Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மரபு மருத்துவம்: தாய்ப்பால் பெருக்கும் இயற்கை உணவு

Featured Replies

DOC23_2961594f.jpg
 

தாய்ப்பால் அதிகமா கொடுத்தா அழகு குறைஞ்சிடுமாமே’ என்னும் தவறான செய்திகள் இப்போது பெரும்பாலும் நம்பப்படுவதில்லை. நேர்மாறாக, தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உற்சாகமாக இருப்பதுடன், மார்பகப் புற்றுநோய் வராது என்னும் செய்தி பல அம்மாக்களை எட்டியிருக்கிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில் தொடர்ந்து ஒரு வருடத்துக்குக் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துவந்தால், மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்கிறது இன்றைய ஆராய்ச்சி.

ஒளவையாரின் வாக்கு

`பீரம் பேணி பாரம் தாங்கும்’ எனும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் பாடல் (12-ம் நூற்றாண்டு), தாய்ப்பாலை நன்றாகக் குடித்து வளர்ந்த குழந்தைகள், பிற்காலத்தில் பெரும் பாரத்தைத் தாங்கும் அளவுக்கு உறுதிபெறுவார்கள் என்பதை உணர்த்துகிறது. தாய்ப்பாலின் முக்கியத்துவத்தைப் பெரும்பாலான மக்கள் உணர்ந்திருக்கும் இந்தத் தருணத்தில், குறைந்த ஊட்டச்சத்து, ஹார்மோன் தொந்தரவு போன்ற சில காரணங்களால், சிலருக்குத் தாய்ப்பால் தேவையான அளவு சுரப்பதில்லை. அத்தியாவசியமான தாய்ப்பாலைப் பெருக்கும் உணவுமுறை என்ன?

வெந்தயம்

“பால் கம்மியா சுரந்துச்சுன்னா, வெந்தயத்தக் கஞ்சி வைச்சி குடிச்சா, சட்டுனு பால் சுரக்கும்!” என்பார்கள் கிராமப் பெண்கள். குழந்தை பிறந்த சில நாட்களில், தாய்க்கு வெந்தய விதைகளை நீரில் ஊறவைத்துச் சாப்பிடக் கொடுக்க, அதிக அளவில் பால் சுரக்கும். அதிலுள்ள ‘Diosgenin’ பால்சுரப்பு அதிகரிக்கக் காரணமாகிறது. மகப்பேற்றுக்குப் பிறகு வெந்தயமானது கருப்பையைச் சுருங்கச் செய்து, கருப்பையின் அழுக்குகளை வெளியேற்றி, மீண்டும் பழைய நிலைக்கு விரைவில் கொண்டுவருகிறது. அமெரிக்காவின் FDA (Food and Drug Administration) வெளியிட்ட பாதுகாப்பான உணவுப் பட்டியலில் வெந்தயமும் இடம்பெற்றுள்ளது.

பூண்டு

பால் சுரப்பு குறைவாக உள்ள தாய்மார்கள், பூண்டு பற்களை உணவோடு சேர்த்துச் சாப்பிட்டுவந்தால், பால் சுரப்பு அதிகரிப்பது மட்டுமன்றி, உடலில் உள்ள கொழுப்பு சத்தின் அளவும் குறையும். பால் கொடுக்கும் தாய்மார்கள் பூண்டு, வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்வதால், தாய்ப்பாலில் உண்டாகும் ஒருவித மணம் காரணமாக, குழந்தைகள் அதிக நேரம் பால் அருந்துவதாக ‘American Academy of Pediatrics’ ஆய்விதழில் வெளியான ஓர் ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. தாய்ப்பால் சுரப்பு போதுமான அளவு இருந்தும், பால் குடிக்கக் குழந்தைகள் மறுத்தால், மேற்குறிப்பிட்ட முறையை முயற்சித்துப் பார்க்கலாம்.

தண்ணீர்விட்டான் கிழங்கு (சதாவேரி)

இதிலுள்ள ‘Shatavarin’ வேதிப்பொருள், பால் சுரப்பிகளின் வளர்ச்சியை அதிகரித்துப் பால் சுரப்பைத் தூண்டுகிறது. சதாவேரியில் உள்ள “Tryptophan’ என்னும் அமினோஅமிலம் புரோலாக்டின் மூலமாகத் தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதில் இருக்கும் ‘Anthocyananin’ எனும் வேதிப்பொருள், நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து, கொழுப்பு சத்தைக் கரைக்கிறது, ‘Asparagamine- A ‘புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.

சதாவேரி கிழங்கைக் கொண்டு செய்யப்படும் சதாவேரி லேகியம் தாய்ப்பால் சுரப்பைத் தூண்டுவது மட்டுமன்றி, சிறுநீரகப் பாதையில் ஏற்படும் தொற்றையும் அழிக்கக்கூடியது. மகப்பேற்றுக்குப் பின்னர்க் கருப்பையை மீண்டும் பழைய நிலைக்கு விரைவாகக் கொண்டுவர, இந்தத் தண்ணீர்விட்டான் கிழங்கு உதவுகிறது.

பப்பாளிக் காய்

பப்பாளிக் காயின் தோலை நீக்கிவிட்டுச் சிறுசிறு துண்டுகளாக்கி, லேசாக வேகவைத்துச் சாப்பிட்டுவரப் பால் சுரப்பு அதிகரிக்கும். குழந்தைக்குப் பால் கொடுக்கும்போது, பப்பாளிக் காயைச் சாப்பிட்டவர்களின் தாய்ப்பாலில் அதிக அளவில் வைட்டமின் ‘ஏ’ இருந்ததாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

நவீன சமுதாயம் மறந்த கைக்குத்தல் அரிசியை, மீண்டும் சமையல் அறைக்குள் வரவேற்பது அவசியம். ஏனெனில் ‘பழுப்பு அரிசியில்’ உள்ள செரடோனின் பால் சுரப்பைத் தூண்டும் புரோலாக்டின் ஹார்மோனைத் தூண்டுகிறது.

தாய்ப்பால் அதிகரிக்கப் பற்று

ஆமணக்கு இலைகளுக்குப் பால்பெருக்கி செய்கை உண்டு. ஆமணக்கு இலைகளைக் குடிநீராகவும் குடிக்கக் கொடுக்கலாம் அல்லது இலையை எண்ணெயில் வதக்கி மார்பில் போட்டுவர, பால் சுரப்பு அதிகரிக்கும். இதைப் போலவே இலுப்பை, காட்டாமணக்கு இலைகளையும் மார்பில் வைத்துக் கட்டலாம். வெற்றிலையை விளக்கெண்ணெயில் வதக்கி மார்பில் கட்டிவரப் பால் சுரப்பு அதிகரிக்கும்.

இலக்கியங்களில் தாய்ப்பால்

தாய்ப்பால் அருந்தாத குழந்தைகளின் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைகிறது என்று இன்றைய ஆய்வுகள் நிரூபிக்கின்றன. இதை அன்றே, ‘வயிறா தாய்முலை யுண்ணாக் குழவியும் நல்குரவு சேரபட்டார்’ என வலியுறுத்தியது ‘திரிகடுகம்’ நூல். தாய்ப்பால் கொடுக்கும் முறை பற்றி, ‘புதல்வன் ஈன்ற பூங்கண் மடந்தை முலைவாய் உறுக்கும் கைப்போல’ என நற்றிணையில் தமிழர்கள் பதிவு செய்கின்றனர். இப்படியாகப் பழங்கால இலக்கியம் தொடங்கி, இன்றைய இணைய யுகம்வரை தாய்ப்பாலின் அத்தியாவசியம் பற்றி பல இடங்களில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

உணவில் கவனம்

குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும்போது, தாய்மார்கள் ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுப்பதில் தனிக் கவனம் செலுத்துவது அவசியம். தாய் உட்கொள்ளும் உணவின் குணங்களே, தாய்ப்பாலில் பிரதிபலிக்கும். எனவே, வாயுப் பொருட்கள், அதிகக் காரமான மற்றும் செரிமானத்தைப் பாதிக்கும் உணவைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாகப் பிராய்லர் கோழி, துரித உணவு, மாங்காய் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இயற்கை உணவு வகைகளை அதிகம் உட்கொள்வதன் மூலம், தாய்ப்பாலின் தரமும் மேம்பட்டிருக்கும். சிறந்த உணவு, நிம்மதியான உறக்கம், சீரான மனநிலை எனும் வாழ்க்கைமுறையை அமைத்துக்கொண்டால் தாய்ப்பால் சுரப்பில் எந்தப் பாதிப்பும் இருக்காது.

தாய்ப்பால் அமுதம்

அதேநேரம், எதிர்காலத்தில் குழந்தை நோயின்றி வாழச் சிறந்த இயற்கை உணவாகவும் மருந்தாகவும், தாய்ப்பாலுக்கு நிகராக வேறு எதுவுமில்லை. வைட்டமின்கள், தாதுகள், புரதங்கள், கொழுப்புகள், நோய் எதிர்ப்பு பொருட்கள் எனக் குழந்தைக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் தாய்ப்பாலில் பொதிந்து கிடப்பது இயற்கையின் வரம்.

பாசமும் நேசமும் கலந்த தாய்ப்பால் எனும் அமுதத்தை உட்கொள்ளும் குழந்தைகள், பல்லாண்டு காலம் நோயின்றி வாழ்வார்கள். ‘உண்ண உண்ணத் தெவிட்டாதே அம்மை உயிரெனும் முலையினில் உணர்வெனும் பால்’ என்ற பாரதியின் வரிகளுக்கு இணங்க, தாயின் உயிர்ச்சத்தான தாய்ப்பாலை, குறைந்தபட்சம் ஒரு வருடத்துக்குக் கொடுப்பது சேய்க்கு மட்டுமல்ல, தாய்க்கும் நல்லது.

# இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்ட உருளை கிழங்கை அவித்து, கொஞ்சம் சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வரலாம்.

# கல்யாண முருங்கை இலையைத் தேங்காய் எண்ணெயில் வதக்கிச் சாப்பிட, பால் சுரப்பு அதிகரிக்கும்.

# தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க, கற்பூரவல்லி இலைகளை வேக வைத்துச் சாப்பிடுவது இந்தோனேசிய மக்களின் பாரம்பரிய வழக்கம்.

# இரும்புச்சத்து நிறைந்த அத்தி, பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுவதால் நல்ல பால்சுரப்பு உண்டாகும். தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு அணுக்களை, பேரீச்சை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

# காய்களை மசித்துச் செய்யப்பட்ட `சூப்’ வகைகள், நார்ச்சத்து நிறைந்த கீரைகள், வைட்டமின்கள் நிறைந்த கேரட், பீட்ரூட், இரும்புச்சத்துள்ள முருங்கைக்காய், நீர்ச்சத்து, கனிமச்சத்து நிறைந்த சுரைக்காய், புடலங்காய் போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ளலாம்.

# அரைக்கீரை, முருங்கைக்கீரையை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ளலாம்.

# பால் பொருட்களைச் சாப்பிடுவதுடன் பாதாம் பருப்பைப் பாலில் ஊறவைத்து அருந்தலாம்.

# பருத்திப் பாலுக்கும் பால் சுரப்பை அதிகரிக்கும் தன்மை உண்டு.

# பால்பெருக்கி மற்றும் பிரசவ அழுக்கு அகற்றிச் செய்கை சுறா மீனுக்கு இருப்பதால், குழம்பில் போட்ட சுறா மீன், சுறா மீன் புட்டு ஆகியவற்றைச் சிறிதளவு சாப்பிடலாம்.

# அதேபோல நீரில் ஊற வைத்த வேர்க்கடலையும், முளைகட்டிய தானிய வகைகளும், சிறுதானிய உணவும் பால் சுரப்பை அதிகரிக்கும்.

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்

தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

 

http://tamil.thehindu.com/general/health/மரபு-மருத்துவம்-தாய்ப்பால்-பெருக்கும்-இயற்கை-உணவு/article8952485.ece?widget-art=four-all

தாய்ப்பால் vs புட்டிப்பால்... அவசியம் அறியவேண்டிய சத்து அட்டவணை!

TP_2.jpg

தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் இவ்வுலகில் வேறு எந்த உணவிலும் இல்லை. தாய்ப்பால் உணவாக மட்டுமல்ல; தேவைக்கு ஏற்ப மருந்தாகவும் குழந்தைக்குப் பயன்படுகிறது.

தாய்ப்பாலுக்கும் புட்டிப்பாலுக்கும் இடையே உள்ள சத்துக்களின் வித்தியாசத்தைப் பற்றி சொல்கிறார், மகப்பேறு மருத்துவர் பி.பிரேமலதா.

‘‘தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலை தொடர்ந்து கொடுத்து வந்தாலே, விட்டமின் மருந்துகள் எதுவும் கொடுக்கத் தேவையில்லை. அந்தளவுக்கு அனைத்துச் சத்துக்களையும் கொண்டது இந்த உயிர்ப்பால். தாய்ப்பாலுக்கும், பால் பவுடர், பசும்பால் உள்ளிட்ட புட்டிப்பாலுக்கும் இடையே உள்ள விட்டமின் வித்தியாசங்களைத் தெரிந்துகொண்டால், தாய்ப்பாலைத் தவிர, வேறு பாலை குழந்தைக்குக் கொடுக்க நினைக்கமாட்டோம். அந்த விவரங்களை அட்டவணைகளாகப் பார்ப்போம்...

TP_aT.jpg

தாய்ப்பாலுக்கும் புட்டிப்பாலுக்கும் இடையே உள்ள நன்மைகள் மற்றும் நடைமுறைச் சிக்கல்களையும் பார்ப்போம்...

தாய்ப்பால்

* தாய்ப்பால் ஓர் இயற்கை உணவு.
* இயற்கையான முதல் நோய்த் தடுப்பு மருந்து.
* தாய்ப்பால் அருந்துவதால், குழந்தை உடலின் வெப்பநிலை சரியான அளவில் வைக்கப்படும்.
* சோடியம் குறைவாக இருப்பதால், குழந்தையின் சிறுநீரகத்துக்கு நல்லது.
* வயிற்றுப்போக்கு, ஆஸ்துமா, ஒவ்வாமை, சருமநோய், காதில் சீழ் வடிதல் போன்ற நோய்களைத் தவிர்க்கும்.  


TP_1.jpgபுட்டிப்பால்  

* பசும்பால் மற்றும் பவுடர் இரண்டும் செயற்கை உணவுகளே. தாய்ப்பால் தரவல்ல தரமும், சத்தும், பாதுகாப்பும் இதில் இருக்காது.  

* பசும்பால் அல்லது பால் பவுடரை கொதிக்க வைத்து, பாட்டில் மற்றும் ரப்பரை சுத்தமாகக் கழுவி, வெதுவெதுப்பான சூடுநீரில் சுத்தப்படுத்தி, அதன் பிறகு டப்பாவில் பால் ஊற்றி குழந்தைக்குக் கொடுப்பது, என இந்தச் செய்முறைகளில் ஏதேனும் சுகாதாரக் குறைவு ஏற்பட்டால், அது குழந்தைக்கு நோயை உண்டாக்கும். மேலும், இவற்றை தயார் செய்ய எடுத்துக் கொள்ளும் நேரமும் அதிகம். அதற்குள், குழந்தையின் பசியும் அழுகையும் அதிகமாகி விடும்.   

* சில குழந்தைகள் புட்டிப்பால் குடிக்க மறுக்கிறது என்று, ரப்பரில் தேன் மற்றும் சில இனிப்புகளைத் தடவி கொடுக்கும்போது, அது குழந்தைக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
 
* புட்டிப்பால் குழந்தையின் செரிமானத்தைத் தாமதப்படுத்தும்.

* பால் பவுடர் டப்பாவின் காலாவதி தேதியைச் சரிபார்க்காமல் கொடுப்பதால் doctor.jpgவாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் குழந்தைகளுக்கு ஏற்படலாம்.

சில பெண்கள், தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெட்டு விடும் என்பதால் தாய்ப்பால் கொடுக்காமல், அல்லது குறுகிய காலத்திலேயே தாய்ப்பாலூட்டுவதை நிறுத்தி விடுவார்கள். சிலருக்கு அழகு பற்றிய எண்ணம் இருக்காது. ஆனால், தாய்ப்பால் கொடுக்க அலுப்பு, தூக்கத்தில் எழ சோம்பேறித்தனம் போன்ற காரணங்களால் குழந்தைக்கு பசும்பால் கொடுப்பார்கள்.

தாய்ப்பாலால் குழந்தைக்குக் கிடைக்கும் இணையற்ற நோய் எதிர்ப்பு சக்தி, சத்துக்கள், சீரான உடல் எடை அதிகரிப்பு ஆகியவற்றைவிட, அழகும், அலுப்பும் முக்கியத்துவம் பெற்று விடுமா என்பதை ஒருகணம் சிந்தித்தால், குறைந்தது 6 மாதம், அதிகபட்சம் 1 வயதுவரை தங்கள் குழந்தைக்குப் பாலூட்ட தாய்மார்கள் உறுதியேற்று விடுவார்கள்.

நாம் அறிந்த தாய்ப்பாலின் அவசியத்தை, பிறரும் அறிய எடுத்துச் சொல்வோம்!’’ 

http://www.vikatan.com/news/health/66887-the-benifits-of-motherfeeding.art

தாய்ப்பாலூட்டும் சரியான பொசிஷன் என்ன?!: உலக தாய்ப்பால் வார ஸ்பெஷல்

THA_4.jpg

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு அது குறித்த பரவலான விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், தாய்ப்பாலின் மகத்துவம், பாலூட்டுவதால் தாய்க்கு நேரும் நன்மைகள் மற்றும் அவர் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள், தாய்ப்பாலூட்டும் சரியா பொசிஷன் பற்றி விரிவாகச் சொல்கிறார், மகப்பேறு மருத்துவர் பிரேமலதா.

சீம்பால்... சிறப்புகள்!

doctor.jpgகுழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் ஊட்டப்படும்போது, உலகம் முழுக்க ஒரு மில்லியன் சிசு இறப்பைத் தவிர்க்க முடியும் என்கிறது ஒரு ஆய்வு. காரணம், குழந்தை பிறந்ததும் பழுப்பு நிறத்தில் தாய்க்குச் சுரக்கும் முதல் பாலான சீம்பாலில் இருக்கும் கொலஸ்ட்ரம். அதிக ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கவல்ல இந்த சீம்பால்தான், குழந்தைக்கு இயற்கை அளிக்கும் முதல் நோய்த்தடுப்பு மருந்து. அதை அவசியம் குழந்தைக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும்.

குழந்தைக்கு முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும், தண்ணீர்கூடத் தேவையில்லை. ஏழாவது மாதத்தில் இருந்து தாய்ப்பாலுடன் சேர்த்து இணை உணவுகள் கொடுக்க ஆரம்பிக்கலாம்.

தாய்ப்பாலின் மகத்துவம்!

தாய்ப்பாலால் குழந்தைகளுக்குக் கிடைக்கும் பலன்கள், புட்டிப்பால், பசும்பால் போன்றவற்றால் ஈடுகொடுக்க முடியாதவை.

* தாய்ப்பாலில் உள்ள இம்யூனோகுளோபுளின்என்ற நோய் எதிர்ப்பு சக்தி, குழந்தை பிறந்த முதல் 10 நாட்களில் தாய்க்குச் சுரக்கும் பாலில் அதிகளவு இருக்கும். அது பல்வேறு விதமான அடிப்படை நோய்களில் இருந்து குழந்தையைப் பாதுகாக்கும்; THA_1.jpgதொற்று, நிமோனியா, குடல் சார்ந்த நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைத் தவிர்க்கும்.

* தாய்ப்பால் ஊட்டப்படும் குழந்தைகளுக்குக் காதுகளில் தொற்று ஏற்படும் வாய்ப்பு இரண்டு வயதுவரை 43% குறைக்கப்படும்.

* பிறந்த மூன்று மாதங்களில், குழந்தையின் எடையை இரண்டு மடங்கு அதிகரிக்கும் தனிச்சிறப்பு தாய்ப்பாலுக்கு மட்டுமே உண்டு.

* தாய்ப்பால் குடித்த குழந்தைகளுக்கு சர்க்கரை நோய், இதய நோய், ஆஸ்துமா, புற்றுநோய் உள்ளிட்ட நாள்பட்ட நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.

* ‘லான்சர்’ மருத்துவ இதழின்படி, தாய்ப்பால் புகட்டுவதினால் 5 வயதுக்குட்பட்ட குழந்தை மரணங்கள் 13% தடுக்கப்படுகின்றன.

* புட்டிப்பால் குடித்த குழந்தைகளைவிட தாய்ப்பால் குடித்த குழந்தைகள் 5% & 8% வரை அதிக
அறிவாற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள். குழந்தைப் பருவத்திலும், வளரிளம் பருவத்திலும் அறிவுசார் தேர்வுகளில் தாய்ப்பால் குடிக்காத குழந்தைகளைவிட தாய்ப்பால் குடித்த குழந்தைகள் திறனுடன் செயல்படுகிறார்கள் என்கின்றன ஆய்வு முடிவுகள்.

தாய்ப்பால், தாய்க்குத் தரும் பலன்களும் அதிகம்!

* பாலூட்டும் தாய்மார்களுக்கு பிரசவத்துக்குப் பின்னர் ஏற்படும் ரத்தப்போக்கு குறையும்.

* தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு, கர்ப்பகாலத்தில் அதிகரித்த உடல் எடை இயற்கையாகவே இயல்புநிலைக்குத் திரும்பும்.

* குழந்தைக்குப் பாலூட்டும் காலம்வரை, அடுத்த கர்ப்பம் இயற்கையாகவே தவிர்க்கப்படும். இது ஒவ்வொரு பெண்ணைப் பொருத்து மாறுபடலாம்.

* தாய்ப்பால் ஊட்டுவது மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பைப் புற்றுநோய், இரண்டாம் வகை சர்க்கரை நோய் ஆகிய நோய்கள் பின்னாளில் அந்தப் பெண்களைத் தாக்கும் வாய்ப்புகளைக் குறைக்கிறது.

* தாய்க்கும் குழந்தைக்குமான அற்புத உறவை வலுப்படுத்தும்.

பாலூட்டும் தாய்க்கான சிறப்பு உணவுகள்!

பொதுவாக தாய்க்கு ஒரு நாளைக்குக் குறைந்தது 850 மிலி பால் சுரக்கும். அதற்காக அவருக்கு 600 கலோரி எனர்ஜி, இயல்பைவிட அதிகமாகத் தேவைப்படும். அதை ஈடுகட்டக்கூடிய சிறப்பு உணவுகள் இவை...

பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகள்

பழங்கள்

பால்

வேர்க்கடலை மற்றும் நாட்டுச் சர்க்கரை

பேரீச்சம்பழம், உலர் பழங்கள், நட்ஸ்

THA_2.jpgமீன், கோழி, ஆட்டு இறைச்சி

நாட்டுக்கோழி முட்டை

முளைகட்டிய தானியம் மற்றும் பருப்பு-, பயறு வகைகள்

தாய்ப்பால் புகட்டும் சரியான பொசிஷன் எது?

குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும்போது, மார்பகக்காம்பும் அதைச் சுற்றியுள்ள கருவட்டப் பகுதியும் குழந்தையின் வாய்க்குள் இருக்கும்படி புகட்ட வேண்டும். அப்போதுதான் குழந்தையால் தாய்ப்பாலை முழு ஆற்றலுடன் உறிஞ்சிப் பெற முடியும். மார்பகக்காம்பில் மட்டும் வாயைவைத்துக் குடிக்கும்போது குழந்தைக்கு பாலை உறிஞ்சுவது சிரமமாக இருக்கும் என்பதுடன், தாய்க்கும் அது வலி, புண்ணை ஏற்படுத்தலாம்.

குழந்தையின் கழுத்தும் தலையும் நேராகவோ, அல்லது கழுத்து சற்று பின்புறம் வளைந்தோ இருக்க வேண்டும்.

குழந்தையின் உடம்பு, தாயை நோக்கி உடலோடு உடல் அணைத்தவாறு இருக்க வேண்டும்.

தாய் குழந்தையின் உடல் முழுவதையும் தன் கரங்களால் தாங்கிப் பிடித்து, அதற்கு கதகதப்பான பாதுகாப்பு உணர்வைக் கொடுக்க வேண்டும்.

குழந்தை மற்றும் தாய் இருவரின் கண்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். அப்போது சரியான முறையில் பால் புகட்டப்படுவதுடன், குழந்தைக்குப் போதுமான பால் கிடைக்கப்பெற்றதா என்பதை தாயால் உணர முடியும்.

தாய்ப்பால்... உலக நாடுகளில் இந்தியாவின் இடம்.?!

உலகிலேயே தாய்ப்பால் ஊட்டுவதில் முதல் இடம் வகிக்கிறது, ருவாண்டா. அந்நாட்டில் சுமார் 90% தாய்மார்கள் தாய்ப்பால் ஊட்டுகிறார்கள். இலங்கை 76% பெற்று இரண்டாவது இடத்திலும், கம்போடியா மற்றும் நேபாள நாடுகள் 74% பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளன. தாய்ப்பால் ஊட்டுவதில் 25% பெற்று இந்தியா 31வது இடத்தில் இருப்பது வருத்தமான செய்தி. வரும் ஆண்டுகளில் இளம் தாய்மார்கள் இந்நிலை மாற்றுவார்கள் என்று நம்புவோம்!

http://www.vikatan.com/news/health/66800-breastfeeding-benefits-for-mom-and-baby.art

  • 2 months later...
  • தொடங்கியவர்

தாய்ப்பால் சுரக்காவிட்டால்…

milk_3045701f.jpg
 

தேங்காய்ப்பால் தாய்ப்பாலுக்கு நிகரானது. தாய்ப்பாலைப் போலவே இதில் நுண் சத்துகள், தாதுச்சத்துகள், உயிர்ச்சத்துகள், புரதச்சத்து ஆகியவை மிகுந்துள்ளன.

பத்து-இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இளம் தாய்மார்கள் தங்களது மார்புத் திண்மை குறைந்துவிடும் என்று தவறாகக் கற்பிதம் செய்துகொண்டு குழந்தைகளுக்குத் தாய்ப்பால் புகட்டுவதில் தயக்கம் காட்டிவந்தனர். இன்று அந்தத் தவறான நம்பிக்கை களையப்பட்டு விட்டது.

பெரும்பான்மை அன்னையர்கள் தாய்ப்பால் புகட்டவே விரும்புகின்றனர். ஆனால், ஓரிரு மாதங்களுக்கு மேல் அவர்களுக்குப் பால் சுரப்பதில்லை. அப்படியே சுரந்தாலும் பச்சிளங்குழந்தை தாயின் பாலை சப்பத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே நிறுத்திவிட்டுச் சப்பிய பாலையும் உமிழ்ந்து விடுவதும் நடக்கிறது. இளம் தாய்மார்களுக்கு மன வேதனை தரும் இந்நிகழ்வு பரவலாகிவருகிறது.

என்ன காரணம்?

தத்துவார்த்தமாகப் பார்த்தால் சிறிது காலத்துக்கு முன்பு அன்னையர்கள் குழந்தைகளுக்குத் தங்களது பாலைப் புகட்ட மறுத்தனர். அதன் எதிர்வினையாக இன்று குழந்தைகள் ஏற்க மறுக்கின்றனர் என்றும்கூடச் சொல்லலாம்.

ஆனாலும், நேரடியான உடலியல் காரணங்கள் எத்தனையோ உள்ளன. அன்னையின் உடலில் ஏதேனும் ஒரு சுவை இயல்புக்கு மாறாக மிகுந்திருப்பது, மன அழுத்தம், மட்டுப்பட்ட தாய்மை உணர்வு, தாய்மைப் பேற்றுக்கு முன்னர் மாதாந்திர உதிரப் போக்கில் ஏற்பட்ட இடர்ப்பாடு எனப் பல அம்சங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆய்வுகள் ஒருபுறம் இருக்கட்டும். இப்போது நம் உடனடித் தேவை, குழந்தை பால் அருந்தியாக வேண்டும்.

அரிசிப் பால்

பிறந்து ஒரு வாரத்திலேயே ஒரு குழந்தை “தாய்ப்பால், பவுடர் பால், பசும் பால் போன்ற பால் வடிவிலான அனைத்தையுமே நிராகரிக்கிறது, என்ன செய்யலாம்?’’ என்று என்னிடம் கேட்கப்பட்டது.

“எனக்கு அப்போதைக்குத் தோன்றியது, புழுங்கல் அரிசியைக் குழைய வேகவிட்டு பாலின் அடர்த்தியில் கஞ்சி நீர் வடித்துச் சிட்டிகை உப்பு போட்டுப் புட்டியில் ஊற்றிப் புகட்டுங்கள்” என்றேன். செய்தார்கள், வெகு ஆவலுடன் பருகத் தொடங்கியது குழந்தை.

“தாயும் தொடர்ந்து இதேபோன்று கஞ்சியை முழு ஆகாரமாக உண்டுவந்து, ஒரு வாரம் கழித்துப் பால் கொடுத்தால், ஒருவேளை குழந்தை தாய்ப்பாலை ஏற்கலாம்” என்று கூறினேன். அது நடந்ததா, இல்லையா என்று அறிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

தாய்மார்களுக்குத் தேங்காய்ப்பால்

இப்போது தாய்ப்பாலை உமிழும் குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கக்கூடியது நாட்டு மாடு பசும்பால். அது கிடைக்காத பட்சத்தில் தேங்காய்ப்பாலே மிகவும் உகந்தது.

தாயும் தொடர்ந்து தேங்காய்ப்பால் பருகி வந்தார் எனில் அவருடைய உடல்நலம் மேம்பட்டு, சுரக்கும் பாலின் தரமும் உயரும். குழந்தை தாய்ப்பாலை மறுக்கிறது என்பதற்காக வருந்தி அழுவதில் பயன் இல்லை. பால் சுரப்பை மேம்படுத்துவதில் அக்கறை காட்டுவதுடன், ஒரு நாளைக்கு ஓரிரு முறையேனும் பால் புகட்ட முயற்சிக்கும் பழக்கத்தைக் கைவிட்டுவிடக் கூடாது.

தாய்ப்பால் நன்றாகச் சுரக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான உணவுமுறைகளைக் கடைப்பிடிப்பது நமது பாரம்பரிய வழக்கம். குழந்தை தாயிடம் பால் நன்கு அருந்தினால், அத்தகைய உணவு முறைகளைப் பின்பற்றுவதில் பாதகம் இல்லை.

மிகை உணவு நஞ்சு

அன்னையர்கள் பால் சுரப்புக்காக மிகையாக உண்பது, பசிக்கும் முன்னரே உண்பது ஆகியவை கண்டிப்பாகக் கூடாது. மிகை உணவே உடலுக்கு நஞ்சாகி விடும். இந்த எளிய உண்மையை நாம் முழுமையாக உணர்வதில்லை.

பசித்த பின்னர் உண்கிற எந்தத் தரமான உணவும் முழுமையாகச் செரிக்கப்படும். முழுமையாகச் செரிக்கப்படும் எந்த உணவும் உடலுக்குத் தீங்கு விளைவிப்பதில்லை.

எனவே, மரக்கறி அல்லது ஊன்கறி எதுவானாலும் அவ்வப்போது மிதமான சுவை கூட்டிச் சமைத்து உண்டாலே போதும், பால் சுரப்பு தரமானதாக மாறும்.

குறிப்பாக, மாவுப்பண்டங்களைத் தவிர்த்தும் முழு தானியங்கள், முழு பயறு வகைகள் போன்றவற்றை உணவில் கூடுதலாகச் சேர்த்துக்கொள்ளலாம்.

பதப்படுத்திய (Preserved foods) உணவைப் போன்ற செயற்கையாக உருவாக்கப்பட்ட உணவு போன்ற பொருட்களை முற்றாகத் தவிர்க்க வேண்டும். இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால், தேங்காய்ப்பால் மிகச் சிறந்த உணவு என்பதில் சந்தேகமில்லை.

doc_3045700a.png

கட்டுரையாளர், உணவு எழுத்தாளர் | தொடர்புக்கு: kavipoppu@gmail.com

http://tamil.thehindu.com/general/health/தாய்ப்பால்-சுரக்காவிட்டால்/article9220973.ece?widget-art=four-all

  • கருத்துக்கள உறவுகள்

தாய்ப் பாலுக்கு சுறா கறி வறை நல்ல சாமான்.நிறையவே சுரக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் தகவல் கொடுத்தாலும் சில பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில்லை  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 15.10.2016 at 3:06 PM, முனிவர் ஜீ said:

என்னதான் தகவல் கொடுத்தாலும் சில பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில்லை  

அழகு கெட்டுப்போயிடுமாமெல்லே....:grin:

  • கருத்துக்கள உறவுகள்
On 10/16/2016 at 3:23 AM, குமாரசாமி said:

அழகு கெட்டுப்போயிடுமாமெல்லே....:grin:

ம் உன்மைதான்

  • கருத்துக்கள உறவுகள்

தாய்ப்பால் என்பது நேரடியாகவே தாயிடமிருந்து குழந்தைக்கு கனிவுடனும், கருணையுடனும் சுரக்கும் அமிர்தம் , அதைத் தர மறுப்பது அதர்மம் ....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
On 10/18/2016 at 10:22 PM, suvy said:

தாய்ப்பால் என்பது நேரடியாகவே தாயிடமிருந்து குழந்தைக்கு கனிவுடனும், கருணையுடனும் சுரக்கும் அமிர்தம் , அதைத் தர மறுப்பது அதர்மம் ....!  tw_blush:

ஒ(உ)ங்க கருத்துக்கு ஒரு பச்சை 
 
கொஞ்ச நாளுக்கு முதல் யாரோ ஒரு பெண் விமான நிலையத்தில் பிடிபட்டதாக கேள்விப்பட்டேன் பாலை பீச்சு எடுத்து போத்தல்களில் கொண்டு சென்ற்தாகா 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.