Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல்வர் ஜெயலலிதாதான்... பன்னீர்செல்வத்துக்கு கூடுதல் பொறுப்பு! - முதல்வர் ஆலோசனைப்படி அறிவிப்பு

Featured Replies

முதல்வர் ஜெயலலிதாதான்... பன்னீர்செல்வத்துக்கு கூடுதல் பொறுப்பு! - முதல்வர் ஆலோசனைப்படி அறிவிப்பு

 

 

ops.jpg

 

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ம் தேதி முதல் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.அவரது உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை அறிக்கைகள் வெளியிட்டு வருகிறது.சற்றுமுன்பு ஆளுநர் மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

 

அதில்,   முதலமைச்சர் ஜெயலலிதாவின் இலாகாக்கள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.   இனி அமைச்சரவைக் கூட்டங்களுக்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிப்பார். மேலும் முதலமைச்சரின் ஆலோசனைப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜெயலலிதா முதலமைச்சராகவே நீடிப்பார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%B0.jpg

http://www.vikatan.com/news/tamilnadu/69375-ops-takes-over-jayalalithaas-portfolios.art

  • தொடங்கியவர்

முதலமைச்சர் உடல்நலக் குறைவால் திரும்பிய வரலாறு : 32 ஆண்டுகளுக்கு பின் நிதியமைச்சரிடம் தமிழக ஆட்சி

 

Daily_News_2562481164933.jpg

சென்னை: முதலமைச்சர் ஜெயலலிதாவின் இலாக்காக்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் தமிழக ஆட்சி நிர்வாகம் 32 ஆண்டுகளுக்கு பிறகு நிதிஅமைச்சரிடம் சென்றுள்ளது. 1984-ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்-ருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட  எம்.ஜி.ஆரின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் தொடர்ந்து மருத்துவமனையில் இருக்க நேரிட்டது. அப்போது சட்டப்பேரவையும் நடந்து கொண்டிருந்ததால், ஆட்சி நிர்வாகம் குறித்து அப்போதைய நிதிஅமைச்சர் நெடுஞ்செழியன் ஆளுநரை சந்தித்து பேசினார்.

இதனையடுத்து நெடுஞ்செழியன் தலைமையில் 5 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அவசர மற்றும் முக்கிய முடிவுகளை எடுக்க ஆளுநர் ஒப்புதல் அளித்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக எம்.ஜி.ஆர் அமெரிக்கா செல்ல நேரிட்டதால், அவர் கவனித்த 14 இலாக்காக்களும் நெடுஞ்செழியனுக்கு ஒதுக்கப்பட்டன. ஆட்சி நிர்வாகத்தை நெடுஞ்செழியனிடம் ஒப்படைக்குமாறு எம்.ஜி.ஆர் வாய்மொழியாக உத்தரவிட்டார் என அவரது தனிச்செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் தனித்தனியே எழுதிய கடிதத்தின் அடிப்படையில் அப்போதைய ஆளுநர் குரானா ஆட்சி நிர்வாகத்தில் மாற்று ஏற்பாட்டை செய்தார்.

எம்.ஜி.ஆர் சிகிச்சை முடிந்து திரும்பும் வரை ஆட்சி நிர்வாகத்தை கவனித்த நெடுஞ்செழியன், பிரதமர் இந்திரா காந்தி சுட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து தமிழக பேரவையை கலைத்து விட்டு தேர்தல் நடத்தும் படி பரிந்துரைத்தார். இதன்படி நடைபெற்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று எம்.ஜி.ஆர் மீண்டும் முதல்வராக பதவியேற்றதும், மீண்டும் நிதி அமைச்சராக பொறுப்பேற்றார் நெடுஞ்செழியன். அவருக்கு பின்னர் தற்போதைய நிதிஅமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக ஆட்சி நிர்வாகத்தை கவனிக்க உள்ளார். ஏற்கனவே நீதிமன்ற தீர்ப்புகளால் ஜெயலலிதா பதவி விலக நேரிட்ட 2 முறையும் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பொறுப்பேற்றார். பின்னர் ஜெயலலிதா 2 முறை மீண்டும் பதவிக்கு வந்தவுடன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் நிதிஅமைச்சராக பொறுப்பேற்று கொண்டார் பன்னீர்செவ்லம் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=251570

  • தொடங்கியவர்

ஓ.பி.எஸ்ஸுக்கு முதல்வர் கொடுத்த கிரீன் சிக்னல்... ரசிக்காத சசிகலா!

ops%20long.jpg

'முதலமைச்சர் ஜெயலலிதாவின் இலாகாக்களை ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார்' என நேற்று ஆளுநர் வெளியிட்ட அறிக்கை, 20 நாட்களாக நிலவிவந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. ' மருத்துவர்களுக்கு மிகுந்த நம்பிக்கையைக் கொடுத்த நாளாக நேற்று அமைந்துவிட்டது. ஆனால், ஓ.பி.எஸ் வசம் இலாகாக்கள் ஒப்படைக்கப்பட்டதை, சசிகலா ரசிக்கவில்லை" என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். 

தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 22-ம் தேதி இரவு முதல் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வரின் உடல்நிலை குறித்து அப்போலோ வெளியிடும் தகவல்கள் மட்டுமே, அ.தி.மு.க தொண்டர்களுக்கு நிம்மதியை அளித்து வந்தது. ' முதல்வர் குணமடைந்து வரும் வரையில் பொறுப்பு முதல்வர் நியமிக்கப்பட வேண்டும்' என்ற கோரிக்கையை, தி.மு.க எழுப்பி வந்தது. ' அதற்கான அவசியம் ஏற்படவில்லை. அப்படித் தேவைப்பட்டால், அதை அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் முடிவு செய்யட்டும்' என்ற எதிர்க்குரல்களும் எழுந்தன. ராகுல்காந்தி உள்பட அரசியல் கட்சித் தலைவர்களின் வருகையால், அப்போலோ மருத்துவமனையே அரசியல் மேடையாக காட்சியளித்தது. 

இந்நிலையில், நேற்று ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் இருந்து அறிக்கை வெளியானது. அதில், ' இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 166, உட்பிரிவு 3-ன்படி, முதல்வர் ஜெயலலிதா கவனித்து வந்த துறைகள் அனைத்தும் நிதி, பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டங்களுக்கு இனி நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை வகிப்பார். முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசனையின்படி, அவர் மீண்டும் தனது பணிகளை கவனிக்கும் வரை இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் பதவியில் ஜெயலலிதாவே நீடிப்பார்' என அறிவித்தார். ஆளுநரின் அறிக்கையை தி.மு.க. உள்பட அனைத்துக் கட்சிகளும் வரவேற்றுள்ளன. 

" முதல்வர் ஆலோசனையின்படிதான், ஓ.பி.எஸ் வசம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டதா?" என்ற கேள்வியை அ.தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். "கடந்த சில நாட்களுக்கு முன்பு இருந்த நிலையைவிட, நேற்று காலை முதலே முதல்வரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மூச்சுத் திணறல் பெருமளவு குறைந்துவிட்டது. '1984-ம் ஆண்டு மருத்துவமனையில் எம்.ஜி.ஆர் சிகிச்சை பெற்று வந்தபோது, நாவலர் நெடுஞ்செழியன் முதல்வரின் இலாகாக்களை கவனித்தார். அதேபோல், ' யாரிடம் பொறுப்புகளை ஒப்படைப்பது' என்ற விவாதம் சில நாட்களாக நடந்து வந்தது. ஆனால், சசிகலாவின் சாய்ஸாக ஓ.பி.எஸ் ஒருபோதும் இருந்ததில்லை. கவர்னரை சந்திக்கும்போதுகூட எடப்பாடி பழனிச்சாமியையும் உடன் அனுப்பி வைத்தார் சசிகலா. இதனால், 'எடப்பாடிக்கு முக்கியத்துவம் கிடைக்கலாம்' என்றுதான் எல்லோரும் நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால், நேற்று மதியம் கண்விழித்த முதல்வர் சசிகலாவை மட்டும் சந்தித்திருக்கிறார். அதன்பின் ஓ.பி.எஸ் வசம் பொறுப்புகள் ஒப்படைக்க, முதல்வர் கிரீன் சிக்னல் கொடுத்தார்" என விவரித்தவர், 

sasikala1.jpg"மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்தே, சசிகலா உறவினர்களால் கடுமையாக பாதிக்கப்பட்டார் ஓ.பி.எஸ். மருத்துவமனை வளாகத்தில் அவருக்கு உரிய மரியாதைகள் அளிக்கப்படவில்லை. அவரைச் சுற்றியும் ஏராளமான உள்குத்துகள் நடந்து வந்தன. 'எடப்பாடி பவருக்கு வரப் போகிறார்' என்றுதான் அடிமட்டம் வரையில் பேசப்பட்டது. காரணம். டி.டி.வி.தினகரன், திவாகரன் உள்பட சசிகலா உறவினர்கள் அனைவருக்குமே, ஓ.பி.எஸ் மேல் கடும் கோபம். 'தங்களால் வளர்ந்தவர், கையைவிட்டுப் போய்விட்டார்' என்ற ஆதங்கம்தான். கடந்த சட்டமன்றத் தேர்தல் நேரத்தில், கார்டன் வட்டாரத்தின் கடும் கோபத்திற்கு ஆளானார். அவரது மகன் உள்பட உறவினர்கள் பலர் மீதும் நடவடிக்கைகள் பாய்ந்தன. ஓ.பி.எஸ்க்கு எதிராக அவரது தேனி மாவட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வனை வளர்த்துவிட்டனர். தேர்தல் நேரத்தில்கூட கட்சிக்காரர்கள் சரியாக வேலை பார்க்கவில்லை. கடந்த மாதம் வரையிலும் ஓ.பி.எஸ் பற்றி தாறுமாறாக பேசி வந்தார் தமிழ்ச்செல்வன். 

அதேநேரத்தில், கார்டன் வட்டாரத்தின் கடும் கோபத்திற்கும் ஆளானார். இதுதொடர்பாக, இரண்டு முறை முதல்வரை நேரில் சந்தித்து விளக்கம் கொடுக்க மனு கொடுத்தார். இரண்டு முறையும் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. அந்தக் கடிதத்தில், 'அம்மா உங்களை சந்தித்து விளக்கம் கொடுப்பதற்கு மட்டும் நேரம் அளியுங்கள். எல்லாவற்றுக்கும் பதில் கொடுக்கிறேன்' எனக் குறிப்பிட்டிருந்தார். இரண்டு முறையும் அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், முதல்வரின் தேர்வாக ஓ.பி.எஸ் இருக்க ஒரே காரணம், 'நம் கையை விட்டு அவர் செல்ல மாட்டார்' என்கின்ற முதல்வரின் நம்பிக்கைதான். இதனால், மன்னார்குடி வகையறாக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்" என விரிவாக பேசி முடித்தார். 

மருத்துவர்களுக்கு எப்படி நல்ல நாளாக நேற்று அமைந்ததோ, அதேபோல் ஆட்சி அதிகாரத்திலும் மிஸ்டர்.பணிவு வலம் வர ஆரம்பித்துவிட்டார். தலைமைச் செயலகத்தில் பணிகள் வேகம் பெறட்டும்... முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெறட்டும்!  

http://www.vikatan.com/news/tamilnadu/69390-chief-ministers-portfolio-shifted-to-ops-dislikes-sasikala.art

  • தொடங்கியவர்

முதல்வரின் இலாகா மாற்றம் குறித்து கருணாநிதி கேள்வி
-------------------------------------------------------------------------------------
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இதுவரை அமைச்சரவையில் வகித்துவந்த இலாகாகள் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் வசம் ஒப்படைக்கப்பட்டதற்கு முதல்வர் கையெழுத்திட்டு அறிவுரை வழங்கியுள்ளாரா என தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று தமிழக ஆளுநரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இலாகா மாற்றம் முதல் அமைச்சரின் அறிவுரையின் பேரில் செய்யப்பட்டுள்ளது என்று கூறியிருப்பது வியப்பைத் தருவதாக கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார்.

முதல் அமைச்சர் தனது இலாக்களை, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என்று கோப்பிலே கையெழுத்திட்டு அறிவுரை வழங்கியுள்ளாரா என்ற கேள்வி ஒருசிலரிடையே எழுந்துள்ளது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஆளுநர் செய்துள்ள அறிவிப்பு நிர்வாக வசதிக்கான ஏற்பாடு என்ற வகையில் ஏற்றுக் கொள்ளலாமே தவிர, அரசியல் சட்டத்தின் பரிமாணங்கள் அனைத்தையும் ஆளுனர் முழுமையாகப் பரிசீலித்து இந்த முடிவை எடுத்திருக்கிறாரா என்ற சந்தேகத்தை புறக்கணித்துவிட முடியாது என்றும் கருணாநிதி கூறியிருக்கிறார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், செயல்படாத முதல்வரும் நிரந்தர ஆளுனரும் இல்லாத மாநிலமாக தமிழகம் மாறியுள்ளதாக கூறியிருக்கிறார்.

முதல்வரின் உடல்நிலை குறித்து யாருக்கும் சரியாத தகவல்கள் தெரியாத நிலையில், வதந்திகளைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பத்திரிகையாளர்கள், பொதுமக்கள், மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோரைக் காவல்துறை மிரட்டுவதாக அவர் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், இந்த வதந்திகளுக்குக் காரணமான ஜெயலலிதாவே தன்னிலை விளக்கம் தர வேண்டுமென்றும் அவர் கூறியிருக்கிறார்.

 

BBC

 

 

 

ஆளுநருக்கு எப்படி அறிவுரை வழங்கினார் முதல்வர்..? - ராமதாஸ் கேள்வி

ramados3.jpg

ஆளுநருக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா எந்த முறையில் அறிவுரை வழங்கினார் என்பதுதான் ஏழரை கோடி மக்களின் மனதில் எழுந்துள்ள வினா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருவதால், இதுவரை அவர் கவனித்து வந்த துறைகள் அனைத்தும் நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. முதல்வருக்கு பதிலாக பன்னீர்செல்வம் அமைச்சரவைக் கூட்டத்துக்கு  தலைமையேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரால் செயல்பட முடியாத நிலையில் அரசு நிர்வாகம் தடையின்றி இயங்க செய்யப்பட்டுள்ள இந்த ஏற்பாடு சரியானதே.

அதேநேரத்தில் அரசு நிர்வாகத்தில் செய்யப்படும் மாற்றங்கள் மக்கள் மத்தியில் குழப்பங்களையும், ஐயங்களையும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொறுப்பு மாற்றம் குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 166(3) பிரிவின்படி, முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆலோசனையை ஏற்று இந்த மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் 166(3)வது பிரிவின்படி, அரசின் நிர்வாகப் பணிகள் எளிதாக நடைபெறுவதற்கு வசதியாக அமைச்சர்களின் துறைகளை மாற்றி அமைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு. ஆனால், முதல்வரின் அறிவுரைப்படி மட்டுமே இந்த மாற்றங்களை ஆளுநரால்  மேற்கொள்ளப்படும். ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், முதலமைச்சரின் அறிவுரைப்படி தான் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. 

எனினும், ஆளுநருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா எந்த முறையில் அறிவுரை வழங்கினார் என்பதுதான் தமிழகத்திலுள்ள ஏழரை கோடி மக்களின் மனதில் எழுந்துள்ள வினாவாகும். வழக்கமாக அமைச்சரவை மாற்றம் செய்யப்படும்போது, அதற்கான அறிவுரைக் கடிதத்தை ஆளுநரை நேரில் சந்தித்து முதலமைச்சர் வழங்குவார். முதலமைச்சரால் நேரில் செல்ல முடியாத பட்சத்தில் தலைமைச் செயலாளர் மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ ஆளுநரிடம் முதலமைச்சரின் அறிவுரை கடிதம் சேர்க்கப்பட்டு, அதனடிப்படையில் அமைச்சரவை மாற்றம் அல்லது துறை மாற்றங்கள் செய்யப்படும். ஆனால், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இப்போது எந்த வகையிலும் ஆளுநருக்கு அறிவுரை வழங்கும் நிலையில் இல்லை என்பதுதான் அவர் மருத்துவம் பெற்று வரும் அப்போலோ மருத்துவமனை வெளியிட்டு வரும் மருத்துவ அறிக்கைகள் மூலம் தெரியவரும் உண்மை ஆகும். ஜெயலலிதா மிக மோசமான நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவரை மருத்துவர்கள் தவிர வேறு எவரும் சந்திக்க முடியாத நிலை இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் ஜெயலலிதாவிடம் நலம் விசாரிப்பதற்காக மருத்துவமனைக்கு சென்ற போதிலும், எவரும் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்கப் படவில்லை. மேலும், முதலமைச்சருக்கு செயற்கை சுவாசக்கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதாலும், மயக்க நிலையிலேயே இருப்பதாலும் அவரால் பேச முடியாது. அதுமட்டுமின்றி, அவருக்கு பாசிவ் பிசியோதெரபி (Passive Physiotherapy) செய்யப்படுவதால் அவரது கைகளும், கால்களும் அசைக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இத்தகைய நிலையில் இருக்கும் ஒருவரால் அறிவுரை வழங்கி கையெழுத்து போடுவதோ, தாம் நினைப்பதை தெரிவிப்பதற்காக சைகை காட்டுவதோ சாத்தியமில்லை. இத்தகைய சூழலில் முதல்வர் எப்படி அறிவுரை வழங்கியிருக்க முடியும்?

2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆட்சி செய்யும் உரிமை அக்கட்சிக்கு உண்டு. அக்கட்சியைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் முதலமைச்சராகவோ, பொறுப்பு முதலமைச்சராகவோ நியமிக்கப்படலாம். அதை தீர்மானிக்க வேண்டியது அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தான். ஆனால், அவை அனைத்தும் அரசியலமைப்பு சட்டத்தின்படி நடைபெறவேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலை. மாறாக, அரசியல் சட்டத்துக்கு எதிரான வகையில், இந்த நடைமுறைகளுக்கெல்லாம் சம்பந்தமில்லாத சிலர் தங்களின் விருப்பப்படி அரசு நிர்வாகத்தை ஆட்டிப்படைக்க ஆளுநரும் இடமளித்துவிடக் கூடாது என்பது தான் தமிழ்நாட்டு நலனில் அக்கறை கொண்டவர்கள் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்
69405_thumb.jpg

முதலமைச்சர் தனது இலாக்களை, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என்று கோப்பிலே கையெழுத்திட்டு அறிவுரை வழங்கியுள்ளாரா என்ற கேள்வி ஒருசிலரிடையே எழுந்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். Did Jayalalithaa sign in the report for shifting portfolios to OPS, questions KarunanidhiDid Jayalalithaa sign in the report for shifting portfolios to OPS, questions Karunanidhi | 'ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார்' என்று முதல்வரே கோப்பில் கையெழுத்திட்டாரா?’ - கருணாநிதி அறிக்கை - VIKATAN

இதற்கெல்லாம் மேலாக பொறுப்பு மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்பதை அறியும் உரிமை மக்களுக்கு  உண்டு. எனவே, தம்மிடம் உள்ள துறைகளை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஒதுக்கும்படியும்,  அமைச்சரவையை தலைமையேற்று நடத்த அனுமதிக்கும்படியும் ஆளுநருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா எவ்வாறு அறிவுரை வழங்கினார் என்பதை தமிழக ஆளுநர் விளக்க வேண்டும். இதுகுறித்த விளக்கம் அளிக்கப்படும் வரை தமிழகத்தில் நடைபெறுவது ஐயத்துக்குரிய ஆட்சியாகவே மக்களால் பார்க்கப்படும்" என்று கூறியுள்ளார்.

http://www.vikatan.com/news/tamilnadu/69433-how-did-cm-advice-governor-asks-ramadoss.art

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா சிறையில் இருந்த போது பன்னீர் செல்வமே முதல்வராக செயற்பட்டார். இம்முறை அவரால் சுயமாக சிந்தித்து செயற்பட முடியாத நிலையிலும் முதலமைச்சரின் இலாக்காவை பொறுப்பெடுத்துள்ளார். மக்களால் தெரியப்படாதவர்கள் எல்லாம் பெரிய அறிக்கைகளை மட்டும் வெளியிட முடிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வருக்கு ஒன்று நடக்கும் படசத்தில் ...
பொறுப்பை ஏற்க ஒரு துணை முதல்வர் பதவி அவசியம்.

மக்களால் தேர்வு செய்யப்படடவராக அவர் இருக்க வேண்டும்.

இது முதல்வரின் ஒப்புதல் இல்லாமலேயே நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது ...
பன்னீர்ச்செல்வமே  முதல்வரை போட்டு தள்ளினால் ........?
அம்மா இல்லாத தமிழகம் எப்படி உண்ணும் ....உறங்கும் ?

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வருக்கே செயற்கை சுவாசம் கொடுக்கப்படுகிறது என்கிறது அப்போலோ அறிக்கை.. கிருமித் தொற்று அபாயம் காரணமாக அவரது அறைக்குள் யாரையும் அனுமதிப்பதும் இல்லை. இதற்குள் அவர் ஆளுனருக்கு ஆலோசனை வழங்கினாராமா?:unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 12.10.2016 at 9:55 PM, இசைக்கலைஞன் said:

முதல்வருக்கே செயற்கை சுவாசம் கொடுக்கப்படுகிறது என்கிறது அப்போலோ அறிக்கை.. கிருமித் தொற்று அபாயம் காரணமாக அவரது அறைக்குள் யாரையும் அனுமதிப்பதும் இல்லை. இதற்குள் அவர் ஆளுனருக்கு ஆலோசனை வழங்கினாராமா?:unsure:

சினிமாவையும்,சீரியல்களையும் உரமிட்டு  வளர்த்து.......

மக்களை கிணற்று தவளைபோல் வளர்ப்பது இதற்காகத்தானே........

சினிமா பாணியில் தான் அறிக்கைவரும்....வரணும்......அப்போதுதான் மக்கள் நம்புவார்கள்.:cool:
தமிழ் நாட்டில் நிஜம் செத்து நாளாகி விட்டது.

உண்மையை/உள்ளதை சொன்னால் கேவலமாக பார்க்க மக்களை பழக்கி எடுத்து விட்டார்கள்.:(

  • தொடங்கியவர்

தனிநபர் அந்தரங்கத்துக்கும் அரசின் வெளிப்படைத்தன்மைக்குமான எல்லை எது?

 

 
படம்: ஜோதி ராமலிங்கம்.
படம்: ஜோதி ராமலிங்கம்.

என்னுடைய செல்பேசியிலிருந்து தனிப்பட்ட வகையில் என் மனைவியிடம் எதையும் நான் பேச முடிவதில்லை. ஒவ்வொரு வார்த்தையும் ஒட்டுக் கேட்கப்படுவதாகச் சந்தேகிக்கிறேன். ஒரு ஊடகவியலாளனாக இந்தச் சமூகத்தில் நான் இழக்கும் அந்தரங்க உரிமை இது. சமூகத்தை நொந்துகொள்ள ஏதும் இல்லை. இந்த வாழ்க்கை நான் தேர்ந்தெடுத்தது. நாம் இரண்டு வாழ்க்கை வாழ்கிறோம். பொது வாழ்க்கையில் நாம் எவ்வளவுக்கு எவ்வளவு சமூகத்தின் உள்ளே நுழைகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில் சமூகம் உள்ளே நுழைகிறது. பொது வாழ்வின் பங்கேற்பால், தனிப்பட்ட வாழ்வில் எவ்வளவு அந்தரங்க உரிமைகளை இழக்கிறோம் என்று ஆதங்கப்படுபவர்கள், மறுபுறம் சமூகத்தில் எவ்வளவு உரிமைகளை எடுத்துக்கொள்கிறோம் என்பதையும் யோசிக்க வேண்டும்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பாக சமூக சேவகர் டிராஃபிக் ராமசாமி அளித்த பொதுநல மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது ஆச்சரியம் அளிக்கவில்லை. ஏனென்றால், இந்தியாவில் ஆட்சியாளர்கள் தம் உடல்நிலை தொடர்பாக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய சட்டரீதியிலான கட்டாயம் அவர்களுக்கு இல்லை. இதுகுறித்து சட்டரீதியாகக் கேள்வி கேட்கும் உரிமை குடிமக்களுக்கோ, உத்தரவிடும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கோ இன்றுவரை இல்லை. ஆனால், நாளை அதை நோக்கியே நாம் நகர வேண்டும். ராமசாமியின் மனுவை நிராகரிக்கும்போது, ‘‘இது சுயவிளம்பர நோக்கில் போடப்பட்டிருக்கும் மனு” என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருக்க வேண்டுமா? ஏனென்றால், கடந்த 70 ஆண்டுகளில் ஜனநாயகத்தை மேம்படுத்தும் வகையில் உருவாகிவந்திருக்கும் சட்ட உரிமைகள் பலவற்றையும் இப்படி நீதிமன்றங்களிலும் பொதுவெளியிலும் தொடர்ந்து விவாதித்ததன் தொடர்ச்சியாகவே அரசியல் அரங்கின் மூலம் இன்று நாம் அடைந்திருக்கிறோம்.

ஜனநாயகம் தொடர் பயணம். காலத்துக்கேற்ப அது செழுமைப்படுத்தப்பட வேண்டும். 2005-ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதமர் ஏரியல் ஷெரோன். ஆட்சியாளர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டால் அது தொடர்பாகப் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் உரிமையைச் சட்டமாக்கும் முயற்சிகள் அதற்குப் பின்னரே, இஸ்ரேலில் தொடங்கின.

மிகவும் நுட்பமான, சிக்கலான விவகாரம் இது. ஆட்சியாளரின் இயக்கம் நாட்டின் இயக்கத்துடன் பிணைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பக்கம் ஆட்சியாளரின் அந்தரங்கம். அது ரகசியம் காக்கப்பப்பட வேண்டும். அந்தப் பக்கம் நாட்டின் நிர்வாகம். அதில் வெளிப்படைத்தன்மை வேண்டும். இரண்டுக்குமான எல்லை எது? நாம் விவாதிக்க வேண்டும். உதாரணமாக, நோய்வாய்ப்பட்ட ஒரு ஆட்சியாளரின் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை ஆட்சியாளர் விரும்பாத நிலையில், அவருடைய அந்தரங்க உரிமையின் கீழ் நிராகரிக்கலாம். ஆனால், ஆட்சியாளர் ஒரு விஷயம் குறித்து யோசித்து முடிவெடுக்கும் பிரக்ஞையோடு இருக்கிறாரா என்ற கேள்விக்கான பதிலை அப்படி நிராகரிக்க முடியுமா?

ஜெயலலிதா செப்டம்பர் 22 அன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தக் கட்டுரை எழுதப்படும் அக்டோபர் 10 வரையிலான 19 நாட்களில் அப்போலோ நிர்வாகம் 11 அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறது. அறிக்கை இன்றைக்கு வரும், வராது என்பதை மருத்துவமனை நிர்வாகமே தீர்மானிக்கிறது. அன்றாடம் வெளியிட வேண்டும் என்று ஒரு தனியார் மருத்துவமனையை ஒரு குடிமகனால் நிர்ப்பந்திக்க முடியுமா? ஆரம்ப நாள் அறிக்கைகள் முதல்வர் வழக்கமான ஆகாரம் எடுத்துக்கொள்ளும் நிலையில் இருக்கிறார் என்றன. கடைசியாக வந்திருக்கும் அறிக்கைகள் செயற்கை சுவாசத்தில் இருப்பதாகச் சொல்கின்றன. அத்தனை அறிக்கைகளும் தொடர்ந்து முதல்வரின் உடல்நிலை மேம்பட்டு வருவதாகவும் கூறுகின்றன. வழக்கமான ஆகாரம் எடுத்துக்கொள்ளும் நிலையிலிருந்தவர் செயற்கை சுவாச நிலையைச் சென்றடைவது மேம்பாடா? மருத்துவமனைக்கு அன்றாடம் அரசியல் கட்சித் தலைவர்கள் யாரேனும் வரவழைக்கப்படுகின்றனர். அவர்களை மூன்று அமைச்சர்கள் சந்திப்பதாகவும் “முதல்வர் நன்றாக இருக்கிறார். அவருக்கு இப்படியான பிரச்சினைகள்... இப்படியான சிகிச்சைகள்... விரைவில் அவர் நலம் அடைவார் என்று மக்களிடம் தெரிவியுங்கள்” என்று சொல்லி அனுப்புவதாகவும் சொல்கிறார்கள். இந்தத் தகவலை அந்த மூன்று பேர் மருத்துவமனைக்கு வெளியே வந்து, அரசு சார்பில் ஊடகங்கள் வாயிலாக மக்களிடம் தெரிவிப்பதில் என்ன சிக்கல்? எல்லாவற்றுக்கும் மேலாக ஒவ்வொரு குடிமகனுக்கும் ஜெயலலிதாவின் மீது உயிரையே வைத்திருக்கும் அக்கட்சியின் கடைசித் தொண்டனுக்கும் ஒரு எளிய கேள்வி இருக்கிறது. ஜெயலலிதா சுயநினைவோடு இருக்கிறாரா?

அரசாங்கமானது பல நூறு நிறுவனங்கள், பல்லாயிரம் அலுவலகங்கள், பல லட்சம் ஊழியர்களைக் கொண்டு இயங்கும் ஒரு ராட்சத நிறுவனம். தவிர, அதன் ஆளுகைக்கு உட்பட்ட பிராந்திய நிர்வாகம் எனும் பெறும் பொறுப்பு இருக்கிறது. ஒரு மாநிலத்தில் இது சார்ந்த முக்கியமான கொள்கை முடிவுகள் ஒவ்வொன்றையும் தீர்மானிக்கும் இடத்தில் முதல்வர் இருக்கிறார். அதிலும் தமிழகத்தில் சமகால முதல்வரானவர் முதலமைச்சர் மட்டுமல்ல, அவரே முடிவெடுக்கும் ஒரே அமைச்சர். அப்படியான காட்சிகளே நமக்கு இதுவரை கிடைத்திருக்கின்றன. ஜெயலலிதா செப்டம்பர் 22 அன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தக் கட்டுரை எழுதப்படும் அக்டோபர் 11 வரையிலான 19 நாட்களில் பல முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன அல்லது தள்ளிப்போடப்பட்டிருக்கின்றன; காவிரி விவகாரம் உள்பட. முதல்வர் செயற்கை சுவாசத்தில் இருக்கும் நிலையில், இந்த முடிவுகளை எல்லாம் யார் எடுக்கிறார்கள் அல்லது தள்ளிப்போடுகிறார்கள்? கடந்த 19 நாட்களாக அப்போலோ ஒரு மருத்துவமனை என்பதைத் தாண்டி, தலைமைச் செயலகமாகவும் மாறிவிட்ட அவலத்தைக் காண்கிறோம். அங்கு வேலை நடக்கிறது என்றால், அதிரகசியமாக மேற்கொள்ளப்பட வேண்டிய அரசின் வேலைகள் ஒரு தனியார் இடத்தில் எப்படி நடக்க முடியும்? வேலை நடக்கவில்லை என்றால், 19 நாட்களாக அரசு முற்றிலுமாக முடங்கியிருக்கிறதா? ஏனென்றால், 19 நாட்களாக அமைச்சர்கள் அன்றாடம் ஓரிடத்தில் கூடிக் கிடப்பதைக் காண்கிறோம். ஆனால், அமைச்சரவைக் கூட்டம் என்று ஒன்று நடந்ததாக நமக்குத் தகவல்கள் ஏதுமில்லை.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டிருக்கும் இந்த 19 நாட்களில்கூட செய்தியாளர்களை ஒரு அமைச்சர் சந்திக்கவில்லை. மாநிலத்தின் எந்தப் பிரச்சினை தொடர்பாகப் பேசவும் ஒரு அதிகாரி வாய் திறப்பதில்லை. மாநில நிர்வாகம் ஊமையாக்கப்பட்டிருக்கிறது. காவிரி வழக்கில், “காவிரி ஆணையம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது” என்று மத்திய அரசு தெரிவித்தது ஒரு பெரிய முடிவு. அது தொடர்பில்கூட சின்ன கண்டன வார்த்தைகள் அமைச்சர்களிடமிருந்து வரவில்லை. ‘‘தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. குடியரசுத்தலைவர் ஆட்சியை அமலாக்க வேண்டும். ஆயுதப் படையினருக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தை அமலாக்க வேண்டும்’’ என்கிற வார்த்தைகளை ஜெயலலிதா நல்ல நிலையில் இருக்கும் சூழலில், சுப்ரமணியன் சுவாமியால் கூறிவிட முடியுமா? அதிமுகவினர் அதைப் பார்த்துக்கொண்டு இப்போதுபோல வாளாவிருப்பார்களா? நாட்டு நலனில் அக்கறை கொண்டவர்கள் எப்படி இதுகுறித்தெல்லாம் கவலைக்குள்ளாகாமல், கேள்வி எழுப்பாமல் இருக்க முடியும்? இவற்றில் எந்தக் கேள்வி அந்தரங்கத்தின் பெயரால் நிராகரிக்கக் கூடியது?

தமிழகத்தில் ‘முதல்வரின் உடல்நிலை நிலவரம் தொடர்பாக தமிழக அரசு அன்றாடம் அறிவிக்க வேண்டும்’ என்ற பேச்சுகள் காதில் பட்டாலே பாவம் என்கிற பாவனை ஆளும் வர்க்கத்திடமிருந்து வெளிப்படுகிறது. தமிழகம் போன்ற முற்போக்கான, வளர்ந்ததாகக் கருதப்படும் ஒரு மாநிலத்திலேயே காணப்படும் இந்தச் சூழல், ஒரு பெரும் ஜனநாயக இழுக்கை அம்பலப்படுத்துகிறது. சுதந்திரத்துக்கு 70 ஆண்டுகளுக்குப் பின்னரும்கூட, இன்னமும் ஜனநாயகம் என்கிற அமைப்பை அணுக இந்தியர்களாகிய நாம் எந்த அளவுக்குத் திராணியற்றவர்களாக இருக்கிறோம் என்பதே அது. ஏழு கோடி மக்கள் பயணிக்கும் ஒரு வாகனத்தை இயக்கும் ஓட்டுநர் பொறுப்பில் இருப்பவர் உடல்நலம் குன்றியிருக்கும் சூழலில், அந்த வாகனத்தின் பாதுகாப்பு தொடர்பாகக் கவலைப்படுவதை ஒரு தனிமனித விஷயம் என்று கண்மூடித்தனமாகப் புறந்தள்ளுபவர்களை எப்படி ஜனநாயகச் சமூகத்தின் ஒரு அங்கமாகக் கருத முடியும்?

மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு விளக்கம் அளிக்கும் கட்டாயம் சட்டரீதியாக இன்று இல்லாமல் இருக்கலாம். ஆனால், தார்மிகரீதியில் அவர்களைக் கேள்வி கேட்கவும், அவர்களை விளக்கம் அளிக்க வைக்கவுமான உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கவே செய்கிறது. இந்த விவாதத்தின் மையம் தனிப்பட்ட ஒருவரின் அந்தரங்கம் அல்ல; மாறாக ஒரு அரசின் வெளிப்படைத்தன்மை. இந்தப் புரிதலே ஜனநாயகத்துக்கு வலு சேர்க்கும்!

http://tamil.thehindu.com/opinion/columns/தனிநபர்-அந்தரங்கத்துக்கும்-அரசின்-வெளிப்படைத்தன்மைக்குமான-எல்லை-எது/article9210064.ece?homepage=true&theme=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.