Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெர்மன் விசா - சிறுகதை

Featured Replies

 

ஜெர்மன் விசா - சிறுகதை

அ.முத்துலிங்கம், ஓவியங்கள்: ஸ்யாம்

 

p280a.jpg

ருவன் வீட்டைவிட்டு ஓடுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். பரீட்சையில் சித்தியடையாதது, காதல் தோல்வி, அம்மா ஏசியது, அப்பா அடித்தது, கடன் தொல்லை, விரோதிகளின் சதி... இப்படிப் பலவற்றைச் சொல்லலாம். நான் வீட்டைவிட்டு ஓடியதற்குக் காரணம் ஓர் ஆடு. வீட்டைவிட்டு மட்டும் அல்ல; நான் நாட்டைவிட்டே ஓடினேன். அதைச் சொன்னால் ஒருவருமே நம்புவது இல்லை. ஆகவே, அது உண்மை இல்லை என்று ஆகிவிடுமா?

வருடம் 1979. எனக்கு வயது 15. நெடுந்தீவு மகாவித்தியாலத்தில் படித்துக்கொண்டிருந்தேன். வகுப்பில் முதலாவதாக வராவிட்டாலும்,

‘நீ சுயமாகச் சிந்திக்கிறாய்’ என்று வாத்தியார் என்னைப் பாராட்டியிருக்கிறார். வீட்டுப்பாடம் செய்வது இல்லை என்று ஒரு கொள்கை வைத்திருந்தேன். ஆகவே, அடிக்கடி வகுப்புக்கு வெளியே நிற்க நேர்ந்தது. உலகத்தைப் பற்றி சிந்தித்தது எல்லாம் அந்த நேரங்களில்தான். ‘செருப்புக்கு தோல் வேண்டி’ என்று பாரதி எழுதிய வரிகளில்தான் பிரச்னை ஆரம்பித்தது. வாத்தியார் சொன்னார். ‘கவி, சாதாரணமானதை அசாதாரணமாகச் சொல்வான்; அசாதாரண மானதை சாதாரணமாகச் சொல்வான்.’ நான் கேட்டேன், `சாதாரணமானதை சாதாரணமாகவே சொன்னால் கவியாகாதா?’ அன்று முழுநாளும் நான் முழங்காலில் வகுப்புக்கு வெளியே நின்றேன்.

சரித்திர ஆசிரியரை `வாஸ்கோடகாமா வாத்தியார்’ என்றுதான் அழைப்போம். வாஸ்கோடகாமாவைப் பற்றி பேசத் தொடங் கினால், நிறுத்த மாட்டார். மிளகு வாங்க இந்தியாவுக்கு வந்தவன்,  நம்பூதிரியின் காதை அறுத்துவிட்டு, அந்த இடத்தில் நாய்க்காது தைத்து அனுப்பிய கதையைச் சொல்லிவிட்டு விழுந்து விழுந்து சிரிப்பார். இந்த வாத்தியாருக்கு  ஓர் ஆடு தேவைப்பட்டது. 39 பேர் உள்ள வகுப்பில் `துந்திர வெளியில் மரங்களே முளைக்காது’ என்று பாடம் சொல்வதுபோல, `எனக்கு ஓர் ஆடு தேவை’ என்று பிரகடனம் செய்தார். எவருமே சட்டை செய்ததாகத் தெரியவில்லை. சிலர் அதை தங்கள் நோட்புக்கில் அதுவும் ஒரு பாடம் என்பதுபோல  எழுதி வைத்தனர். நான் ஊர் முழுக்க அலைந்து, விசாரித்து, ஓர் ஆட்டைக் கண்டுபிடித்தேன். அதை நாலு மைல் தூரம் நடத்திச் சென்று வாத்தியாரிடம் ஒப்படைத்தேன். அவருக்கு ஆடு பிடித்துக்கொண்டது. ஆடுக்கும் பிடித்தது. `என்ன விலை?’ என்றார். நான் வாய் கூசாமல் 30 ரூபா சொன்னேன். அவர் காசை எண்ணித் தந்தார். நான் ஆட்டுக்காரரிடம் போய் 25 ரூபாவைக் கொடுத்துவிட்டு, மீதிக் காசை கொடிபோல தலைக்கு மேல் ஆட்டிக்கொண்டு  வீட்டுக்கு ஓடினேன். அப்பா `என்னடா?’ என்றார். 5 ரூபா நோட்டைக் காட்டி, விவரத்தைச் சொன்னேன். நான் என் வாழ்நாளில்விட்ட அதிபயங்கரப் பிழை அதுதான்.

p280b.jpg

`இஞ்ச வாடா’ என்றார். ‘துரோகி. குருவுக்கே  துரோகம் பண்ணலாமா, நீ விளங்குவாயா, இது அறமா, அறமாடா?’ என்று என்னைத் துரத்தினார். `வாத்தியாரிடம் போய் மன்னிப்புக் கேள். ஐந்து ரூபா காசைத் திருப்பிக் கொடுத்துவிட்டு வா.’ வேறு வழியின்றி வாத்தியாரிடம் போய் பணத்தைத் தந்துவிட்டுத் திரும்பினேன். நான் பாடுபட்டு உழைத்த காசு அது. அறம் அது இது என்று கூறி அப்பா என்னை வெருட்டிவிட்டார். எனக்கு அது புரியவே இல்லை.

அப்பா காலை 4 மணிக்கு எழுந் திருப்பார். இளம் பனையோலையை வெட்டி, தண்ணீர் தெளித்து, ஈக்கில் பிரித்து, ஓலையைத் தனித்தனியாக வார்ந்து வைத்துக்கொண்டு, பாய் முடைவார். ஒரு பாய் செய்து முடிக்கும்போது, காலை 7:30 மணியாகிவிடும். நெடுந்தீவில் ஓடும் ஒரேயொரு பஸ் 8:00 மணிக்கு வரும். நான் பாயை சுருட்டிக்கொண்டு சந்தைக்குப் புறப்படுவேன். அங்கே அதை 50 சதத்துக்கு விற்றுவிட்டு, பள்ளிக் கூடத்துக்குப் போவேன். போக வர பஸ் காசு 30 சதம். மிச்சம் 20 சதம்தான் என்னுடைய மதியச் சாப்பாட்டுக் காசு. இது தினமும் நடக்கும். ஒரு நாளைக்கு அப்பா பாய் முடையாவிட்டால், அன்று எனக்குப் பள்ளிக்கூடம் கிடையாது. நான் பள்ளிக்குப் போன அத்தனை நாளும் பாய் விற்றுத்தான் சென்றேன். அப்படியிருக்க, நான் ஒரு மணி நேரத்தில் 5 ரூபா சம்பாதித்தேன். அப்பா என்னைப் பாராட்டியிருக்க வேண்டும். மாறாக  `அறம்... அறம்...’ என்று ஏதோ சொல்லிக் கத்தினார். நான் என்ன திருடினேனா? கொலை செய்தேனா? நாலு மைல் தூரம் நடந்ததற்கு ஊதியம் வேண்டாமா? வீட்டைவிட்டு ஓட வேண்டும் என்று அப்போதுதான் தீர்மானித்தேன்.

p280c.jpg

என் நண்பன் ஒருவன், அடிக்கடி கள்ளத் தோணியில் இந்தியா போய் வருவான்.  போகும்போது பொலியெஸ்டர், தேங்காயெண்ணெய், சோப் ஆகியவற்றைக் கொண்டுபோய் அங்கே விற்பான்.

திரும்பும்போது சேலை, வேட்டி, பருப்பு என்று வாங்கிவருவான். ஒருமுறை போய் வந்தால், அவனுக்கு 2,000 ரூபா லாபம். அவன் படித்தது 5 -ம் வகுப்பு மட்டும்தான். அவனைப் படிப்பித்த வாத்தியாரின் மாதச் சம்பளம் ரூபா 400. நான் ஓ.எல் சோதனை எழுதிவிட்டு வீட்டில் சும்மாதான் உட்கார்ந்திருந்தேன். அவனே இத்தனை சம்பாதித்தால், படித்த நான் எவ்வளவு சம்பாதிக்க முடியும்?

அவன் என்னைக் கூட்டிப்போகச் சம்மதித்து, இரண்டு மடங்கு சாமான் எடுத்துப் போனான். நான் சாமான்களைத் தூக்கி அடுக்கி, கூடமாட உதவி செய்தேன்.  இரவு 12 மணிக்கு பனங்காணி முனையில் இருந்து புறப்பட்டோம். வள்ளத்தில் இன்னும் சிலர் இருந்தார்கள். இரவு நேரம் ஆளுக்காள் முகம் தெரியாது. பலபலவென விடியும்போது ராமேஸ்வரம் வந்தது. கொண்டுவந்த சாமான்களை விற்றுவிட்டு வேறு சாமான்கள் வாங்கிக்கொண்டு திரும்பினோம். கிடைத்த லாபத்தில் நண்பன் எனக்கு  100 ரூபா நோட்டு ஒன்று தந்தான். என் வாழ்நாளில் சொர்க்கமான தருணம் அது.  தினமும் நாலு மணிக்கு எழும்பி பனை ஓலைப் பாய் முடைந்து 50 காசு சம்பாதிக்கும் அப்பாவை  நினைத்துக்கொண்டேன்.

அதன் பின்னர் நானே தனியாக வியாபாரம் செய்ய ஆரம்பித்தேன். ஒவ்வொரு முறையும் ராமேஸ்வரம் போய் அங்கு இருந்து மதுரைக்குப் போவேன். மதுரை 24 மணி நேரமும் கலகல வென்று இருக்கும். கைவிளக்குக்கு பழகிய எனக்கு பிரமாண்டமாகச்  சுழலும் கலர் வெளிச்சங்களைப் பார்த்து பிரமிப்பு ஏற்படும். சனங்கள் மூன்று நேரமும் அங்கே சாப்பிடுவார்கள். சீனியை நக்கிக்கொண்டு தேநீர் குடிக்காமல் கரைத்துக் குடிப்பார்கள். முகத்திலே ஆட்களுக்கு எலும்பு தெரியாது.  ஏ.கே.ரமேஷ் என்பவருக்கு நடுத்தர வயதுதான். மீசை வைத்து அழகாக இருப்பார். தேங்காய் எண்ணெய் தேய்த்து, தலைமுடியை  வாரியிருப்பார். சீப்புக் கோடுகள் தெரியும். அவர்தான் நான் கொண்டுபோன அத்தனை சாமான்களையும் வாங்கினார். ஒரு வியாபாரிக்கு உரிய கறார்தன்மையோ, கண்டிப்போ கிடையாது. சொந்த அண்ணையிலும் பார்க்க அன்பாகக் கவனித்தார். தாராளமான குணம். சில இரவுகள் தங்கவேண்டி நேர்ந்தால், அவர் வீட்டுத் திண்ணையிலேயே படுத்துத் தூங்கிவிடுவேன்.

p280d.jpg

எந்தெந்த மாதங்களில், என்னென்ன சாமான் நல்ல விலைக்குப் போகும் என்று அண்ணை புத்திமதி கூறுவார். சில வேளைகளில் நான் கேட்ட விலையிலும் கூடத் தருவார். `ஏன்?' என்று கேட்டால் `இந்த உலகம் பெரியது. எல்லோருக்குமே போதியது இருக்கிறது. ஏன் ஒருவரை ஏமாற்றவேண்டும்?’ என்பார். ஒருநாள் அவரிடம் ஆடு விற்ற கதையைச் சொல்லி, `இது அறமாடா... இது அறமாடா?’ என்று அப்பா திட்டியதைச் சொன்னேன். சிறிது நேரம் அவர் ஒன்றுமே பேசாமல் அமைதியாக விருந்தார். ‘நீ ஏதோ புண்ணியம் செய்திருக்கிறாய். எல்லோருக்கும் இப்படி ஓர் அப்பா அமைவது இல்லை. நீ பள்ளிக்கூடம் செல்வதற்காக தினமும் 4 மணிக்கே எழும்பி பாய் முடைகிறார். அவருக்கு உன் மேல் எத்தனை கரிசனை. யோசித்துப் பார். நீ 5 ரூபா லாபம் வைத்தது தவறு இல்லை. ஆனால், உன் வாத்தியாருக்குத் தெரியாமல் அதைச் செய்திருக்கிறாய். அதுதான் தப்பு. வெளியே எத்தனை மகிழ்ச்சி இருந்தாலும், உன் உள்மனதில் வாத்தியாரை ஏமாற்றிவிட்டோமே என்ற குற்றவுணர்ச்சி இருந்திருக்கும். அதுதான் அறம். நீ அறம் தவறும்போது உன் மனமே அதை உனக்கு காட்டிவிடும்.’

நானும் அண்ணையும் வெளித்திண்ணையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.  ‘அண்ணை, இப்பவெல்லாம் சட்டத்தை மீறுபவர்கள் அதிகரிக்கிறார்களே. அது எப்படி?’ என்றேன். அண்ணை `முட்டாள் துணிச்சல்தான்’ என்றார். `நீ ஒரு சட்டத்தை மீறும்போது வேறு சட்டங்களை மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக வங்கியில் நீ கொள்ளை அடித்தால், அந்தப் பணத்தைக் கொண்டுபோகும் காருக்கு லைசென்ஸ் இருக்க வேண்டும்;  ஓட்டுபவனும் சட்டத்தை மதிக்க வேண்டும்.’
  
`அண்ணை, அரசாங்கத்தை ஏமாற்றினால் அதுவும் தர்மத்தை மீறுவதுபோலத்தானே. கள்ளக்கடத்தல் பிழைதானே.’

‘அது எப்படி? நீ யாரையாவது ஏமாற்றினாயா, யாரிடமாவது திருடினாயா? உணவும் உடையும் இல்லாத மக்களுக்கு அவற்றை எடுத்துச் செல்கிறாய். ஒரு கோடு போட்டு, இது எங்கள் நாடு. இது உன் நாடு என்று மனிதன் எல்லை உண்டாக்கினான். அதற்கு முன்னர் அவன் என்ன செய்தான்? அதைத்தான் நீ செய்கிறாய். இதிலே அறம் மீறல் எங்கே வருகிறது?’

எனக்கு 19 வயது தொடங்க முன்னர், நான் கிராமத்தில் பணக் காரனாகிவிட்டேன். நாங்கள் ஆறு பேர் ஒன்றாகச் சேர்ந்து வியாபாரம் செய்தோம். ஒரு படகில் இந்தியாவுக்குப் போய் சாமான்களை விற்றுவிட்டு, அதே படகில் வேறு சாமான்களுடன் திரும்புவோம். சிலசமயம் கச்சத்தீவில் இறங்கிக் கொண்டு மீதித் தூரத்தை  இந்திய மீனவர் படகில் ஏறிக் கடப்போம்.  இந்த முறையில் எங்கள் லாபம் அதிகரித்தது.

ஒரு சமயம் எங்களை கச்சத்தீவில் இறக்கிய பின்னர் படகு திரும்பிப் போய்விட்டது. இந்தியாவில் இருந்து ஒரு மீன்பிடிப் படகும் வரவில்லை. காற்று மாறிவிட்டது என்று நினைத்தோம். கச்சத்தீவில்  தண்ணீர் இல்லை; உணவு இல்லை; ஆட்கள் இல்லை; வெறும் புதர்ச் செடிகள் மட்டும்தான். ஒருநாள் முழுக்க பட்டினி கிடந்தோம். இரண்டாம் நாளும் அப்படியே. மூன்றாம் நாளும் ஒரு படகும் தென்படவில்லை. நாங்கள் மயக்க நிலையை அடைந்திருந்தோம். இயக்கத்தில் இருந்து ஓடி வந்தவனின் தலை பக்கவாட்டில் கவிழ, நாங்கள் அதை நிமிர்த்திய படியே இருந்தோம். பயம் பிடித்தது. எழும்பி நிற்கக்கூட பலம் இல்லை. நாலாவது நாள் அற்புதமாக இந்தியப் படகுகள் வந்தன. இலங்கை 1983 -ம் ஆண்டு ஜூலை கலவரத்தைக் கண்டித்து எம்.ஜி.ஆர் அரசாங்கம் நாடு தழுவிய கடை அடைப்பு அறிவித்திருந்தது. அந்த நேரம் நாங்கள் மாட்டிக்கொண்டோம். எங்கள் கதையைக் கேட்ட மீனவர்கள் எங்களை இலவசமாக ராமேஸ்வரத்தில் கொண்டுபோய் இறக்கினர். அங்கு இருந்து மதுரை போய்ச் சேர்ந்தோம். அண்ணை என்னைப் பார்த்து அழுதுவிட்டார். நான் கறுத்துக் கருவாடு ஆகியிருந்தேன். மதுரையில் சில கடைகளுக்குக் கதவுகளே இல்லை. இரவும் பகலும் அவை திறந்தே கிடக்கும். கடை அடைப்பு செய்வதற்காக அவர்கள் புதிய கதவுகள் செய்து கொண்டார்களாம். `இனிமேல் கடல் வியாபாரம் உனக்கு வேண்டாம், இங்கேயே தங்கிவிடு’ என்றார் அண்ணை.

p280e.jpg

அண்ணை எனக்கு ஒரு வீடியோ கடை வைத்துத் தந்தார். மெள்ள மெள்ள என் வியாபாரத்தை விருத்திசெய்தேன்.  அண்ணையின் தாராள மனசு ஊருக்குத் தெரியும். அடிக்கடி அவரிடம் ஆட்கள் உதவி கேட்டு வருவார்கள். ஒருநாள் என் கிராமத்துக்காரர் ஒருத்தர் அண்ணையிடம் கடன் வாங்கினார். அவர் முகம் பலகையால் அடித்ததுபோல சப்பையாக இருக்கும். பெரும் ஏமாற்றுக்காரர். அவருடைய மகளை மீனாட்சி கல்லூரி விடுதியில் சேர்க்க வந்திருந்தார்.  அண்ணையிடம் `கடன் கொடுக்க வேண்டாம்' என்று நான் சாடை காட்டியும் அவர் பொருட்படுத்த வில்லை.  அந்த மனிதர் காசை வாங்கிக்கொண்டுபோனது போனதுதான், திரும்பவில்லை. விடுதியில் சேர்த்த அவருடைய மகள் பாடு அவலமாகியது. முன்பின் தெரியாத அந்த மனிதருக்காக, அண்ணை அந்தப் பெண்ணின் படிப்பு முடியும் வரை பணம் கட்டி அவளைத் திரும்பவும் ஊருக்கு அனுப்பிவைத்தார். 

என்னுடைய வீடியோ கடை நல்ல லாபம் ஈட்டியது. நான் இந்து சுஸூகி 125 மோட்டார் சைக்கிள் வாங்கினேன். நாலு பவுன் சங்கிலியும், கல்வைத்த மோதிரங்களும் என்னை அலங்கரித்தன. டெர்லின் ஷேர்ட்டும் கறுப்புக் கண்ணாடியும் சிட்டிசன் கைக்கடிகாரமும் என் நிரந்தர அடையாளங்கள். முழு அழகை நோக்கி முன்னேறிய என் உருவத்தை கண்ணாடியில் பார்க்க, எனக்கே பிரமிப்பாக இருந்தது. ஒருநாள் கிழவி ஒருத்தி இருட்டு நேரம் வந்தார். மகள் ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் இருப்பதாக அண்ணையிடம் 5,000 ரூபா உதவி கேட்டார். அன்று வெள்ளிக்கிழமை. இரவில் அண்ணை பணம் தருவது இல்லை என்பதால், அடுத்த நாள் வரச் சொன்னார். கிழவி போய் மறுபடியும் ஒரு மணிக்குத் திரும்பினார். மகள் நிலைமை படுமோசம் என்றார். அண்ணை பணம் தர மறுத்துவிட்டார். `வெள்ளைக்காரனுக்குத்தான் 12 மணிக்குப் பிறகு, அடுத்த நாள். எங்களுக்கு சூரிய உதயம் கண்டால்தான் மறுநாள்’ என்றார். என்னால் நம்ப முடியவில்லை. வெறுப்பாக வந்தது. விடிந்ததும் அண்ணை கிழவியை ஆள்விட்டுத் தேடினார். மகள் பிழைத்ததையும், நான் பணம் கொடுத்து அனுப்பியதையும் அவரிடம் சொல்லவில்லை. `நாளும் கிழமையும் வியாபாரத்துக்குத்தான், தர்மம் செய்வதற்கு  அல்ல’ என்பது  இத்தனை தயாளமான என் அண்ணைக்குத் தெரியாமல் போய்விட்டது.

மதுரை தூங்கா நகரம். நேரம் மாற மாற ஒலியும் மாறிக்கொண்டே இருக்கும். ஒலியை வைத்து என்ன மணி என்று சொல்லிவிடும் திறமையை நான் பெற்றிருந்தேன்.  இரவு ஒரு மணியாகியும் தூக்கம் வரவில்லை. என்னுடைய ரேஷன் கார்டைக் கொடுத்து இந்தியக் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்திருந்தேன். அது அண்ணைக்கு இன்னும் தெரியாது. கடவுச்சீட்டு கிடைக்க இரண்டு மாதங்கள் எடுக்கும் என்று நண்பன் சொன்னான்.  ஆனால் அவர்களிடம் பிடிபட்டால் சிறைவாசம்தான். `உனக்கு இங்கே என்ன குறை?’ என்று அண்ணை நிச்சயம் திட்டுவார். வீடியோ கடை முதலாளி ஆவதுதான் என் லட்சியமா? வாழ்க்கையில் எத்தனை இருக்கிறது.

கடவுச்சீட்டு கிடைத்ததும் அமெரிக்கா போகலாம்; கனடா போகலாம்; இங்கிலாந்து போகலாம்; பிரான்ஸ் போகலாம்; நண்பன் சொன்னான்... `அட முட்டாளே. இந்த நாடுகளுக்கு எல்லாம் விசா தேவை. விசா தேவைப்படாத ஒரே நாடு கிழக்கு ஜெர்மனிதான்.’ அப்படியென்றால் மேற்கு ஜெர்மனி என்றும் ஒரு நாடு இருக்க வேண்டும். ஆனால், அது எங்கே இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. நான் ஏன் கவலைப்பட வேண்டும்? கிழக்கு ஜெர்மனிக் காரர்கள்தான் கவலைப்பட வேண்டும்.  ஏனென்றால் நான் அங்கேதான் போவது என்று முடிவெடுத்திருந்தேன்.

p280f.jpg

கடவுச்சீட்டு எடுப்பதற்கு அழைத்துப்போன போது நண்பன் எச்சரிக்கை செய்தான். `உன்னிடம் கெட்டித்தனம் உண்டு; விடாப்பிடித்தனம் இல்லை. புத்தியாக நட.’ எத்தனை பதில்கள் சொன்னாலும் அவர்களுக்குத் திருப்தியே இல்லை. மீண்டும் மீண்டும் கேட்டார்கள். பெயர் என்ன, அப்பா பெயர் என்ன, அம்மா பெயர் என்ன, பிறந்த இடம், பிறந்த தேதி, எங்கே படித்தது, என்ன தொழில், எங்கே போகப் போகிறாய்? உண்மைக்கும் எனக்குமான தூரம் கூடிக்கொண்டே வந்தது. அவர்களுக்கும் ஜெர்மனி போவதற்கு விசா தேவைப்படாது என்பது தெரியவில்லை. இன்னும் பல விஷயங்களும் தெரியவில்லை. நான் கச்சத்தீவில், இயக்கத்தைவிட்டு ஓடிவந்த ஒருவனுடனும், இரண்டு திருடர்களுடனும், ஒரு கடத்தல் காரனுடனும், ஒரு கொலையாளியுடனும் மூன்று இரவுகள் கழித்திருக்கிறேன். அது அவர்களுக்குத் தெரியாது. ஆயிரங்கால் மண்பத்தில் 985 தூண்கள்தான் உள்ளன. அது அவர்களுக்குத் தெரியாது. மதுரைக் கோயிலில் பிச்சைக்காரர்களின் வருமானம், அவர்களுக்கு பிச்சை போடுகிறவர் களின் வருமானத்திலும்  பார்க்க அதிகம். அது அவர்களுக்குத் தெரியாது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஈழத் தமிழர்களின் சராசரி வயது 15 குறைந்துவிட்டது. அது அவர்களுக்குத் தெரியாது. இன்னும் எத்தனையோ... ஏராளம். ஏராளம்.

எனக்கு மகிழ்ச்சியான நாள். ‘ஒப்பரேசன் பூமாலை’ பெயரில் இந்திய விமானங்கள் ஈழத்தில் உணவுப் பொதிகளைப் போட்டன. ஆனால், இரண்டு நாட்களாக அண்ணையின் முகம் சோர்ந்துபோய்க்கிடந்தது. திரும்பிப்போகும் அலைபோல அவர் நடையில்  உற்சாகமே இல்லை.  ஒருவேளை கடவுச்சீட்டு விஷயம் அவருக்குத் தெரிந்துவிட்டதோ? இரண்டு முழங்கைகளையும் தரையில் ஊன்றி படகு வலிப்பதுபோல பின்னகர்ந்து அவர் திண்ணையில் படுத்தபோது கரை ஒதுங்கிய திமிங்கிலம் நினைவுக்கு வந்தது.  அவருடைய 42 வயது வயிறு மெதுவாக ஏறி இறங்கியது. நான் செய்தது அறத்தை மீறிய செயலா? என்னைத் திட்டுவாரா அல்லது வாழ்த்துவாரா? இன்னும் இரண்டு மாதங்கள் முடிவதற்கு இடையில் நான் ஜெர்மனியில் இருப்பேன். அல்லது சிறையில் இருப்பேன். இது எனக்குத் தெரியும். அண்ணைக்குத் தெரியாது.

http://www.vikatan.com/anandavikatan

  • கருத்துக்கள உறவுகள்

கதை பிடிச்சிருக்கு நன்றி நவீனன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.