Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒக்டோபர் 30; யாழ். முஸ்லிம்களின் நினைவலைகளும் மீள் குடியேற்றமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒக்டோபர் 30; யாழ். முஸ்லிம்களின் நினைவலைகளும் மீள் குடியேற்றமும்

 

ruins-e1447472319513-800x365.jpg

படம் | SRILANKA BRIEF

1990 ஒக்டோபர் 30இன் விடியலை நாங்கள் சூரிய உதயமென்றுதான் நினைத்திருந்தோம். ஆனால், அச்சிவப்பின் பின்னணியில் எங்கள் வறுமை, எங்கள் விரக்தி, எங்கள் வாழ்வழிப்பு, எங்கள் வெளியேற்றம் போன்ற பல நிறமூட்டப்பட்டிருக்குமென்று நினைத்தும் பார்க்கவில்லை.

ஒரு இனம் அல்லது சமயக் குழுவினை மற்றுமொரு ஒரு இனம் அல்லது சமயக் குழு திட்டமிட்டமுறையில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பிலிருந்து வன்முறையால் அல்லது பயங்கரவாதத்தால் அழித்தொழித்தல் அல்லது வெளியேற்றுதல் ‘இனச்சுத்திகரிப்பு’ எனப் பொருள்பட்டால், 1990 ஒக்டோபர் 30இல் முஸ்லிம்கள் 2 மணித்தியாலயத்தில் தம் பிறப்பிட பூமியிலிருந்து விரட்டப்பட்டதும் இனச்சுத்திகரிப்பே.

1990 ஒக்டோபர் 30 காலை 6 மணி….

வீதியெங்கும் விடுதலைப் புலிகளின் ஒலிபெருக்கிகள் அலறின. அவர்களின் அறிவிப்பிற்கேற்ப முஸ்லிம் ஆண்கள் யாழ். ஜின்னா மைதானத்திற்குச் செல்ல…

முஸ்லிம் பெண்கள் கண்ணீரோடு ஆண்களை வழியனுப்பி வைத்தார்கள். அந்தக் கணங்கள் யாரும் அறிந்திருக்கவில்லை. அந்த அழைப்பு எம் அகதி வாழ்க்கைக்கான ஒரு முகப்பென்று…

ஏறத்தாழ ஒரு மணித்தியாலம் நடைபெற்ற விடுதலைப்புலிகளின் கூட்டம் முஸ்லிம்கள் 2 மணித்தியாலத்தில் யாழ்ப்பாணத்தை விட்டுச் செல்ல வேண்டுமென முரசறைந்தது. உடுத்திய உடையுடன் நாங்கள் துரத்தப்பட்டபோது எங்கள் பாதம் பட்ட எங்கள் வீதிகள் மக்களின் கண்ணீரால் நிறைந்தது. யாழ். முஸ்லிம் பகுதிகளில் அழுகைச் சத்தம் ஆக்ரோஷமாக வெடித்தது. அக்கணங்களை நானும் சந்தித்தவளென்பதால் அக்கொடுமையான நிகழ்வின் தாக்கம் இன்னும் வலியோடு எனக்குள் அதிர்கின்றது.

இவ் யாழ். பூமிக்கு நாங்களும் சொந்தக்காரர்கள்தான். இது எங்கள் பாரம்பரிய பூமி. பல வருடங்களாக முஸ்லிம்களும் தமிழர்களும் பிட்டும் தேங்காய்ப்பூவுமாய் பிரியாதிருந்த வாழ்வில் நாங்கள் எங்கள் அடையாளத்தை அன்று இழந்தோம்.

மொழியால் ஒன்றிணைந்து பாசத்தால் பழகி ஆனால், மதத்தால் இனத்தால் வேறுபட்டமையினால் நாங்கள் வேரறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டோம். எமது சொத்துக்களை பறிகொடுத்தது மாத்திரமின்றி வீதிகளின் சந்திகளில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் சோதனைச் சாவடிகளில் எங்கள் வாழ்விற்காக கொண்டு சென்ற சிறிதளவு பணம், நகைகள் என்பவற்றையும் சோதனையெனும் பெயரில் பறிகொடுத்தோம்.

மனோகரா தியேட்டரில் அடைக்கப்பட்டு மந்தைகளாக விடுதலைப் புலிகளின் வாகனங்களில் ஏற்றப்பட்டு கேரதீவுக்குள் விடப்பட்டோம். கடல்ப் பயணத்திற்கு பழக்கமற்ற எம் அப்பாவி மக்கள் தம்வசம் வைத்திருந்த ஆடை மூடைகளுடன் கடலுக்குள் விழுந்து நனைந்தார்கள்.

கால்கள் தரையைத் தொட்டதும் அவலமும் அழுகையும் சுமந்த எம் பயணம் பற்றைக்காடுகளும் முட்புதர்களும் சேற்று நிலங்களும் கடந்து நடைப்பயணமாக பல மணித்தியாலங்கள் அலைந்து வவுனியா பூந்தோட்ட அகதிமுகாமில் தஞ்சமடைந்தன.

ஒருகாலத்தில் குட்டி சிங்கப்பூரென வர்ணிக்கப்பட்ட சோனகத்தெருவின் வர்த்தக வளங்களான எம் சகோதரர்கள் நிவாரணப் பொருட்கள், நிவாரண உணவுகள் என கையேந்தினரர்கள்.

ஏனிந்தத் துரோகம்? வெறித்தனம்? திட்டமிட்ட சதி…

அன்று எம் பூர்வீகத்தின் அடையாளம் ஏன் சிதறடிக்கப்பட்டது? இவ் இனச்சுத்திகரிப்பின் வலியால் யாழ். முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தையே மறக்க வேண்டுமென்ற பேராசையா…?

ஒரு சிறுபான்மையாக இருந்து பெரும்பான்மையினரின் அடக்குமுறைக்கெதிராகப் போராடியவர்கள் தமக்கு சிறுபான்மையினராக வாழ்ந்து வந்த சமூகத்தின் மீது அதிகாரம், வன்முறை, அடக்குமுறை, இனஅழிப்பை மேற்கொண்டதன் நியாயம் என்ன?

நாமும் தமிழ்மொழி பேசுவோரே எனப் பெருமையாகப் பேசிக் கொண்ட நாம், அகதியாக தஞ்சமடைந்தது பெரும்பாலும் சிங்கள மொழி பேசும் மக்களிடமும்தான்… எம்மை விரட்டாமல் அநுராதபுரம, கொழும்பு, புத்தளம் போன்ற நாட்டின் பல பிரதேச மக்கள் அகதி அடைக்கலம் தந்ததை நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றோமின்று..

அன்று குடும்ப உறுப்பினர்களுக்கேற்ற அரசின் குடும்ப நிவாரண அட்டை சாதாரண மக்களுக்கு வழங்கப்பட்டாலும் கூட அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவுமில்லை. இன்றும் பல முஸ்லிம் அரச ஊழியர்கள் எடுக்கும் சம்பளப் பணத்தில் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றினாலும்கூட தமது சொந்த சேதமுற்ற வீடுகளைத் திருத்துவதற்குப் போதிய நிவாரண உதவிகள் கிட்டாத நிலையில் மீள்குடியேற்றமின்றி வெளியிடங்களில் கஷ்டத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

எம்மக்களின் பொருள் வளம் விடுதலைப் புலிகளாலும், எஞ்சிய கட்டடம் தளபாடம் உள்ளிட்ட பொருட்கள் அயலில் வசித்த பிற இன மக்களாலும், ஏற்கனவே குடியேறிய ஒரு சில சுயநலவாத எம்மின மக்களாலும், சூறையாடப்பட்ட நிலையில் இன்றைய காலகட்டத்தில் யாழ்ப்பாணத்திற்கு மீள்குடியேற முடியாமல் அரசின் உதவிகளை எதிர்பார்த்து அது போதியளவின்றிய நிலையில் வாழ்க்கைப் போராட்டத்தையே எம்மக்கள் தம் சொத்தாகக் கொண்டுள்ளார்கள்.

இறந்தகாலம் ஒருபோதும் எதிர்கால முன்னேற்றத்திற்கு தடையாக அமையக்கூடாது. ஆனாலும், அதன் அனுபவங்கள் எம்மைச் சரியான பாதையில் செதுக்க வேண்டும். எனவே, இன்றைய தினத்தில் கடந்தகால கசப்புக்களைப் பட்டியல் போட்டு காட்டி பகைமை மற்றும் காழ்ப்புணர்ச்சியை வளர்ப்பதோ தூண்டுவதோ அல்ல எம் நோக்கம். நாங்கள் பயணித்த கண்ணீர்ப்பாதையின் ஈரலிப்பை நாங்கள் இங்கே முழுமையாக சிந்தமுடியாவிட்டாலும்கூட எங்கள் பயணச்சுவடுகளில் பதிந்த அவலங்களின் ஈரலிப்பு சிறிதளவாவது இங்கே சிந்தப்பட வேண்டும்.

ஒரு மாகாணத்திலிருந்து முழு இனமும் வெளியேற்றப்படுவது சர்வதேச சட்டத்தில் குற்றமென்றாலும் கூட அன்றைய காலகட்டத்தில் நாங்கள் வெளியேற்றப்பட்டதை சர்வதேச ரீதியில் பாரியளவில் அம்பலப்படுத்த அரசியல்வாதிகளோ தனிநபர்களோ முன்வரவில்லை. யாரும் முயற்சிக்கவுமில்லை.

யுத்தத்தின் சிதைவுகளுடன் அகதிகளாக வெளியேற்றப்பட்டு அடிப்படை வசதிகளின்றி போராட்டத்தையே வாழ்க்கையாகக் கொண்ட எம்மக்களின் கோஷம் ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி நினைவுகூறலோடும் கோஷத்தோடும் முற்றுப் பெறுகின்றது.

யுத்தம் முற்றுப் பெற்று இங்கு சமாதான சூழல் நிலைபெற்ற நிலையில் இடம்பெயர்ந்த மக்கள் மீள யாழ். நோக்கி வரும் பயணத்தில் பல சவால்கள் அச்சுறுத்துகின்றன.

வீடுகள் முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளன. அவற்றைத் திருத்தம் செய்வதற்கான முயற்சிகள் மந்தகதியில் நிகழ்கின்றன. அரசு இவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்தாலும்கூட சில அதிகாரிகளின் பாரபட்சம் முஸ்லிம் மீள்குடியேற்ற வீடுகளின் புனரமைப்பை தடை செய்கின்றன அல்லது தாமதிக்கின்றன. எனவே, எமது வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் பட்சத்தில் மீள்குடியேற்றம் துரிதமாக்கப்படும்.

சில முஸ்லிம் மக்களின் காணிகள் பறிக்கப்பட்டும் அவற்றின் ஆவணங்கள் தொலைக்கப்பட்டும் உரிமைகள் மிதிக்கப்பட்டும் உணர்வுகள் கொச்சைப்படுத்தப்பட்டும்… இங்கே அவலங்கள் நீள்கின்றன.

கிட்டத்தட்ட இருதசாப்தங்களாக யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் இல்லாத காரணத்தில் இங்கு வாழும் பிற கலாசார இளைஞர்கள் மற்றும் மக்கள் மனதில் எம்மக்களின் கலை, கலாசார, பண்புகள் சமூக விழுமியங்கள் அறியாதவர்களாகக் காணப்படுகின்றார்கள். முஸ்லிம்களின் பாரம்பரிய தேசத்தில் அவர்கள் கௌரவமாக வாழும் சூழ்நிலையை உருவாக்க அவர்களை மதிக்கும் மனப்பான்மையுள்ள பிற கலாசார சமூகத்தினரை தயார்படுத்த வேண்டும்.

ஒரு சிலர் தவறிழைத்தார்கள் என்பதற்காக சந்தர்ப்பம் காத்திருந்து முழு முஸ்லிம்களையும் வெளியேற்றி இனச்சுத்திகரிப்பு செய்த செயலை யாரும் என்றும் நியாயப்படுத்த முடியாது. எம்மக்களுக்கும் நீதி வேண்டும். நியாயமான நிவாரணங்கள் வேண்டும். அரச உதவிகள் எதுவுமின்றி இன்னும் பல மக்கள் ஏக்கங்களுடன் காத்திருக்கின்றார்கள்.

இங்கு நடந்த யுத்தத்தில் நாங்களும் உணர்வு ரீதியில் பாதிக்கப்பட்டோம். பல முஸ்லிம்கள் உயிரிழந்தார்கள். அந்த இழப்புகளுக்கு மத்தியில்தான் எம் அடையாளங்களும் மறைக்கப்பட முயற்சிகள் செய்யப்பட்டன.

இன்று யுத்தம் முடிவுற்று நல்லிணக்க ஆட்சிக்கான சமிக்ஞை ஏற்பட்டுள்ள இந்நிலையில் பல முஸ்லிம்கள் மீளக்குடியேற ஆவலாக உள்ளனர். அவர்களுக்கான நீதி வழங்கப்படல் வேண்டும். அதிகாரிகள் பாரபட்சமின்றி நொந்து வெந்த எம்மக்களுக்கு உதவிகளை வழங்க முன்வரல் வேண்டும்.

தமது தாயக மண்ணை கண்ணால் காணாமல் வெளியிடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற புதிய தலைமுறைகளும் இங்கே மீளக்குடியேற செயற்றிட்டங்களை முன்வைக்க வேண்டும். மீள்குடியேற்றமென்பது வெறும் வார்த்தைகள் அல்ல, அவை வாழ்வியல் பண்பாட்டோடு புரிதலைக் கொண்டுள்ள ஓர் நிகழ்வு.

யுத்தத்தால் பல குடும்ப உறுப்பினர்கள் மன அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதனால், இவர்களைப் பின்பற்றுகின்ற மாணவ சமுதாயத்தினரின் நடத்தைகளிலும் பாரிய முரண்பாடுகள் காணப்படுகின்றன. இப்போக்கு மாணவர்களின் நடத்தைகளில் பிறழ்வை ஏற்படுத்தி கல்வியில் தாக்கத்தை ஏற்படுத்தி விடும். எனவே பெண்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களின் மன அழுத்தங்களைக் குறைக்க ஆலோசனையும் வழிகாட்டலும் பெற்றுக் கொடுத்தல் வேண்டும். மேலும், சுயதொழில் வேலை வாய்ப்புக்களுக்கான வசதிகளையும் செய்து கொடுத்தல் வேண்டும்.

“ஒக்டோபர் 30… கறுப்பு ஒக்டோபர்” என வெறும் கோஷங்களை மாத்திரம் எழுப்பாமல் முஸ்லிம் மீள்குடியேற்றத்தில் அரசு, வட மாகாண சபை, சமூகத்தினர் மற்றும் நலன்விரும்பிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் பங்குபற்றச் செய்வதன் மூலமாகவே எம்மக்களின் மீள்குடியேற்றத் தேவையை நிறைவு செய்யலாம்.

இத்துன்பியல் நிகழ்வின் ஞாபகங்களுடன் மக்களின் மீள்குடியேற்றமானது தமிழ் மக்களின் நட்புறவுடன் பயணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.

ஜனாபா – ஜன்ஸி கபூர் | அதிபர், கதீஜா பெண்கள் கல்லூரி, யாழ்ப்பாணம்)

(இந்தக் கட்டுரை 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியாகிய சமகாலத்தில் பிரசுரமாகி இருந்தது)

 

 

http://maatram.org/?p=3928

 

  • கருத்துக்கள உறவுகள்

எங்கையப்பா.... சுமந்திரன்.
அந்தாள்.... வந்து, இந்த... அல்லல் பட்ட முஸ்லீம்களின் வீட்டில், 
தொப்பி (குல்லா)  போட்டுக் கொண்டு....   குத்து விளக்கு ஏற்றி.... 
அவர்களை... வரவேற்பது தான், முறை.
அதற்குத் தானே....இவரை, பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைச்சோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உம்மா விளக்கம் இல்லாம எழுதியிருக்காங்க. வடமாகாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் அவர்களின் பாதுகாப்புக் காரணங்களுக்காகவே வெளியேற்றப்பட்டு சிங்களப் பகுதிக்குள் அனுப்பப்பட்டனர். தமிழர் பகுதிகளைவிடச் சிங்களவர் பகுதிகளே வடக்கு முஸ்லிம்களுக்குப் பொருத்தமானதும் பாதுகாப்புமானதுமாகும் என்றவொரு முன்னோக்கிய (தீர்க்கதரிசனமான) பார்வை! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொந்த வீடு பழகிய மண்ணை விட்டு இடம் பெயர்வது என்பது மனதுக்கு கவலையான விடயம் தான்.

இப்போ இருக்கும் அரசியல்வாதிகள் இதற்கு ஒரு தீர்வை கொண்டுவருவார்கள் என்று நம்புகின்றேன் .

யாழில் இதற்கு பதில் எழுதி பிரயோசனமில்லை .அவர்களுக்கு வட்டியுடன் சேர்த்து கொடுத்தாயிற்று .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, arjun said:

இப்போ இருக்கும் அரசியல்வாதிகள் இதற்கு ஒரு தீர்வை கொண்டுவருவார்கள் என்று நம்புகின்றேன் .

யாழில் இதற்கு பதில் எழுதி பிரயோசனமில்லை .அவர்களுக்கு வட்டியுடன் சேர்த்து கொடுத்தாயிற்று .

இப்போதைக்கு உங்கடை வட்டியும் முதலும் ஒருபக்கம் இருக்கட்டும்.:cool:
உங்கடை  கூட்டமைப்பு கொட்டாவி விடாமல் பாத்துக்கொள்ளச்சொல்லுங்கோ.....அவையள் குறிச்ச தவணை இன்னும் கொஞ்ச நாள்த்தான் கிடக்கு tw_dizzy:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.