Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனசெல்லாம் மழையே.........

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனசெல்லாம் மழையே.........

 

பஞ்சுப் பொதியாய் வானப்பரப்பெங்கும் வியாபித்து பரவிக் கிடக்கும்  மேகத்திரையைக் கிழித்தபடி விமானம் பியர்சன் விமானநிலையத்திலிருந்து மேலெழந்து வேகமெடுத்து ஓடத்தொடங்கிய நாழிகையில் விமானத்தின் ஐன்னலோர இருக்கையில் விமானப்பட்டியை விலக்கியபடி அமர்ந்து கண்களை மூடியபடிசாய்ந்த மதியின் எண்ணங்கள் பின்னோக்கி வேகமெடுத்து ஓடத்தொடங்கின. ஒன்றல்ல இரண்டல்ல முப்பத்தி ஐந்து வருடங்களின் பின் சந்திக்கப்போகும் தன் சிந்தையில் நிறைந்த சிநேகிதனை வட்டமிட்டது மனம். இமைச்சாளரங்கள் மூடிக்கொள்ள இதயம் மாத்திரம் இயங்கத் தொடங்கியது.

கலாச்சார ஈரம் குலையாத அந்தக் குட்டிக் கிராமத்தில் பண்பான தந்தைக்கும் அன்பான அன்னைக்கும் மூத்த மகளாகப் பிறந்தவள் மதி .'அக்கா அக்கா' என்று அவளைச் சுற்றிச் சுற்றி வரும் மழலைகளாய் மூன்று தங்கைகளும் இரண்டு தம்பிகளும். இவர்களின் அன்புச் சிறைக்குள் வளர்ந்த மதியின் உள்ளத்தில் சிறுவயதிலிருந்தே தான் தன் தம்பி தங்கைகளுக்கும் பெற்றவர்களுக்கும் ஊன்றுகோலாக இருக்கவேண்டுமென்ற ஆசை அடிமனதில் வேரூன்றி இருந்ததுடன் தான் ஓர் அரசாங்க சேவையில் அமரவேண்டுமென்ற எதிர்பார்ப்பும் ஏக்கமும் கூடவே வளர்ந்தது.

சொந்தக் கிராமத்தில் எட்டாம் வகுப்பு சித்தியடைந்ததும் வீட்டில் அம்மாவும் அப்பாவும் மதியை மகாவித்தியாலயத்தில் சேர்ப்பது பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர். பாடசாலை விடுமுறை முடிந்து புதிய வகுப்பு ஆரம்பமாகும் நாளும் வந்தது. இதுவரை பெண்கள் பாடசாலையில் படித்து பெண்களுடன் மட்டும் நட்புப் பாராட்டிய மதிக்கு புதிய சூழல் மலைப்பாக இருந்தது. ஆண்களும் பெண்களுமாக இருபக்கங்களிலும்  இரு பிரிவினராக அமர்ந்திருந்து படிப்பது புது அனுபவம். தினமும் ஐந்து மைல்கள் பேருந்துப் பிரயாணம் வேறு. இருந்தும் படித்து முன்னேற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் அன்று ஒன்பதாம் வகுப்பில் உற்சாகத்துடன் உள்நுழைந்தாள் மதி.

இதுவரைகாலமும் நடசத்திரங்கள் மட்டும் நடைபயின்ற அந்த வகுப்பறையில் இன்று நிலவு ஒன்று பவனி வருவதாய் தோன்ற மதனுக்குள் ஏதோ ஒன்று மடல் விரிந்தது தேக்கித் தேக்கி வைத்திருந்த மின்சாரம் மொத்தமும் ஒரே நாளில் ஒரு பார்வை திருடிக் கொண்டது. இந்தப் பதினைந்து வயதுப் பருவம் இருக்கிறதே சின்னச் சின்ன சந்தோசங்களில் அது சிலிர்க்கும். மயிலிறகைப் புத்தகத்துள் பொதிந்து அது குட்டி போடுமென்று எதிர்பார்த்து யாருக்கும் தெரியாமல் பக்கம் புரட்டும் மாணவனாய் மதனின் மனப் புதையலுக்குள் மயிலிறகாய் வருடும் மதியின் நினைவுகளை யாருக்கும் தெரியாமல் பொத்திவைத்து தினமும் அவளது தரிசனத்தை எதிர்பார்த்து தவமிருக்கத் தொடங்கினான்.

 

இத்தனை காலமும் கானலாய்க் கிடந்த வகுப்பறை கலகலப்பாகியது. வகுப்பில் இதுவரை காலமும் முதலிடத்தில் இருந்த மதன் இப்பொழுது ஒவ்வொரு பாடத்திலும் மதியுடன் அதிதீவிரமாய் போட்டி போடவேண்டி ஏற்பட்டது. தவணைப் பரீட்சை நெருங்க நெருங்க 'டேய் மதன் இம்முறை நீதான் முதலாம் பிள்ளையாக வரவேணும்' என்றும் ' மதியை மட்டம் தட்ட வேணும்' என்றும் சக நண்பர்களினால்  தட்டிக் கொடுக்கப்பட்டான். காரணம் வகுப்பில் முதலிடம் பெறும் மூன்று மாணவர்களுக்கு மேடையில் வைத்து றிப்போட் காட் வழங்குவது வழக்கம். அந்த நாளும் வந்தது. முதலிடம் மதன். இரண்;டாவது இடம் மதி. மதனுக்குள் வெற்றி பெற்ற பெருமிதம். நண்பர்களுக்கோ மதியை மட்டம் தட்டிய பெருமை. ஆனால் மதியின் முகமோ ஒளியிழந்தது. மதியின் வாடிய முகத்தைப் பார்;த்த மதனின் சந்தோசம் நொடிப் பொழுதுள் நொறுங்கிப் போனது. 'விட்டுக் கொடுத்திருக்கலாமோ? ' 'என்ன இது? இது என்ன மாற்றம்?' மதனுக்குள் புரியாத புதிராக எத்தனையோ கேள்விகள். இருந்தும் மதன் தனக்குள் ஏதோ ஓரு மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது என்பதை உணரத் தொடங்கினான்.

தினமும் காலை வேளை எப்போ வரும் என்று எதிர்பார்ப்பதும் எப்போதாவது வரத் தாமதித்தால் எண்ணி ஏங்குவதும். ஏன் இந்த மாற்றம் என்று மதனுக்கு அப்போ விளங்கும் வயதில்லை. ஓரப் பார்வையும் உதட்டுக்குள் புன்னகையும் அமைதியான தோற்றமும் அறிவுத் தேடலும் மதனை மற்றைய மாணவர்களிடமிருந்து வேறுபடுத்தி அவனில் ஒரு மதிப்பையும் அன்பையும் தோற்றுவித்திருந்தது. பத்தாம் வகுப்புப் பரீட்சை நெருங்க நெருங்க படிப்பில் அனைவரும் தீவிரமானார்கள். வகுப்பாசிரியர்களும் அக்கறையுடன் மாணவர்களை பரீட்சைக்குத் தயார் செய்தார்கள். எதிர்பார்த்துக் காத்திருந்த பரீட்சையும் ஒருபடியாய் முடிந்தது. எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி.

தை பிறந்ததும் மீண்டும் அனைவரும் பாடசாலை திரும்பினர். பட்டாம் பூச்சிகளைப்போல் சிட்டாய்ப் பறந்து திரியும் அப்பருவத்தில் விதவிதமான பூக்கள் மலர்ந்து மணம் பரப்பும் அழகிய பூங்காவைப் போல் வகுப்பறை மாணவமலர்களினால் அழகாக மிளிர்ந்தது. பரீட்சை முடிவுகளுக்காகக் காத்திருந்த நாட்களில் ஒருநாள் மதனுக்குள் ஏனோ இடி வந்து இறங்கியது.

மதி நாளை முதல் பாடசாலைக்கு வர மாட்டாள் என்ற செய்தி வகுப்பறையில் பரவியது. மதன் துடித்துப் போனான். உடனே நண்பர்களுடன் சேர்ந்து ஆலோசித்து மதிக்கு மடல் ஒன்று வரைந்தார்கள். தொடர்ந்து நீங்கள் பாடசாலைக்கு வர வேண்டும். இதுதான் எமது விருப்பம் என்று மதனின் கைப்பட எழுதப்பட்ட கடிதம் மதியிடம் சேர்க்கப்பட்டது. மதியோ தாயாரின் சுகவீனம் காரணமாக தாயாருக்கு உதவியாக சிலகாலம்  வீட்டில் தங்க வேண்டிய நிலை. மதனோ பதிலக்காகக் காத்திருந்தான். அந்தப் பதில் மட்டும் வரவேயில்லை. இறுதியில் ஒருநாள் பரீட்சைப் பெறுபேறுகள் பார்ப்பதற்காக மதி பாடசாலை வந்தாள். இருவரும் பரீட்சையில் வகுப்பில் சிறந்த பெறுபேறுகள் பெற்றிருந்கனர். இருந்தும் அவளுடன் கதைக்கவோ பாராட்டைத் தெரிவிக்கவோ மதனுக்கும் துணிவில்லை. மதியும் தனது நண்பிகளுடன் கதைத்துவிட்டு விழிகளால் மட்டும் மதனிடம் விடை பெற்றுச் சென்று விட்டாள்.

 

காலம் யாருக்காகவும் எதற்காகவும் காத்திருப்பதில்லை. இருவரும் வௌ;வேறு உயர்தரப் பாடசாலைகளில் க.பொ.த. உயர்தர வகுப்பை படித்து முடித்தனர். ஆனாலும் ஒருவரைப்பற்றி மற்றவர் எவ்வித தகவலும் அறிந்திருக்கவில்லை. அந்த ஆண்டு அரச சேவைக்கான நியமன விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டதும் விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டதும் நேர்முகப்பரீட்சைகள் நடந்ததும் இருவருக்கும் நியமனம் நிச்சயமானதும் ஆளாளுக்குத் தெரியாமலே நடந்தேறியது. நியமனக் கடிதம் கையில் கிடைத்ததும் சிறகு முளைத்த சிட்டுக்குருவியாய் மனம் சிறகடிக்க இத்தனைநாள் கனவுகளும் நிறைவேறிய மகிழ்வுடன் பெற்றவர்களின் ஆசியுடன் அந்த அரச அலுவலக மண்டபத்துள் காலடி வைத்தாள் மதி. 

இந்த அதிசயம் எப்படி நடந்தது என்று இருவரும் தடுமாறி ஒருகணம் திகைத்து மறுகணம் மகிழ்ந்து கண்கள் இமைக்க மறந்த கணப்பொழுது மதனுக்கு முன் மதி முதல்முறையாகப் புடவை கட்டிய புதுமலராக நேருக்கு நேர் சந்தித்த அந்த காலைப்பொழுதில் மதன் தனக்குள் பதிதாகப் பிறந்தான். இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்பாராமல் சந்தித்த அந்த நிகழ்வை விபரிக்க வார்த்தைகளில்லை. எதிர்பாராமல் கிடைக்கும் எந்த சந்தோசத்திற்கும் எல்லைகளில்லை. ஒரே அலுவலகத்தில் ஒரே நிர்வாகத்தின் கீழ் தினமும் வலம் வரும் வாய்ப்பு. புன்னகையைப் பரிமாறிக்கொள்ள இனித் தடையில்லை. உள்ளம் திறந்து உரையாட இனிப் பயமில்லை.

நட்பென்ற எல்லைக்குள் தனித்தனித் தீவுகளாய் இருந்த அவர்களது நட்பும் பாசமும் நாளுக்குநாள் பின்னிப் பிணைந்ததற்குக் காரணம் அவ் அலுவலகத்தில் அனைத்து ஊழியர்களும் வயதில் மூத்தவர்கள். இவர்கள் இருவரும் ஒத்த வயதுடைய ஒரே வகுப்புத் தோழர்களாக இருந்ததால் அந்த இருபது வயது இளமைப்பருவம் கிண்டலும் கேலியும் நிறைந்த இனிமையான பொழுதாகக் கழிந்தது. இவர்களது நட்பு நாளடைவில் மதி வீட்டினருக்கோ மதன் வீட்டினருக்கோ மறைக்கப்படாமல் வெளிப்படையாக இருந்ததால் மதன் மதி வீட்டில் ஒரு நம்பிக்கைக்குரிய குடும்ப உறுப்பினரைப்போல் பழகத்தொடங்கினான்.

வேலை நியமனம் கிடைத்த மறு வருடமே வீட்டின் மூத்த மகளான மதிக்கு திருமணப் பேச்சு விரைந்து வந்தது. 'மதி மாப்பிள்ளை வீட்டாருக்கு என்ன முடிவு என்று சொல்ல வேணும்' என்று அம்மா மதியின் பதிலுக்காய்க் காத்திருக்கவும் மதி பெற்றவரின் விருப்பமே தன் விருப்பமென சம்மதித்தாள்.

மணமகன் வேலை விடுப்பு முடிந்து மீண்டும் வெளிநாடு செல்ல இருப்பதால் திருமண ஏற்பாடுகள் விரைவாக நடை பெறத் தொடங்கின. பத்து நாட்களுக்குள் அனைத்தும் செய்யவேண்டி இருந்ததால் மதன் மதியின் குடும்பத்திற்கு உற்ற துணையாக தூணாக நின்று திருமண வேலைகளையெல்லாம் தன் தலைமேல் சுமந்து கடமைகளில் முழுவதுமாய் மூழ்கிப்போனான்.  திருமண வேலைகளையெல்லாம் தானே முன்னின்று செய்தான். வாழைமரம் கட்டுவதிலிருந்து வந்திருக்கும் விருந்தினரை உபசரிப்பது வரை அனைத்து பொறுப்புகளும் மதனின் பொறுப்பிலேயே விடப்பட்டது.;. மணநாளன்று மிகவும் கோலாகலமாக அனைத்து நிகழ்வுகளும் நிறைவேறின. இரவு மாப்ப்pள்ளை வீடடிற்கு மணமக்களை அழைத்துச் சென்று அங்கு விருந்து முடிந்து உடலும் உள்ளமும் சோர்ந்த நிலையில் வீட்டிற்கு வந்த மதன் தனிமையில் எதையோ முழுமையாக இழந்து விட்டதாய் எண்ணி ஏங்கினான். தனது ஒரே நண்பியின் எதிர்கால வாழ்வுக்கு வாழ்த்தி வழியனுப்பி வைத்தாலும் நட்பின் பிரிவு அவனை நலிய வைத்தது.

 

மதியின் வேலை விடுப்பு நாட்கள் முடிவடைய மீண்டும் வேலைக்குத் திரும்பவேண்டிய நாள் வந்தது. அப்பொழுதுதான் வீட்டில் பிரச்சனை ஆரம்பமாகியது. மாப்பிள்ளை வெளிநாட்டில் வேலை செய்பவர். அவர் வெளிநாடு போனபின் மதி வேலைக்குச் செல்வது அவருக்குச் சம்மதமில்லை. இதை சற்றும் எதிர்பாராத மதி திகைத்தாள். அவளது கனவுகள் யாவும் பொலபொலவென்று சரிந்தது. தனது குடும்பத்திற்காகவும் உடன் பிறப்புக்களின் உயர்வுக்காகவும் தனது வாழ்க்கையையே பணயம் வைத்த அவளது குறிக்கோள் சிதிலமாகியது. அவளது லட்சியமே அரசாங்க வேலை. அதற்கே குறிவைக்கும் கணவனின் கொள்கையை ஏற்றுக்கொள்வதா? அப்படியானால் வேலையைத் தலைமுழுகுவதா? மதி தனக்குள் நொருங்கிப் போனாள். பெற்றவர்களுக்கும் இச் செய்தி பேரிடி ஆகியது. மதனுக்கோ இது மற்றுமொரு பேரிடி. மதியோ எதுவும்செய்யத் திராணியற்று செயலிழந்து போனாள்.நிலை வந்த போது அவள் தன் வேலையை தாரைவார்க்க முடிவெடுத்தாள்.. மதியும் ஓர் மனைவியாக தன் கருமங்களை கருத்துடன் கவனிப்பதில் தன கவலைகளை மறந்தாள்.

நாட்டு நிலமையிலும் நாளாந்தம் ஏற்பட்ட மாற்றங்களால் அனைவரும இடம் பெயர்ந்து எங்கெங்கோ எப்படிஎப்படியோ? யார்?; எங்கே? எப்படி இருக்கிறார்கள்? என்ற எந்த விபரமும் பெற முடியாத நிலையில் மதியின் குடும்பமும் கனடாவிற்கு குடி பெயர்ந்தார்கள்.
ஆண்டுகள் உருண்டோடி மதியும் இரு குழந்தைகளுக்குத் தாயாகி கனடா நாட்டின் வேகத்துடன் அவளும் ஐக்கியமாகிப்போனாள். எப்பொழுதாவது பழைய நட்பையும் பாசத்தையும் மனதிற்குள் நினைக்கும் பொழுது வேதனை விழிகளை நனைக்கும். இறுதிக்கட்ட போரின் பின் யாரிடமாவது மதனின் குடும்கததைப்பற்றிய செய்தி கிடைக்குமா என்று முயற்சி செய்தும் எதுவும் அறிய முடியவில்லை. யாரிடம் கேட்பது? எதுவும் செய்ய முடியாத நிலையில் காலங்கள் உருண்டன.

மதியின் வாழ்க்கையில் திடீரென ஏற்பட்ட பேரிடி அவளது கணவனின் இழப்பு. விபத்தொன்றில் கணவனை இழந்துவிட்ட மதி கொழுகொம்பற்று தனிமையில் துவண்டாள். வேதனையில் துவண்டாலும் வீழ்ந்துவிடாமல் தன் மழலைகளை உருவாக்க மீண்டும் உறுதியுடன் போராடத் தொடங்கினாள். இழப்பின் வலிகளை வலிமையாக்கி வேதனையிலும் சாதனை படைக்க துணிவைத் துணைக்கழைத்தாள். தெய்வத்தையும் தெய்வத்துடன் இணைந்துவிட்ட கணவனையும் இருபக்கமும் துணையாக நினைத்து செய்யும் காரியங்களில் வெற்றிபெற போராடத் தொடங்கினாள். பத்து வருடங்கள் பறந்தோடின. மழலைகள் வளர்ந்து பல்கலைக்கழக கல்வியை முடித்து பெற்றவருக்குப் பெருமை சேர்த்ததை தன் பெரும் பேறாகஎண்ணி மதி மனம் பூரி;த்தாள். 

தொண்ணூறுகளில் நாட்டில் ஏற்பட்ட போர் காரணமாக மதியின் வீடும் கூரை இழந்து குட்டிச் சுவராகிவிட்டதை அங்கு சென்று திரும்பி வந்த உறவினர் கொண்டுவந்த போட்டோக்களில் பார்த்தபின் எப்பவாவது ஒருநாள் பிறந்த வீட்டையும் போர்வடு சுமந்த வன்னி மண்ணையும் ஊரையும் உறவுகளையும் சென்று பார்த்து வரும்நாளை எண்ணிக் காத்திருந்தாள். ஒருநாள் ஊரிலுள்ள ஒரு நண்பியின் மூலம் மதனின் தொலைபேசி எண் கிடைத்தது. நிலையான நட்பு நிறம் மாறாது. குணம் மாறாது. மணம் மாறாது. நிழல் போல் தொடரும் என்று எங்கோ படித்தது ஞாபகம் வர தொலைபேசி எண்ணைச் சுழற்றி தொடர்பு கிடைத்ததும் 'மதனா கதைக்கிறீங்க?' என்று வினவவும் 'ஆமாம் மதன்தான் கதைக்கிறன்'என்ற குரல் காதில் விழுந்ததும் நான் மதி என்றதும் மதனின் முதுகில் இறக்கைகள் ஒட்டிக்கொண்டன. மதியின் கணவனின் இழப்பறிந்து துடித்துப்போனான் மதன். இருவர் கண்களும் அருவியாக சுகங்களும் சோகங்களும் காற்றலையில் மொழிகளாகி மாறிமாறி எதிரொலித்தன. புpரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா?

மதனும் குடும்பஸ்தனாகி பல வருடங்கள் ஆகி இருந்ததை அறிந்து மதி மனம் மகிழ்ந்தாள். மதனின் பதவி உயர்வு அறிந்து பாராட்டினாள்.; பனிக்காலம் முடிந்து மொட்டை மரங்களெல்லாம் துளிர்விடத்தொடங்கியது. வசந்தகால ஆரம்பம். ஒருநாள் மதியின் சகோதரி தாய்மண்ணைத் தரிசிக்க கனடாவிலிருந்து போக இருப்பதை அறிந்த மதியின் உள்ளத்திலும் ஆவல் உந்தியது. இருபத்திஐந்து வருடமாக பிரிந்திருந்த தாய் மண்ணையும் தனது வீட்டையும் உறவுகளையும் பார்ப்பதுடன் மதனையும் சந்தித்து தான் முறித்துவிட்ட நட்பைத் தொடரவேண்டுமென்ற ஆதங்கமும் எழ தொடர்ந்துவந்த நாட்களில் பயணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.

ஏதோ கனவுபோல் இருக்கிறது இது கனவா? இல்லை நினைவா? மதி பயணம் செய்த விமானம் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தரை இறங்கத் தொடங்கியது.
மறுநாள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணம் தொடர்ந்தது. ஊரையும் உறவுகளையும் மட்டுமல்ல உண்மையான நட்பையும் சந்திக்கப்போகும் சந்தோசத்துடன் மதி பயணத்தை ஆரம்பித்தாள். மதனோ அன்று விடுமுறைக்கு விண்ணப்பித்துவிட்டு நிமிடங்களை எண்ணியபடி தோழியின் வருகைக்காகத் தோழமையுடன் காத்திருந்தான்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி விரைந்து சென்ற பஸ் குடாநாட்டிற்குள் நுழைந்தது. கைத்தொலைபேசி அடிக்கடி சிணுங்கிச் சிணுங்கி எனது நண்பன் பஸ் நிறுத்தத்தில் எமக்காகக் காத்திருப்பதை அறிவித்துக்கொண்டிருந்தது.
காதல் ஒரு இமயம் என்றால் நட்பு இமயத்தின் சிகரம்
அந்தக் கணத்தை விபரிக்க வார்த்தையில்லை
இருபதுவயது இளம் வாலிபனாக  இளம் மங்கையாக விட்டுப் பிரிந்த உறவு இன்று அறுபதுகளின் அஸ்தமனத்திலும் ஒரு உதயமாக இதயம் இரண்டும் இதமான அன்பில் குளித்தன.

குதித்துவரும் அருவியாகப் பிரிந்தவர்கள் இன்று
அசைந்துவரும் நதியாக
வாழ்க்கையின் அனுபவப் பாடங்களைப் படித்தவர்களாக
அன்பை மட்டும் அச்சாணியாகத் கொண்டவாகளாக
முதன்முதலாக ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்திய அந்தக் கணங்கள்
கருத்தினில் தெளிவு
உறவினில் பரிவு
உள்ளத்தில் மட்டும் நட்பு
காதல் உறவான உணர்வு
நட்பு உணர்வான உறவு
இருவர் விழிகளிலும் இருந்து பெருகிய ஆனந்தக் கண்ணீர்
அன்பு நதியாக நட்பெனும் கடலில் சங்கமித்தது. 
                .............................

 

கதை நல்லாய் இருக்கு, அது சரி சொந்தக் கதையா கண்மணி அக்கா??

  • கருத்துக்கள உறவுகள்

கதையை வாசிக்கும் பொழுது ...ச்சே எங்களுக்கு ஒரு நண்பிமாரும் ஊரில இல்லையே என்று எண்ணம் உண்டாகிறது...:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதையை படித்து கருத்தெழுதிய மீனா புத்தன் அவர்களுக்கும் பச்சை குத்திய புங்கை விசுகு புத்தன் ஆகியோருக்கும் நன்றிகள்.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக இருக்கிறது அக்கா ஆனால் முதலில் காதல் போல் ஆரம்பித்துவிட்டு நட்பு என்று முடித்துவிட்டீர்கள். அங்கே கொஞ்சம் குழப்பம்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதையை வாசித்து கருத்தெழுதியமைக்கு நன்றிகள் சுமே. பதினாலு வயதில் ஏற்படும் பருவக் கிளர்ச்சிகளையெல்லாம் காதல் என்ற உணர்வுக்குள் அடக்கமுடியாது. இக் கதைநடந்ததாக எழுதப்பட்ட காலக்கட்டத்தில் ஒரு பையனும் பெண்ணும் கதைக்கவே பயப்படுவார்கள். மீறினால் பாடசாலையில் பிரம்படி வீட்டில் கொலை. இதற்குள் காதலாவது கத்தரிக்காயாவது பாடசாலை வாழ்க்கையுடனேயே பருவக்கிளர்ச்சிகளும் மறைந்து விடும். அதன்பின் குடும்பம் வீடு அண்ணன் தம்பி அக்கா தங்கை கணவன் மனைவி தாய்தந்தை என்ற உறவுகளுக்குத்தான் முதலிடம். காதலைவிட நட்புக்கு சக்தி அதிகம் என்ற கருத்துடனேயே இக்கதையை எழுதினேன். நன்றிகள் சுமே.

நன்றாக இருக்கிறது அக்கா. உங்கள் எழுத்துநடையை மிஞ்ச யாரும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கதையை வாசிக்கும் பொழுது ...ச்சே எங்களுக்கு ஒரு நண்பிமாரும் ஊரில இல்லையே என்று எண்ணம் உண்டாகிறது... :D

 

வெரி வாட் :lol: :lol:

என்னுடைய பல நண்பர்களுக்குள் இப்படியான கதைகள் உள்ளன தோழி. முடிவுகள் வித்தியாசமாக... உங்களுடைய சிறுகதைத் தொகுதியில் வாசித்துள்ளேன். இப்போதுதான் இங்கு இணைத்திருக்கிறீர்கள்  மற்றவற்றையும் தொடர்ந்து இணையுங்கள்.

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஊக்குவிப்புக்கும் பாராட்டிற்கும் நன்றிகள் பகலவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்திற்கு நன்றிகள் சகாரா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.