Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பச்சை விளக்கு - சிறுகதை

Featured Replies

பச்சை விளக்கு - சிறுகதை

ஹேமி கிருஷ் - ஓவியங்கள்: செந்தில்

 

99p1.jpg

தூறல் ஆரம்பித்திருந்தது. நல்ல வேளை, மழை வலுப்பதற்கு முன்னர் அலுவலகத்தில் இருந்து கிளம்பியாயிற்று. ஜெயதேவா பேருந்து நிறுத்தத்துக்கு அவசரமாக ஓடினேன். சாலையோரக் கடைகளின் மசாலா வாசனை, பசியைக் கிள்ளியது. `ராகவன் சார் வடை வங்கிக்கொண்டு வந்திருப்பார்' என்று நினைத்தபோதே, உதட்டில் சிரிப்பு பிறந்தது. `இன்னைக்கு வடைக்காரம்மாவைப் பற்றி என்ன சொல்லப்போறாரோ?' என, முகம் அறியாத வடைக்காரம்மாவைப் பற்றி சம்பந்தம் இல்லாத நான் நினைப்பது எல்லாம், நொடிப்பொழுது சுவாரஸ்யத்துக்காக மட்டுமே.

ஜெயதேவாவில் இருந்து சில்க் போர்டு செல்ல வேண்டும். சில்க் போர்டில் இருந்து இன்னொரு பேருந்து பிடிக்க வேண்டும். சில்க் போர்டு வந்தடைவது, பெரும் கண்டத்தில் இருந்து தப்பிப்பது போன்று. டிராஃபிக், பெங்களூரின் பெரும் சாபம். அதுவும் மழைக் காலத்தில் அதீதப் பொறுமை வேண்டும்.

காலையில ஏழு மணிக்குக் கிளம்பினாலும் டிராஃபிக்; ஒன்பது மணிக்குக் கிளம்பினாலும் அதே டிராஃபிக்!

சில்க் போர்டில் இருந்து சந்தாபுராவுக்கு நீளமான மேம்பாலம் வழியாகச் செல்லும் பேருந்துதான் 20-A. புதிதாக விடப்பட்ட இந்தப் பேருந்து, எங்களுக்கு வரம். இல்லையென்றால், மேம்பாலத்தின் கீழே சிக்னலிலும் டிராஃபிக்கிலும், இரண்டு மணி நேரப் பயணத்தைக் கடக்கவேண்டும். நம் மூச்சுக்காற்று நம் மீதே படும் அளவுக்கு நெருக்கடியான பேருந்தில் இனி செல்லத் தேவை இல்லை.

சுமார் 10 கிலோமீட்டர் தூரம் இருக்கும் இந்த மிக நெடும் மேம்பாலத்தில் செல்வது அத்தனை வசதியாக இருந்தது. ரெஞ்சு, தமயந்தி, ராகவன் சார் இவர்களின் அறிமுகம் கிடைத்தது  20A-யில்தான். இல்லையெனில், நாங்கள் வெவ்வேறு பேருந்துகளில் அல்லது ஒரே பேருந்தில் யாரோ போல் அமர்ந்திருப்போம்.

நான், தமயந்தி, ராகவன் சார் மூன்று பேரும் தமிழ் பேசுபவர்கள். ரெஞ்சு, மலையாளி. ராகவன் சாருக்கு தமிழ் தாய்மொழி என்றாலும், சொந்த ஊர் மங்களூரு. கன்னடம் கலந்த தமிழ். தாட்டியமான உடல்வாகு, சட்டையையும் தாண்டி முன்நிற்கும் தொப்பை, கோல்டன் ஃப்ரேம் போட்ட கண்ணாடி, சிவப்பு நிற சதுரக் குடை.

பேருந்தில் வழக்கமாக வருபவர்களே அதிகம் என்பதால், எல்லோரின் முகங்களும் அறிமுகம். நான், தமயந்தி, ரெஞ்சு மூன்று பேரும் அருகருகே அமர்ந்தபடி பேசிக்கொண்டு வருவோம்.

தமயந்திக்கும் ரெஞ்சுவுக்கும் ஐ.டி கம்பெனியில் பணி. ராகவன் சார், மத்திய அரசாங்க வேலையில் இருந்து கட்டாய ஓய்வு பெற்று, இப்போது தனியார் கம்பெனியில் நிர்வாகத் துறையில் இருக்கிறார்.

இந்தப் பேருந்தில் வந்த புதிதில் தனிமையான பயணம்தான். மேம்பாலத்தில் போகும்போது 99p2.jpgமட்டும் பெங்களூரு அழகாகத் தோன்றியது. பார்வையின் எல்லையில் தெரியும் ஆரஞ்சு நிற வானமும் உயரமான கட்டடங்களும், ஒரு புது நிறத்தைக் கண்களுக்குத் தருவதுபோல் இருந்தன.பல மனஓட்டங்கள், தனிமையான பயணங்களில் தான் அமைகின்றன. மற்ற நேரங்களில் எதை நினைப்பதற்கும் நேரம் இருப்பது இல்லை.

பாலத்தில் இருந்து தூரமாகத் தெரியும் அடுக்குமாடிக் குடியிருப்பில் நான்காவது தளத்தில் ஒரு வீட்டில் தினமும் பச்சைவிளக்கு எரியும். `அந்த வீட்டில் இருப்பவர்கள் இப்போது என்ன செய்துகொண்டிருப்பார்கள்?' என யோசிப்பேன். இந்த எண்ணம் புதிது அல்ல.

இரவுகளில் நெடுந்தூரம் பயணிக்கும்போது கட்டடங்களே தென்படாத இருளான இடங்களில், எங்கோ தூரத்தில் ஒரு வீட்டில் மட்டும் விளக்கு எரிந்துகொண்டிருக்கும். `அந்த வீட்டில் யார் இருப்பார்கள்... என்ன செய்துகொண்டிருப்பார்கள்?' என்று நினைப்பேன். `இப்படி எல்லாம் நமக்கு மட்டும்தான் தோன்றுகிறதா... அல்லது நம்மைப்போல் மற்றவர்களும் நினைப்பார்களா?' என்று கேள்விகள் எழுவது உண்டு. இப்படி தனிமையை ரசிப்பது எல்லாம் ரெஞ்சு, அர்பிதா, ராகவன் சார் அறிமுகம் கிடைக்கும் வரைதான். அதன் பிறகு அந்த நான்காவது தளத்தில் எரியும் பச்சைநிற வீட்டையும் சிவந்த வானத்தையும் மறந்துபோனேன்.

அன்றாடம் வீட்டுவேலை, அலுவலகம் என இயந்திரமாகிப்போன நாட்களில் இந்த ஒரு மணி நேர நட்பு, மனதுக்குள் சந்தோஷம் தந்தது. அவ்வப்போது மாமியார், நாத்தனார் எனப் பல தலைகள் உருளும். இதில் தமயந்தியின் கொழுந்தனார் விஷயம் பிரசித்தமானது. அமர ஆரம்பிப்பதில் இருந்து அவனைப் பற்றியே புலம்பித் தீர்ப்பாள். அவள் கோபமாகச் சொல்வது எங்களுக்குச் சிரிப்பாக இருக்கும்.

ராகவன் சார் அறிமுகம்கூட, அவளின் கொழுந்தனார் பிரச்னையின்போதுதான் கிடைத்தது. ஒருநாள் வழக்கம்போல் தமயந்தி ஆரம்பித்தாள்.

``இப்படி வேலை இல்லாம சுத்திட்டு இருக்கானேனுதான் என் வீட்டுக்காரர் வேலை தேடச் சொல்லி, கைக்காசு போட்டு அவனை துபாய்க்கு அனுப்பினார். 30 வயசு ஆச்சே, அறிவு வேணாம்!''

``அங்கே போய் வேலை தேடுறதா? பயங்கரமா செலவாகுமே!'' - இது நான்.

``இவரோட இன்னொரு அண்ணன் அங்கேதான் வேலை பார்க்கிறார். அவர்தான் ஒரு வேலையை ரெடி பண்ணிட்டு, அங்கே கூப்பிட்டார். ஏதோ எம்.பி.ஏ படிச்சிருக்கானே, வேலை கிடைச்சுடும்னு நினைச்சோம். ஆனா, அங்கே போய் `இந்த வேலை எல்லாம் செய்ய மாட்டேன். நான் எம்.பி.ஏ படிச்சிருக்கேன்'னு சொல்லியிருக்கான். `சரி, என்ன வேலைதான் செய்வே?'னு அந்த கம்பெனியில் கேட்டிருக்காங்க. `கம்ப்யூட்டர் வேலை இருந்தா கொடுங்க'னு சொல்லியிருக்கான்.

சரின்னு சிஸ்டம்ல உட்காரவெச்சு ஆபரேட் பண்ணச் சொன்னா, திருதிருனு முழிச்சிருக்கான். அப்புறம் என்ன... கிளம்பிப் போகச் சொல்லிட்டாங்க. சிங்கப்பூர்ல ஒருநாள் போய், அங்கேயிருந்து இங்கே வந்திருக்கான். இதுல என்ன தெரியுமா எனக்குக் கடுப்பு? என் குழந்தைகிட்ட `நான் ஜாலியா துபாய், சிங்கப்பூர் எல்லாம் சுற்றிப் பார்த்துட்டு வந்தேனே!'னு சொல்லியிருக்கான். இவனை வெச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னே தெரியலை?'' எனச் சொல்லி முடிக்கும் முன்னர், பின்புறம் சீனியர் சிட்டிசன் ஸீட்டில் அமர்ந்திருந்த ராகவன் சார் பெரும் சத்தத்துடன் சிரித்தார். அப்போதுதான் அவரின் முதல் அறிமுகம்.

தமயந்திக்கு, கூச்சமாகப்போயிற்று.

``ஸாரிம்மா... நான் ஒட்டு கேட்டுட்டேன்னு நினைக்காதே!'' என்றார்.

` சார், நீங்க தமிழா?' எனக் கேட்டதில் ஆரம்பித்்தது அவரின் நட்பு.

``ராஜஸ்தான்ல இருக்கிற ஒரு பொண்ணு ஐ.ஐ.ம்-ல படிச்சுட்டு விவசாயம் பார்க்குதும்மா. ஒயிட் காலர் வேலையை உதறிட்டு, இப்படி விவசாயம் பாக்கணும்னு எண்ணம் அவங்கவங்களுக்கு வந்தாத்தான் உண்டு. யாரும் சொல்லி வர்ற எண்ணம் கிடையாது. `விவசாயம் முதுகெலும்பு'னு காந்தி காலத்துல இருந்து சொல்லிட்டு மட்டும்தான் இருக்கோம்'' என்று நாட்டுநடப்புகளைக்கூட, கதைபோல் கூறுவார். அன்டார்டிக்காவில் பனி உருகி வருவதையும், சுட்டுப் போட்டாலும் புரியாத உலகப் பொருளாதாரத்தையும் சொல்லி, எங்களுடைய எண்ணங்களை விசாலமாக்கியது அவர்தான்.

எங்களைக் கிண்டல் செய்வதில் பேரானந்தம்கொள்வார். ரெஞ்சு, எப்போதும் கண் மட்டும் தெரியும்படி முகத்தை மறைத்தபடி முக்காடு போட்டுக்கொண்டுதான் வருவாள். நாங்கள் பல மாதங்கள் கழித்துத்தான் அவள் முகத்தையே பார்த்தோம்.

``நல்லதாப்போச்சு. இந்த மாதிரி முக்காடு போட்டுக்கிட்டு பஸ் பிடிக்க அவசரமா வர்றப்போ தடுக்கி விழுந்தாக்கூட யாருக்கும் நம்மளை அடையாளம் தெரியாது. `உன்னை அந்த ரோடுல பார்த்தேனே... இந்த ரோடுல பார்த்தேனே'னு யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க. அப்புறம் யாராவது பார்ப்பாங்களோனு, வர்ற அழுகை எல்லாம் கட்டுப்படுத்த தேவையே இல்லை.அப்படித்தானேம்மா?'' என்பார்.

``குட் அனாலிசிஸ் சார்'' என்றபடி சிரிப்பாள்.

நான் சில்க் போர்டை அடைந்தபோது தூறலும் நின்றுபோயிருந்தது. நசநசவென நான்குமுனைச் சாலையில் தெற்கு ஓரத்தில் எங்கள் பஸ்ஸுக்காகக் காத்துக் கொண்டிருந்தார் ராகவன் சார். அவரின் சிவப்பு நிற சதுரக் குடை மட்டும் அந்தக் கும்பலில் தனித்துத் தெரிந்தது.

``என்ன சார்... குடையை விரிச்சிருக்கீங்க... மழை வரலையே!''

``எப்படியும் பொத்துக்கிட்டு வரப்போகுது. கையில வேர்க்கடலை வேற. வந்தா சிரமமாகும்னு ஏற்கெனவே குடையை விரிச்சேவெச்சிருக்கேன்'' என்றார்.

``மழை வராது சார். பாருங்களேன்'' என்று நான் சொல்லி முடிப்பதற்குள் படபடவென மழை அடர்த்தியானது.

`நான் சொன்னதும் மழை வந்ததா!' எனத் தலையை ஆட்டியபடி அதே பெருஞ்சிரிப்பைக் கொடுத்தார் ராகவன் சார்.

எங்கள் பேருந்து வர, ஏறி அமர்ந்தோம்.

சில நிமிடங்களில், தமயந்தி மழையில் பாதி நனைந்தும் நனையாமலும் ஏறினாள். பஸ் ஏறியதும் அவளைப் பார்த்து ராகவன் சார் பாட்டு பாட ஆரம்பித்தார். சிரிப்பு தாங்காமல் சிரித்தாள்.

``ஏன் சார் இப்படி?'' என்று மடக்கிய குடையை உதறியபடி கூறினாள்.

ராகவன் சாருக்கு கணீர் குரல். திடீரென மனதுக்குத் தோன்றினால் அருகில் இருப்பவருக்குக் கேட்கும்படியான சத்தத்தில் பாடுவார். சிறு வயதில் கொங்கணி ஆர்கெஸ்ட்ராவில் பாடியதாக நினைவுகூர்வார். ஆனால், அவர் குரலில் எப்போதும் சோகம் தெரியும். அதைக்கூட பின்னொரு நாளில்தான் தெரிந்துகொண்டேன்.

பேருந்து கிளம்பிய நேரம், அர்பிதா என்கிற கொங்கணிப் பெண் ஓடிவந்து ஏறினாள். முனகியபடியே வந்தாள். அர்பிதாவை, ராகவன் சார் மூலமாகத்தான் தெரியும். அவளுக்கும் மங்களூரு பக்கம்தான். இருவரும் கொங்கணியில்தான் பேசிக்கொள்வார்கள்.

அர்பிதாவைப் பற்றி பெரிதாகப் பேச, ஒரே ஒரு விஷயம்தான் உள்ளது. அவளுடைய கணவனைப் பற்றி. அவள் வீட்டுக்குச் செல்லும் முன்னர், அவள் கணவன் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வந்து சமையல் செய்துவிடுவார். துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது என, பெருமளவிலான வேலைகளை அவரே செய்து முடித்துவிடுவார். டே கேரில் இருந்து அவர்களின் குழந்தையைக் கூட்டிவருவது மற்றும் மூக்குப் பிடிக்கச் சாப்பிடுவது மட்டும்தான் அவள் வேலை என ஆரம்பத்தில் சொன்னபோது, எங்களால் நம்பவே முடியவில்லை. `எனக்கு இப்போது வரை சப்பாத்தி பிசையக்கூடத் தெரியாது' என்று அவள் முகத்தைத் தீவிரமாக வைத்துக்கொண்டு சொன்னபோது, எங்களுக்கு அவள் வேற்றுக்கிரகவாசிபோலத்தான் தெரிந்தாள்.

மழை இன்னும் அசாதாரணமாகியது. கோடைமழையைப்போல் பருவகால மழையை ரசிப்பதற்கு, ஒன்று... குழந்தையாக இருக்க வேண்டும்; இல்லையேல் தனிமையில் உழல வேண்டும். இரண்டும் அல்லாத என்னைப் போன்ற பெண்களுக்கு ஏற்படும் பலப்பல கவலைகளில் மிக முக்கியமானது, துவைத்த துணி காய்வது.

எப்போதும் ஏதாவது புலம்பிக்கொண்டிருப்பது தமயந்தியின் இயல்பு. அன்றும் அப்படித்தான் தனது புராஜெக்ட்டில் தனக்கு நேரும் துரோகத்தைப் பற்றி புலம்பியபடி இருந்தாள். ராகவன் சார், அவள் காலை வாரிக்கொண்டிருந்தார்.
``மழையும் ஓயலை... தமயந்தியின் புலம்பலும் ஓயலை'' என்றார்.

தமயந்தி பின்பக்கம் திரும்பிப் பார்த்து, ``சார், உங்களுக்கு அங்கே நடக்கிற பாலிட்டிக்ஸ் பத்தி தெரியாது. அதான் இப்படிச் சொல்றீங்க.''

``இப்படி சதா பிரச்னைகளைப் பேசுறது, சோக கீதங்களைக் கேட்கிற மாதிரி அது ஒரு போதை தெரியுமா? திரும்பத் திரும்பச் சோகமாகி, அந்தக் கவலைகளை நினைப்பதற்கு அடிமையாகிடுறோம். `நாம மட்டும்தான் கஷ்டப்படுறோம்' என்று நினைக்கிற உளவியல் கோளாறு'' என்றார்.
``சார், மேடமும் உங்க பிள்ளைங்களும் எப்படி உங்களைச் சமாளிக்கிறாங்க? உங்களை கோபமா திட்டக்கூட முடியாதுபோலிருக்கே! அவங்களைத் திருப்பி இப்படிக் கிண்டல் பண்ணி கடுப்பேத்திடுவீங்கபோல!'' என்று சிரித்தபடி கேட்டாள்.
அவர் சத்தமான சிரிப்பை மட்டும் தந்தார். அவர் சொன்னதுபோல் அவளின் புலம்பல் ஓயவே இல்லை.

ராகவன் சார் சாப்பாட்டு ப்ரியர். சமையலும் அருமையாகச் செய்வாராம். அவரே சிலமுறை சில பதார்த்தங்கள் செய்துகொண்டுவருவார்.

சின்னச்சின்ன சமையல் குறிப்புகளைத் தருவார். இவை எல்லாமே புதிதாகவும் நேரம் குறைவாகச் செய்யும்படியும் இருக்கும்.

ஓர் ஆண், சகஜமாக சமையல் குறிப்பைத் தருவது எல்லாம் எல்லா இடங்களிலும் நடப்பது அல்ல. எனவேதான் எங்களுக்கும் அது ஆச்சர்யம்.

ஒருநாள், மீனில் பஜ்ஜி போன்று புதுவகையைச் செய்து கொண்டுவந்தார். மாலை வரை அது எந்தவிதமான சேதாரமும் ஆகவில்லை. மொறுமொறுப்பும் உள்ளே மெத்தென்றும் இருந்தது. சீஸ் சேர்த்ததாகச் சொன்னார். அலுவலகத்திலும் பாராட்டுப் பத்திரங்கள் நிறையக் கிடைத்ததாகப் பெருமிதமாகச் சொல்லிக்கொண்டார்.

``சார், மேடத்தைச் சமைக்கவே விட மாட்டீங்களா? கிச்சன்ல உங்க ராஜ்ஜியம்தான்போல!''

``நான் மட்டும் இல்லைம்மா... எங்க ஊர்ப் பக்கம் நிறைய ஆண்கள் சமைப்பாங்க. வீட்டு வேலையும் செய்வாங்க'' என்றார்.

``வாவ்..! எனக்கு அங்கேயே ஒரு மாப்பிள்ளை பார்த்துடச் சொல்லி, என் பேரன்ட்ஸ்கிட்ட சொல்றேன். இன்னொண்ணு குடுங்க சார் நல்லாருக்கு'' என்றாள் ரெஞ்சு.

ராகவன் சார், குழந்தையைப்போல் அகமகிழ்ந்து மற்றொரு துண்டை அவளுக்குக் கொடுத்தார்.

99p3.jpg

யது என்றும் வித்தியாசப்பட்டது இல்லை. ஓர் ஆண், எந்த வயதானாலும் சரி... பெண்களிடம் கூடிப் பேசினால் அவனுக்கு `பெண் பித்தன்' எனப் பெயரிட்டு மகிழ்வது இந்திய மனோபாவம். அப்படித்தான் ராகவன் சாரையும் பலரும் அந்தப் பேருந்தில் நினைத்தனர்போலும்.

அன்று ஒருநாள் ஒருவன் கேட்டேவிட்டான் ``என்ன சார்... லேடீஸ் ஸீட் பக்கத்துலயே பட்டா போட்டுட்டீங்க. எங்ககூட எல்லாம் பேச மாட்டீங்கபோல!'' என்று கன்னடத்தில் நக்கலாகக் கேட்டான்.

ராகவன் சார் நிதானமாக, ``ஒரு மகளோட பேசறதே பாக்கியம். எனக்கு இத்தனை மகள்கள் வாய்ச்சிருக்காங்க. மகா பாக்கியம். யார்கூடப் பேசுறதுங்கிறது என் விருப்பம். இதுல உனக்கு என்னப்பா கவலை... நஷ்டம்?'' என்றார்.

அவனிடம் மறுபேச்சு இல்லை. அமைதியாக அமர்ந்துகொண்டான். இயல்பான பழக்கத்தை, கொச்சைப்படுத்துபவர்களைக் கண்டால் ஓர் அருவருப்பு நம்மை அறியாமலேயே ஏற்படுகிறது. அந்தச் சூழ்நிலையில் ராகவன் சாரிடம் வெளிப்பட்ட இந்த வார்த்தைக்கு நன்றி சொல்ல வேண்டும் என இருந்தது.

``தேங்க் யூ சார். எங்களை `மகள்'னு சொன்னதுக்கு'' என்றேன் நெகிழ்ச்சியுடன்.

``நான்தான்மா நன்றி சொல்லணும். எனக்கு பெண் குழந்தைகளே இல்லை. ரெண்டு பசங்கதான். அதனாலேயே பெண்களைப் பார்த்தா பாசம். அதோட இன்னொரு காரணமும் இருக்கு.''

``எதுக்குக் காரணம்?'' எனக் கேட்டேன்.

``நிறையப் பார்க்கிறோமேம்மா... பொண்ணுங்களால நிம்மதியா வேலைக்கும் கல்லூரிக்கும் போக முடியுதா? எவன் எப்போ பங்கம் செய்வான்னு அடிச்சுக்குதே. இந்த பஸ்லயே எடுத்துக்கோ... இருக்கிற பாதிப் பொண்ணுங்க, அம்மா-அப்பானு எங்கேயோ ஊர்ல விட்டுட்டு, குடும்பத்துக்காகத்தானே உழைக்க வர்றாங்க. பாதுகாப்பு இல்லாம எப்பவும் பயத்தோடும் சந்தேகத்தோடும் வாழ்றது அவ்ளோ ஈஸியா என்ன? அதையும் மீறி இந்த வெளி உலகத்துல நடமாடுறது, வீடு, அலுவலகம்னு சமாளிக்கிறதுக்கு எல்லாம் தனி தைரியமும் பக்குவமும் வேணும். ஆண்களுக்கு வேலை, பாரம்னு சுமக்கத்தான் தெரியும். ஆனா, இப்படி உங்களை மாதிரி நாலும் சமாளிக்கத் தெரியாது. அதனாலேயே பெண் குழந்தைகள் ரொம்பப் பிடிக்கும்'' என்றார்.

அதன் பிறகு அவருடனான உறவு எங்களுக்கு உணர்வுபூர்வமாக இருந்தது. பல பெண்கள் அவரைப் பார்த்தால் சிரித்தபடி `ஹாய்!' சொல்வார்கள். இதற்கு முன்னர் இந்தப் பெண்களும் அவனைப்போலத்தான் நினைத்திருப்பார்கள்.

ன்றைக்கும் இல்லாமல் அன்று மேம்பாலத்திலும் டிராஃபிக் ஜாம் ஏற்பட்டது. வண்டிகள் அனைத்தும் நகர முடியாமல் இருந்தன. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் மேம்பாலத்திலேயே பேருந்துக்குள் காத்திருந் தோம். ஆளாளுக்கு அலைபேசியில் வீட்டுக்குத் தாமதத்தைக் குறிப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

மழையினால் மேம்பாலத்தின் முடிவில் உள்ள சிக்னலில் கடும் டிராஃபிக். `சரி, நடந்தாவது போகலாம்' என இறங்கினால், வெளியே கால் எடுத்துவைக்கக்கூட வழி இல்லை. சந்துபொந்துகளிலும் இருசக்கர வண்டிகள் ஆக்கிரமித்தன. எதுவும் செய்ய இயலாமல் மேம்பாலத்தில் இருந்து கீழே பார்த்துக்கொண்டி ருந்தோம்.

கீழே கண்ணுக்கு எட்டும் தூரம் வரை வாகனங்களின் விளக்கு வெளிச்சம். எங்கும் வாகனங்கள். தலை சுற்றியது. ஒரே ஒரு ஆம்புலன்ஸ், வாகனங்களுக்கு நடுவில் அலறிக்கொண்டிருந்தது. `மாயமந்திரம் நடந்தால்தான் அந்த ஆம்புலன்ஸ் நகர வழி உண்டு' என்று ராகவன் சார் முனகிக் கொண்டிருந்தார்.

``இன்னும் அஞ்சே வருஷத்துல, நடந்துபோகக்கூட வழி இல்லாமப் போகப்போகுது பாருங்க. இத்தனை வண்டிகளா இந்த ரோட்ல ஓடிட்டிருக்கு?! காரில் போறதை எல்லாம் தடைசெய்யணும். `பொது வாகனத்தில்தான் எல்லாரும் பயணம் செய்யணும்'னு ஆர்டர் போடணும் சார் இல்லைன்னா ரொம்பக் கஷ்டம்'' என்றபடி ஒருவர், ராகவன் சாரிடம் கூறிக்கொண்டிருந்தார்.

பொறுமை மிஞ்சும் சமயத்தில் ராகவன் சார் `வண்ணம்கொண்ட வெண்ணிலவே... வானம்விட்டு வாராயோ...' என்று மெதுவாகப் பாடினார். ராகம் பிசகாமல் தேனில் நனைத்து எடுத்த பழத்தைச் சுவைப்பதுபோல் இருந்தது அந்தக் குரல். பின்னால் இருந்த வண்டிகளில் அமர்ந்தவர்கள் அனைவரும் எட்டிப்பார்த்தனர். ராகவன் சாரிடம் இந்தக் குணம் எனக்கு மிகவும் பிடித்தது. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் இல்லாமல் தனக்குத் தோன்றியதைச் செய்வார். இது எல்லோருக்கும் கைகூடாதது.

10 பேர் ஒரே மாதிரி குணங்களுடன் இருக்கும்போது ஒருவர் மட்டும் தனித்துக் காணப்பட்டால், அவரிடம் எல்லோருக்கும் ஓர் அபிமானம் இருக்கும். அப்படித்தான் எங்களுக்கு ராகவன் சார் கூடுதல் ஸ்பெஷலாக இருந்தார்.

99p4.jpg

ராகவன் சாரின் அந்தப் பாட்டு, எனக்கு ஓயாமல் இரவு நேரங்களிலும் சில நாட்கள் வரை கேட்டுக்கொண்டிருந்தது.

ரெஞ்சுவுக்கு, எலெக்ட்ரானிக் சிட்டியிலேயே வேலை கிடைத்தது. இவ்வளவு தூரம் உள்ளே வரவேண்டியது இல்லை. இனி இந்தப் பேருந்தில் வர மாட்டாள். கடைசி நாள் அன்று எல்லோருக்கும் ஒரு கடையில் சிறியதாக ட்ரீட் கொடுத்தாள். அன்று மட்டும் முக்காடு போடாமல் எங்களுடன் வந்தாள்.

அந்தக் கடைகூட ராகவன் சாரால் அறிமுகப் படுத்தப்பட்டதுதான். மடிவாலாவில் பரபரவென சாலையில் இருந்து விலகிய ஒரு குறுகிய சந்தில், காபிக்காக எங்களை கால் வலிக்கக் கூட்டிச்சென்ற இடம் அது. ஒரு காபிக்காக அவ்வளவு தூரம் அலையவைத்த அவரை, எல்லோரும் திட்டியது நினைவுக்கு வந்தது. அதே கடையில் ரெஞ்சு எங்களுக்குப் பிரிவு உபசாரத்தை முடித்துக்கொண்டாள்.

எந்த நேரத்தில் ரெஞ்சு சென்றாளோ, சில மாதங்களிலேயே தமயந்தியின் கணவருக்கு சென்னையிலேயே புராஜெக்ட் கிடைத்ததால், அவளும் தனது பேருந்துப் பயணத்தை முடிக்கவேண்டியதாக இருந்தது. மறக்காமல் கொழுந்தனார் விஷயத்தில் தீர்வு காணும்படி கூறியதும் சிரித்தாள்.

வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என தொடர்புக்குப் பல இருந்தாலும், அவை பேருந்துக்கு இணையாகவில்லை. அந்த ஒரு மணி நேரப் பயணம், முழுதாக எங்களுக்கு இருந்தது. அதன் உயிர்ப்பு, இந்த மின்சாதனங்களில் இல்லை. எப்போதாவதுதான் எங்களால் சாட் செய்ய முடிந்தது. அதுவும் சில சமயம் `ஹாய்!' சொல்வதோடு முடிந்துவிடும். நானும் ராகவன் சாரும் மட்டும்தான் எஞ்சியிருந்தோம். எப்போதும்போல் அவ்வப்போது அர்பிதா எங்களுடன் சேர்ந்துகொள்வாள்.

ஒருநாள் வெறுமையான மனநிலையில் ராகவன் சாரிடம் அலுத்துக்கொண்டிருந்தேன். அன்றைக்கு அதைப் பற்றிப் பேசியிருக்கக் கூடாது. அவரை இறுதியாக ஒரு கவலை தோய்ந்த முகத்துடன் பார்த்த ஞாபகமாவது வராது போயிருக்கும்.

``ஆபீஸ்ல ஒரே வொர்க் பிரஷர் சார். வீட்டுக்கு வந்தா பிள்ளைங்க நச்சு, வீடே தலைகீழா இருக்கும். சுத்தம் பண்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகுது. `அப்பாடா!'னு யாருமே இல்லாம நிம்மதியா இருக்கணும்னு தோணுது சார்.''

``அப்படி எல்லாம் சொல்லாதம்மா. தனிமை எவ்ளோ கொடுமையானதுன்னு எனக்குத்தான் தெரியும்'' என்றார்.

``என்ன இப்படிச் சொல்றீங்க... வீட்ல உங்க வொய்ஃப், பிள்ளைங்க இருக்காங்களே!''

``அவங்க எல்லாரும் என்னைவிட்டுப் போய் பல காலம் ஆச்சு. இப்பதான் நான் இவளோ சிரிக்கச்சிரிக்கப் பேசறேன். ஆனா, நல்ல அப்பாவா, நல்ல கணவனா நான் இருந்தது இல்லை. என்னோட கோபம்தான். அப்படியொரு உக்கிரமான கோபம். அவங்க மென்மையானவங்க தாங்க முடியலை'' - சில நொடி அமைதியானார்.

நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

``ரொம்ப டிசிப்ளின் எதிர்பார்ப்பேன். லீவு நாள்லகூட காலையில நாலு மணிக்கு அவங்க எழுந்தாகணும். இல்லைன்னா அவங்க மேல தண்ணி எல்லாம் ஊத்தியிருக்கேன். பிள்ளைங்க படிப்புல எண்பது மார்க்குக்குக் குறைஞ்சா, பாடப் புத்தகத்தை எல்லாம் கிழிச்சு வீதியிலயும் சாக்கடையிலயும் வீசுவேன். அவங்ககிட்ட சின்னக் குறையைக்கூட கண்டுபிடிச்சுட்டே இருப்பேன். சின்னத் தப்புக்கும் பெரிய தண்டனைதான்.

சந்தோஷமா அவங்களை வெளியே கூட்டிட்டுப்போனது இல்லை. அப்படியே போனாலும் நான் சொன்ன மாதிரிதான் நடந்துக்கணும். அதுதான் ஒழுக்கம்னு இருந்தேன். நான் காதலிச்சுத்தான் கல்யாணம் பண்ணினேன். அந்தக் காதல் செத்துப்போயிட்டதா சொல்லி, ஒருநாள் பிள்ளைங்களைக் கூட்டிட்டுப் போயிட்டா என் மனைவி.

ஆரம்பத்துல `நான் இல்லைன்னாத்தான் என் அருமை தெரியும்'னு நினைச்சு, வீம்பா இருந்தேன். ஆனா, அவங்க அப்பதான் சந்தோஷமாவே இருந்தாங்க. நான் இல்லைன்னா, அவங்க ஒண்ணும் இல்லைனு நினைச்சேன். ஆனா, நான்தான் இப்போ ஒண்ணும் இல்லாம, யாரும் இல்லாம வாழறேன்.''

நொடிக்கு நொடி சிரித்துப் பேசும் இவரா அப்படி இருந்தது என நம்பவே முடியவில்லை. ஜன்னலின் வெளியே பார்த்தபடி கண்ணீரைத் துடைத்தபடி அழுதார். எப்படி ஆற்றுவது எனத் தெரியாமல் இருந்தேன். அன்றுதான் அவரை நான் இறுதியாகப் பார்த்தது. அதன் பிறகு அவர் வரவே இல்லை. அலைபேசிக்கு அழைத்தாலும் அவர் அழைப்பை எடுக்கவில்லை. என்ன ஆயிற்று? அவர் இருக்கையை தினமும் பார்ப்பேன்.

ஒருநாள் அவரது அலைபேசி உபயோகத்தில் இல்லை என வந்தது. அதன் பிறகு தேடுவதை நிறுத்திவிட்டேன். சிவப்பு நிற சதுரக் குடை, முன்நிற்கும் தொப்பை, கண்ணாடியுடன் அவர் சிரிக்கும் பெரும் சிரிப்பையும் நான் இழந்துகொண்டிருந்தேன்.
வெகு நாட்களுக்குப் பிறகு, பேருந்தின் ஜன்னலில் வழியே அந்த அடுக்குமாடி நான்காவது தளத்தில் பச்சைவிளக்கு எரிகிறதா என மீண்டும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்!

http://www.vikatan.com/anandavikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.