Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 50

ஓர் அரிசியில் பெயர் எழுத

ஓர் அரிசியில்

என் பெயர் எழுத

இருபது ரூபாய்

கட்டணம் என்பது

ரொம்ப அநியாயமாகப் பட்டது.

ஒவ்வொரு அரிசியிலும்

உண்பவன் பெயர்

எழுதப்பட்டிருக்குமென்று

அம்மா அடிக்கடி சொல்வாள் –

ஊறவைக்கும்போது பார்த்திருக்கலாம்.

வேக வைத்ததில் அழிந்து போயிருக்கலாம்.

மட்டமான அரிசியில்

ஏழைகளின் பெயர்களையும்

பாசுமதி அரிசியில்

பணக்காரன் பெயரையும்

ஆண்டவனே எழுதும்போது

நாமென்ன செய்யமுடியும் நடுவே?

அரசுக் கிடங்குகளில்

வீணாகும் அரிசிகளில்

புழுக்களின் பெயரை

எழுதியவன்

காருண்யமூர்த்தி

  • Replies 228
  • Views 34k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 51

எதற்கு?

 

ஒவ்வொரு

கணப்பொழுதும்

ஏதாவதொரு மீன்

தூண்டிலில் மாட்டிக்கொண்டுதானிருக்கிறது

ஒவ்வொரு

கணப்பொழுதும்

எவனாவதொருவன்

மீன் எதுவும் சிக்காத விரக்தியில்

தூண்டிலை சுருட்டிக்கொண்டும் இருக்கிறான்

மீன் கிடைத்தவன்

கடவுளுக்கு நன்றி சொல்கிறான்

மீன் கிடைக்காதவன்

கடவுளைச் சபிக்கிறான்

சிக்கிய மீன்

கடவுளை சபிப்பதுமில்லை

தப்பிய மீன்

கடவுளுக்கு நன்றி சொல்வதுமில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 52

 

நான் கவிஞன் ஆன கதை

 

என் நாவில் குடியிருந்த

சரஸ்வதி வெளியேறினாள்

நாற்றம் பொறுக்காமல்

பின்பொரு நாள்

என் கனவில் வந்த

காளி சொன்னாள்

என் மனைவிபோல் காதருகே -

வாசிக்கும் நண்பர்களை வைத்திருக்கிறாய்.

நீயேன் எழுதக்கூடாது?

 

 

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 53

இந்தப் பிறவியில்

போன பிறவியில்

நாயாய் நரியாய்

புலியாய் சிங்கமாய்

என்னவாக வேண்டுமானாலும்

இருந்துவிட்டுப் போ.

இந்தப் பிறவியில்

இருக்காதே

ஒரு

புழுவாய்

காக்கையாய்

பச்சோந்தியாய்

நரியாய்

கருநாகமாய்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 54

நிழல்கள்

 

ங. 

ஒளி நிழல்களைத் தோற்றுவிக்கிறது

இருள் நிழல்களை அழித்துவிடுகிறது

 

ஙா. 

இருள் என்பது

பூமியின் நிழல்

பூமியிலேயே விழுவது

 

ஙி. 

காலடியில் துவங்கும் நிழல்

வானம்வரை கூட

வளர்ந்துவிடுவதுண்டு

 

ஙீ.

உச்சி வேளையில்

வெப்பம் தாளாமல்

நிழல்

கால்களுக்கு அடியில்

ஒளிந்துகொள்கிறது

 

ஙு. 

மூடிய கதவுகளின்

மேல் படியும்

நிழல்கள்

கதவு திறந்ததும்

வீட்டுக்குள் வந்துவிடுகின்றன

 

ஙூ. 

மற்றெதையும் விட

தங்கள் நிழல்களைப் பார்த்தே

குழந்தைகள்

அதிகமாக பயப்படுகிறார்கள்

 

ஙெ. 

நிழல் உலகில்

நிஜ மனிதர்களும்

நிஜ உலகில்

நிழல் மனிதர்களும்

உலவுவது விந்தைதான்

 

ஙே. 

பேய்களுக்கு

நிழல் இல்லை

பேய்களை யாரும்

பார்த்திராததால்

அதை இன்னும்

உறுதிப்படுத்த இயலவில்லை

 

ஙை. 

ஒளி முன்னே

செல்கையில்

நிழல் பின்னால் வருகிறது

ஒளி பின்னால் வருகையில்

நிழல் முன்னால் செல்கிறது

 

ஙொ. 

தலைவர்களின்

நிழல்கள்

ஒரு கட்டத்தில்

தலைவர்களாக

விஸ்வரூபம் எடுக்கின்றன

 

ஙோ. 

சந்திர கிரகணத்தின் போது

பூமியின் நிழல்

நிலவின் மீது விழுகிறது.

சூரிய கிரகணத்தின் போது

நிலவின் நிழல்

சூரியனில் விழுவதில்லை

சூரியன் எரித்துவிடும் என்பதால்.

 

ஙௌ. 

அசோகர்

நிழல் தரும் மரங்களை

நடவில்லை -

அவர் மரங்களை நட்டார்

அவை நிழல் தந்தன

 

ஙங. 

சட்டமன்றங்களும்

நீதிமன்றங்களும்

குற்றவாளிகளுக்கு

நிழல் தருகின்றன

 

ஆங்....

நிற்கையிலோ நடக்கையிலோ

ஒருவர் நிழல்

இன்னொருவர் நிழல் மீது படர்வது

சட்டப்படி குற்றமில்லை,

எனினும்

படுக்கையில் அவ்வாறு நிகழ்வது

பாவமென்று கருதப்படுகிறது.                           21.11.14  1.34 am

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 55

மரம் வளர்த்தது

 

விதை விதைத்து

நீர் விட்டு

முளைவிட்டதும்

அரண் அமைத்து

செடியாக்கி

மரமாக்கினேன்

அதன் நிழலில் அமர்ந்திருக்கும்

பொழுதெல்லாம்

நான் தான்

அதை வளர்த்தவன் என்ற

கர்வத்துடன் நிமிர்ந்து பார்ப்பேன்.

ஒரு நாள்

மெல்லிய குரலில் மரம்

என்னிடம் சொன்னது –

விதையாக இருந்த காலத்திலிருந்தே

நான் தான் உன்னை

வளர்த்து வருகிறேன்.

seyonyazhvaendhan@gmail.com  (நன்றி. திண்ணை 13.4.15)

Edited by seyon yazhvaendhan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 56

மணல் இட்லி

 

குவித்திருக்கும்

ஈர மணலை

சைக்கிள் சக்கரத்தால்

நறநறவென்று

கிழித்துச் செல்லும்

இச்சிறுவர் சிறுமியர்

கற்பனை கூட

செய்து பார்த்திருக்கமாட்டார்கள் -

கொட்டாங்குச்சியில்

நீ ஈர இட்லி சுட்டதையும்

பச்சை வேப்பங்காயை

பால் துளியுடன்

மையத்தில் பதிய வைத்து

நான் பகடி செய்ததையும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 57

விரும்பியதை வெறுப்பது

 

இந்த நேரத்தில்

இது

இப்படி

நிகழ வேண்டுமென

ஏற்பாடு செய்தது நான்தான்

அதுவும் எனக்காகத்தான்

அந்த நேரத்தில்

அது

அப்படி நிகழும்போது

வேறு யாரையும் விட

அதை அதீதமாக

வெறுப்பதும் நான்தான்

இந்த அலாரம் போல்தான்

பலவும்.

 

 

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 58

வெறுமை

 

வெறுங்கையென்று

சும்மா நினைத்துவிடாதே.

மூடிய கைக்குள் இருக்கிறது

காற்றின் ஒரு துளி

ஆகாயத்தின் ஒரு துண்டு

பிரபஞ்சத்தின் ஒரு துணுக்கு

வெறுமையின் முழுமை.

 

(நன்றி: வலைத்தமிழ்.காம்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 59

எந்தக் கட்சி

 

பட்டப் பகலில்

இருட்டுக் கடையை

கண்டுபிடிப்பது

கடினமாக இருந்தது.

'நீ வேற

எல்லாக் கடையிலேயும்

அதே அல்வாதான்' என்றான்

நெல்லைக்காரன்.

 

 

(பி.கு. தமிழ்நாட்டில் திருநெல்வேலி (நெல்லை) இருட்டுக்கடை அல்வா என்பது பிரபலம்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 60

இது ஆரு தலை?

ஊருக்கு வெளியில்

ஓடைக்கற்களை அடுக்கி

சுற்றுச்சுவர் எழுப்பியிருந்த

அய்யனார் கோயிலில்

ஆடிக்காற்றுக்கு ஒடிந்த

வேப்பமரக் கிளைக்கடியில்

ஒரு தலை!

அய்யா இது ஆரு தலை?

பூசாரியிடம் கேட்டான்

பேரப்பிள்ளை.

பூசாரி பதறினான் -

அய்யோ இது

ஆறுதலை அளிக்கும்

ஆறுதலை முருகனின்

ஆறாவது தலை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 61

சொல்லாததை இப்போதா சொல்வது?

 

நான் உன்னிடம்

சொல்லாததை

நீ என்னிடம்

சொல்லாததை

நீ உன் அப்பாவிடம்

இப்போது சொல்கிறாய்

ஏம்மா நீ அப்பவே

சொல்லியிருக்கலாமில்ல என்று

அப்பாவே கேட்கிறார் -

புரிந்தவன்

துணையாகி இருந்தால்

நீ இப்போதும்

சொல்லியிருக்கமாட்டாய்

என்பதை அறியாத

அப்பா(வி)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 62
(ஹைகூ 1)

 

'தட்டுங்கள் திறக்கப்படும்'
வாசகம் எழுதப்பட்டிருந்த 
தேவாலயக் கதவு உடைந்திருந்தது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 63

(ஹைகூ 2)

 

பசுவையும் கன்றையும் பிரித்துக்கட்டி

பால்காரி அமர்ந்தாள்

மார்பில் குழந்தையுடன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 64


(ஹைகூ 3)

 

திருட்டுப் பூனை

குடித்துவிட்டது

கன்றிடமிருந்து திருடிய பாலை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 65

விடை பெறுதல்

 

ஒரு தொட்டிக்குள்

தன் வேர்களைச் சுருக்கிக் கொண்ட

ரோஜாச் செடி

ஒற்றை மலர்ச் சிரிப்புடன்

முன்னிருக்கையில் உட்கார்ந்து கொண்டது
 

மண்ணில் ஊடுருவி

வேரூன்றிவிட்ட

இன்னொரு செடி

கொஞ்சம் வாடிய நிலையில்

வண்டியில் ஒதுங்கியிருந்தது

அந்த மண் மார் பிளந்து கிடந்தது

 

துணிக்கொடியை

அவிழ்க்க முடியாத அவசரத்தில்

அறுத்தபோது

தொப்புள் கொடியை

அறுப்பது போல் துடித்தாள்

 

அவனின் கையசைத்தல்

போக வேண்டாம் என்றது

அவளின் கையசைத்தல்

மறந்துவிட வேண்டாம் என்றது

அவள் அம்மாவின் கையசைத்தல்

வந்துவிடாதே என்றது.

வண்டிக்குள் பின்புறத்தில் நின்ற

அவள் நாய்

என்ன சொல்ல வாலாட்டியதோ?

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை புனைவதுதான் உங்கள் முழுநேர வேலை போல. எழுதித் தள்ளுகிறீர்கள் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை புனைவதுதான் உங்கள் முழுநேர வேலை போல. எழுதித் தள்ளுகிறீர்கள் :D

 

அப்படியில்லை, இன்று எழுதிய கவிதையையும் பத்து வருடங்களுக்கு முன்பு எழுதிய கவிதைகளையும் கலந்து பதிகிறேன்.  8 மணி நேர வேலை, 6 மணி நேர உறக்கம், 1 1/2 மணி நேரம் விளையாட்டு, பின் நண்பர்களுடன் ஒரு மணி நேர அரட்டை, குழந்தைகளுடன் குடும்பத்துடன் கழிக்கும் நேரம் போக, கவிதைகளை தட்டச்சு செய்வதற்கு ஒரு மணி நேரம் கிடைப்பதே அரிது.  பெரும்பாலான கவிதைகள் உறங்கி விழிக்கும் நள்ளிரவிலும், அதிகாலை 5 மணியிலும் கிறுக்கி வைக்கப்பட்டு, பின் தட்டச்சு செய்வேன். நான் முன்பே சொன்னபடி யாழ் போன்ற களங்களும், மற்றும் பல இணைய இதழ்களும், உங்களைப் போன்ற தமிழ் உறவுகளின் அன்பும் சமீப காலத்தில் நான் அதிகம் எழுதுவதற்குக் காரணிகளாகியிருக்கின்றன.  நன்றி என்றென்றும்.

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 66

உன் கடவுளின் விருப்பத்துக்கு எதிராக

 

நீ பிரார்த்தனை செய்கிறாய்

உன் கடவுளின் விருப்பத்துக்கு எதிராக.

இது இப்படி நிகழ வேண்டுமென

விரும்புபவன் அவன்

தீர்மானிப்பவன் அவன்

எழுதியிருப்பவன் அவன் என்று

தெரிந்திருந்தும்

நீ பிரார்த்தனை செய்கிறாய்

உன் கடவுளின் விருப்பத்துக்கு எதிராக.

பிரார்த்தனைகள்

நடக்கும் இடங்களில்

அவன் எழுப்பிய

புயல்கள் ஓய்வதில்லை

வெள்ளம் வடிவதில்லை

பூகம்ப அதிர்வுகள் குறைவதில்லை

நீ

உன் கடவுளுக்கு

நன்றி சொல்லவேண்டும்.

அவன் எப்போதாவதுதான்

சுனாமியை விரும்புகிறான்.

Edited by seyon yazhvaendhan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 67

(ஹைகூ 4)

 

எனக்குப் புரிவதேயில்லை

என்ன மொழியில்

சிரிக்கிறாய்?

தங்கள் கவிதையைத் தொடர்ந்து வாசித்து மூச்சு முட்டுகிறது. 

விமர்சனம் எழுத முடியவில்லை. நன்று.

நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்கள் கவிதையைத் தொடர்ந்து வாசித்து மூச்சு முட்டுகிறது. 

விமர்சனம் எழுத முடியவில்லை. நன்று.

நன்றி.

 

"நான் கவிஞன் ஆன கதை" என்றொரு கவிதையைப் படித்தீர்கள் அல்லவா, அது போலத்தான் என் கதை.  உங்களைப் போன்றவர்களின் வாசிப்பும் நேசிப்பும் வாழ்த்துமே என்னைப் படைக்கின்றன.  நல்ல கவிதைகளை நான் படிக்கிறேன்.  நான்கு நல்ல கவிதைகளைப் படித்தால் ஒன்றாவது சுமாராகவாவது எழுத முடிகிறது.  தமிழால் இணைந்திருப்போம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 68

கனவில் வந்த பிள்ளையார்

 

எலி மேல் ஏறி

கணபதி பூசாரியின்

கனவில் வந்த

பிள்ளையார் சொல்லித்தான்

அரசமரத்தடியில்

அவருக்குக் கோயில் கட்டினார்கள்

பிள்ளையாரை மட்டும்

தூர தேசத்திலிருந்து

திருடிக்கொண்டு வந்தார்கள்

பின்பொருநாள்

தர்மகர்த்தாவின்

கனவில் வந்து

பிள்ளையார் சொல்லித்தான்

அவரின் மேற்பார்வையில்

தங்கத்தில் காப்பு செய்து போட்டார்கள்

அதே எலி மீது ஏறி

மூக்கையனின் கனவில் வந்த

அதே பிள்ளையார்

தங்கக் காப்போடு

என்னைத் தூக்கிக் கொண்டு போய்

என் சொந்த ஊரில்

வைத்து விடு என்று

அழுது புலம்பியதைக் கண்டிரங்கி

பாதித் தூக்கத்தில் எழுந்து

பிள்ளையாரை

தங்கக் காப்போடு

அவன் தூக்கிக்கொண்டு

போகும்போது

கட்டிவைத்து உதைத்து

கைது பண்ண வைத்தார்கள்.

கனவில்

கடவுளைக் காண்பதற்கும்

ஒரு தகுதி வேண்டாமா?

  • கருத்துக்கள உறவுகள்

தங்கக் காப்புப் போடுமுன் மூக்கையன் கனவு கண்டிருக்க வேணும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்கக் காப்புப் போடுமுன் மூக்கையன் கனவு கண்டிருக்க வேணும்.

கனவுகளுக்கு கட்டளையிட முடியாதே.  கருத்துப் பதிவுக்கு நன்றி.

 

இது மற்றவர்களுக்காக....

 

மூவரின் கனவிலும் பிள்ளையார் வரவில்லை.

பூசாரி கோயிலைக் கட்ட வைத்துப் பிழைக்கிறான்.

தர்மகர்த்தா கமிஷன் அடிக்க தங்கக் காப்பு செய்கிறான்.

மூக்கையன் களவாடுகிறான்.

முன்னவர் இருவரும் பிள்ளையார் தம் கனவில் வந்ததாகச் சொன்னதும் நம்புபவர்கள்,

மூக்கையன் சொல்வதை மட்டும் ஏன் நம்ப மறுக்கிறார்கள்? என்பதே கேள்வி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 69

கடல்

 

கரையிலேயே நின்று

ரசிக்கின்றனர் சிலர்

கொஞ்சம் இறங்கி வந்து

கால் நனைக்கின்றனர் சிலர்

அளவோடு நீந்தி

அலை மீதேறித் திரும்புகின்றனர் சிலர்

முத்தெடுக்கும் மோகத்தில்

மூழ்கிச் சாகின்றனர் சிலர்

செத்தவர்களின் செய்தியைத்தான்

அலைகளாக்கி கரை அனுப்புகிறதோ

காதல் கடல்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 70

மீட்சி 

 

முதன்முதலாக

பிணத்தைப் புதைத்தவர்கள்

மீண்டும் முளைப்பானென

நம்பியிருக்கலாம்

 

புதைக்கப்பட்டு

மீண்டுவரும்

உற்சாகத்தோடு

ஒவ்வொரு முறையும்

வெளியேறுகிறேன்

சுரங்கப்பாதையிலிருந்து

  • கருத்துக்கள உறவுகள்

............. மரம்

............ சொன்னது –

விதையாக இருந்த காலத்திலிருந்தே

நான் தான் உன்னை

ளர்த்து வருகிறேன்.

2

மட்டமான அரிசியில்

ஏழைகளின் பெயர்களையும்

பாசுமதி அரிசியில்

பணக்காரன் பெயரையும்

ஆண்டவனே எழுதும்போது

நாமென்ன செய்யமுடியும் நடுவே

 

congratulations 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.