Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாஸ்வேர்டு

Featured Replies

பாஸ்வேர்டு

சிறுகதை: தமிழ்மகன், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு

 

ட்டநடு சாலையின் மஞ்சள் கோட்டில் அவனும் அவளும் நின்றிருந்தனர். அவர்களுக்கு முன்னும் பின்னும் கொக்கியில் மாட்டிய ரயில்பெட்டிகளைப்போல வாகனங்கள் தொடர்ச்சியாகப் போய்க்கொண்டிருந்தன. சாலையைக் கடக்க வழி கிடைக்காமல், ஐந்து நிமிடங்களுக்கு மேலாக நின்றிருந்தனர். அது சாலையைக் கடப்பதற்கான தடம் அல்ல. வாகனங்களுக்கு இடையே அரிதாக இடைவெளி விழும்போது, தற்கொலை முயற்சிபோல பாய்ந்து சென்று சாலையைக் கடந்துவிட வேண்டும். ஆனால், இடையில் வெளியே இல்லாத வாகனச் சுவர்.

சற்று தூரத்தில் சிக்னல் இயந்திரம் இருந்தது. ஆனால், அது வேலைசெய்யவில்லை. போக்கு வரத்து போலீஸாரும் இல்லை. இரண்டு பேருக்காகப் பரிதாபப்பட்டு வாகனங்கள் நிற்பதாகவும் இல்லை. ஒருவரையொருவர் வழித்துணைபோல பார்த்துக் கொண்ட அந்தத் தருணத்தில்தான் அவர்களுக்குள் பார்வை அறிமுகம் நிகழ்ந்தது.

``சிட்டி பேங்க், நாலு மணி வரைக்கும்தானே?’’ என அவள் கேட்டபோதுதான் அவனும் ஒரு புன்னகையோடு தயார் ஆனான். அவளும் புன்னகைத்தாள்.

அவன் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, ``இன்னும் அஞ்சு நிமிஷம்தான் இருக்கு. இன்னைக்கு லாஸ்ட் நாள் வேற...’’ என்றான்.

அந்த வாகனத் திரளில் மனிதர்கள் இருவர் பேசுவதற்கான சூழ்நிலை இயல்பாகவே உருவாகியது.

அவள் உடனடியாக ஒரு காரியம் செய்தாள். அவளுடைய கைப்பையில் இருந்து செல்போனை எடுத்தாள். சில பட்டன்களை வேகமாக அழுத்தினாள். பொறுமையின்றி காத்திருந்தாள். அவள் முகத்தில் புன்னகை மலர்ந்தது. ``ஆன்லைன்லயே கட்டிட்டேன்’’ - செல்போன் குறுஞ்செய்தியைப் பார்த்தபடி, பொதுவாகச் சொன்னாள். ஆனால், அதைக் கேட்பதற்கு அங்கு அவன் ஒருவன் மட்டும்தான் இருந்தான்.

அவள் முடிவெடுத்த வேகம், தொழில்நுட்பத்தை சட்டெனப் பிரயோகித்த திறமை, விழிகளைச் சுழற்றியபடி சொன்ன பாணி... எதனாலோ அவனுக்கு அவளைப் பிடித்துப்போனது. அவள் மஞ்சள் நிறப் புடவை கட்டியிருந்தாள். அதே நிறத்தின் சகோதர வேறுபாடுதான் அவளுடைய நிறம். அவ்வளவு மலர்ச்சியான விழிகள். கேமரா படம் எடுப்பதுபோல் அதன் இமைகள் மெள்ள மூடித் திறந்தன.
சுருள்சுருளான கறுப்பான தலைமுடிகள், வாகன ஓட்டத்துக்கு ஏற்ப காற்றில் அலைபாய்ந்தன. மஞ்சள் நகப்பூச்சு. நீளமான விரல்கள். பத்து விநாடிகளில் மிக அதிகமாகவே அவனால் கவனிக்க முடிந்தது.

``நீங்க எவ்வளவு கட்டணும்?’’

``பன்னிரண்டாயிரம்.’’

``இப்ப கட்டப்போறீங்களா?’’

``செல்போன்ல (‘கட்டத் தெரியாதே’ என்பது பாவனையில்)... இன்னைக்குத்தான் கடைசித் தேதி...’’ என்றபடி பாக்கெட்டைத் தொட்டான்.

``கடைசித் தேதியா... கடைசி நிமிஷம்! சரி, உங்க கிரெடிட் கார்டை எடுங்க’’ - மேஜிக் செய்பவர், திடீரென எதிர்வரிசையில் ஒருவரை அழைத்து `உங்ககிட்ட பத்து ரூபாய் நோட்டு இருந்தா கொடுங்க’ என்பாரே அப்படி... ஆச்சர்யம் நடக்கக் காத்திருக்கும் சந்தர்ப்பம்போல கட்டுப்பட்டு, கிரெடிட் கார்டை எடுத்து நம்பரைக் காட்டினான். சில விநாடிகளில் அவனுடைய தொகையையும் கட்டிவிட்டு, அவளுக்கு வந்த குறுஞ்செய்தியைக் காட்டினாள்.

p90a.jpg

``ஆக்டிவேட்டட்.’’

``பன்னிரண்டாயிரத்தை எடுங்க.’’

எல்லாம் கனவுபோல இருந்தது. அவன் பணத்தை எடுத்துக் கொடுத்தான்.

``இனிமே நாம ரோட்டை கிராஸ் பண்ணவேண்டியது இல்லை’’ - அவளுடைய பேச்சில் சிநேகமும் உரிமையும் இருந்தன.

``திரும்பிப் போகணுமே... கிராஸ் பண்ணித்தான் ஆகணும்’’ - என்னமா மடக்கிட்டோம் என ஓர் அசட்டுப் பூரிப்பு அவனிடம்.

``யா... அஃப்கோர்ஸ். இந்தப் பக்கம் அவ்வளவு டிராஃபிக் இல்லை. நீங்க எங்கே போகணும்?’’ உரிமையாகக் கேட்டாள்.

``இங்கே ஒரு மல்ட்டிமீடியா இன்ஸ்டிட்யூட் நடத்துறேன். ஆனந்த் தியேட்டர் பக்கத்துல.’’

அவர்கள் சாலையைக் கடந்து, ஸ்பென்சர் பக்கத்தில் வந்து நின்றனர்.

``ஆனந்த்னு ஒரு தியேட்டரா... நான் கேள்விப்பட்டதே இல்லையே.’’

``அந்த தியேட்டரை இடிச்சுட்டு காம்ப்ளெக்ஸ் கட்டிட்டாங்க... நீங்க மெட்ராஸுக்குப் புதுசா?’’

``ஆமா... ரெண்டு வருஷம்தான் ஆச்சு. ஸ்பென்சர்ல பொட்டிக் வெச்சிருக்கேன்.’’

விசிட்டிங் கார்டை எடுத்துக் கொடுத்தாள். தன் கார்டைக் கொடுக்கும் சந்தர்ப்பத்துக்காக ராகவேந்திரருக்கு நன்றி சொல்லிக்கொண்டான். அவனுக்கு ரஜினியின் மூலமாக ராகவேந்திரர் அறிமுகம். அதே நேரத்தில் அவளுடைய செல்போன் மெல்லிய ‘டிங்’ ஒலியை எழுப்பியது. எடுத்துப் பார்த்துவிட்டு, ``உங்க அமௌன்ட் டிரான்ஸ்ஃபர் ஆகிருச்சு’’ என்றாள்.

``ஓ... தேங்க்ஸ்.’’

புன்னகையைக் காட்டிவிட்டு, பதில் வழியலை ஏற்றுக்கொண்டு ஸ்பென்சர் கட்டடத்துக்குள் நுழைந்து, கண்ணில் இருந்து மறைந்தாள்; மனதில் இருந்து மறையவில்லை.

அவளுக்கு 30 வயது இருக்கலாம். அவனுக்கு 42. அவனுக்குத் திருமணம் ஆகி ஒரு பையன். மாமனார் கண்காணிப்பில் ஹாஸ்டலில் ப்ளஸ் டூ. அவளுக்கும் கல்யாணம் ஆகியிருக்கக்கூடும். மகனோ, மகளோ இருக்கலாம். இது சரியில்லை. `இந்த வயதில் மனதைப் பறிகொடுப்பது பொருத்தமாகவே இல்லை. வீண் பிரச்னைகளும் மன உளைச்சலும் தான் ஏற்படும்' எனத் தேற்றிக்கொண்டு, அரும்பிய காதலை அப்படியே கிள்ளி எறிய நினைத்தபோது அவளிடம் இருந்து போன் வந்தது.

``நூறு ரூபாய் அதிகமா இருக்கு. ஓ மை காட். உடனே, எனக்கு நீங்க இந்த நம்பருக்கு கால் பண்ணுங்களேன்’’ என அவசர அவசரமாக போனை கட் செய்து விட்டாள். `இப்படி கணக்கு பார்க்கிறாளே!' என்ற சிறிய எரிச்சலுடன்தான் அவளுக்கு போன் செய்தான். என்ன ஆச்சர்யம்... அவளுடைய ரிங் டோனும் `டோன்ட் வொர்ரி பி ஹேப்பி’ என பாப் மார்லேவின் குரல்.

``ஆச்சர்யமா இருக்குல? அதுக்காகத்தான் போன் பண்ணச் சொன்னேன்.''

அவளோடு பழகவும் அவளைப் பிடித்துப்போகவும் காரணங்கள் கூடின. அவர்களுக்குள் வேறு என்னென்ன ஆச்சர்யங்கள் இருக்கக்கூடும்? இருவருக்கும் அண்ணா சாலையிலேயே ஆபீஸ். அப்புறம்... இருவரின் அலைபேசி எண்களும் 88 என முடிந்திருந்தன. எடுத்துச் சொன்னபோது, ``ஓ... சர்ப்ரைஸ்!’’ என்றாள்.

ஏதேதோ காரணங்கள் சொல்லி அவளுடைய ‘துலிப் பொட்டிக்’குக்கு இரண்டு முறை போனான். ஸ்பென்சரில் முதல் முறை ஒரு சட்டை எடுக்க வந்ததாகச் சொன்னான்.
``ஓ... இங்கேதான் உங்க ஷாப்பா?’’ என செயற்கையாகச் சொல்லவேண்டியிருந்தது.

இரண்டாவது முறை டி ஷர்ட். அதன் பிறகு நிறைய முறை சென்றான். காரணங்கள் தேவைப்படவில்லை. அவள், அறிவாலயத்துக்கு எதிரே பெரிய அப்பார்ட்மென்ட் ஒன்றில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தாள். வைத்தது வைத்த இடத்தில் இருக்கும் அழகான வீடு. அவளுக்கு யாருமே இல்லை. சொந்த ஊர் பெங்களூரு. பெயர் ரஞ்சனி. அவளுடைய பெற்றோருக்கு ஒரே மகள். பெற்றோர் ஷீரடிக்கு காரில் பயணம் சென்றபோது விபத்தில் இறந்துபோனதால், பெற்றோரையும் கடவுள் நம்பிக்கையையும் ஒரே நாளில் இழந்துவிட்டதாகச் சொன்னாள். அவளுக்கு அப்போது 12 வயது. மாமாவும் மாமியும் உடன் இருந்தனர். 20-வது வயதில் திருமணம் நடந்தது. 21-வது வயதில் டிவோர்ஸ் மனு கொடுத்து, 24-வது வயதில் விடுதலை. மாமா, மாமிக்கு கொஞ்சம் பணத்தைக் கொடுத்து ஊருக்கு அனுப்பிவைத்தாள். வீட்டை விற்றுவிட்டு மும்பையில் செட்டில் ஆனாள். அங்கே நான்கு வருடங்கள். கார்மென்ட்ஸ் வைத்திருந்தாள். சென்னைக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. இதுதான் அவள் சொன்ன சுருக்கமான வரலாறு. அவளுடைய வாழ்க்கை ஆங்காங்கே நிரப்பப்படாத ரகசியங்களால் மூழ்கியதாக இருந்தது. ஆங்காங்கே சில `ஏன்?'கள் இருந்தன.

அவன் பெயர் குமார். அவன் வாழ்க்கையில் இத்தனை அட்வெஞ்சர்கள் இல்லை. பிறந்தது, படித்தது, வளர்ந்தது, தொழில் தொடங்கியது, நான்கே ஆண்டுகளில் பிரெஸ்ட் கேன்சரில் மனைவியைப் பறிகொடுத்தது எல்லாமே சென்னையில்தான். தன் வாழ்வில் வேறு ஒரு பெண்ணுக்கு இடம் இல்லை என முடிவெடுத்து பத்து ஆண்டுகள் ஓடிவிட்டன. ரஞ்சனி அந்த முடிவை மாற்றி விட்டாள். இருவருக்குமான இழப்புகளே அவர்களின் சிறப்புச் சலுகை ஆகிவிட்டது. குமார் அவ்வப்போது அவளுடைய வீட்டிலேயே தங்கிச் செல்லும் அளவுக்குப் போதுமானதாக அந்தச் சலுகை இருந்தது.
அவள் எல்லாவற்றையும் நீட்டி முழக்கிச் சொல்பவளாக இருக்கிறாள் என குமார் நினைக்கவில்லை. எதையும் கருத்தாகப் பேசுபவளாக அவனுக்குத் தெரிந்தாள்.

`என் ப்ரீபெய்டு கார்டை போஸ்ட் பெய்டா மாத்திட்டேன். கடைக்காரன், `ரேஷன் கார்டு இருக்கா?'னு கேட்டான். `நான் இல்லை'னு சொல்லிட்டேன். `ஆதார் அட்டை இருக்கா?'னு கேட்டான். `அதுவும் இல்லை'னு சொன்னேன். `ஓட்டர் ஐடி இருக்கா?'னு கேட்டான். `அதுவும் இல்லை'னு சொன்னேன். `அப்ப உங்களுக்கு எப்படிக் குடுக்கிறது?'னு கேட்டான். நல்ல வேளையா என்கிட்ட பாஸ்போர்ட் இருந்தது. அது அப்பா, அம்மா இருக்கும்போது வாங்கிவெச்சது. நடுவுல நல்ல பொண்ணா ரெனியூவல் பண்ணியிருந்தேன். ஒருவழியா பாஸ்போர்ட்டை வெச்சு போஸ்ட்பெய்டா மாத்த முடிஞ்சது’ என்பாள். இது ஓர் உதாரணம்.

p90b.jpg

இன்னோர் உதாரணம்... `காலையில் ஹோட்டலுக்குப் போனேன். `தோசை இருக்கா?'னு கேட்டேன். `பொங்கல்தான் இருக்கு'னு சொன்னான். எனக்கு நல்ல பசி. தோசைக்காக ஹோட்டல் ஹோட்டலா அலைய முடியுமா? சரி சாப்புடுவோம்னு முடிவுபண்ணேன். `பொங்கலுக்கு, வடைகறி கிடைக்குமா?'னு கேட்டேன். `சாம்பார், சட்னி'னு சொன்னான். எனக்கு என்னவோ அந்த காம்பினேஷனே பிடிக்காது. `வேண்டாம்'னு சொல்லிட்டு சப்பாத்தி சாப்பிட்டேன்.’

இவள் தரப்பை அவளுடைய வழக்கமான குரலிலும் அவளுடன் உரையாடிய மாற்று ஆட்களின் குரல்களுக்கு சற்றே பேஸ் வாய்ஸிலும் பேசி, அதை நடித்துக்காட்டாத குறையாக விவரிப்பது கொஞ்சம் அதிகம்தான். சுமதி அப்படி பேச மாட்டாள். பல சம்பாஷணை களுக்கு ஒரே எழுத்தில் `ம்’ என முடித்துவிடுவாள்.

ரஞ்சனியிடம் பேச்சுக்கு செவிசாய்க்கும் சுவாரஸ்யம். காலையில் அவள் சப்பாத்தி சாப்பிட்டதைத் தெரிந்துகொள்வதே குமாருக்கு மேலதிகத் தகவல்தான். ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு ஆனது என்ற ஒரு வரித் தகவல்கூட அவனுக்குக் கொஞ்சமும் அவசியம் இல்லாததாக இருந்தது. ஆனாலும் ரசிக்க முடிந்தது. அவள் பேசப் பேச அவளுடைய தனிமைதான் அத்தகைய நீளமான உரையாடல்களுக்குக் காரணமாக இருக்க வேண்டும் என அவன் வருத்தப்பட்டான். குழந்தையின் விவரிப்புகள்போல அதை அவன் ரசித்தான். யாரும் இல்லாத அவள் இத்தனை நாட்களாக யாரிடம் இவ்வளவு நேரம் விவரித்திருப்பாள் என பரிதாபமும் பாசமும் அதிகரித்தன. அவள் நிறையப் பேசினாளே ஒழிய, அவளுடைய சில பகுதிகளைப் பகிர்ந்துகொள்வதில் மிகுந்த கவனமாக இருந்தாள்.

ஆனால், இன்னோர் ஆபத்து மெள்ள வளர்ந்தது. அவளும் அவனிடமும் அதே போன்ற விரிவான பேச்சை எதிர்பார்த்தாள்.

``ஏன் சொன்ன நேரத்துக்கு வரலை?'’ எனக் கோபப்பட்டாள்.

``வழியில் ஒரு ஆக்சிடென்ட்.'’

``அடிபட்ருச்சா?’' - பதறிப்போய் கேட்டாள்.

``ஆக்சிடென்ட் எனக்கு இல்லை. வழியில் வேற ஒருத்தருக்கு.’

``சரியா சொன்னாத்தானே... காரா?'’

``இல்லை, பைக் - ஆட்டோ.’'

``அடிபட்ருச்சா?'’

``அடிபடலைன்னு சொன்னேனே?'’

``உங்களுக்கு இல்லை. பைக்ல வந்தவருக்கு.'’

``எதுக்கு அவ்ளோ டீடெய்ல்... நீ போய் மருந்து போடப்போறியா?’'

``ப்ச்...’'
``ஸாரி... ஸாரி. சின்ன சிராய்ப்புதான். பெரிய காயம் எதுவும் இல்லை.'’

``அதுக்கும் லேட்டா வந்ததுக்கும் என்ன சம்பந்தம்?'’

``ரெண்டு பேரும் வண்டியைக் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்திட்டு சண்டை போட்டுக்கிட்டானுங்க. அதனால் டிராஃபிக் ஜாம்.'’

அவனுக்கு, பதில் சொல்லும் சுவாரஸ்யம் இல்லை. ஆனால், சுவாரஸ்யமாகக் கேள்வி கேட்டபடி இருந்தாள். `கிளம்பிப்போய் அவங்களோட பிரச்னையைத் தீர்த்துட்டு வரப்போறியா?’ எனக் கேட்க நினைத்தான். கேட்கவில்லை. மனம், வாயைக் கட்டுப்படுத்தி விட்டது.

மனிதர்களுக்குள் நெருக்கம் ஏற்படுவது என்பது, அவர்களின் உரிமைகளில் நாம் எத்தனை சதவிகிதம் தலையிடுகிறோம் என்பதைப் பொறுத்துதானே?

``எதுக்கு வீண்பேச்சு?’’ என ஒரு தரம் சொன்னான்.

``எதுவும் பேசக் கூடாதா நான்? என்னைப் பற்றி ஒரு அக்கறையும் இல்லை’’ இது அவள், அவன் மீது தொடுத்த உரிமைமீறல்.

குமார் `தனிக்கட்டை' எனச் சொல்லிக்கொள்வது ஒரு சம்பிரதாயம்தான். தூரத்தில் இருக்கும் சொந்தபந்தங்களால் அந்தக் கட்டை, புதர் சூழப்பட்டிருந்தது. மாமனார் கண்காணிப்பில் பையன் படித்துக்கொண்டிருந்தான். ஆனால், குமாரும் மாமனாரின் கண்காணிப்பில்தான் இருந்தான். கொஞ்ச நாட்களாக குமார் சரியாக அவர்களுடன் தொடர்பில் இல்லை என்ற சின்ன வித்தியாசமே அவர்களை விபரீதமாகச் சிந்திக்கவைத்திருக்க வேண்டும். ஆரம்பத்தில் நல்லபடியாக, அவர்களாகவே மாப்பிள்ளைக்கு என்ன துக்கமோ என வருந்தினர். பிறகு, மாப்பிள்ளை இப்போதுதான் சந்தோஷமாக இருக்கிறார் என்பதை அறிந்ததும் மேலும் வருந்த ஆரம்பித்தனர். அவன் மட்டுமே இருக்கும் அவனுடைய வீட்டுக்கு அவன் சரியாக வருவது இல்லை எனத் தெரிய ஆரம்பித்தது.

`வீட்டுக்கு வருவது இல்லையாமே?' என ஜாடைமாடையாக விசாரிப்பார்கள். `இன்ஸ்டிட்யூட்டில் கொஞ்சம் வேலை' எனக் காரணம் சொல்வது, அவனுக்கே ஓவராக இருந்தது. அவர்கள் தரப்பு சந்தேகங்கள் நாகரிகமாக ஆரம்பித்து, எதற்கு உடம்பைக் கெடுத்துக்கொள்ள வேண்டும்? இன்ஸ்டிட்யூட்டே வேண்டாம். வீட்டில் சும்மா இருந்தால் போதும் என்பதாக மாறியது. வேறு என்ன, மாப்பிள்ளை தவறான பாதையில் போகிறார் என்ற வருத்தம்தான்.

எல்லா ரகசியங்களும் அதை ஆராய்வதற்கு ஆட்கள் இல்லாத வரைதான். நிறுவனத்தில் வேலைசெய்பவன், நண்பன், உறவினர்... எல்லா தரப்பினருக்கும் சந்தேகம் வந்தது. யாரோ சிலர் ரஞ்சனியை `பூக்காரி' எனச் சொல்லிவிட்டனர். மாமனாரும் மாமியாரும் ஊரில் இருந்து கிளம்பிவந்தனர்.

``வேணும்னா ரெண்டாந்தாரமா கல்யாணம் பண்ணிக்கங்க மாப்பிள்ளை’’ - அவருக்குத் தெரிந்த பாஷையில் நேரடியாகச் சொன்னார் மாமனார்.

``அவங்களுக்கு கல்யாணம் மேலே எல்லாம் நம்பிக்கை இல்லை.'’

`‘பூ யாவாரம் செய்றதா சொன்னாங்களே?’'

`‘இல்லை. பொட்டிக் ஷாப்.'’

`‘ஏதோ ஒண்ணு. பையனை வேணும்னா நானே பார்த்துக் குறேன். நீங்க சந்தோஷமா இருந்தா போதும்.'’

இந்த விவாதமே தலைவலியாக இருந்தது. பெண்ணோடு பழகுவது என்றாலே `வெச்சிருக்கான்’, `கீப்பு’, `எவளோ வளைச்சுப் போட்டுட்டா'... இப்படித்தான் பேசுகிறார்கள். ரஞ்சனி பெருமைக்குரியவள்; மரியாதைக் குரியவள்; பண்பானவள்... எப்படிச் சொன்னாலும் சமூகத்தின் வாய் தவறாகத்தான் பேசும்; கண் தவறாகத்தான் பார்க்கும்.

அவளை கல்யாணத்துக்குச் சம்மதிக்கவைப்பதுதான் பேச்சையும் பார்வையையும் சீராக்கும். அதற்கான பேச்சு வார்த்தைக்கான சூழலை அவளே உருவாக்கியிருந்தாள். அன்று மாலை அவன் அவள் வீட்டின் காலிங் பெல்லை அழுத்த எத்தனிக்கும் முன்னர் கதவில் அந்தப் பலகையைப் பார்த்தான். பீங்கான் எழுத்தில் `ரஞ்சனி குமார்’ என போர்டு மாட்டி யிருந்தது. தகுந்த காரணத்தைச் சொன்னாள்.

``பேப்பர் பையன், கூரியர் பையன், சிலிண்டர் கொண்டு வருபவன், எலெக்ட்ரீஷியன் என ஒரு நாளைக்கு ஒருத்தன் வர்றான். இந்தப் பெயர்தான் பாதுகாப்பு. குமார்னா நீங்கதான்னு யாருக்குத் தெரியப்போகுது?’'

``நான்தான் குமார் எனத் தெரிந்தால் எனக்கு ஓ.கே-தான்’’. சிறிய இடைவெளிவிட்டு, ``ஒய் டோன்ட் வி மேரி?’’ என விண்ணப்பித்தான். ஏற்கெனவே சாதாரணமாக இந்தப் பேச்சு வந்தபோதும் அவள் அதைத் தவிர்ப்பது தெரிந்தது.

``நான் கல்யாணத்துக்கு எல்லாம் சரியான ஆள் இல்லை. என் சுதந்திரம் முக்கியம்னு நினைப்பேன். என்னோட மாமா, மாமி, என் கணவன், டெல்லியில என் தோழி... எல்லோருமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல பிடிக்காமப் போயிட்டாங்க. எனக்கு டயம் கொடுங்க.’’

அவளுக்கு மிகுந்த யோசனையாக இருந்தது. அவன் உள்ளே வந்ததும் கதவை மெள்ளச் சாத்தினாள். அவள் எதுவுமே சொல்லவில்லை. இரண்டு நாட்கள் கழித்து, ``அது மட்டும் வேண்டாம்’’ என்றாள்.
அடுத்த மாதமே இன்னொரு வளையம்.

அவனும் அவளும் எடுத்துக்கொண்ட செல்ஃபி ஒன்றை வீட்டு ஹாலில் போட்டோ ஸ்டாண்டில் வைத்திருந்தாள். அவள், அவன் தோளில் சாய்ந்திருக்க, அவன் அவளுடைய கன்னத்தைக் கைகளால் தாங்கியிருப்பது மாதிரியான படம். அவள் கறுப்பு சுடிதாரில். அவன் மஞ்சள் நிற டி-ஷர்ட்டில்.

‘‘கல்யாணம் மட்டும் வேணாம். அப்ப, இதை எதற்கு ஹாலில் மாட்டணும்?’’

அந்தப் படத்தைப் பார்த்து அவன் மகிழ்வான் என எதிர்ப்பார்த்திருந்தாள் என்பது புரிந்திருந்தும் அப்படிக் கேட்டான்.

``கல்யாணம் பண்ணாம இருக்கிறது ரெண்டு பேருக்கும் நல்லதுதானே?’’

``சிம்பிளா கேட்கிறேன். ஏன் கல்யாணம் வேண்டாங்கிறே?’’

‘‘சொன்னேனே... அது பெரிய கமிட்மென்ட். அதுக்கு நான் தயார் ஆகிட்டேனானு தெரியலை.’’

‘‘இன்னும் என்ன தயார் ஆகணும்?’’ அந்தக் கேள்வியில் பொதிந்து இருந்த கொச்சைத்தன்மை, அவளை முகம் வாடவைத்தது. எழுந்து அந்த போட்டோ ஸ்டாண்டை எடுத்து, பீரோவில் வைத்துவிட்டாள்.

p90d.jpgகுமாருக்குப் பிடித்த நண்டு பொரியல் செய்துகொண்டிருந்தாள். ரஞ்சனியின் லேப்டாப், கட்டில் மேல் கிடந்தது. ஃபேஸ்புக்கில் விஜயகாந்த் மீம்ஸ், மோடி மீண்டும் இந்தியாவுக்கு வருகை புரிந்திருப்பது, `நீயில் இருக்கிறேன் நான்’ எனக் காதல் புலம்பல்... இப்படியாகப் படித்துவிட்டு, அதே மூடில் ரஞ்சனிக்கு ஒரு கவிதை எழுதி மெசேஜ் பாக்ஸில் போட்டான்.

அதற்கு அவள் எப்படி ரியாக்ட் செய்வாள் என்பது அவனுக்குத் தெரியும். ‘`வாவ்... ஃபென்டாஸ்டிக்... எப்படிப்பா எழுதறே?’’

`அவளுடைய பாஸ்வேர்டு தெரிந்தால் அதையும் நாமே பதிலாகவும் போடலாமே' என நினைத்தான். அவளுடைய பாஸ்வேர்டு என்னவாக இருக்கும்? மூன்று ஆப்ஷன்களில் கண்டுபிடிக்க வேண்டும்.
சவாலான விஷயமாக இருக்கவே, சிறிய பேப்பரில் வெவ்வேறு காம்பினேஷனில் பல வார்த்தைகளை எழுதிப் பார்த்தான்.

ரஞ்சனி சமையல் அறையில் இருந்து, ``என்ன யோசனை?’' என்றாள்.

‘‘சர்ப்ரைஸ்’’ என்றான்.

1. பெங்களூரு 2. ஷீரடி 3. துலிப்

கடைசியாக இந்த மூன்றைத் தேர்ந்தெடுத்தான். முதல் ஆப்ஷன்... ம்ஹூம். இரண்டாவது? இன்னும் ஒரு வாய்ப்புதான் இருக்கிறது என்றது எஃப்.பி.

மூன்றாவது ஆப்ஷனில் அவளுடைய ஃபேஸ்புக் திறந்துகொண்டது. மண்டு இத்தனை லகுவாகவா பாஸ்வேர்டு வைப்பாள்?

``ஹாய்... கம் ஹியர்... ஒரு சர்ப்ரைஸ்.’’

அவள் ஆர்வமாக வந்து அமர்ந்தாள்.

p90c.jpg

``என்ன கே?’’

``நான் ஒரு காதல் கவிதை எழுதினேன். உனக்கு.’’

``சூப்பர்!’’

``இரு... அந்தக் கவிதையைப் படிச்சிட்டு நீ எப்படி ரியாக்ட் பண்ணுவேன்னு நானே கற்பனையா ஒரு ரிப்ளை போட்டிருக்கேன்.’’

அவள் கவனம் ஊன்றிப் படித்தாள்.

``இது என் எஃப்.பி அக்கவுன்ட் ஆச்சே?’’

``ஆமா... உன் பாஸ்வேர்டைக் கண்டுபிடிக்கிறது பெரிய விஷயமா?’’

கையில் பீங்கான் தட்டில் வைத்திருந்த நண்டு பொரியலை அப்படியே கீழே போட்டாள்.

``கெட் அவுட் ஐ ஸே... ப்ளீஸ் கெட் அவுட். நான் மிருகமா மாறுறதுக்குள்ள வெளியே போயிடு. திஸ் இஸ் த லிமிட்.’’

``ஏய் என்ன ஆச்சு?’’

``என்னுடைய பெர்சனல்னு ஒண்ணு இருக்கு. அங்கே தலையிட்டீங்கன்னா, அது எனக்குப் பிடிக்காது.’’

``நமக்குள்ள என்ன பெர்சனல்? படுக்கையை ஷேர் பண்ணும்போது, பாஸ்வேர்டை ஷேர் பண்ணக் கூடாதா?’’

``மூணு எண்றதுக்குள்ள வெளியே போயிடு. யு ஹேவ் கிராஸ்டு தட் லிமிட்.’’

‘`நீயும்தான்.’’

குமார் கார் சாவியை எடுத்துக்கொண்டு விருட்டென வெளியேறினான். அவனுக்கு அவமானமாக இருந்தது. பாஸ்வேர்டு அத்தனை பெரிய விஷயமா என்ற அதிர்ச்சியில் இருந்து அவன் மீளவே இல்லை. கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகிவிடும்... ஆறட்டும் எனக் காத்திருந்தான். அவளுடைய பிறந்த நாள். வாழ்த்துச் செய்தி அனுப்பினான். நாட் ரிஸீவ்டு. போன் செய்து பார்த்தான், அந்த எண் உபயோகத்தில் இல்லை. கடைக்குச் சென்று பார்த்தான், அங்கே வேறு ஒரு மொபைல் கடை இருந்தது. வீட்டுக்குச் சென்று பார்த்தான், அங்கே ஒரு மார்வாடி குடும்பம் இருந்தது.

உச்சிப்பொழுதில் பனிநீர்போல அவள் மறைந்து விட்டாள். புதிய பாஸ்வேர்டுடன் அவளுக்கான பிரத்யேக ரகசியங்களுடன் ரஞ்சனி எங்கோ இருக்கிறாள்!

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.