Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்

Featured Replies

தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் ஹைகூக்கள் 
------------------------------------------------------------------------

விஞ்ஞான தந்தை 
மெய்ஞான தந்தை 
கலாம் 

--------

இளமையிலும் மாணவன் 
இறப்புவரை மாணவன் 
கலாம் 

--------

கிராமத்தில் பிறந்து 
கிரகத்தை ஆராய்ந்தவர் 
கலாம் 

---------

இளைஞனின் கனவு 
விஞ்ஞானத்தின் அறிவு 
கலாம் 

--------

அறிவியலின் அற்புதம் 
அரசியலின் தியாகம் 
கலாம்

  • தொடங்கியவர்

உலகின் 
அன்னை " அன்னை திரேசா "
தந்தை     " அய்யா கலாம் "
அறிவியலில் காலடிவைத்து ....
அறிவியலோடும் மறைந்தவரே ....
அகில உலகில் அதிகம் ......
அய்யா கலாம் அவர்களே ....
அறியியலையும் ஆன்மீகத்தையும் ....
இணைந்தே வளர்த்தவர் .....!!!

எம் 
திருநாட்டுக்கு வந்தபோது .....
யாழ்ப்பாண பல்கலை கழகதில் ....
உரையாற்றியபோது -இந்தியாவில் ....
மட்டுமல்ல உலக இளைஞருக்கே ....
அறிவியலின் தந்தை என்பதை ....
அறியவைத்த அறிவியல் தந்தை  ....!!!

  • தொடங்கியவர்

தற்காலபாரதியார் அய்யா கலாம் 

பாரதியார் 
சுதந்திர தாகத்தில் ....
அக்கினிகுஞ்சு பிறந்தது ....
அய்யா கலாமின் ....
அறிவியல் தாகத்தில் ....
அக்கினி சிறகு பிறந்தது .....!!!

அக்கினி குஞ்சு ....
அந்த இடத்தையே பரவும் .....
அக்கினி சிறகு உலகம் .....
முழுவதும் பரவும் .....
அய்யா கலாமின் எண்ணம்....
உலகம் முழுதும் பரவும் ....!!!

ஒருவனுக்கு 
உணவில்லையேல் ....
ஜெகத்தினை அழித்திடுவோம் ....
என்றார் மகாகவி .....
ஒவ்வொருனனுக்கும் ....
அறிவினை கிடைத்திட .....
ஜெகத்தினில் பாடுபடு என்றார் ....
அய்யா கலாம் ....!!!

  • தொடங்கியவர்

காலம் ஆனார் கலாம் 

காலம் ஆனார் கலாம் ...
மனிதர்களே காலமாவார்கள் ....
மா மனிதர்கள் காலம் ஆவார்கள் ....
மறைந்தபின்னரும் வாழ்வார்கள் ....!!!

தன் 
உடலுக்குள் அடக்கி வைத்த .....
உயிரை ஆன்மாவை .....
தமக்காகவே வாழ்ந்தவர்கள் ....
காலமாகிறார்கள்......!!!

தனக்காக வாழாமல் .....
சமூகத்துக்காக வாழ்பவர்களின் ....
ஆன்மா பிரிந்த பின் உலகிற்கு ....
காலம் ஆவார்கள் -அவர்களுக்கு 
இறந்தகாலமே இல்லை -எப்போதும் 
நிகழ் காலம் தான் ....!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் இறப்பதனால் புனிதமடையமுடியாது

வாழும் காலத்தில் என்ன செய்தோம்

நம் வீட்டின்  இன்னல்களுக்கு முகங்கொடுத்தோமா?

நம்முன் நடந்தவைகளுக்கு தீர்வு கண்டோமா?


இவை தவிர்ந்த அறிவும் கண்டுபிடிப்புக்களும் உரைகளும்

அதுவும் ஒருபக்கம் அணுகுண்டு மறுபுறம் ஆன்மீகம்......

நல்லதொரு இந்தியர்

தமிழருக்கு நெஞ்சை அடைவு வைத்த 

கல் நெஞ்சுக்காறர்......

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தமிழராக எனக்குத் தெரியவில்லை.இந்தியப் போலித் தேசியவாதத்திற்கு வலுச் சேர்த்தவர். இந்திய உபகண்டத்தை அணுவாயுதப் போட்டிக்குள்ளும், போருக்குள்ள்ளும்  இழுத்துவிட்ட காரியத்தைச் செய்தவர். சனாதிபதியாக இருந்தும்கூட தமிழருக்கென்று எதுவும் செய்யாதவர். இன்றுவரை இனவழிப்பைப் பற்றி வாயே திற்க்காமலிருந்தவர்..............இவரை பற்றி நினைக்கும்போதெல்லாம் இவை மட்டுமே நினைவுக்கு வந்து தொலைகின்றன எனக்கு !

அப்போது இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது. பள்ளி மாணவனாக இருந்த கலாம், அதிகாலையில் எழுந்து செய்தித்தாள் விநியோகிக்கும் வேலையில் ஈடுபடுவார். செய்தித்தாள்களில் வெளிவருகிற உலகப் போர் குறித்த செய்திகளைக்  கவனமாகப் படிப்பார். முதலில் தினமணி நாளிதழை எடுத்து ஸ்பிட்ஃபயர் ஃபைட்டர் விமானம், லுஃப்ட்வாஃப் விமானத்துக்கு எதிராக எப்படி சண்டை போட்டது என்பதை வரிவிடாமல் வாசிப்பார்.

முதல் உலகப் போருக்குப் பின்னால் உலகில் பல நாடுகளில் விமானப்படை நிரந்தர அம்சமாகியது. போட்டிப் போட்டிக்கொண்டு ரகம்ரகமான போர் விமானங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றில் ஒன்று, ஸ்பிட்ஃபயர். அந்த விமானம் பற்றி அப்போது பரபரப்பாகப் பேசிக்கொள்வார்கள். இன்றைக்கும் உலகின் மிகச்சிறந்த போர் விமானம் என்று பேசப்படும் அந்த விமானத்தின் விசிறியாக இருந்தார் கலாம். விமானவியலில் மோகம் கொண்டு கலாம் அலைந்ததற்கு ஸ்பிட்ஃபயர் விமானம் முழுமுதற் காரணம்.

போர் விமானங்களுக்கு இணையாக செய்தித்தாள்களில் இடம்பிடித்த உலகத் தலைவர்களின் புகைப்படங்களும் கலாமை உசுப்பேற்றின. கலாம் நண்பர்களிடம் சொன்னார் -‘பார், என் பெயரும் புகைப்படமும் இதேபோல செய்தித்தாள்களில் இடம்பெறும் நாள் நிச்சயம் வரும்.' 

***

அப்துல் கலாம் பஞ்சாயத்துப் பள்ளிக்கூடத்தில் படித்து வந்தார். பள்ளியின் சிறந்த மாணவராக இருந்தார். இத்தனைக்கும் அவர் வீட்டில் மின்சாரம் கிடையாது. ஒருநாள் வீட்டில் மண்ணெண்ணெய் வெளிச்சத்தில் சத்தமாகப் பாடம் படித்துக்கொண்டிருந்தார் கலாம். ராமேஸ்வரம் திருட்டுப் பயம் இல்லாத ஊர் என்பதால் கலாம் வீட்டுக் கதவு திறந்து வைக்கப்பட்டிருந்தது. வீட்டில் அப்பா இல்லை. அம்மா தொழுகையில் இருந்தார்.

வீட்டுக்குள் ஒருவர் நுழைந்தார். கலாமிடம் அவர் தந்தை ஜைனுல்லாபுதீனைப் பற்றி விசாரித்தார். வீட்டுக்குள் கலாமின் அம்மா தொழுகையிலிருந்து பாதியில் எழ வழியில்லாத அளவுக்கு இறைவனை வேண்டிக்கொண்டிருந்தார். வந்தவரின் கையில் ஒரு  தாம்பூலத்தட்டு  இருந்தது.

‘சரி, இந்தத் தாம்பூலத் தட்டை நீ வாங்கிக்கொள்' என்றார். கலாம் ஒருநிமிடம் யோசித்தார். அம்மாவிடம் கேட்கலாம் என்றால் அவர் தொழுகையில் இருக்கிறார். வாங்காமல் போனால் வந்தவரை அவமானப்படுத்தும்படியாக ஆகிவிடும். வேறுவழியில்லாமல் கலாம் அந்தப் பரிசுப்பொருளை வாங்கிக் கட்டிலில் வைத்தார். வந்தவர் மகிழ்ச்சியோடு திரும்பிச் சென்றார்.

தாம்பூலத் தட்டில் விலையுயர்ந்த வேட்டி, அங்கவஸ்திரம், பழங்கள், இனிப்பு பாக்கெட் எல்லாம் இருந்தன. பஞ்சாயத்துத் தேர்தலில் கலாமின் தந்தை வெற்றி பெற்று பஞ்சாயத்து வாரியத் தலைவர் ஆனதால் அவருக்கு லஞ்சம் கொடுக்கவே அந்த மனிதர் கலாம் வீட்டுக்கு வந்திருக்கிறார். இது தெரியாமல் கலாம் அவர் கொடுத்ததை வாங்கி வைத்துக்கொண்டார்.

ஜைனுல்லாபுதீன் வீட்டுக்குள் வந்தபோது கலாம் நடந்ததைச் சொன்னார். அவ்வளவுதான். கலாமின் தந்தைக்குத் தறிகெட்டுக் கோபம் வந்தது. தாறுமாறாக கலாமைத் திட்ட ஆரம்பித்தார். முதுகில் ஓர் அடியும் விழுந்தது. கலாம் அழ ஆரம்பித்தார்.

கோபம் தணிந்தபின்பு கலாமை அருகில் அழைத்தார் ஜைனுல்லாபுதீன்.

‘இதுபோன்ற பரிசுப்பொருள்களைத் தருபவர்கள் ஒரு குறுகிய நோக்கத்தோடு செயல்படுகிறவர்கள். நம்மைப் போன்றவர்கள் இப்படிப்பட்ட நோக்கங்களுக்கு அடிமையாகிவிடக்கூடாது. உள்நோக்கத்துடன் பரிசுகளைப் பெறுவது நாம் செய்யக்கூடிய மிகப் பெரிய தவறு. வெகுமதிகள், பிரதிபலன் எதிர்பார்த்து நமக்குக் கொடுக்கப்படுகின்றன. இதுவே நீ வாங்கும் கடைசிப் பரிசுப் பொருளாக இருக்கட்டும்.' என்று அறிவுரை செய்தார்.

குடியரசுத் தலைவர் பதவி வகித்த கலாமை அவருடைய இறுதி அலுவலக நாளன்று பல வி.ஐ.பி.க்கள் பரிசுப் பொருள்களோடு வந்து சந்தித்தனர். ‘என் தந்தை ஜைனுல்லாபுதீன் எனக்கு கொடுத்த அறிவுரை, ஒருபோதும் பரிசுப் பொருளை வாங்காதே. அவர் வழியில் செல்பவன் நான். தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.' என்று புன்னகையுடன் பரிசுப்பொருள்களை வாங்க மறுத்துவிட்டார் கலாம்.

***

ஒருமுறை ஆசிரியர் சிவசுப்ரமணிய ஐயர் வீட்டுக்கு கலாம் சென்றபோது அவரை உணவு உண்ண அழைத்தார் ஆசிரியர். ஆனால் தலையில் தொப்பி மாட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்த ஒரு பாய் பையனுக்கு உணவு பரிமாறமுடியாது என்று மறுத்துவிட்டார் ஐயரின் மனைவி. கலாம் மனம் நோகக்கூடாது என்று அவர் முன்னிலையில் ஐயர் தன் மனைவியைக் கடிந்துகொள்ளவில்லை. கலாமை அமரவைத்து தானே பரிமாறினார். கதவு மூலையில் நின்றுகொண்டு கலாம் சாப்பிடுவதையே பார்த்துக்கொண்டிருந்த ஐயரின் மனைவி கலாமை ஈவிரக்கமின்றி அவமானப்படுத்தியதற்கு கொஞ்சங்கூட  பச்சாதாப்படவில்லை.

அடுத்தவாரம் கலாமை மீண்டும்  வீட்டுக்கு அழைத்தார் சிவசுப்ரமணிய ஐயர். முகத்திலேயே தயக்கத்தைக் காட்டிய கலாமிடம், ‘நீ கட்டாயம் வருகிறாய்’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். பயந்துகொண்டே சென்றார் கலாம். அங்கே கலாமுக்கு உணவு பரிமாறத் தயாராக இருந்தார் ஐயரின் மனைவி.

***

 

sujatha11.jpg

அப்போது அறிஞர் அண்ணாவின் அலை தமிழகம் முழுக்க அடித்துக்கொண்டிருந்தது. பெரியாரை விட்டு விலகிய பிறகு அண்ணா தமிழகம் முழுக்கச் சுற்றுப்பயணம் செய்து தமிழக மக்களிடையே திராவிடக் கொள்கைகளைப் பரப்பினார். தினமும் செய்தித்தாள்களில் அண்ணாவின் பேச்சைப் பற்றி அறிந்த கலாமுக்கு அண்ணாவின் பேச்சை நேரில் கேட்கவேண்டும் என்கிற பேராவல் உண்டானது. தன் நண்பர்களிடம் இதுபற்றி விவாதித்தார். நாம் எங்கே தனியாகச் சென்று அவர் பேச்சைக் கேட்கமுடியும்? அவரை நம் பள்ளி விழாவுக்கு அழைப்போம். நிச்சயம் வருவார் என்று கலாமுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டது.

 

மிகப்பெரிய தைரியம்தான். ஆனாலும் அந்த வயதில் இது ஒரு வீரத்தீர செயலாக இருந்தது கலாமுக்கு. யோசனை உண்டான அடுத்தநாள் கலாமும் அவர் நண்பர்கள் சிலரும் சென்னைக்கு ரயில் ஏறினார்கள். கூட வேறு எந்தப் பெரியவர்களையும் சேர்த்துக்கொள்ளவில்லை. பள்ளித் தலைமையாசிரியருக்கும் தகவல் சொல்லவில்லை.  சென்னை வந்து இறங்கினார்கள். நாலு பேரிடம் விசாரித்து எப்படியோ அண்ணாவின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்தும் விட்டார்கள்.

கை வைத்த பனியன், லுங்கி அணிந்துகொண்டிருந்த அண்ணாவின் எளிமை கலாமை மிகவும் ஈர்த்தது. வந்த விவரத்தைக் கேட்டார் அண்ணா. சொன்னார்கள். இப்போது என்னால் வரமுடியாதே என்றார். உடனே கலாம் அண்ட் கோவுக்கு அந்த இடத்திலேயே முகம் வாடியதைக் கண்டு, நான் திருவையாருக்கு வருகிறபோது கட்டாயம் உங்கள் பள்ளிக்கு வருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்தார் அண்ணா. 

ராமநாதபுரத்துக்குப் பத்திரமாகத் திரும்பிய பிறகே கலாமுக்கு உதறல் எடுத்தது. நினைத்ததுபோல அண்ணாவைப் பார்த்துவிட்டோம். ஒருவேளை அவர் பேச வருகிறேன் என்று தகவல் கொடுத்துவிட்டால்? பயந்ததுபோலவே கலாமுக்குத் தகவல் வந்தது. அண்ணா பேச வருகிறார்.

வேறு வழியில்லை. இனியும் மறைக்கமுடியாது. பள்ளித் தலைமையாசிரியரிடம் கலாமும் அவர் நண்பர்களும் நடந்ததைச் சொன்னார்கள். அவ்வளவுதான். தாம் தூம் என்று குதிக்க ஆரம்பித்தார் தலைமையாசிரியர். என்ன செய்யமுடியும். அண்ணா வருவதாகச் சொல்லிவிட்டார். தடுக்கமுடியாது.

ராமநாதபுரம் அண்ணாவை பெரும் கரகோஷத்துடன் வரவேற்றது. ஸ்வார்ட்ஜ் பள்ளியிலும் பொதுமக்கள் குவிந்தார்கள். மேடையேறினார் அண்ணா.

‘என்ன பேசவேண்டும். சொல்லுங்கள்’ என்றார் கம்பீரத்தோடு.

கலாமுக்குப் பதற்றம் அதிகமாகிவிட்டது. இவருக்கு நாம் என்ன ஆணையிடமுடியும்?

ஆலோசனை செய்தார்கள். நதிகள் பற்றிப் பேசுங்கள் அண்ணா!

விரல்நுனியில் தகவல்களை வைத்திருந்தார் அண்ணா. மனிதகுலம் தோன்றிய நாள் முதல் இன்றுவரை மனிதனின் வாழ்வில் நதிகள் எத்தனை பெரிய பங்கு வகிக்கின்றன என்பதை ஒரு சொற்பொழிவாகப் பொழிந்தார்.

கலாம் அளவுக்கதிகமாக உணர்ச்சிவசப்பட்டார். கை வலிக்க கைத்தட்டினார். ஸ்வார்ட்ஜ் பள்ளியில் கலாமின் மறக்கமுடியாத அனுபவமாக அண்ணாவின் வருகையும் பேருரையும் அமைந்தன.

***

கலாம் குடியரசுத் தலைவராகி தன் புது இல்லமான 329 ஏக்கர் ஏக்கர் பரப்பளவு கொண்ட ராஷ்டிரபதி பவனுக்குக் குடிபோன பிறகு நிறைய மாற்றங்களைக் கொண்டுவந்தார்.  ராஷ்டிரபதி பவனின் வரவேற்பு அறை அரசு அலுவலகம்போல களையிழந்து கிடந்ததைக் கண்டு முதல்வேலையாக அதை அழகு செய்தார் கலாம். புதிய தரைத்தளங்கள் மாற்றப்பட்டு சுவர்களில் பெயிண்டிங்குகள் மாட்டப்பட்டன. பார்வையாளர்கள் அமர்வதற்கு சொகுசு சோஃபா வாங்கப்பட்டது. குழந்தைகள் கேலரி ஒன்றும் வடிவமைக்கப்பட்டது. 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிக அழகான மொஹல் பூங்காவில் மேலும் இரண்டு புதிய பூங்காக்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் ஒன்று மூலிகைச் செடிகள் கொண்ட பூங்காவாகவும் மற்றொன்று குழந்தைகளுக்கான பூங்காவாகவும் தயாரிக்கப்பட்டன. 127 வகையான ரோஜாக்கள் நடப்பட்டன. இந்த மாற்றங்கள் அனைத்தும் ராஷ்டிரபதி பவனுக்குத் தனியழகு கொடுத்தன.

உயிரியல் பூங்காவில் உள்ள மான்கள், மயில்கள், முயல்கள், வாத்துகள் போன்ற உயிரினங்கள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தன. ஒரு குடியரசுத் தலைவரின் மாளிகை நந்தவனம் போன்று உள்ளது என்று அத்தனை பேரும் பாராட்டினார்கள்.

மொஹல் தோட்டம் கிட்டத்தட்ட கலாமின் பர்சனல் அறையாக மாறிப்போனது. கலாமைச் சந்திக்க வருகிற அனைவரையும் மொஹல் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று உரையாடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார்.

கலாம் குடியரசுத் தலைவர் ஆனநாள் முதல் மாளிகைக்கு வருகை தருகிற மக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகிப் போனது. சிலசமயம் தினம் 3,000 பேர், 6000 பேர் எல்லாம் சர்வசாதாரணமாக கலாமைப் பார்த்துவிட்டுப் போயிருக்கிறார்கள். இதனால் பார்வையாளர்களை வரவேற்பதிலிருந்து அவர்களை உபசரித்து பத்திரமாக வழி அனுப்பவதுவரை சவாலான வேலையாக இருந்தது. சிறு அசம்பாவிதம் நடந்தாலும் அது சர்வதேசப் பிரச்னை ஆகிவிடும். ஆனாலும் பார்வையாளர்களின் வருகைக்கு கலாம் ஒருபோதும் கடிவாளம் போட்டது கிடையாது. கலாம் பதவி வகித்த 5 வருட காலமும் ராஷ்டிரபதி பவன் மக்கள் பவனாகவே இருந்தது.

***

 

students11.jpg

குடியரசுத் தலைவர் மாளிகை முகவரி மட்டுமில்லாமல் தன் இமெயிலுக்கும் புகார் அனுப்பலாம் என்று கலாம் அறிவித்தது ஒரு கட்டத்தில் ரோதனையாகப் போனது. இரண்டு நாள்களில் பிரச்னை களையப்படும் என்று உறுதிமொழி வேறு கொடுத்தார்.  மக்கள் எந்தக் குறையும் இல்லாமல் வாழவேண்டும் என்று கலாம் நினைத்ததில் எந்தத் தவறும் கிடையாது. ஆனால் ஒரு கவுன்சிலர் செய்யவேண்டிய வேலையை நாட்டின் முதல்  குடிமகன் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்துகொண்டிருந்தால் என்ன ஆவது?

 

ஆக்ராவிலிருந்து ஒரு இமெயில்.

அங்கிள்,

எங்கள் பகுதியில் ஒரேயொரு பூங்காதான் உள்ளது. அதில் ஒரேயொரு சீசாதான் உள்ளது. அதுவும்கூட செயல்படாமல் இருக்கிறது. சீக்கிரம் நிறைய சீசாக்களை அப்பூங்காவில் நிறுவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பேபி...

சிறுமி ஒருத்தி கலாமை நம்பி இப்படியொரு புகார் அளிக்க, கலாம் ஆக்ரா கலெக்டரைத் தொடர்புகொண்டு பிரச்னையைத் தீர்த்து வைத்தார். அடுத்தச் சில நாள்களில் தேங்க்யூ அங்கிள் என்று பதில் கடிதம் வந்தது.

பல்வேறு காரணங்களை முன்வைத்து தற்கொலை மிரட்டல் கடிதங்களும் கலாமுக்கு வந்தன. ஒவ்வொன்றுக்கும் பதறினார். அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளச் சொன்னார். என் பணத்திலிருந்து இவர்களுக்கு உதவுகிறேன் என்றார்.

இது நாயர் உள்பட குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரிகளுக்கு எரிச்சலைத் தந்தது. இந்தப் பிரச்னைகளைத் தீர்த்துவைப்பதுதான் கலாமின் வேலையா என்று முடிவு செய்து நேரடியாகவே கலாமிடம் கேட்டுவிட்டனர்.

குடியரசுத் தலைவராக நீங்கள் செய்யவேண்டியது வேறு எவ்வளவோ இருக்கிறது. மக்கள் பிரச்னையை மக்கள் பிரதிநிதிகள் பார்த்துக்கொள்வார்கள். மேலும் நாம் தொடர்ந்து அரசு அதிகாரிகளை நிர்பந்திப்பதால் அவர்களும் இவர்களுக்கு வேறு வேலை இல்லை என்று நம் கட்டளைகளை அலட்சியப்படுத்துகின்றனர். இனிமேல் கடிதங்களை அதன் தேவையின் அடிப்படையில் பிரித்து பதில் கொடுப்போம். நம் நேரமும் மிச்சமாகும். அநாவசியக் கடிதங்களும் நம்மை வந்து சேராது.

கலாம் அரை மனத்துடன் ஏற்றுக்கொண்டார். அன்று முதல் முக்கியக் கடிதங்கள் அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. முக்கியமில்லாத கடிதங்களுக்கு கிடைக்கப்பெற்றோம் என்று அக்னாலெட்ஜ்மெண்ட் கடிதம் அனுப்பப்பட்டது. ஒரு பெரிய நிம்மதி கிடைத்தது போலிருந்தது கலாம் அதிகாரிகளுக்கு. 

இந்தக் கடிதங்களில் சில காதல் கடிதங்களும் கலாமுக்கு வந்தன. புகைப்படங்களை கடிதத்தோடு இணைத்து வந்த விருப்பக் கடிதங்களைப் பார்த்துவிட்டு, எப்படி என் வயதைக்கூட பொருட்டாக எண்ணாமல் இப்படியெல்லாம் கடிதங்கள் எழுதுகிறார்கள் என்று கலாம் ஆச்சரியப்பட்டார். இதில் உள்ள இன்னொரு ஆச்சரியம், இந்த பர்சனல் கடிதங்கள் எல்லாம் அவருடைய அதிகாரிகள் முன்னால் வாசிக்கப்பட்டவைதான்.

****

முஷாரஃப் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்தபோது கலாமை அவர் மாளிகையில் சந்தித்தார். எப்படியும் கலாமிடம் காஷ்மீர் பிரச்னையை எழுப்பப்போகிறார். இதைக் கலாம் எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்று பத்திரிகைகள் ஒருவித எதிர்பார்ப்புடன் இருந்தன.

ஆனால் கலாம் சாதுரியமாக முஷாரஃபிடம் புரா திட்டம் பற்றிப் பேசினார்.

‘இந்தியாவைப் போன்று பாகிஸ்தானிலும் நிறைய கிராமங்கள் உள்ளன. அவற்றின் முன்னேற்றத்துக்கு நீங்கள் திட்டம் தீட்டும் விதமாக நாங்கள் பின்பற்றும் புராவின் மாதிரியை உங்களுக்குக் காண்பிக்கப்போகிறேன். நாகரங்களில் கிடைக்கும் வசதிகளைக் கிராமங்களுக்கும் ஏற்படுத்தித் தருவதுதான் இதன் குறிக்கோள்.’என்றார்.

உடனே முஷாராஃபுக்கு புரா திட்டத்தின் டாக்குமெண்டரி ஓடவிடப்பட்டது. கிளம்புகிறபோது முஷாராஃப் சொன்னார் - ‘கலாம், உங்களைப் போன்ற ஒரு விஞ்ஞானியை குடியரசுத் தலைவராக அடைய இந்தியா மிகவும் கொடுத்து வைத்திருக்கிறது.’

****

 

vaj11.jpg

2007-ம் ஆண்டு ஜூலை 24-ம் தேதி கலாமின் குடியரசுத் தலைவர் பதவிக்காலம் முடிவடைந்தது. ஆனால் ஜுலை 16ம் தேதியே தன் அடுத்த செயல் பற்றி முடிவெடுத்துவிட்டார் கலாம்.

 

அன்று காலை 9 மணிக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதனுக்கு டெல்லியிலிருந்து போன் வந்தது. மறுமுனையில் கலாம். பரஸ்பரம் விசாரிப்புகள் முடிந்தவுடன் நேராக விஷயத்துக்கு வந்தார். ‘நான் எங்கிருந்து இங்கு வந்தேனோ மீண்டும் அதே இடத்துக்குத் திரும்ப எண்ணுகிறேன். ஜுலை 25ம் தேதி நான் சென்னை வருகிறேன். விமான நிலையத்திலிருந்து நேராக அண்ணா பல்கலைக்கழகத்துக்குத்தான் வருகிறேன். உங்களுக்குச் சம்மதம்தானே’ என்றார் கலாம்.  கலாமின் டெல்லிப் பருவம் முடிகிற தருணத்தில் இரண்டு முறை விஸ்வநாதன் டெல்லி வந்து கலாமைச் சந்தித்தார்.

‘நிச்சயம் நீங்கள் மீண்டும் பல்கலைக்கழகத்தில் பணியாற்றவேண்டும். மாணவர்கள் மிக ஆர்வமாக இருக்கிறார்கள்.’

கலாம் அமைதியாகக் கேட்டுக்கொண்டார். அப்போது விஸ்வநாதனுக்கு எந்த உத்தரவாதமும் தரவில்லை.

கலாமுடன் பேசி முடித்தவுடன் அண்ணா பல்கலைக்கழகம் முழுக்க போன் செய்தி பரவியது. விஷயம் மீடியாவை எட்டியது. அத்தனை பேரும் விஸ்வநாதனைத் தொடர்பு கொண்டார்கள்.

கலாம் இனி தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் அமர்வுப் பேராசியராகப் பணியாற்றுவார் என்று முறைப்படித் தகவல்  சொன்னார் துணைவேந்தர். கலாமை நாட்டிலுள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகமும் அழைக்க விரும்பும்போது கலாம் எங்கள் பல்கலைக்கழகத்தில் பணியாற்ற விருப்பம் தெரிவித்திருப்பது எங்களுக்குக் கிடைத்த நற்மதிப்பு என்று செய்தி சேகரிக்க வந்த அத்தனை செய்தியாளர்களிடம் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார் விஸ்வநாதன்.

முன்பைவிட இப்போது உங்களுடைய அந்தஸ்து பெரிய அளவில் உயந்துவிட்டது. மேலும் பாதுகாப்பு கருதியும் தனி பங்களா ஒதுக்குகிறோம். ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கலாமிடம் விஸ்வநாதன் சொன்னபோது அவர் உடனடியாக  மறுத்துவிட்டார். தமக்கு முதல்முதலில் அண்ணா பல்கலைக்கழகத்தில் எந்த அறை ஒதுக்கப்பட்டதோ அதே அறையில் வசிக்க விருப்பப்படுவதாகத் தெரிவித்துவிட்டார். அதே அறை, அதே வசதிகள், அதே பாதுகாப்பு, அதே உதவியாளர்கள், சமையல்காரர் என்று கலாம் விருப்பப்படி அவருக்கு வேண்டிய வசதிகள் செய்து தரப்பட்டன.

கலாமின் அண்ணன் பேரனுக்கு இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்க இடம் வேண்டும். ஆனால் நினைத்தவாறு கிடைக்கவில்லை. உடனே தகவல் கலாமுக்குச் சென்றது, அவர் ஏதாவது அனுகூலம் செய்வார் என்று. உடனே கலாமிடமிருந்து பதில் வந்தது.

’அவனுக்கு அந்தக் கல்லூரியில் படிக்க விருப்பம் என்றால் தன் திறமையை நிரூபித்து சேர்ந்துகொள்ளட்டும். அந்தத் தகுதி இல்லாவிட்டால் பிறகு அங்கு படிக்க அவனுக்குத் தகுதியில்லை என்று அர்த்தம்.’

****

ஜூலை 24, 2007.

இறுதி நாளன்று மக்களவைக்கு அழைக்கப்பட்டார் கலாம். அன்று முழுக்க அவை கலாமின் புகழ் பாடியது. ‘இளைஞர்களின் கனவு நாயகன் நீங்கள். லட்சக்கணக்கான பள்ளிச் சிறுவர்களை நீங்கள் சந்தித்து அவர்களுக்கு ஊக்கம் அளித்ததை இந்தத் தேசம் என்றுமே மறக்காது’ என்றார் சோம்நாத் சேட்டர்ஜி. இறுதிமுறையாக அவையில் பேசிய கலாம், ‘நான் பத்துமுறை இந்த அவையில் உரை நிகழ்த்தி இருக்கிறேன். இரண்டு பிரதமர்களிடன் பணியாற்றிய அனுபவத்தை என்றுமே நினைவு கூரத் தக்கது. தகுந்த பாதுகாப்பும் நல்ல கல்வி வளமும் உள்ள இந்த தேசம் வாழ மிக பாதுகாப்பானது என்று நினைக்கும்போது மிகவும் பெருமைப்படுகிறேன்’ என்றார்.

இறுதி நாளன்று கலாம் கையில் இரண்டு சிறு பெட்டிகளும் ஒரு பை முழுக்க புத்தகங்களும் இருந்தன. புத்தகப் பையை உற்றுப் பார்த்தவர்களிடம் சொன்னார், ‘அவை என் சொந்த புத்தகங்கள்.’

***

http://www.dinamani.com/special_stories/2015/07/28/அப்துல்-கலாம்-கனவு-நாயகன்---அற/article2945085.ece

 

அக்கினி சிறகுகள் மட்டும் போதும்   என் போன்றவர்களுக்கு

 

 

 

 

 

  • kalam44xx.jpg

அவருடன் கடைசியாக பேசி எட்டு மணி நேரம் கடந்துவிட்டது. உறக்கம் கண்களைச் சுழல வைக்க, நினைவலைகள் மேல் எழும்பின… அவை கண்ணீரலைகளாகவும் இருந்தன. 27 ஜூலை இதுதான் அவருடன் கழித்த கடைசி தினம். 12 மணிக்கு அந்தச் சந்திப்பு. கெளஹாத்தி செல்லும் விமானத்தில் இருவரும் அமர்ந்தோம். டாக்டர் கலாமின் இருக்கை எண் 1 ஏ என்னுடையது 1 சி. அவர் அடர் நிறமுள்ள ஒரு ‘கலாம் சட்டை’ அணிந்திருந்தார். அருமையான நிறம் என்று புகழ்ந்தேன். இந்த உடையில்தான் அவரைக் கடைசியாகப் பார்க்கப்போகிறேன் என்று எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

குளிர்ச்சியான இரண்டரை மணி நேர விமானப் பயணம். எனக்கு இது கொந்தளிப்பான நிலைதான். ஆனால் அவருக்கு குளிர் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. விமானத்தின் அதிர்வுகளுக்கிடையே நான் குளிரில் நடுங்குவதைப் பார்த்து, ஜன்னல் கதவுகளை மூடியபடி ’இப்போது நீங்கள் பயப்படத் தேவையில்லை’ என்றார்.

அதன்பின் நாங்கள் செல்ல வேண்டியது ஷில்லாங்கிலுள்ள ஐஐஎம நிறுவனம். அந்த இரண்டரை மணி நேரக் கார் பயணத்தில் நாங்கள் பேச வேண்டியதும் விவாதிக்க வேண்டியதுமாக நிறைய விஷயங்கள் இருந்தன. கடந்த ஆறு வருடங்களில் நூற்றுக்கணக்கான இத்தகைய நீண்ட பயணங்களை நாங்கள் ஒன்றாக மேற்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு பயணமும் முக்கியமானதுதான். அவருடனான மூன்று சம்பவங்கள்/ சம்பாஷணை இந்தப் பயணத்தில் முக்கியமாக பேசினேன். இதுவே கடைசிப் பேச்சு என்பதை அறியாதவாகிவிட்டேன்.


முதலாவதாக, டாக்டர் கலாம் பஞ்சாப் தாக்குதல்களைப் பற்றி தன் கவலைகளைப் பகிர்ந்துகொண்டார். ஷில்லாங்கில் அவர் பேச வேண்டிய உரையின் தலைப்பு ‘வாழத் தகுந்த கிரகமாகப் பூமியை உருவாக்குவோம்’ என்பதே. பூமியை மாசுப்படுத்துவதும் வாழ முடியாத ஓர் இடமாக மாற்றிக் கொண்டிருப்பதும் மனிதனின் அடாத செயல்களும், வன்முறையும், பொறுப்பற்ற செயல்கலாளும்தான். இது இப்படியே தொடர்ந்தால் இன்னும் முப்பது வருடங்களில் பூமி என்ன கதிக்குள்ளாகுமோ, இளைஞர்களாகிய நீங்கள்தான் எதாவது செய்து உங்கள் எதிர்கால உலகத்தைத் தக்க வைத்துக் கொள்ளவேண்டும்’ என்றார்.

இரண்டாவதாக நாட்டு நடப்புக்களைப் பற்றிப் பேசினோம். கடந்த இரண்டு நாள்களாக நிகழும் பார்லிமெண்ட் நடவடிக்கைகளைப் பற்றி வருத்தத்தை தெரிவித்தார். ’நான் என்னுடைய காலத்தில் இரண்டு விதமான அரசாங்கத்தைப் பார்த்துள்ளேன். அதன்பிறகு அதற்கும் மேலான எண்ணிக்கையிலும்கூட அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்தச் சீரற்ற நிலை எல்லாக் காலத்திலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இது சரியில்லை. வளர்ச்சிக்கான அரசியலை நடைமுறைப்படுத்த ஒரு வழியை விரைவில் கண்டடைந்து செயல்படுத்துவேன்’ என்றார். அதன்பின் அவர் ஷில்லாங் ஐஐஎம் மாணவர்களை ஆச்சரியப்படுத்துவதற்காக, நிகழ்வு முடிந்ததும் அவர்களிடம் தருவதற்கான வினாத்தாள் ஒன்றினை என்னைத் தயாரிக்கச் சொன்னார். அதன்படி நாடாளுமன்றம் ஆக்கபூர்வமாகவும் சிறப்பாகவும் செயல்பட மூன்று வழிமுறைகளைக் கூறும்படி கேட்டிருந்தேன். ’நம்மிடமே அதற்கு சரியான தீர்வு இல்லை, பாவம் அவர்களை கேட்கிறோம’் என்று சொன்னார டாக்டர் கலாம். அடுத்த ஒரு மணி நேரம் அதை ஒட்டிய வெவ்வேறு மாற்றுகளை விவாதித்தோம். கடைசியாக எந்த மாணவர் இது குறித்து ஒரு யோசனையை சொல்கிறானோ அதை அப்படியே நம்முடைய அடுத்தப் புத்தகமான ‘அட்வான்டேஜ் இந்தியா’வில் இணைத்துவிட முடிவு செய்தோம்.


மூன்றாவதாக, அவருடைய பணிவைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். ஷில்லாங்கில் எங்களை ஆறு ஏழு வாகனங்கள் தொடரப் பயணித்தோம். நானும் டாக்டர் கலாமும் இரண்டாவது காரில் பயணித்தோம். எங்களுக்கு முன் ஒரு  பாதுகாப்பு வாகனம் சென்றுகொண்டிருந்தது. திறந்த வகையான அந்த ஜீப் வாகனத்தில் மூன்று ராணுவ வீரர்கள் இருந்தனர். அவர்களில் இருவர் அமர்ந்திருக்க, நடுவில் இருந்த ஒருவர் மட்டும் துப்பாக்கியுடன் நின்றுக் கொண்டிருந்தார். இதை கவனித்த டாக்டர் கலாம் வருத்தத்துடன் கேட்டார். ‘அவர் ஏன் நின்றுக் கொண்டிருக்கிறார். களைத்துப் போய்விடுவார். அவரை உட்காரச் சொல்லுங்கள்’ என்றார். பணி நிமித்தமும், பாதுகாப்புக் காரணங்களுக்காகவும்தான் அந்த ராணுவ வீரர் நின்றுக்கொண்டிருக்கக் கூடும் என்று அவருக்கு விளக்கினேன். ஆனாலும் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. வயர்லெஸ் கருவி வாயிலாக அவர்களைத் தொடர்பு கொண்டு அவரை அமர வைத்துவிடும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் தொலை தொடர்பு சாதனத்தால் அவர்களை தொடர்பில் இணைக்கமுடியவில்லை.

ஷில்லாங்கை அடையும் வரை மூன்று முறை சைகை செய்தாவது அவரை அமர வைத்துவிடும்படிக் கேட்டுக்கொண்டார் டாக்டர் கலாம். ஆனால் சைகை செய்து அமர வைக்கின்ற முயற்சிகளுக்கும் பலனில்லை. கடைசியாக நம்மால் எதுவும் செய்ய முடியாது என்பதை அவர் உணர்ந்து கொண்டார். ஆனாலும் மனம் சமாதானம் அடையாமல், ‘வண்டியிலிருந்து இறங்கியதும் நான் அவரைச் சந்தித்து நன்றி சொல்ல விரும்புகின்றேன்’ என்றார் டாக்டர் கலாம். பிற்பாடு ஷில்லாங்கில் ஐஐஎம் நிறுவனம் சென்று அடைந்ததும் நான் பாதுகாப்பு அதிகாரிகளின் மூலமாக பயணம் முழுக்க நின்றுக் கொண்டே வந்த ராணுவ வீரரைத் தேடிப் பிடித்து அழைத்து வந்தேன். டாக்டர் கலாம் அவருக்கு வாழ்த்து கூறினார். கை குலுக்கி நன்றி சொன்னார். ‘நீங்கள் களைத்து விட்டீர்களா தம்பி? ஏதாவது சாப்பிட வேண்டுமா? என் பொருட்டு நீங்கள் நிற்க வேண்டியதாயிற்று. மிகவும் வருந்துகின்றேன். மன்னித்துவிடு.’ என்றார் டாக்டர் கலாம். அந்த இளம் வீரரோ டாக்டர் கலாமின் நடத்தையையும் கனிவான பேச்சையும் கேட்டு வார்த்தைகளின்று அப்படியே மலைத்துவிட்டார். என்ன சொல்வதென்றே தெரியாத நெகிழ்ச்சியில் ‘சார், ஆப்கே லியே தோ சே கண்டே பீஹ் கடே ரஹேன்கே’ என்றார். உங்களுக்காக 6 மணி நேரம் கூட நிற்பேன்’ என்று மட்டும் சொன்னார்.

அதன்பின் நாங்கள் விரிவுரை நடக்கவிருந்த அரங்கிற்குச் சென்றோம். டாக்டர் கலாமுக்குத் தாமதமாகச் செல்வது பிடிக்காது. மாணவர்களை ஒருபோதும் காத்திருக்க வைக்கக் கூடாது என்று எப்போதும் சொல்வார். அவருடைய மைக்கை நான் சரி செய்தேன். சுருக்கமாக அவர் பேசிய வேண்டிய அந்தக் கடைசி உரையைப் பற்றி எடுத்துச் சொல்லிவிட்டு இருக்கையில் கணினியின் முன்னால் அமர்ந்தேன். அவருடைய சட்டையில் மைக்கை பொருத்தும் போது ‘விளையாட்டுப் பையா, நல்லா இருக்கியா? என்றார். விளையாட்டுப் பிள்ளை என்று டாக்டர் கலாம் என்னைப் பலமுறை விளித்துள்ளார். ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு தொனியில் அது இருக்கும். சில சமயம் மகிழ்ச்சியில், சில சமயம் என்னுடைய குளறுபடிகள் போது, சில சமயம் கவனம் கோரியும், அல்லது கிண்டலாகவும் கூட வேடிக்கையாகவே அப்படிச் சொல்வார். இந்த ஆறு வருடங்களில் அவர் சொல்லும் விதத்திலிருந்தே அவர் மனநிலையை அறிந்து கொள்ளும் அளவிற்கு தெளிவானேன். இப்போது அதை அவர் சொன்ன போது, நான் அவரைப் பார்த்துப் புன்னகைத்து, ‘ஆம்’ என்றேன். அதுவே எங்களுடைய கடைசிப் பேச்சாகிவிட்டது. உரையை ஆரம்பித்த இரண்டு நிமிடங்களில் அவர் திடிரென்று பேச்சை நிறுத்தவே, பின்னால் அமர்ந்திருந்த நான் அவரைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கீழே விழுந்துவிட்டார். நாங்கள் உடனே அவரை தாங்கி, தூக்கினோம். மருத்துவர் விரைந்துவர, எங்களால் இயன்ற அளவில் அவரை மீட்க முயற்சி செய்ய ஆரம்பித்தோம். அவருடைய விழிகள் லேசாகத் திறந்திருந்தது, ஒரு கையில் அவருடைய தலையை தாங்கிப்பிடித்தபடி மற்றொரு கையால் அவரை என்னால் முடிந்த வரை எழுப்ப முயற்சி செய்தேன். என் கைகளை இறுகப் பற்றியது அவரது கரங்கள். என்னுடைய விரல்களைப் பின்னியது. சட்டென்று அவர் முகத்தில் ஆழ்ந்த அமைதி. அந்த அறிவுச் சுடரான விழிகளில் அசைவில்லை. ஒரு வார்த்தையும் அவர் கூறவில்லை. எவ்வித வலியும் அவரிடத்தில் துளியும் இல்லை. ஐந்து நிமிடத்தில் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அடுத்த ஐந்து நிமிடத்தில் அந்த மாமனிதர் மறைந்துவிட்டார் என்று தெரிவித்தார்கள். அவர் பாதங்களை கடைசி முறையாகத் தொட்டு வணங்கினேன். போய் வாருங்கள் என்னுடைய அருமை நண்பரே, என்னுடைய ஆசானே, அடுத்த பிறவியில் சந்திக்கும் வரையில் என்னுடைய சிந்தனைகளில் எப்போதும் நிலைத்திருப்பீர்கள்...பிரியாவிடை அளிக்கிறேன்.

திரும்பிப் பார்க்க நினைவுத்திரை அகல விரிந்தது. முன்பு ஒருமுறை அவர் சொன்னது மனத்தினில் ஓடியது. 'இப்போது நீ இளைஞன். நீ இங்கிருந்து போன பின்பு உலகம் உன்னை எப்படி நினைவு கொள்ள வேண்டும் என இப்போதே தீர்மானித்துக்கொள்’ என்று அவர் என்னிடம் அடிக்கடி சொல்வார். அவரை மலைக்க வைக்கின்ற வகையில் பதில் சொல்லி ஆச்சரியப்படுத்த வேண்டும் என்று ஆழமாக யோசித்தும் திருப்தியான பதில் எதுவும் எனக்கு பிடிபடாததால் அவரிடமே அதே கேள்வியைத் திருப்பினேன். ‘நீங்கள் சொல்லுங்கள். இந்த உலகம் உங்களை எப்படி நினைவு கூற வேண்டும் என்று விரும்புகின்றீர்கள்? குடியரசுத் தலைவர் என்றா? விஞ்ஞானி என்றா? எழுத்தாளர் என்றா? ஏவுகணை மனிதர் என்றா? இந்தியா 2020 வுடனோ, டார்கெட் 3 பில்லியன் வகையிலா?’ என்று மூச்சுவிடாமல் கேட்டேன். இதில் ஏதேனும் ஒன்றைச் சொல்வார் என்றுதான் நான் எதிர்பார்த்தேன். ஆனால் அவர் ‘ஆசிரியராக’ என்று பதிலளித்து என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட அவருடன் அவருடைய இளமைக் கால நண்பர்களைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். அவர் சொன்னார் : ‘குழந்தைகள் தம்முடைய பெற்றோரை நல்லபடியாக கவனித்துக் கொள்ள வேண்டும். ஆனால் துரதிர்ஷடமாக இன்றைய காலக்கட்டத்தில் அப்படி நடப்பதில்லை.’ என்றவர் மெளனத்தில் சற்று நேரம் ஆழ்ந்துவிட்டு பின் சொன்னார் ‘முதியவர்களும் இரண்டு விஷயங்களைச்  கடைப்பிடிக்க வேண்டும். நிறைய சொத்துக்கள் சேர்த்து விட்டுச் செல்லக்கூடாது. அது குடும்பத்தில் பகையையும் சண்டையையும் ஏற்படுத்தும். இரண்டாவதாக, பணியாற்றிக் கொண்டிருக்கின்ற வேளையில் எந்தவிதமான பிணியோ, நோயோ வாட்டாத நிலையில் இறந்து போகின்றவர்தான் பேறு பெற்றவர்கள். Good byes should be short, really short பிரிந்துச் செல்வதும் மிகச் சுருக்கமான, மிக மிக சுருக்கமான நேரத்தில் நடந்து முடிந்துவிட வேண்டும்.’ என்றார்.

மீண்டும் இன்று நான் திரும்பிப் பார்க்கிறேன். அவருடைய இந்தக் கடைசி பயணத்தில் கூட அவர் கற்றுக் கொடுத்திருக்கிறார். அதுதான் அவருடைய பெரும் விருப்பமாகவும் அவரை நினைவு கூறத்தக்கவராகவும் இருக்க வேண்டும் என்று அவர் நினைத்திருந்தது. கடைசி நொடிவரை அவர் நிலையாக நின்று கொண்டிருந்தார், வேலை செய்துகொண்டிருந்தார், உரையாற்றிக் கொண்டிருந்தார். இப்போது அந்த நல்லாசான் நம்மை விட்டுச் சென்றுவிட்டார் ஆனால் அவர் நமக்குக் கற்றுத் தந்தவையும் போதித்தவையும் நம்முன் காலத்திற்கும் உயரமாக நிலைத்து நின்று கொண்டிருக்கிறது. இறுதி மூச்சுவரை வெற்றியாளராகவே வாழ்ந்த டாக்டர் கலாம் இவ்வுலகை விட்டுச் செல்கையில், கோடிக்கணக்கான மக்களின் வாழ்த்துக்களையும் அன்பையும் தம்முடன் எடுத்துச் செல்கின்றார்.

அவருடனான இனிய பொழுதுகளை இனி நான் தவறவிடுவேன். அவருடனான சந்தோஷங்களை, பிரியங்களை, பயணங்களை, அவர் எனக்குச் சொல்லித் தரும்பாடங்களை நான் இழக்கிறேன் ஆனால் அவர் எனக்களித்த கனவுகளை, என்னுடைய கனவினை நான் காணும்படியாக கற்பித்தவற்றை, எதுவும் சாத்தியம் என்று உறுதியாக நம்பவைத்த கணங்களை, அவருடைய வார்த்தைகளை நான் என்னுடன் என்றென்றைக்குமாக சுமப்பேன். என்னுடன் உயிர்ப்பாக வைத்திருப்பேன். அவர் மறைந்துவிட்டார், இந்த உலகிற்கு அவர் அள்ளித் தந்தவை இனி தொடர்ந்து கொண்டே இருக்கும். என்றென்றும் வாழ்க டாக்டர் கலாம்!  

(டாக்டர் கலாமுடன் அவரின் உதவியாளராகச் சில வருடங்கள் செயலாற்றி வந்த ஸ்ரீஜன் பால் சிங் ஃபேஸ்புக்கில் எழுதிய கட்டுரை.)

தமிழாக்கம் – உமா ஷக்தி

 

http://www.dinamani.com/special_stories/2015/07/28/கலாமின்-கடைசி-நிமிடங்கள்.../article2945068.ece

Edited by அபராஜிதன்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இந்து இந்தியனாகத் தன்னை நிரூபிக்கவேண்டுமாகில், நூறுவீத விசுவாசத்தை வெளிக்கொணர்ந்தாலே போதும், ஆனால் ஒரு முஸ்லீம் தன்னை இந்தியனாக நிரூபிக்கவேண்டுமாகில் இருநூறுவீதம் தன்னை விசுவாசியாகக் ஆட்டிக்கொள்ளவேண்டும்

ஆனால் அப்துல் கலாம் அவர்கள் ஆயிரம் விகிதம் தன்னை விசுவாசியாகக் காட்டிகொண்டவர், ஆதலினால் பதவியிலிருந்தபோதும்  இல்லாதபோதும் தன்னைத் தமிழனாக வெளிக்காட்டிகொள்ளவில்லை.

இருந்தாலும் எமக்கெதுவித பிரச்சனையும் இல்லை, எதிர்காலத்தில் சரியானவர்களை அடையாளம் காணும் அளவுகோலில் எவர் எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்பதை உணர்வதற்காவது அப்துல்கலாம் அவர்கள் உதவுவார்.

அவரது ஆத்மா வீடுபேறடையட்டும்

  • தொடங்கியவர்

ஆம்
அவர் அவர் பார்வையில் அனைவரினது கருத்துக்கள் 
அருமையாக உள்ளது . ஒருவரின் பார்வைபோல் மற்றவரில் 
பார்வை இருக்கவேண்டுமென்றில்லை . 
கருத்துகளுக்கு நன்றி 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.