிவிட்டால் எங்கையெண்டாலும் தேடிப்பிடிச்சுக் கொண்டு வந்து தருவினம். அதை என்னெண்டு சொன்னால் விசாரித்துக் பார்க்கலாம்' என்றார்.

எனக்கும் அன்ரனி சொல்வதில் உடன்பாடு இருந்தது. ஆனால் கொல்கர் அதைத் திடமாக மறுத்தான். 'இங்கு அப்படியான பொருட்கள் கிடைப்பதற்கு எவ்வித சாத்தியமும் இல்லை. அதுகள் பைபர் கிளாஸை காயவைத்து மென்மையாக்கும் இரசாயனங்கள். இங்கை மட்டுமல்ல சிங்கப்பூரிலும் கூட அதுகள் கிடைக்க வாய்ப்பில்லை'

'பைபர் கிளாசிலைதானே இஞ்சை போர்ட் செய்யிறவையள். அவையள் அதைக் காய வைக்கினம்தானே' அன்ரனி விபரம் தெரிந்தவர். இன்னும் என்னுள் நம்பிக்கை வளர்ந்தது.

70a2d35d-97c7-422f-94a3-50e1e874b98e4.jp

அன்ரனியின் பேச்சை இப்பொழுது கொல்கர் மறுக்கவில்லை. ஒருவேளை அந்த இரசாயனப் பொருட்கள் வன்னியிலும் இருக்கக்கூடும் என்ற எண்ணம் அவனுக்கு வந்திருக்கலாம்.

'இஞ்சை எங்கை போர்ட் செய்யினம்?' அன்ரனியைக் கேட்டேன்.

'அதுக்கு முல்லைத்தீவுக்குத்தான் போக வேணும்'

ரெஜியைப் பார்த்தேன்.

'அப்பிடியெண்டால் ஒருக்கால் போய் பார்க்கலாம்' ரெஜியின் பதில் உற்சாகம் தந்தது.

'முல்லைத்தீவுக்குப் போறது லேசுப்பட்ட பாடில்லை. விசுவமடுப் பாதையை விட மோசம். செல் விழுந்து றோட்டெல்லாம் ஒரே பள்ளமும், மேடுமா இருக்கும். பழக்கப்பட்ட நாங்களே போறதுக்கு கஸ்ரப் படுறனாங்கள். நீங்கள் தாக்குப் பிடிக்க மாட்டீங்கள்' அன்ரனி சொன்ன போது மனதில் ஏறி வந்த நம்பிக்கை கீழே விழுந்து சிதறிப் போனது.

கொல்கரிடம் நிலைமையை விளக்கினேன். 'மல்போரா டூர் (Marlboro Tour) என்று பாலைவனத்திலேயும், காடுகளுக்குள்ளேயும் போவாங்களே. அதுபோல இதையும் நினைச்சுக் கொள்வோம். போகலாம்' என்றான்.

இரண்டு காரணங்களுக்காக எனது மனைவியை முல்லைத்தீவுக்கு அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டி இருந்தது. ஒன்று சீரற்ற பாதையினூடான பயணம். மற்றது மாலையில் தவறாது வரும் ஜனனி.

மதிய உணவை முடித்துக் கொண்டு ரெஜியும், கொல்கரும், நானும் முல்லைத்தீவுக்குப் புறப்பட்டோம். பயணத்தின் போது ஏன்தான் மதியம் சாப்பிட்டேன் என்று என்னையே நொந்து கொண்டேன்.

நிலைமையை அவதானித்த அன்ரனி சொன்னார், 'யோசிக்காதையுங்கோ அங்கிள். வெளிக்கிட்டிட்டம் போய் சேரத்தானே வேணும். அங்கை வெண்புறாவிலை கனக்க ஓமோ வோட்டர் வேண்டி வைச்சிருக்கிறன்'

ஒருவாறு முல்லைத்தீவுக் கடற்கரைக்கு வந்து சேர்ந்தோம்.

'இதுக்கு மேலை என்னாலை அடக்க முடியாது' என்று கொல்கர் சொன்னான்.

'அதோ அந்தத் தென்னைக்குப் பின்னாலை போ' என்று அவனுக்குச் சொன்னேன். ஓட்டமும் நடையுமாக தென்னையை நோக்கிப் போனான்.

அவன் போகும் வேகத்தைப் பார்த்த ரெஜி, 'ஏன் எதுவும் பிரச்சனையோ?' என்று என்னைக் கேட்டார்.

'பிரச்சினை என்று ஒன்றுமில்லை. அது தென்னைக்கு சிறுநீர் பாய்ச்சும் சின்ன வேலை' என்றேன்.

ஆசுவாசமாக நிம்மதியாக தென்னைக்கு நன்றி சொல்லி விட்டு கொல்கர் எங்களை நோக்கி வந்தான்.

'யேர்மனியில் இப்படியான வேலைக்கு 50சென்ற்ஸ் கட்டணம் கொடுக்க வேணும். இது ஓப்பின் ரொயிலற் எண்டபடியால் ஒரு யூரோ கட்டணம் என்று கொல்கரிட்டை கேளுங்கோ' என்று ரெஜியின் காதுக்குள் சொன்னேன்.

சிரித்துக் கொண்டு வந்து நின்றவனிடம் ரெஜி ஒரு யூரோ கட்டணம் கேட்க கொல்கர் சற்றுத் தடுமாறினான். வன்னியில் பணம் தேவைப்படாததால் அவன் பணத்தை தன்னுடன் வைத்திருப்பதில்லை என்று எனக்குத் தெரியும். ரெஜி மீண்டும் மீண்டும் ஒரு யூரோ என்று கேட்க, அதற்கு அவன் மிரள, அதைப் பார்த்து ரெஜி சிரிக்க, இது தன்னை ஏய்ப்பதற்குத்தான் என்பதை கொல்கர் புரிந்து கொண்டான்.

இப்பொழுது படகுகள் செய்யும் இடத்தில் நின்றோம் அவர்கள் தந்த இரசாயனக் கலவையை கலந்து காய வைத்துப் பார்த்து கொல்கர் சொன்னான்.

'இதுவும் அதை ஒத்த இரசாயனம்தான். ஆனால் இது குiடிநச புடயளள ஐக் கடினமாக்குமே தவிர பிளாஸ்ரிக் போன்று மென்மையாக்காது. எங்களுக்குத் தேவையானது மென்மையாக்கும் பொருளே' என்றான்.

ஆலை இல்லாத ஊரில் இலுப்பம் பூதானே சர்க்கரையாக இருக்கிறது. 'இதைக் கொண்டு போய் இப்போதைக்கு வேலையைத் தொடங்குவோம். அந்தப் பொருள் வந்தாப்போலை அதனைப் பிறகு பயன்படுத்துவோம்' என்றேன்.

சும்மா நேரத்தை வீணாக்குவது மட்டுமல்ல, ஒருவேளை செயற்கைக் காலைப் பொருத்தும் பணியில் ஒரு சிறு துரும்பையேனும் எடுத்துப் போடாமல் யேர்மனிக்குத் திரும்ப வேண்டிவந்தால், பயணத்தின் முழு நோக்கமும் வீணாகப் போய்விடும் என்ற பயம் எனக்கு இருந்தது.

அரை மனதுடன் கொல்கர் 'உனது விருப்பம். ஆனால் அது எங்களது காலாக இருக்காது. கடினமான பொருளாகவே இருக்கும். வேணுமானால் எப்படி எங்களது தொழில் நுட்பத்தில் கால்கள் செய்கிறோம் என்று காட்டுவதற்காக மட்டும் இதைப் பயன்படுத்துவோம்' என்றான்.

அவர்கள் மகிழ்ச்சியோடு தங்களிடம் இருந்த இரசாயனப் பொருள்களை தகர டப்பாக்களில் ஊற்றித் தந்தார்கள். பணம் கொடுத்தோம். வாங்க மறுத்து விட்டார்கள்.

அடுத்த நாளும் தமிழ்செல்வன் வந்தார்.

வெண்புறா நிலையத்தின் பின்புறமாக இருந்த காணிகள் இன்னமும் துப்பரவாக்கப் படாமலேயே இருந்தன. அதனால் அந்தக் காணிகளில் நுளம்புகள் அமோக விளைச்சல். நுளம்புகள் பகலில் தூங்கி இரவில் அட்டகாசமான ஆட்டங்கள் போட்டுக் கொண்டிருந்தன. இதை எனது மனைவி முதல்நாள் தமிழ்ச்செல்வனுடன் கதைக்கும் பொழுது சொல்லி இருந்தார். இப்பொழுது ஒரு மருந்துக் குடுவையுடன் தமிழ்செல்வன் வந்திருந்தார்.

'அக்கா இந்த மருந்தை உடம்பிலை பூசினால் நுளம்பு கிட்டவே வராது' என்றபடி எனது மனைவியிடம் மருந்தைக் கொடுத்தார்.

ஆனால் நுளம்பை விட இன்னும் ஒரு பிரச்சனை அங்கே இருந்தது. முதல்நாள் இரவு பூச்சியோ, பூரானோ, தேளோ, கொடுக்கனோ கொல்கரின் காலைக் கடித்துப் பார்த்திருக்கிறது. கால் வீங்கி, முகம் வாடி சோகமாக கொல்கர் நின்றான்.

அதைப் பார்த்த தமிழ்செல்வன் 'நான் நேற்றே சொன்னனான்.. ஹொட்டேலிலை போய் தங்குங்கோ என்று' எங்களைச் செல்லமாகக் கடிந்து கொண்டார்.

இன்றும் கொல்கர் சொன்னான், தான் வெண்புறா நிலையத்தில் தங்கிக்கொள்ள விரும்புவதாக.

'முதலிலை இவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய் காட்டுங்கோ' தமிழ்ச்செல்வன் அன்புக்கட்டளை போட்டார்.

'நாளைக்கு வைகாசிப் பறுவம். வற்றாப்பளையில் அம்மனுக்குப் பொங்கல். நேரம் இருந்தால் கொல்கருடன் போய் வாருங்கள்' எனவும் தமிழ்செல்வன் சொன்னார்.

போகும் போது 'எதுக்கும் முதலிலை காலுக்கு மருந்து எடுங்கள்' என்று சொல்லிவிட்டுப் போனார்.

தொடரும்

 

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=11&contentid=70a2d35d-97c7-422f-94a3-50e1e874b98e

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தரலாம் – 14

நீண்ட வருடங்களின் பின் ஒரு கோயில் திருவிழா

மூனா

நீண்ட வருடங்களின் பின் ஒரு கோயில் திருவிழா
 

 

அன்று யேர்மனியத் தொழில்நுட்பத்தில் கால் செய்யும் விடயங்கள் பற்றிய செயற்பாடுகள் இருந்ததால், மாலை வரை பார்ப்போம். கால்வீக்கம் மாறவில்லை என்றால் வைத்தியசாலைக்குப் போவோம் என கொல்கர் சொன்னான். 

செயற்கைக்கால் செய்யும் முறைகளும், பொருத்தியதன் பின்னரான பயிற்சிகளும் அடங்கிய ஒரு வீடியோவை காண்பித்து, கொல்கர் அதற்கு விளக்கம் கொடுத்தான்.

பின்னர் தகரத்தினால் செய்யப்படும் கால்களில் தான் கண்ட குறைபாடுகளை அடுக்கினான்.

'தகரத்தில் செய்யப்படும் கால்களுக்கான அளவுகளை துல்லியமாக அளவிட வாய்ப்பில்லை. காலுடன் பொருத்தப்படும் இடத்தில் கடினமான இறப்பர் வைத்துத் தைக்கப்படுகிறது. இது காலுக்கு வீணான எரிச்சலைத் தருகிறது. மேலும் நடக்கும்பொழுது அந்த இடத்தில் ஏற்படும் உராய்வினால் புண்களும் ஏற்படும். சரியான அளவுகள் எடுக்காத பட்சத்தில் செயற்கைக் கால் பொருத்தப்படும் கால் பகுதி சோர்ந்து சுருங்கிப் போய்விடும். நடக்கும் பொழுது சமநிலை இல்லாததால் முதுகெலும்பில் வளைவுகள் ஏற்பட்டு வேறு பிரச்சினைகள் வரும். நான் வெண்புறா பதிவேட்டைப் பார்த்தேன். அதில் இதுவரை 1197 பேர்களுக்கு கால்கள் பொருத்தப்பட்டதாக இருக்கிறது. ஆனால் திருத்தவேலைகள் மட்டும் 9893 தடவைகள் நடந்திருக்கின்றன. சராசரியாகப் பார்த்தோம் என்றால், ஒரு காலைப் பொருத்தியவர் அதன் திருத்த வேலைகளுக்காக ஒன்பது தடவைகள் அதுவும் ஒரு குறுகிய காலத்துக்குள் வந்திருக்கின்றார்... '

யேர்மனியத் தொழில்நுட்பத்தின் அனுகூலங்களைச் சொன்னான்.

'அளவுகள் துல்லியமானது. பாதிக்கப்பட்ட காலை அச்செடுத்து அதனை வைத்து செயற்கை உறுப்பைச் செய்வதால், காலுடன் அது அப்படியே பொருந்தி விடும். அப்படிப் பொருந்துவதால் செயற்கை உறுப்பை இணைப்பதற்கு எந்தவித ஆதாரங்களும் தேவை இல்லை. இலகுவாகக் கழட்டிப் பூட்டக் கூடியது. பாரம் குறைந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக திருத்த வேலைக்கு அவசியம் இல்லை...'

மதியம் ஒரு குறிப்பிட்ட நேர இடைவேளை எடுத்துக் கொண்டு, முல்லைத்தீவில் இருந்து கொண்டு வந்த இரசாயனக்கலவையினைப் பயன்படுத்தி அதன் பலாபலன் என்ன என்பதை பரிசோதித்துப் பார்த்தான். முடிவு அவன் எதிர்பார்த்தது போல் திருப்திகரமாக அமையவில்லை.

நீண்ட வருடங்களின் பின் ஒரு கோயில் திருவிழா

நாளை வற்றாப்பளை கண்ணகை அம்மன் திருவிழாவிற்குப் போவதாலும் மறுநாள் எல்லோரும் களைத்துப் போயிருப்பார்கள் என்பதாலும் செயற்கைக் கால் செய்யும் வேலையை இரண்டு நாட்களுக்குத் தள்ளி வைத்தோம்.

வைத்தியசாலை பக்கத்தில்தான் இருந்தது. பொன்னம்பலம் வைத்தியசாலை. அங்கே பிரதான வைத்தியராக இருந்தவர் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் இணைப்பாளர் ரெஜியின் மனைவிதான்.

என்ன கடித்தது என்று தெரியவில்லை. ஆனால் கால் மட்டும் பெரிதாக வீங்கி இருந்தது. வைத்தியசாலையில் கொல்கருக்கு மருந்து எடுத்துக் கொண்டோம்.

வெண்புறாவுக்கு அன்றும் மறுநாளும் விடுதலை. நிலையத்தில் வேலை செய்கின்ற அனைவருடனும் வற்றாப்பளைக்குப் பயணமானோம். ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசித்தபடி பயணம் இருந்தது.

கரிகரன் ஓ போடு.. என்று அப்பொழுது பிரபல்யமான ஜெமினி படப்பாடலைப் பாடி எங்களைப் பிரமிக்க வைத்தான். அவனது பாட்டைக் கேட்டு நான் சில வினாடிகள் யேர்மனிக்கு என் நினைவைத் திருப்பினேன்.

யேர்மனியில் நடக்கும் எந்த நிகழ்ச்சியானாலும் சரி, அது இயக்கப் பாடல்தான். பாடினாலும் சரி, அபிநயம் பிடித்தாலும் சரி, ஏன் பேசினாலும் கூட சினிமா வரக்கூடாது. அப்படி வந்தால் அது தேசத்துரோகம் என்ற நிலைப்பாடு யேர்மனியில் இருந்தது. இயக்கம் நிலை கொண்ட இடத்திலோ ‘ஓ போடு' கிறார்கள். யேர்மனியில் அதிதீவிர விசுவாசத்தைக் காட்ட நினைக்கிறார்கள் என்றுதான் எனக்குத் தோன்றியது.

முல்லைத்தீவுக் கடற்கரையில் ஓய்வெடுத்தோம்.

கடலைப் பார்த்த கொல்கருக்கு கொள்ளை சந்தோசம். ஒரு கதிரையைப் போட்டு அதில் அமர்ந்து கடற்காற்றை சுவாசித்து கடல் அலைகளை மிகவும் ரசித்தான். அவனது கால்வீக்கம் குறையவில்லை. எனவே கடலில் நீச்சலடிக்க அவன் விரும்பவில்லை. சிறிது ஓய்வுக்குப் பின் பயணத்தைத் தொடர்ந்தோம்.

அன்ரனியின் வீடு முல்லைத்தீவில் இருந்தது. வற்றாப்பளை அம்மனிடம் போகுமுன் அன்ரனி வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தைக் கண்டு வரலாம் என்ற எண்ணம் தோன்ற எங்கள் அடுத்த தரிப்பிடம் அன்ரனி வீடு என்றாயிற்று.

கடற்கரையை அண்டியே அன்ரனியின் வீடு இருந்தது. பிளாஸ்ரிக் போத்தல்களை வெட்டி அதில் இருந்து பூக்களைச் செய்து வீட்டை அலங்கரித்திருந்தார்கள்.

பிளாஸ்ரிக் போத்தல்கள் பாவனைக்கு வருமுன் எக்ஸ்ரே எடுக்கும் பிலிம்மில் ஊரில் அக்காமார்கள் பூக்கள் செய்தது நினைவில் வந்தது.

அன்ரனிக்கு அழகான பிள்ளை. அன்பான மனைவி என அவர் மனம் போல அமைந்திருந்தன. ஆனால் பின்னாளில் சுனாமி பேரலைகளில் இருவரையும் பறிகொடுத்ததும், அன்ரனி தனித்து நின்றதும் தாளமுடியாத சோகங்கள்.

இரவு வற்றாப்பளையில் நின்றோம். வயல்வெளி. ஆங்காங்கே வயல் தரையில் பாய்களை விரித்து வசதி போல் மக்கள் மகிழ்ச்சியாக அமர்ந்து இருந்தார்கள்.

கொல்கரால் தரையில் அமர முடியவில்லை. கதிரையில்தான் அவனால் இருக்க முடிந்தது. பாதுகாப்புக்காக இன்னொரு கதிரை போட்டு அதில் வீங்கியிருந்த காலை வைத்து வருவோர் போவோருக்கு எல்லாம் காட்சிப் பொருளாக அவன் இருந்தான். பலர் அவனுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.

ஒரு கொட்டகையில் சினிமாப்பாடலை ஒருவர் பாடுவது கேட்டது. அந்தப் பக்கமாக எட்டிப் பார்த்தேன். அங்கே ஒருவர் அல்ல பலர் இருந்தனர். இனிய வாழ்வு இல்லப் பிள்ளைகளே அங்கே இருந்தவர்கள். அவர்களது இல்லத்திற்கு கட்டிடம் தேவைப்படுகிறது. அதற்கு பொதுமக்களிடம் உதவி கேட்டு அங்கே அமர்ந்திருந்தார்கள். அந்தக் கொட்டகையில் சில செங்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒரு செங்கல்லின் விலை பத்து ரூபாக்கள். அதை வாங்கி இனியவாழ்வு இல்லத்தின் கட்டிடத்திற்கு நன்கொடையாகத் தரவேண்டும். இதற்காகத்தான் கண் தெரியாத ஒரு சிறுவன் காசி திரைப்படத்தில் இடம் பெற்ற 'நான் காணும் உலகம் யார் காணக் கூடும்..' என்ற பாடலை திரும்பத் திரும்ப பாடிக் கொண்டிருந்தான். பிறவியில் குறைபாடுகள் உள்ள இவர்களது தேவைகளை நாங்கள் பார்த்துச் செய்து கொடுக்க வேண்டும்.

ஆனால் இங்கே அவர்கள் உதவி வேண்டி பாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் நூறு செங்கற்களை வாங்கி கட்டிட உதவியாகக் கொடுத்தேன். அவர்கள் கேட்ட அந்தக் கட்டிடத்தை கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் பதிந்து வைத்தேன்.

நீண்ட வருடங்களின் பின்னர் ஒரு கோயில் திருவிழாவில் நின்ற பொழுது எனக்கு யேர்மனிய வாழ்க்கையே மறந்து போயிற்று. பழைய வாழ்க்கைக்கே திரும்பி விட்ட மனோநிலைதான் அப்பொழுது இருந்தது. பழைய நண்பர்கள் மட்டும் அங்கே என்னுடன்  கூட இருந்திருந்தால் பொங்கல் முடிய அப்படியே பஸ் ஏறி ஊருக்குப் போயிருப்பேன்.

காலையில், வெண்புறா நிலையத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது வழி எல்லாம் காவடிகளுடன் பக்தர் கூட்டங்கள். எங்கள் வாகனம் பயணித்த பாதையில் காவடி, தூக்குக் காவடி என்று அமர்க்களமாக இருந்தது. கொல்கருக்கு அவை எல்லாம் புதிது.  வாகனத்தை நிறுத்தச் சொல்லி விட்டு அவற்றை எல்லாம் தனது கமராவில் உள்வாங்கிக் கொண்டான்.

முதல்நாள் பயணத்திலும், இரவு அதிகநேரம் விழித்திருந்ததாலும் எல்லோரும் களைத்திருந்தோம். அன்றும் வெண்புறா நிறுவனத்திற்கு விடுமுறை. கால்கள் திருத்த வேலைகளுக்கோ, பயற்சிகளுக்கோ வெளியார் எவரும் அங்கே வரவில்லை.

நானும் கொல்கரும் வெண்புறா நிறுவனத்தின் முற்றத்தில் இருந்து கதைத்துக் கொண்டிருந்தோம். வெண்புறா நிறுவனத்தின் வாசலில் ஒரு வாகனம் வந்து நின்றது. அப்படியான வாகனங்களில் பயணிப்பது அநேகமாக முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள்தான். கணிப்பு சரியாக இருந்தது. அந்த வாகனத்தில் வந்தது ஜவாகர்.

தொடரும்...

 

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=11&contentid=8e3ea9f1-5722-4282-be99-1ded0364ff9d

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தரலாம் – 15

கரும்புலி காவியம்

மூனா

 

<p>கரும்புலி காவியம்</p>
 

 

 

நாங்கள் வந்திருக்கும் நோக்கத்தை மருத்துவத்துறைப் பொறுப்பாளர் ரேகா மூலம் அறிந்து எங்களைச் சந்திக்க ஜவாகர் வந்திருந்தார்.

ஜவாகருக்கும் ஒரு கால் செயற்கையானதுதான். வெண்புறா நிறுவனமே அதைச் செய்து கொடுத்திருந்தது. கால் பொருத்தப்பட்ட இடத்தில் செயற்கைக் காலுடனான உராய்வினால் காயம் ஏற்பட்டு வலி இருப்பதாகச் சொன்னார்.

அவரது காலைப் பரிசோதித்த கொல்கர் 'சரியான அளவுகள் எடுக்காததாலேயேதான் இப்படியான பிரச்சினை வருகிறது. காயம் மாற வேண்டுமானால் செயற்கைக் காலை சில நாட்களுக்குக் கழட்டி வைப்பதுதான் ஒரே வழி' என்றான்.

'அது முடியாதே. நிறைய வேலைகள் இருக்கு' ஜவாகர் தனது நிலையைச் சொன்னார்.

'இவருக்கு யேர்மன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வாய்ப்பிருக்கா?' கொல்கரைக் கேட்டேன்.

'காயம் மாறும் மட்டும் செய்யக் கூடாது. பாதிக்கப்பட்ட காலில் கிப்ஸ் (plaster of paris)  பூசி அச்சு எடுத்து, அதை வைத்துத்தான் செயற்கை உறுப்பைச் செய்கிறோம். காயப்பட்ட இடத்தில் கிப்ஸ் படுவது நல்லதல்ல. அது காயத்தை மேலும் பெரிதாக்கலாம்'

நிலைமை என்ன என்பதை புரிந்து கொண்ட ஜவாகர் 'காயம் மாறினதுக்குப் பிறகு வந்து யேர்மன் தொழில் நுட்பத்திலை தயாரிக்கிற காலை பொருத்துவம். அதுவரை இதோடை இருக்கிறன்' என்றார்.

<p>கரும்புலி காவியம்</p>

ஜவாகர் புறப்படும் பொழுது, கொல்கர் சொன்னான். 'உங்கள் காலிலே இருக்கும் காயத்தை மாற்றுவதுக்கு ஏதாவது செய்யுங்கோ. இப்பிடியே விட்டால் இன்பெக்சன் ஆக்கிப்போடும்'

ஜவாகர் கொல்கருக்கு நன்றி சொல்லிவிட்டுப் போனார்.

ஜவாகர் விடைபெற்றுப் போனதன் பின்னர் நீண்ட நேரமாக அவரது காலைப் பற்றியே கொல்கர் கதைத்துக் கொண்டிருந்தான்.

'அடுத்தமுறை வரக்கை அவருக்கு கால் செய்வோம்' என்றேன்.

'செய்யலாம். ஆனால் என்னாலை நெடுகவும் இங்கை வரேலாது. எனக்கும் சொந்த வேலை இருக்கு. உனக்கும் அதே பிரச்சினைதான். இங்கை வேலை செய்யிற ஆருக்காவது இந்தத் தொழில் நுட்பத்தை சொல்லிக் கொடுத்தால் அவையளுக்கும் நல்லது. எங்களுக்கும் நல்லது.'

கொல்கர் சொன்னதில் உண்மை இருந்தது.

'நல்லது, இங்கை வேலை செய்யிற ஆக்களிலை நீ ஆரை அதுக்குத் தெரிவு செய்வாய்?'

'சடகோபன்' கொல்கர் உடனடியாகப் பதில் தந்தான். அவனே தொடர்ந்தான்  'சடகோபன் ஆர்வமாக வேலை செய்யிறார். ஆனால் இது ஒரு நாளிலை சொல்லிக் கொடுக்கிற விசயம் இல்லை. நானே பல வருசங்கள் படிச்சது. பல நுணுக்கமான வேலைகள் இருக்கு'

'அப்போ சடகோபனை யேர்மனிக்கு கூட்டிக் கொண்டு போய் பயிற்சி கொடுப்போமோ?'

'மொழிப் பிரச்சினை. சடகோபனுக்கு இங்கிலீஸ் தெரிஞ்சாலாவது சமாளிக்கலாம்'

சடகோபனுக்கு மொழிப் பிரச்சினை இருப்பதால் அவரை யேர்மனிக்கு அழைத்துச் சென்று செயற்கைக் கால் தொடர்பான பயிற்சி கொடுப்பது சிரமம் என்பது தெரிந்தது. எதற்கும் இந்த விடயத்தை யேர்மனியிலேயே கையாண்டால் என்ன என்ற எண்ணமும் இருந்தது.  இந்த விடயத்தை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அப்போதைக்கு நிறுத்தி வைத்தோம்.

மதிய நேரம் தமிழர் புனர்வாழ்வுக் கழக அலுவலகத்தில் இருந்து ரெஜி வந்தார். அவர் வரும் பொழுது வெறும் கைகளுடன் வராமல் எங்களுக்கான நம்பிக்கைகளோடு வந்தார். யேர்மனியில் நாங்கள் விட்டு வந்த இரண்டு இரசாயனக் கலவைகளும் அவரது கைகளில் இருந்தன. கொல்கருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.

அதைக் கொண்டு வந்து தந்தவர்களுக்கு நன்றி சொல்ல எங்களுக்கு வாய்ப்பில்லாமல் போயிற்று. அவர்கள் தங்கள் பயணத்தின் அவசரத்தில் தமிழர் புனர்வாழ்வுக் கழக அலுவலகத்தில் இரண்டு இரசாயனக் கலவைகளையும் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்கள். ஒருவேளை இந்தக் கட்டுரையை அவர்கள் வாசிக்க நேர்ந்தால், இந்தக் கட்டுரை மூலமாக எனது நன்றியை அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டு இரசாயனக் கலவைகளும் வந்து சேர்ந்ததைக் கண்டு, 'எல்லாம் வற்றாப்பளை அம்மன் அருள்' என்று அங்கே இருந்தவர்கள் சொல்லிக் கொண்டார்கள்.

அன்று மாலை அரசியல்துறைப் பொறுப்பாளருடன் எங்களுக்கு ஒரு சந்திப்பு இருந்தது. அங்கேதான் இரவு உணவும்.

கொல்கருக்குச் சொன்னேன். 'மதியம் அதிகம் சாப்பிடாதே. பிறகு நல்ல விருந்தை உன்னால் முழுமையாக அனுபவிக்க முடியாமல் போய்விடும்' என்று

சிரித்துக் கொண்டான்.

மாலை நான்கு மணி அளவில் நாவண்ணன் வந்தார். கூடவே வேலணையூர் சுரேஸையும் கூட்டி வந்தார். அன்று வெண்புறா நிலையத்தில் விடுமுறையாதலால் வரவேற்பறையில் இருந்து அவர்களுடன் நீண்ட நேரம் உரையாட முடிந்தது.

நாவண்ணனின் வாழ்க்கை நிலைமை ஓரளவு எனக்குப் புரிந்திருந்தது. அவருக்கு ஏதாவது உதவி செய்ய விரும்பினேன். ஒருவேளை அவரது தன்மானம் அதை நிராகரித்து விட்டால் என்ற தயக்கமும் எனக்கு இருந்தது. இப்படியான சங்கடங்கள் நிறைந்த சமயங்களில் எனக்கு துணையாக நிற்பது எனது துணைவிதான்.

நாவண்ணனுக்கு பணம் கொடுக்கும்படி மனைவியிடம் சொன்னேன். அங்கேயும் அதே தயக்கம்தான்.

'உனது அண்ணனின் நண்பர்தானே. கொடுத்துப்பார். வேண்டினால் சரி. இல்லை என்றால்  பேசாமல் விடுவோம். ஒரு பிரச்சினையும் இல்லை' என்று கொஞ்சம் ஊக்கப்படுத்தினேன்.

இவர் கொடுக்க, அவர், 'இதெல்லாம் எதுக்கு உங்களுக்கு வீண் சிரமங்கள்' என்று மெதுவாக இழுத்தார்.

'கரும்புலி காவியம் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் தானே.. அதை எழுதுவதற்கு பேப்பர் பேனா வாங்க இது உதவலாம்' என்றேன்.

பணத்தை எண்ணிப் பார்த்துவிட்டுச் சொன்னார், 'இதுக்கு பேப்பர் கடையையே வாங்கலாம். மற்றும்படி கரும்புலி காவியம் எழுதுறதுக்கு அவையள் உதவி செய்யினம். முடிஞ்சால் அடுத்தமுறை வரக்கை ஒரு ரேப்றெக்கோடர் கொண்டு வாங்கோ. கவிதைகளை எழுதுற நேரத்துக்கு அதிலை பதிஞ்சு வைச்சிட்டு பிறகு ஆறுதலா எழுதலாம் எண்டு பாக்கிறன்.'

அவரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டோம்.

ஆனால் அடுத்தமுறை போகும் பொழுது அவர் கேட்டதை எங்களால் கொண்டு போய் கொடுக்க முடியாமல் போயிற்று. பின்னர் அவர் ஐரோப்பிய நகரங்களுக்கான கலைப்பயணத்தை மேற்கொண்ட பொழுது யேர்மனிக்கும் வந்திருந்தார். அந்த சமயத்தில் அவரின் தேவையைப் பூர்த்தி செய்தோம்.

ஒரு மாவீரனுக்குத் தந்தையான கவிஞர் நாவண்ணன் விடுதலைக்காக பல கவிதைகளைத் தந்தவர். கவிதையில் வண்ணனான அவர் பரந்தாமனாக வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால் குசேலராகவே வாழ்ந்து மறைந்து போனது பெரும் சோகம்.

தொடரும்..

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=11&contentid=26149fbc-4c9b-4dc5-a43c-a49a8f7ae1fd

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  கிருபன்

தொடர்ந்து வாசிக்கின்றேன்..

தொடருங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பயணத்தின் எண்ணம் ஈடேறியது

பயணத்தின் எண்ணம் ஈடேறியது
மூனா

 

நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தரலாம் – 16

தமிழ்ச்செல்வனுடனான அன்றைய இரவு உணவு விருந்தில் எங்களுடன் தமிழர் புனர்வாழ்வுக் கழக இணைப்பாளர் ரெஜியும் கலந்து கொண்டார்.

அரசியல் துறையின் உதவிப் பொறுப்பாளர் தங்கன் எங்களுக்கான உணவுகளைப் பரிமாறினார். அவரிடம் அமைதி நிறைந்திருந்தது. அது அவரின் இயல்பான சுபாவமாக இருக்க வேண்டும். பார்த்தவுடன் நட்புக்கொள்ள வைக்கும் பார்வையும், செய்கைகளும் அவரிடம் இருந்தன.

கொல்கர் கொஞ்சம் திருப்தி இல்லாதவன் போல் தெரிந்தான். என்னவென்று அவனிடம் விபரம் கேட்டேன்.

'இரவுச் சாப்பாடு என்றவுடன் சும்மா சாப்பிட்டுப் போவது என்றுதான் நினைத்தேன். அதனால்தான் கட்டைக் காற்சட்டையோடு வந்தேன். இங்கு ராஜாங்க மரியாதை அல்லவா நடக்கிறது. இப்படி ஒரு கட்டிடம் வன்னியில் இருக்கும் என்று நான் நினைத்துப் பார்க்கவே இல்லை' என்றான்.

'இது அரசியல்துறை. வெளிநாடுகளில் இருந்து வரும் பிரமுகர்கள் இங்கேதான் சந்தித்துக் கொள்வார்கள். இன்று வந்திருக்கும் பிரமுகர் நீதான்' என்றேன்.

'இதை நீ முன்னரே சரியாகச் சொல்லி இருந்தால், ஒரு பிரமுகருக்கான உடுப்பைப் போட்டுக் கொண்டு நான் வந்திருப்பேன்' கொல்கர் என்னில் தவறு சொன்னான்.

நாங்கள் இருவரும் கதைப்பதைக் கவனித்த தமிழ்ச்செல்வன், 'என்ன ஏதும் பிரச்சினையோ?' சிரிப்போடு அவரிடம் இருந்து கேள்வி வந்தது.

பயணத்தின் எண்ணம் ஈடேறியது

தமிழ்ச்செல்வனுக்கு கொல்கரின் காற்சட்டைப் பிரச்சினையைச் சொன்னேன்.

'இது பிரச்சினை இல்லையே. இந்த வெக்கைக்கு இப்பிடி இருக்கிறதுதானே சௌகரியம்'

தமிழ்ச்செல்வனின் கூற்றை கொல்கருக்குச் சொன்னேன். சொல்லும் பொழுது எனது வார்த்தைகளையும் சேர்த்துச் சொன்னேன்.

கொல்கர் சிரிக்க ஆரம்பித்தான்.

கொல்கரின் சிரிப்பு தமிழ்ச்செல்வனுக்கும், தங்கனுக்கும், றெஜிக்கும் புரியாமல் இருந்திருக்கும். அவர்களுக்கு விளக்கம் சொன்னேன்.

'நீங்கள் சொன்னதோடு நானும் கொஞ்சம் சேர்த்து அவனுக்குச் சொன்னனான்'

'சிரிக்கத் தக்கதா அப்பிடி என்ன சொன்னனீங்கள்?'

'காற்சட்டையோடு வந்தது ஒண்டும் பிரச்சினை இல்லை. அதுவும் இல்லாமல் வந்திருந்தால்தான் பிரச்சினை எண்டு'

தமிழ்ச்செல்வனின் சிரித்த முகம் மேலும் சிரித்தது.

கலகலப்பாகப் பேசினோம். பேச்சு எங்கள் செயற்திட்டம் பற்றி வந்தது.

எங்களுடைய செயற்திட்டங்களையும், நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த இரசாயனப் பொருட்கள் இன்று வந்து கிடைத்ததையும், நாளை யேர்மன் தொழில் நுட்பத்தில் கால் செய்யும் பணி தொடங்க இருப்பதையும் றெஜி விளக்கமாக தமிழ்செல்வனுக்குச் சொன்னார்.

'அப்பிடியே. கடைசியிலை அந்த கெமிக்கல்ஸ்ம் வந்து சேர்ந்திட்டுது. நல்லதாப் போச்சு' என்று தமிழ்ச்செல்வன் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

நல்லவேளை எல்லாம் வற்றாப்பளை அம்மன் அருள் என்று இவரும் சொல்வார் என்று எதிர்பார்த்தேன். அவர் சொல்லவில்லை.

எனது மனைவியின் தம்பி மயூரன் தமிழ்செல்வனுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததால் அவரைப் பற்றி நிறையச் சொன்னார்.

உணவுக்குப் பின்னான உரையாடல், நேரத்தை அதிகம் எடுத்திருந்தது. காலையில் எங்கள் பணி இருப்பதால் விடைபெறலாம் என்று நினைத்தோம்.

புறப்படுமுன் எனது மனைவியைக் கூப்பிட்டுத் தனியாகக் கதைத்தார்.

புறப்படும் பொழுது, எனது மனைவி, 'எல்லோரும் சேர்ந்து போட்டோ எடுக்கலாமா?' என்று கேட்க, 'அட நான் அந்த விசயத்தை மறந்தே போனன். ஏற்பாடு செய்திருக்கலாம்' என்று கவலையோடு சொன்னார்.

'எங்களிடம் கமரா இருக்கிறது' என்றார் எனது மனைவி.

'நல்லதாப் போச்சு. வாங்கோ போட்டோ எடுக்கலாம்' என்றார்.

புகைப்படங்கள் எடுத்துவிட்டு புறப்படும் பொழுது என்னிடம் 'அக்காட்டையும் சொன்னனான். நாளையிண்டைக்கு ஒரு பெரிய சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறம்' என்றார்.

'இரட்டிப்பு மகிழ்ச்சி என்று சொல்லுவினம், இது அதுக்கு மேல். உங்களைச் சந்தித்தது ஒரு மகிழ்ச்சி. உங்களோடு உரையாடியது இன்னுமொரு மகிழ்ச்சி. சுவையான உணவு அது ஒருவித மகிழ்ச்சி. பெரிய சந்திப்பு எண்டு சொன்னீங்களே.. அது பெரும் மகிழ்ச்சி. இதெல்லாம் சேர்த்து மட்டற்ற மகிழ்ச்சி' என்றேன்.

மகிழ்ச்சியோடு அவரிடம் இருந்து விடைபெற்றோம்.

சு..தமிழ்ச்செல்வன் பற்றி ஒரு சிறு குறிப்பு.

சு..தமிழ்ச்செல்வன் என்னை தனது சகோதரனாகவே கருதிப் பழகினார். சமாதானப் பேச்சுக்களுக்காக அவர் அப்பொழுது அடிக்கடி ஐரோப்பிய நாடுகளுக்கு வந்து போவார். அப்படி அவர் ஐரோப்பிய நாடுகளுக்கு வரும் பொழுதெல்லாம் மறக்காமல் தொலைபேசியில் என்னை அழைத்து நலன் விசாரிப்பார்.

சுவிஸ் நாட்டில் நடந்த அகில உலக தமிழர் புனர்வாழ்வுக் கழக இரண்டு நாள் கருத்தரங்கில் கடைசிநாள் வந்து உரையாற்றினார். அன்றுதான் அவரை நான் கடைசியாகச் சந்தித்தது.

அவரது மரணச் செய்தி வந்த பொழுது அவரது அந்த சிரித்த முகம் நினைவில் வந்து பெரும் சோகத்தை எனக்குள் தந்தது. தங்கள் பத்திரிகையில் வெளியிடுவதற்கு தமிழ் கார்டியன் அவரை வரைந்து தரும்படிக் கேட்ட பொழுது சிரிப்பு இல்லாத அவரது முகத்தை வரைந்து அனுப்பினேன்.

அடுத்த நாள் காலையில் முதல் ஆளாக வெண்புறா வேலைத்தளத்தில் கொல்கர் நின்றான். தனது உதவியாளராக என்னை நிற்கும்படி கேட்டுக் கொண்டான்.

தமிழர் புனர்வாழ்வுக்கழக இணைப்பாளர் றெஜியும் தனது அன்றாட வேலைகளைத் தள்ளி வைத்து விட்டு கொல்கரின் செயற்பாட்டை பார்வையிட காலையிலேயே வந்திருந்தார்.

அறிமுகப்படுத்தப்பட இருக்கும் யெர்மனியத் தொழிநுட்பத்திற்கான வேலைத்திட்டத்தை வீடியோ படம் பிடிக்க ஒருவர் தனது உதவியாளருடன் வந்திருந்தார்.

வெண்புறாவில் இருந்த அனைவரும் அன்று காலை ஒன்பது மணிக்கு வேலைத்தளத்திலே இருந்தார்கள். வழமையாக இரவில் ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டுமே இயங்கும் ஜெனரேட்டர் அன்று பகல் நேரத்திலேயே இயக்கத் தொடங்கியது.

கொல்கர் தனது வேலையைத் தொடங்குவதற்கு முன் தான் செய்யப்போவதை விபரமாக எடுத்துக் கூறினான். எனது மனைவி அங்கே மொழிபெயர்ப்பாளராக இருந்தார்.

தகரத்தால் செய்யப்படும் கால்களில் உள்ள குறைபாடுகளை கொல்கர் தெளிவாகச் சொன்னான். ஒரு செயற்கைக் காலைச் செய்வதற்குத் தேவையான சாதாரண ஆயுத உபகரணங்கள் வெண்புறாவில் இல்லாததைக் குறிப்பிட்டான். சுத்தியலுக்காக இரும்புத்துண்டு பாவிக்கப்படுவதையும் குறிப்பிட்டு உபகரணங்களைப் பெறுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றான்.

அவனது விளக்கங்களும், ஆதங்கங்களும் முடிவடைந்ததும் சடகோபனை எல்லாவற்றையும் அவதானிக்கும்படியும், புரியாதவைகளைக் கேள்வி கேட்டு புரிந்து கொள்ளும்படியும் அறிவுறுத்தினான்.

முதலில் வேறொருவருக்கே செயற்கைக் கால் பொருத்துவதாக ஏற்பாடாகி இருந்தது. வேலைகளைத் தொடங்கும் பொழுது வெண்புறா பொறுப்பாளர் அன்ரனி, தனக்கு முதல் காலைப் பொருத்தும்படி கேட்டுக் கொண்டார்.

தனது வேலையை மிக மிக நிதானமாக நேரமெடுத்து கொல்கர் செய்தான். இடையிடையே ஜெனரேட்டர் நின்று போகும் பொழுதுகளில் கூட பொறுமையாக தனது வேலையிலேயே கவனத்தை வைத்திருந்தான். தேவைப்படும் பொழுதெல்லாம் சடகோபனுக்கு விளக்கமும் கொடுத்தான்.

மதிய இடைவேளைக்கு நேரம் ஒதுக்ககிக் கொண்டோம்.

மீண்டும் வேலையை ஆரம்பிக்கும் பொழுது தென்னிந்திய ஊடகவியலாளர்கள் இருவர் வந்தார்கள்.

கொல்கருடன் பேட்டி எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டார்கள். கொல்கர் தனது பேட்டிக்காக சிறிது நேரம் அவர்களுக்காக ஒதுக்கிக் கொடுத்தான்.

அன்று மாலை அன்றைய வேலைகள் முடிவுக்கு வந்தன. செயற்கைக்கால் காய நேரம் எடுக்கும். ஆகவே மிகுதியான வேலைகளை மறுநாள் செய்வோம் என ஒத்திவைத்தோம்

மறுநாள் கொல்கர், செயற்கைக் காலை ஒரு சிற்பி சிலையைச் செதுக்குவது போல் செதுக்கி எடுத்தான்.

அன்ரனிக்கு காலைப் பொருத்திய பொழுது அது கன கச்சிதமாகப் பொருந்தி இருந்தது.

'நீண்ட காலமாக தகரக் காலைப் பொருத்தி நடந்து பழகியதால் இந்த வகையான கால் சில அசௌகரியங்களைத் தரலாம். தகரத்தால் செய்யப்படும் கால் பாரமானது. இது இலகுவானது. ஆதலால்தான் அந்தக் குறை தெரியும். தொடர்ந்து நடைக்கான பயிற்சி எடுத்தால் அது இல்லாமல் போய்விடும். புதிதாக ஒருவர் இந்தக் காலைப் பொருத்தும் பட்சத்தில் அவருக்கு இந்த எண்ணமே இருக்காது' என்று கொல்கர் அங்கே ஒரு விளக்கத்தையும் தந்தான்.

யேர்மனிய தொழில்நுட்பத்தில் செய்யப்படும் செயற்கைக் காலை வன்னியில் செய்ய முடிந்தது.

எல்லோருக்கும் அது மகிழ்ச்சியைத் தந்தது. யேர்மனியில் அந்த இரசாயனப் பொருட்களை விட்டுச் செல்லாத நிலை இருந்திருந்தால் குறைந்தது பத்துப் பேருக்காவது யேர்மனிய தொழில் நுட்பத்தில் கால்கள் செய்து பொருத்தி இருக்கலாம். அதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைக்காது போனது உள்ளூரக் கவலைதான். ஆனாலும் ஒருவருக்கேனும் அந்த வகையிலான காலைப் பொருத்தியதில் ஒரு திருப்தி இருந்தது.

எங்களது வெண்புறா நோக்கிய பயணத்தின் எண்ணம் ஈடேறியது குறித்து மனது லேசானது.  சொல்லி வைத்தாற்போல் அன்று எங்களுக்கு அந்த இனிய சந்திப்பும் இருந்தது.

அன்றைய இரவு இடம்பெறும் சந்திப்பைப் பற்றியே அன்றைய நாளெல்லாம் நினைவாகப் போனது.

தொடரும்...

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தரலாம் – 17

எனது கையில் அவரின் துப்பாக்கி

மூனா

எனது கையில் அவரின் துப்பாக்கி
 

 

'அரசியற்துறையில் நடந்த இரவு சந்திப்புக்கு இது உசத்தி. நீ காற்சட்டையோடை வந்திட்டு என்னிலை பழி சுமத்தாதை' கொல்கருக்கு நினைவுபடுத்தினேன்.

'நீ நேற்று சொல்லும் போதே எனக்குப் புரிந்துவிட்டது. இன்றைய சந்திப்பு விசேசமானது என்று'

'சந்திப்புக்கு முன்னால் சோதனைகள் இடம்பெறலாம். தேவை இல்லாத பொருட்கள் இருந்தால் இப்பொழுதே எடுத்து வைத்து விடு'

'கமரா மட்டும் தான் கொண்டு வாறன்'

மதியம் குறைவாகத்தான் உணவு எடுத்துக் கொண்டோம். நினைவுகள் மட்டும் சந்திப்பைப் பற்றி நீண்டு இருந்தது.

எங்களது சந்திப்பிற்கான ஒழுங்கு மீண்டும் ஒரு தடைவ அரசியல்துறைச் செயலகத்தால் அன்று உறுதிப்படுத்தப்பட்டது. 'வாகனம் வரும் காத்திருங்கள்' என்ற தகவலும் கூடவே வந்திருந்தது.

வாகனத்துக்காக நான், எனது மனைவி, கொல்கர் மூவரும் காத்திருந்தோம். நான்காவதாக தமிழர் புனர்வாழ்வுக் கழக இணைப்பாளர் ரெஜியும் எங்களுடன் வந்து இணைந்து கொண்டார்.

எனது கையில் அவரின் துப்பாக்கி

வாகனமும் வந்தது. நாங்கள் நால்வரும் ஏறிக் கொண்டோம். அன்ரனி, தான் அரசியல்துறைச் செயலகத்தில் இருந்து வருபவர்களுடன் பயணிக்க இருப்பதாகச் சொன்னார்.

பள்ளங்கள், மேடுகள் என வாகனம் விழுந்து எழுந்து பயணித்தது. இப்பொழுது பயண அலுப்புகள் ஏதும் தெரியவில்லை. மனது பெரிய சந்திப்பில் நிலைத்துவிட்டதால் உடல் உபாதைகள் மறந்து போயிருந்தன. நீண்ட பயணத்தின் பின் ஒரு குடிசையின் முன்னால் வாகனம் சென்று நின்றது.

இந்தக் குடிசைக்குள்தான் பெரிய சந்திப்போ? ஒருவேளை நிலத்துக்கு அடியில் ஏதாவது சந்திப்புக் கூடம் இருக்கிறதோ? அல்லது வாகனத்துக்கு எரிபொருள் போதாதோ? கேள்விகள் தோன்றிக்கொண்டே இருந்தன. சுற்று முற்றும் ஆள் நடமாட்டம் எதுவும் இருக்கவில்லை. பிறகு சந்திப்போம் என்று வாகனத்தில் வந்தவரும் விடைபெற்றுக் கொண்டு சென்று விட்டார்.

குடிசையைச் சுற்றி வந்து பார்த்தேன். எதுவித அசைவுகளும் இல்லை. ரெஜியைப் பார்த்தேன். இப்பொழுது அவர் ஒருவர்தான் அந்த இடம் எதுவென்று தெரிந்தவர். எங்களுக்கோ கண்ணைக் கட்டி காட்டில் விட்ட நிலை. ரெஜியோ எந்தவித சலனமும் இல்லாமல் நின்றார். ஒருவேளை இது பாதுகாப்பிற்கான முன்னேற்பாடோ? எதுவானாலும் என்ன! அடுத்து ஏதோ ஒன்று நிகழத்தானே போகிறது. அதுவரை காத்திருப்போம்.

அந்தக் குடிசையைச் சுற்றி இருந்த மரங்கள், செடிகளை ஆராய்ந்தேன். அவை சம்பந்தமான கேள்விகளுக்கும், மற்றும் பொதுவான விடயங்களுக்கும் ரெஜி பதில் தந்தார். மறந்தும் கூட 'இது எந்த இடம்?' என்று கேட்டு நான் அவரைச் சங்கடத்தில் ஆழ்த்த விரும்பவில்லை.

மாலையும், இரவும் சந்திக்கும் நேரம் நெருங்கி விட்டிருந்தது. குடிசையின் பிற்பகுதியில் நின்றோம். எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. குடிசையின் பிற்பகுதியிலேயே ஒரு வாகனம் திடீரென வந்து நின்றது. வாகனத்தில் இருந்து சிரித்தபடியே மருத்துவத்துறைப் பொறுப்பாளர் ரேகா இறங்கி வந்தார். முதல் முதலாகச் சந்திக்கிறோம். ஆனால் நெருங்கிய உறவு போல் உரிமை எடுத்துப் பழகினார். ரேகாவும், மயூரனும் தோழர்கள் என்பது அவரது உரையாடலில் தெரிந்தது.

'போகலாமா?' என்று ரேகா கேட்டார்.

சந்திப்பு இங்கே இல்லையோ? மீண்டும் பயணமோ? வாகனத்தில் ஏறிக் கொண்டோம். இப்பொழுது இருட்டி விட்டிருந்தது. வீதியில் வெளிச்சம் இல்லை. வெளியில் எல்லாமே இருட்டாக இருந்தது. வாகனத்து வெளிச்சம் மட்டும் எங்களுக்கு முன்னால் இருந்தது.

பாதுகாப்பின் நிமித்தம் இந்த ஏற்பாடாக இருக்கலாம். அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்தில்தான் சந்திப்பாக இருக்கலாம். நாங்கள் அந்த நேரத்திற்கு முன்னதாக வந்துவிட்டதால் இடையில் காத்திருக்க வேண்டிய தேவை வந்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

கொல்கருக்கு என்ன நடக்கிறதென்றே புரியாமல் இருந்திருக்கும். ஆனாலும் பொறுமையாக வாகனத்தில் இருந்தான். வழி எங்கும் இருட்டு. ஓர் இடத்தில் வாகனம் நின்றது. அப்பொழுதுதான் வெளிச்சமும் தெரிந்தது.

வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அந்த வெளிச்சம் தெரியாத வண்ணம் இயற்கை மறைப்புக்குள் அந்தக் கட்டிடம் இருந்தது. வாகனத்தில் இருந்து இறங்கிய பொழுதுதான் ஜெனரேட்டர் இயங்கிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. கட்டிடத்தின் முன்னால் ஐந்து பிரம்புக் கதிரைகள் போடப்பட்டிருந்தன. அதில் ஒன்றில் சு.ப. தமிழ்ச்செல்வன் இருந்தார்.

'பிறகு சந்திக்கிறேன்' நன்றியைக் கூட எதிர்பார்க்காமல் ரேகா வாகனத்தை திருப்பிக் கொண்டு போய் விட்டார்.

கதிரையில் அமர்ந்தோம். தமிழ்ச்செல்வன் சிரிப்பாலே வரவேற்றார். இந்த இடத்தில் தான் சந்திப்பு என்பதை அங்கிருந்த சூழ்நிலை தெளிவுபடுத்தியது.

நாங்கள் இருந்த இடத்திற்கு சற்றுத் தள்ளி இருட்டான பகுதியில் வாகனம் ஒன்று வந்து நின்றது. தமிழ்ச்செல்வன் அந்த இடத்தை உற்று நோக்குவதில் இருந்து புரிந்து போயிற்று. எங்களைச் சந்திக்க அழைத்தவர் நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து சற்றுத் தூரத்தில்தான் நிற்கின்றார் என்று.

அந்த இருட்டிலும் காண முடிந்தது. குறைந்தது ஐந்து பேராவது அந்த இடத்தில் நிற்கிறார்கள் என்று. தொடர்ந்து அந்த இடத்தையே பார்ப்பது நாகரீகமாக இருக்காது என்பதால் பார்வையைத் திருப்பினேன்.

'சரி வாங்கோ போவம்' தமிழ்ச்செல்வன் கதிரையில் இருந்து எழுந்த வண்ணம் எங்களை அழைத்தார். அவர் பின்னாலே போனோம்.

தமிழ்ச்செல்வனைத் தொடர்ந்து எனது மனைவி உள்ளே நுழைந்தார். அவருக்கு அடுத்ததாக கொல்கர் உள்ளே சென்றான். இப்போழுது முழுமையாகத் தெரிந்தது. அறையில் இருந்த பிரகாசமான விளக்கின் வெளிச்சத்தில் முகத்தில் சிரிப்போடு பிரபாகரன் நின்றார்.

கொல்கரை நோக்கி பிரபாகரன் தனது வலது கையை நீட்டினார். கொல்கர் இருகரம் கூப்பி தமிழில் 'வணக்கம்' என்றான். நீட்டிய வலது கையை வேகமாகத் திசைதிருப்பி இரு கரம் கூப்பி அவரும் சிரிப்புடன் 'வணக்கம்' என்றார்.  பின்னர் இருவரும் கைகுலுக்கிக் கொண்டார்கள்.

அடுத்தது நான். கொல்கர் பாணியிலேயே வணக்கம் சொல்லி கைகுலுக்கிக் கொண்டேன்.

'நீங்கள்தான் அவருக்கு வணக்கம் சொல்லிக் குடுத்திருக்கிறீங்கள் போலை இருக்கு' பிரபாகரன் சிரித்தபடியே என்னைக் கேட்டார்.

எங்களை அவர்கள் முழுதாக நம்பினார்கள் என்றே சொல்ல வேண்டும். எந்தவித சோதனைகளும் எங்களுக்கு அங்கே இடம்பெறவில்லை. அது விருந்தினரைக் காயப்படுத்தி விடுமோ... என்ற நிலையாகக் கூட இருக்கலாம்.

ஒரு வெளிநாட்டவரைச் சந்திக்கும் முறையிலேயே பிரபாகரன் வந்திருந்தார். உள்ளே நோட்டம் விட்டேன். ரேகா, அன்ரனி உட்பட சிலர் அங்கே இருந்தனர். நீண்ட பெரிய மேசை. எல்லோரும் இருக்கையில் அமர்ந்து கொண்டோம்.  

வெண்புறாவில் எங்களது செயற்பாடுகளை அன்ரனி, பிரபாகரனுக்குச் சொன்னார். தனக்குப் பொருத்தப்பட்டிருக்கும் காலுடன் ஒரு நடை போட்டுக் காண்பித்தார்.

இப்பொழுது கால் லேசாக இருக்கிறது. இதைப் போட்டு நடக்கிற பொழுதுதான் தெரியுது, இவ்வளவு காலமும் இரும்பைக் கட்டிக்கொண்டு நடந்திருக்கிறன் எண்டு...' அன்ரனி சொல்வதைப் பிரபாகரன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.

அன்ரனியின் பேச்சு காலை விட்டு கொல்கரிடம் தாவியது. 'ஆள் இப்ப எங்களிலை ஒருத்தன் மாதிரி. சாரம் கட்டுறான். கையாலை சாப்பிடுறான்'

அன்ரனியின் பேச்சை இங்கே இடைமறித்தேன். 'ஒரு நிமிசம்... அவனும் எங்களைப் போலை வாயாலைதான் சாப்பிடுறான். கத்தி, கரண்டி இல்லாமல் கையைப் பாவிச்சுச் சாப்பிடுறான்'

பிரபாகரன் சிரிக்க ஆரம்பித்தார். அவர் இப்பொழுது ஒன்று புரிந்திருப்பார். வந்திருப்பவர்கள் பிரமுகர்கள் இல்லை, தனது நண்பர்கள் என்று.

அன்ரனி கொல்கர் புராணத்தைத் தொடர்ந்தார். 'இன்னும் கொஞ்சக்காலம் எங்களோடை இருந்தால் தமிழ் கதைக்கத் தொடங்கீடுவான்'

'பார்த்தனான். அவன் வணக்கம் சொல்லக்கை 'ண' வில் எந்தவிதப் பிரச்சனையும் இல்லாமல் சொன்னான். நீங்களோ.. அவனுக்கு எல்லாம் சொல்லிக் குடுக்கிறிங்கள்?' பிரபாகரன் மீண்டும் என்னைப் பார்த்துக் கேட்டார்.

'சொல்லிக் குடுக்கிறதென்று சொல்ல முடியாது. அவன் கேட்டுத் தெரிந்து கொள்கிறான் எண்டு சொல்லுறதுதான் சரியா இருக்கும்' என்றேன்.

கையில் இருந்த பத்மநாப ஐயரின் 'கண்ணில் தெரியுது வானம்’  புத்தகத்தைப் பிரபாகரனிடம் கொடுத்தேன்.

'வெறும் கையோடு உங்களைச் சந்திக்க விரும்பேல்லை. அதாலைதான் இந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்தனான். முக்கியமான எழுத்தாளர்களின்ரை கதையள் இந்தப் புத்தகத்திலை இருக்குது' என்றேன். மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டார்.

உரையாடல்கள், பலதையும் தொட்டுச் சென்றன. திருதிருவென முழிக்கவிடாமல் எல்லாவற்றையும் கொல்கருக்கு மொழி பெயர்த்தேன். பிரபாகரனுக்கு கொல்கரை பிடித்துப் போயிற்று.

திடீரென எழுந்து வெளியே சென்றார்.

ஏன் சென்றார் என்ற கேள்வி, எனக்கு வந்தது போல் மற்றவர்களுக்கும் வந்திருக்கும்.

ஒருவேளை அவருக்கான மதிப்பைக் கொடுக்காமல் இயல்பாகக் கதைத்தது அவருக்குப் பிடிக்கவில்லையோ? சில விநாடிகள்தான். பிரபாகரன் திரும்பி வந்தார்.

இப்பொழுது அவரது கையில் துப்பாக்கி. மனம் ´திக்'கென்றது. சந்திப்புக்கு வந்த இடத்தில் துப்பாக்கிக்கு என்ன வேலை.

பிரபாகரன் நேராக என்னை நோக்கி வந்தார். எனது கையை எடுத்து, உள்ளங்கையில் தனது துப்பாக்கியை வைத்தார்.

தொடரும்..

 

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=11&contentid=cd349246-ec2b-4eb9-8b31-3499a6c6df58

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தரலாம் – 18

மூனா

உடும்பு வேட்டை ஆரம்பமாகிறது

<p>உடும்பு வேட்டை ஆரம்பமாகிறது</p>
 

 

கையில் இருந்த துப்பாக்கியையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

சுற்றி இருந்தவர்கள் அதுவும் கொல்கர் என்ன நிலையில் இருந்தார்கள் என்று தலைதூக்கிப் பார்க்க முடியவில்லை. அல்லது முயலவில்லை. எது என்று என்னால் தெளிவாகச் சொல்ல முடியவில்லை.

'சொல்லுங்கோ. இது அவரின்ரை நாட்டுத் தயாரிப்புத்தான் என்று' பிரபாகரன் சொல்லும் போதே கொல்கரை நோக்கி கையைக் காட்டினார்.

கொல்கருக்கு எதுவும் புரிய வாய்ப்பில்லை. இப்பொழுது கொல்கரைப் பார்த்தேன். அவன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.

'இதுவும் Made in Germany தான்' பிரபாகரனிடமிருந்து அடுத்து உதிர்ந்த வார்த்தைகளில் கொல்கர் தெளிவு பெற்றிருப்பான்.

துப்பாக்கியை கொல்கரின் கையில் கொடுத்தேன். வாங்கி ஆராய்ந்து விட்டு சிரித்துக் கொண்டே பிரபாகரனின் கையில் கொடுத்தான். மீண்டும் வெளியில் சென்ற பிரபாகரன் சில வினாடிகளில் திரும்பி வந்தார். தனது பாதுகாப்புக்காக அவர் உடலில் மறைத்து வைத்திருக்கும் துப்பாக்கியை ஒரு சில நொடிகளில் வெளியே எடுத்து, அதை வெறுமையாக்கி எங்களிடம் தந்த வேகம் ஆச்சரியப்பட வைத்தது.

யேர்மனியத் தொழில்நுட்பத்திறனை வெகுவாகப் பாராட்டிச் சொன்னார். போரில் அழிந்து போன நகரங்களை விரைந்து கட்டி எழுப்பிய அவர்களின் உழைப்பைக் கண்டு வியந்திருக்கிறேன் என்றார். ஒரு விருந்தினர் வந்திருந்தால் அவர் பற்றியோ அல்லது அவர் சார் விடயங்களைப் பற்றியோ உரையாடுவது அந்த விருந்தினரை மகிழ்விக்கும் என்பதை பிரபாகரன் தெளிவாக அறிந்திருக்கிறார் என்பதை அவரது உரையாடலின் பொழுது தெரிந்து கொண்டேன்.

பேச்சுக்கள் பெண்ணியம், போராளிகள், மாவீரர்கள், புனர்வாழ்வு என விரிந்து கொண்டே போனது. பெரிய சந்திப்புக்கு சிறிய நேரமே எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அது இப்போது முடிவிலி ஆனது.

'சாப்பிடுவோமா?' என்று பிரபாகரன் இரவு உணவுக்கு அழைத்தார். விருந்தும் இருக்கிறதா என்றேன். 'உங்களுக்கு இல்லாமலா' என்றார்.

கொல்கர் உணவை ருசித்துச் சாப்பிடுவதை பிரபாகரன் ரசித்துப் பார்த்தார்.

கஸ்ரோ வீட்டில் சிற்றுண்டி, தமிழ்ச்செல்வனின் அரசியல்துறை அலுவலகத்தில் இரவு உணவு, அடுத்து இங்கே என்று எல்லாமே ஆண்கள்தான் நிறைந்திருந்தார்கள். எனக்கு உணவு பரிமாறிய இளைஞனை எங்கேயோ நான் பார்த்த ஞாபகமாக இருந்தது. மீண்டும் மீண்டும் அந்த இளைஞனைப் பார்த்தேன். அப்பொழுது இருந்த சூழ்நிலையில் என்னால் அந்த இளைஞனை அடையாளம் காண முடியவில்லை. 

நான் அந்த இளைஞனை அடிக்கடி பார்ப்பதை பிரபாகரனின் புலிக்கண் அவதானித்து விட்டது. அவரே சொன்னார், 'இவரின்ரை தாய் தகப்பன் யேர்மனியிலைதான் இருக்கினம்' இப்பொழுது எனக்கு நினைவுக்கு வந்தது. கண்ணை மூடிக் கொண்டு ஒப்பிக்கத் தொடங்கினேன். அந்த இளைஞனின் பெயர், அவரின் தாய் தந்தையரின் பெயர்கள், அவர்களின் விலாசம், தொலைபேசி இலக்கம், மாதாந்தம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு தரும் தொகை என மட மட என்று சொல்லி விட்டு கண்களைத் திறந்து பார்த்தேன்.

நான் மட்டும் தான் அசைந்திருந்தேன். மற்றவர்கள் அப்படியே என்னைப் பார்த்துக் கொண்டு அசையாமல் நின்றார்கள். எனக்குக் குடிப்பதற்கு தண்ணீர் தர வந்த அந்த இளைஞன் தண்ணீர் குடுவையுடன் சிலையாக நின்றான்.

அவசரக்குடுக்கை என்பார்களே. அது நான்தானோ? இடம், பொருள், ஏவல் பார்த்துக் கதைக்க வேண்டுமென்று அறிந்திருக்கிறேன். இங்கே கொஞ்சம் நட்பாகப் பழகினார் என்பதற்காக அதிக உரிமை எடுத்து எனது புத்திசாலித்தனத்தைக் காட்ட முயற்சி செய்தது தவறாகப் போய் விட்டதோ?

அமைதியை பிரபாகரனே போக்கினார். 'நீங்கள் எங்கடை புலனாய்வுத் துறையிலை இருக்க வேண்டிய ஆள்' நிலைமை சுமூகமானதால் மனது சமாதானமானது.

அந்த இளைஞனின் தாய் தந்த கடிதத்தையும், அதனைக் கஸ்ரோவிடம் கொடுத்ததையும் சொன்னேன். பெற்றோரின் சாயல் அந்த இளைஞனிடம் இருந்ததால்தான் மற்றைய விபரங்களையும் சொன்னேன் என்றேன். பிரபாகரன் சிரித்துக் கொண்டு கதையை திசை திருப்பினார்.

'கொல்கருக்கு வன்னியிலை எல்லா இடமும் சுத்திக் காட்டினனீங்களோ?'

'முல்லைத்தீவு, கடற்கரை, வற்றாப்பளை, மாவீரர் துயிலும் இல்லங்கள்...'

'திருகோணமலை?'

'இல்லை. அதுக்குப் போறதுக்கான நேரம் கிடைக்கவில்லை'

'அப்ப இரணைமடுக் குளத்தையாவது கொண்டு போய்க் காட்டுங்கோ'

எங்களை அடுத்த நாள் அந்த இடத்திற்கு அழைத்துப் போவதாக ரெஜி சொன்னார்.

கொழும்பு - வன்னிக்கான எங்களது  போக்குவரத்து வசதிகளைப் பற்றிக் கேட்டார். சொன்னேன்.

சு.ப.தமிழ்ச்செல்வன் குறுக்கிட்டு 'திரும்பிப் போறதுக்கு நான் ஒழுங்கு செய்கிறேன்' என்றார்.

'கொல்கருக்கு நாங்கள் வன்னியில் செய்யக் கூடியது ஏதாவது இருந்தால் சொல்லுங்கோ' என்று பிரபாகரன் கேட்டார்.

பிரபாகரன் கேட்டதை கொல்கருக்கு மொழிபெயர்த்தேன்.

‘Ich möchte gerne Waran essen’ என்றான்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் சொன்னதை மொழிபெயர்க்க மறந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

'அவர் சொன்னது விளங்கேல்லையோ?'

குழப்பமாக இருந்தது. ஆனாலும் சொன்னேன்.

'அவனுக்கு ‘வாறான்’ சாப்பிட ஆசையாக இருக்குதாம்'

'வாறான்?'

நான் மொழிபெயர்க்க மறந்தது அப்போதுதான் புரிந்தது.

'அவனுக்கு உடும்பு சாப்பிட ஆசையாக இருக்குதாம்'

பிரபாகரன் சிரிக்க ஆரம்பித்தார்.

'வேறையேதாவது கேட்பார் என்று பார்த்தால் உடும்பு கேட்கிறார்'

இப்போது உடும்பை எங்கே பிடிக்கலாம் என்பதே அங்கே பேசுபொருளாகப் போனது.

யேர்மனியர் ஏதாவது ஒரு நாட்டுக்கு போகிறார்கள் என்றால் அந்த நாட்டைப் பற்றிய புத்தகங்களை வாங்கி வாசித்து முதலில் அறிந்து கொள்வார்கள்.

கொல்கர் வாசித்த புத்தகத்தில் வன்னியில் உடும்பு இருக்கிறது என்று போட்டிருந்திருக்குமோ என்னவோ?

'மழை நேரம் எண்டால் பிடிக்கலாம். இப்ப எங்கை போய் உடும்பைத் தேடுறது' அங்கிருந்தவர்கள் அங்கலாய்த்தார்கள்.

'வேட்டைக்குப் போற ஆக்கள் ஆரையும் கேட்டுப் பாக்கேலாதோ?'

பிரபாகரனின் கேள்விக்கு, ஒவ்வொருவர் ஒவ்வொரு கதை சொன்னார்கள். எல்லாமே எதிர்மறையாகவே இருந்தன.

எல்லாவற்றையும் கேட்டு விட்டு பிரபாகரன் சொன்னார் 'எங்களுக்காக எவ்வளவு சிரமங்கள் எடுத்திருக்கிறார். அவர் விரும்பினதை நாங்கள் குடுக்கோணும். இந்தக் கணத்திலை இருந்து உடும்பு வேட்டை ஆரம்பமாகிறது. இதை அவரிட்டைச் சொல்லுங்கோ'

பிரபாகரன் சொன்னதை மொழிபெயர்த்து கொல்கரிடம் சொன்னேன். மகிழ்ச்சியை அவனது முகம் சொன்னது. பிரபாகரனைப் பார்த்து தமிழில் 'நன்றி' என்று சொன்னான். பிரபாகரன் சிரித்துக் கொண்டார்.

பேச்சுக்கள் கலகலப்பாகப் போய்க் கொண்டிருந்தன. கூடவே நேரமும் தன் பங்குக்குச் சென்று கொண்டிருந்தது.

திடீரென விளக்குகள் அணைந்து விட்டன. இருட்டு. அங்கும் இங்கும் ஆட்கள் அசையும் சத்தங்கள் முதலில் கேட்டன. பிறகு வந்த குரல் நிலைமையைச் சொன்னது. 'ஜெனரேட்டர் நிண்டு போச்சு'

தொடரும்..

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=11&contentid=8bce1d2e-9291-4523-842f-cf833ea021e2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.